பக்தி ஓர் எளிய அறிமுகம் - 2
சுஜாதா தேசிகன்
3 Feb 2010 |
அச்சிட
அடுத்த பகுதிக்கு போகும் முன் பக்தி பற்றி நந்திதா என்பவர் எனக்கு அனுப்பிய மின்ஞ்சல் இது.
வணக்கம்.
தங்களுடைய கட்டுரையைப் படித்தேன். மகிழ்ந்தேன், பக்தி என்பது பக என்ற வேரிலிருந்து பிறப்பது. அதன் பொருள் பிளவு படுதல் என்பதாகும். சில சொற்கள் வடமொழிச் சொற்களாக இருப்பினும் தத்பவம் தத் சமம் என்ற வகையில் தமிழிலும் எடுத்து ஆளப் படும். தன்னுடைய ஆதியஞ்சோதியை அங்கு வைத்து இங்கு பிறக்கும் திருமாலுக்கு பகவான் என்பது அசாதாரணமான பெயர். திருக்குறளிலும் இந்த பக என்ற சொல் கையாளப் பட்டிருக்கிறது (குறள் 889 எட்பகவன்ன சிறுமைத்தே ஆயினும்) வேதத்தின் இலக்கணத்தைத் தமிழ் தான் நெருங்கி வருகிறது, வேதம் ஸ்வரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை அனைவரும் அறிவர், ப்லூதம் என்பது வேதத்தில் காணப்படும் அது ஒலியைச் சற்று நீட்டி ஒலிக்க வகை செய்யும், இது வடமொழி என்று கூறப் படும் இன்றைய சமஸ்கிருதத்தில் கையாளப் படுவதில்லை, (வடு+அல் - மொழி-குற்றமற்ற மொழி என்பது வேதத்தைத்தான் குறிக்கும் என்பது என் கருத்து) வடல் மொழி வட மொழி என்று சிதைந்து பல்வேறு வாதங்களுக்கு இடம் கொடுத்து விட்டது, அந்தப் ப்லூதம் தமிழில் அளபெடை என்று கையாளப் படுவதும் அனைவரும் அறிந்ததே, காரணம் மாத்திரைக் குறைவு ஏற்படக் கூடாது என்பதற்காகவே.
பக என்ற சொல் விகாரமடைந்து பகுத்தல் ( வ ப யோர் அபேத: என்ற பாணினி சூத்திரத்தின் படி வகுத்தல் என்றாயிற்று) பக்தி என்பது பத்தி என்று கையாளப்படுகின்றது, வைணவப் பெரியாரான வேதாந்த தேசிகர் என்பாரும் பத்தி முதலாமவற்றில் பதியெனக்குக் கூடாமல் என்று கையாண்டுள்ளார்.
உலக பந்தங்களிலிருந்து விடுபட்டு பிளவு பட்டுப் பரம்பொருளுடன் ஒன்று படுவதற்கு பக்தி என்ற சொல் கையாளப் பட்டு வருகிறது.
அன்புடன்
நந்திதா
அழகான விளக்கம் சொன்ன நந்திதாவிற்கு நன்றிகள் சொல்லிவிட்டு மேலும் தொடரலாம்.
கேள்வி கேட்காத திட பக்தி அல்லது மஹா விசுவாசம்தான் முதல் படி என்று போன பகுதியில் பார்த்தோம்.
எல்லோருக்கும் தெரிந்த பிரகலாதன் கதையைப் பார்க்கலாம். பிரகலாதன் “ஓம் நமோ நாராயணாய ….” என்ற நாமத்தைச் சொன்னதால் அவன் தந்தை ஹிரணியன் பல தண்டனைகளை அவனுக்குக் கொடுத்தான். எதுவுமே பிரகலாதனிடம் பலிக்காதபோது சோர்ந்து, “அப்படியானால் உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? கூப்பிடு அவனை” என்று ஹிரணியன் சொல்ல, பிரகலாதன் ”அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” என்று பதில் சொன்னது வரை பலருக்குத் தெரியும். ஆனால் இந்த இடத்தில் அதிகம் பதட்டமானது யார் தெரியுமா? பிரகலாதனோ, ஹிரணியனோ இல்லை; அது மஹாவிஷ்ணுவான நரசிம்மன்தான். அந்த ஒரு நொடி நரசிம்மன் ஹிரணியன் சொன்ன தூணில், தான் வந்துவிடவேண்டுமே என்று பிரகலாதனுக்கு இருந்த திட பக்தி/விசுவாசம் பெருமாளையே கலங்கடித்தது. அந்த சமயத்தில் பெருமாளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் எல்லா இடத்திலும் வியாபித்து இருந்தான் என்று பெரியவாச்சான் பிள்ளை உரையில் இருப்பதாக முன்பு யாரோ சொல்லக்கேட்டிருக்கிறேன்.
விஷ்ணு புராணத்தில் பிரகலாதனை ஹிரணியன் மலையிலிருந்து உருட்டி விடும் போது தன் இரண்டு கைகளாலும் நெஞ்சை கெட்டியாக பிடித்துக்கொண்டானாம். ஏன் என்றால் அவன் நெஞ்சில் நாராயணன் குடி கொண்டு இருக்கிறார். அவருக்கு ஏதாவது அடிபட்டுவிட கூடாது என்று. அன்பு!
பக்திக்கு அன்பு தான் முக்கியமானது. நாம் எவ்வளவு பெரியவனாக ஆனாலும் நம் மீது தாய் தந்தையருக்கு அன்பு மாறாது. அதை அடுத்த முறை நீங்கள் கவனிக்கலாம். அவர்கள் நெஞ்சில் நீங்கள் எப்போதும் இருக்கிறீர்கள்!
பெரியாழ்வார் தனது திருமொழியில் சொல்லுவதை பாருங்கள்.
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து
மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூஇட வல்லார்க்கு
அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே
(பெரியாழ்வார் திருமொழி 4-5-3)
இதில் பெரியாழ்வார் “நெஞ்சில் (மார்வம்) பெருமாளுக்கு கோயில் அமைத்து, அதில் மாதவன் என்ற தெய்வத்தை வைத்து அன்பு (ஆர்வம்) என்ற பூவை சேர்த்தால் யமனின் (அரவதண்டம்) தண்டனையிலிருந்து தப்பித்து பிழைக்காலாம் (உய்யல்)” என்கிறார்.
பக்திக்கு அன்பான நெஞ்சே கோயில்!
ஒரு அழகான ரோஜாவைப் பார்க்கிறீர்கள். உங்கள் மனதில் ஒரு விதமான மகிழ்ச்சி வருகிறது இல்லையா? நீங்கள் அந்த ரோஜாவிடம் ஏதாவது கேட்கிறீர்களா அல்லது அந்த ரோஜாதான் உங்களிடம் எதாவது கேட்கிறதா? இல்லையே!
இரவின் அமைதியில் வீட்டின் பால்கனியில் உட்கார்ந்திருக்கும்போது தூரத்தில் ஒரு ரம்மியமான வயலின் இசையோ, வீணை இசையோ கேட்கிறது. மனதிற்கு ரம்யமாக இருக்கிறது. அந்த இசையிடம் ஏதாவது கேட்கிறீர்களா? அல்லது அந்த இசை உங்களிடம் ஏதாவது கேட்கிறதா? இல்லையே!
அது போலதான் பக்தியும். அது உணர்வுபூர்வமானது, உங்களுக்குப் பூவைப் பார்க்கும்போதும், இசையைக் கேட்கும்போதும் ஏற்படும் உணர்வு ஏற்பட வேண்டும். இன்று முடியாவிட்டாலும் என்றாவது வரும் என்ற நம்பிக்கை வேண்டும்.
பழைய சைதன்யர் கதையைப் பார்க்கலாம்.
சைதன்யர் ஒரு யாத்திரை சென்றபோது வழியில் ஒருவன் கீதை படித்துக்கொண்டு இருந்தான். சற்று தூரத்தில் மற்றொருவன் கீதையை கேட்டுக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதுகொண்டு இருந்தான். சைதன்யர் அழுதுகொண்டு இருந்தவனிடம் சென்று, “கீதை உனக்குப் புரிகிறதா? ஏன் இப்படி அழுகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், ”எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. அவன் படிப்பது என்ன என்று கூட தெரியாது,” என்றான். “பின் ஏன் அழுகிறாய்?” என்று சைதன்யர் கேட்டார். அதற்கு அவன் ”அர்ஜுனனின் தேர் தெரிகிறது, அதன் முன்னால் கிருஷ்ணர் தெரிகிறார். அவர்கள் ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள்; அவர்களைக் கண்ட சந்தோஷத்தில் அழுகிறேன்,” என்று கூறினான். உண்மையான பக்தி வார்த்தை ஜாலங்களிலும் புறச் சின்னங்களிலும் வருவதில்லை. உணர்வுகளில் வரும்போதே பலவற்றை உணரலாம்.
அடுத்த முறை, ஏதாவது ஒரு சிறு குழந்தையைக் கவனியுங்கள். அதை விட்டுவிட்டு அதன் அம்மா அடுத்த அறைக்குச் சென்றால்கூட, அம்மாவைத் தேடிக்கொண்டு ஏங்கித் தவிக்கும். ஏதாவது பயம், ஆபத்து என்றால் உடனே அம்மாவிடம் போய் அண்டிக்கொள்ளும். தாயிடம் அதற்கு இருப்பது: கேள்வி கேட்காத நம்பிக்கை. அதே போன்ற நம்பிக்கைதான் நமக்குப் பெருமாளிடம் வரவேண்டும்.
திரெளபதியை துச்சாதனன் மானபங்கம் செய்தபோது, திரௌபதியின் வெகுநேர இறைஞ்சலுக்குப் பின்தான் கிருஷ்ணர் புடைவை தந்தார். பின்பு ஒருநாள் கிருஷ்ணரிடம் துரௌபதி, “நான் வேண்டியவுடன் ஏன் உடனே வரவில்லை?” என்று கேட்கிறாள். அதற்கு கிருஷ்ணர், “துச்சாதனன் புடைவையை இழுத்தபோது நீயும் உன் இரண்டு கைகளாலும் உன் புடவையை இறுகப் பற்றியபடிதானே என்னை அழைத்தாய். நீயே உன்னைக் காத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உனக்கு இருந்ததால் நான் வரவில்லை. பின் ஒரு கையினால் புடவையை பிடித்துக்கொண்டு ஒரு கையினால் என்னை அழைத்தாய். அப்பொழுதும் முழு நம்பிக்கை என் மீது உனக்கு வரவில்லை. அதன்பின் உன்னால் முடியாதென முடிவுசெய்து, என் மீது முழு நம்பிக்கை வைத்து புடைவையைப் பற்றிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, இரு கைகளையும் தூக்கி என்னை அழைக்கவே நான் வந்தேன்” என்றாராம். குழந்தைக்குத் தாயிடம் உள்ள நம்பிக்கை மாதிரி பக்திக்கு முழுமையான நம்பிக்கை வேண்டும்
ஆனால் இன்று கடவுள் பக்தியை வியாபாரப் பொருளாக ஆக்கிவிட்டார்கள். பக்தி ஆடம்பரமாகிவிட்டது.
கடவுளுக்கு அன்று பிறந்தநாள். அரசியல் கூட்டம் போல எங்கும் மைக் செட், தோரணம், கட்-அவுட் என்று அமர்க்களப்பட்டது. வயதான ஒருவர் அங்கே வந்தார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். பக்கத்தில் இருந்தவரிடம் என்ன என்று விசாரித்தார் “கடவுளுக்கு இன்று பிறந்தநாள். அதற்காக ஊர்வலம் நடக்கிறது” என்றார் மற்றொருவர்.
முதலில் ஒரு மத குரு வந்தார். அவரைத் தொடர்ந்து பெரிய கூட்டம் கோஷம் போட்டுக்கொண்டு பின்னால் சென்றது. “யார் இவர் என்று அந்த வயதானவர் கேட்க, பக்கதில் இருந்தவர், இவர் தான்.. இன்னார் என்று சொல்லிவிட்டு, அவர் வழியைப் பின்பற்றுகிறவர்கள் அவர்களுக்குப் பின் செல்கிறார்கள் என்றார். அடுத்தபடி இன்னொரு மத குரு வந்தார் அவருக்குப் பின்னும் ஒரு பெரும் கூட்டம் சென்றது. இப்படி வரிசையாக மத குருக்கள் சென்றார்கள். அவர்களுக்கு பின் கூட்டமும் சென்றது. கடைசியாக ஒரு வயதானவர் கூட்டத்துக்குப் பின் சென்றார். ஆனால் அவருக்குப் பின்னால் யாரும் இல்லை. பார்க்கப் பரிதாபமாக இருந்தார். இவர் யார் என்று வயதானவர் விசாரிக்க, பக்கத்தில் இருந்தவர் தெரியாது என்று பதில் சொன்னார். சரி அவரிடமே கேட்டுவிடலாம் என்று அவரைக் கூப்பிட்டு “நீங்கள் யார் ?” என்று கேட்டார்கள். “நான்தான் கடவுள், எனக்குத்தான் இன்று பிறந்தநாள்” என்று பதில் வந்தது.
கடவுளைப் பின்பற்றுவதாக நினைக்கிறார்கள், ஆனால் பாவம் கடவுள் பின்னால்தான் யாரும் இல்லை! இன்று மக்கள் எல்லோரும் பக்தி மார்க்கத்தில் போவதாக நினைத்துக்கொண்டு இப்படித்தான் வழி தவறிப் போய்க்கொண்டு இருக்கிறார்கள்.
சங்கரர் பாடிய பஜகோவிந்தம் 14ஆம் பாடல்: (ராஜாஜி தமிழில் எழுதி விளக்கமும் அளித்துள்ளதை இங்கே தருகிறேன்)
செம்மண் துணியும் முழுத்தலை மொட்டையும்
அம்மணமும் நீள் சடையும் பிறவும்
சண்டாள வயிற்றுக்காம் வேஷம் பலவாம்
கண்ணாற கண்டும் உணரானே மூடன்
“துறவு என்பது ஒரு வெளிவேஷமல்ல அது உள்ளத்தில் நிறைவேற வேண்டிய ஒரு வெற்றியாகும். ஆயினும் நாம் உலகத்தில் பார்ப்பதென்ன? மழித்தலும் நீட்டலும் மற்ற வெளிவேஷங்கள் தான். உள்ளத்தில் எரியும் ஆசைகளைத் தணிக்காமல் இந்த வெளிவேஷங்களினால் என்ன பயன்? இந்த மாதிரி துறவு வேஷங்கள் வயிற்றுப்பாடாய் முடிகின்றன” என்று சொல்லுகிறார் சங்கரர்.
“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
என்கிறது குறள்.
உலகம் பழிக்கும் செயல்களைத் துறக்காமல், ஒரு துறவி தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.
இன்று துறவுக் கோலம் பூண்டுவிட்டபின், பணம், அரசியல், செல்வாக்கு, அவைகளால் கிடைத்த புகழ் போன்றவைகளின் வேட்டையில் ஈடுபடும் ஒரு சிலரையும் நாம் பார்க்கிறோம். இவர்களை நாம் அடையாளம் காண்பது மிக சுலபம்!
(தொடரும்)
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்
4 February 2010 at 9:15 am
மிக அருமை