சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 3

முன்குறிப்பு: தமிழ்ஹிந்து தள ஆசிரியர் குழு என்கருத்துக்களை ஏற்கிறதா என்று தெளிவுபடுத்தவேண்டும் என்று சென்ற பதிவில் ஒருவர் கேட்டிருக்கிறார். ஒரு கருத்து, தள ஆசிரியர் கருத்துக்கு விரோதமாக இருந்தால் அக்கருத்தை ஒட்டிய கட்டுரைகள் அந்தத் தளத்தில் வரக்கூடாது என்பது எழுதுபவரின் சுதந்திரத்தில் தலையிடுவது ஆகும். முக்கியமாக ஹிந்துமதம் எல்லாவிதமான கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளும் சனாதன தர்மம். இதன் பல பரிமாணப் பார்வைகளில் என்னுடையதும் ஒரு கோணம் என்று நினைத்தே நான் தொடர்கிறேன்…

அமாவசை ஆதிரை, நான் எழுதுவதை மிக மோசமான பெண்ணடிமைத்தனம் என்று சொல்கிறார். நான் இணையத்தில் எழுத ஆரம்பித்த ஒரே மாதத்திலேயே மறுமொழியில் ஒரு நண்பர் என்னை ஹிந்துத் தீவிரவாதி என்றார். ஆனாலும் தொடர்ந்து என் கருத்துகளை எழுதியே வருகிறேன். அதுபோல் அமாவாசை ஆதிரை, திரு.ராமா போன்றவர்களின் கருத்தைத் தொடர்ந்தும் நான் எழுதுவேன். எதற்காகவும் எனக்குச் சரியென்று தோன்றும் கருத்தை மாற்றி எழுதமாட்டேன். அதுவும் திரு.ராமா அவர்கள் பெண்களின் நாகரிக(?!) உடை பற்றி மிகவும் புகழ்கிறார். மேலும் நான் மற்ற மதத்தின் பெண்களைப் பற்றியும் பேசவேண்டும் என்றும், அவர்களுக்காகக் கொடிபிடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார். என்னுடைய வீட்டையும் சுற்றுப்புறத்தையும்தான் நான் முதலில் சுத்தமாக வைத்துக்கொள்ள முயலவேண்டும். இதை இப்படிப் போட்டுவிட்டு மற்றவர்களைப் பற்றி எப்படிச் சொல்லமுடியும்?

familyகடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து இணையத்தில் எழுதிவரும் இளம் நண்பர் ஒருவரும் பெண் அடிமைத்தனத்தை நான் ஆதரிப்பதாய்ப் புகார் சொல்வார். அதுவும் அவருக்குப் பெண்கள் திருமணம் ஆகிப் புகுந்த வீடு போனால் அவர்கள் மாமியாருக்கோ, மாமனாருக்கோ, அந்த வீட்டினருக்கோ எந்தவிதமான சேவையும்/உதவியும் செய்யக் கூடாது; அப்படிச் செய்தால் அது பெண்ணடிமைத்தனம் என்ற உறுதியான கருத்து உண்டு. பெண்கள் அணிந்துகொள்ளும் உடையும் கவர்ச்சியாக இருந்தால்தான் என்ன தப்பு என்று வாதாடுவார்.

indian-girls-smoking-in-pubsபப் கலாசாரம் சரி என்று சொன்னதாய் நினைவில் இல்லை. அதுவும் சொல்லி இருப்பாரோ என்னமோ. இதோ இந்தக் கலாசாரத்தால் ஓர் இளம்பெண் எப்படிச் சீரழிய இருந்திருக்கிறாள் என்பதை இந்தத் தளத்தின் செய்தி சொல்கிறது பாருங்கள். இதற்கும் அந்த நண்பர், ‘அந்தப் பெண்ணிற்கு வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாகக் குடிக்க அனுமதிக்கவேண்டும்’ என்று சொல்கிறார். முன்னேற்றம் என்பது இதுதான் என்றாகிவிட்டது.

 

செய்தி-தட்ஸ்தமிழ்.காம்: மது போதையில் சாலையில் கவிழ்ந்த பெண்-சில்மிஷம் செய்த வாலிபர்கள்-விபரீதமாகும் கலாசாரம்

indian-drunkard-girlஇது இரண்டு நாள் முன்னர் தாட்ஸ்தமிழ்.காம் வெளியிட்டிருக்கும் செய்தி. கல்லூரி மாணவி, போக்குவரத்து நிறைந்த தி.நகரில் இப்படி விழுந்து கிடந்திருக்கிறார். இது எதனால்? இப்படிப் பட்ட உரிமையையா கேட்கிறீர்கள்?
 
ஓர் இளம்பெண் இன்றைய நவநாகரிகத்தால் எப்படிச் சீரழிந்து வருகிறாள் என்பதற்கான அறிகுறியே இது. நமக்கு வெளியே தெரிந்து இந்த ஒரு பெண் என்றால் தெரியாமல் எத்தனை பேர்களோ? காதலனோடு நக்ஷத்திர ஹோட்டலில் மது அருந்தி உல்லாசமாக இருந்த அந்தப் பெண்ணை அந்த இளைஞர்கள் அந்த ஹோட்டலில் இருக்கும்போதே கவனித்திருக்கிறார்கள். பின்தொடர்ந்தும் வந்திருக்கிறார்கள். இந்தப் பெண் ஆபத்தைத் தானே வரவழைத்துக் கொண்டிருக்கிறார். இவர் குடிக்கும்போது பார்த்த பலரும் இனி இவருடன் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதைச் சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு, தன்னைத் தானே கேவலப்படுத்திக் கொண்டுள்ளார்.

indian-girls-in-pubsபுது வருடக் கொண்டாட்டம், நண்பர்கள் தினக் கொண்டாட்டம், காதலர் தினக் கொண்டாட்டம் என்ற புதுப் புதுக் கலாசாரங்களால் இந்தப் பெண்கள் கவரப்பட்டு மெல்ல மெல்ல சீரழிந்து வருகின்றனர். நேற்று ஒரு நண்பர் சில பெண்கள் ஒரு குழுவாகக் கூடி அமர்ந்து கொண்டு மது அருந்தும் படங்களை அனுப்பி இருந்தார். அதைப் பார்க்கவே மனம் நொந்து போகிறது. எல்லாருமே நன்கு படித்து வேலையில் இருக்கும் கணினி யுகப் பெண்களே. இவர்களுடைய படங்களைப் பார்த்த இன்னொரு திருமணம் ஆகாத இளைஞர், “யப்பாடி, இவங்களைக் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தறவன் பாடு அதோகதிதான்! கடவுளே, எனக்குப் படிச்சு வேலைபார்க்கும் பெண்ணே வேண்டாம்! கல்யாணம்னாலே பயம்மா இருக்கும் போலிருக்கே,…” என்று சொல்கிறார். நிச்சயமாக அவர் சொல்வதில் தப்பே இல்லை. இவர்கள் திருமணம் ஆகிப் போனால் நிச்சயம் புகுந்த வீட்டில் கணவனோடு ஒத்துப் போவதே கஷ்டம்தான். இதிலே மற்றவர்களோடு ஒத்துப்போவதோ அவர்களுக்கு உதவியாய் இருப்பதோ, அவங்களிடம் உதவியைப் பெறுவதோ இயலாத ஒன்று. அப்படி எதிர்பார்த்தாலே, பெண்ணுரிமை அது, இது என்றுதான் பேசுவார்கள். இப்போதைய பெண்கள் பெரும்பான்மைக்கும் அதிகமானோர், திருமணம் ஆனதுமே தனிக்குடித்தனம்தான் இருக்கின்றனர். சேர்ந்து இருந்தால் மாமியாருக்கு எந்த உதவியும் செய்ய மனம் வருவதில்லை. புகுந்த வீட்டினருக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது என்றால் அது பெண்ணுக்கு உரிமை கிடைத்ததாக அர்த்தமில்லை; அந்தப் பெண் தன் கடமையில் இருந்து தவறுகிறாள் என்றுதான் அர்த்தம்.

மருத்துவமனைகளிலே அதிகமாய்ப் பெண்களே செவிலித்தாயாக இருந்து வருகின்றனர். ஒரு பெண்ணால்தான் சிறந்த செவிலித் தாயாக இருக்க முடியும். இருக்கிறாள். அப்படி வேறு யாருக்கோ முன்பின் அறியாத ஒருவருக்கு எந்தவிதமான அருவருப்பையும் பொருட்படுத்தாமல் சேவை செய்யும் பெண்- செவிலித் தாயாய் இருக்குமளவுக்குப் பரந்த மனம் இருக்கும் பெண்- சொந்த மாமியாருக்கோ, மாமனாருக்கோ அவர்களுக்கு உடல்நலம் இல்லை என்றாலும் கவனிக்கக் கூடாதாம். இதை என்ன “இஸம்” என்று சொல்வது?
 
husband-wifeஆணும் பெண்ணும் இணைந்தும் இயைந்தும் வாழ வேண்டிய உலக வாழ்க்கையில் ஒருவர் மற்றவரின் துணையோ, உதவியோ இல்லாமல் வாழமுடியாது என்ற நிலையில் இன்றைய இந்தச் சீரழிந்த நிலைக்குக் காரணமே பெண்கள் தங்கள் கடமைகளிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் விலகி வெளியே வந்ததுதான். சென்ற தலைமுறைப் பெண்கள் ஒழுங்கான பாதையிலிருந்து விலகி வளர்க்கப் பட்டுவிட்டார்களோ? இப்போது அந்தப் பெண்கள் தங்கள் வாரிசுகளையும் அதைவிட மோசமாக, சுயநலம் உள்ளவர்களாகவே வளர்த்து வருகிறார்கள். எங்காவது ஆண்கள் தங்கள் கடமை, கட்டுப்பாடுகளிலிருந்து பிறழ்ந்து வாழ்ந்திருக்கலாம். அவர்கள் திருந்தி வாழவேண்டும் என்று சொல்வதைவிட்டு அந்த உரிமை பெண்களுக்கும் வேண்டும் என்ற திசையில் சென்றுகொண்டிருக்கிறது இன்றைய பெண்களின் சம உரிமைக் கோரிக்கை. இதையா கேட்டனர், சமுதாய முன்னேற்றத்திற்காக பெண்ணுரிமை பேசிய பாரதியும் நம் முன்னோர்களும்?

நான் சொல்லத் தேவை இல்லாமல் திரு.சாரங் அவர்களே புள்ளிவிவரங்களோடு சிலவற்றைக் கொடுத்திருக்கிறார். மக்களுக்கு வாங்கும் சக்தி பெருகி இருக்கிறது என்று சொன்னாலும், அந்த வாங்கும் சக்தியானது கடன் வாங்கும் சக்தியாகவே பல வீடுகளில் உள்ளது என்பதும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாத உண்மை. நான்கு மாதக் குழந்தையைத் தன் பெற்றோரிடம் விட்டால் கூடப் பரவாயில்லை, காப்பகங்களில் விட்டுச் செல்லும் பெண்களே அதிக எண்ணிக்கையில் உள்ளது. பலருக்கும் தேவை என்பதன் உண்மையான அளவுகோல் என்ன என்று புரியவில்லை. ஆகவே அதிகப் பணமே வசதியான வாழ்க்கை என்றே எண்ணுகிறார்கள்.

பெண்கள் என்றாலே அழகு செய்து கொள்பவர்கள்தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதைத் தந்திரமாகப் பயன்படுத்தும் வியாபாரிகளுக்குத் துணையாக பல பெண்களும் இந்தத் தள்ளுபடி விற்பனையில் வாங்கித் தள்ளுவது ரொம்பவே சகிக்க முடியாத ஒன்று. நல்லவேளையாக தள்ளுபடி இடங்களுக்கு விஜயம் செய்வதையே தள்ளுபடி செய்யும் என் வழக்கத்திற்கு கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். இத்தனை விஷயங்களும் திரு.சாரங் சொல்லி இருப்பதுபோல் ஆண்களுக்கும் பொருந்துவதே என்றாலும் இந்தப் பேரலையில் பெண்ணே பெண்ணின் உந்துசக்தியே அதிகம்.

இரசாயனப் பொருள்களின் தாக்கத்தால் முக அழகு கெடும் என்பது மட்டும் என் கருத்து இல்லை. இது வீண் செலவு என்பதும் என் கவலை. திரு.ராமா மஞ்சளையும், கசகசாவையும் சுலபமாக அடுக்களையிலேயே கிடைக்கிறது என்பதால் மிகவும் மட்டமாக நினைக்கிறாரோ என்னமோ! ஆனால் அது தரும் பயன்களை அனுபவித்தால்தான் தெரியும். இப்படி நம்மிடமே பல நல்ல விஷயங்கள் மலிந்து கிடக்க இன்று படித்தும் வேலை இல்லை, வெளியே வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பல இளம்பெண்களும் இவற்றிலிருந்து பல அழகு சாதனப் பொருள்களை தாங்களாகவே கண்டுபிடிக்கலாமே. அவற்றால் பக்க விளைவுகளும் ஏற்படாது. நம் பணமும் நம் நாட்டிலேயே சுற்றி வந்து பொருளாதார ரீதியான மேம்பாட்டையும் ஏற்படுத்தும். ஏற்கெனவே ஒருசில பெண்கள் இப்படிச் செய்கிறார்கள் என்பதும் நான் அறிந்த ஒன்று. அவர்களில் ஒருவர் திருமதி ராஜம் முரளி என்பவர். பொதிகைத் தொலைக்காட்சியில் அஞ்சறைப் பெட்டிச் சாதனங்கள் மூலம் அழகு செய்து கொள்ளும் வித்தையைச் சொல்லிக் கொடுக்கிறார். ஆனால் நம் பெண்கள் பார்ப்பதோ நெடுந்தொடர்கள் வரும் சானல்கள் தானே? இவையெல்லாம் அவர்கள் கண்களில் படாது. : நிச்சயமாய் ஒரு வாரத்திலோ, பத்து நாளிலோ கூட வேண்டாம், வருடக்கணக்கில் பூசினால்கூட யாரும் இயல்பு நிறத்தைவிட சிவப்பாக முடியாது. ஆகவே இந்தச் சிவப்பழகு க்ரீம் என்பதே ஒரு மோசடியான சமாசாரம் என்பதில் யாருக்காவது மாற்றுக் கருத்து உண்டா? ஆனால் நாளுக்குநாள் விளம்பரங்கள் முதல் வீட்டின் முக்கிய மாதாந்திர மளிகை லிஸ்ட் வரை இவைதான் இன்று முதலிடத்தில் இருக்கின்றன.

fair-and-lovely-wayஒரு விளம்பரத்தில் நடிகைகளுக்கு மேக்கப் போடும் ஒருவர் தன் பெண்ணின் அழகை மேம்படுத்தப் பயன்படுத்தச் சொல்வது ஒரு சிவப்பழகு க்ரீம் ஆகும். அதைப் போட்டதுமே அவள் கலந்துகொள்ளும் போட்டிகளில் வெற்றி பெறுவாள். இங்கே திறமை, தகுதி போன்றவை அடிபட்டுப் போகிறது. கஷ்டப்பட்டுப் படித்த அவள் படிப்போ, தகுதியோ அடிபட்டுப் போகிறது. அவளுடைய நிறத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் படுகிறது. இது பெண்களைக் கேவலப் படுத்துவதாய் யாருக்கும் தெரியவில்லையா? இந்தியாவில் பெரும்பான்மையான பெண்கள் கருப்பு நிறமே. அவ்வளவு ஏன்? நாம் வணங்கும் அந்த அம்பிகையும் சரி, கிருஷ்ணரும் சரி, ராமரும் சரி கருத்த நிறத்தவரே. ஆனால் அதைப் பற்றி எண்ணாமல் தானே நாம் அவர்களைக் கடவுளாக ஏற்று வணங்கிக் கொண்டிருக்கிறோம்? திரும்பத் திரும்ப விளம்பரங்களைப் பற்றியே சொல்லவேண்டி இருக்கிறது. அந்த அளவுக்கு மோசமாய் உள்ளன விளம்பரங்கள். இப்படியான விளம்பரங்களை எந்த மகளிர் முன்னேற்றக் கழகங்களும், பெண் உரிமைக்காகப் போராடும் சங்கங்களும் கண்டு கொள்வதே இல்லை.  

closeup-kissometerமேலும் ஒரு பற்பசை விளம்பரம்.. அதில் அந்தப் பற்பசையைப் பயன்படுத்தினால் ஆணுக்கும், பெண்ணுக்கும் முத்தமிட ஆசை வரும் என்று சொல்கிறது. ஆண்களுக்கான ஷேவிங் க்ரீமா? அதைப்போட்டுக் கொண்டால் உடனே எல்லாப் பெண்களுமே அந்தக் குறிப்பிட்ட ஆண் பின்னால் ஓடிவிடுவார்கள். இன்னொரு பற்பசை விளம்பரத்தில் வரும் பெண் உங்கள் டூத்பேஸ்டில் உப்பு இருக்கா என்று கேட்டதுமே தன் மேல்சட்டையைக் கழட்டுவாள். அந்த ஆணின் பற்களைக் கண்டதுமே அவளுக்கு அவன் மேல் காதல் பெருகுகிறது. ஆனால் அதற்கென அவள் தன் மேல்சட்டையைக் கழட்டும் அளவுக்குப் போவதாய்க் காட்டுவது பெண்ணினத்தையே இழிவுபடுத்துவதாய் உள்ளதே! இன்னொரு பற்பசை விளம்பரத்தில், ரயிலில் வரும் பெண் டிக்கெட் பரிசோதகர் ஓர் ஆணிடம் டிக்கெட் கேட்பாள். அவன் பேச வாயைத் திறந்ததுமே அவன் பற்களில் இருந்து வரும் மணமும், ஒளியும் அவளை மெய்மறக்கச் செய்து, உடனே தலையை உதறிக்கொண்டு, டிக்கெட் கூடக் கேட்காமல், தான் வந்த வேலையை மறந்து அவனோடு ஓடிவிடுவாள். இப்படி நிஜமாவே ஒரு பெண் நடந்து கொண்டால் அவளுக்கு வேலையே போய்விடும் என்பதே உண்மை. வேலை நேரத்தில் கடமையை மறந்துவிட்டு ஒரு பெண் இப்படி நடந்துகொள்வாள் என்று சொல்வதை எல்லாரும் ஆதரிக்கிறீர்களோ? இன்னொரு பெண்கள் வாகன விளம்பரத்தில் காருக்குள் மனைவியோடு அல்லது காதலியோடு அமர்ந்திருக்கும் ஒரு நபரின் காரின் கதவு கண்ணாடி போல் பளிச்சிடுகிறதாம். அதைப் பார்த்து, போகிற வருகிற பெண்கள் எல்லாம் தன் முகத்தை அலங்காரம் செய்துகொள்கிறார்களாம். இவன் காரில் இருந்தபடியே அதுவும் சிக்னலில் வண்டி நிற்கும்போது இதைப் பார்த்து அசட்டுத்தனமாய் ரசிக்கிறானாம். என்னங்க இது, இதைவிடவா பெண்ணை இழிவுப்படுத்த முடியும்? மனம் கொதிக்கவில்லை இவற்றை எல்லாம் பார்த்து? இவற்றை எல்லாம் எந்தப் பெண்ணியவாதிகளோ அல்லது தங்களை அப்படிச் சொல்லிகொள்கிறவர்களோ சுட்டிக் காட்டியதும் இல்லை. அவர்கள் கண்களில் இவை படுவதும் இல்லை. அவர்களுக்குத்தான் கணவனுக்கும் மாமியாருக்கும் காபி போட்டுக் கொடுக்கும் பெண்ணடிமைகளை மீட்கவேண்டிய நெருக்கடி இருக்கிறதே!

இன்று படித்தவர்கள் மத்தியில்தான் அதிகம் கலாசாரச் சீரழிவு ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் ஒரு வகையில் பெற்றோரே. சின்ன வயதில் இருந்தே ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் போதித்து வளர்க்காமல் இறை நம்பிக்கையைப் பற்றிச் சொல்லிக் கொடுக்காமல், பக்தியை வளர்க்காமல் இருப்பதே முழுக்காரணம். குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே பகிர்ந்து உண்ணவும், இறைவனைத் தொழுதபின்னரே உணவு உண்ணவும் பழக்கவேண்டும். இன்று பெரும்பாலான வீடுகளில் ஒரு குழந்தைதான் இருக்கிறது. அதுவும் அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போய்விடுவதால் அநேகமாய் ஆயாக்கள் மூலமோ அல்லது வீட்டிலேயே யாரானும் இருந்தோ பார்த்துக்கொள்வதுதான் நடக்கிறது. முன்னாள்களில் கூட்டுக்குடும்பம் என ஒரு முறை இருந்ததால் பல குழந்தைகள் ஒன்றாக இருக்கும். அனைத்துக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு கிடைக்கும். ஆனால் இன்று அப்படி இல்லையே. துரித உணவுக்குப் பெற்றோரே அடிமை என்னும்போது குழந்தைகளைக் குற்றம் சொல்லி முடியுமா?

முன்பெல்லாம் பள்ளிகள் கடவுள் வாழ்த்தோடே ஆரம்பிக்கும். இப்போதும் மற்ற மதங்கள் நடத்தும் பள்ளிகளில் அவர்களின் கடவுளருக்கு வாழ்த்துச் சொல்லி வழிபட்டுவிட்டே தொடங்குகின்றனர். ஆனால் நாம்தான் நம் பண்பாட்டையும், கலாசாரத்தையும், இறை நம்பிக்கையையும் இழந்துவிட்டோம். ஒரு வகையில் மதச் சார்பற்ற அரசுகள் எனக் கூறிக்கொள்ளும் நம் அரசுகளே இதற்குக் காரணம் எனலாம். கடவுள் வாழ்த்தைப் பள்ளியில் இருந்து நீக்கியதோடு அல்லாமல் பல தேசத் தலைவர்கள், பல அறிஞர்கள், ஞாநிகள் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றையும் கற்பிப்பதில்லை. இராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றியோ, விவேகானந்தர் பற்றியோ, ரமணர் பற்றியோ, மற்ற மஹான்கள் பற்றியோ பாடங்கள் ஏதும் இல்லை. என்னிடம் ட்யூஷனுக்கு வரும் குழந்தைகளின் தமிழ்ப் பாடப் புத்தகங்களையும், சரித்திரப் பாடப் புத்தகங்களையும் பார்த்து மனம் வெறுத்துப் போய்விட்டேன். எந்தக் குழந்தைக்கும் தமிழில் ஒரு வார்த்தை கூடத் தப்பில்லாமல் எழுதத் தெரியவில்லை. அந்தத் தமிழைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கே தமிழ் தடவல் என்ற நிலையே இப்போது காண முடிகிறது.

நாட்டுப்புறம் என்னும் சொல்லின் அர்த்தமே மாறும்படியாக நாட்டுப்புரம் என அச்சிட்டுவிட்டு அதுதான் சரியானது என வாதாடும் தமிழறிஞர்கள் நிறைந்த தமிழ்நாட்டிலே, தமிழைப் பிழையின்றி எழுதவும், பேசவும், படிக்கவும் மாணாக்கர்களுக்குத் தெரியவில்லை என்பதைக் குறையாகச் சொல்ல முடியுமா? இதுவே ஒரு சினிமாவிலே விஜய், தன் உறவுக்காரக் குழந்தைக்குக் கவிதைப் போட்டிக்கு எழுதிக் கொடுத்த கவிதை என்றால் பார்க்காமல் ஒப்பிப்பதோடு, எந்தப் படம், எந்தத் தியேட்டரில் வந்து எத்தனை நாள் ஓடியது என்பதையும் சொல்லுவார்கள். பெற்றோரும் இதைக் கண்டு மனமகிழ்ந்து பூரித்துப் போகிறார்கள். குழந்தைகள் சினிமா நடிகர் மாதிரி வேடமிட்டுக் கொண்டு நடிப்பதையும், ஆடுவதையும், பாடுவதையும், சினிமாப் பாடல்களின் வக்கிரமான வரிகளுக்கு பாவங்கள் காட்டி ஆடுவதையும், அது சம்பந்தமான போட்டிகளில் கலந்து கொள்ளவுமே ஊக்குவிக்கப் படுகின்றனர். (நிகழ்ச்சியின்போது, “உனக்கு இது யார் சொல்லிக்கொடுத்தாங்க?” “என் மம்மி” என்பதே பெரும்பான்மை பதில்) இப்படி வளரும் குழந்தைகளுக்கு ஒழுக்கமும், கட்டுப்பாடும் எங்கிருந்து வரும்? அதற்காகவும் இன்றைய பெற்றோர் ஆயிரக்கணக்கில் செலவு செய்கின்றனர். இதோ ஒரு சானலின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியிட்ட சிறுவனுக்காகப் பெற்றோர் செய்த செலவுகள் நினைத்தாலே தலைசுற்றுகிறது. ஒரு பக்கம் இந்தியாவை வறுமை நாடு என்கிறார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழ் இவ்வளவு பேர் என்ற புள்ளிவிவரங்கள். மறுபக்கம் தங்கள் குழந்தை தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் ஜெயிக்க, பெற்றோர்- அதுவும் நடுத்தர வர்க்கத்து, வருமான வரி கட்டும் பெற்றோர்- செய்யும் செலவு. அந்தப் பையனின் தாய் கொஞ்சமாவது யோசித்திருக்கலாமே.

boy-cryingஇந்தத் தொலைக்காட்சியின் போட்டிகளில் கலந்து கொள்ளும் குழந்தைகளுக்கு விளையாட்டு என்றால் என்னவென்று தெரியுமா என்பதே சந்தேகம்; அப்பாவும் அம்மாவும் அவ்வளவு படுத்தி எடுக்கின்றனர். மேலே சொன்ன சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பையனை, ‘சரியாப் பாடலைனா அப்பா அடிப்பேன்’ என்று சொன்னாராம். நடனப் போட்டியில் கலந்துகொள்ளும் பெண்களுக்கோ உணவுக் கட்டுப்பாட்டில் இருந்து எல்லாமும். மிகச் சிறிய வயதிலேயே இந்த ரசாயனக் கலவைகள் மிகுந்த அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தி, சின்னக் குழந்தைகள் கூட குழந்தைத் தன்மையை இழந்து காட்சி அளிக்கின்றனர். இது எந்தத் தாயின் கண்ணிலாவது படுகிறதா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். பக்கத்து வீட்டுக் குழந்தைக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம்பெற வாய்ப்புக் கிடைத்தது என்றால் தன் வீட்டுக் குழந்தையை அவர்கள் படுத்தும்பாடும் அந்தக் குழந்தைகள் பெறும் மன உளைச்சலும் நேரில் பார்த்தால்தான் நம்பமுடியும்.

இங்கே நம் நண்பர் சஹ்ருதயன் என்பவர் கூறி இருந்தாற்போல் பெண்கள் தங்கள் நளினத்தையும், எழிலையும், கம்பீரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர். 

[இந்தப் பகுதியோடு கட்டுரையை முடிக்க நினைத்தேன். நீண்டுவிட்டது. அடுத்த பதிவில் முடியலாம். :)]

(தொடரும்…)

9 Replies to “சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 3”

  1. //எல்லாவிதமான கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளும் சனாதன தர்மம்.// அதில் சிறந்தது எதுவோ அதை ஏற்று தமதாக்கி வேண்டாததை புறந்தள்ளும் சிறப்பு சனாதன தர்மத்திற்கு உண்டு.

  2. ஆசிரியர் அவர்கட்கு,
    உங்களின் தொடரை உன்னிப்பாக படித்து வருகிறேன்.

    இந்த பகுதியில், அடாவடி பெண்களின் உதாசீனத்தால் குழந்தை
    வளர்ப்பில் ஏற்பட்டு கொண்டிருக்கும் பிரச்சினைகளை எழுதியுள்ளீர்கள்.

    குழந்தை வளர்ப்பைப் பற்றின என் புரிதலை நானும் என் பங்கிற்கு
    எழுதுகிறேன்.இவ்விஷயத்தை உங்களின் கட்டுரையில் எழுத முடியாத பட்சத்தில், ஒரு தனி கட்டுரையாக எதிர்பார்க்கிறேன்.

    எனக்கு புரிந்த அளவில் சில விஷயங்களை முன்வைக்கிறேன்.

    (1)தாய்ப்பாலின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி:
    பன்றி, நாய் போன்ற ஐந்தறிவை உடைய பாலூட்டிகள் சர்வ சாதாரணமாக செய்யும் இந்த செயலை இன்றைய பெண்களுக்கு பிரசாரப்படுத்த வேண்டியிருக்கிறது.

    “BBC-The Human Body”இன் படி, நம் சுற்றுச்சூழலில் உள்ள கிருமிகளினால் நமக்கு (பெரியவர்களுக்கு) ஒரு தொந்தரவும் இல்லை. ஏனெனில் அந்த கிருமியின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் செய்யும் திறமையை நம் உடல் பெற்று விட்டது. ஆனால் ஒரு குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருப்பதால் அதற்கு உதவி தேவைப்படுகிறது. எந்த நாட்டில், எந்த சூழலில் ஒரு தாய் வசிக்கிறாளோ, அங்கு இருக்கும் கிருமிகளுக்கான எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலின் மூலமாக குழந்தைக்கு செல்கிறது. இன்னொரு
    வகையில் கூறுவதானால் சீதோஷ்ண நிலை மாற மாற எதிர்ப்பு சக்தியும்
    தாய்ப்பாலின் மூலமாக குழந்தைக்கு சென்று விடுகிறது.

    சில வாரங்களுக்கு முன்னால் பொதிகை தொலைகாட்சியில் “நல வாழ்வு”
    என்னும் நிகழ்ச்சியில் ஒரு மருத்துவர் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை
    விளக்கினார். இன்றைய வேலை பார்க்கும் பெண்களைப் பற்றின
    வாதம் வரும்போது, குழந்தை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும்
    சரியாக வளர வேண்டும் என்று பெண்கள் ஆசைப்பட்டால்(!!!)
    அவர்கள்தான் சில முன்னெடுப்புகளை செய்ய வேண்டும் என்றார்.
    “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு” என்றபடி குழந்தைக்கு தாய்ப்பால்
    கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் ஏதாவது ஒரு
    மார்க்கம் கிடைக்கும். அது எப்படி என்றும் அந்த மருத்துவர் விளக்கினார்.
    அடாவடி பெண்கள் மருத்துவரிடம் கேட்டு கொள்ளலாம்.

    (2)தாய்ப்பாலின் மூலம் பாதுகாப்பு மனநிலை:
    நம் பெரியவர்கள் இதை “தாய் மடி சூடு” என்று கூறுவார்கள். சோமாலியாவில் உள்ள ஒரு சிறு குழந்தையை உலக அழகி ஐஸ்வர்யா
    ராயிடம் கொஞ்ச கொடுத்தாலும் சில நிமிடங்களில் அழ ஆரம்பித்து
    விடும். தன் தாயிடம் இருந்தால்தான் தான் உயிருடன் வாழ முடியும்.
    தனக்கு வேண்டியவற்றை செய்வாள் என்பதெல்லாம் ஒரு குழந்தையின்
    உடலில் பதியப்பட்டுள்ளது.

    (3)அறிவியலின் படி குழந்தை அழுதவுடன் தாய்க்கு பால் சுரக்கும். தாய் பக்கத்தில் இருந்தால்!!!

    (4)ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் இதை விளக்கும்போது “குழந்தையின்
    மலத்தையும் போக்கியமாகக் கொள்வாள் ஒரு தாய்” என்பார்கள்.
    குழந்தை மலத்தை வெளியேற்றி விட்டதா என்பதை சோதிக்க எந்த
    விதமான அருவெறுப்பும் இல்லாமல் ஒரு தாய் தன் வலது கையால்
    குழந்தையின் பின்புறத்தை தொட்டுப்பார்ப்பாள்.

    (4)குழந்தை வளர்ப்பு:
    மனித மூளை ஒரு அற்புதமான கருவி. 5 முதல் 7 வயதிற்குள் பெரும்பாலான
    நியூரான் இணைப்புகள் ஏற்பட்டு விடுகின்றன. பிரிட்டனில் 1970களில்
    ஒரு தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. பெற்றோர் இருவருமே
    மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். குழந்தையை ஒழுங்காக வளர்க்க
    தெரியாமல் 9 வருடங்களுக்கு வீட்டை விட்டே வெளியே விட வில்லை.
    குழந்தைக்கு 9 வயதாகும்போது பக்கத்து வீட்டில் இருந்த யாரோ
    காவல் துறைக்கு முறையிட அக்குழந்தை காப்பகத்துக்கு எடுத்து செல்லப்
    பட்டது. கிட்டத்தட்ட 70 வயது வாழ்ந்தாலும் அந்த பெண்ணினால்
    கடைசி வரை சரியாக பேச முடியவில்லை. தன் வேலையை செய்ய
    தெரிய வில்லை. 7 வயதிற்கு மேல் உபயோகப்படாத நியூரான்
    இணைப்புகள் செயலிழந்து விடுகின்றன. பிறகு என்னதான் படித்தாலும்
    “Language Comprehension” ஏற்படுவதில்லை. குறிப்பாக “அவன்
    வருகிறான், அவள் வருகிறாள்” என்னும் இலக்கணங்களை அந்த
    பெண்ணால் சாகும் வரை புரிந்து கொள்ள முடிய வில்லை.

    தாய் குழந்தையுடன் எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசிக்
    கொண்டே இருக்க வேண்டும் என்கின்றனர் இன்றைய விஞ்ஞானிகள்.
    நம் முன்னோர்களோ இதை சர்வ சாதாரணமாக செய்து வந்தனர்.
    “ங்கு சொல்லு” “தா தா தா” சொல்லு என்று!!! தாய் குழந்தையுடன்
    பெரும்பாலான நேரத்தை செலவிட வேண்டிய அவசியத்திற்காக
    எழுதினேன்.

    (5)பெண்ணிற்கு வரன் தேடும் படலம்.
    இன்று பெரும்பாலான தாய்கள் தங்கள் மகள்களுக்கு “Silicon Valley”யில்
    வேலை பார்க்கும் “Software Engineer”தான் கணவனாக வர வேண்டும்
    என்று பேராசைப்படும் நிலை உள்ளது. வெளிநாட்டில் உள்ள ஒருவனுக்கு
    எந்த “Background Check”ம் செய்யாமல் பெண்ணை கொடுத்து விட்டு “குத்துதே குடையுதே” என்று புலம்ப வேண்டியது!!!

    (6)புத்திசாலிகளை ஆட்டு மந்தையாக மாற்றுவது:
    சமீபத்தில் “Udaan” என்னும் ஹிந்தி படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
    கவிதை, கதைகள் எழுதும் உத்வேகத்துடன் இருக்கும் ஒரு டீன் ஏஜ்
    பையன்தான் கதாநாயகன். ஆனால் தகப்பனோ தன்னைப்போலவே
    தன் மகனும் இஞ்சினியருக்கு படித்துவிட்டு தன் கம்பெனியை நிர்வகிக்க
    வேண்டும் என்று ஆசைப்படுகிறார். மகனின் ஆசையின்படி அவனை
    கலைக்கல்லூரியில் சேர்க்காமல் எஞ்சினியரிங்க் கல்லூரியில் சேர்க்கிறார்.

    இக்கதை பல குடும்பங்களில் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கும்
    என்றே நான் நம்புகிறேன். ஒரு சமூகத்தில் அதிகபட்சமாக 10% பேர்தான்
    புத்திசாலிகளாக இருப்பார்கள். அவர்களிலும் கலையில் ஈடுபட
    ஆசைப்படும் குழந்தைகளை தங்கள் வரட்டு கௌரவத்திற்காக சீரழிக்கும்
    பெற்றோர்களை என்ன சொல்வது. இந்த திரைப்படத்தில் வசதியாக
    தகப்பனை மட்டுமே இந்த இழி செயலை செய்வதாக பாத்திரப்படுத்தி
    இருந்தாலும் பல தாய்களும் சளைக்காமல் இதை செய்கிறார்கள் என்றே
    நான் நம்புகிறேன்.

    (7)அமேரிக்காவில் இராணுவத்திற்கு ஆள் எடுக்கும் விஷயத்தில்
    “அதிக பருமன்” பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அவர்களுக்கு
    பயிற்சி கொடுக்கும்போது பயிற்சியின் முறைகளை மாற்றம்
    செய்துள்ளனர். “அதிக பருமன்” பிரச்சினை நவீன தாய்களின்
    அளவுக்கு அதிகமான செல்லத்தினால்தான் உருவாகியுள்ளது. குழந்தை
    அடம் செய்கிறது என்றால் எதை வேண்டுமானாலும் எவ்வளவு
    வேண்டுமானாலும் கொடுக்க முடியுமா?

    ஒரு எழுத்தாளர் இதை அழகாக எழுதினார்.
    குழந்தைக்காக தன்னை என்ன வேண்டுமானாலும் செய்ய துணிபவள்
    தாய்.
    தனக்காக குழந்தையை என்ன வேண்டுமானாலும் செய்பவள் அம்மா.

    என்னதான் சம உரிமை என்று வீம்பு செய்தாலும் குழந்தை வளர்ப்பை
    பொறுத்தவரை தாய்க்குதான் அதிக பொறுப்பு உள்ளது. இதை
    நம் முன்னோர்கள் “தகப்பன் இல்லையென்றாலும் குழந்தையை ஒரு தாய்
    சரியாக வளர்த்து விடுவாள், ஆனால் தாய் இல்லாத குழந்தையை ஒரு
    தகப்பனால் சரியாக வளர்க்க முடியாது” என்று கூறுவார்கள்.
    இந்த பழமொழி இன்று இருக்கும் அடாவடி பெண்களுக்கு பொருந்தாது.

    இந்த நவீன அடாவடி அம்மாக்களை என்னை போன்றவர்கள் கைகூப்பி
    வேண்டி கேட்டு கொள்வது. “தயவு செய்து குழந்தை பெற்றுக்
    கொள்ளாதீர்கள்”.

  3. bike விளம்பரம் என்று நினைக்கிறேன். ஒரு பெண் அந்த ஆணைக் கவர தன் குழந்தையை பின்னால் மறைத்துக் கொண்டு அது தன் அக்காவின் குழந்தை என்று சொல்லுவாள். சினிமாவும், தொ.கா யின் மெகா சீரியல்களும் விளம்பரங்களும் பெண்களை எவ்வளவு கொச்சைப் படுத்த முடியுமோ அவ்வளவும் செய்கிறது. பெண்ணிய இயக்கங்கள் எல்லாம் உண்மையாகவே செயல்படுகிறதா என்ன?

    பெண்ணிய இயக்கங்கள் குழந்தைகள் மேலான குற்றங்களைக் கூடக் கண்டு கொள்வது மாதிரி தெரியலையே.

  4. நம்மை நாம் கீழ்மைப்படுத்திக்கொள்ளலாகாது என்னும் உறுதி ஏற்பட்டால் எந்த அவலமும் நிகழாது. இந்த உறுதி எவ்வாறு ஏற்படும்? பெற்றோர்கள், தாங்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் பட்சத்தில். அவர்களுக்குத் தாங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்னும் உணர்வு எப்போது உள்ளத்தில் இருந்தவாறே இருக்கும்? அவர்கள் பெற்றோர்கள் அம்மாதிரி இருந்தால்.

    இந்த தொடர் சங்கிலி அறுபடாதிருக்கச்செய்வது எப்படி? மரபுகள் போற்றப்படும்போது. மரபுகள் போற்றப்படுதல் எவ்வாறு நிகழும், மரபுகள் காப்பு பற்றிய கவலைகள் எப்போது இருந்தவாறே இருக்கும்? மரபுகள் பற்றிய உயரெண்ணம் சிறுவயதிலேயே ஏற்றப்படும்போது. அவ்வாறு சிறுவயதிலேயே ஏற்றுவது எப்படி? நல்லாசிரியரிடம் பொறுப்பை விடும்போது, கல்விநிலையங்களில் ஒழுக்கக்கல்வி கட்டாயப்பாடமாக (கண்டிப்புப்பாடமாக அல்ல) இருக்கச்செய்கையில்.

    மேற்படி செய்வது சுயமரியாதையை உத்தரவாதமாக அளிக்குமா? தெரியாது, ஆனால் இதைத்தவிர வேறு வழியில்லை. கடைசி பட்சமாக மரபுமீறல் தாமதப்படலாம். அவ்வளவில் இதற்கு வெற்றியே.

  5. பெண்ணிய இயக்கங்கள் எல்லாம் உண்மையாகவே செயல்படுகிறதா என்ன?
    மிக நல்ல கட்டுரை. ஆனால் இதனை பெண் உரிமைக் கொடி பிடிப்போர் பழம் பஞ்சாங்கம் , அடிமைத்தனத்தின் வக்காலத்து எனலாம்,அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. சமீபத்தில் உடல் நிலை சரியில்லாமல் Intensive Care வார்டு ல் சேர்க்கப்பட்டு பின்னர் வீட்டில் ஒய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது சில நேரம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க நேரிட்டது . பல விளம்பரங்கள் (பெண்களை முன்னிலைப்படுத்தி ) முகம் சுளிக்கவைக்கும் அளவுக்கு இருந்ததை காண முடிந்தது. காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகளுக்கு எதிராய் வரிந்துக் கட்டும் பெண்ணுரிமை கூட்டங்கள்
    இதுபோன்ற தரங்கெட்ட விளம்பரங்களைப் பற்றி வாயே திறப்பதில்லை. ஜன நாயக மாதர் சங்கத்தில் மிகவும் ஈடுபாடுள்ள எனது அலுவலக பெண் நண்பரிடம் இதுபற்றி கேட்டபொழுது அவர் சம்பந்தமில்லாமல் ஹிந்துத்துவ கட்சிகளை பற்றி கதைக்க ஆரம்பித்தார். இதைக் கூட இருந்து கவனித்துக் கொண்டிருந்தஎனது மலையாளி நண்பர் மிகவும் கடுப்பாகி இவர்கள் டுப்ளிகேட் பெண்ணுரிமைக்காரர்கள். சர்வதேச நிறுவனங்களிடம் காசு வாங்கிக் கொண்டு சும்மா இருக்கிறார்கள். இவர்களிடம் பேசுவதும் பாக்கிஸ்தானிடம் சமாதானம் பேசுவதும் ஒருபோதும் பலனளிக்காது. இந்தமாதிரி ஆசாமிகளுக்கு கர்நாடகத்தின் முத்தலிக் தான் லாயக்கு என்று முகத்தில் அடித்தார்ப் போல் சொல்லி விட்டார்.

  6. The problem is the confusion between empowerment and behaviour as its end product.As far as hinduism is concerned women have been empowered in many ways.Hindu scripture has always insisted on special space for women in the society. family and in day today affirs.At the same time by illustrative examples in the mythology pointed out how ego clashes between the gods and goddesses became disruptive and finally settled .(Episodes 1.Siva and Dhakshayanii 2,Mahalakshmi and Vishnu–Bhrighu episode and 3 Saraswathi and Brahma–the episode about a river near Kanchipuram) When reqired Gods surrendered their power to the Goddesses for the welfare of humanity-Chandi the episode of Mahishasuramardhini.The book “The Alphabet and the Mother Goddess”pointed out how before the invention of the alphabet and printing the mother was the most importan t person.She not only by providing flesh blood and breath to the foetus educated its along with her milk about its father, environment and its relation with the outsidew world in addition to helping it to sitstand walk and run.Then only the father and other males came into pictureThose who compare the west should undrstand women empowerment in the west was the aftermath of the world wars when the countries lost in millions the flower of manhood in the battlefield and out of necessity to to bring the women out of the homesIt is afact men have exaggerated their rights and women have their wrongs but they should understand that the position of woen even now when compared with christianity and islam is much better in all walks of life in India and I only want to draw attention to a conversation between Mark Twain and a reader.The reader asked Twain what would be the position of men in a world without women? Twain replied Scarse sir. Mighty scarse.Vice versa is also true.Prudence in the interest of huamans a balance has to be struck and women should be given their due and they should as the ultimate progenitor of man kind pay attention to their sacred duty

  7. உடல்நலக் குறைவினாலும், நேரமில்லாமையாலும் பின்னூட்டங்களைப் படிக்கவோ, பதிலளிக்கவோ முடியவில்லை. இரண்டு,மூன்று நாட்கள் கழித்து பதிலோடு/பதிவோடு வருகிறேன். நன்றி அனைவருக்கும்.

  8. படித்ததும் நன்கு சிந்திக்க வேண்டிய கட்டுரை. மனம் பொறுக்காது பல விஷயங்களை வெளிப்படையாக ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலைக்கு பெற்றோர்களும் முக்கிய காரணமாகும். இனி வளரும் தலைமுறையாவது
    நன்கு வளர்க்க உறுதி கொள்வோம்
    சுந்தரராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *