ரமணரின் கீதாசாரம் – 3

ரமண மகரிஷி ஸ்ரீ ரமண மகரிஷியிடம் குர்ரம் சுப்பராமய்யா என்ற அடியார் ஸ்ரீமத் பகவத் கீதையைத் தினப் பாராயணத்திற்கு ஏற்றவாறு சுருக்கித் தருமாறு கேட்டதன் பலனாக மூலத்தில் உள்ள எழுநூறு சுலோகங்களிலிருந்து ரமணர் நாற்பத்திரண்டை தேர்ந்து எடுத்து அன்பரது நித்ய பாராயணத்திற்கு எனத் தொகுத்துக் கொடுத்தார். கீதை சொல்லும் கருத்துக்களை, சுருக்கமாக அந்த கீதையின் சுலோகங்கள் மூலமாகவே ரமணர் நமக்கு தந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய தொடர்…
முந்தைய பகுதிகள் பகுதி 1 | பகுதி 2

தானே எல்லாமுமாயிருக்கிறேன் என்று சொன்ன பரமாத்மா, அதை அருச்சுனனுக்கு மேலும்  புரியும் வகையில் அவன் காண்பதைக் கொண்டு விளக்குகிறார்.

2-27

जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च |
तस्मादपरिहार्येsर्थे न त्वं शोचितुमर्हसि ||

பிறந்தார் இறக்கப் பெறுதல் உறுதி
இறந்தார் பிறப்பது எனலும் – உறுதி
விலக்கற்கு அறிய விதி இதில் நீ வீணே
கலக்கம் உறல் ஏன் கழறு

பொருள்: உலகத்தில் பிறந்தது என்றுள்ள எதுவும் ஒரு நாள் இறப்பது நிச்சயம். பிறந்த அது மரணம் என்ற முடிவை அடைவதும் திண்ணமே. அதேபோல இறந்தவர் மீண்டும் பிறப்பது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அப்படி நிகழும் பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியை விலக்குவது அரிதாகும். இது ஈசனால் நியமிக்கப்பட்ட விதி. இந்த விதி முறையைப் பற்றி நீ வீணாகக் கலக்கமுறுவது ஏன்? சொல்வாய்.

அவன் தனக்கு முன் காணும் அவர்கள் எல்லோரும் ஒரு நாள் பிறந்தவர்கள்தானே என்று ஆரம்பிக்கிறார். அப்படிப் பிறந்தவர்கள் எவரும் ஒருநாள் இறக்க வேண்டும் என்ற வாதத்தை அவன் முன் வைக்கிறார். என்றோ அவர்கள் ஒருநாள் இறக்கப் போகிறார்கள். அப்படி இறந்தவர்களும் தங்கள் கர்ம வினைப்படி மீண்டும் ஒரு நாள் பிறப்பார்கள்.

இப்படி ஒரு சுழற்சியில் நடக்கும் பிறப்பு-இறப்பு நியதி இறைவனால் விதிக்கப்பட்டது. நாம் நினைப்பதாலேயே நம்மால் பிறக்க முடியாது. நம் தாய்-தந்தையையும் நம்மால் தேர்வு செய்ய இயலாது. அதனால் நாம் நினைப்பதால் இறப்பதற்கும் நமக்கு உரிமை கிடையாது. இந்த விதியினை யாரும் மாற்ற இயலாது. தவிர்க்க முடியாத இந்த விதியைப் பற்றி கலங்கி என்ன பயன் என்கிறார் கண்ணன்.

“இவர்களைக் கொல்வதால் நான் பாவம் செய்தவனாகிறேன். குல தர்மம் அழியக் காரணமாகிறேன். இப்படிப் பாவச் செயல் புரிந்தாவது எனக்கு நாடோ, வீடோ வேண்டுமா? அதற்குப் பதிலாக யாசகம் கேட்டு பிக்ஷை எடுத்துப் பிழைக்கலாமே” என்று அருச்சுனன் கூறினான் அல்லவா? அதற்குப் பதிலாகவும் “நீதான் அவர்களைக் கொல்கிறாயா? அத்துடன் அவர்கள் போய் விடுகிறார்களா? அப்புறம் அவர்கள் மீண்டும் பிறந்து வருவதில்லை என்பது உனக்குத் தெரியுமா?” என்கிற ரீதியில் பகவான் தொடர்கிறார். ஓரிடத்தில் “உனக்கும் எனக்கும் கூட ஜன்மங்கள் பல உண்டு. நான் அதை அறிவேன், நீ அறிய மாட்டாய்” என்றும் சொல்வார்.

நமக்கும் அது தெரியாது. ஆனாலும் நமக்குத் தெரியவில்லை என்ற காரணத்தினால் அது இல்லாது போவதில்லை. இதனை மனதில் கொண்டவன் என்றும் நல் வழியிலேயே செல்வான், செலுத்தப்படுவான். இந்த பிறப்பு-இறப்பு பற்றிய சத்திய வார்த்தைகளையே அடித்தளமாகக் கொண்டு நமது பாரத கலாச்சாரம் வளர்ந்திருக்கிறது. இதனைப் புரிந்து கொள்ளாதவர்களால்தான் மற்றோருக்குத் தீங்கு என்ற அசம்பாவிதம் நடக்கிறது. அதைத்  தவிர்க்க “தன் வினை தன்னைச் சுடும்” என்ற அறிவு ஒவ்வொருவருக்கும் மிக அவசியம்.

“பீஷ்ம-துரோணாதிகளை போரில் இப்போது நீ கொல்லாவிட்டாலும் அவர்கள் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் போகிறார்கள். தங்கள் கர்ம வினைப்படி மீண்டும் பிறப்பார்கள். அதேபோல அவரவர் விதிப்படி நடப்பது நடந்தே தீரும். அவர்கள் இப்போது இறக்க வேண்டும் என்றிருந்தால் அதை உன்னாலும் தடுக்க முடியாது. நீ அவர்களுக்காக எவ்வளவு துக்கப்பட்டாலும் நடப்பது நிற்காது. இப்படித் தடுக்க முடியாத விதியினைப் பற்றி நீ ஏன் கலக்கம் அடைகிறாய்?” என்று அருச்சுனனிடம் கேட்டு விட்டு அதை அவனே ஆராய்ந்து உண்மையை அறிந்து சொல்லச் சொல்கிறார்.

2-20

न जायते म्रियते वा कदाचिन्नायं भूत्वा भविता वा न भूय: |
अजो नित्य: शाश्वतोsयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे ||

பிறப்பு இறப்பு இல்லான் என்றும் பின்னும் இவன்தான்
பிறந்து கழியப் பெறானே – பிறவாதான்
எங்குமுளன் சாசுவதன் இவ்வுடல் கொல்லப்படினும்
கொன்றுபடான் தொல்லோன் உட்கொள்

பொருள்: இந்த ஆத்மா என்றுமே பிறப்பதோ இறப்பதோ இல்லை, அவை இரண்டும் இல்லாதவன். மேலும் ஆத்மாவாகிய இவன் ஒரு காலத்தில் பிறந்து, இருந்து, பின்னொரு காலத்தில் இல்லாது போகாதவன் என்றும் கிடையாது. அவன் எப்போதும் பிறவாது, அழியாது உள்ளவன் என்பதால் அவனுக்கு பிறப்பு, இறப்பு என்ற இரண்டும் கிடையாது. இந்தத் தேகம் கொல்லப்பட்டாலும் தேகத்துள் உறையும் ஆன்மா கொலைக்கு உள்ளாகாதவன். அன்றும், இன்றும், என்றும் உள்ளதால் இவன் மிகத் தொன்மையானவன்  என்பதை உள்ளத்தில் இருத்திக் கொள்.

பீஷ்ம துரோணாதிகள் ஒருநாள் மரணம் அடைவார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தும், அவர்கள் இந்தப் போரில் இறக்கலாம், அதுவும் தன்னால் கொல்லப்படலாம் என்ற எண்ணம்தான் அருச்சுனனை வாட்டுகிறது. கொல்வதோ, கொல்லப்படுவதோ இரண்டுமே உடல், மனம் மட்டுமே சம்பந்தப்பட்டது, ஆனால் இவை இரண்டும் உலவ வந்த காரணமான ஆத்மாவுக்கோ அதனால் எந்த அழிவும் இல்லை. இடையில் வந்தது இடையில் போகின்றது, அதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறாய் என்பதுதான் பகவான் இங்கு சொல்ல வந்தது.

Kurukshetra

எது பிறக்கிறதோ அது இறப்பது நிச்சயம். உடல் பிறப்பதால் ஒரு நாள் அது அழியும். பிறப்பதால் உடலுக்கு வெவ்வேறு நிலைகள் உள்ள வளர்ச்சியும், நோய், நொடியும், தேய்மானமும், இறுதியில் மரணமும் உண்டு. அதுதான் உடலுக்கு உண்டான இலக்கணம். ஆனால் உடல் இருக்கும் போது ஒருவன் தான் என்று தன்னை உணர்கிறானே, அதற்குக் காரணமாக உடலின் உள்ளே உறையும்  ஆன்மாவுக்கும் அந்த உடலின் வெவ்வேறு நிலைகளுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. அதனாலேயே எந்த நிலையிலும் ஒருவனுக்குத் தான் என்ற உணர்வில் மாற்றங்கள் எதுவும் இல்லை. அனைவருக்கும் தன்னளவில் உள்ள இந்த உணர்வுதான் பொதுவானது. அதுதான் ஆன்மா எனப்படுகிறது. அதுதான் அனைவரது உண்மையான சொரூபம். அது ஒன்றே ஆதியிலிருந்து இருப்பது மட்டும் அல்லாது என்றும் இருப்பது. அதனால் அது மிகவும் தொன்மையானது. அதை அறிந்து கொள்ளாது இருப்பதுதான் அவரவர்களது மடமை.

ஆத்மா எப்போதும் உள்ளதால், சரீரம் அழிகிறது என்னும் போது ஆத்மா அழிவதில்லை. ஆக பீஷ்ம-துரோணாதிகளை நீ கொல்கிறாய் என்று நினைப்பது தவறு. ஆன்மாவாகிய நீ கொல்வதும் இல்லை, உன்னால் அவர்கள் கொல்லப்படுவதும் இல்லை. இந்த உண்மையை மனதினில் நன்கு பதித்துக் கொள்வாய் என்று அருச்சுனனுக்கு கண்ணன் அறிவுறுத்துகிறார்.

2-24

अच्छेद्योsयमदाह्योsयमक्लेद्योsशोष्य एव च |
नित्य: सर्वगत: स्थाणुरचलोयं सनातन: ||

இவன் துணிக்க ஒண்ணான் எரிக்க ஒண்ணாதான்
இவன் நனைக்க வற்ற ஒணான் ஏதும் – இவன் நித்தன்
எங்கும் உளன் தாணு இயல்பால் சனாதனன்
தங்கும் அசலனே தான்

பொருள்: இவன் துண்டிக்கப்பட முடியாதவன், இவன் எரிக்கப்படாதவன்; இவனை நீரில் நனைக்கவோ, வெயிலில் உலர்த்தவோ எதுவும் முடியாது. இவன் நித்தியமானவன், எங்கும் நிறைந்தவன். இவன் அசலமானவன் என்பதால் என்றும் நின்று நிலைத்து இருப்பவன். எங்கும் தானாய் உள்ள அசல சொரூபனும்  இவனே.

எவருக்கும் நன்கு தெரிந்தவைகளைக் கொண்டு ஆன்மாவை பற்றி மேலும் விளக்குகிறார். ஒரு திடப் பொருள் என்றால் அதை வெட்டலாம், தீயில் இட்டு எரிக்கலாம். ஆன்மா அத்தகைய பொருள் அல்ல என்பதாலும் அதற்கு அவயவங்கள் என்று ஏதும் இல்லாததாலும், அதனை வெட்ட முடியாது, எரிக்கவும் முடியாது. அப்படிச் செய்யாது நீரில் அழுத்தி நனைக்கலாம் என்றால், அதற்கு உருவம் என்று ஏதும் இல்லாததால் அதை நனைக்கவும் முடியாது. ஒரு வேளை திரவப் பொருளாக இருந்தால் சூரியனின் வெப்பத்தைக் கொண்டு உலர்த்த முடிந்திருக்கும். ஆன்மா அப்படியும் இல்லாததால் வெயிலில் உலர்த்தவும் முடியாது.

இப்படி எதனாலும் அழிக்கப்பட முடியாத ஆத்மா இங்கு அங்கு என்னாது எங்கும் பரவி உள்ளதாலும், இன்று அன்று என்னாது என்றும் உள்ளதாலும் அது அசலமாக சீவராசிகளின் பார்க்கும் உள்ளத்தே நிறைந்து நிலையாய் நிற்கிறது. இத்தகைய தன்மைகள் எல்லாம் உள்ள ஒரே பொருள் ஆன்மா ஒன்றுதான். அது இருப்பதால் தான் “நீயும் இருக்கிறாய், நானும் அதுவே” என்று சொல்லாது சொல்லி விளங்க வைக்கிறார்.

உன் முன்னால் நீ பார்க்கும் உன் உற்றார், உறவினர், சுற்றம், நண்பர்கள் எல்லாம் வெறும் உடல் அல்ல, மனங்கள் அல்ல, ஆன்மாக்களே. நீயும் அதுவே. அதனால் நீயும் கொல்லவில்லை, அவர்களும் கொல்லப்படவில்லை” என்று பகவான் சொல்லியிருந்தாலும், ஆன்மாவின் தன்மைகளைப் பற்றிச் சொல்லி மேலும் விளக்குவார்.

இது எப்பேர்ப்பட்ட உண்மை என்று நாமும் நம் அனுபவத்தின் வாயிலாகவும் பார்க்கலாமே. மனித குல வளர்ச்சியில், ஒரு தனி மனிதனாய் இருந்து வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதைவிட பலர் சேர்ந்து உழைப்பது அனைவருக்கும் பல நன்மைகள் தருகிறது என்ற Non-zero Sum என்ற தத்துவத்தை உணர்ந்ததால் சமுதாயங்கள் உருவாயின. அப்படிப் பலர் சேர்ந்து உழைக்கும் போது சிலர் மற்றோரின் உழைப்பில் குளிர் காண முனைகிறார்கள் என்று சமுதாயம் உணரும்போது, அதைக் கட்டுப்படுத்த சில சமுதாய வரைமுறைகள் வருகின்றன. காலப் போக்கில் வரைமுறைகளின் பொருள் உணரப்படாமலோ, அல்லது அவை காலத்திற்கு ஏற்ப அமையாமலோ போகின்றன. அப்போது ஒன்றுக்குப் பதில் வேறு அமைகின்றன. சிறிய அளவில் தொடங்கும் கூட்டமைப்பான சமுதாயங்கள் ஒரு கட்டத்தில் நாடுகளாக மாறுகின்றன.

நாடு, தேசம் என்ற கோட்பாடுகளும் வரைபடத்தில் காலத்திற்கேற்ப மாறுகின்றன. சிறிதோ பெரிதோ என்றில்லாமல் நாடுகளும் கூட்டமைப்புக்களாக அனைவருக்கும் பலன்கள் தரும் முகமாய் ஒத்துழைக்க முன்வருகின்றன. அதில் தொழில் முன்னேற்றங்களும், தொழில் நுட்பங்களினால் பல மாறுதல்களும் நேர்ந்து, மனிதர்களின் பார்வைகளையும், அணுகுமுறைகளையும் வெகுவாக மாற்றுகின்றன. இவைகளில் நன்மைகளும் நடக்கின்றன, தீமைகளும் உருவாகின்றன.

ஆனாலும் மனித நேயம் என்று சொல்லப்படும் மனிதனின் உரிமைகளையும், உணர்வுகளையும் மதிக்கும் போக்கு வளர்ந்து கொண்டுதானே இருக்கிறது? இதன் அடிப்படைக் காரணம் ஒருவன் மற்றவனிடம் காட்டும் அன்பும், மரியாதையும் தான். அதன் அடிப்படை இன்னொருவனையும் தன்னைப் போலப் பார்ப்பதுதானே? இதுவரை நாம் பார்த்ததன் காரணம் உலகியல் தொடர்பானது தான் என்றாலும், நம்மை அறியாமலேயே நாம் அப்போது அனுபவிப்பது அனைத்துள்ளும் உறையும் ஆன்மாவை நேசிப்பதே.

அப்படி இருந்தாலும் தீமைகள் வளரும் போது அவைகளைத் தடுக்கும் எண்ணம் இல்லாது போனால், நன்மைகள் வளர முடியாது என்பதையும் நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம்  அல்லவா? அப்போது தீமைகள் ஊக்குவிப்போரை எப்படி அடக்க வேண்டும் என்பது தானே நமது லட்சியமாய் இருக்கிறது?  இந்தப் போர்க்களத்தில் நடக்கப் போவதும் அதுவே.

music-iconரமண மகரிஷியின் பகவத்கீதாசாரம் இங்கே தரவிறக்கம் செய்து கேட்கலாம்.

(தொடரும் …)

One Reply to “ரமணரின் கீதாசாரம் – 3”

  1. அற்புதமாக இருக்கிறது உங்கள் தொண்டு வாழ்க

    உமா பாலசுப்ரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *