ஒரு பயணம் சில கோயில்கள்

க்ஷேத்ராடனம் போகும் பழக்கம் எனக்கு ஏற்பட்ட கதை சுவாரஸ்யமானது. அதிகமான பணி அழுத்தம் நிறைந்த காலகட்டத்தில் இதற்கு மேல் ஓட முடியாது என்று தோன்றிய ஒரு திங்கள் கிழமை மதியம் கம்ப்யூட்டரை அப்படியே நிறுத்தி விட்டு என் மேலாளர் அறைக்குச் சென்று நாளை முதல் ஒரு வாரம் நான் விடுமுறையில் செல்கிறேன் என்றேன். என் முகத்தை ஒரு நிமிடம் பார்த்து விட்டு எது செய்தாலும் ஜாக்கிரதையாக செய் என்று வாழ்த்தி அனுப்பிவிட்டார். மறுநாள் அதிகாலை 5. 30க்கு மூட்டை முடிச்சுகளோடு ஒரு நாலு நாளைக்கு தஞ்சாவூர் போகிறேன் என்று நான் என் வீட்டில் சொன்ன போது மகனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றே முடிவு செய்து விட்டார்கள். நான் வண்டியைக் கிளப்பியபோது எங்கே போகிறேன் என்று எனக்கே திட்டவட்டமான திட்டங்கள் எதுமில்லை. மனம் போன போக்கில் காரை ஓட்டிக்கொண்டே போனேன்.

வழியில் கிடைத்த எல்லா கோயிலுக்குள்ளேயும் நுழைந்தேன். பல முறை பார்த்த கோயில்கள், பார்க்க நினைத்த கோயில்கள் என எதையும் விட்டு வைக்க வில்லை. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் நுழைந்தேன். அப்போது அந்தக் கோயிலில் இருக்கும் குருக்கள் ”இந்த கோயில் பாத்துட்டேளோ” என்று கேட்க ”அடுத்து அங்கே தான்” என்று பதில் சொல்வேன், அடுத்து அங்கே செல்வது என்று அப்போது உதித்த திட்டத்துடன்! இந்த வருடம் மூன்றாவது வருடம் – ஒரே வித்தியாசம் கடந்த இரண்டு முறைகள் போல் அதிரடி பைத்தியக்காரத்தனம் செய்யாமல் திட்டமிட்டு, போகும் வழியையும் முடிவு செய்து, கார் ஓட்டாமல் குடும்பத்தோடு ட்ரெயின் பிடித்து சென்று வந்தேன். இந்த முறை மிகச் சில கோயில்களுக்கே செல்ல வாய்ப்பு கிடைத்தது.

pillaiyarpatti_templeமுதலில் விநாயகரிலிருந்து துவங்கியது எங்கள் பயணம். புதுக்கோட்டை சென்று அங்கிருந்து பிள்ளையார்பட்டி. கற்பக விநாயகர் திருக்கோயில். ஏறக்குறைய 1600 வருடங்கள் பழமை வாய்ந்தது. தேசி விநாயக பிள்ளையார் என்று முன்னர் அழைக்கப்பட்டு பிறகு கற்பக விநாயகர் என்றழைக்கப்படுகிறார். இதன் சரிதம் எனக்குச் சரியாக தெரியவில்லை. விநாயகர் வலது கை மேல் நோக்கியதாய் சிவலிங்கம் வைத்துகொண்டு இருப்பார். தியான சொரூபி. இங்கிருக்கும் அலங்கார மண்டபத்தின் சுவரில் நடுநாயகமாக விநாயகர் திருவுருவத்தை வரைந்திருக்கிறார்கள். என்ன விசேஷமென்றால், மண்டபத்தின் எந்த மூலையிலிருந்து பார்த்தாலும் விநாயகரின் கண்கள் உங்களை நோக்கியே இருக்கும். இந்த ஓவியம் சமிபத்தில் வரைந்தது போலத்தான் இருக்கின்றது – ஒரு 20 -30 வருஷங்கள் இருக்கலாம். அல்லது சமீபத்தில் கும்பாபிஷேகம் செய்தபோது புதுப்பித்திருக்கலாம்.

temple-kundrakkudiஅண்ணனைப் பார்த்து விட்டு தம்பியைப் பார்க்காவிட்டால் எப்படி. குன்றக்குடி சென்று ஷண்முகநாதஸ்வாமி கோயிலிக்குச் சென்றோம். இதுவும் ஏறக்குறைய 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கோயில். மலைக்கோயில். இங்கு செல்லும் வழியில் குகை சன்னதிகள் இருக்கின்றன. இங்கே மலையை குடைந்து செய்யப்பட்ட வேலைப்பாடுகள் காணக்கிடைக்கின்றன. மலை ஏறுவதற்கு வசதியாக இப்போது பக்கவாட்டில் படிகள் அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அங்கிருந்து சென்றது திருவையாறு. ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் இடமென்பதால் திரு + ஐ + ஆறு (காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு.) தியாக பிரம்மத்தால் இன்றைக்கு அடையாளம் பெற்றிருக்கும் இந்த ஊருக்கு தியாகபிரம்மத்தின் காலத்திற்கும் முன்னரே இருக்கும் அடையாளம் பஞ்சநதீஸ்வரர். ஐயாறப்பன் என்று தமிழில் வணங்கப்படும் சிவஸ்தலம் திருவையாறு. தக்ஷிண கைலாஸம் என்று வழங்கப்படும் பஞ்சநதீஸ்வரர் ஆலயத்தின் ஸ்தல புராணம் கி.மு.விற்குச் செல்கிறது. சோழ பெருவளத்தான் கரிகாலன் கி.மு. 1ஆம் ஆண்டு தேரில் சென்று கொண்டிருந்தபோது தேர் திருவையாற்றிலிருந்து நகரவில்லை. தேர் அசையாதிருக்கும் இடத்தில் அகழ்ந்தெடுக்கக் காவலாளிகளை ஏவுகிறான்.

kaveri-river-thiruvaiyaruஇங்கே முதலில் தட்டுப்படுவது சிவலிங்கம். மேலும் அகழ்ந்தால் தர்ம சம்வர்த்தினி அம்பாளின் விக்ரகம் தோன்றுகிறது, பிறகு விநாயகர் விக்ரகம், முருகன், பிறகு நந்தி தேவனும் தோன்றுகின்றனர். மேலும் அகழ்ந்தபோது நியமேசர் என்னும் சித்தர் நிலமெங்கும் படர்ந்த நீண்ட ஜடாமுடியுடன் ஆழ்ந்த தவத்தில் காட்சியளிக்கிறார். நெடுஞ்சாண் கிடையாக விழுகிறான் – தன் தவறைப் பொறுத்தருள வேண்டுகிறான். நியமேசர் அவனை ஆசிர்வதித்ததோடில்லாமல் அவனை அந்த இடத்தில் ஆலயத் திருப்பணி மேற்கொள்ளச் சொல்கிறார். அந்த்த் திருப்பணிக்கான பொருளும் நந்தியின் சிலையின் கீழ் கிடைக்குமென்கிறார். அவ்வாறே திருப்பணியும் மேற்கொள்கிறான் மன்னன். அப்படித் தோன்றியதுதான் இந்த்த் திருக்கோயில். ஈஸ்வரனே நியமேஸராக தோன்றி வழிகாட்டியதால் அவரின் ஜடாமுடி கர்ப்பகிரகத்தைச் சுற்றிப் படர்ந்திருப்பதாக ஐதீகம்.

temple-mandapam-thiruvaiyaruஇவன் மட்டுமன்றி பிற்காலச் சோழர்களும், தஞ்சையை ஆண்ட பிற மன்னர்களும் ஆலயத்திருப்பணி செய்து இந்த கோயிலை நாம் இன்று காணும் அளவு விரிவு படுத்தியிருக்கின்றனர். இங்கே பிரகாரத்தில் காணப்படும் சுவரோவியங்கள் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் தோற்றுவித்ததாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இங்கு இருக்கும் ஆட்கொண்டார் சன்னிதியில் மக்கள் குங்கிலியம் வாங்கி கொட்டுவது வழக்கம். அப்படிச் செய்வதால் உடல் பிணிகள் நீங்குவதாக நம்பிக்கை. இந்தக் கோயிலில் இன்றும் மிகவும் அழகான கோசாலை இருக்கிறது. குறைந்தது 15 பசுக்களாவது இருக்கும். விஸ்தாரமான கோயில் – ஏறக்குறைய 15 ஏக்கர் பரப்பு. அற்புதமான திருக்கோயில்.

இங்கிருந்து புறப்பட்டுத் திருபுவனம் வழியாக ஒப்பிலியப்பன் கோவில் சென்றோம்.

temple-thirubhuvanamதிருபுவனம் கோயிலைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். 11 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இதுவும் மிகவும் பிரம்மாண்டமான கோயில். ஈஸ்வரன் கம்பஹரேஸ்வரராக அருள்பாலிக்கிறார். கம்பஹரேஸ்வரர் என்றால் பயத்தைப் போக்குபவர் என்று அர்த்தம். இந்த கோயிலின் விஸ்தாரம் உண்மையிலேயே ஆச்சரியப்படவைக்கும் – அவ்வளவு திறந்த வெளி. இங்கே சரபேஸ்வரருக்கு தனி சன்னதி இருக்கிறது. சரபேஸ்வரர் அவதாரம் மிகவும் உக்கிரமானது.

ஹிரண்ய வதம் முடித்தபின்னரும் நரசிம்ம அவதாரத்தின் உக்கிரம் குறையவில்லை. அந்த உக்கிரத்தினைத் தாங்க முடியாமல் பிரபஞ்சமே நடுங்கியது. பிரகலாதனின் பிரார்த்தனையிலும் மனம் குளிரவில்லை சிம்மம். அப்போது தேவர்கள் அனைவரும் இந்த உலகத்தை சிம்மத்தின் உக்கிரத்திலிருந்து காக்குமாறு பரமேஸ்வரனைப் பிரார்த்திக்கிறார்கள். அவர் சிம்மத்திற்கு நிகரான உக்கிரத்துடனான சரபேஸ்வர அவதாரத்தை எடுக்கிறார். சரப அவதாரமானது மிகவும் தனித்தன்மையானது – சிம்ம முகம், மனிதனும் சிம்மமும் கலந்த உடல், மிகப்பெரிய இறக்கைகள், நான்கு கரங்கள், எட்டு கால்கள் கொண்ட மகா உக்கிரமான அவதாரம்.

uppili_oppili_appanசரபமும் சிம்மமும் மோதும்போது சரபம் தன் இறக்கைகளால் சிம்மத்தை அணைத்துக்கொண்டு சாந்தப்படுத்தியதாக ஒரு கதை முடிகிறது. ஆயினும் இந்த புராணத்திற்கு இன்னொரு வடிவமும் இருக்கின்றது. அப்படியும் சாந்தமாகாமல் சிம்மம் மீண்டும் உக்கிரம் கொள்கிறது. அதனால் சரபேஸ்வர அவதாரத்தில் இருந்த ஈஸ்வரன் தனது நெற்றிக் கண்ணிலிருந்து பிரத்யங்கரா தேவியைத் தோற்றுவிக்கிறார். அதிஉக்ரமான பிரத்யங்கரா தேவி, ஆயிரம் கைகளுடனும் தோன்றிய தேவி, சூலம் முதலான பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்தாள். கழுத்தில் மண்டையோடுகளான மாலையை அணிந்திருந்தாள். அவள் நரசிம்மத்தை அப்படியே விழுங்கினாள்.

மஹாவிஷ்ணு இல்லாமல் இந்த பிரபஞ்ச இயக்கம் ஏது? தேவர்கள் அஞ்சி பரமேஸ்வரனைப் பிரார்த்திக்க, சம்ஹார நோக்கமில்லாத பிரத்யங்கரா தேவி சாந்தியடைந்த நரசிம்மத்தைத் தன்னிடமிருந்து வெளிப்படச்செய்தாள். அமைதியடைந்த நரசிம்மர் யோகநரசிம்மராக அருள்பாலித்து இந்த உலகத்தை ரக்‌ஷித்தார்.

திருபுவனம் தவிர சரபேஸ்வரருக்குத் தமிழகத்தில் இன்னும் பல திருக்கோயில்களிலும் சன்னதிகள் இருக்கின்றன. ஆயினும் திருபுவனத்தில் இருக்கும் சன்னதிதான் மிகவும் பெரியது.

bodhendra_saraswathi_swamigalஒப்பிலியப்பனை தரிசனம் செய்து விட்டு வரும் போது திரும்பிவரும் வழியில் அருகில் இருக்கும் கோவிந்தபுரம் சென்று ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள் அதிஷ்டாணம் சென்றோம். காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராசார்யார்களில் 59வது சங்கராசார்யர் ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள். இவரது அதிஷ்டானத்திற்கு நான் செல்வது இதுவே முதல்முறை. அமைதியாகப் பராமரிக்கப்படும் இந்த அதிஷ்டாணத்தில், யஜுர் வேத பாடசாலையும், கோ சாலையும் இருக்கின்றன. போதேந்திர ஸ்வாமிகள் தக்ஷிண பஜன சம்ரதாய மும்மூர்த்திகளில் முதல்வர். ராம பக்தியை நாம சங்கீர்த்தனங்கள் மூலம் பரப்பியவர். இவரது சமாதியில் ஆழ்ந்த மௌனத்தில் ராம நாமத்தை இன்றும் பலர் கேட்கின்றனர். காஞ்சி பீடாதிபதியாக இருந்தாலும் இவர் காஞ்சியை விட்டு கோவிந்தபுரத்தில் சமாதியடைந்ததால் இவரது அதிஷ்டாணம் கோவிந்தபுரத்தில் இருக்கின்றது.

இதன் அருகிலேயே இருப்பது விட்டல்தாஸ் ஸ்வாமிகளின் ஆசிரமம். இங்கே இப்போது அதி அற்புதமான விட்டல் ருக்மணி மந்திர் ஒன்று தயாராகிக் கொண்டிருக்கிறது. இங்குள்ள கோசாலையில் 100க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. இங்கும் வரும் பக்தர்களுக்கு இலவச உணவும் நாள் முழுக்க வழங்கப்படுகிறது. பிராமண அபிராமண பேதமில்லை.

பிறகு திருவாரூர். விசாலமான திருக்கோயில். திருவையாறு கோயில் லிங்கமும் திருவாரூர் கோயில் லிங்கம் ஒன்று போன்றவை என்று பெரியவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். இங்கே இருக்கும் இன்னொரு சிறப்பு நவகிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இருக்கின்றன. வழக்கமாக காணப்படும் சதுர வடிவமில்லை.

திருவாரூருக்கு தியாகேசரை முசுகுந்த சக்ரவர்த்தி கொண்டு வந்ததாக கந்த புராணம் கூறுகிறது. முன்பொரு காலத்தில் வாலன் என்ற அரக்கன் இந்திரன் மீது படையெடுத்து அமராவதியைத் தாக்கினான். வாலனின் வல்லமையை தாங்க இயலாத இந்திரன் பூலோகத்திலிருக்கும் முசுகுந்த சக்ரவர்த்தியின் உதவியை நாடினான். முசுகுந்தனின் உதவியியுடன் அவன் வாலனையும் வென்றான். தனக்கு உதவிய முசுகுந்தனை கௌரவிக்கும் வகையில் அவனைத் தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்கிறான். அங்கே இந்திரன் வணங்கும் தியாகேசர் விக்ரகத்தின் திருவுருவைக் கண்டு மெய் மறந்து நின்றான். அப்போது இந்திரன் அறியாத வகையில் தியாகேசர் முசுகுந்தன் காதில் சொன்னார், “முன்பு பலகாலம் இந்த உருவை அதிபக்தியுடன் மஹாவிஷ்ணு வழிபட்டார், பின்னர் இந்திரன் அதே அளவு பக்தியுடன் வழிபடுகிறான். இப்போது நீ என்னை எடுத்துக் கொண்டு பூலோகம் சென்று வழிபடுவாயாக.”

thiyagarajar_thiruvarurஇறைவனின் வழிகாட்டுதலின் படி முசுகுந்தன் இந்திரனிடம் தன் விருப்பத்தை தெரிவித்தான். அதைக் கேட்ட இந்திரன் அதிர்ந்தான். அப்போது இந்திரன், “முசுகுந்தா, முன்பொருமுறை வார்கலி என்ற அரக்கன் ஒருவன் என்னைத் தாக்கினான். அப்போது நான் அபயம் தேடிப் பாற்கடலில் இருக்கும் மஹாவிஷ்ணுவிடம் சென்றேன். அவர் இந்த விக்ரஹத்தை வைத்து வழிபடுமாறு கூறி என்னிடம் கொடுத்தார். இதன் சக்தியால் நான் அரக்கனை வென்றேன். அப்பேற்பட்ட திருவுருவத்தை நான் எப்படித் தருவேன்” என்று கூறினான். பின்னர் மஹாவிஷ்ணுவிடம் சென்று அனுமதி வாங்கி வா – அவர் அனுமதி தந்தால் தந்து விடுகிறேன் என்றான். முசுகுந்தனும் மஹாவிஷ்ணுவிடம் சென்று அனுமதி வாங்கி வந்தான். இருந்தாலும் விக்ரகத்தை கொடுக்க மனமில்லாத இந்திரன் தன்னிடம் இருப்பது போன்றே இன்னொரு சிலையை தயார் செய்து கொடுத்தான். அது உண்மையானதில்லை என்றறிந்த முசுகுந்தன் அதை ஏற்க மறுத்தான். இதே போல ஆறு முறை செய்த பின், முசுகுந்தனின் பக்தியை உணர்ந்து இந்திரன் தியாகேசர் திருவுருவை மட்டுமன்றி மற்ற ஆறு விக்ரஹங்களையும் அவனுக்கு வழங்கினான்.

முசுகுந்தன் இந்திரன் வழிபட்ட தியாகேசரை திருவாரூரில் நிறுவினான். மற்ற விக்ரஹங்களை திருநாகைகாரோணம், திருநள்ளார், திருக்கணையல், திருகோலிலி, திருவான்மியூர், திருமறைக்காடு ஆகிய இடங்களில் நிறுவினான் என்று கந்தபுராணம் கூறுகிறது. இதில் திருநள்ளார், திருமறைக்காடு, திருவான்மியூர் (சென்னையிலிருப்பதா?) தவிர மற்ற இடங்கள் எனக்கு எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.

இவை தவிர தஞ்சை பெரிய கோயிலுக்கும், இன்னும் தஞ்சாவூரில் வழக்கமாக செல்லும் சில கோயில்களுகும், குல தெய்வத்தின் கோயில்களுக்கும் சென்று இந்த வருடத்தின் க்ஷேத்ராடனத்தை முடித்துக் கொண்டோம்.

பிகு: இந்த புராணங்கள் எல்லாம் நான் கேட்டு தெரிந்து கொண்டவரை தொகுத்து தந்திருக்கிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்/ திருத்தவும்.

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

15 மறுமொழிகள் ஒரு பயணம் சில கோயில்கள்

 1. Madhan on July 20, 2010 at 2:18 pm

  Good post sir!!
  Btw is it திருவான்மியூர் or திருவெற்றியூர் ?
  I have seen thyagesar shrine inside thiruvotriyur temple..

 2. Indli.com on July 20, 2010 at 3:00 pm

  தமிழ்ஹிந்து » ஒரு பயணம் சில கோயில்கள்…

  வழியில் கிடைத்த எல்லா கோயிலுக்குள்ளேயும் நுழைந்தேன். பல முறை பார்த்த கோயில்கள், பார்க்க நினை…

 3. பா. ரெங்கதுரை on July 20, 2010 at 5:35 pm

  தமிழகத்தில் க்ஷேத்திராடனம் செய்யும்போது, ஒளரங்கசீப்பின் அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோயில்களில் நடைபெறும் ஊழல்களையும், ஆலயங்கள் சரியாகப் பராமரிக்கப்படாமை பற்றிய தகவல்களையும் சேகரித்து அவற்றை வெளியிடுவது அவசியம். தமிழ்ஹிந்து அன்பர்கள் இதைத் தவறாமல் செய்வார்களாக!

  – பா. ரெங்கதுரை

 4. V. Saravanan on July 20, 2010 at 11:03 pm

  மிக்க நன்றி திரு சந்திரசேகரன்
  எங்களுக்கும் பல கோயில்கள் பார்த்த திருப்தி .
  பிள்ளையார்பட்டி ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த கோயில் தான். அதை நன்றாகப்பராமரிக்கிரார்கள். மற்ற தல வரலாறுகளும் சுருக்கமாக அழகாக கொடுக்கப்பட்டுள்ளன .நன்றி .
  அன்புடன்
  சரவணன்

 5. அது திருவான்மியூரும் இல்லை திருவொற்றியூரும் இல்லை. அது திருவாய்மூர். நான் தவறாக எழுதிவிட்டேன். மன்னிக்கவும். திருவாரூரிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

  இந்த கட்டுரையை எழுதிய பின்னர் தெரிந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது கிடைத்த தகவல் அது. மற்ற சப்த விடங்க ஸ்தலங்களைப் பற்றிய தகவல்கள்

  திருநள்ளாறு – நகர விடங்கர் என்றழைக்கப்படுகிறார்.
  திருக்கணையல் – திருக்காரவாசல் என்னும் சிறிய கிராமம் (திருவாரூரிலிருந்து 15 கிலோமீட்டர்). இங்கு ஆதி விடங்கர் என்றழைக்கப்படுகிறார்.
  திருகோளிலி – இப்போது திருக்குவளை என்று அறியப்படுகிறது (நாகப்பட்டிணம் மாவட்டம்). இங்கு அவனி விடங்கர் என்றழைக்கப்படுகிறார்.
  திருவாய்மூர் – திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்கு நீல விடங்கர் என்றழைக்கப்படுகிறார்.
  திருமறைக்காடு – இப்போது வேதாரண்யம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு புவனி விடங்கர் என்றழைக்கப்படுகிறார்.
  திருநாகைகாரோணம் – இது இன்றிருக்கும் நாகைப்பட்டிணம். இங்கு சுந்தர விடங்கர் என்றழைக்கப்படுகிறார்.

 6. தஞ்சை வெ.கோபாலன் on July 21, 2010 at 8:17 am

  கட்டுரை சுவையாக இருக்கிறது. பல தல வரலாறுகள் அறிந்து கொள்ள வேண்டியவை. திருவையாறு பற்றிக் கூறும்போது அங்கு ஓடும் ஐந்து ஆறுகளின் பெயரால் அவ்வூர் அழைக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார். ஆனால் இவ்வூரின் பெயருக்கு மேலும் சில காரணங்கள் தலபுராணத்தில் இருக்கின்றன. அவை: இங்கு சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, கங்கை, பாலாறு, நந்திவாய் நுரை எனும் நந்தி தீர்த்தம் ஆகிய தெய்வீக தீர்த்தங்கள் கலப்பதால் இப்பெயர் பெற்றதாகவும் ஒரு செய்தி உண்டு. இவ்வூர் நந்தி பிறந்த ஊர். நந்திக்கு திருமழபாடி எனும் ஊரில் திருமணம் நடந்தபின் அந்தத் திருமணத்துக்குத் தேவையான பொருட்களைக் கொடுத்த எழூருக்குப் பயணம் வருவதுதான் “சப்தஸ்தானம்” எனும் திருவிழா. அது தவிர ஐயாறு என்பதில் “ஐ” என்பது அகன்ற என்றும் “ஆறு” என்பது இங்கு ஓடும் காவிரியையும் குறிக்கும். அகன்ற ஆரையுடைய ஊர். மற்றொரு காரணம் “ஐ” என்றால் மேலான, உயர்ந்த, “ஆறு” என்பது மார்க்கங்கள், அதாவது மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதாரங்களைக் குறிப்பதாக இப்பெயர் பெற்றது எனவும் ஒரு காரணம். எது எப்படியோ, வெட்டாறு, குடமுருட்டி இவை உருவாகும் முன்பே பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இப்பெயர் ஏற்பட்டு விட்டது. (பார்க்கவும்: நான் எழுதியுள்ள “திருவையாற்று வரலாறு” எனும் நூலில் இவ்வூர் பற்றிய முழு விவரங்களும் கொடுத்திருக்கிறேன். நூல் கிடைக்குமிடம்: அகரம் பதிப்பகம், புதிய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர் 613005 )

 7. anand on July 21, 2010 at 5:39 pm

  கட்டுரை மிக அருமையாய் இருந்தது. நம் ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு உடையது. ஆனால் அன்னிய சக்திகள் நம் ஆலயங்கள் போலவே ஏமாற்றி மக்களை முட்டாள் ஆக்கி கொள்ளை அடிக்கிறார்கள்.
  for more info plz ck this link
  http://www.bedegriffiths.com/shantivanam/images-of-shantivanam/

  and also another one conversion plz check this link also
  http://www.youtube.com/watch?v=rvN2Z_AQRXU

  Jai Hind

 8. sahridhayan on July 25, 2010 at 1:24 pm

  திருக்கோவில் பயணத்தரிசனங்கள் மிகவும் அருமை.

  நாகை நீலாயதாக்ஷி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றுள்ளது

  http://nagaitemples.blogspot.com

  நன்றி

  சஹ்ரிதயன்

 9. snkm on August 2, 2010 at 6:44 pm

  அருமை! நன்றாக எல்லோரும் சென்று வர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது!
  மன்னிக்கவும், “இதன் அருகிலேயே இருப்பது விட்டல்தாஸ் ஸ்வாமிகளின் ஆசிரமம்.” விட்டால் தாஸ் சுவாமிகள் அல்ல, பொதுவாக துறவறம் பெற்றவர்களை ( பூண்டவர்களை )மட்டுமே சுவாமிகள் என அழைப்பது வழக்கம்! நன்றி!
  ஆலயங்களின் அருமையை நாம் உணர்ந்து கொண்டு அவைகளை சென்று தரிசிப்பதோடு மட்டுமல்லாமல் சுத்தமாக ஆலயங்கள் இருக்க செய்ய வேண்டும்! நாம் வெளியூரிலிருந்து செல்கிறோம், உள்ளூரில் இருப்பவர்கள் தான் செய்ய வேண்டும் என நினைக்காமல் அசுத்தப் படுத்தாமல், குப்பைகளை கண்ட இடத்தில் போடுதல், போன்றவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டும்! நன்றி!

 10. சிவஸ்ரீ. விபூதிபூஷன் on June 13, 2011 at 2:39 pm

  ஒரு பயணம் சில கோயில்கள் என்ற திரு கிருஷ்ணன் அவர்களின் கட்டுரை நாம் ஆண்டிற்கு ஒருமுறையேனும் திருத்தல யாத்திரை செய்ய வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அவர் தனியாக யாத்திரை சென்றதாக கூறுகிறார் குடும்பத்தோடு நண்பர்களோடு(பக்தி உள்ளவர்களோடு) யாத்திரை செய்வது சிறப்பு. தத்தம் வசதிக்கேற்ப இத்தகைய யாத்திரைகளை மேற்கொள்ள வேண்டும்.
  snkm என்ற அனபர் தமது பின்னூட்டத்தில் விட்டல்தாஸ் சுவாமிகள் அல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார். அது சரியல்ல. துறவிகளை மட்டுமல்ல பெரியவர்களையும் சுவாமி என்று அழைக்கலாம். குரு இல்லறத்தார் ஆயினும் சுவாமி என்பதே முறையாகும். வைணவ சிம்மாசனாதிதிகள் அவர்தம் அடியவர்களால் இன்றும் சுவாமி என்றே அழிக்கப்படு கின்றனர் குறிப்பிடப்படுகின்றனர். இ வ்வளவு என் நாம் நம் கோயில் சிவசாரியாரையும் பட்டாசாரியாரையும், குருக்களையும் சுவாமி என்கிறோமே. இது தவறல்லவே.
  அன்பன்
  சிவஸ்ரீ. விபூதிபூஷன்

 11. karthik on August 10, 2011 at 9:07 am

  கட்டுரை மிக அருமை. ullolipayanam.blogspot.com ..இந்த தலத்தில் பழமையான தலங்களை பற்றி எழுதி கொண்டு இருக்கிறேன்.. அன்பர்கள் இந்த தளத்தை பார்வை இட வேண்டும்..

 12. vijay on December 28, 2011 at 11:34 am

  மணம் நெகிழ்வு பெரும்’

 13. RAMAKANTHAN K C on March 2, 2013 at 4:26 pm

  NALLADU .

 14. RAMAKANTHAN K C on March 2, 2013 at 4:30 pm

  அருமை .
  நல்ல விசயங்கள் .

 15. Thanigai on January 17, 2014 at 1:12 pm

  ென்னையில் திருவான்மியுரிலும் திருவொட்டியுரிலும் தியாகராஜன் சன்னதி உள்ளன.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*