சில சரித்திர நூல்களைப் படிக்கையில்..

May 5, 2010
By

சரித்திரத்தை எழுதும் போது நமது பிரபல சரித்திர ஆசிரியர்கள், சில நேரங்களில் உண்மையை மறைத்து விடுகிறார்கள். இதை அவர்கள் வேண்டுமென்றே செய்கிறார்களா அல்லது அப்படித்தான் எழுத வேண்டுமென்று ஒரு கூட்டம் நினைக்கிறதா என்றே புரிவதில்லை!

சமீபத்தில் எனக்கு இரண்டு நூல்கள் ஒரு பிரபல ஆங்கில தினசரியால் விமர்சனத்துக்கென அனுப்பப் பட்டிருந்தன. அவை இரண்டுமே சிறந்த ஒரு ஆஸ்திரேலிய சரித்திர அறிஞரால் (மைக்கேல் பியர்சன்) முன்னுரை எழுதப்பட்டவை. அவர் இந்து மஹா சமுத்திரத்தின் சரித்திர ஆய்வை மிக்கத் திறம் படச் செய்தவர். ஆகையால் அந்நூல்கள் வந்தவுடன் நான் மகிழ்வுடன் தான் படிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் பல விஷயங்களில் எனக்கு அவை ஏமாற்றத்தையே அளித்தன.

முதல் நூல் பல ஆசிரியர்களின் சரித்திரக் கட்டுரைகளின் தொகுப்பு. யோகேஷ் ஷர்மா என்பவர் தொகுப்பாசிரியர். இரண்டாவது நூல் பயஸ் மாலேக்கண்டத்தில் என்பவருடைய பல கட்டுரைகளின் தொகுப்பு. இரண்டுமே கடல் சார் வணிகத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. ஆகையால் தான் அவை எனக்கு விமர்சனத்துக்கென அனுப்பப் பட்டன.

கடல்சார் வணிகம் எவ்வாறு பல நாடுகளின் இடையில் கலாசார பரிவர்த்தனைக்கும், மத மாற்றங்களுக்கும் துணை புரிந்தது என்பதை எடுத்துக் கூறுகின்ற நூல்களாகையால் நான் விரும்பிப் படித்து தான் அவற்றிற்கு விமர்சனம் எழுதியுள்ளேன். அந்த விமர்சனம் தி ஹிந்து நாளிதழில் (27 ஏப்ரல் 2010) வெளியானது.

06oeb_maritimeபயஸ் தனது நூலில் கிறிஸ்துவ மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளார். அவர் குறிப்பிடுகையில், கிறிஸ்து சகாப்தத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தே கிறிஸ்து மதம் சேர நாட்டில் நன்றாக இருந்ததென்றும் அவர்கள் எவ்வாறு கலாசார முறையில் சேர நாட்டாரோடு இணந்திருந்தார்கள் என்றும் எழுதியுள்ளார். செயிண்ட் தாமஸ் கிறிஸ்துவர்கள் என்றறியப்பட்ட  கிறிஸ்துவர்கள் வாஸ்கோட காமா போன்றவர்கள் வருகையில் துணை புரிந்தனர் என்றும் எழுதியுள்ளார். தவிரவும் சேரர்கள் காலத்தில் முசிறி தான் சிறந்த துறைமுகமாக இருந்ததென்றும், மற்றவை சேரநாட்டுக் குறுநில மன்னர்களால் முசிறிக்குத் துணைத் துறைமுகங்களாகவே நடத்தப்பட்டு வந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

இது எனக்குச் சரியெனப்படவில்லை. ஏனெனில் சங்க காலத்திலேயே தொண்டி அறியப்பட்டிருந்தது. அர்த்தசாஸ்திரத்தில் கூட விவரங்கள் உள்ளன். செங்கடல் வழிகாட்டி இவ்வாறு கூறுகிறது (53 ஆம் பத்தி) –

“கலியாணாவுக்கு அடுத்து வருவது செமில்லா (இன்றைய சால்). மண்டகோரா (பாங்கொட்), ப்லேபடமே (தாபோல்), மெலிஜிகாரா (ராஜாபுரா), பைஜாந்தியம் (விஜயடுர்க்கா), டோகரம் (தியோகர்), அவுராணபோஸ் (மால்வன்), ஐகிதி (கோவா), நெள்வ்ரா (கண்ணனூர்), திண்டிஸ் (பொன்னாணி), இவையெல்லாம் டாமிரிகாவின் (தமிழகத்தின்) சந்தை ஊர்கள், பிறகு முஜிரிஸ் (கிரங்கணூர் – சமீபத்தில் பட்டணம்), நெல்சிந்தா (கோட்டயத்திற்கு அருகையில்) ஆகியன முக்கிய ஊர்கள்”

அகநானூறு (149) இவ்வாறு சொல்கிறது:

”யவனர் தந்த வினைமான் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி”

புறநானூறு (343 : 5-10) இவ்வாறு சொல்கிறது:

”மீன்நொடுத்து நெல்குவைஇ
மிசையம்பியின் மனமறுக்குந்து
மனைக்குவைஇய கறிமூடையால்
கலிசும்மைய கரைக்கலக்குறுந்து
கலம் தந்த பொற்பரிசம்
கழித்தோணியான் கரை சேர்க்குந்து
மலைத்தாரமும் கடல்தாரமும்
தலைப் பெய்து வருநர்க்குஈயும்
புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்கு கடல் மழவின் மிசிறியன்ன”

இவை மேலே குறிப்பிட்ட சரித்திர ஆசிரியர்களால் குறிப்பிடப் படவில்லை! கண்களில் படுவதில்லையோ?

கடல் வழி வணிகம் முதல் நூற்றாண்டிலிருந்தே நன்கு அறியப்பட்டிருந்தது. சங்க நூல்களில் சிறப்பாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது. சங்க நூலினின்று, எவ்வாறு அரசு, வணிகப் பெருமக்களுக்கு உதவி செய்து அவர்கள்து பொருட்களை ஜாக்கிரதையாகப் பாதுகாத்ததென்பதும் தெரிந்து கொள்கிறோம். இது குறித்து இந்த நூலில் விவரம் கூறப்படவில்லை. ஆனால் கிறிஸ்துவர்கள் எவ்வாறு உதவினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல கிழக்கு நாடுகளில் செயல் பட்டுவந்த வணிகக் குழுக்களின் பெருமையும் கூறப்படவில்லை. முக்கியமாக, கிழக்கு ஆசிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் குறித்து ஒன்றும் கூறப்படவில்லை.

ஷர்மா தொகுத்துள்ள கட்டுரைகளுக்கு அவர் எழுதியுள்ள நீண்ட முகவுரையில் மதராசைக் குறித்து எழுதுகையில் படகோட்டிகளின் வாழ்க்கையைக் குறிப்பிட்டுள்ளார். அது பலவிதங்களில் உண்மைக்குப் புறம்பாக உள்ளது. படகோட்டிகள் ஆனந்தமாக வாழ்க்கை நடத்திக்கொண்டு ஆங்கிலேயர்களுக்கு உதவினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதைப் பற்றி எழுதுகையில் ஆர்ம்ஸ்ட்ராங்க் என்பவர் (இவர் மதராஸ் துறைமுகத்தின் தலைவராக நீண்டகாலம் இருந்தவர்) படகோட்டிகள் (மசூலா படகுகள்) எவ்வாறு பணம் வசூலிப்பதில் சிறந்திருந்தனர் எனபதைக் குறிப்பிடுகிறார்.

அதே போல கம்பெனி காலத்தில் அடிமை வியாபாரம் சிறந்திருந்தது என்பதையும், மெட்ராஸ் தான் அதற்குப் பெயர் பெற்றிருந்ததென்பதையும் இவ்வாசிரியர்கள் கூறவேயில்லை.

ஆங்கில நூல்களிலேயே எவ்வாறு கிறிஸ்துவர்கள், முக்கியமாக கத்தோலிக்கர்கள் (போர்ச்சுகீசியர்கள்) இந்தியாவுக்கு வருகையிலேயே ஒரு கையில் வாளுடனும் மற்றொரு கையில் சிலுவையுடன் வந்தார்கள் என்பது நன்றாகவே சொல்லப்பட்டுள்ளது. எல்லோராலும் குறிப்பிடப்படுகிற சரித்திர ஆசிரியரும் ஆண்மையாளருமான் ஹண்டர், தமது நூலில் இவ்வாறு கூறுகிறார்: “டி காமாவினுடைய வெற்றிகள் அவன் செய்த கொடூரச் செயல்களினால் கறை பட்டிருந்தன. கோழிக்கோட்டிலிருந்த கப்பல்களைத் தன் வசமாக்கிக் கொண்ட பிறகு டி காமா அங்கிருந்த எண்ணூறு மாலுமிகளின் கைகளையும் கால்களையும் மற்ற அவயவங்களையும் வெட்டினான். அவ்வாறு வெட்டப்பட்ட அவயவங்களைக் காய்ந்த இலைகளில் கட்டி, அவற்றை ராஜாவுக்கு அனுப்பி வைத்தான்!”

இது போன்ற செய்திகள் இந்த ஆசிரியரால் கூறப்படவில்லை. ஆனால் கிறிஸ்துவர்கள் செய்த பல வணிக சம்பந்தப்பட்ட காரியங்கள் கூறப்படுகின்றன.

குறை கூறும் நோக்கத்துடன் நான் இதை முன் வைக்க வில்லை. படிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஒரே நோக்கத்தால் தான் இதை நான் சொல்ல வேண்டியுள்ளது. சரித்திரத்தின் உண்மைகள் மறைக்கப்படலாகாது என்பதே எனது நோக்கம். இவற்றைக் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

குறிப்பிடப் பட்ட நூல்கள்:

COASTAL HISTORIES SOCIETY AND ECOLOGY IN PREMODERN INDIA: Edited by Yogesh Sharma;
MARITIME INDIA – Trade, Religion and Polity in the Indian Ocean: Pius Malekandathil;

Both the books pub. by Primus Books, Virat Bhavan, Mukherjee Nagar, Commercial Complex, Delhi-110009.

narasiah”கடலோடி” நரசய்யா தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.   கடல்வழிவாணிகம்,  கடலோடி, துறைமுக வெற்றிச் சாதனை ஆகிய நூல்களுடன்,   பல  சிறுகதைகளும், சென்னையின் வரலாறு குறித்து மதராசபட்டினம் என்ற நூலும்,  மதுரை வரலாறு குறித்து ஆலவாய் என்ற நூலும் எழுதியுள்ளார்.  மேலும் விவரங்கள் இங்கே.

Tags: , , , , , , , , , , , , ,

 

7 மறுமொழிகள் சில சரித்திர நூல்களைப் படிக்கையில்..

 1. snkm on May 5, 2010 at 2:36 pm

  உண்மைகளை மறைப்பதற்காகவே எழுதி இருப்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!

 2. kargil jay on May 5, 2010 at 7:32 pm

  தமிழ் ஹிந்து தளத்துக்கு,
  சிறப்பான கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி.

  நரசய்யா மிக வித்தியாசமான எழுத்தாளர் என்பதும், ஒரு சமூக சேவகர், தேச பக்தர் என்பதும் ஆசிரியர் குறிப்பில் இல்லை. வெறுமனே அவர் நூலாசிர்யர் என்று மட்டும் இருக்கிறது. அவர் தியாகி பேராசிரியர் பரமசிவத்தின் அண்ணனுமாவர் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்.

 3. ரங்கசாமி on May 7, 2010 at 8:06 pm

  நல்ல கட்டுரை.

  என்னதான் ஒருவர் கல்வித்துறையில் நீண்டகாலம் இருந்தாலும், நடுநிலையுடன் எழுதுவதாக சொல்லிக்கொண்டாலும், கிறிஸ்துவராக பிறந்ததாலும், கிறிஸ்துவ மதம் சிறந்தது என்று இந்த வரலாற்றாய்வாளர்கள் கருதுவதாலும், கிறிஸ்துவத்தின் பிம்பங்களுக்கு புறம்பான செய்திகளை மறைப்பதும், கிறிஸ்துவம் நல்லது என்பதை காட்டக்கூடிய செய்திகளை முன்னிருத்தி பாராட்டுவதும் அவர்கள் அறியாமலேயே செய்கிறார்கள்.
  அதேபோல, இந்தியாவிலும் இதனை ஒட்டிய ஒரு கல்வித்துறை, ஆய்வாளர் துறை வளர்ந்திருக்கிறது.
  academic என்று சொல்லப்படும் ஆய்வு – கல்வித்துறையில் இப்படிப்பட்ட சார்புடைய எழுத்தாளர்கள் வெகுகாலமாக பணியாற்றி, இந்திய – இந்து சார்புடைய செய்திகளை மறைத்தும், கிறிஸ்துவ இஸ்லாமிய மையக்கருத்துக்களை கொண்டு எழுதியும் இந்தியர்களை இந்து மதத்தை பற்றிய தாழ்வு நிலையை பொது கருத்தில் உருவாக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

  இதற்கு மாற்று, இந்திய – இந்து சார்புடைய ஆய்வாளர்களை உருவாக்குவதும், அவர்கள் கல்வித்துறைகளில் திறம்பட செயல்படுவதுமே.

  இந்து – இந்திய சார்புடைய ஆய்வாளர்கள் உருவானால், இரண்டு புறத்து கருத்துக்களும் உள்ளே வந்து ஒரு நடுநிலை ஆய்வாளருக்கு பயன்படும்.

  இன்று இந்தியாவை பற்றிய ஒற்றைப்படை சித்திரமே உருவாக்கப்பட்டுள்ளது.

  அப்படி ஏராளமான இந்திய சார்புடைய ஆய்வாளர்களை உருவாக்குவது என்பது அரசாங்கம் இந்து சார்புடையதாக இருப்பதாலேயே முடியும்.
  இந்தியாவில் அப்ப்டிப்பட்ட ஒரு அரசாங்கம் அமையவே இல்லை. அமைந்த ஒரு அரசும், தனிப்பெரும்பான்மை இல்லாமல் முடமான அரசாகவே நின்று போயிற்று.

 4. R.Sridharan on May 15, 2010 at 10:30 pm

  பாரத நாட்டு சரித்திரமே முற்றிலுமாக மாற்றி எழுதப்பட்டுள்ளது .ஏனெனில் நாமெல்லாம் அதை பற்றிக் கொஞ்சமும் பெருமிதம் கொள்ளக்கூடாது என்பதுதான். வெள்ளைக்காரர்கள் வந்து தான் நம்மை நாகரிகப் படுத்தினார்கள் என்பது போல் எழுதப்படுகிறது .
  மேலும் இப்போது புதிதாக முளைத்துள்ள காளான்களான நம்ம ஊர் சரித்திர ஆசிரியர்கள் முகலாயர்களின் அட்டூழியத்திற்கு வெள்ளை சாயம் பூசி எழுதுகின்றனர் .அவர்கள் கூலிக்கு வேலை செய்கின்றனர் என்பது வெட்ட வெளிச்சம்

  ஒரு படி மேலே பொய் நமது முன்னோர்களான மாபெரும் மன்னர்களையும்,பெரியோர்களையும், மகாத்மாக்களையும் மட்டமாக சித்தரிக்கிறார்கள்
  உதரணத்திற்கு சத்ரபதி சிவாஜி பற்றி ரோமில்லா தபார் போன்றோர் எழுதுவது

  ஆனால் அயோ க்கியனான அவுரங்கஜிபை மிக நல்லவன் போல் எழுதுகிறார்கள் .

  ரா.ஸ்ரீதரன்

 5. sahridhayan on May 17, 2010 at 2:44 pm

  அவ்வளவு யென், நாம் நடுத்தும் வினாடி வினா நிகழ்ச்சிகளை பாருங்கள் விஜய் டிவியில் வெளியான து ஒரு வரி கூட இந்தியாவை பற்றி கெட்கவில்லை,

  முழுக்க அமெரிக்க மற்றும் ஐரொப்பியம் மற்றுமெ, கவனித்து பாருங்கள்

  சஹ்ரிதயன்

 6. G.Munuswamy on May 19, 2010 at 12:07 pm

  பயுஸ் மலேகண்டதில் முதலில் ஒரு மலையாளி பிறகு ஒரு கிறிஸ்டியன். அவர் அப்படி தான் எழுதுவார். அவருக்கு தன் மாநிலம் பிறகு தன் மதம் தான் நினைவுக்கு வரும். கடல் சார் வணிகத்தில் சிறந்து விளங்கிய தமிழக கடல் வணிகம் நினைவுக்கு வராது. அதன் பிறகு தன் ஏழை இந்திய திருநாடும் நினைவுக்கு வராது. அனால் கிறிஸ்து மதம் பரப்ப வந்த portugal France and Briton ஆகியவை உடனே நினைவுக்கு வரும். ஏனெனில் அது அவர் சார்ந்த மதம். என்னே அவரின் நாட்டுபற்று.
  தமிழர்கள் நம்முடைய முன்னோர்களின் திறமைகளை ஆங்கிலத்தில் எழுதி நூல்களாக வரவேண்டும்.
  கோ. முனுசாமி
  சென்னை

 7. guna on April 7, 2015 at 4:05 pm

  இந்த மாதிரியான எண்ணமே நம்மை இன்னும் தாழ்த்துகிறது சகோதரா ( முதலில் மலையாளி ). மலையாளி ஆகா இருந்தாலும் தமிழனாக இருந்தாலும் , கன்னடர் ஆகா இருந்தாலும் நாம் எல்லோரும் இந்துக்களே.
  வாச்கொடகாமாவை பழி தீர்த்த நமது கோழிகோடு மனனர் சாமூதிரி அவர்களை பற்றிஉஎம் விரிவாக எழுதவும்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*