பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்

October 16, 2010
By

ம்பாளின் கால் சிலம்பொலி கேட்கவில்லை? உலகமே உபமானங்களும் உபமேயங்களுமாக மாறி விடுகிறது. நிஜத்தின் ஸ்வரூபங்களில் இப்படியும் ஒன்றோ? .. கிறிஸ்துவ வேதப்படி ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்தவர்கள் முதல் பாவத்தின் குழந்தைகள். ஆண்டவனின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளானவர்கள். அவர்களின் தந்தை சொல்கிறார் – I am a Vengeful God. ஆனால் நாம் எல்லாரும் சகல ஜீவராசிகளும் அகிலாண்டேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, ஜகன்மாதா, கருணாகரி,சௌந்தர்ய ரூபிணியின் குழந்தைகள். சௌந்தர்யம் நம்மிலும் நம்மைச் சூழ்ந்து இயங்காமல் எப்படி இருக்க முடியும்? சிறு நுரை ஆயினும் நாம் அவளுடைய லஹரிகள்.

– லா.ச.ராமாமிர்தம், ’சௌந்தர்ய..’ நூலில் (வானதி பதிப்பகம் வெளியீடு) .

durga_faceஆப்³ரஹ்ம-கீட-ஜனனீ – பிரம்மன் முதல் புழு வரை அனைத்து உயிர்களையும் பெற்ற அன்னை என்று லலிதா சகஸ்ரநாமத்தில் வருகிறது. அநேக-கோடி-ப்³ரஹ்மாண்ட³ ஜனனீ – அனேக கோடி அண்டங்களைப் பெற்ற அன்னை என்று இன்னொரு நாமம். லலிதா சகஸ்ரநாமமே ஸ்ரீமாதா என்று ஆரம்பித்து லலிதாம்பி³கா என்று முடிகிறது. மாதா, அம்பிகா என்ற சொற்கள் இரண்டுமே அன்னையைக் குறிப்பவை. உணர்வுள்ள உயிர்களில் மட்டுமல்ல, உணர்வற்ற ஜடப்பொருள்களிலும் உறைவது அவளது சக்தியே – சித்ச’க்தி: சேதனா-ரூபா, ஜட³ச’க்தி: ஜடா³த்மிகா. இவ்வுலகம் எங்கும் இறையே நிரம்பியுள்ளது என்ற உபநிஷத தத்துவத்தின் உட்பொருளே உலக அன்னையாகிய பராசக்தியின் திருவுருவமாக இலங்குகிறது. அவள் ஸர்வாந்தர்யாமினீ – அனைத்திலும் உட்பொருளாக இருப்பவள்.

குறியும், குணங்களும் அற்ற சுத்த வஸ்துவாகிய பரம்பொருளை, கண்காணும் பிரபஞ்ச வடிவாகவும் குணங்களுடையதாகவும் அடையாளப் படுத்தி வழிபடும் உபாசனா மார்க்கங்கள் இந்து தர்மத்தின் தனித்துவமிக்க வழிபாட்டு முறைகள்.

ஏதவன் ஊர்? ஏதவன் பேர்? ஆர் உற்றார் ஆர் அயலார்?
ஏது அவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்?

என்று கேட்டு,

ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமோ!

என்று விடையும் சொல்கிறது திருவாசம். தெய்வ வடிவங்களின் பல்வேறு சிறப்பியல்புகளை அவற்றின் திருநாமங்களாகப் போற்றிப் பாடும் சகஸ்ரநாமங்கள் என்ற வகை பக்தி நூல்கள் பழங்காலத்திலேயே பிரபலமாக இருந்தது தெரிய வருகிறது. நமது இதிகாச புராணங்களில் பல்வேறு சகஸ்ரநாமங்கள் அடங்கியுள்ளன. மகாபாரதத்தில் வரும் விஷ்ணு சகஸ்ரநாமமும், பிரம்மாண்ட புராணத்தில் வரும் லலிதா சகஸ்ரநாமமும் இவற்றில் மிகவும் பிரசித்தமானவை. பாரத தேசம் முழுவதும் பல லட்சக் கணக்கான பக்தர்களால் ஓதி வழிபடப் படும் பெருமை கொண்டவை.

பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற பகுதியில் லலிதா தேவியின் திரு அவதாரமும், சரிதமும் கூறப் படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா சகஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான இந்த ஸ்தோத்திரம் உள்ளது. ஹயக்ரீவர் என்ற மகரிஷி (விஷ்ணு அவதாரமாகக் கூறப் படுவதும் உண்டு) அகஸ்திய மகரிஷிக்கு உபதேசம் செய்வதாக 183 சுலோகங்கள் அடங்கிய இந்த நூல் அமைக்கப் பட்டுள்ளது. அகஸ்தியரும், அவரது மனைவி லோபாமுத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப் போற்றப் படுபவர்கள் (லோபாமுத்ரார்ச்சிதா – லோபாமுத்திரையால் அர்ச்சிக்கப் பட்டவள் என்றே ஒரு நாமம் லலிதா சகஸ்ரநாமத்தில் உண்டு). தேவியின் கட்டளைக்கிணங்க வாசினி முதலான வாக்தேவதைகளே பிரத்யட்சமாகி இந்த தெய்வீக ஸ்தோத்திரத்தைச் செய்ததாகவும் புராணக் குறிப்பு உண்டு.

இந்த நூலுக்கு எழுதப் பட்டிருக்கும் உரைகளில் தலைசிறந்ததாக விளங்குவது பாஸ்கர ராயர் எழுதிய “சௌபாக்ய பாஸ்கரம்” என்ற உரை. பாஸ்கர ராயர் (பொ.பி* 1690 – 1785) மிகப் பெரிய தேவி உபாசகரும், தத்துவ ஞானியும், அறிஞரும் ஆவார். இவர் மகாராஷ்டிரத்தில் பிறந்து, சிறு வயதிலேயே தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திற்கு தன் குருநாதரைத் தேடி வந்தடைந்தார். காவிரிக் கரையில் நீண்ட நாள் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த ஊர் பாஸ்கரராஜபுரம் என்று இன்றளவும் வழங்கப் படுகிறது. (* பொ.பி – பொதுயுகத்துக்குப் பின் – Common Era, Circa).

srichakra_with_mantraசகஸ்ரநாம நூல்களிலேயே தனித்துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா சகஸ்ரநாமம் உள்ளது. அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது. சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன்வைக்கப் படுகின்றன. வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை. பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள். இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா சகஸ்ரநாமம் அமைந்துள்ளது.

லலிதா சகஸ்ரநாமத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவமும், அமைப்பும், நடையும் உள்ளது. இதில் திருநாமங்கள் கோர்க்கப் பட்டிருக்கும் வரிசையே ஒரு குறிப்பிட்ட சித்தாந்தக் கருத்தை விளக்குவதாக உள்ளது. ஆயிரத்தெட்டு நாமங்களும் கீழ்க்கண்ட வரிசையில் கீழ்க்கண்ட பேசுபொருள்களைக் குறித்து அமைந்திருப்பதாக உரைநூல்களை இயற்றிய பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள் –

ஸ்ரீமாதாவின் அவதாரம்
கேசாதி பாத வர்ணனை (ஸ்தூல ரூபம்)
பண்டாசுர வதம்
மந்த்ர வர்ணனை (சூட்சும ரூபம்)
குண்டலினீ ரூபம்
பக்த அனுக்ரஹம்
நிர்க்குண உபாசனை
சகுண உபாசனை
பஞ்சப்ரஹ்ம ரூபம்
க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ ரூபம்
பீடங்களும், அங்க தேவதைகளும்
யோகினீ தியானம்
விபூதி விஸ்தாரமும், மார்க்க பேதங்களின் சமரசமும்
சிவசக்தி ஐக்கியம்

தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி அக்னிகுண்டத்தில் அவதரித்தவள் லலிதா தேவி. நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றை ஏந்தியவள். இந்தப் புராண விளக்கம் தியானத்திற்குரிய தத்துவக் குறியீடாக லலிதா சகஸ்ரநாமத்தின் தொடக்கத்திலேயே வந்து விடுகிறது. சிதக்³னிகுண்ட³ ஸம்பூ⁴தா – அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றியவள், ராக³ஸ்வரூப பாசா’ட்⁴யா – ஆசை வடிவான பாசக்கயிற்றை ஏந்தியவள், க்ரோதா⁴கார அங்குசோ’ஜ்வலா – தீமையைப் பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிர்பவள், மனோரூப இக்ஷு கோத³ண்டா³ – மனமாகிய கரும்புவில்லை உடையவள், பஞ்சதன்மாத்ர ஸாயகா – ஐந்து புலன்களாலும் உணரப்படும் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும், ஐந்து மலர்க்கணைகளகாக் கொண்டவள். பாசக்கயிற்றால் உயிர்களை ஆசையில் பிணிப்பவளும், பின் தனது அங்குசத்தால் அதனை வெட்டி எறிபவளும் அவளே. மனமாகிய வில்லில் ஐம்புலன்களாகிய மலர்க்கணைகளைப் பொருத்தி தேவி பிரபஞ்ச விளையாட்டு விளையாடுகிறாள்!

த³ராந்தோ³லித-தீ³ர்கா⁴க்ஷீ – சிறிதே சலிப்புடன் கூடிய நீண்ட கண்களையுடையவள்
நிஜாருண ப்ரபா⁴பூர மஜ்ஜத் ப்³ரஹ்மாண்ட³ மண்ட³லா – தன் சிவப்பொளி வெள்ளத்தில் அண்டங்கள் அனைத்தையும் மூழ்கச் செய்பவள்
நக²தீ³தி⁴தி ஸஞ்ச²ன்ன நமஜ்ஜன தமோகு³ணா – தன் கால் நகங்களின் ஒளியால் வணங்குவோர் அகத்திலுள்ள இருட்குணங்களை அகற்றுபவள்
ச்’ருதி-ஸீமந்த-ஸிந்தூ³ரீக்ருத-பாதாப்³ஜ-தூ⁴லிகா – அவள் பாதகமலத்தின் தூசியே வேத மங்கையின் வகிட்டில் விளங்கும் குங்குமம்
ஸகலாக³ம-ஸந்தோ³ஹ-சு’க்தி-ஸம்புட-மௌக்திகா – அனைத்து ஆகமங்களாகிய சிப்பிகளுக்கும் உள்ளிருக்கும் நன்முத்து அவள்
உன்மேஷ-நிமிஷோத்பன்ன-விபன்ன-பு⁴வனாவலி – தன் கண்களை இமைத்து மூடுவதால் புவனங்களை ஆக்கி அழிப்பவள்
கலி-கல்மஷ-நாசி’னீ – கலியின் களங்கங்களை நாசம் செய்பவள்

நீராகா³, ராக³மத²னீ – ஆசையற்றவள். ஆசையைப் போக்குபவள்.
நிர்மோஹா, மோஹநாசி’னீ – மோகமற்றவள். மோகத்தை நாசம் செய்பவள்.
நிஷ்பாபா, பாபநாசி’னீ – பாவமற்றவள்; பாவத்தை நாசம் செய்பவள்.
நிர்பே⁴தா³, பே⁴த³நாசி’னீ – வேற்றுமையில்லாதவள்; வேற்றுமையைப் போக்குபவள்.

ஹர-நேத்ராக்³னி-ஸந்த³க்த⁴-காம-ஸஞ்ஜீவனௌஷதி⁴: – அரனது நெற்றிக்கண்ணின் தீயால் எரிந்துபோன காமனுக்கு உயிரூட்டிய மருந்து.
ச்’ருங்கா³ர-ரஸ-ஸம்பூர்ணா – சிருங்கார ரசத்தால் நிறைந்தவள்.
காமரூபிணீ – காமமே உருவானவள்; நினைத்த உருக்கொள்பவள்.
காமகேலி தரங்கி³தா – காமனுடைய லீலைகளாகிய அலைகள் தோன்றும் கடல்.

சித்கலா – உயிர்களிடத்தில் உணர்வாக இருப்பவள். ஆனந்த³கலிகா – உயிர்களில் ஆனந்தத்தின் அம்சமாக, மொட்டாக இருப்பவள். ப்ரேமரூபா – அன்பே வடிவானவள்
ப்ரியங்கரீ – அன்பு செய்பவள்.

மஹா காளீ, மஹாக்³ராஸா – பெருங்கவளமாக விழுங்குபவள், மஹாச’னா – அனைத்தையும் உண்பவள், சண்டி³கா – கோபக்காரி, சண்ட³முண்டா³ஸுர-நிஷூதினி – சண்டன் முண்டன் ஆகிய அசுரர்களை வதைத்தவள், பசு’லோகப⁴யங்கரி – விலங்கியல்பில் வாழ்வோருக்கு பயங்கரமானவள்.

devi-statue-eye-openingத³த்⁴யன்னாஸக்த ஹ்ருதயா – தயிர்சாதத்தில் ஆசை கொண்டவள், கு³டா³ன்ன ப்ரீத மானஸா – சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள், வாருணீ மத³ விஹ்வலா – வாருணீ என்ற மதுவால் மெய்மறந்தவள், மத³ கூ⁴ர்ணித ரக்தாக்ஷீ – மதுவின் களிப்பால் சுழலும் சிவந்த கண்களையுடையவள், தாம்பூ³ல-பூரித-முகீ² – தாம்பூலத்தால் நிறைந்த உதடுகளுடையவள்.

கலாநிதி⁴: – கலைகளின் இருப்பிடமானவள்; காவ்யகலா – காவியங்களின் கலையாயிருப்பவள்; ரஸக்ஞா – ரஸத்தை அறிந்தவள்; கலாலாபா – கலைகளில் மகிழ்பவள்; கலாமாலா – கலைகளை மாலையாகத் தரித்தவள்.

வீரகோ³ஷ்டிப்ரியா – வீரர்களின் குழுக்களை விரும்புகள்; வீரா – வீராங்கனை; வீரமாதா – வீரர்களின் தாய்; ஜயத்ஸேனா – வெல்லும் சேனைகளை உடையவள்.

தத்துவ அளவில் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் தூய அத்வைத நிலையில் இருந்தே பாடப் பட்டது என்பது இந்த நாமங்களின் பெருங்கடலின் ஒரு துளியை அள்ளிப் பருகினாலே தெரிய வரும் விஷயம். நிர்த்³வைதா – த்வைதம் எனப்படும் இருமை நோக்கை நீக்குபவள், த்³வைத-வர்ஜிதா – இயல்பாகவே இருமை நிலை இல்லாதவள், ஸாமரஸ்ய பராயணா – சமரசத்தில் நிலைபெற்றவள் என்பனவும் அன்னையின் திருநாமங்களே. இந்த அடிப்படையான சமரச பாவத்துடனேயே ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தை நாம் பாராயணம் செய்யவும், தியானம் செய்யவும் வேண்டும். அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் – எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்.

வேத நெறியிலிருந்து உதித்துப் பல திசைகளில் பாய்ந்தோடும் நதிகள் போன்ற சமயங்களின் சங்கம ஸ்தானமாக சமுத்திரமாக சக்தி வழிபாடும், ஸ்ரீவித்தையும் திகழ்கின்றன. சமயவாதத்தினால் பிரிந்து போகும் மார்க்கங்களை தத்துவரீதியாக, ஆன்மீக ரீதியாக ஒன்றுபடுத்தும் இடமாக சக்தி தத்துவம் இருக்கிறது.

நதி உண்ட கடலெனச் சமயத்தை உண்ட பர
ஞான ஆனந்த ஒளியே

என்று தாயுமானவர் தன் “மலைவளர்காதலி”யில் பாடுவது இதைத் தான் போலும்!

ஸ்ருஷ்ரிகர்த்ரீ ப்³ரஹ்மரூபா – படைப்பைச் செய்பவள், பிரம்மன் வடிவானவள்; கோ³ப்த்ரீ கோ³விந்த³ரூபிணீ – காப்பவள், கோவிந்தன் வடிவானவள்; ஸம்ஹாரிணீ ருத்ரரூபா – அழிப்பவள், ருத்ரரூபமானவள்; திரோதா⁴னகரீ ஈஸ்வரீ – மறைப்பவள், ஈஸ்வரி; ஸதாசி’வா, அனுக்³ரஹதா – அருள்பவள், ஸதாசிவ வடிவானவள் என்று ஐந்தொழில் புரியும் தேவதா ரூபமாகவும் தேவியை லலிதா சகஸ்ரநாமம் போற்றுகிறது.

lalita_parameshwariகராங்கு³லி-நகோ²த்பன்ன-நாராயண-த³சா’க்ருதி: – நாராயணனின் பத்து அவதாரங்களையும் தன் பத்து கைவிரல்களின் அசைவால் தோற்றுவிப்பவள் என்பது ஒரு நாமம். பஞ்ச-ப்ரேதாஸனாஸீனா – ஐந்து பிரேதங்களால் ஆன ஆசனத்தில் அமர்பவள் என்பது ஒரு நாமம். சக்தியின் உயிர்ப்பு இல்லையேல் தேவதைகளும் பிரேதங்கள் போல் ஆகிவிடுவார்கள் என்பது உட்கருத்து. ப்ரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈசானன் ஆகிய தேவதைகள் சிம்மாசனத்தின் கால்களாக அமர்ந்திருக்க அதன்மீது திரிபுரசுந்தரி ஆரோகணித்திருப்பது போன்று தீட்டப் படும் சித்திரம் இந்த உட்கருத்தையே குறிக்கிறது. ’சச்சிதானந்தமாகிய மரத்தின் கிளைகளில் எண்ணற்ற ராமர்களும், கிருஷ்ணர்களும், புத்தர்களும் கனிகளாகத் தொங்குகிறார்கள்’ என்பது ஸ்ரீராமகிருஷ்ணர் வாக்கு. ’ஆற்றங்கரை மணல் துகள்களை எண்ணிவிடலாம்; அவதாரங்களை எண்ணமுடியாது’ என்று புராண உபதேசம். மேற்கண்ட நாமங்களை இந்த உபதேசங்களின் பின்னணியில் வைத்து தத்துவார்த்த ரீதியாக சிந்திக்கவேண்டுமே அன்றி அவற்றிற்கு நேர்ப்பொருள் கொள்ளலாகாது.

ஆப்³ரஹ்ம-கீட-ஜனனீ என்ற நாமத்திற்கு அடுத்ததாக, வர்ணாச்’ரம விதாயினீ (வர்ணாசிரமங்களை வகுத்தவள்) என்ற திருநாமம் வருகிறது. இதை வைத்து ஆன்மீகத் தளத்தில் வர்ணாசிரம கட்டுப்பாடுகளை சக்தி உபாசனா மார்க்கம் ஆதரிக்கிறது என்று வியாக்யானம் சொல்வது சரியானதாக இருக்காது என்பது என் தாழ்மையான கருத்து.

ஸர்வ வர்ணாதி⁴காராச்ச நாரீணாம் யோக்³ய ஏவ ச – லலிதா சகஸ்ரநாமமும், தேவி உபாசனையும், சாஸ்திரோக்தமாகவே பெண்களுக்கும், எல்லா வர்ணத்தினருக்கும் உரியதாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆபா³லகோ³ப விதிதா – சிறுகுழந்தைகளும், இடையர்களும் உட்பட எல்லோராலும் அறியப் படுபவள் என்ற திருநாமத்தின் உட்பொருளும் இதனுடன் இணைத்துக் காணத் தக்கது.

வர்ணாசிரம விதாயினீ என்பதன் உண்மையான பொருள் எல்லா வர்ணத்தினரும் ஜகதீஸ்வரியாகிய மகா சக்தியின் பிரதிபிம்பங்களே என்பதேயாகும். சுவாமி விவேகானந்தர் கூறுகிறார் –

O India.. Forget not that thy social order is but the reflex of the Infinite Universal Motherhood; forget not that the lower classes, the ignorant, the poor, the illiterate, the cobbler, the sweeper, are thy flesh and blood, thy brothers.

ஓ பாரத நாடே, உனது சமூக அமைப்பானது அகிலாண்டேசுவரியான பராசக்தியின் பிரதிபிம்பம் தான் என்பதை மறவாதே. தாழ்த்தப்பட்டவர்களும், அறியாத மூடர்களும், ஏழைகளும், எழுத்து வாசனையற்றவர்களும், சண்டாளர்களும், தோட்டிகளும் உன் சகோதரர்கள், உன் இரத்தக் கலப்பு உள்ளவர்கள் என்பதை மறவாதே.

தத்துவங்களின் பெருவெளியாக லலிதா சகஸ்ரநாமம் இருக்கிறது.

மூலப்ரக்ருதி என்னும் ஆதி இயற்கை வடிவானவள் – மூலப்ரக்ருதி:. இந்த ஆதி இயற்கை வெளிப்பட்டும், வெளிப்படாமலும் உள்ளது – வ்யக்தாவ்யக்த ஸ்வரூபிணி. வெளிப்படும் பேரியற்கை எங்கும் வியாபித்தும் (வ்யாபினீ), பல்வேறு வடிவாகவும் (விவிதா⁴காரா) உள்ளது. இந்த ஆதி இயற்கையை யாராலும் முழுமையாக அறிந்து விட முடியாது. அதற்கு பிரக்ஞை என்னும் முழுமை அறிவு தேவைப் படுகிறது, அந்த அறிவு வடிவானவள் – ப்ரக்ஞான-கன-ரூபிணீ. இது சாங்கிய தரிசனம்.

அந்த முழுமை அறிவு அனுபூதியில் கைகூடும்போது, அறிபவன்,அறிவு,அறிபடுபொருள் அனைத்தும் ஒன்றாக ஆகி விடுகிறது – த்⁴யான த்⁴யாத்ரு த்⁴யேய ரூபா. தர்மம், அதர்மம் போன்ற இருமை நிலைகள் நீங்கி விடுகின்றன – த⁴ர்மாத⁴ர்ம விவர்ஜிதா. இது வேதாந்த தரிசனம்.

பசு’பாச’ விமோசனி – பசுக்களாகிய ஜீவர்களின் பாசம் என்னும் தளையை விடுவிப்பவள். சி’வஞான ப்ரதா³யினி – சிவஞானத்தை அளிப்பவள். இது சைவ சித்தாந்தம.

தத்துவங்களே அன்னையின் இருக்கைகளாகவும் (தத்வாஸனா), காற்சிலம்பின் மணிகளாகவும், கையில் ஏந்தி விளையாடும் பூக்களாகவும், மகா காளிக் கோலத்தில் அவள் அணியும் மண்டையோட்டு மாலைகளாகவும் ஆகிவிடுகின்றன!

அதுவே லலிதா சகஸ்ரநாமம் அளிக்கும் பரவச அனுபவம். இந்த துதியைப் பொருள் உணர்ந்து படிக்கும் போதும், தியானிக்கும் போதும் தர்க்க மனத்தின் எல்லைகளுக்கு அப்பால் அது சுழன்றடித்துச் செல்கிறது. பக்தியுடன் இதைப் பாராயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் ஏதோவொரு நாமம் நம் மனதில் ரீங்கரித்து மொழியின் சாத்தியங்களை மீறி ஒரு ஆன்மிகப் பெருவெளிக்குள் நம்மை அழைத்துச் செல்கிற்து.

என்ன செய்கிறேன்? எப்படி ஒருவன் சிந்தித்து, தர்க்கித்து அப்படி ஒரு பெயரை உருவாக்க முடியும்? வானத்திலிருந்து நட்சத்திரம் உதிர்ந்து நீர்த்தடாகத்தில் நீலத் தாமரையாக மறுநாள் பூத்தெழுவது போல அது வரவேண்டும். மேகச் சுவர்களைப் பிளந்து மின்னல் சாணிக்குழிக்குள் விழுந்து தங்கத்தூணாக மாறுவது போல வரவேண்டும்… அந்தப் பாறைமீது, தனிமையில். வானம் மோனத்தில் மூழ்கியிருக்கும் நிலவு நாளில். அவள் முகத்தை நினைத்தபடியே இருக்கவேண்டும். அவளையன்றி வேறு எதையும் மனம் தீண்டாத ஒருமை கூடவேண்டும். மனப்பொந்திலிருந்து மின்மினிகள் கிளம்புவது போல ஒருவேளை என்னிலிருந்து அப்போது பெயர்கள் பீரிட்டெழக் கூடும். ஆயிரம் பெயர்கள். சகஸ்ரநாமம். லலிதா சகஸ்ரநாமம் எழுதியவன் அப்படித் தான் அடைந்திருப்பான். ஒவ்வொரு பெயரும் பிறிதில் பிரதிபலிக்கும் ஆயிரம் பெயர்கள். அவை கணந்தோறும் கலந்து பிறக்கும் கோடானுகோடிப் பெயர்கள். அப்பெயர்கள் எல்லாம் இணைந்து ஒன்றாகும் ஒரு பெயர். அப்பெயரில் இல்லாத எதுவுமே எங்குமில்லை. அப்படிப் பட்ட பெயர். அது தான் அவள் பெயர்…

– ஜெயமோகனின் ‘காடு’ நாவலில்.. (தமிழினி வெளியீடு, பக்.288)

லலிதா என்ற சொல்லே மிக அழகானது. நித்திய சௌந்தர்யமும், நித்திய ஆனந்தமும் ஒன்றான அழகு நிலை என்று அதற்குப் பொருள். பரிபூரணத்தின் முழுமையான தரிசனத்தைத் தேடும் சாதகனை, பரதேவதையின் தியான, உபாசனா மார்க்கங்கள் வழியாக இட்டுச் செல்கிறது லலிதா சகஸ்ரநாமம். இந்து ஞான மரபின் உச்சமான உயர் தத்துவங்களை கவித்துவமாக எடுத்துரைக்கும் மணிமுடியான தோத்திர நூல் இது என்றால் மிகையில்லை.

********

sri_lalita_sahasranama_bhashyam_by_anna_book_coverலலிதா சகஸ்ரநாமத்தைப் பொருளுணர்ந்து கற்பதற்கு எனக்குப் பேருதவி புரிந்த நூல்கள் இரண்டு. ஒன்று, அமரர் “அண்ணா” அவர்கள் உரையெழுதி ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டிருக்கும் லலிதா சகஸ்ரநாம பாஷ்யம் என்ற புத்தகம். அண்ணா அவர்கள் இந்து தர்ம புனித நூல்களைக் கற்றுணர்ந்த பேரறிஞர். ஸ்ரீவித்யா உபாசகரும் ஆவார். ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்களைத் தன் லட்சியமாகக் கொண்டு தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆசிரியராகவும், மாணவர்களின் வழிகாட்டியாகவுமே கழித்தவர். இந்தப் புத்தகத்தை இணையத்தில் இங்கே வாங்கலாம்.

மற்றொன்று, சுவாமி தபஸ்யானந்தர் ஆங்கில மொழியில் எழுதியிருக்கும் புத்தகம். பல்வேறு வழிபாட்டு முறைகள் எங்ஙனம் சக்தி வழிபாட்டில் ஒன்றிணைகின்றன என்ற வரலாற்று ரீதியான விரிவான சித்திரத்தையும் அளிப்பது இந்த நூலின் சிறப்பு. இப்புத்தகத்தை இங்கே வாங்கலாம்.

இவ்விரு நூல்களின் ஆசிரியர்களையும் நன்றியறிதலுடன் நினைவு கூர்கிறேன். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தைக் கற்க விழைபவர்களுக்கு இவ்விரு நூல்களையும் பரிந்துரைக்கிறேன்.

(சம்ஸ்கிருத பதங்களை சரியான உச்சரிப்பின் படி தமிழில் எழுத Superscripted முறை பயன்படுத்தப் பட்டுள்ளது. உதாரணமாக क (ka) , ख (kha) , ग (ga) , घ (gha) என்ற எழுத்துக்கள் முறையே க, க², க³, க⁴ என்று வரும். இதே போன்று ச, ட, த, ப வர்க்கத்தில் உள்ள எல்லா எழுத்துக்களும் எழுதப் படும். சிவன் என்பதில் உள்ள ‘श’ என்ற எழுத்து ச’ என்று குறிக்கப் பட்டுள்ளது. முழுப் பட்டியல் இங்கே பார்க்கலாம்).

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

23 மறுமொழிகள் பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்

 1. சு பாலச்சந்திரன். on October 16, 2010 at 6:30 am

  சு பாலச்சந்திரன்.

  அன்புள்ள ஜடாயு,

  லலிதா சகஸ்ர நாமம் அன்னையின் அழகிய ஆயிரம் திருநாமங்கள் அடங்கிய அற்புத தொகுப்பு. ஒரே சக்தியே உலகு முழுவதும் பல் வேறு வடிவங்களில் வியாபித்துள்ளது என்பது சத்தியம். இதனை சமீபத்திய விஞ்ஞானமும் அறிவித்துள்ளது. இயற்பியலில் 19 ஆம் நூற்றாண்டு முடியும் வரைக்கும் சக்தியும் ஜடப் பொருளும் வெவ்வேறானவை என்றே கருதி வந்தனர். 20 ஆம் நூற்றாண்டில் தான் சக்தியும் ஜடப் பொருளும் இரு வேறு தோற்றங்களே என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்தனர்.

  இயற்பியலில் எலெக்டிரான், புரோட்டான் , நியூட்ரான் ஆகியவை அடிப்படையாக கருதப்பட்டு மாற்றமில்லாதவை என்று விஞ்ஞானிகள் எண்ணினர். இப்பொழுது அதுவும் தகர்ந்துபோய் விட்டது. சோதனைச்சாலையில் எதிர் மின்சாரம் கொண்ட எலேக்டிரானை நேர் மின்சாரம் கொண்ட பாசிட்றான் என்ற பெயரில் மாற்றமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

  எனவே நேர் மின்சாரத்தை எதிர்மின்சாரமாகவும் , எதிர்மின்சாரத்தை நேர் மின்சாரமாகவும் மாற்றமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. எனவே இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரே சக்தியின் பல்வேறு தோற்றங்களே என்பது விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்ட உண்மை ஆகும். மிகவும் பாடுபட்டு 21 ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானம் எட்டிய நிலையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் எட்டிவிட்டனர் என்பதை லலிதா சகஸ்ர நாமம் சாட்சியாக நின்று விளக்குகிறது.

 2. T.Mayoorakiri Sharma on October 16, 2010 at 6:56 am

  பேசற்கரிய பொருளைப் பேச முனைந்திருக்கிறீர்கள். சொல்ல முடியாத பேரானந்த மயமான விஷயம் ஒன்றை சொல்ல முனைந்திருக்கிறீர்கள்..

  பரிபூரணத்தின் (பேரானந்தத்தின்) அழகு வெளி என்று நீங்கள் தந்த தலைப்பிருக்கிறதே அதுவே மனதைக் கொள்ளை கொள்ள வல்லதாயிருக்கிறது.

 3. CN.Muthukumaraswamy on October 16, 2010 at 10:48 am

  அன்புள்ள ஜடாயு அவர்களுக்கு, இலலிதையின் இலளிதத்தை அனுபவிக்கும்படிக்கு மற்றுமொரு செறிவான கட்டுரையை அளித்துள்ளீர்கள். நான் முதலில் லலிதையின் நாமங்களின் ஓசை இன்பத்துக்காக, லிப்கோ வெளியீடு வாங்கிப் படிக்கத் தொடங்கின்னேன். மேம்போக்காகப் பொருளை அறிந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் 1953ல் வெளிவந்த ப்ரம்மஸ்ரீ ஜி.வி கணேசய்யர் எனும் பெரியார் எழுதிய பேருரை கிடைக்கப் பெற்றேன். அம்பிகையின் பெருமை எனும் பெருங்கடலின் சில திவலைகள் என்மேல் விழப்பெற்றுக் குளிர்ந்தேன்.
  ஸ்ரீவித்தை எனும் அரிய யோககலை இன்றும் வழக்கில் உள்ளதாக அறிகின்றேன். சைவத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வந்த பிராசாதயோகம் என்னும் கலை இன்று மறக்கப்பட்டு விட்டது. புத்தகத்தில் மட்டுமே உள்ளது. உங்கள் கட்டுரை தமிழ்ஹிந்து வாச்கர்களில் சிலரையாவது ஸ்ரீவித்தையில் நாட்டம் கொளச் செய்யும்..ஹிந்து வைதிக மரபை தக்க விளக்கங்களுடன் இளைஞர்களிடம் எடுத்துச் செல்லும் உங்கள் பணிக்கு என்னுடைய வாழ்த்தையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 4. சு பாலச்சந்திரன். on October 16, 2010 at 12:20 pm

  ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க என்றார் மணிவாசகப்பெருமான். நமது சம்பிரதாயங்களில் எங்கு நோக்கினும் காணக்கிடைப்பது என்னவென்றால் எல்லாம் ஒன்றே என்பதேயாகும். தோற்றங்கள் மாறக்கூடியவை ஆகும். அடிப்படை ஒன்றே ஆகும்.மாறுதல் உலக நியதி ஆனால் அழிவு என்பதே கிடையாது.எதுவும் அழிவதில்லை.உருமாற்றம் மட்டுமே அடைகின்றன.இந்த மகாநவமி நன்னாளில் நண்பர் ஜடாயு அவர்கள் மிக நல்ல தமிழாக்கம் தந்துள்ளார்.படித்து பரவசம் அடைந்தோம்.அவரது பணி மேலும் சிறக்கட்டும் தொடரட்டும். பல பெயர்களில் போற்றப்படும் அன்னையின் அருள் ஜடாயுவுக்கும், அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.

  அன்புள்ள

  சு.பாலச்சந்திரன்
  16.10.2010 12.20PM IST சென்னை

 5. Indli.com on October 16, 2010 at 4:57 pm

  தமிழ்ஹிந்து » பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்…

  லலிதா என்ற சொல்லே மிக அழகானது. நித்திய சௌந்தர்யமும், நித்திய ஆனந்தமும் ஒன்றான அழகு நிலை என்று …

 6. பிச்சைக்காரன் on October 16, 2010 at 7:18 pm

  ஒவ்வொன்றுக்கும் பொருள் அறிந்து படிப்பதும், த்த்துவ ஆராய்ச்சியும் நல்லதுதான்..ஆனால் அர்த்தம் தெரியாமல் படித்தாலும், அந்த ஓசை நயம் , மனதை கட்டிப்ப்போட்டு விடும் .. மனம் அடங்க தொடங்கும்..

 7. கண்ணன் on October 16, 2010 at 7:31 pm

  சரஸ்வதி பூஜை, அந்தி மாலை நேரம் அங்கே போய் ஜாவாகுமார் அளித்த சகலகலாவல்லி மாலையைப் படித்துவிட்டு இங்கே வந்தால் ஸ்ரீ லலிதா!
  ஒரு பக்கம் MSG யின் வயலின் இழய, அதைக் கேட்டுக்கொண்டே இதைப்படிக்க 10 நிமிடங்களில் ஒரு மிஸ்டிக் அனுபவம்; தமிழ் ஹிந்து(வாய்) பிறந்த பயனை நான் அடைந்தேன்.

 8. P.N.Kumar on October 16, 2010 at 9:56 pm

  அற்புதமான கட்டுரை. ஸ்ரீசக்ரராஜ சிம்மாசனேஸ்வரியின் அருள் வடித்தவருக்கும், வாசித்தவருக்கும் பரிபூரணமாய்க் கிட்ட வாழ்த்துகிறேன்!

 9. நெடியோன் குமரன் on October 16, 2010 at 10:49 pm

  விஷ்ணுவின் பேராயிரத்திலேயே இதுவரை திளைத்த எனக்கு, இது மற்றுமொரு வாய்ப்பு. என் குழந்தைகள் நாரணனின் ஆயிர நாமங்களை மனனம் செய்தவுடன் லலிதா சஹஸ்ர நாமத்தைக் கற்கிறோம் என்ற பொது, பிறகு பார்க்கலாம் என்று இருந்து விட்டேன்.

  இந்த இரு சஹஸ்ர நாமங்களுக்கிடையில் பொது நாமங்கள் உண்டு. பாஸ்கர ராயர் உரையில் இருந்து ‘அநாதி நிதன’ என்ற நாமத்திற்கு உரிய பொருளை வி ச நாமத்தில் திரு சிமிழி ராதா கிருஷ்ண சாஸ்திரி என்னும் தற்கால அறிஞர் எடுத்தாள்கிறார்.

  பரதர்மோ பயாவஹ என்று கீதாசாரியன் சொல்லியது போல இத்தனை நாள் சாக்தம் பக்கம் போகாமல் இருந்து விட்டேன். உபாசனைக்கு சாக்தம் பெரும்பாலான தென்னிந்தியர்களுக்கு பயன்படாவிட்டாலும், ஆன்மீக நயமும், சுவையும், பெருமையும் நவிலுபவர் அனைவரும் உங்கள் கட்டுரைக்குப் பின் வங்கத்து காளியை தங்கள் ஊர் மாரி அம்மனோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கி விடுவர்.

  இன்னொரு வகையில் இன்று பெரும்பாலான வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர், செட்டியார், முதலியார் ஆகியோருக்கு குல தெய்வம் என்பது அம்மனே. ஆனால் அவர்கள் உபாசனை வழியில் செல்ல ஷண்மத தெய்வங்களில் ஒன்றையே வைத்துள்ளனர். ஆக, தமிழர்கள் பெயரளவிலாவது சாக்தர்களாக கொள்ளப்படலாம்.

  எம் எஸ் அவர்கள் வி ச நாமத்தை பாடி தென்னகமெங்கும் பரப்பியது போல இன்றைய தலையாய பாடகர் லலிதா சஹஸ்ர நாமத்தைப் பாடிப் பரப்ப வேண்டும். நம் கோவில் குருக்கள் அனைவரும் தங்கள் ஆகமப் படிப்பின் பகுதியாக இதனைச் சேர்த்துக் கொள்ளலாம்.

 10. Malarmannan on October 17, 2010 at 11:08 am

  ஒவ்வொரு வரியையும் மிகுந்த பரவசத்துடன் படித்தேன். நம் அன்னையின் சஹஸ்ர நாமாவளிகள் ஒவ்வொன்றையும் உட்பொருள் உணர்ந்து ஓதவும் அவளது திருவுள்ளம் அறிந்து நாம் கடமையாற்றவும் வேண்டும் என்பதை மிகவும் நயமாக எடுத்துச் சொல்லும் அரிய கட்டுரை.

  //வர்ணாச்’ரம விதாயினீ (வர்ணாசிரமங்களை வகுத்தவள்) என்ற திருநாமம் வருகிறது. இதை வைத்து வர்ணாசிரம கட்டுப்பாடுகளை சக்தி உபாசனா மார்க்கம் ஆதரிக்கிறது என்று வியாக்யானம் சொல்வது சரியானதாக இருக்காது என்பது என் தாழ்மையான கருத்து.//

  பல ஆண்டுகளுக்கு முன்பே எனது தியானத்தில் இந்த வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப உருவேற்றுகையில் எனக்குக் கிடைத்த விளக்கம், “நீயே ஒவ்வொரு தருணத்திற்கு ஏற்ப பிராமணனாகவும், க்ஷத்ரியனாகவும், வைசியனாகவும், சூத்திரனாகவும் கடமையாற்றுமாறு வகுத்துள்ளேன்” என்பதாகும். இதனை சிரமேற்கொண்டு எனது வாழ்ககையை அமைத்துக் கொண்டுள்ளேன். ஆகையால் உபாசனா மார்க்கம் இதனை ஆதரிப்பதாகக் கொண்டு அனுசரிப்பது சரியாகவே இருக்கும்.
  -மலர்மன்னன்

 11. V Saravanan on October 17, 2010 at 6:33 pm

  மிக மிக அருமை திரு ஜடாயு அவர்களே.
  இந்நேரத்தில் மிக தேவையானதும் கூட. இந்த முறை நவராதிரி முடிகிறதே என்று வருத்தமாக கூடஉள்ளது. வங்காளத்தில் ஒன்பது நாட்கள் பிரியமாக பூஜை செய்த தாயின் வடிவத்தை கடலில் கரைக்கும் தினத்தன்று அவர்களுக்கு எப்படி இருக்கும்? உருவ வழிபாடே கல் நெஞ்சங்களை கரைக்க தான் ஏற்பட்டதோ? நீரில் கரைக்கும் சடங்கு உண்மையில் அத்தெய்வ வடிவத்தை நம் நெஞ்சில் இருத்திக்கொள்ளும் முயச்சியே என்று எங்கோ படித்தேன், இனிய இத்திரு பபெயர்கள் சாமானியனை தெய்வத்தின் அருகில் கொண்டு செல்கின்றன.
  நண்பர் நெடியோன் குமரன் அவர்களே
  சரியா தவறா தெரியாது . ஆதி சங்கரர் லலிதா வின் திருப்பெயர்களுக்கு பாஷ்யம் எழுத நினைத்து தன சிஷ்யர் ஒருவரை சுவடி எடுத்து வர சொன்னாராம்.எத்தனை முறை முயன்றும் விஷ்ணு சஹஸ்ரநாம ச்வடியே வந்ததாம். எப்படியோ, நாம் பாக்கிய சாலிகள்.
  அன்புடன்
  சரவணன்

 12. ஜடாயு on October 18, 2010 at 8:23 am

  கருத்துச் சொல்லும், வாழ்த்தும் அனைத்து அன்பர்களுக்கும், பெரியோர்களுக்கும் நன்றி.

  // ஆக, தமிழர்கள் பெயரளவிலாவது சாக்தர்களாக கொள்ளப்படலாம். //

  இல்லை. தமிழகத்தில் சக்தி வழிபாடு தொல்பழங்காலம் தொட்டு மிகச் சிறப்பிடம் பெற்று வந்திருக்கிறது.. சிலப்பதிகாரக் கண்ணகி சேரநாட்டு பகவதியான வரலாறு நமக்குத் தெரியும்.. அந்தக் காப்பியத்திலேயே கொற்றவை வனதெய்வமாக மட்டுமல்ல, பரம்பொருள் உருவமான பராசக்தியாகவே வணங்கப் பட்டாள். மகிஷாசுர மர்த்தினியை பிரம்ம-விஷ்ணு-சிவ ஸ்வரூபவமாகவும், வேதங்களின் உட்பொருளாகவுமே சிலப்பதிகாரம் பாடுகிறது.. குறிப்பாக, வேட்டுவ வரியின் இந்தப் பாடல்கள் –

  ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்
  கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
  வானோர் வணங்க மறைமேல் மறையாகி
  ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றியே நிற்பாய்;

  வரிவளைக்கை வாளேந்தி மாமகிடற் செற்றுக்
  கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்
  அரி அரன் பூமேலோன் அகமலர்மேல் மன்னும்
  விரிகதிர் அஞ்சோதி விளக்காகியே நிற்பாய்;

  இதன் தொடர்ச்சியாகவே காஞ்சி முதல் கன்னியாகுமரி வரை திருக்கடவூர், திருவானைக்கா, மதுரை என்று பற்பல சக்தி பீடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. திருமூலர், தாயுமானவர், அருணகிரியார், அபிராமி பட்டர் போன்ற அடியார்கள் சக்தி நெறியை நன்குணர்ந்தவர்களே. எனவே சாக்தம் தமிழ்நாட்டில் பாலில் நெய்போல விரவியுள்ளது என்றே கூறவேண்டும்.

  // இன்றைய தலையாய பாடகர் லலிதா சஹஸ்ர நாமத்தைப் பாடிப் பரப்ப வேண்டும். //

  ஆன்மிக சொற்பொழிவாளர் சிவானந்த விஜயலக்ஷ்மி தொடங்கி தொலைக்காட்சி செய்தியாளர் ரங்கநாதன் வரை பலரும் பாடியிருக்கிறார்கள்.

  // நம் கோவில் குருக்கள் அனைவரும் தங்கள் ஆகமப் படிப்பின் பகுதியாக இதனைச் சேர்த்துக் கொள்ளலாம் //

  ஏற்கனவே உண்டு என்று நினைக்கிறேன். எல்லா சிவாலயங்களிலும் நவராத்திரி நேரத்தில் உத்சவம் உண்டு. அப்போது தேவிக்கு லலிதா சகஸ்ரநாம அர்ச்சனைகளே முக்கியமாக நடக்கும்.

 13. radhakrishnan.s on October 18, 2010 at 7:54 pm

  குருதேவரின் திருவருட் பார்வை முன்பே சிறு துளி பட்டு, ஸ்ரீ ராம கிருஷ்ண மடத்து வெளியீடான “அண்ணா” அவர்களின் “ஸ்ரீ லலிதா சஹாசர நாமம்-பாஷ்யம்” படிக்கும் வாய்ப்புப் பெற்றேன். தொலைவிலுள்ள உறவினரை வெகு நாள் கழித்துத் திடீரெனத் தொடர்பு கொள்ளும்போது ஏற்படும் இன்பமாக இருந்தது ஸ்ரீ ராம கிருஷ்ண மடத்து வெளியீடு ஒன்றை மேற்கோள் காட்டி வந்திருந்த தங்கள் கட்டுரை. அருமை. இது சுவாமிஜியின் வார்த்தை. “குருதேவரைப் பரப்புங்கள்”. அவரைப் பரப்புவதால் உண்மையான சமய நெறிகளைப் பரப்பிவிடலாம். தொடருங்கள்.

 14. Ram on October 20, 2010 at 10:45 am

  லலிதா சஹாஸ்ரநாமத்தை நிறைய முறை கேட்டு இருக்கிறேன். அது செவிக்கு திகட்டாத இன்பம் தருவது. ஒவ்வொரு வார்த்தையிலும் மிகுந்த சுவை உள்ளது. சமஸ்கிருதம் ரொம்ப குறைவாகத்தான் தெரியும், அதனால் பொருள் அவ்வளவாக விளங்காது. அதன் பொருள் விளக்கங்களை இந்த கட்டுரை மூலம் படிக்கும் போது பரவசமாக உள்ளது.
  ஒரு சிலர் படைத்தவனை மட்டும் தான் வணங்க வேண்டும், படைக்கப்பட்ட பொருள்களை வணங்க கூடாது என்று சொல்கின்றனர், அந்த காரணம் கொண்டு ஹிந்து மதத்தை ஏளனம் செய்கின்றனர். ஹிந்து மதத்தில், படைத்த, மற்றும் பிரபஞ்சத்தை நடத்தி கொண்டிருக்கும் அந்த பெரும் சக்தியை எவ்வளவு ஆழமாக புரிந்து கொண்டு உள்ளனர் என்பதை சஹஸ்ரநாமங்கள் எடுத்து காட்டுகின்றன. ஒவ்வொரு சிலை ரூபங்களிலும், உள்ளே ஆழமான தத்துவங்கள் பொதிந்து இருப்பதை விளங்கி கொள்ள முடிகிறது. அந்த சிலையோ, ரூபமோ, படைக்க பட்டது அல்ல, அது இறை உணர்வின் மூலம் உணரப்பட்டது என்பது நான் இந்த கட்டுரையின் மூலம் அறிகிறேன். கடவுள் கண்ணுக்கு எட்டாமல், நம்மை எல்லாம் ரிமோட் கண்ட்ரோல் செய்கிறார் என்ற ஒரே புரிதல் நம்மை கடவுளிடம் அன்பு செலுத்த வைக்காது. அந்த கடவுள் எண்ணற்ற வடிவங்களிலும், சொற்களிலும், நாமங்களிலும் தன்னை வெளிப்படுத்தி கொள்கிறார், நாம் அவரை உணரும் படி செய்கிறார். இதுவே பக்தி முறையின் சிறப்பு ஆக உள்ளது.

 15. chandra on October 20, 2010 at 6:17 pm

  அன்புள்ள ஜடாயு அவர்களே,
  உங்கள் விளக்கம் மிகவும் அற்புதம். லலிதா மாதாவின் சஹஸ்ரநாம விளக்கத்தை கொடுத்த உங்களுக்கு கோடானுகோடி நன்றி. இதன் தொடராக எல்லா சுலோகங்களின் விளக்கத்தை தொடர்ந்து கட்டுரையாக கொடுத்தால் என்னை போன்ற வாசகர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
  மிக்க நன்றி, நன்றி……நன்றி.

 16. Gomathi on December 20, 2010 at 1:23 pm

  அண்ணா,
  அருமையான கட்டுரை. நிறைய விஷயங்களை எளிமையாக விளக்கி இருக்கிறாய். நன்றி.

  கோமதி

 17. v.srinivasan on January 18, 2011 at 4:20 pm

  மிக்க நன்றி ஜடாயு ஐயா அவர்களே, நல்ல பணி, தொடர வேண்டி, வேண்டுகிறேன்

  குன்னியூர் சீனு

 18. chandramowlee on July 28, 2011 at 4:23 pm

  லலிதா சஹஸ்ரநாமத்திற்கு ஸ்ரீ வைத்தியநாத தீஷிதர் எழுதிய பாஷ்யம்.. சிருங்கேரி ஆச்சாரியரால் பதிப்பிக்கப்பட்டது வைத்திய நாத தீஷிதர் எனது பாட்டனார்

 19. KANDASAMY on October 10, 2011 at 10:05 am

  ஐயன்மீர் லலிதா ஸகஸ்ர நாமத்திற்கு எழுதப்பட்ட விரிவுரைகளில் ஸ்ரீ அண்ணாவும். ஸ்ரீமத் தபஸ்யானந்தரும் எழுதிய நூல்களை சிறப்பாக குறிப்பிட்டிருந்தீர்கள். அத்துடன் திருப்பராய்த்துரை ஸ்ரீ இராமகிருஸ்ண தபோவனம் ஸ்ரீமத் சின்மயானந்த சுவாமிகள் எழுதிய வியாக்யானமும் தெள்ளிய நீரோடைபோல் நம்மை அன்னையின் நாமங்களுக்கு பொருள் அறியச்செய்வதுடன் அருளையும் கூட்டிவைப்பதில் சிறப்பிலும் சிறப்புற்ற நூல் என்பதை தங்கள் திவ்ய சமூகத்திற்கு பணிவுடன் அறியச்செய்கிறேன்.

 20. ஸ்ரீ ஜடாயு அவர்களின் பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம் எனும் கட்டுரை வாசிப்பு ஆனந்தமாயிருக்கிறது. கட்டுரை அறிவார்ந்த முறையில் அமைந்திருந்தாலும் உணர்வு பூர்வமாக இருக்கிறது. பலமுறை எம் எஸ் அம்மா பாடிய ஸகஸ்ரனாமம் கேட்டிருக்கிறேன். தமிழிலே பாம்பே சகோதரிகள் பாடிய லலிதா சகஸ்ர நாமம் கேட்டிருக்கிறேன். ஒரு சில முறைகள் தமிழ் லலிதா சகஸ்ர நாமம் பாராயணம் செய்திருக்கிறேன். அழகிக்கு அமைந்த ஆயிர நாமங்கள் கூறும் செறிந்த கருத்தை சிறப்பாக வழங்கிய ஸ்ரீ ஜடாயு அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றி.
  லலிதா சகஸ்ர நாமத்தின் தாக்கம் அபிராமி அந்தாதி மற்றும் மீனாட்சிக் கலிவெண்பா ஆகிய நூல் களிலும் காணலாம்.
  ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் அத்வைத அடிப்படையில் அமைந்துள்ளது என்கிறார் ஆசிரியர். ஸ்ரீ ஆதிசங்கராச்சாரியார் வெளிப்படையாக சைவர் ஆனால் அந்தரங்கத்தில் சாக்தர் என்று ஸ்ரீ வித்யோபாசகர்கள் கருதுகிறார்கள். அப்பெருமகான் தான் ஸ்ரீ வித்யையை பிரம்ம வித்யையோடு இணைத்தவர். தாந்த்ரீகத்தையும் வேதாந்தத்தில் இணைத்தவர். ஆறு சமயங்களின் ஒற்றுமையை நிலைனாட்டியது போல் இதுவும் அவரது சாதனை. தத்துவத்தில் அத்வைத வேதாந்தத்தினை க்கொள்ளும் பலர் அனுஸ்டானத்தில் ஸ்ரீ வித்யை ப்பின்பற்றுகிறார்கள்.

  திரு நெடியோன் குமரன் கூறுவதாவது
  “இன்னொரு வகையில் இன்று பெரும்பாலான வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர், செட்டியார், முதலியார் ஆகியோருக்கு குல தெய்வம் என்பது அம்மனே. ஆனால் அவர்கள் உபாசனை வழியில் செல்ல ஷண்மத தெய்வங்களில் ஒன்றையே வைத்துள்ளனர். ஆக, தமிழர்கள் பெயரளவிலாவது சாக்தர்களாக கொள்ளப்படலாம்”.
  இதற்கு ஸ்ரீ ஜடாயு தொன்றுதொட்டு தமிழகத்தில் தாய்தெய்வ வழிபாடு இருந்தது என்று சான்று காட்டி விளக்கம் அளித்துள்ளார்.
  தமிழர்கள் ஏன் தென்னிந்தியர் பெரும்பாலும் சாக்தர்களே என்பது அடியேனுடைய பார்வையில் புலனாகிறது. வெள்ளிக்கிழமை கோயிலுக்கும் ப்போய் பாருங்கள் அன்னையின் ஆலயங்களில் உள்ள கூட்டம் எங்கும் இல்லை. இன்னொன்றும் கண்டேன் பாழடைந்த சிவாலயங்கள், பெருமாள் கோயில்கள் பல உண்டு ஆனால் கவனிப்பாரற்று விடப்பட்ட அன்னையின் கோயில்கள் அரிது. விபூதி பூசிய பலரில் அன்னையை இஷ்ட தெய்வமாகக் கொண்டோரரைப் பெரும்பாலும் காண இயலும். மாரியம்மன் பாடல்களுக்குள்ள மவுசே தனிதான்.

 21. DHARMA RAJAN S on October 20, 2012 at 2:31 pm

  நாம் தமிழர்கள் சாக்தர்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை ஏனெனில் நம் அம்பிகை கோமதியின் தவசுக்கு இறங்கி ஹரியும் ஹரனும் இணைந்து சங்கர நாராயணராக காட்சி கிடைத்தது ஈசன் உமைக்கு இடம் தந்து அம்பிகைக்கு சரி பாதி இடம் கொடுத்த இடம் திருச்செங்கோடு இப்போது நாம் தமிழ் கடவுள் முருகன் என்கிறோம் உண்மைதான் அறுபடை வீடு மட்டும் அல்ல குன்று தோறும் கொலு வீற்று இருக்கிறான் அம்பிகையின் புதல்வன் என்பதாலேயே நாம் போற்றுகிறோம் நமக்கு குழந்தை கிடைத்ததும் எப்படி கொண்டாடுகிறோம் அதனால் தமிழகத்தில் சாக்தம் இல்லை என்பதல்ல பாரதியார் அதனால் யாதுமாகி நின்றாய் காளி என்கிறார் மேலும் பராசக்தியிடம் தான் காணி நிலம் வேண்டுகிறார் நம் ஒவ்வொரு ஊரிலும் காவல் தேவதையாக ஊரின் எல்லையில் அவளை வைத்துள்ளோம் ஆடி மாதத்தில் நாம் அம்பிகையை கொண்டாடுவது போல் வேறு எங்கும் இல்லை ஆனால் கேரளாவில் இதே மாதத்தில்ராமாயணம் மாதமாக கொண்டாடுகிறார்கள் மழை வேண்டி அம்மனை ஆடியில் துதித்து புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் நமக்கு மழை கிடைக்கிறது இந்த நவராத்திரியில் தங்கள் கட்டுரையை வாசித்தது என் பாக்கியம் தங்களுக்கும் இவ் வலை தலத்தில் பதிவு செய்த அணைத்து அம்பிகை புதல்வர்களுக்கும் எனது பணிவான வணக்கம்

 22. durai loganathna on November 8, 2012 at 9:34 pm

  good

 23. அத்விதியா on October 6, 2019 at 8:36 am

  திருப்பராய்த்துறை ஸ்வாமி சித்பவானந்தர் ல ச நாம விரிவுரை எழுதியுள்ளார். திரு கந்தசாமி அவர்களின் மறுமொழியில் குறிப்பிட்டது போல சின்மயானந்தர் அன்று.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*