தலபுராணம் என்னும் கருவூலம் – 1

rameshwaram1தமிழ் இலக்கிய உலகில் 16-ஆம் நூற்றாண்டிலிருந்து 19-ஆம் நூற்றாண்டுவரை தலபுராணம் என்னும் இலக்கியவகை ஒன்று சைவ உலகில் செல்வாக்குப் பெற்றிருந்தது. இது வடமொழியில் உள்ள பதினெண்புராணங்களின் அமைப்பிலிருந்து வேறுபட்ட அமைப்பினைக் கொண்டதோர் இலக்கியவகை.

புராண இலக்கியங்களைப் படைத்தோர் பெரும்பாலும் சைவசமயச் சார்பு உடையவராகவே விளங்கினர். இந்த இலக்கியவகை தோன்றியமைக்கு 16-ஆம் நூற்றாண்டிக்குப்பின் தமிழுக்கும் தமிழகத்துக்கும் நேர்ந்த நெருக்கடியும் ஒரு காரணமாகும்.

16-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தமிழகத்தில் நேர்ந்த அரசு மாற்றங்களின் காரணமாக, தமிழ், அரசின் ஆதரவை இழந்தது. நாயக்க மன்னர்கள் ஆட்சியிலும், தஞ்சை மராட்டியர் ஆட்சியிலும் வைதிக மதம் ஓரளவு தழைத்தது, பழைய திருக்கோயில்கள் புதுக்கோலம் பெற்றன எனினும் தமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் அவர்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை. அரசின் ஆதரவு இல்லாதுபோயினும் மக்களின் ஆதரவு தமிழுக்கு ஓரளவு இருக்கவே செய்தது. செல்வர்களின் ஆதரவில் காதல், மடல், தூது, நொண்டிநாடகம் போன்ற காமச்சுவை மிக்க சிற்றிலக்கியங்கள் பெருகின. வருணகுலாதித்தன் மடல், கூளப்பநாயக்கன் காதல், கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது போன்ற இலக்கியங்கள், காமச்சுவை மிக்கன; எனினும் அவற்றில் உள்ள சொற்சுவையும் இலக்கியச் சுவையும் தமிழ் ஆர்வலருக்கு இன்பம் அளிப்பனவே. ஆயினும் கழிகாமம் பேரழிவினை விளைத்துவிடும் என்னும் அற உணர்வு சிலப்பதிகார காலம் முதல் தமிழ்ச் சான்றோர் உலகில் வேரூன்றி இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் உமாபதி சிவம், குருநமச்சிவாயர், குருஞான சம்பந்தர் முதலிய அருளாளர்கள் தோன்றினர்; திருவருளால் அற்புதங்கள் பல நிகழ்த்தினர். மக்களிடம் செல்வாக்குப் பெற்றனர். மக்களிடம் அவர்களுக்கு இருந்த செல்வாக்கு அன்று ஆட்சியிலிருந்த அரசமரபினரையும் அவர்கள்பால் ஈர்த்தன. திருமடங்கள் தோன்றின. ஆட்சியில் உருதுவும் தெலுங்கும் மராட்டியும் இருந்தாலும் திருமடங்கள் தமிழிலக்கியங்களைப் படைத்தும் விரும்பிவந்தவருக்குத் தமிழமுதுடன் சைவநெறியை ஊட்டியும் தமிழையும் சைவத்தையும் வளர்த்தன. திருமடத்தில் இருந்த தம்பிரான் சுவாமிகள் துறவிகள். சுகபோகத்தைத் துறந்துவிட்ட அவர்களுக்கு உண்டியும் உறையுளும் திருமடங்கள் அளித்தன. அவர்கள் சைவத் தொண்டும் தமிழ்த்தொண்டும் ஆற்றுவதே குறிக்கொண்டு வாழ்ந்தனர். பலர் சைவம் கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நெறியில் உயர்ந்த அனுபவத்தைப் பெற்றனர். தாம் பெற்ற பேரின்பத்தைப் பிறருக்கும் பகிர்ந்தளிக்க விழைந்தனர்.

முற்றக் கற்றுணர்ந்த தலையாய அறிவினர் ஒரு நாட்டில் சிலராகத்தான் இருக்க முடியும். இருந்தாலும், தங்களுடைய அனுபவங்களை நாட்டில் உள்ள பிறரும் பெறுதல் வேண்டும், பெற்றால்தான் நாட்டில் உணர்வொற்றுமை (emotional integration), ஒருமைப்பாடு நிலவமுடியும். தமிழுக்கும் சைவத்திற்கும் அந்நியமானவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருந்த சூழலில் சைவமடத்தில் இருந்த ஞானியரும் சான்றோரும் தமிழ் மக்களுக்குச் சிவநெறியின்வழி உணர்வொற்றுமையை ஊட்டி வளர்க்கும் பணியை மேற்கொண்டனர். உமாபதி சிவம், சிவஞான முனிவர், கச்சியப்ப முனிவர் முதலியோர் சிவஞானியராக இருந்ததோடு தமிழ் நேயர்களாகவும் இருந்தனர். அதனால் அவர்களின் சைவப்பணி, தமிழ் இலக்கியப் பணியாக மலர்ந்தது.

chidambaram3முதலில் தோன்றிய தலபுராணம் உமாபதி சிவம் அவர்கள் பாடிய திருக்கோயிற்புராணம். இது தில்லை எனப்படும் சிதம்பரத்தைப் பற்றியது. அக்காலத்தில் தமிழருக்குத் தலபுராணக் காதல் அதிகமாக இருந்தது. அதனால் ஒருதலத்திற்கே பல புராணங்கள் தோன்றின. சிதம்பரத்திற்கு மூன்று தலபுராணங்கள் உள்ளன. பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடற்புராணம், துறைமங்கலம் சிவப்பிரகாசருடைய சகோதர்களாகிய கருணைப்பிரகாசரும் ஞானப்பிரகாசரும் பாடிய சீகாளத்திப்புராணம், திரிகூடராசப்ப கவிராயர் பாடிய திருக்குற்றலத் தலபுராணம், சிவஞானமுனிவரின் காஞ்சிப்புராணம், அவருடைய மாணாக்கராகிய கச்சியப்பமுனிவரின் திருவானைக்காப்புராணம், திருத்தணிகைப்புராணம், திருப்பேரூர்ப்புராணம், அவரைத் தம்முடைய மானசீக குருவாகக் கொண்ட மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் பாடிய திருநாகைக்காரோணப்புராணம், திருப்பெருந்துறைப் புராணம் என்பனவும் இவை போன்ற வேறு பல தலபுராணங்களும் காப்பியங்களுக்கு நிகரான கவிச்சுவை நிறைந்தன.

பொதுவாகத் தலபுராணங்கள், தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது பழமை, பெருமை, அவனை வழிபட்டு நலம் பெற்றவர்களுடைய வரலாறுகள், வழிபடும் முறை, தலத்தின் மூர்த்தி, தீர்த்த விசேடங்கள் முதலியனவற்றைக் கூறுவனவாக இருக்கும்.

வடமொழியும் தென்மொழியும் முற்றக் கற்ற புராண ஆசிரியர்கள் மேற்கூறியவற்றைக் கூறுவதோடு சமாதானம் அடையவில்லை. தாங்கள் பலநூல்களில் படித்து அறிந்த பலவற்றையும் தாம் படைக்கும் புராணகாப்பியத்தில் பாடிப் பதிவு செய்து வைத்துள்ளனர்.

தமிழ்த் தலபுராணங்கள் தம் பார்வையைத் தமிழ்நாட்டளவில் குறுக்கிக் கொள்ளாமல் இந்தியத் திருநாடு முழுவதிலும் செலுத்தின. தமிழ் மரபை வேதமரபோடு இணைத்துத் தென்னாட்டுச் சைவத்தின் பார்வையை விரிவடையச் செய்தன.

இந்திரன், பிரமன், திருமால் முதலிய தேவர்களும், பராசரன், வியாதன், காசிபன், மார்க்கண்டன், ததீசி, அகத்தியர், பதஞ்சலி, உபமன்யூ, மிருகண்டு, விசுவாமித்திரர், வசிட்டர் முதலிய இருடிகளும் புராணக்கதைகளில் பாத்திரங்களாகி, தமிழ் மக்களுக்கு நெருக்கமானார்கள்.

ganga2புராணக்கதை மாந்தர்கள் பலர் வடநாட்டில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து இங்கு உள்ள தலத்தில் வழிபட்டு முத்தியடைந்தர்கள். இந்த முறையில் தமிழ் மக்கள் வடநாட்டுடனும் மக்களுடனும் இலக்கியவழி அறிமுகமனார்கள். இமயமும் காசியும் கங்கையும் தமக்கும் உரியன என்ற உணர்வைப் பெற்றார்கள். அவை தமக்கு உரியவை என்பது போல இங்குத் தில்லையும் காஞ்சியும் காவிரியும் குமரியும் இராமேசுவரமும் வடநாட்டு இந்துக்களுக்கும் உரியன என்ற விரிந்த மனம் பெற்றனர். தமிழர்களால் அவர்கள் புராண இலக்கியங்களின்வழி அறியப்பட்டு நேசிக்கப்படுவோரானார்கள். திருக்கயிலையில்தொடங்கித் தமிழகத்தில் நடந்து மீண்டும் திருக்கயிலையில்முடியும் கதைகளும் தமிழ்த்தல புராணங்களில் உண்டு.

புராணம் பாடிய பெருங்கவிஞர்கள் தெய்வத்தமிழை மிகவும் போற்றி வணங்கினார்கள். ஆனால், வடமொழியை வெறுக்கவில்லை; வேதத்தைப் பழிக்கவில்லை. வேத உபநிடத வாக்கியங்களை உரிய இடங்களில் தம் புராணங்களில் மொழிபெயர்த்துச் சேர்த்துக் கொண்டனர். வேத வாக்கியங்களுக்குச் சரியான விளக்கங்களை அளித்தனர்.

இத்தகைய உபகாரங்கள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

வேதங்களும் தலபுராணங்களும்

திருவிளையாடற் புராணம்

தமிழ்ப்பற்றாளர்களாகிய சைவர்களிற் சிலர், வடமொழியினும் தமிழை உயர்த்திக் காட்ட வேண்டிக் கூறும் பாடல்கள் இரண்டு. பரஞ்சோதிமுனிவரின் திருவிளையாடற் புராணத்திலுள்ள அந்த இரண்டு பாடல்கள்:

கண்ணுதற் பெருங்கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெளிந்தாய்ந்த விப்பசுந் தமிழ் – ஏனை
மண்ணிடைச் சிலவிலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடப் படக்கிடந்ததா எண்ண வும்படுமோ

தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை
உண்ட பாலனை அழைத்ததும் எலும்புபெண் உருவாக்
கண்டதும் மறக்க தவினைத் திறந்ததுங் கன்னித்
தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்

இந்த இரண்டு பாடல்களும் திருமுறைத் தமிழின் பெருமையைப் பறைசாற்றுகின்றனவே அன்றி வெறுந்தமிழை அல்ல.

இந்தப் பாடல்கள் செந்தமிழ் வழங்கும் நாட்டினைச் சூழ்ந்துள்ள சிங்களம், பழந்தீவு, கொல்லம், கூபம், கொங்கணம், துளு, குடகம், கருநடம், கூடம், வடுகு, தெலுங்கு, கலிங்கம் ஆகிய பன்னிரு தேயங்களில் வழங்கிய மொழியையே (இவை கொடுந்தமிழ் நாடு என இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ளன) இலக்கண வரம்பிலா மொழி எனக் கூறியதே அன்றி, வடமொழியை அவ்வாறு கூறவில்லை..

‘இலக்கண வரம்பிலா மொழி’ என முனிவர் கூறியது வடமொழியைக் குறிக்காது, ஏனெனில் இவ்விரண்டிற்கும் முந்திய செய்யுளில், பாணிணிக்கு வடமொழி இலக்கணத்தையும் அதற்கு நிகராக மலயமாமுனியாகிய அகத்தியருக்குத் தென்மொழியையும் சிவன் உணர்த்தியருளினன் என்று கூறப்பிடப்பட்டுள்ளது.

புராண இலக்கிய ஆசிரியர்கள் தமிழ்மொழியோடு வடமொழியிலும் புலமை வாய்ந்தவர்கள்; இருமொழிப் புலவர்களாகத் திகழ்ந்தவர்கள். வடமொழி ஒன்றை மட்டும் அல்லது தமிழ் ஒன்றைமட்டும் அறிந்தவர்களைக் காட்டிலும் இருமொழியும் அறிந்த இவர்கள் புலமை வீறு கொண்டவர்கள். இவர்கள் வேதங்களையும் பயின்றவர்கள்.

திருவிளையாடற் புராணத்தில் ‘வேதத்துக்குப் பொருளருளிச் செய்த படலம்’ என்று ஒரு படலமும் உள்ளது.

இப்படலத்தில் சிவன் வேதத்தை அருளிச்செய்த முறைமையும் வேதம் கருமகாண்டம், ஞானகாண்டம் என இருவகையாக நிற்றலையும் கருமகாண்டம் சிவார்ச்சனை முதலியன என்றும் அவற்றால் ஞானம் உதிப்பதற்கு உரிய பக்குவம் உண்டாகும் என்றும் விளக்கியது. வேதத்தின் வழித் தோன்றிய மதங்கட்கெல்லாம் வேதமே பிரமாணம் என்றும் ஸ்மிருதி வேதத்திற்கு அனுகுணம் (இரண்டாம் குணம்); வேத சம்பந்தத்தால் அந்த ஸ்மார்த்தமும் வைதிகம் என்று சொல்லப்படும்; அந்த வைதிகத்திற்கும் மேலாகச் சொல்லப்படுவது வேதம் சாற்றும் சுத்தமார்க்கம் எனப் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர் விரிவாக ஓதுகின்றார்.

“தெருட்பெறு போக வீடு காரணமாய்ச் சிவமயமாம் மறைப்பொருள்” என்றமையால், வேதம் சிவநெறிக்குப் பிரமாணம் என எடுத்துக் காட்டினார்.

இப்படலத்தால், இந்தியநாட்டில், ஏன், தமிழகத்தில், வேதநெறியை அனுசரித்து ஒழுகுவோர் அனைவரும் வைதிகர்கள்; ஸ்மிருதியின்படி ஒழுகுவோரும் மேற்கூறிய வைதிகரில் ஒரு பகுதியினரே; வேதநெறியே சுத்த மார்க்கம் என்பது புராண ஆசிரியரின் கருத்து எனத் தெரிகின்றது.

சிவபூசையின் இறுதியில் பூசை, செபம் ஆகிய அனைத்தின் புண்ணியப் பயனையும் சிவனுக்கே சமர்ப்பணம் செய்வர். அப்பொழுது கூறப்படும் வேத மந்திரம்,

ஓம் ஹாம் சிவோ தா³தா சிவோ போ⁴ க்தா சிவ: ஸர்வமித³ம் ஜகத்|
சிவோ யஜதி ஸர்வத்ர யச்சி²வஸ் ஸோஹமேவ து||

இதன் பொருள்: கொடுப்பவராய் இருந்து கொடுப்பவரும் நீயே; கொள்பவர்களாய் இருந்து கொள்பவரும் நீரே; உமது வியாபகத்தால் இந்த உலகம் முழுதும் நீரே; அதனால் பூசகராயிருந்து பூசிப்பவரும் நீரே; அடியேனும் நீரே.”

இந்த மந்திரம் திருவிளையாடற்புராணத்தில் அழகிய கவிதையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அப்பாடல்:

பூசையும் பூசைக் கேற்ற பொருள்களும் பூசை செய்யும்
நேசனும் பூசை கொண்டு நியதியிற் பேறு நல்கும்
ஈசனு மாகிப் பூசை யான்செய்தேன் எனுமென் போத
வாசனை யதுவு மான மறைமுதல் அடிகள் போற்றி.

வேதம், பரமான்மாவாகிய இறைவன் அணுவிலும் அணுவாய்ப் பெரிதிலும் பெரிதாய்ச் சகல பிராணிகளின் இருதய குகையில் உள்ளான் எனக் கூறுகின்றது. அந்த வேத வசனம்,

அணோ ரணீயான் மஹதோ மஹீயாநாத்மா|
கு
³ஹாயாந்நிஹிதோஸ்ய ஜந்தோ:||

என்பது. இது தைத்திரீயாருண சாகை நாராயண வசனம்.

இந்தவசனத்தின் கருத்தைத் திருவிளையாடற்புராண ஆசிரியர், சிற்சத்தித் துதியாக்கி,

அண்டங்க ளெல்லாம் அணுவாக அணுக்க ளெல்லாம்
அண்டங்க ளாகப் பெரிதாய்ச் சிறிதா யினானும்
அண்டங்க ளுள்ளும் புறம்பும் கரியா யினானும்
அண்டங்க ளீன்றாள் துணையென்பர் அறிந்த நல்லோர்

எனப் பாடினார்.

திருவிளையாடற் புராண ஆசிரியர் தமிழ் மொழியின்மேல் ஆராக் காதல் உடையவர். சிவனையன்றி பிற தெய்வம் வழிபடாதவர். ஆதலால், பிறமொழிகளில் உள்ள சிவதோத்திரங்களிலும் மனதைப் பறிகொடுத்தார். அவற்றைத் தாம் பாடிய புராணத்தில் தக்க இடங்களில் சுட்டிக் காட்டவும் செய்தார்.

சோமசுந்தரக் கடவுள் தடாதகைப் பிராட்டியாரைத் திருமணம் செய்துகொள்ள மணவணி கொள்ளுகின்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதியில் ஆசிரியர் கூறும் பாடல்:

பந்தநான்மறைப் பொருள் திரட்டென வடபாடல் செய்து எதிர்புட்ப
தந்தன் ஏத்த, வானுயிர் உணவுருத்தெழு தழல்விடத் தெதிர் நோக்கும்
அந்தமாதி யிலான் நிழல் வடிவமாய் ஆடியின் நிழல்போல
வந்த சுந்தரன் சாத்து நீறொடு திருமாலையும் எடுத்து ஏந்த
(திருமணப் படலம் 112)

‘நான்கு வேதங்களின் பொருளையும் திரட்டியதைப் போல வடமொழியில் புட்பதந்தன் எனும் கந்தருவன் பாடல் செய்து புகழ்ந்து ஏத்த’ என்று புஷ்பதந்தர் என்பார் பாடிய ‘சிவமஹிம்ந ஸ்தோத்திரம்’ என்ற வடமொழி நூலைச் சிவன் உவக்கும் தோத்திரமாகச் சிறப்பிக்கின்றார்.

ஆதிசங்கரர் தம்முடைய சிவானந்தலகரி என்னும் தோத்திரநூலின் முதற்பாட்டில், சிவனும் சத்தியும் பிரிப்பரிய தாதான்மிய சம்பந்தம் உடையவராதலின் சிவனுக்கும் உமைக்கும் சேர்த்து ஒருங்கே தோத்திரம் செய்கின்றார். (‘கலாப்யாம்  சூடாலங்க்ருத  சசிகலாப்யாம் நிஜதப: பலாப்யாம்… ‘ எனத்தொடங்கும் பாடல்).

meenakshi-somasundarar-marriageஅந்தப் பாடலின் தமிழ் வடிவம், “கலையானார் கலைமதியங் கண்ணியானார், கருதுதவப் பலனொருவர்க் கொருவ ரானார் ……. உமைசிவனார்க் கிவ்வணக்கம் உரியதாமே” என்பதாகும்..

உமைக்குச் சிவனும் சிவனுக்கு உமையும் கிடைத்தது அவர்களுடைய தவப்பலன் என்னும் இக்கருத்தைத் திருவிளையாடற் புராண ஆசிரியர், தகுந்த இடத்தில் பயன்படுத்திக் கொள்கின்றார்.

சோமசுந்தரப் பெருமானின் மாப்பிள்ளை அழைப்பு நடைபெறுகின்றது. பெருமானைக் கண்ணுறக் கண்டு மகிழ்ந்த மதுரைவாசிகள்,

நங்கையென் நோற்றாள் கொல்லோ நம்பியைத் திளைத்தற் கென்பார்
மங்கையை மணப்பான் என்னோ வள்ளலும் நோற்றான் என்பார்

எனத் திருவிளையாடற்புராண ஆசிரியர் கூறுகின்றார்.

திருமணம் நிகழ்கின்றது. பிரமன் தன் மக்களாகிய சனகாதி நால்வரும் உடனிருக்கத் திருமண வேள்வி செய்கின்றான். வேள்வித்தீயில் நெய் சொரிகின்றான். வேள்வித் தீயானது நெய்யை உண்டு அகடு (வயிறு, நெருப்பின் அடிப்பாகம்) ஏப்பம் விடுவது போன்ற ஒலியுடன் ஆர்த்து நிமிர்ந்தது.

இந்நிகழ்ச்சியினைக் கூறும் பாடல்:

மாக்கடி முளரி வாணன் மைந்தரோடு ஒருங்கு வைகி
நாக்களின் நடுவாரத் துடுவையால் நறுநெய் ஆர்த்தி
வாக்கிட ஆர மாந்தி வலஞ்சுழித்து அடடு வீங்கித்
தேக்கிடும் ஒலியின் ஆர்த்து நிமிர்ந்தது தெய்வச் செந்தீ

(மா--பெரிய
கடி–நறுமணம்
முளரிவாணன்–தாமரை இருக்கை கொண்ட பிரமன்
நாக்கலின் நடுவார என்றது, அக்கினிதெவனுக்கு ஏழு நாக்குகள் உண்டு, அவையாவன: காளி, கராளி, மனோஜவை, சுலோகிதை, சுதூம்ரவருணை, ஸ்புலிங்கினி, விசுவரூபி என்பன. அவற்ருள் நடு நாக்கு சுலோகிதை என்னும் நாக்கு.
துடவை–வேள்வியில் நெய்யை வார்க்கப் பயன்படுத்தும் சிருக்கு சிருவம் என்னும் கருவிகள்.)

இதன் விரிவு முண்டகோபநிஷத்தில் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

சிவபத்தி மொழி வேற்றுமையை அறியாது. சிவபத்தி, தென்மொழி வடமொழிப் போராட்டத்தில் சிக்கிக் கவி இன்பத்தையும் பத்தியின் சுகத்தையும் அடியார் கூட்டுறவையும் இழந்துவிடாது.

(தொடரும்…)

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

32 மறுமொழிகள் தலபுராணம் என்னும் கருவூலம் – 1

 1. V Saravanan on July 7, 2010 at 5:35 pm

  முனைவர் அய்யாவிற்கு நன்றிகள் பல .
  தல புராணங்களை பற்றி அனைவரும் அறிந்து கொள்ளுதல் மிக அவசியம்.தமிழ் versus வடமொழி என்ற எண்ணம் இங்கே சுதந்திரத்திற்கு பின் விதைக்கப்பட்டது -நூற்றாண்டுகள் முன் உணர்வு ரீதியாக, கலாச்சார ரீதியாக ஒன்றாகத்தானே இருந்தோம். இதனை அழகாக எடுத்து காட்டியமைக்கு மிக்க நன்றி. தொடரின் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
  சரவணன்

 2. raja on July 8, 2010 at 1:48 am

  Good post.

  [Appart from the topic]
  Dear editor and readers,
  Please Look into this
  http://saintthomasfables.wordpress.com/2010/07/07/magazines/

 3. சோமசுந்தரம் on July 8, 2010 at 3:02 pm

  //சிவபத்தி மொழி வேற்றுமையை அறியாது. சிவபத்தி, தென்மொழி வடமொழிப் போராட்டத்தில் சிக்கிக் கவி இன்பத்தையும் பத்தியின் சுகத்தையும் அடியார் கூட்டுறவையும் இழந்துவிடாது.//
  நீங்கள் எவ்வாறு கூறினாலும், வட மொழி வேதம் என்ற பெயரில் சைவ திருமுறைகள் பல ஓரம் தள்ளப்பட்டு உள்ளன. இன்றும் சைவ சமய கோவில்களில் செய்யப்படும் வேள்விகளின் அருகில் இருந்து பஞ்சபுராணம் பாட முடியாத நிலை உள்ளது. பல ஓதுவார்கள் (பல மடாதிபதிகள் குறிப்பாக திருவாவடுதுறை, தருமபுரம் சன்னிதானங்கள் கூட) வேள்விச்சாலை அருகில் சென்று திருமுறைகளை ஓத முடியவில்லை. இதை என் அனுபவத்தில் இருந்து சொல்கின்றேன்.

  சைவ ஆகமப்படி பூசை செய்யும் திருகோவில்களில் மலை சாயரட்சை பூசையின் பொது பாடவேண்டிய பஞ்சபுராணம் பாட முடியாத நிலை உள்ளது. பல திருக்கோவில்களில் ஓதுவார் இல்லை.
  இதற்க்கு எல்லாம் யார் காரணம்? நாம் தான் காரணம்.

  வட மொழி வேதம் தான் சிறந்தது அதற்க்கு தான் இறைவன் செவி மடுப்பான், அதற்க்கு மந்திர அலை ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளது கூறியே நாம் நம் திரு முறைகளை மக்களிடம் இருந்து புறம் தள்ளி விட்டோம்.

 4. சோமசுந்தரம் on July 8, 2010 at 3:22 pm

  //16-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தமிழகத்தில் நேர்ந்த அரசு மாற்றங்களின் காரணமாக, தமிழ், அரசின் ஆதரவை இழந்தது. நாயக்க மன்னர்கள் ஆட்சியிலும், தஞ்சை மராட்டியர் ஆட்சியிலும் வைதிக மதம் ஓரளவு தழைத்தது, பழைய திருக்கோயில்கள் புதுக்கோலம் பெற்றன எனினும் தமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் அவர்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை.//
  உண்மையான வரிகள்.

 5. aravindan neelakandan on July 8, 2010 at 8:25 pm

  ஆம் நம் சமய பெரியவர்கள் வடமொழி-தென்மொழி காழ்ப்பற்றவர்கள். இரண்டுமே இறைத்தன்மை கொண்டதென உணர்ந்தவர்கள். காஞ்சி புராண ஆசிரியர் சிவஞான சுவாமிகள் கூறுகிறார்:

  வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்குஇணையாத்
  தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாம் தொழுதேத்தும்
  குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்எனில்
  கடல்வரைப்பி னிதன் பெருமை யாவரே கணித்தறிவார்

  மேற்கத்திய மொழியியலாளர்கள் தவறான இனவாதக் கோட்பாடுகளால் சமஸ்கிருதம் இந்தோ-ஐரோப்பிய குடும்பம் எனவும் தமிழ் திராவிடக் குடும்பம் எனவும் கூறுகின்றனர். ஆனால் இவ்விரு மொழிகளும் ஏறத்தாழ சமகாலத்தில் எழுந்தவை என்பதை சிவ டமருவிலிருந்து அவை எழுந்ததாக சொல்லும் தொன்மம் கூறும். “அதற்குஇணையாத் தொடர்புடைய தென்மொழி” என்கிற சிவஞானசுவாமிகள் சொற்களில் எஸ்டேட்முதலாளியும் மதப்பிரச்சாரகனுமான கால்டுவெல்லின் பசப்பு போலி வரலாற்று இனவாத வார்த்தைகளை போலல்லாமல் உண்மையான வரலாற்று-அறிவியல் தரவுகள் அடங்கியுள்ளன என கருதுகிறேன்.

  முனைவர் முத்துகுமாரசுவாமி அவர்கள் மீண்டும் ஒரு அழகிய சிந்திக்கத் தூண்டும் நாம் வாழும் காலத்துக்கு தேவையான கட்டுரையை தந்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்.

 6. தனபால் on July 8, 2010 at 11:48 pm

  முனைவர் முத்துகுமாரசுவாமி அய்யா அவர்களே,

  சிறந்த கருத்தாளம் மிக்க கட்டுரை.

 7. ந. உமாசங்கர் on July 9, 2010 at 8:35 am

  பெருமதிப்பிற்குரிய முனைவர் ஐயா அவர்களுக்கு
  தமிழும் சமஸ்கிருதமும் ஒரே மொழிக்குடும்பமா ஒன்று மற்றதற்குத் தாயா (அதாவாது மூலமா) என்ற விவாதம் எழுந்த சூழலில் அதனை நல்திசை நோக்கிப் பயணிக்கும் விதமாக இக்கட்டுரை எழுந்துள்ளது. மிக்க நன்றி.

  தங்கள் சுட்டிய தமிழ்ப்பாக்களின் படியும், அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் சுட்டியுள்ள கவியின் படியும், கருத்தின்படியும் நோக்குங்கால் ….

  தமிழ் சமஸ்கிருதம் இரண்டுமே பரமசிவனின் டமருவிலிருந்து பிறந்த காரணத்தால், ……

  ஒன்று மற்றதன் தாய் அல்ல என்பதும்,
  இரண்டும் சமகாலத்தவை என்பதும்,
  இரட்டையாகப் பிறந்த சோதரர்கள் அல்லது சோதரிகள் என்பதும்,
  இரண்டும் தேவ மொழிகளே என்பதும்
  — உறுதியாகின்றன.

  எனவே —–
  சமஸ்கிருதத்தை இந்தோ- ஆரியன் என்றும தமிழை இந்தோ-திராவிடன் என்றும் மேலை நாட்டு மொழியியலாளர் பகுத்தமை தவறு என்றும்,
  எனவே இவை இரண்டையும் சிவமொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் அறிவிக்க நாம் பெருமுயற்சி எடுக்கவேண்டும். இதன் மூலம் பிரித்தாளும் சதி, ஆரிய-திராவிட இனவாதம், (கிறித்துவத்தின் – ஐரோப்பிய இனவாதிகளின்) குட்டையைக் குழப்பி மீன்பிடிக்கும் குள்ளநரித்தனம் முதலியவற்றை முறியடிக்க முடியும்.

  சமஸ்கிருதம், தமிழ் இரண்டும் சிவகுடும்பத்தைச் சேர்ந்தவை என்பதிலாவதும் தமிழ் ஹிந்துக்கள் ஒன்றுபடவேண்டும்.

 8. karan on July 9, 2010 at 2:39 pm

  தலபுராணம்ன்னு படிச்சவுடனே அஜித் கதைய பத்தி சொல்லபோறிங்கன்னு நெனைச்சேன்

 9. C.N.Muthukumaraswamy on July 9, 2010 at 10:43 pm

  /நீங்கள் எவ்வாறு கூறினாலும், வட மொழி வேதம் என்ற பெயரில் சைவ திருமுறைகள் பல ஓரம் தள்ளப்பட்டு உள்ளன. இன்றும் சைவ சமய கோவில்களில் செய்யப்படும் வேள்விகளின் அருகில் இருந்து பஞ்சபுராணம் பாட முடியாத நிலை உள்ளது. பல ஓதுவார்கள் (பல மடாதிபதிகள் குறிப்பாக திருவாவடுதுறை, தருமபுரம் சன்னிதானங்கள் கூட) வேள்விச்சாலை அருகில் சென்று திருமுறைகளை ஓத முடியவில்லை. இதை என் அனுபவத்தில் இருந்து சொல்கின்றேன்./
  திரு சோமசுந்தரம் அவர்களுக்கு, உங்களுடைய ஆதங்கத்தை நன்கு அறிவேன். எனக்குச் சமஸ்கிருதம் தெரியாது. எங்கள் வீட்டில் சமயச்சட்ங்கு, வாழ்வியற் சடங்கு அனைத்தும் திருமுறை ஓதியே செய்து வருகின்றோம். இதில் பார்ப்பன வேதியருக்கு இடமில்லை. திருமுறை ஓதுவது சமுதாயத்தில் அழுத்தமாகப் பரவ வேண்டும். நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள நிலை நடைமுறையில் உள்ளது. நான் நன்கு அறிவேன். இது சமயச் சடங்குகளை தொழிலில் ஒரு சாராருக்கு ஒதுக்கியதன் விளைவு. வடமொழிப் புரோகிதர்களைப் போலவே தமிழ்ப்புரோகிதர்களும் நடந்துகொள்ளுவதை நான் அறிவேன். இது தொழில் முறைப்போட்டி. எனக்குத் திருமுறை ஆசிரியர்கள்,குமரகுருபரர், சிவஞான முனிவர், அருணகிரிநாதர், சந்தமறையும் தமிழும் தேர் தன்னேரில்லாக் குமரகுருதாசர், என்னுடைய தீட்சாகுரு தொண்டைமண்டல ஆதீனம் 229 குருமகாசந்நிதானம், சிவக்கவிமணி அவர்கள் என்னுடைய தந்தையார் முதலிய பெரியோர்கள் காட்டிய வழியையே , தம் நூல்களில் வெளியிட்டுள்ள கருத்துக்களையே என்கட்டுரைகளில் எழுதி வருகின்றேன். திருமுறைகள் இல்லாத இடத்தில் எமக்கு வேலையில்லை. அதுபோன்றே வேதநெறியைப் பழிப்போரிடத்திலும் எமக்கு வேலையில்லை. “வேதியர் தம்மை வெகுளேன், வெகுண்டவர்க்குந் துணையாகேன்” என்ற நம்பியாரூரரின் வாக்கைச் சிவநெறியில் நிற்பவன் எப்படி மறுதலிக்க முடியும்?

 10. T.Mayoorakiri sharma on July 10, 2010 at 10:49 am

  முனைவர் பெருமானின் இலக்கியப் பயிற்சியும் எதனையும் நுணுகி ஆராயும் திறனும் வியக்கவைக்கிறது. அவரின் நுண்மான்நுழைபுலம் மிக்க கருத்துக்கள் மேலும் தமிழ்ஹிந்து வழியே பரவட்டும். தலபுராணங்களில் திருச்செந்தூர்த்தலபுராணத்திற்கும் சிறப்பிடம் உண்டு. பதினேழாம் நூற்றாண்டில் திருச்செந்தூரில் பரிசாரகராக விளங்கிய வென்றிமாலைக் கவிராயர் எழுதிய நூல் இதுவாகும்.

  ஜெயந்திபுரமஹாத்மியம் என்ற சம்ஸ்க்ருதநூலின் மொழிபெயர்ப்பாகவும் இது கருதப்படுகின்றது. திருச்செந்தூர்த்தலபுராணத்தை அரங்கேற்றம் செய்ய கவிராயர் முனைந்த போது “மடப்பள்ளி வேலையாளுக்கு திடீரென வந்த யோகமோ?” என்று பலரும் பரிகசிக்கவே கவிராயர் கடலில் தன் ஏடுகளை வீசிவிட்டாராம். இது இலங்கையில் கரையொதுங்கியதாயும் கூறுகின்றனர்.

  எது எப்படியாகிலும் இலங்கையில் இன்றைக்கும் புராணபடனம் செய்யும் மரபு பிரசித்தம். வடஇலங்கையில் அதிகம் கந்தபுராணமும் கிழக்கிலங்கையில் “திருச்செந்தூர்த்தலபுராணமும்” படனம் செய்யும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது.

  முருகன் தன்னிரு தேவியருடன் எழுந்தருளுவதை பார்க்கும் வைஷ்ணவ அன்பர்களுக்கு தாயார்களுடன் பெருமாள் எழுந்தருளும் காட்சி நினைவிற்கு வருவது இயல்பே. முருகபக்தரான கவிராயர் கூட இத்தன்மையராய் சிந்திக்கிறார். அங்கே பேதங்களற்ற ஹிந்துதர்மத்தை காட்டிக்கொடுக்கிறார்.

  “மாதர்கள் இரண்டு பேரும் வானரசு அளித்த வேற்கைச்
  சோதியும் துலங்கு தோற்றம் சுடர்வயப் பரிதி ஏத்தும்
  சீதரன் திருவும் பூமி தேவியும் செம்பொன் தேரில்
  போதுமாறு ஒப்பதென்றே புகலலாம் புலவர்க்கு அம்மா” என்று பாடுகிறார்.

 11. சோமசுந்தரம் on July 10, 2010 at 10:54 am

  திரு முத்துகுமாரசாமி ஐயா,
  உங்கள் பதில் எனக்கு மனநிறைவை தருகின்றது. நாங்கள் திருமுறைகளை எங்களின் உயிரினும் மேலாக போற்றுகின்றோம். அதற்க்கு களங்கம் வரும்போது என் இடத்தில் இருந்து மறுப்பு மொழி வரும்.

  சோமசுந்தரம்

 12. ந.உமாசங்கர் on July 11, 2010 at 9:48 pm

  பெருமதிப்பிற்குரிய முனைவர் அவர்களுக்கும் திரு சோமசுந்தரம் அவர்களுக்கும்

  நான் ஒருமுறை திருவண்ணாமலை ஆதீனம் அவர்களைச் சந்திக்கும் பேறு பெற்றேன். அவர்கள் இப்போதெல்லாம் ‘குன்றக்குடி ஆதீனம்’ என்றே வழங்கப்படுகிறார்கள். மரபின்படி அவரைப் பணிந்து வணங்கி இது எவ்வாறென வினவினேன். அவர்கள் தமது முன்னோரான ஒரு தலைமுறையில் குன்றக்குடியில் மடம் அமைத்து ஒரு அடியார் கோரியபடிககுத் தங்கிவிட்டதாக கூறினார்கள். மேலும் நான் வினவ, அவர்கள் “அதிகம் விளக்க விரும்பவில்லை, ஆனால் எம் முன்னோர் காலம் தொட்டு திருவண்ணாமலையில் இருந்து சிவத் தொண்டு செய்ய அப் பெரும்கோவிலில் வழிகள் இல்லை என்று மட்டுமே சொல்ல முடியும்” என்றார். தற்போது குன்றக்குடி ஆதீனம் பல விஷயங்களில் எடுத்திருக்கும் நிலைப்பாட்டுக்கு என்ன முதற்காரணம் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. நான் மேலும் கேள்விகள் கேட்டு ஒரு சிவனடியாரைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை. விட்டுவிட்டேன்.

  நான் திருவண்ணாமலைக் கோவிலில் உஷத்கால (அதிகாலை) பூஜைகளையும், இரவு பள்ளியறை பூஜைகளையும் மிகவும் ஏகாந்தமாக அனுபவித்ததுண்டு. அதிலும் குறிப்பாக சிவாச்சாரியார் அபிஷேகம் செய்வதும் அதே காலத்தில் ஓதுவார் மூர்த்திகள் கணீரென்ற குரலில், சீரிய பண்ணுடன் திருமுறை ஓதுவதும் மிகச் சிறப்பாக அமையும். சிவாச்சாரியார் தம் கிரமப்படிக்கு ஒவ்வொரு அபிஷேகமாகச் செய்ய, ஓதுவார் மூர்த்திகள் தம் கிரமப்படிக்கு ஒவ்வொரு பதிகமாகப் பாடிவருவார். அவர்களுக்குள் இருக்கும் இலயம் (synchronisation) எப்படி என்றால், சிவாச்சாரியார் மூலவர் சிரத்தில் ஸ்வர்ணம் வைக்கும்போது ஓதுவார் மூர்த்திகள் “பொன்னார் வேதியனே” எனத்துவங்கும் பதிகத்தை ஆரம்பிப்பார்; சிரத்தில் பாலை வைக்கும்போது, “பால் நினைந்து ஊட்டும்” எனத் துவங்கும் பதிகத்தை ஆரம்பிப்பார்; சிரத்தில் திருநீற்றை அபிஷேகிக்கும்போது “மந்திரமாவது நீறு” எனத்துவங்கும் பதிகத்தை ஆரம்பிப்பார். மறைவேதியரும், திருமுறை ஒதுவாருமாக சிவனடியார்களை சிவப் பரம்பொருளில் மெய்மறந்து லயிக்க வைத்துவிடுவார்கள். இத்தனைச் சிறப்புடன் தமிழ், ஈசன் சந்நிதியில் தன்னை அவரது பாதாதி கேசமாக அர்ப்பணிக்கும் பாங்கில் அதன் அமுதத்தைப் புரிந்து பருகுபவர்களின் ஆனந்தம் சொல்லர்க்கரியது. ஆனால் இன்றோ அத்தகு சிறப்புடைய ஓதுவார்களது சந்ததி அந்த மரபில் சிவப்பணி செய்வதில்லை.

  இதுபோல மேலும் நிகழ்வுகள் வரக் கூடாதே என்ற ஆதங்கத்தில்தான் எனது பல மறுமொழிகள் அமைந்துள்ளன.

 13. ஜடாயு on July 12, 2010 at 2:34 pm

  அரிய சமய விளக்கங்கள் மற்றும் தகவல்களுடன் அருமையான ஒரு தொடரை ஆரம்பித்திருக்கிறீர்கள் முனைவர் ஐயா.

  தலபுராணம் எழுதும் மரபு தமிழில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காலகட்டத்தில் பிரபலமாக இருந்தது உண்மைதான்.. ஆனால், இந்த மரபு பாரதநாடு முழுமையும் இருந்துவருகிறது. சோமநாதபுரம், உஜ்ஜயினி, பூரி, ஸ்ரீசைலம், திருப்பதி, பத்ரிநாத், காசி முதலான தலங்கள் ஒவ்வொன்றிற்கும் பற்பல ஸ்தல புராணங்கள், ஸ்தல மாகாத்மியங்கள் உள்ளன. சம்ஸ்கிருதம், பிரதேச மொழிகள் இரண்டிலுமே இவை எழுதப் பட்டுள்ளன.

  சமய ரீதியாக மட்டுமன்றி, கலாசார, வரலாற்று ரீதியாகவும் இவை முக்கியத்துவம் வாய்ந்தவை. local history (பிரதேச வரலாறு), local hagiography (அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்த பக்தர்கள், சமயாசாரியார்கள் வரலாறு) ஆகியவற்றுக்கான ஆவணங்கள் இவை. மையப் படுத்தப் படாத (decentralized) வரலாற்றுப் பதிவுகள் என்பதால், ஒரு மைய அரசியல்/மத அதிகார அமைப்பு மூலம் எழுதப் படாத பல்வேறு வழக்குகளும், சம்பிரதாயங்களும், சடங்குகளும் கூட ஸ்தல புராணங்களில் பதிவு பெறுகின்றன என்பது சிறப்பம்சம். உதாரணமாக, பூரி ஜகன்னாதர் கோயில் ஸ்தல புராணம் எப்படி ஒரிஸ்ஸாவின் பல்வேறு பழங்குடி இனங்கள் எப்படி அரசியல், சமூக நீரோட்டத்தில் கலந்தன என்பதனை ஆய்வு செய்ய சிறந்த ஆவணமாக விளங்குகிறது.

 14. ஜடாயு on July 12, 2010 at 2:36 pm

  // சமஸ்கிருதம், தமிழ் இரண்டும் சிவகுடும்பத்தைச் சேர்ந்தவை என்பதிலாவதும் தமிழ் ஹிந்துக்கள் ஒன்றுபடவேண்டும். //

  ஆதிசிவன் பெற்று விட்டான் – என்னை
  ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
  வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
  மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்

  – பாரதியார் (’தமிழ்த் தாய் தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண்டுதல்’ என்ற பாடல்)

 15. ஜடாயு on July 12, 2010 at 2:54 pm

  // வட மொழி வேதம் தான் சிறந்தது அதற்க்கு தான் இறைவன் செவி மடுப்பான், அதற்க்கு மந்திர அலை ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளது கூறியே நாம் நம் திரு முறைகளை மக்களிடம் இருந்து புறம் தள்ளி விட்டோம். //

  தவறு. கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் சம்ஸ்கிருதத்திற்கு எதிரான பிரசாரம் தான் நாத்திகப் பிரசாரம், தனித்தமிழ்ப் பிரசாரம், அந்தண வெறுப்பு இவற்றுடன் இணைந்து ஓங்கி ஒலித்துள்ளது.

  திருமுறைகளைப் பொறுத்தவரையில், ஞானியார் சுவாமிகள் தொடங்கி கிருபானந்தவாரியார் சுவாமிகள் ஊடாகத் தொடர்ந்து வெகுஜனப் பரவல் தான் ஏற்பட்டு வருகிறது. திருமுறை பாராயண சபைகள் ஒவ்வோர் ஊரிலும் அதிகரித்து தான் வருகின்றன.

  கோயில்களைப் பொறுத்தவ்ரையில், ஓதுவார்களை நியமனம் செய்து பேணிப் பாதுகாக்க வேண்டிய அறநிலையத் துறையினர் மற்றும் கோயில் கமிட்டிகள், புரவலர்கள் அதைச் செய்யவில்லை.. அதனால் பல இடங்களீல் அவர்களது பரம்பரைகளே திருமுறை ஓதல் விடுத்து வேறு பணிகளுக்கு சென்று விட்டார்கள்.. இதற்கு அனாவசியமாக வடமொழியையும், வேதங்களையும் குற்றம் சொல்ல வேண்டாம்.

 16. ஜடாயு on July 12, 2010 at 3:02 pm

  // வேள்விச்சாலை அருகில் சென்று திருமுறைகளை ஓத முடியவில்லை. இதை என் அனுபவத்தில் இருந்து சொல்கின்றேன். //

  ஐயா, இது வேண்டாத விவகாரம்.. மிகப் பழங்காலத்திலிருந்து வேள்விகளில் வேதமந்திரங்கள் மட்டுமே ஓதப் பட்டன. அதுதான் மரபு, சம்பிரதாயம். சேக்கிழாரின் பெரியபுராணத்தில் ஒவ்வொரு நக்ரையும், ஊரையும் வர்ணிக்கும்போதும் வேத ஒலியும், வேள்விப் புகையும் நிறைந்ததாகத் தான் குறிப்பிடுகிறார். சம்பந்தர், சுந்தரர் காலத்திலும் அப்படித் தான். தங்கள் பாடல்களை ஓதி வேள்வி செய்ய வேண்டும் என்று அவர்கள் சொல்லவுமில்லை., விரும்பவுமில்லை.

  வேத வேள்விகள் காமிய கர்மங்கள். மந்திர தந்திர ஆகம சாஸ்திரங்களே அவற்றின் அடிப்படை. மாறாக, திருமுறைகள் பக்தி, வழிபாட்டுப் பனுவல்கள் – இந்த வேற்றுமையை உணரவேண்டும். வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை என்ற நிலைப்பாடு கூடாது.

  மரபை உண்மையில் மதிப்பவர்கள் இத்தகைய பிரசினைகளை உருவாக்குவதில்லை. அரைகுறையான புரிதல்களுடன் இதை அரசியலாக்கத் துடிப்பவர்களே அவ்வாறு செய்கின்றனர். வேள்விச் சாலையிலும் வேத மந்திரம் கிடையாது, திருமுறை தான் ஓதுவோம் என்றால், வேத மந்திரத்தை பின்பு எங்கு தான் ஓதுவது? கோயிலில் வேதகோஷமே இல்லாமல் போய்விடாதா? யோசியுங்கள். அந்த மகோன்னத மரபை ஏன் வலிந்து அழிக்க/ஒதுக்க முற்பட வேண்டும்?

  இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
  இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
  துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
  தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்

  என்பது திருவாசம். வேத கோஷம், சம்ஸ்கிருத மந்திரங்கள், தெய்வத் தமிழ், வாத்திய இசை, இது எதுவும் இல்லாம் வெறுமனே அழுது அரற்றும் பித்து இவை *எல்லாம்* சேர்ந்தது தான் சிவாலயம். அருளாளர்களே அதனை அப்படித் தான் கண்டிருக்கிறார்கள், விழைந்திருக்கிறார்கள்.

  தமிழ்ப் பேராசிரியர் (ஓய்வு) டாக்டர் சாமி.தியாகராசன் அவர்கள் இந்த விஷயங்களை விளக்கி “சொன்னால் விரோதம், ஆயினும் சொல்லுகிறேன்” என்று ஒரு அருமையான புத்தகம் எழுதியுள்ளார். தருமபுரம் குருமகாசன்னிதானம் அவர்கள் அதற்கு ஆசியுரையும் வழங்கியுள்ளார்கள். தாங்கள் அந்தப் புத்தகத்தைப் படித்துத் தெளிவு பெறுங்கள்.

 17. சோமசுந்தரம் on July 12, 2010 at 4:39 pm

  திரு ஜடாயு அவர்களுக்கு,

  //மிகப் பழங்காலத்திலிருந்து வேள்விகளில் வேதமந்திரங்கள் மட்டுமே ஓதப் பட்டன. அதுதான் மரபு, சம்பிரதாயம்.//

  நான் வேதங்களை ஓதவேண்டம் என கூறவில்லை. அதோடு சேர்ந்து திருமுறைகளை ஓத வேண்டும் என்பதுதான் என் கருத்து.
  நான் கண்ட பல வேள்விகளில் எனக்கு ஏற்ப்பட மன வருத்தத்தை எழுதி உள்ளேன். உங்களில் அனுபவம் வேறாக இருக்கலாம்.

  மிகப் பழங்காலத்திலிருந்து வேள்விகளில் வேதமந்திரங்கள் மட்டுமே ஓதப் பட்டன என்றல் அவை எந்த வேதத்தை குறிக்கின்றது?
  நீங்கள் கூறுவதை பார்த்தல் மிக பழங்காலத்தில் ( ஏழாம் நூற்றண்டுக்கு முன்) தமிழ் மந்திர / பக்தி பாடல்கள் திருக்கோவில்களில் படவில்லை என்பது போல் உள்ளது.
  குறிப்பாக காரைக்கால் அம்மையாரின் பதிகங்கள் (மூன்றாம் நூற்றண்டுக்கு முன் ) முன் தமிழ் மந்திர / பக்தி பாடல்கள் இருந்து இருக்க வேண்டும். அவைகள் காலத்தால் மறைந்து இருக்கலாம்.

  இது பற்றி எல்லாம் விரிவாக விளக்க எனக்கு அதில் அழ்ந்த புலமை இல்லை.

 18. சோமசுந்தரம் on July 12, 2010 at 5:01 pm

  //மரபை உண்மையில் மதிப்பவர்கள் இத்தகைய பிரசினைகளை உருவாக்குவதில்லை. அரைகுறையான புரிதல்களுடன் இதை அரசியலாக்கத் துடிப்பவர்களே அவ்வாறு செய்கின்றனர். வேள்விச் சாலையிலும் வேத மந்திரம் கிடையாது, திருமுறை தான் ஓதுவோம் என்றால், வேத மந்திரத்தை பின்பு எங்கு தான் ஓதுவது?//

  மன்னிக்க வேண்டும். இதில் அரசியல், ஆரிய திராவிட இன வேறுபாடு என்பது இல்லை. திருமுறைகளை சைவ கோவில்கள் தோறும் பாடவேண்டும் என்பதுதான். இது திருமுறைகளின் மீதான பக்தி. இதில் அரசியல் இல்லை.
  கடந்த மாதம் ஈரோடு மாவட்டம் பவானியில் 63 நாயன்மார்களின் வெண்கல சிலைகள் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்டன. அங்கு அப்போது மூன்று நாட்கள் தமிழ் திருமுறைகள் ஓதியே வேள்விகள் செய்தனர். அதை நீங்கள் ஒருமுறை கண்டு இருந்தால் என்னுடைய இந்த வரிகளுக்கு உங்களுக்கு புரியும். அதில் நான் முழு பக்தியை தான் கண்டேன், அரசியலுக்கு அங்கு இடம் இல்லை.

 19. கந்தர்வன் on July 12, 2010 at 5:52 pm

  திரு சோமசுந்தரம் ஐயா,

  ஜடாயு அவர்கள் வேள்வி மந்திரங்களைப் பற்றித் தானே சொல்கிறார்? வேள்விச் சடங்கு (யாக-யக்ஞம்) வேறு, பக்தி வேறு என்று அவர் குறிப்பிட்டுள்ளதைப் படியுங்கள். இரண்டையும் குழப்ப வேண்டாம்.

  வேள்விக்குத் தான் (சமஸ்கிருத) மந்திரங்களை (மட்டும்) ஓதுகின்றனர். அது ஒரு சடங்கு — அதாவது “இதை இப்படித் தான் செய்ய வேண்டும்” என்று காலங்காலமாக விதிகள் பலவற்றைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். அது போக, பக்தி என்பது அனைவர்க்கும் உரியது, அது எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது சைவ-வைணவ பிரிவு வித்தியாசம் இன்றி அனைவரும் ஒத்துக் கொள்ளும் ஒன்றே. சங்க காலம் தொடங்கியே பல பக்திப் பாடல்கள் தமிழிலும் உண்டு. அதை ஜடாயு அவர்கள் நிராகரிக்கவில்லை.

  சடங்குகளைத் தமிழ் மந்திரங்கள் கொண்டு ஓதி வந்தனர் என்பதற்கு தக்க ஆதாரம் இருந்தால் அதைக் கொண்டு வந்து, அம்முரையைப் புனருத்தாரணம் பண்ணலாமே? அதை முதலில் செய்யாமல், காலம்-காலமாக நடத்தப்படும் முறை ஒன்றை மாற்றி, ஏட்டிக்குப் போட்டியாக “தமிழிலும் செய்ய வேண்டும்” என்று கூறுவதற்கு அர்த்தமே இல்லை.

  வேள்விச் சாலையைத் தவிர்த்து, கோயில் சந்நிதியில் வேத மந்திரங்கள் ஒதுவதோடு, தமிழ்ப் பாடல்களையும், துதிகளையும் அனைவரும் பாடிக் கொண்டுத் தான் வருகின்றனரே — இதுவும் சிவாலயங்கலானாலும் சரி, பெருமாள் கோயிலாக இருந்தாலும் சரி.

  இறுதியாக ஒன்று — சடங்கு செய்பவர்கள் சமஸ்கிருத மந்திரங்களைக்/மந்திரங்களை ஓதும் அந்தணர்களைக் கொண்டு செய்தாலும், அதற்கு அவரவர் தாய்மொழியில் முதலில் அர்த்தத்தைத் தெளிவாகத் தெரிந்துக் கொண்டு செய்வது அவசியம். இன்று இதைப் பல புரோஹிதர்கள் நடத்தி வருகின்றனர்.

 20. கந்தர்வன் on July 12, 2010 at 5:57 pm

  // கடந்த மாதம் ஈரோடு மாவட்டம் பவானியில் 63 நாயன்மார்களின் வெண்கல சிலைகள் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்டன. அங்கு அப்போது மூன்று நாட்கள் தமிழ் திருமுறைகள் ஓதியே வேள்விகள் செய்தனர். //

  நன்று. அவரவர் விருப்பப்படி செய்வது மத சுதந்திரமாகும். இதற்கு என்றுமே இந்தியாவில் இடமுண்டு. ஆனால் இதைக் காரணம் காட்டி வேறு இடங்களில் காலங்காலமாக நடந்து வரும் பழக்கங்களை மொழி காரணத்திற்காக மாற்ற முயல்வது தான் தவறு.

 21. ஜடாயு on July 12, 2010 at 6:22 pm

  // அங்கு அப்போது மூன்று நாட்கள் தமிழ் திருமுறைகள் ஓதியே வேள்விகள் செய்தனர். அதை நீங்கள் ஒருமுறை கண்டு இருந்தால் என்னுடைய இந்த வரிகளுக்கு உங்களுக்கு புரியும். அதில் நான் முழு பக்தியை தான் கண்டேன், அரசியலுக்கு அங்கு இடம் இல்லை. //

  பக்தியே மையமானது என்றால் திருமுறை *முற்றோதல்* நடத்தியிருக்கலாமே? ஓதுவோரும் கேட்போரும் மெய்மறந்து இறையருளில் திளைத்திருப்பார்களே..

  ஏன் *வேள்வி* நடத்த வேண்டும்? அது முழுக்க முழுக்க அரசியல் தான். வேள்வி என்ற புனித சடங்கையும், திருமுறைகளாகிய புனித நூல்களையும் ஒரே நேரத்தில் கொச்சைப் படுத்தும் செயல் அது.

  திருமுறைகளைப் பாடி வேள்வி நடத்துவது, மற்ற வைதீக/ஆகம/தந்திர சடங்குகளை நடத்துவது சாஸ்திர விரோதம், சைவாகம விரோதம், அது அருளாளர்களின் திருவுளத்திற்கும் விரோதமானது என்று தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானம் அவர்கள் மிகத் தெளிவாக, உறுதியாக கூறியிருக்கிறார்கள். இன்றைக்கு வாழும் சைவ குருமார்களில் வயதிலும், சைவ சித்தாந்த புலமையிலும் மூத்த சிவஞான குருபரர் அவர்கள் தான்.

  தயவுசெய்து நான் மேற்குறிப்பிட்ட புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்.

 22. sarang on July 12, 2010 at 6:41 pm

  //அங்கு அப்போது மூன்று நாட்கள் தமிழ் திருமுறைகள் ஓதியே வேள்விகள் செய்தனர். அதை நீங்கள் ஒருமுறை கண்டு இருந்தால் என்னுடைய இந்த வரிகளுக்கு உங்களுக்கு புரியும். அதில் நான் முழு பக்தியை தான் கண்டேன், அரசியலுக்கு அங்கு இடம் இல்லை. //

  கொஞ்ச ஜாக்ரதையா இருக்கணும் – வேள்வி மேட்டர் எல்லாம் கொஞ்சம் கஷ்டம்னு நெனஞ்சு தான் சாத்தான் காரன் உட்டு வெச்சிருக்கான் – இப்படி flexible அப்படின்னு தெரிஞ்சா நாளைக்கே ஏஜி சபைல இத கேக்கலாம்

  பரிசுத்த ஆவியே நமஹா பரிசுத்த ஆவியே இதன்நமமா (போடுவது நெய் இல்ல புனித அப்பம்)
  ஏசுவே நமஹா ஏசுவே இதன்நமமா

  நான் இருக்கும் ஏரியா ல ஒரே ஏக்க சக்க புனித சபைங்க இருக்கு எனக்கு ஒரே பொகையா தெரியுது

 23. ந.உமாசங்கர் on July 12, 2010 at 9:31 pm

  திரு சாரங் அவர்களே

  கிட்டே வந்துட்டாங்க.

  சைதாப்பேட்டை சின்னமலை AG சபையில் நேற்று அமாவாசை இரவு (நள்ளிரவு) ஜபக் கூட்டம் நடந்தது !!!!

  ஏற்கனவே பௌர்ணமி இரவு அச்சிறுப்பாக்கம் (இன்னும் ஒரு இடம் தென் மாவட்டத்தில்) கிரிவலம் செய்கிறார்கள் !!! வேளாங்கண்ணி (சென்னையிலும் வேளாங்கண்ணியிலும்) ஆரோக்கியமாதா தேர் பவனி நடக்கிறது !!!

  மெல்ல மெல்ல தீமிதி, வேள்வி எல்லாம் உண்டு.

 24. ஜடாயு on July 13, 2010 at 7:16 am

  // நீங்கள் கூறுவதை பார்த்தல் மிக பழங்காலத்தில் ( ஏழாம் நூற்றண்டுக்கு முன்) தமிழ் மந்திர / பக்தி பாடல்கள் திருக்கோவில்களில் படவில்லை என்பது போல் உள்ளது.குறிப்பாக காரைக்கால் அம்மையாரின் பதிகங்கள் (மூன்றாம் நூற்றண்டுக்கு முன் ) முன் தமிழ் மந்திர / பக்தி பாடல்கள் இருந்து இருக்க வேண்டும். அவைகள் காலத்தால் மறைந்து இருக்கலாம். //

  காரைக்கால் அம்மையாரின் காலம் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதி (மூன்றாம் நூற்றாண்டு அல்ல). சம்பந்தருக்கு 100 ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவர் அவர். வேதநெறி, சைவ சமயம் இசை, தமிழ் எல்லாமே சமண ஆதிக்கத்தால் இருண்டு கிடந்த காலகட்டம் அது. ”சம்பந்தரின் சமூக மீட்சியும் கழுவேற்ற கற்பிதங்களும்” என்ற எனது பழைய கட்டுரை ஒன்றில் இதுபற்றி விரிவாக எழுதியுள்ளேன் – http://jataayu.blogspot.com/2009/04/2.html

  சமண ஆதிக்க காலத்திற்கு முன்பிருந்தது பாணர்களின் பண்ணிசை. ஆனால் அது பெரும்பாலும் மன்னர்களை, புரவலர்களைப் புகழ்ந்து பாடுதல், களியாட்டங்கள் ஆகியவற்றோடு தொடர்புடைய இசை. தெய்வீகத் தமிழிசை அல்ல.

  சம்பந்தர் தான் தெய்வத் தமிழிசைக்கு உயிர்கொடுத்தவர்.

 25. சோமசுந்தரம் on July 13, 2010 at 2:33 pm

  திரு ஜடாயு அவர்களுக்கு,
  //சமண ஆதிக்க காலத்திற்கு முன்பிருந்தது பாணர்களின் பண்ணிசை. ஆனால் அது பெரும்பாலும் மன்னர்களை, புரவலர்களைப் புகழ்ந்து பாடுதல், களியாட்டங்கள் ஆகியவற்றோடு தொடர்புடைய இசை. தெய்வீகத் தமிழிசை அல்ல.
  சம்பந்தர் தான் தெய்வத் தமிழிசைக்கு உயிர்கொடுத்தவர். //
  இதை பற்றி மறுப்பு எழுத சிறந்த ஆதாரங்கள் தேவை.

  //காரைக்கால் அம்மையாரின் காலம் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதி (மூன்றாம் நூற்றாண்டு அல்ல)//
  இது பற்றி பலரும் பலவிதமாக கூறிவருகின்றனர்.

  மேலும் விவாதிக்க எனக்கு ஆர்வம் இல்லை. பக்தி நெறிக்கு தமிழ் திருமுறைகள் தான் சிறந்தது என கூறி விடை பெறுகின்றேன்.
  இறைவனின் திருவருள் கிடைத்தால் இந்த கருத்துக்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதமுயல்வேன்.

 26. C.N.Muthukumaraswamy on July 13, 2010 at 4:39 pm

  பக்திநெறிக்குத் திருமுறைகள்தாம் சிறந்தன் என்பதற்கு ஐயமே இல்லை. பண்ணிசை சங்கப்பாணர்களால் பாடப்பட்டன. அவற்றின் இசை உருக்கள் எவை? அந்த இசை எப்படி இருந்திருக்கும்? போதுமான சான்றுகள் நமக்குக் கிடைக்கவில்லை. இசையைப் பாணர்கள் விறலியர் கையாண்டதாகக் காணுகின்றோமேயொழிய இசை பொதுமக்கள் கடவுளைப் பரவதற்குப் பயன்படுத்திய செய்தி நானறிந்தவரைக்கும் சங்க இலக்கியங்களில் இல்லை.சேக்கிழார் பெருமானும் திருஞானசம்பந்த மூர்த்திகளின் திருவவதாரத்தின் பயன்களைக் கூறும்போது, “இசைமுழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நிலைபெருக்” என்று கூறியுள்ளார். இசை தெய்விகநலம் பெறுவதற்கு முதன் முதல் பயன்படுத்தியது திருஞானசம்பந்தரே. திருஞானசம்பந்தருக்குப் பின்னரே இசை பொதுமக்களால், பாடப்பட்டது, கோயிலில் இறைவனுக்கு முன் நின்று இசைப்பது வளர்ந்தது. ஒன்று அறிய வேண்டும். திருக்கோவில்களில் தமிழர்களின் தமிழ்ப் பாட்டுமட்டுமன்றி வேற்று மொழிப்பாடல்களும் ஒலித்தன. திருஞானசம்பந்தர், திருப்புகலூர் வர்த்தமானீச்சரத்தில், “தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி யெழில்நரம் பெடுத்துந், துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புகலூரில்” என்றும் ‘சாமவேதமோர் கீதம் ஓதி — அடிகள் என்றேத்தும் புகலூர்” என்றும் பாடினார். நாம் திருக்கோவில்களுக்குச் சென்று திருமுறைகள் ஓதுவோம். ஓதுவாருக்குத் துணை நிற்போம். உடன்பாட்டு நெறியில் திருமுறைகளை வளர்ப்போம். திருமுறைக் கழகங்கள் வைத்துத் திருமுறைகளைப் பரப்புவோம். திருமுறை ஓதுதலைத்தொழில் முறையாக்கி ஓதுவார்களுக்கே அதனை உரிமையாக்கிவிடாமல் குடும்பப் பழக்கமாக்கிக் கொள்வோம். திருமுறைகள் நீடு நிற்கும்.

 27. sarang on July 13, 2010 at 7:13 pm

  //
  பக்தி நெறிக்கு தமிழ் திருமுறைகள் தான் சிறந்தது என கூறி விடை பெறுகின்றேன்.
  //

  இது வித்யாசமான எண்ணமாக உள்ளது
  – திருமறைக்கு/பிரபந்தத்திற்கு முன் பக்தி இந்தியாவில் இருந்ததே இல்லையா
  – பகவத் கீதையை கூட பக்தியுடன் தான் பாடி வந்தனர்
  – வேதம் ஓதுவதால் பக்தி வராது என்று எண்ணுவது நிச்சயமாக தவாறன ஒரு விஷயம்
  – காஷ்மீரிலோ, ஒரிசாவிலோ இருக்கும் ஒரு ஹிந்துவுக்கு திருமறையின் மூலம் எவ்வாறு பக்தி கிடைக்கும்
  – அவனுக்கு அது கிடக்க வில்லை என்பதால் அவன் பக்தியில் குறைந்தவனோ? அவன் வேதத்தை ஓதுகிறான் ஹாவு ஹாவு என பாடுகிறான் – இது பக்தி இல்லையோ?

  இது வேதத்தில் தானே உள்ளது

  //
  ஓம் யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
  யோ வை வேதான்ஷ்ச்ச ப்ரஹினோதி தஸ்மை
  தம் ஹ தேவ்மாத்மா புத்தி பிரகாஷம்
  முமுக்ஷுர்வை ஷரனமஹம் ப்ரபத்யே
  //

  சுருக்கமான அர்த்தம் – நான் ஆழமான நம்பிக்கை வைத்து சரண் புகுகிறேன் – இதெல்லாம் பக்தியின் வெளிப்பாடே

  என்னை பொறுத்தவரை பிரபந்தங்கள் என்பவை பக்தியின் வெளிப்பாடு – பிரபந்தங்களை சொன்னால் பக்தி வராது – பக்தி வந்தால் பிரபந்தங்கள் வரும் அல்லது சொல்லலாம் – நீங்கள் effect ஐ வைத்துக்கொண்டு அது தான் cause என்கிறீர்கள்

  – நான் நினைப்பதெல்லாம் இந்த பிரபந்தத்தை பாடிய ஆழ்வார் என்ன மன நிலையில் இருந்து அதை பாடி இருப்பார் – எனக்கு அந்த மன நிலை கிட்டுமா என்பது தான்? – பக்திக்கு திருமறை சிறந்ததா வேதம் சிறந்ததா என்ற அராய்ச்சி எல்லாம் வீணாக தான் முடியும் (யாரவது ஒரு சார்புள்ளவரை குறை கூற வேண்டி வரும்) – அதற்க்கு பதிலாக இப்படி யோசியுங்கள்

  “உண்டோ பக்தி செய்ய திருமறைக்கு ஒப்பான ஒரு நூல்?”

  அப்புறம் இதயும் சொல்லுங்கள்

  “உண்டோ பக்தி செய்ய வேதத்திற்கு ஒப்பான ஒரு நூல்?”

  இப்போது இரண்டுமே ஒப்பிலாத ஒன்றாகி விட்டன – is it not worthless to see which one of the two infinities is bigger

  நடைமுறைக்கு வேண்டுமானால் இப்படி வைத்துக் கொள்ளலாம் – திருமறை
  தமிழில் இருப்பதால் தமிழ் தெரிந்தவருக்கு அதை புரிந்து கொள்ள எளிதாக இருக்கும், அதனால் அது சிறந்தது என்று

 28. C.N.Muthukumaraswamy on July 14, 2010 at 9:08 pm

  தமிழ் அறிந்த தமிழ் சிவனடியவருக்குத் தமிழ்த் திருமுறைகளில்தான் பத்திவரும். வேதம் ஓதி பத்திவளர்ப்பவர்கள் வளர்க்கட்டும். தமிழகத் திருக்கோவில்கள் திருமுறையாசிரியர்கள் படியதாலும் ஆழ்வாராதிகளால் மங்களாசாசனம் செய்யப் பெற்றமையாலும் தனிச்சிறப்புக்குரியனவாகின்றன. திருமுறைகள் திருக்கோவில்களில் தக்க இடம் பெறவேண்டும் எனச் சைவர்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை. அந்த இடம் எது என்பதில்தான் கருத்து வேறுபாடு. வேதம் பாடியவரின் மனநிலையை அறிந்து கொள்வதைவிடத் திருமுறை பாடியோரின் மனநிலையை ஓரளவு என்போன்றோரால் அடையக் கூட முடியும். ஆந்திராவில் உள்ள திருக்கோவில்களிலோ அல்லது கேரளாவில் உள்ள கோவில்களிலோ திருமுறைகள் ஓத வேண்டும் என யாரும் கேட்பதில்லை. உரிய இடத்துக்கே இந்த குரல் எழுப்பப்ப்டுகின்றது. வேதமும் வேண்டும். அதைக் காட்டிலும் திருமுறைகள் வேண்டும். திருமுறைகளே தமிழகத்தில் வேதத்தைக் காப்பாற்ரின என்பது தென்னக சமய வரலாற்றைக் காழ்ப்புணர்ச்சியின்றி அறிந்தவர் அறிவர். “சொற்கோவும் தோணிபுரத் தோன்றலும் எம்சுந்தரரும், சிற்கோல வாதவூர்த் தேசிகரும், முற்கோலி வந்திலரேல், நீறெங்கே நான்மறைநூல் தானெங்கே எந்தைபிரான் ஐந்தெழுத் தெங்கே” தமிழனுக்குத் தமிழில்தான் பத்தி வரும். அதில் ஐயமே இல்லை..

 29. ந.உமாசங்கர் on July 14, 2010 at 9:54 pm

  முனைவர் ஐயா அவர்களுக்கு

  சரியாகச் சொன்னீர்கள். “தமிழனுக்குத் தமிழில்தான் பத்தி வரும். அதில் ஐயமே இல்லை.” தமிழனுக்கு மட்டுமல்ல. எவருக்குமே தத்தம் தாய் மொழியில்தான் உள்ளார்ந்த பொருளை உணர்ந்து முற்றாக ஒன்றி இறைவனை அனுபவிக்கமுடியும். மிக்கப் படித்தவர்கள், அறிஞர்கள், ஞானியர் இதற்கு விதிவிலக்காக ஆக முடியும். இவ்வகையோர் மக்கள்தொகையில் சிறு சதவிகிதமே. சிறு சதவிகிதத்தோரை மாத்திரமே கணக்கில் கொண்டு நமது மத வழிபாட்டை அமைத்துக் கொள்ளுதல் அத்தனை புத்திசாலித்தனம் அல்ல என்பதே எனது தாழ்மையான கருத்து. கால வெள்ளம் செல்லும் திசையில் அனைத்துத் தரப்பினரையும் அனுசரித்துச் செல்வது என்பது என்றும் ஞானியர்/அறிஞர் ஏற்கக் கூடியதே.

  இன்று ஜனநாயகம் (democracy) என்ற மக்களாட்சித் தத்துவம் நிலை பெற்றிருக்கிறது. இதில் எப்படி மக்களுக்காக, மக்களால் மக்களுடைய ஆட்சி என்ற முறை பரிணமித்திருக்கிறதோ அதைப்போலவே பக்தனால், பக்தனுக்காக, பக்தனுடைய வழிபாட்டை இறைவன் ஏற்பார் என்பதைப் பன்னேடுங்காலமாகத் தனது திருவிளையாடல்கள் மூலம் ஈசன் நிருபித்திருக்கிறார். கண்ணப்ப நாயானார் வரலாறு இதற்கு ஒரு உதாரணம். சர்வ வியாபியான இறைவன் தொண்டர் உள்ளத்து ஒடுக்கம் அல்லவா?
  பக்தன் மொழிதான் ஈசனுக்குப் பிடித்தது. ஈசன் என்றும் தனக்கென்று எந்த மொழியையும் வைத்துக்கொள்ளவில்லை. அதைத்தான் தனது பக்தன் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கவும் இல்லை. எதிர்பார்க்கவும் மாட்டார்.

  இந்நிலைப்பாட்டை நமது மதமும் ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே எனது அனுமானம்.

 30. சோமசுந்தரம் on July 15, 2010 at 10:09 am

  //தமிழ் அறிந்த தமிழ் சிவனடியவருக்குத் தமிழ்த் திருமுறைகளில்தான் பத்திவரும். வேதம் ஓதி பத்திவளர்ப்பவர்கள் வளர்க்கட்டும். //
  //தமிழகத் திருக்கோவில்கள் திருமுறையாசிரியர்கள் படியதாலும் ஆழ்வாராதிகளால் மங்களாசாசனம் செய்யப் பெற்றமையாலும் தனிச்சிறப்புக்குரியனவாகின்றன. //
  //திருமுறைகள் திருக்கோவில்களில் தக்க இடம் பெறவேண்டும் எனச் சைவர்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை. //
  அந்த இடம் எது என்பதில்தான் கருத்து வேறுபாடு.
  //ஆந்திராவில் உள்ள திருக்கோவில்களிலோ அல்லது கேரளாவில் உள்ள கோவில்களிலோ திருமுறைகள் ஓத வேண்டும் என யாரும் கேட்பதில்லை. உரிய இடத்துக்கே இந்த குரல் எழுப்பப்ப்டுகின்றது. வேதமும் வேண்டும். //
  முனைவர் ஐயா அவர்களின் மறுமொழி வரிகள் மிக சிறந்த வரிகள்.
  திருமுறைகளை ஓதி வேள்விகள் செய்யவேண்டாம் ஆனால் திருமுறைகளை ஓதி இறைவர்க்கு அருச்சனை செய்யலாமே!
  திருக்கோவில்களில் திருமுறைகளை ஓதி மக்களிடம் பக்தி நெறியை வளர்க்கலாமே!
  அபிசேகம் மற்றும் தீபாரதனைகளின் பொது திருமுறைகளை பாடலாமே!
  தமிழ் மக்களிடம் பக்தியை வளர்க்க திருமுறைகளையும் ஆழ்வார்களின் திருபதிகங்களையும் கோவில்கள் தோறும் பாடவேண்டும்.

 31. sankaranarayanan on July 15, 2010 at 9:49 pm

  ஐயா, ஒரு சமயத்தில் சடங்கு, வழிபாடு என்று இரண்டு உண்டு. சடங்கு அந்த மதம் முழுமைக்கும் பொதுவான மொழியிலும், வழிபாடு அவரவர் மொழியுளும் செய்தல் வேண்டும். ஒரு வேள்வி தமிழ்நாட்டில் செய்தாலும் பஞ்சாபில் செய்தாலும் ஒரே முறையில் செய்தல் வேண்டும்.

  வழிபாடு அவரவர் மொழியில். நான் காசியிலும், உஜ்ஜைநியுளும் தேவாரம் பாடி வழிபட்டேன். யாரும் ஒன்றும் சொல்லவில்லை. அவர்களும் ஹாரதி எடுக்கும் போடு ஹிந்தியிலே ஜே ஜகதீச ஹரே என்றுதான் பாடினார்கள்.

  சடங்கு பொது மொழியில், வழிபாடு தாய் மொழியில். அதுமட்டுமல்லாது தமிழக கோவில்களில் மற்ற மாநிலத்தவர் வந்து அவர் அவர் மொழியில் வழிபட வேண்டும். அதுதான் ஒரே மதம் என்ற உணர்வை வரவழிக்கும்.

 32. AMARNATH MALLI CHANDRASEKARAN on July 21, 2010 at 9:00 pm

  தல புராணமும் அதைத் தொடர்ந்து கூறப்பட்ட கருத்துகளும் மிக அருமையாக இருக்கின்றன. திருக்கோவில்களில் தமிழ் வழிபாடு இன்னும் சிறக்க வேண்டும். பன்னிரு திருமுறைகளில் – நாலாயிர திவ்ய பிரபப்டத்தில் உள்ள இறைவன் போற்றிகள் நன்கு பயன்படுத்தப்பட வேண்டும். அரசு ஆவன செய்து போற்றிகள் கொண்டு அருச்சனை செய்வதை நடைமுறையில் கொண்டுவர வேண்டும். அப்போது தான் தமிழ் பூசை நடைமுறைக்கு வரும். மாநாடுகளில் செலவிடுவதை விட அரசுப் பணத்தை இப்படி செலவிடலாம். கணிணினியில் தமிழைச சீராக்கி உலகெங்கும் உள்ள தமிழர்கள் இப்படிப்பட்ட அருமையான கட்டுரைகளை அரசே படிக்க வசதி செய்து கொடுக்கவேண்டும். உலகெங்கும் ஒரே மாதிரியான தமிழ் கணினிப் பலகை வைத்து இலவசமாக எல்லோருக்கும் கொடுத்து இனிய தமிழ் மொழியை வளர்க்கவேண்டும். தங்கள் தமிழ் இறைப் பணி தொடரட்டும்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*