பெரியார் யாருக்குப் பெரியார்?

வரலாற்றுவழியாகப் பார்த்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குமான முரண்கள் – பிணக்குகள் ஏராளம். அதனால் ஏற்பட்ட சண்டைகள், சச்சரவுகள், கொடூரங்களும் மிக மிக அதிகம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் பிற்படுத்தப் பட்டோரின் பொறுப்பிலேயே இருக்கிறது. அங்கெல்லாம் தாழ்த்தப் பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலம் இருந்தது. இன்றும் கூட அந்நிலைமை இருக்கிறது. பள்ளிகளிலும் அதே நிலைமை இருந்தது. நாய்களும், பன்றிகளும், கழுதைகளும் நடமாடும் தெருக்களில் மனிதர்களாகிய தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க அனுமதி மறுக்கப் பட்டிருந்தது பெரும்பாலான பிற்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்களில். இந்த கொடுமையான அடக்குமுறைகளை – அநீதிகளை களை வதற்காக பல பெரியார்கள் தோன்றினார்கள். அந்த கொடுமைகள் குறைந்தபாடில்லை.

dalit12தமிழ்நாட்டிலும் இக்கொடுமைகளை எதிர்த்துப்போராட (?)  ஈ.வே.ராமசாமி நாயக்கர் தோன்றியதாக திராவிட இயக்க ஆதரவு எழுத்தாளர்கள் இன்றும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஈவேரா பாடுபட்டாரா? பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டாரா? இந்த இரு சமுதாயத்தினரையும் தன் சமுதாயமாகவே பார்த்தாரா? தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய பிராமணர்களை கடுமையாக எதிர்த்ததுபோல் – தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை எதிர்த்தாரா?

பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும்  இடையே ஈ.வே.ரா. வகித்த பாத்திரம் எது?  என்பதை ஆராயும்போது அவருடைய செயல், எண்ணம், தொண்டு எல்லாமே பிற்படுத்தப்பட்டவர் களுக்காகத்தான் என்பதை மறுக்க முடியாது. இதை அவரே பலதடவை சொல்லியும் இருக்கிறார்.

ஈ.வே.ரா. கூறுகிறார் :-
‘‘… என்போன்ற ‘சூத்திரன்’ என்று சொல்லப்படுபவன் ‘பறையன்’ என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம், ‘சூத்திரர்கள்’ என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறில்லை. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது.’’ (குடியரசு 25.4.1926)

ஈ.வே.ரா. கூறுகிறார் :-
தீண்டாமை விலக்கு என்னும் விஷயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால் அது எங்கள் நலத்திற்குச் செய்ததாகுமே ஒழிய, உங்கள் நலத்திற்கென்று செய்ததாக மாட்டாது……………. ” (குடியரசு 16-6-1929)

ஈ.வே.ரா. கூறுகிறார் :-
‘‘ஆதிதிராவிடர் நன்மையைக் கோரிப் பேசப்படும் பேச்சுகளும் செய்யப்படும் முயற்சிகளும் ஆதிதிராவிடரல்லாத மக்களில் பார்ப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள்.’’ (குடியரசு 11.10.1931)

ஈ.வே.ரா. கூறுகிறார் :-
திராவிடர் கழகம்’ என்பது, 4வது வருணத்தாராக ஆக்கப்பட்டு சமுதாயத்தில் இழிவுபடுத்தப்பட்டு, சரீரம் பாடுபட வேண்டியதாகக் கட்டாயப்படுத்தித் தாழ்த்தப்பட்டு வைத்திருக்கும் கோடி மக்கள் சமுதாயத்தின் விடுதலைக் கழகம் என்றுதான் சொல்ல வேண்டும்.” (குடியரசு 6-7-1946)

இவ்வாறு ஈவேரா தான் சூத்திரன் என்று சொல்லப்படுபவர் களுக்காகத்தான் பாடுபடுகிறேன் என்று தெள்ளத்தெளிவாக கூறியபோதும் திராவிட இயக்க எழுத்தாளர்கள் முதல் சில தலித் எழுத்தாளர்களும் கூட ஈவேரா தலித்துகளுக்காக பாடுபட்டார் என்பதுபோல ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து வருகின்றனர்.

பிராமணர்கள் பிற்படுத்தப்பட்டவர்களையும் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கினர். அந்த உந்துதலினாலேயே ஈவேரா பிற்படுத்தப்பட்டவர்களின் தீண்டாமை விலங்கை தகர்த்தெறிய பாடுபட்டார். அவருடைய நோக்கமே அதுவாகத்தான் இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட வேண்டும், அவர்களின் தீண்டாமை விலங்கை அறுத்தெறிய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவருக்குக் கிடையாது. பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்கின்ற கொடுமைகளை ஈவேரா எதிர்த்ததே இல்லை. தீண்டாமையை கடைபிடிக்கின்ற பிற்படுத்தப்பட்டவர்களை எதிர்த்து எந்த ஒரு போராட்டத்தையும் அவர் ஆரம்பிக்கவில்லை. அதற்காக அவர் கவலைப்பட்டதும் இல்லை.

ஆனால் தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்தினால் தாழ்த்தப்பட்டவர்கள் என்ன செய்ய
வேண்டும் என்று ஈவேரா  கூறுகிறார் :-
‘‘உங்களை யாராவது கிராமவாசிகள் துன்புறுத்தினால், இழிவாய் நடத்தினால் எதிர்த்து நிற்க வேண்டும். முடியாவிட்டால் வேறு பட்டணங்களுக்குக் குடியேறிவிட வேண்டும். அங்கும் ஜீவனத்திற்கு மார்க்கமில்லாவிட்டால் இம்மாதிரியான கொடுமையான மதத்தை உதறித் தள்ளிவிட்டு சமத்துவமுள்ள மதத்திற்குப் போய்விட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வெளிநாடுகளுக்காவது கூலிகளாய்ப் போய் உயிரையாவது விட வேண்டும். இம்மாதிரியான உறுதியான முறைகளைக் கையாளத் துணியவில்லையானால், உங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு சுலபத்தில் ஒழியாது என்றே சொல்லுவேன்.’’ (குடியரசு 16-6-1929)

இதுதான் அவருடைய தீர்வு. இதில் கிராமவாசிகள் யார்? பிராமணர்களா? பிற்படுத்தப்பட்டவர்களா? கிராமவாசிகள் தொண்ணூற்றைந்து சதவீதம்பேர் பிற்படுத்தப்பட்டவர்கள்தானே? அவர்கள் தானே தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துகிறார்கள்? அதை நேரடியாக சொல்லாமல் கிராமவாசிகள் என்ற அடைமொழி கொடுப்பது ஏன்? அவர்களை காப்பாற்றுவதற் காகத்தானே? இதே அந்த கிராமவாசியின் இடம் அக்ரஹாரமாக இருந்தால் பிராமணர்கள் என்றுதானே சொல்லியிருப்பார்? பின் ஏன் பிற்படுத்தப்பட்டவர்களை நேரடியாக சொல்லாமல் கிராமவாசிகள் என்று சொல்ல வேண்டும்?

ஏனென்றால் அவர்கள் தன் சமுதாயம் அல்லவா?

மேலும் ஈ.வே.ரா. கூறுகிறார் :-
ரொக்கச் சொத்துக்களும் பூமி சொத்துக்களும் அனேகமாய்ப் பார்ப்பனர் முதலாகிய உயர்ந்த சாதிக்கார்களிடமும் லேவாதேவிக் காரர்களிடமுமே போய்ச் சேரக்கூடியதாக இருப்பதால்
(குடியரசு 4-1-1931)

என்று பெரியார் குறிப்பிடுகிறார். இங்கு பெரியார் பார்ப்பனரை மட்டும் பெயரில் குறிப்பிட்டு விட்டு மற்ற உயர்ந்த சாதிக்காரர், லேவாதேவிக்காரர் என்று பொதுப்படையாகவே கூறிச்சென்று விடுகிறார். உயர்ந்த சாதிக்காரர், லேவாதேவிக்காரர் யார்? பிற்படுத்தப்பட்டவர்கள்தானே!

பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை கொடுமை செய்யும்போது அதை கண்டிக்காமல் அதற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார் ஈவேரா.

ஈவேரா  கூறுகிறார் :-
‘‘ஆதித்திராவிட சமுகத்தாருக்கு, மற்ற சமூகத்தார் செய்யும் கொடுமைகளைப் பற்றிக் கேட்க எனக்கு ஆத்திரமாய் இருக்கின்றது. ஆனால் இதற்கு யார் ஜவாப்தாரி என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கையில், உங்களைக் கொடுமை செய்பவர்கள் ஜவாப்தாரியல்லர்; ஏனெனில் அவர்கள் தங்களது நம்பிக்கையின்பேரில், தங்களது மத உணர்ச்சி, மத ஆதாரம் ஆகியவைகளில் உள்ள பற்றுதலின் பேரில் தங்கள் முன் ஜென்மத்தின் கர்மம் – பூர்வபுண்ணியம்-தலைவிதி என்கின்ற சுதந்திரத்தின் பேரில், ஒரு உரிமை பாராட்டி அம்மாதிரி செய்கிறார்களேயொழிய வேறில்லை.” (குடியரசு 11-1-1931)

இதைவிட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் வேறில்லை. இந்த காரணங்களைத்தானே பிராமணர்களும் தங்களுக்குச் சாதகமாக சொல்கிறார்கள்?  மத உணர்ச்சி, மத ஆதாரம், முன் ஜென்மத்தின் கர்மம், பூர்வபுண்ணியம், தலைவிதி என்றெல்லாம் சொல்லி தாழ்த்தப் பட்டவர்களை கொடுமைப்படுத்துகிறவர்களுக்கு வக்காலத்து வாங்குவது தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபடுகிறவர் என்று சொல்லப்படுகிற ஈவேராவின் தொண்டா?

‘‘பெரியார் பார்ப்பனரல்லாதார் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாகக் கருதும் போக்கைக் குறித்த கண்டனவுரையில் பெரிதும் வெப்பம் இல்லை. சில நேரங்களில் பார்ப்பனரல்லாதாரே பார்ப்பனரைவிட மிகக் கொடுமைப்படுத்துகின்றனர் என்பதை ஒப்புக் கொண்டாலும், பார்ப்பனரல்லாதாரின் கொடுமைக்குக்கூட , பார்ப்பனர்களைக் குறை சொல்லும் போக்கு பெரியாரிடம் இருந்தது. பார்ப்பனக் கருத்தியலுக்குப் பெரிதும் ஆட்படாத வேளாளர் சாதியத்தை தூக்கிப்பிடித்ததற்கும், தீண்டாமை கொடுமைகள் தாண்டவமாடியதற்கும் வரலாறு சான்று பகர்கிறது’’ என்று கோ.கேசவன் குறிப்பிடுவதில் உண்மையும் உள்ளது.

ஈவேரா ஒவ்வொரு சமயத்திலும் தான் பிற்படுத்தப்பட்டவர் களுக்காகத்தான் பாடுபடுகிறேன் என்பதை அழுத்தந்திருத்தமாக கூறியிருக்கிறார்.

ஈவேரா  கூறுகிறார் :-
ஜின்னாவின் வெற்றி என்னவென்றால் முஸ்லீம்களுக்கு, இந்துக்களுக்கு உள்ளதுபோல், சம உரிமை பங்கில் உண்டு என்பதல்லாமல், முஸ்லீம்களுக்கு முஸ்லீம் லீக் தவிர வேறு யாரும் பிரதிநிதித்துவம் அல்ல என்பதை உறுதிப்படுத்திவிட்டார். அம்பேத்கருக்கு வெற்றி என்னவென்றால் – ஷெட்யூல்டு வகுப்புக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அம்பேத்கர்தான் பிரதிநிதி என்பதோடு, காங்கிரஸ் பிரதிநிதித்துவம் கொண்டாடுவது சரியல்ல என்று செய்யப்பட்டுவிட்டது. இனி, நமக்கு வெற்றி என்னவென்றால், இனப்படி, மதப்படி, வகுப்புப்படி எந்த அரசியல் பிரதிநிதித்துவமும் இருக்கவேண்டும் என்று போராடினவர்கள் இந்நாட்டில் நாமேயாகும். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக, காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் ஸ்தாபனத்தை தலைமையை உதறித் தள்ளிவிட்டு, நடுமாநாட்டில் நாலாயிரம் பேர் இடையில், ‘காங்கிரஸ் இங்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொள்ளாததினால், நான் கவலைப்படவில்லை. இதற்காக வெளியேறி வேறு ஸ்தாபனம் ஆரம்பித்து, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொள்ளச் செய்கிறேன் இல்லையா பார்’ என்று பந்தயம் கூறி, மீசையை முறுக்கிக் காட்டிவிட்டு வந்த என் பந்தயப் பிரச்சனை, சிம்லா மாநாட்டில் ஏகமனதாய் ஒப்புக் கொண்டு கல்சாசனமாக்கப்பட்டுவிட்டது என்பதேயாகும். அதுவும் நம் விகிதப்படி என்றால் இன்னும் மகிழ்ச்சி அல்லவா? (குடியரசு 28-7-1945)

அம்பேத்கர்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதி என்று சொல்லிவிட்டார். அடுத்து இதில் நமக்கு, நாமேயாகும், நம் விகிதப்படி என்ற வார்த்தையெல்லாம் யாரைக்குறிக்கின்றன? சூத்திரர்களான பிற்படுத்தப்பட்டவர்களைத்தானே? அப்படியென்றால் ஈவேரா யாருக்குப் பாடுபட்டார்? யாருக்கு அவர் பெரியாராக இருந்தார் என்பது விளங்கவில்லையா?

ambedkar_periyar

ஈவேரா யாருக்காக பெரிதும் கவலைப்பட்டார், யாருக்காக பாடுபட்டார் என்பதையும் அவருடைய பேச்சுகளில், எழுத்துக்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக கொடுக்கப்பட்ட உரிமைகளைப் பற்றிய எரிச்சல்களையும் பார்க்கலாம்.

ஈவேரா கூறுகிறார் : –
……காங்கிரசும் சுயராஜ்யமும் இராமராஜ்யமும், திராவிடர்கள் சூத்திரத்தன்மையில் இருந்து மனிதத் தன்மை பெறாமல் இழிநிலையில் – அடிமை நிலையில் இருப்பதற்கு ஏற்பட்டவைகளே தவிர, வேறு எந்தக் காரியத்துக்கும் ஏற்பட்டதல்ல என்பதை நான் எங்கும் நிரூபிப்பேன். இல்லாவிட்டால், தேவைக்கு மேற்பட்ட யோக்கியதாம்சத்தை ஏற்படுத்திக்கொண்டு, திராவிடனுக்கு மாத்திரம் தகுதி, திறமை என்கின்ற முட்டுக்கட்டை ஏன்? முஸ்லீம்களுக்குத் தகுதி, திறமை வேண்டியதில்லை; வெள்ளையனுக்கு வேண்டியதில்லை; சட்டைக்காரர்களுக்கு வேண்டியதில்லை. ‘வேறு மதத்திற்குப் போய்விடுவேன்’ என்று மிரட்டுகிற ஆதித்திராவிடர்களுக்குத் தகுதி, திறமை என்பவை – ‘திராவிடனுக்கு இருக்க வேண்டும் என்றபடி’ வேண்டியதில்லை. ஆனால் திராவிடனுக்குப் பள்ளியில் சேர்க்கப்படுவதற்கே தகுதி, திறமை வேண்டும் என்று சுயராஜ்ய பார்ப்பனப் பிரதம மந்திரி சர்க்காரிலுள்ள திராவிடக் கல்வி மந்திரியைக் கொண்டே திட்டம் செய்வாரானால், மனுதர்மமும்  விபீஷணத்தன்மையும் எவ்வளவு பலாத்காரமாகக் கையாளப்படுகிறது என்று பாருங்கள்.
…….
……ஆதித்திராவிடர்களையும் முஸ்லீம்களையும் நடத்திய மாதிரி மிக மோசமாக இருந்து வந்தாலும், இப்போது அவர்களுக்குப் ‘பிரைஸ்’ அடித்துவிட்டது. முதல் பிரைஸ் இல்லையானாலும் நல்ல பிரைஸ். அவர்கள் நிலை உயர்த்தப்பட்டுவிட்டது. இனி அவர்களுக்குச் சரியானபடி விகிதாசாரமும் மேலுங்கூட- கண்டிப்பாகக் கிடைக்கும். அவர்களுக்கு சிபாரிசு, குறைகளைக் கேட்க வசதிகள் ஏற்பட்டு விட்டன.
…..
……ஆதித்திராவிடர்களுக்குத் திடீர் என்று வந்தயோகம் டாக்டர் அம்பேத்கர் ‘நான் இந்து அல்ல; பஞ்சமன் அல்ல; இந்து மதத்தின் எந்தப் பாடுபாட்டுக்கும் சம்பந்தப்பட்டவன் அல்ல’ என்று சொன்னதால்தான். கோயில் திறக்கப்பட்டதும், ‘லிஸ்ட்டு கொடுங்கள்; உத்தியோகம் கொடுக்கிறேன்’ என்று மந்திரி கேட்பதும், ‘உங்களுக்கு நீதிக்குமேல், அளவுக்குமேல் நன்மை செய்கிறேன். என்ன வேண்டும்? கேள்’ என்று பட்டேல் சொல்லுவதும், ‘நானும் ஆதித்திராவிடன், பங்கி’ என்று காந்தியார் சொல்வதும் ஆன காரியங்களுக்குக் காரணம் ‘நான் இந்துவல்ல’ என்று அஷ்டாட்சர மந்திரமேயாகும். டாக்டர் அம்பேத்காருக்கும் அய்ந்து வருடத்துக்கு முன்பே, நான், 1925ல் சொன்னேன், ஆனால் எனக்கு 5 வருடத்துக்குப் பின்பு சொன்ன அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் இனியும் ‘இந்து அல்ல’ என்றுதான் – வாயிலாவது சொல்லிக் கொண்டே எல்லா உரிமைகளும் பெறப்போகிறார்கள்.

……சாயபுகளும் பதவி விகிதாச்சாரம் பெற்று, ஷெட்யூல்டு வகுப்பாரும் பதவி உத்தியோகமும் கல்வி விகிதாச்சாரமும் பெற்று, மீதி உள்ளதில் பார்ப்பனர் ஏகபோகமாய் உட்கார்ந்து கொண்டால் – திராவிடனே அல்லது தமிழனே, அதாவது பார்ப்பானல்லாத, முஸ்லிம் அல்லாத, கிறிஸ்தவன் அல்லாத, ஆதித்திராவிடன் அல்லாத (ஷெட்யூல்டு வகுப்பார்) திராவிடனே! ‘சூத்திரனே!’ உன் கதி, உன் எதிர்காலம் என்ன ஆகும்? சிந்தித்துப்பார்! அரசியல் நிர்ணய சபையில் உனக்கு பிரதிநிதி எங்கே? ஷெட்யூல்டு வகுப்புக்கு, பார்ப்பானுக்கு, கொள்ளை அடிக்கும் வியாபாரிக்கு, கொடுமை முறை சங்கராச்சாரிக்கு அங்கே பிரதிநிதிகள் இருக்கிறார்கள். ‘நான் ஏன் சூத்திரன்’ என்று பதறுகிற திராவிடனுக்குப் பிரதிநிதிகள் எங்கே? சிந்தித்துப்பார்.
(நூல் – இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து, 1947)

தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைத்த உரிமைகள் பற்றிய எரிச்சல்கள் ஈவேராவிடம் அதிகமாகவே காணப்படுகிறது. இந்திய அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சில உரிமைகள் புரட்சியாளர் அம்பேத்கரால் கிடைத்தது. ஆனால் சூத்திரர்களுக்கு கிடைக்கவில்லையாம். அந்த எரிச்சல்களை எப்படி கொட்டுகிறார் பாருங்கள்!

ஈவேரா கூறுகிறார் : –
இன்று சமுதாயத்தில் பார்ப்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற மூன்று பெரும் பிரிவுகள் இருக்கின்றன. இதில் மேல்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பார்ப்பனனும், கீழ்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பஞ்சமனும் தங்களுக்கு வேண்டிய சலுகைகள் பெறுகின்றனர். ஆனால், இடையில் இருக்கும் சூத்திரர்கள் சலுகை இல்லாமல் வேதனைப்படுகின்றனர்.” (விடுதலை 16-4-1950)

மேலும் ஈவேரா கூறுகிறார் : –
‘‘டாக்டர் அம்பேத்கர் மட்டும் ஏதோ ஆதித்திராவிடர்களுக்காகப் போராடினார். இவரிடம் ‘உம் சங்கதிக்கு மட்டும் தடையில்லாமல் எது வேண்டுமானாலும் சொல் – செய்கிறோம்; ஆனால், மற்றவர்கள் விஷயத்தைப் பற்றிப் பேசாதே’ என்று கூறிவிட்டனர். அதன்படியே அம்பேத்காரும் தன் சமூகத்தாருக்கு வழிதேடிக் கொண்டார். ஆகவே, ஆதித்திராவிடர்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி விகிதாச்சாரம் கொடுப்பதாகக் கூறிச் சட்டமும் செய்துவிட்டனர். அந்தச் சட்டத்திலே ஆதிதிராவிடர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி சகலவற்றிலும் பங்கு கொடுக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கேட்டபடி, மக்கள் தொகை விகிதாச்சாரத்தின்படி ஸ்தானங்கள் கொடுத்துவிட்டனர். ஆகவே அவராவது அவ்வளவு பெற்றுவிட்டார். ஆனாலும், நம்மவர்களுக்காக (நான்காம் சாதி) எவனாவது இதுவரை ஏதும் கேட்டது கிடையாது. ஆதித்திராவிடர்களுக்கு இவ்வளவு ஒதுக்கிவிட்டு, நாம் விகிதாச்சாரம் கேட்பது தப்பு என்று சொல்லுகிறார்கள். ஆகவே, யாராவது இதைப் பற்றி கேட்டால், அவரை ‘வகுப்புவாதி’ என்று கூறிவிடுகிறார்கள்.’’ (விடுதலை 22-9-1951)

‘‘ஆதித்திராவிடர்களுக்கு இவ்வளவு ஒதுக்கிவிட்டு, நாம் விகிதாச்சாரம் கேட்பது தப்பு என்று சொல்லுகிறார்கள்.’’ என்ற ஈவேராவின் பேச்சு எரிச்சலைத்தானே காட்டுகிறது?

இந்த எரிச்சல் தாழ்த்தப்பட்டவர்களை நன்றியற்றவர்கள் என்று சொல்லுமளவுக்கு ஈவேராவின் குரல் ஒலித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தான்தோன்றித்தனமான பேச்சுக்களையும் தாழ்த்தப்பட்ட தலைவர்களால் போராடி பெறப்பட்ட உரிமைகளையும் கூட தன்னால்தான் பெறப்பட்டது என்ற அகங்காரப்பேச்சுகளையும் ஈவேரா ஒலித்திருக்கிறார்.

ஈவேரா கூறுகிறார் : –
‘‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பார்ப்பானுக்கு விரோதமாகிவிடுகிறது என்பதற்காக சர்க்காரில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதை 1950ல் எடுத்துவிட்டார்கள். பிறகு நாங்கள் செய்த கிளர்ச்சிகளின் பயனாகச் சட்டத்தில் கொஞ்சம் திருத்தம் செய்திருக்கிறார்கள். படிப்பு, உத்தியோகம், சமுதாயம் ஆகிவற்றில் பின்தங்கியவர்களுக்குச் சலுகைகாட்டத் திட்டம் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று அரசியல் சட்டத்தில் எழுதியிருக்கிறார்கள். அரசியல் திட்டத்தால் ஆதிதிராவிடருக்கு மாத்திரம் அவர்களுக்குரிய விகிதாச்சாரம் கிடைத்திருக்கிறதே ஒழிய, மற்ற திராவிட மக்களுக்கு விகிதாச்சாரம் கிடைக்கவே இல்லை. இப்படி நாங்கள் கூறுவதை ஆதிதிராவிடர்கள் தங்களுக்கு விரோதமானது என்று கூறிக் கொள்கிறார்கள். மற்ற திராவிட மக்களுக்கு அவர்களால் (ஆதித்திராவிடர்களால்) ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனாலும், நாம் எவ்வளவோ செய்தோம். அப்படி இருந்தும் ‘பிராமணர்கள் தேவலை, சாதி இந்துக்களால்தான் எங்களுக்குத் தொல்லை’- என்று ஆதித்திராவிடர்கள் கூறுகிறார்கள். இது நன்றியற்றப் பேச்சு. அவர்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் யார்? பார்ப்பனர்களா? நாங்கள் செய்த கிளர்ச்சியாலும், முயற்சியாலும்தான் இன்று அவர்கள் சமுதாயத்தில் தலையெடுக்க முடிந்தது. அவர்கள் படிப்புத் துறையில் முன்னேற வழிகாட்டியவர்கள் நாங்களே. ஆதித்திராவிடர்களின் கோயில், தெரு நுழைவுக்கு முதல்முதல் போராடியவர்கள் நாங்கள்தாம். ஆதித்திராவிடர்கள் படித்தவர்களாகவும், உத்தியோகஸ்தர்களாகவும், சட்டசபை உறுப்பினர்களாகவும், மந்திரிகளாகவும் ஆனார்கள் என்றால், பார்ப்பனர்களாலா? இதற்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்தவில்லை என்றாலும், நமக்கு விரோதிகளாகவாவது ஆகாமல் இருக்க வேண்டாமா?’’ (விடுதலை 21-9-1956)

ஈவேரா சொல்கிற உரிமைகள் எல்லாம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் போராடி பெற்றுத் தந்த உரிமைகள். (பார்க்க – நீதிக்கட்சியின் மறுபக்கம், அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய மக்களுக்கு உழைத்த பெருமக்கள் – விரிவான வரலாறு, உணவில் ஒளிந்திருக்கும் சாதி) தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஈவேராவின் சுயமரியாதை இயக்கம் எந்தவிதமான போராட்டங்களையும் இதுவரை நடத்தியதில்லை. வைக்கம்போராட்டம்

காங்கிரசின் போராட்டம். காங்கிரஸ் வழிகாட்டுதலின்படி நடந்த போராட்டம். ஈவேரா அப்போராட்டத்தில் காங்கிரஸ்காரராகவே கலந்துகொண்டார். இதில் கூட ஒரு சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்காக தெருக்களில் நடக்கின்ற, கோயில்களில் நுழைகின்ற போராட்டத்தை ஈவேரா தலைமையேற்று தமிழ்நாட்டில் நடத்தியதுண்டா? ஏன் நடத்தவில்லை?

அதுமட்டுமல்ல ஈவேராவின் சுயமரியாதை இயக்கம் வளர்ந்ததே தாழ்த்தப்பட்டவர்களின் ஆதரவினால்தான். அந்த நன்றியை மறந்துவிட்டு தாழ்த்தப்பட்டவர்கள் நன்றியற்றவர்கள் என்று கூறுகிறார் ஈவேரா.

ஆகவே ஈவேரா சொல்வதெல்லாம் பித்தலாட்டம், பிதற்றல், எரிச்சல் தவிர வேறொன்றுமில்லை.

மேலும் ஈவேரா தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் கொண்டுள்ளார் என்பதையும் அவருடைய பேச்சிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். ஈவேரா கூறுகிறார் : –
‘‘அம்பேத்கர் கொஞ்சம் நம் உணர்ச்சியுள்ளவர். அவர் என்னைக் கேட்டார். ‘உன்னுடைய மக்களுக்கு என்ன செய்யவேண்டும்?’ என்று. நிறைய விவரங்களையெல்லாம் அவரிடம் கொடுத்தேன்; அதையெல்லாம் அவர் பேச ஆரம்பித்தார். உடனே பார்ப்பனர்கள் அவருக்கு விலை கொடுத்துவிட்டார்கள். அது என்னவிலையென்றால், அவர் தன்னுடைய மக்களுக்கு 100-க்கு 10 இடம் கல்வி வசதியில், உத்தியோக வசதியில் கேட்டார். அவன் ‘15-ஆகவே எடுத்துக் கொள்’ என்று சொல்லிவிட்டான்.! அவனுக்குத் தெரியும் 25 இடம் கொடுத்தால்கூட அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர்கூட வரமாட்டார்கள் என்பது. பார்ப்பான் எழுதிக் கொடுத்த சட்டத்தில் அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டார். மற்றவர்களுடைய சங்கதியைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை.’’
(விடுதலை 11.11.1957)

ஈவேரா கருத்துப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு 25 இடம் கொடுத்தால்கூட அவர்கள் முன்னேறமாட்டார்கள் என்பது. ஆனால் அதை பார்ப்பனர்கள் கருத்தாகவே கூறிவிட்டார். பார்ப்பனர்கள் எங்கே அப்படி சொன்னார்கள் என்று கேட்டால் பார்ப்பனர்கள் அப்படித்தான் எண்ணுவார்கள் என்று ஒருபோடு போடுவார்கள், வரலாறு – சரித்திரம் – அப்படித்தான் நமக்கு காட்டுகிறது என்றெல்லாம் கதைவிடுவார்கள்.

புரட்சியாளர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டமக்களுக்கு வாங்கித்தந்த உரிமைகள் பற்றி ஈவேரா பலதடவை எரிச்சல்பட்டிருக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்காக வாதாடவில்லை என்று ஒருதடவையும், வாதாடினார் என்று ஒருதடவையும் மாறி மாறி ஈவேரா பேசியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் புரட்சியாளர் அம்பேத்கர் ஏதோ செய்யக்கூடாத குற்றத்தைச் செய்துவிட்டமாதிரி ஈவேரா குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஈவேரா கூறுகிறார் :-
‘இந்திய அரசியல் சட்டம் ஓட்டுரிமை வருவதற்கு முன்னேயே செய்யப்பட்ட அரசியல் சட்டம். ஓட்டுரிமை வந்தது 1951-லே. அரசியல் சட்டம் செய்யப்பட்டது 1948 – 1949லே… அந்த அரசியல் சட்டம் செய்கிறபோது யார் யார் இருந்தாங்கன்னா? அஞ்சுபேரு இருந்தானுங்க. அவர்கள்தான் கமிட்டி. ஒருத்தர் என்.கோபால்சாமி அய்யங்கார். ஒருத்தர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். இன்னொருத்தர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. இன்னொருவர் கே.எம்.முன்ஷி. அப்புறம் எவரோ அனாமதேய துலுக்கர். அப்புறம் டாக்டர் அம்போத்கர். அம்பேத்கர் கொஞ்சம் குதித்தார். அவருக்கு லஞ்சம் கொடுத்திட்டாங்க. என்னடான்னா?  உங்கள் சாதிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்க. மற்றவங்களைப் பற்றிப் பேசாதேன்னுட்டாங்க. அவரு இதுதான் சமயம்னு உடனே எங்க சாதிக்கு விகிதாச்சாரம் கொடுன்னிட்டார். அந்த ஆதி-திராவிட சாதிக்கு 100க்கு 16 இடம். அவர்கள் ஜனத்தொகை 100க்கு 16 ஆக இருந்தது அப்போ. எடுத்துக் கொள்ளுன்னுட்டாங்க. மற்றவங்க பேசினான். பேசக் கூடாதுன்னுட்டாங்க. பேசாமல் அவர்கள் நாலுபேரும் பண்ணினதற்கு கையெழுத்துப் போட்டிட்டாரு அம்பேத்கர். அவனவன் வேண்டியபடி எழுதிக்கிட்டான்.’ (17.1.68 கரூர் பொங்கல் விழா பொதுக்கூட்டம் ஈவேரா உரை. விடுதலை 2004 பொங்கல் மலர் பக்.38)

தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமைகள் கிடைத்ததை ஈ.வே.ரா எவ்வளவு மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார் பாருங்கள். ஆகவே ஈவேரா தாழ்த்தப்பட்டவர்களுக்கு எப்போதுமே தன் இயக்கத்தின் சார்பாக போராடியது இல்லை. அவர் போராடியது எல்லாம் பிற்படுத்தப்பட்ட சூத்திர சாதிகளுக்குத்தான். ஆகவே பெரியார் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களுக்குத்தான் பெரியாரே தவிர தாழ்த்தப்பட்டவர்களுக்கு அல்ல. இதை தாழ்த்தப்பட்டவர்கள் உணரவேண்டும். ஈவேரா பின்னால் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்காக பாடுபட்டவர் என்ற பொய்ப்பிம்பத்தை அழிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வரலாற்றுகளை நாம் படித்தறியும்போதுதான் இந்த மாதிரி ஆட்களின் பொய்ப்பிம்பத்தை உடைத்தெறிய முடியும். ஆகவே தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். உண்மை புரியும். நமது உரிமைகள் யாரால் பெறப்பட்டது என்பது. அதுவரை இந்தமாதிரியான பொய்ப்பிம்பத்தை வைத்து தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றும் திராவிட கூட்டம் வல்லூறுகளாய் காத்துக்கொண்டு இருக்கின்றன.

Tags: , , , , , , , , , , , , ,

 

23 மறுமொழிகள் பெரியார் யாருக்குப் பெரியார்?

 1. lakshmi narayanan on January 11, 2011 at 10:09 pm

  பெரியார் eppoovume இப்படிதன . எதையுமே குழப்புவார் அதனால்தான் கலைஞர் பெரியாரை நம்புவதாக கூறுகிறார்.

 2. Indli.com on January 12, 2011 at 7:22 am

  பெரியார் யாருக்குப் பெரியார்? – தலித் சிந்தனையாளர் ம.வெங்கடேசன்…

  உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஈவேரா பாடுபட்டாரா? பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாடுபட…

 3. makizhnan on January 12, 2011 at 8:57 am

  பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினராக இந்து மதத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்து மதத்தின் பன்னெடுங்கால கொடுமைக்கு ஓர் இடைக்காலத்தீர்வாக, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் சில உரிமைகள் வழங்குவது மிகவும் அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொள்ளும் போது, நமது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓர் அதிருப்தியான தீர்ப்பாகும். – அம்பேத்கர்….

  என்னங்க அம்பேத்கர் இப்படி சொல்லிட்டார்…

 4. snkm on January 12, 2011 at 9:20 pm

  இவர் மட்டுமல்ல இன்று உள்ள மக்களுக்காக பாடுபடுகிறேன் என்று சொல்லக் கூடிய எல்லோருமே செயல் படாமல் தான் உள்ளனர்!
  இனியும் தயங்காமல் ஒன்று பட்டு போராட வேண்டும். அப்போது தான் தீய சக்திகளையும் மக்களின் மனங்களை மயக்கி வைத்திருக்கும் சக்திகளையும் ஒழித்து வெற்றி பெற முடியும். அனைவரும் ஒன்று பட வேண்டும். ஹிந்துக்களுக்கு ஏற்பட்டுள்ள அவமானங்களையும் குறைகளையும் களைய வேண்டும்!
  வாழ்க பாரதம்! வெல்க மக்கள்!
  பெரும்பான்மையானவர்களின் வரிப்பணத்தைக் கொண்டே பெரும்பான்மையானவர்களை ஒழிக்கும் திட்டத்தை அனைவரும் அறியச் செய்ய வேண்டும்!

 5. கண்ணன் on January 12, 2011 at 10:12 pm

  சிறப்பான ஆய்வு கட்டுரை. இது கோ கேசவனின் கட்டுரைகளுக்கு இன்னும் வலு சேர்க்கும்.
  இன்றும்கூட திமுகவிலும் அதிமுகவிலும் ஆதிக்க சக்திகளாக பிறபடுத்தப்பட்டவர்கள் என்று கூறிகொள்பவர்கள் இருக்கிறார்களே தவிர, தாழ்த்தப்பட்டவர்கள் ஊறுகாய் போலத்தான் இருக்கிறார்கள்.
  பாஜகவில் கிருபாநிதி மாநிலத்தலைவராக இருந்தார். இன்றும் பாஜகவில் முக்கியமான தலைவராக இருக்கிறார். எப்போதேனும் திமுகவிலோ அல்லது அதிமுகவிலோ தாழ்த்தப்பட்டவர்கள் தலைவர்களாக இருந்ததுண்டா?

 6. Bala on January 13, 2011 at 2:13 am

  வெங்கடேசன்,
  அருமையான ஆராய்ச்சி. இந்த மாதிரி கட்டுரைகள் இன்னும் உங்களிடமிருந்து வந்து அனைவரும் தெளிவு பெற எல்லாம் வல்ல பராசக்தியை பிராத்திக்கிறேன்.

  நன்றி,
  பாலா

 7. ரமேஷ் on January 13, 2011 at 1:55 pm

  பெரியாரின் போலி தன்மையையும் அவரின் இந்து விரோத செயல்களையும் தோலுரித்து காட்டும் கட்டுரைகள் வெளிவருவது அனைத்து இந்துக்களிடம் சிறப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும். நம்மிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும்… இந்த கட்டுரையும் அத்தகையை கட்டுரை என்றுதான் தொடக்கத்தில் நினைத்தேன் ஆனால் கட்டுரையில் பெரும்பகுதி பிராமணர்கள் அல்லாத மற்ற ஜாதி இந்துக்களை குறை சொல்லும் விதத்திலேயே அமைந்திருப்பது கட்டுரையின் தன்மையையே மாற்றி விட்டது..
  இந்த கட்டுரையை எழுதிய ஆசிரியர் அவர்களே பெரியார் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்ட பிரிவை சேர்ந்த ஜாதிகளுக்கு சிறப்பு பிரதிநிதியா என்ன?..தங்கள் கட்டுரை அந்தவிததில்தான் அமைந்திருக்கிறது..பெரியாரை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்ட பிரிவை சேர்ந்த ஜாதிகளுக்கு பிரதிநிதி போல சித்தரித்து பிராமணர்கள் அல்லாத மத்த ஜாதிகளை சேர்ந்த எங்களை கேவலபடுத்தாதிர்கள்..தற்போது பெரியாரையும் அவருடைய கருத்துகளையும் தீவிரமாக எதிர்பவர்களில் பெருபாலாவர்கள் இந்த பிரிவுகளை சேர்ந்த ஜாதி இந்துகள்தான்..
  மேலும் இந்த கட்டுரையின் பெருபகுதி பெரியாரின் போலித்தன்மையை தோலுரித்து காட்டுவதைவிட பிராமணர்கள் அல்லாத மற்ற ஜாதிக்களை சேர்ந்த இந்துக்களை குறை சொல்லும் விதத்திலேயே அமைந்துள்ளது..இது இந்துக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு பதில் ஒற்றுமை இன்மையைதான் ஏற்படுத்தும்.. கட்டுரை ஆசிரியர் அவர்களே பிராமணர்களை மட்டும் பெரியார் எதிர்த்தார் மற்ற ஜாதி இந்துக்களுக்கு ஆதரவாக இருந்தார் என்பது போல சித்தரிப்பது தேவையா என்று யோசியுங்கள்..மேலும் பிராமணர்கள் அல்லாத மற்ற ஜாதி இந்துக்கள் தாழ்த்த பட்டவர்களிடம் இப்பவும் தீண்டான்மை செய்கிறார்கள் என்று எழுதி பிராமணர்கள் அல்லாத மற்ற ஜாதி இந்துக்கள் மோசமானவர்கள் என்பது போல சித்தரிப்பது தேவையா? என்று யோசியுங்கள்..
  கட்டுரை ஆசிரியர் அவர்களே.. பெரியார் பிராமணர்களை குறை கூறினார் நீங்கள் பெரியாரை போலித்தன்மையை தோலுரித்து காட்டுவதை விட அதிகமாக பிராமணர்கள் அல்லாத மற்ற ஜாதி இந்துக்களை குறை சொல்கிறீர்கள் இதில் இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.. இதனால் இந்துக்களிடையே ஒற்றுமைக்கு பதில் வேற்றுமைதான் வளரும்
  கட்டுரை ஆசிரியர் அவர்களே பெரியாரின் இந்துவிரோத செயல்களை தோலுரித்து காட்டும் விதத்தில் மட்டும் கட்டுரையை அமையுங்கள் அப்பொழுதுதான் நம் மக்களிடையே தெளிவான விழிப்புணர்வு ஏற்படும் ..மேலும் ஜாதியால் இந்துக்கள் இடையே பிளவுகள் ஏற்படுத்துவது போல கட்டுரையை அமைக்காதிர்கள் இது எனது தாழ்மையான வேண்டுக்கோள் ஐயா…மேலும் அரசியல்வாதிகளும், மற்ற மதங்களை சேர்ந்த மத மாற்றிகளும்,இந்து விரோதிகளும்.. நம் இந்துக்களிடையே ஜாதி பிரிவினையை ஏற்படுத்தி இந்துக்களிடம் ஒற்றுமை இன்மையை உருவாக்கி ஆதாயம் பெற இந்து மத விரோதிகள் முயல்கின்றனர்..அதனை தடுக்க நம் இந்துக்கள் ஜாதிகளை மறந்து நாம் அனைவரும் இந்துக்கள் என்ற குடையின் கீழ் ஒன்று திரளும் விதமாக அனைத்து இந்துக்களையும் ஒன்று திரட்டும் விதமாக கட்டுரை எழுதுவது நம் இந்துக்கள் ஜாதியால் பிரிந்து போகாமல் நாம் அனைவரும் இந்துக்கள் என்ற உணர்வு மட்டும் ஏற்படும் மேலும் இந்துகளிடையே ஒற்றுமை ஏற்படும்.. எனவே
  இனி நாம் அனைவரும் ஜாதிகளை மறந்து இந்துகள் என்ற குடையின் கீழ் ஒன்றிணைந்து இந்து விரோதிகளை எதிர்போம்..இந்து மதத்தை காப்போம்..

 8. ஜெயக்குமார் on January 13, 2011 at 8:13 pm

  நல்ல கட்டுரை. பெரியார் என்று யாரைச் சொல்வது என்றில்லாமல் போய்விட்டது. அடாவடித்தனமும், மானாவாரியாக மனதில் பட்டதையெல்லாம் பேசிக்கொண்டும், சொல்லிக்கொண்டும் இருந்தவரெல்லாம் பெரியார். தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று சொன்ன ஈ.வெ.ராதான் தமிழ் தமிழ் என முழங்குபவருக்கு தலைவர்.

 9. அருண்பிரபு on January 14, 2011 at 9:01 am

  மிகச் சிறப்பான கட்டுரை. ராமசாமி நாயக்கர் பெயரைச் சொல்லி இன்று காசு பார்க்கும் கூட்டம் தான் அதிகம். அதுவும் அவரிடமிருந்து வந்த பழக்கம் தான். தனக்குப் பைசா தராமல் சஷ்டியப்தபூர்த்தி செய்து கொண்ட நாட்டுக்கோட்டை செட்டியாரை தமிழ் துரோகி என்று தாக்கியும் பைசா வந்த பிறகு வாழ்த்தியும் பேசியவர் தான் ராமசாமி நாயக்கர்.
  இவரது கஞ்சத்தனத்தின் பெயர் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம். வாளுக தமிளு!! வாளுக தமிளர்!!!

 10. பிரதாப் on January 14, 2011 at 9:37 am

  பிரதாப்

  ரமேஷின் கடிதம் நல்ல பல தகவல்களை கொண்டுள்ளது. பெரியார் பிற்பட்ட மற்றும் மிக பிற்பட்ட சமூகங்களின் பிரதிநிதி அல்ல. தன்னை கன்னடர் என்று சொல்லி என்னை தவிர தமிழனுக்கு தலைமை தாங்க வேறு யார் இருக்கிறார்கள் என்று சொல்லியவர். எனவே இங்கிருக்கும் அவரது கழக வாரிசுகள் கன்னட அரசுடன் பேசி தமிழகத்துக்கு காவிரி நீர் ஒப்பந்தத்தை அமுல்செய்ய உதவினால் சற்று நன்றாக இருக்கும்.

  பெரியார் தமிழ் படித்தால் உருப்பட மாட்டாய் ஆங்கிலம் படி பேசு, உன் வீட்டு வேலைக்காரியுடனும் ஆங்கிலத்திலேயே பேசு என்று திருவாய் மலர்ந்தருளியவர் ஆவார். எனவே பெரியாரை பிற்பட்டவர்களின் பிரதிநிதியாக சொல்வது சரியல்ல.

  இந்திய சுதந்திர போராட்டத்தில் பிற்பட்டவர்கள் மற்ற சமூகத்தினரை போலவே பெரும் பங்கு ஆற்றியவர்கள் ஆவர். பெரியாரோ இந்திய விடுதலை நாளை துக்க தினம் என்ற கூறியவர். எனவே திரு ரமேஷ் அவர்களின் கருத்து சரியானதும் பாராட்டத்தக்கதும் ஆகும்.

 11. Lakhmanan on January 15, 2011 at 3:18 pm

  பெரியார் ஒரு பிற்படுத்தப் பட்டவர்களின் ஏஜென்ட் தான். போலிதான் சுய மரியாதை என்று பீற்றிக்கொண்ட ஒரு நபர்தான் அவர்.
  லட்சுமணன்

 12. reality on January 15, 2011 at 5:43 pm

  சுதந்திரம் வாங்கித்தருவதாகக் கூறிய காங்கிரஸ் தந்திரமாக நாட்டை ஏமாற்றியதில் விளைந்த பல கேடுகளில், ராமசாமி நாயக்கர்களும் அவர்களின் அமைப்புக்களும் அடங்கும். இன்றும் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை காங்கிரஸ் கட்சியினால் ஏற்பட்ட கஷ்டங்களுக்கு பல உதாரணங்களைக் காண்பிக்கலாம்.

 13. இனியன் on January 15, 2011 at 6:23 pm

  அருமையாக ஒரு பதிவை இட்டு அரிக்கும் இடத்தில் சொரிந்து கொண்டீர்கள்.அய்யா சொன்னதை முழுமையாக படிக்க http://govikannan.blogspot.com/2011/01/blog-post_14.html இங்கு செல்க

 14. s.radhakrishnan on January 16, 2011 at 9:59 pm

  //ரமேஷ்
  13 January 2011 at 1:55 பம்//
  உங்கள் ஆதங்கம் புரிகிறது ரமேஷ்.

  உங்கள் பதிலைப் படித்த பிறகுதான் நான் மூலக் கட்டுரையையே படித்தேன். கட்டுரை, நடந்த உண்மைகளை(ஈ.வெ. இராமசாமிப் பெரியார் செய்த செயல்களை)ச் சொல்லியிருக்கிறது.

  பிற்பட்டவர்கள் பற்றிய பெரியாரின் நிலைப்பாடுகளைத்தான் அது பிரதிபலிக்கிறதேயன்றி, பிற்பட்டவர்களைப் பெரிதும் குறை கூறவில்லை என்றே நான் நினைக்கிறேன். இருந்தபோதும், தமிழ் ஹிந்து தளத்தில் நம்மைப் பிரித்து வைக்கப் பயன்படும் கருத்துக்கள் அடங்கிய கட்டுரைகள் (அவை உண்மைகளாகவே இருந்தாலும்) வெளிவருவது தவிர்க்கப்படுவதே நல்லது. இது என் அபிப்பிராயம். ஏனென்றால், இந்த தேசத்தின் நன்மைக்கு விரோதமான, எதிர்க்கப்படவேண்டிய, எத்தனையோ விஷயங்கள் நம் முன் உள்ளன. ஒன்றுபட்டு அவற்றில் கவனம் செலுத்தும் தன் கடமையிலிருந்து தமிழ் ஹிந்து தளம் தடம் புரளாமல் இருக்க அன்போடு, அக்கறையோடு, வேண்டுகிறேன்.

 15. Thiyagarajan on January 17, 2011 at 6:48 pm

  பெரியார் ஒரு தீவிர ஜாதி வெறியர் ! தமிழ் மொழி மீதும் , தமிழன் மீதும் அவருக்கு எப்போதும் மதிப்பு கிடையாது ! அவருக்கு முக்கியமானது எல்லாம் தன் அளவுக்கு மீறிய கஞ்சத்தனத்தினால் சேர்த்து வைத்த சொத்தும் , பிராமண துவேஷமும் தான் ! பிற்படுத்தப்பட்டவர்கள் (சூத்திரர்கள் என்ற திராவிடர்கள் ஆனால் தமிழர்கள் அல்லர்) மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால் ஏன் அவர்களை இன்னும் இந்த ஜாதி வெறியுடன் ( சுதந்திரம் அடைந்து 63 வருடங்கள் ஆன பின்பும்) அலையும்படி தள்ளிவிட்டு சென்றிருப்பாரா ? அவருடைய சிஷ்யர் என்று கூறித்திரியும் வீரமணி என்ற ரோஷம் கெட்ட வியாபாரியும் சந்தர்ப்பம் பார்த்து தன் நிலையை மாற்றிக்கொண்டு எல்லா தமிழரையும் திராவிடர் என்ற பொய்யான மாயையில் தள்ளி ஊரை ஏமாற்றிக்கொண்டு அலைகிறார் ! ஜெயலலிதா என்ற பிராமணப்பெண் மீண்டும் பதவிக்கு வந்தால் , ஒரேயடியாக அந்தர் பல்டி அடித்து மாறிவிடுகிறாரா இல்லையா பாருங்கள் இந்தப் பச்சோந்தி !
  இந்தப் பெரியாரும் , வீரமணியும் , ஏன் கருணாநிதியும் என்றாவது தங்கள் மருத்துவராகவும் , ஆடிட்டராகவும், சட்ட வல்லுனராகவும் ஏதாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை வேலைக்கு அமர்த்தி இருக்கிறார்களா? அந்த வேலைக்கு அவர்கள் அமர்த்தியது எல்லாம் பிராமணர்களைத் தான் ! எல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியத்தனங்களின் மொத்த உருவங்கள் ! பாவம் இந்த மெஜாரிட்டி தமிழர்களான சூத்திரர்களும் , ஆதி திராவிடர்களும் !

 16. தமிழ் ஓவியா on January 22, 2011 at 5:32 pm

  பெரியாரைத் திரிக்கும் புரட்டுகளுக்கு மறுப்பு என்ற நூலில் மேற்கண்ட குற்றச் சாட்டுக்கள் அனைத்துக்கும் தெளிவாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

  பெரியாரின் கட்டுரை மற்றும் சொற்பொழிவுகளில் அங்கு ஒன்று இங்கு ஒன்றாக வெட்டி ஒட்டி பிய்த்து ப்ராண்டி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக காட்டும் வெங்கடேசனின் முயற்சி எக்காலத்திலும் எடுபடாது.

 17. அ. முத்துக்கனி on January 22, 2011 at 8:06 pm

  என்னை இந்தக் கட்டுரை மிகவும் வேதனைக்குள்ளாக்கி விட்டது.

  இத்தனை நாட்களாக ஈவேரா உண்மையாகவே சாதி உணர்வு இல்லாதவர் என்று நினைத்திருந்தேன்.

  அம்பேத்காரைப் பற்றி ஈவேரா எவ்வளவு கேவலமாகப் பேசி இருக்கிறார் என்பது இப்போதுதான் தெரியும்.

  ஈவேராவைப் பற்றி நான் வைத்திருந்த உயர்ந்த மதிப்பு இன்று சரிந்தது. அவர் எனக்கு நான் பின்பற்றவேண்டிய தலைவராகத் தெரிந்தார். நீங்கள் வெளியிட்டது மட்டும் பொய்யாக இருந்தால், இந்த தளத்தை மன்னிக்கவே முடியாது.

 18. Malarmannan on January 22, 2011 at 8:49 pm

  அண்ணாவாவது சத்தியவாணி முத்துவுக்குக் கட்சியில் முக்கியத்துவம் அளித்து வந்தார். மேலும் இளம் பரிதியை ராஜதானியின் தலைநகரான சென்னை மாவட்டச் செயலாளராகவே தேர்வு பெறச் செய்தார், 1950 தொடக்கங்களில்! பின்னர் தவறு இழைத்ததாலேயே அவர் நீக்கப்பட்டார் (இன்று அமைச்சராக உள்ள பரிதி இளம்வழுதியின் தந்தை). ஆனால் திராவிடர் கழகத்தில் ஈ.வே.ரா. பெயர் சொன்னால் புரிகிற மாதிரி ஒரு தலித்தையாவது முன்னணியில் நிறுத்தியதுண்டா?
  ஈ. வே.ரா. தலித்துகளை சாதிப் பெயர் சொல்லியே வெறுத்துப் பேசுவதை நேரில் கேட்டவன் நான். வெறுமே பிரசாரப் புத்தகங்களில் படித்துவிட்டு விமர்சிக்க வர வேண்டாம். ம. வெங்கடேசன் வேண்டுமானால் வேண்டாதவராக இருக்கலாம். குணா எழுதிய திராவிடத்தால் வீழ்ந்தோம் தெரியுமா ஸ்ரீ அல்லது ஸ்ரீமதி தமிழ் ஓவியா அவர்களே?
  -மலர்மன்னன்

 19. karthikeyan on February 27, 2011 at 6:28 pm

  பெரியாரின் முகமூடி கிழிந்தது

 20. srinivasan on March 2, 2011 at 1:22 pm

  Friends,
  There is no much talk about the “greatness!of evr” among the tamil people. If you keep criticising about him it would unnecessarily kindle passion to support him. So please avoid bashing him. This amounts to beating the snake which is not alive.
  No real educated tamil would utter a word praising such an irresponsible irrelevant eccentric person.

 21. srinivasan on March 2, 2011 at 1:25 pm

  Friends,
  There is no much talk about the “greatness!of evr” among the tamil people. If you keep criticising about him it would unnecessarily kindle passion to support him. So please avoid bashing him. This amounts to beating the snake which is not alive.
  No real educated tamil would utter a word praising such an irresponsible irrelevant eccentric person. Whatever he said has no place in today’s world.

 22. senapathy n on March 20, 2011 at 10:28 pm

  annai (Mother), periyar (Great Person?), Maveeran (Great Fighter) etc tamil words have lost their correct meanings after using before the Selfish Political Leaders and unwanted social elements.

 23. […] கருத்துக்குக் கொண்டு வருகிறேன். பெரியார் யாருக்குப் பெரியார்?. இதில் பெரியார் ஈவேரா […]

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*