பக்தி ஓர் எளிய அறிமுகம் – 4

சென்ற பகுதியில் (பகுதி 3) ‘பச்சை கலர்’ பாஸ் மூலம், ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியன்று விரைவாகப் பெருமாள் சேவிக்க முடிந்த என் அனுபவத்தைப் பற்றிச் சொல்லியிருந்தேன்.

“கேட்கறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க, நீங்க செஞ்சது தப்புதானே,” என்று சிலர் கேட்டிருக்கிறார்கள். அதே கட்டுரையில் பச்சை கலர் பாஸுக்கு கீழே முதலாழ்வார்கள் பற்றிய கதையைச் சொல்லிவிட்டு “இந்தக் கதையைப் படித்த பின் எனக்குப் பல விஷயங்கள் புரிந்தது” என்று எழுதியிருந்தேன். அதன் மையக் கருத்துதான் இந்தக் கேள்விக்கு விடை.

கூட்டமாகப் பெருமாள் சேவித்தால் அவன் அருள் நமக்கு முழுவதும் கிடைக்காதோ என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கிறது. “கோயிலில் இன்னிக்கு நான் மட்டும்தான், ஒரு ஈ. காக்கா இல்லை; ஏகாந்த சேவை,” என்று சொல்லுவதைக் கேட்டிருக்கலாம்!. பாவம் கடவுளை ஏதோ அரசியல் தலைவர் மாதிரி ஆக்கிவிட்டோம்.

archanaiஅதே போல் அர்ச்சனை செய்யும்போதும் பார்க்கலாம், உங்கள் பெயர், உங்கள் நட்சத்திரம், கோத்திரம் என்று சொல்லி அர்ச்சனை செய்வார்கள். ஏன் என்று யோசித்ததுண்டு. எட்டாவதோ, ஒன்பதாவதோ படிக்கும்போது திரு.அ.ச.ஞானசம்பந்தம் அவர்களின் சொற்பொழிவைக் கேட்டேன். அப்போழுது அவர் அது ஏன் என்று விளக்கம் கொடுத்தார்.

கூட்டமாக இருக்கும் கோயிலில் உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்யும்போது, அதே பெயர் கொண்டு இன்னொருவர் இருக்கலாம். அதனால் உங்களுக்கு அர்ச்சனையால் கிடைக்கும் பலன் வேறு ஒருவருக்குப் போய்ச்சேரும் வாய்ப்பு இருக்கிறது; அல்லது 50-50! அதனால் உங்கள் நட்சத்திரம் சொல்ல வேண்டும். கூட்டம் அதிகமாக இருந்தால் அதே பெயர் அதே நட்சத்திரத்தில் இரண்டு பேர் இருக்க வாய்ப்பு இருக்கிறது அதனால் உங்களை தனித்துவப்படுத்திக் காட்ட கோத்திரம் கேட்கிறார்கள். கம்யூட்டர் டேட்டாபேஸில் எப்படி ஒரு unique ரெக்கார்ட் எடுக்க பல கீயை கொடுத்து unique ரெக்கார்டை எடுக்கிறோமோ அதே மாதிரி. அர்ச்சனையில் தனக்கு மட்டும்தான் கடவுள் அருள்செய்ய வேண்டும் என்ற சுயநலம் இருக்கிறது. சுயநலம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது.

உடனே நான் ஏதோ அர்ச்சனை செய்யவே கூடாது என்று சொல்லுவதாக நினைத்துவிடக்கூடாது. ஆண்டாள் திருப்பாவை ஐந்தாம் பாடலில், “சுத்தமான மனதுடன் அவனை அணுகி, மலர்களைத் தூவி வணங்கி,  வாயாரப் பாடி, நெஞ்சார தியானிப்போம்,” என்கிறாள்.

உலகத்தில் மகிழ்ச்சி தரக்கூடய பொருள் என்னவாக இருக்கும் என்று எப்பொழுதாவது யோசித்ததுண்டா? பணம், இசை, இனிப்பு, சாப்பாடு, விளையாட்டு,… என்று அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் இவை சிலருக்கு மட்டும்தான் மகிழ்ச்சி தரலாம். எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக் கூடியது ஒன்றுதான்; அது – அன்பு!

நம் குழந்தைகளிடம், “உம்மாச்சி கண்ணை குத்திடுவார்,” என்று பயத்தை உண்டுபண்ணுகிறோம். இது தவறு. ஏன் என்றால் பக்திக்கு பயம் இருக்கக் கூடாது. பயம் இருந்தால் அன்பு வராது என்பது முதல் விதிமுறை. தற்போது உள்ள அடுக்ககக் கலாசாரத்தில் தாத்தா பாட்டி கூட இருப்பதில்லை. அதனால் பல குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராமர் கதைகள் தெரிவதில்லை. சின்ன வயதில் எனக்கு என் அம்மா வழி, அப்பா வழிப் பாட்டி தாத்தாக்கள் நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார்கள். இரவில் சுமார் 1 மணி நேரம் தினமும் கதை சொல்லுவார்கள். இன்று இருக்கும் குழந்தைகளுக்கு டோராவும், டாம் அண்ட் ஜெரியும் தான் கடவுளாக இருக்கிறார்கள்.

kayathri-japamகுடும்பச் சம்பிரதாயங்கள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் (rituals) செய்யும் பலர், அதைச் செய்வததற்குக் காரணம் பயம்தான். விரதம், காலை பூஜை, சந்தியா வந்தனம் என்பதுபோன்ற கிரியைகள் இதில் அடங்கும். இவைகளைச் செய்யாவிட்டால் கடவுளின் அருள் நமக்குக் கிடைக்காது என்பது தேவையில்லாத பயம் மட்டுமே.

புந்தியால் சிந்தியாது ஓதி உருபெண்ணும்
அந்தியால் – ஆம்பயன் அங்கென்?”

பெருமாளை மனத்தால் நினைக்காமல், வேறு மந்திரங்களை உருப்போட்டுச் செய்யும் சந்தியா வந்தனம் போன்றவையால் பயன் ஏதும் இல்லை என்று பொய்கையாழ்வார் சொல்லுகிறார்.

sandhyaa-vanthanamஅதே போல

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள்
அந்தண்மை தன்னை ஒளித்திட்டேன்

என்று தினமும் குளிப்பதும், மூன்று வேளை அக்கினி ஹோத்திரம் செய்வது போன்ற சடங்குகள் முக்கியமில்லை என்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

ஒரு நாள் செய்யாமல் போனால் ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்ட மாதிரியும், கடவுள் தண்டனை கொடுக்க தயாராகக் காத்துக்கொண்டு இருப்பது மாதிரியும் பலர் பயப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். பயம் இருந்தால் அந்த இடத்தில் அன்பு இல்லை. அன்பு இல்லை என்றால் பக்தி இல்லை.

என் அப்பா ஆசாரியன் திருவடியை அடைந்த சில நாள்களுக்குப் பின், என்னிடம் சிலர், “வருடா வருடம் அப்பாவிற்கு தவறமல் சிரார்த்தம் செய்துவிடு. செய்யவில்லை என்றால் உன்னை பாதிக்காது. ஆனால் உன் பிள்ளைகளையும் பேரன்களையும் அது பாதிக்கும்,” என்று அறிவுரை கூறினார்கள்.

இதில் வேடிக்கை என்ன என்றால் என் அப்பா இறப்பதற்குச் சிலநாள்கள் முன்பு, ஒருநாள் பேச்சுவாக்கில், “நீ எங்காவது எனக்கு சிரார்த்தம் எல்லாம் செய்துகொண்டு இருக்காதே. எல்லாம் டைம் வேஸ்ட். உயிருடன் இருக்கும்போது அப்பா அம்மாவை அன்பாகவும் நல்லபடியாகவும் வைத்துக்கொண்டால் போதும்,” என்றார். அதே போல் அவர் செய்தும் காட்டினார். கடைசி காலத்தில் நர்ஸ் வைத்துக்கொண்டு அப்பா அம்மாவைப் பார்த்துக்கொள்ளும் பலரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் கடைசி காலத்தில் தன் அப்பா அம்மாவை என் அப்பா கனிவோடு முகம் சுளிக்காமல் பார்த்துக்கொண்டார். மூத்திரம், மலம் எடுப்பதிலிருந்து குளிப்பாட்டுவது முதற்கொண்டு எல்லாவற்றையும் தானே செய்தார். அவர்கள் மீது அவருக்கு  இருந்த பக்தி, அன்பு தான் இதற்குக் காரணம்.

பத்ராச்சல ராமதாஸர் தன்னுடைய கிருதி ஒன்றில், ‘கோரமான தவம்’ எல்லாம் பக்திக்குத் தேவை இல்லை; வெறும் அன்பாக ‘ராமா’ என்றால் போதும் என்று சொல்லுகிறார். பக்திக்கு நாம் கஷ்டப்படக் கூடாது; அல்லது நம்மை நாமே கஷ்டப்படுத்திக்கொள்ளக் கூடாது என்பது இவர் சொல்லும் முக்கியக் கருத்து. புரந்தர தாஸர் ஒரு நாளும் பட்டினியாக இருக்க கூடாது என்கிறார். ஒரு பாடலில் “தினமும் இஷ்டத்துக்கு சாப்பிடு, சாப்பிட்டுவிட்டு தெம்பாக கிருஷ்ண நாமம் சொல்லு,” என்று பாடுகிறார். நீங்கள் தெம்பாக இருந்தால்தான் இன்னும் நிறைய அன்பு செய்யலாம் என்பது அவர் கருத்து. உபவாசம் (பட்டினி) இருப்பதால் பெருமாள் உங்களுக்கு ஸ்பெஷலாக எதுவும் செய்யப்போவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கீதையிலும் பாகவதத்திலும்  கண்ணன், “நீ தலைகீழாக நின்றாலும் நான் என்னை உனக்குத் தர மாட்டேன்,” என்கிறார். மனம் உருகி என்னை நினைத்தால் மட்டும்தான் அது சாத்தியம் என்றும் சொல்லுகிறார். “எவ்வளவோ செய்தேன் எனக்கு அவன் அருள் கிடைக்கவில்லை,” என்று பலர் புலம்புவதைக் கேட்டிருக்கலாம். இதை எல்லாம் செய்ய வேண்டும் என்று பெருமாள் எப்பொழுது கேட்டார்? நம் உடலை வருத்திக் கொள்வதால் அவன் எப்படி சந்தோஷமாக இருப்பான் என்று நினைத்துப்பார்க்க வேண்டும். குழந்தை பசியாக இருந்தால் தாய் சந்தோஷப்படுவாளா?

பயபக்தி என்பது ஒரு ஆஸ்கிமோரான்.

பாகவத்தில் ஜடபரதன் கதை இருக்கிறது.

ஜடபரதன் ஒரு யோகிஸ்வரன். அவனுடைய தியானம் மிகவும் பிரசித்திபெற்றது. பூஜைக்கு முன், கையில் பூக்களை எடுத்துக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்தால், தியானம் கலைந்து பார்க்கும்போது இரவு ஆகிவிடும்; கையில் இருந்த பூக்கள் எல்லாம் வாடி போயிருக்கும். அப்படி ஒரு தியானம் செய்பவன். காட்டில், தன் குடிசைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு மான்குட்டியை எடுத்து வளர்த்தான். மானுக்குக் குளிப்பாட்டுவது, அதனுடன் விளையாடுவது, கொஞ்சுவது என்று அதன் மீது அன்பாக இருந்தான். இதனால் நாளடைவில் அவன் பூஜை, ஜபம், தியானம் எல்லாம் போனது. மான் இவனை விட்டுப் பிரிந்த சென்றபோது, பிரிவை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. புத்திர சோகம் வந்து மானை நினைத்துக்கொண்டே இறந்தான். அடுத்த பிறவியில் மானாகப் பிறந்தான் என்பது கதை.

இந்தக் கதையில் மானிடத்தில் அன்பும், பெருமாளிடத்தில் சாதனையால் வந்த தியானமும் சொல்லப்படுகிறது. இதில் எது வென்றது என்று பார்த்தால் அன்புதான் வென்றது. அதனால் பெருமாளிடத்தில் சாதனை செய்வதைக் காட்டிலும் அவனிடத்தில் ஆசை வைத்துவிட்டால் பக்தி வரும். காதலர்களை அவர்களின் காதலி/காதலன் நினைவாகவே இருப்பதை பார்த்திருக்கிறோம். எதன் மீது ஆசை வைக்கிறோமோ அதன் நினைவாகவே இருப்போம். ஆக சாதனையால் தியானம் செய்தால் அவர்களை யோகிஸ்வரர்கள் என்று சொல்லுவோம். பிரேமையினால் தியானம் செய்தால் அவர்களை பக்தர்கள் என்கிறோம்.

பக்தாச்சல ராமதாஸ், புரந்தர தாஸர், துக்காராம், ஏகநாதர், ஆழ்வார்கள், நரசிம்ம மேத்தா, மீராபாய், கபீர் தாஸர் … என்று பல பக்தர்களின் சரித்திரத்தைப் பார்த்தால் ஒரு விஷயம் எல்லோருக்கும் பொது – அது பெருமாளிடத்தில் அவர்களுக்கு உள்ள அன்பு என்பதுதான் பக்தியாகிறது.

ஆழ்வார்கள் பாடல்கள் பலவற்றில் பெருமாளை, தன் குழந்தையாக, தன் காதலியாக, தன் நண்பனாக, தன் குருவாக உருவகித்துப் பாடியுள்ளார்கள். இது ஏன் என்று சில வருடங்கள் வரை தெரியாமல் இருந்தது. பெருமாளை “நீ அப்பேர் பட்டவன், இப்பேர் பட்டவன்” என்று சும்மா புகழ்ந்து அன்பு செலுத்துவது கடினம்; செயற்கைத்தனமும் பொய்மையும் கலந்துவிடும். அதே பெருமாளை தன் குழந்தையாக, தன் காதலியாக பாவித்தால் சுலபமாக அன்பு செலுத்த முடியும். அதனால்தான் ஆழ்வார்கள் அப்படி அனுபவித்துள்ளார்கள்.

பெரியாழ்வார் தன்னை கண்ணனின் வளர்ப்புத் தாய் யசோதையாக பாவித்துக்கொண்டு பல பாசுரங்கள் எழுதியுள்ளார். கண்ணன் பிறந்ததை கொண்டாட்டமாகப் பாடியுள்ளார்.

கீழே உள்ள பாடல் மிகவும் பிரசித்தம்.

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்
போணி உனக்கு பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வையமளந்தானே தாலேலோ

மாணிக்கம், வைரமும் இடையே வைத்துக் கட்டி பத்தரைமாற்றுப் தங்கத்தால் செய்த தொட்டிலை உனக்கு பிரம்மா அனுப்பி வைத்தான் என்று தாலாட்டு பாடுகிறார். அதே போல கண்ணனின் பல பருவங்களைப் பாடுகிறார் பெரியாழ்வார். அவற்றைப் பிறகு பார்க்கலாம்.

அதே போல் நம்மாழ்வார் தன்னை நாயகியாக பாவித்துப் பாடுகிறார். ஆண்டாள் தன்னை ஒரு கோபிகையாக பாவித்து பக்தி செய்கிறார். பெருமாளை தன்னுடைய நண்பனாக நினைத்து பக்தி செய்த திருமங்கையாழ்வார், சில பாடல்களில் நண்பனைத் திட்டுவது போலவே திட்டுகிறார். மிரட்டுகிறார், அறிவுரை கூட சொல்லுகிறார்!

பெருமாளை குருவாகவும் தன்னை சிஷ்யனாகவும் பக்தி செய்தவர், குலசேகர ஆழ்வார் மற்றும் தொண்டரடிப்பொடியாழ்வார்.

தன்னுடைய காதலனாக நினைத்து பக்தி செய்தது கிருஷ்ண சைதன்யர், நம்மாழ்வார், ஆண்டாள், மீராபாய், சக்குபாய், ஜனாபாய். இதில் கிருஷ்ண சைதன்யர், நம்மாழ்வார் ஆண்களாக இருந்து தம்மை பெண்ணாக பாவித்து பெருமாளைக் காதல் செய்தனர்.

சென்ற மாதம் ஒரு திரைப்படத்துக்குச் சென்றிருந்தேன். முன் இருக்கையில் ஒரு கணவன் மனைவி படம் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். சினிமாவில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப் பிடித்துக்கொண்டு கொஞ்சுவதைப் பார்த்த அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டார்கள்.

“பாருங்க எவ்வளவு அன்பா இருக்காங்க, நீங்களும் தான் இருக்கீங்களே, இப்படி எல்லாம் ஒரு நாளாவது இருந்ததுண்டா?”

“உனக்கு உண்மை தெரியலைன்னு நினைக்கிறேன். இது சினிமா, எல்லாம் வெறும் நடிப்பு. புரிஞ்சுக்கோ”

“உங்களுக்குத்தான் உண்மை தெரியலை, அவங்க ரெண்டு பேரும் நிஜ வாழ்க்கையிலும் கணவன் மனைவிதான்!”

“ஓ.. அப்படியா? அப்படின்னா பிரமாதமான நடிப்புதான்”

(தொடரும்…)

7 Replies to “பக்தி ஓர் எளிய அறிமுகம் – 4”

  1. Read your wonderful piece in Ananda Vikatan on Sujatha Rangarajan. It was lyrical and moving. I read somewhere that you are writing an bio on the great writer. MayI know its progress ?

  2. A small favor. I am planning on visiting Srirangam sometime next month. Can you guide me as to the must see sculptures, paintings inside the temple premises please ?

  3. //
    Can you guide me as to the must see sculptures, paintings inside the temple premises please ?
    //

    காயத்ரி மண்டபத்தினுள் ஒருவர் உறங்கிக்கொண்டு இருப்பார் – must see 🙂

  4. //அதே போல் அர்ச்சனை செய்யும்போதும் பெயர், உங்கள் நட்சத்திரம், கோத்திரம் என்று சொல்லி அர்ச்சனை செய்வார்கள். ஏன் என்று யோசித்ததுண்டு.// அட ஆமாம், அதுக்கு இது தான் அர்த்தமா?
    பரவாயில்லை இப்பத் தெரிஞ்சுண்டேன்.

  5. அடுத்த பதிவை நான் எங்கே கிடைக்கப் பெறுவது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *