முகப்பு » பண்டிகைகள், பொது

தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!

அச்சிட அச்சிட

kolam-drawingசித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக உலகத் தமிழர்கள் கொண்டாடி வருவதை ஓர் அரசாணையால் தை மாத முதல்நாளாக மாற்ற தமிழ்க அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அரசாணை போட்டபிறகும் ’அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது’ என்று ஏன் சொல்லவேண்டுமென்றால் உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான தமிழர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இது தொடர்பான பொதுநல வழக்கை தமிழக அரசால் இன்னும் வெல்ல முடியவில்லை. தமிழக உயர்நீதி மன்றங்களில் தமிழக அரசு வெற்றி பெற்றாலும் உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் இந்த வழக்கில் தமிழக அரசு வெல்லக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாகத் தெரியவில்லை. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கிலிருக்கும் ஒரு பழக்கத்தை அரசாணையாலும் பொய்யான பரப்புரைகளாலும் அரசு மாற்ற முனைந்து கொண்டிருகிறது. அரசின் இந்த முனைப்பு தமிழ் மரபுக்கு சற்றும் பொருத்தமில்லாதது என்பதோடு தமிழ் மரபிற்கே எதிரானது என்பதையும் விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

சித்திரை முதல்நாளே ஆண்டு தொடக்கமாகக் கொள்ளவேண்டும் என்பதற்கு பலவிதமான ஆதாரங்களை இலக்கிய மற்றும் வரலாற்று அறிஞர்கள் அளித்துவிட்ட போதிலும் ஏன் தை மாதத்தில் ஆண்டு துவங்க வேண்டுமென்ற ஆதாரங்களை அரசோ அல்லது இந்த கருத்தாக்கத்தை ஆதரிப்பவர்களோ இதுவரை அளிக்க வில்லை. வரலாற்று ஆவணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் இவை எதிலும் தை மாதம் முதல் மாதம் என்பதற்கு ஆதாரமான கருத்தோ அல்லது சித்திரை முதல் மாதம் என்பதற்கு எதிரான கருத்தோ இதுவரை கிடைக்கவில்லை. இதற்கான தரவுகளைத் தருவதற்கு அரசு தவறியதோடு மட்டுமல்லாமல் இது தொடர்பாக அறிஞர்கள் எழுப்பிய கருத்துகளுக்கும் வினாக்களுக்கும் விளக்கமளிக்கவில்லை.

இந்த கருத்தாக்கத்தை ஆதரிப்பவர்கள் வைக்கக் கூடிய சில வாதங்களை ஆராய்வோம்:

1. முக்கியமான ஆதாரமாக இதை முன்மொழிந்தவர் மறைமலை அடிகளார் என்று கருதப் படுகிறது. ஆனால் எந்தெந்த ஆதாரங்களை வைத்து மறைமலை அடிகளார் தைமாதம் முதல் மாதம் என்றார் என்பதை அறிந்து கொள்ளவே முடியவில்லை. மறைமலை அடிகளார் அவ்வாறு கருதுகிறார் என்பதே இதை ஆதரிப்பவர்கள் தரும் மிகப்பெரிய தரவாக இருக்கிறது. இதைத் தாண்டிய இலக்கிய மற்றும் வரலாற்றுத் தரவு எதனையும் நாம் காணமுடிவதில்லை. ஆனால் மேற்கொள்ள எந்த தரவுகளுமற்ற நிலையில் இது மறைமலை அடிகள் மற்றும் வேறு சிலரின் தனிப்பட்ட அபிலாஷை என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த அபிலாஷை நிறைவேற்றலை தமிழைக் கொண்டு செய்ய முற்படும்போது உண்மையான தமிழன்பர்கள் வெட்கமும் வருத்தமும் அச்சமும் கொள்ளவேண்டியிருக்கிறது.

2. சங்க இலக்கியங்களில் தைமாதம் சிறப்பித்து எழுதப்பட்டிருக்கிறது என்பதும் தைநீராடல் என்பது தமிழர் பண்பாட்டின் ஓர் அம்சம் என்பதும் இந்தக் கருத்தாக்கத்திற்கு ஆதாரமாக குறிக்கப் பெறுகிறது. இவ்வாறு தைமாதம் சிறப்பிக்கப் படுவது உண்மையென்றாலும் இவற்றில் எந்த ஆதாரமும் தைமாதத்தை புத்தாண்டுத் தொடக்கமாக குறிக்கவில்லை என்பதும் உண்மை!  ஆனால் நோன்பு நோற்று, நோன்பு நிறைவேற்றலாகத் தைநீராடல் செய்வதையே சிறப்பித்துக் கூறும் சங்கத் தமிழ்ப் பாடல்களை நாத்திகர்களும் இந்துமத எதிர்ப்பாளகளும் தைப்புத்தாண்டுக்கான ஆதாரமாகக் கூறுவது புரியாத புதிராக இருக்கிறது. சங்க காலம் தொட்டு பழந்தமிழரின் ஆன்மிக ஈடுபாடுகளுக்கு இவற்றை ஆதாரமாகக் கொள்ளலாமேயன்றி தைப்புத்தாண்டுக்கும் இந்த தைமாதச் சிறப்பித்தலுக்கும் யாதொரு தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

3pongal-1. பொங்கல் பண்டிகை தமிழருக்கு முதன்மையான ஒரு திருநாள், ஆகவே அதுவே புத்தாண்டாக இருக்க வேண்டும் என்பது இன்னொரு வாதமாக வைக்கப் படுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப் பட்டதற்கு எந்தவிதமான தரவுகளும் இல்லை. இது தொடர்பான கல்வெட்டோ இலக்கியச் சான்றோ அல்லது பிறிதொன்றோ இல்லை. ஆதாரமில்லை என்பதனால் கொண்டாடப் படவில்லை எனக் கொள்ள இயலாது என்றொரு வாதம் வைக்கப்படலாம். இது உண்மைதான் என்றாலும் இத்தனை சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படும் பொங்கல் எவ்வாறு குறிக்கப் பெறாமல் இருக்கும் என்பது ஒரு மாபெரும் வினாவாகத் தோன்றுகிறது. பாரதமெங்கும் மகர சங்கராந்தி எனவும் அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப் பட்ட விழா தமிழகத்தில் கொண்டாடப்படத் தொடங்கியதிலிருந்து தமிழகத்தின் விவசாய மற்றும் வழிபாடு தொடர்பான வழக்கங்களோடு மிக உற்சாகமாகக் கொண்டாடப் படத் தொடங்கியது என்று கருதுவதே மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது.

பார்க்க: உலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்

4. தைப் பிறந்தால் வழி பிறக்கும் எனும் நம்பிக்கையூட்டும் பழமொழியை புதியன தொடங்குதலோடு தொடர்பு படுத்தி தைப்புத்தாண்டுக்கு ஆதரவாகச் சொல்லப்படுகிறது. தமிழகத்தின் விவசாய முறைமைகளை நோக்கும்போது ஒவ்வொரு தனிமனிதனின் ஆண்டுத் திட்டங்களை நிறைவேற்றும் காலமாக தை மாதத்தைக் காணலாம். விவசாயக் காரியங்கள் முடிந்த பிறகே அவ்வாண்டு திட்டமிடப்பட்ட திருமணமோ. வேறு சொத்துக்கள் கொடுக்கல் வாங்கலோ. தீர்த்த யாத்திரையோ. நேர்த்திக்கடன் நிறைவேற்றலோ செய்வதற்கான நேரமும் நிதியும் வாய்க்கப் பெற்றிருக்கும் காலமே தைமாதம். தை நீராடல் எனும் பழந்தமிழர் வழக்கத்தை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். ஆக இவை ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்காமல் ஆண்டு நிறைவை நோக்கிச் செல்லுதலைக் குறிக்கிறது என்பதே வெளிப்படை.

சித்திரை புத்தாண்டை மாற்றுவதற்கு தீவிரமாக சொல்லப்படுவன இம்முறையில் 60 ஆண்டுகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் செங்கிருதமாக (சம்ஸ்கிருதம்) இருப்பதும் அது தொடர்பாகச் சொல்லப்படும் புராணக் கதையுமாகும். செங்கிருதம் பாரதப் பண்பாட்டில் இரண்டறக் கலந்தவொன்றாக இருக்கிறது. வேதாச்சலம் என்ற தன் பெயரை மறைமலை என்று மாற்றிக் கொண்டு அடிகளார் இயங்கினாரே தவிர அந்தப் பெயருக்காக தன்னையே மாற்றிக் கொள்ளவில்லையே! மேலும் அவர் செய்துகொண்ட பெயர் வெறும் மொழிமாற்றுதானே! அதுபோல கருணாநிதி, ஜெயலலிதா என்று முற்றிலும் செங்கிருதப் பெயர் கொண்டவர்களை பெயருக்காக யாரும் ஆட்சேபித்துவிடவில்லையே! பெரும்பாலோருக்குத் தெரியாத ஒரு புராணக் கதையை தூசி தட்டி எடுத்து, அந்தக் கதையின் படிமங்கள்ள், உருவகங்கள் மற்றும் அது உணர்த்தும் உட்பொருள் பற்றிய எதையும் தெரிந்து கொள்ளாமல், காழ்ப்புணர்ச்சியுடன் சித்திரைப் புத்தாண்டுக்கு எதிரான கருத்தை உருவாக்கும் வகையில் இக்கதையைப் பரப்புரைப்பது அடாத செயல்.
சித்திரைப் புத்தாண்டு தான் அறிவியல்பூர்வமானதும் பல இலக்கிய மற்றும் வரலாற்று ஆதாரங்கள் கொண்டதுமான தமிழ் மரபாகும் என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லை.

தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா.
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.

உண்மை வேறாக இருக்கையில், இனவாதத்தையும், வெறுப்புணர்வையும் கொட்டி எழுதப்பட்டிருக்கும் மேற்காணும் பாரதிதானின் பாடல் எவ்வளவு அபத்தமானது என்பதை நாம் தெள்ளத் தெளிவாக உணர முடியும்.

இனி இது எவ்வாறு தமிழ் மரபுக்கு எதிரானது என்பதையும் பார்ப்போம்.

panchangamசித்திரைப் புத்தாண்டு தமிழரின் அறிவியல் பூர்வமான ஓரு மிகப்பழைய வழக்கம். நெடுநல்வாடையின் ஒரு பாடல் இதைப் பறைசாற்றுகிறது. ஆவணி மாதத்தில் ஒரு ஆண்டுத் தொடக்க முறை இலக்கியத்தில் காணப்பட்டாலும் அது வழக்கில் வராமல் சித்திரையே நிலைத்திருக்கிறது. இயற்கையின் பல்வேறு நிகழ்வுகளைக் கொண்ட வசந்தகாலம் அல்லது இளவேனிலின் தொடக்கம் பருவங்களின் புதிய சுழற்சிக்கு அடித்தளம் அமைக்கிறது. பனியால் கட்டுண்ட வண்டுகளின் சிறகுகள் இளஞ்சூட்டில் விரிந்து புதிய பூக்களின் மகரந்ததை நாடும் பொற்காலம் சித்திரை. வாடை தந்த நடுக்கம் நீங்கி வசந்தம் தரும் தென்றலின் சுகத்தில் மகரந்தம் மனக்கும் மாதம் சித்திரை.

பல பண்பாடுகளிலும் நான்காகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஓர் ஆண்டின் பருவங்களை ஆறு பருவங்களாகப் பிரித்து அதில் இளவேனிலை முதல் பருவமாக வைத்தார் நம் பழந்தமிழர். ஆனால் அரசோ அதில் மார்கழி மற்றும் தை மாதத்திற்கான முன்பனிக்காலத்தை இரண்டாக உடைத்து ஒரு ஆண்டுக் கணக்கைத் தொடங்க ஆவன செய்துகொண்டிருக்கிறது. ஓர் ஆண்டின் மிக நீண்ட இரவுப் பொழுதைக் கொண்டிருக்கும் தை முதல்நாளை ஆண்டுத் தொடக்கமாக்குவதும் பகலும் இரவும் ஒரே அளவினதாக இருக்கும் சித்திரை முதல்நாளை மாற்றுவதும் பழந்தமிழரின் அறிவியல் நோக்கை அவமதிப்பதாகும். ஆண்டுத் தொடக்கம் என்பதை வானவியலின் நிகழ்வுகளைக் கொண்டே முன்னோர் கணித்தனர். இன்றும் அரசு தை மாத முதல் தேதியை முன்னோர் வகுத்த பஞ்சாங்கத்தை வைத்தே கணிக்க இயலும். அவ்வாறு கணிக்கும்போது ஆட்டின் உருவத்தைக் கொண்ட மேழ இராசிக்குள் ஆதவன் நுழைவதே ஆண்டுப் பிறப்பு எனக் கொள்ளுதலின் முக்கியத்துவம் புரியும். ஏனெனில் ஆடு என்கிற வேர்ச்சொல்லைக் கொண்டே ஆண்டு என்ற சொல் பிறந்தது என்ற கருத்து இருக்கிறது.

தற்கால வழக்கான கல்வி ஆண்டும் கணக்கு ஆண்டும் சித்திரை புத்தாண்டை ஒட்டி வந்து கொண்டிருக்கும் நிலையில் – தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!

தொடர்பான சுட்டிகள்:

சித்திரையில்தான் புத்தாண்டு – தினமணியில் ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன்

தைந்நீராடல் – ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரன்

‘Dravidian’ New Year Ordinance facing defeat and death : B R Haran

Tamil New Year and the Tamil Nadu Government – I : B R Haran

Tamil New Year and the Tamil Nadu Government – II : B R Haran 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

 

45 மறுமொழிகள் தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!

  1. RAMA on January 14, 2010 at 5:19 am

    I wonder why change the name of Samiskritham/ Sanskrit into Sengkritham in this article.
    Unrelated to the topic, DMK leaders of old, used to call Shakespear as “Sega Priyar”, apparently a tamil translation.

  2. ஒகை நடராஜன் on January 14, 2010 at 8:58 am

    சம்ஸ்கிருதத்தை செங்கிருதம் என்று எழுதியதற்குக் காரணம் சம்ஸ்கிருதம் என்ற சொல்லின் பொருள் அறியாதவஎகள் அதன் செம்மையைப் புரிந்து கொள்ளலாம் என்பதற்காகவே. இப்படி தமிழில் எழுதுவது அம்மொழியை சிறப்பிக்கவே செய்கிறது என்பது எண் எண்ணம். மேலும் தமிழின் உச்சரிப்பு இயல்புகளுக்கு ஏற்ப மொழிகளின் பெயர்களை மாற்றிச் சொல்வது இயல்புதான். எ-கா: ஆங்கிலம், தெலுங்கு.

    சேக்ஸ்பியரை செகப்பிரியர் என்று சிலர் குறிப்பது கம்பர் லக்‌ஷ்மனனை இலக்குவன் என்று குறிப்பது போலத்தான்.

  3. V.Ramaswamy on January 14, 2010 at 11:19 am

    அருமையான கட்டுரை. காழ்ப்புணர்ச்சியே காரணம் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் அதை வெட்ட வெளிச்சமாக்கியதற்கு நன்றி. எது எப்படி இருப்பினும், தமிழ் புத்தாண்டை கொண்டாடுபவர்கள் சித்திரையில்தான் கொண்டாடுவார்கள். ஆங்கில புத்தாண்டையும் சனவரி இன்றி, அக்டோபர் போன்ற ஏதாவது மாதத்தில் தான் தமிழர்கள் கொள்ளவேண்டும் என்று கலைஞர் அரசு முடிவெடுத்து அதை அவரது கண்மணிகளும் ஜாலராக்களும் ஒப்புக்கொண்ட்டலும் ஆச்சரியமில்லை. அதைச் செய்யமாட்டார். ஏனெனில் இந்து மதம் தவிர குறிப்பாக பார்ப்பனர்கள் தவிர மற்ற எவர் மீதும் துணிவுடன் பாயமாட்டார்.

  4. லோகநாதன் on January 14, 2010 at 5:26 pm

    திருச்சிற்றம்பலம்
    ஒரு சிலர் தம் செல்வாக்கால் ஒரு பழமையான மரபை மாற்றிப் பெருமைப்பட்டுக் கொண்டால், அது பெருமை அல்ல; அது அவர்களின் சிறுமையையே வெளிப்படுத்துகிறது. எல்லா தமிழர்களின் கருத்தை சிறிதும் விசாரிக்காமல் அவரவர் தம் விருப்பத்திற்கு தமிழ்ப் புத்தாண்டை மாற்றினால் அதை எந்தத் தமிழனும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை; ஏற்றுக்கொள்ளவும் படாது. அவ்வாறு ஏற்றுக்கொள்பவர் தமிழுணர்வு அற்று சிலரின் சுயனலதுக்குச் சோடை போனவர்கள் ஆவர்.
    திருச்சிற்றம்பலம்.

  5. armchaircritic on January 14, 2010 at 5:38 pm

    அது சரி பார்ப்பனரின் துணையோடு அரியணை ஏறி வாயில்லாப்பூச்சிகளான பார்ப்பனர்களை ஒடுக்குவதிலும் ஏளனப்படுத்துவதிலும் வீரம் காட்டும் இந்த மு.க. அரசு இல்லாமல் வேறு மு.க. அரசு வந்தால் மீண்டும் புத்தாண்டு மாதம் மாறுமா?

  6. Bala on January 14, 2010 at 6:34 pm

    அசல் 28 நெ சுத்த வாக்கிய பஞ்சாங்கம் பார்க்கும் முறைகளை
    ஒரு பாடமாக தமிழ் ஹிந்துவில் எழுதினால் நலம்.

  7. MALAR MANNAN on January 14, 2010 at 7:46 pm

    அய்யா வணக்கம் தமிழ் மொழி வரலாற்றில் கிறிஸ்தவ பாதிரியார்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பது ஏன் ???

  8. T.SENTHILNATHAN on January 14, 2010 at 11:37 pm

    ஒரிஜினல் ஹிந்து என்றும் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டடமடர்கள், கருணாநிதி மற்றும் காங்கிரஸ் காரர்களுக்கு ஹிந்துவை எதிற்பதுதான் சோசியலிசம் ஹிந்துவை அவமனபடுதுவதும் அவர்களின் பழக்க வழக்க்ஹளையும் குறை கூறுவதும் அவர்களின் நடைமுறையை குறைகுருவதும் அவர்களின் சோசியலிசம் கிறஸ்தவர்கள் எது செய்தலும் தவறில்லை ஆனால் ஹிந்து எது செய்தலும் தவுறு

    ஹிந்து வஹா இருப்போம் ஹிந்து மதம் காப்போம். ஹரிஓம்

  9. ஆராதி on January 15, 2010 at 4:30 am

    தமிழ்ப் புத்தாண்டு சித்தரையில்தான் பழங்காலத்தில் கொண்டாடப்பட்டது என்பதற்குரிய சான்றுகளை அறிந்து கொள்ள வேண்டுகிறேன். ஓகை நடராஜன் அவர்களோ, மற்றவர்களோ தக்க சான்றுகளைத் தெரிவித்தால் மகிழ்வேன். நெடுநல்வாடையில் ஒரு பாடலில் உள்ளதாகக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நெடுநல்வாடை முழுவதும் ஒரு பாட்டுதான். அதில் ஒரு பாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது பொருத்தமாகத் தெரியவில்லை. நெடுநல்வாடையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் சித்தரை ஆண்டின் தொடக்கம் என்பதற்கான அடிகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். உங்கள் தரவுகள் கிடைத்த பிறகு மேற்கொண்டு கருத்து அறிவிக்கிறேன்.
    - ஆராதி -

  10. RAMA on January 15, 2010 at 6:14 am

    Dear Mr Natarajan
    Thanks for clearing my doubt. My apologies for any misunderstanding..
    I am going going to go off the topic and my apology upfront.
    My two cents worth:
    I feel Sanskrit/ Samiskritam are the words used widely and it will be easy for a layman like me to understand when used in such articles as yours.
    When there are appropriate alphabets in Tamil which can be used correctly, I am at a loss to understand why such names like Krishnan are changed to Kritinan Shakespear is the name of the person and can be written correctly in Tamil. Segapriyan is not the name of the English poet. Neither Kritinan will be equivalent to Krishnan
    My heart felt thanks for your great article
    Regards
    Rama

  11. Satish on January 15, 2010 at 1:23 pm

    Nice Article sir. But I think you missed to add a few more points. Actually I learnt it from one show in Jaya Plus tv yesterday, where a scientist couple were talking about the greatness of our tradition.

    Thai 1, as you said is the longest night – once upon a time. Now we know Dec 21st is the longest night of the year(so your statemnt in the article might be misleading to many). They say, the reason is, the earths axis changes by 1 degree every 72 years and Jan 1st, ie. the current Thai 1 was fixed based on the earths position 1500 years back. Counting the 1 degree shift for 1500 years, the longest day have shifted from Jan 14 to Dec 21. And so if we want to correct our calendars, Thai 1 should fall on Dec 21. And the tamil new year instead of April 14, shoul fall on I think March 21.

  12. Athiravi on January 15, 2010 at 7:59 pm

    மலர்மன்னன் சார்,

    நமக்கு, நமது பிழைப்பை கவனிபதற்கு தான் நேரம் சரியாக உள்ளது.

    கலூரிகளும், பள்ளிகுடங்களும் கிறிஸ்துவ மிஷனெரியின் கையில் இருக்கிறது.

    ஹிந்துக்கள் தமிழ் படித்தால் எந்த கல்வி கூடத்தில் வேலை கிடைக்கும்.

    minority institution கு அரசாங்கம் உதவி தொகை கொடுப்பதை நிறுத்தினால் தான் இந்த நிலை மாறும்.

    அல்லது, ஒவொரு ஜாதியும் minority ஆக அறிவிக்க பட வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே இந்து மதம் பிழைக்கும். எல்லா ஜாதியினரும் பள்ளிகூடங்களை கட்டலாம். ஹிந்துக்கள் எல்லோருக்கும் admission கொடுக்கலாம் எந்தவித ஒதுக்கீடும் இன்றி.

    இலையேல் கல்விக்கு கிறிஸ்துவர்களை அண்டியும் மதம் மாறியும் பிழைக்க வேண்டியது தான். இப்பொது நடப்பது மாதிரி

  13. ram on January 16, 2010 at 7:55 am

    ///சேக்ஸ்பியரை செகப்பிரியர் என்று சிலர் குறிப்பது கம்பர் லக்‌ஷ்மனனை இலக்குவன் என்று ///

    இது மிகவும் அநாகரீகமான ஒன்று. நாம் தமிழ்ப்படுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு மற்றவர்கள் பெயரை கொச்சைப்படுத்துவது ஞாயமில்லை. ஷாஜஹான் என்பது ஒருவர் பெயர் அதை சாசகான் என்று உச்சரிக்கிறார்கள். ஷாஜஹான் கேட்டால் சிரச்சேதம் செய்யச் சொல்லுவான். ஒரு விஷயம் நாம் கவனிக்க வேண்டும். உச்சரிப்புக்குத் தேவையான எழுத்துக்கள் இல்லாத மொழிகள் தேய்பிறையை சந்திக்கும்.

    ஆங்கிலத்தில் வெறும் இருபத்தாறு எழுத்துக்கள். தமிழ் மட்டுமல்ல பல இந்திய மொழிகளின் சரியான உச்சரிப்புக்கு ஆங்கிலத்தில் எழுத்துக்கள் இல்லை. ஆனால் அவை பிழைத்திருப்பது அரசியல் ஆதிக்கத்தால் தானே ஒழிய மொழி வளத்தால் இல்லை.

    எனவே தமிழ் மொழியில் ஜ ஷ ஹ ஸ் போன்ற உச்சரிப்பை எளிதாக்கும் எழுத்துக்களை நீக்கிக் கொண்டிருந்தால் பிற மொழிகளோடு நாம் எளிதில் கலக்க முடியாது. மொழியை ஊடகமாக பயன் படுத்துவதே அறிவு. அதை உணர்ச்சியாக்குவது பகுத்தறிவன்று. ஆக தமிழ்ப்படுத்துகிறேன் என்ற பெயரில் பிறர் பெயர்களை அல்லது பொதுப்பெயர்களை மோசமாக தமிழ்ப்படுத்துவது அநாகரீகம் மட்டுமல்ல மொழித்தீவிரவாதமே ஆகும்.

  14. ram on January 16, 2010 at 7:59 am

    ///தை மாதத்தில் அப்படி என்ன விசேஷம்? அது திருவள்ளுவர் பிறந்த மாதம்.
    திருவள்ளுவர் அந்த மாதத்தில்தான் பிறந்தார் என்று (‘பகுத்தறிவுவாதிகள்” ஏற்கிற வகையில்) எப்படித்தெரியும்? இப்படிக்கேட்பதே, பகுத்தறிவுக்கு விரோதம்.
    சரி, தொல்காப்பியர் – கலைஞர் கையினால் உரை எழுதப்படுகிற பெருமையைப் பெற்ற தொல்காப்பியத்தை எழுதியவர் – திருவள்ளுவருக்கு அறுநூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே பிறந்தாரே? அவர் பிறந்த மாதத்தில் புத்தாண்டைத் துவக்க, ஏன் கலைஞர் ஆணையிடவில்லை? உஸ்!!! அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசக் கூடாது. இது “கலைஞர் ஆதரவுத் தமிழறிஞர்கள்” ஏற்றுக்கொண்டுள்ள விஷயம்.
    தவிர, கலைஞர் தனது முடிவிற்கு ஒரு ஆதாரமாக காட்டியிருக்கிற மாதிரி, “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழி இருக்கிறதே? ஹையா!! இப்ப என்ன செய்வே? இப்ப என்ன செய்வே….?///

    இந்தச் சுட்டியைப் படிக்கலாம். ஒரு வரலாற்றி ஆய்வை வெளியிட்டுள்ளனர்.

    http://jayaraman.wordpress.com/2008/01/24/newyear

  15. ram on January 16, 2010 at 8:14 am

    அம்பேத்கர் பிறந்தநாளை யாரும் கொண்டாடவில்லை என்று அந்த ஜாதிக்காரர்கள் சொல்லியதால் பார்ப்பன பண்டிகை என்று அவர்கள் சொல்லிக்கொள்ளும் சித்திரைப் புத்தாண்டை ஒட்டு அரசியலுக்காக இடம் மாற்றி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

  16. அருண் on January 16, 2010 at 6:52 pm

    @ஆராதி

    //நெடுநல்வாடையில் ஒரு பாடலில் உள்ளதாகக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நெடுநல்வாடை முழுவதும் ஒரு பாட்டுதான். அதில் ஒரு பாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது பொருத்தமாகத் தெரியவில்லை. நெடுநல்வாடையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் சித்தரை ஆண்டின் தொடக்கம் என்பதற்கான அடிகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.//

    “”திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டி லம்” என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல் வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 – 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும்

  17. Muthu on January 17, 2010 at 9:30 pm

    கலைஞர் ஆட்சியில் உண்மையிலேயே மக்களுக்கு உபயோகமான திட்டங்கள் வருவது அரிது. அவருக்கு தம்மை அனைவரும் புகழ வேண்டும் – தனக்கு பின்னும் பெயர் நிலைக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. திருவள்ளுவர் சிலை வைப்பது, தொல்காப்பியம் – திருக்குறள் உரை எழுதுவது (அதன் தரம் எப்படி இருந்தாலும்), முடிந்த இடங்களில் எல்லாம் கல்வெட்டு வைத்துக் கொள்ளுவது, இந்த புத்தாண்டு மாற்றம் என்று சற்றும் ஒரு அரசு செய்ய வேண்டிய காரியங்களை தவிர்த்து இது போன்ற மற்ற செயல்களில் ஈடுபடுகிறார். ஜெயலலிதா இதற்கு சற்றும் குறைந்தவர் அல்ல – கருணாநிதி புகழ்ச்சி பிரியர் என்றால், அவர் புகழ்ச்சி வெறியர்.

  18. Muthu on January 17, 2010 at 9:46 pm

    இந்த ஷேக்ஸ்பியர் – செகப்பிரியர், தமிழில் ஜ – ஷ – ஹ போன்ற எழுத்துக்கள் இருக்கலாமா என்கிற விவாதம் இந்த கட்டுரைக்கு சம்பந்தம் இல்லை. இருந்தாலும் ஒரு கருத்தை சொல்லி விடுகிறேன் – கம்பரும் – ஆழ்வார்களும் – நாயன்மார்களும் – இருந்த காலத்தில் ஜ – ஷ – ஹ இருந்ததா என்று தெரியவில்லை – அப்போது இல்லாமல் இருந்திருக்கலாம். ஜ – ஷ – ஹ ஒரு பிற்சேர்க்கை என்று வைத்துக் கொண்டாலும் நா – னா – போன்ற எழுத்துக்களை ஒரே எழுத்தாக எழுதி வந்தோம் – இப்போது எழுத்து சீர்திருத்தம் ஏற்பட்டு இரண்டு எழுத்துக்களாக எழுதுவதை எழுத்து வளர்ச்சியாகவே கருதுகிறோம் – அதே நேரத்தில் ஜ – ஷ – ஹ வை மட்டும் ஏன் மொழி வளர்ச்சியின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்வதில்லை? மற்ற மொழிச் சொற்களையும் பேச உபயோகப் படுகிறது – வடமொழி மந்திரங்களையும் – ஒலிப் பிழையின்றி சொல்ல உதவுகிறது எனும் போது, அந்த எழுத்துக்களை ஏன் ஒதுக்க வேண்டும்? வடமொழி பார்ப்பனர்கள் மட்டுமே உபயோகபடுத்துவது – மந்திரங்களும் அப்படியே – இவை இரண்டுமே தேவை இல்லை – மற்ற மொழி சொற்கள் தமிழுக்குள் சீரணிக்கப் படவே கூடாது – (திருவள்ளுவரே ‘கூலி’ போன்ற சொற்களை ஏற்றுக்கொண்டதை கவனிக்க) – இவை தமிழகத்துக்கு தேவை இல்லை கருதினால் மேலே பேச எதுவும் இல்லை.

  19. ஜயராமன் on January 18, 2010 at 10:53 am

    /// அம்பேத்கர் பிறந்தநாளை யாரும் கொண்டாடவில்லை என்று அந்த ஜாதிக்காரர்கள் சொல்லியதால் பார்ப்பன பண்டிகை என்று அவர்கள் சொல்லிக்கொள்ளும் சித்திரைப் புத்தாண்டை ஒட்டு அரசியலுக்காக இடம் மாற்றி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது ////

    ராம் ஐயா, அப்படி இல்லை. இந்த தைமாத தகிடுதத்தம் அறிவிக்கப்பட்டபோது அந்த வருடத்திற்கான பட்டியலில் இந்த அம்பேத்கார் பிறந்தநாள் இல்லை. ஆனால், இந்த தைமாத புதுவருட அறிவிப்பு பயங்கரமாய் தோல்வியடைந்தது. தமிழகத்தை தவிர மற்ற எல்லா தமிழ்பேசும் உலகலாவிய சமுதாயமும் இந்த மாற்றத்தைப் புறக்கணித்து ஏப்ரலில் புத்தாண்டைக் கொண்டாடினார்கள். இலங்கையும், மலேசியாவும், அதிகாரபூர்வமாக ஏப்ரலில்தான் புதுவருட அறிவிப்பு செய்தார்கள். பிரபாகரன் கூட ஏப்ரலில்தான் புதுவருட வாழ்த்து சொன்னார். (அதுவே அவர் சொன்ன இறுதி புதுவருட வாழ்த்தாகிப்போனது ஒரு சோகம்..) ஏப்ரலில் தமிழக கோயில்களில் பூசைகள் தடைசெய்யப்பட முயற்சிசெய்யப்பட்டு அதற்கு பலத்த எதிர்ப்பு எழும்பியது. எல்லாவற்றிற்கும் மேலாக, கலைஞர் டிவியில் “சித்திரை மாத பிறப்பு விழாவை” முன்னிட்டு சிறப்பு கூத்துகள் போட்டார்கள் – புதுவருடம் என்று சொல்லாமல். அதனால், என் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லி – அம்பேத்கார் பிறந்தநாளை அடுத்த வருட விடுமுறைப் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். மக்கள் கொண்டாடும் இந்த தினத்தை “அம்பேத்காரை கொண்டாடும் விழா”வாக சொல்லிக்கொள்ளலாமே. அதற்காகத்தான்.

  20. Seshsundara on January 18, 2010 at 6:24 pm

    I like to point out some interesting episode that happened in my life. Though it is a deviation it is connected to the above arguments, with regard to the name of the person. One of my superior’s name was Mr. Naig. When his name was written in a cover addressed to him as Mr Naik ( it is a proper noun it can be written in any way ), he called the person and fired him and returned the cover itself asking him to correct the name on the cover. One’s name and spelling is so much important that nobody can change it or translate it. The so called Tamil pandits should know this unanimous truth.

  21. subbu on January 18, 2010 at 9:09 pm

    அருமையான கட்டுரை எழுதிய ஓகை நடராஜனுக்குப் பாராட்டுக்கள்.மகர சங்கராந்தி பொங்கலாகவும் தமிழர் திருநாளாகவும் மாற்றப்பட்டதைக் குறித்து அவர் ஒரு கட்டுரை எழுதவேண்டும்.
    அன்புடன்
    சுப்பு

  22. ஒகை நடராஜன் on January 19, 2010 at 11:17 pm

    //தமிழ்ப் புத்தாண்டு சித்தரையில்தான் பழங்காலத்தில் கொண்டாடப்பட்டது என்பதற்குரிய சான்றுகளை அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.//-ஆராதி

    ஆரதி, நீங்கள் சுட்டியது போல் நெடுநல்வாடை ஒரே பாடல்தான். அருண் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் அப்பாடலின் 160,161,162,163ம் வரிகள் சித்திரையில்தான் புத்தாண்டு என்பதற்கு சான்றாக நிற்கின்றன.

    திண்ணிலை மருப்பின் ஆடுதலை ஆக,
    விண்ஊர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து,
    முரண்மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய,
    உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிதுஉயிரா;

    ஆதவன் மேழ இராசியைத் தொடக்கமாக வைத்து மற்ற இராசிகளில் பயணிக்கிறான் என்பது இங்கு தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆதவனின் ஒரு சுழற்சியே ஓர் ஆண்டு என்று கொள்ளப்படுவதால் ஆதவன் மேழ இராசியில் பயணிக்கும் சித்திரை மாதமே ஆண்டின் துவக்கம் என்பது ஐயந்திரிபர தெளிவிக்கப் படுகிறது. தை மாத புத்தாண்டுக்கு இதுபோன்ற எந்த ஆதாரமும் இல்லை. மேலும் பொங்கல் திருநாள் கொண்டாடப் பட்டதற்கே இலக்கிய ஆதாரங்கள் இல்லை. இதை நான் கொடுத்திருக்கும் மற்ற சுட்டிகளிலிருந்து அறியலாம்.

    மற்றுமொரு சுவையான சுட்டி:
    http://www.thinnai.com/?module=displaystory&story_id=60905282&format=html

    //Thai 1, as you said is the longest night – once upon a time. Now we know Dec 21st is the longest night //-Satish

    சதிஷ், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அறிவியல் உண்மை சரிதான். தற்காலத்தில் மிக நீண்ட இரவைக் கொண்ட நாள் டிசம்பர் 21. அதேப்போல் தற்காலத்தில் பகலும் இரவும் ஒரே அளவினதாக இருக்கும் நாள் மார்ச் 21. இந்த நாளில்தான் இளவேனில் தொடங்குகிறது. இவ்வாறு சுமார் 23 நாட்கள் நமது பஞ்சாங்கங்களில் மாறிப் போயிருக்கின்றன. பூமியின் அச்சு தன் நிலையிலிருந்து தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் இந்த வேறுபாடு களையப்படவேண்டும்.

    ஆனால் இதன் காரணமாக புத்தாண்டு தை மாதம் தொடங்கினால் என்ன தவறு என்ற வாதம் ஏற்றுக் கொள்வதற்கில்லை. ஏனென்றால் புத்தாண்டு இளவேனில் காலத்தில் தொடங்கப்படவேண்டும். பொதுவாக சித்திரை மாதம் துவங்கும் ஏப்ரல் 14 இள்வேனிற்காலம்தான். நமது முன்னோர் வகுத்த பருவங்கள் இளவேனிலிருந்தே தொடங்குகின்றன.

    ஓகை நடராஜன்.

  23. Giri on January 20, 2010 at 4:46 pm

    அரசாங்கம் தனது வேலைக்காக மட்டுமே எந்த முறையையும் வைத்து “ஆண்டு” என்பதை வைத்துக் கொள்ளலாம். ஆனால் மக்களை இப்படித்தான் வருடப் பிறப்பைக்கொண்டாட வேண்டும் என்றுக் கட்டுப்படுத்த உரிமை இல்லை. தமிழ் நாட்டில் உள்ள தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் வருடப் பிறப்பை யுகாதி (தெலுங்கு வருடப் பிறப்பு என்று சொல்லப் படுகிறது) என்றுதான் கொண்டாடுகிறார்கள். அதுபோல ஏனைத் தமிழர்களும் அரசின் அறிவிப்பைப் பொருட்படுத்தாது சித்திரை முதல் நாளை வருடப் பிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

  24. ஆராதி on January 26, 2010 at 6:43 am

    இந்துப் பண்பாடு, பாரதக் கலாச்சாரம் எனப் பேசும் நம் நாட்டில் ஆண்டுப் பிறப்பு மட்டும் மாறி மாறி வருவதற்குக் காரணம் என்ன? இந்தியா முழுமைக்கும் ஒரே வருடப் பிறப்பு கொண்டாடப் பட்டதற்கு ஏதேனும் சான்றுள்ளதா?
    ஆங்கிலப் புத்தாண்டில் எல்லா இந்துக் கோயில்களிலும் பூஜை செய்கிறார்களே ஏன்? எந்த அரசு ஆணையும் இல்லாமல் ஆங்கிலப் புத்தாண்டன்று இந்திய மக்கள் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறார்களே ஏன்?
    தமிழ்நாட்டில் என்ன நிலை என்று பார்த்தால் 3 வகையாக ஆண்டுப் பிறப்புக் கொண்டாடப் படுகிறது.
    சித்திரையில் ஒரு புத்தாண்டு
    தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த சேரநாடு என்றழைக்கப்பட்ட கேரளத்திலும் தென்பாண்டி நாட்டின் சில பகுதிகளிலும் ஆவணி முதல் நாளைப் புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாகிறார்கள்.
    இப்பொழுது தை முதல் நாள் அரசு ஆணைப்படி ஆண்டுப் பிறப்பு.
    நடுநெல்வாடையின் அடிகள் சூரியன் மேட ராசியைத் தொடக்கமாகக் கொண்டு வலம் வருகிறது என்க் கூறுகின்றன. அதனால் அக்காலத்தில் சித்திரையை ஆண்டின் தொடக்கம் எனக் கூற முடியாது.
    “ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கிலிருக்கும் ஒரு பழக்கத்தை” என ஓகை நடராஜன் கூறுவதற்குக் தக்கச் சான்றுகள் வேண்டும்.

    உலகம் முழுவதும் இரண்டு வகையான மாதக் கணக்கீடுகள் உள்ளன. ஒன்று சூரியனை முதன்மைப்படுத்திக் கணக்கிடுவது. இரணடாவது சந்திரனை முதன்மைப்படுத்திக் கணக்கிடுவது.

    தமிழில் உள்ள மாதப் பெயர்கள் எல்லாம் சந்திரனை முதன்மைப்படுத்திக் கணக்கிடும் முறையைக் கொண்டவை.

    தனித்தமிழ்க்காக வாழ்ந்த தேவநேயபாவாணர் இதற்கு மாறாகச் சூரியனை முதன்மைப்படுத்தித் தமிழ் மாதப் பெயர்களை வழங்கினார். அவர் மேடம் முதலிய இராசிகளின் பெயர்களைத் தமிழப்படுத்தி மாதப் பெயராக்கினார். மேழம், விடை (காளை என்பது பொருள்), ஆடவை என அவர் பன்னிரண்டு மாதப் பெயர்களை அமைத்தார். அதனையே இன்றும் தனித் தமிழ் அன்பர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
    கூதிர் யாமம் என்மனார் புலவர்
    என்பது தொல்காப்பியம்.

    காரே கூதிர் முன்பனி பின்பனி
    சீரிள வேனில் வேனில் என்றாங்கு
    இருமூன்று திறத்தது தெரிபெரும் பொழுதே
    என்பது நம்பியகப்பொருள்.

    ஆவணி முதலா இரண்டி டாக
    மேவின திங்கள் எண்ணினர் கொளலே
    என்பது தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான திவாகர நிகண்டு.
    மருவும் ஆவணியே ஆதி மற்றிரண் டிரண்டு மாதம்
    பருவம் மூவிரண்டும் ஆய்ந்து பார்த்திடின் வாய்த்த பேராம்
    என்பது மற்றொரு புகழ்வாய்ந்த சூடாமணி நிகண்டு.

    நாம் வாழ்வது அறிவியல் யுகமான 21ஆம் நூற்றாண்டில். விருப்பு வெறுப்புக்களை அப்பால் வைத்துவிட்டு இன்றைய தலைமுறைக்குச் சரியான தகவல்களைக் கொண்டு செல்வது நமது கடமை. அரசியல்வாதிகள் மக்கள் மனத்தில் நஞ்சை விதைத்து, சண்டை மூட்டிவிட்டுக் குளிர்காய்கிறார்கள் என்றால் அதற்கு நாம் யாரும் துணை போய்விடக் கூடாது என வேண்டிக் கொள்கிறேன்.

    இது தொடர்பாக விரிவாக விவாதிக்க விரும்பினால் தொடரலாம்.

    ஆராதி

  25. ram on January 26, 2010 at 3:56 pm

    ///எந்த அரசு ஆணையும் இல்லாமல் ஆங்கிலப் புத்தாண்டன்று இந்திய மக்கள் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறார்களே ஏன்?///

    அடிமைத்தனத்தின் முற்றுப்பெறா தன்மை.

    ///ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கிலிருக்கும் ஒரு பழக்கத்தை” என ஓகை நடராஜன் கூறுவதற்குக் தக்கச் சான்றுகள் வேண்டும்.///

    அதே போல் வள்ளுவர் பிறந்த நாளுக்கு யாரும் சான்று கொடுக்க வில்லை. அதைவைத்து தானே வள்ளுவர் ஆண்டு என்கிறார்கள்.

  26. ஒகை நடராஜன் on January 28, 2010 at 12:17 am

    ஆராதி,

    இந்திய பண்பாடு மற்றும் ஏனைய புத்தாண்டுகள் பறிய உங்கள் கேள்விகள் இப்பதிவுக்குப் புறம்பானவை என்பதோடு இக்கேள்விகளால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதும் புரியவில்லை. இப்பதிவு ’தையில் புத்தாண்டு தமிழர் மரபன்று’ என்ற பொருள் பற்றியதே!

    //நடுநெல்வாடையின் அடிகள் சூரியன் மேட ராசியைத் தொடக்கமாகக் கொண்டு வலம் வருகிறது என்க் கூறுகின்றன. அதனால் அக்காலத்தில் சித்திரையை ஆண்டின் தொடக்கம் எனக் கூற முடியாது.//

    தெளிவாக மேழத்தில் ஆண்டு தொடங்குகிறது என்று சொல்லும் பாடல் வரிகளை சித்திரையை ஆண்டின் தொடக்கம் எனக் கூற முடியாது என்று கூறுகிறீர்களே, என்ன குழப்பம்? ஆதவன் மேழத்தில் இருக்கும் காலமே சித்திரை மாதம் என்பதில் உங்களுக்கு ஏதேனும் ஐயம் இருக்கிறதா?

    “ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கிலிருக்கும் ஒரு பழக்கத்தை” என ஓகை நடராஜன் கூறுவதற்குக் தக்கச் சான்றுகள் வேண்டும்//

    நெடுநல்வாடை இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்பதில் உங்களுக்கு ஏதேனும் ஐயம் இருக்கிறதா?

    ஆவணியில் புத்தாண்டு தொடங்கியிருக்கலாம் என்ற கருத்தத் தரும் தொல்காப்பிய எடுத்துக்காட்டுகளைத் தந்ததற்கு நன்றி. இவ்வரிகள் தையில் புத்தாண்டு என்ற கருத்தை வலியுறுத்தாதது மட்டுமல்லாமல் தை மாதத்தை ஆண்டின் மையத்துக்கு தள்ளுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆக தொல்தமிழ் மரபின் படி புத்தாண்டு சித்திரையா அல்லது ஆவணியா என்ற விவாதம் இருக்கலாமேயன்றி தையில் நிச்சயமாக இல்லை என்று உறுதியாகக் கூறிவிடலாம்.

    இன்னொரு சுட்டி: http://groups.google.com/group/minTamil/msg/42c0387e9d8962f8

    //நாம் வாழ்வது அறிவியல் யுகமான 21ஆம் நூற்றாண்டில். விருப்பு வெறுப்புக்களை அப்பால் வைத்துவிட்டு இன்றைய தலைமுறைக்குச் சரியான தகவல்களைக் கொண்டு செல்வது நமது கடமை. அரசியல்வாதிகள் மக்கள் மனத்தில் நஞ்சை விதைத்து, சண்டை மூட்டிவிட்டுக் குளிர்காய்கிறார்கள் என்றால் அதற்கு நாம் யாரும் துணை போய்விடக் கூடாது என வேண்டிக் கொள்கிறேன்.//

    இந்த அறிவுரை அதீதமாக இருப்பதோடு விவாதத்தில் தேவையில்லாததுமாக இருக்கிறது. இந்த வரிகள் இப்பதிவு இன்றைய தலைமுறைக்கு தவறான தகவல்களைக் கொண்டு செல்வதாகவும், மக்கள் மனத்தில் நஞ்சை விதைத்து, சண்டை மூட்டிவிட்டுக் குளிர்காய்வதற்கு துணை போவதாகவும் உத்தேசமாகக் குறிப்பிடுகிறது. இவ்வாறு பூடகமாகக் குறிப்பிடுவது தேவையற்றது.

    ஓகை நடராஜன்.

  27. Ramachandra Menon on February 2, 2010 at 1:43 pm

    ஐயா,
    உங்கள் கட்டுரை மிகவும் நன்றாக இருக்கின்றது. தை மாதத்தில் வருடபிறப்பு எங்கும் கேட்டதில்லை. வட இந்தியாவிலும் வருடம் பிறப்பது சித்திரை மதத்தில் தான். இதை மற்ற கூடாது. இது என்னுடைய வேண்டுகோள்.

    ராமச்சந்திர மேனன்

  28. Praba on March 25, 2010 at 8:02 am

    பிரபவ முதல் விபவ வரையிலான ஆண்டுகளை கடைப்பிடிக்கும் போது வரலாற்று நிகழ்வுகளை குறிப்பிடும் பொது குழப்பங்கள் ஏற்படும். உதாரணமாக விரோதி வருடத்தில் சுனாமி வந்தது என்றால் இன்னும் 1௦௦ வருடங்களுக்கு பிறகு எந்த விரோதி வருடத்தில் வந்தது என்று தெரிந்து கொள்ளுவது இது வரலாற்றில் குழப்பத்தை ஏற்ப்படுத்தும். இதற்க்கு ஒரு வழி சொல்லுங்கள் பார்ப்போம்

  29. R.Sridharan on April 14, 2010 at 9:51 pm

    There is severe power shortage and power cut in Tamilnadu .

    The Industries are crippled due to this and production suffers.
    Workers are laid off and they lose wages.

    Most of the roads in the state resemble the surface of the Moon
    During rainy season most of the areas float in water
    people undergo severe hardship
    Most of them cannot get milk and power
    since water enters houses their valuables are destroyed
    people cannot sleep for days together.
    snakes enter houses.
    drainage water also enters the houses
    After the rains also people have to spend heavily to clean water sumps, wells etc which stink because of drainage water.

    This happens year after year.

    Most of the areas in Tamilnadu suffer severe drinking water shortage
    Land cost has been artificially jacked up because of politician- land mafia nexus

    Karunanidhi has no time to attend to these problems

    But he is busy attending cinema functions, functions got up by chamchas to praise him,etc etc

    So he and his gang have to divert attention by whipping up controversies like Tamil new year etc.
    Most shameful.
    R.Sridharan
    R.sridharan

  30. prasanth on August 24, 2010 at 7:26 pm

    dear sir i want biography of thiruvalluvar.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.