ஈரோட்டுப் பாதையில் திண்டுக்கல் இந்துக்கள்

September 18, 2010
By

நாமகிரி என்னும் ஊரின் பெயர் எப்படி நாளடைவில் நாமக்கல் என்று மருவியதோ, அதே போல் பத்மகிரி என்னும் ஊரின் பெயர் திண்டுக்கல் என்று மாறியுள்ளது. திண்டுக்கல் ஊரின் மத்தியில் இருக்கிறது பத்மகிரி குன்று. குன்றின் மேல் அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ பத்மகிரீஸ்வரர் ஆலயம்.

din_abirami_ammanஸ்தல புராணத்தின்படி இக்குன்றில் அகத்திய முனிவர், கைலாயத்தில் சிவபெருமான்-பார்வதி தேவி திருமணக் காட்சிகளைக் கண்டதாகக் கூறப்படுகிறது. பத்மகிரி குன்றின் வடிவைப் பார்க்கும் போது கைலாயச் சிகரத்தின் வடிவத்துடன் மிகவும் ஒத்துப்போவது விசேஷமானது. அதனால் தான் திண்டுக்கல் மக்கள் இதைத் தென் கைலாயம் என்று அழைக்கின்றனர்.

வரலாற்றின்படி, ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னால், போகுமிடமெல்லாம் கோவில்களைக் கொள்ளையடித்துச் சென்ற திப்பு சுல்தான் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. வேலூர், நாமக்கல், சங்ககிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய ஊர்கள் திப்பு சுல்தானின் ஆக்கிரமிப்புக்குச் சாட்சிகளாக இருக்கின்றன. அந்த ஊர்களின் கோட்டைகளைப் பாசறைகளாகவும் பயன்படுத்தியுள்ளான் திப்பு சுல்தான்.

திண்டுக்கல் சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்குச் சென்றால், திப்பு சுல்தானால் அடித்து நொறுக்கப்பட்ட நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வார் கல் விக்கிரகங்களை இன்றும் பார்க்கலாம். சன்னதியில் வேறு புது விக்கிரகங்கள் வைக்கப்பட்டிருந்தாலும், உடைக்கப்பட்ட இவ்விரண்டு சிலைகளையும் ஒரு தனியிடத்தில் பார்வைக்காக ஒரு மரத்தின் அடியில் வைத்திருக்கிறார்கள்.

அச்சமயத்தில் பத்மகிரி குன்றுக்கோவிலில் இருந்த மூர்த்தங்களை (சிலைகளை) மக்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் கீழே கொண்டு வந்து, குன்றின் அருகில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்து கடந்த 200 வருடங்களாக வழிபட்டு வருகிறார்கள். அபிராமி அம்பாள் வேண்டிய வரத்தையெல்லாம் வழங்கி அருள்பாலிப்பதால், இக்கோவில் நாளடைவில் அபிராமி கோவில் என்றே வழங்கப்படலாயிற்று. யாருமே சிவன் கோவில் என்றோ, காளஹஸ்தீஸ்வரர் கோவில் என்றொ அழைப்பதில்லை.

dindukkal_kovil1பாரதத்திலேயே, இரண்டு மூலவர்கள் உடைய கோவில் இதுவாகத்தான் இருக்கும். ஒரே கோவிலில் இரண்டு மூலவர்கள் இருப்பதும், மூர்த்தங்களே இல்லாமல் வெறும் கோவில் மட்டும் இருப்பதும் ஊருக்கும் மக்களுக்கும் ஆகாது என்பதால், திண்டுக்கல் ஹிந்துகள் கீழே உள்ள மூர்த்தங்களை மேலே குன்றில் இருக்கும் கோவிலில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தி தொடர்ந்து வழிபாடு செய்ய வெண்டும் என்று பல ஆண்டுகளாக விருப்பம் கொண்டுள்ளார்கள்.

1950களிலிருந்து பத்மகிரி மலைக்கோட்டையும், ஆலயமும் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. திண்டுக்கல் மக்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக தமிழக அரசோ, தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகமோ இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி, ஹிந்து தர்ம பாதுகாப்பு இயக்கம், திருக்கோயில் பக்தர் பேரவை, தென் திருக்கைலாயம் பத்மகிரி வழிபாட்டுக்குழு, திருக்கோயில் பராமரிப்புக் குழு மற்றும் திண்டுக்கல் வியாபாரிகள் சங்கம் ஆகியோர் இணைந்து ஒரு மாபெரும் ஆன்மீக மாநாட்டை மாரியம்மன் கோவில் மைதானத்தில் நட்த்தினர். பூஜைக்குரிய ஆசாரியார்கள், ஆதீனங்கள் முன்னிலையில் அவர்கள் ஆசிகளுடன், பத்மகிரியைச் சுற்றி கிரிவலம் நடத்தி, பின்னர் மாநாடும் நடத்தப்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

 • ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் விமரிசையாக கிரிவலம் நடத்துவது.
 • விரைவில் குன்றின் மேலுள்ள ஆலயத்தில் மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்ய அனுமதி கேட்டு, தொல்பொருள் ஆராய்ச்சிக் கழக ஆணையருக்குக் கடிதம் எழுதி, திண்டுக்கல் மக்கள் ஆயிரக்கணக்கானவரிடம் கையெழுத்து வாங்கி அனுப்புவது.
 • தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்தவுடன், தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை உதவியுடன் விமரிசையாக மகாகும்பாபிஷேகம் நடத்துவது.
 • இது போன்ற மாநாடுகளை, ஹிந்து மக்களின் பிரச்சனைகளை முன்நிறுத்தி, வருடம் மூன்று முறை நடத்துவது.

ஏற்கெனவே சிறிய அளவில் கிரிவலம் நடந்து கொண்டிருந்தாலும், மாநாட்டிற்குப் பிறகு திண்டுக்கல் மக்கள் பெருமளவில் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் கிரிவலம் செல்லத் தொடங்கினர். மாநாட்டில் செய்த தீர்மானப்படி, தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத் தலைவருக்கான கடிதத்தில், திண்டுக்கல் பொது மக்கள் ஆயிரக்கணக்கானவர் மனமுவந்து கையொப்பமிட்டு வருகின்றனர். ஆதரவளித்து கையொப்பமிட்டவர்களில் கிருத்துவர்களும் முஸ்லிம்களும் பலர் உண்டு.

இத்தனை வருடங்களாக மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்ய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டமே. சொல்லப்போனால் மக்கள் நலன் கருதி அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வது அவர்களுடைய கடமையும் கூட. ஒரு ஆலயம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதால் அங்கு வழிபாடு நடத்தக் கூடாது என்று அர்த்தம் அல்ல. தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் வழிபாடுகளும், பூஜைகளும், உற்சவங்களும் நடக்கும் கோவில்களும் உள்ளன. ஆகவே பத்மகிரி கோவிலைப் பொறுத்தவரை, தொ.ஆ.கழகம் தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டது என்றே சொல்லலாம்.

 • இந்த பத்ம கிரி மலைக் கோட்டை 1605ம் வருடம் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கட்டப் பட்டதாக கூறப் படுகிறது. ஆனால் அதற்கு முன்னரே பத்ம கிரீஸ்வரர் – அபிராமி அம்மன் ஆலயம் இங்கே இருந்ததற்கு ஆதாரம் உள்ளது.
 • 1553ம் வருடம் மன்னர் அச்சுத ராயர் இக்கோயிலை புதுப்பித்துள்ளார்.
 • பக்தர்கள் மலை மீது ஏறி அம்மனை தரிசிப்பதில் சிரமப் படுவதை அறிந்த ராணி மங்கம்மாள் தன் ஆட்சிக் காலத்தில் அறுநூறு படிக்கட்டுகளைக் கட்டி திருப்பணி செய்துள்ளார்.
 • திப்பு சுல்தான் ஆட்சியின் போது இந்த கோட்டை ஆயுத கிடங்காகவும், வீரர்கள் பயிற்சிக்காகவும் உபயோகப் படுத்தப் பட்டது. ஒற்றர்கள் பக்தர்கள் வேடத்தில் வரக்கூடும் என்று திப்பு எண்ணியதால் அம்மன் சிலைகள் கீழே கொண்டுவந்து கோவில் அமைக்கப் பட்டது.
 • தற்போது இந்த கோட்டை பொழுது போக்கு அம்சமாக இருக்கிறது. தொல்பொருள் துறை கோட்டையைச் சுற்றி சுற்றுச் சுவர் எழுப்பி, பார்வையாளர்களிடம் ஐந்து ரூபாய் கட்டணம் வசூலித்து வருகிறது.
 • அம்மன் சிலை மூன்றரை அடி உயரத்தில் இருந்தாலும் நூறு கிலோ எடை கொண்டது. கோட்டையின் சுற்றுச் சுவர் ஒருவரால் எளிதாக ஏறி விட முடியாத அளவு உயரமானதும் கூட.
 • சிலையை பிரதிஷ்டை செய்தவர்கள் மிகுந்த சிரமப்பட்டே அம்மன் சிலையை தூக்கி வந்து, ஒருவர் மீது ஒருவராக சுவரில் ஏறி உள்ளே சென்று பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும்.
 • அம்மன் சிலை மட்டும் அல்லது பிரதிஷ்டை செய்ய பீடம், உறுதியாக இருக்க சிமென்ட் என்று பொருட்களையும் எடுத்துச் சென்று உள்ளார்கள்.
 • சிலை புதியதாக இருந்தாலும், பல நாள் வைத்து ஆகமப் படி பூசை செய்து எடுத்து வந்ததாகவே பார்த்தால் தெரிகிறது.
 • அப்புறப் படுத்தப் பட்ட அம்மன் சிலையை மதுரை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.
 • இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் தர்மராஜ் உட்பட சிலர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்து முன்னணியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோரும் கைது செய்யப் பட்டு பின்னர் விடுதலை செய்யப் பட்டுள்ளதாக தெரிகிறது.

திண்டுக்கல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராயுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு.என்.எஸ்.வி.சித்தன் அவர்கள் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கிரிவலம் பாதையை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கியுள்ளார். நகராட்சி மன்றத் தலைவராக இருக்கும் தி.மு.க. உறுப்பினரும் நகராட்சி மன்ற நிதி நிலை அறிக்கையில் கிரிவலப் பாதைக்காக நிதி ஒதுக்கியுள்ளார். வேலைகள் விரைவில் நடக்க உள்ளன. திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் வருவாய்த் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்களும் ஆதரவு அளித்துள்ளார்கள். மேலும் சென்ற ஆகஸ்டு-28ம் தேதியன்று தான், கிரிவலப் பாதையில் உள்ள “ஓத ஸ்வாமிகள் ஆசிரமத்தின்” கும்பாபிஷேகம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடந்துள்ளது. திண்டுக்கல் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

hindumakkalkatchi1இதனிடையே செப்டம்பர் 13 திங்களன்று ஹிந்து மக்கள் கட்சியினர் குன்றின் மேல் சென்று அழகான அபிராமி அம்மன் கல் விக்கிரகத்தை கோவிலில் முறைப்படி பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஹிந்து முன்ன்ணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினரும் ஆதரவளித்து உதவி செய்துள்ளனர். கோயமுத்தூர் அருகில் உள்ள கற்சிற்பங்களுக்குப் பிரபலமான திருமுருகன்பூண்டியில் செய்யப்பட்ட அம்மன் விக்கிரகமாகும் அது. கற்சிலை செய்த சிற்பிகளும் பிரதிஷ்டை செய்தவர்களும் முறையாக விரதம் இருந்து காரியத்தை முடித்துள்ளனர்.

செவ்வாய் காலை செய்தி பரவியதும் ஹிந்து முன்னணியினர் அம்மனை பூஜை செய்து வழிபடுவதற்காக்க் குன்றி மேல் ஏறப் புறப்பட்டனர். ஆனால் தொல்பொருள் ஆராய்ச்சிகழகப் பணியாளர்கள் மூலம் விவரம் அறிந்த காவல் துறையினர் மலைப் பாதையைத் தடுத்து ஹிந்து முன்னணியினரைக் கைது செய்தனர். குன்றின் மேல் இருந்த ஹிந்து மக்கள் கட்சியினரும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகப் பணியாளர்கள் உதவியுடன் காவல் துறையினர் அம்மன் விக்கிரகத்தை அகற்றினர். ‘அம்மன் விக்கிரகத்தை மீண்டும் கோவிலில் வைத்தால்தான் நாங்கள் விநாயகர் மூர்த்தங்களைக் கரைப்போம்’ என்று போராட்டம் நட்த்தியவர்களும் கைது செய்யப்பட்டனர்.

hindumunnani_dindukkalசிறுபான்மையின மக்களிடமிருந்து வெளிப்படையான எதிர்ப்பு இல்லாத போதும், காவல் துறையினர் மதப் பிரச்சனை உருவாகி சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்கிற காரணத்தைச் சொல்லி விக்கிரகத்தை அகற்றியதாகத் தெரிகிறது. ஹிந்துக்களை வழிபாடு செய்ய அனுமதித்தால் பின்னர் முஸ்லிம்களும் குன்றின் மேல் வழிபாடு செய்ய அனுமதி கோருவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு காவல் துறை அதிகாரிகள் கூறியிருந்தால் அதைப்போன்ற அபத்தமான கருத்து வேறொன்று இருக்க முடியாது. குன்றின் மேல் மசூதி எதுவும் இல்லாததால் அங்கே சென்று வழிபாடு செய்ய முஸ்லிம் மக்கள் அனுமதி கோருவதற்கோ போராட்டம் நட்த்துவதற்கோ வாய்ப்பே இல்லை. அவர்களும் அவ்விடத்தைப் போற்றுதலோ, மதிப்போ இல்லாமல், வெறும் “திப்பு சுல்தான் கோட்டை” என்று அழைக்கிறார்கள். மற்றபடி எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. அவ்வளவே.

மேலும் இம்மாதிரியான விஷயங்களில் காவல்துறையினர் அரசாங்கத்தின் உத்தரவின்றி தாங்களாகவே செயல்பட மாட்டார்கள். ஆகவே, தமிழக அரசும், தொல்பொருள் ஆரய்ச்சிக் கழகமும் கீழ்காணும் உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்:

 • பத்மகிரி குன்றின் மேல் புராண மற்றும் சரித்திரப் புகழ் வாய்ந்த ஆலயம் 200 ஆண்டுகளாக தெய்வங்கள் இன்றி வெறிச்சோடி இருக்கின்றது. அவ்வாறு தெய்வங்கள் இன்றி ஒரு ஆலயம் இருப்பது ஹிந்துக்களுக்கு மிகவும் வேதனை தருவதாய் இருக்கிறது.
 • தெய்வங்களை முறைப்படி பிரதிஷ்டை செய்து, மஹாகும்பாபிஷேகம் நடத்தி, விசேஷ தினங்களில் கிரிவலம் செல்ல வேண்டும் என்று பல வருடங்களாக திண்டுக்கல் ஹிந்துக்கள் ஏங்குகின்றனர்.
 • குன்றின் மேல் மசூதியோ, சர்ச்சோ இல்லை. ஆகவே, முஸ்லிம் மற்றும் கிறுத்துவ மக்களுக்கு இந்தக் குன்று முக்கியத்துவம் வாய்ந்ததில்லை. ஹிந்துக்கள் மேலே சென்று வழிபாடு நடத்துவதற்கு அவர்கள் ஆட்சேபம் சொல்லவோ, அல்லது அவர்கள் வழிபாடு செய்ய அனுமதி கோரவோ வாய்ப்பில்லை.
 • கிரிவலம் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பல சர்ச்சுகள் கட்டப்பட்டிருந்தாலும், ஹிந்துக்கள் தொடர்ந்து கிரிவலம் போவதற்கு கிறுத்துவ மக்கள் ஆட்சேபம் செய்யவில்லை.
 • திண்டுக்கல் வியாபரிகள் சங்க அங்கத்தினர்களின் ஆதரவுடன் ஏப்ரல் மாதம் ஆன்மீக மாநடு நடத்தப்பட்டபோது முஸ்லிம் மற்றும் கிறுத்துவ அங்கத்தினர்கள் எந்த அட்சேபமும் தெரிவிக்கவில்லை.
 • தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டால், திண்டுக்கலும் திருவண்ணாமலை போன்று பிரபலமகி பெரும் வளர்ச்சி அடைந்து மக்களின் வாழ்க்கையும் பெருமளவு முன்னேற்றமடையும்.
 • சிறுபான்மையின மக்களும், அவர்களின் வியாபரங்கள் பெருகி வாழ்வு முன்னேறும் என்பதால் அம்மாதிரியான ஒரு வளர்ச்சிக்கு ஆதரவு கொடுக்க விருப்பம் தெரிவிக்கிறார்கள்.
 • திண்டுக்கல் ஒரு சிறந்த ஆன்மீகச் சுற்றுலாத் தலமாவதால், சுற்றுலா மற்றும் இந்து அறநிலையத்துறைகள் மூலமாக தமிழக அரசின் வருவாய் மிகவும் பெருகும்

அம்மன் விக்கிரகத்தைக பிரதிஷ்டை செய்து  துவங்கிய இந்த வழிபாட்டு உரிமைப் போராட்டத்தில், ஹிந்து மக்கள் கட்சியுடன் ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் முன்வந்து  செயல்பட்டது மிகவும் போற்றத் தக்கது.

தற்போதைய சூழ்நிலையில், ஆசாரியர்களும் ஆதீனங்களும் குருமார்களும் ஆசிகள் வழங்கி வழிநடத்தும்போது, ஒற்றுமையன ஹிந்து சமுதாயம் எழுச்சி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த ஒற்றுமையான சமுதாயத்தின் சக்திக்கு அரசு கீழ்படியும் என்பதிலும் ஐயமில்லை.

தற்போதைய தேவை ஒற்றுமை. ஒற்றுமையின் சக்தியை ஈரோடு கோட்டை மாரியம்மன் கோவில் விவகாரத்தில் கண்கூடாகப் பர்த்தோம். ஈரோடு ஹிந்துக்களின் எழுச்சி அரசாங்கத்தைக் கீழ்படிய வைத்தது. கோவில் காப்பாற்றப்பட்டது.

திண்டுக்கலுக்கும் அவ்வழியே சிறந்தது. அன்னை தேவி அபிராமி வழி காண்பிப்பாள்!

Tags: , , , , , , , , , , , , , , , , ,

 

16 மறுமொழிகள் ஈரோட்டுப் பாதையில் திண்டுக்கல் இந்துக்கள்

 1. R.Sridharan on September 18, 2010 at 5:14 pm

  ஈரோட்டுக்குப் பிறகு பத்மகிரியிலும் சக்தி அன்னை நமக்கு வெற்றி வழங்குவாள்
  இனி ஹிந்துக்கள் வணங்க வேண்டியது தேவி காளியை

 2. தங்கமணி on September 18, 2010 at 6:53 pm

  தமிழக அரசே இந்துக்கள் கோவிலில் வழிபட அனுமதி தா.

  இந்துக்கள் கோவிலில் வழிபட அனுமதி மறுக்கும் தமிழக அரசு ஒழிக

  இந்துக்கள் வழிபாட்டு உரிமையை தடுக்கும் திமுக அரசு ஒழிக

 3. senthilvel on September 18, 2010 at 11:49 pm

  otrumai onre nammai azivil irunthu kapatrum.

 4. களிமிகு கணபதி on September 19, 2010 at 11:10 am

  சிறப்பாக எழுதியுள்ளீர்கள் பி. ஆர். ஹரன். வரும் தமிழகத் தேர்தலிலாவது இந்துக்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

  இல்லாவிட்டால் கோயிலில் கைவைத்தவர்கள் விரைவில் இந்துக்களின் வீடுகளிலும் கைவைத்துவிடுவார்கள். காஷ்மீர் போல. பாக்கிஸ்தான் போல.

 5. babu on September 19, 2010 at 2:28 pm

  #
  //தங்கமணி
  18 September 2010 at 6:53 pm

  தமிழக அரசே இந்துக்கள் கோவிலில் வழிபட அனுமதி தா.

  இந்துக்கள் கோவிலில் வழிபட அனுமதி மறுக்கும் தமிழக அரசு ஒழிக

  இந்துக்கள் வழிபாட்டு உரிமையை தடுக்கும் திமுக அரசு ஒழிக//

  கேட்டு பார்ப்போம் தராவிட்டால் நாமே எடுத்து கொள்வோம். அவர்களின் காலம் உச்சத்துக்கு வந்துவிட்டது அனைய போகும் சுடர் மிக பிரகாசமாக எரிகிறது.

  அனைத்து திராவிட கட்சிகளும் ஒன்றுதான். நிச்சயம் மதத்தை வம்பிழுக்காமல் அதனை வைத்து அரசியல் செய்யாமல்க எல்லா மதங்களுக்கும் நடு நிலையான மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கட்சி வளர்ந்து இப்போது ஆடிக்கொண்டிருக்கும் திராவிட கட்சிகளின் ஆட்டங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

 6. snkm on September 19, 2010 at 6:26 pm

  ஒன்று படுவோம்! உயர்வடைவோம்! அன்னை அபிராமியை மலையில் உள்ள கோவிலில் காணும் நாளுக்காக காத்திருக்கிறோம்,! நன்றி!

 7. Chandra on September 19, 2010 at 7:30 pm

  எந்த அரசு இந்த கோயில் சிறப்பாக விமரிசையாக மகாகும்பாபிஷேகம் செய்து கிர்வலம் மற்றும் வழிபாட்டுக்கு வழி செய்யும் அரசு இந்த தொகுதி வெற்றி பெற அபிராமி சமேத பரமேஸ்வரன் அருள் செய்வார்.

 8. Indli.com on September 20, 2010 at 3:36 pm

  தமிழ்ஹிந்து » ஈரோட்டுப் பாதையில் திண்டுக்கல் இந்துக்கள்…

  திப்பு சுல்தான் படையெடுப்பின் போது திண்டுக்கல் பத்மகிரி மலைக்கோவில் விக்கிரகங்கள் அகற்றப்…

 9. seenu on September 20, 2010 at 7:19 pm

  ” நாம் வெளிச்சத்தை நோக்கி நடந்தால் – வெற்றி நம்மோடு வரும் “.

  திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சீனு ஆகிய நான், தொழில் நிமித்தமாக ஈரோட்டில் வசிக்கிறேன். ஈரோடு மாரியம்மன் நிலம் மீட்பு போராட்டத்திலும் இயன்ற அளவு பங்கெடுத்து வருகிறேன். இந்நிலையில் எனது மாவட்டத்தை சேர்ந்த இந்து சகோதரர்கள் ஒற்றுமையுடன் – உரிமைக்காக போராடுவது அறிந்து பெரிதும் மனம் மகிழ்கிறேன்.

  அன்னையின் அருளால் அனைத்து இந்துக்களும் ஒன்றிணைவர்கள்.
  வெற்றி நமதே!

  வாழ்த்துக்களுடன்…
  ஈரோட்டில் இருந்து – கனிவை சீனு.

 10. Muthukumar on September 21, 2010 at 7:20 pm

  Well done hindus.My salutes to all.

 11. satheesh on September 24, 2010 at 10:23 pm

  ஹிந்து மக்களின் ஒற்றுமை நமக்கு சந்தோசம் கொடுக்ககூடிய விஷயமே.சமீபத்தில் நடந்த விநாயாகர் சதுர்த்தி விழாவில் கன்னியாகுமரி மாவட்டம் மேல்மிடாலம் பகுதியில் சிலை கரைக்க கிறிஸ்தவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அது கலவரத்தில் முடிந்தது.இவ்வளவு குறுகிய மனபான்மையுடவர்கள் எப்படி மனிதர்களாக இவ்வுலகில் இருக்கிறார்கள் என நினைக்கும் போது இந்த உலகத்தில் நாமும் இருக்கிறோம் என்பதில் வெட்கமாக இருக்கிறது .ஜெய் ஹிந்த் ஹரே கிருஷ்ணா

 12. shafidgl on October 17, 2010 at 11:52 am

  காரணப் பெயர் கொண்ட ஊர்களில், திண்டுக்கல்லும் ஒன்று. ஊரின் நடுவே திண்டைப் போல் பெரிய மலை இருந்ததால் ‘திண்டுக்கல்’ என்று பெயர் வந்ததாக கருதலாம். இதற்கு முன் இருந்த பெயர் திண்டீஸ்வரம். இது புராணப் பெயர். திண்டி என்ற மன்னன் இந்நகரை ஆண்டபோது, மக்களை துன்புறுத்தினார். மக்கள் ஈசனை வேண்டி தவம் புரிந்தனர். திண்டி மன்னனை சிவனாகிய, ஈஸ்வரன் அழித்ததால் இந்த ஊர் திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்களால் கணவனையும், நாட்டையும் இழந்த சிவகங்கை ராணி வேலுநாச்சியார், ஹைதர்அலி வசம் இருந்த இக்கோட்டையில் தனது பரிவாரங்களுடன் எட்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது தனது குலத்தெய்வமான ராஜராஜேஸ்வரி அம்மனை வழிபாடு செய்ததால் இப்பெயர் பெற்றது. பின், மன்னர் திருமலை நாயக்கர் இம்மலை மீது கோட்டை கட்டினார். கி.பி.17ம் நுõற்றாண்டில் சையது சாகிப் என்பவர் இக்கோட்டையை விரிவு படுத்தினார். இக்கோட்டை பிரிட்டிஷார் வசம் இருந்தது. பின், ஹைதர்அலி போரிட்டு கைப்பற்றினார். கோட்டையைச் சுற்றி ராணுவத் தளவாடங்களையும், வீரர்கள் தங்கும் பாசறைகளையும் உருவாக்கினார். கி.பி.1784ல் திப்புசுல்தான் இங்கு வந்துள்ளார். கி.பி.1788ல் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாளையக்காரர்களை அடக்க, பிரிட்டிஷார் மீண்டும் இக்கோட்டையை கைப்பற்றி, ராணுவத் தளமாக வைத்துக் கொண்டனர். பாளையக்காரர்களுக்கு தலைவராக இருந்த கோபால் நாயக்கரும், அவருடன் இருந்த சோமன்துரை, பெரியபட்டி, நாகமநாயக்கர், துமச்சி நாயக்கர், சோமநாத சேர்வை ஆகியோரை ஆங்கிலேயர் 1801 மே 4ல் கைது செய்து, நவ.,5ல் தூக்கிலிட்டனர். பாளையக்காரர்களை எதிர்க்க, கோட்டையின் நடுப்பகுதியில் அமைத்த பீரங்கி மேடு இன்றும் உள்ளது. பிரிட்டிஷார் கட்டிய ஆயுதக்கிடங்கு, தளவாட அறைகள் கோட்டையின் நடுமேற்கே உள்ளது. மதுரையை ஆண்ட கடைசி ராணியான மீனாட்சி இறந்ததும், சந்தாசாகிப்தான் முதலில் கோட்டையை கைப்பற்றினார். அது முதல் திண்டுக்கல் போர்க்களமாகவே இருந்தது. கி.பி.1790ல் வில்லியம் மெடோஸ் என்பவர் திண்டுக்கல்லை கைப்பற்றினார். பல ஆங்கிலேய ஆட்சியாளர்களை இந்த திண்டுக்கல் கோட்டை சந்தித்துள்ளது. இம்மலை படிக்கட்டுகளில் ஏறும்போதே நீளமான ஒரு அடி அகலமுள்ள வெள்ளைக்கோடுகளை காணலாம். பெரிய கற்சக்கரங்கள் கொண்ட வண்டியில் பொருட்களை ஏற்றிச் சென்றதன் அடையாளம்தான் இது.

 13. […] திண்டுக்கல் மலைக்கோட்டை ஸ்ரீ அபிராம

 14. dev on May 18, 2012 at 10:35 am

  அன்புடையீர்

  வணக்கம். திண்டுக்கல்லில் திரு பாலசுப்ரமண்யம் எனும்
  இந்திய இயலார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஆங்கில
  நாளேடுகளில் எழுதியவர். அவரிடம் பத்மகிரி தொடர்பான
  எல்லாச் செய்திகளும் இருந்தன. நான் அவரை சந்தித்தது
  1993ல் . அவரது மகன் மின்வாரியத் துறையில் பணி
  புரிந்ததாக நினைவு.

  அவர்தம் சந்ததியினரிடமிருந்து அவரிடமிருந்த
  ஆதாரபூர்வமான செய்திகளைச் சேகரித்து தமிழ் ஹிந்துவில்
  வெளியிடலாம். திண்டுக்கல்லைச் சேர்ந்த அன்பர்கள்
  உதவ வேண்டும்

  அன்புடன்
  தேவ்

 15. dev on July 19, 2012 at 11:56 am

  பத்மகிரிநாதர் தென்றல்விடு தூது –

  இந்நூலை இயற்றியவர் பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை ஆவார். பத்மகிரி என்பது திண்டுக்கல் என்ற தலத்தைக் குறிக்கும். இந்நூலை உ.வே.சா. அவர்கள் 1932ஆம் ஆண்டு பதிப்பித்தார். தூது நூல்களைப் பற்றிய விளக்கம், நூல் ஆராய்ச்சி ஆகியவை பற்றி இப்பதிப்பின் முன்னுரையில் எழுதியுள்ளார். முன்னுரையை ஒட்டி, ஆசிரியர் வரலாறு எழுதப் பெற்றுள்ளது. நூல் முழுமைக்கும் உ.வே.சா. அவர்களின் குறிப்புரை உண்டு.

  இந்நூல் ‘கலைமகள்’ வெளியீட்டகத்தின் முதல் வெளியீடாக வந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இந்நூலில் 123 கண்ணிகள் உள்ளன.

  http://uvesalibrary.org/Tamil_thondu/kovaibooks.htm

  தேவ்

 16. kmv on June 15, 2014 at 12:32 pm

  any progress????

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*