தலபுராணம் என்னும் கருவூலம்-4

முந்தைய பகுதிகள்:

காஞ்சிப் புராணம் – வேதக் கருவூலம் (தொடர்ச்சி…)

நிலையாமைக் கோட்பாடு X உலகியற் கடமை – ஒரு சிந்தனை

புறநானூற்றுப் புலவர்கள் வெறும் காதலையும் போரையும் மட்டுமே சிந்தித்து முடிந்துவிடவில்லை. அவர்களிற் சிலர் வாழ்க்கையின் இயல்புகளையும் சிந்தித்தனர்; வாழ்க்கையின் குறிக்கோள், பயன் குறித்தும் சிந்தித்தனர். வாழ்க்கையின் முடிபும் பயனும் தெளிவாகத் தெரிந்த பின்னும் அவற்றை ஒருவர் அடையவிடாமல் சிலசக்திகள் தடைசெய்வதையும் கண்டனர். அவ்வாறு உலகின் உண்மை இயல்பைக் கண்டறிந்தவர்களில் ஒருவர், ஓரேருழவர் என்னும் பெயருடைய   புலவர்.

புறநானூற்றில் ஓரேருழவரின் பாட்டு மிகச்சிறியது; நான்கே அடிகளைக் கொண்டது. ஆனால் மிகப்பெரிய சிந்தனைகளைத் தன்பால் அடக்கிய பாடலது.

அப்பாடல்:

“அதளெறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி யுய்தலுங் கூடுமன்
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே”

இப்பாடல் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையில் அமைந்தது.

yanaiவாழ்க்கையின் இயல்புகளை நன்கு தெரிந்த தவமுனிவர் ஒருவர் தாம் தெளிந்ததுவும், உயிருக்கு இம்மை மறுமைகளில் உறுதி தருகின்றதுமாகிய பொருளை ஒருவர்க்குக் கூறுவதே, “பொருண்மொழிக் காஞ்சி” என்னும் இத்துறைக்குப் பொருளாகும்.

தொல்காப்பியம் காஞ்சி என்னும் துறையின் பொது இலக்கணத்தைப்,

“பாங்கரும் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே” (புறத்திணையியல் 23)

என்று கூறுகின்றது.

(பாங்கு – துணை. சிறப்பு என்பது வீடுபேறு. “சிறப்பீனும் செல்வமும் ஈனும்”- குறள் 31, பரிமேலழகர் உரை).

வீட்டின்பம் தனக்கு நிகர் இல்லாதது. நிலையான வீட்டின்பம் ஏதுவாக நோக்கின், உலகியலிற் காணப்படும் உயிர், உடல், இளமை, செல்வம்  யாவையும் நிலையாமையை உடையன, வீட்டின்பம் ஒன்றைத் தவிர வேறு ஒன்றும் நிலையாது என்பது இந்த நூற்பாவின் கருத்து.

நில்லாத உலகியல்பு கண்டு நிலைத்த வீட்டின்பத்தை அடைய உணர்த்துவதே ஞானம். இந்த ஞானத்தை அனுபவத்தின் வாயிலாக அடைந்தவருக்கும் வீட்டின்பமாகிய குறிக்கோளை நோக்கிச் செல்ல இயலாதவாறு உலகியல் கடமைகள் குறுக்கே நிற்கும்.  இத்தகைய மனநிலையில் இருந்த ஒரேருழவர் எனும் இச் சங்கப்புலவர் இப்பாடலைப் பாடினார்.

‘தோலைப் புடைத்து வைத்தாற் போன்ற நெடிய வெளிய களர் நிலத்தின்கண் ஒருவன் அலைக்கும் (துரத்தி வருத்தும்) புல்வாய் (மான்) எளிதின் ஓடிப் பிழைக்குமா போல யானும் நன்னெறிக்கண்ணே ஒழுகிப் பிழைக்கவுங் கூடும்; சுற்றத்தோடு கூடி வாழும் இல்வாழ்க்கை அதன்கட் செல்லவொட்டாது காலைத் தளையா நிற்கும்; ஆதலான் உய்தல் இயலாது.’

இந்தப் பாடலில் கவிஞனின் உள்ளம் ஞானவாழ்க்கை உலகவாழ்க்கை இரண்டனுக்கும் இடையில் சிக்கித் தவித்தல் நன்கு வெளிப்படுகின்றது.

arjuna_krishna_warriorsஇதுபோன்ற மனப்போராட்டம் அருச்சனனுக்கும் நிகழ்கின்றது.

போர்க்களத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அருச்சுனனின் உள்ளம் முதலில் ஞானமார்க்கத்தையே தெரிவு செய்கின்றது. பகைவர் எனப்பட்டுத் தன்னொடு போருக்கு வந்துள்ளவர்களைக் கண்ட அருச்சுனன் அவர்களெல்லாம் தன் சுற்றத்தார்களாக இருத்தலைக் காண்கிறான். சுற்றத்தார்களைக் கொன்று அழித்து அடையும் இராச்சியத்தை அவன் விரும்பவில்லை.

சத்துருக்களாகத் தோன்றினாரெல்லம் என்னுடைய மித்ருக்களாக இருப்பதால், இவர்களைக் கூரிய அம்பாலே கொன்று இராச்சியம் செய்வதில்லையென்று சொன்ன அருச்சுனன் பெற்ற ஞானம் உயர்ந்தஞானம் என்றும், அவனுக்குத் தேர்ப்பாகனாகிய கிருஷ்ணன் அவன் மனந் தேறிடச் (மயங்கிட?) ‘சர்வமும் நாமே கொல்வோம் நீ யன்று’ என்று அவனைச் சுற்றத்தாரைக் கொல்விக்க ஊக்கினான் என்றும் சிவஞான சித்தியார் பரபக்கம் ஒரு கருத்தைக் கூறிற்று.

(“பார்த்தனார் இரதமேறிப் படைதனைப் பார்த்துச் சார்பைக், கூர்த்த அம்பாலே எய்து கொன்றர சாளே னென்னத், தேர்த்தனி லிருந்து மாயை செய்துமால் கொல்லச் செப்பும், வார்த்தை’யே பகவத்கீதை என்று கூறுகின்றது சிவஞானசித்தியார் பரபக்கம்.)

பல்லாயிரம் பேரைக் கொன்று அசோகன் பெற்ற ஞானத்தை அருச்சுனன் யாரையும் கொல்லாமலே பெற்றான். “நில்லா தவற்றை நிலையின என்றுணரும், புல்லறி வாண்மை கடை” (331) எனத் தெய்வப் புலவர் கூறியவாறு, நிலையில்லாத இராச்சிய செல்வத்தை விரும்பி, நிலையான பழியைத் தேட அருச்சுனன் விரும்பவில்லை. இதுவே அவன் பெற்ற ஞானம். இத்தகையதொரு ஞானமே அரக்க குலத்தினனான வீடணனை, விபீஷ்ண ஆழ்வாராக்கியது.

இந்த நிலைமையின் மறுபக்கத்தையும் சிந்திக்க வேண்டும். ஒருக்கால், அருச்சுனன் போர்செய்ய மறுத்திருந்தால், அவனை, உலகம் ஞானி என்று கூறுமா, போருக்கு அஞ்சிய கோழை என்று இகழுமா, கடமையில் தவறியவன் எனப் பழிக்குமா?

rama_agastyaஇத்தகைய சிக்கல் இராமபிரான் வாழ்க்கையிலும் நேர்ந்தது  எனக் காஞ்சிப் புராணம் வீரராகவப் படலம் ஒரு கதையைக் கூறுகின்றது.

(இங்கு இராமபிரான் என்றது, குலசேகர ஆழ்வாரும் கம்பனும் தியாகையரும் போற்றிய இராமன் என்னும் பெயருடைய பரம்பொருளை அன்று. இங்கு இராமன் என்றது அயோத்தி என்ற நாட்டுக்கு உரியவனும், இலங்கை என்ற நாட்டை ஆண்ட இராவணன் என்னும் பகைவன் மீது படையெடுத்துச் சென்றவனுமாகிய ஓரரசனை.)

சீதாபிராட்டியை இராவணன் கவர்ந்து சென்றபின், இராமபிரான் அவளைத் தேடி அலைகின்றான். காஞ்சியம்பதியை அடைகின்றான். திருவேகம்பநாதரைத் துதித்துச் சீதையைப் பெற அருளவேண்டுகின்றான். திருவேகம்பரின் சந்நிதிக்குத் தெற்கே அமைந்துள்ள அகத்தீசுரத்திற்குச் சென்றான். அங்கு மலயமாமுனியைக் கண்டு வீழ்ந்து வணங்கினான். கவலையில் தோய்ந்துள்ள இராமனின் முகத்தைக் கண்டு, அகத்தியர் கவலைக்குக் காரணத்தை வினவுகின்றார். இராமன் நடந்த தனைத்தையும் கூறினான்.

மனைவியைப் பிரிந்திருந்த கவலையில் மூழ்கி இருந்த இராமனுக்கு அகத்திய முனிவர் உலகத்தின் நிலையாமை, உலகு உடல்கள் ஐம்பூதங்களாகிய சடத்தின் கலப்பினால் உருவானவை, பஞ்சபூதக் கூட்டரவால் எல்லாப் பொருள்களும் உருவானவையால் யாவும் உடன்பிறந்தவை, இருவினைப் பயனால் இன்பத்துன்பங்கள் தோன்றுகின்றன என்றெல்லாம் தத்துவ உபதேசம் செய்கின்றார். (ஆதி சங்கரரின் ‘நிர்வாண ஷட்கம்’ என்னும் தோத்திரநூலின் பொருளும் இது போன்ற உபதேசமே.)

இராமபிரான் அவற்றைக் கேட்கும் மனநிலையில் இல்லை. இராமபிரான் அகத்திய முனிவருக்குக் கூறிய மறுமொழி சிந்திக்கத் தக்கது.

“முனிவர் பிரானே! தாங்கள் கூறியது அனைத்தும் உண்மையே. இருந்தாலும் இப்பொழுது இது பொருந்துமோ? மனையவள் மாற்றான் கை அகப்பட்டு வருந்தும்போது நிலையாமை முதலிய தத்துவம் பேசிச் செயலற்று இருப்பவனைப் பித்தன் என்று உலகம் உரைத்திடும். ஆதலினால், பெரியோய்!, போர்க்களத்தில் பகைவரின் உயிரைப் பருகி வென்று, என் உயிரிற் சிறந்த சீதையை மீட்டபின், ஐயனே! நீ தெரிவிக்கும் நுண்ணிய தத்துவஞானத்துக்கு உரியவன் ஆவேன். நான் சொன்னவாறல்லாமல் என்னுளம் அடங்கிடாது” என உறுதிபடச் சொன்னான்.

“அத்த நின்னுரை முழுவதும் உண்மையே யானும்
இத்த லைக்கிது இணங்குமோ மனையவள் மாற்றான்
கைத்த லகப்பட்டுழித் தத்துவங் காண்போன்
பித்தன் என்றுல குரைத்திடும் ஆதலிற் பெரியோய்
பறந்த லைப்புகுந் தொன்னலர்ச் செகுத்துயிர் பருகிச்
சிறந்த சீதையை மீட்டபின் ஐயநீ தெரிக்கும்
உறந்த தத்துவ ஞானத்துக்கு உரியவன் ஆவேன்
அறைந்த வாறலது என்னுளம் அடங்கிடாது என்றனன்”

agastya_ramaஇராமனின் மனநிலையை அறிந்த அகத்தியர்,

“உன் கருத்து இதுவென்றால், நீ போரில் வெற்றி பெறும் வீரத்தை விரும்பியதால், ‘வீரராகவேசன்’ என்னும் பெயரால் ஒரு இலிங்கம் நிறுவி இக்காஞ்சியில் இறைவனை வழிபடுக.

இராவணனைச் சிறுவிரலா லடர்த்த இறைவன் உனக்கு அவனை வெல்லும் வல்லமை அளிப்பான்”

எனக் கூற, இராமன் அவ்வாறு வழிபட்டுப் பயன்பெற்றான் என்பது  பின் நிகழ்ந்த கதை.

‘நிலையாமை’ என்னும் தத்துவக் கோட்பாடு இந்தியத் தத்துவ ஞானங்களில் எல்லாம் பேசப்படுவதொன்றே.

வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் அடிபட்டு புண்பட்டுத் துன்பப்படும் நெஞ்சுக்கு இதமான மருந்து நிலையாமையைத் தெளிதல் அன்றி வேறொன்றும் இல்லை.

நிலையாமையே உண்மை எனினும் இந்தத் தத்துவம் எல்லோருக்கும் உரியதன்று. அதற்குரிய தீவிரதர மனப் பக்குவம் உடையவருக்கே இந்தத் தத்துவத்தின் பொருள் விளங்கும். அத்தகைய தீவிரதர மனப்பக்குவம் இல்லாதவருக்கு இந்த தத்துவத்தைக் கூறல் கேலிக் கூத்தாகிவிடும். அருச்சுனனையும் இராமனையும் போல உலகியற் கடமைகளைக் குறைவறச் செய்து முடித்தலே பிற அனைவருக்கும் உரியதாகும்.

தமிழரை அவமதித்த கனகவிசயரை வென்று, பத்தினித்தெய்வம் அமைக்கக் கற்கொண்டு வந்து, தன் உலகியல் கடமைகளை முடித்திருந்தான் சேரன் செங்குட்டுவன். அவன் மீது பொறாமை கொண்டிருந்த ஏனைத் தமிழ் மன்னர்கள் இருவரும் சேரன் செங்குட்டுவனின் வெற்றியை இழித்து உரைக்க, அவர்கள் இருவரையும் ஒறுக்கச் சீற்றம்கொண்டான். அப்பொழுது மாடலமறையோன் எழுந்து ‘பொருண்மொழிக்காஞ்சி’ யாகச் சேரனுக்கு அறவுரை வழங்குகின்றான்.

முதலில் சேரன் செங்குட்டுவன் பெற்ற மகத்தான வெற்றிகளையெல்லாம் கூறி, அவன் மனம் அமைதி கொள்ளும்படியாகப் புகழ்கின்றான்.

அதன் பின், அரசே! நீ வையகம் காவல் பூண்டு ஆண்டுகள் ஐயைந்திரட்டிச் சென்றன. நீ அறக்களவேள்வி செய்யாமல் மறக்கள வேள்வியே செய்வோனாக  உள்ளாய். உன் முன்னோரில், ‘கடற்கடம் பெறிந்த காவலனாயினும், விடர்ச்சிலை பொறித்த விறலோனாயினும் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்), பாலை பாடிய கெளதமனாரின் செய்யுளைக்கொண்டு அவரையும் அவருடைய மனைவியையும் மேனிலையுலகம் எய்துவித்தவனாயினும் (பல்யானைச் செல்கெழு குட்டுவன்) இன்னுமிவர்போன்ற மீக்கூற்றாளர்கள், பெருவீரர்கள் யாவரும் இப்பொழுது இல்லை. இதனால் யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய்.

enlightened_counsellingசெல்வம் நில்லாது என்பதை நீ வெற்றி கொண்ட தண்டமிழ் இகழ்ந்த ஆரியமன்னரிற் கண்டனை அல்லவா. இளமை நில்லாதென்பதை உன்னுடைய யாக்கையில் நீயே கண்டனை. ஒருவன் செய்வினை வழியில் ஆருயிர் சென்று பிறக்குமென்பது பொய்யில் காட்சியோர் பொருளுரையாகும். பிறந்திறப்போரெல்லாரும் போகும் பொதுநெறியில் உன் உயிர்போதலை யான் பொறேன். அறிவெல்லை கடந்தவனே! நீ வானவர் போற்றும் வழியாகிய வீட்டுநெறியில் செல்லல் வேண்டும்”

என்று நிலையாமையை உணர்த்தி ஞானமார்க்கத்தைக் காட்டி மாடல மறையோன் செங்குட்டுவனை ஆற்றுப்படுத்தினான்.

சேரன் செங்குட்டுவன் சினந்தணிந்து, ஆரிய அரசரைச் சிறைவீடு செய்கிறான்; நன்பெருவேள்வி முடித்தான்.

அருச்சுனன், இராமன், சேரன் செங்குட்டுவன் இம்மூவரின் மனநிலையை ஒப்பு நோக்கினால் எத்தகைய மனநிலை, நிலையாமை என்னுமுயரிய கோட்பாட்டை ஏற்கும் பக்குவமுடையதாகும் என்பது தெளிவாகும்.

நிலையாமை என்ற தத்துவத்துக்கும், தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவன் கைக்கொண்டு ஒழுகுவதற்கும், நாடாட்சி போன்ற பொது வாழ்க்கையில் உலகியல் கடமைகளை ஒருவன் கட்டாயம் கடைப்பிடித்து ஒழுகுவதற்கும் உரிய எல்லைகளை வேதமதம் கற்பிக்கின்றது.

வேதமதத்தை எதிர்த்து, ‘நிலையாமையே நிலையானது’ என்ற கொள்கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்ட மதங்கள் பாரத நாட்டுக்கு அந்நியமாகப் போயின.

Tags: , , , , , , , , , , , , , , , , ,

 

19 மறுமொழிகள் தலபுராணம் என்னும் கருவூலம்-4

 1. கந்தர்வன் on July 31, 2010 at 7:50 am

  // “பார்த்தனார் இரதமேறிப் படைதனைப் பார்த்துச் சார்பைக், கூர்த்த அம்பாலே எய்து கொன்றர சாளே னென்னத், தேர்த்தனி லிருந்து மாயை செய்துமால் கொல்லச் செப்பும், வார்த்தை’யே பகவத்கீதை என்று கூறுகின்றது சிவஞானசித்தியார் பரபக்கம். //

  பகவத்கீதை ஒரு மிகப் பிரசித்தமான ஆன்மிக, ஆன்ம ஞான, பக்தி நூல். இதற்கு அபிநவகுப்தர், நீலகண்ட தீட்சிதர் முதலிய சைவர்கள் கூட உரை எழுதியுள்ளனர். பாரதநாட்டின் ஒற்றுமைக்குப் பகவத்கீதை மிக முக்கிய நூல். விவேகனந்தர், அரவிந்தர் முதலிய நவீன சிந்தனையாளர்களால் மிகவும் போற்றிப் பேணப்படும் ஒரு நூல். ஸுப்ரீம் கோர்ட் முதல் எல்லா வழக்காடுமன்றங்களிலும் அனைத்து ஹிந்துக்களும் இதன்மேல் கரம் வைத்து சத்தியசபதம் இடுகின்றனர். “மயக்கத்தை ஏற்படுத்தும் உபதேசங்கள் அடங்கிய நூல்” என்ற கருத்து விலக்கத்தக்கது, ஹிந்துக்களுக்குள் பிரிவை உண்டுபடுத்தக்கூடியது. தர்மத்தை நிலைநாட்ட தார்மீகமான யுத்தம் புரிவது க்ஷத்ரியனுடைய தொழில். வஞ்சகக் கட்சியில் நண்பர்களும் உறவினர்களும் இருந்தால், அதைப் பொருட்படுத்தாது க்ஷத்ரிய கடமையைச் செய்யவேண்டும். Neopotism காட்டக்கூடாது. அதைத் தான் கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்தான்.

  //
  இங்கு இராமபிரான் என்றது, குலசேகர ஆழ்வாரும் கம்பனும் தியாகையரும் போற்றிய இராமன் என்னும் பெயருடைய பரம்பொருளை அன்று. இங்கு இராமன் என்றது அயோத்தி என்ற நாட்டுக்கு உரியவனும், இலங்கை என்ற நாட்டை ஆண்ட இராவணன் என்னும் பகைவன் மீது படையெடுத்துச் சென்றவனுமாகிய ஓரரசனை.
  //

  அதே குலசேகர ஆழ்வாரும், கம்பனும், தியாகைய்ரும் “பரம்பொருளாகிய இராமபிரான் தான் சக்கரவர்த்தித் திருமகனாகப் பிறந்து, இலங்கை அரசனை வென்று, பல ஆண்டுகள் அயோத்தி நகரை ஆண்டு, சிஷ்ட பரிபாலனம், துஷ்ட நிக்ரஹம் முதலிய தார்மீக கார்யங்களைச் செய்து இறுதியில் அயோத்தி நகரிலுள்ள அனைவரையும் வைகுண்டமாகிய முக்தி லோகத்திற்கு அழைத்துச் சென்றான்.” என்று பாடியுள்ளனர். இது அவர்கள் கற்பனையல்ல. ஆதிகவியாகிய வால்மீகியின் வாக்கே இது.

  “அயோத்தி” என்பது நகரம். அது நாடல்ல. “கோசலம்” என்பது தான் நாடு.

 2. C.N.Muthukumaraswamy on July 31, 2010 at 11:41 am

  திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நன்றி.

 3. sarang on July 31, 2010 at 12:52 pm

  இப்போது எனக்கு முனைவர் அய்யா சொன்னது நன்கு புறிகிரது

  புராணம் என்பது உண்மையே அல்ல – எல்லா புராணத்தையும் சேர்த்தே தான் சொல்கிறேன்

  பகவத் கீதை ஐந்தாம் அத்யாயத்தில் கீதாசார்யன் – arjuna உனக்கு ஏன் ஞான மார்க்கம் ஒத்துவராது என்றும் – நீ ஞானம் அடைந்தவனாக நினைத்து தான் கொண்டு இருக்கிறாய் என்றும் – கர்மம் புரிதல் என்றால் என்ன – கர்மம் விடுதல் என்றால் என்ன – நீ ஞானம் சுத்தமாக அடையாமல் கருமத்தை விட நினைத்தாய் என்றும் சொல்கிறான் – கர்மம் செய்து, ஆத்மா சுத்தி அடைந்து தான் கர்ம சன்யாசம் ஏற்க வேண்டும் – அர்ஜுனன் நினைத்தது வித்வத் சன்யாசம் கர்ம சன்யாசம் என்பது கெளன சன்யாசம் – இது அத்தனையும் ஆதி சங்கர பகவத் பாதால் சொன்னது.

  நான் இந்த புராணம் இயற்றியவர் ஐந்தாம் அத்யாயம் வரை படித்து விட்டு தான் இந்த மேற்கோளை எழுதி இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை
  – தமிழ்ஹிந்து வாசகர்கள் ஒரு வேலை புரானம் எல்லாம் அப்படியே உண்மை என்று நம்பி எல்லாவற்றயும் துரந்து நமக்கு க்யானம் வந்துவிட்டது என்று சந்யாசம் வாங்கிக்கொண்டால் அப்புரம் எட்வினுக்கும் சில்லிசாமுக்கும் யார் மரு மொழி இடுவது என்கிர ஒருவித பயத்ட்திலேயே இதை சங்கரர் சொன்னதை எழுத ஆசைப்பட்டேன்

  கீதாசார்யன் அர்ஜுனனுக்கு சொல்லும் முதல் உபதேசமே – நீ எல்லாம் தெரிந்தவன் போல் பேசுகிறாய் என்பதே

  கீதாசார்யன் சொன்னது ஆத்மா தத்துவம் – அர்ஜுனனுக்கு போர் புரியாமல் ஞானம் வந்த தென்றால் – வெள்ளை கோடி எனது ஆப்கான் சென்று ஜஸ்வந்த் சிங்குக்கும் பரம ஞானம் தான் உள்ளது என்று சொல்ல வேண்டும். –அப்போ எதுவுமே செய்யாத தான் எதயுமெ செய்ய முடியும் என்று என்னம் கூட இல்லாத மன் மோஹன் சிங் – ஜீவன் முக்தராகத்தான் இருக்க முடியும்

 4. சோமசுந்தரம் on July 31, 2010 at 4:26 pm

  //நிலையாமையே உண்மை எனினும் இந்தத் தத்துவம் எல்லோருக்கும் உரியதன்று. அதற்குரிய தீவிரதர மனப் பக்குவம் உடையவருக்கே இந்தத் தத்துவத்தின் பொருள் விளங்கும். அத்தகைய தீவிரதர மனப்பக்குவம் இல்லாதவருக்கு இந்த தத்துவத்தைக் கூறல் கேலிக் கூத்தாகிவிடும். //
  அருமையான வரிகள். மிக சிறந்த கட்டுரை.
  முனைவர் ஐயா அவர்களுக்கு நன்றி.

 5. C.N.Muthukumaraswamy on July 31, 2010 at 4:41 pm

  நன்றி சாரங். நான் கீதையை ஊன்றிப் படித்ததில்லை. சுவாமி சின்மயானந்தா, சுவாமி தயானந்தா ஆகியோரின் சொற்பொழிவுகளைக் கல்லூரி நாட்களில் கேட்டதுண்டு. அவர்களின் ஆங்கிலத்தைச் சுவைத்ததுண்டு. காஷ்மிர் சைவத்தில் பகவத்கீதை பிரமாணமாகக் கொள்ளப் பட்டதென்றும் நீலகண்டபாடியத்திலும் பகவத்கீதை விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்லன என்று செய்தி அள்வே அறிவேன். திலகர் பெருமான் இந்தநூலுக்கு விரிவுரை எழுதினார் என்றும் அறிவேன். தமிழில் கரபாத்திரம் வீரசுப்பையா சுவாமிகள் என்பார் எழுதிய பேருரை, உண்மையிலேயே பேருரை உள்ளது. அது தமிழ் வேதாந்த மடங்களில் படம் சொல்லப்படுகின்றது. இந்த உயரிய நூல்தான் கோட்ஸேக்குக் கொலைவெறி ஊட்டி அதனை நியாயப்படுத்தும் மனநிலையைத் தந்தது என்று வீரமணி எழுதிய புத்தகமும் உளது. உண்மையில் கீதையைப் பட்த்திராத நான் இந்தப் புத்தகத்தைப் படித்து இப்படியும் இருக்குமா என மயங்கியது உண்டு. சிவஞான சித்தி பரபக்கத்தில் உள்ள செய்தியைக் கட்டுரையில் கூறியது, அதனை நியாயப் படுத்துதற்கு அல்ல; அது இக்கட்டுரை எழுதத்தூண்டியது என்பதற்கு மட்டுமே. நீங்கள் எடுத்துக் காட்டிய கீதை ஐந்தாம் அத்தியாயம் நிலையாமை குறித்த தற்காலிக, நிலைத்த மனநிலைக்கும், அதனால் உண்மையான ஞானம் பெறுவதற்கான பக்குவநிலை அடைவதற்கும் உள்ள தொடர்பு நன்கு விளக்கம் பெறுகின்றது. இது இந்திய தத்துவஞானங்கள் அனைத்துக்கும் பொது என்ற தெளிவும்பிறக்கின்றது.

 6. AMARNATH MALLI CHANDRASEKARAN on July 31, 2010 at 5:26 pm

  தமிழ் இலக்கியத்தில் பலரால் அறியப்படாத அரிய பகுதிகளை அருமையாக விளக்கி ஞானக் கருத்துகள் தமிழில் எப்படி விரவிக் கிடக்கின்றன என்பதை விளக்கி உள்ளீர்கள். மிக்க நன்றி. தமிழ் இலக்கியச் சுவையை சாதாரண மனிதனும் சுவைக்கும் வண்ணம் வடித்துத் தந்த உங்களுக்கு மிக்க நன்றி. மக்களை நன்னெறிப் படுத்த இது போன்ற கட்டுரைகள் தான் வேண்டும்.

 7. sarang on July 31, 2010 at 9:50 pm

  முனைவர் அய்யா

  உங்கள் பதிலுக்கு நன்றி

  //
  இந்த உயரிய நூல்தான் கோட்ஸேக்குக் கொலைவெறி ஊட்டி அதனை நியாயப்படுத்தும் மனநிலையைத் தந்தது என்று வீரமணி எழுதிய புத்தகமும் உளது
  //

  வீரமணி எல்லாம் பிரமாணமாக கொள்ள வேண்டாம் என வேண்டிக் கொள்கிறேன் – சிவ பெருமான் திரிபுரம் எரித்ததை பார்துதான் எல்லொருமே குடிசைக்கு தீ வைக்கிரார்கள் என்று கூட அவர் கூரலாம். எல்ல சாமி கையிலும் எதாவது ஒரு ஆயுதம் இடுக்கு அதனால் தான் இந்தியாவில் கொலை கொல்லை எல்லாம் நடக்கிரது என்று கூட சொல்வார்

  மற்றபடி கீதயில் உள்ள ஒவ்வொறு வாக்யத்திற்க்கும் நேரே ஒரு உபநிஷத் வாக்கியம் உள்ளது . பல கீதா ச்லோகங்கள் அப்படியே உபநிஷத் வாக்யங்களை அச்சு பிசராமல் கூறும்
  – கட உபநிஷ்த்தில் யம தர்மர் நாசிகேதஸ் அவர்களுக்கு கூருவதாக வரும் உபௌ தௌ ந விஜாநீதோ ந அயம் ஹந்தி ந ஹந்யதே என்ற வாக்யம் அப்படியே வரி மாராமல் இரண்டாம் அத்யாயம் பத்தொன்பதாம் கீதையில் வருகிறது. இருவதாம் கீதையோ அப்படியே கட உபநிஷத்தில் வரும் வாக்கியம் (இதர்காக கீதா சாரியnன் காப்பி அடித்தாக அர்தம் இல்லை – அப்படி கேட்பார்கலோ என் பயந்து இதர்க்கும் பதில் அவர் நான்காம் அத்யாயம் முதல் ச்லொகத்தில் சொல்லி விடுகிரார் – அப்பா தப்பிச்சார்பா) – யாரவது கீதயை கொலை நூல் என்று சொன்னால் அவர்கள் அரியாமயால், அறியாமயின் ஆழத்தால் வேதங்களையும் சேர்த்துச் சொல்வதாக தான் கொள்ள வேண்டி உள்ளது –அது சரி வீரமனி போன்ரோருக்கு உபநிஷத் பற்றி தான் என்ன கவலை. gee
  கீதை ஆரம்பிப்ப்பதே தர்மக் க்ஷ்த்ரே கூருக்க்ஷ்த்ரே என்று தான் – தர்மம் சொல்ல வருவதை முதலிலேயெ காட்டி விடுகிரது. மேலும் முதல் அத்யாயத்தில் துரியோதனன் தான் தோற்றுப்போவது நிச்சயம் என்பது போல புலம்புகிறான் கீதசார்யன் ஒன்றும் அப்பா துரியோதனா நீ போர் புரிந்தே ஆகனும் அது உன் கடமயாக்கும் அது தான் க்ஷ்த்ரிய தர்மாமாக்கும் என்றெல்லாம் சொல்லவில்லை –தர்மத்துக்குதான் அவன் குறல் கொடுக்கிறான் – தர்மத்துக்காக தனது பரம பக்தரான பீஷ்மரயும் முடிப்பதர்க்கு தான் ஆயுதம் எடுக்க மட்டேன் என்ற சபதத்தயும் (கொஞம் கூட வெட்கம் பாராமல் – ம்ற்றவர் என்ன சொல்லுவர் என்ரேல்லாம் பார்க்காமல்) துரந்து சக்கரம் எடுத்துக் கொண்டு அவர் பீஷ்மர் முன்னால் ஒட இந்த நீர்மை கண்டு பீஷ்மர் மயங்க அச்சமயம் பார்த்து அர்ஜுனன் பீஷ்மரை புரம் தல்லுகிரான் –இது ஒரு தர்மத்தை நிலை நிறுத்தும் நூல் என்று சொல்ல வரவே இத்தனயும் எழுதினேன் மற்றபடி வீரமனி போன்றோர் எல்லாம் திருந்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல

  – திலகர் ஆச்சரியமாக கீதாசாரியன் அர்ஜுனனுக்கு கூரும் கர்ம யோகமே கீதயின் இருதி முடிவு என்கிரார்.திலகருக்கு அர்ஜுன்னின் நிலைமை நன்றாக புரிந்துல்லது – அரவிந்தர் க்யானம் பெற்றது அவர் சிறையில் இருக்கும் போது கீதை படித்ததால் தான் என்று கேள்விப்பட்டிருக்கிரேன்.

  இதை எல்லாம் நிங்கள் ந்யாப் படுத்துகிறீர்கல் என்று நான் சொல்லவரவில்லை

  மற்றபடி இந்திய க்யான மரபு இங்கு படுகொலைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிரது என்று என் மட நெஞ்ஜம் சொல்கிரது

 8. கந்தர்வன் on August 1, 2010 at 6:54 am

  முனைவர் அய்யா,

  //
  இந்த உயரிய நூல்தான் கோட்ஸேக்குக் கொலைவெறி ஊட்டி அதனை நியாயப்படுத்தும் மனநிலையைத் தந்தது என்று வீரமணி எழுதிய புத்தகமும் உளது
  //

  அப்படியானால் வீரமணியும் சிவஞானசித்தியரும் இவ்விஷயத்தில் ஒற்றுமை உடையவர்கள் என்று நீங்களே கூறிவிட்டீர்கள். விளக்கத்துக்கு நன்றி.

  // சிவஞான சித்தி பரபக்கத்தில் உள்ள செய்தியைக் கட்டுரையில் கூறியது, அதனை நியாயப் படுத்துதற்கு அல்ல; அது இக்கட்டுரை எழுதத்தூண்டியது என்பதற்கு மட்டுமே. //

  அப்படியானால், பாஞராத்ர சித்தாந்தத்தையும் விஷ்ணுவையும் கண்டபடி தூற்றும் சிவஞானசித்தியர் நூலை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்று கூறுகிறீர்கள்.

  பத்ம புராணத்தில் சிவபெருமானும் பார்வதிதேவியும் பகவத்கீதையின் பெருமையைப் பலபடி புகழ்ந்துள்ளனர். பார்வதியம்மையார் கீதையின் ஒவ்வொரு அத்தியாயத்தைப் பற்றியும் ஒரு கேள்விகேட்க, அதற்குச் சிவபெருமான் அந்தந்த அத்தியாயத்தின் பெருமையைப் பற்றி ஒருசில த்ருஷ்டாந்தங்களுடன் விளக்கியுள்ளார். அவை இங்கே உள்ளன: http://www.bhagavad-gita.us/articles/683/1/Gita-Mahatmya-Chapter-One/Page1.html

 9. C.N.Muthukumaraswamy on August 1, 2010 at 10:47 am

  கந்தருவன்! இனி உங்கள்மறுமொழிகளைப் பொருட்படுத்தி அவைகளுக்கு விளக்கம் கூறுத்சலில் பயனில்லை என்று தெரிந்து கொண்டேன். நீங்கள் கட்டுரையில் உள்ள விஷயங்களைப் புரிந்து கொள்ளும்மனநிலையில் இல்லை.

 10. //வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் அடிபட்டு புண்பட்டுத் துன்பப்படும் நெஞ்சுக்கு இதமான மருந்து நிலையாமையைத் தெளிதல் அன்றி வேறொன்றும் இல்லை.//

  மிகச் சிறப்பாக எழுதி முனைவர் ஐயா, மருந்தை எடுத்து நம்முடைய புண்பட்ட நெஞ்சங்களில் பூசும் மருத்துவர் ஆகி இருக்கிறார்.

  அதே நேரம் நிலையாமை தத்துவம் உலகில் எல்லோருக்கும் உதவக் கூடியது என்பதையும் தாழ்மையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

  யாக்கை நிலையாமைக் கோட்பாடு என்பது உலக வாழ்வியலுக்கு ஊறு விளைக்கக் கூடியது அன்று.

  யாக்கை நிலையாமைக் கோட்பாடு உலக வாழ்க்கையை செம்மையாக நடத்தவே உதவும்.

  யாக்கை நிலையாமை கோட்பாடு என்பது துறவிகளை விட குடும்பஸ்தனுக்கே அதிகம் உதவி செய்யும் தன்மை உள்ளது.

  யாக்கை நிலையாமை தத்துவத்தை சரியாகப் புரிந்து கொண்ட குடும்பஸ்தன் கடமை வீரன் கர்ம யோகி ஆகிறான்.

  நிலையாமை தத்துவத்தை உணர்ந்து கொண்ட குடும்பஸ்தன் துன்பம் வரும் போது துவள மாட்டான். இந்த உலக வாழ்க்கையில் துன்பங்களை அடியோடு வெல்வது என்பது இயலாத காரியம் என்பதை அவன் உணர்ந்ததால், இடுக்கண் வருங்கால் அவன் நகுவான்.

  நிலையாமை கோட்பாட்டை தன்னில் ஒரு பகுதியாகக் கொண்ட ஆன்மீகத்தை அறிந்தவன். தனக்கு உடல் நலக் குறைவு ஏற்பாட்டாலும், மனைவி மக்களுக்கு உடல் நலம் குன்றினாலும், மனைவி மக்கள் இறந்தாலும் அதை சாமாளித்து எதிர்நோக்கி, எந்த சூழ் நிலையிலும் அந்தந்த நேரத்திலே தான் செய்ய வேண்டிய கடமைகள் உட்பட அனைத்தையும் செவ்வனே செய்வான்,

  நிலையாமை கோட்பாட்டை மனதில் வைத்தவன் பைனான்சியல் கிரைசிசில் சிக்கினாலும் கலங்க மாட்டான. கையளவு கிடைத்தாலும் கலங்க மாட்டேன். அது கடல் அளவே ஆனாலும் மயங்க மாட்டேன், உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா என கண்ணதாசன் பாடியது போல இருப்பான்.

  சுழலும் தட்டிலே ஏறியவர் எல்லோரும் மைய விலக்கு விசைக்கு (centrifugal force)ஆளாவது போல குடும்பஸ்தன் ஆனாலும், துறவி ஆனாலும் அவர்கள் இயற்க்கையின் கையிலே அல்லது விதியின் கையில் சிக்கித் தவிக்கும் நிலையிலே உள்ளனர். என்ன எகிறினாலும் இந்த உலகில் உள்ள எல்லோரும் இய்றக்கை அல்லது விதியின் கையிலே அவ்வப் போது அடி வாங்கி கடைசில் மரணம் என்னும் ஆப்பையும் பெற்றே தீருகின்றனர்.

  இதிலே யாக்கை நிலையாமை தத்துவத்தி புரிந்து கொள்வது நோய்க்கு மருந்தாகவே அமையும். முன்பு பண்டிதர்களின் மனதிலே மட்டுமே இருந்தே கீதையானது இன்றைக்கு எல்லோரும் படிக்கும் சிறந்த கருத்தாக ஆகி விட்டது.

  யாக்கை நிலையாமை தத்துவம் உலகில் உள்ள எல்லோரையும் சென்று அடைவது ஒவ்வொரு மனிதனுக்கும் நல்லது, உலகத்திற்கும் நல்லது. இதற்குப் பெரிய படிப்பு தேவை இல்லை.

  கோயம்பேட்டிலே மூட்டை தூக்கும் மதிப்பிற்குரிய தொழிலாளி ஓய்வு நேரத்திலே ஒரு ஐந்து நிமிடம் சிந்தித்தால் கூட யாக்கை நிலையாமை தத்துவத்தின் கருத்தை புரிந்து கொள்ள இயலும். யாக்கை நிலையாமை தத்தவத்தை சரியாக உணரந்தவன் சிறப்பான குடும்பஸ்தனாக , இன்னும் நல்ல கணவனாக, இன்னும் நல்ல தகப்பனாக, இன்னும் சிறந்த மனிதனாக வாழ்வான்.

  யாக்கை நிலையாமைக் கோட்பாட்டை அரைகுறையாகப் புரிந்தவர்கள தான் துறவு ஒன்றே வழி எனக் கருதுவர். யாக்கை நிலையாமையை சரியாகப் புரிந்தவருக்கு துறவறத்தைக் காட்டிலும் இல்லறத்திலே துன்பங்கள் அதிகம் என்பதும், அதை சமாளித்து எதிர் கொண்டு அப்போதும் நன்னெறியில் வாழ்வது துறவறத்துக்கு ஈடானது என்பதையும் உணர்வர்.

  முனைவர் ஐயா சொல்லியது போல இராமர் செய்தது அப்படியே. அதையே தியாகராஜர் “துராக்குலகு பூ கிராத குல செகராஜனுது சுந்தரா கார நீ” என்று பாடி கஷ்ட காலத்திலும் துன் மார்க்கத்தில் இறங்காத வழியைக் காட்டியவன் என்பதை விளக்கியுள்ளார்.

 11. மதிப்பிற்கும் அன்புக்குமுரிய முனைவர் ஐயா அவர்களே,

  //இங்கு இராமபிரான் என்றது, குலசேகர ஆழ்வாரும் கம்பனும் தியாகையரும் போற்றிய இராமன் என்னும் பெயருடைய பரம்பொருளை அன்று. இங்கு இராமன் என்றது அயோத்தி என்ற நாட்டுக்கு உரியவனும், இலங்கை என்ற நாட்டை ஆண்ட இராவணன் என்னும் பகைவன் மீது படையெடுத்துச் சென்றவனுமாகிய ஓரரசனை.//

  கம்பரும், தியாகய்யரும் பாடிய இராமன், அயோத்தியின் அரசன் இராமனே.

  தியாகய்யர், துளசிதாசர், ஆதி சங்கரர் (தனக்கு மேல் வேறு ஈசன் இல்லாத ஈசன்)ஆகியோர் அவர்தான் பரம்பொருளான கடவுள் பரப் பிரம்மம் என்றே சொல்லி உள்ளனர். ஆனாலும் மனிதனாக இருந்த இராமனின் சிறப்பு இணையற்ற சிறப்பு என்பதாகவே நாம் அறிகிறோம்.

  இராமன் தன் வாழ் நாள் முழுவது ஒரு அசாதாரண மனிதனாக , தியாகத்தின் திரு உருவமாக இருந்திருக்கிறான். பெண்கள் விரும்பும் அளவுக்கு, மிகுந்த அழகுடைய ஹான்ட்சாம் இளைங்கனாக இருந்த போதும், தன் மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மனதிலும் அனுமதிக்காத மாமனிதனாக இருந்திருக்கிறார். யாரையும் வம்புக்கு இழுத்து போர் புரிந்தது இல்லை. பிறர் பொருளுக்கு ஆசைப் பட்டது இல்லை. தனக்கு வர வேண்டிய ஆட்சியை விட்டுக் கொடுத்து இருக்கிறார். காட்டுக்கு போகச் சொன்ன போது மறுப்பு தெரிவிக்காமல் அதையும் ஏற்றுக் கொண்டு இருக்கிறார். காட்டிலும், அப்பாவி சித்தர்களுக்கு அபாயம் ஏற்படும் போது பாதுகாப்பு தந்து இருக்கிறார். எனவே தான் இராச்சியத்தை விட்டு காட்டிலே கஷ்டப் படும் போதும் பிறருக்கு உதவி செய்து இருக்கிறார்.

  ஆனானப் பட்ட கடவுள் என்று சொல்லப் படுபவர்களே, வானத்திலே இருந்து மக்கள் கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு இருப்பதாக கருதப் படுகிற நேரத்திலே, இராமன் தான் கஷ்டப் பட்ட போதும் மக்களுக்காக போராடி இருக்கிறார். எனவே தான் ”சமானமெவரு, இராம நீ சமான மெவரு, ரகு வம்ச தாரகா ” என தியாகராசர் பாடி உள்ளனர். அப்படி மனிதர்களில் மாணிக்கமாக, கடவுளுக்கும் மேலான நிலையிலே வாழ்ந்தார் இராமன் எழுதினால் அது மிகையாகாது !

  எப்படி பரமசிவனார் மக்களின் நன்மைக்காக ஆலாகால விஷத்தை கண்டத்திலே வைத்ததாக உள்ளதோ , அப்பட யே இராமரும் ஒவ்வொரு காண்டத்திலும் நல்ல கொள்கைகளுக்காக இன்னலை ஏற்று இருக்கிறார். அப்படிபட்ட இராமர் – அவர் அயோத்தி இளவரசனாக இருந்த நிலையாக இருந்தாலும் சரி, அயோத்தி அரசனாக இருந்த நிலையிலும் சரி, (அல்லது பலரும் சொல்லும் பிரம்மம் என்னும் நிலையாக இருந்தாலும் சரி) எப்போதுமே அவர் மதவாதம் இல்லாதவராகவே இருந்திருக்கிறார்.

  கிரிஷ்ணரும் மிகச் சிறந்த நல்லிணக்க வாதியாக இந்த உலகிலே தன்னை கடவுள் என்று பிரகடனம் செய்து கொண்ட ஒரே ஒருவற்க இருந்த போதிலும் மிகச் சிறந்த மத நல்லிணக்க, பரந்த மனப்பான்மை காரராக இருந்திருக்கிறார்.

  இன்னும் தெளிவாக சொன்னால் எந்த ஒரு இந்துக் கடவுளும் ”என்னைத் தவிர உனக்கு வேறு தெய்வங்கள் வேண்டாமே'” என்று சொன்னதாக இல்லை. எனவே //இங்கு இராமபிரான் என்றது, குலசேகர ஆழ்வாரும் கம்பனும் தியாகையரும் போற்றிய இராமன் என்னும் பெயருடைய பரம்பொருளை அன்று// என்று கிரிக்கெட்டிலே டிபென்ஸ் ஆடுவது போல எழுத வேண்டுமா? இராமர் பரம் பொருளான பரப் பிரம்மமாக இருந்தாலும், அவர் யாருக்கும் வணக்கம் செலுத்த தயங்க மாட்டார் எனவே கருதலாம்.

  இராமரின் மீதோ , கிரிஷ்ணரின் மீதோ யாரும் சமய வாதத்தை பூச முடியாது. எந்த ஒரு இந்துக் கடவுளின் மீதும் சமய வாதத்தை பூச முடியாது. இப்படிக் இந்து மத்தில் கடவுளர்களாக சொல்லப் படுபவர்கள், அவர்களின் கோட்பாடு எல்லாமே நல்லிணக்கமாக, பரந்த மனப்பான்மையாக இருப்பதால், சமய வாதம் இந்து மதத்தில் மரத்திலிருந்து உரிந்து விழும் மரவுரி பொருளாகவே உள்ளது

 12. கந்தர்வன் on August 1, 2010 at 6:05 pm

  // நீங்கள் கட்டுரையில் உள்ள விஷயங்களைப் புரிந்து கொள்ளும்மனநிலையில் இல்லை. //

  முனைவர் அவர்களே,

  நீங்கள் இம்மறுமொழியைப் படிக்காமல் போனாலும், ஏனையோர் அதைப் படித்து அதில் நியாயமிருந்தால் சொல்லட்டும்.

  உண்மையான விஷயத்தைத் தான் சற்று ‘சுருக்’ என்று காட்டினேன். உங்கள் ஆதங்கம் புரிகிறது.

  நீங்கள் உங்கள் கட்டுரையிலுள்ள “நிலையாமை” என்னும் கருத்தை விளக்குவதற்குப் பகவத்கீதையைக் “கொலை செய்யத் தூண்டும் நூல்” என்னும் அபார்த்தத்தைக் கூறும் கொடியதொரு புத்தகத்திலிருந்தும், “ஒரு மனித அரசனாக வாழ்ந்த இராமனைச் சிலர் தாங்கள் இஷ்டப்பட்டு கவிதை நயம்பட பரம்பொருளாகக் கட்டுக்கதை கட்டினர்” என்னும் பொருளிலும் எழுதியிருக்கத் தேவையில்லை. அதைத் தான் எதிர்த்தேன்.

  நீங்கள் “ஓப்பன் ஸோர்ஸ் மதம்” கட்டுரையில் மையக்கருத்தை மாத்திரம் எடுத்துக்கொள்ளாமல், சிவபெருமானைத் தாழ்த்திக் கூறப்பட்டதை எதிர்த்தீர்களே! அதுபோலத்தான் நான் கூறும் எதிர்ப்பும். அடியேனுக்கு மாத்திரம் வேறு நியாயமா?

  மேலும்,

  // சிவஞான சித்தி பரபக்கத்தில் உள்ள செய்தியைக் கட்டுரையில் கூறியது, அதனை நியாயப் படுத்துதற்கு அல்ல; அது இக்கட்டுரை எழுதத்தூண்டியது என்பதற்கு மட்டுமே. //

  அப்படி சிவஞான சித்தி புத்தகத்தை மாத்திரம் மேற்கோள் காட்டியிருந்தால் நல்லது. ஆனால், நீங்கள் அத்துடன் சேர்த்து ஒரு subjective opinion கூறி ஒரு தீர்ப்பு (judgement) கூட கூறிவிட்டீர்கள்:

  // போர்க்களத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அருச்சுனனின் உள்ளம் முதலில் ஞானமார்க்கத்தையே தெரிவு செய்கின்றது.

  பல்லாயிரம் பேரைக் கொன்று அசோகன் பெற்ற ஞானத்தை அருச்சுனன் யாரையும் கொல்லாமலே பெற்றான். //

  அத்துடன், கீதையைப் படித்ததே இல்லை என்ற நீங்கள், எப்படி இம்முடிவுக்கு வருகிறீர்கள் என்று தெரியவில்லை.

 13. C.N.Muthukumaraswamy on August 1, 2010 at 7:03 pm

  அன்புள்ள திருச்சிக்காரருக்கு, நன்றி நான்மென்மையாகச்சொன்ன சில உண்மைகலை நீங்கள் அழுத்தமாகக் கூறியுள்ளீர்கள்.

 14. sarang on August 2, 2010 at 11:03 am

  நண்பர் திருச்சிகாரரே

  நிலையாமை பற்றிய உங்கள் கருத்திற்கு நன்றி

  //
  புரிந்தவருக்கு துறவறத்தைக் காட்டிலும் இல்லறத்திலே துன்பங்கள் அதிகம் என்பதும், அதை சமாளித்து எதிர் கொண்டு அப்போதும் நன்னெறியில் வாழ்வது துறவறத்துக்கு ஈடானது என்பதையும் உணர்வர்
  //

  நீங்கள் சொல்லவந்தது புரிகிறது இருந்தாலும் உத்தம சஞாசிகளை விட நாம் தான் ரொம்ப கஷ்ட படுகிறோம் என்று யாரும் முடிவு கட்டி விட கூடாது என்பதாற்காக, வெறும் ஒரு விளக்கத்தை மட்டும் கூற முயல்கிறேன்

  உங்களை போலவே நானும் என்னுடைய நிலைமையை பார்த்து இல்லறம் தான் மிக கஷ்டம் (அதையேன் கேக்கறீங்க), சன்யாசம் வாங்கிக் கொள்வதே மேல் என நினைத்தேன்

  கீதை ஐந்தான் அத்தியாயத்தில் ஆறாவது ஸ்லோகம் வேறு மாதிரி சொல்கிறது

  சன்யாசாஸ் து மஹாபாஹோ துக்கம் அப்த்தும் அயோகத
  யோக யுக்தோ முனிர் பிரம்மா நசிரெனதிகச்சதி

  சாதாரண மாக இதன் அர்த்தம் –
  திடீர் சன்யாசம் ஒருவனை பெரும் துக்கத்தில் ஆழ்த்தும் – கர்ம யோகமோ நற் கதியை விரைந்து கொடுக்கும்

  அதலால் சன்யாசத்தை அவ்வளவு சுலபம் என்று என்ன வேண்டாம் – நமெக்கெல்லாம் ஒரு காலத்திற்கு பிறகு சந்யசமே மேல் என்று தோன்றுவதற்கு காரணம் வேறு (அது ஆத்ம தர்சனம் வந்து விட்டதால் மட்டும் அல்ல) 🙂

 15. Dear Sarang,

  Thanks, We can find in Githa at many verses that “Thavam”and “Yogam” are the same.

 16. Subramanian. R on August 3, 2010 at 4:45 pm

  பகவத் கீதையை தப்பாக புரிந்து கொண்டவர்கள் பலர் உண்டு. அதற்கு
  கீதை பொறுப்பல்ல. பைபிள் படித்துவிட்டு அமெரிக்கர்கள் வியட்நாமில்
  யுத்தம் புரியவில்லையா?

  மற்றும் கடமையை செய்து விட்டு துறவறம் என்பது க்ரஹச்த்தருக்கே
  பொருந்தும். பிரம்ம சாரிகளுக்கு இல்லை. சங்கரரும், பகவான் ரமணரும் இதற்கு உதாரணம்.

  அன்புடன்,

  சுப்ரமணியன். இரா.

 17. Indli.com on August 3, 2010 at 7:43 pm

  தமிழ்ஹிந்து » தலபுராணம் என்னும் கருவூலம்-4…

  நிலையாமையே உண்மை. எனினும் இந்தத் தத்துவம் எல்லோருக்கும் உரியதன்று. அதற்குரிய தீவிரதர மனப் பக…

 18. RGK on August 5, 2010 at 1:04 pm

  முனைவர் ஐயா அவர்களுக்கு
  நல்ல கட்டுரை.

  திரு சாரங் , திருச்சிக்காரன் , கந்தர்வன்
  உங்கள் எல்லோரிடம் இருந்தும் நான்
  பல விஷயங்கள் கற்று கொண்டீருக்கிர்ன்.

  நன்றி

 19. S.Srinivasaraghavan on September 11, 2010 at 11:16 am

  இங்கு முக்கியமான விஷயம் ஒன்று காணப்படல் மிக அவசியம். கர்மமார்க்கம் (கடமைவழி), ஞானமார்க்கம் (அறிவுவழி), பக்திமார்க்கம் (வ்ழிபாட்டுவ்ழி), மோக்ஷமார்க்கம்(விடுதலைவழி) என்றெல்லாம் பல வழிகள் மனிதன் உய்ய அவன் தேர்வுக்குக் காத்து நிற்கின்றனவோ என்னும் மயக்கம் தேவையற்றது.

  எப்போது உடலெடுக்கப்பட்டுவிட்டதோ அப்போது கடமை ஆற்றுதலும் உடன்தோன்றிவிட்டதென்பதே உண்மை. தன்னலமற்ற கடமை ஆற்றி ஆற்றியே அதன்மூலம் தான் எவ்வாறு இறையுடன் ஒன்றியுள்ளோம் என்னும் ஞானமும் அதனால் அவிறையின்பால் காதலும் (பக்தி), பின்பு அதனுடன் இரண்டறக்கலக்கும் வேட்கை என்னும் நிலையும் படிப்படியே கனிந்து ஏற்படும். அந்தந்த நிலைகள் திட்டமிட்டு ஏற்படுவதன்று. தானாகவே நிகழ்வது. மொட்டு கனியாவது போல. எனவே வழி ஒன்றுதான்-கடமை ஆற்றல். மற்றவை நிலைகள், வழிகளல்ல.

  ஆக, இறைபடப்பின் நோக்கமாகிய தன்னலமற்ற பொதுக்கடமை ஆற்றல் என்னும் அடிப்படை அறிவைமட்டும் பெற்று ஒருவன் கடமையை செவ்வனே ஆற்றினால் போதும் அந்த ஆரம்ப உச்சகட்ட உந்துதல் (initial momentum ) ஒருவனை மற்றநிலைகளில் தானே சேர்பித்துவிடும். இவன் செய்யவேண்டுவதேல்லாம் இதனை எப்போதும் உள்மனத்திலே நிலைநிறுத்தலே.

  நிலையாமை என்பது யாக்கைக்குமட்டுமேயன்றி, நமக்கல்ல என்ற அறிவும் அடிப்படை அறிவே. வெறும் யாக்கை நிலையாமையை மட்டும் நினைவில்கொண்டால் போதாது. ஆன்மாவின் அழியாமையும் உள்ளத்தில் பதியவேண்டும். அப்போதுதான் முடிவு சரியாக எட்டப்படும்.

  கருத்து இதுவே. கடமை, ஞானம், பக்தி, வீட்டுவேட்கை என நான்கு தேர்வுகள் நம் முன் இல்லை. இறைவன் நம்மைப் படித்ததன் நோக்கமாகிய சரிவரக் கடமை ஆற்றல் என்னும் வழி ஒன்றுதான் உள்ளது.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*