ரமணரின் கீதாசாரம் – 2

ஸ்ரீ ரமண மகரிஷியிடம் குர்ரம் சுப்பராமய்யா என்ற அடியார் ஸ்ரீமத் பகவத் கீதையைத் தினப் பாராயணத்திற்கு ஏற்றவாறு சுருக்கித் தருமாறு கேட்டதன் பலனாக மூலத்தில் உள்ள எழுநூறு சுலோகங்களிலிருந்து ரமணர் நாற்பத்திரண்டை தேர்ந்து எடுத்து அன்பரது நித்ய பாராயணத்திற்கு எனத் தொகுத்துக் கொடுத்தார். கீதை சொல்லும் கருத்துக்களை, சுருக்கமாக அந்த கீதையின் சுலோகங்கள் மூலமாகவே ரமணர் நமக்கு தந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய தொடர்…
முந்தைய பகுதிகள் பகுதி 1

மூலமாகிய ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் அருச்சுனனுக்கு உபதேசம் ஆரம்பிக்கும் போது ஆத்மாவைப் பற்றியே பேசத் தொடங்குகிறார். அதன் பின் பலவித யோகங்களையும், யோகியின் லக்ஷணங்களையும் பற்றி ஓரளவுக்கு விளக்கிவிட்டு, பதின்மூன்றாம் அத்தியாயத்தில் தான் க்ஷேத்ரம்-க்ஷேத்ரஞ்ஞன் பற்றிச் சொல்லுகிறார். அந்த வழி காண வேண்டியதை முதலில் சொல்லிவிட்டு, காண்பதை அடுத்ததாகச் சொல்லும் வழி.

13-1

इदं शरीरं कौन्तेय क्षेत्रमित्यभिधीयते |
एतद्यो वेत्ति तं प्राहु: क्षेत्रज्ञ इति तद्विद: ||

தேகமிது சேத்திரமாச் செப்பப்படும் இந்தத்
தேகத்தை யாவன் தெரிவனோ – தேகியவன்
சேத்திரஞ்ஞனாம் என்று செப்புவார் தாம் அதனைப்
பார்த்து அறிந்தோர்கள் பகுத்து

பொருள்: போகத்திற்கு உரியதான இந்தத் தேகம் க்ஷேத்ரம் என்று சொல்லப்படுகிறது. இந்த தேகத்தில் இருந்துகொண்டே எவன் தேகத்தை அன்னியமாக உணர்வானோ, அவன் ஆன்மா எனப்படுவான். அதனைத் தமது அனுபவத்தில் உணர்ந்த தத்துவ ஞானிகள் அந்த ஆத்மாவை க்ஷேத்ரஞ்ஞன் என்று பிரித்துச் சொல்வார்கள்.

அருச்சுனன் தன் எதிரில் நிற்பவர்களைப் பார்த்துக் கலங்குகிறான் என்று பார்த்தோம். அவன் பார்வையில் முதலாய்ப் படுவது எது? அவர்களது உடலே. பின்பே அவனுக்கு அவர்களின் உறவு முறை, அவர்களுடன் இருந்த போது செய்த செயல்கள், மற்றைய எண்ணத் தொகுப்புகள் எல்லாம் வரும். ஆகையால் அவை அனைத்துக்கும் முதல் காரணம் அவன் தன்னை உடல் என்று குறுக்கிக் கொள்வதாலேயே என்று சொல்லலாம் அல்லவா? அதனால் உடலைப் பற்றி முதலில் ஆரம்பிப்பது போல ரமணர் அமைத்துள்ளதும் பொருத்தமாகத்தானே இருக்கிறது? இது காண்பதை முதலில் சொல்லிவிட்டு, காண வேண்டியதை அடுத்ததாகச் சொல்லும் வழி.

க்ஷேத்ரம் என்றால் விளைநிலம் என்று ஒரு பொருள். விதையிலிருந்துதான் தாவரங்கள் முளைக்கின்றன என்றாலும், அவை நன்கு செழித்து வளர நிலம் தேவைப்படுகிறது. அதுபோல ஒருவனின் எண்ணங்கள் செயலாகப் பரிமளிக்க அவனுக்குத் தேகம் தேவைப்படுகிறது. எப்போது ஆசைகள், அபிலாஷைகள் எல்லாம் எண்ணங்களாக இருந்தும் ஏதோ காரணங்களினால் காலத்தில் தேகம் மறைகிறதோ, அந்த எண்ணங்கள் செயல்பட வேறு ஒரு தேகம் அமைகிறது என்பதுதான் நம் பாரதப் பண்பாட்டின் அடித்தளம். ஆக தேகம் என்பதை விளைநிலம் என்று கொள்கிறோம். அந்த நிலத்தில் நமது எண்ணங்களாகிய விதைகளுக்கு ஏற்ப கிளைத்து எழுவதே நம் பாவப்-புண்ணியச் செயல்கள்.

அர்ஜுனனும் கண்ணனும்
அனுபவம் என்பது அனைவருக்கும் ஏற்பட ஒரு தேகம் வேண்டும். அதன் மூலம் தான் ஒருவன் தனது எண்ணங்களின் விளைவுகளை மேலும் கற்றுத் தெளிய முடியும். அந்தத் தேகத்தை எவன் பாவபுண்யங்களின் விளை நிலமாக உணர்கிறானோ அவன் க்ஷேத்ரஞ்ஞன் எனப்படுகிறான். தேகம் என்று ஒன்று உள்ளது என்பதை உணரும் க்ஷேத்ரஞ்ஞன் தான் ஆன்மா எனப்படுகிறது.

இங்கு அருச்சுனனின் கலக்கத்திற்கும், சோகத்திற்கும் காரணமாக இருப்பது உற்றார், சுற்றார் என்று காணும் அவனுடைய “தனது-எனது” என்ற மமகாரமே. அதற்கும் மூல காரணமாக இருப்பது “நான்” எனும் அவனது அகங்காரமே. பல கஷ்டங்களை அனுபவித்தாயிற்று, அதற்கும் பின் நாம் போர்க்களத்திற்கு நம் இச்சையின்றியே இழுத்து வரப்பட்டிருக்கிறோம், போர் புரிவதே தனது கடமை என்று இல்லாமல், சுற்றிப் பார்த்து புலம்பும் அருச்சுனனின் கூர்மையான அறிவை அந்த மமகாரமே மழுங்கடித்துள்ளது. இப்படி ஒன்றுக்கு ஒன்று காரணமாக இருப்பதைக் காட்டி, அவனது இருளான அஞ்ஞானத்தைப் போக்குவதற்காக பகவான் உண்மையில் உள்ளது எது என்ற ஒளியான ஞானத்தைப் போதிக்க இப்படியாகத் தொடங்குகிறார்.

ஆக தேகம் வேறு ஆன்மா வேறு என்றில்லாமல், அவ்விரண்டையும் ஒன்றாகப் பாவித்து அருச்சுனன் இங்கு குழப்பத்தில் இருக்கிறான். இவை எல்லாம் கற்று, அனுபவத்தில் நன்கு உணர்ந்த ஆன்றோர்கள் சொல்வதுபோல் அவை இரண்டையும் அருச்சுனன் பிரித்துப் பார்த்திருந்தால், முன்னால் நிற்போர்களை தன்னிலும் வேறுபட்ட தேகங்களாகப்  பார்க்காமல் அவர்களையும் அந்த ஒரே ஆன்மாவாகப் பார்த்திருப்பான். அப்போது அவன் எந்தக் கலக்கமும் அடைந்திருக்க மாட்டான்.

தேகம் வேறு, ஆன்மா வேறு என்று பகுத்து அறியும் அறிவே பகுத்தறிவு.  அது அனைத்து சீவராசிகளையும் ஒன்றாகவே பார்க்க வைப்பதால், அது ஒரு புண்ணியச் செயல். அப்படியில்லாது இவர் வேறு, அவர் வேறு என்ற ரீதியில் நான்-நீ என்று பகுத்துக் காட்டும் அறிவு பகுத்தறிவு ஆகாது. அப்படி பேதங்களைப் புகுத்தும் எதுவும் பாவச் செயல்களே.

நாம் காண வேண்டிய, கற்க வேண்டிய பாடங்கள் எல்லாவற்றிலும் இந்தத் தேகம்-ஆன்மா பற்றிய அறிவுதான் முதன்மையானது. இது ஒன்றே ஒருவனை நல் வழியில் கொண்டு செல்லும். இந்த ஞானம் வரப் பெறாதவன் எதிலும் குழம்பித் தவிக்க வேண்டி வரும். அருச்சுனனின் இப்போதைய நிலையும் அது தான்.

13-2

क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत |
क्षेत्रक्षेत्रज्ञयोर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम ||

சேத்திரங்கள் யாவுள்ளும் சேர்ந்தே இருக்கின்ற
சேத்திரஞ்ஞனாம் என்னைத் தேர்வாயே – சேத்திரம்
சேத்திரஞ்ஞன் தன்மை தெரிகின்ற ஞானமேது
ஓர்த்திட அஹ்தே எனக்கு ஒப்பு

பொருள்: க்ஷேத்திரங்கள் என்று சொல்லப்படும் எல்லா சரீரங்களின் உள்ளும் அவைகளோடு சேர்ந்தே உறைகின்ற என்னை க்ஷேத்திரஞ்ஞனான ஆத்மாவாகத் தெரிந்து கொள்வாய். தேகம், தேகி இவைகளின் இயல்பை ஆராய்ந்து அறியக்கூடிய ஞானம் எதுவோ அதுவே எனக்கு உகந்ததாகும்.

“சல, அசல உயிர்கள் அனைத்துள்ளும் உறைபவனாக இருப்பவன் நானே” என்று கிருஷ்ண பரமாத்மா இங்கு சொல்கிறார். அப்படியாக அனைத்தின் உள்ளும் இருக்கும் க்ஷேத்திரஞ்ஞன் ஆன என்னை ஆன்மாவாக அறிவாய் என்கிறார். க்ஷேத்திரம் என்றால் என்ன, க்ஷேத்திரஞ்ஞன் என்பவன் யார் என்று பகுத்து அறியும் அறிவே அவருக்கு உகந்ததாகும்.

க்ஷேத்திரமாகிய தேகம் ஆத்மாவின் இருப்பிடம். அதனாலேயே இறைவன் கோவில் கொண்டுள்ள இடத்தை க்ஷேத்திரம் என்று குறிப்பிடுகிறோம். எந்த ஒரு க்ஷேத்திரமும் ஒரு புனிதத் தலமாகக் கருதப்பட வேண்டும். க்ஷேத்திரத்தில் இருப்பதால் இறைவன் க்ஷேத்திராதிபதி எனப்படுகிறான். எங்கும் உள்ள நிர்குண இறைவனை – எவருள்ளும் உறையும் தூய ஆத்மாவை – சகுண ரூபமாக கோவிலில் ஒரு வடிவுடையவனாக வழிபடுகிறோம்.

ஆகம விதிகளின் படி எழுப்பப்பட்டுள்ள  கோவில்களின் கட்டுமான வரைபடங்களை ஆராய்ந்தால், ஒரு கோவிலின் வடிவமைப்பு ஒரு உடலினுடையது போலவே இருப்பதை நாம் அறிவோம். நாம் நம் தாயின் கருவிலிருந்து வந்தவர்கள் என்பதாலேயே, கோவிலில் இறைவன் உள்ள இடமும் கருவறை என்றே சொல்லப்படுகிறது. ஒவ்வொரு சீவராசியின் உள்ளிருக்கும் ஆன்மாதான் கோவிலில் எழுந்தருளும் இறைவன் என்பதை நம் முன்னோர்கள் நமக்கு இப்படிக் காட்டிச் சென்றுள்ளனர்.

ஆக ஒருவன் கோவிலில் வழிபடும் போது, அது எந்தக் கோவிலாக இருந்தாலும், நாம் இறைவனைக் காண்கிறோம் என்பதால் “காணும் தான் யார்?” என உள்நோக்க வேண்டும். அப்படி நோக்கி தனது ஆன்மாவையே ஒவ்வொருவரும் தரிசிக்க முயல்வதாலேயே எல்லா க்ஷேத்திரங்களும் புனிதத் தலமாகவே ஆகிறது.

க்ஷேத்திரம் என்பதை இடம் அல்லது வீடு என்றும் சொல்வார்கள். எப்படி வீட்டில் இருப்பவன் தன்னை வீட்டுக்காரன் என்பதையும், வீடே வீட்டுக்காரன் ஆக முடியாது என்பதையும் நன்கு உணர்வானோ, அப்படியே ஒரு உடலில் தான் இருக்கிறேன் என்பதையும், அந்தத் தான் யார் என்பதை அறிய வேண்டும் என்பதையும் ஒரு அறிவாளி உணர்வான். அப்படி பகுத்துப் பார்த்து க்ஷேத்திரன், க்ஷேத்திரஞ்ஞன் தன்மையை அறியக் கூடிய ஞானமே ஆன்ம ஞானம்.

ஒரு தேகத்தினாலும் அதை ஒட்டிய மனத்தினாலும் செய்யப்படக் கூடிய நன்மை-தீமை செயல்களால் சுக-துக்க அனுபவங்கள் வருகின்றன என்றால் அதற்கு மூல காரணமாக இருப்பது ஒருவனின் “நான்” எனும் அகங்காரத்தின் எழுச்சியே. அதன் பின்பே “எனது” என்ற மமகாரமும் எழுகிறது. அதற்கும் ஒவ்வொருவரின் உள்ளுறையும் ஆன்மாவுக்கும் தொடர்பில்லை என்ற அறிவும், அந்த ஆன்மாவே தன் உண்மை சொரூபம் என்ற ஞானமும் அடையப்பெறுவதே தனக்கு மிக உகந்தது என்று பரமாத்மா இங்கு அருச்சுனனுக்குச் சொல்கிறார்.

10-20

अहमात्मा गुडाकेश सर्वभूताशयास्थित |
अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च ||

ஆன்மாக்கள் யாவின் அகத்தும் அமர்கின்ற
ஆன்மா யான் ஆவன் அருச்சுனா – ஆன்மாக்கட்கு
ஆதியோடு மத்தியமும் அந்தமுமாம் இவைகள்
ஆதியாம் யானே அறி

பொருள்: அருச்சுனா! சகல உயிரினங்களின் உள்ளத்தில் அமர்ந்திருக்கிற சைதன்ய சொரூபமான ஆத்மா நானே ஆவேன். இந்த சகல உயிரினங்களின் பிறப்பிற்கும் (சிருஷ்டி), இருப்பிற்கும் (ஸ்திதி), இறப்பிற்கும் (லயம்) இந்த மூன்றினுக்கும் காரணமாக இருப்பவன் நானே என்பதை அறிவாயாக.

இந்த க்ஷேத்திரத்தில் க்ஷேத்திரஞ்ஞனாக இருப்பவனே பிரபஞ்சத்தில் எங்கும், சர-அசர உயிர்கள் அனைத்திலும் பரவியுள்ள சொரூபமாக இருக்கிறான் என்று இங்கு கூறப்படுகிறது. “நான்” என்னும் எண்ணம் வேறு, “நான்-நான்” என்னும் உணர்வு வேறு. முன்னதை நாம் பொதுவாக நமது விழிப்பு நிலையில் அனுபவிப்போம். நமது அகந்தை அனுபவங்களும் அதனுடன் தொடர்பு கொண்டது தான். அதுதான் நம்மை படாத பாடு படுத்துகிறது. பின்னதாகிய “நான்-நான்” என்னும் உணர்வு நம்முடன் எந்த நிலையிலும் இருப்பது. அந்த உணர்வை ஓரளவுக்கு இப்படி விளக்கலாம்.

வெகு காலம் முன்பு எப்போதோ எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் ஒன்றை ஒரு நாள் நாம் பார்க்கும் போது, “நான் இப்படியா இருந்தேன்” என்று எவருக்கும் தோன்றும் அல்லவா? அந்த எண்ணம் நமது உடலைப் பொறுத்ததே. உடலுக்கு ஒரு வளர்ச்சியோ, தளர்ச்சியோ உண்டு. அதன்படி புகைப்படமும் இருக்கும். அந்த புகைப்படம் எடுக்கப்பட்டபோது உங்களால் அந்தக் காலத்திய உணர்வை மீண்டும் அசை போட்டு, இப்போது எண்ணிப் பாருங்கள். அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட போது உங்களது உடல், மனம், மற்றும் ஏனைய எண்ணங்களைத் தவிர அப்போது   “நான்” என்று இருந்த உங்கள் இருப்பாகிய உணர்வும் , இப்போது “நான்” என்ற உங்களது உணர்வும் வேறு வேறு என்றா உணர்கிறீர்கள்? உங்களைப் பொறுத்தவரை “நான்” என்ற உணர்வு எந்த மாற்றமும் இல்லாது அப்படியேதானே இருக்கிறது? உடல் வளர்ந்திருக்கலாம், தளர்ந்திருக்கலாம், மனமோ எண்ணங்களோ அடியோடு மாறியிருக்கலாம். ஆனாலும் “நான்” என்ற உணர்வு ஏதும் மாறாது அப்படியேதானே இருக்கிறது?

“நான்-நான்” என்ற அந்த உள்ளுணர்வைப் பிடித்துக் கொண்டு எப்போதும் இருக்கப் பாருங்கள். அதுதான் உங்கள் உண்மையான சொரூபம் என்றும், அதுவே உங்களைச் சுற்றியுள்ள அனைத்து சீவராசிகளின்  உண்மையான சொரூபம் என்றும் காலப் போக்கில் உணர்வீர்கள். அதுதான் க்ஷேத்திரஞ்ஞன் என்று கூறப்படும் ஆன்ம சொரூபம் என்று சொல்லலாம். அதற்கு எல்லை இல்லை, காலமோ, தேசமோ எதுவும் இல்லை. சுருங்கச் சொன்னால் அது ஒன்றுதான் இருப்பது. அதை ஒருவன் அப்படி இருந்து தான் உணர முடியுமே தவிர யார், எவர் எப்படி விளக்கியும், சொல்லியும் அதை உணரவைக்க முடியாது. இதுதான் ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் அல்லது அபேதம் என்று கூறப்படுகிறது.  மோக்ஷம், விடுதலை, வீடுபேறு என்று விதவிதமாகச் சொல்லப்படுவதெல்லாம் அதை உணருவதில் தான் இருக்கிறது. அவன் அருளிருந்தால் அந்த உணர்ச்சி இங்கேயே, இப்போதே கைவரக் கூடும். ஏனென்றால் அதுவன்றி வேறு எதுவும் இல்லை.

krishna_arjun

அனைத்து உயிர்களின் தோற்ற, ஒடுக்கத்திற்கு ஈஸ்வர சொரூபமே காரணமாயிருந்தாலும் அது அந்த உயிர்களின் பேதங்களோடு ஒட்டாது, அவைகளின் இருப்பு மாத்திரமாகவே இருக்கும். அதனால் அதை அப்படி இருந்தே ஒருவன் உணர முடியும். இப்படியான தோற்றத்தின் காரணத்தினால் உயிர்களும், அவை இருக்கும் உலகமும் ஜடமாக இல்லாது அவைகளின் மூலமாகிய சைதன்யமாகவே கருதப்பட வேண்டும். தோற்றம் மட்டும் அல்லாது, அவைகள் இருப்பதற்கும், காலத்தில் மறைவதற்கும் என்றும் உள்ள அந்த மூல வஸ்துவே காரணமாக இருக்கிறது. சகல உயிர்களும் ஆத்மாவில் இருந்து தோன்றி, அதிலேயே நிலைத்து, அதுவாகவே மறையும். ஆக அதுவன்றி வேறு எதுவும் இல்லை என்றாகிறது. அந்த அதுவே நான் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா.

அப்படியென்றால் உயிர்கள் வெவ்வேறாகத் தோன்றுவதன் காரணத்தை விளக்க அது மாயையினால் விளைந்தது என்றே கூறுவர். இருப்பது ஒன்றே, அதனால் இல்லாதது மாயை எனப்படுகிறது. அதாவது கயிறு என்று தெரியும் வரை அதை பாம்பாக நாம் காண்பதையும், கானல் நீர் என்று உணரும் வரை அதை நீர்த் தடாகம் என நாம் நினைப்பதையும் வேறு எப்படிச் சொல்லி அறிவுறுத்துவது?

music-iconரமண மகரிஷியின் பகவத்கீதாசாரம் இங்கே தரவிறக்கம் செய்து கேட்கலாம்.

(தொடரும் …)

3 Replies to “ரமணரின் கீதாசாரம் – 2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *