ஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்

சமயம் இந்நாளில் திரிபாகக் கொள்ளப் படுகிறது, அது வாழ்க்கையின் ஒரு கூறாகக் கருதப்படுகிறது. வெறும் புறக்கோலம் சமயம் என்று எண்ணப்படுகிறது. இவ்வாறெல்லாம் சமய நோக்கம் திரிபுண்டமையால் சில இடங்களில் அதன் மூலமே வெறுக்கப் படுகின்றது. திரிபுக்கு அடிப்படையான காரணங்கள் பல கூறலாம். முன்னே சில சொன்னேன். இங்கே ஒன்றைக் குறிக்கலாமென்று நினைக்கிறேன். அது மேல்நாட்டு நாகரிகத்தின் எழுச்சியும் கீழைநாட்டு நாகரிகத்தின் வீழ்ச்சியுமாகும்.

மேல்நாடு

மேல்நாட்டு நாகரிகம் சமயத்தினின்றும் அரசியல் வாணிபம் தொழில் முதலியவற்றை வேறுபடுத்தியது. அந்நாகரிகம் சமயத்தை ஒரு கூறாகக் கொண்டது. அது வாழ்க்கையைச் சமயமாகவும் சமயத்தை வாழ்க்கையாகவும் ஏற்கவில்லை. அதனால் விளைந்ததென்ன? வாழ்க்கையில் போராட்டம் வளர்ந்ததே விளைந்த பயன். போராட்டம் அந்த நாகரிகத்தை இப்பொழுது அரிக்கிறது; எரிக்கிறது. மேல்நாடு நல்லறிவு பெற்று “சமயமே வாழ்க்கை – வாழ்க்கையே சமயம்” என்று வாழுங்காலம் நெருங்கியிருக்கிறது. மேல்நாடு நல்வாழ்க்கை பெற ஆண்டவன் அருள் செய்வானாக.

கீழ்நாடு

divine_familyகீழ்நாட்டு நாகரிகம் சமயத்தை வேறாகவும் அரசியல், வாணிபம் ஆகியவற்றை வேறாகவும் பிரிக்கவில்லை.  எல்லாம் சமயத்தில் ஒன்றி நிலவுமாறு செய்தது. வாழ்க்கைக் கூறுகளெல்லாம் சமயமே என்று கொண்டது. கீழ்நாடு தன் நாகரிகத்தை மேல்நாட்டில் பரப்ப முயலாது, அஃது இதன் நாகரிகத்தை ஏற்று நடிக்க முயன்றது. அதனால் கீழ்நாட்டிலுங் கேடு சூழ்ந்தது. இந்நாளில் கீழ்நாட்டு நாகரிகம் கதம்பமாய்க் கிடத்தல் கண்கூடு.

நாடோறுமோ வாரந்தோறுமோ திங்கள் தோறுமோ விரதநாட்களிலோ ஒரு சிறுபொழுதைக் கோயிலுக்கென்று செலவழிப்பது சமயமாகாது. சமயம் புறக்கோலத்தளவில் கட்டுப்பட்டு நிற்பதுமன்று. சமயம் ஓர் இறைப்பொழுதும் வாழ்க்கையை விடுத்து அகன்று நிற்பதில்லை. அத்தகைய ஒன்றை வாழ்க்கைக்கு வேறுபட்டதென்று கருதச்செய்யும் நாகரிகம் விழுப்பமுடையதாகுமா?

”தினைத்துணைப் பொழுதும் மறந்துய்வனோ” என்று அலமருகிறார் அப்பர்.

”உண்ணுஞ் சோறு பருகும்நீர்
தின்னும் வெற்றிலையுமெல்லாம்
கண்ணன் எம்பெருமான்”

என்று நம்மாழ்வார் அருள்கிறார்.

”அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன்
அதுவு நாள்படப் பாலதொன் றானால்
பிழுக்கை வாரியும் பால் கொள்வ ரடிகேள்
பிழைப்ப னாகிலும் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால்
மற்று நானறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே”

என்று வன்றொண்டர் அறிக்கை செய்கிறார்.

இப்பெருமொழிகளுக்கு விளக்க உரையாக,

”இருக்கினும் நிற்கும் போதும்
இரவுகண் துயிலும் போதும்
பொருக்கென நடக்கும் போதும்
பொருந்திஊன் துடக்கும் போதும்
முருக்கிதழ் கனிவா யாரை
முயங்கிநெஞ் சழியும் போதும்
திருக்களா உடைய நம்பா
சிந்தையுன் பாலதாமே”

எனவரும் அதிவீரராம பாண்டியர் பாடல் திகழ்கிறது.

கீழ்நாடு தனது நடிப்பை விடுத்து மனந்திரும்பித் தனது நாகரிகத்தைக் காலதேச வர்த்தமானத்துக்கேற்ற முறையில் வளர்த்து வாழ்வு பெறுவதாக.

கீழைச் சமதர்மம்

கீழ்நாட்டின் பழம்பெரும் நாகரிகம் வாழ்க்கையை வேறாகவும் சமயத்தை வேறாகவுங் கொள்ளாமையால் அதன் அடியில் சமதர்மம் நிலவுவதாயிற்று. சமதர்மத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கியது கீழ்நாட்டு நாகரிகம் என்று உலகம் உணர்வதாக. சமதர்மம் கீழ்நாட்டுக்கு புதிதானதன்று. கீழ்நாட்டு நாகரிகம் வளர்ந்து வளர்ந்து அது சமதர்மமாக பரிணமித்தது. பாரத நாட்டு பழைய தர்ம சாத்திரங்களை ஆராய்ந்தால் அவைகளில் கிராமம் கிராமத்தாருடையது என்பதையும், கேணியும் குளமும் ஏரியும் ஆறும் காடும் மலையும் பிறவும் மக்கட்குப் பொதுவுடமையாய்ப் பயன்பட்டன என்பதையும், அதனால் மக்கள் உழைப்புக்களெல்லாம் சகோதரநேயக்கட்டினின்றும் பிறந்தன என்பதையும் இன்ன பிறவற்றையுங் காணலாம். ….

எந்நாடு?

இக்கால உலக எரியைத் தணிக்கும் ஆற்றல் சன்மார்க்கத்துக்கே உண்டு. சன்மார்க்கம் தண்மை வாய்ந்தது. அத்தன்மை பொழியும் இடம் எது? நாடு எது? தேம்ஸ் நாடா? தானியூப் நாடா? வால்கா நாடா? மிஸ்ஸோரி-மிஸிஸிபி நாடா? யங்டிஸ் கியாங் – ஹோ யாங்கோ நாடா? பஸிபிக் நாடா? இந்நாடுகட்கே இப்பொழுது தண்மை தேவை. இவைகள் எப்படித் தண்மையைப் பொழிவனவாகும்? பின்னை எந்நாடு?

அது நமது கங்கை நாடு.

சாந்தம் சாந்தம் சிவம்

nilkanthகங்கையின் தாயகம் எது? பனிமலை. அம்மலையின் முடி எது? கௌரி சங்கரம். கௌரி சங்கரம் எப்படி நிற்கிறது? சொல்லற்ற சாந்தம் சாந்தம் சிவம்! சாந்த சிவத்தின் கருணை கங்கையாய்ப் பாய்கிறது. சாந்தச் செல்வம் கௌரி சங்கரம், ஹிமயம், கங்கை, பழமையான பாரதம், உபநிடதம். அச்செல்வம் பாரத நாட்டில் அங்காங்கே காவியங்களாகியது. ஓவியங்களாகியது. காவிய ஓவிய அறிகுறிகள் நாடு முழுவதும் பொலிவு தருகின்றன. அவைகளுள் பாரத நாட்டையே உளங் கொண்டவை மூன்று. அம்மூன்றும் பாரத தேசத்தின் ஒருமைப்பாட்டை உணர்த்துவனவாம். அவை கயிலை, காசி, இராமேசம்.

பாரதக் கொடை

பழமையான பாரதப் பெரியோர் நமக்குக் குண்டு பீரங்கி முதலிய கொலைக்கருவிகளை உதவினாரில்லை. சாந்தச் செல்வத்தை அருளினர். அதுவே சன்மார்க்கத் தண்மை – அந்தண்மை. அத்தண்மையில் பாரத நாடு நீண்டகாலம் பண்பட்டது. அதற்கு இடைநாட்களில் சில கூட்டுறவால் சிறு அசைவு நேர்ந்தது. இப்பொழுது தோன்றியுள்ள பெரும் போர் அவ்வசைவைப் போக்கி வருகிறது.

பணி

பாரத நாட்டின் முன்னே பெரும் பணி நிற்கிறது, அப்பணியில் நமக்கும் பங்கு உண்டு. அப்பணிக்கென்று நாம் இங்கே – ஆலவாயில் – கூடியிருக்கிறோம். மதுரையில் கூடியிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். நம் முன்னே நிற்கும் பணி யாது?….சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் முன்னிற்கும் பணிகள் பல உள்ளன. அவைகளுள் தலையாயது மனந்திரும்ப முயல்வது. இது காலத்துக்கு உரியதென்று யான் கருதுகிறேன். மற்றைப் பணிகளை யான் பலமுறை விரித்துள்ளேன்.

புரட்சி

உலகம் எத்தனையோவிதப் புரட்சிகளைக் கண்டது. கொள்ளைப் புரட்சிகளும் கொலைப் புரட்சிகளும் நமக்கு வேண்டா. அவைகள் கொள்ளையையும் கொலையையுமே பெருக்கும். நமது நாட்டில் நிகழ்ந்த அறப்புரட்சிகள் நம் முன்னே நிற்கின்றன. அவைகளைக் குறிக்கொண்டு நடப்போமாக. விருஷப தேவர், புத்தர், சம்பந்தர், சங்கரர் முதலியோர் பெரும் பெரும் புரட்சி வீரர். அவர்கள் அஹிம்ஸையாலும் சீலத்தாலும் பாட்டாலும் அறிவாலும் புரட்சி செய்தனர். இப்பொழுதும் ஒரு பெரும் புரட்சி தேவை. அப்புரட்சியை எப்படி அழைக்கலாம்? அன்புப்புரட்சியென்று அழைக்கலாம்; அதற்கு மனந்திரும்பிப் பாவங்களை முறையிட்டு அழும் பணி வேண்டும். அப்பணி செய்ய விரைவோமாக.

ஆலவாய்ப் பெருமானே! மதுரை அரசே! மறிகடல் விடமுண்ட வானவா! நாங்கள் உன்னை மறந்தோம்! உன் அருளை மறந்தோம்! பாவங்களில் புரண்டோம். நாங்கள் குறைபாடு உடையவர்கள். வழுக்கி வீழ்கிறோம். என் செய்வோம்! எங்கள் பாவங்களெலலாம் திரண்டு திரண்டு குண்டு மழையாய்ப் பொழிகின்றன. எரிகிறோம் எரிகிறோம். உன்னை அடைந்து நிற்கிறோம்.

நீ பன்றிக்குட்டிக்குப் பால் கொடுத்தவன். மாபாதகனுக்கு அருள் செய்தவன் நாரைக்கும் கரிக்குருவிக்கும் விடுதலை அளித்தவன். உன்னடியில் அடைக்கலம் அடைகிறோம். அடைக்கலம்! அடைக்கலம்! ஆண்டருள்க! பொங்கி வரும் யுத்த ஆலத்தை ஒடுக்கியருள்க; புது உலக அமுதைப் பொழிந்தருள்க.

ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக் கிரங்கித்
தீது புரியாத தெய்வமே – நீதி
தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன்
பிழைக்கின்ற ஆறு நீ பேசு – சிதம்பர சுவாமிகள்

இம்முறை யான் சாத்திரம் பேசவில்லை; தத்துவம் பேசவில்லை; அத்துவிதத்தில் நுழைந்தேனில்லை; வேறுபல ஆராய்ச்சிகளில் நுழைந்தேனில்லை; மனந்திரும்பலைச் சாற்றினேன். முறையீட்டை முறையிட்டேன். அழுகையை அழுதேன்; அன்புப்புரட்சியை அறைந்தேன். அப்புரட்சியை நாடோறும் நீங்கள் செய்யலாம். உண்மை அழுகைக்கு பலர் வேண்டுவதில்லை. ஒரு சிலர் போதும். அஃது உலகை உய்விக்கும். ஆண்டவன் அருள் நமது அழுகை வாயிலாக வெளிவந்து ஆலத்தை உண்ணும். அமுதத்தைப் பொழியும். வரும் ஆண்டுக்குள் புது உலகத்தைக் காண, எழுங்கள்! எழுங்கள்! வித்தகம் பேசவேண்டா; பணி செய்ய எழுங்கள்! எழுங்கள்!

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புணல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே

திருச்சிற்றம்பலம்.

திருவாரூர் வி.கலியாணசுந்தரன்   27-12-1943 இல் மதுரையில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் முப்பதெட்டாவது ஆண்டுவிழாக் கூட்டத்தில் “ஆலமும் அமுதமும்” எனும் தலைப்பில் ஆற்றிய தலைமையுரையிலிருந்து.  இந்த உரை தமிழ்நாட்டில் முதன்முதலில் தொழிற்சங்கம் அமைத்த பெருந்தகை திருவிக எனப்படும் திரு.வி. கலியாணசுந்தரம் அவர்களால் இன்றைக்கு 66 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப்போரின் போது மதுரையில் பேசப்பட்டது. இன்றைக்கு உலக யுத்தத்தால் உலகம் எரிகொள்ளவில்லை. ஆனால் மானுடம் மேற்கத்திய நாகரிகத்தால் உலகத்தை எரிகொள்ள செய்கிறது. சிறிது சிந்தித்தால் அரை நூற்றாண்டுக்கு அப்பாலும் திருவிகவின் இந்த உரை இன்னும் பொருள் உள்ளதாகவே திகழ்கிறது.

5 Replies to “ஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்”

  1. தமில்ஹிண்டு வாசகர்கலாயிகிய நாம் ஒவ்வருவரும் ஒரு பத்து பேர்களுக்கு இந்த வலைத்தளம் அறிய வைக்க வேண்டும் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன்

  2. வணக்கம்

    நன்றி, தமிழ் ஹிந்து .

    இப்படி ஒரு சொற்பொழிவு இனி நமக்கு கிடைத்தால் அது வரப் பிரசாதம்தான்.

  3. PLEASE SAVE TN TEMPLES LANDS AND OTHER ASSITS BECAUS TN GOVERNMENT RULL IS ALLOUD TO SALE OF TEMPLES LANDS AND OTHER ASSITS. TEMPLES LANDS AND OTHER ASSITS IS ONLY SORCES OF TEMPLE’S POOJA AND FESTIVALS.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *