முகப்பு » ஆன்மிகம், சமூகம், பொது

நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 2 (ராஜீவ் மல்ஹோத்ரா)


மூலம்: ராஜீவ் மல்ஹோத்ரா
தமிழில்: ஜடாயு

முந்தைய பகுதி

தொடர்ச்சி…

பாலியல் விழைவும் (Sex), ஒழுக்கமும்

முன்பு சொன்ன பின்னணியுடன், சுவாமி நித்யானந்தரது ஒழுக்கம் பற்றிய பிரசினைக்குள் வருகிறேன். இதற்கு முன்பு கூறியவற்றின் சுருக்கமாக இரண்டு விஷயங்கள்:

•    முதலாவது, நித்யானந்தாவின் ஒழுக்கம் பற்றிய பிரசினை, அவர் வெற்றிகரமாக பலருக்கும் கற்றுத் தந்திருக்கும் தியான முறைகளின் சக்தியையும், பலன்களையும் பாதிக்காது.

•    இரண்டாவது, சில இந்துமதக் கூறுகள் பாலுணர்வை ஆன்மிகத்திற்கு ஊறுவிளைவிப்பதாகக் கண்டாலும், பாலுணர்வு என்பதை முழு முற்றாக, ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் இயல்பு இந்துமதத்தில் இல்லை.

இங்கு கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், பிரம்மசரியம் (பாலுறவை முற்றாகத் தவிர்ப்பது) என்பது இந்து ஆன்மிகத்தின் பல வழிமுறைகளில் ஒரு வழிமுறை மட்டுமே. அண்மையில் ஹரித்வாரில் நான் தங்கியிருந்த போது பாதிநாட்கள் காயத்ரி பரிவார் என்ற அமைப்பின் விருந்தாளியாக இருந்தேன். இது ஒரு மிகப் பெரிய இந்து ஆன்மிக இயக்கம்; இதில் யாருமே முழு பிரம்மசரியத்தைக் கடைப்பிடிப்பதில்லை.  இதை நிறுவிய பெரியவர், இதன் தற்போதைய தலைவர், உறுப்பினர்கள் எல்லாருமே இல்லறத்தார்கள் தான், பிரம்மசாரிகள் அல்ல.

இந்துமதத்தில் இப்படியும் முறைகள் இருக்கின்றன. ஆனால் இம்முறைப்படி தனது தார்மீக, ஒழுக்க செயல்பாடுகளை நிரூபணம் செய்ய விரும்பினால், நித்யானந்தா தன்னை சன்யாசி என்று இல்லாமல், இல்லறத்தார் என்று கூறியிருந்திருக்கவேண்டும். அவர் ஒருபோதும் அப்படி சொல்லிக் கொண்டதில்லை.  எனவே, நாம் இதை வைத்து அல்ல, வேறு ஏதேனும் அளவுகோலைக் கொண்டு தான் அவரது ஒழுக்கம் பற்றிய பிரசினையை பரிசீலிக்க வேண்டும்.

ஒஷோ

நவீனயுகத்திற்கான தாந்திரீக சாதனை முறைகளைப் பரிசோதனை செய்பவர் என்று அவர் தன்னை அறிவித்துக் கொண்டிருந்தால், அவர் மீது சுமத்தப் படும் இத்தகைய குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவையாக இருந்திருக்கும்.  அப்போது அவர் ஓஷோ வகை ஆன்மிக குரு என்ற இடத்திற்குச் சென்றிருப்பார்.  தனது பல உரைகளிலும், உபதேசங்களிலும்  ஓஷோவை ஒரு மகா குரு என்றும் உன்னத ஞானம் பெற்றவர் அவர் புகழ்ந்திருக்கிறார்.  தனது சில கருத்துக்களில் ஓஷோவின் தாக்கம் இருக்கிறது என்பது வரையில் கூட சொல்லியிருக்கிறார். ஆனால் பாலுறவுடன் கூடிய வழிமுறைகளைத் தானும் கடைப்பிடிக்கிறாரா இல்லையா என்பது பற்றி  பொதுத்தளத்தில் கூற அவர் தவறிவிட்டார்.

கடந்த சில நாட்களில் என்னிடம் தனிப்பட்ட முறையில் அவர் கூறிய விஷயம் இது  – சிவ சூத்திரங்களில் இருவகையான வழிமுறைகள் உள்ளன. பெரும்பாலான வழிமுறைகளுக்கு  வேறொருவரது உடல் தொடர்பு தேவையில்லை, அவை பார்வை, ஓசை. சுவை, மணம் ஆகியவற்றுக்கான புலன்களை மட்டுமே ஈடுபடுத்தி செய்யப் பட்டு ஆன்மிக அனுபவங்களுக்கு இட்டுச் செல்பவை. எனவே ஒருவர் இவ்வழிமுறைகளை முழுதாக தாமாகவே செய்ய முடியும்.  இதுவரையில் இந்த வழிமுறைகளைத் தான் பொதுவில் எல்லாருக்கும் அவர் கற்றுத் தந்திருக்கிறார்.  இவற்றுக்கு பிரம்மசரியம் துணைபுரியும் என்பதால், அவர் பல சீடர்களை பிரம்மசாரிகளாக தீட்சை அளித்திருக்கிறார்.  ஆனால், ஒரு சிறிய வட்டத்தினருக்காகவேனும் பாலுறவுடன் கூடிய தாந்திரீக முறைகளும் பரிசீலிக்கப் பட்டு,  பாதுகாப்பாகக் கற்பிப்பதற்கு ஏற்றதாக ஆக்கவேண்டும் என்று அவர் நினைக்கிறார்.  ஒருவகையில், ஒரு புதிய பொருளை தயாரிப்பதற்காக நிறுவனங்கள் செய்யும் R&D  போன்ற விஷயம் இது என்று அவர் கருதுகிறார்.

அவர் கண்டிப்பாக வெகுசில சீடர்களுடன் தாந்திரீக சாதனைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்றே நான் ஊகிக்கிறேன். இதில் ஈடுபடும் இருசாராரும் சட்டபூர்வமாக agreement மூலம் எழுத்தில் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்து உடன்பட்டிருக்கிறார்கள் என்றும் நான் நம்புகிறேன். தாமாக விரும்பி தாந்திரீக சாதனைகளுக்காக அணுகுபவர்கள் பின்னர் அவர்மீது உடல்-தொடர்பு பற்றிய குற்றச் சாட்டுகளை சுமத்தக் கூடாது என்று உறுதி செய்வது இத்தகைய உடன்படிக்கையின் நோக்கமாக இருக்கலாம்.
மார்ச்-9 அன்று நான் நடத்திய வீடியோ நேர்காணலில் குறிப்பாக மேற்கண்ட விஷயங்களைப் பற்றி அவர் கூறியிருக்கிறார். அந்த நேர்காணலை பொதுவில் காண்பிப்பதற்கு அவருக்கு எந்த ஆட்சேபணையும் இருக்கவில்லை. ஆயினும், ஆசிரம நிர்வாகத் தலைவர்கள் அதனைப் பொதுவில் வெளியிடவில்லை. இதைக் காண்பிக்கவேண்டும் என்று நான் அவர்களிடம் வலியுறுத்திக் கூறினேன், ஆயினும் ஆசிரம நிர்வாகம் அது கூடாது என்று முடிவெடுத்து விட்டது.  இந்த முடிவு தவறானது என்றே இப்போதும் நான் நினைக்கிறேன். அந்த நேர்காணலில் சுவாமி நித்யானந்தா மிகவும் தீர்க்கமாகவும், வெளிப்படையாகவும் பேசினார்.  சொல்லப் போனால் இந்த விவகாரத்திற்குப் பின் அவருடன் நான் நிகழ்த்திய நேர்காணல்களில் சிறப்பாக வந்திருந்தது அந்த நேர்காணல் தான்; ஆனால் அது பொதுப் பார்வைக்கு வந்து சேரவே இல்லை.

அந்த விவகாரமான வீடியோவில் தோன்றும் தமிழ் நடிகை ரஞ்சிதா அவருடன் தாந்திரீக சாதனைகளைப் பயின்றுகொண்டிருந்திருக்கலாம் என்றே நான் ஊகிக்கிறேன். உடல்-நெருக்கத்திற்கு முன்பு தன்னடகத்திற்கான  சில பயிற்சிகளையும் அவர் ரஞ்சிதாவுக்குக் கற்பித்திருக்கலாம்.  ரஞ்சிதா தரப்பில் என்ன கூற விரும்புகிறார் என்று அறிய அவரைத் தொடர்பு கொள்ள நான் மிகவும் முயற்சித்தேன். ஆனால், முடியவில்லை.

ranjithaஅவருடன் தொடர்பு கொண்டதாகக் கூறும் இன்னொரு நபர் தரும் தகவல்கள் மற்றும் ஊடக செய்திகளின் அடிப்படையில் ரஞ்சிதாவின் தரப்பு இப்படிப் போகிறது:

வீடியோவில் வரும் தருணத்தில், நித்யானந்தா முழுமையாக விழிப்பு நிலையில் இல்லாதபோது, ரஞ்சிதா பாலுணர்வு விழைவுக்கான முயற்சிகளைத் தொடங்குகிறார்; ஆனால் அது உடலுறவு வரை செல்லவில்லை. அங்கேயே முடிவுறுகிறது.மேலும், தொலைக்காட்சியில் காட்டப் பட்ட வீடியோக்கள் உண்மையில் நடந்த விஷயங்களை திரித்து உருமாற்றப் பட்டவை என்றும் வேண்டுமென்றே நிலைமையை மிகைப் படுத்திக் காண்பிப்பவை என்றும் ரஞ்சிதா கூறுகிறார்.  நித்யானந்தா ரஞ்சிதாவை நிறுத்துமாறு கூறித் தடுக்கும் பகுதிகள் காண்பிக்கப் படவில்லை. பல வீடியோக்களில் இருக்கும் துண்டுகள் எடிட்டிங் மூலம் இணைக்கப் பட்டு ஒரு வீடியோவாக ஆக்கப் பட்டுள்ளன என்றும் ரஞ்சிதா சொல்கிறார். அவர் நித்யானந்தா மீது எந்த புகாரையும் பதிவு செய்யவில்லை.  எனவே, அதிகபட்சமாக இரு வயதுவந்தவர்களுக்கிடையில் பரஸ்பரம் விருப்பத்துடன் நிகழ்ந்த பாலுறவு, அதுவும் எழுதப் பட்ட உடன்படிக்கைக்கு உட்பட்டது என்றாகிறது. நித்யானந்தாவுக்கு எதிராக எந்த வாக்குமூலமும் தருவதற்கு ரஞ்சிதா மறுத்து விட்டார்.  இதற்காகவே தன்னை இதில் ஈடுபடுத்தி இந்த மறைமுக காமிரா ஆபரேஷனை செய்தவர்கள் மூலம் தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என்றும் அவர் அஞ்சுகிறார். இத்தகைய ரவுடித்தனமான (mafia) சதித் திட்டங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவர் வெளிநாடு சென்று விட்டார் என்றும் கேள்விப் படுகிறேன்.

இந்த விசாரணையில், ரஞ்சிதா தரப்பில் சொல்லப் பட்ட மேற்சொன்ன விஷயங்களை நேரடியாக அவர் மூலமே சரிபார்க்க என்னால் இயலவில்லை என்பதையும் மீண்டும் இங்கு நினைவுறுத்துகிறேன்.

எனது பார்வையில் நித்யானந்தாவின் ஒழுக்கம்/தார்மீகம் பற்றிய பிரசினை, பரஸ்பரம் விருப்பத்துடன் நிகழும் பாலுறவு தொடர்பானதல்ல. நான் கவலை கொள்ளும் பிரசினை  பொதுமக்களிடமும், சீடர்களிடமும்  ஒளிவுமறைவில்லாமலும், நேர்மையாகவும் நடந்து கொள்ளாதது பற்றியது. தாந்திரீக பரிசோதனைகளில் ஈடுபடுவதற்காக அவர்களது விருப்பத்துடனேயே, சில யோகினிகளைத் தேர்ந்தெடுத்து ஏற்றுக் கொள்வதாக அவர் வெளிப்படையாகவே அறிவித்திருக்கலாம்.  இப்படி அறிவித்திருந்தால், அவரது பல சீடர்களை இது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும், அவர்கள் விலகியிருக்கக் கூடும்.

இதற்கு எதிர்வினையாக, இரு சாதகர்களுக்கிடையில் நிகழும் ஒரு தனிப்பட்ட விஷயம் பற்றி அவர்கள் பொதுவில் கூறவேண்டிய எந்தக் கட்டாயமும் இல்லை என்று அவர் வாதிடலாம். தங்கள் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி யாரெல்லாம் பொதுவில் பேசுகிறார்கள்? ஒருவரும் இல்லை; அதற்கு அவசியமும் இல்லை.

மேலும், சிவ சூத்திரத்தின் தாந்திரீக வழிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதால்,  இது இந்து மரபுக்கு உடன்பட்ட செயல்தான் என்றும் அவர் வாதிடலாம், இத்தகைய தாந்திரீக வழிமுறைகள் முதலில் இந்து மரபுக்கு உட்பட்டது தானா என்றே சர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும் கூட.

இதுகாறும் நித்யானந்தா தரப்பில் சாத்தியமான எல்லா வாதங்களையும் கூறிவிட்டேன்.  இதற்கு எதிரிடையாக, இது வேறு ஒன்றுமில்லை, முழுக்கவும் வெறும் காம இச்சை மட்டுமே, தாந்திரீகம், ஆன்மிக சாதனை என்ற பெயரில் ’பேக்’ செய்யப் பட்டிருக்கிறது என்று கருதுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

வெண்டி டோனிஜரின் ஆய்வுக் கண்ணோட்டத்தின் வழிவந்த ஆய்வாளர் டேவிட் வைட் (David White) ஒருபடி மேலே போய் ஒட்டுமொத்த தாந்திரீகம் என்பதே அப்படிப்பட்டது தான் என்று முடிவு கட்டுகிறார். தனது விரிவான எழுத்துக்கள் மூலம் சாராம்சமாக அவர் என்ன சொல்கிறார் என்றால் – தாந்திரீகம் என்பது முழுவதுமே  தீவிர பாலுணர்வு ததும்பும் ஆபாசம் (hard core porn) தான்.  அதனை தத்துவம், ஆன்மிகம் என்று மென் பாலுணர்வு (soft porn) முலாம் பூசி பொதிந்து வைத்து பொதுத் தளத்தில் காண்பிக்கிறார்கள்.  வைட் எழுதியிருக்கும் சமீபத்திய புத்தகத்தில்,  இந்திய சரித்திரத்தில் மகா யோகிகள் என்று கூறப் படுபவர்கள் எல்லாருமே எந்த விதமான ஆன்மிக செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை; அவர்கள் மற்றவர்களை சுரண்டுவதற்காக தனிப்பட்ட ஆற்றலையும், அதிகாரத்தையும் வளர்த்துக் கொண்டவர்கள் மட்டுமே  என்றும் குற்றம் சாட்டுகிறார். வைட்டின் ஒட்டுமொத்த பார்வை எப்படிப் பட்டது என்று இதன் மூலம் ஒருவாறு புரிந்து கொள்ளலாம்.

சுவாமி நித்யானந்தா விஷயம் ”மென் பாலுணர்வு ஆபாசமா”  அல்லது  உண்மையிலேயே ஆதாரபூர்வமான தாந்திரீக வழிமுறையா என்று விமர்சனம் செய்வதற்கு எனக்குத் தகுதி இல்லை என்றே கருதுகிறேன். அதோடு கூட, எந்தவிதமான தீர்ப்பும் சொல்வது கடினம், ஏனென்றால் நிகழ்ந்தது என்ன என்பது பற்றிய எல்லா ஆதாரபூர்வமான தகவல்களும் முழுமையாகக் கிடைக்கவில்லை, முன்வைக்கப் படவில்லை.

விவகாரத்திற்குரிய செக்ஸ் வீடியோவின் பின்னணியிலான ஒழுக்கப்  பிரசினை பற்றிய கருத்துக்களை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இனி அடுத்த விஷயம்.

இந்த விவகாரத்திற்கு முன்பு நித்யான்ந்தா உடனான என் அனுபவங்கள்:

கலிஃபோர்னியாவில் இருக்கும் ஒரு பிரபல இந்துத் தலைவர் தான் சில வருடங்கள் முன்பு சுவாமி நித்யானந்தாவிடம் என்னை அறிமுகப் படுத்தினார்.  அந்தத் தலைவர் இளைஞரான சுவாமியால் பெரிதும் கவரப் பட்டிருந்தார். அவரது மகிமைகளைப் பற்றிக் கூறுவதற்காகவே அடிக்கடி என்னை அழைத்துப் பேசினார்.  எனக்கு ஏற்கனவே ஒரு ஆன்மிக குரு இருந்திருக்கிறார் என்றும் குருமார்கள் மீதான எனது தற்போதைய ஆர்வத்திற்குக் காரணம் உலகம் சுற்றும் குருமார்கள் பற்றிய எனது புத்தகத்திற்காக செய்து கொண்டிருக்கும் ஆய்வுகள் தான் என்று அவரிடம் சொன்னேன். சுவாமி நித்யான்ந்தாவுடன் ஒரு தனிப்பட்ட சந்திப்புக்கு அவர் ஏற்பாடு செய்தார். அந்தச் சந்திப்பை  பண்பாட்டு ரீதியாக இந்து தர்ம்ம் சந்தித்துக் கொண்டிருக்கும் அச்சுறுதல்களைப் பற்றி அவருக்கு விளக்குவதற்காக நான் பயன்படுத்திக் கொண்டேன். பற்பல  உதாரணங்களை அவருக்கு அளித்தேன், இதில் அவரது நிலைப்பாடு என்ன என்றும் அறிந்துகொள்ள விரும்பினேன்.  அவர் மிகுந்த அறிவுக்கூர்மை உடையவராகவும், சொல்வதை மிக்க கவனமுடன் கேட்டுப் புரிந்து கொள்பவராகவும் எனக்குத் தோன்றினார்.  இன்றைய பல சராசரி குருமார்கள் போன்று அல்லாமல்,  “உலகை ஒதுக்கும்”, “தப்பித்துச் செல்லும்”  வழிமுறைகளைக் கடைப் பிடிப்பதை விட, சமூக விஷயங்களில் பிரசினைகளில் ஈடுபடுவது அவசியமானது என்ற கருத்தை அவரும் ஏற்றுக் கொண்டார்.

பிறகு ஒரு சமயம் அமரிக்காவில் ஒரு வார இறுதியில் அவர் நடத்திய பதஞ்சலி யோக சூத்திர வகுப்புக்குச் சென்றேன். இந்த பழம்பெரும் நூலில் பல மொழியாக்கங்களை நான் படித்திருக்கிறேன், ஆனால் அதுவரை அனுபவ பூர்வமாக அந்த சூத்திரங்கள் கற்பிக்கப் படுவதைக் கண்டதில்லை. அங்கிருந்த ஒவ்வொரு மாணவருக்கும், “சமாதி நிலை” உட்பட பதஞ்சலி யோகத்தின் எட்டு அங்கங்களையும் பற்றிய தனிப்பட்ட அக அனுபவத்தை நித்யானந்தா அறிமுகப் படுத்தினார். இரண்டு நாள் வகுப்பில், இது ஒரு பெரிய சாதனை தான்!

A Propaganda Poster

A Propaganda Poster

மொத்தத்தில் அவருடனான எனது உரையாடல்கள் பெரும்பாலும் மதங்கள் ஒரு நாட்டின் அரசியல், சமூகம் மீது செலுத்தும் தாக்கம் பற்றியதாக இருந்த்து.  தமிழ் அடையாளம் முற்றிலும் திராவிட இயக்க மயமாக்கப் பட்டிருப்பது, கிறிஸ்தவ மதமாற்றங்கள் ஆகிய சங்கடமான பிரசினைகளைக் கண்டும் காணாதது போல் இல்லாமல் அவற்றைப் பற்றி ஓரளவு அக்கறை உள்ள ஒரு பிரபல சுவாமியாராக அவர் எனக்குத் தெரிந்தார்.

தமிழகத்தின் இதே பிரசினைகளைப் பற்றிய ஒரு விரிவான புத்தகத்தை நான் மூன்றாண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன் (இப்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது). எனவே, நடமாடும் இந்து ஆலயம் என்ற அவரது பரிசோதனைத் திட்டம் என்னைக் கவர்ந்தது. இந்த நடமாடும் ஆலயம் கிராமம் கிராமமாகச் செல்லும்; ஒரு கிராமத்திற்குச் சென்று நின்றதும், அங்கு மந்திரம் ஓதி பூஜைகள் நடக்கும்; உடன்வருபவர் ஒரு சின்ன சொற்பொழிவாற்றுவார்; பிரசாதம் வழங்கப் படும்; கல்வி, மருத்துவ உதவிகள் பற்றிய செய்தி அளிக்கப் படும். இந்தத் திட்டம் பாரம்பரிய இந்து மதத்தையும், சமூக சேவையையும் ஒன்றிணைப்பதாகவும், கிறிஸ்தவ மதப்பிரசாரத்திற்கு நேரடிப் போட்டியாகவும் இருந்தது.  கோயில்கள், வழிபாடுகள் சரிவர இல்லாது போய்விட்ட ஆயிரக்கணக்கான கிராமங்களில் கோயில்களைக் கட்டி, அர்ச்சகர்களை நியமிப்பது என்கிற கடினமான காரியத்தை விட,  நடமாடும் கோயில் கிராமப் பகுதிகளுக்குச் செல்வது என்பது விரைவான ஒரு செயல்திட்டமாகத் தோன்றியது.  இந்தத் திட்டம் செயல்படுத்தப் பட்ட சில பகுதிகளில் கிறிஸ்தவ மிஷநரிகளுக்கு பின்னடைவுகளும் ஏற்பட்டன என்ற விவரத்தை எனது தனிப்பட்ட தகவல் அறியும் வட்டாரங்கள் மூலம் நான் அறிந்து கொண்டேன்.

2009 டிசம்பரில் அவரது 21-நாள் தியான நிகழ்விலும் கலந்து கொண்டேன். அதில் கற்றுத் தரப் பட்ட வழிமுறைகள் ஆழமானவையாகவும், ஆன்மிக மாற்றங்களைத் தர வல்லவையாகவும் இருந்தன. அதில் கலந்துகொண்ட நூற்றுக் கணக்கானவர்களைக் கேட்டாலும் இதே போன்ற கருத்தைத் தான் சொல்வார்கள். கலந்து கொண்டவர்களிலும் இந்தியர்களும், அமெரிக்கர்களும் சம அளவில் இருந்தார்கள்.

அவருடனான பல உரையாடல்களிலும் சரி, பொது நிகழ்வுகளிலும் சரி,  எனக்கு 1994 முதலே ஒரு ஆன்மிக குரு இருந்திருக்கிறார் என்பதையும், நான் ஒரு புதிய குருவைத் தேடிக் கொண்டிருக்கவில்லை என்பதையும் கூறிவந்திருக்கிறேன்.  எனது குரு சில வருடங்கள் முன்பு தன் உடலை நீத்தார். அதன் பின், எனது ஆன்மிக சாதனைக்காக, தொடர்ச்சியாக சில புதிய வழிமுறைகளையும் நான் கற்று வந்தேன். மஹிரிஷி மகேஷ் யோகி, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், யோகி அம்ருத் தேசாய் (எனக்கு யோக ஆசிரியர் என்று சான்றிதழ் வழங்கியவரும் அவரே), தீபக் சோப்ரா, விபாசனா மையங்கள் என்று பல வழிகளிலும் கடந்த 30 வருடங்களாக தியான வழிமுறைகளைக் கற்று பயிற்சி செய்து வருகிறேன் என்று அவரிடம் விளக்கினேன். கூடுதலாக, பற்பல பக்தி சம்பிரதாயங்களின் வழிபாடுகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன்;  சுவாமி சின்மயானந்தா, ராமகிருஷ்ண மிஷன் ஆகியவை மூலம் முறையாக வேதாந்தக் கல்வி பயின்றிருக்கிறேன். மாத்யமிக பௌத்தம், காஷ்மீர சைவம், ஸ்ரீஅரவிந்தர் யோகம், ரமண மகரிஷி யோகம் ஆகியவை குறித்து தீவிரமாகப் படித்திருக்கிறேன். எனவே, அந்த வகுப்புகளுக்கு வரும் பெரும்பாலானவர்களைப் போல, நான் ஒரு புதிய குருவைத் தேடிச் செல்லவில்லை.

தன்னை புதிய குருவாக நான் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அவர் ஒருபோதும் என்னிடம் சொல்லவோ, அழுத்தம் தரவோ இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஒரு சாதகன் தனது முதன்மை குருவுக்கு எப்போதும் உண்மையாக இருக்கவேண்டும் என்று கூட என்னிடம் அவர் சொன்னார்.  அவரது சீடர் அல்லது பக்தர் என்று சொல்லிக் கொள்வதற்கு இரண்டு அடிப்படைகள் உள்ளன – ஒன்று,  அவரைக் குருவாகக் கருதி, பாதபூஜை செய்து, ஒரு விசேஷ உறவை ஏற்படுத்திக் கொள்வது, இன்னொரு,  தீட்சையின் போது புதிய பெயரைச் சூடிக் கொள்வது (அப்படிச் செய்யும் பட்சத்தில் சட்டபூர்வமாகவும் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நித்யான்ந்த ஆசிரமத்தில் விதிமுறை உள்ளது),  இந்த இரண்டையும் நான் செய்யவில்லை.  எனவே அவருடனான எனது உறவு சீடர்/பக்தர் வகையிலானது அல்ல, ஒரு வகையில் சகபயணி என்ற வகையிலானது.

அது இருவழிப் பாதையாகவே இருந்தது. எனக்கு அவர் தியான முறைகளைக் கற்றுத் தந்தார். நான் உலக அளவில் இந்து மதம் இன்றைய அரசியல், சமுதாயம் மீது எத்தகைய தாக்கம் செலுத்துகிறது என்பது பற்றிய எனது ஆய்வுகளின் புலமையின் அடிப்படையில் அவருக்கு சில விஷயங்களைக் கூறினேன்.

இத்தகைய விஷயங்களைப் பல குருமார்கள் மிகவும் மேம்போக்கவே அறிந்திருக்கிறார்கள் என்பது என் பணிவான எண்ணம். மேற்கத்திய தத்துவங்கள் (மதரீதியானவை மற்றும் மதச்சார்பற்றவை), மேற்கத்திய வரலாறு,  தங்கள் நாகரீகத்தைப் பரப்புவதற்கு என்றே மேற்குலகம் உருவாக்கி வைத்திருக்கும் அமைப்புக்கள்,  மேலும் மதமாற்றம், கல்வி, ஊடகம், அரசியல் கொள்கை வகுத்தல் இவற்றின் மூலமாக இந்தியப் பண்பாடு மீது ஆக்கிரமிப்பு செலுத்தத் துடிக்கும் உலகளாவிய சக்திகளின் செயல்திட்டங்கள் – இவையெல்லாம் பற்றி போதுமான அளவில் அவர்கள் அறிந்திருப்பதில்லை.

இந்த விஷயங்கள் பற்றி அவரும், அவரது அமைப்பின் தலைமை ஆசாரியர்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்று சுவாமி நித்யானந்தா கருதினார். எனவே இவற்றைப் பற்றிய எனது ஆய்வுகளைப் பற்றிப் பேச என்னை அழைத்தார். எனக்கு ஆச்சரியம்.  குருமார்களுக்கு என்னைப் போன்ற சாதாரணன் ஒருவன் பேசுவதையெல்லாம் கேட்க நேரம் இருக்காது, ஏனென்றால் அவர்கள் தாங்கள் பேசி பிறர் கேட்பதையே பெரிதும் விரும்புவார்கள் என்று அவரிடம் சொன்னேன். அப்படி இல்லை, நான் கவனமாகக் கேட்கிறேன் என்று உறுதியளித்தார்.  இந்த விஷயம் பற்றிய பத்து நிமிடப் பேச்சில் எனக்கு ஆர்வமில்லை, எனது ஆய்வுகளைப் பற்றித் தீவிரமாகப் பரிசீலிக்கக் கணிசமான அளவு நேரம் தேவை (300 பவர்பாயிண்ட் ஸ்லைடுகள் காண்பிக்க வேண்டும்!) என்று சொன்னேன். இதைப் பற்றிப் பேச எனக்கு இரண்டு முழுநாட்களும், வேறெதிலும் கவனம் செலுத்தாமல் இருக்கும் மாணவர்களும் தேவை என்றும் கூறினேன்.

நான் தில்லியில் இருக்கும்போது தனது ஆசிரமத்திற்கு வந்து எனது ஆய்வுகளைப் பற்றி நான் உரையாற்றவேண்டும் என்று சுவாமி நித்யான்ந்தா அழைப்பு விடுத்தார்.  இவ்வளவு முக்கியமான பார்வையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று எனக்கும் மகிழ்ச்சி.  அந்த இரண்டு நாட்கள் முழுவதும் (ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம்), அவர் முழுதாக அமர்ந்து உரையை கவனத்துடன் கேட்டார், அதோடு தனது அமைப்பில் உள்ள 40 தலைமை ஆசாரியர்களையும் இரண்டு நாட்களும் இந்த வகுப்பில் அமர வைத்தார். வகுப்பில் நடந்த உரையாடல்களும், கேள்வி பதில்களும் தீவிரமானதாக இருந்தன.  நானும், அவரும் இரு வெவ்வேறு துறைகளில் நிபுணர்கள், ஒருவர் மற்றவருக்குக் கற்றுத் தர நிறைய விஷயங்கள் உள்ளன என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இந்த இரண்டு நாள் உரைக்குப் பிறகு நான் கூறிய மையமான விஷயங்களை அவரது பயிற்சித் திட்ட்த்தின் ஒரு பகுதியாகக் கற்பிக்கவும் நான் உதவவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அப்போது தான் அவரது போதனைகள் வேத, தர்ம பண்பாட்டுடன் சரியாகப் பொருந்துமாறு அமையும் என்றும் அவர் கருதினார்.

என் அனுபவத்தில், வேறு எந்த இந்து ஆன்மிக குருவும், இந்த உலகளாவிய பிரசினைகளை இவ்வளவு ஆழமாகக் கற்றுப் புரிந்து கொள்ள இந்த அளவுக்கு நேரம் செலவழித்ததில்லை (நானறிந்ததில், அன்னிய சக்திகளின் தாக்கம் பற்றிய இந்தப் பிரசினைகளை, தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கும் இன்னொரு பிரபல ஆன்மிக குரு சுவாமி தயானந்த சரஸ்வதி ஆவார்). பெரும்பாலான குருமார்கள் ”மதங்கள் கடந்த லட்சிய ஆன்மிகம்” என்ற கூடையைக் கவிழ்த்துக் கொண்டு இந்தப் பிரசினைகளைப் புறந்தள்ளுபவர்களாகவோ, அல்லது அறிய வேண்டியவற்றையெல்லாம் ஏற்கனவே தாங்கள் அறிந்திருக்கிறோம் என்று கற்பனை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்  என்றே நான் கொஞ்சம் வேதனையுடன் கூறவேண்டியுள்ளது.

இவ்வாறாக, சுவாமி நித்யானந்தர் மீதான எனது ஆர்வமும், தொடர்புகளும், அவர் மூலமாக நான் ஆய்வு செய்து வரும் பிரசினைகளைப் பற்றிய விழிப்புணர்வை இந்து சமுதாயத்தில் உண்டாக்க முடியுமா என்பது பற்றியதாகவே பெரிதும் இருந்தது.

இந்தப் பாராட்டுரைகளை, சில விமர்சனங்களுடனும் சேர்த்து நான் சமன் செய்ய வேண்டும். எனது இரண்டு நாள் உரையில், நான் குறிப்பாக பல குருமார்கள் செக்ஸ் விவகாரங்கள், ஊழல்கள் ஆகியவற்றுக்கு இரையாவது குறித்து வெளிப்படையாகவே குறிப்பிட்டேன். பெரும்பாலும், இந்த “ஆபரேஷனுக்காக” ஆசிரமங்களுக்குள் இறக்கப் படும் பெண்கள், அல்லது அமைப்பின் உள்வட்டங்களில் நெருக்கமாக இருந்து நிலைமை கட்டுக்கடங்காமல் போகச் செய்யும் பெண்கள் இவர்கள் மூலம் இது நிகழலாம் என்றும் நான் எச்சரித்தேன்.  இந்த எச்சரிக்கைகளுக்குப் பின்னரும்,  வரப்போகும் ஆபத்து பற்றிய முன்னுணர்வோ, அல்லது அது வராமல் தடுக்கவேண்டிய வழிமுறைகளோ செயல்படுத்தப் படவில்லை என்றே இப்போது எண்ண வேண்டியுள்ளது.

இந்த விசாரணையில் எனது அணுகுமுறை:

nithyananda_ashram_banyan_treeஇந்த விவகாரம் வெளிவந்தபோது தில்லியில் இருந்தேன். பெங்களூர் ஆசிரமத்தைத் தொடர்பு கொண்டுபேசியது அவர்கள்  குழப்பத்துடனும், அதே சமயம் உறுதியாகவும் இருந்ததைக் கண்டேன். இந்த விஷயத்தை இப்படியே விட்டுவிட்டால் சில நாட்களில் அது மறக்கப் பட்டு விடும் என்று அவர்கள் நினைத்த்து போலத் தோன்றியது.  ஆனால் உண்மையில் அதற்கு நேர்மாறானது தான் நடந்த்து.  ஒவ்வொரு நாளும் புதிய குற்றச் சாட்டுகளும், பரபரப்பான மீடியா செய்திகளும் வரத் தொடங்கின. சில நாட்கள் ஆனபிறகே, நிலைமையைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, நான் பெங்களூர் ஆசிரமத்திற்கு அழைக்கப் பட்டேன். அந்த நேரத்தில் பெண் சாதகர்களையும் ஈடுபடுத்தும் அவரது தாந்திரீக வழிமுறைகள் பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. எனது தகவல்கள் அனைத்தும் அவரது சீடர்கள் கூறியதன் அடிப்படையிலேயே இருந்தன.  நான் பெங்களூர் சென்றடைந்த பிறகும் பல நாட்களுக்கு அவரை நேரடியாகத் தொடர்பு கொள்ள இயலவில்லை. ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் ஆசிரம நிர்வாகிகளுடன் தான் செலவழித்தேன்.

இந்தக் கட்டுரையில் நான் முதலில் கூறிய விஷயங்கள்  விசாரணையில் காலவரிசைப் படி பின்னால் வருபவை.  அவற்றை நான் முதலிலேயே சொன்னதற்குக் காரணம் பல வாசகர்களைக் குடைந்து கொண்டிருக்கும் ஒரே கேள்வி – அவர் பாலுறவில் ஈடுபட்டாரா இல்லையா என்பது தான்.  அவர்களைப் பொருத்தவரையில் வேறு எந்த விஷயமும் பொருட்டல்ல, ஆனால் எனது விசாரணையில் ஒரு மனிதரின் ஒழுக்கப் பிரசினை என்பதை விட இந்த விவகாரத்துடன் தொடர்பான பரந்து பட்ட பிரசினைகளைப் பற்றி அறியவும் விரும்பினேன்.

எனது இரண்டு வார தகவல் அறியும் ப்ராஜெக்டை முழுதாக முடிக்கும் வரையில், வீடியோவில் காண்பிக்கப் பட்ட பாலுணர்வு காட்சிகளைப் பற்றி விவாதிக்க முடியவில்லை. நம்பிக்கையுடன் என்னை ஆசிரமத்திற்குள் அனுமதித்த ஆசிரம நிர்வாகிகளின் கொள்கைகளையும், கட்டுப் பாடுகளையும் நான் மதித்தாக வேண்டும். எந்த விஷயங்களைப் பொதுவில் சொல்ல்லாம் அல்லது சொல்லக் கூடாது என்பது பற்றி சட்டபூர்வமான வரைமுறைகளும்  அவர்களுக்கு இருந்தன. வீடியோ விஷயத்தைப் பொறுத்தவரை நித்யானந்தாவே நேரடியாக அதைப் பற்றி விளக்குவார் என்பதே அவர்களது பதிலாக இருந்த்து. அந்தத் தமிழ் நடிகை தரப்பு வழக்கறிஞரும் அவர்களது தொடர்பில் இருந்தார்;  அவளது உணர்வுகளுக்கும், அதோடு 140 ஆசிரம வாசிகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதும் மிக முக்கியம். எனவே தான் இந்த ஒரு கேள்வியை மட்டுமே கேட்டு அவர்களைத் துரத்துவது சரியல்ல என்று எனக்குத் தோன்றியது. பின்னர் நித்யான்ந்தாவை நான் நேரடியாக சந்தித்தபோது அவரிடம் என்னென்ன கேட்கவேண்டும் என்பது முழுவதும் என் கையில், ஆனால்  நான் பதிவுசெய்த சில நேர்காணல்களை வெளியிட வேண்டாம் என்றும் ஆசிரம நிர்வாகம் முடிவு செய்தது என்பதை முன்பே கூறியிருக்கிறேன்.

அந்த நேர்காணல்களை நான் நடத்திய விதம் பற்றியும் விமர்சனங்கள் வருகின்றன. முதல் சில நேர்காணல்களில் சுவாமி நித்யான்ந்தா மீது சுமத்தப் பட்ட கிரிமினல் குற்றச் சாட்டுகளுக்கே நான் முக்கியத்துவம் கொடுத்தேன். முந்தைய பாராவில் சொன்னது போல அந்த வீடியோ பற்றிய கேள்விகளை ஒத்திப் போடவேண்டியிருந்தது என்பது போக, இரண்டு முக்கிய காரணங்கள்:  முதல் காரணம்  கிரிமினல் குற்றச் சாட்டுகளைப் பற்றிய உண்மைகளை மிகத் தெளிவாக, ஆதாரபூர்வமாக விசாரிக்கலாம் – நில உரிமை சொத்துக்கள் பற்றிய பத்திரங்களைக் கேட்கலாம், ஆசிரமத்தில் ஒரு வெளிநாட்டு மாணவர் இரண்டு வருடம் முன்பு மரணமடைந்தது பற்றிய மருத்துவ, போலீஸ் ரிப்போர்களைக் கேட்கலாம். அந்த வீடியோவில் சமபந்தப் பட்ட இருவரில் ஒருவரைக் கூட நான் தொடர்புகொள்ள முடியாத நிலையில்,  இந்த குற்றச் சாட்டுகளை விசாரிக்கலாமே என்று தான் அவற்றை எடுத்துக் கொண்டேன்.

இரண்டாவது காரணம், தனிநபர் ஒழுக்க மீறல் என்ற விவகாரத்தை விட, கிரிமினல் குற்றச் சாட்டுகளும், அதனால் ஏற்படும் விளைவுகளும் தீவிரமானவை, முக்கியமானவை என்றும் நான் கருதினேன். ஒழுக்க நட்த்தை பக்தர்களைப் பொறுத்தவரையில் கவலைக்குரிய விஷயம், ஆனால் எந்த ஆதாரங்களுமே பரிசீலிக்கப் படாத இந்த ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே காரணம் காட்டி அரசு நிர்வாகம் ஆசிரமத்தின் முழுச் சொத்துக்களையும், நிலங்களையும் கையகப் படுத்த நினைப்பது  நியாயமும் அல்ல, சட்டத்திற்கு உட்பட்ட செயலும் அல்ல. பரபரபுக்காக, பொறுப்புணர்வற்ற ஊடகங்கள் எந்த வித ஆதாரமும் இல்லாமல், வேண்டுமென்றே அடுக்கடுக்காக கிரிமினல் குற்றச்சாட்டுக்களை பொய்யாக உற்பத்தி செய்வது தவறு என்றும் அது கண்டனத்திற்குரியது என்றும் நான் கருதினேன்.

(தொடரும்)

அடுத்த பகுதியுடன் நிறைவடையும்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

 

18 மறுமொழிகள் நித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 2 (ராஜீவ் மல்ஹோத்ரா)

 1. […] அளவுக்கு நேரம் செலவழித்ததில்லை. மேலும் 0 கருத்து | மார்ச் 24th, 2010 at 6:43 am under  Blog […]

 2. ananth on March 24, 2010 at 8:36 pm

  இந்து மதம் துறவறம் என்பது பற்றி தெளிவான கண்ணோட்டம் இந்த சமூகத்தில் பலமாக விவாதிக்கப்படவில்லை. இது தான் நித்யானந்தர் போன்ற ஆன்மீக அறிவு ஜீவிகள் சமூகத்தில் சரியாக புரிந்து கொள்ளப்படாததற்கும் காரணம். தாந்தீரிகம் இமயமலையின் அடிவாரத்தில் சில துறவிகளால் வெகுரகசியமாக பயிலப்படுவதாக நின்று விட்டது. நித்யானந்தர் போன்ற ஞானிகள் தங்கள் இயக்கம் பற்றிய தெளிவான வரையறையை அறிவித்திருந்தால் மாறிவரும் பொருளாதார கலாச்சாரத்தில் இது பெரிதாக பார்க்கப்பட்டிருக்காது. மெடடியை பார்த்து திருமணம் ஆனவரா, ஆகாதவரா, என்று கணக்கிட்டு குனிந்து நடந்து விலகி போகும் கலாச்சாரம் கொண்ட தமிழ்நாட்டில், நடிகை குஷ்பு மீதான வழக்கில், இன்றைக்கு திருமணத்திற்கு முன்பு உடல் உறவு கொள்வது குற்றமாகாது என்று சட்டம் தீர்க்கமாக சொல்லும் அளவிற்கு வந்து விட்டது. இதை எதிர்த்து எந்த பெண்ணுரிமை அமைப்பும் சுப்ரீம் கோர்ட்டை விமரிசிக்கவில்லை. இப்படி பார்த்தால், இந்த தீர்ப்பு பெண் அடிமை சமூகமான இங்கு மறைமுகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தான் ஆகிவிடுகிறது.காமத்தை அடிப்படையாக கொண்டு தான் நாட்டில் பல குற்றங்கள் நடந்தேறுகின்றன. கம்யூனிசம் ஆழமாக வேரூன்றும் போது அங்கே காமம் என்பது ஒரு டம்ளர் தண்ணீரை குடிப்பது போலத்தான் இருக்கும் என்று தத்துவங்கள் சொல்கின்றன. நித்யானந்தர் போன்ற உலகை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த ஞானிகளை கேவலமாக விமரிப்பதை விடுத்து மனித மனத்தின் சிக்கல்களை விடுவிக்க ஒரு தளத்தை ஏற்படுத்த முயற்சி செய்வது மட்டுமே அறிவுப்பூர்வமான பணியாக இருக்கும். இதனை விடுத்து இந்த விஷயங்களை காசாக்க நினைப்பவர்கள் ஒரு கட்டத்தில் அம்பலத்திற்கு வருவது நிஜம். இவர்களுக்கும், விபச்சாரத்திற்கு பெண்களை அனுப்பும் தரகர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பது தெளிவு.

 3. ghani on March 24, 2010 at 10:32 pm

  இந்த அளவுக்கு எதிலேயுமே டைம் வேஸ்ட் பண்ணினதில்ல,ஒரு நடத்தை கெட்டவனுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் இல்ல,
  இது எல்லாமே நித்தியானந்தனை போலவே காம எண்ணம் கொண்ட எழுத்தாளனின் சிபாரிசு.

  (edited and published)

 4. Vidya Nidhi on March 25, 2010 at 12:20 pm

  காவி உடை தரித்துக்கொண்டு உயர்ந்த தத்துவங்களைப் பேசினால் மட்டும் அவர்களை ஞானிகள் என்றும் துறவிகள் என்றும் கூறமுடியாது. ஒழுக்கம் புலனடக்கம் கட்டுப்பாடு இல்லாமல் போனால் அவரை போலிச் சாமியார் என்று உலகம் அழைப்பதை எவரும் தடுக்க முடியாது. தமிழ் ஹிந்து என்னதான் நித்யானந்தவிற்கு சப்பைக் கட்டு கட்டினாலும். அவர் முகத்திரை கழன்று விழுந்து விட்டது. இனியாவது இம்மாதிரி போலி கூட்டத்திடம் அகப்பட்டுக்கொண்டு அல்லல்படாமல் இருக்க ஹிந்துக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

  வித்யா நிதி

 5. Thapuchu Vanthavan on March 25, 2010 at 2:21 pm

  All Mr.Nithy tought and wanted to achieve personally he has done all that. He got no more energy to satisfy his needs. Better close the shop and run back to himalayas. Atleast you will get proper yanam (what you got now is arai kurai arivu and vomiting of other masters research). If you are not able to face the law and truth, better continue ur silence meditation for ever , dont get into society any more.

 6. snkm on March 25, 2010 at 3:16 pm

  எத்தனையோ ஹிந்து நண்பர்களுக்கு தமிழ் ஹிந்து வை ப்படிக்குமாறு சொன்னது இப்போது முக்கியத்துவம் பெறுகிறது, எளிதில் புரிந்து கொள்ள முடியாதவைகளை சரியான நபர் விளக்கும் போது தான் புரியும். இதை தமிழ் ஹிந்து நிருபிக்கிறது. நன்றி, முதலில் உள்ளது தவறாக உள்ளது, அதனால் மீண்டும்! நன்றி

 7. A.K.Chandramouli on March 26, 2010 at 8:48 am

  Very interesting and informative. Total problem is because we come to some conclution only on seeing something on media. We do not give chance for other side’s view. Sree. Rajeev Malhothra should try to meet Sree.Poojya Sree. Sree Ravi shankarji, Poojya Sree. Dayananda Saraswathi, Poojya Sree. Baba Ramdev, Poojya Sree. Pejavar Mutt Swamiji, and others of this line and explain to save Hinda Dharma from the clutches of ‘MEDIA TERRORISM’

 8. sridhar on March 26, 2010 at 5:13 pm

  புண்ணுக்குப் புனுகு பூச வேண்டாம்.நித்யானந்தா தனி அறையில் நடிகையோடு தவறு செய்தாரா? அல்லது தவம் செய்தாரா என்பதை ஆசிரியர்கள் விளக்க வேண்டும்.
  அன்புடன்
  ஸ்ரீதர்

 9. khaleel on March 26, 2010 at 6:07 pm

  முழு பூசணிகாய சோத்துல மறைகறதுஅது எப்படின்னு சூப்பெரா சொல்லி இருக்கீங்க

 10. dhanabal on March 26, 2010 at 11:10 pm

  நித்யானந்தரின் செயல்களை நியாயப்படுத்தும் இந்தக் கட்டுரை தமிழ் ஹிந்து தளத்திற்கு கெட்டப் பெயரை உண்டாக்கும்.

 11. RV on March 27, 2010 at 12:55 pm

  நித்யானந்தா ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டதில் சட்ட ரீதியாக எந்த தவறும் இல்லை. ஆனால் அவர் ஒரு பக்கம் பிரம்மச்சரியம், துறவு நிலை என்று பேசிக்கொண்டு உறவு வைத்துக்கொண்டது அவரது “பக்தர்களை” ஏமாற்றும் செயலே. இதில் தாந்த்ரீகம், அது இது என்று உதார் விடுவது சுத்தப் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. நித்யானந்தா ஏமாற்றுக்காரர் என்பதால் ஹிந்து மதம் ஒன்றும் குறைந்துவிடாது, எதற்காக இந்த சப்பைக்கட்டு?

  நித்யானந்த பற்றி நான் எழுதிய ஒரு பதிவு இங்கே – http://koottanchoru.wordpress.com/2010/03/09/நித்யானந்தா/

 12. swamy dubai on March 27, 2010 at 4:19 pm

  அட பாவிகலா நித்தியானந்தாவை காப்பத்த ஏன் முயற்ச்சிக்கிறீர்கல் அவனை நீங்கள் இன்று காப்பத்தினால் நாலை உங்கவீட்டு பென்கள் மேல் கைவைக்கமாட்டன் என்று என்ன நிச்சயம் எல்லாரையும் சாமியார் என்கிறீர்கள் மாட்டிகொண்டல் போலிசாமியார் என்கிறீர்கள் தப்பு பண்னாதே திரும்ப திரும்ப தப்பு பண்னாதே இனியாவது திருந்துகள் இதுபோன்ற கட்டுரைகளை இனி வெலியிட வேண்டாம் அது ஹிந்து மதத்துக்கு பெரிய இழுக்கு

 13. Nirzaf on June 10, 2010 at 3:07 am

  ஒரு வேல அவர் கந்தர்வ மணம் புரிந்திருப்பாரோ ரஞ்சிதாவை விட்டால் அப்பிடியும் சொல்லுவீங்க ஏன்யா யோவ் இதுக்கு பெறகாவது மூளைய பாவியுங்களேன்

 14. MatureDurai on August 29, 2010 at 5:38 pm

  “நித்யானந்தர் போன்ற உலகை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த ஞானிகளை கேவலமாக விமரிசிப்பதை விடுத்து மனித மனத்தின் சிக்கல்களை விடுவிக்க ஒரு தளத்தை ஏற்படுத்த முயற்சி செய்வது மட்டுமே அறிவுப்பூர்வமான பணியாக இருக்கும். இதனை விடுத்து இந்த விஷயங்களை காசாக்க நினைப்பவர்கள் ஒரு கட்டத்தில் அம்பலத்திற்கு வருவது நிஜம். இவர்களுக்கும், விபச்சாரத்திற்கு பெண்களை அனுப்பும் தரகர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பது தெளிவு” (ananth 24 March 2010 at 8:36 pm)
  Well said, Ananth! Hats off to you!

 15. அமரன் on January 3, 2012 at 10:13 pm

  மிகவும் அழகாக எழுதப் பட்ட கட்டுரை.ஆனால்,சாமியார்கள் உடலுறவு கொள்வதை எப்படி கூறினால்தான் பிறர் நம்புவார்கள். ஆயிரம் கூறுங்கள் துறவிகள் பொய் சொல்லுவதில்லை.

 16. பசுபதி on January 31, 2012 at 12:41 pm

  பக்தர்களுக்கும் தாந்திரீக முறைகளை நடிகைகள் மூலம் கற்பிக்க ஒரு ஸ்கீம் கொண்டு வந்தால், இன்னும் அதிகமாக கூட்டம் சேரும்.

 17. p.g.sayee prackash on September 21, 2014 at 5:10 am

  தயவு செய்து இந்த நிகழ்ச்சியை அதிகமாக விமர்சனம் செய்யாதீர்கள் .நித்யானந்தரின் செயல்களை நியாயப்படுத்தும் இந்தக் கட்டுரை தமிழ் ஹிந்து தளத்திற்கு கெட்டப் பெயரை உண்டாக்கும். நாங்கள் தமிழ் ஹிந்து மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க நேரிடும் !!!!

 18. Dr.A.Anburaj on February 17, 2016 at 4:06 pm

  தாந்திாிக சாதகைள் திருமந்திரத்தில் கூட உள்ளது.

  பாியங்க யோகம் என்று அதற்கு பேயா். பாியங்கம் என்றால் கட்டில்.

  சுவாமிவிவேகானந்தா் தாந்திாிக சாதனைகளை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் தடை செய்து விட்டாா்.வங்காளாத்தில் இதன் தாக்கம் மிக அதிகம்.

  இதுபோன்ற பழங்க வழக்கங்கள் மக்களுக்கு நன்மையைத்தராது.

  அம்மண சந்நியாசிகள் நாடடீற்கு பெரும் கேடு.

  சந்நியாச ம் சீரழ்ந்து போய் உள்ளது. சஙகர மடம் சிவானந்த தபோவனம் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ண மடம் போன்ற வற்றில்தான் உயா்ப்புடன் உள்ளது.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*