கூவாகம் கூத்தாண்டவர்: புத்தக விமரிசனம்

விளிம்பு நிலை மக்களை படிப்பதற்கு இப்போதெல்லாம் கல்வி அமைப்புகளில் படு கிராக்கி. மேற்கிலிருந்து இறக்குமதியான அறிவுஜீவி விஷயம். நம் அறிவுஜீவிகளுக்கு சும்மாயிருக்க முடியுமா? மேல்தட்டு பண்பாட்டால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எழுதி குவித்துவிட்டார்கள் குவித்து. விளிம்பு நிலை மக்கள் கூட்டங்களை அடையாளம் கண்டார்கள். அவர்களுக்காக ஏசி அறை செமினார்களில் உருகினார்கள். கவிதையரங்குகளிலும் மேடைகளிலும் உறுமினார்கள். மானுட உரிமை மாநாடுகளில், இந்தியாவின் அடக்குமுறை சமுதாயத்தில் விளிம்பு நிலை மக்கள் படும் அவலநிலைகளை அவர்களுக்காக பேச, அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பறந்தார்கள்.  என்ன ஒரு அடக்குமுறை பண்பாடு! பார்ப்பனீய கொடுமை! விளிம்புநிலை மக்களை கவனிப்பதில்லை, அவர்களது கலாச்சாரத்தை கவனிப்பதில்லை –  இத்யாதி இத்யாதி.

அத்தகைய ஒரு விளிம்பு நிலை மக்கள் கூட்டமாக அடையாளப் படுத்தப்பட்டவர்கள் தான் அலிகள் அல்லது அரவாணிகள் எனப்படும் திருநங்கைகள்.

kuuvakam_book_coverஆனால் உலகெங்கிலும் இல்லாதவாறு பாரம்பரியமாக இப்பாலின மக்களை இப்பண்பாடு பாதுகாத்தும் சமுதாயத்தில் ஒரு முக்கிய அந்தஸ்து கொடுத்தும் வைத்துள்ளது என்பதுதான் உண்மை. இந்த உண்மையின் ஸ்தூலமான வெளிப்பாடுதான் கூவாகம் கூத்தாண்டவர் கோவில். இந்த கோவிலைக் குறித்த நூல் கிழக்கு பதிப்பகத்தாரின் வரம் புத்தக பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவாக ஆன்மிகம் என்கிற பெயரில் வெளியிடப்படும் அசட்டுத்தனம் இல்லாமல், சிறப்பான முறையில் இக்கோவிலையும் இக்கோவிலினால் ஆன்மிக சமுதாய உள்வலிமை அடையும் திருநங்கைகளையும், அதே நேரத்தில் இக்கோவிலுடன் இணைந்த இதிகாச-புராண-வட்டார ஐதீகங்களையும் இந்நூல் சுவைப்பட சொல்கிறது.

சென்னையிலிருந்து 200 கிமீ. தொலைவில் விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர் பேட்டைக்கு அருகில் உள்ள குக்கிராமம் இது. பாரதம் முழுவதிலுமிருந்து மூன்று இலட்சம் அரவாணிகள் இந்த விழாவில் பங்கு கொள்கின்றனர் என நூல் சொல்கிறது. அரவாணிகளின் ஆன்மிக பூமி என ஆரம்பமாகும் இந்த நூல் பொதுவாக நகரப்புறங்களில் அரவாணிகள் மீது வீசப்படும் வன்கொடுமைகள் கூவாக மக்களிடையே இல்லை என்பதை கவனிக்க கோரியபடி, அரவாணிகளின் பார்வையின் ஊடாகவும் பொதுவாசகனை அழைத்து செல்கிறது. “முன்பெல்லாம் விழுப்புரத்துல இறங்கி வண்டி கட்டி வருவோம். கோயில்ல வில்லிபாரதக் கதை படிப்பாங்க. மனசுக்கு ரொம்ப இதமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்” என்கிற அருப்புக்கோட்டையைச் சார்ந்த சீதா என்கிற அரவாணியின் வார்த்தைகளில், ”பாரம்பரியம் இந்த விளிம்புநிலை மக்களை உண்மையில் விளிம்பில் வைக்கவில்லை” என்பதை சொல்லாமல் சொல்கிறது.

ஆனால் இக்கோவில் ஏதோ அரவாணிகளுக்கென்று மட்டும் ஒதுக்கப்பட்ட கோவிலும் இல்லை. பொதுமக்கள் அனைவரும் வழிபடும் கோவில் தான்; ஆனால் அரவாணிகளின் ஆன்மிக தாயகம். அரவான்-களப்பலி – அதற்கு முன்னர் அவரை கிருஷ்ணர் பெண்ணாக மாறி மணந்தது – இத்தொன்ம நிகழ்வு மீள் நிகழ்த்தப்படுவது – அனைத்து அரவாணிகளும் அரவானின் மனைவிகளாகி மகிழ்ந்து சோகமடைவது- இந்நிகழ்வுகளில் உள்ள சடங்குகள் அனைத்தும் மிகவும் சுவாரசியமாக நூலில் வர்ணிக்கப்படுகின்றன. ஆண் பெண்ணாகும் நிகழ்வு ஹிந்து தொன்மங்களில் இழிவானதாக கருதப்படவில்லை; மாறாக முக்கிய புராண நிகழ்வாகவும், விஷ்ணு அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுவதையும், இந்நூல் விரிவாகவே பேசுகிறது. பின்னர் மகாபாரதத்துடன் சம்பந்தப்பட்ட இவ்விழாவுடன் உள்ளூர் ஐதீகங்கள் நீக்கமற கலந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

மண்வாசனையோடு ஒரு மகத்துவ திருவிழா எனும் தலைப்பில், இத்திருவிழா சடங்குகளில் எப்படி ஊரின் அனைத்து தரப்பு மக்களும் சொந்த வீட்டுத் திருவிழா தன்மையுடன் கலந்து கொள்கின்றனர் என்பதை சொல்லும் இடம், சமூகத்தின் மீது அக்கறை உடையவர்கள் கவனிக்க வேண்டிய இடம்.  உதாரணமாக:

“ஆதி திராவிட சாத்துக்காரர் மணப்பெண்ணாகவும் வன்னியர் இனத்தைச் சார்ந்த ஒருவர் மாப்பிள்ளையாகவும் அந்தப்பந்தலில் இருப்பார்கள். அதே போல தலைமைப் பூசாரி மணப்பெண்ணாகவும் நந்தவேலியைச் சார்ந்தவர் மாப்பிள்ளையாகவும் வீற்றிருப்பார்கள்.” (பக்.50)

“இந்த வேப்பிலை கரகத்தைச் சுமப்பவர் ஒரு சலவைத் தொழிலாளியாக இருக்க வேண்டும் என்பது மரபு. …கரகம் தங்கள் வீட்டு முன்பாக வரும் போது ஏகாளியின் பாதங்களுக்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள் பூசுகின்றனர்.”எங்கள் வீடு எல்லா நலமும் பெற்று நலமாக இருக்க வேண்டும். அதற்கு மாரியம்மா தாயே நீதான் வழிகாட்ட வேண்டும்” என்று மனதார வேண்டிக்கொண்டு கரகம் சுமப்பவரின் கால்களில் விழுகின்றனர்.” (பக்.52)

மேலும் எவ்வாறு நாட்டார் கலைகள் இந்த கூவாகத் திருவிழாவுடன் இணைந்து வாழ்விக்கப்படுகிறது என்பதையும் இந்நூல் விரிவாகவே சொல்கிறது.

இந்திய அலிகளைக் குறித்து ஆராய்ச்சி செய்த உல்ரிச் நிக்கோலஸ் என்பவர் கூறுகிற சில ஆய்வுத்தகவல்களை இந்நூலில் அளித்துள்ளனர். அந்த ஆராய்ச்சியாளர் அலிகள் குறித்து ஒரு ஆவணப்படமும் எடுத்துள்ளார். உலகின் பிற பாகங்களில் வாழும் அலிகளைக் காட்டிலும் இந்தியாவில் வாழும் அலிகள் கௌரவமாக வாழ்வதாகவும், இந்திய புராண இதிகாச மரபுகள் இதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அவர் கருதுகிறார். தங்களை திருமாலின் அவதாரமகவே அவர்கள் கருதுவது அவர்களுக்கு மனதிண்மையையும் சுய கௌரவத்தையும் அளிக்கிறது. (பக்.80-1) தமிழ்நாட்டைப் பிடித்த போலி பகுத்தறிவு வியாதி இத்தகைய பாரம்பரியங்களை புறந்தள்ள வைத்தது நம்மை. இதன் விளைவாக, தமிழ்நாட்டு அலிகள்  நகர்ப்புற நாகரிகங்களிலும், திராவிடவாதிகளின் பிரச்சாரத்தையே முன்னெடுத்த திரைப்படங்களிலும், இழிவாகவே காட்டப்பட்டனர். இது சாதாரண தமிழ் குடும்ப பண்பாட்டு பார்வையிலும் ஊடுருவி, அலி என்பது ஏதோ பேயோட்டப்பட வேண்டிய இகழ்ச்சியாகிவிட்டது.

இத்தகைய சூழலில் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்ட ஒரு அலி, வட இந்தியாவில் ஒரு பெண் தன்னிடம் ஆசி கேட்ட போது நெகிழ்ந்து போய்விட்டார். அவர் சொல்கிறார்: “இந்த உலகில் அநாதையாக விடப்பட்டு விட்டோம் என நொந்து போய்கிடந்த எனது காலிலும் ஒருவர் விழுந்து ஆசிர்வாதம் கேட்ட சம்பவம் என்னை நெகிழச் செய்து விட்டது.” (பக். 83) கூத்தாண்டவர் பாரத அரவாணிகளின் தந்தை என்றால் அவர்களின் தாய் தெய்வம் பெஜிராஜி.  ஆக அரவாணிகளின் ஆன்மிகத்திலும் தேச ஒற்றுமை சுடர்விடத்தான் செய்கிறது!

கிட்டப்பா பிள்ளையின் சிஷ்யையான திருநங்கை நர்த்தகி நடராஜன் குறித்த செய்தியும் அவரது வேதனைகளை மீறிய சாதனைகளையும் இந்நூல் தொட்டுச்செல்கிறது. அவ்வாறே ரேவதி சங்கரன் எவ்வாறு திருநங்கைகளை ஆதரிக்கும் புரவலராக மாறினார் எனும் செய்தியும், சந்தோஷ் சிவனின் நவ்ரஸா குறித்தும் தகவல்கள் இருக்கின்றன. அத்துடன் திருநங்கைகள் கூவாகத்தை எவ்வாறு தம் சுயத்தின் ஆன்மிக வெளிப்பாடாக உணர்கிறார்கள் என்பது குறித்த நேர்காணல்களும் உள்ளன.

மொத்தத்தில் இந்த நூல் ஆன்மிகத்தின் ஒரு முக்கிய பரிமாணத்தை நமக்கு காட்டுகிறது. தாழக்கிடப்பவரை தற்காப்பதே தருமம் என்றார் அய்யா வைகுண்டர். பாரம்பரிய வேர்கள் பலவீனப்பட்ட நம் நகரங்களிலும் போலி பகுத்தறிவாலும் அசட்டு மேன்மைவாதத்தாலும் களங்கப்பட்ட நம் கூட்டு பிரக்ஞையிலும் புறந்தள்ளப்பட்ட பாலினமான திருநங்கைகளுக்கு, நம் பாரம்பரிய ஆன்மிகம் அளிக்கும் சமுதாய பாதுகாப்பு, நீதி மற்றும் அமைதியின் வெளிப்பாடுதான் கூவாகம். ஏசி அறை செமினார்களால் அல்ல, இத்தகைய தமிழ் ஹிந்து பாரம்பரியங்களே இந்த மண்ணின் “விளிம்பு நிலை” மாந்தரை அழகுடனும் சுயமரியாதையுடனும் வாழ வைக்கிறது.

இந்த அருமையான நூலின் ஆசிரியர்களுக்கும் நூலை வெளியிட்ட “வரம்” வெளியீட்டாளர்களுக்கும் தமிழ் ஹிந்து சமுதாயம் நன்றிக்கடன்பட்டிருக்கிறது.

கூவாகம் ஆண்டவர்

ஆசிரியர்கள்: பானு விஜயன்-சக்திவேல்
பக்கங்கள்:128
விலை: ரூ 60
வரம் பதிப்பகம், சென்னை
2007

ஆன்லைனில் இந்தப் புத்தகத்தை இங்கே வாங்கலாம்.

6 Replies to “கூவாகம் கூத்தாண்டவர்: புத்தக விமரிசனம்”

  1. நான் பார்த்த வரையில் அலிகளுக்கு இந்திய சமூகத்தில் தாழ்ந்த இடமே.

  2. திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு,
    புதிய விஷயங்களை பலவித பார்வைகளுடன் அளித்த கட்டுரை.
    வாழ்த்துக்கள்.

    நீங்கள் கூறுவதுபோல் திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் மட்டுமே,
    மூன்றாம் பாலின மக்கள் கேவலப்படுத்த படுகிறார்கள். சில மாதங்களுக்கு
    முன் பி.பி.சி தமிழோசையில் திருநங்கைகளை பற்றிய ஒரு செய்தியில்
    தமிழகத்திலிருந்து அவர்கள் புது டில்லிக்கு சென்று ஒரு காலனி முழுக்க
    குடியிருப்பதாக ஒரு செய்தி வந்தது. அதில் பேட்டியளித்த ஒருவர் நீங்கள்
    எடுத்து காட்டும் இதே கருத்தை கூறினார். தமிழகத்தில் பெரிய அளவில் தாங்கள்
    அவமதிக்கப்படுவதாகவும், வட இந்தியாவில் அவர்கள் சரியான முறையில்
    அரவணைக்க படுகிறார்கள் என்பதால் புது டில்லியில் குடியேறியதாகவும்
    கூறினார்.
    மேலும் புது டில்லிக்கு சென்றாலும், அம்மன் கோயில் ஒன்றை கட்டி
    அதன் மூலம் தங்கள் கலாச்சாரத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும்
    கூறினார்.

  3. பெண்களுடன் உணர்வுபூர்வமாக உறவு கொள்வது கேவலம், சந்ததி பெருக வேண்டும் என்ற நோக்கத்துடன் பெண்களை வெறும் பிள்ளை பெறும் கருவியாகத்தான் நடத்த வேண்டும் என்ற கருத்து இஸ்லாமிய கலாசாரத் தில் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தது என்றும், ஆண்கள், ஆண்களுடன் உறவு கொள்வதுதான் கெளரவமானது என்ற கருத்தும் இஸ்லாமியரிடையே நிலவியது என்றும் அறிஞர் மலர்மன்னன் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசக் கேட்டிருக்கிறேன். அதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியபோது, அவர் இந்திய வரலாற்றை விவரித்து சுல்தான்கள் பலரும், இஸ்லாமியப் பிரபுக்களும் களையான இளம் வயது ஆண்களை அறுவை மூலமாக ஆண்மை இழக்கச் செய்து உறவு கொண்டு வந்ததாகவும், மாலிக் காபூர் அத்தகைய் ஒருவன் என்றும் இன்னும் பலர் அவ்வாறு இருந்தனர் என்றும் ஒரு பட்டியலையே படித்தார். மாலிக் காபூர் ஹிந்துவாக இருந்து அடிமையாய்ப் பிடிபட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாமியனாக மதம் மாற்றப்பட்டவன் என்ற தகவலையும் அவர் தெரிவித்தார். மேலும் லாஹூர், லக்நோ முதலிய இஸ்லாமிய்ப் பிரபுக்கள் மிகுந்த நகரங்களில் மூன்றாம் பாலினத்தவருடன் உறவு கொள்ளும் வழக்கம் சர்வ சாதாரணம் என்றும் கூறினார். ஹிந்து கலாசாரத்தில் ஆண்-பெண் பாலருக்குரிய கெளரவம் மூன்றாம் பாலினருக்கும் இருந்தது, அவர்கள் வெறும் போகப் பொருளாகக் கருதப்படவில்லை என்றும் விளக்கினார். பாரதத்திலிருந்து சிகண்டியின் கதையையும் அர்ஜுனன் மூன்றாம் பாலின பிருஹன்னளையாக இருந்ததையும் எடுத்துக் காட்டினார். ஐயப்பன் கதையையும் சொன்னார். இவையெல்லாம் மூன்றாம் பாலினத்தாருக்கு சமுதாயத்தில் புறக்கணிப்பு இருக்கக் கூடாது என்பதை எடுத்துக்காட்டுவதற்காகத்தான் என்றார். குறிப்பாக வட நாட்டில் மூன்றாம் பாலினத்தாருக்கு மிகுந்த மரியாதை அளிக்கப்படுகிறது. ஹிந்துக்களிடையே திருமணம், மகப் பேறு போன்ற சுப காரியங்களில் அவர்களுக்கு மிகுந்த கெளரவம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசியதற்காக அவரை ஹிந்து மத வெறியர் என்று பலர் தூற்றினார் கள் இப்படியெல்லாம் பேசுவது ஆபத்து என்று சிலர் எச்சரித்தனர். .

    இளம் பெண்களைச் சீண்டும் காலிக் கூட்டம் மூன்றாம் பாலினத்தவரையும் சீண்டுவது உள்ளதுதான். ஆனால் ஒதுங்கிச் செல்லும் பெண்களைப் போலன்றி மூன்றாம் பாலினத்தவர் எதிர்த்து நின்று காலிகளை வசைமாரி பொழிந்து விரட்டுவதைப் பார்த்துள்ளேன். விழிப்புணர்வு மிகுந்துள்ள இன்றைய நிலையில் மூன்றாம் பாலினத்தவரை இழிவாகக் கருதும் மனோபாவம் மாறியுள்ளது.

  4. தயவு செய்து “வரம் பதிப்பகம், சென்னை” முகவரி, தொலை பேசி எண் முதலிய எல்லா விவரத்தையும் தர கேட்டுக்கொள்கிறேன்.

  5. வரம் வெளியீடு பற்றி ராஜகோபாலன் தகவல் கேட்டதால் இங்கே கொடுக்கிறேன்.

    நியூ ஹொரைஸன் மீடியா (கிழக்கு பதிப்பகம், வரம் வெளியீடு, நலம் வெளியீடு, ப்ராடிஜி புக்ஸ்)
    33/15 எல்டாம்ஸ் ரோடு
    ஆழ்வார்பேட்டை
    சென்னை 600018
    போன்: 4200-9601 (லைன் கிடைக்கக் கஷ்டப்பட்டால், ஹரன்பிரசன்னா, 95000-45611)

    மின்னஞ்சல்: support@nhm.in
    இணையத்தளம்: https://www.nhm.in/

  6. அருமையான கட்டுரை! திரு. அரவிந்த் நீலகண்டன் தமிழ் தாயின் இன்னொரு மாணிக்கம்! ஆழ்ந்த உணர்வின் வெளிப்பாடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *