ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்

நீ தான் மெச்சிக் கொள்ள வேண்டும் – எங்கள்
நீலநிற மேனி மாதவன் செய்வது
நிமிஷம் போவது யுகமாய் ஆகுது …

என்ற ஸ்ரீரஞ்சனி ராகப் பாடலை முகாமின் ஆஸ்தான பாடகர் ராமச்சந்திர சர்மா பாட அமர்க்களமாகத் தொடங்கியது ஊட்டி இலக்கிய சந்திப்பு. அரட்டைகளும் குறட்டைகளும் கலந்த அடுத்தடுத்த இரண்டு இரவுப் பொழுதுகளிலும் சர்மா எல்லோரையும் தன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் விடாமல் மூழ்க அடித்துக் கொண்டிருந்தார்!

அன்று காலை வெடவெடக்கும் குளிரில் வந்திறங்கிய போதே, துயிலெழும் பெண் சோம்பல் முறிப்பது போல குளிர்மூட்டத்தில் அழகாகத் துலங்கத் தொடங்கியிருந்தது குருகுலம். அந்த ஊட்டிக் குளிரிலும் வெற்றுடம்புடன் வெங்கலச் சிலையாக வீற்றிருந்தார் நாராயண குரு; தூய ஞான தாகத்தின் முன் தனது சகல திரைகளையும் களைந்து நிற்கும் சத்தியம் போல. நடைபாதைகளில் பூத்திருந்த ஊதாப் பூக்களின் இன்முக வரவேற்பைத் தொடர்ந்து ஆவி பறக்கக் குடித்த கருப்பட்டிக் காப்பி அந்தக் குளிர் காலை நேரத்தைக் கதகதப்பாக்கியது. கேரளக் கோயிலும், ஜப்பானிய பௌத்த பகோடாவும் இணைந்த அமைப்பில் இருந்த குரு நித்ய சைதன்ய யதியின் சமாதி அந்த மலைமுகடுகளில் சூட்டிய ஒரு ஆபரணம் போன்று தோற்றமளித்தது.

ooty-gurukulam-nithya-samadhi
(புகைப்படம்: சேதுபதி அருணாசலம்)

அங்கு வந்திருந்தவர்கள் எல்லோருக்கும் (சுமார் 50 பேர்) இந்நேரம் தலைகீழாக மனப்பாடமாகியிருந்த கூட்டத்தின் நிபந்தனைகளைக் கடைசியாக இன்னொரு முறை ஜெயமோகன் எடுத்துரைத்தார். முதல் அமர்வு ஆரம்பித்தது.

ஆண்டனி டி மெல்லோ என்ற கத்தோலிக்க பாதிரியார் கூறிய குட்டிக் கதைகளை சிறில் அலெக்ஸ் சொன்னார். ஆண்டனி டி மெல்லோ கத்தோலிக்க நிறுவன அமைப்பில் மத போதகராக இருந்தும் இந்து,பௌத்த தத்துவங்களால் ஈர்க்கப் பட்டவர். கிறிஸ்துவை ஆன்மீக சாரமாக முன்வைத்தும், நிறுவன மயமாக்கலுக்கு எதிராகவும் அவர் கூறிய கருத்துக்கள் திருச்சபை அதிகார பீடங்களுக்கு கடுப்பை ஏற்படுத்தின. அவரது புத்தகங்கள் திருச்சபையால் தடைசெய்யப் பட்டன என்பதும் குறிப்பிட்டத் தக்கது. இந்தக் கதைகளை கிறிஸ்தவ மத அமைப்பு என்ற பின்னணியை மட்டும் வைத்துப் பார்க்காமல், தனிமனித சுயமுன்னேற்ற (self improvement) கருத்துக்கள் என்ற நோக்கிலும் தான் அணுகுவதாக அலெக்ஸ் சொன்னார். அந்தக் கதைகள் சிறப்பாகவே இருந்ததாக எனக்குத் தோன்றியது. அவை ஏமாற்றமளித்தன என்று வேறொரு நண்பர் சொன்னார்.

ooty-gurukulam-auditorium
நிகழ்ச்சிகள் நடந்த அரங்கு (புகைப்படம்: சேதுபதி அருணாசலம்)

ஒரு ஊரிலிருந்து அமேசான் காட்டுக்குப் போய்விட்டு வந்து ஒருவன் சொன்ன அனுபவத்தைக் கேட்ட அந்த ஊர்மக்கள், அதை வைத்து வரைபடம் ஒன்றை உருவாக்குகிறார்கள். பிறகு உண்மையான காட்டை மறந்து விட்டு வரைபடத்தையே காடாக எண்ணிக் கொள்கிறார்கள்; அந்த ஊரிலிருந்து பிறகு யாருமே அமேசானுக்குப் போக முற்படவில்லை என்று ஒரு கதை. இதை வைத்து ”அனுபவம்” என்பது பற்றி ஒரு நீண்ட விவாதம் நடந்தது.எல்லா அனுபவங்களையும் சொல்லிவிட முடியுமா? கடவுள் அனுபவம் என்பது முற்றிலும் அகவயமான, அந்தரங்கமான ஒன்றா? என்று அலசல்கள். “அனுபவம்” (அனு+பவம்) என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் பொருள் ”நிகழ்தலைப் பின்தொடர்தல்” என்று நான் சொன்னேன். வம் (நிகழ்தல்) என்ற சொல்லுக்கும், பாவம் (உணர்தல்) என்ற சொல்லுக்கும் சம்ஸ்கிருதத்தில் ஒரே வேர்ச் சொல் தான் என்று ஜெ.மோ குறிப்பிட்டார்.அனுபவம் என்ற அந்தச் சொல்லே அதன் ஆழமான உட்பொருளை அபாரமாகப் பொதிந்து வைத்திருப்பதாக எனக்குத் தோன்றியது.

தன் பொய்யைத் தானே நம்ப ஆரம்பிப்பது எங்கு இட்டுச் செல்லும் என்பது குறித்தது இன்னொரு கதை (மக்கள் தன்னை நதிக்கரையில் தொந்தரவு செய்யாமலிருக்க அங்கு பூதம் இருக்கிறது என்று கதையைக் கிளப்பி விடுகிறார் ஒரு சாமியார். தொந்தரவு நின்று விடுகிறது. பிறகு சில காலம் கழித்து அவரும் மக்களுடன் சேர்ந்து பூதத்திற்குப் பயந்து ஓடுகிறார்). தீர்க்கதரிசி என்ற கோட்பாட்டுக்கு எதிரான அம்சம் இந்தக் கதையில் உள்ளதா, அடிப்படை கிறிஸ்தவ இறையியலேயே ஆக்கிரமிப்பு கருதுகோள் உள்ளதா என்ற காரசாரமான கருத்து மோதல் இதைத் தொடர்ந்தது. பழங்குடிகளையும், பழைய கலாசாரங்களையும் அழித்தது கிறிஸ்தவ/மேற்கத்திய வன்முறை. அப்படிப் பார்த்தால், அவற்றை இணைத்து ஒன்றாக்கிய (assimilation) இந்து/இந்திய கலாசார செயல்பாடும், குறைந்த அளவில் இருந்தாலும் கூட கருத்தியல் ரீதியில் ஒரு வன்முறை தானா என்ற திசையில் விவாதம் சென்றது. மார்க்சியம், சீன கலாசார புரட்சி பற்றியும் பேசினோம். விவாதம் சூடாகி, உரத்த குரல்கள், கூச்சல்கள் ஒருசில சமயங்கள் எழுந்த போதும் தனிப்பட்ட தாக்குதல்களோ, வசவுகளோ இல்லவே இல்லை. இந்த விவாதம் மட்டுமல்ல, இந்த மூன்று நாள் கூட்டத்தின் எல்லா அமர்வுகளிலும் அத்தகைய ஒரு ஒழுங்கையும், பரஸ்பர புரிதலையும் காண முடிந்தது. மாற்றுக் கருத்துக்கள் மோதுவதற்கு இப்படி ஆரோக்கியமான ஒரு இடம் தமிழ்ச் சூழலில் இருக்கிறது என்று காண்பதே சந்தோஷமான விஷயமாக இருந்தது.அதையே இந்தக் கூட்டத்தின் மிகப் பெரிய வெற்றியாக நான் கருதுகிறேன். நிந்தனைகள் இல்லாதிருந்ததற்கு நிபந்தனைகளும் ஒரு முக்கியக் காரணம் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

மதியம் இந்திய சிந்தனை மரபின் நான்கு அடிப்படையான பேசுபொருட்கள் குறித்து ஜெயமோகன் உரையாற்றினார். அத்வைதம், துவைதம், சைவசித்தாந்தம், சமணம், பௌத்தம் என்று எல்லா இந்திய ஞானமரபுகளும் இந்த அடிப்படையான நான்கு விஷயங்களில் தங்கள் நிலைப்பாடுகள் என்ன என்பதனை முன்வைத்தே வளர்ந்து முன் நகர்ந்தன என்றார் அவர். அவை – விடுதலை (முக்தி, மோட்சம்), மையம் (பிரம்மம், பிரபஞ்சத்தின் சாரமான பொருள்), ஊழ் (விதி, கர்மவினை), அறம் (சம்சாரம், வாழ்க்கைச் சுழல்) என்பனவாகும். இந்தக் கருத்துக்களை ஏற்கனவே பலமுறை ஜெ.மோவே எழுதியுள்ளார் என்றாலும், இத்தகைய தொகுப்பு நோக்கில் நேரடியாக, வாய்மொழியாக அதனை விளக்கியது சிறப்பாக இருந்தது. இந்த உரையை அவரது வலைத்தளத்தில் படிக்கலாம். உயர்தத்துவ தளம் என்பதாலோ என்னவோ இந்த அமர்வில் அவ்வளவாக கேள்விகள், விவாதங்கள் இல்லை.

ooty-view-1

மாலை நடையாகக் கிளம்பி,அடுக்கடுக்கான தேயிலை எஸ்டேட்டுகளின் ஊடே புகுந்து ரம்மியமான பசுமைக் காட்சிகளை ரசித்துக் கொண்டு நண்பர்கள் குழுவாகப் பல்வேறு விஷயங்களையும் பேசிக் கொண்டு சென்றோம். நாங்கள் நடந்து சென்ற காட்டுப் பாதைக்கு மேற்புறம் முழுக்க யூகலிப்டஸ் மரங்கள். திட்டமிட்டு அவற்றை அங்கு கொண்டு வந்து நட்டு அந்தக் காட்டின் சூழல் சமநிலையை சீர்குலைத்த ஆங்கிலேயர்களின் தலைக்கனத்தை தைல வாடையடித்துப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. கீழ்ப்புறம் shola forest என்று சொல்லப் படும் இயற்கையான காடு இந்த தேசத்தின் மகத்தான பண்பாடு போன்று அலையடித்துக் கொண்டு வீரியத்துடன் விரிந்து கிடந்தது.அங்கு இப்போதும் பலவகையான விலங்குகள் உண்டு என்று ஜெ.மோ சொன்னார்.

காட்டுப் பாதையில் நடந்து மேலேறி அந்த மலைச்சரிவின் உயரமான புள்ளியை அடைந்த போது, அங்கு ஏற்கனவே போயிருந்த குழுவினர் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. பேச்சு ஆரியர் படையெடுப்பு, சிந்து வெளி நாகரிகம் பற்றி! தமிழர்களின் எந்த “உச்ச கட்ட” விவாதமும் இங்கே தான் போய் நிற்கும் போல :)) அங்கிருந்த ஒரு watch tower மீதேறி மேகங்களில் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி காட்டும் தூர தூர மலைத் தொடர்களைப் பார்த்தது ஒரு பரவச அனுபவம். மழைக்காலத்தில் வந்தால் மேகங்கள் கேரள திசையிலிருந்து புறப்பட்டு வானத்தில் ஒவ்வொன்றாக நீந்தி வருவது போன்ற காட்சியே தெரியுமாம்!

திரும்பிச் செல்லத் தொடங்கிய போதே, லேசாக இருட்ட ஆரம்பித்து விட்டது. பேச்சு சுவாரஸ்யத்தில் எஸ்டேட்டில் இருந்து பிரியும் ஒரு பாதைக்குள் நுழைந்தோம்.ஒரு முக்கால் மணி நேரம் நடந்த பிறகு தான் கீழிறங்கிச் செல்லும் அந்தப் புதர்கள் மண்டிய பாதை சாலைக்கல்ல வேறு எங்கோ இட்டுச் செல்கிறதோ என்று சந்தேகம் ஏற்பட்டது. ஒரு இடத்தில் புதர்கள் முற்றிலுமாக மண்டி பாதையே அடைத்திருந்தது. அப்போது முழுதாக இருட்டி விட்டது. செல்போன்கள் தீப்பந்தங்களாகி வழிகாட்ட, வந்த வழியிலேயே திரும்பி நடக்கத் தொடங்கினோம். அங்கங்கே கிளைத்துப் பிரிந்து சென்று கொண்டிருந்த புதர்ப்பாதைகள் குழப்பத்தை ஏற்படுத்தின. ஒருவழியாக எஸ்டேட் பகுதிக்குள் திரும்பி வந்து சரியான பாதையைப் பிடித்து சாலைக்கு வந்து விட்டோம். சில இலக்கிய விவாதங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், இதுவும் ஒரு நல்ல திகில் அனுபவமாகவே இருந்தது.

அன்றிரவு 7-8 சங்க இலக்கியப் பாடல்கள் வாசிக்கப் பட்டன (முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்…, குக்கூ என்றது கோழி..). இதில் ‘பாழ் காத்திருந்த தனிமகன் போன்றே’ என்று முடியும் அபாரமான அந்தப் பாடல் எனக்கும் மிகவும் பிடித்த ஒன்று. சங்கப் பாடல்களின் எளிய சித்தரிப்புத் தன்மை, சிக்கல்கள் இல்லாத நேரடியான நுண்விவரிப்புகள்,அக உணர்வுகளின் பிரதிபலிப்பாக வரும் இயற்கைச் சித்திரங்கள் ஆகிய விஷயங்கள் குறித்துப் பேசினோம்.

************

இரண்டாம் நாள் காலை கம்பராமாயணத்துடன் தொடங்கியது. நாஞ்சில் நாடன் கம்பன் காவியம் பற்றிய சுவாரஸ்யமான அறிமுகத்தை அளித்தார். மும்பையில் வசித்த காலத்தில், பத்மநாபன் என்ற வைணவப் பெரியவர் வீட்டுக்குச் சென்று அவரிடம் கம்பராமாயணம் பன்னிரண்டாயிரம் பாடல்களையும் முறையாகப் பாடம் கேட்டாராம் அப்போது நாத்திகராக இருந்த நாஞ்சில்! கேட்டதும் மெய்சிலிர்த்தது.

ooty-nanjil-sharma-jemo
நாஞ்சில் நாடன், ராமச்சந்திர சர்மா, ஜெயமோகன் (புகைப்படம்: சேதுபதி அருணாசலம்)

ராமனைத் தேடி வரும் பரதனைக் கண்டு குகன் நெகிழ்ந்து கூறும் பாடல் (நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்..), போரிட்டு வீழ்ந்து கிடக்கும் ஜடாயுவைக் கண்டு ஆற்றாமையுடன் ராமன் அலமறும் பாடல் (நின்றேனும் நின்றேன் நெடுமரம் போல் நின்றேனே..) வதையுண்டு கிடக்கும் வாலி வாதிடும் பாடல் (’வீரமன்று விதியன்று மெய்மையின் வாரமன்று..’), அனுமன் இலங்கையை எரியூட்டித் திரும்பியதும் ராவணன் தன்னை நொந்து கொள்ளும் பாடல் (’கெட்டது கொடிநகர்..’), மண்டோதரி புலம்பல் (’வெம்மடங்கல் வெகுண்டனைய சினமடங்க..’)..இப்படி நாஞ்சில் தெரிவு செய்திருந்த பதினெட்டு கம்பன் பாடல்களையும் ஒவ்வொன்றாக விளக்கிய போது அரங்கு முழுவதுமே அதில் லயித்து விட்டது. நடுநடுவே கம்பனின் மற்ற பல பாடல்களும் உரையாடல்களில் கூறப்பட்டு சுவையை அதிகரித்தன. காலங்கள் கடந்து நிற்கும் ஒரு முழுமையான classical காவியத்தின் கவிதை சாத்தியங்களின் தளம் எந்த அளவுக்கு பிரம்மாண்டமானது என்று கம்பனில் அவ்வளவு பரிச்சயம் இல்லாத இளம் இலக்கிய வாசகர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த அமர்வு அமைந்திருந்தது. கம்பன் தனது கவிதை வடிவமாக விருத்தத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன், கம்பனின் கவிதைகளில் எல்லா இடங்களிலும் அதீதமான மிகை உணர்ச்சி உள்ளதா,அறத்தின் நாயகனான ராமனைப் பாடவந்த கவி வாலி, ராவணன் என்று ஒவ்வொரு பாத்திரத்தையும் சித்தரிக்கும்போது அவைகளின் தரப்புக்கு முழுமையாக நியாயம் செய்யும் விதம் – இப்படிப் பல விஷயங்களை இதன் ஊடாக அலசினோம். ராமகாதையின் பண்பாட்டு, கலாசார அம்சங்கள் பற்றியும் பேசப் பட்டது.

பார்வையாளர்கள் முழுமையான ஈடுபாட்டோடு பங்கு கொண்டு ரசித்த அமர்வு இது. தனிப்பட்ட அளவில்,கல்லூரிக் காலத்தில் கம்பன் கழகப் பேச்சுக்களுக்குப் பின் நான் நழுவ விட்டு, ஆனால் எனக்குள் அடியாழத்தில் ஒளிந்து கொண்டிருந்த கம்பன் மீண்டும் வந்து என்னைத் தழுவிக் கொண்ட அனுபவம் எனக்கு. அதற்காக ஜெயமோகனுக்கும், நாஞ்சிலுக்கும் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.

பிறகு திவ்யப் பிரபந்தத்திலிருந்து பத்து பாடல்களை எடுத்துக் கொண்டு நான் பேசினேன்.

ooty-jataayu-speaks
(புகைப்படம்: சேதுபதி அருணாசலம்)

முழுமை கருதி நம்மாழ்வாரின் தத்துவ ஆழம் கொண்ட சில பாடல்களையும் சேர்த்திருந்தேன். அந்த இடத்தில் கவிதையிலிருந்து கொஞ்சம் அதிகமாகவே தத்துவத்துக்குள் புகநேர்ந்தது சிலருக்கு உவப்பானதாகவும், வேறு சிலருக்கு தேவையில்லாத ஒன்றாகவும் பட்டது. நம்மாழ்வாரின் கவிதைகளை விட மிகவும் ஈர்ப்புடன் ஆண்டாளின் கவிதைகள் ரசிக்கப் பட்டன. இந்த உரையின் கட்டுரை வடிவத்தை விரைவில் ஒரு தனிப் பதிவாக இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

சைவ இலக்கியப் பாடல்கள் குறித்து மரபின் மைந்தன் முத்தையா பேசுவதாக இருந்தது. அவர் வரமுடியாததால், ஜெயமோகனே பத்து பாடல்களை எடுத்துக் கொண்டு இது பற்றிப் பேசினார். சைவத் திருமுறைப் பாடல்களில் வைப்பு முறை என்பதன் முக்கியத்துவம் பற்றி நன்றாக விளக்கினார்.(உதாரணமாக, “ஞானம் காட்டுவர் நன்னெறி காட்டுவர், தானம் காட்டுவர் தன்னடைந்தார்க்கலாம்.. “ என்ற பாடலில் ஞானம், நன்னெறி, தானம் என்பவை வரும் வரிசையே ஒரு தத்துவத்தை, கருத்தைச் சொல்வதாக உள்ளது. இதற்கு வைப்பு முறை என்று பெயர்). சிவபிரானின் அருவம்-உருவம், கோரம்-சாந்தம் ஆகிய முரண்பாடுடைய அம்சங்கள் கவிதையில் இயைந்து வரும் விதம் பற்றிக் கூறியதும் சிறப்பாக இருந்தது. ஜெயமோகனது இந்த உரையினை அவரது வலைப்பதிவில் படிக்கலாம்.

இரவு நிகழ்வில், செல்வ புவியரசன் (இவர் தமிழினி இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர்) திராவிட இயக்க காலகட்டத்திய மரபுக் கவிதைகள் பத்தை எடுத்துக் கொண்டு பேசினார் – முடியரசன்,சுரதா, கம்பதாசன், திருலோக சீதாராம், ச.து.சு யோகியார், கண்ணதாசன், தேசிக வினாயகம், ம.லெ தங்கப்பா ஆகியோரது கவிதைகள். இவை தட்டையாகவும், பல நேரங்களில் பிரசார தொனியுடனும், நல்ல கவிதையின் முக்கிய அம்சமான பூடகப் பொருள் (subtext) இல்லாமலும் இருப்பதாக கருத்துத் தெரிவிக்கப் பட்டது. கற்றோர்களின், பண்டிதர்களின் சபைக்கு வெளியே வந்து கவிதை ஜனநாயகப் படுத்தப் படும்போது இது கட்டாயம் நிகழ்ந்தே தீரும்; பாரதி உட்பட இதற்கு விதிவிலக்கல்ல என்று ஜெயமோகன் பல உதாரணங்களுடன் விளக்கினார். ஒரேயடியாக நிராகரிக்காமல் இதுவும் ஒரு கவிதை வகை (genre) என்று புரிந்து கொண்டால், இவற்றின் அரசியல், பிரசார தொனி அம்சங்களை விலக்கி, கவிதையைப் பிரித்தெடுக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார். இந்த கட்டத்திலிருந்து புதுக்கவிதையின் பல போக்குகள் எப்படி வளர்ந்தன என்பது பற்றியும் சுருக்கமாக பேசப்பட்டது.

எல்லா நாட்களும் உணவு, தேனீர் ஏற்பாடுகள் அருமையாக இருந்தன. இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைந்து நடத்திய ஜெ.மோவின் ஈரோடு இலக்கிய வாசகர்கள் குழாம் (கிருஷ்ணன்,அரங்கசாமி, விஜயராவன்..) மிகவும் பாராட்டுக்குரியது. தங்கள் சொந்த முனைப்பில் குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக இந்த ஏற்பாடுகளை அவர்கள் செய்திருந்தார்கள்.

ooty-view-2

நாராயண குருகுலத்தை இப்போது கவனித்துக் கொண்டிருக்கும் சுவாமி தன்மயா (பூர்வாசிரமத்தில் டாக்டர் தம்பான்) அசாதாரணமான எளிமையுடன் தோற்றமளிக்கும் ஒரு அதிசயமான ஆளுமை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களைக் கொள்ளையடிப்பது முதல் பதஞ்சலி யோக சூத்திரம் வரை பல்வேறு விஷயங்கள் குறித்து அவருடன் காலை, மாலை நேரங்களில் அளவளாவும் நற்பேறு கிடைத்தது. குரு நித்யாவின் மாணவராக இங்கு வந்த சுவாமிஜி வெற்றிகரமான அலோபதி மருத்துவராக முன்பு பணியாற்றியிருக்கிறார். தற்போது மாற்று மருத்துவம், பாரம்பரிய மருத்துவ முறைகளை பரவலாக கிராம மக்களுக்கு கொண்டு செல்லுதல் ஆகியவற்றில் மிக்க ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார். கல்வியும், சிந்தனையும் பெருகப்பெருக பண்டைய மரபார்ந்த வழிபாடுகளும், தாந்திரீக ஞானங்களும் பின்னடைவது குறித்தும், இவற்றை சமன்வயப்படுத்த வேண்டியது குறித்தும் சுவாமி என்னிடம் பேசினார். The Alphabet Versus the Goddess என்ற புத்தகத்தை அறிமுகம் செய்தார். இந்திய மொழியியலில் தத்துவார்த்தமான பல தளங்கள் உள்ளன என்பதையும் த்வனி என்பதன் முக்கியத்துவம் பற்றியும் கூறினார். பர்த்ருஹரியின் ’வாக்யபதீயம்’ என்ற நூல் (Oussiparambil என்ற ஒரு கேரள கிறிஸ்தவ அறிஞர் உரை எழுதியது) இத்திறக்கில் படிக்கவேண்டியது என்று பரிந்துரைத்தார். கருப்பட்டிக் காபி போடுவது முதல் கழிப்பறைகளை கழுவுவது வரை குருகுலத்தின் அனைத்து பணிகளையும் சுவாமி செய்வார் என்று ஜெ.மோ சொன்னார். மகாபாரத போரின்போது ஒவ்வொரு நாளும் மாலையில் குதிரைகளைக் குளிப்பாட்டி, அவற்றுக்குத் தீவனம் வைத்து, அவற்றின் உடலை வருடி ஆறுலளித்த வேதாந்த குருவான தேரோட்டி என் மனதில் வந்து போனான்.

**************

ஞாயிறு காலை நவீனக் கவிதைகள் வாசிப்பு நிகழ்வு. க.மோகனரங்கன், இளங்கோ கிருஷ்ணன், ‘இசை’, ‘வீணாப் போனவன்’, லக்ஷ்மணராஜா ஆகிய கவிஞர்கள் தங்கள் கவிதைகளை வாசித்தனர். இவற்றின் நிறைகளையும், சிறுகுறைகளையும் தொட்டுச் செல்வதாக விமர்சனங்கள் இருந்தன. படிமக் கவிதை, நீண்ட வாக்கியங்கள் கொண்ட விவரணக் கவிதை (rhetorical poem), பழைய மரபார்ந்த பேசுபொருள்களையே அங்கத தொனியுடன் கூறும் கவிதைகள், நவீனத்துவ காலகட்டத்திய கவிதைகளில் தொனிக்கும் மிதமிஞ்சிய கசப்புணர்வு ஆகிய விஷயங்கள் பற்றிய செறிவான கருத்துக்கள் வந்தன. கூட்டத்திற்கு வந்திருந்த மூத்த கவிஞர் தேவதேவன் தனது “மார்கழி” தொகுப்பிலிருந்து இரண்டு அற்புதமான கவிதைகளை வாசித்தார் (நல்லிருக்கை போலிருந்த…’, ‘கவிதை எழுதுவது மிகமிக எளிது…’). தேவதேவனின் கவிதைகள் நவீன காலகட்டம் சார்ந்ததாயிருந்தும், கசப்புணர்ச்சிகளை மையப்படுத்தாது உயிரின் இயல்புநிலை ஆனந்தம் என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றன என்று ஜெமோ விளக்கினார். தேவதேவனின் மரம், வீடு, பறவை ஆகிய எளிய படிமங்கள் எப்படி அவரது கவிதைகளில் பேருணர்ச்சி கொள்கின்றன என்று உதாரணங்களுடன் ஜெமோ பேசியது கவிதானுபவம் பற்றியும், கவிதை “திறப்பு” பற்றியதுமான சிந்தனைகளைத் தூண்டுவதாக அமைந்தது.

இந்த இரண்டரை நாட்களில் இரண்டாயிரம் ஆண்டுக்கால தமிழ்க் கவிதையின் பல வீச்சுக்களையும், பரிமாணங்களையும் வண்ணத் தீற்றல்களாக அனுபவிக்க முடிந்தது. சங்கம் மருவிய கால காப்பியங்கள் பற்றிப் பேசுவதாக இருந்தவரால் வர முடியவில்லை என்று சொன்னார்கள். அவரும் வந்திருந்தால் இன்னுமே முழுமையாக இருந்திருக்கும்.

ooty-view-3

இந்த சந்திப்பில் பல நண்பர்களையும், பெரியவர்களையும் அறிமுகப் படுத்திக் கொள்ளும், சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தீவிரமான இலக்கிய ஆர்வமும் சிந்தனை தாகமும் கொண்டவர்கள், கற்றுக் கொள்வதற்கென்றே வந்திருந்தவர்கள், பல்வேறு வயதினர், பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள், பல்வேறு விஷயங்களில் ஆர்வமுள்ளவர்கள்.

பட்டறை என்ற பெயர் தனக்குப் பிடிப்பதில்லை என்றார் ஜெயமோகன் (எனக்கும் தான், உடனடியாக உலைக்களம் ஞாபகம் வருகிறது!). இத்தகைய கூடுதல்கள் மனங்களின், கருத்துக்களின், எண்ணங்களின் சந்திப்பாக, உரையாடலாக இருப்பது தான் பொருத்தமானது. “ஒன்று சேர்ந்து விவாதிப்போம், நம் மனங்கள் ஒன்றாகுக!” என்ற ரிக்வேதப் பாடல் சொல்வதும் இதைத் தான் என்று நினைக்கிறேன்.

மதியத்திற்குப் பின் பத்து பேர் இருந்தோம், மற்றவர்கள் அனைவரும் கிளம்பி விட்டார்கள். அன்று மாலை இந்தச் சிறிய குழு கிளம்பி எஸ்டேட்டில் இன்னொரு பக்கமாக மாலை நடை சென்றோம். அந்த அனுபவம் இன்னும் நெருக்கமானதாகவும், நினைவில் நிற்கக் கூடியதாகவும் இருந்தது. திரும்பி வந்து குருகுலத்தின் மும்மதப் பிரார்த்தனையில் கலந்து கொண்டோம்.பிரார்த்தனை முடிந்தபின் நண்பர்கள் கேட்டுக் கொள்ள சிறில் அலெக்ஸும் நானும் சில பக்திப் பாடல்கள் பாடினோம். பக்திப் பாடல்கள் பற்றி சுவாரசியமாகப் பல விஷயங்களையும் பேசிக் கொண்டிருந்தோம்.

மனமெங்கும் ததும்பிய ஒரு அலாதியான நிறைவுடனும், பூரிப்புடனும் அன்றிரவு பெங்களூருக்கு பஸ் ஏறினேன்.

பி.கு:

சேதுபதி அருணாச்சலம் எடுத்த மற்ற புகைப்படங்கள் இங்கே.

‘விழியன்’ இந்த சந்திப்பின்போது எடுத்த படங்களை அவரது வலைப்பதிவில் காணலாம்.

15 Replies to “ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்”

  1. நேரே சென்று வந்தது போல இருக்கிறது இந்த கட்டுரை… அருமை. இது போன்ற இலக்கிய சந்திப்புகள் அடிக்கடி நடக்கவேண்டும். இதற்கு முன் எழுதிய அகமதாபாத் பயணக்கட்டுரை போன்ற சுவாரசியமான அனுபவக் கட்டுரைகள் ஆசிரியரின் எழுத்தில் அற்புதமாக மிளிர்கின்றன…

  2. மிக விரிவான பகிர்வு , கம்பராமாயணம் முதல் அனைத்து இலக்கியங்களிலும் உங்களுக்குள்ள பச்சர்யமும் , நினைவுத் திறனும் பிரமிக்க வைத்தது , நன்றி

  3. இந்த நிகழ்வு பற்றி ஜெயமோகனின் பதிவு – https://www.jeyamohan.in/?p=7975

    பதிவின் கடைசியில் மேலும் பல அருமையான புகைப்படங்களுக்கு சுட்டிகள் உள்ளன.

  4. ஒரே ஒரு கருத்து வேறுபாடு- ஆழ்வார்களுடைய பாடல்களைக் “கவிதை” என்று கூறுவது பொருந்தாது என்று நினைக்கிறேன். கவிஞர்கள் தாம் சொந்தமாக முயற்சி செய்து எழுதுபவர்களாக இருக்கலாம்; ஆழ்வார்களோ எம்பெருமான் அருளால் “மயர்வற மதிநலம்” பெற்று, அவனருளால் அந்த ஞான ரூபமான பக்தி சொல் வடிவில் வெளிவந்தது என்பர். உதாரணமாக ஆண்டாள் சின்னஞ்சிறு சிறுமியாக இருந்த பிராயத்தில் தான் திருப்பாவை, நாச்சியார் திருமொழி முதலானவற்றை நமக்குத் தந்தார். அவர் பாடசாலைக்கோ கல்லூரிக்கோ சென்று தமிழ் கற்றிருக்க வாய்ப்பில்லை.

    மற்றபடி, நல்ல ஆர்வமூட்டும் கட்டுரை. படிக்க சுவையாக இருந்தது.

  5. Vanakkam Jatayu.
    Over 8 years now, I have been reading AND keenly following your opinions.
    Thank you for this post.
    I am EAGER to know the background of your stunning name, JATAYU.
    If possible, please inform.
    Thank you and God Bless,
    Anbudan,
    Srinivasan. V.
    Perth, Australia.
    srinaren17@gmail.com

  6. நல்ல பதிவு ஜடாயு. நிகழ்ச்சியை பருந்துப்பார்வையில் பல விஷயங்களையும் நினைவில் வைத்திருந்து எழுதியிருக்கிறீர்கள்.
    //
    சில இலக்கிய விவாதங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், இதுவும் ஒரு நல்ல திகில் அனுபவமாகவே இருந்தது.
    //

    இந்த வரியை ரசித்தேன்.

    //க.மோகனரங்கன், இளங்கோ கிருஷ்ணன், ‘இசை’, ‘வீணாப் போனவன்’, ‘விழியன்’ ஆகிய கவிஞர்கள் தங்கள் கவிதைகளை வாசித்தனர்.//

    அவர் விழியன் இல்லை. லக்‌ஷ்மணராஜா. இவர் வேறு. நீங்கள் புகைப்பட இணைப்பாகத் தந்திருக்கும் விழியன் வேறு.

  7. நன்றி சேது.

    // அவர் விழியன் இல்லை. லக்‌ஷ்மணராஜா. இவர் வேறு. நீங்கள் புகைப்பட இணைப்பாகத் தந்திருக்கும் விழியன் வேறு.//

    ஓ, இவரும் ஒரு பெரிய காமிராவை எப்போதும் தூக்கி வைத்துக் கொண்டிருந்ததால் குழம்பி விட்டேன். ஆசிரியர் குழுவுக்கு, தயவு செய்து கட்டுரையில் திருத்தி விடுங்கள்.

  8. ஸ்ரீகாந்த், கோவை அரன், கந்தர்வன், ஸ்ரீனிவாசன்: மிக்க நன்றி.

    // ஆழ்வார்களுடைய பாடல்களைக் “கவிதை” என்று கூறுவது பொருந்தாது என்று நினைக்கிறேன். //

    கந்தர்வன், அவை அபாரமான கவிதைகள் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார் பாடல்கள். சமய ரீதியாக மட்டுமல்ல, தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இவற்றுக்கு உரிய இடம் உண்டு.

    // கவிஞர்கள் தாம் சொந்தமாக முயற்சி செய்து எழுதுபவர்களாக இருக்கலாம்; ஆழ்வார்களோ எம்பெருமான் அருளால் “மயர்வற மதிநலம்” பெற்று, அவனருளால் அந்த ஞான ரூபமான பக்தி சொல் வடிவில் வெளிவந்தது என்பர். //

    எந்த நல்ல கவிஞர் எழுதும் நல்ல கவிதையுமே ஒரு அகமுக அனுபவத்தில் பொங்கி வருவது தான், “யோசித்து” எழுதுவதல்ல. ஆனால் அத்தகைய அக அனுபவங்கள் உருவாகும் தருணங்கள் வாய்ப்பதற்கு பல்லாண்டுக் கால உழைப்பு, நீடித்த கவிதை உபாசனை, மொழித் திறன், கல்வி – வாசிப்பு எல்லாமே தேவைப் படுகிறது. இதற்கு ஆழ்வார்களும் விதிவிலக்கல்ல.

    // உதாரணமாக ஆண்டாள் சின்னஞ்சிறு சிறுமியாக இருந்த பிராயத்தில் தான் திருப்பாவை, நாச்சியார் திருமொழி முதலானவற்றை நமக்குத் தந்தார். அவர் பாடசாலைக்கோ கல்லூரிக்கோ சென்று தமிழ் கற்றிருக்க வாய்ப்பில்லை.//

    இதனை நான் நம்பவில்லை. மகாகவியான ஆண்டாள் முறையாகத் தமிழ் கற்றவள் என்று தான் கருதவேண்டியுள்ளது; அப்படிக் கருதுவதால் அவளது பெருமைக்கு இழுக்கொன்றும் வந்துவிடாது. மேலும், அவளை வளர்த்த தந்தையான பெரியாழ்வாரும் ஒரு பெரும் கவிஞர், அந்தச் சூழலே அவளைக் கவியாக்கி இருக்கலாம்.

    திருப்பாவை அவள் சிறுமியாக இருக்கும்போது எழுதியது. நாச்சியார் திருமொழி இளம்பெண்ணாக இருக்கும்போது.

  9. // I am EAGER to know the background of your stunning name, JATAYU.
    If possible, please inform. //

    வேறென்ன?.. கம்பராமாயணத் தாக்கம் தான் !

  10. Pingback: Indli.com
  11. அன்புள்ள ஜடாயு,

    // ஆனால் அத்தகைய அக அனுபவங்கள் உருவாகும் தருணங்கள் வாய்ப்பதற்கு பல்லாண்டுக் கால உழைப்பு, நீடித்த கவிதை உபாசனை, மொழித் திறன், கல்வி – வாசிப்பு எல்லாமே தேவைப் படுகிறது. //

    நான் சொல்ல நினைத்த சுய முயற்சி நீங்கள் மேற்கண்டபடி கூறியுள்ளதே. சரியான வார்த்தை கிடைக்காததால் “யோசித்து” என்று எழுதினேன். தெளிவுபடுத்தியதற்கு நன்றி.

    கவிஞர்கள் படைப்பில் சுய முயற்சி ஒரு முக்கியமான பங்கு கொள்கிறது என்று நீங்கள் கூறுவதிலிருந்தும் தெரிகிறது. ஆழ்வார்கள் விஷயத்தில் அப்படி இல்லை என்பது பாசுரங்களுக்கு உரையிட்ட சிலருடைய testimony. இதை அவரவர் நம்பலாம், நம்பாமல் போகலாம் அது வேறு விஷயம். ஆழ்வார் பாடல்களுக்கு உரையிட்டு அவற்றைப் பேணி வந்த ஸ்ரீவைஷ்ணவம் என்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பார்வை எப்படி என்பதைத் தெளிவுப் படுத்த நினைத்தேன்; அவ்வளவே.

    ஆழ்வார் பாடல்களைக் “கவிதை” என்று கூறுவது சற்று incomplete-ஆக உள்ளது என்பது என் தாழ்மையான கருத்து. அது கவிதை மட்டுமல்ல என்பதைப் பலரும் ஆதரிப்பார் என்று நினைக்கிறேன். மிகச் சிறந்த கவிதை நயம் உள்ளது, அதைக் கண்டிப்பாக மறுக்கவில்லை, ஆனால் அதுவும் பாசுரங்களில் உள்ள பல அம்சங்களுள் ஒன்றே. மேலும், ஆழ்வார்கள் பாசுரம் கவிதையாக அமைந்துள்ளது என்பதை incidental என்றே சொல்வேன். அவர்கள் கவிதையை ஒரு medium-ஆக உபயோகித்தனர் என்பது ஏற்கத்தக்க ஒன்றாக நான் கருதுகிறேன். “ஆழ்வார்களின் பாசுரத்தில் கவிதை நயம்” என்பது பொருந்தும், “ஆழ்வார்களின் கவிதைகள்” என்பது பொருந்தாது என்பதே என் கருத்து.

    மற்றபடி ஆழ்வார் பாசுரங்கள் உலகத்தார் அனைவருக்கும் சொந்தமே. இதற்கான exclusive rights எல்லாம் ஒரு தனி நபரிடமோ சமூகமிடமோ கிடையாது என்பது ஆழ்வார்களின் தெய்வீகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் ஆதரிப்பர் என்று நினைக்கிறேன். எழுத்து/சொல் பிழறாமல் யாராக இருப்பினும் வாசித்தால், அவற்றில் ஏதோ ஒரு அம்சத்தை ரசித்தால், அது ஆழ்வாருக்கும் உரையாசிரியர்களுக்கும் ஸ்ரீவைஷ்ணவ சமூகத்திற்கும் திருப்தியையே தரும் என்று நினைக்கிறேன்.

  12. அன்பு நண்பர் ஜடாயு.

    அருமையான எழுத்தோட்டத்துடன், நிகழ்ச்சியை பதிவு செய்துள்ளீர்கள். ஜெயமோகன் நடத்திய இலக்கிய சந்திப்பு குறித்த தெளிவான அறிமுகமாக, கட்டுரை உள்ளது. உண்மையில், அவரது இணையத்திலும் கூட இத்தகைய சித்தரிப்புகள் இல்லை. ஜெயமோகன் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து எழுதியுள்ளார்; நீங்கள் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளீர்கள்.

    //மாற்றுக் கருத்துக்கள் மோதுவதற்கு இப்படி ஆரோக்கியமான ஒரு இடம் தமிழ்ச் சூழலில் இருக்கிறது என்று காண்பதே சந்தோஷமான விஷயமாக இருந்தது.அதையே இந்தக் கூட்டத்தின் மிகப் பெரிய வெற்றியாக நான் கருதுகிறேன். நிந்தனைகள் இல்லாதிருந்ததற்கு நிபந்தனைகளும் ஒரு முக்கியக் காரணம் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது//

    என்ற வரிகள் உணர்வுபூர்வமானவை. எனக்கும் ஆசை இருந்தது, ஜெயமோகன் நடத்திய நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று. ஆனால், நான் பணி புரியும் சூழலும் இடமும் அதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கவில்லை. அந்த ஆசை இப்போது, உங்கள் கட்டுரையைப் படித்த பின்னர் பெரும் வருத்தமாக மாறிவிட்டது. ஆயினும் உங்கள் பதிவின் மூலமாக, இலக்கிய சந்திப்புக்கு வந்தது போல உணர்கிறேன்.

    ஜெயமோகன் பாரதியின் அடியொற்றி, நெஞ்சுக்கு நீதியுடன் எழுதுகிறார். அவருடன் சேரும் யாரும் அவர் போலவே மாறுவார்கள் என்று நான் நினைக்கிறேன். அக்கினிக் குஞ்சு கவிதையை நினனைவு கூர்க. இதற்கு நாஞ்சில் நாடன் ஒரு உதாரணம் போதும். அந்த வகையில் அவருடன் 3 நாட்கள் நீங்கள் தங்கியது பெரும் பேறு. இத்தகைய முயற்சிகள், நமது ”செம்மொழித்” தமிழுக்கு அத்தியாவசியமான தருணம் இதுவே.

    இந்தக் கூட்டத்தை வழி நடத்தியவர்கள், பங்கேற்பாளர்கள், ஏற்பாட்டாளர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். அந்த வகையில், நிகழ்ச்சி குறித்த அற்புதமான பதிவை ஆவணமாக வழங்கியுள்ள உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

  13. இதுதான் உண்மையான செம்மொழி மாநாடு. கோவையில் நடந்தது செம்மறி மாநாடு. இது ஆர்வம் உள்ள தமிழர்களின் கூட்டம். பாராட்டுக்கள். அருமையான வாய்ப்பை தவற விடாமல் கலந்து கொண்டு எங்களிடமும் பகிர்ந்து கொண்ட ஜாடாயு அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    விஸ்வாமித்ரா

  14. அன்புள்ள ஜடாயு,
    உங்களுடனான உரையாடல்களும், உங்களது பேச்சும் மிகவும் சுவாரஸ்யமாகவும் உபயோகமாகவும் இருந்தது. மிக்க நன்றி.

    “கொலை வாளினை எடடா” – மறக்க முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *