வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?

தமிழக அரசின் ‘சின்ன’ சிந்தனைகள் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும்போது தோன்றியவை இந்த என் எண்ணங்கள். கோபுரத்தை இறக்குவதா அல்லது அய்யனை ஏற்றுவதா என்ற விவாதம் ஒரு புறம் நடக்கட்டும். அய்யனை பாறையில் ஏற்றிக் காட்டிய திரு. ரானடேயின் கனவுகள் நிசத்தில் பெரு உருவாய் நடந்ததது போல அவரது மற்ற கனவுகளும் நனவானாலும் ஆகட்டும். நான் சொல்ல வந்தது சின்னத்தில் கீழே உள்ள வாக்கியம் குறித்து ஜடாயு அவர்கள் அவரது கட்டுரையில் சற்றே தொட்டுக் காட்டியது பற்றியே.  (ஜடாயுவின் கட்டுரை இங்கே.)

“வாய்மை” பற்றி எனக்கும் அவர் சொல்லியதை ஒத்த  ஓர் எண்ணம் உண்டு. அவர் குறிப்பிட்டுள்ளது போல் “சத்யமேவ ஜயதே” என்ற சொற்றொடருக்கு “வாய்மையே வெல்லும்” என்பது முழு விளக்கமாகாது.

எந்த மொழியிலும் சில சொற்களுக்கு சில விசேஷமான பொருள் இருக்கும். அதை வேறு மொழியில் பெயர்த்து எழுதுவது சற்றே கடினம்தான். அப்படிப்பட்ட ஒரு வார்த்தைதான் சம்ஸ்க்ருதத்தில் உள்ள “சத்” என்பதும்.

அதற்கு தமிழில் “உள்ளது”, “இருப்பது” என்று பொருள் கொள்வது ஓரளவே பொருத்தமாக இருக்கும். ஏனெனில், “இருப்பது” என்று பொருள் கொண்டால் அதன் எதிர்மறையாக “இல்லாதது” என்று வரும். ஆனால் “சத்” என்பது “இருப்பது”, “இல்லாதது” என்ற இரண்டையும் அடக்கி, அவைகளையும் கடந்து உள்ள ஒன்றைக் குறிப்பிடுவது.

ramana-maharshi-09அதாவது, தமிழில் இவ்வார்த்தையின் பொருளாக “என்றும் உள்ளது” என்றே கொள்ளவேண்டும். மகரிஷியான ரமணரே இதைப் பற்றி எழுதும்போது எல்லா விவரங்களையும் தந்து விட்டு, கடைசியில் அதை உணர்ந்துதான் தெரிந்து கொள்ளவேண்டும் என்றே முடிக்கிறார். அவர் எழுதியது:

“உள்ளதிலது உள்ளவுணர்வு உள்ளதோ உள்ளபொருள்

உள்ளலற உள்ளத்தே உள்ளதால் – உள்ளமெனும

உள்ளபொருள் உள்ளலெவன் உள்ளத்தே உள்ளபடி

உள்ளதே உள்ளல் உணர்”

உள்ளம் என்றும் சித்தம் என்றும் அழைக்கப்படும் மனம் கலக்கும்போது எண்ணங்களின் தூய்மை மாறுகிறது. மனம் என்பது பழைய எண்ணங்களின் வாசனைகள் – அதாவது பெருங்காயம் இல்லாவிட்டாலும் பெருங்காய டப்பாவில் உள்ள வாடை போல். இது நமது காயத்திற்கும் (உடலுக்கும்) பொருந்தும்.  (இந்த பெரிய விஷயத்தை நமக்கு உணர்த்துவதால்தான் அதற்கு பெருங்காயம் என்று பெயர் வந்திருக்குமோ?)

ஆக உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசாது, மற்றும் பிறிதொன்று செய்யாதிருப்பவனே யோகி. எண்ணம், சொல், செயல் இம்மூன்றும் ஒன்றாகிய நிலையின் விளைவே  யோகம். சித்தம் விருத்தி ஆகாமல் தடுப்பதே யோகம் அனைத்தினும் குறிக்கோள்.

இப்படியாக தூய எண்ணங்களைக் கருத்தில் கொள்ளாது, மனமானது விருத்தி அடைந்து செய்யப்படும் காரியங்களால் வருவதுதான் ஒருவரை பந்தப் படுத்தும் வினை. இதையே ரமணர் “வினைப் பயன் விளிவுற்று வித்தாய் வினைக் கடல் வீழ்த்திடும்” என்பார்.

இதைப் புரிந்தவர் எவருக்கும் வேறு எதுவும் தேவையுமில்லை. நிற்க; நாம் இப்போது நமது “சின்ன” வார்த்தையான “சத்” விஷயத்திற்கு வருவோம்.

“வாய்மை” என்னும் சொல் இந்த “என்றும் உள்ளதை” எவ்வளவு தூரம்  பிரதிபலிக்கிறது? இதை விளக்குவதற்கு நாம் பலரும் அறிந்திருக்கக்கூடிய இந்த ஆங்கிலத் தொடரை எடுத்துக் கொள்வோம்:

“Truth in thought, word, and deed”.

இதை ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? உண்மை எனப்படுவது நடந்த நிகழ்ச்சியை சிறிதும் பிசகாமல் சொல்வது, அல்லது  ஒருவன் உள்ளத்தில் எண்ணமாக உதித்ததை, அதுவே அவனது வாய்மொழியாக வெளியே வந்து, அதற்கு செயல் வடிவம் கொடுக்கவும் முடிந்தால் அதுவும் ஆகும். இவைகளே அப்பட்டமான உண்மை என்பதன் விளக்கம். இதைத்தான்  கவியரசு கண்ணதாசனும் ஒரு பாடலில் “உள்ளதை சொல்வேன், சொன்னதைச் செய்வேன்” என்கிறாரோ?

நடந்ததைப் பற்றிச் சொல்வதை அப்புறமாக எடுத்துக் கொள்வோம். இப்போது அந்த ஆங்கில வாக்கியத்தில் உள்ள ஆழங்களைக் கவனிப்போம்.

Thought எனப்படும் எண்ணம் வேறெவருக்கும் தெரியவேண்டிய அவசியமில்லை. அது நம் உள்ளேயே இருப்பது. ஆனால் அதுதான் மேற்கொண்டு வெளிப்படும் எதற்கும் முன்னோடியாக உள்ள வேர்.

அறிந்தோ அறியாமலோ வரும் அதனுடைய வெளிப்பாடுதான் அந்த எண்ணத்தை ஒட்டி வரும் words எனப்படும் வார்த்தைகள். அந்த வடிவத்தில்தான் அது மற்றவர்களைப் போய்ச் சேர்கிறது.

தனது எண்ணங்களையும், வார்த்தைகளையும் மிகத் தெளிவாக மற்றவர் அறியும்படி தனது உடல் உறுப்புகளான கை, கால் போன்ற ஏதேனும் ஒன்றினாலாவது செய்யப்படும் செயல் தான் கடைசியாகச் சொல்லப்பட்ட deed.

இந்த மனோ, வாக்கு, காயங்களில் சீராக வெளிப்படுவது Truth.  அது ஒரு மலை மேல் புறப்பட்டு சமவெளியைக் கடந்து கடலில் கலக்கும் ஆறு போல் தெள்ளத் தெளிநீராக ஓடவேண்டும். இந்த மாதிரியான சீரோட்டம் இல்லை என்றால் எங்கோ பிரச்சினை இருக்கிறது என்றுதான் அர்த்தம். அது ஓடும் வழியில் உள்ள மற்றவற்றையும் கலந்து எடுத்துக்கொண்டு போகும்போதுதான் தூய எண்ணங்கள் மாற்றம் கொள்கின்றன.

ஆக Truth என்பதில் இவ்வளவு பரிமாணங்கள் இருக்கின்றன. Truth என்ற ஒரே சொல்லிற்கு உள்ள மூன்று பரிமாணங்களையும் காட்டும்படி மூன்று சொற்களே தமிழில் இருக்கின்றன. அந்த வகையில் தமிழிற்கு ஒரு சிறப்பும் இருக்கின்றது. உள்ளிருக்கும் எண்ணங்களே வெளி வந்தால் அதை “உண்மை” என்றும், வாய் வழியே வரும்போது அதை “வாய்மை” என்றும், உடலின் துணையால் செயல் வடிவிலும் காணப்படும்போது அதை “மெய்” என்றும் சொல்வர்.

ஆக மெய், வாய்மை, உண்மை என்ற இந்த மூன்றிலும் முன்னதை விட பின்னது நுண்ணியதாகும். இம்மூன்றையும்விட மிக நுண்ணியது “சத்” என்ற பதம். satyameva_jeyate

நுண்மையான பொருள் கொண்ட இப் பதத்தை “சத்யமேவ ஜயதே” என்ற வசனத்தை மொழி பெயர்த்தவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ”சத்” என்ற பதத்தின் பொருளில் இருந்து மெய், வாய்மை, உண்மை என்ற  இம்மூன்று வார்த்தைகளின் பொருள் வேறுபட்டவை. ஆனால், இம்மூன்று வார்த்தைகளுள் நடுவில் உள்ள “வாய்மை” மட்டும் எப்படி “சத்” என்ற பதத்திற்கு சரியான மொழி பெயர்ப்பாகும்?

இருப்பதுள் நுண்ணியதான “உண்மை” எனும் சொல்லை எடுத்துக் கொண்டிருந்தாலாவது பரவாயில்லை எனச் சொல்லியிருக்கலாம்.

ஏனெனில், வாழ்வில் உயரவேண்டும் வளரவேண்டும் என்று உள்ளம் நம்மைத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. சகல சீவ ராசிகளும் கல்வி அறிவினாலோ, பட்டறிவினாலோ மேலும் மேலும் வளர்வதற்குத்தான் உயிரெடுத்திருக்கின்றன என்றே பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர். இதுவரை பரிணமித்த ராசிகளில் மனித ராசி ஒன்றுக்குத்தான் தான் மற்றும் தன்னைச் சார்ந்த சூழ்நிலைகளைப் பற்றிய உயரிய சிந்தனையும், தொழில் நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த வளர்ச்சியும் இருந்திருக்கின்றன என்று கணித்துள்ளனர். அது அனைவருக்கும் பொதுவாக உதவுவதாகவே அமைந்திருக்கிறது என்றும் கண்டுள்ளனர். (இது பற்றி வேறு ஒரு கட்டுரையில் தனியே ஆராய்வோம்.)

ஆக, உயரவேண்டும் என ஊக்குவிப்பது மனித மனத்தின் இயல்பு. இயல்பாக மனத்தில் தோன்றும் எண்ணத்திற்கு “உண்மை” என்று பெயர். அதன்படி “உண்மையே உய்விக்கும்” அல்லது “உண்மையே உயர்த்தும்” என்றாவது வாசகம் அமைந்திருக்கலாம்.

gandhiஉண்மை யொன்றையே வலியுறுத்தி அது அரசியலிலும் எடுபடும் என்று வாழ்ந்து காட்டிய மகாத்மா காந்தியைப் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். அவருக்கு நோபல் அமைதிக் குழு பற்பல காரணங்களினால் பரிசு கொடுக்க இயலவில்லை என்றாலும், அவர் இறந்த வருடத்தில் குழு “இந்த வருடம் நோபல் பரிசைப் பெறத் தகுதியுள்ள நபர் எவரும் உயிருடன் இல்லை” என்று சொல்லி பரிசை எவருக்குமே அளிக்காதிருந்து காந்தியைக்  கௌரவித்தது  அல்லவா?

அந்த உண்மை பேசிய, அரசியலில் இருந்தும் இல்லாத ஞானி போல் வாழ்ந்த மகானை நேரில் காண முடியா அமெரிக்கத் தலைவர்களான மார்டின் லூதர் கிங், தற்போதைய குடியரசுத் தலைவர் ஒபாமா மற்றும் பலரும் தங்கள் மானசீக குருவாகக் கொண்டுள்ளனர் என்றால் உண்மையின் மதிப்பை மேலும் சொல்வதற்கு என்ன வேண்டும்?

“உண்மையே உன் விலை என்ன” என்று கேட்கும், நமக்கு மிகவும் பரிச்சயமான, தலைவர்களுக்கு இதுவாவது புரியுமா? தமிழையே கரைத்துக் குடித்து விட்டவர்கள் போலும் வாயினால் பேசிப் பேசியே புகழ் நிலைக்கு வந்தவர்களிடம் இதற்கு மேல் எதை எதிர்பார்க்க முடியும்?

எண்ணம் வேறு ஏதோ. வாய் ஒன்று பேசும். கையோ வேறொன்று செய்யும் என்றே உலவி வரும் “சின்ன” மதியாளருக்கு இது புரியுமா? இதுதான் போகட்டும். வேறு ஒன்று சொல்கிறேன். அதாவது புரிகிறதா என்று பார்க்கலாம்.

இதை நான் பல வருடங்கள் முன்பு Readers’ Digest எனும் ஆங்கில மாதப் பத்திரிகையில் படித்திருந்தேன். இது ஒரு மேற்கோள். யார் சொன்னது என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளவில்லை.

“There is no essential difference between Truthfulness and Spirituality. Truthfulness is characterized by ‘words following the facts’, whereas Spirituality is that of ‘facts following the words’.

அதன் விளக்கமாவது: நடந்த நிகழ்ச்சியைச் சற்றும் மாற்றாமல் அப்படியே சொல்பவன் உண்மை பேசுபவன். ஒருவர் சொன்னது அப்படியே நடந்தால் அவரே ஞானி.

இதிலிருந்து என்ன தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஞானியாவதற்கு இப்படியும் ஒரு சுலப வழி இருக்கிறது. இதன்படி ஒருவர் உண்மையே பேசி வந்தால் போதும். அவர் இறுதியில் ஞானி ஆவதற்கு முற்றிலும் தகுதி ஆகிறார்.

சொல்வது நடக்கும் எனும் ஞானியிடம் ஓர் அனுபவம் உண்டா, அப்படிப்பட்ட நிகழ்ச்சி ஏதேனும் ஒன்று நம் வாழ்வில் நடந்திருக்கிறதா என்று யோசிக்கத்தான் எனக்கு முதலில் தோன்றியது. யோசித்துப் பார்த்ததில் 1972 -ல் நடந்த ஒரு நிகழ்வும் ஞாபகத்திற்கு வந்தது.

அந்த வருடம் எங்கள் தகப்பனாருக்கு அறுபதாம் ஆண்டு நிறைவு பெற்றது. அவர் ஜாம்ஷெட்பூரில் இருந்தார்; நாங்கள் சென்னையில் இருந்தோம். முதலில் செய்த ஏற்பாட்டின்படி ஷஷ்டி அப்த பூர்த்தி விழா ஜாம்ஷெட்பூரில் நடப்பதாக இருந்தது. புதிய  தம்பதிகளாகிய எங்களது முதல் பொறுப்பாகவும் அது அமைந்தது. அதனால் விவரங்களை அப்படியே குறிப்பிட்டு ஒரு கையெழுத்துப் பத்திரிகையும் தயார் செய்துகொண்டு காஞ்சி மகா முனிவரின் ஆசீர்வாதம் வாங்க வேண்டி அவரைப் பார்க்க தேனம்பாக்கம் சென்றோம்.

அன்று அவர் மௌனத்தில் இருந்தார். ஆனால், தரிசனம் கொடுத்துக்கொண்டும், வந்தோர்களை ஆசீர்வதித்துக்கொண்டும் இருந்தார். எங்கள் முறை வந்ததும் பூ, பழத் தட்டில் பத்திரிகையையும் பார்த்து விட்டு கை சைகையாலேயே என்ன விசேஷம் என்று கேட்டார். என் கூட வந்த பெரியவர் விசேஷத்தைப் பற்றிச் சொன்னதும், சைகையாலேயே எங்கே நடக்கிறது என்றும் கேட்டார். ஜாம்ஷெட்பூரில் என்றதும் கை இரண்டையும் நன்கு தூக்கி ஆசீர்வாதம் செய்தார். ஜாம்ஷெட்பூரில் அந்த விழா நல்லபடியாக நடக்கும் என்ற அவரது ஆசிகள் திருப்தி அளித்தன. ஆனால், விதியின் விளையாட்டு விசித்திரமானது அல்லவா ?

அன்று இரவு சென்னை திரும்பி வீட்டின் கதவைத் திறக்கும் போதே ஜாம்ஷெட்பூரில் இருந்து வந்திருக்கும் போஸ்ட் கார்ட் ஒன்றைப் பார்த்தோம். அதில் என் பெற்றோர்கள் தாங்கள் மட்டும் சென்னை வருவதாகவும், ஆதலால் விழாவை சென்னையிலேயே வைத்துக் கொள்ளலாம் என்றும் எழுதியிருந்தனர்.

விழா நல்லபடியாக நடக்கும் என்று மகா சுவாமியிடம் ஆசீர்வாதம் வாங்கியாயிற்று. மகா சுவாமிகளிடம் தெரிவித்ததற்கு மாறாக, விழா எங்கு நடந்தால் என்ன என்று விட்டுவிட்டோம். மேலும் பத்திரிக்கை என்று ஏதும் அடிக்கவில்லை; நேரில் அழைத்ததோடு சரி.

விழா நடக்கும் வாரம் வந்தது. எனது தந்தையின் நோய்வாய்பட்டிருந்த தமக்கையார் விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்னால் சென்னையில் காலமாகிவிட்டார். சென்னையில் நாங்கள் கொண்டாட நினைத்திருந்த விழா தடைபட்டது.

அன்றே எனது சகோதரன், சகோதரிகள் இருந்த  ஜாம்ஷெட்பூருக்கு விழா தடைபட்டது பற்றி தந்தியும் கொடுத்து விட்டேன். அப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு இப்போதுள்ளது போல் தொலை பேசி பரவலாகக் கிடையாது. சில இடங்களில் தந்தி வசதியும் மகா மட்டமாக இருக்கும். அதனால், நான் கொடுத்த தந்தி அவர்களுக்குப் போய் சேர மூன்று நாட்கள் ஆகிவிட்டன. நாங்கள் அத்தையின் இறுதி காரியங்களில் ஈடுபட்டிருந்தோம். ஆனால், விழா தடைபட்டது பற்றி ஜாம்ஷெட்பூரில் இருந்த என் சகோதர, சகோதரிகளுக்கு ஏதும் தெரியாது.

அறியாத அவர்கள் அன்று காலை தடபுடலாக வடை, பாயசத்துடன் உணவு அருந்திவிட்டு, புது உடை உடுத்திக் கொண்டு அன்று மாலை அருகில் இருக்கும் கோவில் ஒன்றுக்குச் சென்று பெற்றோர்கள் பெயருக்கு ஒரு அர்ச்சனையும் செய்து முடித்து விட்டனர்.

அது எங்களுக்குத் தெரியவர மேலும் ஒரு வாரம் ஆகிவிட்டது. இங்கு பாருங்கள்: காஞ்சி முனிவர் குறிப்பால் என்ன கேட்டாரோ, அந்த விழா எங்கு நடக்கும் என்று ஆசிர்வதித்தாரோ அங்கு அது எப்படியோ நடந்து விட்டதல்லவா? நடக்க வாய்ப்பே இல்லாவிட்டாலும்கூட அவர் சொன்னதுதான் நடந்தது. அதுதான் ஞானியின் விசேஷம்.

இதைப் போன்ற நிகழ்ச்சிகளை அனுபவித்தால்தான் Readers’ Digest -ன் அந்த ஆங்கிலத் தொடரின் அருமை தெரியும்.

மாறாக, உள்ளத்தில் ஒன்று எண்ணி வாயால் வேறு பேசி செயலால் பிறிதொன்று செய்பவர்களும் வையகத்தில் உண்டு. “ஒரு ரூபாய்க்கு அரிசி மூன்று படி; இல்லையேல் முச்சந்தியில் எனக்கு சாட்டையடி” என்று சொல்லிய வாய்ச்சொல் வீரர்களின் ஆண்டவர்களைத்தான் நமக்குத் தெரியுமே.

அவர்கள் சொன்ன வாசகம் தான் “வாய்மையே வெல்லும்” என்பது. இப்போதாவது உண்மைக்கும், வாய்மைக்கும் உள்ள தூரத்தைப் புரிந்து கொள்ள முடிகிறதா?

13 Replies to “வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?”

  1. பொய்யினை கட்டியுரைத்து,நாள்தோறும்
    பொய்பேசி,பாமரமக்களை பணத்துக்கு
    வாங்கி,நாட்டையே சுரண்டி வாழும்
    நயவஞ்சகர்கள்.அதை மக்கள் பொறுப்பர்
    தெய்வமும் பொறுத்தல் முறையோ…?
    உண்மைதெய்வம் உண்டுஎன்றால்
    இனியும்
    பொறுத்தல்தகுமோ………
    வடிவேல்சிவம்.

  2. I thank the author for this delightful,illuminating article. I beg to differ with him on Gandhi. I consider him a sexual pervert. Please do a google search on Gandhi and his weird habbit of sleeping nude with naked women, including his niece of 18 years old. I plan to buy the book by the British author on Gandhi when it released in Australia.
    I also expect Tamil Hindu to censor this as they had done with my other post. They do not like constructive criticisim and to boot, they lack a sense of humour.

  3. // ….. I beg to differ with him on Gandhi. I consider him a sexual pervert. Please do a google search on Gandhi and his weird habbit of sleeping nude with naked women, including his niece of 18 years old. I plan to buy the book by the British author on Gandhi when it released in Australia…… //

    காந்தியை காமப்பிறழ்வு உள்ளவர் என்று சொல்லுவது மிகத் தவறான குற்றச்சாட்டு.

    காந்தி குறித்த விஷயங்களை படித்துத் தெரிந்தவர்கள் காந்தி குறித்த இத்தகைய கறுப்பு-வெள்ளை புரிதல் சரியல்ல என்று சொல்லுகிறார்கள்.

    ஆனால், மற்ற விஷயங்களைப் போலவே காந்தி குறித்தும் நமக்கு மிக எளிமையான புரிதல்களே உள்ளன.

    காந்தி காமம் குறித்து நடத்திய சோதனைகள் குறித்து ஜெயமோகன் அருமையான, ஆதாரபூர்வமான தகவல்களைத் தருகிறார். அவை இங்கே:

    https://www.jeyamohan.in/?p=5130

    https://www.jeyamohan.in/?p=5167

    https://www.jeyamohan.in/?p=5182

    https://www.jeyamohan.in/?p=5193

  4. கீழிறங்கி வசைபாடுதலுக்கும் நகைச்சுவைக்கும் வேறுபாடு உண்டு. காந்தியைக் குறித்த மிக மோசமாக யார் எதை எழுதினாலும் ஏற்க தயாராகும் மனநிலை ஒரு வெறுப்பு மனநிலை மட்டுமே. காந்தி குறித்து இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஹிந்துத்துவ சிந்தனையாளர்களில் ஒருவரான ராம் ஸ்வரூப் கூறியுள்ளதை தருகிறேன்:

    Gandhi as an intellectual Kshatriya who stood up against the ritish and the missionaries

    மேலும் அவர் சொல்கிறார்

    Some people have however learnt to blame Gandhi for appeasing Muslims. It is a big question and has many facets into which I would not go here. But I would like to point out that appeasement of Muslims is older than Gandhi, a point which Frawley also notes. t was lready there when he came upon the scene and it continued after he was gone.

    எனக்கென்னவோ காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனைகளை – அவை வெளிப்படையாக செய்தவற்றை- இந்திய மரபு குறித்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் எழுதும் ஒரு பிரிட்டிஷ்காரனை கூட காந்தியை எதிர்ப்பதற்காகவே ஏற்றுக்கொள்ள தயாராகக் கூடிய நபர் உடனடியாக பார்க்க வேண்டிய நபர் மனநல மருத்துவர் என்றுதான் தோன்றுகிறது. அல்லது ஒரு வருடம் வார்தாவில் காந்தியின் ஆசிரமத்திலேயே தங்கலாம்.

  5. அரவிந்தன் நீலகண்டன் அவர்களே

    ///Some people have however learnt to blame Gandhi for appeasing Muslims. It is a big question and has many facets into which I would not go here. But I would like to point out that appeasement of Muslims is older than Gandhi, a point which Frawley also notes. t was lready there when he came upon the scene and it continued after he was gone.///

    Appeasement not only Muslims but any alien religion had been the unique feature of this great Nation.

    1. Please see this link for the support given to Jews in India. Jews lived without anti-Semitism in India whereas they were victims elsewhere. Even in Goa they were victims at the hands of Portuguese. What a shame that while the natives of this land did not hound them those who came from Europe hounded them! So much for the “tolerant cultural heritage” of Europeans. Jews had been here for over 2500 years. The “St.Thomas” story also gets hit by this fact. If the Jews had been here since that long, how come they were not converted to Christianity by the so called St Thomas in Kerala? After all, both Jesus and St.Thomas were jews!! Till date there is no Jewish Christian of a 2000 years heritage in Kerala. The christians of Kerala are all of Indian origin. The Jews of Kerala remain Jews and they are not christians at all.

    https://en.wikipedia.org/wiki/Indian_Jews

    2. The Muslims were allowed to build mosques and worship in India in the seventh century before the Muslim invasion itself. Please see this link.

    https://en.wikipedia.org/wiki/Muslims_in_India

    The first Indian mosque is thought to have been built in 629 A.D, purportedly at the behest of Rama Varma Kulashekhara, who is considered the first Indian muslim, during the life time of Muhammad (c. 571–632) in Kodungallur, in district of Thrissur, Kerala by Malik Bin Deena

    3. Please see the following link for support to Parsis (Zoroastrians). they are in India for over 1000 years now. They came running when they were persecuted in Iran.

    https://en.wikipedia.org/wiki/Parsi

    4. Please see this link for the support extended to Protestants and various other divisions of Christianity in Tranquebar:

    https://www.buzzle.com/articles/tranquebar-danish-settlement-at-the-coromandel-coast-1620-1845.html

    In 1706 the first two protestant missionaries arrived in Tranquebar, and soon their comprehensive missionary and teaching activities made their unmistakable mark on the town. Soon after, in 1709, the missionaries bought a large complex of buildings in the best end of King Street, immediately next door to the Church of Zion, and in 1717-18 they erected the remarkable Church of New Jerusalem on the opposite side of the street.

    (In the context of this, there arises the question again as to the St Thomas Myth. If in 1706 in Tranquebar the first Church were to be established, how would there have been churches in Chennai or Kerala 1700 years earlier?)

    Bharat had been the most tolerant Nation. Its people the most accommodative to the aliens. Hinduism had been the most practical, tolerant and accommodative religion from time immemorial. The Chrisitians and Muslims have exploited Bharat’s Dharmic nature, but the Jews and Zoroastrians have remained dharmic themselves. They continue to do so.

  6. எஸ்.ராமன் அவர்களே
    தங்கள் கட்டுரைகள் எளிய முறையில் ஆழமான தத்துவ உண்மைகளை எடுத்துச் சொல்பவையாக அமைந்துள்ளவை. உள்ளது நாற்பதில் உள்ள ஒரு செய்யுளின் வரிகள் உண்மையை எடுத்தியம்பும் விதத்தை அழகாக விவரித்திருக்கிறீர்கள். நான்தான் சென்ற மறுமொழியில் ஏதோ வேகத்தில் கட்டுரைக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தை எழுதிவிட்டேன். பொறுத்தருள்க.

  7. தமிழ் நூலொன்றின் பழைய உரை ஒன்றைப் படித்தபோது புலவர் ஒருவரைப் பாராட்டுகின்ற இடத்தில், “புலவுத் துறந்த நோன்புடையராகலின் பொய் கூறாறென்க” எனப்படித்த தொடர் நினைவுக்கு வருகின்றது. இங்குப் ‘புலவு’ என்றது , உடலைக் குறிக்கும். துறவிகள் பொய்யாகிய உடலை மெய்யெனக் கருதாதவர்கள். சைவசித்தாந்தத்தில் உடலை, உலகைப் ‘பொய்’ என்பது இல்லை என்ர பொருளில் அன்று. தோற்றக் கேடுகள் உடையது, நிலையற்றது என்ற பொருளில் ஆகும். என்றும் இல்லாதபொருள் என்பது முயல் கொம்பு, ஆகாயத்தாமரை போன்றதாகும். அசத் என்பது உள்ளது போலத் தோன்றி இல்லாததாதல். நிலையற்ற உடலை நிலையானதாகக் கருதி அதனை எவ்வகையாலும் பேண விரும்புவோரே சாமர்த்தியமாகப் பொய்யை மெய்போலப் பேசுவர். பேச இயலாமையால் மெய்யும் பொய் யாகி விடுதலும் உண்டு. உடலைப் பேணாத ஞானியரின் வாக்கே உண்மையானதாகும்.. “பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகை” என்பது பொய்யாமொழி அல்லவா.

  8. சமஸ்கிருத சொற்களான ருதம் சத்யம் என்ற இரண்டிற்கும் பொதுவானது வாய்மை என்ற தமிழ்ச் சொல். சாதாரணமாக வாய்மை என்பதால் வாயிலிருந்து வருவதாக இருந்தாலும் வாய்மை என்ற ஆன்மீக சொல் உண்மை ( தர்மம் கலந்த உண்மை ருதம் என்பது) வாக்கு சத்யம் இரண்டும் கலந்தது. ஆதலால் வாய்மையே வெல்லும் என்பது சரியே

    திருக்குறள் வாய்மை பார்க்கவும். இரண்டும் கலந்ததே.

    ஆனால் இப்போது இருக்கும் அரசியல் பித்தலாட்டக்காரகள் தங்கள் பேச்சுத் திறமையால் என்ன வேண்டுமானாலும் பேசி எத்தனை பொய்கள் வேண்டுமானாலும் கூறி மக்களை ஏமாற்றலாம் என்ற திமிரால் இதை சொல்கிறார்கள். அரசியல்வாதிகள் நாங்கள் என்ன கூறினாலும் மக்கள் நம்புவார்கள் என்ற திமிரோடு பேசுவதை நான் கேட்டிருக்கிறேன்
    அவர்கள் இந்து சமயத்தை பற்றி கூறுவதெல்லாம் பொய்கள். அவர்கள் பல பத்திரிகைகளில் எழுதுவதும் பொய்களே. ஆதாரம் இருப்பதாக எழுதுவார்கள். படித்த பண்டிதர்கள் போல் பேசுவார்கள் எழுதுவார்கள். ஒவ்வொரு நாளும் இவ்வளவு எழுதி வெறுப்பை வளர்ப்பதற்கு சட்டப் படி நடவடிக்கை எடுக்க முடியாதா? வெறுப்பை வளர்க்க புத்தகங்களே எழுதி உள்ளனர்!

    இவர்களுக்கும் ஆன்மீகத்திற்கும் வெகு தூரம்

    ஆனால் வாய்மை வெல்லும் என்ப‌து தமிழில் சரியே‍‍ ‍‍
    சத்யமேவ ஜயதே

  9. கட்டுரையை படித்தவர்களுக்கும், மறுமொழி அளித்தவர்களுக்கும் மிக்க நன்றி. காந்தி பற்றிய பல அம்சங்களை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். எனது பார்வை அவரது சத்திய சோதனை பற்றியது மட்டுமே.

    முனைவர் முத்துக்குமார சுவாமி:
    “…..உடலைப் பேணாத ஞானியரின் வாக்கே உண்மையானதாகும்”

    உண்மை என்ற சொல்லை உபயோகித்ததாலேயே அச்சொல்லின் வன்மையை உணர்த்திவிட்டீர்கள். மற்றோருக்கு பொய் கூறாமை என்பதே பெரிய தவம் என்று நினைக்கிறேன்.

    ந. உமாசங்கர்:
    “……நான்தான் சென்ற மறுமொழியில் ஏதோ வேகத்தில் கட்டுரைக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தை எழுதிவிட்டேன். பொறுத்தருள்க”

    ஏனையோர் கூற்றுக்கு மறுமொழி கொடுத்துள்ளீர்கள். பொறுப்பதற்கு தாங்கள் ஏதும் செய்து விடவில்லை. மற்ற விஷயங்களையும் தங்களிடமிருந்து பெற்றதால் நாங்கள்தான் தங்களுக்கு நன்றி கூற வேண்டும்.

  10. அன்புள்ள ராமன், சத் என்ற பதத்திற்கு அருமையான தத்துவ ரீதியான விளக்கம் அளித்துள்ளீர்கள். உண்மை, வாய்மை, மெய் என்பதற்கிடையேயான நுண்ணிய வேறுபாடுகளைத் தொட்டுக் காட்டியதும் அருமை. மிக்க நன்றி.

    ’ உள்ளத்தில் உண்மையது உண்டாகில் வாக்கினிலே ஒளியுண்டாகும்’ – பாரதி.

  11. இலையில் நல்லவற்றைப் பரிமாறிவிட்டுத் தெரியாமல் ‘ஏதோ ஒன்றையும்’ வைத்துவிட்ட மாதிரி, ‘…மூன்று படி, சாட்டை அடி…’ என்பவற்றையெல்லாம் ஏன் இந்தக் கட்டுரையில் கொண்டுவந்தீர்கள்? ‘…மூன்று படி, சாட்டை அடி…’ கூட்டத்தை, அதை விடவும் சற்று உயர்ந்த பழக்கம் உள்ளவர்களோடு ஒப்பீடு செய்வதுகூடச் சரியல்ல. ஏன் போய் மகா ஞானிகளோடு…!?

  12. திருவாளர் தூயவன்,
    ‘வாய்மை வெல்லும்’ என்பதில் மாற்றில்லை. சத்யமேவ ஜெயதே = வாய்மை(யே) வெல்லும் என்னும் மொழிபெயர்ப்புத்தான் இங்கு அலசப்பட்டது. கட்டுரையாளரின் பார்வை சரியென்றே எனக்குத் தோன்றுகிறது.

    ராமா அவர்களே…
    காந்தியிடமிருந்து கற்றுக்கொள்ள, இந்தச் சமுதாயத்துக்குக் கற்றுத்தர, உங்களிடம் வேறு எதுவும் (நன்மைகள்) இல்லையா? இத்தகைய ஆராய்ச்சிகளும் தேவையில்லை. இவை உண்மையானவையாகவே இருந்தாலும் சமுதாய அக்கறை உள்ளவர்கள், இதைப் பொது வலைத் தளங்களில் பதிவு செய்து, பரப்ப வேண்டியதும் இல்லை.

    என் மறுமொழி மூலம் நானும் இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பரப்புகிறேன் என்கிற குற்ற உணர்வுடன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *