அச்சுதனின் அவதாரப்பெருமை – 4

அச்சுதனின் அவதாரப் பெருமை – 1

அச்சுதனின் அவதாரப் பெருமை – 2

அச்சுதனின் அவதாரப் பெருமை – 3

(தொடர்ச்சி…)

“நல்லார்க டம்மை நலம்புரிந்து காத்தற்கும்
பொல்லாரைப் பொன்றுநெறி போக்கற்குஞ் – சொல்லாரு
முந்தை யறநாட்ட முய்த்தற்கு நான்பிறப்ப
னிந்தவுகந் தோறு மிசைந்து.”

இவ்வரிகள் “பகவத் கீதை வெண்பா” என்னும் செய்யுள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது. இதனை இயற்றியவர் ஸ்ரீ அழகிய மணவாள ஜீயர் என்னும் ஸ்ரீவைஷ்ணவ ஆச்சாரியர். இந்நூலில் இவர் சமஸ்கிருத மூலத்தில் உள்ள கீதை சுலோகங்களை அழகிய தமிழ் வெண்பாக்களாக மொழிபெயர்த்துள்ளார். மேற்கண்ட வெண்பாவானது,

பரித்ராணாய ஸாதூ4னாம் வினாசா’ய ச து3ஷ்க்ருதாம்
4ர்ம ஸம்ஸ்தா2பனார்த்தா2ய ஸம்ப4வாமி யுகே3 யுகே3

என்னும் கீதை (4.8) சுலோகத்திற்கான தமிழாக்கமாகும். இதன் பொருள், “சாதுக்களாகிய நல்லோர்களையும் அறவோர்களையும் பேணுதற் பொருட்டும், தீயோர்களை அழிப்பதற்கும், தருமத்தை நிலைநாட்டவும் நான் எந்த யுகத்திலும் பிறக்கிறேன்.” என்பதாகும். இவ்விடத்தில் கீதாசார்யனான கண்ணன் தன்னுடைய அவதாரத்திற்கான முக்கியக் காரணங்களை அர்ஜுனனுக்கு விளக்கிக் கூறுகிறான்.

gitopadesam1

இங்கு சாமானியமாக நாம் ஒரு பொருள் கொள்ளலாம். அதாவது, “கண்ணன் தன்னுடைய அவதாரத்திற்கு இரண்டு காரணங்களைக் கூறுகிறான். அவையாவன, உலகிலுள்ள தீயோர்களை அழித்து அவர்களிடமிருந்து நல்லோர்களைக் காப்பதும், தருமத்தை நேரே செய்துக் காட்டியும் உபதேசித்தும் அறவொழுக்கத்தை நிலைநாட்டுவதுமாகும்” என்று புரிந்துக் கொள்ளலாம். ஆனால், இப்படி மாத்திரம் பொருள் கொண்டால், இரண்டு தர்க்க ரீதியான கேள்விகளுக்கு நம்மால் பதில் கூற இயலாது. அவையாவன —

(1) இறைவன் தான் எங்கும் நிறைந்தவன் ஆயிற்றே (விஷ்ணு என்பதற்கு ’எங்கும் நிறைந்தவன்’ என்று பொருள்), எல்லாம் வல்லவனாயிற்றே, நினைத்த மாத்திரத்தில் தீங்கு செய்பவர்களைத் தண்டிக்க இயலுமே? அவதாரம் எடுத்துத் தான் அதைச் செய்ய வேண்டுமா?

(2) அதே போல், மக்களுக்கு அறத்தின் வழியை எடுத்து விளக்கவும் செய்துக்காட்டவும் பல நல்லோர்களும் அறவோர்களும் உள்ளனரே? அவர்கள் மூலமாக தருமத்தை நிலைநாட்டலாமே? அவர்களும் நன்றாகத் தானே தருமத்தை நிலைநாட்டுகிறார்கள்? இதற்குக் கீழே இறங்கிவரத் தேவையில்லையே?

முந்தைய கட்டுரையின் முடிவில் இக்கேள்விகளுக்கு ஒரு யோசனையைக் கருதினோம். அந்த யோசனை என்னவென்றால் இத்தகைய தர்க்க ரீதியான கேள்விகளுக்கு, “எல்லாம் அலகிலா விளையாட்டுடையனாகிய பெருமானின் விளையாட்டே. அவன் என்ன செய்கிறானோ அது அவன் விருப்பம்.” என்று கூறிவிடலாம். ஆனால், இவ்வியோசனை தரும் விளக்கம் அவ்வளவு சீரியதன்று. நாய் வாலுக்குக் கூட ஏதோ ஒரு பயன் இருக்கிறது என்றே விலங்கியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி இருக்க, மிக அற்புதமான பகவானின் அவதாரத்திற்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை, அவன் இஷ்டப்படி விளையாடுகிறான் என்று கூறுவதா? அவதாரங்களுக்கு வேறு ஒரு தனிப்பட்ட பயனும் இல்லையா? இத்தகைய சந்தேகங்களைத் தீர்க்க நாம் ஸ்ரீ இராமானுஜர் கூறும் யோசனைக்குச் செல்ல வேண்டும்.
sriramanuja பகவத் கீதைக்கு விளக்கவுரை (பாஷ்யம்) அருளியவர்களுள் ஸ்ரீ இராமானுஜர் முக்கியமானவர். கட்டுரையின் தொடக்கத்தில் எடுத்த கீதை சுலோகத்திற்கு இப்பொழுது நாம் எழுப்பியுள்ள சந்தேகம் தெளியும் வண்ணம் மிக அற்புதமான யோசனை ஒன்றைக் கூறுகிறார். இச்சுலோகத்தில் “சாதுக்களைப் பேணுதல்” என்பதற்கு அவர் கூறும் விளக்கம் என்னவென்றால், “இறைவனானவன் தம்முடைய பக்தர்கள் தன்னையே புகலிடமாகக் கொண்டுள்ளனர் என்றும், சாதுக்களாகிய அவர்கள் ஒரு நொடிப்பொழுதும் தன்னை விட்டு விலக விரும்பாதவர்கள் என்றும் அறிந்தவனாவான். அதுமட்டுமன்றி, இறைவனின் திவ்வியமான உருவத்தையும் அவயவங்களையும் காணக் கிடைக்காதபொழுது அவர்கள் மிகவும் வேதனைக்கு உள்ளாகிறார்கள். ஆகையாலே இறைவன் திருமால் சாதுக்களாகிய அவர்களுக்குத் தன்னைக் காட்சி தருவதற்காக, யுகம் தோறும் அவதரிக்கிறான். அவன் தரும் காட்சியால் அவன் பக்தர்கள் வேதனை நீக்கப்பட்டு போஷிக்கப்படுகிறார்கள், காக்கப்படுகிறார்கள்.” என்று முதலில் கூறுகிறார். மற்றபடி, கயவர்களை ஒடுக்குவதும் தருமத்தை நிலைநாட்டுவதுமாகிய பயன்கள் இரண்டாம் படி என்று அற்புதமாக விளக்கியுள்ளார்.

ஒன்றைக் கூர்ந்து கவனிக்கவேண்டும் – இவ்விளக்கத்தில் “தீயோர்களை ஒறுத்தல் முக்கியமல்ல. தர்மம் முக்கியமல்ல.” என்று ஒருபொழுதும் பொருள் கொள்ள இயலாது. இறைவன் பக்தர்களுக்குப் பிரியமானவன் மட்டும் அல்ல; லோகத்துக்கு எல்லாம் ஈசுவரனும் கூட. தருமத்தையும் நியாயத்தையும் பின்தள்ளிவிட்டு ஒரு சில அடியார்களுக்கு மட்டும் அருள்புரிகிறான் என்பது தவறு. அவதாரங்களை எடுக்காமலேயே இறைவனுக்கு அக்காரியத்தைச் செய்து முடிக்க இயலும், ஆகையாலே அவதாரங்களுக்கு முக்கியக் காரணம் வேறொன்று இருந்தாக வேண்டும் என்பதைத் தான் இராமானுஜர் கூறுகிறார். இவ்விளக்கத்தை இப்படிப் பார்க்கவேண்டும் – ஒருவர் காலை அலுவலகத்திற்குச் செல்லப் புறப்படுகிறார். போகும் வழியில் தம் வீட்டிற்கு மின்சாரக் கட்டணம் செலுத்திவிட்டுச் செல்கிறார். அதைப் போல, தன்னடியார்களுக்குக் காட்சிதரும் பொருட்டு அவதாரம் எடுக்கக் கிளம்பி, வழியிலே கொடியோர்களைத் தண்டித்தல் என்னும் முக்கியமான காரியத்தையும் செய்து முடிக்கிறான் கண்ணன்.

திருமால் மீது மெய்யன்புடைய பக்தர்கள் அவனுடைய மேன்மையையும் பெரிதாகப் பாடுவராயினும், அவனுடைய எளிமையாகிய குணக்கடலிலேயே ஆழ்ந்து கிடப்பர். அதன் காரணமாகவே, அவர்களுடைய சுய முயற்சியால் விளையும் யோக பலத்தைக் கொண்டு பஞ்ச பூதங்களிலும் இருதயத்திலும் அவனைக் காண விரும்புவரல்லர். மாறாக, அவன் தானே எளிமையின் சிகரம் என்று காட்டிக்கொண்டு இறங்கி வந்து காட்சியள்ளிப்பதிலேயே மெய்யன்புடையார்க்கு விருப்பம் அதிகம். அதிலும், ஏதோ ஓரிரு புண்ணியர்களுக்கு மாத்திரம் அவன் காட்சி தந்தால் அவர்களுக்கு அவ்வளவு விருப்பமில்லை. எளிமையிலும் எளிமையாக, ஓர் இடைக்குலத்தில் பிறந்து ஆயர்ப்பாடியில் உள்ள அனைத்து மக்களுடனும் கைகோர்த்துக் களிப்பதைத் தான் மிகவும் விரும்பிப் பாடியுள்ளார்கள். இதற்கு உதாரணம் ஆழ்வார்களும், கிருஷ்ணாவதாரமும்.

ஆழ்வார்களின் பாடல்கள் இலேசானவை அன்று; ஆழ்ந்த தத்துவ ஞானம் மிக்கவை. இருப்பினும், கண்ணனைப்பற்றி ஆழ்வார்கள் எத்தனை எத்தனை பாசுரங்கள் பாடியும், அவற்றுள் “கீதை உபதேசம் செய்தான்”, “கர்ம யோகத்தையும் ஞான யோகத்தையும் அர்ஜுனனுக்கு விளக்கினான்”, “கடினமான உபநிடத அர்த்தங்களை எடுத்துக் கூறினான்” என்றெல்லாம் ஆழ்வார்கள் அவ்வளவாகப் பாடியிருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, அவனுடைய குழந்தைப் பருவ விளையாட்டுகளிலேயே மெய் மறந்து பாசுரம் பாசுரமாகப் பாடியுள்ளனர். அவதாரங்கள் குறித்து வரும் இடங்களில் அவனுடைய அழகுத்தோற்றமும் லீலைகளுமே அவர்களால் பெரிதாக வர்ணிக்கப்படுகின்றன.

இத்தகைய இறையனுபவத்தையே நாடி, “உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்” என்று அவனுக்காகவே ஏங்கித் தவிக்கும் மெய்யடியார்களுக்கு அனுக்கிரகம் புரியும் பொருட்டே திவ்ய மங்கள ரூபத்துடன் ஸ்ரீமந் நாராயணன் அவதாரம் எடுக்கிறார் என்னும் செய்தியை ஸ்ரீ இராமானுஜர் விளக்குகிறார். ஸ்ரீ சங்கரரும் தம் பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் “இச்சா2வசா’ன் மாயாமயம் ரூபம் ஸாத4கானுக்3ரஹார்த்த2ம்” [பக்தி செலுத்துவதற்காகவும் பக்தர்களுக்கு அனுக்கிரகம் புரிவதற்காகவும் விரும்பிய ரூபத்தைத் தானே எடுத்துக்கொள்கிறான் – பிரம்ம சூத்திர பாஷ்யம் 1.1.20] என்று விளக்கம் கூறியுள்ளார். இங்கு நோக்கத்தக்கது என்னவென்றால், சங்கரர் உருவத்தை வெறும் கற்பனையென்று தள்ளவில்லை. மாறாக, உருவம் என்பது இறைவனே விரும்பி பக்தர்களுக்காக எடுக்கும் ஒன்று என்று கூறியுள்ளர்.

மேற்கண்ட அவதார விளக்கத்திற்குத் தக்கதொரு உதாரணம் கூறவேண்டுமானால், ஸ்ரீமத் பாகவத புராணத்தில் வரும் கஜேந்திர மோட்ச சம்பவத்தைக் காணவேண்டும். கஜேந்திரனை முதலையின் பிடியிலிருந்து மீட்டுத் தர ஸ்ரீமந் நாராயணன் புள்ளரசனாகிய கருடன் மேல் வீற்றிருந்து வந்தமையையும் ஒரு அவதாரம் (’ஹரி அவதாரம்’) என்றே சொல்லுவர். முதலையின் பிடியிலிருந்து மீள முடியாமல் கஜேந்திரன் இறைவனைத் துதிக்கிறான். இந்நிகழ்ச்சியை, பாகவதத்தைத் தமிழில் பாடிய ஆரியப்பப் புலவர், எட்டாம் கந்தத்தில் கசேந்திர அத்தியாயத்தில்

வாரண மாற்ற லோய்ந்து வானுறைத் தடக்கை நீட்டிப்
பூரண வுலக மெல்லாம் பூத்தளித் தழித்து நின்ற
காரண பரமா னந்தக் கடலிடைக் குளிப்போர் நெஞ்சும்
ஆரண முடிவு மேய வமலவோ வென்றரற்றும்
. … 28

வேதநூ லொருங்கு ணர்ந்து விரியுமெய் யறிஞ ருள்ளப்
போதுசேர் சோதி பொன்னிற் பொலியொளி போல வெங்கும்
தீதுறா தருளின் யார்க்குந் தெரிவுறா துறைந்து நின்ற
ஆதிகா ரணன்வந் தின்னே யளிக்கவென் றழைத்த தன்றே
. …29

என்னும் விருத்தங்களின் வழியாகக் காட்டியுள்ளார். கஜேந்திரன் “ஆதிமூலமே! பரம் சோதியே! உலகத்திற்கெல்லாம் காரணப் பொருளாக இருப்பவனே” என்று அருவநிலையைத் தான் துதித்தான். ஆனால் காக்க வந்தவனோ, “வெய்ய படர் சிறைக் கலுழன் ஊர்ந்து, தீப்பொழிந்திலங்கு கூர்வாய்த் திகிரிகைத் தாங்கி” வந்ததாக அடுத்த பாடலில் புலவர் பாடுகிறார். முன்பு நாம் கேட்டவண்ணம் “எதற்கிப்படி உருவத்துடன் வர வேண்டும், எங்கும் வியாபித்திருப்பதால் அருவமாகவே நின்று முதலையைக் கொன்றிருக்கலாமே?” என்று இங்கும் கேட்கலாம். கஜேந்திர மோட்சத்தை வர்ணிக்கும் சித்திரத்தையோ சிற்பத்தையோ பார்த்துள்ளவர்களுக்கு இக்கேள்விக்கு பதில் தெரியும். (வாசகர்களின் வசதிக்காக, இந்நிகழ்ச்சியை வர்ணிக்கும் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுச் சிற்பமும் இக்காலத்தில் வரையப்படும் சித்திரமும் இங்கு கொடுக்கப்படுகின்றன).

deogarh-temple-gajendra1 gajendra-moksham1

ஸ்ரீமந் நாராயணன் கருட வாகனத்தில் ஏறி கஜேந்திரனைக் காக்க வருகிறான். அவன் வருவதைக் கண்டு முதலையின் பிடியிலிருக்கும் ஆனை அரசன், வலியைப் பொருட்படுத்தாமல் அன்போடு ஒரு தாமரை மலரைத் தன் துதிக்கையால் பெருமாளை நோக்கி நீட்டுகிறான். நாம் சிற்பங்களிலும் சித்திரங்களிலும் காணும் காட்சி இது. இறைவனை திவ்விய மங்கள ரூபத்தில் நேரே கண்டு தன்னால் இயன்ற ஒரு தாமரைப் புஷ்பத்தால் அன்புடன் துதிப்பதையே, முதலை வாயில் பிடிபட்ட நிலையிலும், அவ்வானை நோக்கமாகக் கொண்டிருப்பதைத் தான் இச்சித்திரங்கள் காட்டுகின்றன. இம் மெய்யன்பை வலியுறுத்தவே நம்மாழ்வார்,

மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்
தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே?

[திருவாய்மொழி, 3.1.9]

என்ற பாசுரத்தில் “காதல் களிறு” என்று கஜேந்திரனைப் புகழ்ந்துள்ளார். இப்பாசுரத்திற்கு நம்பிள்ளையும் முப்பத்தாறாயிரப்படி ஈட்டில், “தன்னுடைய பக்தனாகிய கஜேந்தரன், தன்னைக் கூவி அழைத்ததைக் கேட்டு எம்பெருமான் தன்னையே மறந்தான். ஆகையாலே தான் இருந்த இடத்திலேயே இருந்துக்கொண்டு நினைத்த மாத்திரத்தாலோ, திருவாழியை ஏவியோ கஜேந்திரனுக்குத் துயர் துடைக்க இயன்றபோதிலும், அதையெல்லாம் மறந்து கருடன்மீது விரைவாக ஏறிக் கிளம்பினான். அத்துடன், கருடன் எவ்வளவு விரைவாகப் பறந்து சென்றும் போதாது என்று கருடனையும் அவனே தூக்கிக் கொண்டு பறந்தோடி வந்தான்” என்று அனுபவபூர்வமாக விளக்கிவிட்டு, “திருமாலைக் கையும் சக்கரமுமாகிய அழகுருவத்துடன் காண ஆசைப்பட்டதால் இங்கு கஜேந்திரன் ’காதல் களிறு’ என்று அழைக்கப்பட்டான். திருமாலும், அவன் துதிக்கையில் ஏந்திய தாமரைப்பூ வாடுவதற்கு முன் வந்து சேர வேண்டும் என்று விரும்பி விரைந்து வந்து காட்சியளித்தான்.” என்று பொருள்பட விளக்கியுள்ளார். பக்தன் இப்படி மனமுவந்து துதிப்பதற்கு, ஸ்ரீமந் நாராயணன் திவ்வியமான உருவத்துடன் தானே வர வேண்டும்! அந்த திவ்வியமான ரூபத்தைக் கண்ட மாத்திரத்தில் அன்றோ கஜேந்திரனுடைய பிணி நீங்கியது. இத்தகைய அருளைத் தான் கண்ணன் “பரித்ராணாய ஸாதூனாம்” என்ற இடத்தில் கூறுவதாக ஸ்ரீ இராமானுஜர் பகவத்கீதை உரையில் மிக அழகாக விளக்கியுள்ளார்.

nampillai-goshti1

(தொடரும்)

13 Replies to “அச்சுதனின் அவதாரப்பெருமை – 4”

  1. முக்கியமான அடிக்குறிப்பை விட்டுவிட்டேன்.

    கஜேந்திர மோட்சம் பற்றிய விளக்கத்தை ஸ்ரீ கருணாகர சுவாமியின் உபன்யாசத்தில் கூறியுள்ளதைத் தழுவி எழுதியுள்ளேன். இவ்வுபன்யாசம் காண்டு கேட்க விரும்புபவர்கள் கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள யூ-ட்யூப் அலைவரிசையில் “gajendra” என்று தேடவும்

    https://www.youtube.com/ramaswamy43

  2. Pingback: Indli.com
  3. “நல்லார்க டம்மை நலம்புரிந்து காத்தற்கும்
    பொல்லாரைப் பொன்றுநெறி போக்கற்குஞ் – சொல்லாரு
    முந்தை யறநாட்ட முய்த்தற்கு நான்பிறப்ப
    னிந்தவுகந் தோறு மிசைந்து.”

    இவ்வரிகள் “பகவத் கீதை வெண்பா” என்னும் செய்யுள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது. இதனை இயற்றியவர் ஸ்ரீ அழகிய மணவாள ஜீயர் என்னும் ஸ்ரீவைஷ்ணவ ஆச்சாரியர். இந்நூலில் இவர் சமஸ்கிருத மூலத்தில் உள்ள கீதை சுலோகங்களை அழகிய தமிழ் வெண்பாக்களாக மொழிபெயர்த்துள்ளார்

    தாங்கள் மேற்படி ஜீயர் ஸ்வாமிகளின் பகவத்கீதை வெண்பா பற்றி நிறைய எழுத வேண்டும் என்ற வேண்டுகிறேன். இந்நூலில் பல அத்புத விஷயங்கள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். தங்களின் கட்டுரை மிகச்சிறப்பாக உள்ளது.

    தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

  4. அன்புள்ள மயூரகிரி சர்மா அவர்களே,

    தங்கள் வரவேற்பையும் பாராட்டுக்களையும் படித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    ஜீயர் சுவாமியின் பகவத் கீதை வெண்பாவில் அற்புத விஷயங்கள் என்று நீங்கள் கூறுவது எதைப் பற்றி என்று கூறினால் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன், அத்தியாயம் எண் சுலோகம் எண் குறிப்பிட்டால் உதவும். எனக்கு பகவத் கீதை வெண்பா பற்றி நிறையத் தெரியாது. கற்றுக்கொண்டே எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனினும், நீங்கள் ஊக்கம் அளித்துள்ளதால் முயற்சி செய்து மேலும் படித்து வேறு ஒரு கட்டுரையில் முயற்சிக்கிறேன்.

  5. //இருப்பினும், கண்ணனைப்பற்றி ஆழ்வார்கள் எத்தனை எத்தனை பாசுரங்கள் பாடியும், அவற்றுள் “கீதை உபதேசம் செய்தான்”, “கர்ம யோகத்தையும் ஞான யோகத்தையும் அர்ஜுனனுக்கு விளக்கினான்”, “கடினமான உபநிடத அர்த்தங்களை எடுத்துக் கூறினான்” என்றெல்லாம் ஆழ்வார்கள் அவ்வளவாகப் பாடியிருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, அவனுடைய குழந்தைப் பருவ விளையாட்டுகளிலேயே மெய் மறந்து பாசுரம் பாசுரமாகப் பாடியுள்ளனர்.///

    இதை பாவ பக்தி என்றும் விளக்கலாமே ! உதாரணமாக எனக்கு, நாற்கரத்தோடு விளங்கும் பெருமாள் மீது மரியாதை உண்டு. குழந்தைக் கண்ணன் மீது ஆசை உண்டு. ராதிகா மனோஹரனின் மீது ஆர்வம் உண்டு. ஆனால் கையில் சாட்டையோடு, தேர்த்தட்டில் அமர்ந்து தோழனை சீடனாய் அங்கீகரித்து, மகத்தான உபதேசம் பண்ணின கண்ணன் ஆத்மாவுக்கு ஆத்மாவானவன். நினைத்த மாத்திரத்தில் புல்லரிக்க வைப்பவன். அவன் வார்த்தைகள் ரோமாஞ்சனத்தை ஏற்படுத்தும்.

    ஆழ்வார்கள் போக்கிரிக் கண்ணன் தான் வேண்டும் என்பர். மீராவோ விருந்தாவனக் காதல் கள்ளனையே நேசித்தாள்.

    ஓஷோவும் இந்த விஷயத்தையே விரிவாக தன், ” Krishna, the man and his philosophy’ என்ற மகத்தான நூலில் அலசுகிறார். கிருஷ்ணனை அவனது அனைத்துப் பரிமாணங்களிலும் ஏற்பவர் ஏறக்குறைய இல்லை என்கிறார் ஓஷோ.

  6. // தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். //

    தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். இங்குள்ள மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். இத்தருணத்தில், அதுவும் ஸ்ரீமான் நாராயணன் குறித்த கட்டுரையில் தீபாவளி என்றதும் எனக்கு நினைவிற்கு வருவது பொய்கையாழ்வார்-பூதத்தாழ்வார் அருளிச்செயல்களின் முதற் பாசுரங்கள்:

    வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
    வெய்ய கதிரோன் விளக்காக, – செய்ய
    சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
    இடராழி நீங்குகவே என்று.

    அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
    இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி
    ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
    ஞானத் தமிழ்புரிந்த நான்.

    மேலும் படிக்க: https://swamydesika.tripod.com/articles/art6.html

    பூதத்தாழ்வார் பாசுரம் குறித்து மேலும் எனக்கு ஆச்சரியமாக இருப்பது என்னவென்றால், சங்கர பகவத்பாதர் பூதத்தாழ்வார் பாசுரத்தைப் போலவே கீதை 10-ஆம் அத்தியாயம் 11-ஆம் சுலோகத்திற்கு பாஷ்யம் செய்திருப்பது போலத் தோன்றுவது. இதோ சங்கரர் பாஷ்யம் (கண்ணன் கூறும் வார்த்தைகள்) —

    “out of mercy, anxious as to how they may attain bliss. I dwell in their antah-karaNa (manas), which is engaged, in thinking exclusively of the Self and destroy the darkness of ignorance, by the lamp of wisdom, by the lamp of discriminatory knowledge, fed by the oil of pure Devotion (Bhakti-prasAda), fanned by the wind of earnest meditation on Me, furnished with the wick of right intuition purified by the cultivation of piety, chastity and other virtues, held in the antah-karaNa which is completely detached from all worldly concerns, placed in the wind-sheltered enclosure of the mind which is withdrawn from the sense-objects and untainted by attachment and aversion, and shining with the light of right knowledge generated by incessant practice of concentration and meditation.”

    அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

  7. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  8. அன்புள்ள ஆசிரியருக்கு
    அருமையான வரிகள் ,கவிகள் . மெய்மறந்து படித்தேன் .ஆசிரியருக்கும் மற்ற அனைத்து சகோதரர்களுக்கும் மனமார்ந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் .நன்றி

  9. Namaskar and thank you sir.I am blessed to read such article on Lord Narayana on this holy day.
    Best Diwali wishes for all of you,

  10. நீண்ட நாளாக இந்த கீதை வெண்பாவை தேடிக் கொண்டிருக்கிறேன். இதில் ஒரே ஒரு பாசுரம் ராமகிருஷ்ணா மிஷன் வெளியிட்ட “அண்ணா’ அவர்களின் கீதை உரையில் குறிப்பிட்டிருந்தார்கள். அப்போதிருந்து இதை தேடிக்கொண்டிருக்கிறேன்.

    இந்த கீதை வெண்பா தனி புத்தகமாக எங்காவது கிடைக்குமா… கிடைக்குமிடம தெரிந்தால் தெரிவிக்கவும்.

  11. மறுமொழியிட்ட ஸ்ரீதரன், சிவா, ராமா, கீர்த்தி ஆகியோருக்கு முதற்கண் வணக்கங்கள்.

    அன்புள்ள கீர்த்தி அவர்களே,

    // இந்த கீதை வெண்பா தனி புத்தகமாக எங்காவது கிடைக்குமா… கிடைக்குமிடம தெரிந்தால் தெரிவிக்கவும். //

    சென்னை ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அலுவலகத்தாரிடம் இது குறித்த தகவல் நிச்சயமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களைத் தொடர்புகொள்ளும் தகவல்கள் இங்கே:

    https://www.chennaisrivaishnavasri.com/cont.html

    ஸ்ரீவைஷ்ணவ உலகம் நன்கு அறிந்த ஒரு பெரியவர் (i) கீதை சுலோகங்களின் சமஸ்கிருத மூலம், (ii) வாதிகேசரி அழகிய மணவாள ஜீயரின் வெண்பாக்கள், (iii) மேற்படி இரண்டிற்கும் பதவுரைகள், (iv) வேதாந்த தேசிகரின் தாத்பர்ய சந்திரிகையைப் பின்பற்றிய எளிய தமிழ் நடை உரை ஆகியவை அடங்கிய நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தவிர, ஆளவந்தார் படைத்துள்ள கீதார்த்த சங்கிரகமும் இப்புத்தகத்தில் உள்ளது என்று நினைக்கிறேன்.

    இப்புத்தகம் ஐந்து பகுதிகளாக உள்ளன. இதிலிருந்து தான் நான் இக்கட்டுரைக்கான மேற்கோள்களை எடுத்தேன். இப்புத்தகமும் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அலுவலகத்தாரிடம் விலை கொடுத்துப் பெறலாம் என்று நினைக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் தாராளமாகத் தொடர்புகொள்ளலாம்; எனக்குத் தெரிந்து அவர்கள் மிகவும் approachable and friendly.

  12. // (i) கீதை சுலோகங்களின் சமஸ்கிருத மூலம், (ii) வாதிகேசரி அழகிய மணவாள ஜீயரின் வெண்பாக்கள், (iii) மேற்படி இரண்டிற்கும் பதவுரைகள், (iv) வேதாந்த தேசிகரின் தாத்பர்ய சந்திரிகையைப் பின்பற்றிய எளிய தமிழ் நடை உரை ஆகியவை அடங்கிய //

    இராமானுஜருடைய கீதா பாஷ்யம் சமஸ்கிருத மூலமும் உள்ளது.

  13. திருமங்கை ஆழ்வார் “சிறிய திருமடலில்” – “நாராயணா ஒ மணிவண்ணா நாகணையாய்(ஐந்தாம் நூற்றாண்டு சித்திரம்) , வாராய் என் ஆரிடரை நீக்காய் ……. ” என்று அருளுகிறபோது, சாதுக்களின் தன்மை வெளிப்படுகின்றது. என்னவெனில், நீதான் எனக்கு கதி என்ற எண்ணம் ஏற்பட வேண்டும் என்பது அது. பாண்டவர்களும், யாதவப் படைகளை வேண்டாம் என்று கூறி, கண்ணன் இருந்தால் மட்டுமே போதும் என்ற எண்ணத்தில், தங்களின், சாதுத்தனத்தை வெளிப்படுத்தவே, கண்ணன் அவர்கள் பக்கலில், தர்மத்தை நிலைநாட்டினான். எனவே, துஷ்ட நிக்ரஹத்திற்கு, துஷ்டர்களின் செய்கையும், சிஷ்ட பரிபாலனத்திற்கு, சிஷ்டர்களின் ‘நீயே கதி’ என்ற சாதுத் தன்மையும், தர்மவழி செல்கையும் இருக்குமானால், தர்மம் நிலைநாட்டப்பட, எம்பெருமானால் அவதாரங்கள் எடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *