அறியும் அறிவே அறிவு – 3

அறியும் அறிவே அறிவுபகுதி 1

அறியும் அறிவே அறிவுபகுதி 2

(தொடர்ச்சி…)

விளக்கு முந்தைய பகுதியில், நடந்ததை ஒருவன் அறிந்திருந்தான், ஒருவன் அறியவில்லை என்று பார்த்தோம். அது இருவரைப் பற்றியது. அவ்விருவரில் அறியாதிருப்பவனுக்கு நடந்த விஷயம் தெரியும்போது அவன் அறிபவன் ஆகிறான். இது எப்படி என்றால் ஒரு இருள் சூழ்ந்த அறையில் விளக்கு ஒன்று ஏற்றப்படும்போது இருள் போய் வெளிச்சம் வருவது போலத்தான். அந்த இருள் எங்கு போய்விட்டது? விளக்கு வந்ததால் வெளிச்சம் வந்தது என்கிறோம். அதுபோல் எது வந்ததால் இருள் வந்தது? எதுவும் இல்லை; விளக்கு போனதால் இருள் வருகிறது என்றுதான் சொல்ல முடியும். ஆகையால் இருள்-வெளிச்சம் இரண்டும் விளக்கு ஒன்றைச் சார்ந்திருப்பது போல, அறிவும் அறியாமையும் எதைச் சார்ந்துள்ளது என்று இப்போது நாம் பார்க்க வேண்டும்.

அறியாமை விட்டு அறிவு இன்றாம் அறிவு விட்டு அவ்
அறியாமை இன்று ஆகும் அந்த – அறிவும்
அறியாமையும் ஆர்க்கு என்று அம் முதலாம் தன்னை
அறியும் அறிவே அறிவு

(இத்தொடரை எழுதுவதைப் பற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு முதலில் ஞாபகம் வந்தது இந்தச் செய்யுள்தான் என்றதால், இதில் உள்ள ஈற்றடியையே தொடரின் தலைப்பாக வைத்திருக்கிறேன் என்பதை வாசகர்கள் இந்நேரம் ஊகித்திருக்கலாம். )

பொருள்: (இது உடல், இது மனம், இது புத்தி, இது ஆன்மா, ஒவ்வொன்றும் வேறு என்ற இவ்வாறான) பாவனையுடன் கூடிய அஞ்ஞானத்தை விட்டு உலக நடப்பைக் கவனிக்கும் அறிவு என்பதொன்று தனியாக இல்லை. அதே போல உலகை தனக்கு அறிவிக்கும் அறிவை விட்டு அஞ்ஞானமும் தனித்தே இருக்காது. அந்த அறியாமையாகிய அஞ்ஞானமும், தனக்கு அறிவிக்கும் அறிவும் யாருக்கு உண்டாகிறது என்று விசாரித்து (இவை இரண்டுமே உதித்து ஒடுங்கும்) நான் என்று எழும் அகந்தையின் மூலமாகிய உண்மை சொரூபத்தை உணர்கின்ற அறிவே உண்மையான மெய்யறிவு ஆகும்.

இந்தச் செய்யுளின் விளக்கம் இத்தொடருக்கு மிகவும் முக்கியம் என்பதால், ரமணர் காலத்திலிருந்தே ஆஸ்ரமத்தின் அருகிலே வாழ்ந்து இந்த வருட ரமண ஜெயந்தி அன்று காலை ரமணர் சந்நிதி அருகிலேயே ரமணருடன் ஐக்யமான, தவத் திருமதி கனகாம்பாள் அவர்களின் விளக்க உரையை அவர் எழுதியவாறே கொடுக்கிறேன்:
பக்தர்களுடன் கனகம்மாள்
“இந்தப்பாட்டில் கூறப்பட்ட அறிவும் அறியாமையும் இரட்டைகள். ஒன்றைவிட்டு ஒன்று இருக்காது. ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்றது. இரட்டைகளில் இந்த அறிவு – அறியாமை என்னும் இரட்டைதான் முக்கியமாக ஆராய்ந்து அறியவேண்டிய ஒன்றாகும்.

இங்கே கூறப்பட்ட அறிவு, அறியாமை என்பவை, உலக இயல்பைப் பற்றி நமக்கு ஏற்படும் மெய், பொய் தோற்றங்களைப் பற்றிய அறிவேயாகும். இந்த இரட்டைகள் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாததோடு, ஒன்று தோன்றும்போது மற்றொன்று தோன்றாது. இருட்டை உணரும்போது வெளிச்சம் தெரியாது. வெளிச்சம் தெரியும்போது இருளை உணர முடியாது. அதனால் ஒன்றைத் தெரிகின்றது என்ற ஞானம் இருக்கும்போது, மற்றொன்றைத் தெரியவில்லை என்ற அஞ்ஞானமும் கூடவே இருக்கும்.

அறிவில் அறியாமை கலந்திருக்கிறது. அறியாமையில் அறிவு கலந்திருக்கிறது. அறியாமையில் அறிவின் கலப்பு இல்லையென்றால், தெரியவில்லை என்று (கூடச்) சொல்லமுடியாது. ஜடம்போல்தான் இருக்க வேண்டும். இந்தக் கலப்பினால் அது தூய்மையற்றுப் போயிற்று. தூய்மையற்றதை அறிவென்று கூறத்தகாது. அதனால் அறிவு என்கிற அறியாமையும், அறியவில்லை என்கிற அறியாமையும் இரண்டும் அறியாமைகளே. இவை இரண்டுக்கும் வைப்பு நிதியாக இருப்பது அகந்தை என்னும் மூலதனம்.

இந்த அறிவும் அறியாமையும் யாருக்கு என்றால் எனக்கு என்று பதில் கிடைக்கிறது. அப்படிச் சொல்பவனை யாரென்று தீர விசாரித்து, அதன் உதிப்புக்குக் காரணமாகிய அகந்தையை அறியத் தலைப்பட்டால் அது ஒரு பொருளே இல்லை என்பதை அறிவான். அகந்தை இருப்பு அற்றதால் இல்லாது ஒழிந்து விடுகிறது. அகந்தை அழிந்த இடத்தில் தனது உண்மை சொரூபம் பொலிவுடன் பிரகாசிக்கிறது. இப்படி உணர்கின்ற அறிவுதான் உண்மை அறிவு என்று உபதேசிக்கிறார் ”.

அறிவுறும் தன்னை அறியாது அயலை
அறிவது அறியாமை அன்றி – அறிவோ?
அறிவு அயற்கு ஆதாரம் தன்னை அறிய
அறிவு அறியாமை அறும்

[பொருள்: உலகப் பொருட்களை அறிகின்றவனாகிய தன்னை விசாரித்து, தனது உண்மை சொரூபத்தை அறியாமல் தனக்கு அயலாய்த் தோன்றும் பொருட்களை அறிந்து கொள்வது அஞ்ஞானமன்றி உண்மையான மெய்ப்போத ஞானமாகுமோ? உலகறிவாகிய ஜீவபோத அறிவிற்கும், அதற்கு அயலான அறியாமைக்கும் ஆதாரமாயுள்ள அகந்தையாகிய தன்னை விசாரித்து, சொரூபத்தின் உண்மையை அறிந்து உணரும்போது ஜீவபோத அறிவும், அஞ்ஞானமாகிய அறியாமையும் நாசமாகும்.]

fivesensesதனது ஐம்புலன்களினால் உலகப் பொருட்களை அறிவதையே ஒருவன் அறிவு என்று நினைக்கிறான். அந்த அறிவும், அதற்கு அயலான அறியாமையும் இரண்டுமே தோன்றுவதன் காரணமே தனக்கு அறிவு என்று ஒன்று இருப்பதால்தானே? ஆனாலும் அது தன்னை விட்டு, அயலான உலகையும், (தன்னைத் தவிர) அதிலுள்ள பொருட்களையும் அறிவதிலேயே நாட்டம் கொள்வது ஏன் என்று யோசித்துப் பார்க்கவேண்டும். அறியும் நானா அல்லது அறியப்படும் உலகமா, இரண்டில் எது முதன்மையானது? அறியும் தன்னை விட்டு தனக்கு அயலான உலகை அறிவது, அறியாமையினால் அல்லவா? அறியும் தன்னை அறிந்துகொள்ள, இந்த இரு நிலைப்பாடுகளான அறிவு-அறியாமையின் உண்மை நிலையினை உணர அவைகள் தானே இற்றுப்போகும். அதாவது ஆத்மானுபவத்தில் அவை இரண்டும் சேர்ந்தாற்போல் அழிகின்றன.

அறிவு அறியாமையும் அற்றது அறிவாமே
அறியும் அது உண்மை அறிவாகாது – அறிதற்கு
அறிவித்தற்கு அன்னியம் இன்றாய் அவிர்வதால் தான்
அறிவாகும் பாழ் அன்று அறி


[பொருள்: அறிவும், அறியாமையும் அற்றுப் போன நிலையே உண்மையான ஞான நிலையாகும். அன்னியப் பொருட்களைப் பற்றி அறியும் அது மெய்யறிவாகிய சொரூப நிலை ஆகாது. தான் ஒன்றை அறிவதற்கோ, தன்னை அறிவிப்பதற்கோ தனக்கு அன்னியமாக வேறொரு பொருள் இல்லாமல் தானே பிரகாசிப்பதால் தானாகிய ஆன்மாவே உண்மை அறிவு ஆகும். அது எல்லாம் அற்றுப்போன பாழாகிய சூன்யம் இல்லை என்று அறிவாயாக.]

“எனக்கு அன்னியர் அல்லாராய் என்னையே நினைத்து யாண்டும் என்னையே உபாசிக்கும் நித்திய யோகிகளுடைய யோக க்ஷேமத்தை நான் வழங்குகிறேன்” (9-22) என்று கீதாசாரியன் சொல்வதற்கும், இங்கு சொல்லப்பட்டுள்ளதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? அங்கு பக்தன் இறைவனை தான் வேறு அவன் வேறு என்றில்லாமல் இருப்பது என்றால், இங்கு அன்னியம் என்றேதும் இல்லாமல் தன்னுள்ளே எல்லாமாய் இருப்பது என்றாகிறது. அவ்வாறு இருந்தால் சாதகனுக்குத் “தன்னுள் வளரும் தாமே ஒளி” என்றே ஆகும்.

ஸ்ரீமத் பகவத் கீதை எனும் நூலில் சுவாமி சித்பவானந்தர் இதைச் சொல்லும்போது, “பக்தன் பகவானை நோக்கி ஓர் அடி வைத்தால் பகவான் பக்தனை நோக்கிப் பத்தடி வருகிறார்” என்ற ஸ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசத்தை மேற்கோள் காட்டுகிறார். இது பக்தி வழி என்றால், அது ஞான வழி என்றும், இரண்டும் ஒரே இடத்திற்கு சாதகனை இட்டுச் செல்கிறது என்றுதானே அர்த்தம்? வழிகள் வேறாக இருந்தாலும் குறிக்கோள் ஒன்றே.

சில மதங்கள் அறிவு, அறியாமை எல்லாம் அற்றுப் போனதால் மிஞ்சுவது ஒன்றும் இல்லை, அது சூன்யமே என்கின்றன. அது அப்படிப்பட்ட பாழ் அல்ல; பாழ் என்று சிலர் சொன்னாலும் அதை உணரும் அந்த பரிபூரண அறிவே ஆன்மா என்கிறார் ரமணர்.

ஞானமாம் தானே மெய் நானாவாம் ஞானம் அஞ்
ஞானமாம் பொய்யாம் அஞ்ஞானமுமே – ஞானமாம்
தன்னையன்றி இன்று அணிகள்தாம் பலவும் பொய்மெய்யாம்
பொன்னையன்றி உண்டோ புகல்


[பொருள்: சுத்த ஞான சொரூபமாகிய ஆத்மாவே உண்மையாகும். பலவித தோற்றங்களுடன் கூடிய ஞானம் பொய்யாகிய அஞ்ஞானமாகும். பொய்யாகத் தோன்றும் அந்த அஞ்ஞானமும் ஞானமே சொரூபமாக உள்ள ஆத்மாவை அன்றி வேறாக இல்லை. (எப்படியென்றால்) பற்பல விதமான நாம ரூபங்களுடன் உள்ள (பொன்னால் செய்யப்பட்ட) ஆபரணங்கள் (பொன்னை விட்டால்) பொய்யாகும். உண்மையான பொன்னைவிட்டு அவை வேறாகத் தனித்து இருக்க முடியுமோ சொல்?]

ஆங்கிலத்தில் சொல்வார்களே “letter and the spirit behind it” அல்லது “form and substance” என்று, இவைகளில் spirit என்பது முக்கியம், substance என்பது முக்கியம். அதாவது ஒன்று சொல்லப்படுவதை விட சொல்லப்பட்டதன் நோக்கம் முக்கியம்; அதே போல ஒரு பொருளின் தோற்றத்தை விட அந்தப் பொருள் எதனால் செய்யப்பட்டுள்ளது என்பது முக்கியம். ஆக ஆபரணங்கள் வெறும் தோற்றமே, அது பொன்னால் செய்யப்பட்டுள்ளது என்பதுதான் அதற்கு மதிப்பு. அந்தப் பொன்னை விட்டு ஆபரணங்கள் தனியாக இருக்க முடியாதது போல, விதவிதமான தோற்றங்களுக்குக் காரணமான ஆத்மாவை (பரிபூரண அறிவை) விட்டுவிட்டு தோற்றங்களை மட்டும் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் வாழ்க்கையில் தோற்றவர்களா அல்லது வென்றவர்களா?

(இந்தச் செய்யுளில் உள்ள இருசொல் சேர்க்கையான “பொய்மெய்” என்பதிலிருந்து வந்ததுதான் “பொம்மை” என்ற சொல்லும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மெய்யாக உள்ள ஒன்றை பொய்யாக – அதன் பிரதிமமாக – காட்டுவதுதான் “பொம்மை”யின் பொருள். )

மெய்யான ஞானத்தை விட்டு விதவிதமாகத் தோன்றும் உலக ஞானம் தனித்து நில்லாது. (ஆனாலும்) உலகம் தோன்றும்போது ஆத்மா தோன்றாது. ஆத்மா தோன்றும்போது உலகம் தோன்றாது. எப்படியென்றால், திருமூலரின் திருமந்திரத்தில் உள்ளதுபோல்,

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே

ஒரு குழந்தைக்கு யானை பொம்மைதான் தெரியும், அதன் கண்ணுக்கு பொம்மை செய்யப்பட்டுள்ள மரம் தெரியாது. ஆனால் யானை பொம்மையைப் பார்க்கும் ஒரு தச்சனோ அது எந்த மரத்தால் செய்யப்பட்டது என்றுதான் பார்ப்பான். அதுபோல அஞ்ஞானிக்கு உலகம் முதலான பஞ்ச பூதங்கள்தான் தெரியும், ஆனால் அதற்குக் காரணமான பரம்பொருள் தெரியாது. ஞானிக்கோ பார்க்கும் பொருளிலெல்லாம் அவைகளில் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள்தான் தெரியும். எப்படி மரத்தை விட்டு யானை இல்லையோ, அதுபோல பரம்பொருளை விட்டு காணப்படும் உலகம் என்று ஒன்று தனியாக அவருக்கு இல்லை. சாதகனும் தனது குருவருளால் பார்க்கும் பொருளில் எல்லாம் பரம்பொருளைப் பார்க்கும் வாய்ப்பை அடைகிறான். அப்படித் தன்னிலும் பார்க்கும்போது அவன் ஆத்ம சாட்சாத்காரம் அடைகிறான்.

(தொடரும்)

4 Replies to “அறியும் அறிவே அறிவு – 3”

  1. Pingback: Indli.com
  2. ‘அநந்ய’ என்னும் ஸம்ஸ்க்ருத சொல் ‘அன்யமே (மாற்றே) இல்லாதவனாய்’ (without a second – that is, unique ) எனப்பொருள் படும். இது ஒருமனப்பாட்டை வலியுறுத்துவதற்கான சொல். இவ்வாறு சிந்திப்பவர்கள் அனந்யாச்சிந்தயந்த: எனப்படுவர். அதாவது என்னையன்றி வேறில்லாதாராய் என்னையே நன்கு உபாசிக்கும் நித்திய யோகிகளுடைய யோக க்ஷேமத்தை நான் வஹிக்கிறேன் (சுமக்கிறேன்) என்பது (9-22) கீதாசாரியன் வாக்கு.

    பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் என்றாலோ தனக்குக் காரணமான பொருளை (இறையை) தோற்றத்திற்கு உள்ளாகும் உலகமுதலான பஞ்ச பூதங்கள்தான் மறைக்கின்றன. ஆனால், இறையைக் கண்டவருக்கோ அவ்விறையிலேயே மறைந்தன உலகமுதலான பஞ்ச பூதங்கள் என்பதை பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே என்னும் வாக்கியம் விளக்கும். அதாவது கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது, கடவுளை மட்டும் கண்டால் கல்லடி தெரியாது என்பது போல.

    கீதாசார்யன் கூறுவது, எவ்வாறு என்னை ஒருமுகத்துடன் உபாசிக்கவேண்டும் என்பது. திருமூலர் கூறுவதோ உலகத்தை நாம் எந்த ஆழ் பாவனையில் காண்கிறோமோ அந்த தோற்றம் தான் நமக்கு ஏற்படும் என்பது.

    முன்னது மனஒருமுக முயற்சி அதனால் விளையும் செயல், பின்னது மெய்யறிவால் அல்லது பொய்யறிவால் நமக்கு ஏற்படும் அனுபவம்.

    அதுதான் இங்கு சொல்லப்பட்டுள்ளதற்கும் கீதையில் கூறப்பட்டுள்ளதற்கும் வேறுபாடு(!?)

    அறிவிற்கும் அறியாமைக்கும் உள்ள பிரிக்கமுடியா தொடர்பை விளக்கும் உங்கள் முயற்சி திருவினையாகட்டும்!

  3. > கீதாசார்யன் கூறுவது, எவ்வாறு என்னை ஒருமுகத்துடன் உபாசிக்கவேண்டும் என்பது. திருமூலர் கூறுவதோ உலகத்தை நாம் எந்த ஆழ் பாவனையில் காண்கிறோமோ அந்த தோற்றம் தான் நமக்கு ஏற்படும் என்பது……” – S.Sriinivaasaraghavan

    கண்ணனும் திருமூலர் சொன்னதைச் சொல்லியிருக்கிறானே?
    “காமைஸ் தைஸ் தைர் ஹ்ரூத ஜ்ஞானாஹ் ப்ரபத்யந்தே அன்யதேவதாஹ்
    தம் தம் நியமம் ஆஸ்தாய ப்ரக்ருத்யா நியதாஸ் ஸ்வயா
    யோ யோ யாம் யாம் தனும் பக்தஹ் சிரத்தயா அர்ச்சிதும் இச்சதி
    தஸ்ய தஸ்ய அசலாம் சிரத்தாம் தாம் ஏவ விததாம்யஹம்….”

    ” அவரவர்களின் மனவிருப்பப்போக்கில் ஞானத்தை[அறிவுவழியை] எடுத்துக்கொண்டு,
    இறையைப் பிறபிற வடிவங்களில் பாவித்து அவரவர் ததம் இயற்கைப்படி நியம(நெறி) வகுத்து
    நாடுகின்றனர்.

    அவ்வாறு யார் யார் எந்தெந்த உருவில் பக்தி சிரத்தைகொண்டு அர்ச்சிக்க விழைகிறானோ,
    அவரவர்தம் அந்தந்த அசையாச்சிரத்தையை அவரவர் நெறியாக விதித்தேற்றுக்கொள்கிறேன்”

    ஆடல்மன்.இளமுருகு

  4. வணக்கம்

    ///கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது, கடவுளை மட்டும் கண்டால் கல்லடி தெரியாது என்பது போல. ////

    சகோதரா இது சினிமாப் பாட்டு ஆனால் ….. கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது, கடவுளை மட்டும் கண்டால் கல்லை தெரியாது….. …….என்பது சரியான விளக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *