கடவுளின் பணித்திட்டம்

(இந்தக் கட்டுரைக்கு முதலில் ‘திருக்குறிப்பும் குறிப்பறிதலும்’ என்று தலைப்பிட்டிருந்தேன்.  ‘ஓபன் சோர்ஸ் மதம்’ என்ற பதிவில் இருந்த ‘கடவுளின் பணித் திட்டம்’ என்ற சொல்லாட்சி என் கருத்துக்குப் பொருத்தமாக இருந்ததால் அதனையே இந்தக் கட்டுரைக்குத் தலைப்பாகக் கொண்டேன்.)

ஒருவர் மனதில் கருதிய உள்ளக் கருத்து ஒன்றை அவர் வாயினால் கூறாமலேயே அறிதலே குறிப்பறிதல்.  இப்பண்பினை ‘இங்கிதமறிதல்’ என்றும் கூறுவர். அரசன் முதலாய பெரியவர்களிடம் பணி செய்வாருக்கு இது இன்றியமையாமல் வேண்டப்படும் பண்பாகும். இப்பண்பினை உடையவரைப் பெரியவர்கள் பெரிதும் விரும்புவர். இப்பண்பு உடையோனைத் தெய்வப்புலவர், “கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்” என்றும் ‘அவன், வையகத்துக்கு அணியாவான்’ என்றும் பாராட்டுகின்றார். திருவள்ளுவர் பொருட்பால், காமத்துப்பால் இரண்டிலும் குறிப்பறிதல் என்னும் அதிகாரங்களை வைத்திருப்பதால் அகவாழ்வு புறவாழ்வு இரண்டின் சிறப்புக்கும் இப்பண்பு மிகவும் வேண்டப்படும் என்பது விளங்கும். குறிப்பறிதல் சமய வாழ்க்கைக்கும் வேண்டப்படும் பண்பு எனத் திருமுறைகள் சாற்றுகின்றன.

சைவ நாயன்மார்கள் அறுபத்துமூவரில் முருகநாயனார் என்பவரும் ஒருவர். சமயகுரவர் மூவராலும் பாடப்பெற்ற திருப்புகலூரில் வாழ்ந்தவர். திருப்புகலூர் வர்த்தமானீச்சுவரரை முப்போதும் தீண்டி வழிபாடு இயற்றும் ஆதிசைவ சிவப்பிராமண குலத்தைச் சார்ந்தவர்.

muruga_nayanaarஅவர் வர்த்தமானீச்சரருக்கு வழிபாடும் அலங்காரமும் செய்யும் திறத்தைக் கண்டு வியந்த திருஞானசம்பந்தர்,

“தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலும் சாந்தமும் புகையும்

கொண்டுகொண் டடிபரவிக் குறிப்பறி முருகன்செய் கோலம்

கண்டுகண்டு கண்குளிரக் களிபரந்து ஒளிமல்கு கள்ளார்

வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமானிச் சரத்தாரே”

என்று பாராட்டித் திருமுறையில் பதிவு செய்துள்ளார்.

முருகநாயனார் இறைவனின் திருக்குறிப்பை அறியும் ஆற்றலும் அன்பும் மிக்கவராக இருந்தார். அதனால் அவரது பூசனையும் வழிபாடும் திருஞானசம்பந்தரின் வாக்கில் பதிவு செய்யப்பட்ட சிறப்புப் பெற்றன.

சிவனடியார்களின் திருக்குறிப்பை அறிந்து அவர்களுக்குத் தொண்டு செய்தமையால் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த அடியவர் ஒருவருக்குத் திருக்குறிப்புத்தொண்டர் நாயனார் என்ற திருநாமம் வழங்கப்பெற்றது.

vacakarஇறைவனின் திருக்குறிப்பு யாது?

உயிர்களைவிட்டுக் கணநேரமும் பிரியாமை அவனது குறிப்பு என மாணிக்கவாசகர் அனுபவித்துக் கூறுகின்றார். ‘உய்ய என் (உயிர்களின்) உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா’, ‘மருவி எவ்வுயிரும் வளர்ப்போன் காண்க’ என்பன போலத் திருவாசகத்தின் பல இடங்களில் இறைவன் உயிர்களோடு கலந்து நின்று பிரியாமல் இருப்பதன் திருக்குறிப்பை அதாவது ‘கடவுளின் பணித்திட்டத்தை’ மணிவாசகர் அறிந்து கூறுகின்றார்.

கடவுளின் இந்த திட்டத்தை ஒருவன் அறியாமல் இருப்பதற்குக் காரணம் அவனது வினையே என்றும், அதுவே கடவுளின் திட்டத்தை அவனுக்கு மறைக்கின்றதென்றும் மாணிக்கவாசகர் கூறுகின்றார்.
“வினையென் போலுடை யார்பிறரார்

உடை யானடி நாயேனைத் தினையின் பாகமும் பிறிவது
திருக்குறிப் பன்று”

(திருவாசகம் 41)

இறைவன் ஏன் பிரியாமல் இருக்கின்றான்?

siva-and-soulஇறைவன் அன்பே வடிவாயவன்; அந்தமிலா ஆனந்தமாயவன். அவ்வின்ப அன்பே சிவத்துவம் எனப்படும். உயிர்களின் சீவத்துவத்தை நீக்கிச் சிவத்துவத்தை அருளுவது அவன் திட்டம்.

‘சிவமாக்கி எனையாண்ட’ என்பார் மணிவாசகர்.  ‘தன்னைப்போலத் தன்னடியார்க் கின்பளிப்பவன்’, ‘தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவான்’ என்றும் திருஞானசம்பந்தர் பாடுகின்றார்.

தன்னைப்போல் உயிர்களையும் ஆனந்தமயமாக்கும் இச்சைமிகுதியால் (அன்பினால்) உயிர்களோடு அநாதியே அவன் நிலைபெற்றுள்ளான். இறைவனின் இத்திட்டத்தை ‘அன்பின் மன்னும் அரனே மலந்துரந்து’ என்று சிவஞானபோதம் கூறும்.

‘ஆன்மாவைத் தனது திருவடிக்கண் சேர்த்துக் கோடற்கு உளதாகிய இச்சை மிகுதியால் அவ்வான்மாவின்கண் அநாதி முதல் அத்துவிதமாய் நிலைபெறும் முதல்வன்’ எனச் சிவஞானமாபாடியம் அவனுடைய திருக்குறிப்பை விளக்கிற்று.

இறைவன் உயிர்களின் பொருட்டு உலகு உயிர்களுடன் கொண்டிருக்கின்ற தொடர்பை அத்துவித சம்பந்தம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. அதற்கு இரண்டற்ற தொடர்பு என்பது பொருள்.

அந்த அத்துவிதசம்பந்தம் சைவ சாத்திரங்களில் மூன்று நிலையாகப் பேசப்படுகின்றன:

1. கலப்பினால் ஒன்றாதல். (அபேதம்)

2. பொருள் தன்மையினால் வேறாதல். (பேதம்)

3. உயிருக்கு அனுபவம் அளிக்க உடனாதல். (பேதாபேதம்)

1. கலப்பினால் ஒன்றாதல்:

pasu-pati-pasam

ஒருவனைப் பெயர் சொல்லி அழைத்தால் அவன் உடனே ஏனென்று கேட்கின்றான். அந்தப் பெயர் அவன் உடலுக்கு இட்டதா? அல்லது உயிருக்கு இட்டதா?

உடலும் உயிரும்போல’ என்பது இந்த சம்பந்தத்திற்குக் காட்டப்படும் உவமை.

உடலும் உயிரும் வேறு என்றாலும் இரண்டும் சேர்ந்த கலப்பினால் ஒன்றாகி அந்தப் பெயருக்கு உரியதாகின்றது. மேலும் உயிர் இருந்தால்தான் உடல் இயங்கும். உயிர் இல்லையேல், உடல் அழிந்துவிடும்.

உடலும் உயிரும் கலந்து ஒரே பொருளாக இருப்பது போல இறைவன் உலகு உயிர்களில் கலந்து இருக்கின்றான்.

உயிரின் கலப்பு இல்லாமல் உடம்பு தனித்து இராது; இயங்காது. அதுபோல இறைவனின் கலப்பு இல்லாமல் உலகும் உயிரும் தனித்து இருக்கவும் இயலாது; இயங்கவும் இயலாது. உலகப்பொருள்கள் அவ்வவற்றிற்கு உரிய இயல்புகளோடு இருப்பது, இறைவன் அவற்றோடு, தான் தன் சத்தியினால் கலந்திருக்கும் கலப்பினாலேயே ஆகும்.  சூரியனின் ஒளியும், சந்திரனின் தண்மையும் நிலத்தின் வலிமையும் நீரின் குளிர்ச்சியும் நெருப்பின் வெப்பமும் காற்றின் அசைவும் கடவுளின் ஆற்றல் அவற்றில் கலந்திருப்பதனாலாயே ஆகும்.

இவ்வாறு முதல்வன் உலகு உயிர்களில் கலந்து அவைகளாகவே இருப்பதைத் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய நின்ற திருத்தாண்டகமும், வேத மந்திரமான ருத்திரமும் பாடுகின்றன. இவ்விரண்டு நூல்களும் இறைவன் உலகத்தோரால் மிக உயர்ந்தனவாகக் கருதப்படுவனவற்றோடும் மிக இழிந்தனவாகக் கருதப்படுவன வற்றோடும் வேற்றுமையின்றிக் கலந்து ஒன்றாயிருப்பதை எடுத்துக்கூறுகின்றன.

இறைவனது பூரண வியாபகத்தில் நன்று தீது, பிறப்பு இறப்பு, ஆதி அந்தம், உயர்வு இழிவு, இன்பதுன்பங்கள் போன்ற இரட்டைகள் இல்லை என்ப்தை இவ்விரண்டு நூல்களும் எடுத்தியம்புகின்றன.

இந்த நூல்களின் பொது நோக்கத்தை வேண்டும் என்று மறைத்தோ அல்லது, புரியாமலோ, சிலர்‚ ருத்திரத்தில் சில தொடர்களை மட்டும் பிரித்தெடுத்து, சிவன் ‘வேட்டைக்காரன், திருடர்களின் தலைவன், பசுக்களை மேய்த்துக் கொண்டு பித்தனாக ஊளையிட்டுக் கொண்டு திரிபவன்’ என்றுகூறித் தம்முடைய அறியாமையை (அறிவை?) வெளிப்படுத்திக் கொள்கின்றனர். [1]

புராணங்களில் மறையவனாகவும் வேதியனாகவும் தோன்றும் இறைவனே இழிந்த பன்றியாகவும் வேட்டுவனாகவும் பள்ளனாகவும் வந்த கதைகள் இக்கருத்தை வெளிப்படுத்துவனவேயாகும்.

jiva-siva-existence

2. பொருள் தன்மையினால் வேறாதல்:

இறைவன் உயிர்களோடு கலந்து அவையேயாக இருந்தாலும் அதேசமயம் அவற்றின் வேறாகவும் இருப்பன். இறைவனும் சித்து (அறிவு உடையபொருள்), உயிரும் அறிவுடைப் பொருள்.

என்றாலும் இறைவன் அறிவிக்கும் சித்து, உயிர் இறைவன் அறிவிக்க அறியும் சித்து. இது போன்று, பொருள்தன்மையில் உயிர், இறை ஆகிய இந்த இரு சித்துக்களிடையில் வேற்றுமை உண்டு.

இறைவன் பொருள்தன்மையால் வேறாகி உயிருடன் கலந்து நிற்பதற்கு சைவசாத்திரம் கூறும் உவமை, ‘கண்ணொளியோடு கலந்து நிற்கும் சூரியவொளிபோல்’ என்பது.

கண், காட்சிப் புலனை உடையதென்றாலும் தானே பொருளைக் காணாது சூரியஒளி கண்ணொடு கலந்து நின்று காட்டினால்தான் கண் காணும். எனவே கண் காண்கின்றபொழுது, கண்ணொளியும் சூரியவொளியும் கலந்தே நிற்கின்றன. அவ்வாறு காட்சியில் இருவொளிகளும் கலந்து நின்றாலும் கண்ணொளி வேறு சூரிய ஒளி வேறே.

கண்ணொளி பொருளைக் காண்கின்றது. சூரியவொளி பொருளைக் காட்டுகின்றது. அதாவது, சூரியவொளி கண்ணுக்குக் காட்டும் உபகாரத்தைச் செய்கின்றது.

கண்ணைப் போல உயிர்; சூரியனைப்போல சிவன். உயிர் ஒரு பொருளை அறிந்து சீவிக்கும்போது, சிவனும் அவ்வுயிருடன் இயைந்தே நிற்பான். அவன் அறிவிக்க, ஆன்மா அறியும். உயிர் அறியும் அந்த நிலையில், உயிரும் சிவனும் பிரிக்கமுடியா அத்துவிதமாக இருந்தாலும் சிவன் உயிருக்கு அறிவிக்கும் பொருளாக பொருள் தன்மையில் வேறுபட்டு நிற்பன். அதாவது, சிவன் உயிருக்குக் காட்டும் உபகாரத்தைச் செய்பவனாக இருப்பன். உயிர் அந்த உபகாரத்தின் பயனை அனுபவிக்கும் பொருளாக இருக்கும்.

சிவன் பொருள் தன்மையில் வேறாகி உயிரை இயக்குகின்றான்; உயிர் இயங்குகின்றது.

இறைவன் அறிவிப்பான் என்பதன் பொருள், உயிர் அறிவை விளக்கி, அது பொருளை அறியும் தகுதியைப் பெறச் செய்வான் என்பதே கருத்து.

3. இறைவன் உடனாதல்:

dws-s146-newஇறைவன் வேறாய் நின்று பொருளை உணர்த்துவதனால் பொருளை அறியும் தகுதியை அடைந்தாலும் கூட, உயிர் பொருளைத் தானே அறியும் திறனைப் பெறுவதில்லை. இந்த நிலையிலும் இறைவன் உபகரிக்கின்றான். உயிரறிவு பொருளை அறியும் படி உயிரறிவுடன் தானும் உடன்நின்று பொருளை அறியும் உபகாரத்தைச் செய்கின்றான்.

உயிர் ஒன்றை அறியும்போது சிவனும் உடன்நின்று தானும் அறிவதற்குக், ‘கண்ணொளியோடு கலந்து நிற்கும் உயிரறிவு’ உவமையாகக் காட்டப்படுகின்றது.

கண் ஒரு பொருளைக் காணும்போது அதனுடன் உயிரறிவும் இடையீடின்றிக் காண்கின்றது. உயிரறிவு கண்ணுடன் உடன்நிற்கவில்லை என்றால் கண் அந்தப் பொருளைக் காணாது. பொறி, புலனை அறியும்பொழுது உயிரறிவும் உடன் நின்றால்தான், அப்பொறி ,புலனை அறிய இயலும். கண் ஒரு பொருளைக் காண மனம் அங்கில்லையென்றால் கண்ணுக்கு அந்தப் பொருள் காட்சிப்படுவதில்லை.

எனவே, உயிர் பொருள்களை அறிவதற்கும், அறிந்து அனுபவிப்பதற்கும் இறைவன் உடனாகின்றான் என அறிதல் வேண்டும்.

இந்த உவமையைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

உயிர் பொறிகளோடு உடனாகி நின்று காண்பதன் பயன் பொறிகளுக்கன்று; உயிருக்கே. இந்த உவமையின்படிப் பார்த்தால் சிவன் உயிரோடு உடன் நின்று காட்டித் தானும் காண்கின்றான் என்றால், காண்பதன் பயன் சிவனுக்கல்லவா ஆகவேண்டும். அவ்வாறன்று. சிவன் வியாபக அறிவுள்ளவன். அவனுடைய வியாபகத்தில் எல்லாம் அடங்கியிருத்தலினால் அவன் எதனையும் சுட்டி அறிய வேண்டுவதில்லை.  சிவன் உயிரின் உடன் நின்று காட்டிக் காண்பதன் பயன் உயிருக்கே அன்றிச் சிவனுக்கில்லை. இந்த வேறுபாட்டை அறிதல் வேண்டும்.

இறைவன் சடப்பொருள்களுடனும் சித்துப் பொருள்களுடனும் ‘உடனாய்’ இருப்பதனால், சடப்பொருள்கள் அவற்றுக்குரிய ‘இயக்கம்’ பெறுகின்றன. சித்துப் பொருள்கள் அறிவைப் பெறுகின்றன.

இந்த உண்மையை நம்பியாருரர் தம் திருவாரூர்த் திருப்பதிகத்தில்,

“பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானை

பகலுங் கங்குலு மாகிநின் றானை

ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை

யுணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை

ஆர்க்கி றகட லைமலை தன்னை

ஆரூ ரானை மறக்கலும் ஆமே”

எனப் பாடி அறிவுறுத்துகின்றார்.

சிவபரம்பொருள் இவ்வாறு உலகு உயிர்கள் நிலைபெறக் கலப்பினால் ‘ஒன்றாகவும்’, பொருள்தன்மையினால் ‘வேறாகவும்’ அவை அறிவு பெறவும் இயங்கவும் ‘உடனாகவும்’ இருத்தலைத்தான் சைவசித்தாந்தம் ‘அத்துவிதம்’ என்று பேசுகின்றது.

சிவம் எந்தநிலையிலும் ஆன்மாவையும் உலகையும் விட்டு அகன்று நிற்பதில்லை யாதலால், இந்நிலையைச் சிவப்பிரகாசம் என்னும் சித்தாந்தசாத்திரம், ‘பிறிவரும் அத்துவிதம்’ என்று கூறுகின்றது. இந்தப் பிறிவரும் அத்துவித நிலையைத் திருஞானசம்பந்த சுவாமிகள் திருவீழிமிழலைத் திருப்பதிகத்தில்,

ஈறாய்முத லொன்றா யிருபெண்ணாண் குணம்மூன்றாய்

மாறாமறை நான்காய் வருபூதமவை ஐந்தாய்

ஆறார்சுவை ஏழோசையோ டெட்டுத்திசை தானாய்

வேறாயுடன் ஆனானிடம் வீழிம் மிழலையே

என்று பாடியருளினார்.

இத்திருப்பாடலே சைவசித்தாந்தம் கூறும் அத்துவித நிலைக்கு அடிப்படை. இவ்வாறெல்லாம் இறைவன் ஆனான் என்று கூறுவதாலேயே அது அவனது உண்மை நிலையன்று என்பது தெளிவாகும்.

முதல்வன் உலகுயிர்களுடன் ஒன்றாய், வேறாய், உடனாய் அத்துவிதமாக இருப்பதத்தைதான் மணிவாசகப் பெருமான், ‘உடையான் அடிநாயேனைத் தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பன்று’ என்று கூறியருளினார்.

மணிவாசகர் இவ்வாறு உடையானது திருக்குறிப்பினை அறிந்து ஓதியதோடு அம்முழுமுதல்வனது திருக்குறிப்பினையே குறிக்கொண்டு ஒழுதல் வேண்டும் என்றும் அது அடியவரின் கடமையுமாகும் எனவும் கூறியருளினார். அதோடு, திருக்குறிப்பின்படி ஒழுகுவார் பெற்ற பயனையும் சுட்டிக்காட்டினார்.

“கோமான் பண்டைத் தொண்டரொடும்

அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு

போமாறமைமின் பொய்நீக்கிப்

புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே”

என்றும்,

“அடிய ரானீ ரெல்லீரும்

அகல விடுமின் விளையாட்டைக்

கடிசேர் அடியே வந்தடைந்து

கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பை

என்றும் மணிவாசகர் ஈசனடியாரை ஏவுகின்றார்.

பழைய அடியவர்கள் அவனது திருக்குறிப்பை நன்கு அறிவார்கள். ஆதலால் அவர்களை விட்டுப் பிரியாது, சிவனுடைய குறிப்பையே குறிக் கொண்டு ஒழுகுங்கள் என்று மணிவாசர் பணித்தார்.

இறைவன் திருவுள்ளத்தில் இருக்கும் பணித்திட்டம் ‘திருக்குறிப்பு’ எனப்படும். அடியவர் அதனை அறிந்து அதனை அடைய உள்ளத்தில் கொண்டிருக்கும் விருப்பம் ‘குறிக்கோள்’ எனப்படும்.

பின்குறிப்பு:

1 . “இது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்” என்ற கட்டுரையில் காணப்படும் தவறானத் தகவலையே ஆசிரியர் இங்கு குறிப்பிடுகிறார்.

படங்கள் உதவி:

www.himalayanacademy.com
www.nayanmar.com
www.bhagavadgitausa.com
www.shaivam.org
www.skandagurunatha.org

10 Replies to “கடவுளின் பணித்திட்டம்”

  1. நன்றி! இது போல நல்ல கட்டுரைகளை படிக்க வாய்ப்பு கிடைக்க பிரார்த்திக்கிறேன்! நாம் நமது விஷயங்களிலிருந்து விலகி விடாமல் இருக்க தலைமுறைகளுக்கும் மத விஷயங்கள் சென்று சேர எல்லாரும் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும்! தமிழ் ஹிந்துவிற்கு நன்றி!

  2. பெருமதிப்பிற்குரிய முனைவர் ஐயா

    பசு, பாசம், பத்தி என்றவை குறித்த தத்துவத்தைத் தக்க தருணத்தில் தெளிவாக வியால்ல்கியமைக்கு நன்றி. இக்கருத்தை அனைவரும் உணரப் பரப்புவதற்கு இத்தகு கட்டுரைகள் அவசியம் தேவை. இல்லாவிட்டால் சிவப்பரம்பொருளை வெண்தோலினர் வெறும் மேய்ப்பனாக்கி விடுவார்கள்.
    இறைவனின் திருக்குறிப்பை உணர்ந்து இக்கட்டுரை எலுதப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

    திருப்புகலூர் வர்த்தமானீச்சுவரரைக குறித்த தகவல்களை அளித்தால் பயனுடைத்தாகும் எனக் கருதுகிறேன். வர்த்தமானர் என்றொரு சமணத்தீர்த்தங்கரர் உளர். ஆதலின் ஏதும் குழப்பம் வராதிருக்க விளக்கமாகத் தகவல் அளித்தால் நலம் பயக்கும் என்பது எனது கருத்து.

  3. அருமையான கட்டுரை. சைவ சித்தாந்தம் பற்றிப் படிக்கப் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    அத்துவிதம் அறிஞருக்கு மட்டுமே உகந்தது. பாமரருக்குப் துவைதம் சொல்லும் பக்தி மட்டுமே என்றுதான் பலர் சொல்லுகிறார்கள். முக்கியமாக புகழ்பெற்ற சம்பிரதாயத்தார்.

    ஆனால், சைவ சித்தாந்தம் அக்காலத்தில் இருந்தே ”நடைமுறை அத்விதத்தைப்” போதிப்பது அறிந்து அதிசயிக்கிறேன். சுத்த அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் என்ற மூன்றின் வடிவமாகவும், அவை தாண்டிய தத்துவமாகவும் சைவ சித்தாந்தம் என் அறிவுக்குப் படுகிறது.

    மட்டுமல்ல. இந்தப் புண்ணிய பாரத பூமியில் உள்ள நாட்டர் மரபு மற்றும் வனவாசி மரபு உள்ளிட்ட அனைத்து ஆஸ்திக மரபுகளையும் இணைக்கும் தத்துவமாகவும் திகழும் தன்மை அதற்கு இருக்கக் காணுகிறேன். அது குறித்து மேலும் அறிய ஆவல் ஏற்படுகிறது.

    வேறு. குறிக்கோள் அறிந்து, அதையொட்டி நடக்க வேண்டும் என்று கட்டுரை சொல்லும் குறிப்பு புரிகிறது. 🙂

    பித்தா என்று அழைத்தவனையும் அரவணைத்தவன், பித்தன் என்று அழைத்தவனை உதைக்கக் காத்திருந்தவனையும் அரவணைத்தான். அவ்விருவரையும் ஒருவரை மற்றொருவன் அரவணைக்கச் செய்தான்.

    அந்தக் குறும்பனின் திருக்குறிப்பு அறிவது அரிதாக அல்லவா இருக்கிறது ? 🙁

    அறியும்வரை தேன்கூட்டில் சொல்லெறியும் பாவத்தைத் தவிர்க்க இயலாதன்றோ?

    அறிவது எப்படி என விளக்கினால் தன்யனாவேன்.

  4. பனித்துளி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. சைவம் வனவாசிகளின் மரபு, நாட்டார் மரபு, பாமரமக்களின் மரபு முதலிய அனைத்தையும் ஏற்றுத் தழைந்த ஞான மரபு என்றே என் சிந்தனைக்குப் படுகின்றது. ஓபன் சோர்ஸ் மதம் என்ற கட்டுரை, அந்த சிந்தனைப் பார்வையில் சைவசித்தாந்தத்தையும் சிவவழிபாட்டு நெறியையும் சிந்திக்கத் தூண்டுகின்றது. அப்பொருள் பேசும் வலைதளங்களைத் தேடி வருகின்றேன். நம்முடைய சமயமரபுகளைச் சாத்திரங்களைப் புதிய நோக்கில் சிந்திக்கவைக்கும் உங்களுக்கும் அரவிந்தன் நீலகண்டன், ஜடாயூ முதலியோருக்கும் அவர்களுடைய உண்மையான முற்போக்குச் சிந்தனைகளைத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தும் தமிழ்ஹிந்துவுக்கும் தமிழுலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. உங்களைப் போன்றவர்கள் தேன் கூட்டில் கல் எறிவது, தேன் கூட்டைக் கலைத்துத் தேனீயை வெறிகொள்ளச் செய்வதற்கல்ல என்பது நன்கறிந்ததே. உயரத்தில் இருக்கும் தேனைச் சொட்டச் செய்து எளியவர்களின் நாவில் படியச் செய்து இனிமையூட்டுவதற்கே என்று தமிழ்ஹிந்து வாசகர்கள் அனைவரும் அறிவர். நம்பியாரூரரின் ஏச்சுரைகள் இறைவனுக்கு மறையினும் உவப்பூட்டுவதாக இருந்தனவாம். ‘வைதாரையும் அங்கு வாழவைப்போன்தானே’ தமிழர் நம்பும் கடவுள். அவை அன்பால், நேசிப்பதால் தோன்றும் வசவுகள் தானே.

  5. உமாசங்கர்/திருப்புகலூர் வர்த்தமானீச்சுவரரைக குறித்த தகவல்களை அளித்தால் பயனுடைத்தாகும் எனக் கருதுகிறேன். வர்த்தமானர் என்றொரு சமணத்தீர்த்தங்கரர் உளர். ஆதலின் ஏதும் குழப்பம் வராதிருக்க விளக்கமாகத் தகவல் அளித்தால் நலம் பயக்கும் என்பது எனது கருத்து/ திருநாவுக்கரசர் பெருமான் தம்முடைய முதியபருவத்தின் இறுதி நாள்களைத் திருப்புகலூரில் கழித்தார். திருப்புகலூரில் அக்கினீஸ்வரர் திருக்கோயிலுக்கு அருகில் உள்ளது திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம். இது முருகநாயனாரின் திருமடம் என்று மரபுவழிக் கூறப்பட்டு வருகின்றது. வர்த்தமானன் என்பதற்குக் கடவுள் என்றே பொருள். திருநாவுக்கரச்நாயனார், திருஞானசம்பந்தநாயனார் காலத்தில் தமிழகத்தில் வழங்கிவந்த சமணசமயத்தில் கடவுட்கொள்கையே இல்லை. கடவுட் கொள்கையில்லாத சமயம் மக்களிடையே செல்வாக்குப் பெறமுடியாது என்று அறிந்த அம்மதப் பிற்காலப் பெரியவர்கள் அருகனையே கடவுளாகக் கொண்டு வழிபடத் தொடங்கினர். புத்தருக்கும் இது ஒக்கும். திருஞானசம்பந்தப் பெருமான் திருவவதாரம் செய்த சீகாழிக்குரிய பன்னிருநாமங்களில் ஒன்று சண்பைநகர் என்பது. அப்பெயரில் , முதல் திருமுறையில் அமைந்த திருப்பதிகத்தில்,” போதியாரும் பிண்டியாரும் புகழல சொன்னாலும், நீதியாகக் கொண்டருளும் நிமலன் இருநான்கின், மாதிசித்தர் மாமறையின் மன்னிய தொன்னூலர்,சாதிகீத வர்த்தமானர் சண்பை நகராரே” என்று பாடியுள்ளார். வேதத்தில் நிலைபெற்றுள்ளவரும் , உயர்ந்த இசைக்கு உவப்பவருமாகிய கடவுள் (வர்த்தமானர்) சண்பை நகரில் உள்ளவர் என்பது இத்தொடருக்குக் கருத்து. வர்த்தமானர் என்பது கடவுள் என்னும் பொருளைத் தரும் வைதிகச் சொல். இப்பெயரை அவைதிக சமணம் பிற்காலத்தில் தழுவிக் கொண்டது என்று கூறலாம். அல்லது கடவுள் என்னும் பொருள்தரும் இப்பொதுச் சொல்லை இருசமயங்களும் தழுவிக் கொண்டன என்றாலும் சரி , எனக்கு உடன்பாடே. சமணமும் இந்தியப்பண்பாட்டைத் தழுவி வளர்ந்த சமயம் ஆதலால் இன்றும் இங்கு வாழ்ந்துவருகின்றது.

  6. மிக சிறந்த கட்டுரை. பல புதிய செய்திகளை தெரிந்து கொண்டேன்.
    நன்றி.

    சோமசுந்தரம்

  7. முனைவர் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.

  8. ஐயா அருகன் என்றதும் தட்டியது, அதாவது தமிழ் இலக்கியங்களில் அருகனோ, அறிவனோ என்று வந்தால் உடனே அது சமண இலக்கியமாகி விடுகின்றது (வேறு எந்த ஆதாரம் இல்லாவிடினும்). ஆனால் அருகன் (Arahat), அறிவன் (Buddha, Buthan) என்பன சமணத்தை மட்டும் குறிக்கும் சொற்கள் இல்லை, அவை பௌத்ததுக்கும் பொதுவான சொல்! அகராதிகள், கல்வெட்டுக்கள் இதற்கு சான்று! ஆனால் எங்கு பார்த்தாலும் அருகன் என்றால் சமணம் என்றே கொள்ளப்படுகிறது! இது மிக தவறு!

  9. திரு உதயா அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை. எப்படி, இன்று நமக்குக் கல்விக்கண் திறந்தவர்கள், சமூகநீதி கிடைக்க உதவியவர்கள் இன்னும் இவைபோன்றவைகள் கிடைப்பதற்கு வழிவகுத்தவர்கள் வெள்ளைக்காரர்கள் என்றும் அவர்களால் மதம் மாற்றப்பெற்ற கிறித்தவர்களும் என்றும் சிலர் பேசி வருகிறார்களோ, அது போன்றே, தமிழ்ர்களுக்கு அறத்தைப் போதித்தவர்களும் நிலையாமையை, அஹிம்சையைப் போதித்தவர்கள் சமனர்களும் பவுத்தர்களும் என்று பேசுவதும் சமுதாயத்தில் காணப்படும் சீரழிவுகளுக்குக் காரணம் பிராமனர்களும் பார்ப்பனீயம் , வைதிகம் இந்துமதம் என்று பேசுவதும் சில அறிவாளிகளுக்கு(?) ஃஃபேஷன். (fashion)

  10. குறிப்பு அறிதலுக்கு அருமையான விளக்கம். திருக்குறளிலே இரண்டு இடத்தில வருகிறது என்பதைப் படித்தபோது நான் திருக்குறளை ஊன்றிப் படிக்கவில்லை அல்லது ஒன்றிப் படிக்கவில்லை என்பது தெரிந்தது. வர்தமநீச்வரம் பற்றிய விளக்கமும் மிக அருமை. தங்களின் அருமையான தமிழ் பணிக்கு என் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *