மூன்று கரிப் பூச்சுக்களும் ஒரு சுண்ணப் பூச்சும்

2_manmohan_congress_scamsஎந்த ஒரு நாட்டிற்கும்,  நமக்கு கிடைத்துள்ள அற்புதமான ‘தூய திருவாளர்’ மன்மோகன் சிங் போன்ற பிரதமர் கிடைக்கவே மாட்டார்.

அண்மையில் காஷ்மீரில் (மார்ச் 4) அவர் பேசுகையில் ”மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக பி.ஜே.தாமஸ் நியமனம் செய்யப்பட்டதற்கு நானே பொறுப்பேற்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உச்ச நீதி மன்றத்தின் ‘பி.ஜே.தாமஸ் நியமனம் ரத்து’ என்ற உத்தரவுக்குப் பிறகு, இவ்வாறு மொழிந்திருக்கிறார், பிரதமர். இவர் பொறுப்பேற்காவிட்டால் யார் இவரை விடப் போகிறார்களாம்? தீர்ப்பு வெளியானவுடன் (மார்ச் 3), ”தீர்ப்பை மதிக்கிறேன்” என்று பெருந்தன்மையாக (!) வேறு கூறினார் பிரதமர்.
 
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) தலைவராக ஊழல்கறை படிந்த பி.ஜே.தாமஸ் நியமிக்கப்படுவதற்கு (செப். 6, 2010) முன்னரே, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் (பாஜக) தேர்வுக்குழுவில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதை சட்டை செய்யாமல் “பாமாயில் ஊழல் புகழ்’  தாமஸை மிகுந்த பிடிவாதத்துடன் சிவிசி.யாக நியமனம் செய்து மகிழ்ந்தனர் பிரதமர் மன்மோகனும் உள்துறை அமைச்சர் சிதம்பரமும். அதனை எதிர்த்து, லிங்டோ உள்ளிட்ட பொதுநல விரும்பிகள் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது, நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மத்திய அரசு தடுமாறியது. ஒரு பொய்யைக் காப்பாற்ற ஒன்பது பொய் சொன்ன கதையாக, தாமஸ் மீதான வழக்கு விவரமே  மத்திய அரசுக்குத் தெரியாது என்று கூறி நீதிபதிகளையே அதிர்ச்சி அடையச் செய்தது மத்திய அரசு. அப்போது நீதிமன்றம் கேட்ட பல கேள்விகளுக்காகவே,  மானம் உள்ள எவரும் உடனடியாக பதவியை விட்டு விலகி ஓடியிருப்பார். அது இல்லாத மன்மோகன் சிங், வழக்கம் போல சாந்த சொரூபியாகக் காட்சி அளித்தார்.
 
அப்போதும் கூட பதவி விலக மறுத்தார் பி.ஜே.தாமஸ். அவரிடம் மத்திய அரசின் தூதர்கள் பலர் கெஞ்சிக் கேட்டும் அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதில் விசித்திரம் என்னவென்றால், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். தான் நியமித்த ஒருவரையே ‘கண்டனத் தீர்மானம்’ கொண்டுவந்து நீக்குவது என்பது அரசு தன் மீதே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவது போன்றது தான். கடைசியில், தாமஸின் விதியை நீதி மன்றத்திடம் ஒப்புவித்துவிட்டு வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது மன்மோகன் சிங் குழுவால்.
 
இப்போது இறுதித் தீர்ப்பு வெளியாகிவிட்டது.  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஸ்வதந்திரா குமார் ஆகியோரடங்கிய பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திர இந்தியாவில் பிரதமர் செய்த ஒரு நியமனத்தை முதல்முதலாக ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

 “ஊழல் கண்காணிப்பு அதிகாரியை  நியமிப்பது தொடர்பான உயர்நிலைக் குழு பரிந்துரைகளில் எவ்வித சட்ட விதிமுறைகளும் இல்லை. இதன்படி செப். 3, 2010-ல் இந்தக் குழு வெளியிட்ட பரிந்துரைகள் சட்டத்துக்கு உட்பட்டவை அல்ல. எனவே, சிவிசி.யாக பி.ஜே. தாமஸ் நியமனம் செய்யப்பட்டதை  ரத்து செய்கிறோம்” என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர். 
 
church_election”ஊழல் கண்காணிப்பு அமைப்பின் மீதான நம்பகத் தன்மை, இந்த அமைப்பின் தலைவர் மீதான நம்பகத் தன்மை ஆகியவை மிகவும் முக்கியமானவை. இவை இரண்டும் சிவிசி சட்ட விதிகளுக்கு உட்பட்டவை.  பி.ஜே. தாமஸ் நியமனத்தில் உயர் நிலைக் குழு உரிய ஆவணங்களைப் பரிசீலிக்கவில்லை. தாமஸுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து இக்குழு பரிசீலிக்கவில்லை. அவரது படிப்பு, பதவி உள்ளிட்டவற்றை ஆராய்ந்த இக்குழு, கண்காணிப்பு ஆணையத்தின் நம்பகத் தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் நிராகரித்தும் அதை மத்திய அரசு ஏற்கவில்லை. இது மக்களின் நம்பகத்தை இழந்துவிட்டது” என்று தீர்ப்பில் கூறினார் உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி கபாடியா.
 
அது மட்டுமல்ல, ”மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக அரசு அதிகாரிகளை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. பிற துறைகளில் உள்ள நேர்மையானவர்களைப் பரிசீலிக்கலாம்” என்றும் ஆலோசனை வழங்கி இருக்கிறது உச்ச நீதி மன்றம்.

இத்தீர்ப்பு வெளியானவுடன் தாமஸ் பதவி விலகிவிட்டதாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார். ஆனால், அதனை தாமஸின் வழக்கறிஞர் வில்ஸ் மாத்யூஸ் மறுத்துவிட்டார். தீர்ப்பு குறித்து மறுஆய்வு மனு செய்ய தாமஸ் தயார். இப்போது அவரிடம் பதவி விலகுமாறு மன்றாடிக் கொடிருக்கிறது மத்திய அரசு. தாமஸை நியமிக்க வேண்டாம் என்று மன்றாடிய சுஷ்மாவின் பேச்சைக் கேட்டிருந்தால் இந்த இழிநிலை காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்குமா?

”இத்தீர்ப்பு மத்திய அரசின் முகத்தில் பூசப்பட்ட கரி” என்று சரியாகவே சொல்லி  இருக்கிறார் பாஜக  தலைவர் நிதின் காட்கரி. ”சுதந்திர இந்திய வரலாற்றில் இப்படிப்பட்ட தீர்ப்பு வந்திருப்பது இதுவே முதல்முறை. மத்திய அரசு மீதான இந்தக் கண்டனத் தீர்ப்பிற்கு சோனியாவும் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியுள்ளார் அத்வானி. செவிடன் காதில் சங்கு ஊதியது போலவே, இப்போதும் அமைதி காக்கிறார், காங்கிரசை  வாழவைக்க வந்த இத்தாலிய அன்னை.

மறையவே மறையாத கோத்ரா  கறை:
 
இந்தத் தீர்ப்புக்கு முன்னதாக கடந்த பிப். 24ல் குஜராத் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் மத்திய அரசின் ஆணவப் போக்கிற்கு விழுந்த அடி என்று தான் சொல்ல வேண்டும். கோத்ராவில் எரிக்கப்பட்ட 59  கரசேவகர்களின் உயிர்மீது விளையாடிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கபட நாடகத்தை தோலுரித்திருக்கிறது சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு. 
 
godhra train fire2002,  பிப். 27 ல் குஜராத் மாநிலம், கோத்ரா ரயில்நிலையத்தில் நின்றிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் – எஸ் 6  கோச்சுக்கு தீயிடப்பட்டது. அயோத்தியில் நடந்த கரசேவை நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பிய 59  கரசேவகர்கள் உயிருடன் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அதையடுத்து நடந்த மாபெரும் மதக் கலவரத்திற்கு வித்திட்டது, கோத்ரா ரயில் எரிப்பு. இதற்கான திட்டமிட்ட சதி நடந்திருப்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்தது. குஜராத் அரசு நியமித்த நானாவதி கமிஷனும் ரயில் எரிப்பின் பின்னணியில் இருந்த சதியை அம்பலப்படுத்தியது.
 
ஆனால், ‘ரயில் எரிக்கப்படவில்லை; அது ஒரு விபத்து’ என்று அப்போதைய ரயிலவே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பிரசாரம் செய்தார். இதன் உச்சகட்டமாக, கரசேவகர்களே தாங்கள்  கொண்டுவந்த எரிபொருளால் தங்களை எரித்துக் கொண்டார்கள் என்றும் கூட மதச்சார்பின்மையைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் முழங்கினார்கள். இத்தகைய விஷமப் பிரசாரம், மேலும் மத விரோதத்தையே வளர்த்தது.
 
தனது பொய்பிரசாரத்தை நிலைநாட்ட யு.சி.பானர்ஜி தலைமயில் ஒரு விசாரணை கமிஷனை லாலு நியமித்தார். அவரது மனமறிந்த பானர்ஜி, அதற்கு பழுதில்லாமல், ”கோத்ராவில் ரயில் யாராலும் எரிக்கபப்டவில்லை; அது ஒரு விபத்து” என்று அறிவித்தார். அதை வைத்துக்கொண்டு ஹிந்துவிரோத சக்திகள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் கணக்கில் அடங்காதவை.
 
ஆனால், குஜராத் அரசு எந்த நெருக்கடிக்கும் பணியாமல், ரயில் எரிப்பு சதிகாரகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியது. மௌலவி உமர்ஜி தலைமையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட  சதி இது என்று காவல்துறை கண்டறிந்தது. சிறப்பு புலனாய்வுக் குழு, 94  பேர் மீது குற்றம் சாட்டி  வழக்கு தொடுத்தது. ஆனால், பெரும்பாலான ஊடகங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் போய்ப் பிரசாரத்தையே தாங்களும் தொடர்ந்தன. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மதச்சார்பின்மை வாதிகளின் முகமூடிகளைக் கிழித்துள்ளது. ‘’சபர்மதி ரயிலின் பெட்டி எஸ்-6 எரிந்து அதில் இருந்த 59 கரசேவகர்கள் இறந்த சம்பவம் விபத்து அல்ல, திட்டமிட்ட சதி’’ என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
 
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய 33  பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறியது அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம். இவர்களில் 11 பேருக்குத் தூக்கு தண்டனையும்  20  பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது (மார்ச் 1). ஆயினும், உமர்ஜி உள்ளிட்ட 61 பேர் மீது போதுமான சாட்சியங்கள் இல்லை என்று கூறி விடுவித்தது. (இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது).
 
கோத்ரா ரயில் எரிக்கப்பட்டபோது  அதை விபத்தாகச் சித்தரித்த மத்திய அரசு இப்போது அமைதி காக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் லாலு எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. மொத்தத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சதிகாரர்களுக்குக் கிடைத்துள்ள தண்டனை, மத்திய அரசின் பாரபட்சமான போக்கின் மீதான சவுக்கடியாகவே விழுந்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள், தீர்ப்பின் முழு விபரமும் தெரிந்த பிறகு பதில் கூறுவதாக ஜகா வாங்குகிறார்கள். இந்த முன்யோசனை, ‘விபத்து பிரசார சதி’க்கு முன்னதாகவே தோன்றி இருந்தால் நாடு நன்றாக இருந்திருக்கும்.
 
கறுப்புப் பணச் சிக்கலில் தவிப்பு:
 
280111satishதாமஸ் வழக்கில் தீர்ப்பு வெளியான அதே நாளில் (மார்ச் 3), வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசின் செயலற்ற தன்மையை வன்மையாகக் கண்டித்தது உச்ச நீதி மன்றம். கறுப்புப் பண முதலை ஹசன் அலிகான் மீது அமலாக்கப் பிரிவு எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் குறை கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சுதர்ஷன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜார் அடங்கிய பெஞ்ச், ”கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களை விசாரிக்க மத்திய அரசுக்கு தடையாக இருப்பது எது?” என்று கேள்வி எழுப்பியது.
 
வெளிநாட்டு வங்கிகளில் கள்ளத்தனமாக முதலீடு செய்யப்பட்டுள்ள இந்திய பணத்தின் மதிப்பு 20 லட்சம் கோடிகள் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளின் வங்கிகளில், முறைகேடாக சொத்து சேர்த்த இந்திய அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் தங்கள் பணத்தை சேமித்திருப்பது பல ஆண்டுகளாகவே விவாதத்தில் உள்ள விஷயம்.

இதனால் நாட்டிற்கு பல விதங்களில் நஷ்டம்.

முதலாவதாக, நமது நாட்டின் பணம், முறையான வருமான வரி செலுத்தாமல் மறைமுகமாக வெளிநாட்டு வங்கியில் இருப்பு வைக்கப்பட்டு, முறைகேடான வழியில் (ஹவாலா) இந்திய தொழில் துறையில் புழங்குகிறது. இதனால் ஏற்படும் பணவீக்கம் சாமானியனின் நிம்மதியைக் குலைக்கிறது.

இரண்டாவதாக, முறைகேடுகளில் ஈடுபடும் அரசியல்வாதிகள் பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவையாகி, அவர்களிடம் பெறும் கையூட்டை வெளிநாடுகளில் சேமிப்பாக்குகிறார்கள். இதனால் இந்திய அரசு நிர்வாகத்தில் பொத்தல்கள் ஏற்படுகின்றன. நமது நிதி அமைப்பின் வீழ்ச்சிக்கு கறுப்புப் பணம் பெரும் காரணியாகிறது.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, ”பாஜக வென்றால் வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்போம்” என்று அறிவித்திருந்தார் அத்வானி. அதைக் கிண்டல் செய்தது காங்கிரஸ்;  ஆனால், ஆட்சிக்குக் காங்கிரஸ் வந்த பிறகு கறுப்புப் பண விவகாரத்தை கேலி செய்து தப்பிக்க முடியவில்லை.

ராம் ஜெத்மலானி உள்ளிட்ட பொதுநல விரும்பிகள் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வெளிநாட்டு வங்கிகளில் இருந்து கறுப்புப் பணத்தை மீட்பதாக உத்தரவாதம் அளிக்க வேண்டி வந்தது. ஆனால், அதற்கான எந்த  நடவடிக்கையிலும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு இறங்கவே இல்லை. திருடர்களே எங்கேனும் தாங்கள் மறைத்து வைத்துள்ள பொருள்களைக் கண்டறிய உதவுவார்களா என்ன?

பொதுநல வழக்கு கடந்த ஜன. 19ல் விசாரணைக்கு வந்தபோது,  தனது செயலற்ற தன்மைக்கு பல்வேறு சால்ஜாப்புகளைக் கூறினார் மத்திய அரசு வழக்கறிஞர். கறுப்புப் பண விவகாரத்தில் பல வெளிநாடுகளின் சட்டங்கள் இடையூறாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்காகப் பல நாடுகளுடனும் வங்கிகளுடனும் ஒப்பந்தம் செய்ய வேண்டி இருப்பதாக அவர் கூறியதை நீதிபதிகள் ஏற்கவில்லை.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”நமது நாட்டின் பணம் களவாடப்பட்டிருப்பது தெளிவாகவும் வெட்ட வெளிச்சமாகவும் தெரிகிறது. எந்த ஒப்பந்தம் மீதும் நீதிமன்றத்திற்கு அக்கறையில்லை. இதன் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” என்று கறாராகவே கேட்டனர்.
 
அதற்குப் பதிலளித்த மத்திய சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், ”வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் குவித்துள்ள சிலர் குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால் அதை வெளியிட முடியாது. அவ்வாறு செய்வது வெளிநாடுகளுடன் செய்துள்ள ஒப்பந்தத்தை மீறுவதாகும். அந்த விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு தயாராக இருக்கிறது” என்றார். அதன்படி 18  பேர் கொண்ட கறுப்புப் பண முதலைகளின் பட்டியல் ஜன. 22ல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 
congress_hasan_ali_hawalaஅதே சமயத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியோ, ”கறுப்புப் பண முதலைகளின் பட்டியலை வெளியிட முடியாது. ஆனால், பொதுமன்னிப்பு உள்ளிட்ட 5  அம்சத் திட்டங்களின் அடிப்படையில் இவ்விவகாரம் கையாளப்படும்” என்று அறிவித்தார் (ஜன. 27). அவரை அடியொற்றி, குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ”கறுப்புப் பண விவகாரம் 4, 5 ஆண்டு பிரச்னையல்ல. ஆண்டாண்டு காலமாகத் தொடர்வது. உடனடியாக இதற்கு தீர்வு காண முடியாது” என்று உபதேசித்தார் (பிப். 23).

இந்நிலையில் தான்,  தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையின் இறுதியில், ”பட்டியலில் குறிப்பிடப்பட்ட புனா தொழிலதிபர் ஹசன் அலிகான் மீது இதுவரை அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுக்காதது ஏன்? அரசு நடந்துகொள்வது சரியில்லை. இதே நிலை தொடர்ந்தால், நாங்களே சிறப்பு அதிகாரியை  நியமித்து விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டிவரும்” என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

ஹசன் அலிகான் வழக்கை விசாரித்துவந்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மூவர் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்த நீதிபதிகள், ”மார்ச் 8க்குள் முறையான அறிக்கையை அரசு அளிக்க வேண்டும்”  என்று உத்தரவிட்டனர். லீச்டென்ஸ்டீன் நாட்டிலுள்ள எல்.ஜி.டி. வங்கியில் கறுப்புப் பணம் வைத்துள்ள 18 பேரின் பட்டியல் மட்டுமே இப்போது நீதிமன்றத்திடம் உள்ளது. இதற்கே அரசை வறுத்தெடுக்கும் நீதிபதிகள், தற்போதைய மத்திய அரசின் சூத்திரதாரிகளே கருப்புப் பண முதலைகளாக இருப்பது தெரிய வந்தால் என்ன செய்வார்களோ? 

குவாத்ரோச்சி வழக்கில் ஆசுவாசம்:
 
congress_cbi_bofors_quattrocchiஇவ்வாறு தொடர்ந்து பல வழக்குகளில் மத்திய அரசின் முகத்தில் கரி பூசும் நீதிபதிகளிடையே, புதுதில்லி தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றம் ஆசுவாசமாக ‘சுண்ணப் பூச்சு’ பூசி இருக்கிறது. குவாத்ரோச்சி மீதான வழக்குகளைக் கைவிடுவதான மத்திய  புலனாய்வுத் துறையின் (சிபிஐ) முறையீட்டு மனுவை ஏற்ற நீதிபதி வினோத் யாதவ், ”19  ஆண்டுகளாக ரூ. 250  கோடி செலவிட்டு குவாத்ரோச்சியை இந்தியா கொண்டுவர முடியாதது கவலை அளிக்கிறது. எனவே சிபிஐயின் கோரிக்கை ஏற்கப்படுகிறது” என்று அறிவித்தார் (மார்ச் 4).
 
1987ல் வெளியான போபர்ஸ் ஊழலில் முக்கிய குற்றவாளி இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒட்டாவியா குவாத்ரோச்சி. பீரங்கி பேரத்தில் ரூ. 64  கோடி கமிஷன் பெற்றார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு. ஆனால், ராஜீவ் காந்தி, சோனியா உடனான தொடர்புகளால், அவர் தொடர்ந்து தப்பிவந்தார்.

cbi_congressகுவாத்ரோச்சி இந்தியாவிலிருந்து தப்ப உதவியது நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு (1991). குவத்ரோச்சியின் சுவிஸ் வங்கிக் கணக்கு முடக்கத்தை ரத்து செய்யப் பரிந்துரை செய்தது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு (2005). சிபிஐக்குத் தெரியாமல் அவ்வாறு கடிதம் எழுதியவர் தற்போது எடியூரப்பாவுக்கு நேர்மையை உபதேசித்துக் கொண்டிருக்கும் ஆளுநர் (அப்போதைய சட்ட அமைச்சர்) ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ்.
 
2007, பிப். 6ல் இன்டர்போல் அமைப்பால் அர்ஜண்டீனா நாட்டில்  கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட குவாத்ரோச்சியை இந்தியா அழைத்துவர முழு மனதுடன் சிபிஐ செயல்படவில்லை. தகுந்த ஆதாரங்களை வழங்காமல் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு நடத்திய காரணத்தால், குவாத்ரோச்சியை இந்தியா அனுப்ப முகாந்திரம் ஏதுமில்லை என்ற நீதிமன்றம், வழக்குத் தண்டமாக பல லட்சம் டாலர்கள் செலுத்துமாறு இந்திய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிட்டது. இதற்குக் காரணம் சிபிஐயை வழி நடத்திய அரசியல் எஜமானர்களின் தவறான நோக்கமே என்பது வெளிப்படை.
 
இவ்வாறு, குவாத்ரோச்சியை கைது செய்வதில் காட்டிய அக்கறையை விட அவர் தப்புவதில்தான் சிபிஐ அதிக அக்கறை காட்டி இருக்கிறது. இறுதியில், குவாத்ரோச்சி மீதான வழக்கை மேலும் தொடர்வது பொருளற்றது என்று அறிவித்தது சிபிஐ. அதனை சட்டப்பூர்வமாகச்  செய்ய தில்லி நீதிமன்றத்தில் தனது மனுவை சிபிஐ சமர்ப்பித்தது. அதில்தான் மேற்கண்ட தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
 
அண்மையில் தான் (31.12.2010),  போபர்ஸ் வழக்கில் மற்றொரு குற்றவாளியான வின்சட்டா மீதான வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய வழக்கில், ”போபர்ஸ் பேரத்தில் ரூ. 41  கோடி கமிஷன் கைமாறியது உறுதி என்பதால் அதற்கான வருமான வரியை செலுத்துவது கட்டாயம்” என்று நீதிபதிகள் ஆர்.சி.சர்மா, ஆர்.பி.துலானி ஆகியோர் அறிவித்தனர். வின்சட்டாவின் கூட்டாளியான குவாத்ரோச்சி வெளிநாட்டு பிரஜை என்பதால் இதில் தப்பிவிட்டார்.

congress_cbi_bofors_quattrocchiமொத்தத்தில் குவாத்ரோச்சி இப்போது விடுவிக்கப்பட்டிருப்பது அவர் நிரபராதி என்பதால் அல்ல. சிபிஐயால் குவாத்ரோச்சியைப் பிடிக்க முடியாததால் தான். இது ஒருவகையில் இந்திய அரசுக்கு அவமானம். ஆனால், இத்தீர்ப்பால் காங்கிரஸ் ஆசுவாசப் பெருமூச்சு விடுகிறது.
 
குற்றவாளியைத் தப்பவிட்டுவிட்டு, அவரைப் பிடிக்க முடியவில்லை என்று காரணம் கூறி அவர் மீதான வழக்கை வாபஸ் பெறுவது, இப்போதைக்கு மத்திய அரசின் முகத்தில் சுண்ணப் பூச்சாகத் தெரியலாம். முகம் முழுவதும் கரி அப்பிக் கிடக்கும் மத்திய அரசுக்கு இந்த சுண்ணப் பூச்சு விகாரமாகவே தோற்றம் அளிக்கிறது. குவாத்ரோச்சி மீதான வழக்கு கைவிடப்படுவதனை எதிர்த்து செய்யப்படும் மேல்முறையீடுகளின்போது, இந்த விகாரம் மேலும் பரவும். அதற்கு காங்கிரஸ் இப்போதே தயார் ஆவது நல்லது.

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

 

7 மறுமொழிகள் மூன்று கரிப் பூச்சுக்களும் ஒரு சுண்ணப் பூச்சும்

  1. Indli.com on March 21, 2011 at 10:13 am

    அரசியல்: மூன்று கரிப்பூச்சுக்களும் ஒரு சுண்ணப் பூச்சும்…

    சுதந்திர இந்தியாவில் பிரதமர் செய்த ஒரு நியமனத்தை முதல்முதலாக ரத்து செய்து உத்தரவிட்டிருக்க…

  2. chandramoulee on March 21, 2011 at 11:36 am

    ஐந்து பேரைக்கொண்ட பெஞ்ச்தான் என் நியமனத்தை ரத்து செய்ய முடியும், மூன்று பேரைக்கொண்ட பெஞ்ச்சால் அது முடியாது என்று கோரி தாமஸ் மனு செய்யபோவதாக ஒரு வதந்தி நிலவிவருகிறது. போகபோகத்தான் தெரியும்.

  3. Thanjai Ve.Gopalan on March 21, 2011 at 3:14 pm

    நம் தேசத்தின் தலைவிதி மன்மோகன் சிங் நமக்குப் பிரதமராக வந்து சேர்ந்திருக்கிறார். ஊழல் ஆசாமி என்று தெரிந்திருந்தும், சோனியாவோ அல்லது வேறு யாரோ செய்த சிபாரிசின் பேரில், நடந்திருக்கிற ஊழலைஎல்லாம் மூடி மறைக்கவேன்று நியமிக்கப்பட்டவராம் இந்த தாமஸ். வாடிகன் சிபாரிசும் உண்டு என்றுகூட எங்கோ படித்தேன். பிடித்து வைத்தால் பிள்ளையார் வழித்து எறிந்தால் சாணி என்பார்கள். உரிய முறையில் நியமிக்கப்பட்ட இவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், மத்திய அரசு இவர் இனி ஊழல் கண்காணிப்பு அதிகாரியாகத் தொடர முடியாது என்று நீக்கிய பிறகும், விடுவேனா இந்த அறிய வாய்ப்பை என்று கெட்டியாக நாற்காலியைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறாரே, ஐவரும் ஒரு மனிதரா? நாட்டில் ஊழலுக்கா பஞ்சம்? குவட்டரோசி மூலம் நடந்த போபார்ஸ் ஊழல், ஆண்டிமுத்து ராசா மூலம் நடந்த பிரம்மாண்ட ஸ்பெக்ட்ரம் ஊழல், மும்பை ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் என்று ஊழல் சாம்ராஜ்யத்தின் ராஜா ராணிகள் எல்லாம் தினம் ஒரு பொய், பொழுதுக்கு ஒரு பித்தலாட்டம் என்று செய்வதோடு, நம்பிக்கை வாக்கெடுப்பில் மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்து கொட்டி இதோ பார் லஞ்சம் என்று சொன்ன பிறகும், இல்லவே இல்லை என்று மார்தட்டும் கேவலம் இங்கு தவிர வேறு எங்கு நடக்கும். தாமஸ் விஷயத்தில் பிரதமர் பொறுப்பேற்றுக் கொள்கிறாராம். என்ன வேடிக்கை. நான் ஒரு வீடு புகுந்து கொள்ளை அடித்துவிட்டு மாட்டிக் கொண்டு விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். என்னை கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்துகிறார்கள். நீதிபதியிடும் நான், மை லார்ட் நான் இந்த கொள்ளைக்குப் பொறுப்பு ஏற்கிறேன் என்று சொன்னால், சரி நீங்கள் வீட்டுக்குப் போகலாம், விடுதலை, என்பாரா? என்ன கொடுமை. இந்த அடிப்படை உண்மை கூட புரியாத ஒரு பிரதமரா நமக்கு. அவமானம்! அவமானம்!!

  4. Keerthi on March 21, 2011 at 5:34 pm

    // மறையவே மறையாத கோத்ரா கறை//

    இது வரை இப்படி ஒரு தலைப்பைப் பார்த்ததே இல்லை. மறையவே மறையாத குஜராத் கலவரக் கரை என்று தான் பரப்பி வருகிறார்கள்.

    கோத்ராவை முடிந்தவரை மூடி மறைக்கவே செய்கின்றனர்.

  5. vedamgopal on March 21, 2011 at 7:03 pm

    //Church people disappointed over quashing of appointment// (இதற்கு பெயர் தான் மதவெறி)

  6. vedamgopal on March 24, 2011 at 12:30 pm

    ஒன்றும் தெரியாத பிரதம மந்திரி !!!
    நான் எதுவும் செய்யவில்லை
    எனக்கு எதுவும் தெரியாது
    எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியாது
    என்க்கு எதுவும் தெரியாது எதையும் செய்வில்லை என்பதை நான் தெரிந்துகொள் விரும்பவில்லை
    எனக்கு எதுவும் தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்பதை தெரிந்துகொள்ள விரும்பவில்லை
    நான் எதுவும் செய்வில்லை தெரிந்துகொள் விருப்பமில்லை ஆனால் எல்லாவற்றையும் செய்ய விரும்புகிறேன்
    நான் எல்லவற்றையும் செய்ய நினைகிறேன் ஆனால் எதை செய்யகூடாது எதை சொல்லகூடாது என்பதை தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை
    இப்பொழுது சொல்லுங்கள் எனக்கு தெரியாது என்றோ நான் செய்வில்லை என்றோ யாரதவது கூறமுடியுமா ?

    ஐயா தலை சுற்றுகிறது – திரு.வி.சுந்திரம் கட்டுரையில் வந்த செய்தி – எனக்கு தெரிந்த தமிழாக்கம் இவ்வளவுதான்.

  7. lakshmi narayanan on March 25, 2011 at 10:02 pm

    மன்மொஹனிடம் ஒரு கேள்வி யார் பிரதமர் பதில் எனக்கு தெரியாது

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*