லோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்

anna_hazare_lokpal_bill_01நாடு விடுதலை பெற்று 64 ஆண்டுகள் முடிந்த பின்னும் முற்றிலுமாக ஊழலை ஒழிக்க இயலவில்லை.  ஆட்சிக்கு வருபவர்களும், ஆட்சியில் இருந்தவர்களும் மேடைதோறும் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை முற்றிலும் ஒழிப்போம்” எனக் கோஷம் மட்டுமே போடுகிறார்கள்.  மத்தியிலும் சரி அல்லது மாநிலத்திலும் சரி ஆட்சியில் இருந்தவர்கள் ஊழலுக்காக தண்டனை பெற்றார்கள் என்று இதுவரை கூற இயலாது. 

நாடு விடுதலை பெற்ற ஆரம்பத்தில் ராணுவத்திற்காக வாங்கிய ஜீப்பில் ஊழல் செய்தார்கள்; ஊழல் புரிந்த கிருஷ்ண மேனன் மத்திய இராணுவ அமைச்சர் பதவி பெற்றார்.  ஊழல் புரிந்த அரசியல்வாதிகள்  வேறு காரணங்களைக் கூறித் தப்பி விடுகிறார்கள்.  மிகப் பெரிய ஊழல் நாயகர்களைப் பதவி விலகல் என்று கூறி தப்பிக்க விடுகிறார்கள்.  இதுதான் கடந்த 64 ஆண்டுகளாக  இந்த நாட்டில் நடந்து வரும் கதை.

“எம்.எல்.ஏ. க்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பொது நலத்துக்காகத்தான் பாடுபட வேண்டும்.  நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ அவர்கள் நலம் பெறுவதற்காக அந்தப் பதவிகளை வகிக்கவில்லை என்பதில் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்மானம்” கொண்டுவரப்பட்டதாக 27.8.1969ல் தமிழக சட்ட மன்றத்தில் அன்றைய முதல்வர் திரு. கருணாநிதி தெரிவித்தார்.  

இவ்வளவு வெளிப்படையான கருத்தைக் கொண்ட தமிழக முதல்வர் ஊழலுக்கு எதிராக நாட்டையே தட்டி எழுப்பிய அன்னா ஹசாரேவைப் பற்றி இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.  இன்றைய தமிழக முதல்வர் கருத்து தெரிவிக்கவில்லை என்பதும் அடுத்த ஆட்சி எனது தலைமையில் அமையப் போகுது என்று கூறுபவருமான ஜெயலலிதாவும் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

1967லிருந்து தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகள் திமுகவும் அஇஅதிமுகவும். கடந்த 44 ஆண்டுகளாக தமிழகத்தில் ஊழல் புரையோடியுள்ளது.   எல்லா மட்டத்திலும் கையூட்டு இல்லாமல் எந்தக் காரியமும் நடைபெறாது என்கிற எண்ணம் எல்லா தட்டு மக்களிடமும் காணப்படுகிறது.  இந்த எண்ணம் ஏற்படத் தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகளின் சுயநல ஆசையே முக்கிய காரணமாக அமைந்தது. 

1969ல் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்ட வந்த தமிழக முதல்வர் அன்னா ஹசாரேவின் போராட்டத்தைப் பற்றிய கருத்துக்களைக் கூற முன் வராதது வியப்பளிக்கிறது.  உண்மை பல நேரங்களில் ஊமையாகிவிடும் போலும். 

anna_hazare_lokpal_mother_indiaஅடுத்து ஆட்சிக்கு  வரப் பணம் முக்கிய காரணி எனக் கருதியாதால் ஊழல் ஒரு அரசியல் அங்கமாக மாறிவிட்டது.  தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் அங்கம் வகித்து அமைச்சர் பதவியை பெற்றவர்கள் திமுகவினரும் அஇஅதிமுகவினரும்; ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும் திமுக அங்கம் பெற்று முக்கிய இலாக்காக்களை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.  தங்களுக்குத் தேவையான இலாக்காக்களைப் பெற டெல்லி சென்ற முதல்வர், உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்குமானால் 1969லிருந்து கிடப்பிலே இருக்கும் லோக் பால் மசோதாவை நிறைவேற்ற பிரதமருக்குக் கோரிக்கை விடுத்திருக்கலாம்.  

1969ல் கொண்டு வரப்பட்ட மசோதாவில் மத்தியில் உள்ள அரசியல்வாதிகளை விசாரிக்க லோக்பால் சட்டமும், மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை விசாரிக்க லோக் ஆயுத்த குழுவும் நியமிக்கப்பட்ட வேண்டும் என்று நிர்வாகச் சீர்திருத்த கமிஷன் தெரிவித்த பரிந்துரையைக் கருணாநிதியும், ஜெயலலிதாவும் நிறைவேற்றவில்லை என்பது மட்டுமில்லாமல் இந்த மசோதா மீது தங்களுக்கு அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளவில்லை.

இருவரும் ஜன் லோக்பால் மாசோதா கொண்டு வர நியமிக்கப்பட்ட குழுவில் உள்ளவர்களின் நம்பகத்தன்மையைப் பற்றிக் கூடத் தங்களது கருத்துக்களை தெரிவிக்கவில்லை.  முன்னாள், இன்னாள் தமிழக முதல்வர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க முடியாமல் போனதற்கானக் காரணத்தைத் தேடினால் “மாசோதாவில் உள்ள ஷரத்துக்கள் இவர்களுக்கு பாதகமாக முடியும் என்பதால் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை” என்ற பதில் கிடைக்கும். 

இந்த மசோதாவின் முக்கிய ஷரத்து, குற்றம் சுமத்தப்பட்ட அரசியல்வாதிகள் மீது இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரணை நடத்தித் தண்டனை வழங்க வேண்டும் என்பதாகும்.  இந்த அம்சம் ஜெயலலிதாவிற்கு ஏற்புடையதல்ல.  ஏன் என்றால் 2001ல் தொடுக்கப்பட்ட அன்னியச் செலவாணி மோசடி வழக்கிலும், 2000ம் வருடம் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கிலும் ஆண்டுகள் 10க்கு மேல் ஆனாலும் இன்னும் தீர்ப்பு வந்தபாடில்லை.  ஆகவே இந்த மசோதா சட்டமானால் இன்றைய நிலையில் செல்வி சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்க வேண்டும்.  

ஜெயலலிதா மீதும், கருணாநிதி மீதும் வழக்குத் தொடுக்க வேண்டுமானால் மாநில ஆளுநர் அனுமதி கிடைக்க வேண்டும். இந்த அனுமதி பெறுவதற்குப் பல ஆண்டுகள் ஆன கதையும் உண்டு.  2ஜி ஸ்பெக்ட்ரத்தில் ஊழல் நடந்துள்ளது. ஆகவே அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்க அனுமதி வேண்டும் என 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்பிரமணியன் சுவாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு 16 மாதங்கள் வரை பதில் கொடுக்கவில்லை என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
 
anna_hazare_lokpal_hindutva_supportஆனால், ஜன் லோக்பால் மசோதா சட்டமானால், பிரதமராக இருந்தாலும் அல்லது முதல்வராக இருந்தாலும் குற்றச்சாட்டின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர் ஆகியோர் அனுமதியில்லாமல் வழக்குத் தொடரலாம் என்பது முக்கிய அம்சமாகும். 

ஆகவே, இந்த ஷரத்து தற்போதைய தமிழக முதல்வருக்கும் ஆபத்தாக முடியும். ஏன் என்றால் 2ஜி ஸ்பெக்ட்ரத்தில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ204 கோடி கிடைத்த வழக்கு வரும்போது நேரடியாக பாதிக்கப்படுவது தமிழக முதல்வர் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். எனவே இருவரும் இதுவரை கருத்து கூறாதது மசோதாவின் வரைவு அம்சங்கள் அவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியிருக்கும் என்பதையே வெளிக்காட்டுகிறது.
 
தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் கூட இந்த மசோதாவைப் பற்றி எவ்விதக்  கருத்தும் தெரிவிக்கவில்லை. அடுத்த முதல்வர் வேட்பளார் திரு ஸ்டாலின் என எல்லோரும் கூறிக் கொண்டு இருக்கின்ற காரணத்தால் துணை முதல்வராவது இது பற்றி கருத்து தெரிவிப்பார் என்றால் அவரும் இதுவரை வாய்திறந்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த மசோதா சட்டமானால் தமிழக அமைச்சர்களில் பலர் தங்களது சொத்துகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.  2006ல் நடந்த தேர்தலில் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ2.83 கோடி என தனது வேட்பு மனுவில் தகவலை தெரிவித்த அமைச்சர் நேரு, 2011ல் தாக்கல் செய்த மனுவில் ஐந்தாண்டுகளில் சொத்தின் மதிப்பு ரூ 17.77 கோடியாக காட்டியிருக்கிறார். ஐந்தாண்டுகளில் ஏறிய விலைவாசி உயர்வு, தொடர் மின் வெட்டின் காரணமாக பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டாலும், அமைச்சர்களின் சொத்துக்கள் மட்டும் பல மடங்கு உயர்ந்துள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது.

ramdev_rss_anna_hazare_lokpalஅமைச்சர் நேருவைப் போலவே உணவு அமைச்சர் எ.வ.வேலுவிற்கு 2006ல் தெரிவித்த சொத்தின் மதிப்பை விட 780 மடங்கு அதிகமாகி தற்போது 17 கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.  ரூ1.35 கோடியாக தனது சொத்து இருப்பதாக 2006ல் காட்டிய அமைச்சர் பூங்கோதைக்கு 2011ல் ரூ15.43 கோடியாக சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.  ஆகவே இவர் தான் செய்த மருத்துவத் தொழிலில் உண்மையில் கிடைத்த வருமானத்திற்கு அதிகமாக சேர்த்ததைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்கிற மசோதாவை சட்டமாக்க முனைப்பு காட்டுவாரா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல்வர் எவ்வழி மற்றவர்கள் அவ்வழி என்கிற புதுமொழிக்கு ஏற்ப 2006ல் 26.52 கோடியாக இருந்த சொத்து 2011ல் ரூ44 கோடியாக உயர்ந்த சூத்திரத்தை அமைச்சர்களுக்கு மட்டுமே முதல்வர் தெரிவித்ததால் திமுக அமைச்சர்கள் அனைவரும் முதல்வரைப் போல் பல மடங்கு சொத்துக்களைக்  கடந்த ஐந்தாண்டுகளாக குருவி சேர்ப்பது போல் சேர்த்திருக்கிறார்கள். எனவே இந்த மசோதா சட்டமானால் இந்த நிலக்குருவிகள் சேர்த்த சொத்து பறிமுதல் செய்யப்படும் என்கிற அச்சத்தின் காரணமாக கருணாநிதியும்  வாய்முடி மௌனமாக இருக்கிறார்.

நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கூறுவதற்குப் பதிலாக தேர்தல் கமிஷன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்துவதிலே அதிக கவனம் செலுத்தினார். பாவம். 

இந்த வரைவு மசோதாவில் உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகிய இரண்டுக்கும் இருக்கும் முழுச் சுதந்திரம் போல், முழுச்சுதந்திரம் பெற்ற அமைப்பாக ஜன் லோக்பால் இருக்க வேண்டும், எந்த அதிகாரியும் அல்லது அரசியல்வாதியும் தனது செல்வாக்கைப் பயன்படுத்த இயலாத வகையில் அமைக்க வேண்டும் என்பது கருணாநிதிக்கோ அல்லது ஜெயலலிதாவுக்கோ ஏற்புடையதாக இருக்காது. எனவே, இவர்கள் இருவரும் நாட்டையே உலுக்கிய பிரச்சினையில் தங்களது கருத்துக்களை மக்கள் முன் வைக்கவில்லை. ஏற்படப்போகும் லோக்பால் மசோதாவிற்கு இவர்கள் ஆதரவு கொடுப்பார்களா என்பது சந்தேகமே.

abvp_rss_anna_hazare_lokpal_billஅதிகார பலத்தைக் கொண்டு குற்றம் சுமத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற எண்ணமும் ஈடு கட்ட இயலாது.  ஏன் என்றால் ஊழலுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்களைப் பாதுகாப்பது லோக்பால் அமைப்பின் கடமையாகும். அவர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுப்பதும் இவர்களின் முக்கியப் பணியாகும் என்பது வரைவு மசோதாவில் இறுதியாக சேர்க்கப்பட்டுள்ள ஷரத்தாகும். 

கருணாநிதிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்ட சம்பவங்கள் ஏராளமாக தமிழகத்தில் உள்ளது.  காங்கிரஸ் கட்சியில் இருந்த வினாயகம் என்பவர் கருணாநிதிக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பதற்காக அவருக்கு கொடுத்த தொல்லைகள் அதிக அளவில் இருந்த காரணத்தால் பின்னாளில் அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு துன்பத்திலிருந்து விடுதலை பெற்றார்.   செல்வி ஜெயலலிதாவும் இம் மாதிரியான காரியங்களை செய்வதில் வல்லவர். கஞ்சா வழக்கு என்பது ஜெயலலிதாவின் ஆட்சியில் பலருக்கு ஏற்பட்ட அனுபவமாகும்.  ஆகவே இந்த மசோதா சட்டமானால் இருவரும் தங்களின் எண்ணப்படி அதிகார பலத்தை பயன்படுத்த இயலாது என்பதால் வாய் திறக்க முடியாமல் உள்ளார்கள்.

லோக்பால் உருவான கதை

1969ம் ஆண்டு மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்த கமிஷன் தனது பரிந்துரையில் உடனடியாக அரசின் செயல்பாட்டில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த லோக்பால் கமிட்டி அமைக்கப்பட வேண்டும், மாநிலங்களின் செயல்பாடுகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த லோக் ஆயுத்தா குழுக்கள் ஏற்படுத்த வேண்டும் என கமிஷனின் அறிக்கை தெரிவித்தது.  இந்தப் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு 1969ல் பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்தது. 

பாராளுமன்றத்தின் மேல்சபையில் இந்த மசோதாவிற்கு போதிய ஆதரவு இல்லாத காரணத்தில் இம்மசோதா காலாவதியாகிவிட்டது.  ஆனாலும் கூட எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து இம் மசோதா கொண்டு வர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார்கள்.

இம் மாதிரியான போராட்டங்களின் விளைவாக மத்திய அரசு 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2005, 2008 ஆகிய வருடங்களில் பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா தொடர்ந்து தாக்கல் செய்தது.  இத்தனை ஆண்டுகள் இத்தனைமுறை தாக்கல் செய்ப்பட்டாலும் மசோதா ஏன் சட்டமாகவில்லை என்பது மிகப் பெரிய கேள்விக்  குறியாகும்.  காரணம் இம் மசோதாவைக் கொண்டு வருவதில் ஆளும் கட்சிக்கு அக்கறை இல்லை. இழுத்தடிக்கும் போக்கில் பல்வேறு கால கட்டங்களில் இம் மசோதாவானது கூட்டு நடாளுமன்ற குழுவிற்கும், பல்வேறு குழுவின் பரிந்துரைக்கும் மாறி மாறிச் சென்றதால் இம் மசோதா சட்டமாகவில்லை.

நாடு விடுதலை பெற்ற 1947ம் வருடத்திலிருந்து இந்திய வரலாற்றில் ஊழல் கரைபடிந்த எந்த அமைச்சரும் தண்டிக்கப்படவில்லை. அமைச்சர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதை விட மோசடிக்குத் துணை போன அதிகாரிகள் கூடத் தண்டிக்கப்பட வில்லை.  தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதிகள் கூட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களாகத் திகழவில்லை என்பது ஊரறிந்த உண்மையாகும்.  ஆகவே ஊழலின் காரணமாக நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்கிற கூச்சல் அதிகமானதே தவிர அது தீரும் வழி தெரியவில்லை. 

காங்கிரஸ் கட்சியால் காலம்கடந்த லோக்பால் மசோதாவின் அம்சங்கள்

பத்து முறை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட லோக்பால் மசோதாவில் பல அம்சங்கள் நடைமுறைக்கு ஒவ்வாத ஷரத்துக்கள் இடம் பெற்றன.  மேலும் காங்கிரஸ் கட்சியினரால் தயாரிக்கப்பட்ட லோக்பால் மசோதாவானது ஏற்கனவே இருக்கின்ற அமைப்புகள் போன்றதாகும். இதற்கு எனத் தனியாக அதிகாரங்கள் கிடையாது. இந்த அமைப்பு அரசுக்கு பரிந்துரை செய்யும் குழுவாகவே மட்டுமே இருக்குமாறு மசோதாவின் சாரம்சங்கள் இருந்தன.  மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் போல் லோக்பால் அரசியல்வாதிகளின் தவறுகளை விசாரிக்கும் அமைப்பாக இருக்கும். ஆனால், அதற்கு எவ்விதமான சட்ட அதிகாரமும் கிடையாது.  லோக்பால் அமைப்பு ஆலோசனைக் குழுவாக செயல்படும். 

லோக்பால் அமைப்புக்குத் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி கூட்டாகச் சேர்ந்த அமைப்பினரின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது போன்ற அம்சங்கள் லோக்பால் அமைப்பின் உன்னத லட்சியத்தையே சிதைத்து விடும்.

புதிய லோக்பால் மசோதாவில் உள்ள ஷரத்துக்கள்

அண்ணா ஹஸாரே தலைமையில் உள்ள குழுவினரால் தயாரிக்கப்பட்ட வரைவு மசோதாவில் உள்ள அம்சங்கள் முக்கியமானவையாகும்.  இந்த வரைவுப்படி மசோதா கொண்டு வரப்படுமானால் 90 விழுக்காடு சமுதாயத்தில் ஊழலை ஒழிக்க இயலும். எவ்வாறு?

lokpal_bill_vs_janlokpal_bill(1) மத்தியில் நடைபெறும் குற்றங்களை விசாரிக்க லோக்பால் என்கிற அமைப்பும், மாநிலத்தில் நடைபெறும் குற்றங்களை விசாரிக்க லோக் ஆயுக்தா என்கிற அமைப்பும் ஏற்படுத்தப்படும்.

(2) உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கும் அதிகாரத்தைப் போல், தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைப் போல் லோக்பால் அமைப்பும் ஒரு சுதந்திரமான அமைப்பாக இருக்க வேண்டும்.  எக்காரணத்தைக் கொண்டும் லோக்பால் விசாரணையில் அமைச்சர்களோ அல்லது அதிகார வர்க்கமோ தலையிடக் கூடாது.

(3) குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது விசாரணையும் வழக்கும் காலதாமதம் செய்யப்படாமல் விசாரணை என்பது ஒரு ஆண்டுக்குள்ளும், விசாரணைக்குப்  பின் நடைபெறும் வழக்கு விசாரணை ஒரு ஆண்டுக்குள்ளும் முடிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினருக்கு இரண்டு ஆண்டுக்குள் தண்டனை வழங்கப்படும். (பத்து ஆண்டுகளாக ஜெயலலிதாவின் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு நடைபெற்று வருகிறது என்பது நினைவுக்கு வருகிறதா?)
 
(4) குற்றம் சுமத்தப்பட்டவரால் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டு இருக்குமானால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்ட காலத்திற்குள் இழப்பீடு வசூலிக்கப்பட வேண்டும்.

(5) பிரதமர், உச்ச நீதி மன்ற நீதிபதி, முதல்வர், அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தும் போது அனுமதி பெற வேண்டும் என்பது முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.

(6) இந்த மசோதா சட்டமானால் பொதுமக்கள் குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தாலும், ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தாலும், பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்தாலும், ஏதேனும் ஒரு பிரச்சினைக்காகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து புகார் பெறப்படவில்லை என்றாலும் இது சம்பந்தமாக லோக்பால் ஒரு மாதத்திற்குள் விசாரித்து பொது மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கு வழி வகை செய்யும்.

அத்தோடு அரசின் சார்பில் போடப்படும் சாலைகள் தரமற்றதாக இருந்தாலும் ரேஷன் கடைகளில் அளவு குறைவான மற்றும் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தி ஒரு ஆண்டுக்குள் தண்டனை வழங்கப்படும்.

(7) லோக்பால் அமைப்பில் உள்ளவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார்.

(8) மத்திய அரசின் மத்திய ஊழல் கண்காணிப்பு நிறுவனமும், மத்திய புலனாய்வு அமைப்பும் லோக்பால் அமைப்புடன் இணைந்து விசாரணை நடத்தும்.

ஆகவே இப்படிப்பட்ட ஷரத்துக்களை கொண்ட மசோதா சட்டமானால் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் சிறைசாலைக் கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்க வேண்டும்.  அதிகாரவர்க்கத்தில் உள்ளவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே இந்த மசோதாவை சட்டமாக்க ஊழல் அரசியல்வாதிகள் முன்வருவார்களா என்பதே கேள்வி குறியாகும்.

12 Replies to “லோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்”

  1. //தமிழக முதல்வர் ஊழலுக்கு எதிராக நாட்டையே தட்டி எழுப்பிய அன்னா ஹசாரேவைப் பற்றி இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.// நான் ஊழலுக்கு நெருப்பு மாதிரி என்றாரே கலைஞர். இதற்கு மேல் ஊழலுக்கு எதிராக அவர் பேச வேண்டும் என்று நீங்கள் பேராசைப் படுகிறீர்களோ?

    ரஜினி அன்னாஹஸாரே உடன் சேர்ந்து தன் உணர்வுகளை தெரிவிக்க நினைத்தாராம். அவருக்கு உடம்பு சரியில்லை என்று போகவில்லையாம். தமிழகத்திலிருந்து அன்னா ஹசாரேவுக்கு ஆதரவளிக்க தான் இருப்பதாக காட்டிக் கொண்டு கருனாநிதி கோபத்தை சம்பாதித்துக் கொண்டார். மற்றவர்கள் எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு வேலையைப் பார்த்தார்கள். பல நாடகங்களில் இதுவும் ஒன்ரு என்பதே இன்னமும் பலரது மனநிலை.

    நல்ல நேர்மை, நல்ல ஊழல் எதிர்ப்பு!

  2. சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சி புரிந்த நபர்கள் நேர்மையாகவும், நாணயமாகவும் நடந்திருந்தால் இப்போது ஊழல் இப்படி வளர்ந்திருக்காது. தொடக்கமே கோணல். சுதந்திரத்தின் அருமை தெரிந்தவர்கள் கைகளிலிருந்து நாடு சுய நலமிகளின், கொள்ளை அடிப்போரின் கரங்களுக்குப் போய்விட்டபடியால், இதுபோன்ற இழி நிலை தவிர்க்க முடியாதது. எத்தனை லோக்பால் வந்தாலும் இவர்களது ஊழல் ஒழிந்துவிடாது. “திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது” என்பது முற்றிலும் சரி. இந்த அன்னா ஹசாரே இத்தனை நாள் தூங்கிக் கொண்டிருந்து விட்டு, திடீரென்று எழுந்து கூச்சல் போடுவது ஏன் என்பது புரியவில்லை. யாரோ ஒருவர் மீது இவருக்கு பகை, அவ்வளவுதான். போபார்ஸ், 2G அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல் போன்ற எண்ணற்ற ஊழல்கள் நடந்த போது இல்லாத விழிப்புணர்ச்சி இப்போது எங்கே இவருக்கு வந்தது. இந்த நாட்டின் இளைஞர்கள் விழிப்போடு இருக்கிறார்கள். 80 , 90 வயதைத் தொட்டுவிட்ட ஊழல் வாதிகளை விரட்டிவிட்டு இளைஞர்கள் பொறுப்பேற்றால் ஊழல் தானாக ஒழிந்து போகும். அப்போதும், கபில் சிபல், மனீஷ் திவாரி, திக்விஜய் சிங் போன்றவர்களை சற்று எட்டத்தில் வைப்பது நல்லது.

  3. சட்டம் போட்டு தடுக்கிறகூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கும் ,ஆனால் திட்டம் போட்டு திருடரகூட்டம் திருடுக்கொண்டே இருக்கும், திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது – பெண்கள் இடஒதுக்கீடு மசோதா போல் இந்த லோக்பால் பில்லும் தொங்கிகொண்டுதான் இருக்கும். மீறி வந்தாலும் இது எதிர்கட்சிகளை ஒடுக்கவும், உச்சநீதி மன்றத்தை ஒடுக்கவும் ஆளும் கட்சியால் ஒரு சாதனமாகவே பயன்படும்.

    ஏன் இந்த லோக்பால் கமிடியில் பிராதான எதிர்கட்சி உறுபினர் இல்லை ? அதை ஏன் வேண்டும் என்று எதிர்கட்சிகள் கேட்கவில்லை ? அது என்ன ஐந்து காங்கிரஸ் காபினட் மந்திரிகள் கமிடியில் ? உண்மையில் இந்த ஐந்து பேர் படங்களும் போலீஸ் நிலயத்தில் வாடிக்கை திருடர்கள் படம் மாட்டி உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்து கொடுத்தால் தகுந்த சன்மானம் என்ற பட்டியலில் சேர்கபட வேண்டியவர்கள் தானே ? இதில் தலித்துகளின் பங்களிப்பு வேண்டும் என்று ஜாதியை உள்ளே நுழைப்பது ஏன் ? 2003 ஆம் வருடம் (NDA) அரசால் பங்கு கொள்ளப்பட்டு (UNCAC – United Nation convention against corruption) நிறைவேறிய திர்மானங்களில் 2005 இல் (UPA) அரசால் கையொப்பம் இடப்பட்டு இன்று வரை அதற்க்கு ஒப்புதல் (Ratification) அளிக்காதது ஏன் ? இதை பற்றி இன்று யாரும் கேள்வி எழுப்பாதது ஏன்? (UN) சட்டங்கள் அமெரிகர்களால் அமெரிக்க நலனை மட்டும் மனதில் கொண்டு நடைமுறைபடுத்தும் சட்டம் என்பது ஊர் அறிந்த உண்மை. எப்படி மணித உரிமை என்பது கிருஸ்துவர்களுக்குமட்டும் மற்றவர்கள் மிருகங்கள் என்பது போல். ஒப்புதல் அளிகாவிட்டாலும் அந்த சட்டங்களின் சரத்துக்களை லோக்பால் சட்டங்கள் இயற்ற ஒரு முன் உதாரணமாக எடுத்துகொள்ள முன்வராதது ஏன் ?

    இந்த சட்டங்களினால் ஏற்படும் சில நன்மைகள் :-

    1. Changes in funding of political parties
    2. Transparency of election campaigning
    3. Enables to track down illicit money trashed abroad by individual, public servant and politicians
    4. Greater transparency of mandatory disclosure of funds, assets by public servant ( including ministers, members of legislative & other elected bodies and bureaucrats)
    5. Stiff punishment for concealment
    6. Conviction, crimilise bribery embezzlement as well as influence – pedaling (Lobbying)

    கருணா அன்னாவை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் படித்த ஞாகபம் உள்ளது.

  4. //
    மேடைதோறும் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை முற்றிலும் ஒழிப்போம்” எனக் கோஷம் மட்டுமே போடுகிறார்கள்.
    //
    யார் சார் சொல்றாங்க! அதை எல்லாம் சொல்லறத நிறுத்தி பல வருடங்கள் ஆகி விட்டது.

  5. If you look at the corruption of politicians, that will be huge. But, before correcting them, if we public start to correct ourselves, we can see a genuine soceity. How many of us are from government offices? How many of us have relatives, friends from government offices?

    Can any one of us tell that we changed one government employee’s mind? We all are ready to give advice for others. But when it comes to our friends, relatives somehow we justify that act.

    Now, I challenge all, try to change one of your friend or relative or yourself. Is it possible?
    Then blame politicians.

  6. அண்ணா ஹஜாரேவுக்குப் பின்னால் ஆர் எஸ் எஸ் இருக்கிறது என்று கபில் சிபல் சொன்னார். அதில் பெருமளவும் உண்மை இருப்பதாக நம்பகமான இடங்களில் இருந்து தகவல்கள் கசிகின்றன.

    எப்படியோ, நல்லது நடந்தால் சரி.

    33 % இட ஒதுக்கீடு போல இதுவும் ஆகும் வாய்ப்பு இருந்தாலும், ஆசைப்படலாம்தானே.

  7. அண்ணா ஹஸாரே அவர்களது போராட்டம் உன்னதமானது என்றக் கணக்கில் நாம் வாழ்த்தி வரவேற்க வேண்டும்.
    இந்திய முழுமையான இளய தலைமுறைக்கு;ஒட்டு மொத்த ஊழல் எதிர்ப்புக்கு முன்னிலை வகிக்கும் மாதிரிதான் அண்ணா ஹஸாரே தவிர;அவர் உழலை எதிர்க்க வேண்டும் என்று சொன்னதற்காக இந்தியா ஒன்று திரளவில்லை. மனதில் கிடந்தது அரித்துக்கொண்டு ஒரு விசயத்துக்கு ஒரு வழி கிடைத்தது.அவ்வளவுதான்.
    இப்போது காங்கிரஸ் காரர்கள் அண்ணா ஹஸாரே என்ன என்னவெல்லாம் தப்பு செய்துள்ளார்…அவர் பின்னணியல் ஆர்.எஸ் எஸ்.கார்கள் உள்ளார்களா என்று அதன் கூரை மழுங்க செய்யப் பார்கிறார்கள். ஆனாலும் இந்த சதி வலையை புரிந்துக் கொண்டு இளய சமுதாயத்தினர் அறத்திற்கு எதிரான போராட்டத்தை நழுவ விடக்கூடாது.

    -எம்.எஸ். ராமலிங்கம், தஞ்சாவூர்.

  8. gurubhyo namaha:

    i am amazed at the sway the media has on society
    i suspect hazare is a creation of congress and media.
    this is to divert the attention of society from the source/fountain -head of corruption.
    why is the media not discussing the role of congress in 2G ?.

    probably satyendra dubey had done more than what hazare will achieve.

    By the way do we know the name of sub-collector killed on Pune Mumbai highway trying to nab
    a tanker carrying spirit?

  9. ஆட்சியாளர்களிடமிருந்து ஆளப்படுவர்கள் தங்களைக் காத்துக்கொள்ள ஏற்படுத்திக்கொள்ளும் சட்டமே லோக்பால் மசோதா. எனவே, ஆட்சியாளர்கள், லோக்பால் மசோதாவுக்கு எதிராகவே இருக்கமுடியுமே தவிர, ஆதரவாக இருக்க முடியாது. மேலும், கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள், வயதிலும், தன்னலத்திலுமே, முதிர்ச்சி அடைந்தவர்களே தவிர, சமுதாய நல எண்ணங்களில், முதிர்ச்சி அடையாதவர்கள். கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, தங்கள் சொந்த சொத்துக்களை சமுதாயத்திக்காக வாரி இரைப்பார்களா?

  10. காணத் தவறாதீர்கள் ! கட்டாயம் பாருங்கள் !

    அன்னா ஹஸாரேவை ஆதரிக்கும் இந்துத்துவர்கள் !

    சேனல்: சன் ந்யூஸ்
    நிகழ்ச்சி: நேருக்கு நேர்
    நேரம்: இன்று இரவு 9 மணி
    நாள்: இன்று (7 மே 2011)

  11. அண்ணா ஹசாரே நடத்தும் போராட்டம் ஒரு சிரிப்புமயமாகவே உள்ளது. ஊழலை ஒழிப்பது என்பது , ஒரு கற்பனை மட்டுமே. அது ஒரு உண்மையாக மாறவேண்டுமானால் , ஒவ்வொரு தனிமனிதனும் ஒழுக்க சீலனாக வேண்டும். அது ஒரு நல்ல கற்பனையே. ஆனால் உடனடியாக நடக்காது. நெடுங்காலம் பிடிக்கும்.

    எனவே நமது தலைவர்கள் பத்தினி வேடம் போடாமல், ஊருக்கு வெளிச்சம் போட்டு , விபச்சாரி தொழில் செய்யாமல், மறைவாக இதுவரை வெளிநாட்டு வங்கிகளில் போட்டு வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை உடன் வெள்ளைப்பணமே என்று அறிவித்து, ஒரு முப்பது அல்லது நாற்பது சதவீதம் வரி மட்டும் போட்டு, வட்டி மற்றும் அபராதம் தள்ளுபடி செய்து , பாக்கியை வசூலித்தாலே நமது மத்திய அரசின் வட்டி செலவு குறைந்துவிடும்.

    மேலும், அரசியல் வாதிகளையும், பெரிய தொழில் அதிபர்களையும் சிறைக்கு அனுப்பி , அழிக்க நினைக்காமல் , அவர்களை திருத்த வழிவகை காண வேண்டும். ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தை பறிமுதல் செய்தால் போதும். அதை செய்யாமல், சிறைச்சாலைக்கு அனுப்பி ஒரு புண்ணியமும் இல்லை. முக்கியமாக, காங்கிரசு கட்சியின் தலைவர்களின் வெளிநாட்டு திருட்டு கணக்குகளை பறிமுதல் செய்து , அரசின் கஜானாவில் செலுத்தினால், அரசு கஜானா நிரம்பி வழியும்.

    காங்கிரசு கட்சியினரின் கருப்பு பணத்தை பறிமுதல் செய்தாலே மற்ற சிறு கட்சிகளான மாநில கட்சிகள் தானே வழிக்கு வந்துவிடும். அதை விடுத்து, எந்த ஒரு மனிதனையும் ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்காக சிறைக்கு அனுப்புவது ஒரு கோமாளித்தனமே ஆகும். இவ்வளவு அறிவீனமான நமது சட்டங்களை திருத்தாதவரை , இந்த நாடு நிச்சயம் உருப்படாது. ஒரு ஊழல் வாதியின் கருப்பு பணத்தை பறிமுதல் செய்தால், அடுத்த அரசியல்வாதியும், அவனுக்கு சொம்பாக செயல்படும் அதிகாரிகளும் தவறு இழைக்க தயங்குவார்கள்.

    இதை செய்ய தவறினால், ஜெயிலில் பத்து வருடம் இருந்தாலும் பரவாயில்லை, அம்பது தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிடலாம் என்று எல்லா அரசியல் வாதிகளும் துணிந்துவிடுவார்கள். நாம் சிந்திக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *