நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”: வாசிப்பனுபவம்

முதலில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி என்று சொல்லிதான் ஆரம்பிக்க வேண்டும். அவர்தான் எனக்கு நாஞ்சில் நாடனை அறிமுகம் செய்துவைத்தார். நாஞ்சில்நாடன் நான் பிறந்து 3 ஆண்டுகள் முதலே எழுதி வந்தாலும் எனது 38வது வயதில்தான் அவரை வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன். அந்தக் கொடுப்பினையும் இல்லாதோர் எத்தனை பேரோ.

நாஞ்சில் நாடன் பற்றிய வலைத்தளத்தில்
காணப்படும் முகப்புக் குறிப்பு இவ்வாறு சொல்கிறது.

எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

thalaikeezh_vikithankalஅவரது எதிர்பார்ப்பு இத்தனை ஆண்டுகள் கழித்தாவது பலித்ததே என மகிழ்ச்சி கொள்ளலாம். நான் நாஞ்சில் நாடனை படிப்பதை மட்டும் வைத்து இதைச் சொல்லவில்லை. தற்போது புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையோரில் நாஞ்சில் நாடனை தெரியாதவர்கள் நிச்சயம் குறைவே.

நாஞ்சில்நாடனின் முதல் புதினமான தலைகீழ் விகிதங்களை சமீபத்தில் வாசித்தேன். என்னாது..எம் ஜி ஆர் செத்துட்டாரா? என கிண்டல் செய்பவர்கள் இங்கேயே விலகிக் கொள்ளவும். நானெல்லாம் இலக்கியம் வாசிக்க தலைப்பட்டதே ஜெயமோகனின் விஷ்ணுபுரத்திற்கு பின்னரே. அது உருவாக்கிய தாக்கத்தை, அது காட்டிய பிரம்மாண்டத்தை, அது விவாதித்த விஷயங்களை, அது தமிழுலகில் ஏற்படுத்திய அலையை இன்னும் எந்த புத்தகமும் செய்திருக்குமா எனத் தெரியவில்லை.

பெற்றோரைப் பிரிந்து புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண்னைப் பற்றிப் பேசிய கவிதைகளோ, கதைகளோ, அவளைப் போன்றே நிர்ப்பந்தத்தாலோ, அல்லது வசதிக்கு ஆசைப்பட்டோ, வீட்டோடு மாப்பிள்ளையாகும் மனிதர்களைப் பற்றி பேசியதில்லை, சில விதிவிலக்குகள் தவிர. நாஞ்சில்நாடன் தனது முதல் நாவலுக்கு எடுத்துக்கொண்டதோ இந்த விதிவிலக்கை மட்டுமே. தலைகீழ் விகிதங்கள் என்ற புத்தகம் பேசுவது எதை? ஒரு வெள்ளாளனின் வாழ்க்கையை, அவனது மகிழ்ச்சி, துக்கம், வறுமை, கோபம், சோகம், அகங்காரம் இன்னும் என்னென்ன மனித உணர்ச்சிகள் உண்டோ அத்தனையையும் உள்ளது உள்ளபடி பேசுகிறது.

வசதியான வீட்டில் பெண்ணெடுத்தவன் படும் பாடும், அந்தப் பெண்ணைக் கட்டியவன் படும் அவஸ்தையும், சுயமரியாதையைக் கட்டிக்காக்க அவன் படும் பாடும் என ஒரு முழு வாழ்க்கையை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். வசதியிருப்பவனுக்கு ஏழைகள் என்பவர்கள் அவர்கள் சொல்படி நடக்க கடமைப்பட்டவர்கள் என்ற எண்ணமிருப்பதும், எத்தனைதான் வளைத்தாலும் சுயமரியாதையை விடாத மனிதர்கள் இருப்பதால் ஏற்படும் எரிச்சல்களும், ஆங்காரங்களும், வெறியும்,என எல்லாவிதமான மனிதர்களையும் நாவலில் உலவ விடுகிறார். தன்னைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகளையே இவ்வளவு சுலபமாக நாவலாக்கிவிட முடியுமா எனக் கேட்க நினைக்கிறது மனம்.

தலைகீழ் விகிதங்களை நாவலாகவே என்னால் பார்க்க முடியவில்லை. ஒரு தேர்ந்த கதை சொல்லி அவரது வாழ்வனுபங்களை நமக்குச் சொல்லும் நடந்த கதையாகவே இதைப்பார்க்கிறேன். இதைப்போன்ற நிகழ்வுகள் நடக்காத ஒரு ஜாதி இருக்க முடியுமா? வீட்டோட மாப்பிள்ளை என்பதை இளக்காரமாக உச்சரிக்கப்படுவதை நாம் கேள்விப்படாத நாள் இருக்க முடியுமா?

மனித மனத்தின் வக்கிரங்களையும், எதிர்பார்ப்புகளையும், பிறர் படும் கஷ்டங்களை பார்த்து மற்றவர்கள் கொள்ளும் சந்தோஷங்களையும் சாதாரன பார்வையாளனாக பார்த்து நமக்குச் சொல்கிறார், படிக்கும் நமக்கும் பகீரென்றிக்கும்படியாக.ஏனெனில் அந்தக் கதையில் வருபவர்கள் நம்மைப்போன்றவர்களேயன்றி வேறுயாருமல்ல என்பதால்.

வெள்ளாள ஜாதியின் ஒரு பனக்கார வீட்டையும், பரம ஏழையின் வீட்டையும் கண்முன் நிறுத்துவதுடன் ஒவ்வொருவரும் தனக்குள் போடும் கணக்கையும், அது தவறும்போது ஏற்படும் கோபம், வேதனை எல்லாவற்றையும் அப்படியே போகிற போக்கில் சொல்லிச் சென்றுகொண்டே இருக்கிறார்.

நாயகன் திருமணத்தின் மூலம் வம்பில் சிக்க ஆரம்பித்தது முதல் அவன் சுயமரியாதையினால் தப்பிப் பிழப்பதுவரை அவன் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும், நானாக இருந்தால் என்ன செய்திருப்பேன் என எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. கதை படித்துக்கொண்டிருக்கும்போதே சில சமயங்களில் நான் அவனைப் போலவும் சில சமயங்களில் நான் ’கழுத போனாப்போகுது’ எனவும் முடிவெடுத்திருக்கிறேன்.

கஷ்டப்பட்ட குடும்பம் தலை நிமிரும் என மாப்பிள்ளையையும், நல்ல குடும்பத்துப் பெண்ணுக்கு குற்றம் சொல்ல முடியாத, படித்த மாப்பிள்ளையை தேடித்தருவதாக நினைத்து நல்லது செய்ய ஆசைப்பட்டு பெண்ணுக்கும் இப்படி திருமணத்தை நடத்திவைத்த பாட்டையாவும், எப்பாடுபட்டாவது நடக்கும் திருமணத்தை எல்லாம் நிறுத்த நினைக்கும் பாட்டையாக்களும் கதையை நிஜமாக்குகின்றனர்.

அருணாச்சலமும், காந்திமதியும், பவானியும், மனதில் இனிய நினைவுகளை விட்டுச் செல்வதுடன், நமக்கு கஷ்டத்தில் உதவிய நண்பர்களையும், அவர்தம் குடும்பத்தினரையும் மகிழ்ச்சியுடன் நினைக்க வைக்கிறார்கள்.

பல இடங்களில் கிட்டத்தட்ட கண்ணீர் உகுத்துவிடுவேனோ என்ற நிலைக்கு என்னைக் கொண்டு சென்றது கதை. ”சுயத்தை மற்றும் வாழ்க்கையைத் தேடும்” நாஞ்சில் நாடனின் முயற்சி முதல் நாவலிலேயே சாத்தியமாகியிருக்கிறது. ஆரம்பமே அருமையாக ஆரம்பித்திருக்கிறார். இந்நாவல் பல பதிப்புகள் பெற்று இருப்பதும், திரைப்படமாக்கப்பட்டதும் ( சொல்ல மறந்த கதை) இந்த நாவலின் முக்கியத்துவத்தை உனர்த்தும். திரைப்படமாக்கப்பட்டதை இதன் தகுதிக்கு ஒரு அளவுகோலாக கொள்ளாவிட்டாலும் இதன் ஏழு பதிப்புகள் சொல்லும் இந்த நாவலின் மகத்துவத்தை.

நல்லவேளையாக நான் ”சொல்ல மறந்த கதை”யைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் இந்தக் கதை எனக்கு அளித்த பரவசத்தை நிச்சயம் இழந்திருப்பேன்.

இதுவரை வாசிக்காதவர்கள் உடனே வாசிக்கும்படி சிபாரிசு செய்கிறேன். தவறுவோர் ஒரு அழகான வாசிப்பனுபவத்தை இழக்கிறீர்கள் என்பதை மட்டும் நிச்சயம் உறுதியாகக் கூற முடியும்.

இந்த நூலையும், நாஞ்சில் நாடனின் மற்ற நூல்களையும் இணையத்தில் இங்கே வாங்கலாம்.

nanjil-nadan-portraitநாஞ்சில் நாடன்தலைகீழ் விகிதங்கள், எட்டுத் திக்கும் மதயானை உள்ளிட்ட ஐந்து புதினங்கள், நான்கு சிறுகதைத் தொகுதிகள்,  மூன்று கட்டுரைத் தொகுப்புகளின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர்கள், வெகுஜன வாசகர்கள் என்ற இரண்டு தரப்பினரையுமே ஈர்க்கும் வசீகரம் வாய்ந்த எழுத்து அவருடையது. பழந்தமிழ் இலக்கியங்களில், குறிப்பாகக் கம்பராமாயணத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் தேர்ச்சியும் கொண்டவர். தமிழக சமூக, அரசியல் போக்குகள் பற்றிய தனது விமர்சனங்களைத்  துணிச்சலுடனும் நேர்மையுடனும் வெகுஜன பத்திரிகைகளில் கூட எழுதி வருபவர்.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் ஆகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான நாஞ்சில் நாடனுக்கு இந்த வருடத்திய தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அவரது “சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதைத் தொகுதி இதற்காகத் தெரிவு செய்யப் பட்டுள்ளது. சமீபகாலங்களாக அரசியல் சார்புநிலைகளாலும், பாரபட்சங்களாலும், போலிகளாலும் இத்தகைய அரசு விருதுகள் மதிப்பிழந்து கொண்டிருக்கும் சூழலில், முன்னணி இலக்கிய அங்கீகாரத்திற்கு முற்றிலும் தகுதிவாய்ந்த நாஞ்சில் நாடனுக்கு இந்த விருது வழங்கப் படுவது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது.

திரு நாஞ்சில் நாடனுக்கு தமிழ்ஹிந்து மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

– ஆசிரியர் குழு

Tags: , , , , , , , , , , , , , , , , ,

 

7 மறுமொழிகள் நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”: வாசிப்பனுபவம்

 1. ஓகை நடராஜன். on December 22, 2010 at 10:55 pm

  //இலக்கிய ஆர்வலர்கள், வெகுஜன வாசகர்கள் என்ற இரண்டு தரப்பினரையுமே ஈர்க்கும் வசீகரம் வாய்ந்த எழுத்து அவருடையது.//

  இந்த பாராட்டுக்கு முற்றிலும் தகுதியுள்ளவர் நாஞ்சில் நாடன் என்பதை அவரது எழுத்துக்களை சிறிதளவே படித்திருந்தாலும் என்னால் உணர முடிகிறது. அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

 2. திருச்செல்வன் on December 23, 2010 at 8:37 am

  வாழ்த்துக்கள் நாஞ்சில் சார்!

  ரிடையர் ஆகும் நேரத்தில் தான் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்பது இந்திய இலக்கிய அமைப்புகளின் எழுதப் பட்ட விதி.

  தாங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் எழுத்துலகில் ஜாம்பவானாகத் தான் இருந்து வருகிறீர்கள். எனவே விதியையும் மீறி இந்த விருதை உங்களுக்குக் கொடுத்துள்ளார்கள் போலத் தெரிகிறது. சந்தோஷமாக இருக்கிறது.

 3. ச.திருமலை on December 23, 2010 at 1:03 pm

  வாழ்த்துக்கள். காலம் தாழ்த்தித் தரப் பட்ட அங்கீகாரம். இவர்கள் கொடுக்கும் அங்கீகாரத்தை விட பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் ஆத்மார்த்தமாக நாஞ்சில் நாடனைப் படித்து மனம் உருகும் தருணங்களே அவருக்கு உண்மையான விருதுகளாகும். நாஞ்சில் நாடனின் கதைகளும் மனதுக்கு நெருக்கமானவை என்றால் அவரது கட்டுரைகள் என் மனசாட்சியின் குரல் போலவே ஒலிக்கும். அவர் கதைகளில் தொடர்ந்து வெளிப்படும் விரக்தியும் தார்மீக ஆவேசமும் அதை மெல்லிய நக்கலுடன் வெளிப்படுத்தும் லாவகமும் அழகான தமிழும் தமிழுக்கு வாய்த்த வரப் பிரசாதம் நாஞ்சில் நாடன் அவர்கள். யார் யாருக்கோ விருது கொடுத்துத் தன் தரத்தைத் தாழ்த்திக் கொண்ட சாகித்ய அகடமி அமைப்பு இன்று தன் பாவங்களுக்கு ஒரு பரிகாரம் நிகழ்த்தியிருக்கிறது தன் அழுக்குகளை இந்த விருதின் மூலம் கழுவிக் கொண்டிருக்கிறது.

  ச.திருமலை

 4. snkm on January 5, 2011 at 10:57 am

  நன்றி!

 5. பொன்னப்பன் on February 26, 2011 at 1:35 pm

  நான் ஒரு நாஞ்சில் நாட்டான். “தலைகீழ் விகிதங்கள்” படித்தேன். படித்துக்கொண்டிருக்கும் போதே….. அடுத்தவீட்டு அண்ணன் கதையோ….அந்த வயல் அந்த தாத்தாவின் வயலோ……..ஒவ்வொரு பக்கமும் படம் பிடித்து காட்டுவது போல் இருந்தது….படித்து முடித்த மறு நாளில் TV –ல் சொல்ல மறந்த கதை படம் பார்த்தேன். நல்ல வேளை ““தலைகீழ் விகிதங்கள்”” படித்திருந்தேன். அதனால் படம் எனக்கு பிடித்திருந்தது. நா.பார்த்தசாரதி(குறிஞ்சி மலர்) க்கு அரவிந்தன்… எங்கள் பக்கத்து ஊர் வீரநாராயணம் (க.சுப்பிரமணியத்துக்கு ) நாஞ்சில் நாடனுக்கு சிவதாணு.

 6. […] நன்றி: http://nanjilnadan.wordpress.com, http://tamilhindu.com AKPC_IDS += “2140,”;Popularity: unranked [?] நண்பர்களுக்கு […]

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*

Josh Oliver Authentic Jersey