தலபுராணம்: ஒரு கருவூலம் – 5 (எச்சரிக்கும் பழங்கதை)

முந்தைய பகுதிகள்:

தொடர்ச்சி…

திரு ச. திருமலை அவர்களின் ‘ஒரு நதியின் நசிவு’ என்ற கட்டுரையைப் படித்தகையோடு, திரு ஜடாயு அவர்கள் இரண்டாண்டுகளுக்கு முன் மொழிபெயர்த்து வெளியிட்ட ‘அன்னை காளி’ என்ற விவேகானந்தரின் கவிதையையும் படிக்க நேரிட்டது.

திரு திருமலை அவர்களின் கட்டுரை மக்களின் அறியாமையினாலும், அலட்சியத்தாலும், வழிவழி வந்த நடைமுறை ஒழுக்கங்களைப் பகுத்தறிவென்றும் நாகரிகம் என்றும் கைவிட்டதால் இந்த மண்ணுலகம் உயிர்வாழ்க்கைக்குத் தகுதியற்றதாகி வருகின்றது என்று சமூக அக்கறையுடன் விளக்குகின்றது. பிளாஸ்டிக்கும் வாகனப் புகையும் தொழிற்சாலைப் புகையும் மரபணு மாற்றப் பெற்ற உணவுகளும் நச்சு மூலங்கள் கலந்த உணவுகளும் , நம்மை நமக்குத் தெரியாமலேயே சிறுகச்சிறுகக் கொன்று வருகின்றன. சமூக, அரசியல் ,பொதுவாழ்க்கை உழல்கள் மலிந்து நடுவு நிலைமை நீங்கி, நல்லோர்கள் வாய்மூடி மவுனிகளாய் இருக்க அல்லோரும் வல்லோரும் கொழித்து வாழும் நிலை நிலவுகின்றது. இது போன்ற நசிவுகளை அறிந்துணராத பாமரமக்கள் இலவசங்களிலும் டாஸ்மக்குக்ளிலும் போலி ஆரவாரங்களிலும் அறிவு மயங்கி இருக்கிறார்கள். நம்முடைய தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் கலந்துவிட்ட இந்த ‘வைரஸ்’ நம்மால் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்குக் கை மீறி விட்டதோ என்ற அச்சம் தோன்றுகின்றது.

திரு. திருமலை அவர்களின் கட்டுரையைப் படித்து முடித்தவுடன் ‘அன்னை காளி’யின் ரெளத்திரம் பொங்கும் அந்தக் கவிதையின் உணர்வும் வந்து தாக்கியது. கவிதையின் முதற்பகுதி ரெளத்திரத்தின் வெப்பம் வெளிப்படுகின்றது.. அன்னையின் மூச்சுக் காற்றாகிய சூறாவளியில் பிரபஞ்சத்தின் மரண சுவாசம் தெரிகிறது. அவளுடைய அசைவில் அண்டகோளங்கள் தெரித்துப் பிளக்கின்றன. அன்னையின் திருவடி அண்டம் அனைத்தையும் கபளீகரம் செய்கின்றது. அன்னையின் இந்த வீராவேசத்தில் ஒன்றிக் கலந்திட சுவாமிகள் நன்மக்களை அழைக்கின்றார்.

“நண்பா
பாழ்மரணத்தையும் பாய்ந்து அணைத்துக்கொள்
அழிவின் ஆட்டத்திலும் கலந்து ஆடு
தாய் உன்னிடம் வருவாள்”

இந்த அழைப்பில், பிரபஞ்சத்தைக் கலைத்துப் போட்டு , அந்தக் களேபரத்தில் மன்பதையைச் செம்மையாகப் படைப்பாள் என்ற நம்பிக்கையும் அதற்கு அன்னையின் குறிப்பின்வழி நிற்பதுவே உய்யும் வழி என்ற தெளிவும் புலனாகின்றது

rajarajeshwari-deviஉலகீன்ற அன்னை கருணையே வடிவானவள். லலிதா சகஸ்ரநாமம் அன்னையை இருமுறை மாத்ரே நம: எனத் துதிக்கின்றது. இது கூறியது கூறல் அன்று. முதலில் பொதுவாகத் துதித்தது. இரண்டாவதாகக் கூறியது, எவ்வுயிர்க்கும் எப்பிறப்பிலும் அவளே அன்னை என்றதால் துதித்தது.

அன்பும் கருணையும் மிக்க அன்னை அழகும் இளமையும் ததும்பும் காமாட்சி, இராஜராஜேசுவரி, மீனாட்சி முதலிய வடிவில் உயிர்களுக்கு அருள் செய்கின்றாள். ஜ்வாலாமுகி, சண்டி முதலிய கோரவடிவில் உயிர்களுக்கு வரும் நலிவுகளை ஒழிக்கின்றாள். பிரபஞ்சத்தைப் புரட்டிப் போட்டுப் புதிதாகப் படைக்கும் அவளுடைய அவதாரம், காளி என்ற வடிவில் புறத்தே கோரமாயினும் அகத்தே கருணையும் அன்பும் நிறைந்ததாகும்.

அன்னையின் ஆயிரம் திருநாமங்களில் ஒன்று “பண்டாஸூர வதோத்யுக்த சக்திசேனா ஸமன்விதா” (65) என்பதாம். இதற்குப் பண்டாசுரனை சம்ஹாரம் செய்ய அதிவிதமானசக்தியுடன் கூடியிருப்பவள் என்பது பொருள்.

மற்றொரு திருநாமம் “காமேச்வராஸ்த்ர நிர்தக்த ஸபண்டாஸுர சூன்யகா’(82) என்பது. ‘மஹா காமேச்வராஸ்த்தினால் பண்டாஸூரனையும் அவனுடைய பட்டணமாகிய சூன்ய நகரத்தையும் அடியோடுகொளுத்தியவள்’ என்பது இதன் பொருள்.

பண்டாசுரனை வதம் செய்த கதை காஞ்சிப்புராணத்தில் கச்சி மயானப் படலத்தில் வருகின்றது. சிவமும் சத்தியும் தாதான்மிய சம்பந்தம் என்னும் பிரிக்க முடியாத சம்பந்தம் உடையவர். ஆதலினால் சிவன் செயல்களையெல்லாம் சத்தியின் செயல்களாகவும் சத்தியின் செயல்களையெல்லாம் சிவன் செயல்களாகவும் கூறுவது கவி மரபு.

பண்டாசுரனை அன்னை அழித்தல் என லலிதா சகஸ்ரநாமம் கூற சிவன் அழித்தார் எனக் காஞ்சிப்புராணம் கூறும்.

இனி, பண்டாசுரனின் கதைக்கு வருவோம்.

முன்னொரு காலத்தில் பிரமகற்பம் சென்று அகோரகற்பத்தில் உயிர்கள் தோன்றித் தழைத்திருந்த நாளில், பண்டாசுரன் என்னும் அசுரன் பிரமனை நோக்கித் தவமிருந்தான். பிரமன் அவனுக்குமுன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, பண்டாசுரன் பிரமனை அடிவணங்கி, “ ஐயனே!, நான் நரர்,சுரர் அசுரர் ஆகியோர் அனைவரின் உடம்பிலும் விரவிக் கலந்து நின்று அவர்களுடைய வீரியம் அனைத்தையும் உண்ண வரம் அருள்க” என்றான். பிரமனும் வேறு வழியின்றி, அவ்வாறே ‘ஆகுக’ என்றான்.

பங்கயன் அவ்வாறே ஆகுக என்றவுடன், பண்டாசுரன் உயிர்களுடன் கூடி உடம்புகளில் வதிந்து அவற்றின் வீரியத்தை உண்ணத் தொடங்கினன். உடல்களின் பற்றுக் கோடாகிய வீரியம்போய் உயிர்கள் வாடின; உடம்புகள் ஒளி மாழ்கி வற்றி வறண்டு வாடிக் குறைந்தன.

lord-shiva-with-shakthiமருத்துவர் இயக்கர் வானவர் அவுணர் மானிடர் சித்தர் கந்தருவர் உருத்திரர் வசுக்கள் இராக்கதர் அரக்கர் உரகர் சாத்தியர் மருத்துக்கள் விரிஞ்சன் முதலாகிய தேவர்களும் பிறரும் திரண்டு கயிலைக்குச் சென்று சிவபிரான் அடிதொழுது தங்கள் குறையைக் கூறினார்கள்.

“வீரியம் குறைந்து வெற்றுடம்பு ஆயினோம். இதற்குக் காரணமும் அறியோம். இதைத் தவிர்க்கும் உபாயமும் அறியோம்” என்று கூறி இறைஞ்சினர்.

இறைவன் நகை முகிழ்த்து, “ உங்களுடைய வீரியம் முழுவதையும் பண்டாசுரன் கவர்ந்தான். அவன் வெளியில் இல்லை. உங்கள் ஒவ்வொருவருடைய உடலிலும் கலந்துள்ளான். (வாயு மண்டிலம் , உண்ணும் உணவு, பருகும் நீர், உயிர்க்கும் மூச்சுக் காற்று அனைத்திலும் விஷம் கலந்து ஒவ்வொருவர் உடலிலும், இனிப் பிறக்குமுடலிலும் நம் அறிவின்றியே தங்கி நம்மை நலிதலைப் போல).

பண்டாசுரன் வெளியில் ஒருவடிவாக இல்லாமல் ஒவ்வொருவரின் உயிருடலில் கலந்து நிற்றலால், அவனை அழிப்பது எப்படி? என இறைவன் வினவினான். கொடுமையும் வலிமையும் வாய்ந்த அசுரர்களது பெயரைக் கேட்டாலே அஞ்சும் தேவர்கள், ஒவ்வொருவர் உடலிலும் பண்டாசுரன் கலந்து தங்கி உள்ளான் எனச் சொல்லக் கேட்டவுடன் மிகவும் கலங்கி அஞ்சித் துதித்து, ‘கடலில் தோன்றிய நஞ்சுண்ட கண்டனே! எவ்வாறாயினும் எம்மைக் காத்தல் உம் கடன்’ எனத் துதித்தனர். பொருள் பொதிந்த இரு துதிப்பாடல்:

“முடிவில் ஆற்றலை தன்வ யத்தினை முற்று ணர்ச்சியை பேரருள்
மடிவில் ஆட்சியை தூய மேனியைமற்றி யற்கை யுணர்ச்சியை
படியி லாஇயல் பாக நீங்கிய பாச நோயை வரம்பிலின்
புடையை உன்னடி யோங்கள் என்றும் உனக்க டைக்கலம் ஐயனே”

இறைவன், எண்குணத்தான் என்பர் (திருக்குறள் 9 பரிமேலழகர் உரை காண்க). எண் குணங்களாவன: தன்வயத்தனாதல்,தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்கல், பேரருள் உடைமை, முடிவிலாற்றல் உடைமை, வரம்பில் இன்பமுடைமை. பேரருளும் முடிவிலாற்றலும் உடைமையினால் நீயே எம்மைக் காத்தலுக்கு உரியை என்றனர். இவ்வெட்டனுள், இறைவனின் பேரருள் எனும் குணமே சிவசத்தியாகிய லலிதாம்பிகை எனப்படும் அவளே அன்னை காளி.

“அண்டம் ஓரணு வாம்வ ளர்ச்சியை அணுவின் நுண்ணியை அண்டமார்
பிண்டம் எங்கணும் நின்ற சைக்கும் நிமித்த னாய்நிறை பெற்றியை
கண்ட யோகியர் சிந்தை மேயினை கரணம் முற்றும் அகன்றனை
ஒண்டொ டிக்கொரு பங்க! யாங்கள் உனக்க டைக்கலம் ஐயனே”

( இறைவன் அண்டங்கள் எல்லாம் அணுவெனும்படியாகப் பெரியன், அணுக்களெல்லாம் அண்டம் எனும்படி நுண்ணியன். அண்டங்களை அசைக்கும் நிமித்த காரணன். எவற்றையும் உடல் கருவி ஆகிய கருவிகள் இன்றி சங்கற்பத்தாலேயே செய்து முடிப்பவன். ஆதலால் உம்மாலேயே இவ்வசுரனைக் கொல்ல இயலும்)

ஓமம் - Homamஇத்துதியைக் கேட்ட சிவபெருமான் மகிழ்ந்து, இமையவர்களை நோக்கி ”பண்டுபோல் வீரியம் பெறுதலே உங்கள் கருத்து எனில் , அதற்கு அவனைக் கொல்ல ஒன்று செயல் வேண்டு; அது உங்களுக்கு இசைந்ததாகுமா? அப்படியன்றி அவனைச் செகுத்தல் உங்களுக்கு அரிது” என வினவினன். அதற்குத் தேவர்கள்,”ஐயனே நீ உலகங்களைக் காத்தல் எங்களைக் கேட்டா செய்கின்றனை? எங்களுக்கு எது நன்மையைத் தருமோ அதனை உடனே செய்தருள்க” என்றனர்.

இறைவன் “இமையோர்களே!, திருக்காஞ்சியில் நெருப்பாகிய இலிங்கம் அமைத்து அதில் அவியென மேவுவீர்” என்றனன். அதற்குத் தேவர்கள், இந்நிலையில் யாங்கள் இங்கிருந்து என்ன பயன்? நின் தழலுருவத்தில் கலந்திடும் இன்பமே மேவுவம்” என்று கூறி செழுந்தழற் பிழம்பொளி எழுப்பினர். இறைவன் வேட்போனாகவும் , வேள்விச் செந்தீயாகவும் மேவினான்.. (சிவ வேள்வியில், சிவனே அக்கினியாக இருந்து நேராக அவிசைப் பெறுகிறான் என்பர்.)

“வேள்வியுந் தானே வேள்விப் பொருள்களுந் தானே வெய்ய
வேள்விவேட் பவனுந்தானே வேள்விகொள் இறையுந் தானே
வேள்வியின் பயனுந் தானே என்பது விளக்கி எம்மான்
வேள்விசெய் தீக்கை யுற்றான் விளங்கருட்சத்தி யோடும்”

(யாகம் செய்வோர் மனைவியுடன் யாக தீக்கை பெற்று இருத்தல் முறையாகலின்,’அருட்சத்தியோடும்வேள்வி செய் தீக்கை உற்றான்’ என்றார்.)

இறைவன் சராசரங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக வேள்வித் தீயில் அவிசாக இட்டான். ஒவ்வோர் உயிருடனும் ஒவ்வோர் உடலிலும் நுட்பமாகக் கலந்திருந்த பண்டாசுரன் அவைநெருப்பில் அவிசாக விழும்போது நீங்கிக் கொண்டே வந்தான். இறுதியில் எல்லாம் அழிந்தபின் பண்டாசுரன் மட்டுமே இருந்தான். வேறுவழியின்றித் தன் வடிவத்தோடு வந்து நின்ற பண்டாசுரனையும் ஐயன் அழலிற் பெய்தான். எல்லா உயிர்களும் அவ்வேள்வித் தீயில் ஒடுங்கி, உறங்கும்போது அடையும் இன்பத்தை அடைந்திருந்தன..

kacci_mayanam_temple

கச்சி மயானம் திருக்கோவில்

பின் அவ்வேள்வித் தீயானது இலிங்க உருவமாகி, அவ்விலிங்கம் மயானலிங்கம் என்றும் அத்தலம் கச்சிமயானம் என்றும் வழங்கப் பெறுவதாயிற்று. அந்த இலிங்கத்தில் இறைவன் இறைவியுடன் , தன்னை வணங்குவோருக்கு இம்மை மறுமைப் பயன்களை வழங்கி வீற்றிருந்தனன் .

ஒருக்கால் நிலைமை நம் கையை மீறி ஐயனும் அம்மையும் பண்டாசுரனை அழிக்கச் செய்தது போல, எல்லாவற்றையும் சங்காரம் செய்து, அழித்துப் போட்டுக் களேபரமாக்கி மீண்டும் புனருற்பவம் செய்வரேயானால், அந்த உக்ர வேள்வியில் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்ள விடுத்த அழைப்பு இது:

“நண்பா
பாழ்மரணத்தையும் பாய்ந்து அணைத்துக்கொள்
அழிவின் ஆட்டத்திலும் கலந்து ஆடு
தாய் உன்னிடம் வருவாள்”

(தொடரும்)

dr-muthukumara-swamyமுனைவர் கோ.ந.முத்துக்குமார சுவாமி அவர்கள் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர்.

சைவசமயத்திலும், மரபிலக்கியங்களிலும் ஆழ்ந்த புலமை வாய்ந்தவர்.

திருமுறைகள், சைவசித்தாந்தம், தல புராணங்கள் ஆகியவை குறித்த விரிவான, ஆழமான கட்டுரைகளைத் தொடர்ந்து தமிழ்ஹிந்து தளத்தில் எழுதி வருகிறார்.

4 Replies to “தலபுராணம்: ஒரு கருவூலம் – 5 (எச்சரிக்கும் பழங்கதை)”

  1. Pingback: Indli.com
  2. மிக சிறந்த கட்டுரை. ஆன்ம பலத்தை கூட்டும் படி உள்ளது.
    மேலும் பல பகுதிகள் வருவதை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளேன்.

    சோமசுந்தரம்

  3. காஞ்சிக்குப் பலமுறை போய் வந்திருக்கிறேன். ஆனால் கச்சி மயானத்தைப் பற்றி இதுவரை நான் அறிந்துகொள்ள முடியவில்லை. அழகான அற்புதமான விளக்கம். பண்டாசுரன் கடையை நன்றாக விளக்கி உள்ளீர்கள். மிக்க நன்றி. தொடருங்கள் உங்கள் தமிழ் தொண்டினை.

  4. நம்மைச்சுற்றி நிகழும் அவலங்கள் நம்மால் தீர்க்கபடமுடியாதன என்னும் கையாலாகாதத் தனம் நம்முள் எழும்போது நமக்குள் எழும் கோபமே சில புராணக் கதைகளாகின்ற்னவோ என்னும் ஐயம் என்னுள் உண்டு. காரணம், மனிதனின் வலிமைக்கு அவனே விதித்துக்கொள்ளும் ஒரு கற்பனையான எல்லைக்கோடே. ஆயினும் கடவுள் ஒரு போதும் தானே நேரிடையாகச் செயலில் ஈடுபடுவது இல்லை என்பதே உண்மை.

    பின் நிகழ்வுகள் எவ்வாறு நிகழ்கின்றன? கடவுளின் படைப்புகள் மூலமாக மட்டுமே. இப்படைப்புகள் வலிமை இழக்கும்போது கடவுளின் முறைமை (system ) படைப்புகளை மீண்டும் சரியாக்குகிறது என்பதே பகுத்தறிவுக்கு ஒத்த கருத்து. இது ஏனெனில் ஒன்று மட்டுமே உள்ளது மற்றெல்லாம் அதனின் வெவ்வேறு வெளிப்பாடுகளே என்னும் தத்வத்தில் நம்பிக்கையுடையவர்கள் வேறு கற்பனைகளில் ஈடுபடார்!

    எனவே நாம் உணர்ச்சிவசப்பட்டு உலகம் தாங்கொணா நிலைக்குப் போய்விட்டது இதோ இறைவன் வரப்போகிறார், அனைத்தையும் அழிக்கப்போகிறார் என்றெல்லாம் புலம்புவது அல்லது “கோபிப்பது” நமது “தப்பும் உத்தியின்” (escapist mentality ) வெளிப்பாடன்றி வேறில்லை. நாம் செய்யவேண்டியதெல்லாம் நமது கடமைகளை ஆற்றியவண்ணமே இருப்பதுதான். நிலைமை எல்லை மீறிவிட்டதா அல்லவா என்று தர்க்கிப்பதோ அதற்காக, இறைவனை நாம் வேண்டினால் தான் வருவான் என எண்ணி எண்ணி மறுகுவதோ சிறுபிள்ளைத்தனமான செயல். நம் கடமையை நாம் புலம்பாமல் ஆற்றுவோம், அவன் (இறைவன்) கடமையை அவன் ஆற்றட்டும். இதற்காக நாம் புதுப்புது கற்பனைகளை செய்யவேண்டுவதே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *