விருதுக் கொலை [சிறுகதை]

அமுதாவின் எங்கும் பதிவுசெய்யப்படாத எண்ணங்கள் 

129செல்வி நல்லா படிக்குற பொண்ணுதேன். நல்ல பொண்ணு. அவ இப்படி பண்ணுவான்னு நான் நெனக்கலை. நான் என்ன, இங்கிட்டு ஆருமே நெனச்சுருக்க மாட்டாய்ங்க. ஸ்கூலுலேயே அவதான் பஷ்ட் மார்க் வாங்குவா. எங்க நைனா கூட, அவளும் படிக்கா நீயும் படிக்க ஆனா அவ எப்படி நல்லா படிக்கா பாத்தியான்னு கேட்டு வைவாரு. அவரு வைதாப்பில எனக்கு கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கும். ஆனா செல்வியை பாத்தா வருத்தமெல்லாம் போயிரும். அவ எப்பவும் சிரிச்சு கிட்டே இருப்பா. தீபாவளி மத்தாப்பு போல சிரிச்சு கிட்டே இருப்பா. அதோட அவ கூட இருந்தாலே என்ன கவலைன்னாலும் எனக்கும் சிரிப்பு வந்துரும். ஆனா இனி அவள நெனக்கும் போதெல்லாம் அழுவைதான் வருற மாதிரி செஞ்சிட்டு போயிட்டா. அவளுக்கு காதல் இருந்துச்சான்னு அன்னைக்கு ஏதோ டிவிலயோ ஜூனியர் திலகமோ ஏதோ ஒரு பத்திரிகைல இருந்தோ வந்து கேட்டான். எனக்கு அவனை அப்படியே உதைக்கணும் போல இருந்துச்சி. அடக்கி கிட்டு அவ அப்படி பட்ட பிள்ளை இல்லைன்னேன்.

ஆனா ஒண்ணு இருக்கு. அவள நான் கடைசியா பாத்தப்ப அவ முகம் இருந்தது என் மனச விட்டு நீங்கவே நீங்காது. செல்வி ஏன் தூக்கில தொங்கினா… எல்லாம் அந்த ஒரு பொம்பளை வந்ததுலருந்துதான் ஆரம்பமாச்சு.

அன்னைக்கு ஸ்கூலுக்கு அந்த பொம்பள வந்திச்சு. பொம்பளன்னு சொல்ல முடியாது. பாக்க காலேஜ் படிக்கிற அக்கா மாதிரிதான் இருந்துச்சி. நல்லா சேப்பா இருந்துச்சி. சுடிதார் போட்டுகிட்டு அழகா ஸ்டைலா முடி வெட்டி பாக்கவே சினிமா ஷ்டார் மாதிரிதான் இருந்திச்சி. எங்க ஸ்கூல் முதல்வர் அம்மாகிட்ட ரூம்ல உக்காந்து ரொம்ப நேரம் பேசிட்டு இருந்திச்சி. எங்க முதல்வர் அம்மா ரொம்ப சிடுமூஞ்சி. எங்க வூட்ல இருந்தெல்லாம் எங்கம்மால்லாம் எதுக்கினாச்சிம் வந்தா உக்காரெல்லாம் சொல்ல மாட்டாங்க. கத்து கத்துன்னு கத்துவாங்க, ஆனா இந்த பொம்பளை கிட்ட நல்லா பேசினாங்க. பியூன் மாணிக்கம் அண்ணங்கிட்ட சொல்லி டீ பிஸ்கட்டெல்லாம்கூட கொண்டாந்து கொடுக்க சொன்னாங்க. அப்புறந்தேன் செல்வியை கூப்பிட்டார சொன்னாங்க.

அந்த பொம்பிளை செல்வி கிட்ட நல்லா பேசிகிட்டிருந்திச்சு. நாங்கெல்லாம் ஜென்னல் வழியா பாத்துட்டிருந்தோம். அப்றம் அந்த பொம்பிளையோட பேரை நான் செல்வி கிட்ட கேட்டேன். ரொம்ப வித்தியாசமான பேரா இருந்துச்சி. ரீனா மணிமேகலையோ குண்டல்கேசியோ தமிழ்ல படிப்போமே அந்த மாதிரி ஒரு பேர்ல.. அப்படீன்னு ஏதோ ஒண்ணு. நம்ம சமுதாயத்தில ரொம்ப புத்திசாலியான பொண்ணு வேணும்னு அவுங்க தேடுறாங்களாம். அவுங்க அமெரிக்காவில உள்ள சமூக சேவை ஒண்ணு கிட்ட சொல்லி இப்படி எங்கள மாதிரி தாழ்ந்த மக்களுக்க நல்லா படிக்கிறவங்களுக்கு அமெரிக்காவுக்கே போய் படிக்க உதவுவாங்களாம். செல்விய கூட்டிகிட்டு போறதுக்கு முன்னாடி அவளப் பத்தியும் அவ குடும்பத்த பத்தியும் நல்லா தெரிஞ்சிக்க போறாங்களாம். இத கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சி. கூடவே கொஞ்ச பொறாமையா கூட இருந்துச்சி. நான் பொறாம பட்டதாலதான் இப்படி ஆயிருச்சோ தெரியலை. ஆனா நான் பொறாம பட்டதுல என்ன அர்த்தம் இருக்கு? எங்க ஸ்கூலேயே இங்கிலீஸு புக்கெல்லாம் படிக்கிற அளவுக்கு மூளை அவகிட்ட மட்டும்தானே இருந்துச்சி.

256அப்புறம் அடிக்கடி அந்தம்மா– இல்லை அக்கான்னு சொல்லணுமா தெரியலை- செல்வி வூட்டுக்கு போவும். அவ கிட்ட பேசும். கூடவே ஒரு அண்ணன்- நிக்கர் போட்டுகிட்டு பனியன் போட்டுகிட்டு- அவுங்க கூடவே போகும். அந்த அண்ணன் கைல ஒரு காமிரா வைச்சுகிட்டு எல்லாத்தையும் போட்டோ பிடிச்சுகிட்டே இருக்கும். அது போட்டோ இல்லை வீடியோன்னு செல்வி சொல்லிச்சு. செல்வி சடங்கான மஞ்சத்தண்ணி விழா வீடியோல்லாம் கூட அந்தம்மா வாங்கிட்டு போச்சி, செல்வியோட அம்மாண்டை ரொம்ப நேரம் பேசிச்சி. செல்விக்கு சின்னவயசில ஜூரம் வந்திருச்சி அவ இப்படி செஞ்சிக்கிறதுக்கு முன்னாடி யாரோ ஒரு அம்மா இங்க வந்திச்சி. போலீஸ்காட அம்மா. அந்தம்மா எங்க சமுதாயம்தானாம். படிச்சி ஐ.பி.எஸ் ஆயிட்டாங்களாம். அவிங்க கிட்ட எல்லா போலீஸ்காரங்களும் சல்யூட் அடிக்கிறத பாத்தப்ப சந்தோசமா இருந்துச்சி. அந்தம்மா ஸ்கூலுக்கெல்லாம் வரலை. நேரா செல்வி வீட்டுக்கு வந்துச்சி. ஜீப்பை எங்காளுங்க காலனிக்கு வெளியையே நிறுத்திட்டு அவுங்க மட்டும் வந்தாய்ங்க. வந்து செல்வி வீட்டுக்குள்ளயே போயி அவகிட்ட என்னவோ பேசிகிட்டு அவ கிட்ட ஒரு புக்கை கொடுத்தாங்க. அந்த அட்டையை மட்டும் நான் பாத்தேன். அதில செல்வி படம் இருந்திச்சு. அந்த அக்காதான் எழுதியிருந்தாங்களாம். இங்கிலீசு. செல்விக்குதான் புரியும். ஆனா செல்வி முகம் அந்த புக் அட்டைல ரொம்ப அழுவாச்சியாத்தான் இருந்திச்சு. அப்படி நிக்க சொல்லி அந்த போட்டோவ அந்த அக்கா அந்த அண்ணனை வைச்சி எடுத்தது எனக்கு நியாபவத்துல இருக்கு. செல்வி கூட அதை என்கிட்ட சொல்லிச்சி. ”சிரிக்காம நில்லு அழுவுற மாதிரி மூஞ்சி வைச்சிக்க. ரொம்ப வருத்தமா எதையாவது நெனச்சிக்க” அப்படீன்னு அந்த அக்கா சொல்லுது அமுதா. ஆனா அந்தக்கா சொல்லக்க சொல்லக்க எனக்கு சிரிப்பாணியா வருது”

அந்த போட்டோதான் அந்த புக் அட்டைல இருந்திச்சி. அத எடுத்திட்டு செல்வி வூட்டுக்குள்ள போனா. அப்பத்தான் அவ முகம் ரொம்ப இருண்டு இருந்திச்சு. அதுதான் நான் கடேசியா பாத்தது. அந்த புக்கிலதான் இவ தற்கொலை பண்ணிகிட்டதுக்கு காரணம் இருக்கி. ஆனா அதை நான் ஆருகிட்ட சொல்லமுடியும். எனக்கு இங்கிலீசு தெரியாது. அதனால நான் அப்படி சொன்னா எல்லாரும் சிரிப்பாய்ங்க. நான் ஆருகிட்ட என்ன சொல்லுவேன்?

-0-
 
பெண்ணிய ஆவண ஆராய்ச்சியாளர் ரீனா சிந்தாமணி எழுதியதும் புக்கர் பரிசு பெற்றதுமான ”வெல்லம் அம்மன் ஒரு பாலியல் சடங்கின் ஆவணம்” (Mappletown University Press, 2010) எனும் ஆங்கில நூலிலிருந்து. :

‘வெல்லம் அம்மன்’ என்கிற இந்த இந்துப் பெண் தெய்வம், எப்படி பொதுவாக இந்துக்களில் பெண்தெய்வம் கூட தலித் பெண்களை ஆண் சமுதாயம் சுரண்ட வழி வகுத்துக் கொடுக்கிறது என்பதை நன்றாகக் காட்டுகிறது. இந்தத் தலித் சமுதாயத்தில் சில குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக ஒரு பெண் குழந்தை, வெல்லம் அம்மனுக்கு நேர்ந்து விடப்படும் பழக்கம் உள்ளது. இப்படி நேர்ந்துவிடப்படும் பெண்களுக்கு ‘வெல்லம்மா’ எனப் பெயர் மாற்றப்படும். இப்பெண்கள் சமுதாயத்தின் பொதுச் சொத்தாக கருதப்படுவர். இந்த முறை புழக்கத்தில் இருப்பதைக் குறித்து மதுரை பகுதிகளில் இந்த தலித் சமுதாயத்தில் மத ஊழியம் செய்த சாமுவேல் சோரெட் குறிப்பிட்டுள்ளார். இதனைக் குறித்து விரிவாக இதுவரை எவரும் ஆராய்ச்சியோ ஆவணமோ செய்யவில்லை. இத்தகைய முறை எதுவும் இல்லை என்றும் அது காலனிய மதப் பிரசாரகர்களின் தவறான பிரசாரம் என்றும் இந்தத் தலித் சமுதாய அமைப்புகளின் ஆண் தலைவர்கள் கூறுகிறார்கள். இந்து சமுதாய அமைப்பில் பெண்களுக்குத்தான் எவ்வித தனித்துவக் குரலும் இல்லை என்பதால் ஆண்கள் கூறியதைப் போலவே பெண்களும் சொல்கிறார்கள். இத்தகைய வெல்லம் அம்மன் ஆக்கப்படும் பெண்கள் ஆண்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதாலும் பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாலும் இந்தச் சமுதாய மக்கள் தங்களைக் குறித்துக் கூறும் கருத்துகளை ஓர் ஆராய்ச்சியாளர் அப்படியே உண்மையென்று எடுத்துக்கொள்ள முடியாது. எனவே நான் இந்தச் சமுதாயத்தில் வெல்லம் அம்மனாக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பது என முடிவு செய்தேன்….

செல்வி எனும் பெயரில் வெல்லம் அம்மன் பெண் ஒருத்தி மேல்நிலைப்பள்ளியில் படிப்பதை மிகவும் சிரமப்பட்டுக் கண்டுபிடித்தேன். அவளிடம் நட்பை வளர்த்துக் கொண்டேன். அந்தப் பெண் தன்னை கோயிலில் ஆடையின்றி விடப்பட்டது குறித்தும் பூசாரி தனக்கு தாலி கட்டியது குறித்தும் என்னிடம் கூறும்போது அழுதுவிட்டார். அந்தப் பெண்ணைச் சுற்றி கவலை ஒரு சிறு கருமேகம் போல் வட்டமிட்டுக் கொண்டிருப்பதை மற்றொரு பெண்ணால்தான் உணரமுடியும். அதிலிருந்து தப்பவே, தான் அதிக உற்சாகமாக இருப்பது போல அவள் காண்பித்துக் கொண்டாள். அவளது தாயாரிடம் (மாதங்கி வயது 48) நான் பேசிய போது அவர் இப்போதெல்லாம் கோயிலில் விட்ட பெண்களையும் படிக்க வைக்க வேண்டும் என்றும் என்ன படித்தாலும் மீண்டும் கோயிலில் விட்டுவிடுவோம் என்றும் அது அந்த தலித் சாதி (மேல்சாதியினருக்கும், தெய்வத்துக்கும், தன் சாதி ஆண்களுக்கும்) காட்டும் நன்றி என்றும் கூறினார். இது குறித்து காணப்பட்ட பேட்டியின் முக்கியமான பகுதிகள் பின் சேர்க்கையில் அளிக்கப்பட்டுள்ளன. (பக். 78-79)

 

பரமேசுவரி ஐபிஎஸ் சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து:

[செல்வி தற்கொலை தொடர்பாக பரமேசுவரி ஐபிஎஸ் காவல்துறை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். தனது இடமாற்றத்துக்குப் பின்னர் ’புதிய தாவாங்கி’ எனும் தலித் பத்திரிகையில் இது வெளியானது. பின்னர் இந்தக் குறிப்பிட்ட தலித் சமுதாய அமைப்பான விடுதலை முன்னணியின் தலைவர் கருணாளன் இந்த முழு அறிக்கையை ஒரு சிறு பிரசுரமாக வெளியிட்டார். அந்த அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவை:]

இந்த நூலில் வந்திருக்கும் பல தரவுகள் திரிக்கப்பட்டவை. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பண்பாட்டு அம்சத்தை கீழ்மையாகச் சித்தரித்து, தன்னை சர்வதேச அரங்கில் ஒரு சமூகப்போராளியாக முன்னிறுத்தி, புகழும் இன்னபிற ஆதாயங்களும் பெறவேண்டும் என்னும் ஒரே எண்ணத்துடன் உருவாக்கப்பட்டவை. இதற்குச் சிறந்த உதாரணமாக கீழ் கண்ட பேட்டியைச் சொல்லலாம். இந்த பேட்டி செல்வியின் அம்மாவிடம் எடுக்கப்பட்டது. இதன் மூலவடிவம் இந்த நூலின் முதல் வடிவை மொழிச் சீர்மை (language editing) செய்ய கொடுத்த நிறுவனத்தாரிடம் (Your First Draft to Best seller- Editors Pvt. Inc. Chennai) இருந்து கிடைத்த ஆவணங்களிலிருந்து பெறப்பட்டது.

“என் பொண்ணுக்கு ஏழு வயசு இருக்கும் போது மாறாத இருமல் வந்திருச்சு. அதுக்கு முன்னாடி இரண்டு பொண்ணுங்க தங்கலைங்க. அப்ப எங்க குல வழக்கப்படி இந்த பொண்ணாவது தங்கணும்னு வெல்லம் அம்மன் கிட்ட எடுத்துகிட்டு போய் பூசாரிகிட்ட கொடுத்து தாயத்து கட்டி, உடுத்திருந்த பாவாடையை அவுத்துட்டு, வேப்பிலை பாவாடை கட்டி ஒரு வாரம் கோயிலிலேயே விட்டுட்டோங்க. ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு போயி அங்கனயே படுத்து அவளுக்கு ஒவ்வொருநாளும் மஞ்ச தண்ணி ஊத்தி வேப்பிலை பாவாடை புதுசா கட்டி கற்பூரம் புகை காட்டி வைச்சிருந்தேனுங்க. அப்புறம்தான் அவ நல்லானா. இன்னைக்கும் அவளுக்கு மூளை அதிகம்னு எல்லாரும் சொல்லுதாங்க. அவ டீச்சர் கூட ‘செல்வி வளந்து படிச்சி டாக்டராவணும் கலக்டராவோணும்’ அப்படீன்னு சொல்லுறாங்களாம். இங்கிலீசு புக்கெல்லாம் கூட அது படிக்குதுங்க. எல்லாம் தேவி கொடுத்த வரங்க. அவ நல்லா வந்தா, படிச்சு டாக்டர் கலெக்டர் ஆனா என்னங்க,. என்ன ஆனாலும் திரும்ப அவ சன்னிதிக்கு போய் பொங்கல் எடுப்பமுங்க. நன்றி மறக்ககூடாதில்லீங்களா… நம்ம சாதிலயே நன்றி மறக்கிறது கொஞ்சம் கூட கிடையாதுங்க.”

 

ஆனால் இந்தப் பேட்டி நூலில் இப்படித் திரிக்கப்பட்டுள்ளது:

“என் பொண்ணுக்கு ஏழு வயசு இருக்கும் போது… எங்க குல வழக்கப்படி… வெல்லம் அம்மன் கிட்ட எடுத்துகிட்டு போய் பூசாரிகிட்ட கொடுத்து தாலி கட்டி, உடுத்திருந்த பாவாடையை அவுத்துட்டு… ஒரு வாரம் கோயிலிலேயே விட்டுட்டோங்க… இன்னைக்கும் அவளுக்கு வளர்ச்சி அதிகம்னு எல்லாரும் சொல்லுதாங்க… அவ நல்லா… படிச்சு என்ன… என்ன ஆனாலும் திரும்ப அவ சன்னிதிக்கு போய் விடணுங்க… நன்றி மறக்ககூடாதில்லீங்களா… நம்ம சாதிலயே நன்றி மறக்கிறது கொஞ்சம் கூட கிடையாதுங்க.”

இதில் தடிமனாகக் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள் மட்டும் மாற்றப்பட்டு பல வாக்கியங்கள் நீக்கப்பட்டு அந்தப் பெண் கோயில் விபசாரத்துக்கு அப்பெண்ணின் தாயாராலேயே தள்ளிவிடப்பட்டது போல அருவெறுக்கத்தக்க வகையில் ஒரு பிம்பம் எழுப்பப்பட்டுள்ளது. இந்தச் செல்வி எனும் பெண்ணுக்கு நன்றாக ஆங்கிலம் தெரியும். அவள் ஒரு மேதை என்று எண்ணவே இடமிருக்கிறது. அதனால் அவள் இந்த நூலைப் படித்து அதில் அவள் நம்பிய ஒருவர் அவளை இப்படி மோசமாக சித்தரித்ததைத் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். எனவே ரீனா சிந்தாமணியை, பொய் ஆவணங்கள் உருவாக்கியது, தலித் சமுதாயத்தை மோசமாகச் சித்தரித்தது, எல்லாவற்றுக்கும் மேல் ஒரு பெண் குழந்தையை மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு ஆளாக்கியது ஆகியவற்றுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அறிக்கை கோருகிறது.

 

விடுதலை முன்னணி கருணாளன் வெளியிட்ட ‘வெல்லம் அம்மன் விபசாரத் தெய்வமா?” எனும் பிரசுரத்திலிருந்து:

ஒரு காலத்தில் இந்தப் பழக்கம் ஏதோ சில இடங்களில் மோசமாகத் திரிந்து விபசாரமாக அல்லது பாலியல் சுரண்டலாக ஆனது என்னவோ உண்மைதான். ஆனால் பெரும்பாலும் எங்கள் சமுதாயத்தில் இது தொல் தமிழர்கள் மரபெச்சங்களாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. வெல்லம் அம்மனின் மிகப் பழமையான வடிவத்தை வேட்டுவப் பெண் வெறி கொண்டு ஆடும் பழங்குடி சடங்குகளில் காணமுடியும். வெல்லம் அம்மன் கோயிலில் குழந்தைகளுக்குக் காப்புக்கட்டும் சடங்கும் பழந்தமிழர் சடங்குகளில் ஒன்றே. ஆனால் ரீனா சிந்தாமணி இந்த நீண்ட மரபுத்தொடர்ச்சியை மறைத்துவிட்டு காலனிய மானுடவியல் நோக்கில் இதனை ஆராய்ச்சி செய்கிறார். அதற்கு உள்நோக்கம் உண்டு என்பதை நம் சமுதாய மக்களும் பொதுவாக தமிழக மக்களும் உணர வேண்டும். நாளைக்கு இதே நிலை உங்கள் தெய்வங்களுக்கும் வரலாம் என்பதை தலித் அல்லாத தமிழ் மக்கள் உணர வேண்டும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு முடி எடுப்பதையும் காது குத்துவதையும் கூட சர்வதேச அரங்குகளில் நீங்கள் உங்கள் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வதாக எவரேனும் ஆவணப்படுத்தக்கூடும்.

சிறிது சிந்தியுங்கள். வெல்லம்மா என பெயரிட்டால் அந்தப் பெண் சமுதாய ஆண்களின் பொது சொத்தாம். அப்படியானால் வெல்லப்பன் என்று எங்கள் சமுதாயத்தில் எத்தனையோ ஆண்கள் பெயரிடப்பட்டுள்ளனர். அவர்களெல்லாம் பொதுசொத்தா?

 

வெளிவராத ஒரு டெலிபோன் உரையாடலின் ஒரு பகுதி: [ஆண் குரல் மட்டும்]

[இரவு 8:15] ஓ சொல்லுங்க ரீனா எப்படி இருக்கீங்க… என்ன விஷயம் விஷயம் இல்லாம போன் பண்ண மாட்டீங்களே…
[8:18] ஓ கங்கிராஜுலேஷன்ஸ்
[8:19] என்ன என்ன பிரச்சனை
[8:30] ஓ..
[8:35] சரி அந்த ஜனங்க வாயை அடைக்கிறது பிரச்சனை இல்லை. கொஞ்சம் செலவாகும். என்ன ஒரு அஞ்சு லட்சம்.
[8:42] ஓ அதுதான் கொஞ்சம் கஷ்டம்
[8:50] ஸீ ஒண்ணு பண்ணலாம். மைனாரிட்டி அமைப்புகள் மூலமா பிரஷர் கொடுத்து பரமேஸ்வரி ஐபிஎஸ்ஸை இடமாற்றம் செய்றது பிரச்சனை இல்லை. மினிஸ்டர் சைன் பண்ணணும்.
[8:53] ஆமா உங்களுக்கு தெரிஞ்சவர்தான். உங்களையும் தெரிஞ்சவர்தான்… ஹி ஹி
[8:55] கரெக்ட்! ஜொள்ளு பார்ட்டிதான். அதுனால இது உங்க கைலதான் இருக்கு…
[9:00] யோசியுங்க. உங்களுக்கு இது கரீயர் பிரச்சனை.
[9:05] குட் அப்ப நான் மினிஸ்டர் கிட்ட சொல்லிடறேன். கவலைப்படாதீங்க காதும் காதும் வைச்ச மாதிரி முடிச்சிடலாம்.
[9:12] ஓ அந்த ஆளா? அது கவலைப்படாதீங்க. தேசியப் பாதுகாப்புச் சட்டம் எதுக்கு இருக்கு? நம்மையெல்லாம் பாதுகாக்கத்தானே.. உள்ள தள்ளிடுவோம். ஒரு ஆறுமாசம் ஆள் இருக்கிற இடமே தெரியாம செஞ்சிடலாம்.

 

rewards-and-clapsவெள்ளைத் தோலும் தடித்த உடலும் கொண்ட சீமான்கள் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்துகொண்டு இந்தியக் குழந்தைகளுக்காகவும் அவர்களை விபசாரிகளாக்கும் கலாசாரத்துக்கு எதிராகவும் அறச்சீற்றம் கொண்டார்கள். கொழுத்த காசோலைகள் சலசலத்தன.  பெண் ஐபிஎஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் சமர்ப்பித்த அறிக்கை ஓர் இதழில் வந்தபோது தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.  பிரசுரம் வெளியிட்ட தலித் தலைவர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

வெல்லம் அம்மன் விபசாரத்தின் சின்னமானாள்.

மனித  உரிமைத் தொழில் செய்து பிழைக்கும் பெண்ணியப் போராளி ரீனா சிந்தாமணி சர்வதேச அரங்குகளில் போற்றப்பட்டார்.

பூவாக மலர்ந்திருந்த செல்வி, தன்னைத் துண்டுக் கயிற்றில் சுருக்கி அழித்துக் கொண்டாள். 
என்றேனும்  அவள் எழுந்து வரலாம் செல்லியம்மனாக. 

 

[இங்கு கூறப்பட்டவை அனைத்தும் பெரும்பாலும் கற்பனைகளாக இருக்கவே வாய்ப்பிருக்கின்றன.]

16 Replies to “விருதுக் கொலை [சிறுகதை]”

  1. Pingback: Indli.com
  2. இது நடந்தபோதே லேசாக கேள்விப்பட்டேன் , இவ்வளவு விரிவாக இப்போதுதான் தெரிந்துகொண்டேன் , நன்றி .

    புரட்சியாளர்களை புரிந்துகொள்வோம்.

  3. நாமக்கல் அருகே குடிகொண்டிருக்கும் எங்கள் குலசாமி கோயிலுக்கு சென்றிருந்தோம். சில பக்தர் கூடத்தின் நடுவே SUN டிவி யினர் பேட்டி கண்டனர். பக்தர்களும் ஆர்வமிகுதியுடன் கோயிலின் சிறப்புகளை எடுத்துரைத்தனர். சில வாரங்களுக்குப் பிறகு, சன் நியூஸ் நிஜம் நிகழ்ச்சியில் எங்கள் கோவில் நிகழ்வு(episode) ஒளிபரப்பானது. மிகுந்த ஆர்வத்துடன் நான் உடனே உறவினர்களிடம் தொலைபேசியில் தெரிவித்துவிட்டு நிகழ்ச்சியை பார்க்கலானேன். எங்கள் புனிதமான மலையை, ஏதோ காட்டுப்பகுதி போலவும் பக்தர்களை காட்டுவாசிகள் போலவும் சித்தரித்து இருந்தது கண்டு அதிர்ச்சியுற்றேன். இறுதியாக, “இது போன்ற மூடப் பழக்க வழக்கங்கள் தேவையா” என்ற கேள்வி அந்த நிகழ்ச்சியில் எழுப்பப்பட்டது, என்னை வேதனைக்கு உள்ளாக்கியது. பக்தர்கள் கூறிய ஒரு நல்ல சமாச்சாரம் கூட ஒளிபரப்பப் படவில்லை. இது போல் எத்தனையோ கோவில்கள் அந்த நிகழ்ச்சியில் கேலி செய்யப்ப் பட்டுள்ளன. அது வரை, நான் அந்த வலியை உணர்ந்ததில்லை. அன்றிலிருந்து நான் அந்த தொடரை காண்பதை நிறுத்தி விட்டேன்.

  4. பிரதாப்

    அன்புள்ள எறும்பு ,

    உங்கள் குலதெய்வம் மட்டுமல்ல . இது போல பல மக்களின் நம்பிக்கைகளையும் அவமதித்து கேலிக்கூத்தாக்கும் சன் டி வி பலரின் சாபத்திற்கும் ஆளாகி உள்ளது. விரைவில் அவர்கள் அதன் பலனை அனுபவிப்பார்கள். பொய் பிரச்சாரங்களை செய்து வாழும் அவர்கள் விரைவில் கூலி பெறுவார்கள். இது சத்தியம்.

  5. நல்ல சிறுகதை…
    எழுத்தாளருக்குப் பாராட்டுகள்.
    நம் சமுதாயத்தில் உள்ள குறைகளை, சில தொல் பழக்கங்களைக் காரணமாக வைத்து சில ‘அறிவுஜீவிகள்’ வெளிநாடுகளில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கான கருவியா ஆக்கிக் கொண்டுள்ளனர்.
    நம் நாட்டிலிருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் ஒழித்தால் மட்டுமே நம் சமுதாயம் உருப்படும். மக்களை இழிவு படுத்துவதையும், அவர்களிடம் ஒரு சார்பு மனப்பாங்கை விதைப்பதையும் இவர்கள் செய்துவருகின்றனர்.
    வெளிப்பார்வைக்கு சேவை செய்வதைப் போல தோற்றங்காட்டும் இவர்கள், இவர்களுக்குப் பணம் தருபவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதைக் கடமையாகக் கொண்டுள்ளனர்.
    இத்தகையவர்கள் சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்தப்படவேண்டும்.

  6. Why blame only sun tv? What is vijay tv doing?

    Have U seen “kuttram, nadandadhu enna?” programme? The same things happen.

    It is dominated by christians who malign hindus even in programmes like “neeya naana”.

    Jaya TV is the only TV channel (atleast to some extent) which does not malign hindus.

  7. கந்தர்வன், இது உண்மையா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியாது. தேவையற்ற சட்ட பிரச்சனைகளை அது உருவாக்கலாம் என்பதால். இந்த கதை கற்பனையாக இருக்க வாய்ப்புள்ளது என சொல்வதிலிருந்து எதையும் ஊகிக்க உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. அதை தடுக்க யாருக்கும் சுதந்திரம் கிடையாது.

    ப்ரவாஹன், உங்களை நான் அறிவேன். இக்கதையில் கருணாளன் எனும் பெயரில் குறிப்பிடப்படும் நபரின் உண்மை அடையாளமும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தங்கள் பாராட்டுக்களுக்கு என் நன்றி.

    எறும்பு, உங்கள் உணர்ச்சிகளை ஆதங்கத்தை பகிர்ந்து கொள்கிறேன். தலித் சமுதாயத்தினரின் தெய்வங்களும் ஹிந்து தெய்வங்கள்தான் என்பதை ஹிந்துக்கள் உணர வேண்டும். தலித் தெய்வங்கள் தமிழ் திரைப்படங்களில் தாக்கப்படும் அளவுக்கு வேறெதுவும் தாக்கப்படுவதில்லை. எந்திரன் படத்தில் மாரியம்மன் கூழ் ஊற்றும் சடங்கு எப்படி காட்டப்படுகிறது எந்த விதமான கலாச்சார அடையாளத்துடன் என கவனியுங்கள். மேல் சாதி இந்துக்கள் கிராத மூர்த்தி என வழிபடும் தெய்வம் எங்கள் வேட்டுவசாதியின் தெய்வம் தான். பரம்பொருளாக நீங்கள் வழிபடும் கண்ணன் இடையன்தான். கிரிசக்ர ரதாரூடா என்று சமஸ்கிருதத்தில் நீங்கள் வழிபடும் லலிதா காட்டுப்பன்றிகளால் ரதத்தில் இழுக்கப்பட்டு வரும் தலித் சாமிதான். நீங்கள் என நான் சொல்வது உங்களை தனிப்பட்ட முறையில் அல்ல. நீங்களும் கூட தலித்தாகவோ பிற்படுத்தப்பட இந்துவாகவோ இருக்கக் கூடும். ஆனால் எங்கள் மக்களின் தெய்வங்களும் மதமாற்ற கும்பலால் அபகரிக்கப்படும் போது அவமானப்படுத்தப்படும் போது எங்களுக்காக போராட யார் இருக்கிறார்கள்? எங்கள் பண்பாடு காப்பாற்றப் படவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் பண்பாடும் அழிந்துவிடும். ஏனென்றால் நீங்களும் நாங்களும் தலித் இந்துக்களும் சாதி இந்துக்கள் என தங்களைச் சொல்லிக் கொள்பவர்களும் ஒரே ரத்தம் ஒரே இனம் ஒரே குடும்பம். இத்தனை நாட்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளாத பண்பாட்டு அரசியல் மத சமூக அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அதுவே இந்த நோய்களுக்கெல்லாம் ஒரே மருந்து. ஜெய் பீம்.

  8. ஆலந்தூர் மள்ளன்,

    உங்கள் கருத்து எனக்கு குழப்பமாக உள்ளது. இது என்ன காமடி? \\ தலித் சமுதாயத்தினரின் தெய்வங்களும் ஹிந்து தெய்வங்கள்தான் என்பதை ஹிந்துக்கள் உணர வேண்டும்.\\

    தெய்வத்தில் எப்பொழுது நீங்கள் தலித் தெய்வம் மற்றும் தலித் அல்லாதோர் தெய்வம் என்று பிரித்து பார்க்க கற்று கொண்ட்டீர்கள். உங்கள் கருத்தை பார்த்து சிரிப்பதா அல்லது அழுவாத என்று எனக்கு சுத்தமாக தெரியவில்லை. எனக்கு வயது 28 . இந்த மாதிரி ஒரு பாகுபாட்டை நான் கேட்டதும் இல்லை. பார்த்ததும் இல்லை. சில பாரம்பரிய கதைகள் காரணமாக, ஒரு சில கிராம தேவதைகள் கோயிலுக்கு, பிற கிராம தேவதயை குல தெய்வமாக வணங்குபவர்கள் செல்ல மாட்டார்கள். நான் வைசிய குலத்தை சேர்ந்தவன். கிறித்துவ குள்ள நரிகளால் உருவாக்கப்பட்ட சாதி பாகு பாட்டின் படி, எனது குலம் ‘UR / FC பட்டயலில் உள்ளது. கிறித்துவ பாதரியார் உருவாக்கிய திராவிட இன கோட்பாட்டின் படி, அந்தணர், சத்ரியர்கள் ஆரியர்கள், வைசிய, சூத்திரர்கள் திராவிடர்கள்.

    இதில் ஒரு நகை சுவை என்ன தெர்யுமா? சத்ரிய இனத்தை சேர்ந்த வன்னியர், கவுண்டர், நாடார்கள் OBC பட்டயலில் உள்ளனர். ஆனால் எனது குலத்தை UR / FC லிஸ்டில் வைத்து உள்ளனர்.

    இவர்கள் சாதி பட்டியல் உருவாக்கியதே கிறித்துவ மதத்தை பரப்பதான். தயவு செய்து இவர்கள் சூதை புரிந்து கொள்ளவும். இந்த பாரத மண்ணுக்கு சொந்தமான எந்த ஒரு தேவதை அவமான படுத்தினாலும் நாங்கள் பொறுத்து கொள்ள முடியாது.

    \\தலித் தெய்வங்கள் தமிழ் திரைப்படங்களில் தாக்கப்படும் அளவுக்கு வேறெதுவும் தாக்கப்படுவதில்லை\\

    என்ன செய்வது எல்லாம் நம் தலை எழுத்து. கவலை கொள்ள தேவை இல்லை. ராமர் வாழ்ந்த காலத்திலேயே அவரை குறை கூறிய மக்களும் உண்டு.

  9. தலித் தெய்வங்கள் என்று தனியாக உள்ளதா? ஆச்சரியமாக தான் உள்ளது
    எனக்கு தெரிந்து கிராம தேவதையான செல்லத்தா தமிழ் திரைப்படத்தில் தாக்க படுவது இந்துக்கள் எல்லோருக்குமான அவமானம் தான்.
    அந்த செல்லாத்தா கிராமத்தில் உள்ள எல்லா இனத்தவருக்கும் சொந்தமாக தான் எல்லா கிராமங்களிலும் நான் பார்த்திருக்கிறேன்.
    சாமியை சாதிக்குள் அடைத்து பிரிக்கும் கருத்துகளை ஏற்க முடியவில்லை.

    விவேக் எல்லைகல்லை குலதெய்வமாக கும்பிடுவதாக கிண்டலடித்திருப்பார்
    ஆத்தாவுக்கு ஏன்டா இன்னும் லிகிட் புட் கூழையே இன்னும் ஊத்துறீங்க ஒரு இட்லி,தோசை போடபுடாத என்று நக்கலடித்து கைதட்டல் வேறு வாங்கி இருப்பார். அங்கே பிற மதத்தவரை பார்த்து இன்னுமேன் கஞ்சி குடிகிறீங்க லிகிட் புட்ட மாத்துங்கன்னு சொல்ல தில் உண்டா?

  10. விவேக் சொந்தமாக எதுவும் நடிப்பதே இல்லை. யாரையாவது இமிடேட் செய்து தான் நடிப்பார். முக்கால் வாசி எம்.ஆர். ராதா போல நடிப்பார். ஒரு படத்தில் நான் God ஐ நம்புவதில்லை – lord ஐத்தான் நம்புகிறேன் என்று உளறுவார்.

  11. வணக்கம்

    ///அன்றிலிருந்து நான் அந்த தொடரை காண்பதை நிறுத்தி விட்டேன்.///

    அன்புள்ள எறும்பு சகோதர இது தவறான முடிவு, அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பாருங்கள், அப்போது தான் அவர்களது முகமூடி உங்களுக்கு தெரியும், மேலும் தவறாமல் அந்த நிகழ்ச்சியை உடன் காணும் சகோதர சகோதரிகளுக்கு இதன் நரித்தனத்தை விளக்குங்கள்,

    சமீபத்திலே பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பற்றியும் பல திரிப்புகளை அவிழ்த்து விட்டுக் கொண்டு இருந்தார்கள் நிஜம் நிகழ்ச்சியிலே, அப்போது நான் அருகிலே இருந்த எனது நண்பர்களிடம் சொன்னது

    ” பொள்ளாச்சி ஆனைமலைக்கு போய் இதை படம் புடிக்க தெரிஞ்சவனுக்கு வழியிலே அம்பராம் பாளயத்திலே வியாழக்கிழமை தோறும் தாயத்து விற்பவர்களை தெரியாமல் போகிறது பாருங்கள், அதுதான் இவர்களது நாத்திகம்,”

    அதுவும் ஒரு தாயத்து நூறு இருநூறு என்று எப்படியும் அன்று இரவு மட்டும் குறைந்தது ஒரு இருநூறு தாயத்தாவது விற்று விடுவார்கள்.

    அம்பராம்பாளயம் பற்றி தெரியாத சகோதரர்களுக்கு சொல்வது : அது இன்னொரு ஏர்வாடி. பைத்தியம் தெளிய, பேய் பிசாசு நீங்க அவர்கள் தருவது ஒரு பாட்டில் தண்ணீர், நான்கைந்து எலுமிச்சம்பழம். தாயத்து
    இத்யாதி பொருட்கள். அது ஒரு தர்கா.

  12. @ Solan

    You asked “தெய்வத்தில் எப்பொழுது நீங்கள் தலித் தெய்வம் மற்றும் தலித் அல்லாதோர் தெய்வம் என்று பிரித்து பார்க்க கற்று கொண்ட்டீர்கள்.”

    Answer is:

    இதைப் போன்று ஒரு பிரிவினை தெய்வங்களிடையே இருக்கிறது என்று ஆலந்தூர் மள்ளன் சொல்லவில்லை. அப்படி ஒரு பிரிவினை இருப்பது போல சில இந்துக்கள் நடந்துகொள்ளுகிறார்கள் என்று சொல்லுகிறார்.

  13. @ களிமிகு கணபதி

    எனக்கு தெரிந்து யாரும் இது போன்று பேசியதில்லை. யாரேனும் இது போன்று பேசுவறேயனால் அவரை போன்ற முட்டாள் இந்த உலகில் யாரும் இல்லை.

    @ஆலந்தூர் மள்ளன்,

    எனது பேச்சில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும். எந்த வடிவத்தில் இருந்தாலும் சக்கரை இனிக்க தான் செயும். அவரவர் விருப்பத்திற்கு அவரவர் தன்மைக்கு ஏற்ப இறைவன் காட்சி தருகிறான். நாள் தோறும் உழுது விவசாயம் செய்து இந்த மனித இனத்தை காக்கும் மக்களுக்கு எது நேரம். அதலால் அவர்களுக்கு எளிமையான வழியில் இறைவன் காட்சி தருகிறான் என்று நினைக்கிறன். குசேலன் கதை தொடங்கி கண்ணப்பர் வரை இதை தான் சொல்கின்றன. நீங்கள் சொல்வது போல் சில அரை குறை மடையர்கள் இருப்பார்கள் போலும் 🙁

  14. உலகில் ஜீவராசிகள், நம்மைப் போன்ற மனிதர்கள் எல்லாம் இருப்பது போலவே தெய்வங்களிலும் பல வகைகள் இருக்கிறது. இதில் சாத்வீக, ராஜச, தாமச தெய்வங்கள் உண்டு. ஸ்ரீதேவி – மூதேவி போல.. வேறு பாடுகள் சொல்லப் பட்டிருக்கிறது. இந்திரன் முதலான தேவர்கள் துவங்கி, பஞ்ச பூதங்கள், ஐயனார், மதுரை வீரன் என்று பெரிய லிஸ்ட் இருக்கிறது. இவற்றில் ஒவ்வொன்றை உபாசனை (எழுப்புதல்) செய்பவர்கள் உண்டு.

    இன்ன ஜாதிக்கு இன்ன தெய்வம் என்பது இல்லை. இதுவரை கேள்விப் பட்டதில்லை. இல்லாத பிரச்சனையை எடுத்து வைத்துக் கொண்டு, சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருப்பது வெட்டி வேலை 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *