முகப்பு » அரசியல், சமூகம்

தமிழக அரசு சின்னம் மாற்றம்?: சில எண்ணங்கள்

April 20, 2010
-  
அச்சிட அச்சிட

சில நாட்கள் முன்பு ஒரு ஜூனியர் விகடன் செய்தி -

thiruvalluvar_statueகிளம்பும் மூடுக்கு வந்த கழுகார், ”தமிழகத்தில் எங்கெங்கும் தான் பதித்த முத்திரையே இருக்க வேண்டுமென்ற முதல்வரின் இன்னொரு கனவுக்கும் சட்டசபையில் அடி போடப் பட்டுவிட்டது! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ-வான ரவிக்குமார், ‘எந்த அரசும் சமயச் சார்பற்று இருக்க வேண்டும். ஆனால், அரசு முத்திரையில் இந்து கோயிலைக் குறிக்கும் விதமாக கோபுரம் இடம் பெற்றிருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும்’ என்று பேசியதோடு, ‘அதற்கு பதிலாக எல்லா சமயமும் ஏற்றுக் கொண்ட திருவள்ளுவரை அரசு முத்திரையில் வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

‘சந்தேகமென்ன… குமரியில் முதல்வர் அமைத்த அதே ‘அய்யன் திருவள்ளுவ’ உருவம்தான் பரிசீலிக்கப்படும். தமிழ் செம்மொழி மாநாட்டு கோலாகலத்தோடு இதுவும் சேர்ந்துகொள்ளும்’ என்கிறார்கள் விவகாரம் அறிந்த தி.மு.க. பெருந்தலைகள்!”

”ஓ!”

”அரசு முத்திரைகள் மாறும்போது, மாநிலத்தின் அத்தனை அரசாங்க அலுவலகங்களிலும் புழங்கும் விண்ணப்பங்கள், கார்டுகள் என்று எல்லாமே புதிதாக அச்சாகும். அது ஒரு தனிப்பெரும் அச்சக கான்டிராக்ட்! யாருக்கு வாய்க்குமோ அந்த முத்திரை அதிர்ஷ்டம்?” என்று சொல்லிக் கண்ணடித்துப் பறந்தார். அவர் சீறிப் பறந்த வேகத்தால், நம் மேஜைக் காகிதங்களெல்லாம் காற்றில் மிதந்தன.

உள் ஒன்று வைத்தவர்  முதல்வர்;  அந்த ஒன்றையே புறம் நின்று பேசுபவர் ரவிக்குமார்; அகமும், புறமும் ஒன்றான உத்தம அரசியல்வாதிகள்.

இந்த விஷயம் அரசல்புரசலாக வெளியானதும், இது பற்றிய அபிப்பிராயங்களும், விவாதங்களும் பொதுத் தளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதிகாரபூர்வமாக எந்த முடிவும் எடுக்கப் படுமுன்பே கமுக்கமாக கழக அரசு தன் கைவண்ணத்தைக் காட்டத் தொடங்கி விட்டது போலத் தெரிகிறது. சென்னையில்  நகர்ப் பேருந்து பயணச் சீட்டுக்களில் ஏற்கனவே புதிய சின்னம்  போடப்பட்டு விட்டதாக அங்கு சென்று வந்த ஆந்தையார் தெரிவிக்கிறார்.

சித்திரைப் புத்தாண்டை சீரழித்த சிறுமதியாளர் இப்போது முத்திரையிலும் கைவைத்து விட்டனரே என்று மனம் பதைக்கிறார்கள் உண்மையான தமிழன்பர்கள்.  சின்னம் விவகாரம் சின்ன விவகாரம் தான்.  இன்று  தமிழக அரசியலில் எதிர்க் கட்சிகளும், இளிச்சவாய்ப் பொதுமக்களும் இருக்கும் நிலையில்  இந்த மாற்றமும் சுமுகமாகவே  நடந்தேறி விடலாம்.  இங்கு அதிர்ச்சி தரும் விஷயம் என்று இனி எதுவுமே இருக்காது.

இந்த மாற்றங்களின் ஊடாக தமிழ்ச் சமூகமும், பண்பாடும், அரசியலும் போய்க் கொண்டிருக்கும் திசை என்ன என்பது பற்றி நாம் கண்டிப்பாக சிந்திக்க வேண்டியிருக்கிறது.

***********

சொல்லப் போனால்,  19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட நாணயங்களிலேயே கோபுர சின்னம் இடம் பெற்று விட்டது. தமிழகத்தில் எங்கும் காட்சி தரும் கோபுரமே அதன் நாணயத்தில் இடம் பெறத் தகுந்த அடையாளம் என்று காலனிய ஆட்சியாளர்களுக்கே தோன்றியிருக்கிறது. 1819ம் ஆண்டில் கால் வராகன் நாணயத்தில், ஒரு பக்கம் வாளேந்திய போர்வீரனும், மறுபக்கம் நட்சத்திரங்களால் சூழப்பட்ட நீள கோபுரத்தின் சின்னமும் உள்ளது. Quarter Pagoda  என்ற வாசகமும் உள்ளது.

tn_old_coin_full

Pagoda என்பது நீண்ட கோபுரத்தைக் குறிக்கும் சொல். இந்த குத்துமதிப்பான சித்திரத்தைப் பார்த்தால் குறிப்பிட்டு இது எந்தக் கோயில் கோபுரம் என்று சொல்ல முடியாது. ஆனால் இத்தகைய கோபுரங்கள் தமிழ்நாட்டில் மிக அதிகம் இல்லை (மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், தஞ்சைப் பெரிய கோயில் விமானங்கள் நீண்டு கூம்பு வடிவத்தில் மேலேறிச் செல்பவை. ஆனால் அவை விமானங்கள், கோபுரங்கள் அல்ல). பெரும்பாலான கோயில் கோபுரங்கள்  அடிப்பகுதி மிக அகன்று சாய்மானம் குறைவாக சீராக மேலேறிச் செல்பவை.

பின்னாட்களில் இதே கோபுர சின்னம் சீர்படுத்தப் பட்டு, தற்போதைய  தமிழக அரசு சின்னம் 1956ல் அறிமுகப் பட்டது  (அப்போது மதராஸ் மாகாணம் என்ற பெயரே இருந்தது).  பிறகு 1968ல் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் பட்டபோதும், இந்தச் சின்னமே நீடித்தது. சின்னத்தில் உள்ள கோபுரத்தின் நீள, அகல விகிதங்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரத்தையே பெரிதும் ஒத்திருந்ததால், இது அந்தக் கோயில் கோபுரம் என்றே அப்போது முதல் அறியப் படலாயிற்று. அவ்வகையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம்  தனித்தன்மை கொண்டது; அகலம் குறுகியிருப்பதால் பதினொரு நிலைகள் கொண்ட அதன் நீளம் ஒருவித பிரம்மாண்ட தோற்றத்தை அளிக்கிறது; அக்கோபுரத்தின் மடிப்புகளும், அதில் உள்ள சிற்பங்களும்  கூட (இவை பக்கத்தில் உள்ள உயரக் கட்டிடங்கள் மீது நின்று பார்த்தால் மட்டுமே காணக் கூடியவை) தனித்தன்மை கொண்டவை.

tn_state_emblems_over_time

தொடக்கத்தில் சத்யமேவ ஜயதே என்ற வாசகம் தேவநாகரி லிபியிலேயே இருந்தது. பிறகு ஆங்கிலத்திற்கு வந்து, கடைசியில் “வாய்மையே வெல்லும்” என்று தவறாகத் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு இன்றுவரை தொடர்கிறது.

சத்தியம் என்ற சொல்  என்றும் அழியாமல் இருப்பதை (’சத்’), நித்தியத் துவத்தைக் குறிக்கிறது – “உண்மை” என்பதே அதற்கு ஈடான தமிழ்ச் சொல்.  சத்தாகவும், அசத்தாகவும் இருக்கும் பரம்பொருளை “உண்மையுமாய் இன்மையுமாய்” என்று திருவாசகம் கூறும்.  வாய்மை என்பது  அந்த சத்திய வஸ்துவின் இயல்பில் அடங்கிய, பொய் பேசாமலிருத்தல் என்ற ஒரு குறிப்பிட்ட ஒழுக்க நெறி. அதுவே சத்தியப் பொருள் அன்று. எனவே “உண்மையே வெல்லும்” என்பதே சரியானது.

போகட்டும்.

***********

இப்போது  கோபுரத்திற்குப் பதிலாக வள்ளுவர் உருவத்தை வைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப் பட்டுள்ளது. ”மழித்தலும், நீட்டலும் வேண்டா” என்று போதித்த தெய்வப் புலவர் உண்மையில் எப்படி இருந்திருப்பார் என்று யாருக்குத் தெரியும்?  தற்போது நாம் எங்கும் காணும் கொண்டை போட்ட, தாடி வைத்த திருவள்ளுவர் கடந்த சில பத்தாண்டுகளில் ஒரு திருவல்லிக்கேணி ஓவியரின் கற்பனையில் உருவானவர்.

கன்யாகுமரிப் பாறை மேல் உள்ள சிற்ப வடிவத்தையே அரசு சின்னமாக வைக்கப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது. அந்த சிற்பத்தில் கலை ரீதியாக நிறைய குறைபாடுகள் உள்ளன என்று பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.  முதலில் அதன் கண்ணை உறுத்தும் பரிமாணம்.   சாஸ்தாங்கோவில்  பிராகாரத்தில் நிற்கும் சங்கிலி பூதத்தான் போல அவ்வளவு பெரிதாக வள்ளுவர் என்கிற ஞானியை, கவிஞரை வடித்தது சுத்தமாக ரசிக்கும் படியாக இல்லை.  அதோடு, அவர் வலது இடுப்பை ஒசித்து நிற்கும் பாவத்திற்கும் (bhavam), அந்த மூர்த்திக்கும் பொருத்தம் இருப்பதாகவே தோன்றவில்லை. அந்த முகமும், சுருள் தாடியும்  படத்தில் பார்க்கும் வள்ளுவரை விடவும்  முற்றிலும் வேறு ஒரு மாதிரி இருக்கிறது. அவர் கையில் காட்டும் மூன்றுவிரல் முத்திரை எந்த சிற்ப சாஸ்திரத்திலும் இல்லாத, சுண்டுவிரலும் கட்டைவிரலும் இணையும் ஒரு செயற்கையான, அர்த்தமற்ற புது முத்திரை. இவ்வளவு  குளறுபடிகள் உள்ள அந்த சிலாரூபத்தின் மீது  முதல்வருக்கு அப்படி என்ன மோகமோ தெரியவில்லை!

சரி, அப்படியே வள்ளுவரது மிக ஆதாரபூர்வமான வடிவம் நமக்குக் கிடைத்திருந்தால் கூட, தமிழக அரசின் சின்னமாக இருப்பதற்கு அந்த வடிவத்தை விட கோபுரமே சிறந்த தகுதி வாய்ந்தது. எந்த ஒரு தனிமனிதரை விடவும்  தமிழ்க் கலாசாரத்தை  அது சிறப்பாகப் பறைசாற்றும் தன்மை கொண்டது.

srivilliputhur_templeகோபுரம் தமிழ்க் கட்டடக் கலையின்  உன்னதங்களுள் ஒன்று. பூமியினின்று எழுந்து விண்ணை நோக்கி எழுந்து செல்லும் அதன் தோற்றம் என்றென்றும் மேன்மையை, உயர்ச்சியை, வளர்ச்சியை விழையும் மானுட சக்தியின்  ஒளிமிக்க குறியீடாக விளங்குகிறது. அது பற்றியே,

”துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே”

என்று பாரதியார் பாடினார் போலும்!  கோபுரத்தின் அடுக்குளில் அமைக்கப் படும் சிற்ப உருவங்கள் பிரபஞ்சத்தின், இயற்கையின் பல்வேறு  வர்ணஜாலங்களையும், விசித்திரங்களையும் பிரதிபலிப்பவை. அவ்வகையில் முழுமையின்,  பரிபூரணத்தின் உருவாகவும் திகழ்ந்து, தமிழரின் இரண்டாயிரம் ஆண்டு கால தத்துவ ஞானத்தின் சாரத்தை கோபுரம் விளக்குகிறது என்று சொன்னால் மிகையாகாது. இந்த மண்ணின் சிற்பிகளின், கலைஞர்களின், ஞானிகளின், உழைப்பாளிகளின், மன்னர்களின், வீரர்களின், மக்களின் ஆன்மாவைத் தம்முள் கோபுரங்கள் தாங்கிக் கொண்டிருக்கிறன.

இத்தகைய மாபெரும் பண்பாட்டுப் பெட்டகமான கோபுரம் இந்து மதச் சின்னமாகவும் இருக்கிறது. உண்மை தான். ஆனால் அதில் என்ன பிரசினை?

தமிழ்த் தாயின் திருவுருவத்தைத் தமிழே அரசே அங்கீகரித்து தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் நிறுவியுள்ளது. அந்தத் திருவுருவத்தின் மூலம் என்ன? கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயில் சுற்றில் உள்ள அழகிய சரஸ்வதி சிலையின் வடிவமே அது.  ”தெள்ளு கலைத் தமிழ் வாணி”க்கு  அந்தச் சிலாரூபத்தைத் தேர்ந்தெடுத்தது மிகப் பொருத்தமானது. இயைபான அழகியல்.  அப்போ தமிழ்த் தாய் சந்தேகமில்லாமல் இந்து மதச் சின்னம் தானே?

அவளுக்கு நாம் பாடும் வாழ்த்து?  அதில் “நீராரும் கடலுடுத்த நில மடந்தை” (ஸமுத்ர வஸனே தேவி!) என்று பூமி தேவியைத் தான் போற்றுகிறோம். அந்த பூமித் தாயின் முகமண்டலமாகவும், திலகமாகவும்  பாரதமும், தமிழ்நாடும் இருப்பதாக அந்தப் பாடல் கூறுகிறது.

“செம்பொனார் திலகம் உலகுக்கெல்லாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே”

thamizh_annaiஎன்ற சம்பந்தர் தேவாரத்தை உள்வாங்கி சைவத் தமிழ்ப் புலவர் எழுதிய, கவித்துவம் நிரம்பிய வாழ்த்துப் பாடல். அந்தப் பாடல் இந்துச் சின்னம் இல்லையா?

“கோபுரம் இந்து மதச் சின்னம்; அதை மாற்ற வேண்டும்” என்ற வக்கிரம் பிடித்த வாதம் எங்கு இட்டுச் செல்கிறது என்று பாருங்கள். கிறிஸ்தவர்களுக்கு, முஸ்லிம்களுக்கு இது ஆட்சேபகரமாக இருக்கலாம் என்று கற்பிதப் படுத்தப் பட்டு, மூளைகெட்ட முந்திரிக் கொட்டை மதச்சார்பின்மை  என்ற பெயரில்  இந்த மண்ணின் இயல்பான பண்பாடு ஒழிக்கப் படுகிறது.  நாளை தமிழ்த் தாய்க்கு பர்தா போடவும் (அல்லது அவளைக் கல்லால் அடித்தே கொன்று போடவும்),  தமிழ்த் தாய் வாழ்த்துக்குப் பதில் சுவிசேஷ பஜனை பாடவும் கூட இந்த மானங்கெட்ட கூட்டம்  கொடி பிடிக்கும்.

அட, அந்த வள்ளுவரே, அவரது சிலையே இந்து மதத் தொடர்புடையவை என்று எளிதாகச் சொல்லலாமே!  தெய்வப் புலவரின் திருக்குறளை  திராவிட இயக்கம் வந்து பிய்த்துப் போட்டு அதற்கு அபத்த உரைகள் எழுதும் காலத்திலும் சரி, அதற்கு முன்பும் பின்பும் சரி, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சைவர்களும், வைணவர்களும், சமணர்களும் தான் அதை ஏற்றிப் போற்றிப் படித்து, உரைகள் எழுதினார்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும் (இது பற்றிய எனது பழைய கட்டுரை : “திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள் குறித்து”). கழக அரசு  இன்று அடிவருடும் ஆபிரகாமிய மதவெறி சக்திகள் நாளை திருவள்ளுவரையும் தூக்கி எறியக் கோரிக்கை விடுக்கமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

பாமியான் மலைக் குன்றுகளின் புத்தர் சிலைகளை பீரங்கி வைத்துத் தகர்த்த அதே தாலிபானிய மதவெறி சக்திகளுக்கு கூழைக் கும்பிடு போட்டு சேவகம் செய்யும் கேடுகெட்ட அரசியலை எம்.எல்.ஏ ரவிக்குமார் சார்ந்திருக்கும் கட்சி செய்கிறது.  இஸ்லாமியர்கள் பிரசினை செய்தார்கள் என்பதற்காக டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை போடும் உரிமையை தமிழ் இளைஞர்கள் விட்டுத் தந்து விட வேண்டும் என்று  ஈனத்தனமாகக்  கடிதம் எழுதும் அளவுக்கு தலித்துகளுக்குத் திம்மித் தனத்தைப் போதித்துக் கொண்டுகிறது  அவரது “விடுதலை சுண்டெலிகள்” கட்சி.

ஒரு கட்டத்தில் திராவிட அரசியல் தமிழ்ப் பண்பாட்டின் உண்மையான கூறுகளை (அவை அனைத்தும் இந்துத்துவத்தின் வெளிப்பாடுகளே)  அவமதிப்பதை நிறுத்தி விட்டு,  சிறிதாவது ஏற்கும் கட்டத்திற்கு வருவது போலத் தோன்றியது. சமீபத்திய திமுக மாநாடுகளில் அலையலையாக ஐயப்ப சாமிகள் தெரிந்தார்கள்.  கழக இளைய வாரிசுகளின் குடும்பத்தினர் கமுக்கமாக அல்லாமல்,  கண் பார்வை பட  தங்கள் கடவுள் நம்பிக்கைகளைப் பறை சாற்றினார்கள்.  ஆனால் அது ஒரு குறுகிய கால மாயத் தோற்றம் மட்டுமே என்று  தோன்றுகிறது.  சோனியா காந்தியின் பிடியில் சிக்கியுள்ள தேசிய அரசியல் முழுமையாகவே இந்து எதிர்ப்பு நிலைப்பாட்டை வேரூன்றி வருகையில், திராவிடக் கட்சிகளில் நீறுபூத்த நெருப்பாக எப்போதும் இருந்து வரும் கடும் இந்து துவேஷமும்,  ஏன் இந்திய தேசியம் மீதான வெறுப்புணர்வும் கூட இன்னும் அதிகமாக, வெளிப்படையாகவே தலை தூக்கக் கூடும்.

*********

இந்த முத்திரை மாற்ற அறிவிப்புக்கு அங்கங்கே சில எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன. தமிழகத்தில் தன்மானம் இன்னும் செத்துவிடவில்லை என்று அவை உணர்த்துகின்றன.

karnataka_emblemவேறு மாநிலச் சின்னங்கள் எல்லாம் மதச்சார்பற்றவையாகத் தானே இருக்கின்றன என்று  ஒரு நொள்ளைக் கேள்வியை ரவிக்குமார் கேட்கிறார். பக்கத்து மாநிலமான கர்நாடகத்தின் சின்னத்தில் நடுவில் கண்ட பேருண்ட பட்சியும் (Ganda Bherunda bird) அதற்கு இருபுறமும்  இரு சரபங்களும்  (Sharabha),  அதாவது யாளிகளும் உள்ளன. இது முழுமையாகவே புராண உருவகம்.  இரணியனைக் கிழித்து கோபம் அடங்காத நரசிம்மரை சாந்தம் செய்ய சிவனார் சரப உரு எடுத்து அவரைத் தழுவுகிறார். அப்போதும் கோபம் அடங்காத நரசிம்மர் இரண்டு தலைகள் கொண்ட பேருண்டப் பட்சியாக உருமாறுகிறார் – ஒன்று சாந்தத்தையும், ஒன்று கோபத்தையும் குறிக்கிறது.  தீயோரை அழித்தலும், நல்லோரைக் காத்தலும் செய்யும் அரசுக்கு இந்தப் பட்சி ஒரு தத்துவார்த்தமான குறியீடாகக் கருதப் பட்டது.  ஹொய்சளர்கள், கடம்பர்கள், விஜயநகர மன்னர்கள், மைசூர் உடையார்கள் என்று எல்லா கர்நாடக ராஜ வம்சங்களும் இந்தப் பட்சியின் உருவத்தை தங்கள் இலச்சினைகளில் பொறித்துள்ளனர். அதன் நீட்சியாகவே இன்று கர்நாடக அரசு முத்திரையில் அந்த உருவம் உள்ளது.  அந்த மாநிலத்தின் சுற்றுலாத் துறையின் சின்னத்தில் நந்தியின் திருவுருவம் உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் சின்னத்தில் குத்துவிளக்கும்,  அதன் சுற்றுலாத் துறையின் சின்னத்தில் திரிமூர்த்தி உருவமும் (திராவிட பாணி எலிபெண்டா குகை சிற்பம்) உள்ளது. கேரள அரசின் சின்னத்தில் நடுவில் திருச்சங்கும் இருபுறமும் பாரம்பரிய அலங்காரத்துடன் கூடிய யானைகளும் உள்ளன.  இந்தச் சின்னம் திருவாங்கூர் சம்ஸ்தானத்தின் சின்னத்தின் அடிப்படையிலானது.  திருச்சங்கு பத்மநாப சுவாமியைக் குறிக்கிறது.

இப்படிப் பல உதாரணங்கள் தரலாம்.  எந்த மாநிலத்திலும்  குறுகிய கால அரசியல் சரிநிலைகளுக்காக அதன்  பண்பாட்டின் அடையாளத்தையே மாற்றவேண்டும் என்பது போன்ற கேனத்தனமான வாதங்கள் எடுபடாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

எதிர்ப்பாளர்களில் பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மட்டும் பண்பாட்டு ரீதியாக சரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். ஸ்ரீவில்லிப் புத்தூர்க் காரர்கள் தங்கள் ஊர்ப் பெருமைக்கு இழுக்கு வருகிறதே என்பதற்காக இதை எதிர்க்கிறார்களாம்.  அந்தத் தொகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏவும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும் கூட முத்திரை மாற்றத்தை எதிர்த்துப் போராடப் போகிறார்களாம்!  (”கோபுர மாற்றம்… ஸ்ரீவில்லிபுத்தூர் சீற்றம்!” – சமீபத்திய ஜூனியர் விகடன் ரிப்போர்ட்). இந்த விஷயத்தில் பண்பாட்டுவாதத்தால் ஒரு பயனும் இல்லை, அதைவிட  ஊர்ப்பெருமைவாதம், குறுங்குழுவாதம் ஓரளவு எடுபடும் என்று தோன்றுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, சைவ, வைணவ மதங்கள் மூலமும், கலைகள், இலக்கியம் மூலமும் ஒன்று திரண்டு  வந்திருக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வரலாற்றில் நல்ல முன்னேற்றம் தான்!

மொத்தத்தில் இத்தகைய விஷயங்கள் ஒரு பெரும் நோயின் அறிகுறிகள். நோய் முதல் நாடி அதைத் தீர்க்க வேண்டும்.

*********

eknath-ranadeபாறை மேல் வள்ளுவர் வந்த வரலாறு எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை.  1960களில் சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவின் போது, கடும் கிறிஸ்தவ எதிர்ப்பையும் முட்டுக்கட்டைகளையும் மீறி, நாடு தழுவிய மக்கள் சக்தியின் துணை கொண்டு, கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீபாதப் பாறை மீது விவேகானந்தர் நினைவு மண்டபம் எழுந்தது.  அதனை எழுப்ப அயராது உழைத்தவர் ஆர்.எஸ்.எஸ். பிரசாரகரும், விவேகானந்த கேந்திரத்தை நிறுவியருமான ஏகநாத் ரானடே.  உடனடியாக, அதற்குப் பக்கத்தில் இருந்த பாறைக்கு  இரவோடிரவாக ஒரு புது மகத்துவம் முளைத்தது – புனித சேவியர் (அல்லது புனித தாமஸ்??,  யாரோ ஒருவர்..) முதன்முதலில் வந்த போது அங்கு தான் கால் வைத்தாராம்!  மளமளவென்று  சிலுவையை நாட்ட ஏற்பாடுகள் நடந்தன.

பார்த்தார் ரானடேஜி.  பாறையின் ஒரு சிறிய மாடலை செய்து, அதில் ஒரு சின்ன திருவள்ளுவர் சிலையை வைத்து அரசுக்கு அனுப்பினார். அங்கு தெய்வப் புலவரின்  நினைவு மண்டபம் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று ஒரு யோசனையையும் முன்வைத்தார். அரசு ஏற்றுக் கொண்டது. எம்.ஜி.ஆர் காலத்திலேயே திட்டம் போடப் பட்டது.

தமிழனின் பாறையைத்  தாமஸ் அபகரிக்காமல் காத்தது ஒன்றுபட்ட இந்து உணர்வு தான்.  அதே உணர்வு தான் நமது பண்பாட்டையும் பாதகர்கள் ஒழித்து விடாமல் காக்கும் அருமருந்து என்பதை உணர்வோம். 

தொடர்புடைய பதிவுகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

 

113 மறுமொழிகள் தமிழக அரசு சின்னம் மாற்றம்?: சில எண்ணங்கள்

  1. ஆர். கோபால் on April 20, 2010 at 2:13 am

    முழுமையான பார்வையை அளிக்கிறது
    வாழ்த்துக்கள்.

  2. Raja raman on April 20, 2010 at 2:46 am

    மதசார்பற்ற அரசு என்ற போர்வையில் மதவெறுப்பு(இந்து) அரசல்லவா ஆட்சி செய்கிறது.

  3. அ. நம்பி on April 20, 2010 at 6:41 am

    அருமையான தகவல் களஞ்சியமாக அமைந்துள்ளது கட்டுரை.

    அன்பர் ஜடாயுவுக்குப் பாராட்டுகள்.

  4. reality on April 20, 2010 at 7:57 am

    உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்யும் கலையில் காங்கிரஸ் கட்சி திராவிடக் கட்சிகளுக்கு சளைத்ததல்ல. ஆராய்ந்து பார்த்தால், சுதந்திரப் போராட்டமே முன்னர் சுல்தான்காளாக இருந்து பின்னர் கிறித்தவர்களால் ஆளப்பட்ட ‘முஹம்மதீயர்களுக்கு’ , கிறித்தவர்களிடமிருந்து, இந்துக்களைப பகடைக்காய்களாக வைத்து ‘சுதந்திரம் வாங்கித் தருவதுதான்; அதனால் தான் ‘பாகிஸ்தான்’ என்ற ஒரு நாடே உருவாக்கப்பட்டது.

    சர்வதேச உளவு நிறுவனகள் ‘இஸ்லாம்’ ஆக்கப் பட்டு விடுமோ இந்தியா என்று ‘இத்தாலியிலிருந்து’ ‘அன்டனியோ மைனோ’ வை கிறித்துவத்திற்காக இடைச் செருகல் செய்தது. இவையெல்லாம் எதற்க்காகச சொல்லப்படுவது என்றால், அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஆசிர்வாதத்தோடு தான் ராமபிரான் இகழப்பட்டார், தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றுவது நடைபெற்றது; தற்போது சின்னம் மாற்றும் சின்னத்தனம் அரங்கேர்கிறது.

    கோபுரத்தை சின்னமாக வைத்ததும் அதே காங்கிரஸ் கட்சிதான். மற்றும் கருனாய்நிதி அரசு அதிகாரத்தில் இடப்பட்ட காகித ஆணையை வைத்து மாற்றப்பட்ட தமிழ் புத்தாண்டு தினம், அதே கருனாய்நிதியால் பராமரிக்கப் படும் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தால் நடத்தப்படும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வென்ற கிரிக்கெட் போட்டியின் போது, ஊரறிய, உலகறிய, ஊடகங்கள், படம் மற்றும் புடம் பிடிக்க, மகிழ்ச்சியான சூழலில், கேப்டன் தோனியால், தை ஒன்றாம் தேதி முன் தினம், அடுத்த நாள் என் அறிவிக்கப்பட்டது. அதில் கருனாய்நிதியும் இருந்து மறுப்பு தெரிவிக்க முடியாமல் போனதை ‘ தமிழ்-இந்துவும்’ முகப்பில் அறிவித்தது. எனவே தமிழ்-இந்து தெய்வங்கள், அங்கங்கே இவர்களுக்கு ஆப்பு வைக்கிறது. பால சங்கராச் சாரியார் பெயில் அப்ப்ளிகேஷனை வெள்ளிக்கிழை தள்ளிப்போட்டு வைத்த சவ்ய சாச்சி முகெர்ஜி, ஞாயிற்றுக்கிழமை, வள்ளுவர் சிலை அருகே, விவேகானந்தர் பாறையில் சிறு சுனாமியால் சிக்கியவுடன், ஓடோடி வந்து திங்கட்கிழமை , பெயில் கொடுத்தார். ஆயிரம் வருடக்களுக்கு மேலாக நடந்துவந்த சந்ட்ரமோவ்லீச்வர பூஜை நடைபெற தடை செய்த அரசாங்க ‘அப்பியர்’ ஆணை , பேரு சுனாமியால் காணாமல் போனது. எனவே, ‘ஊழ்’ வந்து வருத்தும் போது, கருனாய்நிதிக்கும், பகுத்தறிவு காணாமல் போகும்.

    (edited and published)

  5. Rama on April 20, 2010 at 8:17 am

    The Tamilsl have lost all sense of shame. They are at the bottom of moral degradation and degeneration that they will sell their mothers for money. How else you can explain the continious support this amoral, corrupt DMK enjoy from this crowd? I am so livid with rage at this attempt by this Government. On the other hand, I feel the Tamils DESERVE what they are getting for electing this anti hindu mob.
    Hindus of Tamil Nadu, wake up. At least, for once, stand up for your religion and culture. All is not lost yet (hopefully).
    I have a funny feeling though that we, the readers of this site are just banging our heads against a brick wall. I cannot see any hope for this state or for this country.

  6. armchaircritic on April 20, 2010 at 10:59 am

    Mr Rama I agree3 whole heartedly with your views. It is also shameful that DMK enjoyed and enjoys the support of Brahmins more than any other parties!?

  7. R Balaji on April 20, 2010 at 11:08 am

    திரு. ஜடாயு அவர்களே!
    மிக நல்ல கட்டுரை. ஒரே நேரத்தில் இயலாமையையும், கோபத்தையும்
    காண்பிக்கிறது.
    இந்த மாற்றங்கள் மேற்கத்திய நாடுகளிலும் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன.
    “பைத்தியக்கார மதச்சார்பின்மை” என்பதை அனுசரிப்பவர்கள் மட்டுமே
    மனிதர்கள். மற்றவர்கள் வெறி பிடித்தவர்கள் என்ற விளக்கத்தால் ஏற்படும்
    குழப்படிதான் இது.
    தமிழ்நாட்டில் இதன் பரிமாணம் வித்தியாசமாக இருக்கிறது.
    பைத்தியக்கார மதச்சார்பின்மையை நாத்திகம் தத்து எடுத்து கொள்வதால்
    இதன் சீற்றம் இங்கு அதிகமாக இருக்கிறது.
    - ஒரு ஐரோப்பிய நாட்டில், ஒரு மருத்துவமனையில் வேலைபார்க்கும்
    கிறிஸ்தவ நர்ஸ் சிலுவை மாலையை மாற்றிக்கொள்ள தடை. ஆனால் ஒரு
    முஸ்லீம் நர்ஸ் அவர் மதத்தின்படி உடை அணிந்து கொள்ள அனுமதி.
    -அமேரிக்காவில் 200 வருடங்களுக்கும் மேலாக அனுசரிக்கப்படும்
    “Prayer Day”க்கு கிறிஸ்தவ குறியீடுகள் உள்ளதால் எதிர்ப்பு.

    உலக சமூகம் இன்று மிகப்பெரிய சிக்கலில் இருக்கிறது. பெரும்பான்மை
    சமூக மக்கள் தங்கள் மதக்குறியீடுகளை வெளியில் காண்பிக்க கூடாது.
    ஆனால் சிறுபான்மை மக்கள் அவர்கள் மதத்தின் படி வாழலாம்.
    அது மதச்சார்பின்மை. அது மட்டுமே மதச்சார்பின்மை.

    தமிழகத்தில் பல இடங்களில் ஒரு குறியீட்டை காணலாம். சிலுவை,
    ஓம் என்னும் பிரணவம், பிறை என்ற மூன்று குறியீடும் ஒரே புகைப்படத்தில்
    இருக்கும். இதை ஒப்புக்கொள்ளாதவர்கள் மனிதர்களே இல்லையா!

    இவர்களின் இந்த துவேஷ நடவடிக்கைகள் கடும்போக்கு வலதுசாரிகளை
    தான் உலகம் முழுதும் உருவாக்கியிருக்கிறது.

    “இத்தகைய மாபெரும் பண்பாட்டுப் பெட்டகமான கோபுரம் இந்து மதச் சின்னமாகவும் இருக்கிறது. உண்மை தான். ஆனால் அதில் என்ன பிரசினை?” என்று கேட்டிருக்கிறீர்கள்.
    அவர்களின் பிரச்சினையே அதுதானே!.

    பா.ஜ.கவுடன் கூட்டில் உள்ளபோது, இந்த தரம்தாழ்ந்த சிந்தனைகள்
    எங்கிருந்தன? ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் பிரச்சினைகள் இருக்கும்.
    மன சமாதானங்களை செய்து கொள்ள வேண்டிவரும். நம்முடைய
    பாரம்பர்யங்களை காப்பாற்றி கொள்ள நாம் பா.ஜ.கவிற்குத்தானே
    ஆதரவு அளித்திருக்க வேண்டும்.

    நாம் புலம்பிக்கொண்டிருப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை.
    அதிகாரம் இருந்தால்தான் இவர்களை அடக்க முடியும்.

    இதைப்போன்ற பைத்தியக்கார நடவடிக்கைகள் தொடரும் என்றுதான்
    நான் நினைக்கிறேன். நமக்கு விடிவு வருமா என்பதும் சந்தேகமாகவே
    இருக்கிறது.

  8. Suresh on April 20, 2010 at 11:57 am

    ஜடாயு, தமிழ் புத்தாண்டை சித்திரை திருநாள் என்று மக்களை மாற்றிய பெருமை தமிழக அரசுக்கு உண்டு. தற்போது கையில் எடுத்திருப்பது இலச்சினை. வருங்காலங்களில் இந்து மதத்திற்க்கு என்று எந்த தனிப்பட்ட குறியிடுகளே, பண்டிகைகளோ வராமல் போக வாய்ப்புள்ளது. தமிழ் புத்தாண்டை குழி தோண்டியாகி விட்டது. சிறுபான்மையினருக்கு வக்கலாத்து வாங்குகிறேன் பேர்வழி என்று ஒரேயடியாக தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள் அரசியல்வாதிகள் திராவிட கலாச்சாரம் என்ற பெயரில் நடக்கும் கேலிக்கூத்துக்களை உண்மையான எந்த இந்துவும் சகித்துக் கொள்ள மாட்டான். கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே. முதல்வருக்கு மதிக் கெட்டு விட்டது.

  9. இப்போது தமிழ் நாட்டு அரசியல் இருக்கும் நிலையிலே கருணாநிதியார் முன்னெப்போதையும் விட மிக வலுவுடன் இருக்கிறார். அவருடைய முக்கிய அரசியல் எதிரியான ஜெயலலிதாவோ இது வரையில் சந்திக்காத பின்னடவை சந்தித்து இருக்கிறார். எனவே இதில் பெரிதாக செய்ய எதுவும் இல்லை. இந்த சின்னத்தை மாற்றும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், நக்கல், நையாண்டி தான் பதிலாகக் கிடைக்கும். அதோடு நான் என்பதால் தானே இப்படி எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்பார். எனவே இதில் சாப்ட் பவரை உபயோகித்து, நட்பு முறையில் ஏதாவது முயற்ச்சி செய்தால் தேறினால் தேறும்.

    உண்மையான தீர்வு, மக்களிடம் ஆன்மீக உணர்வை உருவாக்குவதுதான். ஆனால் இப்போது தமிழ் நாட்டில் ஆழ்வார்களும் இல்லை. நாயன் மார்களும் இல்லை. நமக்கு கிடைத்திருப்பதோ நித்யா தான். எங்கே போய் முட்டிக் கொள்வது?

  10. Athiravi on April 20, 2010 at 1:45 pm

    ஜடாயு அவர்களே,

    உங்களது கட்டுரை மிகவும் நன்றாகவும், அதிக விஷயம் உடையதாகவும் உள்ளது.

    இந்து சமய சின்னகளை பிற மாநிலங்களில் உபயோகபடுதுவதாக எழுதிருகிரீர்கள்.

    இதை படிக்கும் மற்ற அன்பர்கள் அந்த மாநிலங்கலளிலும் சின்னங்களை மாற்ற முயற்சி செய்வார்கள். இது தான் என் கவலை.

    சில சமயங்களில் அதிக தகவல்கள் ஆபத்தில் கொண்டு சேர்கின்றது.

    அதிமுக போன்ற மற்ற கட்சிகள் இதை பற்றி என்ன நினைக்கிறது என்ன செய்ய போகிறது என்பதை பொருது இருந்து தான் பார்க்கவேண்டும்.

    கடவுள் தான் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும்.

  11. தேவப்ரியா சாலமன் on April 20, 2010 at 2:32 pm

    திருக்குறளின் அடிப்படை
    அறத்துப்பால் – பாயிரவியல் – வான்சிறப்பு-குறள் 20:
    நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு.

    எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

    பொருட்பால் – அரசியல் – கொடுங்கோன்மை

    குறள் 559:
    முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல்.
    அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
    குறள் 560:
    ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
    காவலன் காவான் எனின்.
    .
    நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் வேதங்களை மறப்பர்.

    இதைப் புரிந்து கொள்ளாமல் தமிழகத்தைக் குட்டிச்சுவர் ஆக்கிவரும் அரசியல்வாதிகளை என்ன செய்வது?

    தமிழ் புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் படித்தவரைக் கைது செய்யும் கொடூர அரசு
    தமிழ்நாட்டில் ஔரங்கசீப் ஆட்சி நடக்கிறதா? April 15, 2010 by vedaprakash
    http://devapriyaji.wordpress.com/2010/04/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%94%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D/
    ஆவிற்கு -பசுவிற்கு நீர் கொடுக்கக் கூட தானம் பெறாதே என்ற வள்ளுவர் வாக்கு போய் ஓட்டிற்கும், தொலைக் காட்சிப் பெட்டி என அனைத்தையும் இலவசமாக பிச்சையாய் பெறத் துடிக்கவிட்டு, தெருக்குதெரு டாஸ்மேக் கடை திறந்து சாரயம் பெருக்கும் திராவிட ஆட்சி வாழியவே?
    http://devapriyaji.wordpress.com/

  12. bavaani on April 20, 2010 at 3:12 pm

    அவ்வளவு காழ்ப்புணர்ச்சி தலித்கள் மீது.
    அவ்வளவு பயம் தலித்கள் கள் மீது உங்களுக்கு.

    பாவம் அவர்களை நீங்கள் இதே கோபுரத்தை வைத்து தானே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அடிமையாவும் சூத்திரர்கள் என ஒதுக்கியும் வைத்திருந்தீர்கள்.
    இன்று நல்ல நாள் அவர்கள் உங்களை ஒழிக்கும் நாள்.

    முன் விணை செய்தவன் பின் விணை அனுபவிப்பான்.
    ரவிக்குமார் MLA. போல எத்தனை பேர் பழிவாங்க வருவார்களோ.
    அவர்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.
    வாழ்க ரவிக்குமார் அவர்தம் ஆக்ரோஷம் வாழ்க.

    இனி உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல காலம்.

  13. bavaani on April 20, 2010 at 3:36 pm

    தமிழ்நாடு அரசின் சின்னமாக ஏன் புதிய சட்டமன்ற கட்டிடம் அமைய கூடாது?
    இந்தியா மதசார்பற்ற நாடு. குறிப்பாக தமிழகம் சமயசார்பற்ற, அமைதி பூத்துக் குலுங்கும் சமதர்மபூமி. பெரியார், அண்ணா, காயிதே மில்லத் போன்ற பெருந்தகைகளால் பக்குவப் படுத்தப்பட்ட மண் இது.
    ஆனால் தமிழக அரசின் சின்னமாக கோவில் கோபுரம் கடந்த அரை நூற்றாண்டு காலமாக இடம்பெற்று வருகிறது. அது எந்த ஊர் கோவில் என்பதே பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாது. அந்த கோபுரம் உண்மையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர கோவில் கோபுரமாகும். தமிழகத்தில் ஸ்ரீவில்லிப் புத்தூரில் மட்டும்தான் கோவில் உள்ளதா?

    1000 ஆண்டுகால பழமை கொண்ட தஞ்சாவூர் பெரிய கோவில், கட்டிடக்கலையில் சிறப்பிடம் பெற்ற மதுரைக்கோவில், ஸ்ரீரங்கம் கோவில் போன்றவைகள் இடம்பெறாமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரம் இடம்பெற்றதற்காக நாம் காரணங்கள் தேடி அலைய வேண்டியதில்லை. ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த குமாரசாமி ராஜா தமிழக முதலமைச்சராக இருந்துபோது தனது ஊரின் கோவிலை அரசு சின்னமாக அறிவித்து விட்டார். அவ்வளவுதான். ஆனால் தமிழக, அரசின் முக்கிய ஆவணங்களில், கோப்புகளில் கோபுரம் இடம்பெறுவது நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் நெருடலையும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியிருப்பது உண்மை.

    தமிழக அரசின் சின்னம் மதசார் பின்மைக்கு எதிரானது என்ற கருத்தினை கோடிட்டுக் காட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சட்டமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். ஒரு மதத்தின் வழிபாட்டுத்தலத்தை அனைத்து மக்களுக்கும் உரிமையான அரசாங்கத்தின் சின்னமாக எவ்வாறு ஏற்றுக் கொள்ளமுடியும் என்றும் அவர் கேள்வி விடுத்திருக்கிறார்.

    கூர்ந்து நோக்க வேண்டிய அதி முக்கியமான விஷயத்தை திராவிட கட்சிகள் இதுவரை எப்படி கோட்டை விட்டார்கள்?

    திராவிட இயக்கத்தின் பிதாமகர்களாக கருதப்படும் பெரியார், அண்ணா என அரசியலில் கோலோச்சியவர்கள், இப்போது முதல்வராக வீற்றிருக்கும் கலைஞர் உள்ளிட்டோர் எவ்வாறு கோட்டை விட்டார்கள்?

    அதிர்ச்சியளிக்கக் கூடிய ஆச்சரிய மல்லவா? மதசார்பின்மையை பேணு வதில், சமூக நல்லிணக்கணத்தை கட்டிக்காப்பதில் அலட்சியம் காட்டி யதால் தான் தமிழக அரசின் சின்னமாக கோவில் கோபுரம், இன்றுவரை இடம் பெற்றிருக்கிறது என குற்றம் சாட்டமாட்டோம்.
    ஆனைக்கும் அடி சறுக்கும் அல்லவா? எப்படியோ கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். போகட்டும் இருப்பினும் இன்னமும் காலம் கடந்து விடவில்லை.

  14. Rajasekar on April 20, 2010 at 4:21 pm

    நல்ல உரை . . விளக்கங்களும் கருத்துக்களும் அருமை . . .

    கலாச்சாரத்தை அழிப்பவர்களே முற்போக்கு வாதிகள் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளதே இதற்க்கு காரணம் .

    சிருபான்மை மக்களின் ஓட்டுக்காக பெரும்பான்மை மக்களின் கலாச்சாரத்தை சிதைக்கும் சிற்றறிவு படைத்த அரசியல் வியாதிகளை பெரும்பான்மை மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் .

  15. vedamgopal on April 20, 2010 at 5:39 pm

    சில நாட்களுக்கு முன் தான் நமது முதலவர் ராஜராஜசோழனுக்கு சிறந்தமுறையில் விழா நடத்தப்படவேண்டும் என்றும் தஞ்சை பெரிய கோவில் திராவிட சிற்ப்ப கலைக்கு ஒர் முதன்மையான எடுத்தக்காட்டு என்றும் புகழாரம் சூட்டினார். அப்படிப்பட்ட கோவில் சின்னத்தை மாற்றுவது தவறான அணுகுமுறையே ஆகும். இதுகிருஸ்துவர்களி்ன் சூழ்ச்சி இனி கருணாநிதியின் தயவு சோனியாவுக்கு தேவை இல்லை ? புரிந்தால் சரி !!

  16. g ranganaathan on April 20, 2010 at 7:15 pm

    தொல்(லை) திருமாவளவனின் கட்சியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். தமிழைக்காப்பாற்ற அவதாரம் எடுத்த நவீனக்கும்பலைச்சேர்ந்தவர். அவர் பேரில் உள்ள “ரவி”யும் “குமா”ரும் செந்தமிழ் அல்ல. ஆனால் இவர் தலைவர் தமிழ் பெயர் சூட்டும் விழா நடாத்தினார். அப்பொழுது அவர் அருகில் இருந்த ஒரு கட்சி முக்யஸ்தரின் பெயர் “ஜார்ஜ்” மாற்றப்படவில்லை. மிஷனரிகளின் கைக்கூலிகளான இவர்களிடம் வேறொன்றும் எதிர்பார்க்க முடியாது. அம்பேத்கரின் பெயர் இவர்களுக்கு ஒரு சந்தைப்பொருளே. விழாக்களை மாற்றுவதும், சிலைகள் வைத்து தற்புகழ்ச்சி யடைவதுமே இந்தக் கும்பலின்
    தலையாயக் கடமைகள். இதற்கு இந்தக் கழுதைப்புலிகள் பரிவார விலங்குகள்.
    மறத்தமிழர் மரத்துப்போன தமிழர் ஆனால் கோவில்கள் எல்லாம் ஹோட்டல்கள் ஆகும் காலம் தூரத்தில் இல்லை.

  17. A.T.Thiruvengadam on April 20, 2010 at 7:44 pm

    The Gopuram is the only unique and distinguishing Symbol of Tamil Culture.It is found in all most all places whre Tamils went even in the remote past under Vijayalaya Chola.The Tanjore Temple tower is considred an architectural model and a heritage of Tamils.By removing this ndo the protecters of tamil culture whant to erase the pride of Tamils–which includes hindu,muslim christians and a host of tamils all over the world.Even the western countries have not done this i.e. putting their literateurs as the govt”s mascot.
    A.T.Thiruvengadam

  18. kargil jay on April 20, 2010 at 7:49 pm

    அன்பின் ஜடாயு ,
    நல்ல விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை அளித்துள்ளீர்கள். கொடுக்கப்பட்ட தகவல், நூற்றாண்டுக்கு முற்பட்ட காசு , பல மாநில சின்னங்களைப் பற்றிய ஆராய்ச்சி என உங்கள் கடின உழைப்புக்கும் பலனில்லமலா போய்விடும்?

    கருணாநிதி மட்டுமல்ல, எல்லா திராவிடர்க்கும், முகமதியர்க்கும் உள்ள பொது பண்பாடு, பழக்க வழக்கம் இதுதான் :
    ௧) பொய் சொல்லுதல்
    ௨) வெட்கமில்லை வெட்கமில்லை, வெட்கமென்பதில்லையே என்று கூசாமல் நடவடிக்கை எடுத்தல்

    / சமீபத்திய திமுக மாநாடுகளில் அலையலையாக ஐயப்ப சாமிகள் தெரிந்தார்கள். / — என்னை வாசகர்கள் மன்னிக்கவும். ஐயப்ப சாமிகளில் 20 % கண்ணியமான நல்லோர்கள். மீதி 80 சதவிதம் பேர் ரௌடிகள்தான். கிட்டத் தட்ட குற்றம் செய்து ஜெயிலுக்கு சென்றவர்கள் எல்லாருமே சபரிமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். அவர்களை திமுக கும்பலில் காண்பது இயல்பானது தானே?

  19. யாரோ ஒருவன் on April 20, 2010 at 8:13 pm

    அருமையான் BULLSHIT ARTICLE. அதற்கு ஏற்ற பிண்னோட்டங்கள்.

  20. Maduraikkaran on April 20, 2010 at 8:18 pm

    தமிழ் நாட்டில் அரசு முத்திரை மாற்றம் எதுவாக இருந்தாலும் மக்களின் ஏகோபித்த முடிவாக இருப்பது நல்லது

  21. reality on April 20, 2010 at 8:34 pm

    தமிழ் என்பது ஒரு மொழியே தவிர ஒரு இனமோ சமுதாயக் கூட்டமோ பூகோளப் பரபபோ கிடையாது; அந்தத் தமிழ் எங்கே, யாரால், எப்போது உருவாக்கப்பட்டு, தற்போதைய ஒலி மற்றும் வரி வடிவத்தை அடைந்ததோ, அம்மாதிரியான ‘இயல்பு’ மானிட இனம் ஒன்று தமிழ் பெயரில் கிடையாது.
    ஆனால் இறைநிலை சார்ந்த வகையில், தமிழ் எப்போதும் இந்திய இந்து முறையையே சார்நதிருந்ததால், தமிழுக்கு குறைந்தபக்ஷம், அதை மொழியாகக் காப்பாற்ற மன்னர்களும், மக்களும் கிடைத்தனர்; தமிழிலிருந்து, இந்த மதத்தை, கோவில் போன்ற சின்னத்தை, எடுததெறிநது, வள்ளுவரையோ அப்படியே இயேசு கிறிஸ்து போன்றோரை, இடைச் செருகல் செய்தால், மெல்லத் தமிழினிச் சாகும்.
    .

  22. reality on April 20, 2010 at 8:46 pm

    ஆழ்வார்களும் நாயன்மார்களும் , வேண்டும் என்பவர்களுக்கு கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், தேவார, திருவாசக, நாலாயிரப்ரபந்த வடிவங்களில்; சன் மற்றும் கலைஞர் டிவிக்களை விழுந்து விழுந்து பார்க்கிறவர்களுக்கு வேறு எதாவதுதான் கிடைக்கும்.

  23. //ஆழ்வார்களும் நாயன்மார்களும் , வேண்டும் என்பவர்களுக்கு கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், தேவார, திருவாசக, நாலாயிரப்ரபந்த வடிவங்களில்; சன் மற்றும் கலைஞர் டிவிக்களை விழுந்து விழுந்து பார்க்கிறவர்களுக்கு வேறு எதாவதுதான் கிடைக்கும்.//

    நூல்களின் சிறப்பைக் குறைத்து மதிப்பிடவில்லை. அந்த நூல்களின் ஆன்மீகத்தை வாழ்க்கையில் உணர்ந்து, மற்றவர்க்கு மாற்றும் ஆன்மீக வாதிகள் இருந்தால் அவை மக்களிடம் பரவும். இந்திய வரலாற்றை, தமிழக வரலாற்றை , இந்து சமய வரலாற்றை படித்துப் பார்த்தால் தெளிவாகும்.

  24. //கருணாநிதி மட்டுமல்ல, எல்லா திராவிடர்க்கும், முகமதியர்க்கும் உள்ள பொது பண்பாடு, பழக்க வழக்கம் இதுதான்//

    நாம் எல்லோருமே இந்தியர்கள் தான். திராவிடம் என்பது குஜராத், மராட்டா போல ஒரு பகுதியின் பெயரே. . இதில் திராவிடர்கள் என்று யாரை தனியாகக் குறிக்கிறீர்கள் ? மற்றவர்கள் திராவிடர்கள் என்றால் அப்போது நீங்கள் யார்? வார்த்தைப் பிரயோகங்களில் கவனம் தேவை.

    If you think they are Dhravidiyans and you are something else, it shows as how the unity had detoriated.

    சரியான ஆன்மீகத்தைப் பரப்ப வேண்டும். தமிழ் நாட்டில் எல்லோரும் கோவிலுக்குப் போகாமல், சாமி கும்பிடாமல் இருக்கிறார்களா? அவர்களின் ஆன்மீக சிந்தனையை அதிகப் படுத்த வேண்டும்.

  25. ஜடாயு on April 20, 2010 at 11:16 pm

    கருத்துத் தெரிவிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.

    // இந்து சமய சின்னகளை பிற மாநிலங்களில் உபயோகபடுதுவதாக எழுதிருகிரீர்கள். இதை படிக்கும் மற்ற அன்பர்கள் அந்த மாநிலங்கலளிலும் சின்னங்களை மாற்ற முயற்சி செய்வார்கள். இது தான் என் கவலை.

    சில சமயங்களில் அதிக தகவல்கள் ஆபத்தில் கொண்டு சேர்கின்றது. //

    அதிராவி ஐயா, அந்தக் கவலை வேண்டாம்.. நான் குறிப்பிட்ட மாநிலங்களில் அரசுகளுக்கும், மக்களுக்கும் தங்கள் பண்பாடு பற்றிய ஓரளவு பிரக்ஞை உள்ளது. மதச்சார்பின்மை என்பதை administrative principle ஆகக் கொள்ள வேண்டுமே தவிர, அதைக் காரணம் காட்டி தமது சொந்தப் பண்பாட்டையே மறுதலிக்கக் கூடாது என்ற அளவுக்காவது அது உள்ளது.

    இந்திய தேசியச் சின்னத்தில் உள்ள சத்யமேவ ஜயதே என்பதே உபநிஷத் வாக்கியம் தானே, அது இந்துமதம் இல்லாமல் வேறென்ன? தேசிய சின்னத்தில் உள்ள சக்கரம் பௌத்த மத குறியீடாக பொதுவாக சொல்லப் படுகிறது.. ஆனால் அதன் உருவகம் அதைவிட பழமையானது. வேதத்தில், உபநிஷத்தில் குறிப்பிடப் படும் பிரபஞ்ச சுழற்சி சக்கரம் என்ற கருத்தின் நீட்சியே புத்தமதத்தின் தர்மசகக்ரம்.

    ”ஏவம் ப்ரவர்திதம் சக்ரம்” என்று கீதை கர்மயோகம் கூறும் சக்கரமும் அதுவே. இந்தக் கருத்தை மிக அழகாக ஜெயமோகன் தனது சமீபத்திய கீதை உரைப் பதிவு ஒன்றில் எழுதியிருக்கிறார்.

    இந்தப் பண்பாட்டுச் சக்கரத்தில் எங்கு சுற்றி வந்தாலும் இந்து மதத்தில் தான் போய் முட்டிக் கொள்ள வேண்டும் :) )

  26. shaan on April 21, 2010 at 12:07 am

    இந்தியாவின் சின்னமான நான்கு சிங்கங்களும் சரி, அசோகச் சக்கரமும் சரி, மதசார்பற்ற சின்னங்கள் அல்ல. அவை புத்த மதச்சின்னங்களே. கடைசியில் இது போன்ற சின்னத்தனமான காரியங்களால் திமுக ஆட்சியிழக்கும் நிலை ஏற்படும் போல தெரிகிறதே.

  27. suresh on April 21, 2010 at 2:44 am

    //இயேசுவின் பிரதான சீடர்களுள் ஒருவரும், சென்னையில் தங்கி இறைப்பணியாற்றும்போது கொல்லப்பட்டவருமான புனித தோமையாரின் வாழ்க்கை வரலாற்றை பெரும் பொருட்செலவில் திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டு, பணிகளையும் ஆரம்பித்தது சென்னையில் உள்ள மயிலை மறைமாவட்ட கிறிஸ்தவ அமைப்பு. இந்தப் படத்தின் பணிகளைத் துவங்கி வைத்தவர் முதல்வர் கருணாநிதி.

    இந்தப் படத்தின் சிறப்பே திருவள்ளுவர், தோமையார் இடையே நிகழ்ந்த சந்திப்பு, அவர்களுக்கு இடையில் இருந்த நட்புதான் என்கிறார்கள். ஆனால் இதற்கான சரித்திர ஆதாரம் ஏதும் இதுவரை வெளியிடப்பட்டதில்லை.

    ‘அந்த காலகட்டத்தில் திருமயிலையில் வாழ்ந்த திருவள்ளுவரும் சாந்தோமில் வாழ்ந்த தோமையாரும் மிகுந்த நட்புடன் திகழ்ந்ததாகவும், தோமையாரின் நட்பின் காரணமாக கிறிஸ்தவ கருத்துக்களை உள்ளடக்கிய குறட்பாக்கள் சிலவற்றை திருவள்ளுவர் இயற்றியதாகவும்’ இந்தப் படத்தின் வசனகர்த்தா பால்ராஜ் லூர்துசாமி தெரிவித்திருந்தார்.

    திருவள்ளுவர் வேடத்தில் நடிக்க ரஜினியுடன் பேசப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

    அந்த புராஜக்ட் இப்போதும் உள்ளது. ஆனால் ரஜினியிடம் பேசினார்களா, படப்பிடிப்பு நடக்கிறதா? உள்ளிட்ட தகவல்கள் எதையும் இன்னமும் வெளியிடவில்லை, சாந்தோம் கத்தோலிக்க சபையினர். நாம் விசாரித்தபோது, உரிய நேரத்தில் தகவல் வெளியாகும் என்று மட்டும் கூறினர்.//

    மேற் குறிப்பிட்ட தகவல் இந்த இணைப்பில் உள்ளது http://www.envazhi.com/?p=17762&cpage=1#comment-17507. தமிழ் ஹிந்து வாசகர்கள் தங்கள் மறுப்பை / கருத்தை தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறேன்.

  28. suresh on April 21, 2010 at 2:47 am

    //இயேசுவின் பிரதான சீடர்களுள் ஒருவரும், சென்னையில் தங்கி இறைப்பணியாற்றும்போது கொல்லப்பட்டவருமான புனித தோமையாரின் வாழ்க்கை வரலாற்றை பெரும் பொருட்செலவில் திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டு, பணிகளையும் ஆரம்பித்தது சென்னையில் உள்ள மயிலை மறைமாவட்ட கிறிஸ்தவ அமைப்பு. இந்தப் படத்தின் பணிகளைத் துவங்கி வைத்தவர் முதல்வர் கருணாநிதி.

    இந்தப் படத்தின் சிறப்பே திருவள்ளுவர், தோமையார் இடையே நிகழ்ந்த சந்திப்பு, அவர்களுக்கு இடையில் இருந்த நட்புதான் என்கிறார்கள். ஆனால் இதற்கான சரித்திர ஆதாரம் ஏதும் இதுவரை வெளியிடப்பட்டதில்லை.

    ‘அந்த காலகட்டத்தில் திருமயிலையில் வாழ்ந்த திருவள்ளுவரும் சாந்தோமில் வாழ்ந்த தோமையாரும் மிகுந்த நட்புடன் திகழ்ந்ததாகவும், தோமையாரின் நட்பின் காரணமாக கிறிஸ்தவ கருத்துக்களை உள்ளடக்கிய குறட்பாக்கள் சிலவற்றை திருவள்ளுவர் இயற்றியதாகவும்’ இந்தப் படத்தின் வசனகர்த்தா பால்ராஜ் லூர்துசாமி தெரிவித்திருந்தார்.//

    http://www.envazhi.com/?p=17762&cpage=1#comment-17507 இந்த இணைப்பில் சென்று தங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

  29. suresh on April 21, 2010 at 2:49 am

    http://www.envazhi.com/?p=17762&cpage=1#comment-17507. Go to the link and register your views about the article.

  30. kargil jay on April 21, 2010 at 7:54 am

    //நாம் எல்லோருமே இந்தியர்கள் தான். திராவிடம் என்பது குஜராத், மராட்டா போல ஒரு பகுதியின் பெயரே. //

    திராவிடம் என்பது ஒரு பகுதியின் பெயரென்றால் திராவிடர் கழகம் என்றால் என்ன? அவர்கள் ஏன் ஆரியம் பற்றிப் பேசுகிறார்கள்?

    நான் திராவிடர் என்று சொன்னது ஈ.வே. ரா வைப் பின்பற்றுபவர்களை.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.