உள்ளத்தே உள்ளதே உண்மை

bhagavan-ramana-and-childrenபகவான் ரமணர் அடிக்கடி கூறுவதுபோல், இவ்வுலகில் எதற்காவது நிரூபணம் தேவை இல்லை என்றால் அது “நான் இருக்கின்றேனா?” என்ற ஒரே ஒரு கேள்விக்குத்தான். அதை யாரும் கேட்பதில்லை என்பது வேறு விஷயம். எவருக்கும் எந்த விஷயத்திலும் சந்தேகம் என்றால் உடனே அதற்கு நிரூபணம் கேட்பார்கள். தான் இருப்பதை யாரும் சந்தேகப்படாததால் அந்தக் கேள்வியும் எழுவதில்லை. கேள்வி எழாதது மட்டும் அல்ல, அப்படி யாராவது கேட்டாலும் அவர்களை ‘இது என்ன பைத்தியக்காரன் போல கேட்கிறானே?” என்று கூட சந்தேகமாகப் பார்ப்பார்கள். அதாவது தான் இருப்பதில் யாருக்கும் எள்ளளவு கூட சந்தேகம் கிடையாது. ஆனாலும் “நான் யார்?” என்ற கேள்வி நல்ல மன நிலையில் இருப்பவர்கள் எவர் கேட்டாலும், அது அவர் தம் வாழ்வின் அர்த்தங்களையும், நோக்கங்களையும் புரிந்து கொள்ள உதவும். அப்படி ஒருவன் கேள்வி கேட்பது அவனது மனமும் புத்தியும் இயங்கும் சாதாரண மன நிலையில் தான். அதற்கு பதிலும் அந்த நிலையிலேயே வருவதைவிட, அதனினும் சூட்சமமான அனுபவ நிலையில் வருவது விசேஷமானது தான். அது ஏன் என்பதைத்தான் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

“நான் யார்?” என்ற கேள்வியைக் கேட்கும் முன், நாம் என்ன நிலையில் இருந்துகொண்டு கேட்கிறோம் என்று பார்க்க வேண்டும். நம் தினசரி அனுபவங்களை மட்டும் கருத்தில் கொண்டு வேறு எந்த விதமான யூகங்களும் இல்லாது நம் நிலையை அலசிப் பார்ப்போம். நாம் உலகில் உள்ள எதையுமே நமது ஐம்புலன்களின் உதவியால்தான் அறிகிறோம். அதன்பின் நமது ஆறாவது அறிவையும் கொண்டு அவைகளை அலசிப் பார்த்து சில பல எண்ணங்களையும் உணர்வுகளையும் வளர்த்துக் கொள்கிறோம்; அவைகளை மனதளவிலும் நிறுத்திக் கொள்கிறோம். இப்படியாகச் செய்து உலகில் உள்ள அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுகிறோம். இந்தக் கட்டுரையைப் படிக்கும் போதும், அவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறதல்லவா? அப்படி இல்லையென்றால் மனது ஒரு பக்கமும் பார்வை ஒரு பக்கமும் இருக்கிறது என்று தானே அர்த்தம்? அப்படி மனது குவிந்திருந்தாலும் சிதறியிருந்தாலும் அது நம் விழிப்பு நிலையில் தான் நடந்து கொண்டிருக்கிறது.

இது நமக்கு உணர்த்துவது என்ன? நாம் விழித்திருக்கும்போதும் நினைவிருக்கும்போதும், உலகத்தைக் காண்கிறோம்; உலகத்தில் உள்ளவைகளுடன் விதவிதமான அனுபவங்கள் அடைகிறோம். அப்படியாக நமது வாழ்க்கை அனுபவங்கள் ஒரு தொடர் நிகழ்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. இதில் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்னவென்றால், என் உலகத்தில் நீங்கள் உண்டு, மற்றவைகள் உண்டு, ஆனால் நான் இல்லை. நான் பார்ப்பவனாக, அனுபவிப்பவனாக மட்டும் தான் இருக்கிறேன். அதே போல் உங்கள் உலகத்தில் நான் உண்டு, மற்றவைகள் உண்டு, ஆனால் நீங்கள் இல்லை. அதாவது ஒவ்வொருவரும் தம் தம் உலகத்தை சிருஷ்டித்துக் கொள்கின்றனர். காணும் தன்னை விட்டு உலகம் என்று தனியாக எதுவும் கிடையாது. தனது எண்ணங்களுக்கும், ஆசை அபிலாஷைகளுக்கும் ஏற்ப ஒவ்வொருவரும் உலகத்தில் நடந்து கொள்கின்றனர். பொதுவாக மற்றவர்களும் அப்படியே நடக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். முடியாத போது மற்றவர்களிடம் அனுசரித்துப் போகின்றனர். ஆக இவை அனைத்தும் சம்பந்தப்பட்டவர்கள் விழித்துக் கொண்டிருக்கும் போது நடக்கின்றது என்பதைத் தவிர இதில் வேறு ஏதும் ஒற்றுமை கிடையாது. நம் விழிப்பு நிலை (ஜாக்ரத்) தவிர வேறு நிலைகளும் நம் அனுபவத்தில் உண்டு. அவை என்ன?

விழிப்பு நிலையிலேயே நம்மால் எப்போதும் இருக்க முடிகிறது என்றால், நம் அனுபவங்கள் அனைத்தையும் உண்மை என்று கொள்ளலாம். அப்படி இல்லையே! நம்மால் ஒரு நாளோ இரண்டு நாளோ விழித்திருக்க முடியும் என்று வைத்துக்கொள்வோம். அப்புறம் கண்ணயர்ந்து தூங்கப் போய்விடுவோம் அல்லவா? அப்போது நமக்கு எங்கே உலகம் தெரிகிறது? ஏன் நம்மைப் பற்றியே அப்போது நமக்கு உணர்வு இல்லையே. தூக்க நிலையிலிருந்து விழித்தபின் தன்னை உணர்கிறோம், அப்புறம்தானே உலகத்தையும் உணர்கிறோம்? அதாவது தானும் உலகும் ஒன்றாகத் தான் உதிக்கிறது; விழித்திருக்கும்போது தான் உலகம் தெரிகிறது, ஆனாலும் அந்த நிலையில் நம்மால் தொடர்ந்து இருக்க முடியாது. உலகமே தெரியாத ஆழ்தூக்க நிலைக்கு (ஸுஷுப்தி) நாம் தினம் தினம் சென்றால் தான் உலகம் பற்றிய அனுபவங்களைப் பெறமுடிகிறது. அப்படி இருந்தும் நமது விழிப்பு நிலை அனுபவங்களுக்கே நாம் மிகுந்த முக்கியம் கொடுக்கிறோம். இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் நமது தனித்தனி உலகத்தை சிருஷ்டித்துக் கொள்கிறோம் ; அது மட்டுமன்றி அவ்வுலகம் எப்போதும் உள்ளதாகவும் நினைத்துக் கொள்கிறோம். உண்மை என்றால் அது எப்போதும் உள்ளதாக இருக்க வேண்டும் அல்லவா? ‘இப்போது உள்ளது, அப்புறம் இல்லாதது’ என்ற தன்மை கொண்ட உலகத்தையும் அதன் அனுபவங்களையும் உண்மை என்று எப்படிக் கொள்ள முடியும்?

சிலர் ‘இல்லையே நீ தூங்கும்போதும் உலகம் இருக்கிறதே’ என்று சொல்வார்கள். உண்மையில் அது தூங்கும் எனக்கு இல்லை, வேறு யார் விழித்துக்கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் இருக்கிறது. ஆனாலும் தூக்கத்தில் நாம் இல்லாது போய்விட்டோமா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு தூக்கத்திலும் ஒரு அனுபவம் இருப்பதால் தான், விழித்ததும் ‘நன்கு தூங்கினோம்’ என்று சொல்கிறோம். அப்போது நம்மை நாம் உணர்வதில்லை, உலகம் இருப்பதையும் அறிவதில்லை, ஆனாலும் ஆழ்ந்த தூக்கத்தில் அனுபவம் உண்டு என்றால் நாம் இருக்கிறோம் என்றுதானே அர்த்தம்? அது மட்டுமல்ல; அப்படி நன்கு தூங்கிய பின் நமக்கு ஒரு ஆனந்த மயமான உணர்ச்சி வருகிறதல்லவா? அந்த உணர்ச்சியை நாம் விழித்திருக்கும் போதும் அனுபவிக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் அல்லவா? இதை நாம் இவ்விரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட கனவு நிலை (ஸ்வப்னம்) மூலம் மேலும் அறிந்து கொள்ளலாம்.

lady-dreamsவிழிப்பு, ஆழ்நிலைத் தூக்கம் தவிர மூன்றாவதாக நமக்கு கனவு நிலையும் ஒரு அனுபவமே. ஆனால் அப்போது நடப்பதை நாம் மட்டுமே அறிவோம். இது மற்ற இரு நிலைகளின் கதம்பம் என்று கூடச் சொல்லலாம். விழிப்பு நிலை போன்ற அனுபவங்களும் இங்கு உண்டு; தூக்க நிலை போன்று அதன் இறுதியில் ஒன்றும் நிலையாத தன்மையும் இங்கு உண்டு. கனவு நிலை அனுபவங்களின் உண்மைத் தன்மைதான் என்ன? கனவு முடிந்ததும் ஏதும் இல்லை என்றாலும், கனவு காணும் போது அது முடியும் வரை அவை அனைத்துமே உண்மை என்றுதான் உணர்வோம். அங்கும் உணர்வதற்கு ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் கனவு முடிந்தபின் விழிப்பு நிலையில் தான் அதன் விவரங்களைக் கூற முடியும். அனுபவம் ஒரு நிலையிலும், அதைப் பற்றிய விளக்கம் வேறு நிலையிலும் என்பது தான் கனவிற்கும் தூக்கத்திற்கும் உள்ள ஒற்றுமை. விழிப்பு நிலையில் நாம் இருப்பது போலவே கனவு நிலையில் நம்மைப் போன்று ஒருவரையும், உலகம் ஒன்றையும் உருவகப்படுத்தி நாம் கனவை அனுபவிக்கிறோம். கனவு காணும் போது அது நாம் உருவகப்படுத்தியது தான் என்பதை நாம் விழிக்கும் வரை உணரமுடியாது. ஆனாலும் அனுபவங்கள் உண்டு. இல்லையென்றால் விழித்தபின் அவைகளைச் சொல்லமுடியாதே. ஆக இவைகள் அனைத்திலிருந்தும் நமக்குத் தெரிவது என்ன?

1. கனவு நிலையிலும், தூக்க நிலையிலும் அனுபவிப்பவன்(ள்) என்று ஒருவன்(ள்) இருக்கிறான்(ள்) அல்லது ஒன்று இருக்கிறது.
2. தூக்க நிலையில் ஒரு அமைதியும் ஆனந்தமும் கிடைக்கிறது.
3. விழிப்பு நிலையில் உள்ளது போலவே வரும் கனவு நிலை அனுபவங்கள் நிரந்தரமற்றவை; உண்மையல்ல.
4. நிரந்தரமாயிருக்கும் ஆனந்தத்தைத் தேடும் ஒருவன் விழிப்பு நிலை அனுபவங்கள் எதனின்றும் தூக்கத்தில் கூட கிடைக்கும் அந்த ஆனந்த நிலையை இன்னமும் அடையவில்லை.

நாம் தினம் தினம் அனுபவிக்கும் இந்த மூன்று நிலைகளுக்கும் மேலே நாலாவது நிலை (துரீயம்) ஒன்று உள்ளது என்றும், அதுதான் இம்மூன்று நிலைகளுக்கும் ஆதாரமாக உள்ளது என்றும் முற்றும் உணர்ந்த ஞானிகள் கூறுகின்றனர். அதை உணர்ந்தால் நாம் பிறந்த பயனை அடைந்து, வாழ்க்கையின் இரகசியத்தையும் அறிவோம் என்றும் கூறுகின்றனர். அப்போது கனவு அனுபவங்கள் எப்படி உண்மையில்லை என்று விழித்தபின் உணர்கிறோமோ, அதே போன்று நனவு அனுபவங்களும் உண்மையானது அல்ல என்று அந்த முதிர்ந்த நிலையில் உணர்வோம்.

இந்த அளவு வரையில் நாம் நமது அனுபவங்களை புத்தி பூர்வமாக அலசி ஆராய முடியும். இதற்கும் மேலே சென்று நாம் தூக்கத்தில் அடையும் “என்றும் உள்ள அந்த ஆனந்த” நிலையை நமது பயிற்சி (Abhyasa) சாதனைகள் (Sadhanas) மூலமும், சாதுக்கள் சகவாசம் மூலமும் அடைய முயற்சி செய்யவேண்டும். அப்போது என்றும் ஆனந்தமாய் உள்ள பரமார்த்திக பெருநிலையை அடைவோம். இப்போது நாம் அமைதியாக இருக்கும்போதும், ஆழ்ந்த தூக்கத்திலும் அடையும் அந்த இன்பமே அது என்றும், அது நிரந்தரமாக நம்மில் உள்ளது என்றும் உணர்வோம். அதை நம்மிடம் இருந்து மறைத்து வைக்கும் நமது பழைய எண்ணங்களும், செயல்பாடுகளும் விலகுவதற்கே நாம் எண்ணிலாப் பிறவி எடுக்கிறோம். அதை உணர்ந்து நாம் உலகத்தில் செயல்பட, அவைகள் ஒன்றன்பின் ஒன்றாக விலக, என்றும் உள்ளது தவிர வேறு உண்மை எதுவும் இல்லை என்பது நமது அனுபவத்தில் இப்பிறவியிலேயே வரும். அதற்கு என்றும் எங்கும் உள்ள அந்த உண்மைப் பொருளே அருள் கொடுக்கும்.

அதை இப்போதே ஏன் கொடுக்கவில்லை என்கிறீர்களா? அப்படிக் “கேட்பது யார்?” என்ற கேள்வியுடன் உங்கள் பயிற்சியைத் தொடங்குங்கள்!

12 Replies to “உள்ளத்தே உள்ளதே உண்மை”

  1. ஆழ்ந்து தூங்கும் போது தன் உண்மை நிலை உணரப்படுகிறது

    ஆனால் விழித்துக்கொண்ட பின் நான் நன்றாக தூங்கினேன் என்கிறான்? எப்படி – நன்றாக தூங்கினான் என்றால் தூங்கினவனுக்கு எப்படி அது தெரிந்தது? அப்படி தெரிந்து இருந்தால் அவன் தூங்கவே இல்லை என்று தானே அர்த்தம்? இதற்க்கு எனது ஆச்சார்யர் சொன்ன பதில் – நன்றாக தூங்கினேன் என்று சொல்கிறோம் – அதற்க்கு பகவானே சாட்சி அவன் தான் அப்படி சொல்கிறான் – இப்படி நம் நிலை அறிந்து உண்மையில் விழித்துக்கொண்டால் கடவுள் நமக்காக பேச ஆரம்பித்துவிடுவார்

  2. 2. /தூக்க நிலையில் ஒரு அமைதியும் ஆனந்தமும் கிடைக்கிறது./

    சுசுப்தி என்று கூறப்படும் உறக்கநிலையில் அறியாமைதானே நிகழ்கின்றது. இந்த அறியாமையே ஆனந்தமா?
    ஆனந்தம் என்பது அனுபவமா? எந்த அனுபவமும் இன்மையா?

  3. எவரும் தமக்குப் தாமே பிரியமானவராகவே இருப்பார். மற்றவர்களுக்கு அவர் வேண்டாதவராக இருந்தாலும் தனக்கு வேண்டியவர்தான்.

    ஆத்மா ப்ரிய‌த‌மோ ய‌த‌:

    தான் விழிப்புநிலையில் இருக்கும்போதும் க‌ன‌வுநிலையில் இருக்கும்போதும் ஒருவ‌னுக்குப் பிரிய‌மான‌து ஆத்மா ஒன்றுதான். ஆழ்ந்த‌ உற‌க்க‌த்திலும் அவ‌னுக்குத் த‌ன் ஆத்மாமீது பிரிய‌ம் இருக்கும். உற‌க்க‌த்தில் அவ‌னுக்கு ஆத்மாவின் அறிவு இருக்கும். ஆனால் அறியாமையின் சேர்க்கை இருப்ப‌த‌னால் அப்போது ஆத்மாவின் அறிவு தெரிவ‌தில்லை. அத‌னால்தான் நாம் விழித்த‌பிற‌கு நான் சுக‌மாக‌த் தூங்கினேன் என்று கூற‌முடிகிற‌து. இத‌ற்கு, 1. நான் 2, சுக‌ம் 3 தூக்க‌ம் ஆக மூன்றும் தேவைப்ப‌டுகின்றன‌. உற‌க்க‌ நிலையின்போது நான் இல்லாம‌ல் இருந்தாலோ அல்ல‌து சுக‌ம் என்ற‌ அனுப‌வ‌ம் இல்லாம‌ல் இருந்தாலோ அல்ல‌து, ஆத்மாவின் அறிவு இல்லாம‌ல் இருந்தாலோ நான் சுக‌மாக‌த் தூங்கினேன் என்று கூற‌முடியாது.

    (சிருங்கேரி சங்கராச்சாரியாள் ஜகத்குரு ஸ்றீ அபிந‌வ‌ வித்யாதீர்த்தர் அருளுரையிலிருந்து.)

  4. நான் யார் என்று கேட்பது இருக்கட்டும்.

    நீ யார் என்று கேட்பதை எப்போது நிறுத்தப்போகிறோம்?

  5. ஐயா அவர்கள் ஐந்தவத்தைகள் பற்றியும் சுழுத்திபற்றியும் மேலும் விளக்க வேண்டும்.போதானந்தம், சிதானந்தம், ஞானாந்தம், அறிவானந்தம் முதலிய தத்துவ மொழிகள் ஆனந்தத்தை அறிவுடன் சேர்த்தே கூறுகின்றன. எனவே ஆனந்தம் அறிவோடு சம்பந்தப்பட்டதெனத் தெரிகின்றது.

    சாக்கிரத்தில் ஆன்மா புருவமத்தியில் நின்று ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, அந்தக்கரணம்4, புருடன்1, இந்திரிய விடயங்கள் 10, வாயுக்கள் 10 ஆக 35 கருவிகளுடன் கூடி அறியும் என்பர். சொப்பனத்தில் இந்திரியங்கள் 10 நீங்கலாக 25 கருவிகள் தொழில்படும் என்றும் இந்நிலையில் ஆன்மா கண்டத்தில் நிற்கும் என்றும் சுழுத்தியில் சித்தம் புருடன் வாயுக்களில் பிராணவாயு மட்டுமே செயல்படும் என்றும் சுழுத்திநிலையில் ஆன்மா இதயத்தில் நிற்கும் என்றும் கூறுவர். ஏனை துரியம் துரியாதீதம் பற்றிக் கட்டுரையில் பேசப்படவில்லை.துரியத்தில் பிராணவாயு மற்றும் புருடன் மட்டுமே இருக்கும் என்றும் துரியாதீதத்தில் பிராணவாயுவும் அடங்கி புருடன் மட்டும் மூலாதாரத்தில் இருக்கும் என்றும் படித்துள்ளேன்.
    கருவிகள் கூடுவதால் அறிவும் கருவிகள் நீங்கினால் அறிவின்மையும் நிகழும். சொப்பனத்தில் நிகழ்ந்த அனுபவத்தை முழுவதுமாக நனவில் சொல்லுதல் இயலாது. காரணம் சொப்பனாவத்தையில் அனுபவம் பெற்றது சூக்கும தேகம். சூக்கும தேகத்தில் உள்ள சில கருவிகள் தூலதேகத்திலும் உள்ளனவாகையால் கனவனுபவத்தை முழுமையாக நனவில் அறிந்து கூற முடியாவிடிலும் ஓரளவுக்கு நினைவுபடுத்திக் கூற இயலுகின்றது.

    சுழுத்தியில் சித்தம் மட்டுமே உள்லது. இது மனத்தின் விருத்தி. சிந்திக்கும் சித்தம் இருத்தலின் கனவு அனுபவம் போன்றதொன்று நிகழ்தலும் உண்டு. என்றாலும் சித்தம் சிந்தித்ததை நனவில் சொல்ல முடியாது. சொப்பனத்தில் காணும் கனவை அரைகுறையாகவோ முறை மாறியோ நனவில் சொல்ல வரும். ஆனால் சுழுத்தியில் சித்தத்தில் சிந்தித்தது இது என்று சொல்ல வராது. இங்கு மனவிருத்தி சூக்குமமாக நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஆழ்ந்து தூங்கினேன் என நனவில் கூறுவதற்குச் சித்தம் சுழுத்தியில் செயல்படுவதே காரணம்

    துரியத்தில் சித்தமும் இல்லை. எனவே, சிந்தித்தல், கனவுகாணுதல் போன்றன துரியத்தில் இல்லை. எனவே நல்ல உறக்கம் என்பது இதுவே.
    உறக்கத்தில் அமைதி வேண்டுமானல் கிடைக்கும். ஆனந்தம் வேறு அமைதி வேறு.
    அடுத்த வினா அறிவற்ற நிலை ஆனந்தமாகுமா? என்பது. சுழுத்தி அறியாமை ஆன்மாவைக் மூடியுள்ளதொரு நிலை

    இரமணர் போன்ற சீவன் முத்தர்கள் உலகில் சஞ்சரித்த நிலை அறியாமை கவிந்த சுழுத்தி அன்று, என என் அறிவிற்குப் படுகின்றது.

    அருள் கூர்ந்து தெளிவுபடுத்த வேண்டுகின்றேன்

  6. திரு. சாரங் :
    “.. நன்றாக தூங்கினான் என்றால் தூங்கினவனுக்கு எப்படி அது தெரிந்தது? அப்படி தெரிந்து இருந்தால் அவன் தூங்கவே இல்லை என்று தானே அர்த்தம்?”

    நன்றாகத் தூங்கினோம் என்பது கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பதுபோல் நம் விழிப்பு நிலை விவரிப்பே. ஆனால் நமது அனுபவமோ ஆழ் தூக்க நிலையில் உண்டு. இதை மற்றவர் கூறவும் முடியாது.

    திரு. உமா சங்கர்:
    “..நீ யார் என்று கேட்பதை எப்போது நிறுத்தப்போகிறோம்?”
    நீ என்று சொல்லும் முன்னமே நான் உண்டு என்று கேட்பவன் உணரும்போது.

    திரு. முத்துக் குமாரசாமி:
    “…சுசுப்தி என்று கூறப்படும் உறக்கநிலையில் அறியாமைதானே நிகழ்கின்றது. இந்த அறியாமையே ஆனந்தமா?
    ஆனந்தம் என்பது அனுபவமா? எந்த அனுபவமும் இன்மையா?”

    ஆனந்தம் அப்போது உள்ளதால்தான் எவரும் உறங்குவதற்கு விரும்பிச் செல்கின்றனர். அப்போது அது அனுபவமே. அதைப் பற்றிச் சொல்வதோ, அது அறியாமைதானே என்று கொள்வதோ அந்த நிலையில் இல்லை. விழிக்கும்போது தான். அப்போதுதான் இருநிலை பேதம் வந்து விடுகிறதே. அறிவு, அறியாமை எல்லாம் அப்போதுதான்.

  7. திரு. முத்துக்குமாரசுவாமி:
    “..போதானந்தம், சிதானந்தம், ஞானாந்தம், அறிவானந்தம் முதலிய தத்துவ மொழிகள் ஆனந்தத்தை அறிவுடன் சேர்த்தே கூறுகின்றன. எனவே ஆனந்தம் அறிவோடு சம்பந்தப்பட்டதெனத் தெரிகின்றது”

    நான் அறிந்தவரை கூறுகிறேன். தாங்கள் கூறுவதுபோன்ற பல தரப்பட்ட அறிவுகள் நம் விழிப்பு நிலையில் தான். இங்குதான் பேதங்களும் வருகின்றன. ஆழ் உறக்க நிலையில் நாம் அனுபவிப்பது ஆனந்தம் ஒன்றே. அது அனுபவமே அன்றி வேறெதுவும் இல்லை. அதனுடன் சேர்த்து கூறுவதற்கு அங்கு வேறு ஏதும் இல்லை. அதையே பேரறிவு என்றும் கூறுவர். ஆனால் அப்படிக் கூறப்படுவதும் விழிப்பு நிலையில் தான். அந்த ஆனந்தம் அப்போது உண்டு என்றால் இப்போது ஏன் உணரப்படுவது இல்லை என்றே சாதகன் உள்ளாழ்ந்து நோக்க வேண்டும். அதை உணரும் நிலையில் ஒருவன் இருக்கும் போது ஏதோ ஒரு முறையில் குருவும் கிடைப்பார் என்பதை உணர்ந்தவர்கள் உறுதிப் படுத்துகின்றனர்.

    இப்படி அறிந்துகொள்ளும்போது தாங்கள் கூறிய வெவ்வேறு கருவிகளும் காரணங்களும் மறுபடி விழிப்பு நிலை விளக்கங்களே. எல்லாம் விழிப்பு நிலை அனுபவங்கள், விளக்கங்கள் என்பதாலேயே, கட்டுரையில்
    “.இந்த அளவு வரையில் நாம் நமது அனுபவங்களை புத்தி பூர்வமாக அலசி ஆராய முடியும். இதற்கும் மேலே சென்று நாம் தூக்கத்தில் அடையும் “என்றும் உள்ள அந்த ஆனந்த” நிலையை நமது பயிற்சி (Abhyasa) சாதனைகள் (Sadhanas) மூலமும், சாதுக்கள் சகவாசம் மூலமும் அடைய முயற்சி செய்யவேண்டும்.. ..” என்றே குறிக்கப்பட்டுள்ளது.

    தங்களது “….ஏனை துரியம் துரியாதீதம் பற்றிக் கட்டுரையில் பேசப்படவில்லை.” என்பது பற்றி என்ன சொல்ல முடியும்? “கண்டவர் விண்டிலை, விண்டவர் கண்டிலை” என்பதுதான் அதற்குப் பதிலாக இருக்க முடியும் என்றே நான் கருதுகிறேன். நமது ஆனந்த அனுபவங்களை துரியத்தின் வாயிலாகக் கொண்டு ஒவ்வொருவரும் தம் தம் முயற்சியால்தான் மேற்கொண்டு செல்ல முடியும். அதுவரை – முயற்சி என்று ஒன்று இருக்கும் வரை – உலகமும் உண்டு, குருவும் உண்டு.

    தங்களது “….சூக்கும தேகத்தில் உள்ள சில கருவிகள் தூலதேகத்திலும் உள்ளனவாகையால் கனவனுபவத்தை முழுமையாக நனவில் அறிந்து கூற முடியாவிடிலும் ஓரளவுக்கு நினைவுபடுத்திக் கூற இயலுகின்றது” என்பதற்கு
    கட்டுரையில்
    “.கனவு நிலை அனுபவங்களின் உண்மைத் தன்மைதான் என்ன? கனவு முடிந்ததும் ஏதும் இல்லை என்றாலும், கனவு காணும் போது அது முடியும் வரை அவை அனைத்துமே உண்மை என்றுதான் உணர்வோம். அங்கும் உணர்வதற்கு ஒருவன் இருக்கிறான்……….. …….பிறந்த பயனை அடைந்து, வாழ்க்கையின் இரகசியத்தையும் அறிவோம் என்றும் கூறுகின்றனர். அப்போது கனவு அனுபவங்கள் எப்படி உண்மையில்லை என்று விழித்தபின் உணர்கிறோமோ, அதே போன்று நனவு அனுபவங்களும் உண்மையானது அல்ல என்று அந்த முதிர்ந்த நிலையில் உணர்வோம்.”
    என்று உள்ளது போதவில்லையா?

    தங்களது “…உறக்கத்தில் அமைதி வேண்டுமானல் கிடைக்கும். ஆனந்தம் வேறு அமைதி வேறு..”
    என்று கூறப்படுவது எப்போது? கூறுவது யார்? என்று பார்ப்பதுதானே சாதகம்.

    “..அறிவற்ற நிலை ஆனந்தமாகுமா? ……..இரமணர் போன்ற சீவன் முத்தர்கள் உலகில் சஞ்சரித்த நிலை அறியாமை கவிந்த சுழுத்தி அன்று, என என் அறிவிற்குப் படுகின்றது”
    என்பது உண்மையே. அவரே சொல்வார்: “அறிவும் அறியாமையும் யார்க்கு என்று அம்முதலாம் தன்னை அறியும் அறிவே அறிவு”. ஆக நாம் அறிவு என்று விழிப்பு நிலையில் கூறுவது அந்நிலைக்கு மட்டுமே உள்ள ஒரு விளக்கம். அதனால் அப்படிப்பட்ட அறிவு இல்லாத உறக்க நிலை அனுபவத்தை நாம் அறிவற்றது என நினைக்கிறோம். இது சரியா?

    “அருள் கூர்ந்து தெளிவுபடுத்த வேண்டுகின்றேன்” என்ற தங்களது சொல் எனக்கு சற்று அதிகமாகத் தெரிகிறது. ஏனெனில் நானும் நம்மில் பலர் போல் படித்து கேட்டு அறிந்தவன்தான். ஒருவேளை கண்டிருந்தால் விண்டிருக்க மாட்டேன்.

  8. தங்கள் மறுமொழிக்கு நன்றி. தங்கள் கட்டுரை மெய்ப்பொருள் அனுபவத்தைக் குறித்து அறிந்து கொள்ள அழித்துச் செல்லுகின்றது. சற்று வித்தியாசமான இடுகை.
    அருணகிரி முனிவர், “இராப்பக லற்ற இடங்காட்டி யானிருந்தேதுதிக்கக் குராப்புனை தண்டையந் தாளருளாய்” என முருகப்பெருமானை வேண்டுகின்றாற். இரா என்பது கேவலம் இருளாகிய அறியாமை மட்டுமே ஆன்மாவிச் சூழ்ந்துள்ள நிலைமை. பகல் என்பது சாக்கிரம். உலக விடய அனுபவங்கள் ஆன்மாவுக்குக் காட்சியாகும் நிலை இந்த இரண்டும் அற்றநிலை அறிவும் அறியாமையும் அற்றநிலை. உலக அனுபவமும் இல்லை. அறியாமையும் இல்ல. அப்பொழுது அறிவுண்டு. அந்த அறிவு உஅலகத்தை அறியாது. இறையின்பத்தை மட்டுமே துய்த்துக் கொண்டிருக்கும். அந்தநிலையிஅ அருணை வள்ளல் வேண்டுகின்றார். அந்தநிலை எளிதில் கிட்டாது முருகனின் அருள் வேண்டும் என்கிறார் அருணைமுனிவர்.
    “அராப்புனை வேணியன் வேயருள் வேண்டும் அவிந்த அன்பால்
    குராப்புனை தண்டையந் தாள்தொழல் வேண்டும் கொடிய ஐவர்
    பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டும் என்றால்
    இராப்பகலற்ற இடத்தே இருக்கை ஏளிதல்லவே”

    போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்புமுள்ளும்
    வாக்கும் வடிவும் முடிவும் இல்லாததொன்று வந்துவந்து
    தாக்கும் மநோலயந் தானே தருமெனைத் தன் வசத்தே
    ஆக்கும் அறுமுகவா சொல்லொணாதது இந்த ஆநந்தமே”

    என்பன போன்ற திருவாக்குகளை நினைக்கும் போது அறிவும் அறியாமையும் கடந்தது அந்த இன்பநிலை, ஆன்மா சொல்லொணாதநிலையில் அந்த இன்பத்தைத் துய்த்துக் கொண்டிருக்கும். தான்வேறுசிவம்வேறு என்றறிஒணாதவாறு தான் அச்சிவத்தோடு இலயமாகியிருக்கும் என்பது தெரிவருகின்றது.

    சுழுத்தி அறியாமை கவிந்திருகும் நிலை. ம்னோலயம்,சமாதி என்பன அறியாமையும் உலகவிழிப்பும் இன்றி சிவமாகிய கூட்டில் ஒடுங்கியிருக்கும் நிலை. “மவுன பஞ்சர மனோலய சுகம்” என்று அருணைமுனிவர் இந்த நிலையைக் குறிப்பிடுகின்றார். ‘சொல்லொணாதிந்த ஆனந்தமே’ என்றும் , ‘நின்னை உணர்ந்துணர்ந் தெல்ல மொருக்கிய நிர்க்குணம்பூண்,டென்னை மறந்திருந்தேன் இறந்தே விட்ட திவ்வுடம்பே”, “யானாகிய என்னை விழுங்கி வெறுந் தானாய் நிலைல்நின்றது தற்பரமே’ என்றெல்லாம் அவ்வள்ளல் கூறுவதால் உடலாலன்றி அறிவால் ஆனந்தம் அடையும் அந்த நிலை அறியாமையாகிய சுழுத்தி அன்று என்றே எனக்குப் படுகின்றது. ‘தற்பரம்” அறிவேவடிவனது,இன்பமயமானது; எனவே அதனில் லயமாவது சுசுப்தியாகிய அறியாமை அன்று. கல்லும்மரக்கட்டையும் போன்றதே சுழுத்திநிலை.

    நானும் ஆர்வத்தோடு சித்தாந்த நூல்களைப் படித்தவனேஒழிய, முறையாக எந்த குருவையும் அடுத்துக் கற்றவன் அல்லன். சாத்திரங்களில் கூறப்படும் அவத்தைநிலகள் எனக்கு மிக்வும் உவப்பாக இருந்தன். அவற்ரில் கருத்தைச் செலுத்தியதால் இது பற்ரிச் சிலவற்றைத் தெரிவித்துக் கொண்டேன்

  9. “கனவு நிலையிலும், தூக்க நிலையிலும் அனுபவிப்பவன்(ள்) என்று ஒருவன்(ள்) இருக்கிறான்(ள்) அல்லது ஒன்று இருக்கிறது…… நிரந்தரமாயிருக்கும் ஆனந்தத்தைத் தேடும் ஒருவன் விழிப்பு நிலை அனுபவங்கள் எதனின்றும் தூக்கத்தில் கூட கிடைக்கும் அந்த ஆனந்த நிலையை இன்னமும் அடையவில்லை.” என்று நான் கட்டுரையில் குறித்துள்ளது தங்களுக்கு,

    “.. உடலாலன்றி அறிவால் ஆனந்தம் அடையும் அந்த நிலை அறியாமையாகிய சுழுத்தி அன்று என்றே எனக்குப் படுகின்றது…” என்று தோன்ற வைத்திருக்கிறது என நினைக்கிறேன்.

    நான் கூறவந்தது ஆனந்தம் நாம் தினம் தினம் ஆழ் நிலை தூக்கத்தில் (சுழுத்தியில்) அனுபவிப்பதுதான். அப்போது இருப்பது வெறும் அனுபவமே; அதைப் பற்றி நாம் அறிவதில்லை. அந்த அனுபவத்தை அறிவுடன் பெறுவதற்கே சாதகம் செய்ய வேண்டும். ஆக நமது மூன்று நிலைகளோடு எல்லாம் முடிந்துவிடுவதில்லை. ஆனால் இம்மூன்று நிலைகளைப் பற்றிகூட அறியாது, விழிப்பு நிலை ஒன்றையே கொண்டு உழலும் மானிடர்கள் கடைத்தேறுவதற்கே எல்லாம் உணர்ந்த ஞானிகள் இதனில் ஆரம்பிக்கின்றனர். முதலில் அப்படி ஒன்று உள்ளது என்பதைப் பற்றி படிப்பதற்கோ, பிறர் வாயிலாகக் கேட்பதற்கோ வாய்ப்பு கிடைப்பதே அவன் அருள். அதற்கும் மேல் சாதகம் செய்து உணர்வது என்பதும் அவன் அளிக்கும் பேரருளே.

    இம்மூன்று நிலைகளும் எவரும் உணரக் கூடியதே. இதை வேறொருவரும் உணர்த்தவும் முடியாது. ஏனென்றால் எனது சுழுத்தி நிலை அனுபவம் எனதே. உங்களது அனுபவத்தோடு ஒப்பிட்டு வேண்டுமானால் நோக்கலாம். அப்படி நோக்கும் போது, எவருக்கும் அதே அனுபவம் என்றால் ஏன் நான்-நீ என்று உணர்கிறோம்? அப்படி எது இடையில் வந்தது என்று பார்ப்பதுதான் சாதகம்.

    இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மற்றபடி வேதாந்த விளக்கங்கள் எல்லாம் அவரவர் புரிவதற்கு ஏற்றபடி சொல்லப்படும் “வேற்றார் கேள்விக்கு விளம்பும் சொல்லே” என்றுதான் ரமணர் கூறுவார். எது உகந்ததோ அதைக் கொள்ள வேண்டும். எதிலும் உவப்பதற்கு ஏதும் இல்லை என்பதே எனது கருத்து. அதற்காகவே எவரது சாதகமும் தனது அனுபவத்திலிருந்து தொடங்கினால் நன்கு அமையும்.

    மதியால் நாம் முயற்சி செய்கிறோம் என்று நினைக்கிறோம். அதுவும் விதியின் வசத்ததே என்று ஒரு நாள் தெரியவரலாம். அதுவரை “சும்மா இரு சொல்லற என்றே” நாம் இருப்பது நல்லது.

  10. thiru ramanan sir,
    எனக்கு ஒரு கேள்வி, ஒருவன் மயக்க நிலைக்கும் தூக்க நிலைக்கும் என்ன வித்தியாசம்? ஒரு மருந்தை கொடுத்து ஒருவனை மயக்க நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு 8 மணி நேரத்துக்கு பிறகு எழுந்து ( நாம் இடையில் எழுப்பவும் முடியாது, ஆனால் தூங்குபவனை இடையில் எழுப்பிவிடலாம் இல்லையா? ) நான் எங்கு இருக்கிறேன் என்று கேட்கிறான். அப்படிஎன்றால் மயக்க அல்லது கோமா நிலையில் இருக்கும் பொது நான் என்ற உணர்வு எங்கே போயிற்று? உடல் இருக்கிறது, உயிர் இருக்கிறது, நான் என்கிற உணர்வு இல்லை? இது என்னை குழப்புகிறது. தயவு கூர்ந்து விளக்கவும்.

  11. திரு. அருண் பிரகாஷ் அவர்களுக்கு, தாங்களும் வெகு நாட்கள் கழிந்தபின் கேள்வி கேட்டிருக்கிறீர்கள், நானும் அந்தச் சமயம் வேறு வேலையில் கவனம் செலுத்திக்கொண்டிருந்ததால் தங்களின் மறுமொழி என் கவனத்திற்கு வரவில்லை. உண்மையில் இன்றுதான் கவனித்தேன். தங்கள் கேள்விக்குச் சரியான பதிலை மருத்துவ அனுபவம் உள்ளவர்தான் கொடுக்கமுடியும் என்று நினைக்கிறேன். இருந்தும் என்னளவில் முயற்சி செய்கிறேன். ஒருவனின் சாதாரண அனுபவ நிலைகளில் “கோமா”வோ, மயக்கமோ கிடையாது. அப்போது மூளையின் இரத்த ஓட்டத்திலோ, சைகைகள் உற்பத்தியிலோ blockers நுழைந்து வேலை செய்கிறது. அதிலிருந்து மீள அவை அங்கிருந்து கரைந்தோ, கிளம்பியோ வரவேண்டும். ஒருவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போதும், உடனே அவன் விழிப்பு நிலைக்கு வருவதில்லை. நமக்கு அப்படித் தெரியலாம், ஆனால் அதிலிருந்து அரைகுறை தூக்கம் வந்து அப்புறம்தான் விழிக்கிறான். வெகு சில சமயமே அப்படி நடக்காதபோது, ஒருவன் மதிய தூக்கத்தின் பின் காலையில் எழுந்திருப்பதுபோலவும், பல் விளக்கப் போகவேண்டும் என்பதுபோலவும் உணர்வார். ஆக இந்த அசாதாரண நிலை வேறு பொருளால் நிகழ்கிறது என்று புரிந்துகொண்டால் சரி. நமது சாதாரண நிலைகளில் இதுவும் ஒன்று என நினைப்பது சரியல்ல என்றுதான் நான் நினைக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *