முகப்பு » சமூகம், புத்தகம்

தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி


tamil-protests-were-brutally-quashed-in-kuala-lumpur-by-the-malaysian-policeYoutube-இல் ஒரு ஆடியோ இருக்கிறது. எம்.ஆர்.ராதா மலேசியாவில் பேசியதன் பதிவு எனச் சொல்லப்படுகிறது. அதில் பேசுபவர் எம்.ஆர்.ராதா குரலில் பேசுகிறார். மலேசியத் தமிழர்களிடம் பேசுகிறார். மலேசியாவைப் புகழ்கிறார். தமிழ்நாட்டை, இந்தியாவை இழிவாகப் பேசுகிறார். இங்கேயே இருங்கள் அங்கே வந்துவிடாதீர்கள் இது சொர்க்கபுரி என்கிறார். சிலசிலப் பிணக்கங்கள் இருக்கலாம் அதெல்லாம் போகப் போகச் சரியாகிவிடும் என்கிறார்.

2007-இல் அமைதியாகப் பேரணி நடத்திய மலேசிய இந்திய வம்சாவளியினரை மலேசிய அரசாங்கம் மூர்க்கத்தனத்துடன், அடக்கி ஒடுக்கியதை உலகமே அதிர்ச்சியுடன் பார்த்தது. இந்திய ஊடகங்கள் அதனை முடிந்த அளவு அடக்கி வாசித்தன. மலேசியா-வாழ் இந்திய வம்சாவளியினருக்கு பொதுவாகவும் தமிழர்களுக்குக் குறிப்பாகவும் நடந்தது, நடந்து கொண்டிருப்பது என்ன? அவர்கள் எத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்? இது குறித்து ஒரு தெளிவற்ற பார்வையே இந்தியாவில் நிலவிவருகிறது. வெளிநாடு வாழ் தமிழர்கள் பிரச்சினை இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு, வேண்டினால் ஊதிப்பெருக்கவும் விருப்பப்பட்டால் புறந்தள்ளவும் ஒரு வசதியான அரசியல் விளையாட்டுக்கருவி மட்டுமே. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இத்தகைய போக்குதான் இறுதியில் மிகப்பெரிய மானுடசோகத்தில் கொண்டு வந்து விட்டது. இந்நிலையில் மலேசியத் தமிழர்களின் பிரச்சினையை ஆழமாக அதன் அனைத்துக் கோணங்களிலும் ஆராயும் ஒரு நூலாக வந்துள்ளது பேராசிரியர் வி.சூர்ய நாராயணனின், “மலேசிய இந்தியத் தமிழர்களின் அவல நிலை”.

indians-protesting-for-equal-rightsவெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு இந்தியனும் தனக்குள் பாரதத்தைக் கொண்டுள்ளான். அவன் தேவையேற்பட்டு உதவிக்கரம் நீட்டினால் அவனுக்கு உதவ வேண்டிய கடமை பாரதத்துக்கு உள்ளது என்று நேரு சொன்ன மேற்கோளோடு தொடங்குகிறது இந்த நூல். நேருவின் இந்த மேற்கோள் 1939-ஆம் ஆண்டு கொழும்புவில் வாழும் தமிழ் தொழிலாளர்களிடம் அவர் சொன்னது. காலனிய வரலாற்றுக் காரணங்களால் தமிழர்கள் பெரிய அளவில் காலனியாதிக்க நாடுகளின் பெருந்தோட்டங்களில் குடியமர்த்தப் பட்டார்கள்; இலங்கையில், மலேசியாவில், ஃபிஜியில், தென்னாப்பிரிக்காவில். தென்கிழக்காசிய நாடுகளில், குறிப்பாக மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினரின் வேர்கள் இந்த காலனியாதிக்கக் கொடுமையிலிருந்து உருவானவை. இன்றைக்கு மத-இன அடிப்படையிலான தேசியங்கள் இந்தப் பழைய காலனிய நாடுகளில் இறுக்கமடைந்ததன் விளைவாக சிறுபான்மை இந்திய வம்சாவளியினர்- தமிழர்கள்- கொடுக்கும் விலையும் அனுபவிக்கும் துன்பங்களும் மிகக் கொடுமையானவை.  ஆனால் ஊடகங்களாலோ அறிவுஜீவிகளாலோ பேசப்படாதவை. காரணங்களும் வெளிப்படையானவை. போலி-மதச்சார்பின்மை, ஓட்டு வங்கி அரசியல், பொதுவான மானுட நேயமின்மை ஆகியவை அக்காரணங்களுள் சில.

இந்த நூல் காலனிய ஆதிக்கம் எப்படி, கொடுமையாக, அப்பட்டமான சுயநலத்துடன் தன் அதிகார வெறிக்குத் தீனிப்போட இந்தியத் தொழிலாளர்களைப் பயன்படுத்தியது என்பதைக் காட்டுகிறது. பீகிங்கில் நிகழும் படுகொலைகளிலிருந்து பிரிட்டிஷ் தூதுவர்கள் பாதுக்காக்கப்பட இந்தியர்களை அனுப்பலாம்; சோமாலியாவில் சண்டை போட இந்தியர்களை அனுப்பலாம்; ஏடன்- தீன் சீன் நிலக்கரிச் சுரங்கங்களைப் பாதுகாக்க வேண்டுமா… இந்தியர்களைத் தரலாம். உகாண்டாவிலோ சூடானிலோ ஒரு ரயில் பாதையைக் கட்ட வேண்டுமா? அந்த பிரிட்டிஷ் கம்பெனிக்கு சிறந்த தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து கிடைப்பார்கள்…. இப்படிப் பட்டியலிட்டு பேசியது இந்தியாவின் பிரிட்டிஷ் வைஸிராயாக இருந்த கர்ஸான் லண்டனில் உள்ள கில்டுஹாலில் ஆற்றிய உரையில்.

malaysia-thaipusamஉள்நாட்டில் பஞ்சம். பிரிட்டிஷ் அரசு ஏற்படுத்திய பஞ்சம். விளைவாக கப்பல் கப்பலாக, கொத்தடிமைகளாக, இந்தியர்கள் காலனியப் பிரதேசங்களில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் உள்கட்டமைப்புகளை உருவாக்க அனுப்பப்பட்டார்கள். அப்படி வந்தவர்கள்தாம் இன்று மலேசியாவில் வாழும் பெரும்பாலான தமிழர்கள். ஆனால் மலேசியா என்கிற தேசத்தின் புராதனப் பண்பாட்டை மிகத் தொன்மையான காலத்தில் பின்சென்று நோக்கினால் அதன் வேர்களும் தமிழர்களிடம் இருந்து வந்தவையாக இருக்கும் என்பதுதான் வேதனையான வரலாற்று உண்மை. கிராமம் கிராமமாகப் பிடுங்கப்பட்டு மலேசியாவில் தூக்கி வீசப்பட்ட தமிழர்கள் தங்கள் பண்பாட்டை அங்கே அணுஅணுவாக மீட்டுருவாக்கம் செய்தார்கள்.  விழாக்காலங்களில் தாங்கள் வாழும் இடங்களின் முன்பகுதிகளை மாவிலைத் தோரணங்களால் அலங்கரிப்பார்கள்; தைப்பூசத்தன்று சுங்கோபுலோவில் உள்ள சுப்பிரமணியர் ஆலயத்திற்கு தரிசனத்துக்குச் செல்வார்கள்….  மலேயாவில் வாழும் இந்தியர்கள் எப்பொழுதும் தங்கள் தாயகத்தின் பாதிப்பை தங்களுள்ளே கொண்டிருந்தார்கள். ஆனால் அரசியல் ரீதியாக இந்திய வம்சாவளியினர், அவர்களுக்கொப்பக் குடியேறிய சீனர்களைக் காட்டிலும் தாமதமாகவே விழிப்புணர்வடைந்தார்கள். சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்திற்கு இந்தத் தென்கிழக்காசிய நாட்டுத் தமிழர்கள் அளித்த பங்கு மகத்தானது முக்கியமானது.

ஆனால் அந்தப் பிராந்திய அரசியல் வேறுமாதிரியானது. சீனா ஜப்பானுக்கு எதிரி. ஜப்பானிய ஆக்கிரமிப்பில் அனைத்து இன மக்களும் கொடுமைப் படுத்தப்பட்டனர். குறிப்பாக சீனர்கள். தமிழர்களும் விட்டு வைக்கப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள்- இந்திய வம்சாவளியினர் பிணைக்கப்பட்டு ஜப்பானிய ராணுவத்தால் சியாமிய எல்லையில் ரயில்வே கட்டுமானத்துக்காக அனுப்பப்பட்டனர். மரண ரயில்பாதை எனப் ‘புகழ்’பெற்ற இந்த பாதையைக் கட்ட 70,000 தமிழர்கள் அனுப்பப்பட்டனர். அதில் 25,000 பேர்கள் இறந்துவிட்டனர். 12,000 பேர்களே திரும்ப வந்தனர். 5000 பேர் தப்பி ஓடிவிட்டனர். 5000-க்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகளாகத் திரும்பி வந்தனர். 9000-க்கும் பேர்பட்ட குழந்தைகள் அநாதைகளாகினர். அதாவது அந்தப் பிராந்தியத்தின் வரலாற்றில் இணைப்பிரிக்க முடியாத ஓர் அங்கமாக தங்கள் இரத்தத்தைச் சிந்தி இந்தத் தமிழர்கள் வேரூன்றினர். அம்மக்கள் வரலாற்றில் பட்ட கஷ்ட நஷ்டங்களை இவர்களும் தங்கள் வாழ்க்கையில் அதே அவலத்துடன் அல்லது அதை விடக் கொடுமையான சோகத்துடன்- இரு முறை கொத்தடிமைகளாக்கப்பட்டவர்களல்லவா?- சுமந்தனர்.

indians-say-tamil-schools-have-less-funding-than-malay-schoolsஇந்தக் காலனிய வரலாற்றின் பின்னணியில் விடுதலைக்குப் பிறகு மதமும்-இனமும் இணைந்த ஒரு விசித்திர அடையாளம் உருவாகிறது. அதுதான் ‘பூமி புத்திரர்கள்’. 1969-க்குப் பிறகு மலேய மொழிவெறி காற்றடிக்க ஆரம்பிக்கிறது. சிறுபான்மைத் தமிழர்களின் கல்வியாதாரங்களாக இருந்த தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் செல்வாக்கிழக்க ஆரம்பிக்கின்றன. இது தோட்டங்களில் வேலை செய்த ஏழை தமிழர்களின் சமூக முன்னேற்றத்தை பெருமளவில் பாதித்தது. (இங்கு இன்னொன்றைச் சொல்ல வேண்டும். மலேசிய ஆட்சி அதிகார வர்க்கத்தினர் மலே பள்ளியில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பதில்லை. அருகில் உள்ள சிங்கப்பூரின் ஆங்கிலப் பள்ளிகளுக்கு மலேசிய மேல்வர்க்கக் குழந்தைகள் தினமும் சென்று படித்துத் திரும்புவதை எவரும் காணமுடியும். மொழி வெறியேற்றும் அரசியல்வாதிகள் எல்லா இடங்களிலும் இரட்டை வேடதாரிகள்தான் போலும்.) மலேசிய விடுதலைக்குப் பின் தமிழ்வழிப் பள்ளிகள் கணிசமாகக் (50 விழுக்காடு) குறைந்தன. இருக்கும் பள்ளிகளிலும் நிலை மிக மோசமாக இருக்கிறது. தகுதியான ஆசிரியர்கள், தேவையான உள்கட்டமைப்பு எதுவுமே இல்லை. இவற்றில் படித்து வரும் குழந்தைகள் மேல் படிப்புக்குச் செல்ல மீண்டும் “Remove class” என்கிற படிப்பு படிக்க வேண்டும். மலேசிய இந்திய வம்சாவளி மக்களுக்காகக் குரல் கொடுக்கும் இயக்கமாக வேகமாக உருவாகி வரும் HINDRAF இயக்கத்தைச் சேர்ந்த வேத மூர்த்தி சொல்கிறார்- “பல்வேறு பிரச்சினைகளின் காரணங்களின் ஊடே பார்த்தால் மிக முக்கியக் காரணம் ஏழைமையே. எந்த ஒரு நிறுவன ஆதரவும் இம்மக்களுக்குக் கிடைக்காததும் ஒரு முக்கியக் காரணமாகும்.”

sri-murugan-kalvi-nilayam-newscuttingஇன்றைக்கு மலேசியப் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கும் இந்திய வம்சாவளி மாணவர்கள் 6.2 விழுக்காடு மட்டுமே. இந்நிலையில் சில ஆர்வம் கொண்ட தமிழர்கள் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் என்கிற அமைப்பை ஏற்படுத்தி தமிழர்களுக்கு கல்வி உதவி வழங்கி வருகின்றனர். இதன் மூலம் முன்னுக்கு வரும் மாணவர்கள் தங்களைப் போல வாய்ப்புக்குப் போராடும் மாணவர்களுக்கு மீண்டும் உதவுகிறார்கள். கல்வியாளர் டாக்டர். தம்பிராஜாவால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்று 300 இடங்களில் செயல்படுகிறது. 36,000 மாணவர்கள் பலனடைந்து வருகிறார்கள். என்றாலும் இது ஒரு சிறிய தீர்வுதான்.

moorthy-maniam-is-given-a-muslim-burialஇந்திய வம்சாவளியினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் பரிமாணங்கள் பெருகிவருகின்றன. ஹிந்து கோயில்கள் உடைக்கப்பட்டு வருகின்றன. ஷரீயத் எனும் மத்தியகால இஸ்லாமியச் சட்டம் நவீன மலேசியாவில் கோலோச்சுகிறது. மதச்சிறுபான்மையினரை விதவிதமாக அவதிக்குள்ளாக்கும் இக்கொடுஞ்சட்டம் சிறுபான்மை ஹிந்துக்களின் கலாசார மதசுதந்திரக் குரல்வளையை நசுக்குகிறது. இந்த நூல் இதுகுறித்த பல தனிப்பட்ட, மனதைப் பிழியும் உதாரணங்களை ஆதாரத்துடன் முன்வைக்கிறது. வாழும்போது மட்டுமல்ல இறந்த பிறகும் கூட இஸ்லாமியச் சட்டத்தின் கொடுங்கரம் ஹிந்துக்களை நிம்மதியாக விடுவதில்லை. மூர்த்தி மணியம் என்பவர் இறக்கும்வரை ஹிந்துவாகவே வாழ்ந்தவர் என்கிறார் அவரது மனைவி. ஆனால் அவரது மனைவியின் எதிர்ப்பையும் கோரிக்கையையும் கணவனை இழந்த  அவரது துயர சூழலையும் மீறி, இறந்த அவரது கணவரின் உடல் இஸ்லாமிய முறைப்படி வலுக்கட்டாயமாக அடக்கம் செய்யப்படுகிறது. பெற்றோரில் ஒருவர் இஸ்லாமியராக இருந்தாலும் பெற்றோரின் ஒப்புதலின்றி குழந்தைகளை வலுக்கட்டாயமாக அரசாங்கமே இஸ்லாமியராக மாற்றுவது, அதனை ஏற்காவிட்டால் குழந்தைகளை முறைப்படி பெயர் பதியவிடாமல் தடுப்பது, சிறையில் அடைக்கப்படும் ஹிந்துக்களுக்கு வலுக்கட்டாயமாகவோ அல்லது மறைமுகமாகவோ மாட்டிறைச்சி கொடுப்பது, தினசரி ஹிந்து கோயில் ஒன்றாவது உடைக்கப்படுவது (பிரசித்தி பெற்ற ஷா ஆலம் மாரியம்மன் கோயிலும் இதில் அடக்கம்)… என்று இப்பட்டியல் நம்மைப் பதற வைக்கிறது. தமிழ்ஹிந்து.காம் ஏற்கனவே இப்பிரச்சனைகளில் போராடி வரும் நம் மலேசிய தமிழ்ஹிந்து சகோதரிகள் குறித்து எழுதிய கட்டுரை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்: அறம் காக்கப் போராடும் மலேசிய மங்கையர்: பங்காரம்மா, ரேவதி

malaysian_mariamman_temple_இத்தகைய கடும் வாழ்வாதார உரிமைப் பறிப்பும், பண்பாட்டு-மத ரீதியிலான நசுக்குதலையும் இந்திய வம்சாவளியினர் எதிர்கொண்டு காந்திய ரீதியில் அமைதியாகவும் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். அடுத்து இந்த நூல் எப்படி உலகெங்கிலுமுள்ள இந்திய வம்சாவளியினரிடம் இந்தியத் தாயக அரசு ஒரு வலைத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வரலாற்று ரீதியாக ஜனதா அரசின் காலத்திலிருந்தே முயற்சிகள் எடுத்தது என்பதையும் அம்முயற்சிகள் எவ்வாறு பரிணமித்தன என்பதையும் காட்டுகிறது. உதாரணமாக இந்திய வம்சாவளியினர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயுதக் கலகம் நடத்திய ஃபிஜி கலகக்கார அரசுக்கு எதிராக அன்றைய இந்திய அரசு உறுதியாக நடவடிக்கை எடுத்தது. ரம்புகா அரசினை அங்கீகரிக்க மறுத்ததுடன் அதற்கு எதிராக வியாபாரத்தடையைக் கொண்டு வந்தது, காமன்வெல்த்திலிருந்து ஃபிஜியை நீக்க முயற்சி எடுத்து வெற்றியடைந்தது. 1998-இல் உருவான பாஜக அரசு இந்த முயற்சிகளுக்கு மேலும் சிறப்பு வடிவம் கொடுத்தது. வாக்களிக்க மட்டுமே அனுமதிக்காத இரட்டைக் குடியுரிமை முறையின் தொடக்கமாக பி.ஐ.ஓ அட்டையை பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. அத்துடன் ப்ரவாஸி பாரதீய திவஸ் எனும் நிகழ்ச்சியை அது உருவாக்கியது. இம்முயற்சிகள் முக்கியமானவை. அயலகம் வாழும் தமிழ்மக்கள் விஷயத்தில் முக்கிய அக்கறை எடுத்துக் கொண்ட முக்கிய தமிழ்த் தலைவர் டி.எஸ்.அவினாசி லிங்கம் அவர்கள். ராமகிருஷ்ணா மிஷன் செயல்பாடுகள் மூலம் தென்கிழக்காசிய அயலகங்களில் வாழும் தமிழர்களை அடிக்கடி சந்தித்துவந்தவர் அவர். 1967-இல் உலகத் தமிழ்மாநாடு மலேசியாவில் நடந்தது. பாராசக்தி படத்தில் பர்மா தமிழர்களின் அவலநிலை சித்தரிக்கப்பட்டது. இலங்கை வாழ் தமிழர் மீது இந்தியக் குடியேற்றம் திணிக்கப்பட்டு இந்தியாவில் குடியேறிய தமிழர்களுக்கு நல்வாழ்வு தருவதில் சென்னையும் சரி டெல்லியும் சரி அக்கறை காட்டவில்லை. வாய்ச்சவடால்கள் விழாப்பந்தல்களுடன் அது முடிந்துவிட்டது. இவ்விதத்தில் குடியேற்றப்பட்ட ஒரு மூதாட்டி இந்த நூல் ஆசிரியரிடம் மனக்கசப்புடன் “இது தாய்நாடா இல்லை நாய்வீடா” என்று கூறியதைக் குறிப்பிடும் ஆசிரியர் நம் மக்கள் படும் வேதனையை விளக்குகிறார்:

இலங்கையில் வேண்டாம் என்று துரத்தப்பட்டார்கள். இந்தியாவில் மனமின்றி வரவேற்கப்பட்டார்கள். திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சித்தலைவர்களால் அக்கறை எடுத்துக் கொள்ளப்படாததால் திக்கு தெரியாமல் இம்மக்கள் அலைகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் உள்ள முரண்நகை என்னவெனில் இந்தத் துரதிர்ஷ்ட மக்கள் இலங்கைத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால் பலவருடங்கள் இலங்கையில் வசித்த போதும் இந்த கௌரவம் அவர்களுக்கு அங்கு கிடைக்கவில்லை. இலங்கையில் அவர்கள் இந்தியத் தமிழர்கள் என அறியப்பட்டார்கள்.

வாசிக்கும் போது மனதில் கசப்பும் அவமானமும் ஊறுகிறது. தமிழின் பெயரில் கூத்தடிக்கும் அரசியல் கோமாளிகள் ஒருபக்கம், அரசியல் வைராக்கியத்துடன் இந்திய வம்சாவளியினர் நலனைப் பாதுகாக்கும் முதுகெலும்பும் அக்கறையும் அற்ற மத்திய அரசு மறுபக்கம், நம்மக்கள் படும் துயரை புறக்கணிக்கும் ஊடகங்கள் மறுபக்கம், இவை எதிலும் அக்கறையில்லாமல் இலவசங்களுக்கும் ஆயிரங்களுக்கும் ஜனநாயகத்தையே அடகு வைக்கும் மந்தையாக நாம் மறுபக்கம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?

இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழர்கள் அயல்நாடுகளில் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கை அவலங்களையும் காய்தல் உவத்தலின்றி முன்வைக்கும் முக்கியமான முயற்சி இது. வெற்றி பெற்றுள்ள முதல் முயற்சி. சென்னையிலிருந்து செயல்பட்டு வரும் Centre for Asian Studies வெளியிட்டுள்ள நூல் இது. தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் குறித்த ஆய்வுத்துறை பேராசிரியர் வி.சூரியநாராயணன் எழுதியிருக்கிறார். 20 வருடங்களுக்கு மேலாக இந்த ஆய்வுடன் தம்மை இணைத்துக் கொண்டவர் அவர். சிறப்பான மொழிப்பெயர்ப்பைச் செய்திருப்பவர் திரு.தருமசேனன். புலம்பெயர்ந்த தமிழர்களின் நலனைப் புறந்தள்ளி நாம் வாழமுடியாது. எனவே இந்த நூல் ஒவ்வொரு தமிழனும் கட்டாயமாகப் படிக்க வேண்டிய நூல். இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள பிரபல பத்திரிகையாளர் வாஸந்தி கூறுகிறார்:

“தொலைக்காட்சி ஊடகக் காட்சிகள் ஏற்படுத்தாத பாதிப்பை இப்புத்தகம் தனது ஆழ்ந்த பார்வையாலும் உள்ளார்ந்த கரிசனத்தாலும் ஏற்படுத்துகிறது. இதன் மூலமாக மலேசியா வாழ் தமிழர்களின் வாழ்வில் சிறிது மலர்ச்சி ஏற்படுத்தும் முயற்சியில் நாம் இறங்குவோமானால் அது புத்தகத்துக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பாராட்டும் வெற்றியும்.”

சத்தியமான வார்த்தைகள்.

coverமலேசிய இந்தியத் தமிழர்களின் அவல நிலை
பேரா.வி.சூர்யநாராயணன் (தமிழில் தர்மசேனன்)


ஆசிய ஆய்வுகளுக்கான மையம்/தெற்காசிய ஆய்வுக்களுக்கான இந்திய மையம்,
Kurukshetra Prakashan,
Kaloor Towers,
Kaloor,
Kochi-682 017.

மின்னஞ்சல்: kurukshethra1975@yahoo.com

விலை ரூ.100
பக்கங்கள்: 133

 

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

14 மறுமொழிகள் தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி

 1. பா. ரெங்கதுரை on July 22, 2010 at 2:00 pm

  ’மலேசிய தமிழ் இந்துக்களின் அவல நிலை’ என்று புத்தகத்தின் தலைப்பை வைத்திருக்கலாம். Political Correctness காரணமாக ‘இந்து’ என்ற சொல்லைத் தவிர்த்திருக்கிறார்கள். புத்தகத்தின் அடுத்த பதிப்பிலாவது இத்தவறைத் சரி செய்யவேண்டும்.

  ‘இந்து’ என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்தத் தயங்குபவர்களையும் மன்னித்து அவர்களுக்கு உதவுவதே ஓர் இந்துவின் கடமை என்பதால் இப்புத்தகத்தை வாங்கி ஆதரிப்போமாக.

  மலேசியத் துருக்கரின் தருக்கு நீக்குவோம். தமிழ் இந்துக்களின் இன மானம் காப்போம்!

  – பா. ரெங்கதுரை

 2. Indli.com on July 22, 2010 at 9:17 pm

  தமிழ்ஹிந்து » தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி…

  வாசிக்கும் போது மனதில் கசப்பும் அவமானமும் ஊறுகிறது. தமிழின் பெயரில் கூத்தடிக்கும் அரசியல் க…

 3. N.Sadagopan on July 22, 2010 at 10:40 pm

  மலேசியத் இந்தியத் தமிழர்களின் அவல நிலை என்கிற நூலினைப் பற்றி மிக அருமையானதொரு விமர்சனம் செய்துள்ள திரு.அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு பாராட்டுகள். இந்த நூல் கேரளாவில் இருக்கின்ற குருக்ஷேத்திர பிரகாசன் சார்பில் வெளியிடப்பட்டிருந்தாலும் நூலினை வாங்கிட விரும்புபவர்கள் கீழ்காணும் முகவரியை தொடர்பு கொள்ளவும். நூல் கிடைக்குமிடம். அல்லது VPP வாயிலாகவும் அனுப்பிவைக்கப்படும்.
  ௦௦
  விஜயபாரதம்
  31எம்.வி.நாயுடு தெரு,
  சேத்துப்பட்,
  சென்னை – 600 031
  தொலைபேசி எண் ௦044-2836 0243.
  Contact: vijayabharatham@yahoo.co.in

 4. vedamgopal on July 24, 2010 at 12:56 pm

  அரவிந் நீலகண்டன் அவர்களுக்கு. நான் சமீபத்தில் படித்த புத்தகம். Indian ( An ideal labour or slave) by Krishnan Arunachalam (303.48 ARU) Vivekananda Library – Mylapore. 18ஆம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை இங்கேயும் வெளிநாட்டிலும் இந்தியர்களின் நிலைமையை தொகுத்துதந்துள்ளார். எல்லோரும் படிக்கவேண்டிய புத்தகம். பிரிட்டிஷ் அரசு கோடிகணக்கான இந்தியர்களை அடிமைகளாக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தார்கள். இவர்கள் காபி டீ ரப்பர் கரும்பு தோட்டங்களிலும் ரோடு போடுவது ரயில் பாதை அமைப்பது போன்ற பணிகளிலு்ம் ஈடுபடுத்தப்பட்டார்கள். சிலரை ராணுவத்திலும் சேர்த்தார்கள். இவர்களுக்கு ஒழுங்கான இருக்கும் இடமோ வயிறாற உணவோ கிடையாது. 14 மணிநேரம் தொடர்ந்து இரவு பகல் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். பணிமுடிந்ததும் ஆடுமாடுகளை போல் திறந்தவெளியில் முள்வேலிகுள் அடைக்கப்பட்டார்கள். இந்த இடங்களுக்கு Nigger Yard or camps des Noirs’ என்று பெயர். இவ்வாறு சென்றவர்களில் பாதிக்கு மேல் வறுமையில் கேட்பார்றற்ற அனாதை பிணங்களாக தூக்கி எரியப்பட்டாடர்கள். எஞ்சிய சிலரே இன்று வம்சாளி இந்தியர்களா பல இடங்களில் வாழ்கிறார்கள். ஏதோசில தீவிர இஸ்லாமிய நாடுகளை தவிற மற்றஇடங்களில் பலர் உயர்தநிலையில் இருக்கிறார்கள் நாட்டின் உயர்ந்த பதவிகளையும் ஏற்றுள்ளார்கள்.

  இவ்வாறு தோட்ட கூலியாகஇருந்த இந்தியர்கள் இன்று சைபர் (ஐ.டீ) கூலிகளாக ஆகியுள்ளாரகள். 10 ஆண்டுகளாக இந்தியர்கள் வெளிதேசங்களுக்கு பணிக்குசென்று சிறந்தநிலையை அடைந்துள்ளார்கள். மேற்கத்தியர்களுக்கு இது பொருக்கவில்லை. காழ்போடு இந்திய ஐ.டீ கம்பெனிகளுக்கு பணியைகொடுக்காமல் அவர்களே இங்குவந்து குறைந்த செலவில் கடைவிரிக்க ஆரம்பித்துள்ளார்கள். ( MNC – open door policy is dangerous & hazardous )

  1. Research outsourced in India and patented at foreign country , final product sold to India (Do Pond, GE- 400 products so far patented , CISCO – R&D center in India like that Micor Soft – so far obtained 80 patents
  2. In India the annual expenditure for employees is only 700 $ where as in US it is 42,000 $
  3. Chemical trials are being done in India for testing the side effect and potency
  4. All the forbidden experiment in their own land are being done in India
  5. Law Graduation (training abroad with US laws)
  6. shifting all the medical treatment to India ( now 60,000 doctors are employed in abroad)
  7. Arrival of foreign based University for higher education

 5. prs on July 24, 2010 at 1:11 pm

  இதுதானோ ஹிந்துக்களின் தலைவிதி. இன்று பல சிவன் ஆலயங்களின் ராஜகோபுரங்கள் இடிந்து விழுவதுவே ஹிந்து சமயத்தின் அழிவின் ஆரம்பம் என கூறலாமா? என்ன செய்வது நாம் தேர்ந்தெடுத்த நாத்திக அரசியல் தலைவர்கள் எமது தலைவிதியையே மாற்றுகிறார்கள்.

 6. vedamgopal on July 24, 2010 at 6:17 pm

  Please read in my comment last para 2nd point as 7000 $ and not 700 $

 7. R.Sridharan on July 26, 2010 at 7:45 pm

  மலேசியா இந்தியத் தமிழன் என்று சொல்லப் படுபவர்கள் மலேசியா இந்திய முஸ்லிம்களாக இருந்தால்?
  அங்கு போராடும் மக்களே தங்களது இயக்கத்தின் பெயரை ஹிந்து உரிமை இயக்கம் என்று வைத்துக் கொண்டிருக்கும் பொது இந்த புத்தகம் தமிழன் என்றுஏன் மழுப்ப வேண்டும்?
  அப்படிச் சொன்னால் இங்கு உள்ள இன மானக் காவலர்கள் அடுத்த நிமிடமே அவர்களின் பிரச்னையை தீர்த்து விடப் போகிறார்களா?
  இனி மலேசியா ஹிந்துக்கள் என்று சொல்லுவோம்

 8. Vidya Nidhi on July 27, 2010 at 1:07 pm

  இந்நூலைப் பற்றி இங்கு தங்களது கருத்துக்களை பதிவு செய்கின்றவர்கள் முதலில் அந்த நூலினை படித்துவிட்டு கருத்து சொன்னால் நல்லது. வெறும் தலைப்பை பிடித்துக்கொண்டு மனம் போனபடி கருத்து சொல்வது பொருத்தமாக இல்லை. இந்நூலினை எழுதியுள்ளவர் சங்க பரிவார் அமைப்பினை சேர்ந்தவர் அல்ல. அவர் ஒரு பேராசிரியர். எந்த ஒரு விஷயத்தையும் நன்கு ஆராய்ந்து தனது கருத்தினை சொல்லக்கூடியவர். அதிலும் இந்திய வம்சாவளியினர் பற்றி தொடர்ந்து கடந்த 40௦ வருடங்களாக எழுதி வருபவர். ஆராச்சியாளர். வெளி விவகாரத்துறை பற்றி எதாவது கருத்தரங்கம் நடைபெறுமானால் அதில் பேராசிரியர் சூரிய நாராயணன் இருப்பார். தமிழக மற்றும் அகில இந்திய அளவில் அனைத்து தரப்பு அரசியல் தலைவர்களால் மிகவும் பாராட்டப்படுபவர். தயவு செய்து நூலினை வாங்கிப் படித்து விட்டு உங்கள் சந்தேகங்களை நூலாசிரியரிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

  வித்யா நிதி

 9. R.Sridharan on July 27, 2010 at 5:23 pm

  நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இவைதான்.
  அது ஹிந்துக்கள் இங்கும் எங்கும் இரண்டாம் தர, மூன்றாம்தர அதற்கும் கீழான நிலையில் தான் வைக்கப் பட்டுள்ளனர்
  இரண்டு நமது அரசும், (ஒரு கட்சியைத் தவிர) மற்ற எல்லாக் கட்சித் தலைவர்களும் ஹிந்துக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அதைப் பற்றிக் கவலயே படுவதில்லை.
  ஆனால் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு ஒரு கொசு கடித்து விட்டால் கூட போட்டி போட்டுக் கொண்டு மருந்து தடவச் செ்ல்கின்றனர்
  மூன்று இதை மாற்றுவது ஹிந்துக்களின் கையில் உள்ளது .அற்ப வித்தியாசங்களை மறந்து நமது மற்றும் நம் சந்ததியினரின் எதிர் காலத்தை நினைந்து உடனடியாக ஒவ்வொரு ஹிந்துவும் இப்போது இங்கு உள்ள ஆளும் கட்சிகளுக்கு மறந்தும் ஓட்டுப்போட மாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 10. Kreshna on July 28, 2010 at 2:11 pm

  12 Muslims fined for Malaysia Hindu temple protest

  Read here…

  http://www.google.com/hostednews/ap/article/ALeqM5h5RWG2ScAdC9V7eo-B6-KfUL3QjgD9H775H00

 11. snkm on August 2, 2010 at 7:16 pm

  மீண்டும் மீண்டும் எப்போதுமே சொல்வது போல ஹிந்துக்கள் ஒன்று பட வேண்டும்! அப்போது தான் சமாளிக்க முடியும்! சிறு சிறு குழுக்களாக ஒன்று கூடி பல்கிப் பெருக வேண்டும்! ஒற்றுமையே பலம்! ஆனால் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அனைவருமே தங்கள் பெயர் புகழ் என்ற குறுகிய வட்டத்திற்குள் உள்ளனரே!

 12. amafaaiz on November 24, 2011 at 3:28 pm

  தமிழர்கள் மீது முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக இஸ்லாத்தை திநி க்கமட்டார்கள் .அப்படி திநிக்கும்படி இஸ்லாம் சொல்லவும் இல்லை…இஸ்லாம் மதம் அல்ல. இஸ்லாம் ஒருஅழகிய மார்க்கம். அது இன்றைக்கு சுமார் 1400 வருடங்களுக்கு முன்பிருந்தே சாந்தமான நடைமுறையையே கையாளுகின்றது .இஸ்லாத்தை நன்கு படித்துப் பாருங்கள் சகோதரர்களே. இங்கு நடந்துள்ளவை ஒரு சில மதவாதிகளின் கடும்போக்கே தவிர மார்க்க வழிமுறை இல்லை என உறுதியாக என்னால் சொல்ல முடியும் .எந்த ஒரு சமயமும் வன்முறையைக் கடைப்பிடிக்க கட்டளை இடவில்லை.சில தீவிரவாத போக்குடையவர்களின் செயல் பாடு இது . என்பதுதான் என் பணிவான கருத்து . பிழை இருப்பின் மன்னிக்கவும் .

 13. sarang on November 24, 2011 at 9:16 pm

  amaafaaiz

  சுத்தமா முடியலா இஸ்லாம் மதம் இல்லை அது ஒரு மார்க்கம் – இப்படி உங்களை நம்ப வெச்சு காசு பார்க்கும் ஒரு கூட்டம் கேட்டு கேட்டு எனக்கு ரெம்ப போர் அடிக்கு – வேறு எது புதுசா சொல்லாலாமுள்ள

  உங்காளுங்க எழுதின ப்ளாக படிங்க

  pagadu.blogspot.com

  http://alisina.org/
  paraiosai.blogspot.com

  இது மூனும் உன்காளுங்கலீதான் எழுதறாங்க

  சாந்தமான மார்கத்தை பட்டியும் அல்லா என்கிற தாதாவை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

  நீங்கள் உண்மையை தெரிந்து கொள்ள விரும்புகிரவாராக இருந்தால் நேர்மையானவராக இருந்தால் நபிக்கு வந்த வஹிக்களையும், ஹதீஸ்களையும் படித்து அதிலுள்ளு உண்மையை உணருங்கள்

  சும்மா மார்க்கம் மார்க்கம் என்று டப்பா வேண்டாம்

 14. கருணாகரன் குமரன் on November 12, 2014 at 4:57 pm

  வணக்கம். தமிழர்களின் கடல் கடந்த சோகம் ஓர் ஆய்வு நூல் விவரம் அறிந்தேன்.
  புத்தகத்தை செனனையில் பெறமுடியுமா ? அல்லது தங்களிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்ள வேண்டுமா ? முகவரிகளைத் தெரியப்படுத்தவும்.
  க குமரன்
  12.11.14

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*