ஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து

kalasamhara_murthy_thirukkadaiyurமிழகத்து ஆலயங்களில் மிகச்சிலவே பிரபலமாகவும், அதிக வருமானம் ஈட்டுமிடமாகவும் இருக்கின்றன. பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற பழனி போன்ற சில கோயில்கள். நம்முடைய பூர்வீக நம்பிக்கையின் அடிப்படையில் திருமணம், சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்வதில் மக்கள் அதிகம் தேர்ந்தெடுத்துக்கொள்வது திருக்கடவூர் எனும் தலம். இங்கு காலசம்ஹாரமூர்த்தியாகவும், அமிர்தகடேஸ்வரராகவும் விளங்கும் சிவபெருமானும், அபிராமியம்மையும் இவ்வுலகம் வாழ அருள் புரிந்து வருகிறார்கள். மிகப்பெரிய இவ்வாலயம் திருக்கயிலாயப் பரம்பரை திருத்தருமையாதீனத்துக்குச் சொந்தமானது. வைத்தீஸ்வரன்கோயில், திருவையாறு ஆகிய சில பிரபலமான கோயில்களும் இம்மடத்துக்குச் சொந்தமானது. இங்கு சிவபெருமான் மார்க்கண்டனுக்காக எமனை சம்ஹாரம் செய்தத் தலமாதலால், மேற்படி நிகழ்ச்சிகளை இங்கு நடத்திக் கொள்வதில் மக்களுக்கு அதிக நம்பிக்கை.

மக்களின் நம்பிக்கையிலும் எந்தத் தவறும் இல்லை. ஒவ்வொரு நாளும் இக்கோயிலில் பல்லாயிரக்கணக்கான பகதர்கள் வந்து போகிறார்கள். தினசரி பத்து முதல் இருபது குடும்பங்களாவது இங்கு சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் என்று செய்து கொள்கிறார்கள். அப்படி செய்து கொள்ளும் ஒவ்வொரு குடும்பத்தோடும் சுமார் ஐம்பது முதல் நூறும் அதற்கு மேற்பட்ட உறவினர்களும் வந்து கூடுகிறார்கள். இந்த ஆலயத்தின் சந்நிதியில் இருக்கும் சிவாச்சாரியார்களின் இல்லங்கள் எல்லாம் பெரிதாகவும், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து தரவும் வேண்டி மிகவும் வளமாகக் காட்சி தருகின்றன. இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடியார்கள் வளமாகவும், மகிழ்ச்சியுடனும் வாழ்வதைக் காண்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான்.

ஆனால் இவ்வாலயத்தின் உட்புறம் அதிலும் குறிப்பாக சுவாமி சந்நிதி, அர்த்த மண்டபம், சுற்றுப்புற முதல் பிரகாரம் இங்கெல்லாம் பார்த்தால், பகலிலேயே கண் தெரியவில்லை. காரணம் சுவர், மண்டபங்களின் மேற்கூரை, தூண்கள் எல்லாம் அங்கு தினசரி நடத்தும் ஹோமப் புகை படிந்து கன்னங்கரேன்று காட்சியளிக்கிறது.

abirami_ammanஇந்த நிகழ்ச்சிகளல்லாமல், சுவாமி தரிசனத்துக்காகவும், சுற்றுலா வருபவர்களும் இக்கோயிலுக்குள் வந்து போகிறார்கள். அப்படி வருகிறவர்கள் தடங்கலின்றி சந்நிதிக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய முடிவதில்லை. அங்கு சதாபிஷேகம் நடத்திக் கொள்பவர்கள், அவர்கள் உறவு, நட்பு ஆகியோர் எப்போதும் சந்நிதியை அடைத்துக் கொண்டு நிற்கிறார்கள். மேலும் அர்த்த மண்டபம் முன்பெல்லாம் கார்த்திகை சோமவாரம் போன்ற நாட்களில் நடைபெறும் 1008 சங்காபிஷேகத்துக்கு சங்கு வைத்து பூஜை செய்யப்படும் இடம். பக்தர்கள் சந்நிதியில் தரிசனம் முடிந்து மண்டபத்தில் நின்று ஒருமுறை நமஸ்கரித்துவிட்டுச் செல்வர். இன்று அங்கெல்லாம் கால்வைக்கக்கூட இடமில்லை. ஏன் இந்த நிலை?

இவ்வளவு கூட்டம் வருகிறதே, இவ்வளவு நிகழ்ச்சிகள் நடக்கின்றதே, இதனால் ஆலயத்துக்கு வருமானம் இல்லையா என்றால், அது மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. ஏற்பாடு செய்துதரும் இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு செய்கிறார்களே தவிர அப்படி செய்யப்படும் இடம் சுத்தமாகவும், பளிச்சென்றும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் செய்யவும் வேண்டாமா? செய்வதில்லை.

கோயில் நிர்வாகமாவது, இதென்ன இப்படியே போய்க்கொண்டிருந்தால் ஆலயத்தின் மூலஸ்த்தானம், அர்த்தமண்டபம், முன்மண்டபம், முதல் சுற்றுப் பிரகாரம் இங்கெல்லாம் வெளிச்சம் இல்லாமல், இருளடைந்து, புகை படிந்து புழக்கத்துக்கு லாயக்கில்லாமல் போய்விடுமே என்று கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஒருவர் சஷ்டியப்த பூர்த்தி செய்துகொண்டு போன பின் அங்கு சிதறிக்கிடக்கும் புஷ்பங்கள், ஹோம திரவியங்கள் இவற்றைத் திரட்டி எடுத்து அடுத்த நிகழ்ச்சிக்குப் பயன்படுத்துவதையும் பார்க்க நேர்ந்தது.

கோயிலின் பிரதான கோபுரத்தையடுத்து, அபிராமி சந்நிதிக்குத் திரும்புமிடத்திலுள்ள இரண்டாம் கோபுரம் வரை செட்டிநாட்டரசர் ஒரு மண்டபம் கட்டி வைத்திருக்கிறார். அதுதான் மக்கள் களைப்பார வசதியாகவும், நிழலாகவும், காற்றோட்டமாகவும் இருக்கிறது. மற்றபடி ஆலயத்தின் வேறு எந்தப் பகுதியிலும் தங்கவோ, உட்காரவோ, இளைப்பாரவோ முடியாத சூழ்நிலை. சில காலம் முன்பு வரை இந்த நிகழ்வுகள் சுவாமி சந்நிதி, பிரகாரம் இங்கெல்லாம்தான் நடைபெற்று வந்தது. இப்போது அபிராமியம்மன் கோயில் வளாகத்தையும் விட்டுவைக்கவில்லை. இங்குள்ள பிரகாரம் மேலே மூடப்பட்டு நிழல்படிய இருக்கும். அமைதியாக இங்கு வந்து அபிராமி அந்தாதியைப் படிக்கவும், பாடவும் முடிந்தது. இப்போதெல்லாம் இந்தப் பிரகாரம் முழுவதும் கூட மேற்படி கல்யாணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பிரகாரத்தைச் சுற்ற விரும்புவோருக்கு சுற்ற முடிவதில்லை. இதெற்கெல்லாம் வேறு வழியே இல்லையா?

abhirami-temple-entrance

இந்த விழாக்கள் எல்லாம் நடத்த ஆலயத்துக்கு வசூல் செய்யும் தொகை அதிகரிக்கப்பட வேண்டும். இந்த நிகழ்வுகள் எல்லாம், வெளியே ஒரு பெரிய மண்டபத்தில் நடத்தவும், அந்த கல்யாணம் முடிந்து சுவாமி தரிசனத்துக்கு மட்டும் சந்நிதிக்கு வரலாம் என்றும் கட்டுப்பாடு செய்ய வேண்டும். முக்கியமாக அர்த்தமண்டபம், முன்மண்டபம், முதல் சுற்றுப் பிரகாரம் இங்கெல்லாம் படிந்திருக்கும் கரியை சுத்தம் செய்து பளிச்சென்று வைத்திருக்க வேண்டும். இங்கெல்லாம் குழாய் விளக்குகள் இருந்தும், பலவற்றில் பல்ப் கிடையாது. பல எரிவதில்லை. இதையெல்லாம் சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும்.

இதெல்லாம் ஆண்டவனைக் கும்பிட அமைதியான இடமா? திருமண களேபரம், சதா புகை, கூட்டம், சத்தம் இவற்றோடு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யமுடியாமல் தடைசெய்வதா? சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு ஆலயம் தரிசனம் செய்ய வருபவர்களுக்கு முன்னுரிமை, கல்யாண விசேஷங்கள் வெளியே அல்லது முதல் மண்டபத்துக்கருகிலுள்ள வெற்றிடத்தில் ஒரு மண்டபம் அங்கே நடத்திக் கொண்டு தரிசனத்துக்கு மட்டும் சந்நிதிக்கு வரும்படியாக ஏற்பாடு செய்ய வேண்டும். செய்வார்களா? செய்ய வேண்டும்.

20 Replies to “ஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து”

  1. பல பக்தர்களின் உள்ளக் கிடக்கையைத் தெள்ளத் தெளிவாகப் பதிவு செய்த கட்டுரை ஆசிரியருக்கு நன்றி. அதீத நம்பிக்கையால், திருக்கோவிலை ஒரு திருமண மண்டபமாகவே மக்கள் மாற்றிவிட்டனர், அதற்குக் கோவில் நிர்வாகமும், சிவாச்சாரியார்களும், இடைத் தரகர்களும் துணை போகின்றன. ஏதாவது செய்யக் கூடிய நிலையில் இருக்கும் தருமை ஆதீனமோ தற்கால அரசு, மக்கள்(எனப்படும் அரசியலார், அந்நிய மதத்தார்), ஊடகங்கள் ஆகியவற்றுக்குப் பயந்து தமது நிலைப்பாட்டை வெளியில் உரக்கச் சொல்லவியலாத நிலையிலும், அவர்கள் அப்படிச்சொன்னாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல எடுபடாத நிலையிலும் இருக்கும் இழிகாலமாக இன்று ஆகிவிட்டது.

    இவைபோக, திரு எம்.எ.எம். ராமசாமி அவர்கள் கட்டிவைத்த மண்டபமும், திருக்கோவிலின் ராஜகோபுரத்திலிருந்து அடுத்த கோபுரம் வரை ஒட்டிய வகையில் “தற்கால கட்டடக் கலையின் சிறப்பு அம்சமான” கான்கிரீட் தளத்துடன் அமைக்கப் பட்டு கோபுரங்களின் தரிசனத்தை மறைத்து ஆகம விதிகளுக்குப் புறம்பாக அமைந்திருப்பது பெரும் மனக்குறையே.

  2. என்ன ஒரு timing !

    இன்றைய தினமலரில் ஒரு செய்தி

    திருக்கடையூர் கோவிலில் மாஜி அமைச்சர் பூஜை

    மயிலாடுதுறை: திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பா.ம.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் வேலு, 70 வயது பூர்த்தியானதை அடுத்து, தனது மனைவி மல்லிகா மற்றும் குடும்பத்தினருடன் நந்தி மண்டபத்தில் பீமரத சாந்தி ஹோமம் செய்தார். தொடர்ந்து வேலு அவரது குடும்பத்தினருடன் அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி மற்றும் அபிராமி அம்பாள் சன்னிதிகளில் தரிசனம்
    செய்தார்.

    https://www.dinamalar.com/News_Detail.asp?Id=௪௭௨௭௭

  3. இக்கட்டுரையாளரின் அனுபவமும் எண்ணமும் எனக்கும் ஏற்பட்டதுண்டு. திருக்கோவில்கள் வழிபாட்டுக்கென்றே ஏற்பட்டவை. அங்கு இவைபோன்ற நிகழ்ச்சிகளை அனுமதிக்கக் கூடாது. இவை புரோகிதத்துடன் தொடர்பானவர். புரோகிதர்கள் குருக்கள் அல்லர். முப்போதும் திருமேனி தீண்டிப் பெருமானுக்குச் சேவை செய்பவர்கள் புரோகிதர்க்ள் ஆகிவிட்டனர். ஈசனுக்குச் சேவைசெய்வதைக் காட்டிலும் மனிதனுக்குச் சேவை செய்தால் நாலு காசு பார்க்கலாமென்ற இலெளகீகம் அவர்களையும்பற்றிக் கொண்டது.அவர்களும்மனிதர்கள்தானே. அருகிலேயே திருக்கடவூர் மயானம் என்ற திருமுறைப்பாடல் பெற்ற திருத்தலம் உள்ளது. மிகப்பெரிய ஆலயம். வறுமையில் பொலிவிழந்து கிடக்கின்றது. நான் சென்றபோது முதிய ஓதுவார் மட்டும் அங்கிருந்தார்.. “மருவார்கொன்றை மதிசூடி” என்ற திருப்பதிகம் முழுவதையும் பாடி எங்களுக்குப் “பெரிய பெருமானை”த் தரிசனம் செய்வித்தார். பெரியபெருமான் அதாவது மகாதேவன். இப்பெயர்ரல்பெருமானை நம்பியாரூரர் துதித்தார். இங்குதான் மார்க்கண்டனுக்காக இயமனைச்ச்ம்ஹரித்தது. அதனால்தான் இத்தலத்திற்க்குக் கடவூர் மயானம் என்ற பெயர் வந்தது.இந்தப் பெருமானுக்குத்தான்காலசம்ஹாரர் என்றதிருநாமம். ஷஷ்டியப்த பூர்த்தி செய்துகொள்வோர் திருக்கடவூர்மயானத்தில்செய்துகொள்வது பொருத்தமாக இருப்பதோடு திருக்கோவிலுக்கும் வருமானம் கூடும்.

  4. Pingback: Indli.com
  5. A timely article pinpointing the real facts
    //கல்யாண விசேஷங்கள் வெளியே அல்லது முதல் மண்டபத்துக்கருகிலுள்ள வெற்றிடத்தில் ஒரு மண்டபம் அங்கே நடத்திக் கொண்டு தரிசனத்துக்கு மட்டும் சந்நிதிக்கு வரும்படியாக ஏற்பாடு செய்ய வேண்டும். செய்வார்களா? செய்ய வேண்டும்.//

    Yes rhey have to.

  6. சமீபத்தில் இந்தக் கோவிலிக்கு குடும்பத்துடன் போய் வந்த போது இங்கே குறிப்பிட்ட இதே உணர்வு தான் வந்தது. பதிவு எழுதுவதோடு இந்து அற நிலையத் துறைக்கு ஒரு கடிதம் கூட எழுதி விட வேண்டும் என்று நினைத்தேன். உள்ளே நுழையும் போதே பிளாஸ்டிக் கவர்கள் அங்கும் இங்கும் பறந்து கொண்டு ஈ மொய்த்துக் கொண்டு, கோவில் வெளிப் பிரஹார சுவர் எல்லாம் காதல் சின்னங்கள் கரியால் வரையப் பட்டு, உள்ளே சுவாமி நடையிலும் தொடர்ந்து பூஜை நடந்து கொண்டே இருப்பதால் பூஜைக்கு உரியப் பொருட்களை எடுத்து விட்டு தூக்கிப்போட்ட குப்பைகள், என்று சுத்தம் என்பதே இல்லை வாசல் முதல் கருவறை வரை என்று சொன்னால் தப்பில்லை.

    ஏதாவது செய்தே ஆக வேண்டும். ரொம்ப அதிர்ச்சி ஆக இருந்தது. தரிசனம் முடிந்து வெளியில் வந்தால் உண்ண ஒரு நல்ல உணவகம் கூட இல்லை என்பது ஆச்ரயமாக இருந்தது. இருக்கும் சில நல்ல உணவகங்கள் இந்த கல்யாண நிகழ்ச்சி நடத்துபவர்களால் ஏற்கனவே முன் பதிவு செய்யப் பட்டு இருந்தது.

  7. இந்த கட்டுரையை படித்த பின்பாவது கோவிலுக்கு விடிமோட்சம் கிடைக்குமா என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

  8. மன்னிக்கவும், புரிதலில் சில மாறுபாடுகள் உள்ளன,

    //இதெல்லாம் ஆண்டவனைக் கும்பிட அமைதியான இடமா? திருமண களேபரம், சதா புகை, கூட்டம், சத்தம் இவற்றோடு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யமுடியாமல் தடைசெய்வதா?//

    கோவில்கள் சமுதாய கூடமாகத்தான் செயல்படவேண்டும்,
    தடை என்பது மனதில் மட்டும் தான், அமைதியாக கோவில் இருக்க வேண்டும் என்பதில்லை, அது தியானகூடம் இல்லை.

    ஓரிரு சிறு வார்த்தைகளில் நாம் வேண்டிய தடையை நீக்கி கொள்ளலாம்,
    அவர்கள் பக்தியின் மிக ஆரம்ப படிகளில் இருக்கலாம் அதற்காக அவர்களை நம் அளவுக்கு எதிர்பார்ப்பது பிழையாக தெரிகிறது மற்றபடி உங்கள் எல்லா கருத்துக்களுடன் உடன்படுகிறேன்
    நன்றி,
    சஹ்ரிதயன்

  9. நானும் அங்கே போய் இருக்கிறேன். அந்த கோவிலின் தலைமை குருக்கள் தனக்கும் கீழ் சுமார் 30 நபர்களுக்கு மேல் அமர்த்தி நல்ல வியாபாரம் பார்த்து வருகிறார். வரும் பக்தர்களுக்கு பேக்கேஜ் சிஸ்டம் வைத்துள்ளார். அவரவர் தகுதிகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம். கட்டுரையில் சொல்லப்பட்ட சம்பவங்கள் உண்மையிலும் உண்மை. ஆனால் தனிமனித ஆதிக்கம் நிறைந்த இடமாக உள்ளது. புராதண கோயில் தனிமனித ஆதிக்கம் நிறைந்துள்ளதாக மாறி வருகிறது. அரசு இது விசயத்தில் தலையிட்டு தனியாக மண்டபம் அமைத்து அனைத்து திருமணங்களையும் ஒரே இடத்தில் நடத்தி கோயிலை காப்பற்ற வேண்டும்.

    (edited and published)

  10. மரியாதைக்குரிய சஹிருதயன் அவர்களுக்கு, பக்தி மார்க்கத்தில் பல துறைகள் உள்ளன. மலர் தூவி பூஜை செய்வது, பாடி ஆடி மனத்தை லயப்படுத்தி பக்திசெலுத்துவது, கண்மூடி தியானத்தில் அமர்வது போன்ற ஒன்பது மார்க்கங்களைச் சொல்லுகிறார்கள். இங்கு நான் சொல்ல வந்த கருத்து, இறைவன் சந்நிதானத்தில் அமைதியாக நின்று அவன் நினைவை மனத்தில் இருத்தி பக்தி செய்யும் ஆலய வழிபாடு. இங்கு நடப்பதென்ன? காலை தொடங்கி பகல் பன்னிரண்டு வரை ஒரே கூச்சல், புகை, சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் நுழைய முடியாமல் அங்கு பரிகாரம் செய்து கொள்வோரின் சுற்றத்தார் கூட்டம், ஆலயம் கரியேறி, இருளடைந்து போவதற்குக் காரணம் யார் என்பதுதான் எனது ஆதங்கம். மற்ற ஆயிரக்கணக்கான ஆலயங்களில் இப்படி நடப்பதுமில்லை, நிர்வாகம் அனுமதிப்பதும் இல்லை. இங்கும் பக்தர்கள் சென்று வழிபாடு செய்வதற்கு இதுபோன்ற சடங்குகள் தடையாக இல்லாமல் கோயிலுக்கு உள்ளேயே வேறு தனி மண்டபத்தில் நடத்திக் கொண்டு, சுவாமி தரிசனத்துக்கு மட்டும் சந்நிதிக்கு வந்தால் போதுமானது என்பது எனது தாழ்மையான கருத்து.

  11. ஒரு ஷஷ்டி அப்த பூர்த்திக்கு 500 ருபாய் கோவிலுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் என்று வாங்கினால் கூட போதும், இதை வைத்தே கோவில் சுத்தமாக வைக்க உதவும். தமிழ் நாட்டில் மட்டும் தான் மிக புரதான கோவில்கள் நிறைய உள்ளன, இவற்றை பாதுகாக்க ஒவ்வொரு ஹிந்துவும் ஒரு சிறிதளவு முயற்சி எடுத்தால் கூட போதுமானது.

  12. கோபாலன்,
    அமைதியாக எல்லா நாலும் வழிபட முடியும் என நான் நினைக்கவில்லை.
    மேலும் நாம் இந்த வழியாக வேணும் நிறைய மனங்களை கோவிலுக்குள் ஈர்க்கமுடியும், ஒரு சிறு வழிகாட்டுதல் மட்டுமே தேவை. அவர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன். ஆனால் கோவில் கொண்டாடுவதற்கான இடம் எனவே. நெறைய திருவிழாக்கள் அதனாலேயே ஏற்படுத்தப்பட்டன
    காரணம் நம் போன்ற பங்கேற்பாளர்கள் தான். நாம் விழிப்போடு இருந்து விட்டால் நிர்வாகிகள் சரியாகிவிடுவார்கள் என நம்புகிறேன்.
    உங்கள் கோபத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

    நன்றி,
    சஹ்ரிதயன்

  13. மிகவும் வருத்தத்துக்குரியது இந்த விஷயம்.
    கோயிலுக்கு உள்ளேயே தனியார்களின் விசேஷங்கள் நடத்த எப்படி அனுமதிக்கப் படுகிறது என்று புரியவில்லை
    இதை நிறுத்த வேண்டும்
    கோயில் சுத்தமாக இருக்க வேண்டும்
    போதிய வெளிச்சம்- அது மின்சார விளக்க்காகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
    குத்து விளக்குகள் சன்னதிக்குள் கூடுதலாக ஏற்றலாம் . அதன் அழகும் தெய்வீகமும் தனி.
    நம் மக்கள் கோயிலுக்குள் குப்பை போடுவது , பிரசாதம் சாப்பிடுவது போன்ற அருவருப்பான செய்கைகளை உடனே நிறுத்த வேண்டும்
    நாமே இப்படி நடந்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் ?
    கோயில் பக்தர்கள் தடையின்றி வந்து போக ஏதுவாக இருக்க வேண்டும்
    குடும்ப விசேஷங்களை கோயிலை ஒட்டிய கல்யாண மண்டபங்களில் மட்டுமே செய்ய வேண்டும்.
    ஆதீனங்கள் மற்றும் அறநிலைய துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ஹிந்து இயக்கங்கள் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்

  14. கோவில் சுத்தம் குறித்து ஆதங்கப்படும் அனைத்து தரப்பினருக்கும் பிரச்சனையின் ஆணிவேர் என்ன என்று தெரிந்திருக்கும். இறைவன் மீது இருக்கும் நம்பிக்கையில் பக்தர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளை அலையை நிர்வாகம் சில கட்டுபாடுகளை விதித்து சேரி செய்ய முடியும்.
    ஆனால்…
    சிவாச்சார்யர்களின் வியாபாரத் தாண்டவம் கோவிலின் வெளியில் அலங்கார BANNER கள் வெயிக்கும் அளவிற்கு பரவியுலத்தை யாரும் மறுப்பதற்கில்லை.

  15. கோயில்களை எல்லோரும் தரிசனம் செய்ய ஏற்ற வகையில் சரி செய்ய வேண்டும்! சடங்குகளை நடத்திக் கொள்ள கோவில்களுக்கு அருகில் மண்டபங்களைக் கட்டிப் பராமரிக்க வேண்டும்! அப்போது கோவிலின் வருமானமும் அதிகரித்து வசதிகளை ஏற்படுத்த முடியும்! தெய்வத்தை தரிசிக்க செல்கிறோம் என்ற உணர்வு ஏற்பட வேண்டும்! மனதால் இறைவனை வழிபட வேண்டும்! ஆன்ம லயமாகக் கூடிய இடங்களாக இல்லாமல் வெறும் கூட்டம் கூடும் இடங்களாக கோவில்கள் இருப்பதை மாற்ற வேண்டும்! நன்றி!

  16. கோயில்களை எல்லோரும் தரிசனம் செய்ய ஏற்ற வகையில் சரி செய்ய வேண்டும்! சடங்குகளை நடத்திக் கொள்ள கோவில்களுக்கு அருகில் மண்டபங்களைக் கட்டிப் பராமரிக்க வேண்டும்! அப்போது கோவிலின் வருமானமும் அதிகரித்து வசதிகளை ஏற்படுத்த முடியும்! தெய்வத்தை தரிசிக்க செல்கிறோம் என்ற உணர்வு ஏற்பட வேண்டும்! மனதால் இறைவனை வழிபட வேண்டும்! ஆன்மா லயமாகக் கூடிய இடங்களாக இல்லாமல் வெறும் கூட்டம் கூடும் இடங்களாக கோவில்கள் இருப்பதை மாற்ற வேண்டும்! நன்றி!

  17. எப்படியோ சர்ச்க்கு போய் தொலைக்காமல் கோவிலுக்கு வருவதை நினைத்து மகிழ்ச்சி அடைவோம்.கொஞ்சம் கொஞ்சமாக புகை மற்றும் ஆர்பாட்டங்கள் ஆலயத்தின் உள்ளே நடக்கும் குடும்ப விழாக்களை தடுத்து வெளியே மண்டபத்தில் விழாவும் பின் கோவிலில் தரிசனம் மட்டும் என்பதை மக்கள் மனதில் கொண்டு செல்வோம்.
    அதற்க்கான பிரசார முயற்சிகளை நம் சொந்தங்களிடம் இருந்து ஆரம்பிப்போம்.
    முதலில் ஆலய நிர்வாகம் அரசாங்கத்தில் இருந்து விடுபட்டால் தான் ஆலயமும் ஆலய விழாக்களும் சிறக்கும்.அதற்கும் முற்சி செய்வோம்.கோபாலன் ஐயாவுக்கு நன்றிகள் பல.

    அபிராமி அருள் புரிவாள்.

  18. சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் போன்ற சடங்குகளைச் செய்ய திருக்கடவூரை மட்டும் மக்கள் தேர்ந்தெடுத்துச் செய்கிறார்கள். ஆனால் இவ்வூர் தவிர திருவையாறு ஸ்ரீவாஞ்சியம், ராச்சண்டார் திருமலை போன்ற ஊர்களும் இதுபோன்ற சடங்குகள் செய்ய ஏற்ற இடம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். அப்படிச்செய்தால் ஒரே இடத்தில் கூடி நெருக்கடி செய்யாமல் பரவலாகச் செய்ய முடியும். திருவையாற்றுத் தேவாரத்தில் திருநாவுக்கரச சுவாமிகள் “பொடிதனைப் பூச வைத்தார், பொங்கு வெண்ணூலும் வைத்தார், கடியதோர் நாகம் வைத்தார், காலனைக் காலில் வைத்தார், வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகம் வைத்தார், அடியினைத் தொழவும் வைத்தார் அய்யன் ” ஐயாறனாரே” என்கிறார். இதில் “காலனைக் காலில் வைத்தார்” என்பது சுசரிதன் எனும் சிறுவனைக் காக்க சிவபெருமான் ஆட்கொண்டாரை அனுப்பி எமனிடமிருந்து சிறுவனை மீட்கப் பணித்தார். இவற்றைஎல்லாம் கவனத்தில் கொண்டு ஆலயங்கள் பொதுச்சொத்து, அதை தூய்மையாக வைத்துக் கொள்வது நமது கடமை. ஆலயம் மூலம் அங்கு பூசை செய்வோர் சம்பாதிக்கலாம், அதற்காக பொதுச்சொத்தை அவலமுறச் செய்துவிட்டு சம்பாதிக்க வேண்டியதில்லை. ஒப்புக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

  19. மெய்யடியார் உள்ளக்குமுறலை வெளிப்படுத்திய கட்டுரையாளருக்கு பாராட்டுக்கள். இந்த சடங்குகளை ஆலயத்திற்கு அருகில் ஒரு மண்டபம் அமைத்து நடத்தினால் என்ன? ஆலயத்துள் இவற்றை நடத்த தடைவிதித்தல் நலம்.
    சிவசிவ

  20. நாம் இந்து கடவுளை மனமுவந்து வழிபட்டு வருகின்றோம்.தமிழகத்தில்,இந்து அறநிலை துறை பல்வேறு கோயில்களை ,அதுவும் குறிப்பாக வருமானம் உள்ள கோயில்களை சேர்த்துள்ளது.பல சிறு கோயில்களுக்கு,ஒரு கால பூஜை செய்யும் நிலைக்கு உதவிகள் புரிந்து வருகின்றது. திருக்கடவூர் அமிர்த கடேஷ்வரரை தரிசித்த பின்னர்,காள சம்ஹார மூர்த்தியை கடந்த 12.08.2016 காலை 9.15 மணிக்கு ,நான் கூறும் சம்பவம் நடைபெற்றது.30 வயது உள்ள குருக்கள் அர்ச்சனை கொடுப்பவர்களிடம் பெற்று ஒரு நிமிடம் கூட அர்ச்சனை செய்யாமல்,தேங்காயை உடைக்காமலே, அதனை மறைவாக போடப்பட்டு,வேறு ஒரு உடைந்த தேங்காயை சேர்த்து கொடுத்தார்.நான் இருபது ரூபாயை தட்சனை வைத்துவிட்டு பிராசதித்தினை பெற்று கொண்டேன்.என்னால் சரியாக தரிசிக்க முடிவதில்லை.உள்ளே அர்த்த மண்டபத்தில்,பத்து பேரை ஒரு குருக்கள் அழைத்து கொண்டு,உள்ளே சென்று தீபாதர்னை செய்து அவர்களுக்கு பிராசாதம் கொடுத்துவிட்டு, அவர்கள் பொது பக்தர்களை கண்டு கொள்ளாமல் சென்று விட்டார். அது போல, சன்னதியை கவனிக்கும் குருக்கள் பக்தர்களிடம், தட்சனை வைத்துவிட்டு,பிராசதத்தினை வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.அங்கு ஒரு சிலர் சூப்பரைஸ்வர்கள் போல,ஒரு சிலர் (போத்திஸ் டெக்ஸ்டைல் போல)வீபுதி பட்டை போட்டவர்கள் கூட்டம் நெரிசலை தவிர்ப்பதர்காக, சார் இப்படி போங்க என்று வழிகளை காட்டி கொண்டு இருந்தார்கள்.எனக்கு,மிகுந்த வேதனையாக இருந்தது.
    அதோடு,சதாபிஷேகம் அபிஷேகமானது பிராகாரத்தில் குடும்ப சகிதமாக, பெரியவர் அவருடைய மனைவியுடன் சல்லடை வைத்து,பித்தளை சொம்பில்,ஒவ்வொன்றாக ஊற்றுகின்றார்கள்.இவை, பிரகாரம் முழுவதும் ச்மெல்துலும் நிலையில்,எனது காலை அந்த நீரில் வைத்தால்தான் நான் பிராகரத்தினை சுற்ற முடியும்.அந்த குடும்பம் செல்பி எடுத்து கொண்டு கூத்து கட்டி இடத்தினை ஆக்கிரமித்து கொண்டது,மிகுந்த வருத்தத்தினை அளிக்கின்றது.குருக்கல்கள் தனி வியாபரமாக நடத்துவது போல ஒரு நிலை பக்கத்தில் உள்ள ஆக்கூரில் வசித்து வரும் பக்தனுக்கு ஏற்படுகின்றது. ஆடி கடை வெள்ளியில்,அபிராமி சன்னதியில்,ரூ.150/-க்கு ல்ட்சார்தனை செய்கின்றார்கள்.இவை மூல சன்னதியில் நடை பெறுவதால்,உற்சவ மூர்த்தியிடம்தான்,அன்று வரும் பக்தர்கள் அர்ச்சனை பெற முடியும்.ஒரு லட்சம் பக்தர்கள் என்றால்,வருமானத்தினை பாருங்கள்.அவை 150-லட்சம் என்ற நிலை வருமானம் கிடைக்கும்.மூலவருக்கு அபிஷேகம் நடப்பதை ஒரு நாள் தவிர்த்தாலே, அது கோயிலின் ஆகம விதியினை பாதிப்பதாக அமைகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *