இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 5

aathirai-jyothiஇதுவரை நாம் என்ன பார்த்தோம்? எண்ணங்கள் வருகின்றன, அதைத் தொடர்ந்து சில சமயம் வார்த்தைகளும் வெளிப்படுகின்றன. வேறு சமயம் அவைகள் இல்லாவிடினும், எண்ணங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் ஏதாவது நடந்து விடுகின்றன. இவைகளில் எதை நமது என்று கொள்வது?

எண்ணங்களையா? இல்லையே, அவைகளை நாம் நமது இச்சையுடன் தொடரவில்லையே; அவைகள் தன்னிச்சையாக வருகின்றனவே. ஆனால் நீங்கள் சொல்லலாம், “இல்லை, இல்லை முன்பு ஏதோ நடந்திருக்கிறது, அதன் தொடர்பாக எண்ணங்கள் வந்திருக்கலாம்,” என்று. நாம் மறுக்கவில்லை; அப்படியும் அவைகளில் சில இருந்திருக்கலாம். எனது கேள்வி என்னவென்றால், முன்அனுபவங்களோ, அவைகளைப் பற்றிய அறிவோ இல்லாதிருந்தும் சற்றும் சம்பந்தமில்லாது சில எண்ணங்களாவது  எழுந்திருக்கின்றனவே. அவைகளை என்னவென்று சொல்ல?

எண்ணங்கள் மட்டுமல்ல, அவற்றின் தொடர்பாக நிகழ்வுகளும் நடந்தனவே, அவற்றை என்ன சொல்வது? “ஆழ் மனத்தில் உங்களையும் அறியாது அவை இருந்திருக்கின்றன; அவைதாம் வெளிப்படுகின்றன,” என்று நீங்கள் சொல்லலாம். சரி, அப்படியே இருந்தாலும் அந்த ஆழ் மனது என்பது என்ன? அவை அந்த ஆழத்திலேயே இல்லாது ஏன் வெளிப்பட வேண்டும்? அதுவும் அப்போது ஏன் வரவேண்டும்? நடந்த பின்னரே நான் பார்க்கும்போது அப்போது இருக்கும் இடம், பொருள் இவைகளுக்கு ஏற்ற மாதிரி நிகழ்வுகளும் இருக்கின்றனவே, அது ஏன்? இப்படியாக நாம் கேள்விக் கணைகளை தொடுத்துக்கொண்டே போகலாம்.

என்னைப் பொருத்தவரை ஒன்று நிச்சயம். நான் நடந்தவைகளை அப்படியே திரிக்காது சொல்கிறேன். நீங்கள் உங்களுக்குத் தோன்றியவாறு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அனுபவங்கள் ஏற்படும்போது அது மேலும் புரியலாம். என்னைப் பொருத்தவரை, எனது அனுபவங்கள் என்பதால், நான் பார்ப்பது ஒன்றே. எண்ணங்கள் தானாக வருகின்றன, நிகழ்வுகளும் நடக்கின்றன என்பதால் எனது சுய முயற்சியையும் மீறிய ஒரு சக்தி இருப்பதை நான் உணர்கிறேன். இவை எதுவும் எந்த பயிற்சியும் இன்றி நிகழ்வதால், இது எவருக்கும் வரக்கூடும் என்றும் உணர்கிறேன். சரி, இப்போது மேலும் நடந்தவைகளைப் பார்ப்போம்.

நான் அவ்வப்போது மெட்டுக்குப் பாட்டு எழுதுவேன் என்று சொன்னேன் அல்லவா? அது 1988 ஆகஸ்டு மாதத்திலிருந்து விளையாட்டாகத் தொடங்கியது. முதலில் சினிமா மெட்டுக்களைக் கொண்டுதான் ஆரம்பித்தது. ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, என் நண்பன் ஒருவன் அவற்றைப் பார்த்து விட்டு “என்ன? அறுசுவை கவிதை எழுதுவதாக நினைப்போ? எல்லாம் அறுவை கவிதைகள்,” என்றான். அவன் ‘அறுவை’ என்று சொன்னதை வைத்துக் கொண்டு, அவனுக்குப் பதில் ஒன்று இப்படி அனுப்பினேன்:

ரம்பம் எனது கவிதை என்று சொன்னதுவும் யாரடா? – ஆ
ரம்பத்தில் மெட்டுக்குத்தான் பாட்டு வந்தது நிசமடா
சந்தத்திற்கும் பாட்டு வரும், சப்தத்திற்கும் பாட்டு வரும்
வந்ததெந்தன் பாட்டு அன்று ஏதும் எதுவும் அறியுமுன்னே
 
birthday-celebrations-in-ashramஅதுதான் மெட்டைத் தழுவி எழுதப்படாத எனது முதல்  பாட்டு. இப்படியாக ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கும்  சமயம், 1993 டிசம்பர் மாதம் விடுமுறை சமயம் ரமண ஜெயந்தி வந்ததால், எனது இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ஐந்து நாள் விடுமுறையில் ரமணாஸ்ரமம் சென்றிருந்தேன்.

மார்கழி திருவாதிரை கழிந்து மறுநாள் புனர்பூச நக்ஷத்திரத்தில் ரமணர் பிறந்ததால், அவரது காலத்திலிருந்தேயே  அவர்களது பக்தர்களால் அன்று ஜெயந்தி கொண்டாடப்படும். அவரைப் பொருத்தவரை, அது எதற்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. முதல் முறை அப்படி விழா எடுப்பதைப் பற்றி அவரிடம் சொன்னதும், அவர் கீழ்கண்ட பாடலை எழுதிக் கொடுத்துவிட்டு சும்மா இருந்துவிட்டார்:

பிறந்தநா ளேதோ பெருவிழாச் செய்வீர்
பிறந்ததெவ ணாமென்று பேணிப் – பிறந்திறத்தல்  
இன்றென்று மொன்றா யில்குபொரு ளிற்பிறந்த
அன்றே பிறந்தநா ளாம்
.

(பொருள்:  பிறந்த நாளை பெரிய விழாவாகக் கொண்டாடுகிறீர்களே! பிறந்த நாள் எதுவென்பது நீங்கள் அறிவீர்களா? அதன் உண்மையைக் கேளுங்கள். இப்போது பிறந்திருக்கும் நாம் எதிலிருந்து, எங்கிருந்து பிறந்தோமென்பதை விசாரித்து, அதன் பயனாக பிறப்பும் இறப்புமற்ற ஏகசொரூபமாய் என்றும் விளங்கும் அந்தப் பரம்பொருளில் பிறந்த அன்றே உண்மையான பிறந்த நாளாகும். ஆத்ம சொரூபத்தில் ஒன்றுபடும் அந்த நல்லநாளே நாம் பிறந்த நாளாகும்.)

அப்படிச் சொல்லியும் பக்தர்கள் விடாது கொண்டாட  ஆரம்பித்தார்கள். அந்த 1993-ம் வருடம் திருவாதிரைக்கு முதல்நாள், நாங்கள் மலையின் உச்சிக்குச் சென்று வந்தோம். மறுநாள் திருவாதிரையன்று அதிகாலை நாலு மணி அளவில் கிரிவலம் சென்று கொண்டிருந்தோம். ஈசான்ய மூலை அருகே வரும் சமயம் முன்பு திருப்பதியில் அடிக்கடி கேட்டிருந்த,

ஸ்ரீ ஸ்ரீனிவாசா, ஸ்ரீசைல வாசா,
ஸ்ரீ வேங்கடேசம் மனஸா ஸ்மராமி…

என்ற பாடல் எங்கிருந்தோ காற்றில் தவழ்ந்து வந்து கொண்டிருந்தது. அதைக் கேட்ட நாங்கள் அதில் லயித்துக் கொண்டே நடந்து வரும்போது, அண்ணாமலையார் கோயில் அருகே அதே மெட்டில் வேறு தெய்வத்தின்மேல் ஒரு பாட்டு வந்து கொண்டிருந்தது. அதைக் கேட்ட நான் இந்த மெட்டில் இப்படியும் ஒரு பாட்டு இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டேன்.

சந்திரமௌலி என்ற நண்பர், “இருக்கிறதே… ஐயப்பன் மேல் இருக்கிறது.. பிள்ளையார் மேல் இருக்கிறது…” என்று அடுக்கிக்கொண்டே போனார்.

சிறிது தூரம் சென்றதும் வேறு ஒரு மெட்டில் அண்ணாமலையார்மேல் பாட்டொன்று வந்துகொண்டிருந்தது. அதைக் கேட்ட நான் “இது அக்ஷர வரிசையில் இல்லையே, பகவான் ரமணர் அக்ஷர மண மாலையில் அக்ஷரம்  அக்ஷரமாக வரிசையாகக் கொடுத்துள்ளாரே,” என்றேன்.

சந்திரமௌலி உடனே “ஏன், நீங்களே அப்படி எழுதலாமே?” என்றார்.

view-from-the-entrance-of-the-templeகோயிலின் உள்ளே நுழையும்போது ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்து கொண்டிருந்த நடராஜர் அபிஷேகத்தைப் பார்த்துவிட்டு, அண்ணாமலையார் தரிசனமும் செய்துவிட்டு அந்தப் பிரகாரத்திலிருந்து அம்மன் சந்நிதிக்கு வரும் வழியில் உள்ள வாசல் ஒன்றில் நின்றேன். அங்கிருந்து மலையின் தரிசனம் மிக அழகாக இருக்கும். மலையைப் பார்த்ததுமே, என மனதில் இந்த அடிகள் நொடிப் பொழுதில் தோன்றியது:   
 
அருணாசலமே சிவனின் நாமம்,
அருணகிரியே சிவனின் ரூபம்”

நாம-ரூபமே இக்கலியுகத்தில் போற்றவேண்டியவை என்று சொல்லப்படுவதால், அப்படி அமைந்தது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. உண்ணாமுலை அம்மன்முன் நின்று கொண்டிருக்கும்போது மௌலியிடம் இந்த அடிகளைச் சொன்னேன். “நன்றாக இருக்கிறது, தொடருங்கள்!” என்றார்.

writing-poemஆஸ்ரமம் வந்ததும் அறையில் உட்கார்ந்து கொண்டு எழுத ஆரம்பித்தேன். அரை மணி நேரத்தில், காலை உணவுக்குப் போகும் முன்,  ஏழெட்டு வரிகளை எழுதிக் கொண்டு உணவு பரிமாறிக்கொண்டிருந்த மௌலியிடம் காண்பித்தேன். அவரது ஊக்கத்தால் தொடர்ந்த முயற்சி, காலை சுமார் ஏழு மணி அளவில் ஆரம்பித்து மாலை நான்கு மணிக்குள் 108 வரிகளைக் கொண்ட தொகுப்பாக அமைந்தது. மௌலியின் யோசனைப்படியே அதற்கு “அருணாசல அக்ஷர நாமாவளி” என்று பெயரிடப்பட்டது. இதற்குமுன் நான் ஒரே நாளில் இவ்வளவு எழுதியதில்லை. திருவண்ணாமலைச் சாரலிலே உருவாகி, ஆஸ்ரம நிழலிலேயே இது வளர்ந்ததால் ரமணரின் அருள் இல்லாது இது நடந்திருக்கும் என்று நினைக்க இடமே இல்லை. ஆதலால், இது ‘ரமணா’ என்ற புனைப் பெயரில்தான் அளிக்கப்படுகிறது. இருந்தும் எவருக்கேனும் இதன் மூலம் தெரிய வேண்டியிருக்கலாம் என்பதற்கும், அல்லது எவரிடம் கேட்டுப்பெறுவது என்று தெரிவதற்குமாக, எங்கோ எனது பெயரும் இருக்கும். இது உருவாகியதை எங்கள் சுற்றத்தில் உள்ள நண்பர்கள் மட்டும் அறிவார்கள். மற்றவர்களுக்குத் தெரிய நாள்கள் பல ஆயிற்று.

இது எழுதி முடிக்கப்பட்டதும் சில நாள்கள் கழிந்தபின் இன்னொன்றை கவனித்தேன். முன்னர் இருந்தது போல் ஏதாவது எழுத வேண்டும் என்ற ஒரு துடிப்பு அடங்கிவிட்டது. முதல் நாள் மலை உச்சிக்குச் சென்று வந்ததுபோல், அன்று எழுதத் துடிக்கும் உச்சிக்கும் சென்று வந்துவிட்டதுபோல் இருந்ததோ என்ற ஐயம் எனக்கு எப்போதும் உண்டு.

sri-aathi-arunachaleswarar-templeஎனது கையெழுத்துப் பிரதியைக் கொண்டு அவ்வப்போது நாமாவளியைப் பாராயணம் செய்வோம். நாமாவளி எழுதப் பட்ட சமயம் அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. அதை அங்கு உள்ள எனது சுவாமி நண்பர் பொறுப்பேற்றுச் செய்துகொண்டிருந்தார். அவருக்கு உதவும் முகமாக நாமாவளியை யாராவது பாடி அதை ஒலிநாடாவில் பதிவு செய்தால், அதை விற்று திருப்பணிக்குப் பொருள் சேர்க்கலாம் என்று நினைத்து சம்பந்தப்பட்ட சிலரிடம் பேசினேன். ஏமாற்றம்தான் பதிலாக இருந்தது. அவை அவ்வளவாக விற்பதில்லை என்றும், மூலதனமாக சுமார் 30,000 ரூபாய் தேவைப்படலாம் என்றும், அதற்குப் பதிலாக அவ்வளவு பணம் நன்கொடை பெற்றால் அதையே திருப்பணிக்குக் கொடுத்து உதவலாம் என்றும் சொன்னார்கள். நன்கொடை சேர்ப்பதைத் தவிர, என்னால் ஆன அளவு அவ்வளவுதான் என்று நாமாவளியை கையடக்கப் பிரதியாகப் பதிக்கலாம் என்ற முயற்சியில் இறங்கினேன். 

இன்னுமொரு சிவராத்திரி வந்தது. அன்று பிரதிகளை எடுத்துக்கொண்டு கிரிவலம் போகும்போது சாமியாரிடம் கொடுத்து, ஒவ்வொரு பிரதியையும் வலம் வரும் மக்களுக்குக் கொடுத்து காணிக்கை பெற்றுக்கொள்ளச் சொல்லலாம் என்று போனேன். சாமியாரும் அடி அண்ணாமலை கோவில் வாயிலிலேயே நின்று கொண்டிருந்தார். “பிரதிகளைப் பெற்றுக்கொண்டு, யாராவது எப்படிப் பாடுவது என்று கேட்பார்கள், சற்றுப் பாடுங்களேன்..” என்றார்.

என்கூட வந்த ஆறேழு பேரும் அங்கேயே உட்கார்ந்து, “ஸ்ரீ ஸ்ரீனிவாசா…” மெட்டில், ஒவ்வொரு வரிக்கும் பின்பாக “அருணாசலமே சிவனின் நாமம்” என்பதை இரண்டாம் அடியாகப் பாடி முடித்தோம். அக்கோவிலின் நுழைவாயில் மண்டபத்தில் உள்ள விநாயகர் முன்தான் நாங்கள் உட்கார்ந்து பாடியிருக்கிறோம். எனக்கு அதுவே ஒரு அரங்கேற்றம் போல இருந்தது.  (சில மாதங்கள் கழித்து, நான் அவ்வப்போது திருப்பணிக்காக சாமியாரிடம் கொடுத்த தொகையைக் கூட்டிப் பார்த்தால் அதுவும் சுமார் 30,000 ரூபாயைத் தாண்டி இருந்தது. அதையும் சரியாக முன்னரே ஒருவர் கணித்துச் சொல்லிவிட்டார் போலிருக்கிறது என்றே நினைத்துக் கொண்டேன்.)

அடி அண்ணாமலையில் அன்று பாடிவிட்டு சென்னை வந்தபின், எங்கள் வெள்ளிக்கிழமை பாராயணத்தின் போது பாடப்படும் அருணாசல மகாத்மியத்தில் நந்தி வாக்காக உள்ள வெண்பாவை கவனித்தேன். அது:

ஆதி அருணாசலப் பேரற்புத லிங்கத்துருக்கொள்
ஆதி நாள் மார்கழியில் ஆதிரையச் – சோதிஎழும்
ஈசனை மால் முன் அமரர் ஏத்தி வழிபட்ட நாள்
மாசி சிவ ராத்திரியாம் அற்று.

மார்கழி ஆதிரையில் சோதி எழுகிறது, அதுவே மாசி சிவராத்திரியன்று மலையாய்க் குளிர்ந்து அமர்கிறது என்பது இதன் பொருட் சுருக்கம்.

எனக்கு இன்று நினைத்தாலும் நாமாவளியை ஒரு பிரசாதமாகவே உணர்கிறேன். ஏனென்று தெரிகிறதா? நாமாவளி எழுதப்பட்டது திருவண்ணாமலையில் மார்கழி ஆதிரை அன்றுதான். அது பொது இடத்தில் ஆதி அருணாசலத்தில் பிள்ளையார் முன்பாக பாடப்பட்டதும் மாசி சிவராத்திரி அன்றுதான்.

இவ்வளவுதான் நடந்தது என்று நினைக்கிறீர்களா? மேலும் சொல்கிறேன்.

(தொடரும்…)

3 Replies to “இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 5”

  1. தயவு செய்து தொடருங்கள். மிக்க எதிர்பார்ப்புடன் உள்ளேன். மிக்க நன்றி.

  2. Mr. Chandrasekaran:

    இத்தொடரில் ஆறாவதும் ஏற்கனவே வந்து விட்டதே. இன்னும் இரண்டு பதிப்புகளை அனுப்பியுள்ளேன். ஆசிரியர் குழு அவைகளை எப்போது பதிக்க முடியுமோ அப்போது அவைகள் வரலாம். தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் பயனுள்ளவையாக இருக்கிறது என்று ஊகிக்கிறேன். அப்படியானால் நன்றி.

    – ராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *