இலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்

September 20, 2010
By

karunaandtamilnadu

உலகில் அரசாங்கம் என்ற ஒன்றே இல்லாமல் போனால் என்ன ஆகும்?

என்று ஒரு கேள்வி பழைய நீதி சாத்திரம் ஒன்றில் எழுப்பப் படுகிறது.  மனிதர்கள் மீன்களைப் போல் தன் இனத்தைத் தானே உண்ண ஆரம்பித்து விடுவார்கள் என்பது பதில். அதாவது பெரிய மீன் சிறிய மீனை உண்பது போல, வலுத்தவன் இளைத்தவனை அடித்து பிழைப்பான். காட்டில் மாடுகள்,  குதிரைகள், மான்கள், போன்ற எளிய பிராணிகளை சிங்கம், புலி போன்ற வலிமை மிகுந்த பிராணிகள் அடித்துக் கொல்வது போல மனிதர்களும் ஆரம்பித்து விடுவார்கள் என்கிறது அந்த நீதி நூல். ஆனால் அரசாங்கம் என்று ஒன்று இருந்தும் அது கொள்ளையர்களின் கையில் சிக்கினால்? விளைவு என்ன ஆகும் என்று தமிழகத்தைப் பார்த்தால் தெரிந்து விடும்.

“மனுசன மனுசன் சாப்பிடுராண்டா தம்பிப்பயலே…” என்று ஒரு பழைய திரைப்படப் பாடல். கவிஞர் மருத காசியின் கவிதை. உழைப்பவன் ஒருவன் – அடித்து பிழைப்பவன் ஒருவன் என்று ஒருவனுடைய வருமானத்தை இன்னொருவன் அடித்துப் பிடுங்குவதை அழகாக எடுத்துச் சொல்லும் பாடல். இந்தப் பாடல் தாய்க்குப் பின் தாரம் படத்தில் 1956 ம் வருடமே வெளிவந்து விட்டது. கவிஞனின் வாக்கு பொய்க்காமல் தொடர்ந்து அதே நிலைதான் இத்தனை வருடத்துக்கு பிறகும் நீடித்து வருகிறது என்றால் மிகையில்லை. இங்கே உழைத்துப் பிழைக்கும் மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதை அரசே செய்கிறது.

dirty_templesஇந்தியாவிலேயே உற்பத்தியிலும், ஆண்டு வருமானத்திலும் தமிழகம் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. நாட்டிலேயே தமிழகம் தான் கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் நகர்ப்புறங்களைக் கொண்டது என்றெல்லாம் நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக் கொண்டாலும் தமிழகத்தில் தனியொருவரின் வருமானம் மாதத்துக்கு ஐநூறு ரூபாய்க்கும் மிகக் குறைவே. இந்த பணத்தில் மூன்று நாட்கள் கூட ஒருவர் சரியாகச் சாப்பிட முடியாத விலைவாசி.  ஏன் இந்த நிலை? எத்தனை வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட்டன? எத்தனை அடிப்படை வசதி கட்டுமானங்கள் ஏற்படுத்தப் பட்டன? எத்தனை தொழிற்சாலைகள் துவங்கப் பட்டன? என்று தோண்டினால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

தடையற்ற மின்சாரம், தரமான சாலைகள், திறமையான தொழிலாளர்கள், ஊழலற்ற அரசு என்று இருந்தால் தொழில் முனைவோர் வருவர். மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ஆனால் மக்களின் வாழ்க்கைத்தரத்தை எல்லாம் யாருக்கு யோசிக்க நேரம் இருக்கிறது.. ஆட்சியில் இருப்பவருக்கு  தன் பெண்டு பிள்ளைகளை பேரன்களை கவனிக்கத்தான் நேரம் சரியாக இருக்கிறதே! சுதந்திரம் வாங்கி அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் பசியுடன் தூங்கும் நிலைதான் இருக்கிறது. இன்னும் பல நடுத்தர வர்க்க குடும்பங்கள் வெளிப்படையாகப் பிச்சை எடுக்கவில்லையே தவிர கைக்கும் வாய்க்கும் இழுபறி நிலைதான்.

tv_watchingஇரண்டாயிரம் ஆண்டு துவக்கத்திலேயே சென்னையில் சேரிகளில், ஒவ்வொரு குடிசையிலும் தொலைக் காட்சியைப் பார்க்க முடியும். உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாவிட்டாலும் தொலைக் காட்சி இருந்தால் போதும் என்று மக்கள் நினைத்திருக்கிறார்கள்.

தமிழன் தான் அரசை சினிமாக்காரர்களிடம் அடகு வைத்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டதே. இதை திமுக சரியாக நாடிபிடித்து அறிந்து கொண்டது. விளைவு இப்போது தமிழக மக்கள் அரசிடம் பிச்சை வாங்குகிறார்கள். தமிழக அரசு வெளிநாடுகளிடமும், உலக வங்கியிடமும் கடன் வாங்குகிறது.

மக்கள் தம் நிலையை உணராமலேயே இலவசங்களால் கண்ணைக் கட்டி வைத்திருக்கிறது இந்த அரசு. வேட்டி சேலை இலவசம், திருமணத்திற்கு 20,000/-,  கருவுற்றால் கர்ப்ப கால உதவித்தொகை 6000/-,  இரு பெண் குழந்தைகள் பிறந்தால் 30000/-,  இலவச வீட்டு மனைப் பட்டாக்கள்,  கலைஞர் வீடு வசதி திட்டத்தில் கான்க்ரீட் வீடு கட்ட 72000/-  முதல் ஒரு லட்சம் வரை, இரண்டு ஏக்கர் நிலம், விதைகள், உரங்கள், ஆழ்துளைக் கிணறு, சொட்டு நீர்பாசனம் ஆகியவற்றுக்கு மானியம், இது போக இலவச மின்சாரம், இலவச சமையல் எரிவாயு இணைப்பு, மாணவர்களுக்கு சைக்கிள், அதிக மதிப்பெண் பெற்ற ஆயிரம் மாணவருக்கு மடிக் கணினி, இது தவிர ஒரு ரூபாய்க்கு அரிசி, இலவச தொலைக் காட்சி என்று இலவசங்களால் மக்கள் குளிப்பாட்டப் பட்டு வருகிறார்கள்.  இது வரைக்கும் பட்டியலிட்ட இலவசங்களே, கொடுக்கப் படுவதில் ஒரு பகுதிதான். ஒவ்வொரு இலவசத்திட்டத்திலும் தமிழக அரசின் திட்டம் என்பதை விட முதல்வரின் பெயர்தான் முன்னிறுத்தப் படுகிறது.

freebiescheatingஇது தவிர பெருமளவு விவசாயக் கடன்கள், தொழில் துவங்க தரப்படும் கடன்கள் ஆண்டுதோறும் தள்ளுபடி செய்யப் பட்டு வருகின்றன. பெரும்பாலும் விவசாயக் கடன்கள் இதனால் கடன் வாங்குகிறவர்கள் சரியாக திரும்ப செலுத்துவதே இல்லை. எப்படியும் தள்ளுபடி செய்யப் பட்டுவிடும் என்று காத்திருக்கிறார்கள். அண்மையில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்று கலைஞர் ஒரு திட்டத்தை அறிவித்தார். தமிழகத்தில் படித்து விட்டு வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? எழுபது லட்சத்தை தொடுகிறது.

ஏனைய மற்ற திட்டங்களும் இப்படித்தான்; மக்களின் தேவைகளை நிறைவு செய்வதே இல்லை. விவசாயக் கடன்கள் ஏக்கர் கணக்கில் வைத்துள்ள பெருவிவசாயிகளே பெற்று வருகிறார்கள்.  பதினொன்றாம் வகுப்பு படிக்கிற மாணவர்கள் ஏற்கனவே சைக்கிள் பெரும்பாலும் வைத்திருக்கிறார்கள். அரசு கொடுக்கிற சைக்கிள் வீட்டு உபயோகத்திற்கும், அவசரத்திற்கு விற்கவும் தான் பயன் படுகிறது.

நமது மக்களுக்கு ஒரு குணம் – ஃப்ரீயாக கொடுத்தால் பினாயில் என்றாலும் வாங்கி குடிப்பார்கள். என்னிடம் தொலைக் காட்சி ஏற்கனவே உள்ளது – எனக்கு இலவச தொலைக் காட்சி வேண்டாம் என்று எவர் கூறுகிறார்? பல தலைமுறைகளாக சேரிகளில் மக்கள் வசித்துக் கொண்டு, தொலைக் காட்சியில் கண்ணையும் மனதையும் நிலை குத்தவிட்டு, ஏன் இப்படி குடிசையிலேயே தலைமுறை தலைமுறையாக இருக்கிறோம் என்று தெரியாமலே இருக்கிறார்கள். மக்களிடம் இலவசப் பொருள்கள் தான் மிகுந்திருக்கிறதே தவிர வாழ்க்கைத்தரம் உயரவே இல்லை.

இறுதியாக சில புள்ளி விவரங்கள். தமிழக அரசு இந்த ஆண்டு வெளியிட்ட பட்ஜெட்டில் மொத்த வருமானம் சுமார் 63000 கோடி ரூபாய்கள். ஆனால் செலவினம் 66000 கோடிகள். இதில் அரசு அதிகாரிகளின் சம்பளம், அரசு சார்ந்த நிறுவனங்கள் தொடர்பான செலவினம் மட்டுமே பாதிக்கு மேல்! சென்ற நான்கு ஆண்டுகளில் ஒரு கோடிக்கு மேல் தொலைக் காட்சி பெட்டிகள் இலவசமாக அளிக்கப் பட்டுள்ளன. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் விலை சுமார் 2500 என்று வைத்துக் கொண்டாலும் இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய்கள் இதற்கு மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அதாவது 2500, 00, 00, 000/-.

பகீர் தகவல் இதோடு முடியவில்லை. தமிழகத்தின் கடன் மொத்தம் தொண்ணூறாயிரம் ரூபாயை எட்டி விட்டது. இதற்கு வட்டி மட்டும் ஆண்டுக்கு ஏழாயிரம் கோடி ரூபாய்கள். அதாவது 7000, 00, 00, 000/-.

ஒரு பக்கம் கடனும், வட்டியும்,வட்டி கொடுப்பதற்கே கடன் வாங்கிக் கொண்டும் இருக்கிற நிலையில் பலமடங்கு இலவசங்களுக்கு அள்ளி விடுவதால் கஜானா காலியாகவே இருந்து வருகிறது.

slumtvஇதை சரிக்கட்ட மதுபான வியாபாரத்தை அரசே நடத்தி சமாளித்து வருகிறது. டாஸ்மாக்கில் விற்கப் படும் மதுபானத்தின் மூலம் வருகிற வருவாய் சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய். மதுவிலக்கு என்பதைப் பற்றி இந்த அரசு சற்றும் யோசிக்கவே இல்லை. அவர்களுக்கு என்ன… சன் டிவி, கலைஞர் டிவி போன்ற குடும்ப தொலைக் காட்சிகளில் காட்டப் படும் சீரியல்கள், திரைப் படங்கள் மூலம் மது அருந்துவது தவறல்ல என்று மக்களை மூளைச் சலவை செய்து வருகிறார்களே! இந்த அரசுக்கு இனியும் ஒட்டு போட்டு ஆட்சியில் அமர்த்துவது சட்டையை இலவசமாக பெற்றுக் கொண்டு, இடுப்பில் இருப்பதை மொத்தமாக அவிழ்த்துக் கொடுப்பதற்குச் சமம்!

Tags: , , , , , , , , , , , , , ,

 

20 மறுமொழிகள் இலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்

 1. B.பாஸ்கர். on September 20, 2010 at 4:33 am

  வணக்கம்,

  ஊருக்கு ஊர் வீட்டுக்கு வீடு இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் சுமார் ருபாய் 500 முதல் ஏலம் போட்டு விற்பனை செய்யப் படுகிறது,..சில வீடுகளில் ஒவ்வொரு அறைக்கும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி உள்ளது. ஒவ்வொரு மனிதனும் தனது சுயமரியாதை இழந்து விட்டுத்தான் இந்த இலவசங்களை பெறுகிறோம் என்ற குற்ற உணர்ச்சியே இல்லாது வாழ்கிறார்கள். வாங்குகிறார்கள்.

  சரிதான் நாங்கள் வாங்காவிடினும் கிடைக்கின்ற இலவசப் பொருளும் ஏதாவது ஆளுங்கட்சிக் காரன் வீட்டுக்குத்தானே போகப் போகிறது? ஆகவே நாமே வாங்கிக் கொள்வதுதான் புத்தி சாலித்தனம் என்று வியாக்கியானம் வேறு பேசுவார்கள்.
  இதன் நடுவே சண்டை வேறு என்ன கட்சிக் காரனுக்கே குடுக்க மாட்டேன் என்கிறீர்களா? என்று. இன்னொரு பக்கம் எல்லாம் ஆளுங்கட்சி காரனே புடுங்கிக்கிறான் மக்களுக்கு எங்கே குடுக்கிறான் . இதன் ஒட்டுமொத்த பாதிப்பும் பின்னாளில் தமது தலையில் தான் என்று எவரும் நினைப்பது இல்லை.
  ஒருநாள் மக்கள் அனைவரும் வீதியில் நின்று எங்களுக்கு ஒன்றுமே இலவசமாக வேண்டாம் என்று நிராகரித்தால் !? மட்டுமே நம் நாடு (தலை) தப்பிக்கும்.

  பெரும்பாலான வீடுகளில் எல்லோருமே தொலைகாட்சி அடிமைகளாகவே உள்ளனர். முதலில் அதை மாற்ற வேண்டும். குறிப்பாக பெண்கள்.

 2. R Balaji on September 20, 2010 at 5:32 am

  திரு. மது அவர்களுக்கு,
  இன்றைய தமிழக நிலையை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். ரொம்பவும்
  மனக்கிலேசம் அடைய வேண்டாம். பொருளாதார நிபுணர்கள் Sustaining
  என்ற வார்த்தையை உபயோகிப்பார்கள்.

  1 கிலோ அரிசி ஒரு ரூபாய் என்னும் திட்டத்தை தொடர்ச்சியாக பல
  சகாப்தங்களுக்கு எந்த அரசாலும் கொடுக்க முடியாது. நாளையோ, அடுத்த
  வருடமோ அல்லது சில வருடங்களுக்கு பிறகோ நின்றுதான் போகும்
  “It is not the question of if, it is the question of when” என்பார்களே அப்படி.

  உலகமயமாக்கலில் பல நாடுகள் பொருளாதார நிலையில் பல முன்னெடுப்புகளை செய்கின்றன. உதாரணமாக ஐரோப்பாவில் கிரேக்கத்தில் தோன்றிய நெருக்கடியைக் கண்டவுடன் பிரிட்டன் தானாகவே
  சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. “தனக்கு வந்தால்தான்
  தெரியும்” என்பது பழைய மொழி. மற்றவர்களுக்கு பிரச்சினை வந்தவுடன்
  தான் சுதாரித்து கொள்வதே புதிய வழி.

  2008ல் பொருளாதார நெருக்கடிக்கு பின் அமேரிக்க அதிபர் ஒபாமா சில
  கடினமான முடிவுகளை தன் அரசு எடுக்கும் என்றார்.

  உலகம் போகிற திசையை கருத்தில் கொள்ளாமல் தமிழ் நாடு செல்லும்
  பாதை அபாயகரமானது. நரேந்திர மோடி போன்ற ஒருவர் ஆட்சிக்கு வந்து
  இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று நம்மை போன்றவர்கள்
  ஆசைப்படலாம். ஆனால் நீங்கள் கட்டுரையின் ஆரம்பத்தில் கூறிய “மனிதனே மனிதனை” தின்னும் நிலையும் வரலாம்.

  மக்கள்தான் விழித்து கொள்ள வேண்டும் என்று நான் கூற மாட்டேன்.
  அவர்கள்தான் 1000 ரூபாய்க்கு ஓட்டை விற்பவர்களாயிற்றே!

  அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நிலைமை மாறும் என்பது பகல் கனவு.
  குடும்ப கொள்ளை என்ற நிலை மாறி கூட்டு கொள்ளை நடைபெறும்.
  பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்காது.

  சரி,சரி, உங்களுடன் வெட்டி பேச்சு பேச எனக்கு நேரம் இல்லை. கடைசி
  தவணையில் வண்ணத் தொலைகாட்சி எங்கள் கிராமத்தில் கொடுக்க
  போகிறார்களாம். எங்களுக்கு இன்னும் கிடைக்க வில்லை. பஞ்சாயத்து
  ஆபிஸுக்கு செல்ல வேண்டும். தொலைகாட்சியை வாங்கிய பிறகு
  மறுபடியும் எழுதுகிறேன்.

 3. snkm on September 20, 2010 at 10:16 am

  இந்த அரசுக்கு இனியும் ஒட்டு போட்டு ஆட்சியில் அமர்த்துவது சட்டையை இலவசமாக பெற்றுக் கொண்டு, இடுப்பில் இருப்பதை மொத்தமாக அவிழ்த்துக் கொடுப்பதற்குச் சமம்!

  உண்மை மட்டுமல்ல! சாலைகளைக் கூட சரியாக பராமரிக்க வில்லை! மக்களை ஏமாற்றியே பிழைத்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்! விழிப்படைவோம், விழிப்படையச் செய்வோம்!

 4. babu on September 20, 2010 at 10:53 am

  தி மு க, திரு மு க வின் தயவில் தமிழகம் விரைவில் அடுத்த கிரேக் ஆகிவிடும்.
  உரிமையை விற்ற தமிழர்களுக்கு தகுந்த பரிசு விரைவில் கிடைக்கும்.
  வாழ்த்துக்கள்

 5. V. Ramaswamy on September 20, 2010 at 12:09 pm

  அனைத்தும் உண்மை. பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது தான் கேள்வி. காங்கிரசை ஒழிக்க ஒரு வழி வேண்டுமென்று மூதரஞர் ராஜாஜி அவர்கள் என்று கழகக் கண்மணிகளுடன் கூட்டு சேர்ந்தாரோ அன்று பிடித்த அராஜகப் பேய் பிடி இன்னும் விட்டபாடில்லை. நல்லவர்கள் நம்பப்படுவதில்லை. கோயில் சொத்துக்கள் கொள்ளை போகின்றன. கோயில்களில் உள்ள கடவுளை நம்பாதவர்களுக்கு கோயில் சொத்துக்களின் மீது ‘கொள்ளை’ ஆசை. ஆனால் மற்ற இனத்தவரையும் அவர்களின் கடவுள்களையும் இவர்கள் போல் வேறு எவரும் போற்றுவதில்லை. அவர்களின் பிரார்த்தனைக் கூடங்களின் மீது இவர்களின் நிழல் கூட விழ முடியாது. இவர்கள் சொல்வது தான் வேதம், கடைப்பிடிப்பதுதான் நீதி என்று ஆகிவிட்டது. எந்த திட்டம் என்றாலும் அதற்குள் மறைந்திருப்பது கோடிகளை விழுங்கும் திட்டம். என்ன சொன்னாலும் எப்படி உரைத்தாலும், செவிடன் காதில் சங்குதான். மொத்தத்தில் ஏழை எளியவர்களுக்கு சங்கு ஊதப்படாமல் இருந்தால் சரி. அந்த நிலைமைவந்து விடுமோ என்று அச்ச்சமாக இருக்கிறது. தேர்தல் கமிஷன் என்றொரு அரசுத் துறை இருக்கிறது. இலவசங்களை அள்ளி வீசும் கட்சிகளை ஏன் கண்டிக்கத் தவறுகிறது? தேர்தலில் வெற்றி பெற்றால், அந்த இலவசங்களை அரசு நிதியிலிருந்து கொடுக்கக் கூடாது, கட்சிப் பணத்திலிருந்து வேண்டுமானால் கொடுக்கலாம் என்று ஏன் உத்திரவு அளிக்க முடியவில்லை? இத்தனை அறிவு ஜீவிகளும் நலம் விரும்பும் நல்ல வல்லவர்களும் இருந்தும் ஏன் தமிழ் நாட்டு மக்களைத் தவிக்க விட்டுவிட்டனர்? மக்களும் நல்ல எண்ணங்களிலிருந்தும், நல்ல வழிகளிலிருந்தும் வழுக்கி விழுந்து விட்டனர். காலம் தான் நல்ல வழி காட்ட வேண்டும்.

 6. சஹ்ரிதயன் on September 20, 2010 at 2:35 pm

  என்ன சொல்வது?

  இங்கே போய் பாருங்கள் இலவச டிவி யின் முழு பரிமாணத்தையும்

  http://www.blog.sanjaigandhi.com/2009/11/tv-govt-free-tv-scheme-utter-waste.html

  சஹ்ரிதயன்

 7. Kumudan on September 20, 2010 at 4:41 pm

  //V ramaswamy
  “தேர்தல் கமிஷன் என்றொரு அரசுத் துறை இருக்கிறது. இலவசங்களை அள்ளி வீசும் கட்சிகளை ஏன் கண்டிக்கத் தவறுகிறது?”

  தேர்தல் கமிஷனை ஒரு அம்மணி என்றோ குத்தகைக்கு எடுத்துவிட்டார் என்பது தங்களுக்கு தெரியாதா என்ன?

 8. Indli.com on September 20, 2010 at 5:41 pm

  தமிழ்ஹிந்து » இலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்…

  நமது மக்களுக்கு ஒரு குணம் – ஃப்ரீயாக கொடுத்தால் பினாயில் என்றாலும் வாங்கி குடிப்பார்கள். என்…

 9. ஜெயக்குமார் on September 20, 2010 at 8:41 pm

  அருமையான பதிவு. இன்றைய தமிழகத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது கட்டுரை. இன்றைக்கு ஓசிக்கு வாங்கும் ஒவ்வொரு பொருளும் நாளை நமது பிள்ளைகள் கட்டப்போகும் வரி என்பதை இந்த இலவசங்களை வாங்க விரும்புபவர்கள் யோசித்தால் அவர்களூக்கு நல்லது.

 10. R.Sridharan on September 21, 2010 at 7:56 am

  இன்று நம் மாநிலம் மற்றும் மத்தியில் ஆளும் கட்சிகள் சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.கிராமத்திலிருந்து வந்த ஒரு இளைஞர் கூறியது :
  அவரது கிராமத்தில் தேசிய கிராமப்புற வேலை வைப்புத் திட்டத்தில் ( ஆண்டுக்கு நூறு நாட்கள்) கொடுக்கப்படும் பணத்தில் பாதியை இங்கு் மற்றும் மத்தியில் ஆளும் கட்சிக் காரர்கள் ஜேபியில் போட்டுக் கொண்டு மீதியை கொடுக்கின்றார்களாம் .
  அதை வங்கிக் கொண்டு ஆண்கள் அங்குள்ள கோயில் வளாகத்துக்குச் சென்று நாள் பூர சீட்டு ஆடுவது, குடிப்பது என்று பொழுதைக் கழிக்கிறார்களாம்.

  லட்சியத் துடிப்புள்ள இந்த இளைஞர் அவ்வாறு செய்து கொண்டிருந்த தனது அக்காவின் கணவரிடம் ‘ஏன் இப்படி சீரழிகிறீர்கள் . எதாவது வேலை செய்து சம்பாதிக்கக் கூடாதா என்று கேட்டதற்கு’அட போப்பா வேலை செய்தால் நூறு ரூபாய் கிடைக்கும்.வேலை செய்யாமலே ஐம்பது ரூபாய் கிடைக்குதே அது போதும்’ என்றாராம்.

  ஒரு சமுதாயத்தையே அதன் சுய கெளரவம், தன்னம்பிக்கை இவற்றை இழக்க வைத்து நிரந்தரமாக் பிசைக்கரர்களாக ஆக்கி அரசியல் வாதிகளின் அடிமைகளாக வைக்கும் இந்த நிலை மிகவும் வருந்த தக்கது
  அந்த ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வேண்டாமா?
  அவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டாமா?
  விலங்குகள் போல் வெறுமனே உண்டு உறங்கி வாழ்ந்தால் போதுமா?
  அவர்களுக்குளே உறங்கும் திறமைகளை வெளிக் கொணர வேண்டாமா?
  அவர்களும் முன்னேறி சமூகமும் முன்னேறே வேண்டாமா?
  அதற்கான உந்து சக்தியாக இருப்பதுதானே ஒரு அரசின் கடமை?
  தங்களின் சுய நலத்துக்காக ஒரு சமுதாயத்தின் முதுகெலும்பையே முறித்து அவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் கேவலமான செயலில் இவர்கள் இறங்கியுள்ளனர்

 11. Ramki on September 21, 2010 at 10:13 pm

  நன்றி மது. ஒரு விஷயம் சேர்க்க விழைகிறேன். 2006 இன் இறுதியில் 45 கோடியாக இருந்த கேளிக்கை வரி வருவாய் 2010 ல் 12 கோடியாகக் குறைந்துள்ளது. காரணம் அரசு தமிழ்ப் படப் பெயர்களுக்கு அளிக்கும் பெயர்ச்சலுகை. Boss என்கிற பாஸ்கரன் தமிழ்ப் பெயரா? இவர்களது தமிழ் வணிகம் அரசின் வருவாயிழப்பு; வளர்சியிழப்பு.

 12. K. Jayadeva Das on September 22, 2010 at 8:07 pm

  //ஒவ்வொரு இலவசத்திட்டத்திலும் தமிழக அரசின் திட்டம் என்பதை விட முதல்வரின் பெயர்தான் முன்னிறுத்தப் படுகிறது.// இலவசம் குடுக்கும் போது கருணாநிதியே குடுக்குற மாதிரி போட்டோ எடுத்து ஊர் பூராவும் ஓட்டுவானுங்க, பஸ் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வின் போது அந்த துறையில் உள்ள அதிகாரி [அதுவும் அவரது சொந்தப் பெயர் இருக்காது, பதவி பெயர் மட்டுமே இருக்கும் ] மற்ற மாநிலங்களில் உள்ளதை விட இங்க கம்மின்னு விளம்பரம் குடுப்பாரு. வடிகட்டின அயோக்கியத் தனம்.

  //மதுவிலக்கு என்பதைப் பற்றி இந்த அரசு சற்றும் யோசிக்கவே இல்லை.// இவரு பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி நடப்பவரு. மதுவிலக்கு ஏற்படுத்த வேண்டுமென 500 தென்னை மரங்களை வெட்டியவர். அவரு எங்க சாரயத்த விக்கச் சொன்னாருன்னு தெரியல. இத்தனை வயசாகியும், பேரன், பேத்திகள் இரண்டு டஜன் பெத்த கர்ணாநிதி சாராயத்தால் வரும் தீங்கை பற்றி தெரிந்திருந்தும், அதை வித்து தன் பெண்டு பிள்ளைகளை வளர்க்கிறார். தன்னோட ஆறு பிள்ளைகளுக்காக ஆறு கோடி சனத்தோட வாழ்க்கையை நாசம் பண்ணும் இந்த மாதிரி மனுஷனை, கமலஹாசன், வாலி, அப்துல் ரஹ்மான், வைரமுத்து என்ற ஜால்ராக்கள் மேடைக்கு மேடை புகழ்ந்து தள்ளுகிறார்கள். அந்த மாதிரி கயவர்களை என்னவென்று சொல்வது? நீ பண்ணுவது ஈனச் செயல் என கருணாநிதியை இடித்துரைக்க யாருமே இல்லையா?

 13. babu on September 22, 2010 at 8:53 pm

  //இவரு பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி நடப்பவரு. மதுவிலக்கு ஏற்படுத்த வேண்டுமென 500 தென்னை மரங்களை வெட்டியவர்//

  அடப்பாவிகளா, கத்தியால் கொலைதான் செய்ய வேண்டுமா? பழம் நறுக்க கத்தி உதவாதா? தென்னை மரத்தில் கள் மட்டும்தான் உற்பத்தி ஆகுமா? தேங்காய், நார், கயறு போன்ற பயனுள்ள பொருள்களும் விளையாதா? இயற்கையின் நுரையீரலை அல்லவா அழித்திருக்கிறார் அந்த பகுத்தறிவு சிங்கம்? கள் கலயத்தை உடைத்து எதிர்ப்பை காட்டியுருந்தால் என்ன ? எதற்கு மரங்களை வெட்ட வேண்டும்? விளம்பரமா? பணத்திமிரா? மூடைபூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது இதுதானே? ஒ இது தான் சாதியை எதிர்க்க சம்மந்தம் இல்லாமல் இந்து மதத்தையே அழிக்க முற்பட்டதன் முன்னோட்டமா?
  இது தான் பகுத்தறிவா?

 14. covaipraveen on September 22, 2010 at 9:49 pm

  பெரும்பாலான வீடுகளில் எல்லோருமே தொலைகாட்சி அடிமைகளாகவே உள்ளனர். முதலில் அதை மாற்ற வேண்டும்.

 15. K. Jayadeva Das on September 22, 2010 at 11:20 pm

  babu 22 September 2010 at 8:53 pm நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். தென்னை மரங்களை வெட்டியது தவறுதான். ஆனபோதிலும் அவர் மது சமுதாயத்தை ஒட்டு மொத்தமாகச் சீரழிக்கும் என்று அதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென்று பாடுபட்டவர். அவர் வெட்டியது வெறும் மரங்களை. அடுத்த ஐந்து ஆண்டுகளில் வளர்த்து விடலாம். இந்தக் கருணாநிதி வெட்டுவது மனிதகளை அல்லவா? மதுவினால் இன்று எத்தனை குடும்பங்கள் நாசமாகிக் கொண்டிருக்கின்றன? எத்தனை பெண்கள் தங்கள் கணவனை இழந்து தவிப்பார்கள்? என்பது வயதான பொறுப்புள்ள முதியவன் செய்யும் வேலையா இது? இவனுக்கும் பிள்ளை குட்டிகள் பேரப் பிள்ளைகள் இருக்கிறார்களே, இருந்தும் இப்படி சில்லறைத் தனமான காரியங்களில் ஈடுபட்டு கோடி கொடியாக பணத்தை சுருட்டிக் கொண்டு பாடையில் எடுத்துக் கொண்டு போக நினைக்கிறானே இந்தக் கயவன்? ஒரு பெரிய மனிதனுக்குரிய பண்புகள் இவனிடத்தில் சிறிதேனும் உள்ளதா? நாட்டு மக்களின் குடி கெடுத்தா இந்த கேடு கேட்டவன் குடும்பம் வாழ வேண்டும்? சாகும் வயதில் இந்த ஈனப் பிழைப்பு தேவையா?

 16. babu on September 23, 2010 at 10:07 am

  ஐயா நான் பெரியார் செய்ததும் தவறு என்று சொல்லவந்தேனே ஒழிய, கலைஞ்சர் செய்வது சரி என்றோ, நீங்கள் சொன்னது தவறு என்றோ சொல்லவரவில்லை.
  உங்களின் இடுகையில் இருந்து எடுத்து எழுதியதால் நீங்கள் என்னை தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள். மது ஒழிப்பு மிக அவசியமான ஒன்று இதில் மாற்று கருத்து உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அது நிச்சயம் ஒரு குடிமகனாகதான் இருப்பார்கள்.
  மேலும் உங்களுடைய கோபங்கள் அனைத்தும் எனக்கும் உண்டு. என் மறுமொழி உங்களை காய படுத்திர்யிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். நானும் உங்கள் கருத்துகளுடன் ஒத்து போகிறவன் தான்.

 17. R.Sridharan on September 23, 2010 at 6:09 pm

  இதை விடக் கொடுமை என்னவென்றால் செம்மொழி மாநாட்டின் பொது கோவையில் இருபத்து நாலு மணி நேரமும் சாராயக் கடைகளைத் திறந்து வைக்க வேண்டும் என்று வாய் மொழியாக உத்தரவு போடப்பட்டதாம்!
  ஆஹா எவ்வளவு ‘செம்மையான’ மனிதர்கள் இவர்கள்?

 18. R.Sridharan on September 25, 2010 at 4:30 am

  ஊடகங்களில் பேசப்படும் தொகைகளான அறுபதாயிரம் கோடி,ஒரு லட்ச கோடி இவைகளைப் பார்க்கும் பொது மக்களுக்கு ஆயிரம் ரூபாய் டி வீ, ஐநூறு ரூபாய் சைக்கிள் இதெல்லாம் கொடுப்பது நியாயமில்லை
  மக்களுக்கு தலைக்கு பத்து லட்ச ரூபாயாவது கொடுக்க வேண்டும்

 19. R.Sridharan on November 6, 2010 at 10:10 am

  இங்கு இருக்கும் நிலைமைக்கு முக்கியக் காரணம் மக்களே.
  அதுவும் படித்த,பணக்கார வர்க்கமே.

  கார்களில் வந்து இலவச தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கி வெட்கமில்லாமல் சுமந்து கொண்டு வந்து டிக்கியில் போட்டுக் கொண்டு போகும் மாந்தர்களை எதில் சேர்ப்பது?

 20. செந்தில் குமார் on February 13, 2013 at 3:45 am

  “மனுசன மனுசன் சாப்பிடுராண்டா தம்பிப்பயலே” இந்த பாடல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*