இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -1

ஐ.எஸ்.ஐ.

isi_motiffஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்களை செய்து முடிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ முழு அளவில் செய்து தருகிறது. கஷ்மீரைப் பொறுத்தவரை ஐ.எஸ்.ஐ.யின் முகம் வேறு. மற்ற பிரச்சினைகளில் அதன் முகம் முற்றிலும் மாறுபட்டது. நேரடி யுத்தங்களானாலும் சரி, அல்லது நிழல் யுத்தங்களானாலும் சரி, வெறும் கலவர கலாட்டாக்களானாலும் சரி, அத்துனையிலும் முன்னணியிலும்  பின்னணியிலும் இருப்பது ஐ.எஸ்.ஐ. ஆகும். 

பாக்கிஸ்தானின் வெளிவிவகாரங்களைப் பொறுத்தவரை கஷ்மீர்தான் அதிமுக்கியம்.  அடுத்தப்படியாக நதிநீர் பங்கீடு.  இந்த இரண்டையும் முன்வைத்துதான் இந்தியாவின் உள்விவகாரத்தில் மூக்கை நுழைக்க முடியும் என பாக்கிஸ்தான் நினைத்தது. அதையே ஐ.எஸ்.ஐயும் செயல்படுத்த முனைந்தது. ஜம்மு கஷ்மீரில் தங்களது பணியினைச் செய்வதற்கு ஐ.எஸ்.ஐ மாதந்தோறும் இரண்டு கோடியே நாற்பது லட்ச ரூபாய் செலவு செய்தது.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ந் தேதி பாரத நாடு சுதந்திரம் பெற்றது.  ஆகஸ்ட் 14ந் தேதி பாக்கிஸ்தான் சுதந்திரம் பெற்றாலும், பாக்கிஸ்தான் அதிபர் லியாகத் அலி கானுக்கு கஷ்மீர் மாநிலத்தின் மீது ஒரு கண் எப்போதும் உண்டு.  ஆகவே, கஷ்மீர் மாநிலத்தை மீட்க ஒரு யுத்தம் நடத்தத்  தன்னை தயார் படுத்திக் கொண்டார் பாக்கிஸ்தான் அதிபர்.  1947ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் கஷ்மீர் மீது படிப்பறிவில்லாத ஆதிவாசி முரடர்களைக் கொண்ட பதான் படைகளை முழுமையாக நம்பி களத்தில் இறங்கினார்.  ஆனால், லியாகத் அலி கான் தான் எண்ணியவாறு கஷ்மீர் மாநிலத்தை பிடிக்க இயலவில்லை.  யுத்தத்தில் பாக்கிஸ்தான் படு தோல்வி கண்டது.

பாரத தேசத்துடன் கஷ்மீர் மாநிலம் இணையும் என்கிற  ஒப்பந்தத்தில் கஷ்மீர் மன்னர் கையெழுத்திட்டு விட்டதையோ, இந்திய ராணுவம் கஷ்மீர் நோக்கிப் புறப்பட்டுவிட்டதையோ, வந்து சேர்ந்ததையோ அவர் அறியவில்லை. உரிய காலத்தில் பாக்கிஸ்தானிய உளவு அமைப்பு தகவல்கள் கூறவில்லை என்பதில் லியாகத் அலிகானுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. 1948ல் பாக்கிஸ்தான் பாரதத்துடன் நடத்திய யுத்தத்தில் தோல்வியடைந்தது. இதற்குப் பாக்கிஸ்தானின் உளவு பிரிவு தான் முதன்மையான காரணம் என்ற் முடிவிற்கு லியாகத் அலிகான் வந்ததால்,  நீண்ட யோசனைக்குப் பிறகு நிதானமாகவும்  தெளிவாகவும்  முடிவு  செய்தார்.
“இருக்கிற உளவு அமைப்புகளால் பெரிய பிரயோஜனமில்லை.  ஆகவே புதிதாக ஓர் உளவு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்”, என்ற அவரது சிந்தனையின் அடிப்படையில் உருவான  அமைப்புத்தான் ஐ.எஸ்.ஐ ஆகும்.

pakistan_jihad_sleeper_cellsஇங்கிலாந்தின் மேஜர் ஜெனரல்  R. Cawthome என்பவர் பாக்கிஸ்தான் ராணுவத்தில் முக்கிய பதவியில் இருக்கும் போது அந்த ஆங்கில அதிகாரியால், லியாகத் அலி கானின் நேரடி கவனத்தில்,  1948ல் ஐ.எஸ்.ஐ தோற்றுவிக்கப்பட்டது.  அது தோன்றியபோதே வெளிநாட்டு விவகாரங்களை மட்டும், குறிப்பாக இந்திய விவகாரங்களைக் கவனித்தால் போதுமானது என முடிவு செய்யப்பட்டது.  அதன்படி கஷ்மீரையும் ஆப்கனிஸ்தானையும் கவனிப்பதே முக்கிய பணியாக வரையறுக்கப்பட்டது.

ராணுவம் செய்ய முடியாத காரியங்களைச் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் ஐ.எஸ்.ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள்.  பாரத தேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் இவர்களின் கழுகுப் பார்வை இருந்து கொண்டே இருக்கும்.  பாரத தேசத்தில் குஜராத் முதல் அஸ்ஸாம் வரையும், கஷ்மீர் முதல் கேரளா வரையிலும் இவர்களின் பார்வைக்குத் தொடர்பு உள்ளது.  பாரத நாட்டில் உள்ள அனைத்து நகரங்களிலும் இவர்களின் முழு நேரப் பணியாளர்கள் இருப்பார்கள். அல்லது ஜ.எஸ்.ஜ யின் ஸ்லீப்பர் ஏஜென்ட்கள் இருப்பார்கள். இந்த அமைப்பில் தற்போது சுமார் 25000 பேர்கள் பணியாற்றுகிறார்கள். 

ஐ.எஸ்.ஐயில் Joint Intelligence , Joint intelligence Bureau, Joint counter intelligence Bureau , Joint Intelligence & North, Joint intelligence Techinical, Joint Signal Intelligence Bureau, Joint Intelligence Miscellaneous எனப் பல துறைகள் உருவாக்கப்பட்டன.   இதில் Joint Intelligence & North எனும் பிரிவு முழுக்க முழுக்க கஷ்மீர் பற்றிய சிந்தனை மட்டுமே கவனிக்கக் கூடிய பிரிவாகும்.
 
மேற்கூரிய பிரிவுகள் மட்டுமில்லாமல், வெடி பொருட்கள் கையாளுவது எப்படி என்கிற பிரிவும், இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பு சம்பந்தமான பிரிவும் பின்பு அமைக்கப்பட்டன. Joint Intelligence & North  பிரிவினர் தான் இருப்பத்து நான்கு மணி நேரமும் கஷ்மீரிலேயே சுற்றிக் கொண்டு, கஷ்மீர்வாசிகளுடனேயே பேசிப் பழகி, அவர்களுடன் வசித்து, தகவல்களை — குறிப்பாக இந்திய ராணுவம் – எல்லைக்காவல் படையினரில் நடமாட்டம், படைகள் நகர்கின்ற இடங்கள் ஆயுதக் குவிப்பு , லைன் ஆப் கண்ட்ரோல் பகுதியில் ரோந்து போகும் படைப்பிரிவுகள் பற்றிய தகவல்கள் சேகரித்து அனுப்புவது இவர்களின் பிரதானமான பணியாகும். 
    
jihadi-trainingகஷ்மீர் மற்றும் வடகிழக்கு எல்லைப்புற மாகாணங்களில் இருந்து இயங்கும் தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளையும் கண்காணித்து அவர்களுக்குத் தேவைப்படுகின்ற ஆயுதங்கள் தருவது, அவர்களுக்குப் பயிற்சிகள் கொடுப்பது, தீவிரவாதச் செயல்களை செயல்படுத்தத் திட்டங்கள் வகுப்பது, வகுத்த திட்டங்களைச் செயல்படுத்த உத்திகளை வகுத்து கொடுப்பது இவர்களின் முதன்மையானதும் முக்கியமானதுமான பணியாகும். கஷ்மீர் மாநிலத்திற்குள் தொடர்ச்சியாகக் கிளர்ச்சி செய்பவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்தது ஐ.எஸ்.ஐ.

1948ல் நடந்த யுத்தத்திலும், 1965ல் நடந்த போரிலும் பாக்கிஸ்தான் தோல்வி அடைந்தவுடன், பாக்கிஸ்தான்  சில பாடங்களைக் கற்றுக் கொண்டது.  கற்ற பாடத்தின் படி இனி பாரத தேசத்தின் மீது படையெடுத்தால் அது வெற்றியைத் தராது என உணர்ந்து மாற்று வழியை கண்டு பிடித்தார்கள்.

பாரத தேசத்தின் வட கிழக்கு மாநிலங்களில் ஊடுருவிய தீவிரவாதிகளுக்கு உதவுவதற்கு  Covert Operation Division என்கிற பிரிவை 1950ல் ஐ.எஸ்.ஐ உருவாக்கியது. 

1988ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கஷ்மீரை மையமாக வைத்து  ஐ.எஸ்.ஐ தீட்டிய திட்டத்தின் வைத்த பெயர் Operation Topac என்பதாகும். இது ஒரு வகையான கெரில்லா முறைப் போர்.  8வது நூற்றாண்டில் ஸ்பெயினுக்கு எதிராக பெரு நாட்டின் இளைவரசன் டுபாக் அமரு II என்பவர் கையாண்ட அதே போராட்ட முறை இது. அவர் நினைவாக இந்தத் திட்டத்திற்கும் ஆப்ரேஷன் டோபாக் எனப் பெயர் வைத்தார்கள். இந்தத் திட்டம் கஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முஸ்லீம் இளைஞர்களிடம் தீவிரவாத சிந்தனையையும், ஆயுதம் ஏந்திய போராட்டத்தையும் வளர்ப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டது. 
           
மேற்கத்திய நாடுகளின் உதவி

pakistan_nursery1950ல் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு அணியில் தங்களை பாக்கிஸ்தான் இணைத்துக் கொண்டதால், மேற்கத்திய நாடுகள் பாக்கிஸ்தானின் ராணுவத்திற்கும் ஐ.எஸ்.ஐ க்கும் தேவையான ராணுவப் பயிற்சியையும் ஆயுதங்களையும் வழங்கினார்கள். கஷ்மீரிலும் செசன்யாவிலும் உள்ள தீவிரவாதிகளுக்குப் பாக்கிஸ்தான் எல்லைப்புறத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளிகள் (மதரஸாக்கள்) நிதியுதவி செய்து வருவதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் இகோர் இவனோவ் அப்போதே தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தான் எல்லைப்புறத்தில் உள்ள இஸ்லாமியப் பள்ளிகள் தீவிரவாதத்தை உற்பத்தி செய்யும் மையங்களாக உள்ளன.  இங்கு உருவாக்கப்பட்டவர்கள் தான் கஷ்மீரிலும் செசன்யாவிலும் தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார்கள் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரும் டெல்லியில் கூறினார்.

ஐ.எஸ்.ஐ யின் நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் அமைப்பாக The Bank of Credit and Commerce International  செயல்பட்டது.  பாக்கிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ.ஐ.யின் உளவாளிகளுக்குப் பிரச்சினைகளை உணர்ச்சிவசப்படாமல் அணுகுவதற்குக் கற்றுத்தருவதுதான் அமெரிக்காவின் சி.ஐ.ஏவுக்கு பெரும் சவாலாக இருந்திருக்கிறது.

pakistan_cia_isiஇந்திய ராணுவத்துக்குள் ஊடுருவ முடியாவிட்டால் இந்தியாவுக்குள் ஊடுருவுங்கள். கஷ்மீர் மட்டும் இந்தியா அல்ல என்கிற தாரக மந்திரத்தை ஐ.எஸ்.ஐக்கு கற்றுக் கொடுத்தது அமெரிக்காவின் உளவு பிரிவு ஆகும்.  இதன் காரணமாகவே ஐ.எஸ்.ஐ யின் முயற்சிகளைக் கஷ்மீரில் நடத்துவற்குப் பதிலாக பஞ்சாபில் கால்பதிக்க வைத்து சில வெற்றிகள் கிடைக்க வழி செய்தது. இந்தியாவுக்கு எதிரான எல்லாச் செயல்களும் பாக்கிஸ்தானுக்கு லாபகரமானது தான் என்கிற நோக்கத்தில் பஞ்சாப் பிரச்சினையை ஐ.எஸ்.ஐ. கையில் எடுத்தது.

1960ல் காலிஸ்தான் எனும் தனி நாடு  கோரிக்கை பஞ்சாபில் எழுந்ததது. அது வலுப்பெற்று 1970ன் தொடக்கத்தில் இந்திய அரசை அச்சுறுத்த துவங்கியது. இந்தியாவிலிருந்த பிரிய விரும்பும் சீக்கியர்கள் துவக்கிய கோஷம் காலிஸ்தான். இந்தியாவிற்கு எதிரான எல்லாச் செயல்களும் பாக்கிஸ்தானுக்கு லாபகரமானதுதான். இந்த எண்ணங்களின் அடிப்படையில்  பாக்கிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யின் அதிரடி கமாண்டோ பிரிவைச் சேர்ந்த சில அதிகாரிகள் 1966 மத்தியில் லண்டனுக்கு சென்று அங்கே தங்கியிருந்த சீக்கிய தலைவர் சரண் சிங் பஞ்ச்சி என்பவரைச் சந்தித்து அவர்களின் காலிஸ்தான் கோரிக்கை வெற்றியடைய உதவி செய்யத் தயாராக இருப்பதாக முழு உறுதி அளித்தனர்.

காலிஸ்தான் கோரிக்கையை முன் வைத்த சீக்கிய தலைவர்கள் அனைவரையும் ஐ.எஸ்.ஐ. யின் ஏஜெண்டுகள் தனித்தனியே சந்தித்துப் பேசினார்கள். 1969லிருந்து 1974ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்த நிக்ஸன் ஆட்சியில் சி.ஐ.ஏவும் தங்களது பங்காக ஐ.எஸ்.ஐயுடன் இணைந்து காலிஸ்தான் போராட்டத்திற்கு முழு ஆதரவையும் உதவிகளையும் செய்தார்கள்.    
          
சீக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசி அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க முயன்ற ஐ.எஸ்.ஐ.க்கு, 1969லிருந்து 1974ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்த நிக்ஸனின் ஆட்சியில் அமெரிக்காவின் உளவுத்துறையான  சி.ஐ.ஏ.வின் பலத்த ஆதரவு இருந்தது. சீக்கிய தீவிரவாதிகளுக்குத் தலைமை தாங்க ஜக்கி என்கிற ஜகஜித் சிங் சௌகான் என்பவரைக் கண்டுபிடித்து அவருடன் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன.  பேச்சு வார்த்தையின் இறுதியில முதலில் இருநூறு சீக்கிய இளைஞர்களுக்கு பாக்கிஸ்தானிய பஞ்சாப்பில் போர்ப்பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

pakistan_jihad_fundஇவர்களுக்கு நிதியாக கிழக்கு பஞ்சாபில் இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் பாக்கிஸ்தான் கிளை ஒன்றில் தனி நபர் பெயரில் கணக்கு துவக்கப்பட்டு, அந்தக் கணக்கில் பணம் போட்டுக் கொண்டே வரப்பட்டது. பஞ்சாப்பில் உள்ள ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளுக்கு வந்து சேரும் பாக்கிஸ்தான் கரன்ஸியை, இந்திய ரூபாயாக மாற்றி சீக்கிய தீவிரவாதிகளுக்குக் கொடுத்து  உதவி செய்வார்கள்.  உலகிலேயே மக்களிடம நிதி வசூலிக்காத இயக்கம் காலிஸ்தான் இயக்கம் தான். ஏன் என்றால் பாக்கிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அவர்களுக்கு வேண்டிய நிதியை முழுவதும் கொடுத்தார்கள்.                 

பாரத தேசத்தில் காலிஸ்தான் எனும் ஒரு நாடு உருவாக்கப்பட இயலாது என நன்கு தெரிந்தும் பாக்கிஸ்தானின் உளவு அமைப்பு இந்த திட்டத்திற்கு எதற்க்காகப் பெருமுயற்சி எடுக்க வேண்டும்? இந்த பிரச்சினையின் காரணமாக எழுகின்ற இடைவெளியில் இந்தியாவில் வலுவாகக் காலூன்ற ஒரு வாசல் தேவை என்பதால் பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்கள்.  ஆகவே, காலிஸ்தான் காலாவதி ஆன நேரத்தில் ஐ.எஸ்.ஐ. அஸ்ஸாமில் உல்ஃபா போரட்டம்  வலுப்பெற அனைத்து  உதவிகளையும்  செய்ய தொடங்கினார்கள்.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிற்சி அளிப்பதற்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்துவது எப்படி என்ற பயிற்சி கொடுக்கவும் பங்களாதேஷ் எல்லைகளில் பயிற்சி முகாம்கள் அமைத்து கொடுத்தது ஐ.எஸ்.ஐ.    National Security Council of Nagaland, People’s Liberation Army, United Liberation Front of Assam, North East Student Organization ஆகிய அமைப்புகளை ஒன்று சேர்ந்து Liberation Front of Seven Sisters ( ULFOSS) எனும் பெயரில் ஒரு அமைப்பை அமைத்து, இநத அமைப்பின் மூலமாகத் தீவிரவாதத் தாக்குதல் பயிற்சிகளுக்கு ஆட்களை பாக்கிஸ்தானுக்கு அனுப்பினார்கள்.

2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ந் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதலுக்கு பின் தான் உலக நாடுகள் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது எனக் கண்டனம் செய்தன. அதற்கு முன்பு வரை பாக்கிஸ்தான் பாரத தேசத்தில்  பயங்கரவாத தாக்குதல் நடத்திய போது உலக நாடுகள் எதுவும் கண்டு கொள்ளவில்லை.

குண்டுவெடிப்புகள்

jihad_pakistan_varanasi_bomb_blast_temple_tpe_20070115வெறும் கடத்தல்காரனாக இருந்த இப்ரகீம் தாவுத்தை முதன் முதலில் மதரீதியில் அவனை சிந்திக்கச் செய்து மத உணர்ச்சி வசப்படவைத்தது ஐ.எஸ்.ஐ.யின் மிகப் பெரிய சாதனையாகும்.  ஐ.எஸ்.ஐ. தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ள எல்லாவிதமான உத்திகளையும் கையாள தயக்கம் காட்டியது கிடையாது.  தனது கடத்தல் சரக்குகளை கராச்சியில் எவ்வித சிக்கலும் இல்லாமல் இறக்குவதற்கும்,  கடத்தல் தொழில் தடையில்லாமல் நடக்க வேண்டும் என்பதிலும் தாவுத் குறியாக இருந்தான். ஆகவே, இந்த செயல்பாட்டிற்கு ஐ.எஸ்.ஐ. உதவி கொடுத்ததால் அவர்களின் வலையில் வசமாக வீழ்ந்தான். 

ஆகவே, தாவுத்தை மடக்க ஐ.எஸ்.ஐ.க்கு சிரமம் இல்லாமல் போய்விட்டது.  பாக்கிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தாவுத்திற்கு மும்பையில் சில ஏஜெண்டுகளும், கராச்சியில் சில ஏஜெண்டுகளும் கொடுத்து, குவைத்தில் தலைமை அலுவலகம் ஒன்றையும் செய்து கொடுத்தார்கள்.  கராச்சியில் தாவுதின் சரக்குகள் எவ்வித சிக்கலுக்கும் உள்ளாகாமல் நகர்ந்து கொண்டிருக்க தக்க உதவிகளை மறைமுகமாக எல்லா வழிகளிலும் அனைத்து விதமான உதவிகளையும் ஐ.எஸ்.ஐ. செய்து கொடுத்தது.  
      
1993ம் ஆண்டு மார்சு மாதம் 12ந் தேதி மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தத் திட்டமிட்டது பாக்கிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.  இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காகத் தாவுத் மற்றும் டைகர் மேமோனையும் பயன்படுத்தினார்கள். தாவுத்திற்கு முன்பே டைகர் மேமோனை சரிகட்டியது ஐ.எஸ்.ஐ. இவர்கள் இருவரும் எவ்வித சேதாரம் இல்லாமல் மும்பைக்கு வெடிபொருள்களை கொண்டு சேர்ப்பார்கள் என நம்பி அதற்குத்  திட்டமிட்டது.

1993ம் ஆண்டு குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு இதுவரை சிறியதும் பெரியதுமாக மும்பையில் மட்டும் ஆறு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன .  நடந்த சம்பவங்கள் அனைத்திலும் பாக்கிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. யின் பங்கு மிக முக்கியமானதாகும்.  1993க்கு பிறகு நடந்த மிகவும் மோசமான குண்டு வெடிப்புச் சம்பவம் 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 11ந் தேதி நடந்த தொடர் ரயில் குண்டு வெடிப்பாகும். இது கஷ்மீரில் இயங்கும் பாக்கிஸ்தானின் தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவும், உத்திரபிரதேசத்தை மையமாக வைத்து நாடு முழுவதும் வளர்ச்சியடைந்த சிமி இயக்கமும் இணைந்து நடத்திய தாக்குதல் ஆகும். (சிமி இயக்கம் 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ந் தடைவிதிக்கப்பட்டுத் தலைமறைவு இயக்கமாக செயல்பட்டு வருகிறது.)

INDIA/2006 ஜூலை மாதம் நடத்திய தாக்குதலில் லஷ்கர்-ஈ-காகர் என்ற இயக்கமும் சம்பந்தபட்டிருப்பதாக ஆஜ்தக் சேனலுக்கு இந்த இயக்கம் கடிதம் எழுதியது.  ஆனால் லஷ்கர்-இ-தொய்பாவின் புனைபெயர்களுள் ஒன்றுதான் லஷ்கர்-ஈ-காகர் என்பது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பினரின் தகவல். ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பானது கலவரங்களை உருவாக்கக் காரணங்களைத் தேடி அலையாமல், காரணங்களை உருவாக்க  வேண்டும் என்கிற சித்தாந்தத்தில் கஷ்மீர் மாநிலத்தில் பல பிரச்சினைகளை உருவாக்கினார்கள். பூஞ்ச்சில் ஒரு கடை வீதியில் உள்ள கடைக்காரர் ஒருவரிடம், “எடை சரியில்லை. முஸ்லீம்களை ஏமாற்றுகிறாயா?” எனக் கூச்சலிட்டு கடைக்காரர் மண்டையைப் பிளந்து கலவரத்திற்கு வித்திட்டார்கள்.  இதைப்போலவே ஜம்முவில் ஒரு முஸ்லீம் பெண் குழந்தைக்கு ஒரு இந்து சுற்றுலாப் பயணி அன்பெழுக நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டார் என்று சொல்லி சுற்றுலா பேருந்து ஒன்றையே ஏரியில் முழ்கடித்தார்கள்.   

கஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ யின் செயல்பாடுகளை சற்று ஆராய்ந்தால் அவர்களின் சித்து விளையாட்டு நன்றாக தெரியும் .  2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டின் துவக்க காலங்களில் மற்ற மாநிலங்களில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் அனைவரும் ஐ.எஸ்.ஐயின் பயிற்சியும் அவர்களின் தூண்டுதலில் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுப்பட்டவர்கள் என்பது தெளிவாக தெரியும்.
 
2004ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 மற்றும் 6ந் தேதி பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மாவட்டத்தில் எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.  கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஐ.எஸ்.ஐ. தூண்டுதலில் இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் கைதானவர்கள்.  இவர்களிடம் 5.52 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 22.4.2004ந் தேதி டெல்லியில் Hizb-e-lslami  இயக்கத்தைச் சார்ந்த அஸிஸ் முகமது ஷா என்பவனை கைது செய்தார்கள். அவனிடம் 3.5 கிலோ வெடிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.  ஜனவரி மாதம் 25ந் தேதி 2004ம் ஆண்டு டெல்லியில் லஷ்மி நகரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் பொறுப்பாளர்கள் 3பேர்கள் 3கிலோ  வெடிப் பொருட்கள் டெட்னேட்டர்கள் ராக்கட் தயாரிக்க தேவையான பொருட்கள் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டார்கள்.

இந்திய ராணுவத்தில் ஐ.எஸ்.ஐ ஊடுருவலா?
    
இந்திய ராணுவ ரகசியங்களைக் கடத்துவதற்காக ஐ.எஸ்.ஐயானது  தரைப்படை, கப்பற்படை, விமானப்படை என மூன்றிலும் சிலரை ஊடுருவ செய்தார்கள். இந்திய தரைப்படையில் டெல்லியில் பணியில் இருந்த ஒருவர் லேக் பகுதியில் கைது செய்யப்பட்ட போது தான் இந்திய அரசுக்கு இது தெரியவந்தது. 1980ல் கப்பற்படை பிரிவில் மூத்த அதிகாரி ஒருவர் ஐ.எஸ்.ஐ தொடர்பு கொண்ட பாக்கிஸ்தான் பெண் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பல முறை இந்தியக் கப்பற்படை ரகசியங்கள் அந்தப் பெண் மூலம் கடத்தப்பட்டதாக பின்னால் தெரிய வந்தது.  இந்தியாவில் உள்துறை அமைச்சகம் வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றில் ஊடுருவிய உளவாளிகள் தங்களுக்குள் தகவல்களை பரிமாற்றங்கள் செய்த இடம் காட்மாண்டு ஆகும்.

ஐ.எஸ்.ஐ. தனது திட்டங்களை செயல்படுத்த தென் பாரதத்திலும் தளம் அமைக்க முயற்சி செய்தார்கள்.  இவர்களின் முயற்சிக்கு ஆதரவாக ஐதரபாத், பெங்களுர், கொச்சி கோழிக்கோடு, குல்பர்க்கா மற்றும் Bhatkal ஆகிய நகரங்கள் வலுவாக அமைந்தன.  ஆந்திர மாநிலத்தில் உள்ள Ittehadul –usalmaan,  Hijibul Mujahideen  என்ற இரு அமைப்புகளும் ஐ.எஸ்.ஐக்கு ஆதரவுக் கரங்கள் நீட்டினார்கள்.  ஆகவே ஐ.எஸ்.ஐ. ஆதரவு பெற்ற பின் ஆந்திராவில் நடைபெற்ற அனைத்து பயங்கரவாதத் தாக்குதல்களிலும் இந்த இரு இயக்கங்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக உளவுத் துறை கூறுகிறது.  தமிழகத்தில் காயல்பட்டினத்தில் ஐ.எஸ்.ஐ யினரும் விடுதலைப் புலிகளும் சந்தித்துப் பேசுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பல இடங்களில்  இரு இயக்கத்தினரும் சந்தித்தாலும் காயல்பட்டினம்  பொதுவான இடமாக விளங்கிறது.  

pakistan_jihad_terrorists

இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் நோக்கத்துடன் தீவிரவாத சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதற்குப் பாக்கிஸ்தான் மிகவும் முக்கிய காரணமாகும். பாரத தேசத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய பல பயங்கரவாதிகள் இன்று பாக்கிஸ்தானில் சுகபோக வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். 

அப்படி பாக்கிஸ்தான் அரசால் காக்கப்படுபவர்களில் மசூத் அசார் 5000 பேர்களுடன் இநதியாவிற்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்களை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது எனும் அமைப்பை பாக்கிஸ்தானிலிருந்து நடத்துகிறான். 1993ம் ஆண்டு மும்பை வெடிகுண்டு சம்பவத்திற்கு முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகீம், டைகர் மேமன், ஆயூப் மேமன், மற்றும் Hizb-ul-Mujahideenன் தலைவர் சையது சலாலுதீன், இந்தியாவில் ஐ.எஸ்.ஐ யின் முக்கிய உளவாளியான சோட்டா ஷகீல் , மசூத் அசாரின் சகோதரன் அத்தார் இப்ராகீம், 1997ல் டெல்லியில் 30க்கு மேற்பட்ட வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்ட அப்துல் கரீம், காந்தகாரூக்கு விமானத்தைக் கடத்திய குழுவின் தலைவன் ஷாகீத் அக்தர் சையது ஆகியோர்கள் பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் ஆசியுடன் கராச்சியில் வாழ்ந்து கொண்டு இந்தியாவின் மீது தங்களது பயங்கரவாதச் செயல்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

பாக்கிஸ்தான் அரசிடம் இந்திய அரசு பல முறை எடுத்துக் கூறியும் கூட பாக்கிஸ்தான் அரசு அவர்களை இந்தியாவிடம் இன்று வரை ஒப்படைக்கவில்லை.

(தொடரும்)

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

17 மறுமொழிகள் இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -1

 1. ரமேஷ் on January 25, 2011 at 11:13 am

  இந்தியாவிற்குள்ளேயே நம் தேசிய கொடியை ஏற்ற கூடாது என தடை விதிக்கின்றனர்..நம் நாட்டின் ஒரு மாநிலமான கஷ்மீரில் நம்மால் தேசியக்கொடியை ஏற்ற முடியாத சூழ்நிலை..இதை நாம் எங்கு போய் முறையிடுவது..

 2. reality on January 25, 2011 at 8:42 pm

  இந்திய அரசு என்கின்ற ஒன்றுக்கும் பாகிஸ்தான் ,ஐஎஸ்ஐ போன்றவற்றிற்கும் வித்யாசமில்லை என்று இன்று வரை நிரூபணங்கள் வந்துகொண்டிருக்கும் வேளையில் தெய்வங்கள் தான் அவ்வப்போது தீங்கினர்களுக்குத் தீங்கு என்ற நீதியைச் செயலாற்றிக்கொண்டிருக்கின்றன.

 3. அருண்பிரபு on January 26, 2011 at 9:18 pm

  இவர்களுக்குள்ளேயும் பகை, மற்றவன் மீதும் பகை. இவர்கள் விளங்கவும் மாட்டார்கள், விளங்க விடவும் மாட்டார்கள். பகையற்ற சமுதாயம் என்பது இவர்களைப் பொறுத்தவரை கிடையாது!

  http://tribune.com.pk/story/108919/bomb-attacks-in-karachi-lahore-kill-11-officials/#comment-130620

 4. truehinduragu on January 27, 2011 at 12:53 am

  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் சீனா உட்பட்ட இந்தியாவின் எதிரிநாடுகள் கைகொடுக்க முன்வந்தபோதும் உதாசீனம் செய்ததை உலகநாடுகள் யாவும் அறிந்த உண்மை.

  இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் பாக்கிஷ்தானின் உளவுப்பிரிவால் உருவாக்கப்பட்ட ஜிகாத் அமைப்பை( தமிழகத்துக்கு அனுப்பி ஊருவிழைவிக்கும் நோக்கில் இலங்கை அரசின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட அமைப்பு) தமிழீழ விடுதலைப்புலிகள் அழித்தமையை அமெரிக்கா தொட்டு யாவரும் அறிந்த உண்மை.

  இவற்றை மறைத்து; தமிழீழ விடுதலைப் புலிகள்மேல் கலங்கம் ஏற்படுத்தும் நோக்கில்; தமிழீழ விடுதலைப் புலிகள்மேல் தமிழக இந்துக்களுக்கு எதிர்ப்புணர்வை ஊட்டும் நோக்கில் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளதே!!!!! இக்கட்டுரையின் உண்மைத்தன்மையில் தமிழகத்தில் மட்டும்தான் ஓட்டையா? அல்லது முழுக்கட்டுரையுமே இப்படி இருட்டடிப்பு செய்யப்பட்ட விசமத்தனமானதா?

 5. armchaircritic on January 27, 2011 at 9:50 am

  //தமிழீழ விடுதலைப் புலிகள்மேல் தமிழக இந்துக்களுக்கு எதிர்ப்புணர்வை ஊட்டும் நோக்கில் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளதே!!!!!//
  வேறு ஏதோ கட்டுரைக்கு இங்கு மறுமொழியா? தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி கட்டுரையில் எங்கு வருகிறது?!

 6. களிமிகு கணபதி on January 27, 2011 at 12:16 pm

  இந்திய-பாக்கிஸ்தான் போரில் இந்தியா தோல்வியையே தழுவியது. இந்தியா வெற்றி பெற்றதாகச் சொல்லப்படுவது வெறும் பரப்புரை மட்டுமே. உண்மையல்ல.

 7. ரமேஷ் on January 27, 2011 at 3:59 pm

  ”இந்திய-பாக்கிஸ்தான் போரில் இந்தியா தோல்வியையே தழுவியது. இந்தியா வெற்றி பெற்றதாகச் சொல்லப்படுவது வெறும் பரப்புரை மட்டுமே. உண்மையல்ல”
  களிமிகு கணபதி என்ற இந்து பெயரில் எழுதி இருப்பவரே நீங்கள் ஒரு முஸ்லிம் என்று நினைகிறேன்..இங்கே இந்தியா போரில் பாக்கிஸ்தான் கிட்ட போரில் தோற்றதாக கதை விட்டு உங்க விசுவாசத்தை பாகிஸ்தானுக்கு காட்டி இருக்கிறீர்கள்..இந்திய ராணுவத்தின் வீரத்தின் முன்னாள் எந்த நாட்டு ராணுவமும் நிற்க முடியாது.. இந்தியாவுடன் நடந்த அனைத்து போர்களிலும் பாகிஸ்தானின் கோழை ராணுவம் தோற்று புறமுதுகிட்டு ஓடியதை யாராலும் மறைக்க முடியாது..இந்தியா பங்களாதேஷ் நாட்டை உருவாகியதை உங்களால் மறுக்க முடியுமா?..இந்திய ராணுவத்திடம் கிட்டத்தட்ட 1 லட்சம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சரணடைந்தார்களே அதை உங்களால் மறுக்க முடியாமா?..இந்தியாவிடம் நேரடியாக போரில் மொத முடியாததால்தான் கோழை தனமாக தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்புகிறார்கள்..இந்தியா பொறுமையாக இருக்கும்வரைதான் உங்க ஆட்டம் எல்லாம்.பொறுமை இழந்தால் பாகிஸ்தான் காரங்க துண்ட காணோம் துணிய காணாம் என்று ஓடவேண்டியதுதான்..

 8. களிமிகு கணபதி on January 27, 2011 at 4:51 pm

  @ ரமேஷ்

  ஸலாம்.

  போர்களில் வென்றது இந்திய ராணுவம் மட்டுமே. இந்தியா அல்ல.

 9. ரமேஷ் on January 27, 2011 at 7:28 pm

  /களிமிகு கணபதி/
  //போர்களில் வென்றது இந்திய ராணுவம் மட்டுமே. இந்தியா அல்ல//

  ஸலாம் பாய்.. உங்களுக்கும் உங்க பாகிஸ்தான் கூட்டத்துக்கும் கிழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டவில்லை என்ற மாதிரித்தான் பேசுவிங்க ..உங்க டயலாக் வடிவேல் காமெடியையே மிஞ்சிடுசி ஹ ஹ ஹ ஹ

 10. களிமிகு கணபதி on January 28, 2011 at 10:32 am

  @ ரமேஷ்

  ஒரு போரானது நிலம் மற்றும் பொருளாதாரக் லாபங்ககளைப் பெறுவதற்காகத்தான் பெரும்பாலும் நடைபெறுகிறது.

  இந்திய-பாக்கிஸ்தான் போரில் நிலம் யாருக்குப் போனது?

  ஸலாம்.

 11. aayesha mohammed on February 5, 2011 at 12:49 pm

  களிமிகு கணபதி யா அல்லாஹ் அதற்காகத்தான் சல்லோடு சேர்ந்து அல்லாஹும் பாகிஸ்தானில் அமெரிக்கா குருவி சுடுவது போல மக்களை சுட்டு கொன்று இருக்கில்றார்கள் பணத்துக்காக பாகிஸ்தானிய தலைவர்கள் அந்த நாட்டு மக்களை விற்று விட்டார்கள் பாகிஸ்தான் என்றாலே உலகமே சிரிக்கிறது முஸ்லிம் என்றால் உலகமே பயப்படுகின்றது

 12. அருண்பிரபு on February 5, 2011 at 3:00 pm

  //இந்திய-பாக்கிஸ்தான் போரில் இந்தியா தோல்வியையே தழுவியது. இந்தியா வெற்றி பெற்றதாகச் சொல்லப்படுவது வெறும் பரப்புரை மட்டுமே. உண்மையல்ல.//
  இது உண்மையே! 1965ல் லால்பகதூர் சாஸ்திரியார் பிரதமராயிருந்த போது நமது படை கராச்சி வரை சென்று பிடித்து வைத்துக் கொண்டது. கராச்சியும் நமதே கஷ்மீரும் நமதே என்று பேசியிருந்தால் கஷ்மீரிலிருந்து பாகிஸ்தானியர்களை அடித்து விரட்டியிருக்கலாம்.
  1971ல் அப்படி கடுந்து பேசியிருந்தாலும் சரியாகியிருக்கும்.

  எத்தனை பாகிஸ்தானியர் சரணடைந்தனர் தெரியுமா என்று மார்தட்டுவது இருக்கட்டும். இந்த வெற்றிகளைக் கொண்டு நாம் என்ன சாதித்தோம். பிடித்த பகுதிகளை திரும்பக் கொடுத்தோம். இருக்கும் பகுதிகளில் நிம்மதி இழந்தோம். சுண்டைக்காய் வங்கதேசம் நமது எல்லைப் பாதுகாப்பு வீரர்களை கொன்ற போது இரு கை கொண்டு இரு இடங்களிலும் பொத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். பாகிஸ்தான் வாலாட்டினால் அடிப்பேன் என்று வாஜ்பாயி காலத்தில் முஸாஃபராபாத் சென்று அடித்தது போல தொடர்ந்து அடித்திருக்க வேண்டும்.

  இஸ்ரேல் அப்படித்தான் செய்கிறது. அமெரிக்கா அதற்குத் துணை போகிறது. காரணம் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இஸ்ரேலிய நன்மைக்குப் பிறகே உள்ளூர் அரசியல் என்ற தேச நலன் நாடும் பழக்கம் அங்கே வழக்கமாகி இருக்கிறது. இங்கே தேச நலனை அடகு வைக்கும் அந்நியரின் அடிவருடும் கொடுமை அல்லவா ஆட்சி என்ற பெயரில் நடக்கிறது?

  இப்படிப்பட்ட வெற்றிகளுக்கு விழா கொண்டாடி பெருமைப்பட என்ன இருக்கிறது?

  //ஒரு போரானது நிலம் மற்றும் பொருளாதாரக் லாபங்ககளைப் பெறுவதற்காகத்தான் பெரும்பாலும் நடைபெறுகிறது.

  இந்திய-பாக்கிஸ்தான் போரில் நிலம் யாருக்குப் போனது?//

  பொருளாதாரம் மட்டும் என்ன வாழ்கிறது? குறைந்த விலைக்கு பாகிஸ்தானுக்கு வெங்காயம் விற்று அதையே அதிக விலைக்கு அவர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளும் அவலம்.

 13. க்ருஷ்ணகுமார் on February 5, 2011 at 7:03 pm

  \\\\\\\\\\போர்களில் வென்றது இந்திய ராணுவம் மட்டுமே. இந்தியா அல்ல.\\\\\\\\
  ஸ்ரீ ரமேஷ், நமஸ்தே,

  ஸ்ரீ களிமிகு கணபதி அவர்களின் மற்ற கருத்துப்ப்கிர்வுகளை நீங்கள் பார்க்காது மற்றும் அவருடைய உள்ளார்ந்த கருத்தின் ஆழத்தை காணாது தேவையற்று அவரை தர்ம பரிவர்த்தனம் செய்திருக்கிறீர்கள்.

  ஒவ்வொரு பாரத பாகிஸ்தான் யுத்தத்திலும் பாரத சேனைக்கு ஜெயமும் பாகிஸ்தானிய சேனைக்கு அபஜெயமும் வாய்த்தது பாரத சேனையின் பராக்ரமத்தாலேயே. மதசார்பின்மை என்ற கூண்டில் தங்களை அடைத்துக்கொண்ட கிளிகளாகிய அன்றைய ஸ்ரீ மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி முதல் இன்றைய காந்தி பரிவாரம் வரைக்குமான பாரத ராஜநீதிக்ஞர்கள் ஹிந்துஸ்தானத்தை மண்டியிடவே வைத்துள்ளார்கள். பாகிஸ்தானை உருவாக்கியதன் மூலம் தேசத்திற்கு இழிவுகளையே கொடுத்திருக்கிறார்கள்.

  மித்ரபேதம் தவிர்க்கவும்.

  அகண்ட பாரதம் புனர் ஜீவிதமாகட்டும்.

  ஜனாப் மொஹம்மத்,

  \\\\\\\முஸ்லிம் என்றால் உலகமே பயப்படுகின்றது\\\\\\\\

  தவறு. பயப்படவில்லை. வெறுக்கிறது.

  ஒரு கூட்டுக்கிளிகளாயினும் கடைசீ கடவுளாணைகள் என்று நீங்கள் சொல்லும் குர்-ஆனை ஏற்காதவர்கள் என்பதாலும் ஈசாஅலேசலாம் என்று இஸ்லாமியரும் போற்றும் ஆனால் கடைசி இறை தூதர் என்ற படிக்கு ஏசுவின் கட்டளைகள் படி வாழும் க்றைஸ்தவர்களுக்கும் ஏசுவின் வ்ழி செல்லாத யஹூதிகளூக்கும் கைர் முஸல்மான் என்பதால் மீளா நரகமே ஏன்று நம்பப்படுவது சரியா?

  இவர்கள் அனைவரும் (யஹூதிகள் தர்ம பரிவர்த்தனம் செய்வதில்லை என நினைக்கிறேன்) சேர்ந்து ஹிந்துக்களை தர்ம பரிவர்த்தனம் செய்ய விழைவது சரியா?

  முஸல்மான்களும் க்றைஸ்தவர்களும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தர்ம பரிவர்த்தனம் செய்ய விழைவதால் ஐரோப்பிய உலகம் கொதிநிலையில் உள்ளது. இதிலெல்லாம் பயம் என்ற உணர்வு தென்படவில்லை. வெறுப்பு என்ற உணர்வே மேலோங்கி உள்ளது.

  இது உலகிற்கு நல்லதல்ல.

  விநாச காலே விபரீத புத்தி.

 14. P.Chenthil Kumar on April 9, 2012 at 8:32 pm

  களிமிகு கணபதி ,
  உனக்கு தைரியமாக உனது பெயரில் உனது கருத்தை கூட கூற முடியாமல் ஒரு ஹிந்து பெயரை வைத்து பசு தோல் போர்த்திய நரி போல குள்ள நரி புத்தியில் புத்தியும் மனமும் பேதலித்து இந்தியா வெற்றி பெறவில்லை , பாகிஸ்தான்தான் வெற்றி பெற்றது என்றும் , மறு படியும் புத்தி பேதலித்து இந்திய ராணுவம் தான் வெற்றி பெற்றது , இந்தியா இல்லை . என்று பைத்தியக்காரன் பேசுவது போல பேசி கொண்டு இருக்காதே . உனக்கும் உன்னை போல புத்தி பேதலித்த உன்னுடன் உள்ள அனைவருக்கும் ஒன்று சொல்லி கொள்கிறேன் . நீ இது போல சுதந்திரமாக உன் மண்டையில் தோன்றிய எல்லாவற்றையும் கூறுவது கூட இந்தியாவில் மட்டுமே முடியும் . பாகிஸ்தானில் உள்ள ஒருவன் கூட உன்னையும் உன்னை போல இந்த பாரதத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் அவர்களை போல ஒரு முஸ்லிமாக பார்க்கவில்லை . அதனால் தான் இங்கு வந்து உங்களது தர்காவிலேயே குண்டு வைத்து கொல்கிறான் . அவனுக்கு தெரிந்தது எல்லாம் நீ ஒரு இந்தியன் . இந்தியன் , இந்தியன் . அவ்வளவே . ஆனால் உன்னை போன்றவர்கள் மட்டுமே முட்டாள் தனமாக பாகிஸ்தானுக்கு சலாம் போட்டு பாகிஸ்தான்காரன் வந்து நமை காப்பாற்றுவான் என்று நினைத்து வாழ் நாளை களைத்து கொண்டு இருக்கிறாய் . புரிந்து கொள் நீயும் ஒரு முன்னாள் ஹிந்து தான் . நீ ஒன்றும் அரேபியாவில் இருந்து இந்தியாவிற்கு வரவில்லை . உனது பாட்டனும் முப்பாட்டனும் ஹிந்துவாக இருந்து கோவிலுக்கு சென்று பட்டை நாமம் இட்டு சிவாய நமஹா , ஹரி ஓம் என்று சொல்லி கொண்டு இருந்தவர்கள் என்பதை நீ மறுத்தாலும் உன் உல் மனது புரிந்து கொண்டால் போதும் .
  ஜெய் ஹிந்த் ! ! ! வந்தே மாதரம் ! ! ! பாரத் மாதாகீ ஜெய் ! ! !

 15. களிமிகு கணபதி on April 10, 2012 at 9:35 am

  Chenthil Kumar,

  //உனது பாட்டனும் முப்பாட்டனும் ஹிந்துவாக இருந்து கோவிலுக்கு சென்று பட்டை நாமம் இட்டு சிவாய நமஹா , ஹரி ஓம் என்று சொல்லி கொண்டு இருந்தவர்கள் என்பதை நீ மறுத்தாலும் உன் உல் மனது புரிந்து கொண்டால் போதும் .//

  என் உல்மனது புரிந்துகொண்டது செந்தில் குமார். நன்றி.

  இந்தியா பாகிஸ்தான் சண்டைக்குப் பின்னர் எந்த நாட்டின் பரப்பளவு அதிகரித்தது ?

  .

 16. Subramaniam Logan on May 17, 2013 at 6:58 pm

  மதிப்பிற்கும் மரியாதைக்கும் மட்டும் அல்ல அன்பிற்கும் உரிய திரு களிமிகு கணபதி அவர்களே!
  கட்டுரை ஏற்கனவே வாசித்திருந்தாலும் இன்றுதான் பின்னூட்டங்களை வாசித்தேன்.உங்கள் பொறுமையை பார்க்க (செந்தில்குமார், ரமேஸ்) உங்களிற்கு ஒரு 60 வயசு இருக்குமா? ஏனெனில் அவர்களின் உங்கள்மீதன கருத்தை பார்க்க எனக்கே BP ஏறிவிட்டது.
  சர்வம் சிவமயம்
  சுப்ரமணியம் லோகன்.

 17. kmv on January 12, 2014 at 7:51 pm

  POK 13297 SQ KM -LOSS TO INDIA, GAIN TO PAK
  BANGLADESH 147570 SQ KM- LOSS TO PAK, NO GAIN TO INDIA.

  who lost more?

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*