திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]

”செருப்புக்குத் தோல் வேண்டியே – இங்கு கொல்வரோ
செல்வக் குழந்தையினை?”

– என்று பாடுவார் மகாகவி பாரதி, பாஞ்சாலி சபதத்தில். சூதில் தோற்ற தருமன் திரௌபதியைப் பணயம் வைத்தபோது, வெகுண்டு பாடும் பாரதியின் ஆவேச வார்த்தைகள் இவை.

ring-spun-tshirts-tirupur

தொழில்நலத்திற்காக, உலகச் சந்தையில் வெல்வதற்காக, சொந்தநாட்டு மண்ணை மலடாக்கிய திருப்பூர்த் தொழில்துறையினரின் சுயநலத்தைக் காணும்போது, பாரதியின் மந்திர வார்த்தைகள்தாம் நினைவுக்கு வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உயர் நீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு, ஒட்டுமொத்த திருப்பூரையும் நிலைகுலையச் செய்துள்ளது.

பின்னலாடை ஏற்றுமதியில் உலக அளவில் முத்திரை பதித்துவரும் திருப்பூர் நகரம், நாட்டிற்கு ஆண்டுதோறும் ரூ.14,000 கோடி அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் உழைப்பாளிகளின் நகரம், நாட்டு மக்களின் உள்ளாடைகளை ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் உற்பத்தி செய்துவரும் தொழில்முனைவோரின் நகரம், இதற்காக இழந்தது மிக அதிகம். அதன் அடையாளம்தான், சாக்கடை ஓடையாக ஓடிக் கொண்டிருக்கும் ஜீவநதியான நொய்யல்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறுவாணி மலையடிவாரத்தில் துவங்கி, கொடுமுடி அருகே நொய்யல் கிராமத்தில் காவிரியில் கலக்கும்வரை கொங்கு மண்டலத்தை பசுமையாக்கிய நதி நொய்யல்; அது பழங்கதை. நொய்யலின் குறுக்கே ஒரத்துப்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள அணையில் தேங்கியிருக்கும் நீரைத் திறந்துவிடக் கூடாது என்று விவசாயிகள் போராட்டம் நடத்தும் அளவுக்கு ஆற்றுநீர் இப்போது மாசுபட்டிருக்கிறது. பலகோடி செலவில் கட்டப்பட்ட இந்த அணை தற்போது பயன்பாடற்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இதற்கு காரணம் திருப்பூர். இதுதான் புதுக்கதை.

திருப்பூரின் அசுரத் தொழில் வளர்ச்சியால் 5 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது; நாட்டின் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை சில ஆயிரம் அதிகரித்துள்ளது; நாட்டின் பொருளாதாரத்திற்கும் திருப்பூர் உறுதுணை புரிகிறது. எல்லாமே, செருப்புத் தோலுக்காக செல்வக் குழந்தையைக் கொன்ற கதையாக, சாய ஆலைகள் நிகழ்த்திய நதிநீர் மாசுபாட்டால் மாறிப் போயிருக்கிறது.

tirupur-dyeing-units-discharging-toxic-effluents

பல்வகை தொழில்வளமும் நிறைந்த வெளிநாடுகள் வண்ணமயமான பின்னலாடைகளுக்கு நம் நாட்டை, அதுவும் திருப்பூரை நாடி வந்தது ஏன் என்று இப்போது தெரிகிறது. அந்த நாடுகளில் சுற்றுச்சூழல் சட்டங்கள் கடுமையாக உள்ளதால், அங்கு சாயமிடுதல் உள்ளிட்ட மாசுபடுத்தும் தொழில்களைச் செய்ய கட்டுப்பாடுகள் உள்ளன. எனவேதான், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பின்னலாடைகளை கொள்முதல் செய்து அணிந்து மகிழ்கின்றன மேலைநாடுகள். அதிலும் பின்னலாடை உற்பத்தி நாடுகளுக்குள் உள்ள வர்த்தகப் போட்டியைப் பயன்படுத்தி பேரம்பேசி விலையைக் குறைப்பதிலும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கைதேர்ந்தவை. அதையும் மீறித்தான் திருப்பூர் உலக அளவில் சாதனை புரிந்திருக்கிறது. ஆனால், அதற்காக திருப்பூர் கொடுத்துள்ள விலை மிக மிக அதிகம்.

திருப்பூர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னும் ஜவுளி நகரமாக இருந்தது. அப்போது கைத்தறி ஆடைகளுக்கு புகழ்பெற்ற சிறு நகரமாக இருந்த திருப்பூர், 1970-களின் துவக்கத்தில் பின்னலாடைகளை உற்பத்தி செய்யத் துவங்கியது. வெண்ணிற உள்ளாடைகளை மட்டும் உற்பத்தி செய்து வந்த பின்னலாடை நகரம், 1980-களில் வண்ண மயமான, நாகரிகமான, மதிப்புக் கூட்டப்பட்ட ஆடைகளை உற்பத்தி செய்யத் துவங்கியது. அப்போதுதான், சாய, சலவை ஆலைகளின் எண்ணிக்கை பெருகத் துவங்கியது. அவற்றின் எண்ணிக்கை 1990-களில் 1500-ஆக அதிகரித்தது. அந்த ஆலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீரின் அபாயம் குறித்து யாரும் கவலை கொள்ளவில்லை. சாயக் கழிவுநீர் எந்தச் சுத்திகரிப்பும் இன்றி சிற்றோடைகளிலும் திருப்பூரில் பாயும் நொய்யலிலும் எந்த சங்கோஜமுமின்றி கலக்கவிடப்பட்டது. அரசு நிறுவனமான மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலற்ற தன்மையும் ஊழலும், நதிநீர் மாசுபடக் காரணங்களாயின.

noyyal_river

30 ஆண்டுகளுக்கு முன் குடும்பத் தேவைக்கு நொய்யலில் ஊற்றுப் பறித்து நீரெடுத்த திருப்பூர் மக்கள் கண்முன்னாலேயே, நொய்யல் சாக்கடையாக மாறத் துவங்கியது. கோவை, திருப்பூர் நகரங்களில் பெருகிய மக்கள்தொகையினால் ஏற்பட்ட அதிபயங்கர விளைவான சாக்கடைக் கழிவும் இதே நொய்யலை பாழ்படுத்தியது. இன்சுவை நீர் வழங்கிய நொய்யலில், கடும் நெடியும் கருநிறமும் பொங்கும் நுரையும் இயல்பாயின. இந்தக் கழிவு நீர் ஒரத்துபாளையத்தில், அணையில் தேங்கி, சுற்றுவட்டார விவசாய நிலங்களை சீரழித்தபோதுதான் (1998) சூழல் மாசுபட்டதன் விபரீதம் புரிந்தது. அதற்குள் காலம் கடந்துவிட்டிருந்தது. இதன் விளைவாக நொய்யல் நதியோர விவசாய நிலங்கள் களர் நிலங்களாயின; நிலத்தடிநீரின் கடினத் தன்மையும் மிக அதிகமாக உயர்ந்தது.

ஏனெனில் ஆண்டுதோறும் சாய (டையிங்), சலவை (பிளீச்சிங்) ஆலைகள் 1,500 டன் ரசாயன நிறங்கள், சோப்புத் தூள்களைப் பயன்படுத்துகின்றன. அந்தக் கழிவு அப்படியே கலந்ததால் ஜீவநதி செத்துப்போனது. அப்போதுதான் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பது துவங்கியது. ஆயினும் பாதி சுத்திகரித்த நிலையில் சாயக் கழிவுநீர் ஆற்றில் விடப்பட்டது. விவசாயிகளிடமிருந்து அபயக்குரல் எழத் துவங்கியது.

அரசோ, திருப்பூர்த் தொழில்துறையின் பிரமாண்டத்திற்கு அஞ்சி அமைதி காத்தது. வேறுவழியின்றி, நொய்யல் மாசுபட்டதால் சாகுபடியை இழந்த நொய்யல் பாசன விவசாயிகள் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பு (2004, ஜூலை), தொடர்ந்து சீரழிந்த நொய்யல் நதிக்கு ஆசுவாசமாக வந்தது.

oraththupalayam-dam1974-ஆம் வருடத்திய தமிழக நதிநீர் மாசுபாடு தடுப்புச் சட்டத்தின்படி, தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீர் வெளியேற்ற அனுமதி பெறுவது அவசியம். அதற்குக் கட்டுப்பாடுகளும் உண்டு. அதற்கான அலகு ‘டிடிஎஸ்’ எனப்படும் கரையாத திடக் கழிவின் அளவாகும். இது நீரின் உப்படர்த்தியால் (பிபிஎம்) அளவிடப்படுகிறது. அதிகபட்சம் 2,200 பிபிஎம் உப்படர்த்தி மட்டுமே அனுமதிக்கப்படும். ஆனால், திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடிநீரின் உப்படர்த்தி 5,000 பிபிஎம் ஆக அதிகரித்துவிட்டதை நீதிமன்றம் கவலையுடன் சுட்டிக்காட்டியது. இறுதியில், “நொய்யல் நதியை அரசு சீரமைக்க வேண்டும்; ஒரத்துப்பாளையம் அணையைத் தூர் வார வேண்டும்” என்ற உத்தரவுகளுடன், “நதிநீர் மாசுக்குக் காரணமான சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்றும் நீதிமன்றம் ஆணையிட்டது.

நீதிமன்றத் தலையீட்டை அடுத்து சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது வேகமெடுத்தது. சிறு சாய ஆலைகள் இணைந்து 20 பொது சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தன. தவிர வசதியான சாய ஆலைகள் 147 தனியார் சுத்திகரிப்பு நிலையங்களைத் துவக்கின. இதற்காக ரூ.800 கோடிக்கு மேல் திருப்பூர் தொழிலதிபர்கள் செலவிட்டுள்ளனர். இந்த ஏற்பாடுகள் நடந்துவந்த அதேநேரத்தில், நொய்யல் மாசுபடுவது குறையவே இல்லை. நொய்யல் வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சுத்திகரிப்பு நிலையங்களில் ‘ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்’ (ஆர்.ஓ) எனப்படும் சவ்வூடு பரவல் தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட சாய ஆலைகள் ஒப்புக்கொண்டன.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 2006 டிசம்பரில், ”2007 ஜூலை 31-க்குள் அனைத்து சாய ஆலைகளும் ஆர்.ஒ முறையில் இயங்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவேண்டும்; இதுவரை நொய்யலை மாசு படுத்தியதற்காக அபராதம் செலுத்த வேண்டும். அந்தத் தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டது. அதன்படி குறுகிய காலமே சாயஆலைகள் அபராதம் செலுத்தின. ஆனால், அபராதம் அதிகம் என்று கூறி உச்சநீதி மன்றத்தில் முறையிட்டு 2009, அக். 6 வரை காலஅவகாசம் பெற்றன. மீண்டும் இந்த அவகாசம் 2010, ஜன. 5 வரை நீடிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி ஆர்.ஓ அமைக்கும் பணிகள் துவங்கின. அதிக முதலீடு செய்ய இயலாத சாய ஆலைகளும் வரைமுறை மீறிய சாய ஆலைகளும் (சுமார் 500) மூடப்பட்டன.

ஆர்.ஓ. அமைத்த பின்னரும் சாயக் கழிவின் அடர்த்தி குறையவில்லை. கழிவுநீரை ஆவியாக்கும் ‘எவாப்பரேஷன்’, அடர் வீழ்படிவைப் பொடியாக்கும் ‘கிறிஸ்டலைசர்’ தொழில்நுட்பங்களாலும் பெரும்பயன் விளையவில்லை. சாயமிடவும் சலவை செய்யவும் பயன்படுத்தும் ரசாயனங்களைச் சுத்திகரிப்பது மாபெரும் சவால்தான். அதில் திருப்பூர் ஆலைகள் தோல்வியுற்றன. சாதாரணமாகப் பயன்படுத்தும் தண்ணீரிலேயே 1,500 பிபிஎம் அளவில் டிடிஎஸ் இருக்கும்போது அதிகபட்ச டிடிஎஸ் 2,200 பிபிஎம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது சாத்தியமல்ல என்று தொழில்துறையினர் புலம்பத் துவங்கினர்.

tiruppur-dyeing-plants

இதனிடையே நொய்யல் விவசாயிகள் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம் நியமித்த மோகன் குழு, திருப்பூர் சாய ஆலைகள், சுத்திகரிப்பு நிலையங்கள், நொய்யல் நதி ஆகியவற்றைப் பார்வையிட்டு உயர் நீதிமன்றத்திற்குத் தனது பரிந்துரையை அளித்தது. அதில், முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட பின்னரே (ஜீரோ டிஸ்சார்ஜ்) சாய ஆலைகளிலிருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. அதனை தொழில் நிர்பந்தம் காரணமாக திருப்பூர் சாய ஆலைகள் ஏற்றன. எப்படியாவது நீதிமன்றத்தில் சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில் ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ செய்வதாக ஒப்புக்கொண்ட சாய ஆலைகள், அது நடைமுறை சாத்தியமற்றது என்பதால், மீண்டும் சிக்கலில் ஆழ்ந்தன.

இதனிடையே “சாயக் கழிவுநீரை முழுமையாக சுத்திகரிப்பது கடினம். எனவே அதனைக் குழாய் மூலமாக கடலுக்குக் கொண்டுசென்று சேர்ப்பதே பொருத்தமான தீர்வாக இருக்கும்” என்று திருப்பூர் தொழில்துறையினர் கூறத் துவங்கினர். அரசியல்கட்சிகளும் அதை எதிரொலித்தன. மாநிலத்தை ஆண்ட இரு கட்சிகளும் இத்திட்டத்திற்கு உதவுவதாக வாக்களித்தன. இதற்கென 2006-லேயே ரூ.800 கோடியில் திட்டம் தீட்டப்பட்டது.

ஜவுளி நகரங்களான கோவை, திருப்பூர், பெருந்துறை, பவானி, ஈரோடு, கரூர் பகுதிகளின் சாயக் கழிவுப் பிரச்சினைக்கும் இதன்மூலமாக தீர்வு கிடைக்கும் என்று நம்பப்பட்டது. இத்திட்டத்தின் மதிப்பு தற்போது ரூ.1,400 கோடியாக உயர்ந்துள்ளது. எனினும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் எதிர்ப்பு, மீனவர்களின் எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் காகித அளவிலேயே நின்றுவிட்டது.

நொய்யலில் தொடர்ந்து சாயக் கழிவுநீரைக் கண்காணித்த விவசாயிகள் சங்கம், மீண்டும் 2010-இல் நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றம் பணித்தபடி மோகன் குழு மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. அதில், நொய்யலில் எந்தக் கட்டுப்பாடும் இன்றி சாயக் கழிவு நீர் கலந்துவருவதைச் சுட்டிக்காட்டியது. அதையடுத்து, உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவை கடந்த ஜனவரி 28-இல் அளித்தது.

”ஏற்கனவே அளித்த உத்தரவுப்படி செயல்படாத அனைத்து சாய, சலவை ஆலைகளும் மூடப்பட வேண்டும்; இதனை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும்; சாய ஆலைகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற நீதிமன்ற உத்தரவால், தற்போது திருப்பூரிலுள்ள 754 சாய, சலவை ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. அவற்றுக்கான மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இப்போது திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை, தொடர் சங்கிலியில் துண்டு விழுந்துள்ளதால் திகைப்பில் தவிக்கிறது. பின்னலாடைத் துணிகள் (நிட்டிங் முடிந்த பிறகு) சாயமிடுதல், சலவை செய்தலுக்குப் பிறகே அடுத்த கட்டப் பணிகளான காம்பேக்டிங், பிரிண்டிங், கட்டிங், ஸ்டிச்சிங், அயர்னிங், பேக்கிங், செக்கிங், டெஸ்பாட்ச் உள்ளிட்ட பல படிநிலைகள் உள்ளன. மேலும் ஆடையின் மதிப்புக் கூட்டும் எம்பிராய்டரி, சீக்குவன்ஸ், எலாஸ்டிக், பட்டன் உள்ளிட்ட அலங்கார வேலைப்பாடுகள் உள்ளன. இந்தத் தொழில்களில் ஒவ்வொன்றிலும் 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன. அவற்றை சார்ந்து 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வதாக திருப்பூர் தொழில்துறையினர் கூறுகின்றனர். தவிர, இரண்டாம் தர ஆடைகள் விற்பனை, பனியன் கழிவு போன்றவற்றிலும் பல்லாயிரம் பேர் பணி புரிகின்றனர். இவர்கள் அனைவரும் இப்போது செய்வதறியாது நிலைகுலைந்து காணப்படுகின்றனர்.

இப்போது கட்டுரையின் முடிவிற்கு நாம் வர வேண்டிய நேரம். திருப்பூர் பலரது வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய நகரம். இப்போது முட்டுச்சந்தில் திரும்ப வழியில்லாத பாதையில் நிற்கிறது திருப்பூரின் முன்னேற்றம். இதற்கு காரணம் யார்?

சுற்றுச்சூழல் பாதிப்பின் அபாயம் அறியாமல் சுயநலனுடன் செயல்பட்ட தொழில் நிறுவனங்களா? நொய்யல் மாசுபட்டதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளா? எதைப் பற்றியும் கவலையின்றி பிரச்சினையை நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டு அரசியல் நடத்தும் அரசாங்கமா? நதிநீர் மாசுபடுவது குறித்து கிஞ்சித்தும் கவலையின்றி வாழும் நாட்டு மக்களா?

20060421005000402எப்படியோ, எல்லோரும் சேர்ந்து நதியை நாசமாக்கி, இப்போது நீதிமன்றம் தலையிட்ட பிறகு புலம்பத் துவங்கி இருக்கிறோம். இப்போதாவது விழிக்காவிட்டால் நமக்கு கதி மோட்சமில்லை. நமது எதிர்கால வாரிசுகளுக்கு நல்ல பொருளாதாரத்தை மட்டும் தந்து செல்வதால் பயனில்லை; அவர்களுக்கு நல்ல நீரையும் தூய சுற்றுச்சூழலையும் தர வேண்டிய கடமையும் நமக்கு உண்டு. திருப்பூர் நகரம் தற்போது படும் துயரம், நாட்டு மக்கள் அனைவருக்கும் பாடம்.

இந்த இடியாப்பச் சிக்கலிலிருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, தொழில்துறையினர், அரசு, நீதிமன்றம், சுற்றுச்சூழல் அமைப்புகள், விவசாய அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. பல லட்சம் மக்களின் வாழ்வாதாரமாகிவிட்ட திருப்பூர் தொழில் துறையைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்துடன், விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் காக்க வேண்டிய அத்தியாவசியமும் நம் முன்பு உள்ளது.

கண்களை விற்றுச் (சுற்றுச்சூழலை இழந்து) சித்திரம் வாங்காமல் (தொழில்துறை உயர்வு), அதே சமயம் இருக்கும் வாழ்வாதாரத்தையும் (திருப்பூர்) தொலைத்துவிடாமல் செயல்பட வேண்டிய நேரம் இது. நாம் என்ன செய்யப் போகிறோம்?

இதன் அடுத்த பாகத்தில் திருப்பூர் தொழிலதிபர்களின் கருத்துகள் இடம் பெறுகின்றன…

(தொடரும்…)

7 Replies to “திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]”

  1. பிரச்சினையின் ஆழத்தைப் புரிய வைத்தக் கட்டுரை. விரிவான கட்டுரைக்கு நன்றி. தொழில் நிறுவனங்கள் இதற்கு மேல் போக முடியாது என்ற நிலை வரும் பொழுதுதான் வேறு வழியின்றி வடிகட்டும் வேலையைச் செய்வார்கள். இப்பொழுது ஒழுங்காக கட்டுப்பாடு செய்யும் ஆலைகள் மட்டுமே இயங்கும். வருங்காலத்தில் அனைவரும் அதைச் செய்து விட்டு ஆரம்பிப்பார்கள். அது வரை இது ஒரு தற்காலிகத் தேக்காமாகவே இருக்கும். அப்படி மாசைக் கட்டுப் படுத்த முடியாவிட்டால் அவர்கள் ஆலைகள் நிறுத்தப் படுவதே சரி. இது எப்படிப் போகும் என்பது தெரியவில்லை

    நன்றி
    ச.திருமலை

  2. உடனடியாக அனைத்து நிறுவனங்களும் சேர்ந்து செயல் பட வேண்டும்!
    சரியான விதத்தில் சுத்திகரிப்பு செய்ய வேண்டும். இல்லையேல் நல்ல வளமான பொருளாதாரம் என்று பேசுவதால் பயன் இல்லை!
    ஏற்கனவே பல முறைகளால் பூமியின் வளம் பாதிப்பு அடைந்திருக்கிறது! மக்கள் தொகை பலம் என்றால் மக்களை சரியான விதத்தில் பயன் படுத்தினால் எல்லாம் சரியாகும்!
    நன்றி!

  3. அன்புள்ள சேக்கிழான், பிரசினையைத் தெளிவாக விளக்கிய கட்டுரை. மிக்க நன்றி.

    இந்த விவகாரம் இப்போது பூதாகாரமாக வெடித்துள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பே இது இங்கு தான் வந்து நிற்கும் என்பதை தொழிலதிபர்களும், விஷயம் தெரிந்த உள்ளூர்க் காரர்களும் நன்கு அறிந்திருப்பார்கள் என்றே ஊகிக்கிறேன். இருந்தாலும், வளர்ச்சி விசை தந்த வேகத்தில், அந்த அபாயக் குரல் அமுங்கி அலட்சியப் படுத்தப் பட்டு விட்டது. கங்கையும், யமுனையும் கூட பல இடங்களில் தொழிற்சாலைக் கழிவுகளால் மாசுபடுத்தப் பட்டுள்ளன.. அந்த நதிகளின் விஸ்தீரணத்தாலும், நீண்ட நிலப்பரப்பு என்பதாலும், திருப்பூர் போன்று ஒரு குறிபிட்ட பிரதேசத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு ஏற்படவில்லை.. ஆனால் அதன் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்டன.

    எல்லா தொழில் நகரங்களுக்கும் இது ஒரு பெரிய பாடம்.. ஆனால் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது என்ற அடிப்படைப் பாடத்தைக் கூட நாம் கற்றுக் கொள்ளவில்லை என்பது தான் பெரிய சோகம்.

  4. Pingback: Indli.com
  5. ஆம்பூர் பகுதியில் அமைந்துள்ள தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் திருப்பூரைவிடப் பெரிய அளவில் சுற்றுச் சூழல் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    ஆம்பூர் தோல் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் என்பதால் அரசாங்கமும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், தங்கள் வாலைச் சுருட்டிக் கொண்டுள்ளனர்.

    மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்.

  6. நான்காண்டுகளுக்கு முன் திருப்பூருக்கு முதன்முறை சென்றபோது என் உறவினரை நொய்யல் ஆற்றைக் காட்டுமாறு கேட்டேன். அதற்கு அவர் தய்வு செய்து நீங்கள் அதைப் பார்க்கவேண்டாம், உங்கள் மனது மிகவும் புண்படும் என்று கூறினார். அதையும் மீறி நான் பார்த்தபோது மனது புண்படவில்லை, நொறுங்கியே போய்விட்டது. பொதுவாக திருப்பூர் மக்கள் இந்த விஷயத்தில் நொந்து போயிருக்கிறார்கள். எத்தனைதான் கெஞ்சிக் கேட்டாலும் சட்டங்கள் போட்டாலும் லஞ்சவழி இருக்கும் வரை தொழிலதிபர்கள் கட்டுப்பட மாட்டார்கள். சாயத் தொழிலகங்கள் மற்றும் அபாயகரமான கழிவு ஏற்படுத்தும் தொழிலகங்கள் ஆற்றங்கரையிலிருந்து 30 கிமீ தள்ளியே அமைக்கப்பட வேண்டும் என்ற செயல்முறை சட்டமாக்க்கப் படவேண்டும்.

  7. சரியான நேரத்தில், சரியான தகவல்களை தந்த கட்டுரையாளருக்கு நன்றி. இது போன்ற கட்டுரைகள் அதிக ஊடகங்களில் வெளி வரவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *