ஒபாமாவின் வாக்குறுதிகளும், நடைமுறை நிலையும் – ஒரு பார்வை

November 11, 2010
By

எதிர்பார்த்ததைப் போலவே ஒபாமாவின் இந்தியப் பயணம் புயல் அடித்து ஓய்ந்தது போல இருக்கிறது. இதற்கு முன் கிளிண்டன் வந்து விட்டு போன போது நடந்த கூத்துகள் நினைவுக்கு வருகிறது. கிளிண்டன் மாம்பழங்களை விரும்பி சாப்பிட்டார்… டப்பா வாலாக்களுடன் அளவளாவினார்… என்று மீடியா எங்கும் கிளிண்டன் புகழ் மழை போல பெய்தது. இதற்கெல்லாம் உச்சமாக பாராளுமன்றத்தில் கிளிண்டன் உரை ஆற்ற வந்த போது எம்பிக்கள் எல்லாம் ஆட்டோகிராப் வாங்க அடித்து பிடித்து முண்டியதில் தள்ளுமுள்ளு ஆகிப் போனது. நல்ல வேளை இந்த முறை அமெரிக்க ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வரும்போது யாரும் பாய்ந்து சென்று ஆட்டோகிராப் வாங்கக் கூடாது என்று எல்லா கட்சிகளுக்கும் சர்குலர் அனுப்பினார்கள். ஆனால் மன்மோகன் சிங் மட்டும் அரசு மரபு இல்லாத போதும் ஏர்போர்ட்டுக்கே நேரில் போய் வரவேற்ற போது ஆட்டோகிராப் வாங்கி இருக்கக் கூடும்.

barack_obama2

ஒபாமா வந்தார். இந்தியாவை புகழ்ந்தார். காந்தியை புகழ்ந்தார். இந்திய ஜனநாயகத்தை பாராட்டினார். அவரே புகழ்ந்து விட்டாரே என்று மெய் மறந்து போனார்கள் மீடியாவும் அரசியல் வாதிகளும். வளைத்து வளைத்து ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட்டார்கள். அமெரிக்க இடைத்தேர்தல் சமயத்தில் நெருக்கடியில் இருந்த ஒபாமா இந்தியா பயணத்தை ஒரு நல்ல வாய்ப்பாக பயன் படுத்திக் கொண்டார். அமெரிக்காவுக்கு வணிக வாய்ப்புகள் பல ஒப்பந்தங்களாக கையெழுத்தாகின. இந்தியாவுக்கு சில உறுதி மொழிகள் தரப்பட்டது. முக்கியமாக இந்திய ராணுவத்துக்கு நானூறு கோடி டாலர் மதிப்பிலான விமானங்கள் அமெரிக்காவிடம் வாங்குவது, மேலும் சுமார் முப்பது போக்குவரத்து விமானங்கள் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு வியாபாரம் (ஆம், ஆக்டோபஸ் குடும்பம் சம்பந்தப் படாமல் எந்த வணிகமும் முடியாது), மேலும் ஐநூறு கோடி டாலர் மதிப்பில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் வியாபாரம் என்று வியாபார ஒப்பந்தங்கள் முடிந்தன. இதனால் ஐம்பதாயிரம் அமெரிக்கருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று ஊரில் போய் சொல்லுவேன் என்று மகிழ்ச்சியாக ஒபாமா கூறினார்.

அதெல்லாம் சரி, இந்தியாவுக்கு என்னென்ன லாப நட்டங்கள் என்று பார்த்தால், இராஜ தந்திர லாபங்களே பெரிதாக நிற்கிறது. முக்கியமாக சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மத்தியில் இந்தியாவின் உறவை பலப்படுத்திக் கொள்ள அமேரிக்கா முனைந்திருப்பது, எரிசக்தி துறையில் அமெரிக்க ஒத்துழைப்பு, ஐநா பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினராக அமெரிக்க உதவி, தீவிரவாத ஒழிப்பில் ஒத்துழைப்பு ஆகியவற்றைச் சொல்லலாம். பொருளாதார அடிப்படையில் பார்த்தால் இந்தியாவுடன் இணைத்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி தொகுப்பை உருவாக்குகிற ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் நன்மை தான்.

sushma1

வெளிநாட்டு முதலீடுகளுக்கான தடையை நீக்கி இந்திய சந்தைகளை திறந்து விடவேண்டும் என்ற எண்ணத்துடன் அதையே கோரிக்கையாகவும் வைத்த ஒபாமாவிடம் நமது நாட்டின் சார்பில் சில மிக முக்கியமான கோரிக்கைகளை அழுத்தமாக பதிவு செய்தவர் எதிர்க்கட்சி தலைவரான பிஜேபியின் சுஷ்மா சுவராஜ்!

(1) தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கும் நாடுகள் அமெரிக்காவும் இந்தியாவும். இந்த நிலையில் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் நாடு பாகிஸ்தான் என்பதை அமெரிக்கா உணரவேண்டும்,
(2) பாகிஸ்தான் மிகவும் விரும்பப் படும் நாடு (Most Favoured Nation) என்பன போன்று அவ்வப் போது அமெரிக்கத் தரப்பிலிருந்து பாகிஸ்தானை மகிழ்விக்க சொறியப் படும் புகழாரங்கள், பாகிஸ்தான் தான் உண்மையில் அமெரிக்காவின் நேச நாடு, இந்தியா அமெரிக்க வணிகத்துக்கான சந்தை மட்டுமே என்ற எண்ணம் தோன்றுமாறு அமைந்து விடுகிறது. இது தவிர்க்கப் படவேண்டும்.
(3) உலக வரலாற்றில் கொடியதான போபால் விஷவாயு துயர சம்பவத்தில் விரைந்து நீதி காணப் படவேண்டும். BP oil விபத்தில் முடிவெடுத்தது போல நியாயம் வழங்க அமெரிக்க அரசு முனைய வேண்டும்.
(4) அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியப் பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பு நிதிப் பறிப்பு குறித்து முடிவு காணப் படவேண்டும். அவுட்சோர்சிங் துறையில் அமெரிக்க நிறுவனங்களே லாபம் ஈட்டுகின்றன. அதனால் அமெரிக்க பொருளாதாரம் போட்டி நிறைந்து ஆரோக்கியமாகவே விளங்குகிறது. இது இரு நாடுகளுக்குமே நன்மை தருவதாகவே உள்ளது.
(5) இதற்கெல்லாம் மேலாக சீனா தெற்காசியாவில் எந்த பிரச்சனையிலும் தலையிடக் கூடாது. அப்படி ஒரு கருத்து எழ அமெரிக்கா இடம் கொடுக்கக் கூடாது.

இவ்வாறு அமெரிக்க அதிபரிடம் தெரிவித்தார் சுஷ்மா . இதில் போபால் விஷ வாயு கசிவு சம்பவத்தில் நிவாரணம் குறித்தெல்லாம் பிரதமரோ, ஆளும் கட்சியில் வேறு சிலரோ மூச்சு விட்டதாகவே தெரியவில்லை. இதில் இன்னொரு வியப்புக்குரிய சம்பவம் என்னவென்றால் ஒபாமாவுக்கு பிரதமர் அளித்த விருந்தில் சுமார் இருபத்தி ஐந்து வி.ஐ.பிக்கள் கலந்து கொண்டனர். சாதாரண எம்பியாக இருந்த போதும், ஒபாமாவுக்கு பக்கத்தில் ராகுல் அமர்ந்தார். இந்த விருந்தில் அழைக்கப் படாத வி.ஐ.பி – சுஷ்மா சுவராஜ்! இத்தனைக்கும் இது ஒன்றும் தனிப்பட்ட விருந்து அல்ல – மக்களின் வரிப்பணத்தில் நடத்தப் படுகிற அரசுமுறை விருந்து தான். அத்தகைய விருந்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு அழைப்பு இல்லை.

அமெரிக்க அதிபர் உறுதி அளித்த அளவு நமக்கு இராஜ தந்திர ரீதியில் முக்கியமாக தீவிரவாதம் தொடர்பாக அமெரிக்காவின் ஒத்துழைப்பு கிடைக்குமா என்பது சற்று சந்தேகத்துக்கு உரியது தான். ஆப்கானிஸ்தானில் லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புகள் இருத்தி வைக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்து, தளவாடப் பொருட்கள் கிடைப்பது பாகிஸ்தானின் தயவில் தான் இருக்கிறது. சென்ற ஆண்டு ஒரு முறை இந்த பொருட்கள் வரத்தில் தடை ஏற்பட அமெரிக்க ராணுவம் தவித்து போனது. அப்போது அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்றும் சுட்டு வீழ்த்தப் பட்டது.

இவற்றை நிகழ்த்தியது தாலிபான் என்று சொல்லப் பட்டாலும் பாகிஸ்தானிய ராணுவம் சம்பந்தப் பட்டிருக்கும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில் அமேரிக்கா பாகிஸ்தானை மட்டம் தட்டி எரிச்சலுக்குள்ளாக்க முனையாது. சில வாரங்கள் முன்புதான் பாகிஸ்தானுக்கு நூறு கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலர் பணம் தாரை வார்க்கப் பட்டது. ஆகையால் வரும் நாட்களில் பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவில் பெரிதும் மாற்றம் இருக்க வாய்ப்பு குறைவு.

இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில், இந்தியாவுடனான நெருக்கத்துக்கு முக்கிய நோக்கம் வியாபாரம். வால்மார்ட் போன்ற நுகர்பொருள் வியாபார நிறுவனங்கள் இந்திய சந்தைக்குள் நுழைய துடித்துக் கொண்டிருக்கின்றன. ஒபாமாவும் இதை அடிப்படையாகக் கொண்டே இந்திய சந்தைகளை திறந்து விடவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இந்தியாவிடமிருந்து அமெரிக்கா வியாபார ரீதியில் லாபம் பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இந்தியா இதை தன் பலமாக கொண்டு, நமது நன்மைக்கான நோக்கங்களையும் அமெரிக்கா போன்ற நாடுகளுடனான ஒப்பந்தங்களில் முன்னெடுத்து வைப்பதே நமது எதிர்கால அரசியலாக இருக்க வேண்டும்.

obama_manmohan

வியாபாரம் தவிர்த்து வேறு என்ன காரணம் இருக்கக் கூடும்? அமெரிக்காவுக்கு போட்டியாக வல்லரசாக உருவெடுக்கும் சீன வளர்ச்சியே முக்கியமான காரணமாக தெரிகிறது. ஒரு வேளை சீனாவுடன் அமெரிக்க உறவில் கசப்பு ஏற்பட்டால் அந்த நேரத்தில் இந்தியா முக்கியத்துவம் பெறும். உலகின் இந்த பகுதியில் சீனாவுக்கு எதிரான மக்கள் சக்தி, பொருளாதாரம், ராணுவம் ஆகிய எல்லா விதத்திலும் சவாலாக இந்தியா அமைவதற்குரிய முகாந்திரம் இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு தான் “எழுந்து விட்ட நாடு” என்றெல்லாம் ஒபாமா புகழ்ந்து விட்டு போயிருக்கிறார். ஆனால் இதில் நாம் மகிழ்ந்து மெய் மறக்க எதுவும் இல்லை. இன்னமும் வளர்ச்சி அடைந்த உலக நாடுகளின் ஆசியப் பார்வை சீனாவைச் சுற்றியே அமைகிறது. சீனாவின் செயல்பாட்டைப் பொறுத்தே ஆசியாவில் அந்நாடுகளின் செயல்பாடுகளும் அமைகின்றன. இந்தியா முக்கியம் என்றாலும் சீனாவே முன்னணி.

ஐநா பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் நீண்டநாள் ஆசைக்கு தீனி போட்டுவிட்டு போயிருக்கிறார் ஒபாமா. இன்றைய நிலையில் இது வெறும் வாக்குறுதி மட்டுமே. ஒபாமாவே கூட அயலுறவில் இந்தியாவின் தயக்கங்களை குறித்து சிறு அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார். உதாரணமாக ஈரானின் பயங்கரவாதப் போக்கை கண்டிக்க துணிவதில்லை, மியான்மாரில் ஜனநாயக ஆட்சி உண்டாக முயற்சி எதுவும் எடுக்கவில்லை என்பனவற்றை குறிப்பிட்டிருக்கிறார். இந்தியா அயலுரவுகளில் துணிச்சலும் தன்னம்பிக்கையும் காட்டவேண்டும் என்பதே உட்கருத்து.

இந்தியா ஐநா பாதுகாப்புக் குழுவில் இடம் பெறும் முயற்சியில் அமேரிக்கா மட்டும் அல்லாது ஏனைய மற்ற நாடுகளின் ஒத்துழைப்பும், நீண்டதொரு கால அவகாசமும் தேவை. அது மட்டும் அல்லாது உலகில் முக்கியமான ஒரு பதவியைப் பிடிக்க இந்தியா தயாராகி விட்டதா என்றும் யோசிக்க வேண்டும். ஊழல், ஏழ்மை, படிப்பறிவின்மை, பொறுப்பற்ற சமூகம், ஊழல் மிகுந்த நிர்வாகத் திறன் குறைந்த அரசு என்று நமக்கு நிறைய பிரச்சனைகள். தொழில் முன்னேற்றம், கட்டுமான வசதி எல்லாவற்றிலும் சீனாவை விட மிகவும் பின்தங்கியே இருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம்.

அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளின் மத்தியில் புழங்க நாம் பலவகைகளில் நமது அரசியல், சமூக மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். வெளியுறவைப் பொறுத்த வரை நமது நலனை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவு கொள்கை, அதை எடுத்து செல்ல சர்வதேச அளவில் இந்திய அமைப்புகள், முக்கியமாக இதனை வழிநடத்த துணிவு மிகுந்த தலைமை எல்லாம் தேவை. இப்போது உள்நாட்டு பிரச்சனைகளை சமாளிக்கவே முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் போது, வளர்ந்த நாடுகளின் தோளுடன் தோள் உரச, இப்போதிலிருந்து முயன்றாலே பல பத்தாண்டுகள் ஆகும். ஒபாமாவின் இந்த பயணத்தினால் நமது முக்கியத்துவத்தை நாமே உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டிய சூழல் புரியவருகிறது.

Tags: , , , , , , , , , , , ,

 

9 மறுமொழிகள் ஒபாமாவின் வாக்குறுதிகளும், நடைமுறை நிலையும் – ஒரு பார்வை

 1. Indli.com on November 11, 2010 at 9:52 am

  ஒபாமாவின் வாக்குறுதிகளும், நடைமுறை நிலையும் – ஒரு பார்வை…

  ஒபாமா வந்தார். இந்தியாவை புகழ்ந்தார். காந்தியை புகழ்ந்தார். இந்திய ஜனநாயகத்தை பாராட்டினார். …

 2. Rishi on November 11, 2010 at 7:57 pm

  விட்டால் நமது பிரதமர் அமெரிக்காவின் ஐம்பத்து ஒன்றாவது மாநிலமாக பாரதத்தை அவரே அறிவித்து விடுவார் என்று மிக நாட்களாக எனக்கு ஒரு ஐயம் உண்டு!

 3. R.Sridharan on November 11, 2010 at 8:29 pm

  அன்று ஒரு காந்தியை நம்பி ஹிந்துக்கள் இந்த நிலை அடைந்தனர்
  இன்று ஒரு ( சோனியா) காந்தியை நம்பி என்ன ஆகிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கிறோம்.
  ஒபாமாவுக்கென்ன, காசா பணமா காந்தியைப் பற்றிப் புகழ்ந்து விட்டுப் போய் விட்டார்.
  ஒரு மாணவர் ‘காந்தியைப் பற்றி உயர்வாகப் பேசுகிறீர்களே,அவரது கொள்கைகளை எவ்வாறு அமெரிக்காவில் நடைமுறைப் படுத்த முடியும் ?’ என்று கேட்டதும் ஆடிப் போய் விட்டார்!
  காங்கிரசின் ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் பற்றி கொஞ்சம் அசோக் சவானைக் கேட்டிருந்தால் காந்தியின் கொள்கைகளை எப்படி காங்கிரஸ் பின்பற்றுகிறது என்று தெரிந்து கொண்டிருப்பார்.

 4. R.Sridharan on November 12, 2010 at 3:53 am

  பாகிஸ்தான் ஒரு நிலையான, வளமான நாடக இருப்பது இந்தியாவுக்கு நல்லதாம், அதற்காக நாம் முயல வேண்டுமாம்
  இது ஒபாமா வாயிலிருந்து வந்த முத்து !
  அதாவது பாம்புக்குப் பாலை வார்த்து படுக்கையிலும் விட்டுக் கொள்ளச் சொல்கிறார்
  இன்னும் தெம்பாக பாகிஸ்தான் பல மும்பை பயங்கரவாதங்களை அரங்கேற்ற வழி சொல்கிறார்.
  ஒரு அமெரிக்கர் பயங்கர வாதிகளால் கொல்லப் பட்டாலும் அமெரிக்கா சும்மா இருக்காது. அந்த நாட்டின் மீது போர் தொடுக்கும்.
  அனால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இதுவரை தீவிரவாதத்துக்குப் பலி ஆகி இருந்தாலும் பரவாயில்லை.
  நாம் மானம் கெட்ட தனமாகப் பாகிஸ்தானை பேச்சு வார்த்தைக்கு கெஞ்ச வேண்டும்.
  இவர்கள் வியட்நாமையும், ஆப்கானிஸ்தானையும் , ஈராக்கையும் எப்படி குண்டு மழை பொழிந்து ‘ வளமான’ நாடுகளாக ஆகினார்கள் என்று நாம் பார்த்தோம்.
  வேறு எந்த நாட்டிலாவது போய் இந்த மாதிரி அலட்சியமாகப் பேச முடியுமா?
  வெட்கம் கெட்ட பிரதமந்திரி, காங்கிரஸ் என்ற ஒரு கட்சி.

 5. Kumudan on November 12, 2010 at 12:07 pm

  Obama is slowly losing his credentials in his home country. His Asian tour is only to escape the embarrassment of his party losing in elections. His dangling of UNSC carrot is useless now as there is hardly any value for UNSC in these days. The great Nehru refused the UNSC seat way back in 1955 and instead proposed China.

 6. அருண்பிரபு on November 13, 2010 at 3:21 pm

  ஓபாமாவுக்கு பாகிஸ்தான் மீது ஒரு மென் மூலை (soft corner) உண்டு. அவர் படிக்கிற காலத்தில் பாகிஸ்தானில் பல நாட்கள் விடுமுறையில் நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்து அந்த நாட்டைப் பற்றியும் அவர்கள் கலாச்சாரம் பற்றியும் அறிந்து கொண்டாராம். இது அவரே ஒரு பேட்டியில் சொன்னது.

  அவர் இந்தியா வருமுன் அளித்த பேட்டியில் இந்தியா ஐநா பாதுகாப்புக் குழு நிரந்தர உறுப்பினராவது பல சிக்கல்கள் சவாலகள் நிறைந்த விஷயம் என்று குறிப்பிட்டார். இங்கே வந்த பிறகு ஏதோ சீட்டையே வாங்கிக் கொடுத்து விட்டது போல நம் பாத்திரிக்கைகளும் ஆளும் வர்க்கத்தினரும் குதூகலிப்பது போல எதுவும் சொல்லவில்லை ஓபாமா. இந்தியா ஐநா பாதுகாப்புக் குழுவில் இடம் பெறும் காலம் வரும் போது அமெரிக்கா கண்டிப்பாக ஆதரவு தரும் என்றார். அவ்வளவே. நரசிம்ம ராவ் பாணியில் சொல்வதென்றால் நேரம் வரும் போது கவனிக்கப்படும். நேரம் எப்போது வரும்? கடிகாரந்தன் ஓடிக்கிட்டே இருக்குல்லய்யா… வராம எங்கிட்டுப் போயிரும்? வரும்.

  சரி! 10 பில்லயன் டாலர்கள் மதிப்புக்கு ஒப்பந்தங்கள் போட்டதும் ஏதோ புதிதாக வாரிக் கொடுத்துவிட்டார் ஓரி வள்ளல் ஓபாமா என்று ஓங்காரக் கூச்சலிடுவோர் சற்றே நிதானித்து நோக்க வேண்டும். வழக்கமான அமெரிக்க இந்திய வர்த்தகத்தின் ஓராண்டு மதிப்பில் 50-75% வணிக ஒப்பந்தங்களை இவர் அறிவித்திருக்கிறார். வழக்கமாக நடக்கும் மராமத்து வேலையை தேர்தல் நெருங்கும் காலத்தில் தானைத்தலைவர் துவக்கி வைத்துப் புகைப்படத்துக்குப் போஸ் கொடுப்பது போன்ற அரசியல் பழக்கம் தான் இது. நடப்பது தான் நடந்திருக்கிறது. சொன்னவர் அமெரிக்க ஜனாதிபதி என்பதால் ஊடகங்கள் ஊக்கமது கொண்டு உரத்துச் சொல்கின்றன.

  Outsourcingஐ ஆதரிக்கும் அமெரிக்க வர்த்தக சங்கத்தின் மூலமாக குடியரசுக் கட்சிக்கு இந்திய நிறுவனங்கள் பணம் கொடுத்தன என்று உளவுத்துறை ஊதிவைக்க USIBC மூலமாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க மறுத்தார் ஓபாமா. அது சரியாக இருக்காது என்ற அறிவுறுத்தியதும் நிகழ்ச்சிக்கு வருவோரிடம் தலைக்கு இம்புட்டு என்று ($600 என்று கேள்வி) வசூல் செய்யவும் ஏற்பாடானது. இந்திய தூதர் தலையிட்டு்ப் பேசியபின் “நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்; நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்” என்ற ரீதியில் ஒரு சர்க்குலர் அனுப்பினார்கள். CII அதை சுற்றுக்கு விடவே மறுத்துவிட்டது. FICCI சுற்றுக்கு விட்டது. ஆனால் கையோடு சர்க்குலர் சும்மா ஒளொலாகட்டிக்கு தான் யாரும் நயா பைசா தரத் தேவையில்லை என்று பின் குறிப்பு சேர்த்தது. நல்ல கூத்து.

  மொத்தத்தில் அமெரிக்கப் பத்திரிக்கைகள் எழுதியது போல தேர்தல் தோல்விக்குப் பின் புண்பட்ட மனத்தைப் பயணம் போய் ஆற்றிக் கொள்கிறார் ஓபாமா. நாம் குதிப்பதற்கு ஏதுமில்லை. குதித்தாலும் தப்பில்லை. உடற்பயிற்சி உடம்புக்கு நல்லதுதான்.

 7. Varatharaajan on November 21, 2010 at 7:42 am

  அன்புள்ள மது, சரிந்து கொண்டிருக்கும் சீட்டுக்கட்டு மாளிகையை சரிசெய்திடும் முயற்சியில் ஒபாமா ஈடுபட்டிருக்கிறார் என்பதை முதன்முதலில் நினைவு படுத்த விரும்புகிறேன். ஆனால் மேலை நாட்டு ஆட்சியாளர்கள் செய்யும் எல்லா செயல்களும் அவர்களது சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டவை. பாரத நாடு முன்னேறவேண்டும் என்று உண்மையிலேயே மனதார விரும்பினால், தீவிரவாதிகளின் பாசறையாகவும் புகலிடமாகவும் பயிற்சிக்களமாகவும் விளங்கும் பாக்கிஸ்தானுக்கு செல்லம் கொடுத்து கொஞ்சிக்குலாவி ஊக்குவிப்பது எந்த விதத்தில் நியாயம்? மெகா ஊழல்களில் சிக்கி தவிக்கும் பாரதம் வலிமையடைந்து வருவதில் லாபமடைய எண்ணும் அமெரிக்கர்களுக்கு, அணு சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நமது வளங்களை கொள்ளையடிப்பதே நோக்கம்!! நமது சமுதாய கட்டமைப்புகளை சீர்குலைத்துவரும் நக்சலைட்டுகளுக்கும், நமது நாட்டு மக்களிடையே பிரிவினை எண்ணத்தையும் பயங்கரவாதத்தையும் ஊக்குவிக்கும் தேச துரோக இயக்கங்களுக்கும் சாமரம் வீசிக்கொண்டிருக்கும் இன்றைய ஜ. மு. கூ. அரசாங்கத்தின் மந்திரிகளுக்கு ஒபாமாவின் தந்திரங்களை பற்றி என்ன கவலை?

 8. eswaran on November 27, 2010 at 1:42 pm

  திரு ஒபாமா அவர்கள் நமது மண்ணின் பெருமையை நமக்கே எடுத்துச் சொல்லிவிட்டுபோயுள்ளார் .ஆனால் இங்குள்ள சில பிச்சைக்காரர்கள் கோட்டு சூட்டுடன் சென்று எனது நாடு ஒரு காட்டுமிராண்டி நாடு அதை திருத்தி இரட்சிக்க பிச்சை போடுங்கள் என்று பிச்சை எடுத்து தான் தின்று கொழுத்ததுபோக சில அறியாமை வாசிகளை மதம் மாற்றிக்கொண்டுமுள்ளனர் .திரு பராக் ஒபாமா அவர்கள் நமது தேசத்தின் உண்மை நிலையை அங்கு எடுத்துச் சொல்லி இங்கும் ஏமாற்றி அங்குள்ளவர்களின் உதவும் குனமுள்ளவர்களை ஏமாற்றி பணம் பண்ணும் கயவர்களை விரட்டியடித்தால் மிகவும் புண்ணியமாய் போகும் .அந்த நாட்டுக் கலாச்சாரத்தால் அவரது இளமை வாழ்க்கை எவ்வளவு துன்பமயமானதாய் இருந்தது .நமது தேசத்தின் பண்பாடும் குடும்ப அமைப்பும் இளமையையும் முதுமையையும் ஒன்றிணைத்து அன்பு மயமான கூட்டுக்குடும்பமாக இறுதி வரை பாதுகாப்பாய் மகிழ்ச்சியுடன் வாழவைக்கும் என்பதை அன்குள்ளவர்களுக்குப் புரிய வைக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.
  ஈஸ்வரன்,பழனி.

 9. Eswaran on March 10, 2012 at 10:55 pm

  உண்மையான புரிதலுடன் கட்டுரை புனையப்பட்டுள்ளது.
  கட்டுரையாளர் சொன்னதுபோல ஒபாமா சொன்னதும் நாம் முன்னேறி விட்டதாய் எண்ணிகொள்ளக்கூடது.இப்படித்தான் நம்ம ‘மாமா’ நேரு வெறும் பீத்தல் விட்டு நம்மை சீனாக்காரனிடம் அடிவாங்க வைத்தார்.நமது நாட்டில் தேச பக்தி நிறைந்த மத்திய அரசு அமைந்து பல பத்து ஆண்டுகளாவது ஆட்சிப்பொறுப்பில் இருந்தால்தான் வளர்ந்த நாட்டுக்கான தகுதி வரும்.அதற்கு அத்வானியோ அல்லது மோடியோ பொறுப்பில் அமர்த்தப்படவேண்டும் .இது நடந்தால் ……………தேச மக்கள் சிந்திக்க வேண்டும்.
  ஈஸ்வரன்,பழனி.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*