தலித் விடுதலைக்குத் தேவை ஹிந்து ஒற்றுமை: சுவாமி விவேகானந்தர்
ஆசிரியர் குழு
12 Jan 2010 |
அச்சிட
யார் ஹிந்து?
மகா புருஷனான குரு கோவிந்த சிங்கனைப் போல ஹிந்துக்களுக்காக எதையும் தாங்கச் சித்தமாக இருக்கும் பொழுதுதான் -அப்போது மட்டுமே- நீங்கள் ஹிந்து ஆவீர்கள். ஹிந்துக்களின் பாதுகாப்புக்காகத் தனது ரத்தத்தைச் சிந்திய பிறகும், தனது குழந்தைகள் போர்களத்தில் கொல்லப்படுவதைப் பார்த்த பிறகும் - ஆகா! அந்த மகாபுருஷனான குருவின் உதாரணந்தான் என்னே! யாருக்காகத் தமது உதிரத்தையும் தமது நெருங்கிய மக்களின் இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட அந்தப் படுகாயமுற்ற சிங்கம் - களத்திலிருந்து ஓய்ந்து வெளியே வந்தது, தெற்கே வந்து மடிய! நன்றி கெட்டுத் தம்மைக் கைவிட்டவர்களைக் குறித்து ஒரு பழிச்சொல்லைக் கூட அவர் தப்பித்தவறியும் வெளியிடவில்லை.
உங்களது நாட்டுக்கு நீங்கள் நன்மை செய்ய நினைத்தால் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்த சிங்கனாக ஆக வேண்டும். உங்களது நாட்டு மக்களிடையே ஆயிரக்கணக்கான குறைபாடுகளை நீங்கள் காணலாம். ஆனால் அவர்களது ஹிந்து தன்மையைக் கவனியுங்கள். உங்களை தாக்கி புண்படுத்த நினைத்தாலும் அவர்களே உங்கள் முதல் வழிபாட்டுக்குரிய தெய்வங்கள். அவர்களில் ஒவ்வொருவரும் உங்கள் மீது சாபமழையை பொழிந்தாலும் நீங்கள் அவர்களுக்கு அன்பு அருள் மொழிகளையேத் திருப்பியளிக்க வேண்டும். அவர்கள் உங்களை வெளியே துரத்தினால் அந்த மகா சக்திசாலியான சிங்கத்தைப் போல குரு கோவிந்த சிங்கனைப் போல, வெளியே வந்து அமைதியாக இறக்க வேண்டும். ஹிந்து என்ற பெயர் தாங்க அத்தகைய மனிதனே தகுந்தவன். அத்தகைய இலட்சியத்தையே நாம் எப்பொழுதும் நம் முன் வைத்திருப்போமாக.
நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளைக் குழி தோண்டிப் புதைத்து விடுவோம். நாற்றிசையிலும் இந்த அபாரமான அன்புணர்ச்சி அலையைப் பரப்புவோம்.
அன்பு கொண்ட தொண்டுக்கு தகுதிகள் என்ன?
திறக்கவே முடியாத கதவுகளையும் அன்பு திறந்து விடுகிறது. எனது வருங்கால சீர்திருத்தக்காரர்களே! வருங்கால தேசபக்தர்களே! நீங்கள் உண்மையான உணர்ச்சி கொண்டிருக்கிறீர்களா? தேவர்கள் தவ முனிவர்கள் இவர்களின் சந்ததிகளான கோடானுகோடி மக்கள் மிருகங்களினின்றும் அதிக வேற்றுமையில்லாமல் வாழ்கிறார்கள் என்பதை உணர்கிறீர்களா? கோடிக்கணக்கான மக்கள் இன்று பட்டினி கிடக்கிறார்கள் என்பதையும் லட்சக்கணக்கானவர்கள் பல்லாண்டுகளாக பட்டினி கிடக்கிறார்கள் என்பதையும் உணர்கிறீர்களா? அறியாமை என்னும் இருண்ட மேகம் இந்த நாட்டைக் கவிந்திருக்கிறதென்பதை உணருகிறீர்களா? அவ்வுணர்ச்சி உங்கள் மன அமைதியைக் குலைத்து உங்களுக்கு தூக்கமில்லாமல் செய்துவிடுகிறதா? அது உங்கள் குருதியில் கலந்து இரத்தக் குழாய்களில் ஓடி இதயத்துடிப்போடு சேர்ந்து துடிக்கிறதா? ஏறக்குறைய அவ்வுணர்ச்சி உங்களை பைத்தியமாகவே ஆக்கிவிடுகிறதா? இந்தப் பெரிய துன்பம் ஒன்றே உங்கள் மனத்தை முற்றும் கவர்ந்திருக்கிறதா? அழிவு பற்றிய துன்பம் பற்றிய கவலைகளால் பீடிக்கப்பட்டும் உங்கள் பெயர் புகழ் மனைவி மக்கள் உடைமை இவையனைத்தையும் உங்கள் உடலையும் கூட மறந்து விட்டீர்களா?
உங்கள் உள்ளத்தில் பரிவு உணர்ச்சி நிறைந்திருக்கிறதா? அப்படியானால் அது முதற்படி மட்டுமேயாகும்.
அடுத்தபடியாக ஏதாவது பரிகாரமாக நோய் தீர்க்கும் மருந்து ஒன்றைக் குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். பழையக் கால கருத்துக்கள் எல்லாம் மூடநம்பிக்கைகளாகவே இருக்கலாம். ஆனால் அந்த மூடநம்பிக்கையின் உள்ளேயும் மேலேயும் தங்கப்பாளங்களும் சத்தியமும் உள்ளன. அந்தத் தங்கத்தின் மீது பாசியோ மாசோ படியாமல் காப்பாற்றி வைக்க நீங்கள் ஏதாவது வழி கண்டு பிடித்திருக்கிறீர்களா? உங்கள் சக்தியையெல்லாம் வெட்டிப் பேச்சில் செலவழிக்காமல் நடைமுறையில் கையாளக் கூடிய உபாயம் கண்டு பிடித்திருக்கிறீர்களா? குறை கூறி கண்டிப்பதற்குப் பதிலாக உதவி செய்வதற்கும் அவர்களது துயர்களுக்குப் பதிலாக ஆறுதலாக இதமான மொழிகளைக் கூறவும் நடைப்பிண வாழ்க்கையிலிருந்து மக்களை மீட்கவும் ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறீர்களா?
அப்படிச் செய்திருந்தால் அது இரண்டாவது படிதான்.
மற்றொரு விஷயமும் தேவை. உங்கள் தொண்டின் நோக்கம் என்ன? பணத்தாசை பிடித்தோ பெயர் புகழ் ஆசையால் தூண்டப்பட்டோ நீங்கள் வேலை செய்யவில்லை என்பது நிச்சயம்தானா? அதுவும் போதாது. உங்கள் வேலையில் இடையூறுகள் மலை போல திரண்டுவரினும் அவற்றை எதிர்த்துத் தயங்காது செல்ல உங்களுக்கு மனவலிமையிருக்கிறதா? உலகமனைத்தும் சேர்ந்து கொண்டு கையில் வாள் கொண்டு எதிர்த்து நின்றாலும் அந்த நிலையிலும் நீங்கள் சரியென்று நினைக்கும் செயலைச் சிறிதும் பின்வாங்காமல் செய்யும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? உங்கள் மனைவி மக்களே உங்களுக்கு விரோதமாக இருந்தாலும் உங்கள் செல்வத்தையெல்லாம் இழக்க நேரிட்டாலும் உங்களது புகழ் கெடுவதானாலும் எல்லா சொத்து சுகங்களும் பறி போனாலும் அப்பொழுதும் கூட ஏற்றுக் கொண்ட பணியிலே ஊன்றி நிற்பீர்களா? நீங்கள் கருதுகிற இலட்சியம் கைகூடுகிற வரையில் இடைவிடாது தொடர்ந்து முன்னேறிச் செல்வீர்களா? மாமன்னனான பர்த்ருஹரி கூறியது போல
“நிந்தந்து நீதிநிபுணா யதி வா ஸ்துவந்து
லக்ஷ்மீ: ஸமாவிசது கச்சது வா யதேஷ்டம்
அத்யைவ வா மரணமஸ்து யுகாந்தரே வா
நியாய்யாத்பத: ப்ரவிசலந்தி பதம் ந தீரா: (பர்த்ருஹரி நீதி சதகம்)
“நீதிபண்டிதர்கள் நிந்திப்பதானாலும் நிந்திக்கட்டும் அல்லது புகழட்டும். சகல பாக்கியங்களையும் கொடுக்கும் லக்ஷ்மி தேவியானவள் வந்தாலும் வரட்டும் அல்லது தான் விரும்புகிற இடத்துக்கே போகட்டும். மரணமானது இன்றைக்கே வந்தாலும் வரட்டும் நேர்மைப் பாதையிலிருந்து மயிரிழையேனும் யார் பிறழாதிருப்பார்களோ அவர்களே தீரராவர். இந்த உறுதி உங்களிடம் உள்ளதா?
இந்த மூன்று விஷயங்களும் உங்களிடம் இருக்குமாயின் நீங்கள் ஒவ்வொருவரும் அற்புதங்களை செய்வீர்கள்.

இது ஒரு நாள் வேலையல்ல. அத்துடன் பாதையும் பயங்கர விஷமயமான முட்களால் நிறைந்தததாகும். ஆனால் பார்த்தனுக்கு சாரதியாக இருந்தவர் நமக்கும் சாரதியாக இருக்க சித்தமாக இருக்கிறார். நமக்கும் அது தெரியும். அவருக்காக அவரிடம் நம்பிக்கை பூண்டு பாரதத்தின் மீது பல சகாப்தங்களாகக் குவிந்து மேடிட்டு மலை போல இருக்கும் துயரங்களைச் சுட்டுப் பொசுக்குங்கள். அவை எரிந்து சாம்பலாகட்டும்.
பார்த்த சாரதியின் கோவிலுக்கு செல்லுங்கள். கோகுலத்து எளிய ஆயர்களின் தோழனான கண்ணனுக்கு முன்னால் சென்று அந்த உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். கண்ணன் ஏழைகளின் தாழ்த்தப்பட்ட இடையர்களின் நண்பனாக இருந்தான். வேடனான குகனைக் கட்டித்தழுவ தயங்காதவன் அவன். புத்தாவதாரமாக வந்த போது சீமான்களின் அழைப்பை ஏற்காமல் ஒரு வேசியின் அழைப்பை ஏற்று அவளைக் கடைத்தேற்றினான். அந்த பார்த்த சாரதியின் சன்னதியில் சென்று தலை தாழ்த்திக்கொள்ளுங்கள். மகத்தானதொரு தியாகத்தை அங்கே சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். யாருக்காக அவர் யுகங்கள் தோறும் அவதரிக்கிறாரோ அந்த ஏழைகள் அந்த தாழ்த்தப்பட்டவர்கள் அந்த ஒடுக்கப்பட்டவர்கள் இவர்களுக்காக உங்கள் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணிக்க சபதம் எடுங்கள். அதன்படி நாளுக்கு நாள் தாழ்வுற்று வரும் மக்களை மீட்பதற்காக உங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துவிடுங்கள்.
தலித் விடுதலைக்கு வேண்டிய ஆற்றல்
சக்தி சக்தியைத்தான் உபநிடதங்களின் ஒவ்வொரு பக்கமும் எனக்குக் கூறுகிறது. நினைவிற் கொள்ள வேண்டிய ஒரு பெரிய விஷயம் இது. எனது வாழ்க்கையில் நான் கற்ற ஒரு பெரிய பாடம் இது. “மனிதனே சக்தியுடனிருப்பாயாக: பலவீனனாக இராதே” என்ற பாடத்தையே நான் கற்றிருக்கிறேன்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளாக எவை எவை நம்மைப் பலவீனப்படுத்துமோ அவற்றுக்கெல்லாம் நாம் இடங்கொடுத்துவிட்டோம் …யார் வேண்டுமானாலும் கேவலமாக நம்மை நினைத்து ஊர்ந்து வரும் நம்மை காலால் மிதிக்கும் அளவுக்குப் பலவீனர்களாகிவிட்டோ ம். ஆனால் சகோதரர்களே உங்களில் ஒருவன் என்ற நிலையில் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்து மடிகிற நான் கூறுகிறேன். நாம் வேண்டுவது சக்தி. சக்தி, ஒவ்வொரு முறையும் சக்தியே வேண்டும். உபநிடதங்கள் சக்திக்கு பெரும் சுரங்கமாகும். உலகமுழுவதற்கும் வீரம் அளிக்கப் போதுமான அளவு சக்தி இதற்கு உண்டு. இதைக் கொண்டு உலகமனைத்தையும் புத்துயிர் செய்ய முடியும். பலம் பெறச்செய்ய முடியும். சக்தித்துடிப்பு பெறச்செய்ய முடியும்.
எல்லா இனத்தவரிடையேயும் எல்லா மதத்தினரிடையேயும் எல்லா பிரிவினரிடையேயும் உள்ள பலவீனப்படுத்தப்பட்ட துன்பத்தால் நலிந்த தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை இது போர் முரசு கொட்டி அழைத்து உங்களையே நம்பி எழுந்து நின்று விடுதலை பெறுங்கள் என்று முழங்கும். விடுதலை - உடலுக்கு விடுதலை, மனதுக்கு விடுதலை - ஆன்மாவுக்கு விடுதலை : இவையே உபநிடதங்களின் மூல மந்திரமாகும்
தொடர்புடைய பதிவுகள்
குறிச்சொற்கள்: vivekananda, இந்து ஒற்றுமை, இந்துத்துவம், இந்துமத மேன்மை, குரு கோவிந்தசிங், சக்தி, சாதியம், சீர்திருத்தம், தலித், தேசபக்தி, நம்பிக்கை, விவேகானந்தர், வீரம், ஹிந்துத்வம்
மகா புருஷனான குரு கோவிந்த சிங்கனைப் போல ஹிந்துக்களுக்காக எதையும் தாங்கச் சித்தமாக இருக்கும் பொழுதுதான் -அப்போது மட்டுமே- நீங்கள் ஹிந்து ஆவீர்கள். ஹிந்துக்களின் பாதுகாப்புக்காகத் தனது ரத்தத்தைச் சிந்திய பிறகும், தனது குழந்தைகள் போர்களத்தில் கொல்லப்படுவதைப் பார்த்த பிறகும் - ஆகா! அந்த மகாபுருஷனான குருவின் உதாரணந்தான் என்னே! யாருக்காகத் தமது உதிரத்தையும் தமது நெருங்கிய மக்களின் இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட அந்தப் படுகாயமுற்ற சிங்கம் - களத்திலிருந்து ஓய்ந்து வெளியே வந்தது, தெற்கே வந்து மடிய! நன்றி கெட்டுத் தம்மைக் கைவிட்டவர்களைக் குறித்து ஒரு பழிச்சொல்லைக் கூட அவர் தப்பித்தவறியும் வெளியிடவில்லை.
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
12 January 2010 at 11:50 pm
அனைத்து வார்த்தைகளும் உண்மையே.நீங்கள் தலித் மக்களை மதிக்கவேண்டும் என்று யாரும் எதிர்பார்கவில்லை ,சக மனிதனாக நடத்தினாலே போதும்.இதுவே நீங்கள் தலித் மக்களுக்கு செய்யும் மிகபெரிய தொண்டு .