பணிப்பொன்

muruga’’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’’ என்கிறார் திருமூலர். தேவன் ஒருவனே என்றாலும் அந்த தேவனுக்குத்தான் எத்தனை உருவங்கள்! எத்தனை பெயர்கள்! அவரவர்கள் உணர்ந்தவாறு, விரும்பியவாறு ஒவ்வொரு பெயரிட்டு வணங்கி வழிபாடு செய்து வருகிறோம்.

ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ?

என்று அந்த தேவனுக்கு ஆயிரம் நாமங்களையும் சூட்டி மகிழ்ந்தனர். ’ஈஸ்வர் அல்லா தேரே நாம்’ என்றார் காந்தியடிகள். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் விளங்கும் இறைவனை எளிதில் உணர அவன் நாமங்களே நமக்கு உதவுகின்றன.அந்தந்த நாமங்களைச் சொல்லும் போதே அந்த உருவத்தையும் நாம் கற்பனை செய்து பார்க்கிறோம். ராமா என்று சொல்லும் போது வில்லும் கையுமாக இருக்கும் உருவமும், முருகா என்னும் போது வேலும் மயிலும், சேவற்கொடி யோடு இலங்கும் உருவமும் கண்ணன் என்றால் குழலோடும் மயிற்பீலியோடும் திகழும் உருவமும் தோன்றுகிறது. காமாக்ஷி என்றால் அமர்ந்த கோலத்தில் கரும்பு வில்லோடு வீற்றிருக்கும் கோலமும் தெரிகிறது.

நாலு பவுன் எடையுள்ள தங்கக்கட்டி அல்லது தங்க பிஸ்கட் நம்மிடம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நம்மிடம் இருப்பது தங்கம் என்றாலும் அதை நம்மால் அப்படியே அணிந்து கொள்ளமுடியாது. ஆனால் இந்த தங்கக்கட்டியைச் சங்கிலியாகவோ, வளையல்களாகவோ மாற்றினால் அதே தங்கம் மேலும் அழகும் வடிவமும் பெற்று உபயோக மாகவும் ஆகிறது. அந்த அணிகலன்களை அணிந்து அழகும் ஆனந்தமும் பெறுகிறோம். இறைவனும் கட்டிப்பொன் போன்றவன். இறைவனுக்கு இரண்டு நிலைகள் இருக்கிறது. ஒன்று நாம ரூபமற்ற நிலை. மற்றொன்று நாமமும் ரூபமும் கூடிய நிலை.

முதல் நிலையிலுள்ள இறைவனை எல்லோராலும் காணவும் உணரவும் முடியாது. இறைவன் அருளைப் பெற்றவர்களாலேயே அவனைக் காண முடியும். இரண்டாம் நிலையிலுள்ள இறைவனை எல்லோராலும் காண முடியும். அவனுடைய நாமங்கள் மூலம் அவனை உணர்கிறோம். மேலும் அவனுடைய நாமங்களை எல்லோரும்சொல்லலாம். வாய் பேசமுடியாதவர்கள் என்ன செய்வது யோசிக்க வேண்டாம். வாய்பேச முடியாதவர்களுக்கும்,சம்பந்தப் பெருமான் ஒருவழி சொல்கிறார்.

’துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்
நெஞ்சக நைந்து நினமின் நாள் தொறும்’

நினைக்க நெஞ்சம் இருக்கிறதே! என்கிறார். ஆக இறைவனைவிட அவன் நாமங்களே எங்கும் எந்த நேரத்திலும் எளிதாகப் பயனாகிறது. இதையே

’’கட்டிப்பொன் போலே அவன்(இறைவன்)
பணிப்பொன் போலே (அவன்) திருநாமம்

என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை. கட்டிப் பொன்னை எல்லோரும் அணிந்து அழகு பார்க்க முடியாது ஆனால் நகைகளாக்கப்பட்ட பொன்னையோ எல்லோரும் எளிதில் கையாண்டு அணிந்து அழகு பார்க்க முடியும். கட்டிப் பொன்னான இறைவனை விட பணிப் பொன்னான அவனுடைய திரு நாமங்களை எல்லோரும் பாடி, கூவியழைத்துப் பயன் பெறமுடியும் என்று விளக்குகிறார். இதற்கு ஆதாரமாக மஹாபாரத நிகழ்ச்சியைக் காட்டுகிறார்.

கோவிந்த நாமம்

draupadi1துரியோதனனுடைய பெரிய சபையிலே வெறும் மாடுநிகர்த்த துச்சாதனனால் மைக்குழல் பற்றி இழுத்து வரப்படுகிறாள் திரௌபதி. துரியோதனன் ஆணைப்படி அந்த துச்சாதனப் பெருமூடன் பிச்சேறியவனைப் போல் அவளுடைய துகிலை உரிய ஆரம்பிக்கிறான். கணவன்மார்கள் ஒருவரல்ல ஐவருமே செயலற்றுப் போய்விட்டார்கள்! அவையில் இருந்த மூத்த குடிமக்கள் எல்லோரும் நெட்டை மரங்களென நின்றனர்!

ஆறாயிரு தடங்கண் அஞ்சன வெம்புனல் சோர
அளகம் சோர
வேறான துகில் தகைசோர மெய்சோர வேறு ஒரு
சொல்லும்
கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்று அரற்றிக்
குளிர்ந்த நாவில்
ஊறாது அமிழ்தூற உடல் புளகித்து உள்ளம் எல்லாம்
உருகினாளே.

அவளது மானத்தைக் காத்தது எது? ‘’திரௌபத்திக்கு ஆபத்திலே புடவை சுரந்தது திருநாமமிறே!’’. கோவிந்தா கோவிந்தா என்று அலறி அலறி அழைத்த அந்த நாமம் தானே அவளைக் காத்தது?

நாராயண நாமம்

சிறுவன் ப்ரஹ்லாதன் குருகுல வாசம் செய்யப் போகிறான்.ஆசிரியர் ‘’ஓம் இரண்யாய நம; என்று ஆரம்பிக்கிறார். வெள்ளையர்கள் நம்மை ஆண்ட அக் காலத்தில் முதலில் ‘’ God save the King’’என்று சொல்லி விட்டுத்தான் தொடங்க வேண்டும். இரணியன் காலத்தில் அவன் பெயரைச் சொல்லி விட்டுத்தான் எதையும் தொடங்க வேண்டும். ஆனால் ப்ரஹ்லாதனோ, ‘’ஓம் நமோ நாராயணாய’’ என்று சொல்கிறான். இதைக் கேட்ட ஆசிரியர் நடுங்குகிறார்.’’ப்ரஹ்லாதா, இந்தப் பெயரை ஏன் சொல்கிறாய்? நம் தலைவனான உன் தந்தையின் பெயரைச் சொல்’’ என்கிறார்.ஆனால் ப்ரஹ்லாதனோ, மறுபடியும்’’ஓம் நமோ நாராயணாய’’என்கிறான். மற்ற மாணவர்களுக்கும் கற்றுத் தருகிறான்.’’குருவே இது முன்னை வேதத்தின் முதல் பெயரல்லவா? மேலும்

ஆறா அமுதாய் ஆறு வயதிலே அன்புசெய்
துருவன் உணர்ந்த மந்திரம், நராயண திவ்ய நாமம்
நான்மறை சொல்லும் நாயகன் திருநாமம்,
நாவிற்கினிய நாராயண திவ்ய நாமம்.

இதைக்கேட்ட ஆசிரியர் நடுங்கிப் போய் இரணியனிடம், ’’மன்னா, தங்கள் மகன் ஏதேதோ சொல்கிறான்’’ என்று பயந்து கொண்டே முறையிடுகிறார்.

இதைக் கேட்ட இரணியன் சிறுவன் ப்ரஹ்லாதனைக் கூப்பிட்டு‘’குழந்தாய் நீ உன் ஆசிரியர் சொல் வதைக் கேட்பதில்லையாமே? அவர் மனம் நோகும் படி நீ நடந்து கொள்ளலாமா? நீ தவறானவைகளைச் சொல்கிறாயாமே? இப்படிச் செய்யலாமா?’’ என்று கேட்கிறான். கருவிலே திருவுடைய குழந்தை சொல்கிறான்.‘’தந்தையே நான் தவறாக எதையும் சொல்லவில்லை. இந்தப் பிறவிக்கடலைக் கடக்க எது தேவையோ அதையே சொன்னேன்’’ என்கிறான்.’’அப்படியா மகனே அது என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா? ப்ரணவத்தின் பொருளைக் குழந்தை முருகன் தந்தைக்கு உபதேசித்தது போல் ப்ரஹ்லாதன் இரண்யனுக்கு உபதேசம் செய்கிறான்

காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால்
சேம வீடுறச் செய்வதும் செந்தழல் முகந்த
ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும், ஒருவன்
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய’’

hiranyaஎன்று அஷ்டாக்ஷர நாம மகிமையை விரிவாகச் சொல்கிறான். தன் எதிரியின் பெயரைக் கேட்டு அடங்காத சீற்றம் கொண்டு ப்ரஹ்லாத னுக்கு எத்தனையோ விதமான துன்பங்களைக் கொடுக்கிறான். ஆனால் அஷ்டாக்ஷர நாமத்தின் மகிமையால் அத்தனை துன்பங்களையும் விலக்கி கடைசியில் சிரஞ்சீவிப் பட்டமும் பெறுகிறான் ப்ரஹ்லாதன்.

நம்பியும் பிம்பியும்

இறைவனின் திருநாமங்கள் இவ்வளவு பெருமை உடையதாக இருப்பதால் அவற்றை அடிக்கடி சொல்ல வேண்டும் என்பதற்காகவே நமது பெரியோர்கள் குழந்தைகளுக்கு இறைவனது திருப்பெயரையே சூட்டினார்கள்.

மண்ணிற் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டு அங்கு
எண்ண மொன்றின்றி யிருக்கும் ஏழை மனிசர்காள்
கண்ணுக்கினிய கருமுகில் வண்ணன் நாமமே
நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்

என்று பெரியாழ்வார் அறிவுறுத்துகிறார். நம்பி பிம்பி என்றெல்லாம் பெயர் வைக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்துகிறார். ஆனால் இப்பொழுதெல்லாம் அபிமான நடிக நடிகைகள் பெயர்களையும் விளையாட்டு வீரர்களின் பெயர்களையுமே தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுகிறார்கள்.

அஜாமிளன் சொன்ன நாமம்

ஆண்டவன் பெயரைத் தன் மகனுக்குச் சூட்டியதால் நற்கதி அடைகிறான் அஜாமிளன். தனது குழந்தைக்குப் பெயர் சூட்டுவதற்காக ஒரு நல்ல பெயரைத் தேர்ந்தெடுக்கிறான். அது என்ன நாமம்?

நாரதாதி முனிவரும் சனகாதி யோகியரும் – ப்ரஹ்லாதனும்
எந்நாளும் மனோலயமுற வாயார பஜிக்கும் ஆனந்த நாமம்
கோரபவ சாகரத்துள் நம்மை மிகு
ப்ரேமையுடன் கைதூக்கிஅருள் வேத ஸார தாரக நாமம்
பூமகள் மணவாளன் புனித கருட வாகனன்
நீலமுகில் போலும் மேனி அழகன் திருநாமம்
அன்பர் துன்பமகல மங்கலம் அருள்வோன் வைகுண்டபதி பாவன நாமம்.’’

இவ்வளவு பெருமை பொருந்தியநாராயண நாமத்தைத் தான் தன் மகனுக்குச்சூட்டினான். அருமைக் குழந்தையானதால் அவனை அடிக்கடி கூப்பிட்டுக்கொண்டே யிருப்பான். பையன் வளர்ந்து பெரியவனாகும் சமயம் அஜாமிளனுக்குக் கெட்ட சகவாசம், விலைமாதர் தொடர்பு எல்லாம் எற்பட்டது. தனது கடமைகளை புறக்கணிக்க ஆரம்பிக்கிறான். உடல் நலம் கெட, செல்வமும் செல்வோம் என்று செல்ல ஆரம்பித்தது. வயதும் ஏற மூப்பும் நோயும் சேர நினைவு தடுமாற ஆரம்பிக்கிறது.

periyalvar-srivilliputturஐந்து இந்திரியங்களும் கைவிட்ட நிலையில் யார் கை கொடுப்பார்கள்? ஆண்டவன் ஒருவனே கைகொடுக்க முடியும். ஆனால் அந்த நேரம் ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அழைக்க முடியுமா? நல்ல நினவும் அறிவும் இருக்கும் போதே ஆண்டவன் நாமங்களைச் சொல்லிப் பழக வில்லை யென்றால் புலனடங்கி நினைவிழந்து பொறிகலங்கி கபம்அடைக்க நலம் நசிந்து நமன் வரும் வேளையிலா நாமம் சொல்ல முடியும்? அதனால் தான் ஆன்றோர்கள், நாம் நல்ல நிலையில் நினைவோடும் அறிவோடும் இருக்கும் போதே இறைவன் திரு நாமங்களைச் சொல்லிப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். பிற்காலத் தேவைகளுக்கு என்று எப்படி பணத்தைச் சேமித்து வைக்கிறோமோ அதேபோல கடைசி நேரத்துக்கு உதவும் என்று நாமங்களை ஜபித்து எழுதி சேமித்து வையுங்கள் என்கிறார்கள். அப்போது சொல்ல முடியாது நினைக்க முடியாது என்பதால் இப்போதே சொல்லி வைக்கிறேன் என்கிறார்கள்.

‘’எய்ப்பென்னை நலியும் போது அங்கேதும் நான் உன்னைநினைக்க மாட்டேன்
அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்(து) அரவணைப் பள்ளியானே!

என்கிறார் பெரியாழ்வார்.

இங்கு அஜாமிளனுக்கு நினவு தடுமாறி விட்டது. இறுதி நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவனுக்குப் பயம் தோன்றுகிறது. அதனால் தன் மகனை நாத்தடுமாறஅழைத்தான். அழைத்த பொழுதே உயிர் பிரிந்து விடுகிறது. அஜாமிளன் விரும்பியோ சுய நினைவோடோ ஆண்டவனைக் கூப்பிட வில்லை. ஆனாலும் இறைவன் நாமம் அவனுக்கு நற்கதியை அளிக்கிறது! நாம் ஸ்ரீரங்கம், திருப்பதி, ஸ்ரீவைகுண்டம் என்று சொன்னால் கூட என் ஊரைச் சொன்னாய், என் பேரைச் சொன்னாய் என்று அருள் செய்ய வருகிறானாம் இறைவன். ஆதிமூலமே என்று கஜேந்திரன் அழைத்ததைக் கேட்டுதானே திருமால் கருட வாகனத்தில் ஓடோடி வந்தான்.

ஒரு பையன் அலமாரியில் வைத்திருந்த பேதி மாத்திரையைத் தவறுதலாக மிட்டாய் என்று நினைத்துச் சாப்பிட்டு விட்டான். தெரியாமல் தின்று விட்டான் என்பதற்காக மருந்து தன் வேலையைச் செய்யாமல் இருந்து விடுமா? அஜாமிளன் சொன்ன அஷ்டாக்ஷர நாமமானது விஷ்ணு தூதர்களையே வர வழைத்து விடுகிறது. ஏற்கெனவே வந்திருந்த எம தூதர்களை இவர்கள் தடுத்து விடுகிறார்கள்.’’தரும ராஜனின் தூதர்களே! நீங்கள் தருமம் தெரிந்தவர்கள். இறைவனின் நாமமாகிய நாராயண நாமத்தை இவன் சொன்னதுமே இவனுடைய அனைத்துப் பழைய பாபங்களும் தீயினில் தூசுபோல் பொசுங்கி விட்டன. அதனால் அஜாமிளனை நாங்கள் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறோம்’’ என்று சொல்லி அஜாமிளனோடு வைகுண்டம் செல்கிறார்கள்.

ராம நாம மகிமை

rama3அருணகிரிநாதரும் ’’மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்’’ என்று நாமங்களின் பெருமையைப் பேசுகிறார். அவன் நாமத்தை யாரும் எந்த இடத்திலும் சொல்லலாம். ’’எல்லோரும் ராம நாமத்தைச் சொல்லுங்கள்’’ என்று சம்பாதி சொல்ல வானரங்கள் ராம நாமம் சொல்லச் சொல்ல தீய்ந்துபோன தன் சிறகுகளைச் சம்பாதி பெறுகிறான் என்று ராம நாம மகிமையை ராமாயணம் சொல்கிறது. ராம நாம மகிமையைப் பேச வந்த கம்பன்

மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்

என்று போற்றுகிறார். கலியுகத்தில் நாம சங்கீர்த்தனமே மிகவும்
நன்மையைத் தரும். பகவான் சொல்கிறார் –

யோகி தன் உள்ளிலோ பரிதியிலோ
வைகுண்டம் தன்னிலோ வாசமில்லை
பக்தர்கள் நாமம் ஜபிக்கும் போது
பக்கத்தில் நான் செல்வேன் நாரதரே.

நாம சங்கீர்த்தனம் நடைபெறும் இடங்களுக்கு இறைவனே வருவதால் அவன் நாமங்கள் என்னும் பணிப்பொன்னை நாவில் அணிந்து நலம் பெறுவோம்.

4 Replies to “பணிப்பொன்”

  1. அருமையான கட்டுரை. திருமதி ஜெயலட்சுமிக்கு நன்றியும் வாழ்த்துக்களும். புரந்தர தாசரின் “நீன் யாகோ நின்ன ஹங்கே யாகோ நின்ன நாமத பல ஒந்தித்தரே சாகோ ” என்ற பதம் நினைவிற்கு வந்தது.

  2. Thanks for a wonderful article.
    Nit picking here,but, do Muslims consider Easwaran and Allaha as one and the same? Gandhi might have thought that but I doubt Islamist would consider Easwara as Allaha

  3. ‘இறைவன் நாமமே மறவல்நெஞ்சமே’ என்றார் திருஞானசம்பந்தர். “வேந்தாக டம்புபு னைந்தருள், சேந்தாச ரண்சர ணென்பது, வீண்போம தொன்றல என்பதை உணராதோ’ என நாம உச்சாரணம் பெரும்பயன் அளிக்கும் என உறுதியளித்தார், அருணகிரிப் பெருமான். “பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறமெழ உரைத்தாற்போல், உன்னைக் கொண்டுஎன் நாவகம்பால் மாற்றின்று உரைத்துக் கொண்டேன்” என்றருளினார், ஆழ்வாரும். நாமும் நம் புலால் நாவினைத் திருநாம உச்சாடனத்தால் பொன் நாவாக மாற்றி கொள்வோம். அதனால் புன்னா செந்நாவாகும். ஜயலட்சுமி அவர்களுக்குப் பாராட்டுக்கள்

  4. இராம காதையில் அனுமன் சீதாபிராட்டியைத் தேடி தென்னிலங்கை நோக்கிச் செல்கையில் கடல் குறுக்கிட அதனைத் தாண்டிச் செல்வது எப்படி என்று ஆலோசிக்கின்றனர். ஜாம்பவான் அனுமனின் பெருமைகளை எடுத்துச் சொல்லவும் தன்னிலை உணர்ந்த ஆஞ்சநேயன் உடனே “இராம” என்று சொல்லி அந்த மந்திரத்தின் மகிமையால் கடலைத் தாண்டிச்சென்றான். ஆனால், இராமபிரான் அதே கடற்கரைக்கு வந்தபோது, சேது அமைத்துத்தான் தாண்ட முடிந்தது. இராமனை விட இராம நாமமே உயர்ந்தது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *