தீர்த்த கரையினியிலே……

January 6, 2011
By

p1அடையாறு கலாக்ஷேத்திராவின் மத்திய பகுதியில் மரங்களும் மலர்ச்செடிகளும் அடர்ந்த பசுஞ்சோலையின் நடுவே இருந்த அல்லிதடாகம்  இப்போது ஒரு அழகான குளமாக்கப் பட்டிருக்கிறது. மூலைகளில் சிறு மண்டபங்களின் கீழே சீராக செதுக்கப்பட்ட  படிகற்கள், இருபக்க படிகளுக்கிடையே   பரவிநிற்கும்  பசும் புல்திட்டுக்கள்.

குளத்தின் ஒருகரையின் மத்தியில்  கல் மண்டபம். குளத்தின் தெளிவான நீரில் மிதக்கும் தாமரை இலைகள். படிகளில்  அங்காங்கே வசதியாக உட்கார சதுர வடிவ குஷின்கள். குளத்திற்கு வெளியே சில நாற்காலிகள்.

முன்பனி காலமாதலால் பரபரவென்று இருள்பரவ துவங்கிற அந்த வேளையில் மாணவிகள் அகல்விளக்குகளை ஏற்றுகிறார்கள்.

மூங்கிலில் பேப்பர் ஒட்டி தயாரிக்கப்பட்ட சட்டையை அணிந்து படிகளிலும், புல் தரைகளிலும் விளக்குகள் பரவிநிற்கின்றன. குளத்திலும் சில விளக்குகள் மிதக்கின்றன. இருட்டில் அந்த  மெல்லிய இதமான வெளிச்சம், நறுமணம் பரப்பும் அகில் புகை சூழலை ரம்மியமாக்குகிறது.  குளத்தின் படிகள் கரைகளிலும் அதைத் தாண்டியிருக்கும் தோட்டப் பகுதிகளிலும்  இருட்டில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அறிவித்தபடி சரியாக 6.30 மணிக்கு கல்மண்டபத்தில் மட்டும் மின் விளக்குகள் பளிச்சிட நமஸ்காரம் என்ற இனிய குரலுடன் நிகழ்ச்சி துவங்குகிறது.

“டாக்டர் பத்மாஸினி கலாக்ஷேத்திராவின் நிறுவனர்களில் ஒருவர். நிறுவனர் ருக்மணியுடன் இதை உருவாக்க உறுதுணையாகயிருந்தவர். வார்டன், டீச்சர். டான்ஸ் டீச்சர் ருக்மணி அத்தையின் செகரட்டரி இப்படி ஒரே நேரத்தில் பல அவதாரங்களில்  இந்த நிறுவனத்தின் முதுகெலும்பாக இருந்தவர். அவரது நினைவாக இந்த அல்லிகுளத்திற்கு பத்மபுஷ்கரணி எனப் பெயரிட்டு இதை இசை நிகழ்ச்சிகள் நடத்த திறந்தவெளி அரங்கமாக அர்பணிக்கிறோம்”

என்று மிக சுருக்கமான அறிமுகத்துடன், அன்றைய இசை நிகழ்ச்சிக்கு அழைக்கபட்டிருந்த டி.எம் கிருஷ்ணா கலாக்ஷேத்திராவின் புதிய முயற்சிக்கு ஒத்துழைப்பு தந்ததற்கு நன்றி சொல்லப்படுகிறது. சொல்லுபவர் அதன் பாரம்பரியத்தைப் போஷிக்கும் பொறுப்பேற்றிருக்கும்   தலைவரான திருமதி லீலா சாம்ஸன்.

அன்றைக்கு மிக நல்ல பார்மிலிருந்த டி. எம் கிருஷ்ணா ரசிகர்களை  தன் குரலால் கட்டிபோட்டிருந்தார்.  சம்ஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் மாராட்டி, தமிழ் என ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வோரு ராகத்தில் ஒரு பாடல்.

p18“காலைத் தூக்கியாடும் தெய்வமே” என்ற தமிழ் பாடல் பாடும்போது பக்தி பரவசத்தில் அவரும்  கேட்டோரும் நெகிழ்ந்தது நிஜம். நிகழச்சியின் துவக்கத்தில் சிவப்பு பட்டு  ஜிப்பா, தரையை தொடும் நீண்ட வெள்ளை அங்கவஸ்திரம் என்று கலக்கலாக வந்து அமர்ந்த கிருஷ்ணாவை கைதட்டி வரவேற்ற ரசிகர்களைப் பார்த்து வாயில் விரல்வைத்து அமைதியாக இருக்கச்சொல்லி சைகை காட்டியதாலோ என்னவோ  அன்று அவருக்கே உரிதான  ஸ்டெயிலான   கைகளை உயர்த்தி விரித்து ஆட்டி ஸ்வரங்களை நிரவல் செய்து கொண்டு உச்சத்தை தொட்டபோது கூட ஆர்ப்பாட்டமான கரகோஷங்கள் இல்லாமல்  அனைவரும் அமைதியாக ரசித்து பாடல் முடிந்த பின்னரே கைதட்டியதில் வந்திருந்த  ரசிகர்களின் தரம் புரிந்தது.

ஒலிக்கட்டுபாடு,  டிடிஸ் ஸிஸ்டம்  பொருத்தப் பட்ட பெரிய ஏர்கண்டிஷன் அரங்கங்களை விட திறந்த வெளியில் இசையையும், வயலினையும்  துல்லியமாக கேட்க முடிந்தற்குக் காரணம் கலாஷேத்திராவின் நல்ல ஆடியோ சிஸ்டம் மட்டுமில்லை; ரசிகர்களின் ஒத்துழைப்பும் தான்.

“60களில் நான் படிக்கும் காலத்தில் சற்று பெரிய நீர் தேக்கமாகயிருந்த  இந்த இடம் இன்னும் அழகான காடாயிருந்தது. நீர்த்தேக்கதில் இரண்டு பாம்புகள் நாடனமாடிக்கொண்டிருந்தை பார்த்த நினைவுகூட இருக்கிறது”  என்று சொல்லும் திருமதி லீலாஸாம்ஸனின்  எண்ணத்தில் உதித்தது  இந்த  ”புஷ்கரணியில் சங்கீதம்” என்ற புதிய முயற்சி.

p5”இது நான் முயற்சிக்கும் புதிய விஷயம் இல்லை. பண்டைய காலங்களில் குளங்களின் மண்டபங்களில் கச்சேரிகள் நடப்பது வழக்கமாயிருந்தது.”

என்று அடக்கத்துடன் சொன்னாலும் வெறும் மழைநீர் சேர்ந்துகொண்டிருந்த குட்டையை  4 மாதங்களில் இப்படி அழகான இடமாக்கியதில் இவர் பங்கு கணிசமானது. அன்று இசைநிகழ்ச்சி துவங்குமுன் இதற்காக உழைத்த தோட்டப் பணியாளர்களை பரிசளித்து கவுரவித்தது இவர் தோட்டத்தை மட்டுமில்லை உழைப்பவ்ர்களையும் நேசிப்பவர் எனபதைப்  புரிய வைத்தது.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது, ஒரு நல்ல கச்சேரியை ஒரு நல்ல இடத்தில் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று பேசிக்கொள்வது காதில் விழுந்தது. அவருக்கு தெரியுமோ என்னவோ  இந்த சீஸனில் கலாக்ஷேத்திராவின் இசைவிழாவில் பாடவிருக்கும் இளம் கலைஞர்கள் இங்குதான் பாடப்போகிறார்கள் என்பது.

Tags: , , , , , , , , , , , , , , ,

 

5 மறுமொழிகள் தீர்த்த கரையினியிலே……

 1. snkm on January 6, 2011 at 2:31 pm

  நன்றி! அருமை! இயற்கையை அழிக்காமல் மெருகு ஏற்றி நாம் பயன் படுத்தலாம்! பாராட்டுக்கள்! நன்றி!

 2. g ranganaathan on January 6, 2011 at 5:37 pm

  மார்கழி இசைவிழா என்று தற்போது திருவல்லிக்கேணி பார்த்தசாறது கோவில் திருக்குளத்தினுள் முன்னணிக் கலைஞர்களின் இசைநிகழ்சிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால் குளத்தின் வெளியே சிங்கார சென்னைக்கே உரித்தான குப்பையும் கூளமும். திருக்கோயில் நிர்வாகம் மனதுவைத்தால் அழகிய சூழலை உருவாக்கலாம் .வழக்கம் போல உபயதாரர்களை அறநிலையத்துறை இதற்கும் எதிர்பார்கிறதோ?

 3. rajan on January 7, 2011 at 12:00 pm

  …….”ஒரு நல்ல கச்சேரியை ஒரு நல்ல இடத்தில் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று பேசிக்கொள்வது காதில் விழுந்தது. அவருக்கு தெரியுமோ என்னவோ இந்த சீஸனில் கலாக்ஷேத்திராவின் இசைவிழாவில் பாடவிருக்கும் இளம் கலைஞர்கள் இங்குதான் பாடப்போகிறார்கள் என்பது.” ……. உண்மைதான் .. இப்படிப்பட்ட சூழ்நிலை பாடுகிரவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் ஓர் புதிய அனுபவம்

 4. ArvindV Mani " Mr.Cool " on January 9, 2011 at 5:51 pm

  chennaivasigalukku dec-jan oru varapasadham !
  athilum, kalashetravin in the muyarchi paaratathakakthu !
  entha ventureai / effortsai, matravahalukum sollalame !
  nanri !
  – arvind v mani

 5. Bala Sreenivasan on January 11, 2011 at 7:12 am

  குறுகிய கண்ணோட்டங்களில் இருந்து விடுவித்து மனதையும் செயலையும் கலை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதற்கு உதாரணம் லீலா அக்கா. எளிமை, இனிமை ஆனால் அதே நேரத்தில் செயல்பாடுகளில் உறுதி இவற்றுடன் ருக்மிணிதேவி அருண்டேல் அவர்களின் கனவையும், பாரம்பரிய கலை வடிவங்களின் பெருமையையும் பல இடையூறுகளுக்கு இடையில் கட்டிக்காத்து வரும் ஒரு உன்னத பெண்மணி. கலாக்ஷேத்திரா நிகழ்சிகளுக்கு வந்து விட்டு திரும்பும்போது வாசலில் விட்டு சென்ற காலணிகளை தேடிக்கொண்டிருக்கும் முதியவர்களுக்கு தானே ஓடிப்போய் அவற்றை அக்கறையாக தேடி, கையில் எடுத்து வந்து தரும் அசர வைக்கும் மென்மை, கனிவு, பணிவு, பாரம்பரியத்தில் நம்பிக்கை ஆனால் சீர்திருத்தத்தில் நாட்டம். இன்னும் நம்மை சுற்றி நல்லவைகள் உள்ளன என்ற நம்பிக்கையை ஏற்படுத்துபவை கலாக்ஷேத்ராவும் அதன் இயக்குனரும்.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*