காமராஜர் என்கிற தேசியவாதி

’தமிழ்ஹிந்து’வில் வெளிவந்த தமிழ்நாட்டின் ‘அடுத்த தேர்தல் கூட்டணிகள் குறித்து சில ஹேஷ்யங்கள்’ என்கிற கட்டுரையின் கீழ் நான் எழுதியிருந்த மறுமொழிகளைப் படித்த சில நண்பர்கள், காமராஜரின் தேசிய உணர்வு குறித்து எனக்குத் தெரிந்த விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் எனப் பெரிதும் விருப்பம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

பார்க்கப் போனால் கூட்டணி என்கிற பிரயோகமே தவறு. கொள்கையில் மாறுபாடுள்ள அரசியல் கட்சிகள், மக்கள் நலனுக்காகத் தமக்குள் ஓரளவு சமரசம் செய்துகொண்டு, குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டு இயங்குவதைத்தான் கூட்டணி என்று குறிப்பிட வேண்டும். இப்போது தமிழ்நாட்டில் நடப்பது அரசியல் கட்சிகள் தொகுதிகளில் வாக்குகள் சிதறாமல் தமது வெற்றிக்கு உத்தரவாதம் கிடைக்க வேண்டும் என்பதற்கான உத்தியாக மேற்கொள்ளும் சுயலாபத் தொகுதி உடன்பாடு தானேயன்றி மக்கள் நலன் கருதித் தமது நலன்களை விட்டுக்கொடுத்துக் குறைந்த பட்ச செயல் திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்கிற பொதுநலன் அல்ல. இது அரசியல் கட்சிகளின் கடைந்தெடுத்த சுயநலமே தவிர வேறு ஏதுமில்லை. கூட்டணி என்ற பெயரில் இப்படியொரு சுயலாப வேட்டையில் காங்கிரஸை ஈடுபடுத்தி அதன் சுயமரியாதையைக் குலைக்க காமராஜர் என்றுமே விரும்பியதில்லை.

kamarajar-anna1967 தேர்தலின்போது அண்ணா மிகச் சாமர்த்தியமாக நவக்கிரகங்களாக இருந்த கட்சிகளையெல்லாம் அவரவர் செல்வாக்கிற்கு ஏற்பக் குறிப்பிட்ட சில தொகுதிகளில் சிரமப்படாமலேயே வெற்றி பெறலாம் என ஆசை காட்டி, தொகுதி உடன்பாடு என்ற பெயரில் எல்லாக் கட்சிகளையும் காங்கிரசுக்கு எதிராக ஒன்று திரட்டியபொழுது காமராஜர் எவ்வித மாற்று வியூகமும் வகுக்காமல் போனதற்குக் காரணம் மிதமிஞ்சிய நம்பிக்கை மட்டுமல்ல; மாறுபட்ட கொள்கைகள் உள்ள கட்சிகளுடன் வெறும் தொகுதி உடன்பாடு செய்துகொள்வது ஒரு தவறான முன்மாதிரி என்றே அவர் கருதினார் (தேர்தல் சமயத்தில், “படுத்துக் கொண்டே ஜயிப்போம்” என்று காமராஜர் சொன்னது என்னவோ நிஜமே. அதற்கு அண்ணா, “படுக்கலாம் ஆனால் ஜெயிப்பது சந்தேகம்” என்று சொன்னதும் அதற்கு இணங்க காமராஜர் விபத்துக்குள்ளாகி கால் முறிவு ஏற்பட்டுப் படுக்கையிலேயே இருக்க நேரிட்டதுங்கூட நிஜமே. ஆனால் காமராஜர் ஒரு வழக்கமான தேர்தல் பிரசாரப் பேச்சாகத்தான் அவ்வாறு கூறினாரேயன்றி மிதமிஞ்சிய நம்பிக்கையினால் அல்ல. தேர்தலின்போது மக்களிடையே ஓர் அபிப்ராயத்தைத் தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் நாங்கள்தான் ஜயிப்போம் என்று சொல்வதுண்டு அல்லவா?)

அண்ணாவின் வியூகம் காங்கிரசுக்குப் பெருத்த சேதம் விளைவிக்கக்கூடும் என்கிற உளவுத்துறையின் முன்னெச்சரிக்கை உரிய தருணத்தில் வந்தும் காமராஜர் அதைப் பொருட்படுத்தவில்லை. அக்கால கட்டத்தில் அவர் வலதுசாரி கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட், ஃபார்வர்டு பிளாக் போன்ற கட்சிகளைத் தம்பக்கம் இழுத்து மாற்றுத் தொகுதி உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள முயற்சி எடுத்திருந்தால் 1967 தேர்தலில் காங்கிரஸ் அத்தனை மோசமாக வீழ்ச்சியடைந்திருக்காது.

எவ்விதக் கொள்கை அடிப்படையும் இன்றி பல்வேறு உதிரிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்துகொள்வதில் காமராஜருக்குச் சம்மதம் இல்லாமற் போனமைக்கு, பாரம்பரியமான தேசிய நலன் என்கிற தேசிய உணர்வின் பாற்பட்ட விழுமியங்கள் அவர் மனதில் ஆழப் பதிந்து விட்டிருந்ததுதான் காரணம் எனலாம்.

ஆகவே, காமராஜர் தேசிய உணர்வில் எந்த அளவுக்கு உறுதிப்பாட்டுடன் இருந்தார் என்பதற்கு மேலும் இரு சம்பவங்களைச் சொல்கிறேன்.

kamarajar21972-ல் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டு அவர் தனிக் கட்சி தொடங்கும் வேளையில் ராஜாஜி, காமராஜர், ஈ.வே.ரா. என அன்றைக்கு இருந்த எல்லாப் பெருந் தலைவர்களையும் சந்தித்து நடந்தவைகளைக் கூறித் தமக்கு ஆதரவு கோரினார். ராஜாஜி மனபூர்வமாக எம்.ஜி.ஆரை ஆசிர்வதித்தார். ஈ.வே.ரா.வோ, கருணாநிதி, எம்.ஜி.ஆர். இருவரும் சமரசமாகப் போய்விடுவதுதான் நல்லது என்றும் தான் வேண்டுமானாலும் கருணாநிதியிடம் பேசிப்பார்ப்பதாகவும் சொன்னார். ஆனால் எம்.ஜி.ஆர். தனித்து நிற்பதில் உறுதியாக இருந்தார். காமராஜரை எம்.ஜி.ஆர். சந்தித்துப் பேசியபொழுது காமராஜர் அமைதியாக எம்.ஜி.ஆர். சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாரேயன்றி எவ்விதக் கருத்தும் சொல்லவில்லை. அதன் பிறகு தமிழக அரசியலில் அண்ணா தி.மு.க. தோன்றி வளர்கையில் நிருபர்கள் அண்ணா தி.மு.க. குறித்து ஸ்தாபன காங்கிரசின் நிலைப்பாடு என்ன, தி.மு.க. இந்திரா காங்கிரசை எதிர்க்க அண்ணா தி.மு.க.வுடன் தொடர்பு வைத்துக் கொள்ளுமா என்றெல்லாம் கேட்டபோதுதான் காமராஜர் தமது மிகப் பிரபலமான, ‘தி.மு.க., அண்ணா தி.மு.க. இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்ற பொன்மொழியை உதிர்த்தார்.

அதன் பின்னர்தான் கோவையில் மக்களவைக்கும் அத்துடன் ஒரு சட்ட மன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தலும் புதுவை மாநில சட்டமன்றத் தேர்தலும் வந்தன. அண்ணா தி.மு.க., வலதுசாரி கம்யூனிஸ்ட் இரண்டும் ஒன்று சேர்ந்து தி.மு.க.-வை எதிர்க்க முன்வந்தன. காமராஜரோ இந்திரா காங்கிரஸுடன் கூட்டுசேர்ந்து தேர்தல்களைச் சந்திக்கும் முடிவை எடுத்தார். ஸ்தாபன காங்கிரஸின் வட மாநிலத் தலைவர்கள் காமராஜரின் முடிவுக்குக் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால் தமிழ்நாட்டின் சூழல் வித்தியாசமானது; அது பிற மாநிலத்தவருக்குப் புரியாது என்று சொல்லி அவர்களின் ஆட்சேபத்தைக் காமராஜர் புறந் தள்ளினார். திராவிடக் கட்சிகளின் செல்வாக்கு தமிழ்நாட்டில் வேரூன்றுவது மக்களிடையே தேசிய உணர்வை மங்கிவிடச் செய்யும் என்பதால் தமது சுயமரியாதையையும் விட்டுக் கொடுத்து இந்திரா காங்கிரசுடன் உறவு பூண்டார், காமராஜர். அதிகார துஷ்பிரயோகம் செய்யும் தி.மு.க.வுக்குப் பாடம் புகட்ட அண்ணா தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கலாகாதா என்று நிருபர்கள் கேட்டபொழுது காமராஜர் மீண்டும் தமது பிரசித்தி பெற்ற ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்கிற வார்த்தைப் பிரயோகத்தை உபயோகித்தார்.

காமராஜர் முதல்வராக இருந்தபொழுதுதான் மொழிவாரி மாநிலப் பிரிவினை நடைமுறைக்கு வந்தது. எல்லைகளை வகுப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டு அப்போதே மாநிலங்களுக்கிடையே மனஸ்தாபங்கள் தோன்றத் தொடங்கி விட்டன. தெற்கே தேவிகுளம், பீர்மேடு, குமுளி உள்ளிட்ட இடிக்கி மாவட்டம் முழுவதுமே தமிழர்கள் அன்று மிகுதியாக இருந்த போதிலும் திருவிதாங்கூர்-கொச்சி பிரதேசம் என்ற நிலவரத்தை மாற்றி, தமிழர்கள் மிகுதியாக உள்ள பகுதிகளையும் சேர்த்து, தமிழ்நாட்டுடன் இணைந்திருந்த மலபாரையும் சேர்த்து மலையாள மொழிக்கான கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. இவ்வாறு தமிழ்நாட்டின் தெற்கு எல்லை சுருங்குவதை எதிர்த்து தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் முன்னின்று மீட்புப் போராட்டம் தொடங்கினார். பலரும் அதனை ஆதரித்தனர்.

முல்லைப் பெரியாறு அணைத் தேக்கத்திற்கு நீர்வரத்து உள்ள தேவிகுளம் பீர்மேடு பகுதிகளாவது தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் தவறினால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் விவசாயத்திற்குப் போதிய பாசன வசதியின்றி சங்கடப்பட நேரிடும் என்றும் டாக்டர் பா.நடராஜன் உள்ளிட்ட பல பொருளாதார நிபுணர்கள் எடுத்துக் கூறியும், காமராஜரே தென்மாவட்டத்துக்காரராக இருந்த போதிலும் அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. குளமாவது மேடாவது என்றார். மேலும், “அவையிரண்டும் எங்கும் போய்விடவில்லை, இந்தியாவில்தான் உள்ளன,” என்றும் கூறினார்.

thelungana

காமராஜரின் உள்ளத்தில் தேசிய உணர்வு மிகவும் ஆழப் பதிந்து போயிருந்ததால்தான் அவையிரண்டும் இந்தியாவில்தான் உள்ளன என்று அவரைக் கூறவைத்தன. ஆனால் மொழிவாரி மாநிலப் பிரிவினையால் வெகு விரைவிலேயே எல்லா மாநிலங்களிலும் தேசியநலன் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மிதமிஞ்சிய மாநில அபிமானம் தலையெடுத்து, மாநிலங்களுக்கிடையே வெட்டுப் பழி குத்துப் பழி என்கிற அளவுக்குப் பரஸ்பர விரோத உணர்வு வலுத்துவிட்டது. பிற்காலத்தில் மாநிலங்களுக்கிடையே தேசிய நலனைப் பொருட்படுத்தாத அளவுக்கு மாநில வெறி தலைக்கேறிவிடும் என்று காமராஜர் சிறிதும் எதிர்பார்க்காததால்தான் தேவிகுளமும் பீர்மேடும் எங்கும் போய்விடவில்லை, இரண்டும் இந்தியாவில்தான் உள்ளன என்று அவரைச் சொல்ல வைத்தன. ஆனால் ராஜாஜி போன்றவர்கள், மொழிவழி மாநிலப் பிரிவினை காலப்போக்கில் தேசிய உணர்வுக்குப் பெரிதும் ஊறு செய்யும் என்று எச்சரித்தனர்.

ஹிந்துஸ்தானத்தை நிர்வாக வசதிக்காக வட்டாரவாரியாகப் பிரித்து அமைக்கலாம் என்று அவர்கள் மாற்று யோசனை கூறினர். மத்திய உள்துறை அமைச்சராக இருந்த தேசபக்தரும் மகத்தான தியாகியுமான கோவிந்த வல்லப பந்த் அந்த யோசனையை வரவேற்றார். தென்மாநிலங்களை இணைத்து தட்சிணப் பிரதேசம் என்ற பெயரில் ஒரு வட்டாரத்தை உருவாக்கிவிடலாம் என்றும் யோசனை வந்தது. திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை அறிந்திருந்த பந்த், வேண்டுமானால் அதை திராவிடஸ்தான் என்றே அழைக்கலாம் என்றார். ஆனால் குறுகிய மனம் கொண்ட மாநிலத் தலைவர்கள் இந்த யோசனைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மொழிவழி மாநிலம் அமைந்தால் மாநிலத் தலைவர்களின் செல்வாக்கு ஓங்கி தம்மைப் போன்றவர்களுக்கு அரசியலில் வாய்ப்பு இல்லாது போய்விடும் என்பதாலேயே ராஜாஜி தட்சிணப் பிரதேசம் என்ற யோசனையைக் கூறுகின்றார் என்று பழி கூறினர்.

மொழிவழி மாநிலம் அமைவது தேசிய உணர்வுக்கு ஊறு செய்யும் என்பதை உணர்ந்து தட்சிணப் பிரதேச யோசனைக்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டிய காமராஜர், அதற்கு மாறாகவே நடந்து கொண்டார். மொழிவழி மாநிலம் அமைப்பது விடுதலைக்கு முன்பே காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானம்தான் என்று சமாதானம் சொல்லிக்கொண்டார். என்னதான் இருந்தாலும் அவரும் ஓர் அரசியல்வாதிதான்; தட்சிணப் பிரதேசம் அமைந்தால் தம்மைப் போன்றவர்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று அவர் கருதியிருக்கக் கூடும்.

மாநிலங்கள் மொழிவழியில் அமைவதாலேயே அவற்றிடையே பூசல் ஏற்பட்டு விடும் என்றும் நாட்டில் தேசிய உணர்வு மங்கிவிடும் என்றும் காமராஜர் நினைக்கவில்லை. ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து, பின்விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்று கணக்கிட்டிருந்தால் ஒருவேளை காமராஜர் என்கிற தேசியவாதி தட்சிணப் பிரதேசத்திற்குத் தமது ஆதரவைத் தெரிவித்திருக்கக் கூடும்.

தேவிகுளம் பீர்மேடு கேரளத்துடன் சேர்க்கப்படுவதால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏதும் ஏற்பட்டுவிடாது என்ற காமராஜரின் எண்ணத்திற்கு மாறாக தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை விட்டுக்கொடுத்ததால் இன்று முல்லைப் பெரியாறு எவ்வளவு பெரிய தலையிடியாகிவிட்டிருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. தேவிகுளம் பீர்மேடு தமிழ்நாட்டில்தான் இருக்க வேண்டும் என்று காமராஜர் தன் செல்வாக்கைப் பயன்படுத்திச் செயல்பட்டிருந்தால் அவற்றோடு கூடவே மங்கலாபுரம் பகவதி காவும் தமிழ்நாட்டின் பகுதியாகி, தமிழர்கள் ஆண்டு தோறும் எவ்விதச் சிக்கலும் இன்றி அங்கு சென்று வழிபட்டுத் திரும்புவது சாத்தியமாகியிருக்கும்.

ஏனெனில் அந்த பகவதிதான் சிலப்பதிகாரக் கண்ணகியாவாள்.

25 Replies to “காமராஜர் என்கிற தேசியவாதி”

  1. மனதுக்கு மிக இதமாக இருந்தது. காமராஜரைப்பற்றி தெரியாத இன்றைய இளைய தலைமுறை அவர் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்தோ விலைபேசியோ பழக்கம் இல்லாதவர் என்பதை தெரிந்து கொள்ள இக்கட்டுரை உதவும். அவர் வலது கம்யூனிஸ்ட் பார்வர்டு பிளாக் போன்ற இயக்கங்களுடன் கூட்டணி கண்டிருந்தால் தமிழகத்தின் தலையெழுத்தே மாறி இருக்கும்.

  2. படுக்கலாம் அனால் ஜெயிப்பது நிஜம் அல்ல என்று சொன்னது மூதரிகார் ராஜாஜி. அண்ணா அல்ல. Please confirm

  3. நன்றி! அருமை! தேசீயத்திற்காகவே பாடுபட்ட தலைவர்களைப் பற்றி நாங்களெல்லாம் தெரிந்து கொள்ள இம்மாதிரி கட்டுரைகள் பெரிதும் உதவும்! நன்றி!

  4. நேர்மையான தலைவரான காமராஜர் இறக்கும் போது அவரது வேட்டியில் கொஞ்சம் சில்லரையும் .ஒன்றிரண்டு சுருட்டுக்களும்தான் இருந்தன என்று சொல்வார்கள்.
    ஒரு முறை தன் வீட்டுக்குச் சென்றிருந்த போது தனது வீட்டில் அன்னை தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அதற்கு மு்ன்பு அந்த வீட்டுக்கு குழாய் இணைப்பே கிடையாது. ஏன், அந்தத் தெருவுக்கே கிடையாது. காமராஜர் சம்மந்தப்பட்ட அதிகாரியைக் கேட்ட போது அவரது தாய் வயதான காலத்தில் கஷ்டப் படுவதால் குழாய் இணைப்பு கொடுத்ததாகக் கூறினார். காமராஜர் அவரை அத்தெருவில் உள்ள எல்லா வீடுகளுக்கும் அவ்வாறே இணைப்பு கொடுக்கப் பட்டுள்ளதா என்ற கேட்டார். அந்த அதிகாரி இல்லை என்று கூறினார்.
    கோபம் கொண்ட காமராஜர் மற்றவர்களுக்குக் கொடுக்காத வசதி தன் வீட்டுக்குக் கொடுக்கக் கூடாது என்று சொல்லி உடனடியாக அந்தக் குழாய் இணைப்பை துண்டிக்கச் சொன்னார்.
    இன்று இருக்கும் காங்கிரஸ்காரர்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.
    திமுக போன்ற கட்சிகளின் தலைவர்களை நினைத்தால்… குமட்டுகிறது!

  5. காமராஜரிடம் தேசியவாதி என்ற பண்பு உள்ளது போலவே அரசியல்வாதி என்ற பண்பும் இருந்ததால் தேசியவாதி காமராஜர் தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் எங்கே போக வேண்டும் என்பதில் கவலை படாத போதும் அரசியல்வாதி காமராஜர் மொழிவாரி மாகாண பிரிவினைக்கு ஒப்புக்கொண்டது வரலாற்றில் பெரும் பிழை. ஒரே துதிபாடலாக இல்லாது சரிசமமாக நிறை குறைகளை நேர்மையுடன் எழுதியமைக்கு நன்றி.

  6. காமராஜர் செய்த பெரிய தவறு இந்திராவை நம்பியது. கடைசி வரை அதற்காக வருந்தினார்.
    அதே போல் நேருவை காந்தி வளர்த்து விட்டது, கருணாநிதியை ராஜாஜி ஆசீர்வதித்தது.
    எட்டி மரத்துக்கு எவ்வளவு நீர் பாய்ச்சினாலும் அது என்ன இனிப்பான கனிகளையா கொடுக்கும்?

  7. கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் இன்று இருந்திருந்தால், இன்றைய தமிழக காங்கிரசாரின் பச்சோந்தித்தனமான அரசியலை பார்த்து மிகுந்த வேதனை அடைந்திருப்பார்! திமுக-விற்கு கூலி வேலை பார்க்கும் இன்றைய காங்கிரசார் ”காமராஜர் ஆட்சி” பற்றிப் பேசுவது, வெறும் கேலிக்கூத்து மட்டும்தான். தமிழக காங்கிரசார் செய்ய வேண்டிய ஒரே காரியம், தமிழக காங்கிரசை ஒட்டுமொத்தமாக பிஜேபி-யில் இணைப்பது தான். அது மட்டுமே, அவர்கள் காமராஜருக்கு செய்யக்கூடிய நன்றிக்கடனாக இருக்க முடியும். காமராஜர் புகழ் என்றென்றும் வாழ்வதாக! ஜெய் ஹிந்த்!

  8. Pingback: Indli.com
  9. மலர்மன்னன் அவர்கள் காமராஜ் அவர்கள் சொன்னவற்றை எழுதியிருப்பது கண்டு மகிழ்ச்சி. ஐயா சிலம்புச்செல்வர் ம.போ.சி. அவர்கள் வட எல்லைப் போராட்டம் நடத்திய போதும் காங்கிரஸ் அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை. தெற்கேல்லைப் போராட்டம் ஏற்கனவே நேசமணி போன்றோர் தலைமையில் நடந்த போதும் ஐயாவும் அதில் கலந்து கொண்டு போராடினார். ஆனால் தேவிகுளம் பீர்மேடு போராட்டத்தில் ஐயாவுக்கு எதிரான நிலையை பெருந்தலைவர் எடுத்தார். இன்னும் சொல்லப்போனால் அது தமிழருக்கு எதிரான நிலை. மலர்மன்னன் அவர்களே சொல்லியிருப்பது போல அந்தப் பகுதிகள்தான் முல்லைப்பெரியாரின் நீர் பிடிப்புப் பகுதிகள். இன்றைய பிரச்சினைகள் அன்றே முடிவுக்கு வந்திருக்கும், அவ்விரு பகுதிகளும் தமிழ் நாட்டுக்குக் கிடைத்திருந்தால். ஆனால் பெருந்தலைவர் கேரளா தலைவர்களுடன் பேசிவிட்டு ஐயா ம.போ.சி. அவர்களை அலட்சியப் படுத்தி விட்டார். யானைக்கும் அடி சறுக்கும். காமராஜருக்கும் சறுக்கியது.

  10. //படுக்கலாம் அனால் ஜெயிப்பது நிஜம் அல்ல என்று சொன்னது மூதரிகார் ராஜாஜி. அண்ணா அல்ல. Please confirm- Sri Muttal//

    ராஜாஜி, அண்ணா இருவருமே பதிலடி கொடுப்பதில் வல்லவர்கள். ராஜாஜி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதுபோல் பதிலிறுப்பார். ராஜாஜி படுக்க்கலாம் ஜயிக்க முடியாது என்று வெளிபப்படையாகவே சொன்னார். சிறிது நயமாக சந்தேகம் என்றார் அண்ணா.
    -மலர்மன்னன்

  11. கட்சியை வளர்க்க அவர் போட்ட K Plan என்ற திட்டத்தால் ( பதவியிலிருந்து மூத்த அமைச்சர்கள் விலகி,கட்சிப் பணிக்கு செல்வது) அவர் முதல் அமைச்சர் பதவியைத் தானாகத் துறந்தார்.
    அதுவே தீமுகாவுக்காக கதவைத் திறந்து விட்ட மாதிரி ஆகியது. ஏனெனில் அவருக்குப் பின் வந்த பக்தவத்சலம் அவர்கள் நல்ல நிறைவாகத் திறமை வாய்ந்தவரானாலும் மக்கள் தலைவராக இல்லை.சாதுர்யம் இல்லாதவராக இருந்தார்.எனவே ஹிந்தி பிரச்னை, அரிசிப் பிரச்னை என்றெல்லாம் கிளப்பி விட்டு திமுக மக்களை ஏமாற்றிவிட்டது. அன்று இருள் கவிந்தது. இன்னும் விடியவேயில்லை.

  12. எவ்வளவு கருத்து மாறுபாடுகள் இருந்த போதிலும் எதிரிகளையும் மதிக்கும் பண்பு பெருந்தலைவரிடம் உண்டு. ஒரு முறை திருப்பூர் வின்சென்ட் என்பவரோடு தனது திருமலைப் பிள்ளை சாலை வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது, உதவியாளர் வந்து ராஜாஜி உங்களைப் பார்க்க வருகிறார் என்று சொன்னார். உடனே தலைவர் அவசரமாக கீழே இறங்கிப்போய் போர்ட்டிகோவில் போய் நின்றார். அப்போது ராஜாஜி காரிலிருந்து இறங்க, இவர் அவரை அழைத்துக் கொண்டு போய் உள்ளே சிறிது நேரம் பேசினார். அப்போது ராஜாஜி சொன்னதை தலைவர் கேட்கவில்லை என்பது தெரிந்தது. ராஜாஜி திரும்பிச் சென்று காரில் ஏறும் வரை கூட இருந்து வழி அனுப்பிய பின் வின்சென்டிடம் பாவம், பெரியவர் ரொம்பதான் உடல் நலம் கேட்டு இளைத்து விட்டார் என்று நெடு நேரம் அவர் போன திசை நோக்கி பெருமூச்சு விட்டு நின்றிருந்தாராம். அதுதான் பண்பாடு.

  13. தீவிர தேசியத்தின் நிறைகள் குறைகள் இரண்டுமே காமராசரிடம் காணக்கிடைக்கிறது. தலைமை என்பது யாருக்கு எது தேவை என்று தெரிந்து தெளிந்து செய்யவேண்டும் என்ற கருத்து அவர் மனதில் ஆழமாய்ப் பதிந்திருந்ததால், தில்லியை எதிர்க்கச் சொல்லி பிற காங்கிரசார் கூறிய நியாயங்களையும் மறுத்து “குழந்தைக்கு எது வேணும்னு தாய்க்குத் தெரியாதான்னேன்” என்று பேச வைத்தது.

    சாத்வீகமாய்ப் பேசுவோரைப் பார்த்து “உனக்குத் தெரியாததா? முடியாதப்பா! மக்களைச் சமாதானம் செய்!” என்று கூறிய தில்லியார்கள், சொன்னதைச் செய்யாவிடில் கொல்வேன் இல்லையானால் சாவேன் என்று கிளம்புவோர்க்கு அடிபணிந்தனர். (எ.கா: காஷ்மீர், மொழிவாரி மாநிலங்கள்).

    இந்த உண்மையை மிகத் தாமதமாக உணர்ந்து கொண்டு வருந்தினார் காமராசர். செயல்வீரர் வாய்ச்சொல் வீரர்களிடம் வீழ்ந்தது பிழைமிகுந்த பிரச்சார வியூகத்தால். சினிமா மூலமும் பத்திரிக்கைகள் மூலமும் மக்களை எளிதில் கவர முடியும் காமராசரிடம் என்று வாதாடித் தோற்ற கண்ணதாசன் அவருக்கு நிலைமை புரியவில்லையே என்று வருந்தினார்.

    என் தந்தை ஒரு விஷயம் சொன்னார். நெல்லை ஜெபமணி என்றொரு தலைவர் ஒருமுறை தி.மு.க வினரின் மேடைப்பேச்சை எள்ளிப் பேசினாராம். ஒரு பத்தடிப் பாலம் கட்டிடுவான், பகட்டா ஒரு மேடை போட்டு கூட்டம் கூட்டி “இந்தப் பாலம் இக்கரையையும் அக்கரையையும் இணைப்பதற்காக கட்டப்பட்டிருக்கிறது. (பின்னே துண்டிக்கவா பாலம் கட்டுவான்!) இதிலே ஆடுகள் செல்லலாம், மாடுகள் செல்லலாம், மனிதர்கள் செல்லலாம், வாகனங்கள் செல்லலாம். (இவங்கள்ளாம் போக வரத்தானேய்யா பாலம் கட்றே.. சொல்லி வேற காட்றே!) இதைக் கட்ட அயராது பாடுபட்ட MLA அவர்களுக்கும், அவர் கேட்டதும் அனுமதியை வழங்கிய அமைச்சர் பெருமகனாருக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” (இது கடமை. இதச் செய்யத்தான் MLA, மந்திரி எல்லாம். பாராட்டு என்னத்துக்கு கொள்ளை போகுது.) அடைப்புக் குறிக்குள் தரப்பட்டிருப்பது ஜெபமணியாரின் கமெண்ட்.

    ஆனால் காமராசர் வைகை அணையைத் திறந்து வைத்துப் பேசியது வெகுசில சொற்களே. “வெவசாயத்துக்கு வேணுங்கிறப்ப தண்ணி விட்ரதுக்கு தான் இந்த அணைக்கட்டு கட்டிருக்கோம். பாத்து அடிச்சுகிறாம வெவசாயம் பண்ணுங்கய்யா”. இவ்வளவு தான் பேசினாராம்.
    இரண்டையும் ஒப்பிட்டு நெல்லை ஜெபமணி கிண்டல் செய்வாராம்.

    இப்படிப்பட்ட நல்லவர் ஏன் தோற்றார்?
    Business terminologyல் சொன்னால் Ignoring changes in operating environment caused his downfall. But doesn’t matter in which order the nice guys finish. They are nice guys, period.

  14. ஸ்ரீதரன்,
    எதைக்கொண்டு பக்தவத்சலம் திறமையான முதலவர் என்று முடிவெடுத்தீர்கள்? நீங்களே பட்டியலிட்ட அரிசி, இந்தி பிரச்சினகளாலா? MGR தலைமையிலான அதிமுக அரசின் போது தமிழகம் ஊரக மின்மயம் (rural electrification ), ஊரக சாலைகள் (rural roads ), ரேஷன் பொருட்கள் விநியோகம், விரிவுபடுத்திய மதிய உணவுத் திட்டம் போன்றவற்றில் நன்றாகவே செயல்பட்டன. (பட்டியல் பெரிது). ஆட்சியின் துவக்கத்தில் இருந்த நீள் மின்வெட்டு பின்னர் சீரடைந்தது. சட்டம் ஒழுங்கு, குறிப்பாக தருமபுரி, வட ஆற்காடு மாவட்டங்களில் தோன்றிய நக்சல் பிரச்சினை, கட்டுக்குள் வைக்கப்பட்டது. இப்பிரச்சினையில் பா ஜ க அரசுகளே திணறுகின்றன.

    .ஊழலற்ற ஆட்சி என்று கூறமுடியாவிட்டாலும் பக்தவத்சலம் ஆட்சியை விட பன்மடங்கு மேல். சொல்லப்போனால் 77 – 80 ஊழலில்லாத ஆட்சியத் தர முயற்சித்ததை சோ உட்பட பலர் பதிவு செய்துள்ளனர். மலர்மன்னன் அவர்களும் இதில் உடன்படக்கூடும் என்றே ஊகிக்கிறேன். சொல்லப்போனால் காமராஜர் போன்ற ஓரிருவரே அடை விட சிறப்பான ஆட்சியை தந்திருக்கக் கூடும். MGR ஆட்சியை இருண்ட காலம் என்பதை என்னால் ஏற்க இயலவில்லை.

    தனிப்பட்ட முறையிலும் MGR வளர்ப்பு உறவுகளைக் கொணரவோ கொடிகளைக் குவிக்கவோ இல்லை. அவரது சொத்துக்கள் அறக்கட்டளைகளுக்குப் போனது நாமறிவோம்.

    தி மு கழக அரசைப் பற்றி நான் எழுதவோ விவாதிக்கவோ ஏதுமில்லை. தமிழர்களின் ஊழ்வினை. என்று மீட்சியோ?

  15. வந்தால் வரட்டும் வராவிட்டால் போகட்டும் என்று காமராஜர் கொள்கைகள் இருந்ததை ஆசிரியர் நன்கு வெளிப்படுத்திஉள்ளா. காமராஜர் தாம் இருந்த போது நிலவிய அரசியல் சூழ்நிலையில், மாற்றுக் கட்சி மற்றும் கொள்கையினர், பொது நல எண்ணத்திலும், நாட்டுப்பற்று எண்ணத்திலுமே இருப்பார்கள் என்ற தன நம்பிக்கையின்மீது, அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். அரசியல் சதித் திட்டங்கள் நிறைவேறும் என்பதை அவர் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வினாற்போல் ஆனது. ஆனால், மீண்டும், தர்மம், சிலகாலம், எம்.ஜி.ஆர் உருவில் வென்றது. .

  16. சோ கருணாநிதியைக் கூடத்தான் சில முறையும், ஜெயலலிதாவைப் பல முறையும் புகழ்ந்துள்ளார். அதற்காக……………………….l

  17. அருண் பிரபு பதிவு செய்திருக்கும் கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரி. பொது ஜன தொடர்பு, விளம்பரம், மேடைப்பேச்சு, ஊடங்களை கையாளும் சாமர்த்தியம் இவற்றின் முக்கியத்துவத்தை உணராததுதான் அன்றைய காங்கிரஸ் ஆட்சியளர்களின் மிகப்பெரிய தவறு. பிறந்த நாள் அன்று பள்ளியில் படிக்கும் தன மகனோடு மாலை போட்டு மரியாதையை செய்ய வந்த தொண்டனை, ” நீ கட்சிக்காரன்; சரி எனக்கு மாலை போடா வர; இங்க உன் பையனுக்கு என்ன வேலை ஸ்கூலுக்கு போகாம?” இதை காமராஜர் அல்லது மொரார்ஜி மட்டுமே சொல்லியிருக்க முடியும்; திராவிட தலைவர்களால் நினைத்து பார்க்ககூட முடியாது.
    பக்தவத்சலம் ஒரு மிக சிறந்த நிர்வாகி என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்கலாம் ஆனால் அவர் ஒரு தீர்கதரிசி என்பதில் எல்லோருக்கும் ஒத்த கருத்து இருந்தே தீரும். 1967 தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருக்கும்போதே ‘தமிழகம் விஷ கிருமிகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது’ என்று அவர் சொன்னது அன்று பலராலும் விமர்சிக்கப்பட்டது. அவர் சொன்னதில் உள்ள உண்மை விளங்க 43 வருடங்கள் தேவைப்படிருகின்றன!

  18. சோ எவரெவரை எந்தெந்த பின்னணியில் புகழ்ந்தார் என்று பட்டியல்லிடுவது என் நோக்கமல்ல. பொதுவாக ஊழல் குற்றச் சாட்டுகளை பதிவு செய்வதில் துக்ளக் சமனான பார்வை கொண்டுள்ளது என்பதை எவரும் அறிவர். 77 -80 ஆட்சியில் MGR ஊழலை களைய முயற்சித்ததை துக்ளக் பதிவு செய்ததையே நான் குறிப்பிட்டேன். துக்ளக் கருணாநிதியையோ ஜெயலலிதாவோ,ஏன் காங்கிரசையோ ஊழலற்றவர்கள் என்று கூறியதில்லை. வேறு எவரும் MGR இன் 77 -80 ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு கூறினாலும் அறிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன். அதுமட்டுமில்லை பெருமபான்மை கருத்துக்குப் பயந்து creamy layer தொடர்பான வழக்கில் நீதிமன்றங்களும் தீர்பெழுதாமல் நாட்கடத்துகின்றன அல்லது தட்டிக்கழிக்கின்றன. இதை சட்டமாக்க முயற்சித்து தோல்வியுற்றார்.

    அரசு கொண்டு வரும் கல்வித்திட்டங்கள் போதிய பயனைத்தரவில்லை என்று உந்தப் கூறுகிறது. ஆர்வமிருப்பவர் தேடிப் பாருங்கள். MGR தனது இரண்டாம் ஆட்சிக்காலத்திலேயே (82 ?) தனியார் பள்ளிகளை சற்று முன்னரே கொண்டு வந்தார். அதன் பயன் இன்று தமிழகத்தில் ஆண்டு தோறும் 1 .2 இலட்சம் மாணவர்கள் பொறியியலில் சேர்கிறார்கள். இது பற்றி விரிவாக எழுத ஆசை.

    சரி MGR பட்டியல் போதும் பக்தவட்சத்திற்கு வருவோம். அவர் நாட்களில் அவரது செல்ல பெயர் பத்து லட்சம் முதலை. மிகக் கடுமையான அரிசிப் பஞ்சத்திற்கு அவரது நிர்வாகத்திறமை அளித்த விடை எலிக்கறி. இந்த பிரச்சினை கிளப்பியது திமுக அல்ல; காய்ந்த வயிறுகள் தாம். திமுக இதை நன்கு காசாக்கியது. இந்திப் பிரச்சினையை மைய அரசு தலையிட்டுத் தீர்த்தது. அந்தப் பிரச்சினை பற்றி ஏற்கனவே பேசியாகிவிட்டது. இங்கு பக்தவத்சலத்தின் திறமைச் சான்றாகக் குறிப்பிட்டேன்.

    குருஜி விவேகானந்தர் நினைவிடத்தை கட்ட முயற்சித்ததை எதிர்த்த முதல்வர்களில் முதல்வர் இந்தப் புண்ணியவான். பின்னர் நாடாளுமன்றம் வாயிலாக எடுத்த முயற்சியினால் வாயடங்கிப் போனவர். அதைத்தான் திறமை என்கிறீர்களா?

    விவேகானந்தர் பாறைக்குப் படகு விடுவதில் பிரச்சினை வந்த போது தலையிட்டு, படகுச் சேவையை ஏற்றது MGR அரசு.

  19. தூத்துக்குடியில் இருந்து சில கல்லூரி மாணவர்கள், திருநெல்வேலிக்கு வந்திருந்த முதலமைச்சரை (பெருந்தலைவரை) பார்ப்பதற்காக, சென்றிருந்தனர். கல்லூரி மாணவர்கள் வந்திருக்கின்றனர் என்பதை அறிந்த கர்மவீரர், உடனடியாக அறையை விட்டு வெளியே வந்து மாணவர்களை சந்தித்தார். அவரைக் கண்ட மாணவர்களில் சிலர், அவர் காலில் விழுந்து வணங்கினர். அதற்கு அவர் சொன்ன கடிந்துரை ” என் கால்ல விழுறதுக்கு பதிலா, ஒங்கள பெத்தவங்க கால்ல விழுங்க, படிப்பும் புத்தியும் வளரும்”.

    அதன்பின் என்ன காரணத்திற்காக என்னை பார்க்க வந்தீர்கள் என்று கேட்டார். சும்மாதான், ஒங்கள பாக்கனும்கிரதுக்காகவே வந்தோம் என்றார்கள் மாணவர்கள். அதற்கு அவர் சொன்ன பதில் ” ஒங்க படிப்புக்காக ஏதாவது உதவி வேணும்னு வந்திருந்தா கூட பரவாயில்ல. ஒங்க தாய், தகப்பன் கஷ்டப் பட்டு படிக்க வைக்கிறாங்க. நீங்க என்னடான்னா காச கரியாக்கி, ஊர் விட்டு ஊர் வந்து, என்ன பாக்க வந்தேன்னு சொல்றீங்க. படிக்கிற காலத்தில ஒங்களுக்கு அரசியல் தேவையில்ல. ஒழுங்கா ஊர் பொய் சேர்ந்து நல்லா படிச்சு ஒங்க பெத்தவங்கள காப்பாத்துங்க.ஒங்க ஊருக்கு நல்லது செய்யுங்க”

    மாணவர்களை அரசியலுக்கு இழுத்து, அவர்களை பலிகடாவாக்கி, அவர்களின் ஆதரவில் குளிர் காய்ந்து, தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் அரசியல் வியாதிகளின் இடையே, மாணவர்களின் எதிர்காலம் அரசியலால் பாழாவதை விரும்பாத ஒரு உண்மையான மக்கள் தலைவர் இதே தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்தார் என்பதை இக்கால மாணவர்கள் அறிந்தால் வியப்படைவார்கள்.

  20. காமராஜருக்குப் செயற்கையாகப் பேச வரவில்லை
    வீர வசனம் பேசுவது அவருக்குத் தெரியவில்லை.
    திமுகவினர் பேசியது அப்போது புதியதாக இருந்ததால் மக்கள் அவர்கள் பின் ஓடினர்.

    அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு
    ரூபாய்க்கு ஒரு படி படிப்படியாக மூன்று படி
    வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது
    தட்டினால் தங்கம் வரும் வெட்டினால் வெள்ளி வரும்
    உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு.
    இந்த மாதிரி பல வெட்டி வசனங்களைப் பேசி ஏமாற்றி நன்கு கொழுத்தனர்.

  21. நான் மலர்மன்னனின் ரசிகன்தான். இருந்தாலும் பதிவில் தவறு வந்துவிடக்கூடாது என்பதற்காக இதை எழுதுகிறேன். `படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்` என்று காமராஜர் சொல்லவில்லை.அந்த வாக்கியம் ஒரு திராவிட மாயை.
    அன்புடன்
    சுப்பு

  22. மத்திய அரசு மொழிவாரி மாநிலங்களை ஐம்பத்தாறாம் ஆண்டு உருவாக்கியபோது, அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சியை மனதில் கொண்டு, மாநில மொழிகளில் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை மாநில மொழிகளில் மலிவு விலையில் வெளியிடுவதற்காக ஆண்டு தோறும் மான்யம் அளித்து நிதிஉதவி செய்தது. இந்த நிதியினை வருடம் முழுவதும் சரிவர பயன் படுத்தாமல் வைத்திருந்துவிட்டு, மார்ச்சு முப்பத்தொன்றாம் நாள் முடிந்தவுடன் , திருப்பி மத்திய அரசுக்கே அனுப்பிய புண்ணியவான்கள் கழக அரசுகள் தான். இவர்களுக்கு உண்மையில் தமிழ் மீது எள்ளளவும் அக்கறை இல்லை.

    நவோதயா வித்யோதயா என்ற சிறப்பு பள்ளிகளை, ஒரு மாவட்டத்திற்கு ஒன்று என்ற கணக்கில்
    மத்திய அரசின் முழு நிதி உதவியுடன், ஒரு பள்ளிக்கு ரூபாய் இரண்டு கோடி ( 1989 ஆம் ஆண்டு )வழங்கியபோது, நவோதயா பள்ளி வந்தால் இந்தி அரக்கி உள்ளே வந்துவிடுவாள் என்று சட்ட சபையில் அந்நாள் கல்வி அமைச்சர் பேசி வந்த முன்னேற்றத்தை தடுத்துவிட்டனர். ஆனால் அப்போது ஆந்திர முதல்வராக இருந்த காலஞ்சென்ற என் டி ராமாராவ் அவர்கள், தன்னுடைய எதிர்க்கட்சி என்றும் பார்க்காமல் , அந்நாள் பிரதமர் ராஜீவ் காந்தியை பட்டாடை மற்றும் சந்தன மாலையுடன் சென்று சந்தித்து, தமிழகம் வேண்டாம் என்று சொல்லிவிட்ட இந்த பணத்தை எண்கள் மாநிலத்திற்கு கொடுங்கள் என்று கேட்டு பெற்றார் என்பது வரலாறு. நம் மாநில மக்கள் மீது தி மு க வுக்கு எப்போதும் அக்கறை கிடையாது. பதவி ஆசைக்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வர்.

    கல்லூரிகளிலும் தமிழை பாடமொழியாக்கி அதற்க்கு தேவையான பாடநூல்கள் வெளியிட்டது, திரு சி. சுப்பிரமணியம் கல்வி அமைச்சராக இருந்த காங்கிரஸ் அரசே ஆகும். ஆனால் அந்த கால காங்கிரஸ் காரர்களுக்கு மக்களிடம் எதனையும் எடுத்து சொல்ல தெரியவில்லை என்பதும் உண்மையே ஆகும்.

    இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் மாநில மக்களின் மொழி உணர்ச்சியை தூண்டிவிட்டு கழகம் ஆட்சியை பிடித்ததாக பலர் தவறாக நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால், எம் ஆர் ராதா அவர்கள் எம் ஜி ஆரை தேர்தல் சமயத்தில் சுட்டதாலேயே கழகம் ஆட்சிக்கட்டில் ஏறியது. அரிசி பிரச்சினையும் அதனுடன் சேர்ந்தது. அரசியலில் இரு துருவங்களாக இருந்தவர்களை இணைத்து அண்ணா அமைத்த கொள்கை கூட்டணி என்ற மோசடியில் தமிழன் ஏமாந்தான். அவ்வளவுதான்.

  23. பிரமாதம் பிரதாப்!
    உள்ள கல்விக்கே இந்தி படிக்கச் சொன்ன காங்கிரஸ் உயர் கல்விக்குத் தமிழ் வழி கொண்டுவந்ததா? நெடுஞ்செழியன் 1967 ல் கல்வி அமைச்சர் ஆனா பிறகு தமிழ் நாட்டு பாட நூல் நிறுவனம் தமிழ் வழி கல்விக்காக மொழிபெயர்ப்புப் பணிகளைத் துவக்கினார். 1973 ல் முதல் பதிப்பு வந்தது. என்னிடம் தென்னிந்திய வரலாறு (KAN ) உள்ளது. அது 1979 ல் வெளியிடப்பட்ட இரண்டாம் பதிப்பு. அப்போதைய கல்வி அமைச்சர் அரங்கநாயகம் அணிந்துரையுடன். கலை, வணிகம், அறிவியல் பாடத் திட்டங்கள் முழுமை பெற்று கல்வி அம்மாணவர்கட்கு உதவித் தொகையும் கிடைத்தது. வேலை தான் கிடைக்கவில்லை. பொறியியல் பனி முற்றுப் பெறவில்லை. ஆனால் மொழி பெயர்ப்பு செம்மையானது.
    CS 1962 லேயே பாராளுமன்றம் சென்றுவிட்டார்.
    உயர் கல்வியை தமிழிலோ வேறு இந்திய மொழியிலோ பயில்வதில் எனக்கு உடன்பாடில்லை.
    ஆனால் தவறான தகவல்களை தெரிவித்தமைக்காக இம்மறுப்பு.

    தமிழன் ஏமாந்தான் என்று தி மு க தலைவர் போல் ஏசுகிறீர்கள். காரணிகளை ஆராய சில நொடிகள் ஒதுக்கலாம்.

  24. காமராஜர் தமிழக மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். தான் செய்த பணிகளை நினைத்து நி ச்சயம் அவர்கள் தனக்குத்தான் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தமிழக அரசியல் என்றும் காங்கிரசாரின் கையில் தான் இருக்கும் தமிழக காங்கிரசார் டெல்லியில் அதிகாரம் செலுத்துவார்கள் அப்போது கேரளம், ஆந்திரம் கர்நாடகம் எந்த மாநிலமும் எதுவும் செய்ய முடியாது, தேவிகுளமும் பீர் மேடும், கோலார் தங்கவயலும் எங்கு இருந்தாலும் தமிழர்கள் டெல்லியில் அதிகாரத்தை தங்கள் வசம் வைத்து இருப்பதால் யாரும் எதுவும் செய்ய முடிய £து என்ற நம்பிக்கையில் மற்ற மாநிலங்களில் நமது ப குதிகள் இருப்பதைப்பற்றி கவலைப்படவில்லை. ஆனால் 1967ல் தமிழர்கள் திருடர்கள் முன்னேற்றக்கழகத்தின் பே £லி தமிழ்ப்பற்று, எம்.ஜியாரின் கவர்ச்சி, ராஜகோபாலாச்ச £ரியாரின் தி.முக கூட்டணி, தினத்தந்தியின் செய்தி வீச்சு போன்ற பல்வேறு காரணிகளால் காங்கிரசை புறக்கணித்து தொடர்ந்து தீரா விட கட்சிகளுக்கு ஓட்டளித்து தொடர்ந்து டெல்லியில் தமிழக காங்கிரசாருக்கு மரியாதை இல்லாமல் செய்து விட்டனர். டெல்லி காங்கிரசாரும் தமிழகத்தில் என்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது. அங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் டெல்லியில் நம்மை ஆதரித்துத்தான் ஆகவேண்டும். ஆனால் கர்நாடகத்திலும் கேரளத்திலும் தங்கள் கட்சியினர் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கலாம் என்ற எண்ணத்தில் டெல்லி எப்போதுமே அந்த ம £நிலங்களை ஆதரித்து வருகிறது. தமிழகத்தை தொடர் ந்து புறக்கணித்து வருகிறது. டெல்லியில் காமராஜர், மூப்பனார் காலத்துக்குப்பிறகு தமிழர்களின் தலைமை இல்லை. அதிகாரிகள் மட்டத்திலும் தமிழர்கள் புற ந்தள்ளப்பட்டு கேரளத்தவர்களின் ஆதிக்கம் வந்தது. க £மராஜரின் தன்னம்பிக்கைதான் காரணம் என்று நினை க்கிறேன். பிரிதொரு சமயத்தில் விரிவாக பேசலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *