நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘யார் இந்தியாவின் நிஜமான சூப்பர் ஸ்டார்’ என்னும் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. இந்தியாவெங்கும் இருந்து மக்கள் எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. 88% பேர் ரஜினிதான் நிஜமான சூப்பர் ஸ்டார் என்று சொல்லியிருந்தார்கள். 3% பேர் அமிதாப், 3% பேர் ஷாருக், 3% பேர் சல்மான் – ஏறக்குறைய இப்படி இருந்தது மக்களின் தீர்ப்பு. ரஜினியின் திரைப்படங்களுக்கு ஏன் இந்த பிரபல்யம் என்று அலசத் தொடங்கினார்கள். அமிதாப், ஷாருக் போன்ற நடிகர்களிலிருந்து ரஜினி எப்படி மேலேறிச் செல்கிறார் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். 1970களில் அமிதாப் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது கிடையாதாம். தனது படங்கள் வெளியானபோதுகூட அதைப் பற்றிப் பேசமாட்டாராம். ஆனால் இப்போதெல்லாம் தனது படங்களுக்கு விளம்பரம் செய்ய வருவதும், ஏதேனும் தொலைக்காட்சித் தொடரில் (டாக் ஷோ) தோன்றினால் அதற்கான முன்னேற்ற நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதும் இயல்பாகிவிட்டது. தங்களது படங்கள் வெளியாகும்போது ஷாருக்கும் சல்மானும் பெரிய பெரிய பிரமோக்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் ரஜினி ஈடுபடுவதில்லை என்று சொன்னது அந்தத் தனியார்த் தொலைக்காட்சி சானல்.
ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. ஒருநாள் முழுக்க சன் டிவியில் ரஜினி தோன்றி கிளிமாஞ்சாரோ பாடலைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார். ரஜினி வாக்கு கொடுத்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இதனை ரஜினியே மேடையில் சொன்னார். எந்திரன் திரைப்படம் சன் பிக்சர்ஸின் கையில் வந்தபோது, இதற்கான பிரமோக்களில் தான் பங்கேற்பதாக ரஜினி வாக்குக் கொடுத்திருந்தாராம். ஆனால் படம் முடிந்ததும், அந்த பிரமோ என்பது தன் குணத்துக்குச் சற்றும் பொருந்துவல்ல என்பது ரஜினிக்கு உறைத்திருக்கிறது போல. அதிலிருந்து பின்வாங்கி விட்டார். ஆனால் அதனையும் கலாநிதி மாறன் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டாராம். ரஜினி ஒரு மேடையில் ஏறிவிட்டால் எப்படி உணர்ச்சிவசப்பட்டு விடுவார் என்பது நாம் அறிந்ததே. எந்திரன் வெளியீட்டு மேடைகளில் அவர் கலாநிதிமாறனைப் புகழ்ந்த விதமும் அப்படியே. அதற்கான வணிகக் காரணங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. வணிகக் காரணங்கள் மட்டுமே எப்போதுமே ரஜினியை நிர்ணயித்துவிடுவது வருத்தமளிக்கும் ஒன்றுதான்.
கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் என்னும் ஒற்றை கம்பெனியின் ராட்சதப் பிடிக்குள் தமிழ்த் திரையுலகம் சிக்கிக் கொண்டுவிட்டது. அதிலிருந்து வெளியேறும் வழி என்னவென்று பார்த்தால், அங்கே வரவேற்கக் காத்துக்கொண்டிருப்பவர்கள் கருணாநிதி குடும்பத்தின் வாரிசுகள். வங்குவத்தி வங்குவத்தின்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டு வங்குவத்தி திங்கு திங்குன்னு ஆடிச்சாம் கதைதான் இப்போது இங்கே நடந்துகொண்டிருக்கிறது. கருணாநிதி பேரன்கள் கையில் ரஜினி சிக்காமல் சன் பிக்சர்ஸில் அவர் மாட்டிக்கொண்டது ஒரு வகையில் அவருக்கு நல்லதுதான். ஆனால், மணிரத்னத்தின் வீட்டில் குண்டு விழுந்த பின்பு, தமிழ்நாட்டிலேயே குண்டு வெடிப்புகள் நடக்கின்றன என்பது சட்டென நினைவுக்கு வந்து, ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார்? தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா?
இதில் போதாக் குறைக்கு சன் பிக்சர்ஸ் தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளை தனது கைப்பிடியில் வைத்துக்கொள்ள விரும்புவதாகவும், அதற்குப் போட்டியாக கருணாநிதியின் பேரன்களே களமிறங்கி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. உழைப்பு, தொழில், முன்னேற்றம் என்றெல்லாம் காரணங்கள் சொன்னாலும், பதவியும் ஊடகமும் தரும் செல்வாக்கில்லாமல் இதுவெல்லாம் சாத்தியமில்லை என்பதை எந்த ஒரு பாமரனும் உணரமுடியும். ஒரு குடும்பத்தின் கைப்பிடிக்குள் தமிழ்த் திரையுலகம் இப்படி சிக்கிக்கொள்வது ஆரோக்கியமானதல்ல. இதுபோக, சன் டிவிக்கோ கலைஞர் டிவிக்கோ திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கான உரிமம் கொடுப்பதில் நடக்கும் கூத்துகள் தனி. இன்றைய கருணாநிதியின் அரசியல் புலத்துக்கு முன்னால், சன் பிக்சர்ஸின் ஊடகப் புலத்துக்கு முன்னால் எந்த இயக்குநரால், எந்த நடிகரால் எதிர்த்து நின்றுவிட முடியும் என நினைத்துப் பாருங்கள். ரஜினி போன்ற உச்ச நடிகரே இப்படி வீழ்ந்து கிடந்தால், மற்றவர்களின் பரிதாப நிலை நமக்குப் புரியும்.

முன்பெல்லாம் ரஜினி படம் வெளியாகிறது என்றாலே சில படங்கள் அந்த சமயத்தில் வெளிவராது. இதன் காரணம் ரஜினி என்னும் உச்ச நடிகரின் படத்தோடு போட்டி போடுவது அவசியமற்ற வேலை என்பதுதான். இது தயாரிப்பாளர்களும், நடிகர்களும், இயக்குநர்களும் தாங்களாக எடுக்கும் ஒரு முடிவு. இன்று அப்படியல்ல. நீங்கள் போட்டி போட நினைத்தாலும், உங்களுக்கு தியேட்டர் கிடைக்காது. அதை மீறி வெளியிட்டால் உங்கள் திரைப்படம் சன் டிவியின் திரை விமர்சனம் (இப்போது இந்தப் பகுதி பெரும் நகைச்சுவைப் பகுதியாகிவிட்டது வேறு விஷயம். நேற்று வரை சன் பிக்சர்ஸ் தயாரித்த தில்லாலங்கடி திரைப்படம்தான் திரை விமர்சனம் பகுதியில் முதல் இடம் என்று கேள்விப்பட்டேன். நான் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை என்பதால், ஒரு நண்பர் சொல்லித்தான் இது எனக்குத் தெரியவந்தது) பகுதியில் குதறப்படலாம். தனது ஒரு படம் குதறப்பட்டதை எதிர்த்து பேசிய சத்யராஜ் இன்றெல்லாம் வாய் திறப்பாரா என்று கூடத் தெரியாது. ஏனென்றால் அன்று சன் டிவி ஒரு சானல் மட்டுமே. இன்று திரையுலகில் அது ஒரு சக்ரவர்த்தி. டிவி, திரைப்படம் என்பது போதாதென்று, தினமும் 10 லட்சம் பிரதிகள் விற்கும் ஒரு பத்திரிகை, இது போக வார இதழ்கள், இந்தியாவெங்கும் பண்பலை – இவர்களை எதிர்த்துப் பேச உண்மையான தைரியம் இருக்கவேண்டும் அல்லது முட்டாளாக இருக்கவேண்டும். இந்த நிலை இப்படியே நீடிப்பதைத்தான் ரஜினி விரும்புகிறாரா என்ன?
இதில் எந்திரன் வெளியீடு என்று சொல்லி சன் டிவி அடிக்கும் கும்மாளம் குமட்டலை வரவழைக்கிறது. முன்பும் எத்தனையோ ரஜினி படங்கள் வந்திருக்கின்றன. இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். அது ஒரு குறிப்பிட்ட சிறிய எல்லைக்குள் அங்கங்கே நடந்த ஒரு விஷயமாக அமுங்கிவிடும். ஆனால், இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு நடிகருக்கு இப்படி நடப்பதெல்லாம் பெரிய எரிச்சல் தரும் விஷயங்கள். இது ஒரு ரசிகரின் அல்லது சில ரசிகர்களின் தனிப்பட்ட விஷயமல்ல. சமூகம் எப்படி திரைப்படத்தினால் புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. முன்பே இது குறித்துப் பலர் பேசியிருக்கிறார்கள். இந்த முறை இதனையும் சன் டிவி மார்க்கெட்டிங் உத்தியாக்கிவிட்டது. ரஜினி படத்துக்காக பால் குடம் எடுப்பதும், 1500 படிகள் கொண்ட கோவிலுக்கு முழங்காலில் நடந்து படியேறிப் போவதும், பாலாபிஷேகம் செய்வதும், தேர் இழுப்பதும், ரசிகர்கள் பச்சைக் குத்திக் கொள்வதும், அலகு குத்திக் கொள்வதும் – என்ன ஒரு சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? இதனைத் தொடர்ந்து ஒரு சாகசமாக ஒரு முக்கியமான சானல் தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தால், வளரும் இளைஞர்கள் மனதில் இதெல்லாம் நல்ல விஷயம் என்பதாகப் பதிந்துவிடாதா? ஆனால் இதையெல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லை சன் பிகசர்ஸ். அதன் இலக்கு தான் போட்ட 150 கோடிக்கு நிகராக எத்தனை மடங்கு லாபம் சம்பாதிக்கமுடியும் என்பது மட்டுமே.

ரஜினி போன்ற நடிகர்கள் இந்த குமட்டல்களையெல்லாம் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது இன்னொரு குமட்டல். படம் வெளி வந்த பின்பாவது ரஜினி இது குறித்துப் பேசுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தான் சொல்லியும் ரசிகர்கள் கேட்பதில்லை என்னும் சாக்கு போக்கெல்லாம் எடுபடாது. ஜெயலலிதா ரஃபி பெர்னாட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இப்படித்தான் சொன்னார். தான் எத்தனை முறை சொல்லியும் தன் காலில் அமைச்சர்களும் தொண்டர்களும் விழுகிறார்கள் என. காலில் விழுந்த இரண்டு அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பியிருந்தால், அடுத்த எந்த அமைச்சர் காலில் விழுந்திருப்பார்? ரஜினியும் தனக்கு பாலாபிஷேகம் செய்யும், தேர் இழுக்கும் ரசிகர்களை எல்லாம் சரியாகக் கண்டித்திருந்தால் அவர்களும் நிச்சயம் கேட்டிருப்பார்கள்.
தன் மகள் கல்யாணத்துக்கு நிச்சயம் வரக்கூடாது எனச் சொல்லி, அதனைச் செய்துகாட்டவும் தெரிந்த ரஜினிக்கு இது ஒன்றும் பிரமாதமான காரியமல்ல. ரஜினிக்கு இப்படி நடக்கும்போது, ரஜினியாக வரத் துடித்துக்கொண்டிருக்கும் இளைய தளபதிகளும், அல்டிமேட் ஸ்டார்களும் இதனையே நகலெடுக்கவே விரும்புவார்கள். அப்படி ரஜினி செய்யாவிட்டால், இன்றைக்கு ரஜினிக்கு அவர் ரசிகர்கள் செய்துகொண்டிருப்பது தமிழ்நாட்டின் திரை கலாசாரமாக மாறும். எனவே ரஜினியே இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். அஜித் தனது பேருக்கு முன்பாக இனிமேல் அல்டிமேட் ஸ்டார் என்றெல்லாம் போடக்கூடாது என்று சொன்னார் சமீபத்தில். கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதேபோன்ற ஒரு சுய பரிசோதனையை ரஜினி செய்யவேண்டும்.
ரசிகர் மன்றங்களால் சில நற்பணிகள் அங்கங்கே நடக்கிறது என்றாலும், பெரிய அளவில் இந்த ரசிகர் மன்றங்கள் என்ன சாதித்தன என்பது தெரியவில்லை. எந்த ஒரு நடிகரும் ரசிகர் மன்றத்தை நம்பி இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனால் வெளியில் எந்த ஒரு நடிகரும் இதனைச் சொன்னதில்லை. ரஜினி தனது எல்லா ரசிகர் மன்றங்களையும் கலைத்துவிட்டு, அதில்கூட முன்மாதிரியாக இருக்கலாம் ரஜினி. நடிப்பு என்பது ஒரு தொழில். திரைப்படமும், நடிப்பும் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால், அதனைப் பாருங்கள், பாராட்டிவிட்டுச் செல்லுங்கள், அது போதும் என்று ரஜினி அறிவித்தால்தான் என்ன?
எந்திரன் வெளியீட்டை ஒட்டி மேடையில் பேசிய அத்தனை நடிகர்களும் தங்கள் ரசிகர்களையே நகலெடுத்தார்கள். ஒவ்வொரு நடிகரும் ஒரு விசிலடிச்சான் குஞ்சாக வந்துவிட்டுப் போனார்கள். இவர்களுக்கெல்லாம் தன்முனைப்பு என்ற ஒன்றே இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றியது. நடிகர்களின் வழியேதான் ரசிகர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. தன்மானமுள்ள நடிகர்களாகத் தங்களை முன்னிறுத்திக்கொண்டு முன்பு குரல் கொடுத்த நடிகர்கள் எல்லாம் ஓடிப் போன சுவடே தெரியவில்லை.

ரஜினி முன்பெல்லாம் புகை பிடிப்பவராகப் பல படங்களில் தோன்றுவார். ஸ்டைல் என்பதே தன் அடையாளம் என்று ரசிகர்களை அவர் அடைந்த விதமே இந்த புகையின் வழியாகத்தான் எனலாம். திடீரென்று பாமக குரல் கொடுத்தது. ரஜினியால் பல இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று. ஒரு படி மேலே போய் ரஜினியை அக்கட்சி மிரட்டியது என்றே சொல்லவேண்டும். ரஜினி புகை பிடிப்பது போன்ற படங்கள் வந்தால் அதனை வெளியிட விடமாட்டோம் என்றார்கள். உண்மையில் இது ஜனநாயகத்துக்கு எதிரானது. ரஜினி புகை பிடிக்கும் படங்களால் இளைஞர்கள் கெடுகிறார்கள் என்று நீங்கள் பிரசாரம் செய்யலாம். அமைதி வழியில் அதனை எதிர்த்துப் போராடலாம். தொடர்ந்து ரஜினியுடன் பேசலாம். ஆனால் அப்படி வரும் படத்தைத் திரையிட விடமாட்டோம் என்பது அராஜகம். ரஜினி இதற்குப் பணிந்து போனார். வணிகக் காரணங்கள். அடுத்த படத்தில் சுயிங்கம் மென்று கொண்டு வந்தார்.
புகை பிடிப்பதால் இளைஞர்கள் கெட்டுவிடுவார்கள் என்று போராட்டம் நடத்திய பாமக இன்று ஏன் விரல் சூப்பிக்கொண்டிருக்கிறது? ஒரு நடிகருக்கு நடக்கும் இத்தனை குமட்டல்களையும் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது? சன் டிவியில் பரப்பல்களைப் பார்த்து வெறுமனே அமைதியாக இருப்பது ஏன்? எந்திரன் கருணாநிதியின் ஆசியையும் பெற்று விட்டது என்பதற்காகவா? ஒரு சமுதாயத்தையே சீரழிக்கும் விதமாக தொடர்ந்து சன் டிவி ரஜினி ரசிகர்களைக் காட்டிக்கொண்டிருப்பது குறித்து பாமக வாய் திறக்காதது ஏன்? நாளை கிடைக்கவிருக்கும் சீட்டும் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகவா? இப்படி ரசிகர்கள் என்னும் போர்வையில் ஒரு சமுதாயத்தின் மக்களைக் கீழ்மைப்படுத்துவது தவறு என்று ரஜினிக்கு எதிராகப் பாமக இன்று எதுவும் பேசாமல் கள்ள மௌனத்துடன் இருப்பது, அது சன் பிக்சர்ஸைப் பாதித்து, அரசியலில் தன்னையும் பாதித்துவிடும் என்பதற்காகவா?
முதலில் ரஜினி ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். படத்துக்கான மார்க்கெடிங் போர்வையில் சன் டிவி நிகழ்த்திக்கொண்டிருப்பது ரஜினியின் சுயமரியாதையின் மீதான தாக்குதலே அன்றி வேறல்ல. தனது ரசிகர்களின் சர்க்கஸ்களைக் காட்டிக்கொண்டிருப்பதன் மூலம் தன்னைக் கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ரஜினி உணரவில்லை என்றால், பொதுமக்களின் மத்தியில் ரஜினியின் இமேஜ் நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும். அது ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகிவிட்டது என்பதும் ஓரளவு உண்மையே. ரஜினி என்னும் தனிமனிதரின் மனித இருப்புக்கும், இப்போது நடந்துகொண்டிருக்கும் அவலங்களுக்கும் தொடர்பே இல்லை என்பது பலருக்குத் தெரியும். அதை எல்லோருக்கும் தெரிந்ததாக ஆக்க ரஜினி முயல்வது அவருக்கு நல்லது. இல்லை என்றால் ஒரு தன்மானமற்ற கும்பலை நாளைய சந்ததியாக உருவாக்கி வைத்துவிட்டுப் போவதில், என்னதான் சன் டிவியின் எரிச்சலூட்டும் அதீத பரப்புரை காரணமாக இருந்தாலும், ரஜினிக்கு பெரும் பங்கு உண்டாகியிருக்கும். பின்பு அதனை நீக்குவது என்பது பெரும்பாடாகிவிடும். சன் டிவியின் கேவலப்படுத்தும் ப்ரமோக்களுக்கு ரஜினி உடனே ஒரு முற்றுப் புள்ளி வைப்பது நல்லது. 60 வயதுக்குப் பிறகு, ஒரு சூப்பர் ஹிட் எந்திரனுக்குப் பிறகு, இனி சன் பிக்சர்ஸில் ரஜினி நடிக்காமல் இருந்தால், அவருக்கோ நாட்டுக்கோ ரசிகர்களுக்கோ என்ன ஒரு பெரிய நஷ்டம் இருந்துவிடப் போகிறது?
நடிகராகத் தன் பலத்தை ரஜினி அறிந்துகொள்வது அவர் சார்ந்திருக்கும் திரையுலகத்துக்கும், அவரது ரசிகர்களான நாளைய தலைமுறைக்கும் நல்லது.

ஏமாற்றும் சக்தியை அனுபவியுங்கள்
இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-05
இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 04
சுதேசி: புதிய தமிழ் வார இதழ்!
சிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)
அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1
வேதாளம் சொன்ன பேரறிஞர் கதை
இந்துமதம், அரசியல், ஊடகங்கள்: இரு சமீபத்திய செய்திகள்
தி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்
தொலைத் தொடர்புத் துறையில் மாறனின் திருவிளையாடல்கள்
தேர்தல் களம்: ஏன் மீண்டும் திமுக-விற்கு வாக்களிக்கக் கூடாது?
பயணம்: திரைப்பார்வை
கருணாநிதியும் பொய் மூட்டைகளும்
ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்
இலவசங்களில் மூழ்கி கடனில் எழும் தமிழகம்
ரஜினி மகள் திருமண வைபவம்: சில எண்ணங்கள்
தி கராத்தே கிட் (The Karate Kid) – திரை
நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 02
நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 01
அங்காடித் தெரு – திரைப்பார்வை
ஆயிரத்தில் ஒருவன் – ஜடங்களுக்கான சினிமா
ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்
தெய்வத் திருமகள் – திரைப்பார்வை![தாண்டவம் [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/dancing-shiva.jpg)
தாண்டவம் [சிறுகதை]
லோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்



//நடிகராகத் தன் பலத்தை ரஜினி அறிந்துகொள்வது அவர் சார்ந்திருக்கும் திரையுலகத்துக்கும், அவரது ரசிகர்களான நாளைய தலைமுறைக்கும் நல்லது.//
ரஜினியின் பலம் அவர் ஒரு ராஜ நாகத்தின் வலிமையைக் கொண்டவர் என்பது. ஆனால் செத்த ராஜநாகம். ரஜினிக்கு அரசியலில் இறங்க வடிவேலு அளவுக்குக்கூட சாமர்த்தியம் இல்லை.
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பின்போது குண்டு வைத்தவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று திரும்பத் திரும்ப சன் டிவியில் சொன்ன முட்டாள்தான் ரஜினி.
ஹிந்து என்றால் திருடன் என்று சொன்னதற்கு எஸ்.வி. சேகர் கூட எதிர்ப்புத் தெரிவித்தபோது, எப்படி ஹிந்துத்துவத்தை பணமாக்கலாம் என்று பாபா படம் பண்ணியவர் இந்த முட்டாள் ரஜினி.
இங்கே சம்பாதித்த பணத்தை வைத்து கர்நாடகாவில் பல தொழில்களை செய்து, தமிழர்களுக்கு நாமம் போட்டவர். இவருக்கெல்லாம் ஒரு கட்டுரை வேற.
- ரஜினி ரசிகானாக இருந்த கார்கில் ஜெய்.
திரு.ஹரண் பிரசன்னா அவர்களே!
தமிழகத்தில் மிச்சமுள்ள மூளை உள்ள அனைவரும் நினைத்து வருந்தும்
விஷயத்தை தெளிவாக எழுதியுள்ளீர்கள். நன்றி.
திரு. ரஜினிகாந்தின் நடிப்பு எனக்கு பிடிக்காது என்றாலும், பொது இடங்களில் அவர் கடைபிடித்த நெறிகள் பலருக்கு பிடித்திருந்தன.
(சில விதிவிலக்குகளும் உண்டு).
ஆனால், இந்த திரைப்படத்திற்கு அவரே முன்வந்து சில விஷயங்களை,
பிரமோஷன்களை செய்தது அருவருப்பாகவே இருக்கிறது.
மேலும் திராவிட கழகங்கள் 1940 முதல் 1970 வரை அடுக்கு மொழியில்
பேசியே தமிழர்களை ஏமாற்றியதன் விளைவை இன்று வரை அனுபவித்து
வருகிறோம்.
அதைப்போன்றதொரு முட்டாள் கூட்டத்தை இன்று ரஜினி உருவாக்குவது
அதிர்ச்சியை தருகிறது.
திரைப்படம் என்பது சில நேர கேளிக்கைக்காக பார்க்கப்படுவது. கொஞ்சம்
விவரமுள்ளவர்கள் வாழ்க்கையின் பல பரிமாணங்களை எடுத்துக்காட்டவும்
உதவும் என்பார்கள். ஆனால் டீனேஜ் குழந்தைகள் தங்கள் ஆதர்ச
புருஷனாக கதாநாயகனை வைத்துக்கொள்வது புதியதல்ல. வயது ஆக ஆக
கேளிக்கைகள் குறைந்து முதிர்ச்சி வரும் என்பது உலக இயற்கை.
ஆனால் தமிழகத்தில் 40, 50 வயதுள்ளவர்கள் ஏன் முதியவர்கள் கூட இந்த குமட்டும் விஷயங்களில் ஈடுபடுவது வாழ்க்கையை பற்றின புரிதலே இல்லாமல் ஒரு பெரிய கூட்டம் தமிழகத்தில் உள்ளது என்பதையே காட்டுகிறது.
என் அடுத்த தலைமுறை தமிழனை நினைக்க கண்டிப்பாக பயமாக
இருக்கிறது. என் முன்னோர்கள் திராவிட கழக அடுக்கு மொழியில் மயங்கியதை விட கேவலமாக வாழ்வார்களோ என்று!!!
ஹரன் பிரசன்னா
அது சரி இந்த குமட்டல்கள் எல்லாம் படத்தை காசு கொடுத்து பார்த்த பொழுதும் அதைப் பாராட்டி விமர்சனம் எழுதும் பொழுது வரவில்லையா என்ன? எனக்கு ரஜினிகாந்த்தையும், சன் டி வி யையும் பார்க்கும் பொழுது வரும் குமட்டலை விட உங்களது இந்த இரட்டை வேடம்தான் இன்னும் அதிகம் குமட்டல் தருகிறது. இரண்டு முறை வாந்தி எடுத்து விட்டு வந்துதான் எழுதுகிறேன். சன் டி வியும், மாறன்களும் அராஜகம் செய்கிறார்கள் அட்டூழியம் செய்கிறார்கள் என்கிறீர்கள் அப்புறம் எதற்கு ஐயா போய் அந்த சினிமாவைக் காசு கொடுத்துப் பார்த்து அவர்களை மேலும் பணக்காரர்களாக்குகிறீர்கள். நாளைக்கே மதானி ரஜினியை வைத்து ஒரு படம் எடுத்து அந்த லாபத்தில் இந்துக்களை குண்டு வைத்துக் கொன்றாலும் முதலில் பார்த்து பாராட்டி அனைவரையும் பார்க்கச் சொல்லி எழுதி விட்டு அப்புறம் மறுநாளே குண்டு வெடித்தவுடன் ஐயோ கொல்றாங்களே என்றும் எழுதுவீர்கள் அப்படித்தானே? இந்த சினிமாவைப் பார்க்காமல் இந்தக் கட்டுரையை எழுதியிருந்தால் வரவேற்றிருப்பேன் இப்பொழுது என்னால் வாந்தி மட்டும்தான் எடுக்க முடிகிறது.
வாந்தியுடன்
ச.திருமலை
திருமலை
நீங்கள் வரவேற்றிருந்தால் நீங்கள் எடுத்த வாந்தி எனக்கு வந்திருக்கும்! நல்ல வேளை தப்பித்தேன்.
மதானி படத்தில் ரஜினி நடிப்பதும் கலாநிதி மாறன் படத்தில் ரஜினி நடிப்பதும் ஒன்றல்ல! ஆனால், ஹிந்த்துத்வ வெறி உங்களைக் கண்களை மறைப்பதால், உங்கள் கருத்துக்கு 1% கூட ஒத்துவரவில்லை என்றால்கூட உடனே அதை மதானியுடன் இப்ராஹிமுடனும் ஒப்பு வைப்பது உங்கள் அரசியல்.
I am a Rajini fan. But I don’t like the way Sun TV using Rajini as for their convenience.
I agree with Prasanna. The channel is going over elaborate with the milk abhishagem.
I feel like something too. Rajini is agreeing to Sun TV because he have no choice at the moment.
He is just doing them a favour for saving the movie when it was stalled due Financial reasons 2 years ago. I am sad, but what to do? I am still rajini fan forever but not agreeable
சபாஷ்!
எல்லா நடிகனும் கட்அவுட்டுக்கு பால் ஊற்றிக்கொண்டிருக்கிறான் என்பது எல்லா இலங்கைத் தமிழர்களும் புலிகள் ஆதரவாளர் என்று சொல்லிக்கொண்டிருப்பதைப் போல்….
ரஜினிக்கு எல்லாம் தெரியும்…
.
மிகவும் யதார்த்தனமான ஒரு கட்டுரை! ரஜினி ஒரு மிக நல்ல மனிதர்! தன் மேல் அளப்பரிய அன்பையும், ஆதரவையும், பாசத்தையும் சதா காலமும் பொழிந்துகொண்டிருக்கும் ஒரு சமுதாயத்திற்கு அவர் மிக மிக கடன் பட்டுள்ளார். சமுதாயத்திற்கு அவர் ஆற்ற வேண்டிய கடைமைகளில் இதுவும் ஒரு முக்கியமான ஒரு கடமை. எவரும் தன்னால் நஷ்டமோ கஷ்டமோ பட்டுவிடக் கூடாது என்று ரஜினி எப்போதுமே உணர்பவர் மட்டும் அல்ல, அதன்படி செயலாற்றுபவரும் கூட. தன்னை வைத்து படம் எடுப்பவர்கள் நஷ்டப்பட்டு விடக்கூடாது என்ற அவரது உயரிய எண்ணம் பாராட்டப்பட வேண்டியது. அதே போல் தன்னை எப்போதும் நேசித்து வரும் சமுதாயம் சீரழிந்து விடாமல் அவரால் ஆனதை செய்யவேண்டியது அவரது தலையான கடமை ஆகும். சமுதாயத்தை கொள்ளை அடிப்பதையே தன் பிரதான கொள்கையாக கொண்டிருக்கும் எந்த ஒரு குடும்பத்தையும், இயக்கத்தையும் எதிர்க்க வேண்டிய தார்மீக கடமை ரஜினிக்கு இருக்கிறது. இறையுணர்வும், நியாய உணர்வும்,பரோபகார குணங்களும் மிக நிறைந்த ரஜினி இதை நன்கு உணர்ந்திருப்பார். எந்திரனின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு, ரஜினி வியாபார நோக்கையே பிரதானமாக எண்ணாமல், தனக்குள்ள சமுதாயக் கடமைகளை மறக்காமல், மக்களின் அபரிதமான அன்பையும் பாசத்தையும் இறைவனருளால் பெற்றிருக்கும் அவர் தம்மை முழு மனதுடன் சமுதாய சேவையில் ஈடுபடுத்திக்கொள்வது அவர் தமக்கும், தம் குடும்பத்திற்கும், நாட்டு மக்களுக்கும் செய்யும் மிகப்பெரிய தொண்டாக இருக்கும். இத்தொண்டில் இறைவன் என்றென்றும் ரஜினியின் பக்கம் நின்று வழி நடத்துவார். ரஜினியின் கோடிக்கணக்கான ரசிகர்களின் (நானும் ஒருவன்) இந்த ஆத்மார்த்தமான எண்ண அலைகளை ரஜினி விரைவில் புரிந்துகொண்டு, ஆவன செய்வார் என்று நம்புவோமாக! அப்படியே எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிக!
சர்வே ஜனா சுக்ஹினோ பவந்து!
//ரஜினிக்கு அரசியலில் இறங்க வடிவேலு அளவுக்குக்கூட சாமர்த்தியம் இல்லை
இதில் என்ன சாமர்த்தியம் வேண்டிக்கிடக்கு?! சாக்கடையில இறங்க யோசிக்காம.. கண்ணை மூடிட்டு குதிப்பாங்களா? குதிச்சா, வேடிக்கை பார்க்குற உங்களை மாதிரி வெள்ளை சட்டை ஆளுங்க மேலேயும் சகதி விழுமே.. பரவாயிலலையா… நாங்கெல்லாம் தெருவுல இறங்கிப் போராடணும்.. நீங்கல்லாம் கமெண்ட் போட்டு நோகாம நோன்பு கும்புடுவீங்க.. அப்படித்தானே?
//இங்கே சம்பாதித்த பணத்தை வைத்து கர்நாடகாவில் பல தொழில்களை செய்து, தமிழர்களுக்கு நாமம் போட்டவர்.
//
ரைட்டு.. உங்க டீமேட் கணக்குல இருககிற ஷேரை எல்லாம் வித்து தள்ளுங்க.. இனிமே தமிழ்நாட்டு கம்பெனி ஷேர் மட்டும் வாங்கிப்போடுங்க… சன்டிவி ஷேர்தான் சக்கைப்போடு போடுதான்… மறந்துடாதீங்க.. நீங்க முதல்ல இந்து.. அப்புறம் தமிழன்…. அதை மனசு வெச்சுக்கோங்க.
ஹ பி
உங்களுக்கு எதுவும் வரட்டும் எனக்கு ஆட்சேபணையில்லை. நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் திரிக்கிறீர்கள். என்னைப் பொருத்தவரை மாஃபியாக்களில் வித்தியாசம் கிடையாது. எதையும் செய்யத் தயங்காத அயோக்யர்கள் இவர்கள். நான் கேட்ட கேள்வி இதே அடிப்படையில் நாளைக்கு மதானி ரஜினியை வைத்து படம் எடுத்தாலும் ஆதரிப்பீர்களா என்பதுதான். அப்படித்தான் ஆதரிப்பேன் என்று சொல்லியியுள்ளீர்கள். நான் மாஃபியாக்களை எதிர்த்தால் அதற்குப் பெயர் இந்துத்துவாவா? தெரியாமல் போச்சே. இதில் இந்துத்துவ வெறி எங்கிருந்து வருகிறது? இன்று தமிழ் நாட்டில் ஒரு குடும்பம் வரலாறு காணாத அளவில் சொத்துக்களை குவித்து அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி வருகிறது. அதுக்கு வெட்க்கம் மானம் இல்லாமல் மனசாட்சி இல்லாமல் காசு கொடுத்து ஆதரவு தெரிவித்து விட்டு அதற்கு விளம்பரமும் கொடுத்து விட்டு அதை விமர்சனம் செய்பவனைப் பார்த்து சம்பந்தமே இல்லாமல் இந்த்துத்துவ வெறி என்கிறீர்கள். நான் என் கேள்விகளை மிகத் தெளிவாக வைத்திருக்கிறேன். படம் பார்க்கும் பொழுது வராத குமட்டல் இப்பொழுது ஸ்பெஷலாக வருவது ஏன் என்பதும் இதைப் போலவே மதானியோ தாவூத்தோ எடுத்திருந்தாலும் அதையும் விசிலடித்து விளம்பரம் செய்வீர்களா என்பதுதான். அப்படித்தான் செய்வீர்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறீர்கள். வாழ்க. நாடு வெளங்கிடும்
அன்புடன்
ச.திருமலை
கமல் நடித்த படத்துக்கு இந்தளவு விளம்பரம் கிடைத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் . ரஜினி என்பதால் ஒரு வித வயிற்றெரிச்சல் . சுயமரியாதை , சமூகம் என சொல்வதெல்லாம் லாஜிக்கே அல்ல . உண்மையில் இருதரப்பும் வின் வின் என்ற லாபகரமான கூட்டணியில்தான் உள்ளனர் .
அலகு குத்துதல் ,மொட்டை அடித்தல் எப்போதோ கிடைக்கும் ஜாலி அனுபலம் . நல்ல வேலையில் வசதியாக இருப்பவர்களும் இப்படி செய்வதுண்டு. நான் விசிலடிச்சானகுஞ்சுதான் . விசில் அடித்து படம் ரசித்தேன் . ஆனால் நானெல்லாம் சினிமா பார்ப்பதே அபூர்லம் . ரஜினி ரசிகர்களில் பெரும்பாலானோர் நல்ல நிலையில் உள்ளனர் . அவர்கள் நல்வாழ்வை பற்றி கவலை வேண்டாம் . சக மனிதருக்கு மரியாதை தருவது கிண்டலுக்குரியது என நினைக்கும் அறிவு ஜீவிகள்தான் பிச்சை எடுக்கிறார்கள்
அளவுக்கதிமாக ஹைப் செய்யப் பட்டிருக்கும் ரஜினி என்ற போலி பிம்பம் ரொம்ப சாதாரணமானது என்று உணர்த்தியிருக்கிறீர்கள் பிரசன்னா. மிக்க நன்றி!
ரஜினி கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வது, அலகு குத்தி காவடி எடுப்பது போன்ற விஷயங்கள் கடும் கண்டனத்திற்குரியவை.
இறைவனின் திருமேனி மீது பாலை, தேனை அபிஷேகம் செய்வது என்பது பூஜையில் வரும் ஒரு உன்னதமான குறியீட்டுச் செயல். அது போன்றே அலகு குத்துதல், காவடி எடுத்தல் என்பவை முருக வழிபாட்டில் ஆழமான தாத்பரியம் கொண்டவை.
ஒரு சினிமா நடிகன் மீதுள்ள அபிமானத்தைக் காட்ட இவற்றைத் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. உலகில் வேறெங்கும் மத வழிபாட்டு செயல்பாடுகளை நடிகர்களுக்கு செய்வதில்லை.. இவற்றைச் செய்யும் வெறிபிடித்த ரசிகர்கள் தங்கள் மதத்தின் நம்பிக்கைகளையே கொச்சைப் படுத்துகிறார்கள், வக்கிரப் படுத்துகிறார்கள். They are perverting, vulgarizing, abusing and insulting the acts of divine Hindu worship thru such activities.
ரஜினிக்கு கொஞ்சமாவது இந்துமதத்தின் மீது அபிமானம் இருந்தால் இச்செயல்களை மிகக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். சும்மா பேச்சுக்கு ரசிகர்க்ளுக்கு அட்வைஸ் செய்வதோடு நிற்கக் கூடாது.
” ரஜினி படத்துக்காக பால் குடம் எடுப்பதும், 1500 படிகள் கொண்ட கோவிலுக்கு முழங்காலில் நடந்து படியேறிப் போவதும், பாலாபிஷேகம் செய்வதும், தேர் இழுப்பதும், ரசிகர்கள் பச்சைக் குத்திக் கொள்வதும், அலகு குத்திக் கொள்வதும் – என்ன ஒரு சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? இதனைத் தொடர்ந்து ஒரு சாகசமாக ஒரு முக்கியமான சானல் தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தால், வளரும் இளைஞர்கள் மனதில் இதெல்லாம் நல்ல விஷயம் என்பதாகப் பதிந்துவிடாதா? ”
The fools who do this and the fools who support this sort of incredibly dumb behavior are doomed anyway. Who gives a crap? Anyone with a peanut sized brain can easily comprehend that the stuff he sees on screen is ‘entertainment’, which is not to be taken seriously. If some dumb[...] decides to start smoking just because Rajni does it, whose fault is it?
[Edited amd published]
//அளவுக்கதிமாக ஹைப் செய்யப் பட்டிருக்கும் ரஜினி என்ற போலி பிம்பம் ரொம்ப சாதாரணமானது என்று உணர்த்தியிருக்கிறீர்கள் பிரசன்னா. மிக்க நன்றி!//
அப்படி எங்கே சொல்லியிருக்கிறார்? அயோத்தியா ஜட்ஜ்மெண்ட்டை திரிப்பதுபோல் இருககிறது.
வெறிப்பிடித்த ரவுடிகளில் கைகளில் சிக்கியிருக்கும் இந்து மதத்தை இனி அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!
தமிழ்ஹிந்து » சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்…
ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்…
அதுக்குத்தானே மாறன் பிரதர்ஸ் கைகளில் கொடுத்திருக்கிறீர்கள். ஆண்டவனால் காப்பாற்ற முடியாத தமிழகத்தை மாறன் பிரதர்ஸ் காப்பாற்றி விடுவார்கள். நாங்கள்தான் பீராபிஷேகம் செய்து, கட்டவுட்டுக்கு அலகு குத்தி காவடி எடுத்து நடுரோட்டில் பாலாபிஷேகம் செய்யும் தீவீர்வாதிகள். நீங்கள் எல்லாம் மாறன் பிரதர்ஸுக்கு கப்பம் கட்டி நாட்டைக் காப்பாத்துங்கள் சாமிகளா. குடும்ப மாஃபியாவிடம் காசைக் கொடுத்து நாட்டைக் குட்டிச் சொவரா ஆக்காதீங்கன்னா சொன்னவனை இந்த்துவ வெறியர்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம். ராம்கி போய் பேசாம எந்திரனைப் பத்தாவது தடவை பாருங்கள் பண்பாடு மேலும் வளரட்டும். நாங்கள் தான் பாவம் இப்படி வெறி பிடித்து கையில் காபலத்துடன் திரிகிறோம் உங்களுக்காவது ரஜினி தயவால் மாறன்கள் ஆசீர்வாதத்தினால் பண்பாடு வளரட்டும். நீங்களாவது நல்லா இருங்க நாங்கதான் நாசமாப் போய்ட்டோம்.
அன்புடன்
ச.திருமலை
ராம்கி,
கொலை வெறி பிடித்த,சர்வாதிகார மனப்பான்மையுள்ள முட்டாள்களிடம் கிடைத்திருக்கும் இஸ்லாமை மட்டும் அந்த ஆண்டவன் காபாற்றிவிடுவானா?!
ஹரன் பிரசன்னாவின் சொல்வனக் கவிதை
கணம்தோறும் நடந்துவிடும்
செயல்களைத் திருத்திக்கொள்ளும்
வாய்ப்பு மறுக்கப்படும்
வழியென்றறிந்து
கவனமாக அடி வைக்கிறேன்
//ரஜினிக்கு கொஞ்சமாவது இந்துமதத்தின் மீது அபிமானம் இருந்தால் //
ஜடாயு இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? இதைவிட நீங்க ”கருணாநிதிக்கு இலங்கை தமிழர்கள் மேல் கொஞ்சமாவது அபிமானம் இருந்தால்” என்று சொல்லியிருக்கலாம். ரஜினிக்கு இருக்கிற ஒரே அபிமானம் சுய அபிமானம் மட்டும்தான். ரஜினி ரசிகர்களுக்கு இருப்பது வெறும் லும்பத்தனம் மட்டும்தான் கருணாநிதிக்கு குடும்ப பாசமும் திமுககாரனுக்கு ரவுடித்தனமும் போல.
//வெறிப்பிடித்த ரவுடிகளில் கைகளில் சிக்கியிருக்கும் இந்து மதத்தை இனி அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!//
ராம்கி ஏன் இவ்வளவு கோபம்? இங்கே உள்ளவர்கள் மட்டும் இந்துக்கள் அல்ல. ரஜினி ரசிகர்களிலும் நிறைய பேர் இந்துக்கள் உள்ளனர்.நானும் ரஜினி ரசிகன் தான். இங்கே உள்ளவர்கள் நீங்கள் நான் உட்பட யாரும் எடுக்கும் முடிவு மட்டும் இந்து மதம் என்று ஆகிவிடாது. ஒருவருக்கொருவர் கருத்து பரிமாற்றம் தான் இங்கே நடப்பது.
தவறு எங்காவது இருந்தால் நாம் தான் திருத்த வேண்டும் நண்பரே, அந்த கடமை நமக்கு உண்டு.
யாரும் புகழ்வதாலோ, இகல்வதாலோ ரஜினியின் நிலை மாறிவிடாது.
விட்டு தள்ளுங்கள்.
கோபமின்றி உங்களுடைய நியாமான வாதங்களை எடுத்து வையுங்கள்.
தமிழ் இந்து தளத்திற்கு
திருவண்ணாமலை கிரிவலம் பிரபலம் அடைந்ததே ரஜினி என்ற ஒரு நடிகரால் தான்.
ராகவேந்திரரின் அடையாளமாக தமிழ் நாட்டில் அறியபடுவது ரஜினி தான்.
சினிமாவில் நடிப்பது அவர் தொழில். அது வேறு அவரின் ஆன்மிக பாதை வேறு.
கலைஞ்சரின் குடும்ப கம்பனியில் அவர் நடித்து விட்டால் அது உடனே இந்து மத எதிர்ப்பு என்று சொல்ல முடியாது. இங்கு உள்ள அனைவரையும் போல ஏன் சிலரை விட அதிகமாகவே ஆன்மிக அறிவு உள்ளவர்தான் ரஜினி.
பின்னர் அமெரிக்காவிலும்,முஸ்லிம் நாடுகளிலும் சென்று அவர்களிடம் வேலை செய்து சம்பாதிக்கும் இந்துக்களை என்ன சொல்வது. ஆன்மிகம் வேறு, தொழில் வேறு என்று தான் நினைக்கிறேன். இந்த தளத்தில் பங்கேற்கும் பலரே பிற மத நாடுகளில் தொழில் செய்பவராக இருக்கலாம்.
பாபாவில் நடித்தது இந்துத்துவாவை காசாக்குவது என்று சொன்னால் இதற்கு முன் வந்த எண்ணற்ற பக்தி படங்களை என்ன சொல்வது?
எல்லா நடிகரின் ரசிகர்களும் எல்லா தரப்பிலும் இருப்பார்கள் நாம் ஏன் சினிமா விமர்சனம் செய்து கொண்டிருக்கிறோம். நம் மதத்தைப்பற்றிய எதாவது பரப்புரை இருந்தாலொழிய சினிமாவிற்கும் நம் தளத்திற்கும் என்ன தொடர்பு? . அதனை செய்ய வேண்டிய தளம் வேறு என்று நினைக்கிறேன்.
// இந்த நிலை இப்படியே நீடிப்பதைத்தான் ரஜினி விரும்புகிறாரா என்ன?// இது என்ன லூசுத்தனமான கேள்வி? ரஜினியை குறிவைத்து பேர் வாங்க நினைத்த ராமதாசு திருமாவளவன் ரவுடித்தனத்திற்கும் ரஜினியை குறிவைத்து எழுதிய ஹ பிக்கும் வித்தியாசமே இல்லை. அவர் தன் வேலைய பாத்துக்கிட்டு போறாரு. உங்களுக்கு ஏன் வயித்தெரிச்சல். அரசியல் வாதிகள் இந்து மதத்தை எப்படி ஈஸியா திட்டிடறாங்களோ அது போல ரஜினியை எல்லோரும் திட்டிடறாங்க. அதான் உண்மை. ஏன்னா அவர் தான் எல்லாத்தையும் வாங்கிக்கிறாரு. ரொம்ப நல்லவரு கணக்கா! திருப்பி கொடுக்குற பவன் கல்யான் மாதிரி தனது ரசிகர்களை ரஜினி வழிநடத்தலை. ரஜினியை பாராட்டி எழுதினாலும் திட்டி எழுதினாலும் பேர் காசு சம்பாதிக்கலாம்ன்னு அலையற சீப் ரேட் வாரப்பத்திரிகை ரேஞ்சுக்கு இருக்கு இந்தக் கட்டுரை. இந்து சாமிக்கு எதிரா இந்து மதத்திற்கு எதிரா பகுத்தறிவுங்கற பேர்ல அவமானப்படுத்தாம அதுக்கு ஒரு மரியாதையை உண்டாக்கி இருக்கிற ஒரு மிகப்பெரிய ஐக்கான் ரஜினியை பகுத்தறிவு சீர்திருத்தப் போர்வையில திட்டி அவமதிக்கப்பார்ப்பது சரியல்ல. ஹரன் பிரசன்னாவின் அதிகப்பிரசங்கித்தனம் தான் மேலோங்கி இருக்கிறது. கருனாநிதி வீட்டு அதிகார வர்கத்திற்கும் மாறன் குடும்பத்தின் பிசினஸ் பேராசைக்கும் அவர்களைபற்றி கூறாமல் ரஜினியை பலிகடா ஆக்கி இருப்பது அநியாயம். ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல அறிவு ஜீவிகளுக்கு (என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு) இளைச்சவர் ரஜினி தான் என்பது நன்றாகத் தெரிகிறது!
ரஜினி ரசிகர்களை கண்டிக்கும் விதத்தில் அவரது குருவான பாலச்சந்தரே பல ஆண்டுகளுக்கு முன்னர் சில படங்களில் காட்சிகள் வைத்தார்.
ஆனாலும் இந்தக் கூத்து மேலும் மேலும் வளர்ந்து கொண்டே தான் போகிறது. நிஜம் நிகழ்சிகளில் பல இந்து மத வழிபாடுகளை கேலி செய்யும் சன் டிவி இப்போ தன. பட விளம்பரத்துக்கு இந்த உத்திகளை வரவேற்று ஊக்கப் படுத்தி உண்மை ரசிகன்கள் என்றால் இப்படித் கள்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று உலகுக்கு காட்டித் திரிகிறது. எனக்கு இன்னொரு சந்தேகம். இவர்களே கூலிக்கு ஆள் வைத்து இப்படி எல்லாம் செய்கிறார்களோ என்னமோ
ஜெய்! //ரஜினிக்கு அரசியலில் இறங்க வடிவேலு அளவுக்குக்கூட சாமர்த்தியம் இல்லை// அவர் அரசியலில் இறங்கினாலும் இறங்காவிட்டாலும் உங்களைப் போன்றவர்கள் நோகாமல் ஏசி ரூமில் இருந்து கொண்டு விமர்சனம் எழுதி அறிவு ஜீவி என்று காட்டிக்கொள்வீர்கள் நண்பரே. ஆனால் அதற்காக அவரும் அவரது ரசிகர்களும் காலம் முழுவதும் காயப்படப்போவது பற்றி உங்களுக்கு என்ன கவலை. எத்தனை பேர் கொலையாவார்கள். எத்தனை வெட்டு குத்துக்களை எதிர் நோக்க வேண்டியிருக்கும். ரஜினி எத்தனை பேர் வாழ்வுக்கு பொருப்பேற்க வேண்டி இருக்கும். அப்படி ரசிகர்களை கொலைகளத்தில் பலிகடாவாக்காமல் ஏதோ பலபிஷேக ரேஞ்சோடு அன்றைய தின பரவசத்தோடு விட்டு விடுவது எவ்வளவோ தேவலை. ரஜினி அரசியலுக்கு வரவில்லை வரவில்லை என்று ஆதங்கப்படுகிறீர்களே …தெரியாமல் தான் கேட்கிறேன் 6 கோடி ஜனத்தொகையில் பாதியளவு இளைஞர்களைக் கொண்ட தமிழகத்தில் இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து எதையும் கிழிக்காமல் 60 வயது ஆள் வந்து தான் நாட்டை நட்டமாக நிறுத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன காமெடியோ தெரியவில்லை. ரஜினி படத்தை பார்த்தமா விசில் அடிச்சமா கனவோட தூங்கி அடுத்தநாள் வேலைக்குப் போய் பொழப்ப பாத்து, நம்மளும் ஒரு நாள் ரஜினியப்போல உயரனும்னு மனசில நினைச்சு முன்னுக்கு வந்தமான்னு இல்லாம சமுகத்தின் சாதனையாளனை திட்டிக்கிட்டு இருக்கறது கையாலாகத தனத்தை தான்காண்பிக்கிறது நண்பர்களே!
ஜெய்! //ரஜினிக்கு அரசியலில் இறங்க வடிவேலு அளவுக்குக்கூட சாமர்த்தியம் இல்லை// அவர் அரசியலில் இறங்கினாலும் இறங்காவிட்டாலும் உங்களைப் போன்றவர்கள் நோகாமல் ஏசி ரூமில் இருந்து கொண்டு விமர்சனம் எழுதி அறிவு ஜீவி என்று காட்டிக்கொள்வீர்கள் நண்பரே. ஆனால் அதற்காக அவரும் அவரது ரசிகர்களும் காலம் முழுவதும் காயப்படப்போவது பற்றி உங்களுக்கு என்ன கவலை. எத்தனை பேர் கொலையாவார்கள். எத்தனை வெட்டு குத்துக்களை எதிர் நோக்க வேண்டியிருக்கும். ரஜினி எத்தனை பேர் வாழ்வுக்கு பொருப்பேற்க வேண்டி இருக்கும். அப்படி ரசிகர்களை கொலைகளத்தில் பலிகடாவாக்காமல் ஏதோ பலபிஷேக ரேஞ்சோடு அன்றைய தின பரவசத்தோடு விட்டு விடுவது எவ்வளவோ தேவலை. ரஜினி அரசியலுக்கு வரவில்லை வரவில்லை என்று ஆதங்கப்படுகிறீர்களே …தெரியாமல் தான் கேட்கிறேன் 6 கோடி ஜனத்தொகையில் பாதியளவு இளைஞர்களைக் கொண்ட தமிழகத்தில் இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து எதையும் கிழிக்காமல் 60 வயது ஆள் வந்து தான் நாட்டை நட்டமாக நிறுத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன காமெடியோ தெரியவில்லை. ரஜினி படத்தை பார்த்தமா விசில் அடிச்சமா கனவோட தூங்கி அடுத்தநாள் வேலைக்குப் போய் பொழப்ப பாத்து, நம்மளும் ஒரு நாள் ரஜினியப்போல உயரனும்னு மனசில நினைச்சு முன்னுக்கு வந்தமான்னு இல்லாம சமுகத்தின் சாதனையாளனை திட்டிக்கிட்டு இருக்கறது கையாலாகத தனத்தை தான்காண்பிக்கிறது நண்பர்களே!
//இன்னொரு சந்தேகம். இவர்களே கூலிக்கு ஆள் வைத்து இப்படி எல்லாம் செய்கிறார்களோ என்னமோ// சந்தேகமே இல்லை அது தான் நிஜம். கவரேஜுக்காகவே இவர்கள் ரசிகர்களை சந்தித்து சில முன்னேற்பாடுகளைச் செய்கிறார்கள் என்று கேள்வி! பின்ன டி வில காட்ட வேண்டாமா என்ன? சிவாஜி சந்திரமுகி வந்த சமயம் கூட இது போல முழங்கால் பாத யாத்திரை அலகு குத்துதல் என்று நடக்கவில்லையே! அப்பொழுதும் இதே ரஜினி தானே, அதே ரசிகர்கள் தானே! இது சன் டிவியின் வேலை.. ரஜினியை பலிகடாவாக்கி எழுதுவது கவன ஈர்ப்பு குறுக்கு புத்தியே தவிற வேறில்லை. அவ்வளவு ஏன், அதே ரஜினி தான் தியேட்டர்களில் அளவுக்கு அதிகமான விலையில் டிக்கெட் விற்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் பெரும்பாலான தியேட்டர்களில் 200 முதல் 300 வரை டிக்கெட் விற்கப்பட்டது. சுயநலம் தாண்டவாமாடும் போது ரஜினி சொல் மட்டும் எடுபடுமா என்ன? எல்லாம் பணம் தான் பாஸ்!
//எல்லா நடிகரின் ரசிகர்களும் எல்லா தரப்பிலும் இருப்பார்கள் நாம் ஏன் சினிமா விமர்சனம் செய்து கொண்டிருக்கிறோம். நம் மதத்தைப்பற்றிய எதாவது பரப்புரை இருந்தாலொழிய சினிமாவிற்கும் நம் தளத்திற்கும் என்ன தொடர்பு? . அதனை செய்ய வேண்டிய தளம் வேறு என்று நினைக்கிறேன்.// பாபு, சரியாகச் சொன்னீர்கள்
ஒரு ஆன்மீக இணைய தளத்தில் இந்த சினிமா விஷயங்கள் எல்லாம் தேவையா.
ரஜினி ஒரு தொழில் முறை தேர்ந்த நடிகர்.
அவர் வாங்கும் பணத்திற்கு அவர் சிறப்பாக நடிப்பார். அவர் ஒரு நடிகர் தானே தவிர தன்னை யாரும் பின்பற்றுங்கள் என்று சொல்லவில்லை.
அவர் யாரையும் அலகு குத்தவோ, பால் குடம் எடுக்கவோ சொல்லவில்லை
எப்படியும் இந்த படம் சன் டி வி க்கு ம் ரஜினிக்கும் நல்ல லாபம் தரும்.
இன்னும் இரண்டு வருஷம் கழித்து இன்னும் ஒரு படம் நடிப்பார். அதுவும் நல்ல லாபம் தரும்
தவறு என்பது
தன்னை உணராமல் தலைவனை தேடி அலைபவர்கள் மீது தானே தவிர ரஜினி மீது அல்ல.
தன்னை உணரும்போது தனக்குத்தானே தலைவன் ஆகலாம் என்று திருமூலர் சொன்னதை உணர முயல்வோம்.
உனக்கும் எனக்கும் ஒரே தலைவன் அந்த இறைவன் மட்டுமே
///வெறிப்பிடித்த ரவுடிகளில் கைகளில் சிக்கியிருக்கும் இந்து மதத்தை இனி அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!///
ஏன் சுற்றி வளைத்து பேசுகிறிர்கள். நேராக பேசியிருக்கலாமே. எல்லாம் வல்ல எஹோவாவே பரமபிதாவே உம்மை நம்பாதவர்களை நரகத்தில் தள்ளும் என்று சொல்லியிருந்திர்கள் என்றால் நேர்மையாக இருந்திருக்கும்.
//அளவுக்கதிமாக ஹைப் செய்யப் பட்டிருக்கும் ரஜினி என்ற போலி பிம்பம் ரொம்ப சாதாரணமானது என்று உணர்த்தியிருக்கிறீர்கள் பிரசன்னா. மிக்க நன்றி! //
நான் எங்கேயும் அப்படி சொல்லவில்லை. இப்படி புரிந்துகொள்ள உங்களால்தான் முடியும்.
ரஜினி போலி பிம்பம் என்பது உங்கள் கற்பனை. நான் சொல்ல வருவது ரஜினியின் மீதான ஆதங்கம்.
இரண்டாம் முறை எந்திரனுக்கு சென்று கொண்டிருக்கிறேன். இது திருமலைக்கு.
Haran Prasanna,
Kudos, Please take a printout of this article and send it to Rajni ; He is already lying in the feet of SUN Group and has lost all his senses.
THIS IS THE OUTCOME OF 40YEARS OF DRAVIIAN RULE AND IT WHENEVR I CROSS ANY THEATRE ; A GET A ANXIOUS FEELING TOWARDS THE YOUTH WHO ARE STANDING IN QUEUES TO GET TICKETS ….
NOW GOD ONLY CAN SAVE TAMILNADU AND THIS MADNESS IS NOT PREVALENT IN ANY OTHER PART OF OUR COUNTRY…
KEEP IT UP
கோவிலில் பாலாபிஷேகம் எதற்கு என்று பகுத்தறிவு வசனம் பேசிய திராவிட கொள்ளைகும்பலின் வழிதோன்றல்கள் தயாரித்த படத்திற்கு இத்தனை வழிபாடு வேண்டுதல் மொட்டை, அலகு குத்திகொள்ளல். தமிழனின் பகுத்தறிவு பறந்து விரிந்து விட்ட து தமிழர் தலைவர் ஆட்சியில். ஒரு படத்தை விளம்பரபடுத்துவது தவறல்ல ஆனால் ஓவர்டோஸ் என்றுமே ஆபத்துதான். சினிமாக் கொட்டகைகளிலும் டாஸ்மாக் கடைகளிலும் தமிழன் தொலைந்து போயாகிவிட்டது. இப்பொழுது வியாதி முற்றிவிட்டது. இனி சங்கு ஊத வேண்டியதுதான் பாக்கி. ஒருவேளைத் தேர்தலில் காட்சி மாறி ஆட்சி மாறினால் சன் குழுமத்தின் மாபியா தனம் முடிவுக்கு வரலாம். ஆனால் இலவசத்தின் மாயையில் விழுந்து கிடக்கும் தமிழன் விமோசனம் பெறுவது எப்படி என்று காலம் தான் பதில் சொல்லவேண்டும்.