சிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை

மகாதேவரான சிவபிரான் பாரதத்தின் மிகத் தொன்மையான தெய்வம். அடி முடி அறியொணாத இத்தெய்வத் திருவுரு இமயம் முதல் குமரி வரை கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக வணங்கப்படுகிறது. தொல்-பழங் கற்காலத்திலேயே பிரபஞ்ச அச்சாக அக்னி வர்ணனாக மானுடம் சிவனை கண்டடைந்தது. பின்னர் சிவலிங்கமாக, பசுபதியாக, யோகியாக, பிரம்மாண்டத்திலும் அணுவிலும் நடக்கும் நடன இயக்கமாக பாரதம் இத்தெய்வ வழிபாட்டை வளர்த்தெடுத்தது.

kanyakumari_sivalaya_ottamசிவ வழிபாடு பல்வேறு வித வழிபாடுகளை கொண்டது. பன்மையில் ஒற்றுமை ஒற்றுமையில் பன்மை எனும் பாரத பன்பாட்டின் ஒரு சிறந்த வெளிப்பாடாக திகழ்கிறது சிவ வழிபாடு. அத்தகைய வழிபாட்டு முறைகளில் ஒன்று சிவாலய ஓட்டம். சிவனின் இரவான மகா சிவராத்திரி அன்று குமரிமாவட்டத்தில் நிகழும் இந்நிகழ்வில் சிவ பக்தர்கள் “கோபாலா கோவிந்தா” எனும் முழக்கத்துடன் குமரி மாவட்டம் முழுவதும் 12 சிவாலயங்களுக்கு ஓடுகின்றனர்.

ஏன் “கோபாலா கோவிந்தா”?

மகாபாரதத் தொடர்புடன் ஒரு தொன்மம் வழங்கப்படுகிறது. தருமரின் பட்டாபிஷேகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் தேவைப்பட்டதாம். ஆனால் அதனைக் கொண்டு வருவது எப்படி? புருஷாமிருகத்தின் எல்லைக்குள் அகப்படும் எவரையும் உண்ணும் அதிகாரம் அதற்கு உண்டு. அதன் எல்லைக்கு வெளியே அதைக் கொண்டு வந்தால் அது கொண்டு வந்தவரின் கட்டளைக்கு கட்டுப்படுமாம். தன் பலத்தில் கர்வம் கொண்ட பீமன் புருஷாமிருகத்தின் எல்லைக்குள் புகுந்து அதனால் துரத்தப்பட்டு அதனை அதன் எல்லைக்கு வெளியே கொண்டு வர ஒத்துக்கொண்டான். வழக்கம் போலவே மாயக்கண்ணன் அங்கு வந்து ஒரு உபாயமும் சொன்னான். “ஒருவேளை நீ தளர்வடைந்து அந்த புருஷாமிருகம் உன்னை பிடித்துவிடுமென்றால் இதோ இந்த பன்னிரெண்டு உத்திராட்சங்களில் ஒன்றை கீழே போடு அது சிவலிங்கமாகிவிடும். புருஷாமிருகம் உடனே அதனை அமர்ந்து வழிபட்டுவிட்டுதான் உன்னை தொடரும். அதற்குள் நீ ஓடி வந்து விட முடியும்….அத்துடன் தன்னை மறந்து தன் எல்லையைத் தாண்டி புருஷாமிருகம் வரவேண்டுமே…அந்த அளவு ஆவேசத்துடன் உன்னை தொடர வேண்டுமென்றால் ஒரு வழிதான்…அது ஒரு மூர்க்க சிவ பக்தன். நீ “கோபாலா கோவிந்தா” என்று சத்தமாக என்னை விளித்தால் போதும், அது சிவ எல்லைக்குள் பிறிதொரு பெயரை சொல்பவன் எவன் என ஆத்திரத்துடன் கிளம்பி உன்னை துரத்த ஆரம்பிக்கும் கவலையே வேண்டாம்.”

பீமனும் இதற்கு உடன் பட்டான்.

புருஷாமிருகத்தின் எல்லைக்குள் சென்றான். “கோபாலா கோவிந்தா” என உரக்க விளித்தான். சிவ பூஜையிலிருந்த புருஷாமிருகம் முழு ஆத்திரத்துடன் கிளம்பியது. பீமன் ஓடினான் ஓடினான் ஆனால் புருஷாமிருகம் தன்னை விட வேகமாக ஓடுவதை உணர்ந்தான். அவனை பிடிக்கும் நிலை வந்த போது கிருஷ்ணன் கொடுத்த உத்திராட்சங்களில் ஒன்றை கீழே போட்டான். அது சிவலிங்கமாகிவிட புருஷாமிருகம் அங்கேயே அமர்ந்து வழிபடலாயிற்று. பீமனுக்கு கொஞ்சம் ஆசுவாசம். ஓடினான்.

மீண்டும் “கோபாலா கோவிந்தா”
மீண்டும் புருஷாமிருகம் ஆத்திரத்துடன் பாய மீண்டும் பீமன் ஓட
மீண்டும் ஒரு உத்திராட்சம்.
இப்படியாக பன்னிரண்டாவது உத்திராட்சமும் விழுந்தது. இறுதியில் எல்லைக் கோட்டில் பீமன் தாண்டு காலை வைக்கவும் எல்லைக்கு உள்ளிருந்த ஒரு காலை புருஷாமிருகம் பிடிக்கவும் இந்த ஓட்டம் நின்றது.

புருஷாமிருகம் வெளியே வந்த தன்னை விட்டுவிட வேண்டுமென பீமனும் உள்ளே ஒரு காலிருப்பதால் அவன் தனக்குத்தான் சொந்தமென புருஷாமிருகமும் சொல்ல வழக்கு தருமரிடம் சென்றது. தம்பி என்றும் பாராமல் பீமன் உடலை இரண்டாக பிளந்து ஒரு பகுதியை புருஷாமிருகத்திடம் கொடுக்க சொன்னார் தருமர். தருமரின் இந்த நியாய உணர்வை பார்த்து பீமனை விட்டுவிட்டது புருஷாமிருகம். அதே நேரத்தில் பன்னிரண்டாவது உத்திராட்சம் விழுந்த இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் வந்தார். சங்கர நாராயணனாக புருஷாமிருகத்துக்கு காட்சி அளித்தார். சிவ-விஷ்ணு ஐக்கியத்தை உணர்ந்த புருஷாமிருகம் தன் எல்லையை விட்டு வந்து தருமர் பட்டாபிஷேகத்துக்கு பால் அளிக்க ஒத்துக்கொண்டது.

தனக்கென ஒரு எல்லை வரையறை செய்து அதற்குள் இறையை அடைக்கப்பார்க்கும் மூடபக்தியை சீண்டி இழுத்து அதனை அறத்தின் மகுடாபிஷேகத்துக்கு ஒரு கருவியாக்கும் கிருஷ்ண லீலை மகாசிவராத்திரியில் நிகழ்ந்தேறியதாக ஐதீகம். இக்கதை மிக பிற்காலத்தில் கூட உருவாகியிருக்கலாம். ஆனால் பல கோவில் தூண் சிற்பங்களில் பீமனைத் துரத்தும் புருஷாமிருகத்தை நாம் காணலாம்.

இந்த தொன்மத்தைத்தான் மீண்டும் நடத்துகிறார்கள் “கோவிந்தன்மார்” என்றழைக்கப்படும் சிவாலய ஓட்டம் செய்யும் பக்தர்கள். காவி உடையணிந்து “கோவிந்தா கோபாலா” என கோஷமிட்டு வெறுங்காலுடன் பனை ஓலையுடன் ஓடும் இப்பக்தர்களால் அந்த பன்னிரெண்டு சிவாலயப் பிரதேசங்களும் காவியால் போர்த்தப்படும் சிவராத்திரியன்று. இன்று இரு சக்கர வாகனங்களிலும் வேன்களிலும் கூட மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றாலும் வெறுங்காலுடன் ஓடும் பக்த இளைஞர்களுக்கு என்றைக்கும் குறைவில்லை. இந்த அற்புத சிவாலய ஓட்டத்தில் உங்களையும் பங்கேற்க அழைக்கிறது தமிழ்ஹிந்து.காம்

சிவாலய ஓட்டம் தொடங்கும் திருத்தலம் முன்சிறை எனும் அழகிய கிராமத்தில் உள்ள கோவில். சீதையை இராவணன் முதலில் சிறை வைத்த இடம் இது என பெயர் காரணம் சொல்லப்படுகிறது. இங்குள்ள சிவத்தலத்தில் இராமர் வழிபட்டார் எனும் செவிவழிக் கதையும் உண்டு. திருமலைநாயக்கரை அவரது அன்னை கருவுற்றிருந்த போது இக்கோவிலில் வழிபாடு நடத்தினார் என சொல்லப்படுகிறது. இங்கு சிவ சன்னிதிக்கு இடப்புறமாக விஷ்ணு சன்னிதி உள்ளது. கோவில் தமிழக மலையாள கட்டிட அமைப்புகளுடன் அமைந்தது. பொதுவாக கேரள கட்டிட அமைப்பில் சில சீனத்தன்மைகளை காணலாம். (அல்லது சீன கட்டிடத்தின் சில கூறுகள் தென் மேற்கு பாரத கடற்கரையிலிருந்து சென்றவையோ?) சின்ன குன்றின் மீது எழிலுற அமைந்த இத்திருக்கோவிலில் ஒரு சிறு நீர்தேக்கமும் உள்ளது. இதோ அடியவர்களுடன் நீங்களும் கலந்து கொள்ளுங்கள். சிவாலய ஓட்டம் ஆரம்பிக்கிறது.

அடுத்ததாக கோவிந்தன்மார் செல்லும் திருக்கோவில் திக்குறிச்சி. இக்கோவில் தாமிரபரணி என்னும் குமரிமாவட்ட நதி அருகே உள்ளது. இக்கோவில் தூண் சிற்பங்களில் சில இராமயணக் காட்சிகளைக் (குறிப்பாக சுந்தரகாண்ட காட்சிகளைக்) காணலாம். சரபையின் வாய் வழியாக சென்று அவள் காது வழியாக மீளும் அனுமன் சிற்பம் ஒரு அழகிய கற்பனை. இதனை சுசீந்திரம் தூண்சிற்பங்களிலும் காணலாம். வியாக்ரபாதர் எனும் புலிப்பாத முனிவரையும் காணலாம். புருஷாமிருகம் பீமனைத் துரத்தும் மிக அழகான சிற்பம் ஒன்றையும் கற்றூண்களொன்றில் காணலாம். பெண்கள் சிவநாமம் சொல்லி தீபத்தை தொடர்ந்து இன்று முழுவது சுற்றி வரும் ஒரு நிகழ்ச்சியையும் செய்வர். இக்கோவிலில் நந்தி இல்லை. நந்தி தாமிரபருணி நதி நீருக்குள் இருப்பதாக ஐதீகம்.

மூன்றாவது கோவில் திற்பரப்பு. இயற்கை அழகு நிறைந்த அருவியோடணைந்து ஓடும் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இப்பழமையான கோவில். கேரள பாணியில் அமைக்கப்பட்ட இக்கோவிலில் சிவன் வீரபத்திர மகாதேவராக கோவில் கொண்டுள்ளார். கோவில் வெளிப்பிரகாரத்தில் பாம்பு தவளையை பிடிப்பது போல அமைக்கப்பட்டுள்ள ஒரு சிற்பம் தரையில் உள்ளது. இது ஒரு சுரங்கவாசலின் திறப்புக்குறியீடு. அவசர காலங்களில் அரசக்குடும்பம் அரண்மனை கோட்டை ஆகியவற்றிலிருந்து தப்பி வரும் சுரங்க பாதை திறக்கும் வாசல் இங்கிருப்பதற்கான குறியீடு. புனிதப் பயணியர் இளைப்பாற கட்டப்பட்ட கல் மண்டபம் இங்கு இயற்கை சூழலுக்கு மேலும் மெருகேற்றுகிறது. வாருங்கள் சிவம் எனும் அமுதத்தை அருந்த உள்ளே செல்வோம்

சிவாலய ஓட்டத்தில் அடுத்ததாக நாம் காணும் சிவத்தலம். திருநந்திக்கரை. வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவில் கோபுரமும் கேரள பாணியில் அமைந்ததுதான். இக்கோவிலின் தென்புறம் மலைக்குகையில் குடைவரை சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள சிவன் கோவில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தையதாக கருதப்படுகிறது. இக்கோவில் கல்வெட்டுக்கள் சோழப் பேரரசு இக்கோவில் திருப்பணிகளுக்கு சேவை செய்ததை பறைசாற்றுகின்றன. தமிழகத்தின் தென் மூலையில் கானகங்களுக்கிடையே உள்ள இந்த கோவிலுக்கு சோழர்கள் திருப்பணி ஆற்றியுள்ளனர் என்றால் அவர்களின் சிவபக்தியை இன்றைய தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் பொற்காலமாக சோழர் காலம் விளங்கியதற்கு இந்த சிவபக்தியும் திருக்கோவில் அர்ப்பணிப்பும்தான் காரணமாக விளங்கியதோ என்னவோ? அப்படியானால் இன்றைய தாழ்நிலைக்கு காரணம் சிவத்துரோகம்தானோ என மனதுக்குள் எழும் கேள்விகளை ஒதுக்கிவிட்டு கவனியுங்கள். இன்றைக்கு நீங்கள் சிவாலய ஓட்டத்தில் ஈடுபடும் பக்தரானால் உங்களுக்கு நீர்மோறும் பானகமும் நெல்லிக்காய் ஊறுகாயும் எங்கும் கிடைக்கும். இதனை ஒரு திருச்சேவையாகவே மக்கள் செய்கின்றனர். எவரும் விதிக்கவில்லை. எந்த திட்டமிட்ட நிறுவனமும் இல்லை. சிவதாண்டவத்தில் தன்னிச்சையாக எழும் ஒரு நடன அசைவாகவே இந்த சேவைகள் எழுகின்றன. இக்கோவிலுக்கு நிரந்தர கொடிமரம் இல்லை. சிவராத்திரி அன்று மட்டுமே கோவிலுக்கு கொடிமரம் இங்கு அமைக்கப்படுவது தொன்றுதொட்ட வழக்கம்.

அடுத்த சிவாலய ஓட்ட திருக்கோவில் – பொன்மனை. இத்திருக்கோவில் சிவபிரானை கண்டெடுத்தவர் ஒரு வனவாசி. அவர் பெயர் தீம்பிலான். எனவே அவரது பெயரிலேயே இங்குள்ள குடி கொண்டுள்ள குலங்கள் ஏதுமற்று அனைத்து குலங்களுக்கும் சொந்தமான மகாதேவர் தீம்பிலான்குடி மகாதேவர் என அழைக்கப்படுகிறார். நாகலிங்க பூக்கள் வனப்புடன் பூத்துக்குலுங்க அமைந்திருக்கும் இத்திருக்கோவிலில் உட் பிரகார மண்டபக் கூரையில் மரத்தில் செதுக்கப்பட்டு காட்சியளிக்கும் அழகிய இராமாயணக் காட்சிகள் சைவ வைணவ ஒற்றுமையை மீண்டும் பறை சாற்றுகின்றன.

ஆறாவது கோவில் பன்னிப்பாகம். வயல்களும் குன்றுகளும் சூழ இயற்கையுடன் இணைந்து அழகாக எழும்புகிறது இக்கோவிலின் சிறு கோபுரம். இங்கு கோவில் கொண்டுள்ள சிவன் கிராதமூர்த்தியாக இருக்கிறார். அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்க சிவன் வேடனாக வந்து பன்றியைக் கொன்ற இடம் இதுவென்பது ஐதீகம். இன்று இங்கு ஒரு காய்கறிச்சந்தை உருவாகிவிட்டது. இன்றைக்கு மட்டும்தான். சிவராத்திரிக்கு மட்டுமே. இன்றைக்கு இந்த விளைபொருட்களை சிவனுக்கு படைப்பது இங்குள்ள வழக்கம். வழியெங்கும் ஓடும் கோவிந்தன்மாருக்கு வழங்கப்படும் மோரும் ஊறுகாயும்.

ஏழாவதாக கோவிந்தன்மார் வந்து சேரும் திருக்கோவில் கல்குளம் எனும் புராதன ஊரில் உள்ளது. 12 திருக்கோவில்களில் இந்த கோவிலில் மட்டும்தான் திராவிட கட்டிடக்கலை பாணி கோபுரம் நெடிதுயர்ந்து நிற்கிறது. இங்கு கோவில் கொண்டுள்ள சிவபெருமானின் திருநாமம் நீலகண்ட சுவாமி அம்மை ஆனந்தவல்லீ அம்மன் அழகிய கோவில் குளம் மேலும் அழகூட்டும் கல்மண்டபங்கள். பெரும் மரங்கள். மரத்தடி நாகர்கள். சிவராத்திரியன்று கோவில் குளத்தில் நீராடி ஈரம் சொட்ட சொட்ட பனையோலை விசிறியுடன் தெய்வ தரிசனம் செய்ய வரும் இளங்காளைகளாக கோவிந்தன்மார். எங்கும் கோபாலா கோவிந்தா எனும் கோஷம். பிரகாரங்களில் விளக்கு பூஜைகள் கோவிலின் வெளியில் குழந்தைகளும் பெரியவர்களும் சிவபக்தர்களுக்கு நீரும் மோரும் நெல்லி ஊறுகாயும் அளித்து செய்யும் சிவத்தொண்டு. விவசாய விளைபொருட்கள் இன்று சிவனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. முன்னொரு காலத்தில் வேணாட்டு மன்னர்களின் தலைநகராக இருந்து இன்று பத்மநாபபுரம் எனும் பெயருடன் விளங்கும் கல்குளம் ஒரு பூலோக கைலாயமாக தோற்றமளிப்பதை காணுங்கள்.

இதோ எட்டாவது சிவாலயத்துக்கு வருகிறோம். இது குன்றும் வயல்களும் சூழ்ந்த மேலாங்கோடு எனும் அழகிய கிராமத்தில் உள்ளது இங்கு சிவபெருமான் சுயம்புலிங்கமாக கோவில் கொண்டுள்ளார். அவரது திருநாமம் காலகாலர் என்பது. பத்மநாபபுரம் கோட்டையின் ஒரு எல்லையில் இத்திருக்கோவில் உள்ளது. இங்கு செல்லும் வழியில் உங்களை குழந்தைகள் கூவி கூவி அழைத்து தாங்கள் வைத்திருக்கும் மோரையும் நெல்லிக்கனியையும் அருந்த சொல்வார்கள். ஏனென்றால் சிவ பக்தர்களுக்கு செய்யப்படும் இந்த புண்ணிய கைங்கரியம் ஜென்ம ஜென்மமாக தலைமுறைகளுக்கு நன்மை சேர்க்கும் என அவர்கள் அறிவார்கள். “அவர் இவர்” எனாது எவரும் அங்கு இளைப்பாறலாம் தாகசாந்தி செய்யலாம். நீங்கள் இன்றைக்கு கோவிந்தன்மாராகக் கூட இருக்க வேண்டியதில்லை. வழிப்போக்கராக இருந்தாலும் இந்த சேவைகள் உங்களுக்கு அளிக்கப்படும். சிவாலயங்கள் செல்லும் எந்த வீதியிலும் நீங்கள் விருந்தாளியாகவே கருதப்படுவீர்கள். சிவபக்தர்களுக்கு நீரும் மோரும் அளிப்பதை குழந்தைகள் மிகப் பெரிய பாக்கியமாக கருதி போட்டிப் போட்டுக்கொண்டு செய்வதை நீங்கள் காணலாம். குமரி மாவட்ட சைவ உணவு வகைகளை ஆங்காங்கே மிகவும் பாரம்பரியமான விதங்களில் பொங்கி உங்களுக்கு பனை மடல்களில் அளிப்பார்கள். கஞ்சியும் சாத வகைகளும் துவையல்களும் ஊறுகாய்களும் உங்களை வரவேற்கும். சிவ பக்தியின் முன்னால் உடல்நினைவு சிறிதுமற்ற பக்தர்களுக்கு இறைவன் அளிக்கும் பரிசுகளின் தொடக்கமாக இவை அமைகின்றன. வாருங்கள் இந்த சிவபக்தியை நாமும் சிறிது உட்கொண்டு மகிழ்வோம்.

அடுத்த சிவாலயம் வில்லுக்குறி என இன்று அழைக்கப்படும் கிராமத்தில் அமைந்திருக்கும் இந்த மகாதேவர் ஆலயம் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததென ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சுற்றிலும் அழகிய வாய்க்கால்களும் கால்வாய்களும் வயல்வெளிகளும் நிறைந்த பிரதேசம். எளிமையான குடிசைகள். இன்று அவை சிவபக்தர்களுக்கு சேவை செய்யும் மையங்கள். எந்த வீட்டிலும் கோவிந்தன்மார் உணவுண்ணலாம். அவர்கள் வரவேற்கப்படுவார்கள். இந்த சிவபுரத்தில் சிவராத்திரியன்று எங்கெங்கும் கோலாகலம்தான். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அழகிய கோலங்கள் – வரவேற்பு சின்னங்களாக. உலகமயமாகி எங்கெங்கும் மக்டொனால்டும் கொக்ககோலாவும் உணவுப்பன்மையை அழிக்கும் இந்த காலகட்டத்தில் வட்டார உணவு பதார்த்தங்கள் தங்கள் பாரம்பரிய சுவையுடன் இங்கு சிவ பிரசாதமாக. ஏறக்குறைய இந்த சிறிய மாவட்டத்துக்குள்ளேயே இந்த சிவாலயங்களை இதே வரிசைக் கிரமத்தில் வழிபட்டு வந்தால் கோவிந்தன்மார்கள் தளர்ந்திருப்பார்கள். கால்கள் வலிக்க அவர்கள் ஓடுகிறார்கள். தளர்ந்தது உடல் ஆனால் மனமல்ல. அவர்கள் ஓடுவது காலத்தையே சம்ஹாரம் செய்யும், அண்ட சராச்சரங்களை தன் ஆடலால் தோற்றுவித்து ஊழியுள் தீர்த்து மீண்டும் உற்பவிக்கும் ஆடலரசனை இதயத்துள் தாங்கி. எனவே உடல் வலி அவர்களை என்ன செய்யும்? அவ்ர்கள் காலணி அணியவில்லை. சுட்டெரிக்கும் வெயில்தான். ஆனால் சுண்ணாம்புக்கணவாயையே பூம்பொய்கையாக்கும் ஈசன் எந்தையின் இணையடி நீழலிலல்லவா அவர்கள் ஓடுகின்றனர்! கோவிலின் வெளிப்பிரகாரம் ஒரு காலத்தில் முட்புதர்கள் மண்டி கிடந்தது. அவற்றை நீக்கும் உழவாரத் திருப்பணியை இங்குள்ள சிவபக்தர்களும் சேவாபாரதி அமைப்பினரும் செய்துள்ளனர். வாருங்கள் இந்த திவ்விய ஆலயத்தை கோவிந்தன்மாருடன் தரிசிக்கலாம்.

திருவிதாங்கோடு அடுத்த சிவாலயத் திருத்தலம். பொதுவாக இதிலிருந்து இரவு நேரமாகியிருக்கும். இத்திருக்கோவிலிலும் நாராயணருக்கு சன்னிதி உண்டு. இங்கு வெளிப்பிரகாரத்திலில் உள்ள விளக்குப் பாவையரின் சிற்பங்கள் சுற்று வட்டாரங்களில் பிரசித்தி பெற்றவை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாகவும் ஒவ்வொரு பருவத்திலும் அதை விட முக்கியமாக சமுதாயத்தின் அனைத்து தளங்களிலிருந்துமாக இவ்விளக்குப் பாவையர் அமைக்கப்பட்டுள்ளது ஒரு தனிச்சிறப்பாகும். மேலும் கஜசம்ஹார மூர்த்தியின் உக்கிரமான சிலை புருஷாமிருகத்தின் தீர்க்கமான சிலை ராமாயணக்காட்சிகள் என பல அழகிய தூண் சிற்பங்களைக் கொண்டது இந்த கோவில். வாருங்கள் உள்ளே செல்லலாம்.

அடுத்த கோவில் திருப்பன்றிக்கோடு. இங்கு மொகலாயப்படைகள் வேணாட்டுப் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. அவ்வெற்றிக்கு ஈஸ்வரனும் குளவிகள் மூலம் உதவினார் என்பது ஐதீகம். இங்குள்ள சிவனின் பெயர் மகாதேவன். இங்குள்ள மிகப் பழமையான குளமும் அதனைச் சுற்றி அமைந்துள்ள மரங்களும் ஒரு மிக அமைதியான சூழலை உருவாக்குகின்றன. களைத்து வரும் கோவிந்தன்மாரை குளுமையான காற்று இங்கு அரவணைத்துக் கொள்கிறது.

இதோ இறுதி திருத்தலத்தை அடைந்து விட்டோ ம். கோவிந்தன்மாரின் கோஷங்கள் கேட்கின்றன.
கோபாலா கோவிந்தா
“யாரைக் காண” என்கிறார் ஒருவர்.
சாமியை காண என்கின்றனர் கோவிந்தன்மார்.
“சாமியைக் கண்டால்”
“மோட்சம் கிட்டும்”
“எப்போ கிட்டும்”
“இப்போ கிட்டும்”
மோட்சம். விடுதலை. எங்கோ என்றோ இறப்புக்கு பின் அல்ல. இங்கே இப்போதே…

திருநட்டாலம்.

இங்குதான் புருஷாமிருகத்துக்கு சைவ-வைணவ பேதம் எனும் சிறையிலிருந்து விடுதலை கிடைத்தது. சிவ-விஷ்ணு ஐக்கிய தரிசனத்தை அனுபவித்து சைவ-வைணவ பேதத்தை விட்டொழித்தது. பீமனுக்கு தன் தசை வலியின் மீதிருந்த கர்வத்திலிருந்து விடுதலை கிடைத்தது. தருமம் கொலுவேற்க மிருகமும் மனிதமும் இணைந்த நம்மில் இருக்கும் பேத வெறிகளை விட்டொழித்து இரண்டற்ற ஒன்றான உண்மையின் உள்ளொளியை பெறுவோம். அந்த உள்ளொளி பெறும் போதுதான் நம்முள் சுரக்கும் நன்மை தர்மத்தின் கைங்கரியத்துக்கு பயன்பட முடியும். ஒவ்வொரு மகாசிவராத்திரியின் போதும் காவி போர்த்தி கால் வலிக்க ஓடும் கோவிந்தன்மார் சொல்லும் செய்தி நமக்கு இதுதான். கோவிந்தன்மாரை இயக்குவது அழிவற்ற தருமத்தின் சக்தி. ஸ்ரீ கிருஷ்ணனின் ஞானம். பேதமற்ற அந்த ஞானத்தை எல்லாம் வல்ல எல்லோருள்ளும் எல்லாவற்றுள்ளும் உறையும் சிவம் நமக்கு அருளட்டும்.

இந்த மகாசிவராத்திரியில்
ஞான தீபம் ஏற்றி சிவ நாம கீதம் பாடுவோம்.
தர்ம சக்தி வாழ்கவென்று சந்ததம் கொண்டாடுவோம்.

அடுத்த ஆண்டு வாருங்கள் குமரி மாவட்டத்துக்கு வந்து இந்த இந்து சமுதாய ஐக்கிய பெருவேள்வியில் சிவாலய ஓட்டத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள். ஆன்மிக விடுதலையை சமுதாய ஒற்றுமையின் சக்தியை அனுபவிக்க வாருங்கள்.

Tags: , , , , , , , , , , ,

 

34 மறுமொழிகள் சிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை

 1. B.R.ஹரன் on February 12, 2010 at 7:30 pm

  அற்புதம் அரவிந்தன். அருமையான ஆன்மீகச் சேவை புரிந்துள்ளீர்கள். தமிழகத்தில் பெரும்பான்மையான மக்களுக்கு இந்த கோவிந்தன்மாரின் சிவராத்திரி ஓட்டம் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ் இந்துக்கள் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள இந்துக்கள் அனைவரும் தெரிந்து இன்புற வேண்டிய வரலாறு இது.

  சரியாகச் சிவராத்திரியன்று வெளியிட்டுப் பெருமை சேர்த்துள்ளது தமிழ் ஹிந்து.

  தமிழ் ஹிந்து இணைய தளம் மேன்மேலும் வளர்ந்து இறைப்பணியும், சமுதாயப் பணியும் புரிய வேண்டும். அதற்கான சக்தியைப் பெற ஆடவல்லானின் பொற்பாதங்களில் என் பிரார்த்தனையை இந்த நன்னாளில் வைக்கிறேன்.

  நன்றி, அன்புடன்

  ஹரன்.

 2. Raja on February 12, 2010 at 7:39 pm

  Very informative article !
  Thanks Aravindan.
  If you can provide us the route map with details on how to reach all these temples from Kanyakumari, that would be helpful.
  I dream of visiting these temples one day..but will Kanyakumari be still a Hindu town till that day ? or be totally converted ? 🙂 🙁

 3. SATHEESH on February 12, 2010 at 9:04 pm

  நான் ஒன்பதாவது சிவலயமான திருவிடைகோட்டை சேர்ந்தவன்.என்னுடைய கிராமத்தில் சமீபத்தில் சிலர் வந்து பைபிள் கொடுத்தனர் .ஒரு சம்பந்தம் இல்லாமல் எல்லோர் கையுளும் திணித்தனர் ,வேறு ஒரு கூட்டம் சற்று ஒதுங்கிய பகுதியில் சென்று சில பெண்களிடம் எங்கள் மதத்திற்கு வாருங்கள் பண உதவி செய்கிறோம் பாருங்கள் நாங்களும் முன்பு ஹிந்துக்களாக இருந்தோம் இப்பொழுது கிறிஸ்துவர்களாக மாறிவிட்டோம் எங்களை போல் மாறுங்கள் என்று பண ஆசை காட்டினார்கள்.விவரம் அறிந்து நாங்கள் அங்கு சென்று அந்த கூட்டத்தை அடித்து துரத்தி அவர்கள் வைத்திருந்த மற்றும் மக்களுக்கு கொடுத்த பைபிள் அனைத்தையும் எரித்தோம் .எனது ஊரை இணையத்தளத்தில் பார்த்து மக்ழிந்தேன்.ஓம் நம சிவாய

 4. kargil jay on February 12, 2010 at 9:09 pm

  ஸ்ரீ. அரவிந்தன் நீலகண்டன்,
  மிக சுவையான கட்டுரையை மிகச்சரியான நேரத்தில் எழுதியுள்ளீர்கள். இதன் இறைச்சிப் பொருளை விட்டு, பொதுவாகப் படித்தாலே அருமையாக உள்ளது. உங்கள் எழுத்தால் பேர் அதிகரித்து, அடுத்த வருடம் ஓடுவோர் எண்ணிக்கை அதிகரித்து, பேரோட்டம் பரம்பொருளின் அருள் பொழியுமாக.

  மொத்தம் எத்தனை தூரம் இந்த ஓட்டம்? அதை விட்டு விட்டீர்களே?

 5. parthaSarathy on February 12, 2010 at 10:24 pm

  Very excellent and timely presentation AN ji. As Haran ji prayed, let Tamil Hindu become a universal Hindu.

  ‘எவரும் விதிக்கவில்லை. எந்த திட்டமிட்ட நிறுவனமும் இல்லை. சிவதாண்டவத்தில் தன்னிச்சையாக எழும் ஒரு நடன அசைவாகவே இந்த சேவைகள் எழுகின்றன”…..சித்தம் போக்கு சிவன் போக்கு என்பது இதுதானோ?

  This video shows the Known Universe as mapped through astronomical observations….originating from the Himalayas…of course!

  http://www.youtube.com/watch?v=cT2JgMxfO2E&feature=player_embedded

 6. Jayashree Govindarajan on February 13, 2010 at 8:31 am

  அநீ அருமை. அழகாக வடிவமைக்கப்பட்ட முக்கியமான கட்டுரை. இன்னும் கொஞ்சம் நிதானமாக ஒரு தடவை படிக்கவேண்டும். ஓட்டிப் பார்க்கவேண்டும். இந்தக் கதை எல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்லை. நன்றி.

 7. subbu on February 13, 2010 at 9:35 am

  அரவிந்தன்,
  வாழ்த்துக்கள்.
  உங்களுடைய ஓட்டம் தொடரட்டும்.
  அன்புடன்
  சுப்பு

 8. ஜடாயு on February 13, 2010 at 9:46 am

  சிவாலய ஓட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, இந்த வலைத்தளத்தைப் பாருங்க – http://www.sivalayayathra.org. கன்னியாகுமரியில் இருக்கும் ஒரு சின்ன சாஃப்ட்வேர் கம்பெனிக் காரர்கள் இப்படி ஒரு வலைத்தளத்தை அமைத்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்க!

  இந்த வருடம் இந்த யாத்திரை பார்க்க என்றே கன்னியாகுமரி போகலாம் என்று யோசித்திருந்தேன்.. முடியாமல் போய்விட்டது. அரவிந்தனின் வீடியோக்கள் அந்த ஆவலை அதிகரிக்கின்றன.

  இது போன்று ஒவ்வொரு வட்டாரங்களிலும் இருக்கும் சிறப்பு மிக்க இந்து விழாக்களை வீடியோ கட்டுரைகளாக எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஒரு சாதாரண handy-cam போதும் படம் பிடிப்பதற்கு. பிறகு ஆடியோ, தகவல் எல்லாம் சேர்த்து இதுபோன்று எழுதலாம்..

  இதைப் படிக்கும் தமிழ்ஹிந்து வாசகர்கள் தங்கள் ஊர்களில் நடக்கும் தனித்துவமிக்க, சமுதாய இந்து விழாக்களை அவர்களே வீடியோ எடுத்து, யூ-ட்யூபில் போட்டு தமிழ்ஹிந்துவுக்கு ஒரு மின் அஞ்சல் தட்டி விடலாமே! அவர்கள் தகவல்களையும் அளித்தால், ஆசிரியர் குழுவினர் ஒரு கோர்வையான கட்டுரையாகவும் present செய்யலாம்.. என்ன சொல்றீங்க?

  உதாரணமாக, சென்னையிலும், சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் ஏராளமான அம்மன் கோவில்கள் உள்ளன. இவற்றில் பல சமூகங்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் திருவிழாக்களையும், அந்தந்த அம்மன் கோவில் ஐதிகங்களையும் நாம் டாகுமெண்ட் செய்ய வேண்டும்.. collective ஆக பலரது முயற்சிகளும் சேர்ந்தே இதைச் செய்யலாம். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் – இதை நாம் செய்யாவிட்டாலும், கிறிஸ்தவ மதமாற்ற சூழ்ச்சிக் காரர்கள் செய்வார்கள் (ஏற்கனவே கூட செய்து கொண்டிருக்கலாம்).. அவர்கள் கையில் கிடைக்கும் materialஐத் திரித்து, அதில் கிறிஸ்தவத்தை நுழைக்கும் திரிப்பு வேலைகளைக் கூட உடனே ஆரம்பித்து விடுவார்கள்!

 9. chandrasekaran krishnan on February 13, 2010 at 10:32 am

  Amazing. Thanks very much.

 10. Muthukumar on February 13, 2010 at 7:27 pm

  Thank you very much to Mr.Aravindhan Neelakantan.
  Great service to Hindu community.

 11. va.mu.murali on February 14, 2010 at 2:56 am

  அன்பு நண்பர் அரவிந்தன் நீலகண்டனுக்கு,
  திருவாசகம் கேட்கும்போதே உள்ளம் உருக்கும் என்பார்கள்; சிவபுராணம் பாடியபோது கண்ணீர் கரைந்து உகுத்திருக்கிறேன். அத்தகைய அனுபவம், உங்கள் கட்டுரையை வாசிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டது. நன்றி.
  ‘மோட்சம். விடுதலை. எங்கோ என்றோ இறப்புக்கு பின் அல்ல. இங்கே இப்போதே…’ என்ற வரியைப் படித்தபோது நெஞ்சு பெருமிதத்தில் விம்மியது. உள்ளத்தை உருகச் செய்யும் நடை. உள்ளத்தில் உள்ளதை உள்ளபடிச் சொன்னதால் ஏற்பட்ட தாக்கம் இது.
  பாரத தேசம் எங்கும் இத்தகைய தொன்மங்களின் அடிப்படையில் அமைந்த ஆன்மிக நிகழ்வுகள் ஆயிரமாயிரம் உள்ளன. குடந்தை மகாமகமும், வைஷ்ணவதேவி யாத்திரையும், கைலாய தரிசனமும், திருப்பதி முடி காணிக்கையும்,…. சொல்லிக்கொண்டே போகலாம். இடும்பன் எடுத்த காவடி என்ற தொன்மத்தின் அடிப்படையில் இன்றும் பழனி செல்லும் காவடி பக்தர்களைக் காணலாம். மார்கழிக் கடைசியில் துவங்கி, தை (பூசம்), மாசி (மகம்), பங்குனி (உத்திரம்), சித்திரை (பௌர்ணமி), வைகாசி (விசாகம்) வரை, பழனி செல்லும் பாதைகள் எங்கும் பாதயாத்ரீகர்களின் சுவடுகளைக் காணலாம்.
  இது தான் நமது நாட்டின் ஆதார பலம். ஆயிரம் ஆண்டு அடிமைப்பட்டிருந்த போதும் நமது கலாசாரம் அழிக்கமுடியாத பாறையாக இருந்ததற்கு ஆன்மிகமே ஆதாரம். இன்றும், சுயநல அரசியல் பெருச்சாளிகள் நாட்டை நாசம் செய்யும் நிலையில் நமக்கு நம்பிக்கை கொடுப்பது இறைபக்தி தான்.
  சடையினை ஆட்டி அம்பலத்தாடும் சங்கரனும், குடையென மலையைப் பிடித்த கோவிந்தனும் நமது முன்னோர்கள். அவர்கள் இந்த நாட்டை நிச்சயம் நல்வழிப்படுத்துவார்கள். அந்த ஈசனே உங்கள் உள்ளத்தில் இருந்து இக்கட்டுரையை எழுதி இருக்கிறார் என்று நம்புகிறேன்.
  நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
  -வ.மு.முரளி.

 12. ந.உமாசங்கர் on February 14, 2010 at 8:18 am

  மிகச் சிறந்த கட்டுரை. அருமையான பாடல்களுடன், சீரிய முறையில் படம்பிடித்தும், அருமையாகப் பகுத்தும் கோர்த்தும் தந்த படக்காட்சிகள் பலநாட்கள் இதற்காகக் கடுமையாக‌ உழைத்திருப்பதைக் காட்டுகிறது. இத்தனை நேர்த்தியாகச் செய்திருக்கும் அரவிந்தன் நீலகண்டனுக்கும் அவரது குழுவுக்கும் பாராட்டுக்கள். சிவாலய ஓட்டம் ஓடாமலே எந்ங்களை கோவிந்தன்மார்களுடன் ஓடவைத்தமைக்கு ந‌ன்றி.

  பிறிதொரு க‌ட்டுரையில் திரு பாலாஜி அவர்க‌ளின் கேள்விக்கு ந‌ம‌து பெரும‌திப்பிற்குரிய‌ முனைவ‌ர் அவ‌ர்க‌ள் வியாக்ர‌பாத‌ர் குறித்து ஒரு விள‌க்க‌ம் அளித்திருந்தார்க‌ள். அது இதோ.

  /1. வியாக்ரபாதர் என்பவர் யார்?|/

  இவருடைய வரலாறு உமாபதிசிவம் அருளிய கோவிற்புரானத்தில் உள்ளது. மத்தியந்த முனிவரின் மைந்தரான இவர் பதஞ்சலி முனிவருடன் தில்லையில் தவம் புரியும் பொழுது வைகறையில் துயிலுணர்ந்து வழிபாட்டுக்காகச் சோலையில் உயர்ந்த மரங்களின் கோட்டுப் பூக்களைக் கொய்ய மரங்களில் ஏறுவார். பனி, மழைப்பருவங்களில் மரத்டினின்றும் கால்கள் வழுவாதிருக்கவும் இருளில் குற்றமற்ற மலர்களைக் கான்வும் புலியின் கால்களையும் கைவிரல் நுனிகளில் கண்களையும் இறைவனிடம் வேண்டிப் பெற்றார். புலியின் கால்களைப் பெற்றதால் இவர் வியாக்கிரபாதர் என்னும் பெய்ர் பெற்றார். வியாக்கிரம் என்றால் புலி என்று பெயர். இவர் வழிபட்டதால் தில்லை புலியூர் என்னும் பெயர் பெற்றது. வேறு சில புலியூர்களும் உள்ளன. அவ்வுர்களினின்ரும் பிரித்தறிய தில்லை பெரும்பற்றப்புலியூர் என அழைக்கப்படலாயிற்று.
  ///

  முனைவ‌ர் அவ‌ர்க‌ளிட‌ம் இந்த‌த் தொட‌ர் ஓட்ட‌த்துக்கும், அவர் மேற்கூறிய வியாக்ர‌பாத‌ருக்கும் ஏதும் தொட‌ர்பு உண்டா என்ப‌தைக் கேட்டு எழுத‌முடியுமா? அவ‌ரே விள‌க்க‌ம் த‌ந்தால் ந‌மக்கு மிக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கும்.

 13. T.Suthan on February 14, 2010 at 11:56 am

  I Personally thank Mr. Aravind Neelakandan for giving good devotional articles. I am very much happy for studied this article my birth place is kanyakumari in this district have very good events done, when i studied this article then i have a proud. I am a kanyakumari district hindu.

 14. aravindan neelakandan on February 14, 2010 at 8:45 pm

  கட்டுரையை பாராட்டிய, பரப்பிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி. குமரிமாவட்டத்தில் சிவாலய ஓட்டம் மிக முக்கிய நிகழ்வாக வளர்ந்து வருகிறது. ஆனால் அதற்கு நிர்வாகம் செய்யும் இடையூறுகளும் அப்படியே வளர்ந்து வருகின்றன. இந்த பன்னிரு கோவில்களை பராமரித்து ஆண்டுக்கு ஒரு முறை வரும் கோவிந்தன்மாருக்கு நல்ல வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய இந்து அறநிலையத்துறை உறங்குகிறது. வாகனங்களை நிறுத்துவது முதல் சுகாதார வசதிகள் வரை அனைத்து அளவிலும் கோவிந்தன்மாருக்கு பிரச்சனைகளை உண்டாக்குவதில் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒரு தனி மகிழ்ச்சியே இருக்கிறது. அனைத்து மாவட்ட ஹிந்துக்களும் சிவராத்திரி தினத்தன்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வர வேண்டும். சிவனுக்காக, விஷ்ணுவுக்காக, சிவ-விஷ்ணு ஐக்கியத்துக்காக, சமுதாய ஒற்றுமையையும் இணைப்பையும் வளர்ப்பதற்காக சிவாலய ஓட்டம் ஓட வேண்டும். ஹிந்து தன்னார்வ அமைப்புகள் சிவபக்தர்களுக்கு இப்போதே நல்ல வசதிகளை வழங்குகின்றன. மேலும் வசதிகளையும் சுகாதார வசதிக்கட்டமைப்புகளையும் செய்ய வேண்டும். சிவராத்திரிக்கு பிறகு கேட்பாரற்று கிடக்கும் நிலை இங்குள்ள சில சிவாலய ஓட்ட ஆலயங்களுக்கு ஏற்படுகிறது. அதனையும் சீர் செய்ய குமரி மாவட்ட ஹிந்து அமைப்புகள் முன் வரவேண்டும். சமூக-ஆன்மீக ஹிந்து ஒருங்கிணைப்புக்கு சிவாலய ஓட்டம் உதவட்டும். ஹர ஹர மகாதேவ.

 15. KARTHIKEYAN on February 15, 2010 at 12:06 pm

  Dear Aravindan Neelakanthan, It’s Great to have this mail Mr. Rajendran Ganeshan. Really Fantastic. Good Work Keep It up Sir. Really these type information should reach all people to know about how old our Hindu Religion as well as the UNITY of Lord Shiva & Vishnu. Keep it up. Well Done.

  Thanks & Regards
  K S KARTHIKEYAN

 16. C.N.Muthukkumaraswamy on February 15, 2010 at 1:03 pm

  அன்புள்ள அநீ அவர்களுக்கு, உங்களுடைய இந்தக் கட்டுரையை இன்றுதான் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பெருமகிழ்ச்சியடைந்தேன். சமய நம்பிக்கையை அனுபவத்திற்குக் கொண்டுவர அருமையான் உத்திகளை ந்ம் முன்னோராகிய பெரியவர்கள் நடைமுறைப் படுத்தியுள்ளனர். எங்கள் பகுதி கிராமங்களில், ‘அரஹரா என்று சொல்லி அறுகு போல் நாமமிட்டு, சிவசிவா என்று சொல்லிச் சீராக நாம மிட்டு’ என்று நாட்டுப்பாடல்கல் இசைப்பர்.இது,சிவாயநம என்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி பாதிரிப்புலியூர் அரனே’ எனும் அப்பர் வாக்குக்கு மாற்று வடிவமாக உள்ளது.சிவத்தலங்களுக்கு யாத்திரை செய்யும் ‘கோவிந்தன்’மார் திருவடிகளுக்கு வணக்கங்கள் செலுத்திக் கொள்ளுகின்றேன்.சைவ வைணவ ஒற்றுமையை உறுதிப்படுத்தும் அருமையான பதிவு. இச்செய்தி இதுவரை யான் அறியாதது.மிக்க நன்றி

 17. Raju on February 15, 2010 at 6:41 pm

  Dear Aravindan,

  Wonderful article and compilation of videos. It’s amazing to know that such an event is taking place here and am hearing this for the first time. What a bakthi among the devotees. I heard that in eary days, during Dasara, in mysore anybody can go and stay at anybody’s place and stay as guest. Everyone’s doors will be kept open for this and there was not a single lodge there. I remember this while reading this when so many people are serving the devotees so kindly. I have sent this message to my group of friends to spread info about this wonderful event.

  It will be best to mark these temples in wikimapia and add details. I tried my level best and added info to about 6-7 temples but I don’t know the rest of them. If you have locational information about 1)Thikkurichi 2) Pannipaham 3)Kalkulam 4)Thiruppantricode 5)Thirunattalam, I can create an exclusing online map of these 12 temples and it will be helpful for the devotees to plan and visit on other days as well.

  Pls see below for the kind of maps:
  http://www.platial.com/raju0704/maps

  Pls visit here for a temple visit travelogue:
  http://shanthiraju.wordpress.com/

  Pls visit here for temple visit photos:
  http://www.flickr.com/photos/rajushanthi/

  Best Regards,
  Raju

 18. S Raman on February 15, 2010 at 6:50 pm

  ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். அருமையான கட்டுரை. இது போல் மேலும் பல வர வேண்டுகிறேன். சிவன் கோவிலில் விஷ்ணு பல கண்டிருக்கிறேன். ஆனால் சிவ தரிசனத்தில் ‘கோவிந்தா- கோபாலா’ நாமம் ஓதுவதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அதை நன்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு மீண்டும் நன்றி. வளர்க உங்கள் தொண்டு.

 19. S V Rmakrishnan on February 15, 2010 at 7:13 pm

  Dear Sir
  Never heard of this historical fact, nor have heard about the run. Made a great impression about the devotion with which devotees undertke the spiritual run to all the twelve temples. Great spiritual service. But only netizens can read these facts, why not publish such information in our tamil magazines like Kumudam, Vikatan, etc. Thanks a lot.

  Ramakrishnan

 20. pragadheeswaran on February 15, 2010 at 8:19 pm

  தனித்துவமான பதிவு ..
  Why we need to wake up at Mahashivarathri
  About the Night — sadhuguru vasudev

  The special nature of the day and the night of Mahashivarathri presents us with a unique opportunity to make use of the forces of nature for our well-being.
  The planetary positions on this night are such that there is a powerful natural upsurge of energy in the human system. If one can stay awake and aware, in a vertical position throughout the night, it brings about physiological and inner transformational benefits which results in one’s well-being. In addition, the benefit of any yogic practices performed on this night multiply manyfold. It is for this reason that in the yogic tradition it is said that one should not sleep on the night of Mahashivarathri.

 21. அரவிந்தன் நீலகண்டன் on February 16, 2010 at 8:00 am

  மீண்டும் பாராட்டிய கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
  அன்புள்ள ராஜு, தாங்கள் சுட்டிக்காட்டிய படி செய்யலாம். சில நாட்களில்.

 22. V.Saravanan on February 16, 2010 at 11:24 am

  Wonderful article Mr Neelakantan.
  Its nice to have the link Mr Jatayu has given,I ve sent it to many freinds already. yet it’ll be nicer to read your beautiful article in English.
  We can send it to all we know.
  Thankyou
  Saravavan

 23. சோமசுந்தரம் on February 16, 2010 at 2:42 pm

  சிறந்த கட்டுரை. என் போன்ற பலர் அறிந்திராத செய்தி. நன்றி.

 24. ந. உமாசங்கர் on February 16, 2010 at 3:20 pm

  அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு

  /// இந்த பன்னிரு கோவில்களை பராமரித்து ஆண்டுக்கு ஒரு முறை வரும் கோவிந்தன்மாருக்கு நல்ல வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய இந்து அறநிலையத்துறை உறங்குகிறது. வாகனங்களை நிறுத்துவது முதல் சுகாதார வசதிகள் வரை அனைத்து அளவிலும் கோவிந்தன்மாருக்கு பிரச்சனை///

  /// அனைத்து மாவட்ட ஹிந்துக்களும் சிவராத்திரி தினத்தன்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வர வேண்டும். சிவனுக்காக, விஷ்ணுவுக்காக, சிவ-விஷ்ணு ஐக்கியத்துக்காக, சமுதாய ஒற்றுமையையும் இணைப்பையும் வளர்ப்பதற்காக சிவாலய ஓட்டம் ஓட வேண்டும். ///

  நம்மால் இதற்கு ஒரு வழி காணமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அடுத்த ஆண்டு தமிழக அரசு, இந்தத் திருவிழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுவிடுமுறை அறிவிக்கவைப்போம். வசதிகள் என்ன என்று பட்டியலிட்டு அவற்றையும் பெறுவோம். எனக்கு நம்பிக்கை உள்ளது.

  ஹரஹர மஹாதேவ

 25. nandhitha on February 16, 2010 at 6:38 pm

  வணக்கம்
  நல்ல முயற்சி. அருமையான தகவல்கள், போற்றிப் புகழ்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலவில்லையே என்ற வருத்தம் ஏற்படுகிறது,
  ஏற்பாடு செய்தவர்களுக்கும் பங்கு கொள்பவர்களுக்கும் இறைவன் நீண்ட ஆயுளையும் வல்லமையையும் தர வேண்டுகிறேன்.
  அன்புடன்
  நந்திதா

 26. satheesh on February 23, 2010 at 5:08 pm

  இந்த பண்டிகை சிவராத்திரி அன்று அரசு விடுமுறை நடைமுறையில் உள்ளது.அணைத்து சிவலயங்களுகும் பராமரிப்பிற்காக அரசர் காலத்தில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன .அது இப்போது சில ஹிந்துக்கள் கையில் உள்ளது .இந்த சொத்தை மீட்டால் ஆலயம் வெளிச்சம் பெறும்.

  ஒன்பதாவது சிவலயமான திருவிடைகோட்டை சேர்ந்த
  சதீஷ்
  மகாதேவர் சேவா சங்கம்
  திருவிடைகோடு
  9898745144

 27. லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on February 24, 2010 at 10:57 pm

  இந்த சிவாலய ஓட்டம் நான் இதுவரை அறிந்திராத ஒன்று. ஆசிரியர் அரவிந்தன் நீலகண்டன் அற்புதமான இந்தக் கட்டுரையை எழுதி, வெளியிட்டிருப்பதை ரசித்தேன்.

  பாரத தேசத்தின் பழம்பெருமைகளையும் நம் பாரம்பரிய தர்மங்களையும் வெளிக்கொணரும் இந்த வெப்சைட்டிற்கும் என் மனங்கனிந்த பாராட்டுகள்!

  தொடருங்கள்!

 28. virutcham on March 9, 2010 at 9:46 pm

  Hi

  I never knew this before. Thanks for sharing this info

  virutcham

 29. AMARNATH MALLI CHANDRASEKARAN on July 22, 2010 at 5:35 am

  ஓர் அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை மக்கள் செய்து சிவராத்திரி அன்று வரும் பக்தர்களுக்கு உதவுகிறார்கள் என்பதை அறிந்து மெத்த மகிழ்ச்சி அடைந்தேன். அருமையான கட்டுரை. பல கதைகளைப் பதிவு செய்த உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி. இக்கட்டுரை முதல்வரின் பார்வையை எட்ட வேண்டும் அவரின் வழிகாட்டுதலின்படி அடுத்த ஆண்டு அனைத்து மக்களுக்கும் எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். இப்படிப்பட்ட ஒளிதோற்றதுடன் கூடிய பதிவினை தமிழக அரசு வலைத்தளத்தில் பதிந்து தமிழர் அனைவரும் இதைக் கண்டு கழிக்க வழிவகை செய்ய வேண்டும். தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரவிந்தரே தங்கள் படைப்புக்கு மீண்டும் நன்றி.

 30. RV on September 5, 2010 at 11:57 am

  கட்டுரை வந்தபோது பார்க்காமல் மிஸ் செய்துவிட்டேன். படிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. என்றாவது ஒரு நாள் கொஞ்ச தூரமாவது ஓடிப் பார்க்க வேண்டும். 🙂

 31. AgilanAdiyar on March 3, 2011 at 5:10 am

  இந்த சிறந்த பதிவை அளித்த அரவிந்தன் நீலகண்டனுக்கு மிக்க நன்றி. உங்கள் சேவை தொடரட்டும்…அதுவும் என் அப்பன் சிவனின் ராதிரியில் காண கிடைத்தது என் பாக்கியம்.

  பின்னூட்டம் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்…!!

 32. ramesh on March 3, 2011 at 7:12 pm

  super article,usefull post for all the peoples,recently i crossed your blog,wonderfull and awesome……

  வாய்மையே வெல்லும் ,தர்மம் நிலைக்கும்

 33. காளிராஜன் on March 7, 2011 at 7:14 am

  அரவிந்தன் அவர்களின் ஆன்மீக சேவை அற்புதம். நிச்சயமாக அடுத்த மகாசிவராத்திரியில் பக்தர்கள் கூட்டம் பல மடங்காக உயரும். ஏனெனில் சிவாலய ஓட்டம் பற்றி இப்போதுதான் பலரும் அறிந்து கொள்ள முடிந்துள்ளது. ஜடாயு அவர்கள் கூறியது போல் ஒவ்வொரு ஆலயங்களிலும் நடைபெறும் விழாக்களை உலகமக்கள் அனைவரும் அறியும் வண்ணம் இன்டர்நெட்டில் வெளியிடவேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன் பிரதோஷம் என்றால் என்ன என்றே மக்கள் தெரியாமல் இருந்தனா். பிரதோஷம் அன்று கூட கோவில்களில் கூட்டம் இருக்காது. தற்போது நிற்பதற்கு இடம் இல்லாத அளவு பக்தர்கள் வருகின்றனா். ஒவ்வொரு ஆலயங்களின் சிறப்பையும் அறியும்போதுதான் அதை தரிசிக்கும் ஆவல் உண்டாகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள சிறப்பு பெற்ற ஆலயங்கள் விபரங்களையும் விழாக்கள், தொடர்பு முகவரிகள் போன்றவற்றையும் வெளியிடுங்கள்

 34. SureshKumar on March 8, 2011 at 10:03 pm

  I am blessed to see this article just – Sivarathiri passed by. Although not able to participate in this great event, reading this and hearing the SHIVA name itself make me pleasant..

  Great work Aravindan..

  Lord Shiva would be always with you..

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*