தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 2

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – பகுதி 1

(தொடர்ச்சி…)

 

aathisangarar

அன்று தமிழ்பேசும் இடமாக இருந்த காலடி என்னும் இன்றைய கேரள கிராமத்தில் பிறந்த எட்டாம் நூற்றாண்டு ஆதிசங்கரர், தனக்கும் ஒரு சண்டாளனுக்கும் இடையே நேர்ந்த ஒரு சந்திப்பில் நடந்த உரையாடலை அவரது மனிஷா பஞ்சகம் விவரிக்கிறது. காசியில் இருந்தபோது சங்கரர் ஹரி காட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறார். வழியில் ஒரு மயானம் குறுக்கிடுகிறது. அங்கு எதிர்ப்பட்ட ஒரு சண்டாளனை நோக்கி, ”என் வழியை விட்டு ஒதுங்கி நில்!” என்று சங்கரர் சொல்கிறார். அதற்கு அந்தச் சண்டாளன், வேதாந்தத்தையே உலகுக்கு உணர்த்திய சங்கரரை நோக்கிக் கேட்கிறான், “வேதங்களையும் உபநிஷத்துக்களையும் கற்றுணர்ந்து உலகுக்கு போதித்த ஆசாரியரே, நீங்கள் விலகி நிற்கச் சொல்வது யாரை? இந்த உடலையா? அல்லது இந்த உடலில் இருக்கும் ஆத்மாவையா? இந்த உடலைத்தான் விலகி இருக்கச் சொல்கிறீர்கள் என்றால், உங்கள் உடலும் என் உடலும், ஒரே மண்ணால் செய்யப்பட்ட பெரிதும் சிறிதுமான, கரியவும் சிவந்ததுமான நிறம் மட்டுமே மாறும் பானகள் போலத்தானே? ஒரே பொருளால் ஆனவைதானே? அப்படியிருக்க ஓர் உடல் இன்னோர் உடலை விலகியிருக்கச் சொல்வது எப்படி? எல்லாமே நீங்களே சொல்லியுள்ள மாயை தானே. அப்படியிருக்க ஒரு மாயை இன்னோர் உடலை மாயையை விலகி இருக்கச் சொல்வது எப்படி? மாயையின் ஒரு துண்டு இன்னொரு துண்டை ஏன் விலகச் சொல்லவேண்டும்? நீங்கள் விலகி இருக்கச் சொன்னது இவ்வுடலில் இருக்கும் ஆத்மாவை என்றாலோ, அது உங்களுக்கே தெரியும்; ஆத்மா என்று சொல்லப்படுவது ஒன்றே. அது துண்டு துண்டுகளாகப் பிளவுபடாதது. வெவ்வேறு இடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் தனித்தனியாகக் பிரதிபலிக்கக் காணும் சூரியன் போல, வெவ்வேறு பானைகளில் நிரம்பியிருக்கும் தண்ணீர் போல, நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கும் காற்றைப் போல, உங்கள் உடலில் உறைந்திருக்கும் ஆத்மாவும் என் உடலில் உறைந்திருக்கும் ஆத்மாவும் ஒன்றேயல்லவா? பின் எதை எதனிடமிருந்து ஒதுங்கி இருக்கச் சொல்கிறீர்கள், ஆசாரியரே?” என்று அந்தச் சண்டாளன் கேட்கவே சங்கரர் பிரமித்துப் போய் வாயடைத்து நின்று விடுகிறார்.

ஒரு சண்டாளன், படிப்பறியாதவன், மயானத்தில் வேலை செய்பவன், பாரதத்தில் க்ஷீணமடைந்துள்ள ஹிந்து மதத்திற்குப் புனர்ஜீவனம் கொடுத்து வேதங்களுக்கும் உபநிஷத்துக்கும் விளக்கம் கொடுத்துள்ள தன்னை, தன்னைப்போன்ற ஓர் ஆசாரியனைப் பார்த்து, தான் உலகுக்கு உபதேசித்ததையே தனக்குச் சொல்லிக்காட்டி, இப்படியெல்லாம் உபதேசித்த நீயே இப்போது இப்படிப் பேசுகிறாயே என்று தன்னை திக்குமுக்காடவைத்து விட்ட சம்பவத்தை, தானே உலகறிய எழுதியும் வைக்கும் செயல், தன்னை விமர்சிக்கும், தன்னில் ஆழ்ந்து தன்னைத் திரும்பி நோக்கும் செயல் என்றுதான் சொல்ல வேண்டும். தன்னையே தனக்குரைத்துக்கொள்ளும் செயல். இதெல்லாம் கட்டி விட்ட வெறும் கதை என்று சொல்பவர்கள் இருக்கக் கூடும். அப்படிச் சொல்பவர்கள், கல்வியறிவில்லாதவனும் தாழ்ந்த குலத்தவனுமான ஒரு சண்டாளன், ஆசாரியனான தன்னையே விசாரணக்குட்படுத்திவிட்ட ஒரு சம்பவத்தை, கற்பனை என்று சொல்லித் தட்டிக்கழிக்க முயன்றாலும், அந்தக் கற்பனையை அவன் ஏன் தன்மேல் சுமத்திக்கொள்ள வேண்டும்? மேலும், இதுகாறும் கடந்து வந்துள்ள 13 நூற்றாண்டுகளாக அதை அழியாது காத்து வந்துள்ள சமூகம், சுய விசாரணயும் திரும்பத் திரும்ப தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் குணம் கொண்டதுமான சமூகம் இந்த ஹிந்து சமூகம் என்பதைத்தான் இன்றும் மறையாதிருக்கும் மனிஷா பஞ்சகம் சாட்சியப்படுத்துகிறது. தன் களங்கங்களையும் வெளிப்படுத்திக்கொள்ளும், தன்னை அவ்வப்போது சுய விசாரணை செய்து கொள்ளும் சமூகம் அல்லவா இது!

எந்தப் பழக்கங்களை, சிந்தனைகளை இந்த விசாரணை கண்டனம் செய்கிறதோ அவை இன்னும் ஜீவித்திருப்பது வாஸ்தவம்தான். ஆனால், இத்தகைய கண்டனங்களும் சுய விமர்சனங்களும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாக, தத்துவ தரிசிகளாலும் கவிஞர்களாலும் மகான்களாலும் தொடரப்பட்டு வந்துள்ளன. அந்த விசாரணைகள் தத்துவ நூல்களாக, கவிதைகளாக, காப்பியங்களாக, போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது மனங்கொள்ள வேண்டிய உண்மையல்லவா? அது அவ்வளவு சுலபமாகப் புறந்தள்ளப்படக்கூடும் ஒன்றல்ல.

தமிழகத்தில் ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையான, இடைப்பட்ட காலத்தில் தோன்றிய ஆழ்வார்களும் ஹிந்து மதத்தை ஜனநாயகப்படுத்த முயன்றார்கள். தெய்வத்தை மக்களுக்கு அருகே கொண்டு வந்தார்கள். மக்கள் தாமறிந்த தம் மொழியிலேயே கடவுளுடன் பேச, தொழ, காதல் செய்ய, அவ்வப்போது கோபித்துக்கொள்ளவும் மிரட்டவும் கற்றுக் கொடுத்தார்கள். சைவ சமய நாயன்மார்கள் போல, ஆழ்வார்களிலும் நாம் அரசர்களையும், வைசியர்களையும், பிராமணர்களை மட்டுமல்ல, தாழ்ந்த சாதியைனராகக் கருதப்பட்ட பாணர்களையும் காண்கிறோம். சைவ நாயன்மாரிடையே காணும் திருநீலகண்ட யாழ்ப்பாணரைப் போல் ஆழ்வார்களிடையேயும் ஒரு திருப்பாணாழ்வாரும் இடம் பெற்றுள்ளார். திராவிட வேதமாகச் சிறப்பிக்கப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் மொத்தம் நாலாயிரம் பாசுரங்களில், பெருந்தொகையில் 1296 பாசுரங்கள் பாடியுள்ள நம்மாழ்வார், ஆழ்வார்களிலேயே சிறப்பாகக் போற்றப்படுபவர். தத்துவார்த்த சிந்தனை கொண்டவர். எல்லோரையும் விட அதிக அளவில் பின் வந்த ஆசாரியர்களின் வியாக்கியானச் சிறப்புப் பெற்றவர். அந்த நம்மாழ்வாரே தன் பாசுரம் ஒன்றில், தான், தாழ்ந்தோரிலும் தாழ்ந்த சண்டாளன் ஒருவன், நாராயணனின் நாமத்தைப் பஜித்தாலே போதும்; அந்தச் சண்டாளனுக்கும் அடியவனாகவே தன்னைக் கருதுவதாகச் சொல்கிறார்.

thiruppaanazhwarதிராவிட வேதமாகப் போற்றப் படும் ஆழ்வார்கள் பாடி அருளியுள்ள நாலாயிரம் பாசுரங்களும், பெருமாள் கோயில்களில் பிரார்த்தனையின் ஓர் இன்றியாத அங்கமாகப் பாடப்பட்டு வருகின்றன. ஆசாரியர்களிலேயே தன் ஆசார அனுஷ்டானங்களைக் கடுமையாகப் பின்பற்றுபவரான, வேதாந்த தேசிகர், பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவருக்கு வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஆழ்வார்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஸ்தானத்தைப் பற்றி பலத்த சந்தேகங்கள் இருந்தன. அவர்கள் பிறந்த ஜாதியின் காரணமாக, அவர்கள் பூஜிக்கத் தகுந்தவர்களாவார்களா என்ற பலத்த சந்தேகம். அவர் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. தேசிகர் பிராமணர். அவர் தன் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும்படி தன் குரு, பெரியவாச்சான் பிள்ளையை அணுகினார். அவர்தம் குருவும் பிராமணர்தான். தன் தினப்படி பூஜைக்கு ஏற்ற ஒரு மூர்த்தியைக் காட்டி அருளவேண்டும் என்று கேட்க, அதற்கு அவர் குரு, “உனக்கு ஏற்ற மூர்த்தி எது எனக் கண்டு கொள்ள, நீயே உன் பூஜை அறைக்குச் சென்று கண்களை இறுக மூடிக்கொண்டு, அங்குள்ள மூர்த்திகளில் ஏதாகிலும் ஒன்றைத் தொடு. உனக்கேற்ற மூர்த்தி உன் விரல்களுக்கிடையில் அகப்படும்!” என்று சொல்லி அனுப்பி விடுகிறார். தெய்வமே அவருடன் விளையாடிவிடுகிறது. தன் குரு உபதேசித்தவாறே, வேதாந்த தேசிகர் தன் வீடு சென்று பூஜை அறையில் உள்ள மூர்த்திகளை கண்களை மூடித் தொட்டபோது ஆழ்வார்களிலேயே தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த திருப்பாணாழ்வார் மூர்த்திதான் அவர் கையில் அகப்பட்டது. வைசியரோ, க்ஷத்திரியரோ கூட இல்லை. திகைத்துப் போன வேதாந்த தேசிகர் தன் குருவிடம் நிகழ்ந்ததைச் சொல்ல, குரு, “உன்னை அரித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கு தெய்வமே பதில் தந்துவிட்டதல்லவா? இனி நீ, திருப்பாணாழ்வாரைப் பூஜிப்பது மட்டுமல்ல, அவரது, ‘அமலனாதி பிரான்…’ என்று தொடங்கும் அவரது பாசுரத்திற்கே உரையெழுதும். அப்போதுதான் நீர் செய்த அபசாரங்களுக்கு பெருமாளின் மன்னிப்பு கிடைக்கும்!” என்றும் கட்டளையிடுகிறார். தன் குருவின் கட்டளைப்படி, தேசிகாச் சாரியாரும் ‘அமலனாதிபிரான்’ என்று தொடங்கும் பத்துப் பாசுரங்களுக்கும் வியாக்கியானம் எழுதித் தன் குருவிடம் சமர்ப்பிக்கிறார். அதுதான் முனிவாகன போகம் என்று கீர்த்தி பெற்றது. இது குருபரம்பரைப் பிரபாவத்தில் சொல்லப்படும் செய்தி.

இதே திருப்பாணாழ்வார் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, காவிரிக் கரையில் நின்று கொண்டு தன் யாழை மீட்டிக்கொண்டே பெருமாளைப் பாடித் துதித்து வருகையில், பெருமாள் லோகசாரண்ய முனிவரின் கனவில் தோன்றி ”காவிரிக்கரையில் நின்று பாடிக்கொண்டிருக்கும் திருப்பாணாழ்வாரை உம் தோளில் சுமந்து கோவிலுக்கு இட்டு வாரும், யாம் அவர் பாட்டைக் கேட்க ஆவலாயிருக்கிறோம்,” என்று கட்டளையிட்ட கதையும் குரு பரம்பரைப் பிரபாவத்தில் சொல்லப்பட்டுள்ளதுதான்.

sri-ramanujar1

பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் நீண்ட காலம் வாழ்ந்த இராமானுஜாச்சாரியாரின் முயற்சியில்தான் மிகப் பெரும் எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்து எல்லா சாதி மக்களும் வைஷ்ணவர்களாக மாற்றப்பட்டு அவர்களிடையே முன்னர் இருந்த சாதி வேறுபாடுகள் களையப்பட்டு சம அந்தஸ்து பெற்றவராயினர்.

குருபரம்பரைப் பிரபாவம் இராமானுஜர் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளை வர்ணிக்கிறது. இராமானுஜர் தம் குரு திருக்கோட்டியூர் நம்பி தமக்கு உபதேசித்த திருமந்திரத்தை அவர் ஆணைப்படி ரகசியமாக தனக்குள் வைத்துக்கொள்ளாது, கோயில் கோபுரத்தின் உச்சிக்குச் சென்று கூடியிருக்கும் எல்லா மக்களும் கேட்க அந்த ரகஸ்யத் திருமந்திரத்தைச் சொல்ல, திருக்கோட்டியூர் நம்பி, கோபம் கொண்டு, குருவின் ஆணையை மீறிய அபசாரத்திற்கு இராமானுஜன் நரகத்திற்குத்தான் போவார் என்று சபிக்க, அதற்கு இராமானுஜர், திருமந்திர உபதேசத்தைக் கேட்ட அத்தனை ஆயிரம் மக்களுக்கும் முக்தி கிடைக்குமாயின், குருவின் ஆணையை மீறியதற்கு தான் ஒருவன் நரகத்திற்குப் போனால்தான் என்ன? அதையே தான் விரும்புவதாகச் சொன்னாராம்.இராமானுஜரின் வாழ்க்கை முழுதிலுமே இந்த உணர்வு பரவியிருக்கப் பார்க்கிறோம்.

குரு பரம்பரைப் பிரபாவம் இது போன்ற, இராமானுஜர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பலவற்றைச் சொல்கிறது.

திருக்கச்சி நம்பிகள் செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். அவர் பெருமாள் சன்னதியில் பெருமாளின் ஆணைப்படி ஆலவட்டம் வீசும் பணியை மேற்கொண்டவர். தினம் பெருமாளுடன் பேசிக்கொண்டிருந்தவர். இதன் காரணமாகவே நம்பிகளின் பாதத் தூளியை தொட்டுத் தன் உடல் முழுதும் பூசிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டவன் ஒருவனை நம்பிகள், ”ஏனப்பா இதென்ன செய்கிறாய்?” என்று கேட்க, அதற்கு அந்த எளியவன், “பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள், தங்கள் பாதத் தூளியைத் தொட்டுப் பூசிக்கொள்ளும் எனக்கு மோக்ஷம் உண்டா, என்று” என்று கேட்கிறான். நம்பிகளும் பெருமாளிடம் கேட்டு அவனது எண்ணம் நிறைவேறும் என்று உறுதிகூற, அந்தச் செய்தி சொல்லப்படுகிறது.

குரு பரம்பரை சொல்லும் இன்னொரு கதை விசேஷமானது. திருக்கச்சி நம்பிகளை தன் வீட்டிற்கு அழைத்து அவருக்கு உணவளித்து, அவர் உண்ட உணவின் மிச்சத்தை உண்பது விசேஷம் என்று எண்ணிய இராமானுஜர் திருக்கச்சி நம்பிகளிடம் தம் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுகிறார். இது வர்ணாசிரம தர்மத்துக்கு விரோதம் என்று நம்பிகள் மறுத்தும், இராமானுஜரின் பிடிவாதத்திற்கு இணங்க, இராமானுஜர் தன் மனைவியிடம் திருக்கச்சி நம்பிகளுக்கு போஜனம் செய்விக்கச் சொல்லி கோயிலைப் பிரதக்ஷிணம் செய்து திரும்பலாம் என்று செல்கிறார். வீடு திரும்பிய இராமானுஜர் முன், நம்பிகளுக்கு உணவளித்து அவர் உண்ட இலையை எடுத்தெறிந்து, பின் அந்த தோஷ நிவர்த்திக்காக நீராடி, வேறு உடை தரித்து நிற்கிறார் அவர் மனைவி. இது இராமானுஜர் தன் மனைவியின் செயலால் வேதனையடைந்த காரணங்களில் ஒன்று.

பெரியநம்பிகள் தன் மனைவியுடன் இராமானுஜர் இல்லத்தில் தங்கியிருக்க, இராமானுஜர் மனைவிக்கு இது சங்கடத்தை உண்டு பண்ணுகிறது. பிராமணர் அல்லாத பெரிய நம்பியின் தேவி கிணற்றிலிருந்து இறைத்த நீர் இராமானுஜர் தேவியின் பாத்திரத்தில் தெளிக்க அது தோஷமடைந்த கோபம் சண்டையில் முடிகிறது. வீடு திரும்பிய இராமானுஜர் என்ன விஷயம் என்று கேட்க இராமானுஜரின் மனைவி தன் பாத்திரம் தோஷமானதைச் சொல்கிறார். அதுவே இராமானுஜர் தன் மனைவியைத் துறந்து சன்னியாசமாகக் காரணமாகிறது. “முன்னர் ஒரு முறை பொறுத்தோம்; இனி பொறுப்பதற்கில்லை!” என்று மனைவியைத் தன் பிறந்தவீடு போகச் சொல்லி, தானும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இப்படியான செய்திகள் பல நமக்கு குரு பரம்பரைப் பிரபாவத்தில் சொல்லப்படுகின்றன. வைஷ்ணவக் கோயில்களில் தினசரி ஆராதனையாக, திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள் பாடப்படுவதும், அரையர் சேவையில் தாழ்த்தப்பட்டோர் வாத்தியங்களான பறை முதலானவை பயன்படுத்தப்படுவதும், முத்துக்குறி போன்ற கிராமிய வடிவங்கள் அரையர் சேவையில் இடம் பெறுவதும் சமூகத்தில் எழுப்பப்பட்டிருந்த ஜாதி ரீதியான வேலிகளை அகற்றுவதில் இராமானுஜரின் வைஷ்ணவம் அவர் வாழ்ந்த காலத்திலிருந்தே தன் அணுகலாகக் கொண்டிருந்தது. திவ்யப் பிரபந்தத்தை திராவிட வேதமாக்கியதும் அன்றாட ஆராதனையில் இடம்பெறச் செய்துள்ளதும் இன்றும் நாம் காண்பது.

சமூக ஏற்றத் தாழ்வுகளையும் அது ஏற்படுத்தியிருந்த கட்டமைப்புகளையும் தம் கண்டனத்திற்கு உள்ளாக்கியதில், மிகக் கடுமையான உரத்த குரலை எழுப்பியது சித்தர்களே. எந்தச் சமூகத்தை அவர்கள் குற்றம் சாட்டினார்களோ, அந்தச் சமூகத்திலிருந்து தம்மை விலக்கிக்கொண்டு அந்தச் சமூகத்தின் குறைகளைக் களைவதே தம் மூச்சாகக் கொண்ட சித்தர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தனர். சித்தர்கள் வரிசை ஐந்தாம் நூற்றாண்டு திருமூலரிடமிருந்து தொடங்குகிறது. திருமூலர் தாம் கைலாயத்திலிருந்து தமிழ் செய்ய சிவனால் அனுப்பப்பட்டவராக தம்மைச் சொல்லிக்கொள்கிறார். கைலாயம் என்று அவர் சொல்வது இன்றைய கஷ்மீராக இருக்கவேண்டும். கஷ்மீரத்தின் ப்ரத்யாபிக்ஞ சைவத்தின் செல்வாக்கை திருமூலரின் சைவத்தில் காண்கிறார்கள். அவர் தம்மை இடைச் சாதியனராகச் சொல்லிக்கொண்டார். சாதாரண மக்களுடன் அவர் வாழ்ந்தாலும், எந்த ஸ்தாபனப் படுத்தலுக்கும் எதிராக அவர் பேசினாலும், அவரது திருமந்திரப் பாடல் எதுவும் சுலபமாகப் புரிந்து கொள்ளக்கூடியதல்ல. மந்திரம் என்ற பெயருக்கேற்ப அது மந்திரம் போன்று சுருக்கமாகவும் பூடகமாகவுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.

சித்தர் மரபு என்றே அறியப்படும் அவர்கள் எல்லோரும் ஒரே வண்ணம் கொண்டவர்கள் அல்லர். சமூகத்தின் நிரந்தர ஏற்பாடுகளை வெறுத்து ஒதுக்கியவர்கள் என்பதைத் தவிர. சித்தர்கள் பெரும்பாலோர் பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள்.

sivavaakkiyarஇவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் சிவவாக்கியர் என்னும் சித்தர். (வேடிக்கையாக சிவ வாக்கியரையும் திருமழிசை ஆழ்வாரையும் ஒருவராகக் கருதுவாரும் உண்டு. ஒருவர் வைஷ்ணவர். மற்றவர் விக்கிரஹ ஆராதனை, கோயில் வழிபாடு, சாதி வேறுபாடு, வேதங்கள், ஆகமங்கள் என அத்தனைக்கும் எதிராக நின்றவர்.)

மிகக் கடுமையான வார்த்தைகளில் சிவ வாக்கியர் சொல்கிறார்:

“பறைச்சியாவ தேதடா பனத்தியாவ தேதடா.
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டிருக்குதோ?”

உடல் உறவில் பறைச்சியும் பார்ப்பனத்தியும் வேறு வேறாகத் தோன்றுவதில்லை. பஞ்ச பூதங்களால் ஆனதுதான் இந்த உடம்பும், இந்த பிரபஞ்சம் முழுமையும். எல்லாமே பிளவுபடமுடியாத ஒரு முழுமை, இதில் சாதி என்ற வேற்றுமை எங்கிருந்து வருகிறது? என்று சிவ வாக்கியரின் பாடல் ஒன்று கேட்கிறது

சிவ வாக்கியர் பறைச்சியையும் பார்ப்பனத்தியையும் பற்றித்தான் இருவரும் ஒன்றே என்று சொல்கிறார், அவர் தேவரையும், வன்னியரையும் கவுண்டர்களையும் இசை வேளாளரையும் பற்றி எதுவும் சொல்லவில்லை என்பதைக் கவனித்தீர்களா என்று திராவிட கழகங்கள் சார்ந்தோரும், தலித் அரசியல்வாதிகளும் சொல்லக் கூடும்.

சித்தர்களும் சரி, இங்கு பேசப்பட்ட மற்ற பெரியார்களும் சரி, பறைச்சி என்றும் பார்பனத்தி என்றும் பேசுவது உருவகங்களாகத்தான். அவர்கள் எல்லா சாதிகளையும் உள்ளடக்கித் தான் பேசுகிறார்கள். மேலும் அவர்கள் பார்வையில் சாதி மட்டுமே உறுத்தும் ஒன்றாக இருக்கவில்லை. அவர்களது பரந்த சிந்தனையில், எல்லாக் கொடுமைகளையும் வேறுபாடுகளையும் போலிகளையும் உள்ளடக்கிய பரந்த பார்வையில் இவையும் அடங்கியவை.

மேலும், இங்கு நான் சாதி வேற்றுமையையும் தலித்துகளைப் பற்றியுமான பாடல்களை மாத்திரமே இங்கு பேசப்படும் பொருளுக்கேற்ப தொகுத்துத் தந்தாலும், இம்மாதிரியான குரல்கள் இங்கு பேசப்படும் பெரியார்கள், ஆசாரியார்கள், கவிஞர்கள், சித்த புருஷர்களோடு மாத்திரம் நிற்பதல்ல. தமிழ் இலக்கியச் சரித்திரத்தின் இரண்டாயிரம் ஆண்டு கால நீட்சியில் தலித்துகளின் சாதி வேற்றுமைகளின் கொடுமைகளை மாத்திரம் பேசியவர்கள் இல்லை. உதாரணமாக, கடைசியாகப் பேசிய சிவ வாக்கியரையே எடுத்துக்கொள்ளலாமே. .

சிவவாக்கியரின் இன்னொரு மிகவும் பேசப்படும் பாடல், நம்மூர் பிராண்டு பகுத்தறிவுகள் மேற்கோள் காட்டும் பாடலின் முதல் இரண்டு அடிகள்

நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று சொல்லுமந்திரம் ஏதடா

என்று சொல்லி அத்தோடு நிறுத்திக்கொள்வார்கள். அடுத்து வரும் மூன்றாவது அடி,

நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்.

அவர்கள் உள்ளிருப்பது நாதனில்லை என்ற காரணத்தால். அவர்கள் மேற்கோள்களில், பிரசாரங்களில் இது இடம் பெறுவதில்லை.

உண்மையில் பார்க்கப் போனால் சிவவாக்கியர் சாடுவது போலிகளை, பொய்ம்மையை. இன்னொரு இடத்தில் அவர் சொல்கிறார்:

கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே,
கோயிலும் மனத்துளே, குளங்களும் மனத்துளே…

தமிழ் வரலாற்றின், இலக்கிய வரலாற்றின் நீட்சி முழுதும், சமூகக் கட்டமைப்பில் புகுந்துள்ள ஏற்றத் தாழ்வுகளையும், சிந்தனையில் அவ்வப்போது படியும் போலிகளையும் பற்றி அவர்கள் கவலை கொண்டனர். அவற்றிற்கு எதிராகத் தம் குரல் எழுப்பியுள்ளனர் அதில் தலித்துகளும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையினால் இடம் பெற்றனர். அது மிகப் பிரதானமாகத் தெரிவது, அவர்கள் வாழ்க்கையில் சமூகம் இழைக்கும் கொடுமை அதன் ஒரு கோடி எல்லையை, உச்சத்தைத் தொடும் காரணத்தால்தான்.

(தொடரும்…)

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

24 Replies to “தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 2”

  1. Pingback: Indli.com
  2. // ஒரு சண்டாளன், படிப்பறியாதவன், மயானத்தில் வேலை செய்பவன், பாரதத்தில் க்ஷீணமடைந்துள்ள ஹிந்து மதத்திற்குப் புனர்ஜீவனம் கொடுத்து வேதங்களுக்கும் உபநிஷத்துக்கும் விளக்கம் கொடுத்துள்ள தன்னை, தன்னைப்போன்ற ஓர் ஆசாரியனைப் பார்த்து, தான் உலகுக்கு உபதேசித்ததையே தனக்குச் சொல்லிக்காட்டி, இப்படியெல்லாம் உபதேசித்த நீயே இப்போது இப்படிப் பேசுகிறாயே என்று தன்னை திக்குமுக்காடவைத்து விட்ட சம்பவத்தை… //
    எல்லாம் சரி சார், சங்கரருக்கு அந்த “சண்டாளனை” தள்ளிப் போ என்று சொல்லும் உரிமை எங்கிருந்து வந்தது? சங்கரர் தள்ளிப் போ என்று சொன்னதும் அந்த ஞானம் மிகுந்த சண்டாளன் அவரை திக்குமுக்காட வைக்கிறான். ஞானம் இல்லாத சண்டாளர்கள் சங்கரர் சொன்னதும் தள்ளிப் போக வேண்டியதுதானா? அந்த ஞானம் சண்டாளர்கள் தவிர்த்த மற்றவர்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று பரிசோதித்து சங்கரர் மற்றவர்களையும் தள்ளிப் போ என்று சங்கரர் சொல்வதில்லையே? அத்தனை தொன்மங்களும் சர்வ சாதாரணமாக ஜாதி, பிறப்பு, குலத்தை வைத்து நிராகரிப்பதைக் காட்டவில்லையா? சத்யகாம ஜாபாலி “தைரியமாக” உண்மையை சொல்கிறான், உண்மையை சொல்ல தைரியம் என் வேண்டி இருக்கிறது? ஏனென்றால் அந்த உண்மை, அந்த மாதிரி பிறப்பு அந்த கால சமுதாயத்தில் இழிவாகப் பார்க்கப்பட்டது. சோகாமேளர் அடி வாங்கினால் பாண்டுரங்கன் கன்னம் பழுத்திருக்கிறது, அர்ச்சகர் வந்து மன்னிப்பு கேட்கிறார். அடிக்க உரிமை எங்கிருந்து வந்தது? அப்படி அடிப்பது அந்த காலத்தில் சாதாரண நிகழ்ச்சி என்று அந்த தொன்மம் நமக்கு உணர்த்தவில்லையா? பானாழ்வாரும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் நந்தனாரும் இப்படித்தானே பிறப்பை வைத்து குலத்தை வைத்து ஜாதியை வைத்து ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள்? பெரிய நம்பியை, உறங்காவில்லியை, பொன்னாச்சியை, ராமானுஜர் ஏற்றுக் கொண்டது அன்றைய சமூகத்தை மாற்றும் முயற்சி அல்லவா? அது அன்றைய சமூகத்தின் நடைமுறை அல்லவே? “கீழ்சாதியினரை” ஏற்றுக் கொள்வது, உயர்ந்த இடத்தில் வைப்பது விதிவிலக்கே என்பதை இது நமக்கு உணர்த்தவில்லையா?

  3. @ RV,

    நீங்கள் கேட்டிருப்பது உங்களது ஸ்டைல் கேள்விகள்.

    //…சங்கரருக்கு அந்த “சண்டாளனை” தள்ளிப் போ என்று சொல்லும் உரிமை எங்கிருந்து வந்தது?..//

    அது அக்காலத்திலேயே சமூகத்தில் நுழைந்து விட்ட விஷயம் என்பது தெளிவு. பௌத்த மதப் பரவலின் விளைவாக எழுந்த அதீதமான அஹிம்சை போதனைகளும், பௌத்த மதத்தின் காரணமாக எழுந்த எதேச்சதிகார நிலவுடமை சார்ந்த சமூகமும் உருவாக்கிவிட்ட உரிமை அது. சங்கரருக்கும் முன்பே புகுந்து நிலைபெற்றுவிட்ட விஷயம்.

    பௌத்தத்தின் காலத்திற்குப் பின்பு தோன்றியவர் ஆதலால், சங்கரரும் அச்சமூக பழக்கத்தைக் கைக்கொண்டவராக இருந்திருக்கிறார். ஆனால், அப்பழக்கம் சரியல்ல தவறு என்று நிறுவ மற்றவர்களுக்கு உணர்த்த “மனீஷா பஞ்சகம்” பாடி இருக்கிறார்.

    அதாவது அடுத்தவனைத் தள்ளிப் போ என்று சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.

    இந்து மதப் பெரியோர்கள் அனைவரும் பிறப்படிப்படையில் அமையும் உயர்வு தாழ்வை எதிர்த்தவர்களாகவே இருப்பதைக் காணலாம். ஒருவர்கூட விதிவிலக்கில்லை.

    சண்டாளராக வந்த அந்த இந்து மத ஞானியை, சங்கரர் அல்லாமல் வேறு யாரேனும் தள்ளிப் போகச் சொல்லி இருந்தால், அவர் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருப்பாரா?

    //…. ஞானம் இல்லாத சண்டாளர்கள் சங்கரர் சொன்னதும் தள்ளிப் போக வேண்டியதுதானா?..//

    இந்த சம்பவம் சுட்டுவது என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதைப் புரிந்துகொள்ள சங்கரருக்கும், அந்த சண்டாளருக்கும் இடையே நடந்த உரையாடல் என்ன என்று பார்க்க வேண்டும்.

    அப்படிச் செய்யாமல், ஒரு வரிப் புரிதலை வைத்துக்கொண்டு மொத்த தத்துவத்தையும் தவறாகப் புரிந்துகொண்டு கேள்வி கேட்பது பிரச்சாரத்திற்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால், உண்மை என்ன, நடந்தது என்ன என்ற தெளிவைத் தராது.

    சங்கரருக்கும், சண்டாளருக்கும் நடந்த உரையாடலின்போது, சண்டாளராக வந்த அந்த இந்துமதப் பெரியவர், “எல்லாம் பரப்பிரம்மமாக இருக்கும்போது, ஒருவன் மற்றவனிடம் இருந்து எப்படி விலகி இருக்க முடியும்?” என்று கேட்கிறார். அந்தக் கேள்வி சங்கரருக்குப் புதிய தெளிவை அளிக்கிறது.

    அப்படிப் புதிய தெளிவை அவர் பெற்றதும், அந்தத் தெளிவை மற்றவர்களும் பெறவேண்டும் என்று சொல்லியதும் இந்துத்துவத்தின் ஒரு முக்கியப் புரிதல். இதன்மூலம் எப்போதும் தன்னைத் திருத்திக்கொண்டே இருப்பது உயர்ந்த செயல் என்ற இந்துத்துவத்தின் தன்மையையும் அவர் விளக்குகிறார்.

    இங்கே பேசப்பட்டது பிரம்மம் பற்றி மட்டுமே. சண்டாளர்கள் ஞானம் உள்ளவர்களா, ஞானம் இல்லாதவர்களா, ஞானம் உள்ளவர்களுக்கு என்ன சமூக அந்தஸ்து, ஞானம் இல்லாதவருக்கு என்ன சமூக அந்தஸ்து என்பதைப் பற்றி அல்ல. ஞானம் உள்ளவர்களாக இருந்தாலும், அஞ்ஞானத்தால் உழல்பவர்களாக இருந்தாலும் அடிப்படையில் அனைவரும் பிரம்மம் மட்டுமே என்கிறார் சங்கரர். அனைவரும் பிரம்மம் என்ற அடிப்படையில்தான் சமூகம் அமையவேண்டும், நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

    அதே போல, நீங்கள் குறிப்பிடும் சத்யகாம ஜாபாலி, சோகாமேளர், திருநீலகண்ட யாழ்ப்பாணர் உள்ளிட்ட அனைவரின் வரலாறுகளும் காண்பிப்பது ஒரு உண்மையை.

    நிலவுடமைச் சமுதாயத்தாலும், தீவிர அஹிம்சாவாதத்தாலும் ஏற்பட்டுவிட்ட பிறப்படிப்படை உயர்வு தாழ்வை எதிர்த்துப் பேசிய நிகழ்ச்சிகளே இந்துத் தொல்மரபுகள்.

    உயர்வு தாழ்வை எதிர்த்துப் பேசியவர்களே இந்துத் தொல்மரபுகளால் உயர்த்திப் பேசப்பட்டு இன்றுவரை அறியப்படுகிறார்கள்.

    இதனால் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், இந்துத் தொல்மரபுகளும், இலக்கியங்களும், ஆன்மீகப் பெரியோர்களும் பிறப்படிப்படை உயர்வு தாழ்வை எதிர்த்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பது.

    ஆனால், உங்களது புரிதல் அதற்கு முற்றிலும் எதிராக இருக்கிறது.

    சரியாகப் படிக்காத பையனை ஆசிரியர் கண்டித்த நிகழ்ச்சியைப் பற்றி உங்களிடம் சொன்னால் அந்தப் பையன் இனிமேல் படிக்கக்கூடாது மக்காக இருக்க வேண்டும் என்று அந்த கல்விநிலையம் விரும்புகிறது என்று விளக்கம் சொல்கிறீர்கள்.

    இது உங்களுடைய தவறு இல்லை. எப்படியேனும் தவறாகவே புரிந்துகொள்ள வேண்டும் என்று நமக்கு நமது கிறுத்துவ-மெக்காலே கல்வி முறையும், கம்யூனிச ஊடகங்களும் சொல்லித் தந்திருக்கின்றன.

    கேள்வி கேட்டு அறிவை வளர்க்க வளர்க்க அறியாமையில் இருந்து வெளியே வருவதும் சுலபமாகும்.

    இதுவும்கூட இந்துத்துவத்தின் ஒரு முக்கியப் புரிதலே.

  4. //அத்தனை தொன்மங்களும் சர்வ சாதாரணமாக ஜாதி, பிறப்பு, குலத்தை வைத்து நிராகரிப்பதைக் காட்டவில்லையா? -ஸ்ரீ ஆர்.வி.//

    அன்புள்ள ஸ்ரீ ஆர்.வி.,
    எல்லாவற்றையும் எதிர்மறையாகவே பார்க்கிற பழக்கத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். ஒரு மனப் பயிற்சியாகவே இதனை மேற்கொள்ள வேண்டும்.

    நமது சமூகத்தில் ஜாதி, பிறப்பு, குலத்தை வைத்து நிராகரிக்கும் வழக்கம் இப்போதும்-முக்கியமாகக நமது கிராமப் புறங்களில் கூடுதலாக இருப்பது-கண்ணுக்கு நேராகப் புலனாகிற விஷயந்தானே? இதனை மிக உறுதியாகக் கடைப்பிடிப்போர் இன்றளவும் இருப்பதும் புதிய செய்தி அல்லவே? அப்படியிருக்க இதையே ஏன் சலிப்பில்லாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்?

    ஆனால் இநத நிராகரிப்பும் ஒதுக்கிவைத்தலும் தவறு, தகாத செயல் என்பதை மக்கள் மனதில் புகுத்த வேண்டும் என்பதற்காகத்தான் தொன்மங்களில் இம்மாதிரியான விவரங்ககள் வலியுறுத்தப்படுகின்றன. இதனை நேரடியாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு விவாதம் அவசியமா?
    ஆனைக்கும் அடி சறுக்கும், என்பதை நினைவூட்டவும் கோட்பாடுகளில் எவரும் பேச்சளவில் இருந்துவிடலாகாது என்பதை உணர்த்தவும் அல்லவா சங்கரர்- சண்டாளன் கதையும் ஜாபாலன் கதையும் சொல்லப்படுகின்றன?
    தன்னிடம் உள்ள குறைபாடுகளை இவ்வளவு வெளிப்படையாகப் பேசியும் கண்டித்தும், அதனைக் களைய முன்முயற்சி எடுத்தும் இருக்கிற ஹிந்து சமூகத்தைப் பாராட்டுவதல்லவா அறிவுடைமை?

    வெறும் கோஷங்களாக ஜாதிகளிடையே ஏற்ற்றத் தாழ்வு இல்லை என்று பிரசாரம் செய்தால் மனதில் பதியாது அல்லவா? அதனால்தான் இப்படியான கதைகள்; நிகழ்வுப் பதிவுகளும்.

    ராமானுஜர் என்ன, தமது சம்பிரதாயத்துக்கு ஆள் சேர்க்க வேண்டும் என்பதற்காகவா திருக்குலத்தார் என்கிற பொதுப்பெயர் சூட்டினார்? சமூக அந்தஸ்து கிடைக்கும் என்பதற்காகவே கீழ்நிலைச் சாதியினர் எல்லாம் ஓடிவந்து திருக்குலத்தாராகிவிடுவர் என்கிற உள்நோக்கத்துடன் அவ்வாறு அறிவித்திருப்பார் என்றா நினைக்கிறீர்கள்? ஆனால் கிறிஸ்தவ மிஷனரிகள் அதைச் செய்திருகிறார்கள், இப்போதும் செய்து வருகிறார்கள். கேரளத்தின் வரலாறு உங்களுக்குத் தெரிந்திருக்குமானால் இதனை ஒப்புக்கொள்வீர்கள். முக்கியமாகக் கேரளத்தின் பகுதியாக இருந்த குமரி மாவட்டத்திலும் தென் கேரளத்திலும் தங்களது சமயத்துக்கு ஆள் பிடிக்க வேண்டும் என்பதற்காக எவ்வாறோ சாதி அடுக்கின் கீழ் நிலையில் இடம் பெற்றுவிட்டவர்களுக்கு தலைவரி கட்டுவது போன்ற கட்டாயங்களிலிருந்து விலக்கு அளிப்பது முதலான தூண்டில்களைப் போட்டுத் திரள் திரளாக மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகின்ற சூழ்நிலையை உருவாக்குவதில் இரு நூற்றாண்டுகளுக்குமுன் கிறிஸ்தவ மிஷனரிகள் மிகவும் மும்முரமாக இயங்கினார்கள். ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பக்கபலத்துடன், அதன மூலம் திருவிதாங்கூர் அரசிடம் பெற்றிருந்த செல்வாக்கின் பின்புலத்துடன் அவர்கள் இதனைச் சாதித்தனர். ஆங்கிலேய அரசு சமயச் சார்புடன் நடந்துகொள்ளவில்லை என்கிற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. கிழக்கிந்திய கம்பனி காலத்திலும், அதன் பிறகு பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி ஏற்பட்ட பிறகுங்கூடக் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு ஏராளமான வசதிகள் செய்துகொடுத்து மத மாற்றத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் நடவடிக்கை இருந்து வந்துள்ளது.

    இரு நூற்றாண்டுகளுக்கு முன் அதே குமரி மாவட்டத்தில், அதே காலகட்டத்தில் முடி சூடும் பெருமாள் என்ற பெயர் சூட்டப்பட்டுப் பின் முத்துக் குட்டி சுவாமிகள் என்று பேர் பெற்ற திருமகன் பூவண்டர் தோப்பு என்கிற இடத்தில் ஸ்தூல சரீரியாக நடமாடி வந்தார். இன்று அவர் சுவாமி வைகுந்தராக வணங்கப்பட்டு வருகிறார். அவர் பிறந்த பூவணடார் தோப்பு அவர் பெயரால் சாமித் தோப்பாக விளங்கிவருகிறது. மத மாற்ற முயற்சிகளுக்கு மாற்றாக அவரும் தம்மை ஏற்போருக்கு சாதி வேறுபாடின்றிப் பொதுக் குளத்தில் குளித்தல், சம பந்தி போஜனம் செய்தல் போன்ற நியமங்களைச் செயல்படுத்தினார். அவர் என்ன ஆள் பிடிக்க வேண்டும் என்பதற்காகவா இந்த நியமங்களைச் செய்தார்?
    ஹிந்து சமூகப் பயிரில் தீண்டாமை, மேல் சாதி-கீழ் சாதி பாகுபாடு போன்ற களைகள் முளைத்துவிட்டிருக்கின்றன, அவற்றைக் களைந்தாக வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியுடன் தொன்மங்கள் வாயிலாகவும் ஆன்மிக, சமூக இயக்கங்கள் மூலமாகவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றனவேயன்றி, பிற சமயங்களைப்போல் புண்ணைப் புனுகு பூசி மூடி மறைக்கிற வழக்கம் நம்மிடம் இல்லை எனபதை அல்லவா செய்தியாக எடுத்துக்கொள்ள வேண்டும்?

    ஒருவேளை மற்றவர்கள் தெளிவு பெற வேண்டும் என்கிற சேவை மனப் பான்மையுடன், நல்லெண்ணத்துடன்தான் இவ்வாறான மறுமொழிகளை இடுகிறீர்களா? அவ்வாறாயின், எனக்குப் பிரியமானவரே, உங்களுக்கு நன்றி.
    -மலர்மன்னன்

  5. பல மனிதர்களைக் கொண்டது, ஒரு சமுதாயம். அதில், ஒரே வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள், ஒரு சமூகம். ஒரு சமூகத்தில், ஒருவரை வைத்து, அவர் சமுதாயத்தைக் கணிக்க முடியாது. ஒரு சோறு பதம், ஒரு பானை சோறுக்கு வேண்டுமானாலும் பொருந்தலாம். இக்கருத்து அடிப்படையில் தான், பாரதியார் பூனூல் இல்லாதவர்களுக்கு, பூனூல் போட்டார். நல்லது என்பதற்கு, ஒருவருக்கு நல்லது, இன்னொருவருக்கு அல்லாததாகலாம், என வாதம் ஏற்படுமாதலால், முன்னோர் மொழிந்த முறைதப்பாமல் கேட்பது என்பது, இந்து சமய சித்தாந்தமாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே எல்லோரும் இந்து சமய முன்னோர் சொல்படி கேட்பவர்களாக இருந்திருந்தால், சமூக வித்தியாசங்கள் இல்லாமல் இருந்திருக்கும். அனால் இன்றும், அது ஏற்படாத நிலையைப் பார்க்குங்கால், சாதி வித்தியாசங்கள், அவ்வப்போது தலை தூக்கிக் கொண்டு தான் இருக்கும்.

  6. அழகான பெயர் கொண்ட களிமிகு கணபதி, மதிப்பிற்குரிய பெரியவர்கள் மலர்மன்னன் மற்றும் வெ.சா.,

    வெ.சா. இந்த கட்டுரைகளின் மூலம் என்ன நிறுவ விரும்புகிறார் என்ற நாம் வேறு வேறு விதமாக புரிந்து கொள்கிறோம். ஆதாரங்களைப் பற்றி வேறு வேறு கருத்தில்லை.

    நாம் மூவருமே (வெ.சா.வும் கூட) ஜாதி வித்தியாசம் என்பது ஹிந்து சமுதாயத்தில் – இல்லை இந்திய சமுதாயத்தில் – காலம் காலமாக நடந்து வருவது, அதன் தாக்கம் சங்கரர் மாதிரி பெரியவர்களையும் விடவில்லை, அவர்களும் தங்களைத் திருத்திக் கொள்ளும் நிலை இருக்கிறது, ஆனால் எப்போதுமே, எல்லா காலத்திலும் இதற்கு விதிவிலக்குகள் உண்டு, பல பெரியவர்கள் மீண்டும் மீண்டும் இதை எதிர்த்து போராடி இருக்கிறார்கள், எத்தனை போராடினாலும் ஜாதி இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என்பதில் கருத்து ஒற்றுமை உள்ளவர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

    ஆனால் வெ.சா. // தலித்துகள் என்பதற்காக அங்கீகரிக்கப் படவும் இல்லை. நிராகரிக்கப் படவும் இல்லை. மனிதர்கள் கவனிக்கத் தவறிய போது தெய்வமே இடை புகுந்து அவர்களைச் சிறப்பித்திருக்கிறது, // என்று எழுதி இருப்பதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். அவர் சொல்லும் ஒவ்வொரு தொன்மமும் தலித் என்பதற்காக நிராகரிக்கப்பட்டார்கள், தெய்வம் வந்துதான் அந்த நிராகரிப்பை சரி செய்ய வேண்டி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த கட்டுரைகள் விதிவிலக்குகளை, அமானுஷ்ய தொன்மங்களைக் எடுத்துக்காட்டி இது நடந்துகொண்டே இருக்கிறது, அதனால் தலித்கள் நிராகரிக்கப்படவில்லை, இதுதான் norm என்று சொல்ல முயற்சிக்கின்றன. அமானுஷ்ய நிகழ்ச்சிகள்தான் norm என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது? இப்படி ஒரு trend இருக்கிறது என்று சொல்வது வேறு, தலித்கள் நிராகரிக்கப்படவில்லை என்று சொல்வது வேறு.

    விதிவிலக்குகள் காலம்தோறும் இருக்கின்றனவே, அப்படி இருக்கும்போது ஹிந்து சமூக அமைப்பை எப்படி குறை சொல்லலாம், காலம் காலமாக ராமானுஜர் போன்ற பெரியவர்கள் போராடியதை மறுக்கலாமா என்ற ஆதங்கத்தை கோபமாக, வருத்தமாக, பல விதங்களில் இங்கே நீங்கள் எல்லாரும் வெளிப்படுத்துகிறீர்கள். அவை விதிவிலக்குகள் ஆயிற்றே, எத்தனை பெரியவர்கள் என்னென்னவோ செய்தும் ஜாதியை ஒழிக்க முடியவில்லை என்ற உண்மையை நாம் மறுக்கக் கூடாது, அப்படிச் செய்வது பல திராவிட இயக்கத்தினர், பல கிருஸ்துவ மதமாற்ற இயக்கத்தினர், வினவு குழுவினர் மாதிரி பலர் செய்யும் வரலாற்றை தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தின் அஜெண்டாவுக்கு ஏற்ற மாதிரி செதுக்கும் முயற்சி ஆயிற்றே, அந்தத் தவறை நீங்களும் செய்தால் எப்படி என்ற ஆதங்கத்தை நான் மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறேன்.

  7. //நமது சமூகத்தில் ஜாதி, பிறப்பு, குலத்தை வைத்து நிராகரிக்கும் வழக்கம் இப்போதும்-முக்கியமாக நமது கிராமப்புறங்களில் கூடுதலாக இருப்பது-கண்ணுக்கு நேராகப் புலனாகிற விஷயந்தானே? இதனை மிக உறுதியாகக் கடைப்பிடிப்போர் இன்றளவும் இருப்பதும் புதிய செய்தி அல்லவே? அப்படியிருக்க இதையே ஏன் சலிப்பில்லாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்?
    ஹிந்து சமூகப் பயிரில் தீண்டாமை, மேல் சாதி-கீழ் சாதி பாகுபாடு போன்ற களைகள் முளைத்துவிட்டிருக்கின்றன, அவற்றைக் களைந்தாக வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியுடன் தொன்மங்கள் வாயிலாகவும் ஆன்மிக, சமூக இயக்கங்கள் மூலமாகவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றனவேயன்றி, பிற சமயங்களைப்போல் புண்ணைப் புனுகு பூசி மூடி மறைக்கிற வழக்கம் நம்மிடம் இல்லை எனபதை அல்லவா செய்தியாக எடுத்துக்கொள்ள வேண்டும்? -மலர்மன்னன்//
    ஸ்ரீ ஆர்.வி.,
    மேலே உள்ள, முன்பு நான் எழுதிய வரிகளை மீண்டும் படிக்க வேண்டுகிறேன். பின்னர் நீங்கள் அதற்கு மறுமொழியாக ’எத்தனை பெரியவர்கள் என்னென்னவோ செய்தும் ஜாதியை ஒழிக்க முடியவில்லை என்ற உண்மையை நாம் மறுக்கக் கூடாது’ என்று எழுதியிருப்பதையும், படியுங்கள். நீங்கள் திரும்பத் திரும்ப சலிப்பில்லாமல் ஒரே விஷய்த்தை எழுதி வருவது ஏன் என்றும் யோசியுங்கள். எந்தப் பூச்சி உங்களைக் குடைந்துகொண்டே இருக்கிறது? அதைத் தூக்கி வெளியே போட நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    -மலர்மன்னன்

  8. RV
    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? புரியவில்லை. குறிப்பாக //அப்படி இருக்கும்போது ஹிந்து சமூக அமைப்பை எப்படி குறை சொல்லலாம்,// என்றால் என்ன?

  9. அன்புள்ள மலர்மன்னன்,

    மீண்டும் இந்த வரிகளைப் படித்துப் பாருங்கள். // ஆனால் வெ.சா. // தலித்துகள் என்பதற்காக அங்கீகரிக்கப் படவும் இல்லை. நிராகரிக்கப் படவும் இல்லை. மனிதர்கள் கவனிக்கத் தவறிய போது தெய்வமே இடை புகுந்து அவர்களைச் சிறப்பித்திருக்கிறது, // என்று எழுதி இருப்பதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். அவர் சொல்லும் ஒவ்வொரு தொன்மமும் தலித் என்பதற்காக நிராகரிக்கப்பட்டார்கள், தெய்வம் வந்துதான் அந்த நிராகரிப்பை சரி செய்ய வேண்டி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த கட்டுரைகள் விதிவிலக்குகளை, அமானுஷ்ய தொன்மங்களைக் எடுத்துக்காட்டி இது நடந்துகொண்டே இருக்கிறது, அதனால் தலித்கள் நிராகரிக்கப்படவில்லை, இதுதான் norm என்று சொல்ல முயற்சிக்கின்றன. அமானுஷ்ய நிகழ்ச்சிகள்தான் norm என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது? இப்படி ஒரு trend இருக்கிறது என்று சொல்வது வேறு, தலித்கள் நிராகரிக்கப்படவில்லை என்று சொல்வது வேறு. //

    வெ.சா. நந்தனார், சங்கரர்-சண்டாளன், திருநீலகண்ட யாழ்ப்பாணர் மாதிரி தொன்மங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது தலித்கள் தலித் என்பதற்காக அங்கீகரிக்க/நிரகாரிக்கப் படவில்லை என்று காட்டுகிறது என்று எழுதி இருக்கிறார். இதில் எனக்கு கடுமையான ஆட்சேபம் இருக்கிறது. லாஜிக்கும் உதைக்கிறது. இவை எல்லாம் தலித்கள் தலித்கள் என்ற காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டனர், divine intervention இல்லாவிட்டால் இவர்களுக்கு விமோசனமே இல்லை என்றே காட்டுகின்றன. அவர் இப்படி எழுதி இருப்பது, அவரது லாஜிக் உங்களுக்கு இசைவானதாக இருக்கலாம். எனக்கு இல்லை. அதிலே லாஜிக்கே இல்லை என்பது தெளிவு. அதை neengaL கவனிக்கவில்லையா இல்லை கவனித்தும் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்களா?

    // //நமது சமூகத்தில் ஜாதி, பிறப்பு, குலத்தை வைத்து நிராகரிக்கும் வழக்கம் இப்போதும்-முக்கியமாக நமது கிராமப்புறங்களில் கூடுதலாக இருப்பது-கண்ணுக்கு நேராகப் புலனாகிற விஷயந்தானே? இதனை மிக உறுதியாகக் கடைப்பிடிப்போர் இன்றளவும் இருப்பதும் புதிய செய்தி அல்லவே? அப்படியிருக்க இதையே ஏன் சலிப்பில்லாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்?
    ஹிந்து சமூகப் பயிரில் தீண்டாமை, மேல் சாதி-கீழ் சாதி பாகுபாடு போன்ற களைகள் முளைத்துவிட்டிருக்கின்றன, அவற்றைக் களைந்தாக வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியுடன் தொன்மங்கள் வாயிலாகவும் ஆன்மிக, சமூக இயக்கங்கள் மூலமாகவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றனவேயன்றி, பிற சமயங்களைப்போல் புண்ணைப் புனுகு பூசி மூடி மறைக்கிற வழக்கம் நம்மிடம் இல்லை எனபதை அல்லவா செய்தியாக எடுத்துக்கொள்ள வேண்டும்? -மலர்மன்னன்//
    ஸ்ரீ ஆர்.வி.,
    மேலே உள்ள, முன்பு நான் எழுதிய வரிகளை மீண்டும் படிக்க வேண்டுகிறேன். பின்னர் நீங்கள் அதற்கு மறுமொழியாக ’எத்தனை பெரியவர்கள் என்னென்னவோ செய்தும் ஜாதியை ஒழிக்க முடியவில்லை என்ற உண்மையை நாம் மறுக்கக் கூடாது’ என்று எழுதியிருப்பதையும், படியுங்கள். நீங்கள் திரும்பத் திரும்ப சலிப்பில்லாமல் ஒரே விஷய்த்தை எழுதி வருவது ஏன் என்றும் யோசியுங்கள். எந்தப் பூச்சி உங்களைக் குடைந்துகொண்டே இருக்கிறது? அதைத் தூக்கி வெளியே போட நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். //
    என்ன செய்யலாம், இங்கே neengaL உட்பட பலரும் மீண்டும் மீண்டும் விதிவிலக்குகளை விதிவிலக்குகள் என்று ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள் என்றே என் சிற்றறிவுக்கு தோன்றுகிறது. அதனால்தான் மீண்டும் மீண்டும் எழுத வேண்டி இருக்கிறது. ஹிந்து (இந்திய) சமூக வரலாற்றில் ஜாதி ஆழமாகப் பதிந்திருக்கிறது, அவ்வப்போது எதிர்ப்பு முளைக்கிறது, பிறகு ஜாதி என்ற கடலில் மீண்டும் அந்த எதிர்ப்பு மூழ்குகிறது. உங்கள் பாஷையில் சொன்னால் பயிரிலே களை இல்லை, களையிலே அங்கங்கே பயிர் இருக்கிறது. பயிர் கூட இல்லை, பயிர் இருந்த தடயம்தான் இருக்கிறது. திருப்பாணாழ்வார் என்ற தடயம் இருக்கும் கோவிலில் தலித்கள் நூறு வருஷம் முன்னால் கூட நுழையமுடியவில்லையே! திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்ற தடயம் இருக்கும் கோவிலில் முப்பதுகளில்தானே சட்டத்தை மீறி ஆலயப் பிரவேசம் நடக்கிறது? இங்கே நீங்கள் உட்பட அனைவரும் எழுதுவது அரிசியிலே கல் இருக்கிறது, அதை எடுக்க வேண்டும் என்று. கல்லிலே அங்கங்கே அரிசி இருக்கிறது என்பதுதான் நம் வரலாறு!

    ராம்கி, // நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? புரியவில்லை. குறிப்பாக //அப்படி இருக்கும்போது ஹிந்து சமூக அமைப்பை எப்படி குறை சொல்லலாம்,// என்றால் என்ன? // விதிவிலக்குகள் இருக்கும்போது எப்படி ஹிந்து சமூக அமைப்பை குறை சொல்லலாம் என்ற தொனி வெ.சா. கட்டுரையில் இருக்கிறது. அவர் வெளிப்படையாகவும் சொல்கிறார் – thalithkal நிராகரிக்கப்படவில்லை என்று…

  10. சிங்கப்பூரில் விசா வாங்கி வேலை செய்யும் ஒருவர் நல்ல பணம் சேர்கிறார் – சேர்த்த பணத்தை வைத்துக்கொண்டு சென்னை CIT கோலோனி யில் சொந்தமாக ஒரு பத்து மாடி வீடு கட்டுகிறார் – அந்த வீட்டை கட்டி முடிக்க மேலும் கீழும் சித்தாள்கள் (ஓர் அறுவது வயது பாட்டியும் அடக்கம்) ஏறி இறங்கி மண்ணும் கல்லும் கொண்டு சேர்கிறார்கள் – இன்றைக்கு இது வேலையே இல்லாத பலருக்கு வேலை வைப்பு கொடுத்த திருப்தி தருகிறது .

    இந்த வீடு கட்டியதை நமது நம்பர் வீடியோ படம் எடுக்கிறார் – இந்த படத்தை 2050 தில் வேறொருவர் பார்கிறார் – பார்த்தவருக்கு கடும் கோபம் வருகிறது – என்ன காட்டுமிராண்டித்தனம் இப்படி வீட்டைக்கட்டி அதில் நிம்மதியாக சிங்கபூரார் வாழ்ந்தார்? ஒரு நகரும் ஏணியை வைத்து கல்லும் மண்ணும் கொண்டு சென்றிருக்கலாமே? இது என்ன கொடுமை என்று புலம்புகிறார்.

    ராமானுஜர், பாணன், நந்தனார் இவர்களை பற்றி எல்லாம் நமக்கு என் தெரிகிறது – அவர்கள் வேரோது வழியில் புகழ் அடைந்தவர்கள் அதனால். இவர்கள் சாதியத்தை எதிர்த்ததால் மட்டுமே அல்ல. இவர்களை போல பல்லாயிர பேர் சாதியத்தை எதிர்த்து போரிட்டிருக்கலாம் வெற்றியும் கண்டிருக்கலாம். அப்துல் கலாம், காந்தி செய்தால் எல்லோருக்கும் தெரியும் அது வரலாறு ஆகும் , நம்மில் சிலர் செய்தால் சிலருக்கு தான் தெரிய வரும், இதை வரலாற்றில் யாரும் சேர்க்கப் போவதில்லை. அந்த காலத்தில் ப்ளாகெல்லாம் இல்லை பாருங்கள் – ராமானுஜர், பாணன், நந்தனார் கதைகள் exceptions தான் என்பது சரியான வாதம் அல்ல

  11. RV
    விதிவிலக்குகள் உருவாவது தனி மனிதச் சிந்தனையிலிருந்தே என்றாயினும் அதை அங்கீகரிக்கவோ வளரவிடவோ நசுக்கிப் போடவோ சமூகம் பங்கெடுக்கிறது. இந்து மதம் உலகம் தட்டையே என்று சத்தியம் வாங்கவில்லையே! அதனால் விதிவிலக்குகள் உருவாவதில் பங்கில்லை என்றாயினும் அதை வளர்த்தெடுப்பதில் சமூகம் பங்கு கொள்ளவே செய்கிறது. விதிவிலக்குகள் பெரும் மாற்றத்தைத் தரவில்லை என்பதை மறுப்பதற்கில்லை.

  12. அன்புக்குரிய நண்பர்களே,

    இந்து மதத்தின் முக்கியக் கோவில்களில் இன்று யாரும் சாதி வித்யாசம் பார்ப்பதும் இல்லை, தனக்கு அருகில் நின்று கும்பிடுபவன் எந்த சாதி என்று நினைப்பதும் இல்லை.

    பொங்கும் பூம்புனலாக இந்து மதம் எல்லா மக்களிடமும் சென்று அவர்களின் ஆன்மீக தாகத்தை தீர்க்கும் நேரத்திலே, இனி எதிர் காலத்தைப் பற்றி சிந்திப்பதுதான் முக்கியம். கடந்த கால சோதனைகளை நமக்கு ஒரு பாடமாக வைத்துக் கொண்டு முன்னேற வேண்டுமே ஒழிய அதை பற்றி அலசி ஆராய்வதால் ஆகப் போவது ஒன்றுமில்லை.

    இந்து மதத்தை பின் பற்றிய மக்கள், பல நூறு வருடங்களாக சாதீய சமுதாய முறையை பின்பற்றி வந்ததால் இந்து மதமும் இந்த சாதீய முறைக்கு உட்பட்டு பின்பற்றப் பட்டது .

    இந்தியாவில் சாதீயக் கட்டுப்பாடுகள் உடைவைதை பயன்படுத்தி இந்து மதமும் தன்னுடைய ஒளிக் கற்றைகளை அனைவரின் மீதும் பாய்ச்சி வருகிறது.

    எந்த இந்து மதத்தின் மீது சாதீயக் குற்றச் சாட்டு வலுவாக வைக்கப் பட்டதோ, அதே இந்து மதத்தின் முக்கியக் கோவில்களில் இன்று யாரும் சாதி வித்யாசம் பார்ப்பதும் இல்லை, தனக்கு அருகில் நின்று கும்பிடுபவன் எந்த சாதி என்று நினைப்பதும் இல்லை.

    இப்படி இந்து மதம் அதன் இயல்பின்படியே சுதந்திர மாக யாரும் தங்கள் கருத்துக்களை முன் வைக்கவும், அனைவரும் பங்கு பெரும் ஜனநாயக மதமாகவும் முழுமையாக மலர்ந்து வருகிறது.

    இனி எல்லா மக்களிடமும் சென்று ஆன்மீகக் கருத்துக்களை, முறைகளை செயல்பாட்டை பரப்புங்கள். ஆன்மீகத்தின் மூலம் மனிதர்கள் சமத்துவமாக இணையட்டும். அத்வைதத்தின் அடிப்படைக் கருத்தே இதுதான்.

    இராமரின் அன்பிலே, நல்ல கொள்கையிலே தங்களுடைய இயல்பான நற்குணங்களை இன்னும் மெருகேற்றிக் கொண்ட வசிஷ்டரும், சுமேந்திரரும், குகனும், அனுமனும், வீபிடணனும் வித்யாசம் இல்லாமல் இராமராகவே ஆகி விட்டார்கள். உண்மையான ஆன்மிகம் மனிதர்களை செம்மைப் படுத்தி சமத்துவத்தில் ஒன்றிணைக்கிறது. இராமானுஜர் அதை ஏற்க்கனவே செய்து காட்டியும் விட்டார்.

  13. //…சங்கரருக்கு அந்த “சண்டாளனை” தள்ளிப் போ என்று சொல்லும் உரிமை எங்கிருந்து வந்தது?..//
    திரு ஆர்.வி. அவர்களின் இந்த வினாவை என்னால் புறந்தள்ளி விட இயலவில்லை. அதில் நம்மை உறுத்தும் உண்மையும் பொதிந்து இருப்பதாக உணர்கின்றேன்.

    வைதிகத்தின் சாதிக் கடுமையின் உக்கிரத்தைத் நீக்க அல்லது குறைக்கப் பக்தி அவ்வப்பொழுது முயன்று வந்துள்ளது. புறந்தூய்மை, தூய உணவுப்பழக்கம், கல்வியறிவு, சாத்திரக் கல்வி முதலியவற்றைச் சார்ந்தே வைதிகம் அமைந்துள்ளது. அன்பு அல்லது உணர்வு பூரணமான பக்தி அவற்றைப் பொருட்படுத்தவில்லை.

    அன்பின் தீவிரத்தை வைதிகம் முதலில் அறிந்து கொளவது அரிதுதான். இது இயற்கையே. அன்பினை அறிந்து அனுபவித்தபின் வைதிகம் அதனை ஏற்றுக்கொள்வதையும் காண்கின்றோம்.

    திருஞானசம்பந்தப் பெருமான் தம்முடைய ஊரான சீகாழிப்பதியில், திருநீலகண்டயாழ்ப்பானரையும் மதங்கசூளாமணியாரையும் கோயிலின் புறமுன்றில் வரைதான் அழைத்துச் சென்று கும்பிடவைக்க அன்றைய சமுதாயம் அனுமதித்தது.(134) அவ்வளவுதான் தலைமகனாகிய தமிழ்ஞானசம்பந்த்னால் அவருடைய ஊரில் முடிந்தது. ஆனால், பிள்ளையாருடைய சொல்லைத் திருமந்திரமாகக் கொண்ட வைதிகர் திருநீலநக்கர், பாணனாருக்கும் பத்தினியாருக்கும் நித்தியாக்கினி வளர்க்கும் புனித தலத்தில் இடமளிக்கிறார். திருவாரூரில் பிள்ளையார் அனைவரும் செல்லும் வாயில்வழியாக அன்றி “வாயில் வேறு வடதிசையில் வகுப்ப’ பாண்னாரை அழித்துச் செல்கின்றார்.
    திருவாரூருக்கு அருகில் திருமணலியில் , நமிநந்தியடிகள், உற்சவத்தின்போது, எம்பெருமான் எழுந்தருளுதலை, “யாவரென்னாது உடன்சேவித்து எல்லாக்குலத்திலுள்ளார்ய்ம்ன் மேவான்பர் தாமுடன் சேவித்து”க் களிப்புற்றார். தம் வீட்டிற்குச் சென்றவுடன், “தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்துடன் நண்ண , எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்ரு என்னை” எனக் குளித்து அகம் புகக் கருதினார். அவருக்கு, ஆர்.வி கருதுவது போல சிவ்பிரான் குறுக்கிட்டுக்கனவிக்ல்,”ஆரூரில் பிறந்தாரெல்லாம் எஅங்கணங்கள் ஆனபரிசு காண்பாய்” என உணர்த்தினார்.

    வடநாட்டு பக்திமார்க்கம் வைதிகர்கள் அல்லாத குயவர், நெசவாளர், முதலிய சாதியைச் சார்ந்த அடியவர்களால் வலுப்பெற்ரது. அவர்கள் செய்த அருட்பாடல்கள் திவ்வியநாம சங்க்கிர்த்தனத்தில் பாடப் பெறுகின்றன. அந்தப் பாடல்கலைப் பாடுகின்ற கோஷ்டியில் பிராமணர் அல்லாதவர்கள் எத்தனைபேரை அந்த கோஷ்டி சேர்த்துக் கொள்கிறது.?

    அன்பு அல்லது பக்தியை அறிந்து கொண்ட இடத்தில் வேற்றுமை இராது என்பதே உண்மை.நம் சைவவைணவ நெறிகள் இந்த அளவே வேறுமையைக் குறைக்கின்றன எனலாம். .

    நம்முடைய சமயத்தில் சாதி வேறுபாடு இருக்கத்தான் செய்கின்றது. பக்தி , வைதிகத்துக்கு நெகிழ்ந்துதான் செயலாற்றுகின்றது..

  14. //…சங்கரருக்கு அந்த “சண்டாளனை” தள்ளிப் போ என்று சொல்லும் உரிமை எங்கிருந்து வந்தது?..//

    இது சங்கர விஜயத்தில் உள்ள ஒரு ஐதீகம். சங்கர விஜயத்தில் இதைப் போல பல சம்பவங்கள் உண்டு. எனக்குத் தெரிந்த அளவில், இவை நிகழ்வுகளே என்று கருத எந்தச் சான்றும் இல்லை. மேலும், இச் சம்பவத்தைக் கற்பிப்பதனால் என்ன பயன் என்பதும் எனக்கு விளங்கவில்லை; இது சங்கரரைச் சிறுமைப்படுத்திக் காட்டுகிறது என்பதே எனது அபிப்பிராயம்.

  15. சாரங், // ராமானுஜர், பாணன், நந்தனார் கதைகள் exceptions தான் என்பது சரியான வாதம் அல்ல // நந்தனார் தொன்மத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டே பேசுவோம். நந்தனார் காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு லட்சம் தலித்கள் இருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஒரு லட்சம் தலித்களில் எத்தனை பேருக்கு கோவில் நுழைவு அனுமதிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? இந்தத் தொன்மம் உங்களுக்கு காட்டும் சமூக நிலை என்ன? இப்படி லட்சத்தில் ஒருவர் – அதுவும் நெருப்பில் குளித்த பிறகே – மட்டுமே கோவிலுக்குள் போவது என்பது exception-ஆ இல்லை norm-ஆ? சரி நந்தனார் நிகழ்ச்சி நடந்த பிறகு ஆஹா இது நாள் வரை தவறு செய்துவிட்டோம், நந்தனாரிடமிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும், இன்றைக்கு விதிவிலக்காக இருப்பது நாளைக்கு சர்வ சாதாரண நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தமிழ்,ஹிந்து,இந்திய சமூகம் தன் நிலைய மாற்றிக் கொள்ளவில்லையே? அப்புறம் இது exception இல்லை என்ற முடிவுக்கு ஏன் வந்தீர்கள், உங்கள் வாதம்தான் என்ன?

    முத்துக்குமாரசாமி, // திரு ஆர்.வி. அவர்களின் இந்த வினாவை என்னால் புறந்தள்ளி விட இயலவில்லை. அதில் நம்மை உறுத்தும் உண்மையும் பொதிந்து இருப்பதாக உணர்கின்றேன். // நன்றி! அனேகமாக “கீழ் பிறப்பினருக்கு” உயர்ந்த இடம் தருவதைப் பற்றி பேசும் அத்தனை தொன்மங்களிலும் – ஜாபாலி, பாணாழ்வார், ரவிதாஸ், நாமதேவர், நந்தனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் – இப்படி ஒரு உண்மை பொதிந்திருக்கிறது. அந்த தொன்மங்களை நாம் ஜாதியின் தாக்கத்தை மீறிய சில விதிவிலக்குகளாகவே புரிந்துகொள்ள வேண்டும். சாரங் சொன்னது போல அது அந்தக் கால விழுமியம், அவ்வளவுதான். அதை இன்று தாண்டிப் போக வேண்டுமே தவிர, இப்படி ஒரு தொன்மம் இருப்பது தலித்கள் நிராகரிக்கப்படவில்லை என்று காட்டுகிறது என்று எழுதுவதில் லாஜிக்கும் இல்லை, பயனும் இல்லை. வெறும் சப்பைக்கட்டாகவே தோன்றுகிறது.

  16. ஸ்ரீ ஆர்.வி.க்கு உள்ள பிரச்சினை ஸ்ரீ வெ. சா. ’’தலித்துகள் என்பதற்காக அங்கீகரிக்கப் படவும் இல்லை. நிராகரிக்கப் படவும் இல்லை. மனிதர்கள் கவனிக்கத் தவறிய போது தெய்வமே இடை புகுந்து அவர்களைச் சிறப்பித்திருக்கிறது” என்று எழுதியிருப்பது எனத் தெரிகிறது.

    ஸ்ரீ வெங்கட் சாமிநாதனுக்கு இருக்கிற பிரச்சினை அவர் எப்போதுமே, எங்கே எழுதுவதானாலும் தமது தளத்தில் இருந்துகொண்டு ஒரு நிச்சயத்துடன் தமது தளத்திற்கான வாசகர்களுக்காக எழுதுவது. இப்படித்தான் அவர் எனது ஆரிய சமாஜம் பற்றிய நூல் விமர்சனத்தில் விடம்பனமாக சுவாமி தயானந்த சரஸ்வதியை நாத்திகர் என்று குறிப்பிடப்போக, சிலர் நல்ல வேளை, தயானந்தருக்கு ஆதரவாளர்கள் அதிகம் இல்லை என்று சந்தோஷப்பட்டார்கள். அதன் பிறகு நான் சுவாமி தயானந்தர் ஸ்ருதி வழியினர், நாத்திகர் அல்ல என்று விளக்கம் சொல்ல வேண்டியதாயிற்று!

    ’ஸ்ருதிகளைப் பொருத்தவரை ஒருவன் தலித் என்பதற்காக அங்கீகரிக்கப்படவுமில்லை, நிராகரிக்கப்படவும் இல்லை, அவனது குலம் இவ்விரண்டுக்குமான ஒரு தகுதியாகக் கொள்ளப்பட்டதில்லை, எப்படி ஒரு பிராமணன் பிராமணன் என்பதற்காகவே அங்கீகரிக்கப்படுவதும் இல்லை, நிராகரிக்கப்படுவதும் இல்லையோ அதுபோல’ என்று ஸ்ரீ வெ.சா. விஸ்தாரமாக எழுதியிருந்தால் ஸ்ரீ ஆர். வி. இதை ஒரு விவகாரமாக்கி இவ்வளவு தூரம் வளர்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

    இதற்காகத்தான் எப்போதும் நான் ஸ்ரீ வெங்கட் சாமிநாதனுக்குச் சொல்வது, பொது தளங்களில் எழுத வருகிறபோது கொஞ்சம் கீழே இறங்கி வாருங்கள் என்று.
    வெ. சா.வின் சம்பந்தப்பட்ட கட்டுரை முன்னரே அவருக்கு ஏற்ற தளத்திற்குரிய வாசகர்களுக்கானதாக எழுதப்பட்டிருப்பதால் இப்போது வேறு தளத்தில் அதனை வெளியிடுகையில் அடைப்புக் குறிகளுக்குள்ளாகவாவது அவர் சில விரிவாக்கங்களைச் சேர்த்திருக்கலாம் என்பது என் எண்ணம்.

    எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டவர் நம் மரியாதைக்கும் அன்பிற்கும் உரிய சாமிநாதன். அவரது பார்வையே சரி என்று கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாதாடியதாலேயே நான் இழந்த நண்பர்களின் எண்ணிக்கை அதிகம்!
    -மலர்மன்னன்

  17. அன்புள்ள மலர்மன்னன்,
    // ஸ்ரீ ஆர்.வி.க்கு உள்ள பிரச்சினை ஸ்ரீ வெ. சா. ’’தலித்துகள் என்பதற்காக அங்கீகரிக்கப் படவும் இல்லை. நிராகரிக்கப் படவும் இல்லை. மனிதர்கள் கவனிக்கத் தவறிய போது தெய்வமே இடை புகுந்து அவர்களைச் சிறப்பித்திருக்கிறது” என்று எழுதியிருப்பது எனத் தெரிகிறது. // இதைத்தானே சார் முதல் பின்னூட்டத்திலிருந்து மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன்? இப்போதுதான் உங்கள் கண்ணில் பட்டிருக்கிறது!

    // ஸ்ருதிகளைப் பொருத்தவரை ஒருவன் தலித் என்பதற்காக அங்கீகரிக்கப்படவுமில்லை, நிராகரிக்கப்படவும் இல்லை, அவனது குலம் இவ்விரண்டுக்குமான ஒரு தகுதியாகக் கொள்ளப்பட்டதில்லை, எப்படி ஒரு பிராமணன் பிராமணன் என்பதற்காகவே அங்கீகரிக்கப்படுவதும் இல்லை, நிராகரிக்கப்படுவதும் இல்லையோ அதுபோல’ // மன்னிக்கவும் சார், வெ. சா. ஸ்ருதிகளைப் பற்றி தன கட்டுரையில் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. தமிழ் இலக்கியத்தில் தலித்கள் என்பதுதான் கட்டுரைத் தலைப்பே. எந்தத் தமிழ் இலக்கியமும் சுருதி என்று அழைக்கப்படுவதில்லை. என் புரிதலில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மாறாக உங்கள் புரிதல்தான் எனக்கு சரியாகப் படவில்லை.

  18. நிராகரிக்கப்படவும் இல்லை, அங்கீகரிக்கப்படவுமில்லை என்பது ஒரு பொதுவான சமூக-கலாசாரம் சார்ந்த அறிவிக்கை அலலது நினைவூட்டல். தமிழிலக்கியம் தொடர்பான கட்டுரை என்பதால் ஒவ்வொரு வரியும் தமிழ் இலக்கியச் சான்றாகவே வரவேண்டும் என எதிர்பார்க்கத் தேவையில்லை. மேலும் தமிழ் இலக்கியத்தில் ஸ்ருதி என்பதாகத் தனியாக ஒரு பிரிவு இல்லை எனினும் ஸ்ருதிகளைச் சார்ந்தும் பின்பற்றியும் கருத்தாக்கங்கள் இருக்கவே செய்கின்றன. தமிழ் மட்டுமல்ல, ஹிந்துஸ்தானத்து இலக்கியங்கள் அனைத்திலுமே ஸ்ருதிகளில் உள்ள உண்மைகளின் தாக்கத்தைக் காணமுடியும். இதைத்தான் கவனிக்க வேண்டுமேயன்றி தனியாக ஸ்ருதி என்பதாக ஒன்று ஒவ்வொரு மொழியிலும் உள்ளதா என்று யோசிக்கத் தேவையில்லை.
    -மலர்மன்னன்

  19. அன்புள்ள மலர்மன்னன், மன்னிக்கவும் தாங்கள் சொல்லும் விளக்கம் எனக்கு சரியாக படவில்லை. இந்த வரிகளை “சமாளிக்க” நீங்கள் ஒரு விளக்கத்தை புகுத்துவதாகவே தோன்றுகிறது.

  20. ஸ்ரீ ஆர்.வி., ஸ்ரீ மலர்மன்னன் நமஸ்தே

    \\\\\\’’தலித்துகள் என்பதற்காக அங்கீகரிக்கப் படவும் இல்லை. நிராகரிக்கப் படவும் இல்லை. மனிதர்கள் கவனிக்கத் தவறிய போது தெய்வமே இடை புகுந்து அவர்களைச் சிறப்பித்திருக்கிறது\\\\\\\

    தங்களிருவரிடையே மேற்கண்ட விஷயம் சம்பந்தமான சம்பாஷணைகள் வாசித்து வருகிறேன். ஊடே கருத்து தெரிவிப்பதற்கு க்ஷமிக்கவும். என்னுடைய புரிதல் வேறாக உள்ளது.

    \\\\\\\\தலித்துகள் என்பதற்காக அங்கீகரிக்கப் படவும் இல்லை. நிராகரிக்கப் படவும் இல்லை\\\\\\\

    அருளாளர்களும் ஆண்டவனும் எந்த ஒரு மனுஷ்யனையும் தலித்துகள் என்பதற்காக அங்கீகாரமோ அல்லது நிராகாரமோ செய்யவில்லை என்பது தொக்கி நிற்கும் செய்தியாகப் படுகிறது. ஸமூஹ அங்கீகாரம் நேற்று மோசமாக இருந்தது என்பது நிதர்சனம். ஆனாலும் அருளாளர்களும் ஆண்டவனும் அதை மாற்ற விழைந்தார்கள் என்பது சரித்ரம். அதன் பலன் தலித்துகளின் சம்சயம் நீங்கிய மற்றும் அதிகமாகும் ஆன்மீக ஈடுபாடு மற்றும் மற்றையவர்களின் தலித்துகள் சம்பந்தமாக மாறி வரும் மனப்போக்கு. இது தொடர்வதால் நாளை மேலும் ப்ரகாஸமாக இருக்கும் என்ற நம்பிக்கை.

  21. ஸ்ரீ ஆர்.வி., எதையும் சமாளிக்க வேண்டும் என்பதற்காகப் பேசுவதோ எழுதுவதோ எனது வழக்கமல்லல. ஏனெனில் நான் வெறும் விவாதத்திற்காக இங்கு மறுமொழிகள் எழுதுவது இல்லை. எனக்குத் தெரிந்த விஷயங்களைத் தெரிந்த அளவில் பகிர்ந்துகொள்ளவே எழுதுகிறேன். விவாதங்களில் பங்கு எடுத்து நேரம் செலவிட எனக்கு உடலில் தெம்பும் இல்லை, அவகாசமும் இல்லை.

    ஸ்ரீ க்ருஷ்ணகுமார், நீங்கள் தெரிவித்துள்ள கருத்தைத்தான் நான் வேறுவிதமாக, ஸ்ருதிகளின் அடிப்படையில் சொல்லியிருக்கிறேன். நீங்கள் என்னைவிடச் சிறப்பாகவும் தெளிவாகவும், மனசுக்கு இதமாகவும் சொல்லியிருக்கிறீர்கள். இதற்காக உங்களுக்கு நன்றியும் பாராட்டும்.
    -மலர்மன்னன்

  22. Bhagwad Ramanuja was, is & will be the Greatest Mahapurusha ever to set foot on this earth.

    Any criticism of him is foolhardy.

    Normally, in vaishnavism, it is said that disciples attain moksha because of their Gurus. In Ramanuja’s case, his acharyas attained moksha because they were blessed to have him as their disciple.

    Emberumanaar Thiruvadigale Saranam.

  23. // பிராமணர் அல்லாத பெரிய நம்பியின் தேவி கிணற்றிலிருந்து இறைத்த நீர் இராமானுஜர் தேவியின் பாத்திரத்தில் தெளிக்க அது தோஷமடைந்த கோபம் சண்டையில் முடிகிறது. //

    தவறான தகவல். பெரிய நம்பிகள் (மகாபூர்ணர்) பிராம்மண குலத்தில் பிறந்த பிராம்மணர் தான். பிராம்மண உட்பிரிவுகளிலேயே உயர்வு-தாழ்வு பார்த்ததால் இராமானுஜருடைய மனைவி கோபப்பட்டார் என்பதை குரு பரம்பரையில் படித்ததாக நினைவிருக்கிறது. தகவலுக்காக மாத்திரம்.

    (ஸ்மார்தர்களிலேயே சிலர் “வடமம் உசந்தது. ப்ருஹச்சரணம் பெப்பே. அஷ்டசஹச்ரம் அழுக்கு” என்று கூறிக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.)

  24. தேசிகரின் குரு பெரியவாச்சன்பிள்ளை என்று கட்டுரையில் உள்ளது. இது சரியா என்று தெரியவில்லை. ஆசிரியர் கூறிய விஷயம் குரு பரம்பரா பிரவாத்தில் இருக்கவேண்டும். இதன் விவரத்தை கூறினால் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *