தேர்தல் களம்: பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி

ponji_tபொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர். கடந்த 30 ஆண்டுகளாக பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர். அமரர் தாணுலிங்க நாடாருக்குப் பிறகு குமரி மாவட்டத்தின் பிரபலமான ஹிந்து முகமான இவர், பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரானது (2009) கட்சிக்குள் புதிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஹிந்து முன்னணியிலும் பிற ஹிந்து இயக்கங்களிலும் நீண்டநாளாக தீவிரக் களப்பணி ஆற்றிய அனுபவம், இவரது தலைமையை மெருகூட்டி இருக்கிறது. இயக்கப் பணிக்காகவே பிரமச்சாரியாக வாழ்பவர்.

1999 நாடாளுமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதி எம்பி.யாக வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன், வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர்நலத் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறைகளில் இணை அமைச்சராக பதவி வகித்தார். 2004 தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் பாஜக சார்பில் (அதிமுக கூட்டணி) போட்டியிட்ட இவர் இரண்டாவதாக வந்து 1.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். 2009 தேர்தலில், திருத்தி அமைக்கப்பட்ட கன்யாகுமரி தொகுதியில் (பாஜக தனித்து போட்டி) மீண்டும் போட்டியிட்டு இரண்டாமிடம் பெற்றார். இப்போது வாக்கு வித்யாசம் 65,687 மட்டுமே.

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை அடித்தளத்திலிருந்து வலுப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமான அரசியல் பணியாற்றி வருபவர். அதற்காகவே, தற்போதைய சட்டசபை தேர்தலில் தனித்தும், கூடுதலான தொகுதிகளிலும் பாஜகவை போட்டியிடச் செய்து, துணிந்து போராடி வருபவர். இம்முறை சட்டசபையில் பாஜக குரல் கண்டிப்பாக ஒலிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பவர். கடுமையான வெயிலில் தீவிரமான தேர்தல் பிரசாரத்தினிடையே, (தொலைபேசி வாயிலாக) தமிழ் ஹிந்து வாசகர்களுக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணல் இது.

ooo000ooo


தமிழக சட்டசபை தேர்தல் களம் இப்போது எப்படி இருக்கிறது?

தமிழக சட்டசபை தேர்தல் களம், மக்கள் மாற்றத்தை விரும்புவதை பிரதிபலித்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலால் தமிழகத்திற்கு திமுகவால் ஏற்பட்டுள்ள அவப்பெயரைப் போக்க அற்புத வாய்ப்பாக தேர்தல் அமைந்துள்ளது. தற்போதைய திமுக அரசின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உச்சத்தை எட்டியுள்ளது. விலைவாசி கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் வாழவே போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு தீர்வாக திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி வருகின்றனர்.

அதே சமயம் திமுகவுக்கு மாற்றாக முன்னிற்கும் அதிமுகவும் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தத் தவறி வருகிறது. அதிமுக கூட்டணி வலுவடைந்தபோது உண்மையிலேயே பாஜக மகிழ்ச்சியுற்றது. ஆனால், ஜெயலலிதாவின் போக்கு மாறாதது வைகோ வெளியேற்றத்தில் தெரிய வந்தது. அதிமுகவும் ஊழலில் திமுகவுக்கு சளைத்ததல்ல என்பதும் நெருடலாக உள்ளது.

இந்நிலையில், இரு கழகங்களிடையே நடக்கும் மோதலில், நடுநிலை வாக்காளர்களின் ஆதரவை நம்பி தனித்து களம் காண்கிறது தமிழக பாரதீய ஜனதா. இரு கழகங்களுக்கு மாற்றாக பாஜக நிற்பது புதிய வாக்காளர்களையும் நாட்டுநலனில் அக்கறை கொண்டோரையும் கவரும் என்று நம்புகிறோம்.

தேர்தல் அதிகாரியைத் தாக்கிய அமைச்சர் அழகிரியைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் – சுஷ்மா ஸ்வராஜ்

பாஜகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

திமுக, அதிமுகவுக்கு நிகராக ஆட்சி அமைப்போம் என்று பாஜக முழங்க முடியாது. எங்கள் வலு எங்களுக்குத் தெரியும். அதே சமயம், இரு திராவிட இயக்கங்களின் மெகா கூட்டணிகளிடையே, பாஜக தனது தனித்துவத்தை நிலைநாட்டவும், புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சிக்கிறது. அதற்காகவே தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். அதன்மூலமாக பாஜகவின் அரசியல் பார்வையை தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்தினோம்.
இந்தத் தேர்தல் பாஜகவுக்கு சோதனைக்களம். இதில் இரட்டை இலக்கங்களில் வெற்றிபெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அதேசமயம், மாநிலம் முழுவதும் பாஜக கூட்டணி 208 தொகுதிகளில் போட்டியிடுவதன் மூலம், பதிவாகும் ஒட்டுமொத்த வாக்குகளில் 10 சதவிகித வாக்குகளைப் பெற இலக்கிட்டு செயல்படுகிறோம்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக- 193; ஜனதா கட்சி- 10; ஐக்கிய ஜனதாதளம்- 5 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் ராஜசேகரனும் பாஜக தலைவர்களுடன் இணைந்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

208 தொகுதிகளில் போட்டியிட்டாலும், 50 தொகுதிகளைத் தேர்வு செய்து அதிக கவனம் கொடுத்து பணிபுரிகிறோம். குறிப்பாக, குமரி, நெல்லை, கோவை, சென்னை, திருச்சி, மதுரை, நாகை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பாஜக தீவிர கவனம் செலுத்துகிறது. பிற கட்சிகள் அதிசயிக்கும் விதமாக, இம்முறை பாஜகவின் வெற்றி அமையும் என்று உறுதியாகவே கூற முடியும்.

நாகர்கோவில் தொகுதியில் உங்கள் வெற்றிவாய்ப்பு எப்படி?

நாகர்கோவில் தொகுதி எனது சொந்த ஊர். இங்குள்ள அனைத்து மக்களும் எனக்கு பரிச்சயம் ஆனவர்கள். இங்கு எம்.பி.யாகவும் நான் இருந்திருக்கிறேன்; அப்போது பல மக்கள்நலப் பணிகளை நிறைவேற்றி இருக்கிறேன். அதனை மக்கள் மறக்க மாட்டார்கள்.

அடுத்ததாக, குமரி மாவட்டம் முழுவதுமே ஹிந்து விழிப்புணர்வு பரவலாக உள்ளது. சிறுபான்மையினரை தாஜா செய்வதற்காக பெரும்பான்மை மக்கள் வஞ்சிக்கப்படுவதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இந்த விழிப்புணர்வு எனக்கு மட்டுமல்லாது, குமரி மாவட்டத்தில் களத்திலுள்ள அனைத்து பாஜக வேட்பாளர்களுக்கும் சாதகம் அளிக்கும். பாஜக மட்டுமே அனைத்து மதத்தினரையும் சமமாகக் கருதுகிறது என்பதை மக்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளனர்.
இரு கழகங்களும் மாறி மாறி ஆண்டபோதும் மக்களின் வாழ்க்கை நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதால், புதிய மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். பாஜக அந்த வெற்றிடத்தை நிரப்பும். எனவே எனது வெற்றி உறுதி என்றே நான் நம்புகிறேன்.

tn_vote_bjp_1
(படம் மீது க்ளிக் செய்தால் பெரிய அளவில் தெரியும்)

திமுகவுக்கு பதிலான ஆட்சியை அமைக்க அதிமுகவால் மட்டும் தானே முடியும்? இந்நிலையில் பாஜகவுக்கு வாக்களிப்பது வீணாகாதா?

தமிழக தேர்தல் களம் இரு துருவங்களிடையே ஊசலாடுவது உண்மைதான். கருணாநிதிக்கு பதிலாக ஜெயலலிதா ஆட்சி அமைத்தாலும் கூட, வெறுப்பு அரசியல் நடத்தி வரும் கழகங்களிடையே ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாஜகவால் மட்டுமே செயல்பட முடியும். வரக்கூடிய ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை சட்டசபையில் போராடித் தீர்மானிக்கும் சக்தியாக பாஜக திகழும். தமிழக சட்டசபை பாஜகவுக்கு புதிதல்ல. 1996 லும், 2001 லும் சட்டசபையில் பாஜக இடம் பெற்றிருக்கிறது. அப்போது எமது உறுப்பினர்கள் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயலாற்றியதை அனைவரும் அறிவர்.

கருணாநிதிக்கு ஒரே மாற்று ஜெயலலிதா தான் என்ற சிந்தனை மக்களிடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால், இந்தச் சித்திரத்தை ஊடகங்கள் உருவாக்குகின்றன. கருணாநிதி, ஜெயலலிதா இருவரையும் விரும்பாத – நடுநிலை வாக்காளர்கள் பாஜகவை விரும்புகின்றனர். இரு கழகங்களின் சேற்றை இறைக்கும் பிரசாரத்தால், புதிய வாக்காளர்கள் மனம் நொந்துள்ளனர். அவர்களது ஆதரவும் பாஜகவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஹிந்து விழிப்புணர்வு குறித்து குறிப்பிட்டீர்கள். இதைத்தானே பிற கட்சிகள் பாஜக மீது குறையாக குற்றம் சாட்டுகின்றன?

ஹிந்து விழிப்புணர்வு என்பது தேச விரோதமானதல்ல. உண்மையில் இந்தியாவில்தான் சிறுபான்மை மக்களை விட தரம் தாழ்ந்தவர்களாக பெரும்பான்மை ஹிந்துக்கள் நடத்தப்படுகிறார்கள். இதனை பாஜக தட்டிக் கேட்கிறது. அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்பதை சுட்டிக் காட்டுகிறது பாஜக.

அனைவர்க்கும் பொது சிவில் சட்டம் தேவை என்று பாஜக கூறுவது அதனால் தான். ஆனால், நமது நாட்டில்தான், சிறுபான்மையினருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதும், சிறுபான்மை மதம் சார்ந்த மாணவர்களுக்கு மட்டும் கல்விக் கடனுதவி உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்படுவதும் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். இதனை பாஜக கடுமையாக எதிர்க்கிறது.

உலகின் எந்த நாட்டிலும் சென்று பாருங்கள்; அங்குள்ள பெரும்பான்மை மக்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆனால் இந்தியாவிலோ நிலைமை தலைகீழ். இதற்கு காரணம் சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த வாக்குவங்கி குறித்த அச்சம் தான். பெரும்பான்மையினர் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று பாஜக கூறவில்லை; அதே சமயம் தாழ்வாக நடத்தப்படக் கூடாது என்றே கூறுகிறது.

ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் அவர்களது வாக்குகள் பலகூறாகப் பிரிந்து விடுகின்றன. எனவே, அவற்றுக்கு தேர்தல் களத்தில் மதிப்பு குறைந்துவிடுகிறது. பேரம் பேசும் ஆற்றலுடன் உள்ள சிறுபான்மை மக்களை அரவணைக்க அரசியல் கட்சிகள் துடிக்கின்றன. இதனால் தான் சமூகத்தில் பரஸ்பர நம்பிக்கையின்மையும் பதற்றமும் ஏற்படுகின்றன. இந்நிலை மாற வேண்டும் என்பது பாஜகவின் விருப்பம். பாஜக சிறுபான்மையினரை வெறும் வாக்குவங்கியாகக் கருதவில்லை.

‘போலி மதச் சார்பின்மை’ பேசும் அரசியல் கட்சிகளின் சிறுபான்மையினர் மீதான பாசம் வெளிவேஷம் தான். சிறுபான்மையினரின் நவீனக் கல்வி உயரவும் பொருளாதாரம் உயரவும் உண்மையான முயற்சிகளில் ஈடுபடாத அரசுகள், அவர்களை எளிய முறையில் திருப்திப்படுத்த கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கின்றன. இது குறித்து சிறுபான்மையினரும் விழிப்புணர்வு பெற வேண்டும்.

பாஜகவின் மதச்சார்பின்மை மகாத்மா காந்தியின் ‘சர்வதர்ம சமபாவனை’ அடிப்படையிலானது. ஹிந்துக்களின் விழிப்புணர்வைத் தொடர்ந்து, அரசியலில் தவறுகள் சரி செய்யப்படும். இப்போது, சிறுபான்மையினரின் அடிப்படைவாத கட்சிகள் இடம் பெறாத ‘மதச்சார்பற்ற’ கூட்டணியே இல்லை எனலாம். அவர்கள்தான் பாஜக மீது குறை கூறுகிறார்கள். ஹிந்து தெய்வங்களை அவமதிப்பவர்களும், ஹிந்து பண்பாட்டை கேலி பேசுபவர்களும் தான் பாரதீய ஜனதாவைக் கண்டு அலறுகிறார்கள். ஜாதியையும் மதத்தையும் கருவியாகப் பயன்படுத்தும் ‘செக்யூலர்’ வாதிகளுக்கு பாஜகவை குறை கூற தகுதி இல்லை.

இரு கழகங்களுக்கு ஈடு கொடுப்பதாக எந்தக் கட்சியும் தமிழகத்தில் இல்லையே, ஏன்?

தமிழகத்தில் தேசியக் கட்சியின் ஆதிக்கம் இழந்து 44 ஆண்டுகளாகிவிட்டன. காங்கிரஸ் கட்சியின் குறைபாடுகளே இந்நிலைக்கு வித்திட்டன. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் தேய்ந்திருக்கிறது. நாட்டிலேயே எங்கும் இல்லாத வகையில் இலவசங்களை அள்ளி வீசி வாக்காளர்களை பிச்சைக்காரராக்கும் போக்கு தமிழகத்தில் மட்டும்தான் காணப்படுகிறது. பகுத்தறிவு, சுயமரியாதை என்ற பெயரில் அரசியல் நடத்திய கழகங்களின் ஆட்சியில், மக்களின் சுயமரியாதை அடகு வைக்கப்படுகிறது. உயர்ந்த நாகரிகத்தின் சின்னமாக விளங்கிய தமிழகம், இன்று இலவச வாக்குறுதிகளின் மாநிலமாகி விட்டது. இந்நிலையை மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டே பாஜக செயல்படுகிறது.

உண்மையில், தமிழகத்தில் இரு கழகங்களும் ஏற்படுத்தி இருக்கும் வலிமையான தோற்றம் ஒரு மாயை. இந்த இரு கழகங்களும் யாருடனும் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டால்தான், இக்கட்சிகளின் சுயவலிமை மக்களுக்கு தெரியும். அதனைத் தவிர்க்கவே பிரமாண்ட கூட்டணிகளை கழகங்கள் அமைக்கின்றன. பிற சிறு கட்சிகள் இந்த வியூகத்தில் சிக்கிக் கொள்கின்றன. பாஜகவும் இந்த சூழலில் தவித்த கட்சிதான். இப்போது நிலைமையை உணர்ந்து, தனித்து போட்டியிட்டு எமது வலிமையை உணரவும் உணர்த்தவும் முயற்சிக்கிறோம். பெருத்த மாற்றம் எதுவும் உடனடியாக வந்துவிடாது. ஆனால், தொடர் முயற்சி இருந்தால் கழகங்களின் மாயையை முறியடிக்க முடியும்.

tn_vote_bjp_2
(படம் மீது க்ளிக் செய்தால் பெரிய அளவில் தெரியும்)

இரு கழகங்களும் இலவச திட்டங்களை அறிவித்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. பாஜகவும் இந்தப் போட்டியில் குதிக்க வேண்டுமா? மாணவர்களுக்கு இலவச லேப்டாப், விவசாயிகளுக்கு இலவச பசு போன்ற திட்டங்களை பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது தேவையா?

முதலில், விவசாயிகளுக்கு இலவச பசு வழங்குவதாக பாஜக கூறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நமது நாடு விவசாய நாடு. பசுவே விவசாயியின் காமதேனுவாகத் திகழ்ந்து வந்தது. ஆனால், விவசாயத்தின் நலிவு காரணமாக, பசு வளர்ப்பும் அருகி வருகிறது. எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு பால் வேண்டுமானால்கூட இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படலாம். இந்நிலையைத் தவிர்க்கவே, குறைந்த விலையில், ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு மட்டும் பசுக்களை வழங்குவோம் என்று பாஜக கூறியுள்ளது. இதன்மூலமாக, விவசாயக் குடும்பங்களின் பொருளாதாரமும் உயரும்; விவசாயமும் மேம்படும் என்பது பாஜகவின் நம்பிக்கை.

அடுத்து கம்ப்யூட்டர் லேப்டாப் வழங்குவது குறித்த தேர்தல் வாக்குறுதி. வரும்காலத்தில் கம்யூட்டர் இல்லாத உயர்கல்வியை கற்பனை செய்ய முடியாது. ஆனால் அனைத்து மாணவர்களாலும் லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்க முடியாது. அத்தகையவர்களுக்கு அரசு லேப்டாப் வழங்குவது மாணவர்களின் கல்வி உயர வழிவகுக்கும். இதனை இலவச தொலைக்காட்சிப்பெட்டி போல கருதக் கூடாது.

பள்ளி மாணவர்களுக்கும் இலவச எழுதுபொருள்களை வழங்குவதாக பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். பேனா வாங்கக் கூட காசில்லாத ஏழை மாணவர்கள் இன்றும் உள்ளனர். அவர்களது படிப்பை தொடரச் செய்யவும், கல்வி மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும் இது உதவும். பாஜக, மீனை இலவசமாகக் கொடுக்குமாறு கூறுவதில்லை; மீன் பிடிக்க கற்றுத் தருவதையே பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் பாரபட்சமற்ற முறையில் கல்விக் கடனுதவி வழங்கக் கோரி நீங்கள் நடத்திய தாமரை யாத்திரை இந்தத் தேர்தலில் பிரதிபலிக்குமா?

சிறுபான்மை மதம் சார்ந்த மாணவர்களுக்கு மட்டும் அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையானது மாணவப் பருவத்திலேயே பிளவு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. இதனை பொருளாதார அடிப்படையில் அனைத்து ஏழை மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் நான் நடத்திய யாத்திரைக்கு பெருவாரியான வரவேற்பு கிடைத்தது. அந்த வரவேற்பு, இத்தேர்தலில் கண்டிப்பாக வாக்குகளாகப் பிரதிபலிக்கும் என்றே கருதுகிறேன்.

மக்களைப் பிளக்கும் பாகுபாடான சலுகைகளை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம், தமிழக மக்களிடம் அந்த யாத்திரையால் வெற்றிகரமாகக் கொண்டுசேர்க்கப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்கள் எதிலும் மாணவர்களுக்கு மதரீதியாக சலுகையோ, பாரபட்சமோ காட்டப்படுவதில்லை. நரேந்திர மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் தான் சிறுபான்மையினரின் பொருளாதார வளர்ச்சி நாட்டிலேயே அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே கவர்ச்சிகரமான திட்டங்களை விடுத்து ஆக்கப்பூர்வமான திட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்று பாஜக அறிவுறுத்துகிறது.

இம்முறை தமிழக தேர்தல் களத்தில் பாஜக முன்னணித் தலைவர்களின் வருகை அதிகமாக இருப்பது போலத் தெரிகிறதே?

உண்மைதான். தேசியத் தலைவர் நிதின் காட்கரி, மூத்த தலைவர் அத்வானி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, முன்னாள் தலைவர்கள் ராஜ்நாத் சிங், வெங்கைய நாயுடு, பங்காரு லட்சுமணன், மாநில முதல்வர்கள் நரேந்திர மோடி (குஜராத்), சிவராஜ் சிங் சவ்கான் (ம.பி) உள்பட பல முன்னணி தலைவர்கள் இம்முறை பாஜகவின் வெற்றிக்காக தமிழகத்தில் பிரசாரம் செய்கின்றனர். தமிழகம் என்றும் தேசியம் மற்றும் தெய்வீகத்தின் பக்கமாகவே இருந்துள்ளது. இடைக்காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து தமிழகத்தை மீட்க, அகில பாரத தலைவர்களின் ஆதரவுடன் தமிழக பாஜக போராடுகிறது.

முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.என்.லட்சுமணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும், பிற மாநில நிர்வாகிகளும் கட்சியின் வெற்றிக்காக அயராது பிரசாரம் செய்கின்றனர். தவிர பல்வேறு ஹிந்து இயக்கங்களும் பாஜகவுக்கு மனப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கி உள்ளன. பாரதீய மஸ்தூர் சங்கம், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவு பாஜகவுக்கு உந்துசக்தியாக உள்ளது.

தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் வெல்வோம் – பங்காரு லக்ஷ்மண்


இந்த தேர்தலின் முடிவு எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

தமிழகம் பண்பாட்டின் சின்னமாகவும், தொழில்துறையில் முன்னேறிய மாநிலமாகவும் விளங்கியது. இந்நிலை இரு கழகங்களின் தொடர் ஆட்சியால் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. காமராஜர், கக்கன் போன்ற தன்னலமற்ற தலைவர்கள் வாழ்ந்த இதே தமிழகம்தான், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் மூலமாக தமிழகத்தின் மானத்தை வாங்கி இருக்கிறது. சுயநல அரசியல், குடும்ப அரசியல், ஊழல் ராஜாங்கத்தில் புதிய சிகரங்களை திமுக உருவாக்கியுள்ளது. இதற்கு ஒரே தீர்வு திமுக ஆட்சி நீக்கப்படுவதுதான்.

நமது அண்டைநாடான இலங்கையில் நடந்த போரில் லட்சக் கணக்கான தமிழ் மக்கள் பலியானபோது ‘தமிழ் முழக்கம்’ மட்டும் செய்துகொண்டு கண்டும்காணாமல் இருந்த கட்சி திமுக. இலங்கைத் தமிழரின் பேரழிவில் மத்தியில் ஆளும் காங்கிரசுக்கும் பங்குண்டு. எனவே இரு கட்சிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.

விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என திமுக ஆட்சியின் ‘சாதனை’களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் காரணமான கருணாநிதி ஆட்சி வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும். தமிழகத்தில் ஊழல் ஆட்சி அகற்றப்படுவது, மத்தியிலும் ஆட்சிமாற்றத்திற்கு வழிகோலும்.

எனவே, தமிழக வாக்காளர்கள் தீர ஆலோசித்து நல்ல முடிவை வாக்குப்பதிவில் காட்ட வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் எந்த அளவு அவசியமோ, அதேபோல, பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் பங்களிப்பும் அவசியம். அந்த வகையில் சீரிய முறையில் செயல்படத் தயாராக உள்ள தேசியக் கட்சியான பாரதீய ஜனதாவை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

திமுக- காங்கிரஸ் கூட்டணி தண்டிக்கப்பட வேண்டும்; தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும்; பாஜக குறிப்பிடத் தக்க வெற்றிகளுடன் சட்டசபை செல்ல வேண்டும். தமிழக மக்களிடம் பாஜக எதிர்பார்ப்பது இம்மூன்றையும் தான்.

9 Replies to “தேர்தல் களம்: பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி”

  1. நாகர்கோவிலில் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் வெற்றி பெறுவது உறுதி என்று தினமணி உட்பட பல பத்திரிகைகள் எழுதுகின்றன. இது போன்ற நிலை ஓரிரு தொகுதிகளிலும் இருக்கின்றன. முதலில் குறைந்தது பத்து தொகுதிகளிலாவது பா.ஜ.க. வெற்றி பெறுமானால் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் பா.ஜ.க. ஒரு நிலையான சக்தியாக விளங்க முடியும். மணச்சநல்லூர் தொகுதியில், கல்வியாளர் திரு எம்.சுப்பிரமணியம் பா.ஜ.க.வில் ஒரு நம்பிக்கைத் தரக்கூடிய வேட்பாளர். அங்கு அவர் வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும். எப்பாடு பட்டாவது பா.ஜ.க. பத்து இடங்களைப் பிடிப்பது என்ற குறிக்கோளோடு பணியாற்றினால் முடியும். ஒரு முறை பா.ஜ.க. வந்து விட்டால், அவர்களது திராவிட இயக்கத்தைப் போலில்லாமல் மாறுபட்ட செயல்பாட்டால், தன்னலமற்ற பணிகளால், நிச்சயம் தமிழ்நாட்டில் மீண்டும் தேசிய ரத்தம் பாயத் தொடங்கும். அந்த நல்ல காலம், பொற்காலம், இந்த தலைமுறையிலாவது வரவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக் கொள்வதைத் தவிர நாம் இப்போது செய்யக் கூடியது எதுவும் இல்லை.

  2. //
    உண்மையில், தமிழகத்தில் இரு கழகங்களும் ஏற்படுத்தி இருக்கும் வலிமையான தோற்றம் ஒரு மாயை. இந்த இரு கழகங்களும் யாருடனும் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டால்தான், இக்கட்சிகளின் சுயவலிமை மக்களுக்கு தெரியும். அதனைத் தவிர்க்கவே பிரமாண்ட கூட்டணிகளை கழகங்கள் அமைக்கின்றன. பிற சிறு கட்சிகள் இந்த வியூகத்தில் சிக்கிக் கொள்கின்றன. பாஜகவும் இந்த சூழலில் தவித்த கட்சிதான். இப்போது நிலைமையை உணர்ந்து, தனித்து போட்டியிட்டு எமது வலிமையை உணரவும் உணர்த்தவும் முயற்சிக்கிறோம். பெருத்த மாற்றம் எதுவும் உடனடியாக வந்துவிடாது. ஆனால், தொடர் முயற்சி இருந்தால் கழகங்களின் மாயையை முறியடிக்க முடியும்.
    //

    அருமை. வாழ்த்துக்கள்.

    இப்போது நடக்கிற பிரசாரத்தை எல்லாம் பார்க்கும் போது, பி.ஜே.பிக்கு நல்ல பேச்சாளர்கள் இல்லை என்று தோன்றுகிறது… அவர்கள் எப்படியாவது ஒரு நூறு பேச்சாளர்களையாவது அங்கங்கே உருவாக்க வேண்டும்.

  3. தமிழக பா.ஜ.க கட்சி மீது என்னுடைய குற்றச்சாட்டு:
    தலைவரே சில மாவட்டங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவதாக
    கூறுகிறார். ஆனாலும் 193 தொகுதிகளில் பா.ஜ.க நிற்கிறது.

    மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி 208 தொகுதிகளில்
    மட்டுமே நிற்கிறது.

    ஏன் மீதமுள்ள 26 தொகுதிகளில் போட்டியிடவில்லை? எங்கள் தொகுதியில்
    பா.ஜ.க நிற்காததால் நான் பா.ஜ.கவின் மீது கடும் அதிருப்தி அடைந்து
    உள்ளேன். ஹிந்துத்துவாவை வாய் கிழிய பேசி விட்டு, ஹிந்து
    துரோகிகளுக்கு எப்படி வாக்களிக்க முடியும்?

    என்ன கொடுமை ஸார் இது?

  4. இந்த முறை என் ஓட்டு பா ஜ க விற்குதான். விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் திரு ஸ்ரீதரன் பிரச்சாரம் நன்றாகவே இருந்தது.

  5. We didnot know that a BJP candidate was in the fray in the Katpadi constituency of Vellore District, until We went to the booth to vote and saw the model vote list. The BJP need not match the Dravidian parties in the massive electioneering, and in the fradulent practices; but the candidate can atleast visit all the areas in the constituencies , do door to door canvassing and give handouts to the voters. In the other parties only the leaders are ‘white-collared’ , while in the BJP even the workers are ‘white-collared’. Fighting an election is not easy and if you are not prepared to do even the door-to-door canvassing you must not contest. Mr.Pon Radhakrishnan, as leader of the BJP , has a tough task on hand to first alter the mindset of the BJP workers and supporters.

  6. I RETURNED FROM GUJARATH KUTCH DISTRICT YESTERDAY ONLY TO CAST MY VOTE FOR BJP BECOUSE PEOPLE IN GUJARAT SAYS IN NEXT 20 YEARS OR MORE CONGRESS HAS NO SCOPE IN GUJARAT BECOUSE MODI IS GIVING GOOD ROADS, 24 HOURS POWER AND WATER EVEN TO DESERT AREAS WHERE I TRAVELLED TO MANY REMOTE DESERT AREA I FOUND THE ROADS ARE VERY GOOD AND POWER SUPPLY IS THERE FOR LIGHTS
    BUT OUR DRAVINDAN PARTIES MIGHT THINKG WHY GOOD ROADS TO REMOTE AREAS WHERE JUST 100 PEOPLE LIVE. DRAVIDAN PARTIES THINK OF VOTE BANK LIKE THEY MORE GIVE PROMISES TO CHRISTIANS AND MUSLIMS. JAYALALITHA GIVES PROMISES TO CHRISTIANS IN KANYAKUMARI THAT SHE WILL GIVE SUBSIDY TO CHRISTIANS FOR GOING TO JERUSALAM LIKE HAJI TRIP FOR MUSLIMS. WHAT ABOUT MAJORITY HINDUS? HINDUS ARE FOOLED AND BECOME INERT AND THEY FORGET THE PAST. WHEN SANKARACHAIYAR WAS ARRESTED BY JAYALALITHA, THEY HAD HIS IMAGE TARNISHED IN HER JAYA TV EVERY DAY. HER FOSTERSON M V SUDAKARAN WHOSE MARRIAGE WAS CONDUCTED BY JAYALALITHA WITH 80 CRORES MONEY ( CORRUPT MONEY ) AND LATER SHE GOT HER FOSTERSON ARRESTED IN A FALSE CASE OF DRUGS. WHAT HAPPENED TO VAI KO WHO WAS PUT IN JAIN UNDER POTA FOR HIS SPEECH BY JAYALALITHA. SAME WAY JAYALALITHA HAD ACID THROWN ON THE FACE OF CHANDRALEKA AND SHE DESERTED SUBARAMANIYAN SWAMY AFTER GETTING ALL INFORMATION ABOUT 2-G SCAM DETAILS FROM HIM. JAYALALITHA IS THE MOST BETROYER AND WORST THAN CORRUPT KARUNANIDHI. SO ONE SHOULD VOTE OUT OF BOTH THE PARTIES FROM T N STATE.

  7. தியாகிகள் நிறைந்த ஒரு அமைப்பாக பாஜக இருப்பது ஒரு நல்ல விஷயம். தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் போட்டியிட்டு , அதன் பிறகே சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் எல்லா தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும்.

    பாஜக சுமார் இருநூறு தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து நிற்பதால் இந்த சட்ட சபை தேர்தல்களில் ஒரு உபயோகமும் இல்லை. குறிப்பிட்ட இருபத்தைந்து தொகுதிகளை தேர்ந்தெடுத்து , அவற்றில் மட்டும் நல்ல கடும் உழைப்பை செலுத்தி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும்.

    எல்லா தொகுதிகளிலும் போட்டியிடுவது என்பது, இருக்கும் சக்தியை விரயம் செய்வதாகும். இதனால் யாருக்கும் உபயோகம் இல்லை.இந்த தேர்தல் தேசவிரோத சக்தியான காங்கிரசுக்கும், அதன் கூட்டணி ஊழல் குடும்பமாகிய திமுகவிற்கும் எதிராக மக்கள் மௌனமாக ஒரு இயக்கம் நடத்திவருகிறார்கள்.

    இந்த நேரத்தில் பாஜக இவ்வளவு அதிக தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தியிருக்க கூடாது என்று எல்லோரும் கருதுகிறார்கள். அவர்கள் கருத்து சரியா என தேர்தல் முடிவுகள் வெளிவரும் மே பதிமூணாம் நாள் தான் தெரியும்.

  8. அட பாவிங்களா. பொய்மைக்கு அளவே இல்லையா? இதே பா.ஜ.க ஆட்சியில் கூட மீனவர்கள் கொல்லபட்டார்கள். அப்போதைய பிரதமர் வாஜ்பாய் என்ன செய்து விட்டார்? சும்மா நடிக்காதீங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *