இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 4

a-hot-day-in-thiruvannamalaiஎங்களது வெள்ளிக்கிழமை அக்ஷர மண மாலை பாராயணம் ஆரம்பித்தபோது, எனக்கு அந்தப் பாடலில் உள்ள எல்லா அடிகளும் மனனம் ஆகியிருக்கவில்லை. அதை மனப்பாடம் செய்வதற்காக ஒவ்வொரு நாளும், அந்தநாள் வரை மனனம் செய்தவற்றை ஒருமுறை சொல்லி விட்டு, அந்த நாளின் பகுதியாக இன்னும் இரண்டு வரிகளைச் சொல்லி, மறுநாள் அதுவரை திருப்பிச் சொல்வது என்பது வழக்கமாயிற்று. ஐம்பது வயதில் செய்த முயற்சி என்றாலும், அடி மேல் அடி வைத்து அப்படிச் செய்ததால் ஒரு வழியாக எல்லா வரிகளையும் மனனம் செய்ய முடிந்தது. அப்படிச் செய்து, அதுவே எளிய வழியாகத் தோன்றியதால், பின்பு மற்றவற்றையும் மனனம் செய்வதற்கு அந்த வழியையே கடைப்  பிடித்தேன். அப்படிச் செய்யும் போது நடந்த சில  நிகழ்வுகளை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

அக்ஷர மண மாலை மனனம் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு முறை குறிப்பிட்ட ஒரு நேர்காணல் சம்பந்தமாக வேண்டுதலாக கிரிவலம் செல்ல திருவண்ணாமலை சென்றிருந்தேன். அப்போது நல்ல வெயில் காலம். மதியம் சாப்பிட்ட உடனேயே ஒருவர் வலம் செல்லுவதாக இருந்ததால் நானும் செல்ல விரும்பினேன். அப்போதே அங்கிருந்தோர் வெயில் பற்றி எச்சரிக்கை செய்தார்கள். கூட வந்தவரோ தினம் தினம் செல்பவராதலால் அவருக்கு இதெல்லாம் ஒன்றுமில்லை. நானும் வெயிலின் கடுமை அறியாது மதியமே அவருடன் காலணிகள் ஏதும் அணியாது புறப்பட்டுவிட்டேன். மற்றோர்கள் எச்சரித்தது போலவே சிறிது தூரம் சென்றவுடன் கடுமையை உணர ஆரம்பித்து விட்டேன். என்னால் கூட வந்தவரது நடை தடைபடக் கூடாதே என்று அவரை வேகமாகச் செல்லும்படியும் சொல்லிவிட்டேன். நான்கைந்து மைல்கற்கள் சென்றதும், வெயிலாலும் கற்களினாலும் எனது பாதங்கள் சிவந்து விட்டன. என்னால் மேற்கொண்டு அதே போல் செல்ல முடியாததால், வழியில் இருந்த எனக்கு நன்கு தெரிந்த சாமியாரின் ஆசிரமத்தில் தங்கி அவர் கொடுத்த எண்ணையை நன்கு பாதங்களில் தடவிக்கொண்டு, அவர் அளித்த காலணியையும் அணிந்துகொண்டு ஒரு வழியாக கிரிவலத்தை முடித்தேன். சென்னை வந்தபோதுதான் எனது கால்கள் எவ்வளவு ரணமாகிக் கொப்புளித்து விட்டது என்பதை உணர்ந்தேன். ஏதோ பாவங்கள் இத்துடன் கழிந்தன என்று சமாதானம் செய்துகொண்டு மற்ற வேலைகளில் மனதைச் செலுத்தினேன்.

post-interview-viewஅந்த நேர்காணலில் எனக்குத் தோல்விதான். ஆனாலும் எனது மேலதிகாரி நிறுவன முதல்வர் வரச் சொன்னதாகச் சொல்லி என்னை அவரிடம் அழைத்துக் கொண்டும் போனார். அவரிடம் போனதும் அவரோ எதற்கு வந்திருக்கிறீர்கள் என்பதுபோல் கேட்க ஆரம்பித்தார். எனக்கு எதுவும் புரியவில்லை. இருந்தாலும் நான் நேர்காணலைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்ததும் முதல்வரோ எல்லாம் சரியாகத்தான் நடந்ததாகச் சொன்னார். அதில் வெற்றிபெற்ற ஒருவர் சொன்னதை நான் சொல்ல ஆரம்பித்ததும், முதல்வர் கோபம் கொண்டு என்னைப் பற்றி தாறுமாறாகச் சொல்ல ஆரம்பித்தார். என்னை அழைத்துக்கொண்டு போன அதிகாரிக்குப் பயம்வர ஆரம்பித்து தன் இருக்கையிலிருந்து எழுந்து கொள்ள முயற்சித்தார். நானோ எந்தக் கவலையும் இல்லாமல் எனக்குத் தெரிந்தவரை எல்லாம் சொல்லிவிட்டு அப்புறமாகத்தான் எனது அதிகாரியுடன் வெளியே வந்தேன். இன்றைக்கும் எனது அதிகாரியின் நடுக்கம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. நானோ அங்கு கல் போல, மலை போல உட்கார்ந்து அளவாகப் பேசியதும் நினைவு இருக்கிறது. அன்று அக்ஷர மண மாலையில் எவ்வளவு மனனம் செய்தேன் என்பது அப்புறம்தான் ஞாபகத்திற்கு வந்தது. அந்த வரிகள்தாம் இவை:

“பீதியில் உனைச்சார் பீதியில் எனைச்சேர்
 பீதி உந்தனுக்கேன் அருணாசலா”

(பொருள்: பீதி அற்ற நிர்ப்பயனான உன்னைச் சேருவதற்கு நிர்ப்பயமாகத் துணிந்த என்னைச் சார்வதில் உனக்கேனோ பயமுண்டாகிறது! ஏன் துணிவில்லை அருணாசலா?)

காலம் சிறிது சென்றபிறகு அந்த முதல்வரோ சற்றே அவமானப்பட்டு பதவியில் இருந்து இறங்க வேண்டியதாயிற்று. அதற்கு அடுத்து வந்த முதல்வர் எனக்கு உரியதை எல்லாம் வழங்கினார்.

மலைபோல் உட்கார்ந்திருந்தேன் என்று சொன்னேன் அல்லவா, அது பற்றி ஒன்று சொல்கிறேன். ஓர் அன்பர் திருவண்ணாமலை வந்து ஆசிரமத்தில் மூன்று நாள்கள் தங்கிவிட்டுப் போகும் போது, பகவான் ரமணரிடம் “போவதற்குக் கஷ்டமாக இருக்கிறது” என்றாராம். அதற்கு ரமணர் “வந்து தங்கியாச்சு, அருளையும் பெற்றாச்சு, போகும்போது மலையை எடுத்துக்கொண்டு போக வேண்டியதுதானே?” என்றாராம். அதாவது “நினைத்தாலே முக்தி” என்ற வழக்கப்படி சதா சர்வ காலமும் இல்லாவிடினும் அவ்வப்போதாவது  மலையைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் போதும் என்று அருளியிருக்கிறார். எனது நல்வாய்ப்பு, மலையே என்னிடம் வந்திருப்பதைச் சொல்கிறேன்.

தீபத் திருவிழாவின்போது ஓர் இடத்தில் பத்து நாளைக்கு சுக்ல யஜுர் வேத பாராயணம் வருடாவருடம் நடக்கும். அங்கு ஒருநாள் நான் சென்றிருந்தபோது எனது சுவாமி நண்பர், “மலையில் கிடைத்த கல் ஒன்று கொண்டு வந்திருக்கிறேன். அதை ஒரு புறம் பார்த்தால் மலையின் ஒரு தரிசனமும், மறு புறம் வேறு மாதிரியும் தெரியும்” என்றார். அதை நன்றியுடன் பெற்றுக் கொண்டு எனது இல்லத்தில் பூஜை அறையில் வைத்திருந்தேன். அந்தச் சமயத்தில் நியூயார்க் நகரத்தில் உள்ள அருணாசல ஆஸ்ரம் தொடர்புடைய  ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவர்தான் திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் உள்ள பகவான் சிலையின் பதிப்பு ஒன்றை Plaster of Paris –ல் எடுத்துக் கொண்டு அங்கு போய் அதன் பிரதி ஒன்றை அமைத்துள்ளார். அவர் நமது சிற்பக் கலையைக் கற்றுக்கொள்வதற்காக அப்போது மகாபலிபுரம் வழியில் உள்ள உலகப் புகழ் பெற்ற திரு.கணபதி ஸ்தபதி அவர்களின் பட்டறையில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் என்னையும் ஸ்தபதியிடம் வரச் சொல்லி, மலைக்கல்லை இரண்டாக அறுத்து இரண்டும் சமதளத்தில் வைக்க ஏதுவாக முயற்சி செய்தார். ஆனால் ஒன்றுதான் தேறியது. அது எங்கள் வழிபாட்டு அறையில் இப்போது வைக்கப்பட்டுள்ளது. இப்படியாக மலை எங்கள் வீடு தேடி வந்து அமர்ந்துள்ளதால், நினைப்பதைத் தவிர காணவும் முடிகிறது.

ramanars-mother-died-in-skandasramamஎனது வழக்கப்படி சிவ புராணத்தையும் இரண்டு இரண்டு வரிகளாகப் பயில ஆரம்பித்தேன். அதன் சம்பந்தமாக இரு நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஒரு முறை திருவண்ணாமலை வந்து மலையில் உள்ள ஸ்கந்தாஸ்ரமத்திற்குச் சென்றேன். அங்கு ரமணர் தங்கி இருந்தபோதுதான் அவரது அன்னை காலமானார். அப்புறமாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்தான் தற்போதைய ஆஸ்ரமம் வளர்ந்துள்ளது. அடக்கம் செய்யப் பட்ட இடத்தில் மாத்ருபூதேஸ்வரர் கோவில் கட்டப்பட்டு ரமணரின் காலத்திலேயே கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. அந்த அன்னையின் இறுதிக் கட்டத்தில் ஊர்த்துவ சுவாசம் போது அன்னையின் தலையைத் தன் மடியில் இருத்தி அவரது நெஞ்சை நீவி விட்டுக்கொண்டு, அன்னையின் இறுதி எண்ண அலைகளைக் கட்டுப்படுத்தி, மனத்தை உண்முகமாக்கி தன்னை உணரச் செய்து அன்னைக்கு விதேக முக்தி கிடைக்க ரமணர் அருளினார். அதற்கப்புறம் அந்த ஆத்மாவுக்கு வேறு பிறப்பு கிடையாது அல்லவா? எந்த அறையில் அந்த விசேஷம் நடந்ததோ அந்த அறைக்கு நான் அதுவரை அதிகம் சென்றதில்லை. அன்றோ அங்குதான் அமைதியாக உட்கார்ந்துகொண்டு அப்போதைய வழக்கம்போல் அன்றுவரை மனனம் செய்திருந்த சிவ புராண வரிகளை மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தேன். அது முடியும் தருவாயில்தான் அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மகிமையையும் உணர்ந்தேன். அந்த வரிகள்தான் இவை:
 
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

இதற்குத்தான் இடம், பொருள், ஏவல் என்பார்களோ? அவை அனைத்தும் தானே அமையும்போது, தாம் செல்லும் பாதை சரியாகவே உள்ளது என்றுதானே கொள்ளவேண்டும்?

கிட்டத்தட்ட இதே போன்றே அமைந்தது பசு லக்ஷ்மியின் இறுதி மூச்சு அடக்கமும். அதனாலேயே, வேறு ஒரு கட்டுரையில் சொன்னதுபோல்,  ரமணரே பசுவும் விதேக முக்தி அடைந்தது என்றே குறிப்பிட்டார்.

சிவ புராண மனனமும் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. அந்தக் கடைசி நாளும் ஒரு சிவராத்திரிக்கு முன்பாக ஓரிரு நாளில் முடிந்தது. சில நண்பர்களுடன் குடும்ப சகிதம் அந்த சிவராத்திரியன்று கிரிவலம் செய்யலாம் என்று பஸ்ஸில் புறப்பட்டோம். நான் மனதுக்குள் சிவ புராணம் சொல்லிக் கொண்டே வந்தேன். திண்டிவனம் தாண்டி செஞ்சியும் கடந்தாயிற்று. சரியாக சிவ புராணம் சொல்லி முடித்ததும், அதன் இறுதியில் “திருச்சிற்றம்பலம்!” என்றும் சொல்லி முடித்தேன். அப்போது சிறிது நேரம் அந்த இறுதி வாக்கியம்தான் என் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அப்போதெல்லாம் நான் என் மனதுக்குள் தோன்றும் எண்ணங்களை எல்லாம் அந்தச் சமயத்தில் தோன்றும் ஒரு மெட்டையோ, சந்தத்தையோ வைத்துக் கொண்டு கவிதை வடிவில் ஒரு மாதிரி எழுதிவிடுவேன். நான் திருச்சியில் தவத்திரு.ஐயன் பெருமாள் கோனாரின் மாணவன் என்றாலும் கவிதை இலக்கணம் என்றெல்லாம் பார்ப்பது கிடையாது.

அப்போது கண்ணை மூடிக்கொண்டு இருந்தபோது தோன்றியதுதான் கீழே உள்ள பாடல்:

 

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
வெறுவெளி அதுவே திருச்சிற்றம்பலம்

அருட்பெருஞ் சோதி தனிப் பெருங்கருணை
வள்ளலார் காட்டும் வழியும் அதுவே

அருணை என்றொரு கருணை மலையாய்
நின்றது காட்டும் வழியும் அதுவே

அது நீ என்றம் மறைகள் காட்டும்
வழியில் நின்றால் நிற்பதும் அதுவே

அதுவே அதுவே  திருச்சிற்றம்பலம்
அதுவே அதுவே வெறுவெளி அதுவே
அதுவே அதுவே அருட்பெருஞ் சோதி
அதுவே அதுவே தனிப் பெருங்கருணை
அதுவே அதுவே அருணாசலமே
அதுவே என்று சொல்வதும் அதுவே”

 

tiruvannamalai1அப்படி மனத் திரையில் ஓடிய பாடலை மறந்து விடாது இருக்க சில முறை சொல்லிவிட்டு கண்ணைத் திறக்கிறேன். எனது பஸ்ஸின் ஜன்னல் முழுதும் நிறைத்துக் கொண்டு எந்த இடையூறும் இல்லாது மலை நன்கு காட்சி கொடுத்தது. எனது முதல் பயணத்தின் போது இருளில் மங்கலாகப் பார்த்த மலை, அப்போது காலைப் பொழுதில் நன்கு திவ்யமாகக் காட்சி அளித்தது. அது எனது பாடலுக்கு ஒப்புதல் அளித்தது போன்று எனக்குத் தோன்றியது.

இதைப் போன்ற இன்னொரு நிகழ்ச்சிதான் என்னை ஒரு நன்னாளில் அருணாசல அக்ஷர நாமாவளி-யை எழுதவைத்து, அதன் தொடர்பாக வந்த மறக்க முடியாத இடம்-பொருள் அனுபவங்களையும் அளித்தது.

(தொடரும்…)

3 Replies to “இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 4”

  1. Sir,
    Thank you .
    Very kind of you to share these experiences.
    We remain grateful.
    Namaskaram.
    Anbudan,
    Srinivasan. V.

  2. Dear Sir,

    I am sorry this comment is not releated in this post.

    But releated in this time. (tamil manadu at Kovi.)

    All advadismants of manadu in June 23 – 27. BUT NOT IN AANI 9 TO 13th [‘AANI’ IS ONE OF THE TAMIL CALANDER MONTH]. SO TAMIL IS IDENTIFY IN ENGLISH DATE AND MONTH WHY ?

    WHY…??? DON’T EXPOSED IN THIS MATTER IN TAMILHINDU AND TAMIL BLOGPOST’S ?????

    by

    R. Natarajan

  3. காலனியை அணிந்துகொண்ட கிரிவலம் செல்வது . இதை செய்ததற்கு ஸ்னேஹாவை இந்து இயக்கங்கள் எவ்வளவு கண்டனம் செய்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *