அனாதைக்கு ஈமச்சடங்கு செய்த அடியார்

(வடமொழியில் சந்திரதத்தர் என்பார் இயற்றிய ‘பக்தமாலா’ என்னும் பக்திக் காவியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘பக்த மான்மியம்’ எனும் நூலில் உள்ள ஒரு கதி. மொழிபெயர்ப்பாசிரியர் கோவை சிரவணபுரம் கெளமார மடாலயம் இரண்டாம் ஆதீனம் தவத்திரு கந்தசாமி சுவாமிகள்)

vishnu2

திருமகள் தங்கும் மார்பினனும் கரும்புயல் நேர் வண்ணனுமாகிய திருமாலினுடைய அடியவர்களுக்குக் கோமான் எனத் திகழ்பவர் இராமானுசர். அவருடைய மாணாக்கருள் சிறப்புடன் நினைக்கத் தக்க சாமாத என்னும் பெயருடைய ஒருவர் தம் புகழ் எங்கும் தழைப்ப வாழ்ந்தார்.  நாராயணமூர்த்தியின் திருவடித் தாமரைகளைப் பேரன்புடன் இரவும் பகலும்  அகத்தும் புறத்தும் ஆராதனை புரிந்து அந்தமில் ஆனந்தம் துய்த்து வந்தார். அரிபத்தர் என்பவர் யாவராயினும் அவருக்குப் பணிபுரிதலில் மகிழ்ந்தார். திருமா லடியவர்களைத் திருமாலே என ஐயமின்றி நினைந்து தம்மை அவ்வடியவர்களுக்கு அடியானென, அவர்கள் அன்புற்று அருளுடன் ஏவிய  பணிகள் எவற்றையும் கடிதில் மனம் வாக்கு காயம் ஆகிய திரிகரண சுத்தியாகப் புரிந்து வந்தார்.

நீலக்கடல் நிகர்மேனியனின் அடியவர்களைக் காணின் பொங்கும் மகிழ்வோடு அவர்களை நீலமேனி நெடியோனாகவே போற்றி, அவர்களுக்கு அர்க்கியம் ஆசமனம் பாத்தியம் ஆகியன அளித்து, அவர்களுடைய திருவடித் தாமரைகளைத் தினம் பூசனை புரிவார். வீண்வம்பு பேசும் மதியாளரை மதியாரென மதியார்.

இவ்வாறு திருமாலடியவர் பணியை அன்போடு செய்துவரும் சாமாதப் பெயருடைய பெருந்தகை, ஓரு நாள் , பூசைக்கும் மலர் கொய்திடச் செல்லும் வழியில் நகரின்புறத்தே ஒரு சவத்தைக் கண்ணுற்றார்.

அந்தப் பிணம் எல்லா அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அரிபத்தர்களை மேலும் கவினுறச் செய்கின்ற கோபி நாமமும் துளசி மாலையும் காணப்படவில்லை.. சாமாத இதனைப் பார்த்து விழிநீர் சொட்ட,

“இந்தப் பூமியில் பில்லி சூனியம் போன்றவற்றை இயற்றி இகத்தையும் பரத்தையும்  சூனியமாக்கும் சூனிய மார்க்கத்தில் ஒழுகும் பிறப்பு உள்ள சூனியர்கள் (வீணர்கள்)  அல்லவா பாழும் நெற்றியோடு இக்கதிக் குரியவர்கள்?”(‘நீறிலா நெற்றி பாழ்’ பாழ்- சூனியம்)

அடடா!நம்முடைய அரிகேசவன், நாரணன் எனும் தலைவன் வாழ்கின்ற திருவைகுண்டத்தில் வாழும் தகைமையின்றி இவ்வாறு வீணே கிடத்தல் நன்று! நன்று!! (அவலம்,அவலம் என்று பொருள்)   எனச் சிந்தித்தார்.

பரிவோடு அந்தப் பிணத்தை எடுத்துச் சிரமீது சுமந்து சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றார். பாவியின் பிணமாதலின் அது அவரால் தாங்கற்கு அரிய சுமையாக இருந்தது. பாவச் சுமைக் கேற்ற பரிவோடு அதனைச் சுமந்து சென்று சுடுகாட்டை அடைந்து அதை எரிப்பித்தார்.

சாமாதாவின் இச்செயலை அறிந்த வைணவர்கள் சிலர் கடுஞ்சினம் கொண்டனர். மனக் கோணலுற்ற பித்தனோ சாமாதா? பாவப் பிணத்தைச் சுமந்ததோடு சுடுகாட்டில் எரியும் ஊட்டினானே! மேலோர் ஒழுக்கத்தினின்றும் நீங்கின இக்குமட்டி (குமட்டி – கசக்கும் காய், குமட்டுதல் – வாந்தி எடுத்தல்) கண்ணால் பார்க்கவுங் கூடாது. இதோடு போதும் நமக்கு இவனோடு உறவு” என்று அவர்கள்  நினைத்தனர்.

ஊரார்களையும் தமது இனத்தவர்களையும் அவ்வைணவர்கள் ஒருங்கு கூட்டி, இனி யாரும் சாமாதாவினொடு தம்மினத்தவர் என்றோ ஊரவர் என்றோ கலந்து பழகுதலாகாது; சாமாதா சமுதாயத்தினிறும் விலக்கி வைக்கப்படுகின்றான்; யாரேனும் இந்தக் கட்டுப்பாட்டை மீறுவராயின் அவரும் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவார் எனக் கட்டுப்பாட்டினை விதித்தனர்.

தன்னோடு யாரும் கலந்து உறவாடாது விலகுவதைச் சாமாதா கண்டு சிந்தாகுலப் பேராழியில் மூழ்கினார்;, துயிலவுமில்லை; நாவில் ஒருசொட்டு நீரும் விடவில்லை. இவ்வாறு நாட்கள் நான்கு கழிந்தன.

அரியின் திருவடிகளை  இடையறாது மனதில் தியானித்து ‘ பெருமானே! என்னுடைய துயரைக் களைந்து காத்தாள்வாயாக’  என சாமாதா நாராயணனை இரந்தார்.

நான்கு நாட்கள் கழிந்த பின்னர், அடியார்க்கு அன்புடன் அமுதிட்டு ஆராதனம் புரியும் நினைவினை சாமாதாவின் நெஞ்சினில் அரி தூண்டினான். அரி தூண்டிய அந்த எண்ணம் முறுகி எழுந்தது. தன்னிடமிருந்த செல்வமனைத்தையும் திரட்டி  சாமாதா ஆராதனைக்கு உரிய பொருள்கள அனைத்தையும் குறைவறத் தன் வீட்டில் கொண்டு வந்து சேர்த்தார்

ஆராதனைக்கு வேண்டிய அனைத்தையும் இல்லிற் சேர்ப்பித்த பின்னர், சாமாதா, வைணவர்கள் மனைதோறும் சென்று அவர்களை ஆராதனையை ஏற்றுக்கொள்ள அழைத்தார்.

அவர்கள் சினந்து கடுமொழி கூறத் தொடங்கினார்கள். ”நீ யாவன் எந்த சாதியில் வந்து பிறந்துளாய்? இறந்து போன சண்டாளன் எந்தச் சாதியோ? என்ன குலத்தவனோ?, அவனது உடலைத் தாயாதிபோலச் சுமந்து கொண்டுபோய்ச் சுடலை சேர்த்த்துத் தகனமும் செய்.தாய்.  அப்படிச் செய்ததனால் நீசத்துவம் அடைந்து விட்ட நீ, எங்கள் வீட்டு வாசலின் முன்வருதற்குக் கூடத் தகுதி யில்லை. அப்படி இருக்க, எப்படி எங்கள் வீட்டினுள் வரலாம், வந்து உன் வீட்டில் உணவுண்ண அழைக்கலாம்? உன்னுடன் பேசியதற்கே நாங்கள் பிராயச் சித்தம் செய்ய வேண்டும் என்று அறிவாயாக உன்னைப் போல ஒழுக்கம்(!?) நிறைந்தவன் இல்லத்தில் காகம் கூட இரை எடுக்காது, அப்படியிருக்க நாங்கள் வந்து உண்போம் என நினைக்கின்றாயா? பேசாமல் வந்தவழி பார்த்துப் போ’ எனப் பழித்தும் இழித்தும் கடுமொழி  சிந்தினர்.

மீண்டுவரும் வழியில் எதிர்ப்பட்டோர்களும் சாமாதவின் அழைப்பினை மறுத்து வெஞ்சொல் பல விளம்பி ஏகினர். ‘நீ அன்றைக்கு எரியூட்டின பிணத்தின் உறவினர்களை அழைத்து விருந்திட்டு அவர்களுக்கு இனமாகுவாய்’ என இழிமொழி இயம்பினஎ.

அநித்தியமான தூலபண்டமாகிய மலஉடலின் மீது அபிமானம் கொண்டு உழலும் உலகத்தவர் சாமாதாவினுடைய பெருமையை அறிதல் அரிதே.

இவ்வாறு உடல் அபிமானிகளெல்லாம் தன்னை இகழ்ந்ததனால் தன்னுள் சிந்தாகுலம் மிகுந்து சாமாதா தன்வீட்டை அடைந்து அரிநாரணனின் இருதாட் கமலங்களை மெய்யன்போடு சிந்தித்துச் சரண் புகுந்து இருந்தார்

அன்றிரவு சாமாதாவின் கனவில் கேசவன் தோன்றி , ‘என் பதத்திற் படியும் அன்புசால் பத்த! மனமொடிந்து விடாதே. சோகம் முற்றொழிந்து எழுவாயாக.. விடியலில் வைணவர்கள் பலர் இவ்வழி வருவர். அவர்கள் அனைவரும் திருவைகுந்தத்திலிருந்து யாம் அனுப்ப அங்கு வருகின்றனர். அவ்வுத்தமப் பெரியோர்கள் துய்த்திட விருந்தளிப்பாயாக. அவர்கள் அனைவரும் உணவருந்தி ஏகும் ஏல்வையில், நகரில் இருக்கும் வைணவர்கள் அனைவரும்  வலிந்து வந்து உன்னிடம் அமுது அருந்தும் ஆவல் மிக்கவராக விரும்பிக் கேட்பர்’ எனக் கூறி மறைந்தனன்.

வீண்வம்பிடும் குணத்தவர்களின் கொடுஞ்சொற்களால் மனம் மாழ்கியிருந்த சாமாதா, துயிலெழுந்து, கனவிற் கண்டசெய்தியால் ,கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்து’ கிட்டினவரை ஒப்பப் பொங்கும் இன்பக் கடலிற் படிந்தார்

பன்னகத்து அறிதுயில் புரி அச்சுதப் பகவன், அடியார் துயர்ப்படுவதைச் சற்றும் சகியான் அல்லவா?

மறுநாள் கங்குல் விடியு முன்பே தயிலெழுந்து, அலகிட்டு மெழுக்குமிட்டு, நீராடி, பூசனைகள் முடித்தார்;, நைவேத்தியச் செயலெலாம் முடித்தார்.

அளவிலா வாழையிலைகளை ஈர்வாய் வலம் அமைய விரித்து, இலைதோறும் நீர்க் குவளைகள் வரம்பிலாதன வைத்து, நாரணன் அடியவர்களின் வருகையைக் குறித்துக் அவர்களுடைய திருவடிகளைக் கழுவ நீர்ச்செம்பு ஏந்திக் காத்திருந்தார்.

சாமாதவின் செயல்களைக் கண்ட வைணவர்கள்,’ சாமாதவுக்கு முன்னைக் காட்டிலும் இப்பொழுது பித்து முற்றி விட்டது’ என்று தமக்கு உற்ற பித்தைச் சாமாதவின் மீது ஏற்றிப் பேசினர். ‘மடையன், நம்முடன் கூடி யிருப்பானெனின் அவன்செயலை மறுத்துத்தடை செய்வோம், அஃதிலாமையின் அவன் தன்மனம்போன போக்கில் நடக்கத் தொடங்கிவிட்டான். அவனை மதித்து, அவன் வாசப்படிக்குச் சென்று இஃதெல்லாம் என்ன என்று கேட்பவருக்கு என்ன பதில் அநத ஞானசூனியன் சொல்வான்?

இவ்வாறு தமக்குள் பரிகசித்துப் பேசிக்கொண்டு என்னதான் நடக்கின்றது பார்ப்போம் என அவ்வூர் வைணவர்கள் இருந்தனர்.

narasimha3இவ்வாறு இருந்தவர்கள் அதிர்ச்சியினால் மருளுரும்படியாக, கார்மேகங்கள் மோதும் இடியொலி போன்றும் நரசிங்கம் போரில் செய்யும் வீரகர்ச்சனை போலவும் முறைமுறையே முழங்கும் சங்கொலி கேட்டது.. மெய்யன்பனாகிய சாமதாவின் செவியில் இவ்வொலி விழுந்தவடன் , பேரானந்தத்தில் தன்னை மறந்தார். மெய்ப்பத்தனாம் சாமாதாவைப் பலபடப் பழித்துப் பேசியோரெல்லாம் இடியோசை கேட்ட நாகமென ஏங்கி முடிவிலாத பேராச்சரியத்தில் மூழ்கினர்

காயாமலர்க் கதிர்மணி வண்ணன் ஆலயப் பொலிவு ஓங்கிடும் வைகுந்தவாசிகள், வைணவர்களிடம் சாமாதவின் இல்லம் இருப்பிடம் வினவினர்.

திருவைகுந்தத்திலிருந்து எழுந்தருளியவர்கள் அனைவரும் வண்ணத் துழாய்மாலையனே தனது மாயையினால் இப்படி எண்ணற்ற படிவமெடுத்து வந்தனனோ என்று எண்ணத்தக்க தவக்கோல முடையவர்கள். அத்தகையோரைச் சாமாதா கண்டவுடன் மிக்க மகிழ்வெய்தினார்; அவர்கள்முன்பு எய்தி தரையில் வீழ்ந்து வணங்கினார்.

கரையிலாத அன்பெனும் கடலில் மூழ்கி ஆர்வத்துடன் பாகவதர்களைத் தம்முடைய மனைக்கு அழைத்துச் சென்று, அர்க்கியக் பாத்தியம் முதலியன  உதவி , அமுதருத்தினார். அடியவர்களும் திருத்தி அடைந்து மகிழ்ச்சியினால் சாமாதாவை ஆசிர்வதித்து விடைபெற்றுத் தெருவினை அடைந்தனர்.

ஊர் வைணவர்கள், சாமாதா மனைக்கு எழுந்தருளிய அன்பர்களின் வரலாற்றை வினவினர். கரிய நாரணக் கடவுளின் கணங்களிலொருவர், புன்னகையுடன், “ சாதி அபிமானம் என்னும் விலங்கில் தளைபட்டும் , நாரணன் அடியாரிடத்தில் துவேஷம் மிக்கும் உள்ள, நீதியற்ற அஞ்ஞானியரை ஒரு பொருளாகக் கருதி யாம் உரையாற்ற மாட்டோம்; நீங்கள் உங்கள் வழியைப் பார்த்து ஏகும்“ என்று பிணக்குடன்  மறுமொழி கூறிச் சென்றனர்.

அப்பொழுது, உள்ளூர் வைணவர்களனைவரும் நெஞ்சழிந்து, ‘சாமாதாவின் மகிமையைக் கொஞ்சமும் அறியாமல், அவனை விட்டு நாம் விலகினோம். அவனுக்கு நாம் இழைத்த பிழையிலிருந்து உய்யும் வகை எதுவோ தெரியோம். இறந்தவனுடைய இனத்தை அறிந்து அவர்களோடு இசைந்து நீ வாழ்க எனப் பழித்தோம்.. இப்பொழுது மாதவனின் அடியார்களாகிய பரமபாகவதர்கள் அவன் வீட்டைத் தேடி அடைந்தனர். சாமாதன் நன்னிலைமையை அறிய இயலாத மூர்க்கர்களாக நாம் இருந்து விட்டோம்.’

“நாம் அவனை சமுதாயத்திலிருந்து விலக்கிய காரணத்தால் வைகுந்த வான்பதத்திலுற்ற மாதவர்கள் நம்மைப் பிரட்டர்களாமென ஒதுக்கிப் பிணக்குடன், நமக்கு மறுமொழி பகராமலேயே சென்றுவிட்டனர்.”

“நாரணருக்கு இழைத்த குற்றத்தை நாரணின் பத்தராயினாரைக்கொண்டு போக்கிக் கொள்ளலாம்; ஆனால் நாராயணனின் மெய்ப்பத்தருக்கு இழைத்த தீங்கை நித்தனாகிய நாராயணனாலும் அகற்றிட முடியாது என்று வேதம் சாற்றும்”

“ஆதலால் நாம் செய்த பாவத்துக்குச் சாமாதனின் பொற்பாத கமலங்களைச் சரண்  புகுதல் அல்லது வேறு வழியில்லை”

vishnu_bhaktasவைணவர் அனைவரும் இவ்வாறு சிந்தித்து ,ஒன்றுகூடி, சாமாதன் மனை அடைந்து, “மடமையால் நாங்கள் செய்த கொடியபிழையை மனத்தில் அருள்கூர்ந்து வைக்கவேண்டா. எம்மைக் காப்பது உம் கடன்” எனக் கரைந்து , சாமாதாவின் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சினர்.

சாமாதா, அவர்களை ஆதரவுடன் தழுவிக்கொண்டு, “ நாரணக் கடவுளின் திருவுளத்தில் இருக்கும் உத்தமப் பெரியீர்!, உண்மையாக நீங்களொரு குற்றமும் புரியவில்லை. அரவணைத் துயில்பவனின் அடியவர்கள் செய்யும் செயல்கள் எல்லாம் கருணையாலன்றி மடமையால் என எண்ணுநர் மதியுடையரோ?  அத்தகைய அறியாமை, உமது அருளால், அடியேனுக்கு இல்லை.  என் விருப்பத்திற்கு இணங்க நீங்கள் அடியேனுடைய மனைக்கு எழுந்தருளி அமுது செய்திருப்பின் , திருவிளங்கு மார்பினன் அனுப்பிட ,இப்பொழுது, மின்விளங்கு மேனியர்களின் தரிசனை பெற்றிருப்பேனோ?

ஆதலால், இங்கு நீங்கள் என்மீது அருளமைந்து ஆற்றிய செயலுக்கு ஏற்பக்  கைம்மாறு ஏதொன்றும் செய்ய அடியேனுக்குத் தோன்றவில்லை என் செய்வேன்?

என்று இவ்வாறு அடக்கத்துடன் மறுமொழி கூறிய சாமாதவின் பணிவன்பினைக் கண்ட வைணவர்கள், இத்தகைய பரமபாகவதனை நாம் பகைத்து விட்டனமே என்று திகைத்து நின்றனர்.

அவர்களிடம்,சாமாதா, “அன்பர்களே! கலக்கம் வேண்டா. அடியேனுடைய  இல்லத்திற்கு எழுந்தருளி அமுது செய்த மெய்ப்பத்தர்களின் ‘சேடம்’(பிரசாதம்) உம்மதன்றோ? அடியேனுடைய மனைக்கு எழுந்தருளுவீர்” என வேண்டினார். கேட்டவர்கள் ஊரிலிருந்த மற்றையவரையும் அழைத்துக் கொண்டுவந்து சாமாதாவின் வீட்டில் அமுது செயச்செய, ‘சாமாதன் மெய்ப்பத்தியால், உண்டிடுந்தோறும் பொருள்கள் யாவும் குறைதலின்றி வளர்ந்தன’

“கடலுடுத்த பார்மிசைக் கவின்றிட்ட பல்லுயிரும்
படருறா தருளாற்றி திதித்தருளு மெம்பகவன்
மடல்கொள்வா ரிசத்துணை யடிவழுத்து மாதவரோர்
இடர்பொருந் திடக்கண்டுதான் சகிப்பன்கொ லிதயம்”

(நீராருங் கடலாடையை உடுத்த இந்தப் பார்மீது, அனைத்துயிர்களும் துன்பமுறாதவாறு தன்னருளால் காப்பாற்றியருளும் எம் பகவன், தன்னுடைய திருவடிகளாகிய தாமரை மலர்களை வழுத்தும் பெரியதவமுடையோர் இடர்ப்படச் சற்றும் இதயம் சகிப்பனோ?சகியான்)

சாமாவின் இந்தச் செயலைக் கண்டவர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

“சொல்லுதற்கு அரிய புகழ்கொண்ட சாமாதவைப் பகைத்துக்கொண்டதும் நன்மை யாயிற்றுப் போலும்! அப்படி நாம் சாமதாவைப் பகைத்திராத போனால் இத்தகைய அற்புதத்தை அறியும் வாய்ப்பைப் பெற்றிருப்பமோ?”

“இந்த உலகவாழ்க்கையே பெரிதெனக் கொண்டு உழன்று திரியும் நாமெங்கே? பகவனின் திருவருளைத் துய்க்கும் மெய்ப்பத்தர்கள் உண்ட சேடமாகிய பிரசாத ஊணெங்கே? அந்தப் பிரசாதத்தை நுகர்ந்திடும் பேறு பெற்றோம், சாமதனின் தரிசன மேன்மையால்”

“அறிவின் மிக்கவன் ஒருவன் ஒருகுலத்தில் பிறந்தால், அப்பிறப்பு அந்தக்குலத்தில் மரம் போன்ற மடையனையும்  நல்வழிப் படுத்தும் எனப் பெரியோர்கள் சொன்ன சொல் உண்மையே. சாமாத வாழும் ஊரில் வாழ்வதால் இவ்வுண்மையைச் சரதமென நாமறிந்து கொண்டோம்”

இவ்வாறு ஊர்மக்கள் யாவரும் சாமாதவினுடைய பத்தியை வியந்து புயல்நிகர் வண்ணனின் பதங்கள் அன்புடனுதவும் இன்பக்கடலிடைப் படிந்தார்.

திருமாலடியவர்களைத் திருமாலென்றே அடிபரவும் மெய்யறிவு வாய்ந்த சாமதா, தன் அன்பர்களையும் இந்நன்னெறியிற் செலுத்தி அனைவரோடும் கோதில் வைகுந்தம் சேர்ந்தார்.

“மண்ட ழைத்தநீ சக்குல ரெனினுமா லடியார்
தொண்டர் தந்திருத் தொண்டர்யாம் தொழுங்கட வுளென
விண்ட சீர்க்குரு கூரன் வேதத் திலக்கியமாந்
தொண்ட னானசா மாதன் மாண்புரைப்ப தென்கொலோ”

சாமாதவின் இந்த வரலாற்றினை, பின்வரும் வைணவ சைவப் பெரியார்களின் அருள்மொழிகளுடன் படித்துப் பயன்பெறலாம்.

“குடியுங் குலமுமெல் லாங்கோகனகைக் கேள்வன்
அடியார்க் கவனடியே யாகும் – படியின்மேல்
நீர்கெழுவு மாறுகளின் பேரும் நிறமும்எல்லாம்
ஆர்கலியைச் சேர்ந்துமாய்ந் தற்று.”  (ஞானசாரம் 15)

“பழுதிலா வொழுக லாற்றுப்
பலசதுப் பேதிமார்கள்
இழிகுலத் தவர்க ளேனும்
எம்மடி யார்க ளாகில்
தொழுமின் கொடுமின் கொள்மின்
என்று நின்னொடு மொக்க
வழிபட அருளினாய் போன்ம்
மதிள்திரு வரங்கத் தானே”

“அமரவோ ரங்கமாறும்
வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவ ராய
சாதியந் தணர்க ளேனும்
நமர்களைப் பழிப்ப ராகில்
நொடிப்ப தோரளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
அரங்கமா நகரு ளானே”

“சிவனெனு மொழியைக் கொடியசண் டாளன்
செப்பிடி னவனுட னுறைக
அவனொடு கலந்து பேசுக அவனோடு
அருகிருந்து உண்ணுக என்னும்
உவமையில் சுருதிப் பொருள்தனை நம்பா
ஊமரோ டுடன்பயில் கொடியோன்
இவனெனக் கழித்தா லையனே கதிவேறு
எனக்கிலை கலைசை யாண்டகையே”

-சிவஞானமுனிவர்.((இது நீலகண்டபாடியம் 4ஆம் அத்தியாயத்து 1ஆம்பாதத்துப் 15ஆம் சூத்திர பாடியத்தின் கீழே காணப்படும் முண்டகோபநிஷத்து வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு)

எழுகுலங்க ளெல்லாம் இறையருளான் மாற்றின்
தொழுகுலமே யன்றிச் சொல்லுண்டோ – இழிகுலமாம்
சாதியுயிர்க் குள்ளதெனச் சாற்றுமோ மாமறைகள்”

“ தேசிகருக்குப் புத்திரராய்ச் சேர்ந்தாரை வன்னமெனப்
பேசின் நரகமுறும் பெற்றியன்றோ – மாசில்
திருந்துபெருஞ் சாதிச்செயல் அரன்நற் சைவத்
திருந்தவர்கள் ஓதித் திலையால்”

“— — — சிந்தைதனை
வாதைசெயும் தீய மலமகற்றும் சங்கமத்தைச்
சாதிசொலும் பொல்லாச் சண்டாள ரன்றோ”
(அம்பலவாணதேசிகர், சித்தாந்தப் பஃறொடை, பண்டாரசாத்திரம்)

13 Replies to “அனாதைக்கு ஈமச்சடங்கு செய்த அடியார்”

  1. மிக்க நல்ல கட்டுரை. மொழிபெயர்த்து இட்ட கட்டுரை ஆசிரியருக்குச் சிரம் தாழ்ந்த நன்றி.

    //
    “நாரணருக்கு இழைத்த குற்றத்தை நாரணின் பத்தராயினாரைக்கொண்டு போக்கிக் கொள்ளலாம்; ஆனால் நாராயணனின் மெய்ப்பத்தருக்கு இழைத்த தீங்கை நித்தனாகிய நாராயணனாலும் அகற்றிட முடியாது என்று வேதம் சாற்றும்”

    “ஆதலால் நாம் செய்த பாவத்துக்குச் சாமாதனின் பொற்பாத கமலங்களைச் சரண் புகுதல் அல்லது வேறு வழியில்லை”
    //

    ஸ்ரீமத் பாகவதத்தில் ஒன்பதாம் காந்தத்தில் வரும் அம்பரீஷ சரித்திரமும் நினைவிற்கு வருகிறது. அம்பரீஷன் எனும் பாகவதனுக்கு அபசாரம் செய்த துர்வாச முனிவரை சக்கரத்தாழ்வார் துரத்தி வர, முனிவர் மூவுலகில் உள்ள அனைவரிடமும் சரண்புகுந்து அவர்கள் இரட்சிக்க மறுத்துவிட, இறுதியில் மாயவனைச் சரண் புகுந்தார். திருமாலும் காக்க மறுத்து, “நீர் அம்பரீஷரிடமேயே போய்ச் சரண்புகுந்து அவராலேயே காப்பாற்றப் பெறுவாயாக” என்று உரைத்தார்.

    “ஒரு சிறு மலரைத் தன் திருவடியில் ஒருவன் மெய்யன்புடன் வைத்தானாகில், வைகுந்தப் பெருமான் தனக்கு அவன் செய்த அபசாரங்களை எல்லாம் மன்னித்து விடுகிறான். ஆனால், ஒரு பாகவதனுக்கு ஒரு தீங்கு இழைத்தால் ஒரு லட்சம் புஷ்பங்கள் கொண்டு ஒரு லட்சம் முறை அர்ச்சனை செய்தாலும் அதை நாரணன் மன்னிப்பதில்லை” என்று புராணமும் (விஷ்ணுதர்மம்?) கூறுவதாகக் கேட்டிருக்கிறேன்.

  2. மதிப்பிற்குரிய முனைவர் அவர்களுக்கு,

    படி கொண்ட கீர்த்தி இராமாயணமெனும் பக்தி வெள்ளம்
    குடி கொண்ட கோயில் இராமானுசன் குணங் கூறும் அன்பர்
    கடி கொண்ட மாமலர்த் தாள் கலந்து உள்ளங்கனியும் நல்லோர்
    அடி கண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க்கு ஆக்கினரே
    (இராமானுச நூற்றந்தாதி- 37)

    ஓர் அமைதிப் புரட்சியாளராக, உலக மானிட சமூகத்திற்கே பொது நெறியாக வைணவத்தைக் காட்டியவர் உடையவராகிய ஸ்ரீமத் இராமானுசர். அத்தகு அருளாளர் வழியில் இத்தகு ஒப்புயர்வற்ற மனபேதங் கடர்ந்த அருளாளர்கள் தோன்றுவதில் வியப்பில்லை.

    தங்களின் கட்டுரையில் அடியேன் மிக மிக இரசிப்பது தாங்கள் சைவ வைணவ சமரச நோக்கோடு இரு சமயச் செய்திகளையும் கலந்து எழுதுவதையே. ஆக, இதனை எவ்விடத்தும் தொடருமாறு பணிவுடன் வேண்டுகிறேன். அருணகிரிப்பெருமான் வாக்கிலிருந்து வாரியார் பெருமானிலும் இவ்வாறு இருசமய தெய்வங்களையும் ஏற்றிப் போற்றும் பாங்கிருந்திருக்கிறதைக் காண்கிறேன். தாங்கள் அவ்வழியையே நல்வழியாய் தொடர்வது பேருவகை அளிக்கிறது.

    கடற்பேரலைத் தாக்கத்தின் போதும் இலங்கைப் போரனர்த்தங்களின் போதும் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனைச் சார்ந்த துறவரசர்கள் சாதி, மதம் என்ற பிணக்குகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு சென்ற ஆண்டுகளிலும் இப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார்கள் என்றும் அறிகிறென்.

    நீதிசாஸ்திரங்கள் சில அநாதைக்குச் செய்யும் ஈமக்கிரியை அஸ்வமேதம் செய்த புண்ணியம் தரும் என்று கூறுவதையும் எங்கோ சிறுவயதில் படித்த ஞாபகம் வருகிறது. ஆனால் நடைமுறையில் இது பேணப்படாமை ஏன் என்றே தெரியவில்லை..

    தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துகிறோம்.

  3. சக உயிர்களிடத்தில் அன்பும், கருணையுமே உண்மையான இறைவழிபாடு என்பதை விளக்கும் இன்னுமொரு உயர்ந்த அடியார் வரலாறு. சமயநெறி உயர்வானது தான், ஆனால் நடைமுறை யதார்த்தம்?

    நாகப் பட்டினத்தில் சுனாமிப் பேரழிவின் போது, நாட்கணக்கில் கேட்பாரற்று சடலங்கள் அழுகிக் கொண்டிருந்தன. சைவ, வைணவ மடங்கள் எல்லாம் அந்த சீனிலேயே இல்லை. கிறிஸ்தவ மதபிசினஸ்காரர்களுக்கு செத்தவர்களால் என்ன லாபம்? அவர்களும் சீந்தவில்லை.. அரசு இயந்திரமும், போலீசும் அருவருப்பால் முதல் 2-3 நாட்கள் மூக்கைப் பொத்திக் கொண்டிருந்தார்கள், பக்கத்திலேயே வரவில்லை. எல்லா என்.ஜி.ஓக்களும் முகாம்களில் பேனர்களைக் கட்டிக் கொண்டு டிவி சேனலில் தாங்கள் காட்டப் படவேண்டும் என்பதில் மும்முரமாக இருந்தார்கள்,

    அந்த நேரத்தில், ஊடக ஒளிச்சங்களுக்கு அப்பால். முகத்தில் கர்சீப்பைக் கட்டிக் கொண்டு, சடலங்களை ஒவ்வொன்றாக எடுத்து உரிய முறையில் அடக்கம் செய்து கொண்டிருந்தது காக்கி நிஜார் அணிந்திருந்த காவி “கும்பல்” தான். ஆர்.எஸ்.எஸ் காரர்கள்!

    கருணை பற்றியும், மனிதநேயம் பற்றியும் மணிக்கணக்கில் பேசலாம், உபன்யாசம் செய்யலாம். ஆனால் ஒரு துளி செயல் அது எல்லாவற்றையும் விடப் பெரிது.

  4. அன்புள்ள ஜடாயு அவர்களே,

    //சைவ, வைணவ மடங்கள் எல்லாம் அந்த சீனிலேயே இல்லை.//

    //கருணை பற்றியும், மனிதநேயம் பற்றியும் மணிக்கணக்கில் பேசலாம், உபன்யாசம் செய்யலாம். ஆனால் ஒரு துளி செயல் அது எல்லாவற்றையும் விடப் பெரிது.//

    இந்த இணையதளம் பாருங்கள்: https://www.vtseva.com/Relief/TsunamiRelief.asp

    ஒரு சம்பிரதாய சுவாமி, அதுவும் ஆசார ஒழுக்கம் தவறாதவர், சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன் பிடித்துப் பிழைப்பு நடத்த உதவி செய்ததைக் காணலாம். மீன் பிடிக்க வலைகளையும் படகுகளையும் கூட விநியோகம் செய்திருக்கிறார்.

    இன்னொரு தளத்தில் செப்டெம்பர் 11 இல் வந்த ஈ-மெயில் இதோ. இதில் சின்ன ஜீயர் சுவாமி தம்முடைய பக்தர்களுக்குக் கூறும் அறிவுரை: https://www.ramanuja.org/sv/bhakti/archives/sep2001/0100.html

    அதிலிருந்து சில பகுதிகள்:

    “Please contribute in any form or manner by offering your services, special
    resources or talents or by simply writing a check for aiding the victims.
    Please remember that there are countless people who have been affected by
    this tragedy. By merely lending a sympathetic ear to a person who is
    mourning a loss is helping, and any simple action of yours may mean a lot.
    You can lend yourself to a cause that is already underway instead of trying
    to start or initiate one yourself. Remember that it is a fellow human being
    who is in pain and it is our dharma to lend a hand when they need us.
    When
    you have the pure intention to do so unconditionally and with an open heart
    the resources will make themselves available with the Grace of Divinity.”

    ன்ன சொல்ல வருகிறேன் என்றால் இறுதி சம்ஸ்காரத்தில் சைவ/வைணவ மடங்கள் பங்கு கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதற்குத் தீண்டாமையோ சாதியோ ஆச்சாரமோ காரணமாக இருக்காது என்றே நினைக்கிறேன். நன்றி.

  5. //
    இழிகுலத் தவர்க ளேனும்
    எம்மடி யார்க ளாகில்
    தொழுமின் கொடுமின் கொள்மின்
    என்று நின்னொடு மொக்க
    வழிபட அருளினாய்
    //

    கட்டுரையில் மேற்படி சுட்டப்பட்ட திருமாலைப் பிரபந்தப் பாசுரத்தைக் குறித்து இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் உள்ளது. தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூறும் இச்செய்தி காருட புராணத்தில் உள்ளது:

    भक्तिरष्ठविधा ह्येषा यस्मिन्मलेच्छेपि वर्तते
    स विप्रेन्द्रो मुनिः श्रीमान् स यतिः स च पण्डितः
    तस्मै देयं ततो ग्राह्यं स च पूज्यो यता ह्यहं

    முக்கியமாக, ‘यस्मिन्मलेच्छेपि वर्तते’ என்பதற்கு நேராக ‘இழிகுலத் தவர்க ளேனும்
    எம்மடி யார்க ளாகில்’ என்றும், ‘तस्मै देयं ततो ग्राह्यं’ என்பதற்கு நேராக ‘கொடுமின் கொள்மின்’ என்றும், ‘स च पूज्यो’ என்பதற்கு நேராக ‘தொழுமின்’ என்றும் ஆழ்வார் பாடியுள்ளார். “வழிபட அருளினாய்” என்று ஆழ்வார் கூறுவது காருட புராணத்தில் பெருமாள் சொன்னதை நினைவூட்டுகிறது.

    இதன் வியாக்கியானத்தில் பெரியவாச்சான் பிள்ளை “அன்று காருட புராணத்தில் பெருமாள் கூறியுள்ளதை தொண்டரடிப்பொடி ஆழ்வார் அரங்கனிடம் சென்று மீண்டும் நினைவூட்டுகிறார். அதைச் செவியுற்ற அரங்கன் திருப்பாணாழ்வார் விஷயத்தில் செய்தும் காட்டினான்” என்று பொருள்படுமாறு வியாக்கியானம் இட்டிருப்பதாக நினைவு.

  6. ஸ்ரீ பெரியநம்பிகள் என்ற இராமானுசரின் குரு(ஆசார்யன்) ஒரு முறை பரம பாகவதரான ஒரு வைணவ அடியார் மாறநேர நம்பிகள் என்பாருக்கு ஈமகிரியை செய்து வைத்தார். அதுவும் எப்படி ஞானத்திலே,ஒழுக்கத்திலே சிறந்த பெரியவர்களுக்கு மட்டுமே செய்ய கூடியதான பிரம்ம மேத சம்ஸ்காரம் எனப்படும் அந்திம சடங்கு. அந்தணர் அல்லாத மாறநேர நம்பிகளுக்கு இவர் இப்படி செய்ததை கண்டு பொறுக்காத ஒரு சில உயர் சாதி அந்தணர் என்று தங்களை டாம்பீக படுத்தி கொண்டு ஸ்ரீ பெரிய நம்பிகளை பார்த்து “நீர் அந்தணராய் இருந்து கொண்டு அந்தணர் அல்லாத மாறநேர நம்பிகளை எப்படி இப்படிப்பட்ட ஒரு சடங்கை செய்து வைத்தீர் என்ன?” அதற்கு ஸ்ரீ பெரிய நம்பிகள் “சாதியை பார்த்து செய்வது இல்லை இந்த உயர் சடங்கு, பரம வைணவர், கடவுளுக்கும், அடியவர்களுக்கும் தொண்டு செய்வதையே தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்த ஒழுக்கத்திலும் ஞானத்திலும் ஒரு நல்லவர் இந்த மாறநேர நம்பிகள். அவருக்கு இப்படிப்பட்ட ஒரு சடங்கை நான் செய்வதில் எனக்கு ஒரு குறை தெரியவில்லை. மேலும் வேதசாஸ்திரமும் இதை தவறென்றும் சொல்லவில்லையே எங்கும்” என்று கூற அவரை அந்நாளில் பொறாமை கொண்டு கோவில் சார்ந்த எந்த தொண்டுக்கும், அந்தணர் பார்க்கும் காரியங்களுக்கும் வரமுடியாத படி தள்ளி வைத்தனர். ஒரு சித்திரை திருவிழாவில் அரங்கபெருமானின் திருத்தேர் அவர் இல்லம் முன் வர ஸ்ரீ பெரிய நம்பிகளின் மகள் அரங்கன் திருமுன்பு இந்த அவலத்தை முறையிட அரங்கநகர் கடவுள் திருவாய் மலர்ந்து “ஸ்ரீ பெரியநம்பிகள் செய்தது உயர்ந்த காரியமே, ஏதொரு தவறும் அல்ல என்றும், அவரை தன்னருகே அழைத்து தான் சூடிய மாலை, சந்தனம், வெற்றிலை போன்ற மரியாதையுடன் அவருக்கு பிரசாதமாக கொடுத்து, “இந்த சித்திரை தேர் இனி நிலையாக இவர் வீடு முன்னாலே நிற்கட்டும், ஒவ்வொரு சித்திரை திருவிழா திருத்தேர் முடிந்தவுடன் கோவிலின் பூரண மரியாதை ஸ்ரீ பெரிய நம்பிகளுக்கு அளித்து அவரை பல்லக்கில் அழைத்து வீதி வலம வந்து அவர் வீட்டில் விட வேண்டும்” என்று கோவில் அதிகாரிகளுக்கும் மாற்றிய வைணவ பெருமக்களுக்கும் ஆணை இட்டார். ஆகவே குலமோ, சாதியோ தடை இல்லை இறை தொண்டு புரிய, கலைகள் பல கற்க. தூய ஒழுக்கமும், நன்னடத்தையும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான இறை பக்தியும் தேவை. அவ்வளவே.

  7. ஜடாயு சொல்வதை ஒருவிதத்தில் ஏற்கலாம். ஆனால் திரிதண்டி ஜீயர் ஸ்வாமிகள் செய்கிறார் என்பதையும் ஒத்து கொள்ள வேண்டும். ஆனால் மற்ற மடங்கள், சைவ வைணவ இயக்கங்களும் எங்க சார்?? என் திரிதண்டி ஜீயங்காரு தான் ஒரே வைணவ மடமா? ஏன் ஒரு சில மடங்களும், ஆன்மீக இயக்கங்களும் நடுவில் வந்த பிற்போக்கு தனமான கொள்கைகளை கட்டி கொண்டு அழுகின்றன. வெறுமனே ஆன்மீக சொற்பொழிவு, ஆன்மீக புஸ்தக வெளியீடு,கோவில் கட்டுவது, கும்பாபிஷேகம் செய்வது என போய் கொண்டிருப்பது ஒரு புறம் இருந்தாலும், மிகவும் அவசியமும், முக்கியமானவையும் ஆன மக்கள் தொண்டும் இருத்தல் வேண்டும். இல்லை எனில் சுனாமி வந்தப்போ இவளோ பெற மதம் மாத்திட்டாங்க, மிஷனரி வேலை என்று கூவினால் கதைக்கு ஆகாது !!!

  8. மதிப்பிற்குரிய திரு ss அவர்களே,

    த்ரிதண்டி சின்ன ஜீயரை ஒரு உதாரணமாகத் தான் காட்டினேன். அவர் மட்டும் தான் செய்கிறார் என்று ஆகிவிடாது.

    எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன். தவறானால் பொறுத்தருளவும். எல்லா சைவ/வைணவ/சாக்த மடங்களும் அன்ன தானம், கோயில் திருப்பணி, பள்ளிக்கூடங்கள் என்று ஏதோ ஒரு ரூபத்தில் சமூகத்திற்கு உதவி செய்துக் கொண்டு தான் இருக்கின்றன. பொதுவாக நல்ல தொண்டு செய்யும் ஒரு இயக்கம் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஊடகங்களின் கண்ணுக்குப் படும் விதமாக வந்து சேவை செய்யவில்லை என்றால், அதன் கழுத்துக்கு நேராகக் கத்தியை நீட்டிக் கேட்பதைப் போல “ஏன் அன்றைக்கு அங்கு வரவில்லை?” என்று கேட்பதில் அர்த்தமில்லை என்றே நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து பல கோயில்களில் பல பக்தர்கள் சுனாமி நிவாரண நிதி அளித்துள்ளார்கள்.

    சின்ன ஜீயர் பக்தர்கள் சமூக நற்பணிகளைப் பற்றி ‘டாண் டாண்’ என்று வலைத்தளத்தில் update செய்து எழுதி வருகிறார்கள். மிகவும் பாராட்டத்தக்க ஒரு coordination மற்றும் communication-இன் விளைவு என்றே நினைக்கிறேன். வேறு சிலருக்கு இப்படிச் செய்ய சந்தர்ப்பம் இல்லாமல் இருக்கலாம், அதற்காக அவர்கள் ஒன்றுமே செய்வதில்லை என்று கொள்வது சரியாகுமா?

    // ஏன் ஒரு சில மடங்களும், ஆன்மீக இயக்கங்களும் நடுவில் வந்த பிற்போக்கு தனமான கொள்கைகளை கட்டி கொண்டு அழுகின்றன. //

    ஆங்காங்கு கசடுகள் இருக்கத் தான் இருக்கும். இதற்கென்ன செய்ய? நாம் இருப்பது utopia அல்லவே. முயற்சி செய்துகொண்டு தான் இருக்க வேண்டும்.

    பொதுவாக மேலும், “இவர்கள் செய்தாரா அவர்கள் செய்தாரா” என்று பார்ப்பதை விட ஒவ்வொருவரும் “நாம் சொந்தமாக என்ன செய்தோம்” என்ற கேள்வியைத் தான் கேட்க வேண்டும் – இந்த நிலை வந்தாலே எல்லாம் நன்றாக நடக்கும் என்று நினைக்கிறேன்.

    சொன்னதில் தவறிருந்தால் மன்னிக்கவும்.

  9. சிறந்த கட்டுரை, சமயங்கள் சாதி பேதம் கடந்தவை என உரைக்கும் கட்டுரை.
    உமாபதி சிவம் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை போன்று உள்ளது.

    சோமசுந்தரம்

  10. Several Hindu organizations jumped in even while the tsunami and its aftereffects was lashing and carried through their relief activities for several months later. However, consistent with the Sanathana Dharma’s shastric injunctions, the traditional mutts refrain from publicizing their dharmic activities.

    I am personally aware of several scores of volunteers from Sri Kanchi Mutt, together with local population, were the first ones on the scene marshalling local resources to help over 200 fishermen villages all the way from Cuddalore to south of Nagapattinam. They used several innovative techniques, including exploiting the reach capabilities of FM radio stations to appeal and direct the help to the most needed areas. The help extended by Sri Kanchi Mutt covered all aspects of protecting, helping families recover and to rehabilitate. However, such “traditional” organzations as Sri Kanchi Mutt do not spend any time claiming credit for their work because they view makkal sevai even more important than Mahesan sevai. I am not connected with any of such traditional organizations, but I wish to point this out just to clarify that we should refrain from mimicking broad-based stereotyping engaged in by forces engaged in establishing such negative images of our own fellow religious organizations.

    Sri Mata Amritananda Mayi’s organization also extended similar outstanding help. There are quite a few other similar instances that I am personally aware of.

    Of course, RSS has always been at the forefront of helping people all over the country regardless of peoples’ background during any kind of emergency. But while praising RSS’ activities, we also need to emphasize that various other Hindu organizations also have been trying their level best to help people in need without paying attention to the peoples’ religion, caste or other kinds of silly considerations despite severe constraints they face.

  11. Pingback: Indli.com
  12. ///The help extended by Sri Kanchi Mutt covered all aspects of protecting, helping families recover and to rehabilitate. However, such “traditional” organzations as Sri Kanchi Mutt do not spend any time claiming credit for their work because they view makkal sevai even more important than Mahesan sevai. ///

    முழுக்க முழுக்க உண்மை. சுனாமி வந்தது, காஞ்சிப் பெரியவர் கைது செய்யப்பட்டபின் 46 ஆவது நாள். அவரது மடத்தின் சார்பில், பாலபெரியவர் ஆணைக்கிணங்க பலவிதமான உதவிகள் பக்தர்களால் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பொருள்களில் சிலவற்றை நேரடியாக விநியோகிக்க அரசு அதிகாரிகளின் எதிர்ப்பு வந்தபோது, இரண்டு லாரிப் பொருள்களை ஆர்.எஸ்.எஸ் மூலம் விநியோகிக்க சில பக்தர்கள் ஏற்பாடு செய்தனர். பெரியவர் வெளிவந்தபின்னர் சிலகாலம் விழுப்புரத்தில் தங்கியிருந்து கரையோரப் பகுதிமக்கள் நித்தமும் அவரை வந்து நேரில் அணுகிப் பலதரப்பட்ட உதவிப் பொருள்களையும், உதவிகளையும் பெற்றுச்சென்றனர். இவற்றை நான் நேரில் கண்டேன். சில நாட்களிலேயே அப்படி உதவிபெறுவோர் எண்ணிக்கை சில ஆயிரத்தைத் தொட்டது. இது கண்டு பொறுக்காத அன்றைய ஆட்சியாளர் அவர்மீது திருக்கருங்குடியில் சிவலிங்கம் திருடியதாக வழக்குப் பதிவு செய்து அவரை விழுப்புரத்தில் இருக்கவிடாமல் செய்தனர்.

    ஹிந்து மதத்தைப் பொருத்தமட்டில் அரசின் அடக்குமுறை சுனாமி ஆழிப் பேரலை வருவதற்கு 46 நாட்கள் முன்னர் வந்துவிட்டதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *