அவ்வரங்கள் இவ்வரங்கள்

rama-lord-of-boons-2

எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த இறைவனுக்குத்தான் எத்தனை பெயர்கள்!

ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ? 

என்கிறார் மணிவாசகர். அதில் ஒரு பெயர் வரதன். வரதன் என்றால் வரங்களை அளிப்பவன் என்று பொருள். இறைவியையும் ‘வரதே‘ என்று போற்றுகிறார்கள். அதனால் தான் பாரதியும்,

நின்னைச்சில வரங்கள் கேட்பேன் –அவை
நேரே இன்றெனக்குத் தருவாய்! எந்தன்
முன்னைத் தீயவினைப் பயன்கள்- இன்னும்
மூளாதழிந்திடுதல் வேண்டும்- இனி
என்னைப் புதிய உயிராக்கி-எனக்
கேதும் கவலையறச் செய்து-மதி
தன்னை மிகத்தெளிவு செய்து-என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.

என்று பல வரங்களைக் கேட்கிறார்.

 
இந்த வரம் தருவாய்

சர்வசமய சமரசக் கீர்த்தனைகள் பாடிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையவர்கள் இறைவனிடம் இப்படி வரம் கேட்கிறார்–

சூது, பொறாமை, பொய், கோபமில்லாமல்
சோரம், உலோபம், துன்மார்க்கமில்லாமல்
வேத நெறியை விலக்கி நில்லாமல்
வேத நாயகா விளம்பம் சொல்லாமல்
இந்த வரம் தருவாய், எனக்கெந்த
வரங்களும் இல்லையென்றாலும் (இந்த)

நம் இதிகாச, புராணங்களில் வரங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. வரங்கள் கேட்பதையும் கொடுப்பதையும் காணலாம். இராமகாதை வரங்கள் காரணமாகவே வளர்கிறது. இராமாயணக் கதாநாயகனான இராமன் பிறப்பதற்கு முன்பே கொடுக்கப்பட்ட இரு வரங்கள் இராமனை முடிசூடவிடாமல் செய்ததோடு அவனை வனவாசியாகவும் மாற்றுகிறது.

 
சம்பராசுரப்போர்

சம்பராசுரப்போரில் இந்திரனுக்கு உதவி செய்வதற்காக அயோத்தி மன்னரான தசரதர் செல்கிறார். போரில் கழுகின் வேந்தனான ஜடாயுவும் உதவி செய்ய வருகிறான். அந்தப் போரில் தசரதனின் மனைவி கைகேயி வெகு திறமையாகத் தேரோட்டுகிறாள். அவள் மிக இலாவகமாகத் தேரோட்டி தசரதன் வெற்றிக்கு உதவுகிறாள். கைகேயியின் சாரத்யத்தை மெச்சிய தசரதர், அவளுக்கு வெகுமதியளிக்கும் விதமாக இரு வரங்களை அளிக்கிறார். தேவர்கள் சாட்சியாக அவர் அளித்த வரங்களை அவள் எப்பொழுது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்கிறார்.

 

கூனியின் ஆலோசனை

kaikeyi-and-kooniவிடிந்தால் இராமனுக்குப் பட்டாபிஷேகம்! கைகேயியின் செவிலித்தாயான கூனி இராமனின் பட்டாபிஷேகத்தைத் தடுத்து நிறுத்த விழைகிறாள். இராமன் சிறுவனாக இருந்தபோது தன் கூனல் முதுகில் வில் உருண்டையால் விளையாட்டாக அடித்ததை இப்பொழுது நினைத்துப் பார்க்கிறாள். எனவே கைகேயியிடம் சென்று அந்த வரங்களைப் பற்றி நினைவூட்டி பட்டாபிஷேகத்தைத் தடுக்க நினைக்கிறாள். பால் போலிருந்த கைகேயியின் மனத்தை மாற்ற பல முயற்சிகள் செய்து கடைசியில் வெற்றியும் பெறுகிறாள். தேவர்கள் தவத்தாலும் அரக்கர்கள் அவத்தாலும் தூய தேவியின்(கைகேயி) தூய சிந்தை திரிந்து போகிறது
 
 
கைகேயி கேட்ட வரங்கள்

விடிந்தால் இராமனுக்கு முடிசூட்டுவிழா என்ற சந்தோஷமான செய்தியைக் கைகேயியிடம் தானே நேரில் சொல்ல வருகிறார் தசரதர். கூனியின் துர்ப்போதனையால் சிந்தை திரிந்த கைகேயி தசரதரால் முன்பு தனக்களிக்கப்பட்ட இரு வரங்கலையும் தர வேண்டுமென்று கேட்கிறாள். கைகேயியின் சூழ்ச்சியை உணராத தசரதர், உன் மகன் இராமன்மேல் ஆணை, நீ கேட்கும் வரங்களை இப்பொழுதே தருவேன் என்கிறார்.

கைகேயி வரங்களைச் சொல்கிறாள்–

“ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது: சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது;” எனப் புகன்று நின்றாள்
தீயவை யாவினும் சிறந்த தீயாள்.

தீமையான விஷயங்கள் எல்லாவற்றையும் விடத் தீயவளான கைகேயி, “என் இரண்டு வரங்களில் ஒரு வரத்தால் என்மகன் பரதன் நாடாள வேண்டும். மற்றொரு வரத்தால் சீதை கணவன் (இராமன்) காடாளச் செல்ல வேண்டும்,” என்கிறாள். தசரதர், இராமனை உன் மகன் என்று கைகேயியிடம் சொல்கிறார். ஆனால் அன்றுவரை வேற்றுமையறியாத கைகேயி, இப்பொழுது சிந்தை திரிந்ததால் இராமனை, ‘உங்கள் மகன்’ என்றோ, ‘கோசலை மகன்’ என்றோ கூடச் சொல்லாமல் யாரோ மூன்றாம் வீட்டுப் பையனைச் சொல்வது போல ‘சீதை கேள்வன்’ என்று குறிப்பிடுகிறாள். அந்த அளவுக்கு மனம் மாறி விட்டது!

 
kaikeyi-asking-boonsதசரதரின் தர்மசங்கடம்

இதைச் சற்றும் எதிர்பாராத தசரதர் இடியோசை கேட்ட நாகம் போலக் கலங்குகிறார். பலவிதத்திலும் கைகேயிக்கு அறிவுரை சொல்கிறார். ஆனால் அவளோ ஒரே பிடிவாதமாக இருக்கிறாள். தன் உயிரையும் மாய்த்துக் கொள்வேன் என்று கூடச் சொல்கிறாள். இதைக்கேட்ட தசரதர், “நீயே வேண்டுமானாலும் ஆட்சி செய். ஆனால் என் உயிரான இராமனை மாத்திரம் வனம் போகச் சொல்லாதே. அதை மட்டும் மறந்துவிடு!” என்று மன்றாடுகிறார். 

 
“கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன்
என் உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ?
பெண்ணே! வண்மைக் கைகேயன் மானே! பெறுவாயேல்
மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற”

என்றான்.

“பெண்ணே! உன் தந்தை எவ்வளவு வள்ளல் தன்மை உடையவர்! அவருடைய மகளான உனக்கும் அந்த வண்மைக்குணம் இருக்க வேண்டாமா? என் கண்களை வேண்டுமானாலும் தருகிறேன். ஏன், அதை விடச் சிறந்த உயிரை வேண்டுமானாலும் அதையும் தருகிறேன். உனக்கு ராஜ்யம் வேண்டுமென்றால் நீயே ஆண்டுகொள். ஆனால் மற்றொரு வரத்தை மட்டும் கேட்காதே” என்கிறார். தன் வாயால், இராமனைக் காட்டுக்குப் போக வேண்டும் என்று சொல்லவும் நா எழும்பவில்லை. ஆனால் கைகேயி தான் கொண்ட எண்ணத்தை விடுவதாயில்லை.

 
இருவரையும் துறத்தல்

அங்கு வந்த குலகுருவான வசிஷ்டரும் செய்தியறிந்து கைகேயியிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்கிறார். ஆனால் கைகேயியின் பிடிவாதம் தளரவேயில்லை. இதைக் கண்ட தசரதர் மிகவும் வேதனையும் ஆத்திரமும் அடைந்து

 
இன்னே பலவும் பகர்வான் இரங்காதாளை நோக்கிச்
சொன்னேன் இன்றே, இவள் என் தாரம் அல்லள் துறந்தேன்
மன்னே ஆவான் வரும் அப் பரதனையும் மகன் என்று
உன்னேன், முனிவா! அவனும் ஆகான் உரிமைக்கு

என்றான்.

ramayanam2

கைகேயியின் பிடிவாதத்தைக் கண்டு வெறுப்படைந்த தசரதர், “இந்த நொடியிலிருந்து இவள் என் தாரம் இல்லை. இவளைத் துறந்து விட்டேன்,” என்கிறார். கைகேயி மேல் இருந்தகோபமும் வெறுப்பும் ஒரு பாவமும் அறியாத அவள் மகனான பரதன் மேலும் பாய்கிறது. “மன்னனாக முடிசூட்டிக் கொள்ளப் போகிறானே அந்தப் பரதனையும் என் மகன் என்று சொந்தம் கொண்டாட மாட்டேன். இனி எனக்கும் அவனுக்கும் எந்த உறவும் இல்லை. என்னுடைய அந்திமக் கிரியைகளையும் செய்ய அவனுக்கு உரிமை கிடையாது!” என்று வசிஷ்டரை சாட்சியாக வைத்துச் சொல்கிறான். சுமந்திரன் வந்து சீதாஇராம லட்சுமணர் மூவரும் வனம் சென்ற செய்தியைச் சொல்ல தசரதர் உயிர் பிரிகிறது.

 
இராமன் கேட்ட வரங்கள்

இப்படி தசரதர் இரு கட்டளைகளால் துறந்த அந்த உறவை 14 ஆண்டுகள் கழித்து இராமன் புதுப்பிக்க விழைகிறான். தசரதரிடமிருந்தே இரு வரங்கள் பெற்று அறுபட்ட உறவை மறுபடியும் புதுப்பிக்கிறான். 14 வருடங்களாக இராமன் மனதில் இது உறுத்திக்கொண்டே இருந்திருக்கலாம். தன் மீதுள்ள அன்பினால்தானே தந்தை இருவரையும் துறந்து விட்டார் என்ற குற்ற உணர்ச்சி கூட இராமனுக்கு இருந்திருக்கலாம். தக்க சமயம் வந்த்தும் ஒரு பரிகாரம் தேடுகிறான்.

இராம இராவண யுத்தம் முடிந்தபின் சீதை அக்கினிப் பிரவேசம் செய்கிறாள். அக்கினி தேவனே சீதையை இராமனிடம் ஒப்படைக்கிறான். சிவபெருமான், சுவர்க்க லோகத்தில் இருந்த தசரதரிடம் சென்று, “உன் மகன் இராமன் மனதிலுள்ள துன்பத்தைப் போக்குவாய்,” என்று சொல்ல, தசரதன் நேராக யுத்த பூமிக்கே வருகிறான். தந்தையைக் கண்ட இராமன் அவர் அடிகளில் விழுந்து வணங்குகிறான். விழுந்து வணங்கிய இராமனை வாரி எடுத்து மார்புறத் தழுவிய தசரதன், “இராமா! அன்று கைகேயி கொண்ட வரம் என்ற வேல் என் மார்பிலேயே தங்கி இன்றுவரை என்னைத் துன்புறுத்தி வந்தது. என்னைக் கொன்ற பின்பு கூட அது என்னை விட்டு நீங்கவில்லை. ஆனால் இன்று உன்னைத் தழுவியவுடன் உன் மார்பு என்னும் காந்த மணியால் அது ஈர்க்கப்பட்டு வெளியேறி விட்டது” என்று மகிழ்ச்சியடைகிறான்.

பின் அருகிலிருந்த இலக்குவனை நோக்கி, “மைந்தா! உன் தமையனைப் பின்தொடர்ந்து சென்று 14 வருடங்களும் அவனுக்குச் சேவை செய்தாய். என் மனப்புண்ணையும் போக்கி விட்டாய். இந்திரஜித்தை வென்று அழியாப் புகழ் பெற்றாய்!” என்று பாராட்டுகிறான்.

மறுபடியும் இராமனிடம், இராமா! உன்னை விண்ணுலகம் சென்றுதான் காண முடியும். அப்பொழுதுதான் என் துயரம் தீரும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இன்றே இங்கேயே உன்னைக் கண்டு விட்டேன். இதைவிட வேறு என்ன வேண்டும்? உனக்கு என்ன வேண்டுமோ கேள்” என்கிறான்.

இராமன் என்ன கேட்கிறான்?

 
’ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று உரை’ என, அழகன்
”தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக” எனத் தாழ்ந்தான்
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர் எலாம் வழுத்தி

 

ramayanam14 ஆண்டுகளுக்கு முன் தசரதன் அறுத்தெறிந்த உறவைப் புதுப்பிக்கிறான் இராமன்! தசரதன் கைகேயியை மனைவியாக ஏற்றுக் கொண்டால்தான் இராமன் அவளைத் தாய் என்று அழைக்க முடியும். அது போலவே தசரதன், பரதனை மகனாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே இராமன் பரதனைத் தம்பி என்று உறவு கொண்டாட முடியும். வரம் கேட்ட பொழுது கைகேயி என்ன சொன்னாள்? இராமனை, சீதை கேள்வன் என்றாள். ஆனால் இங்கு இராமன் என்ன சொல்கிறான்? எந்தாய் என்று கூடச் சொல்லாமல் அதற்கும் ஒருபடி மேலே போய், ‘என் தெய்வம்’ என்கிறான்.

அவதார நோக்கத்தின் காரணமாகவே தூயதேவி சிந்தை திரிந்தது என்பான் கம்பன்.

அவதார நோக்கத்திற்கு உதவி புரிந்த தூயதேவியைத் (கைகேயி) தெய்வமாகவே ஆக்கி விடுகிறான் இராமன்!

இராமன் பேசியதைக் கேட்ட தசரதன், “வரத! கேள். நீ வேண்டியபடி பரதன் உனக்குத் தம்பியாகட்டும். ஆனால் உனக்குச் சூட்ட வேண்டிய மணிமுடியைப் பறித்ததோடு அமையாமல் உனக்கு இம்மரவுரியையும், ஜடாமுடியை யும் தந்த பாவிமேல் உண்டான கோபம் இன்னும் நீங்கவில்லை” என்று மனக்கசப்போடு கூறுகிறான்.

கைகேயியிடம் ஏற்பட்ட வெறுப்பும் கோபமும் நீங்கவில்லை என்றால், அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ளாதவரை பரதன் எப்படி மகனாக ஆக முடியும்? இராமனுக்குத் தம்பி எப்படிக் கிடைப்பான்? எனவே இராமன், தசரதனிடம் கைகேயிக்காக பலவிதமாக வாதாடுகிறான். “அரசுரிமையை ஏற்க நான் சம்மதம் தெரிவித்ததுதான் தவறு. இதில் அன்னையாகிய கைகேயி செய்த தவறு என்ன?” என்றும் வாதாடுகிறான்.

தசரதனும் இப்படி எண்ணிப் பார்க்கிறான். கைகேயி வரம் கேட்டதால் தானே இராமன் வனவாசம் மேற்கொண்டு பல அசுரர்களையும் வதைத்து முனிவர்களுக்கு அபயம் அளித்திருக்கிறான். இராவண, கும்பகர்ணன், இந்திரஜித், கர, தூஷணன் போன்ற அசுரர்களையெல்லாம் நிக்ரகம் செய்து தேவர்களைக் காப்பாற்றியிருக்கிறான். இதையும் எண்ணிப் பார்க்கிறான் தசரதன்.

பண்டு நான் தொழும் தேவரும் முனிவரும் பராய்
கண்டு கண்டு எனைக் கைத்தலம் குவிக்கின்ற காட்சி
புண்டரீகத்துப் புராதனன் தன்னொடும் பொருந்து
அண்டமூலத்து ஒரு ஆசனத்து இருத்தினை அழக!

தேவர்களும் முனிவர்களும் தசரதனைப் பார்த்துக் கைகூப்பி வணங்குகிறார்களாம். சமபராசுரப் போரில் தசரதன் உதவியால் தான் இந்திரன் ஜெயித்தான். அந்தப் பெருமை இருந்தாலும் இப்போது அனைத்து அரக்கர்களையும் வென்றதால் தசரதன்மீது தேவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் மேலும் அதிகரிக்கிறதாம். அது மட்டுமா? தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனுக்குச் சமமாக அண்ட மூலத்தில் ஓர் ஒப்பற்ற ஆசனத்தில் வீற்றிருக்கக் கூடிய பெருமையையும் அடைந்து விட்டானாம் தசரதன்.

மகன் தந்தைக்காற்றும் உதவி
இவன் என்நோற்றான் கொல் எனும் சொல்

-என்ற குறளுக்கு இலக்கணமாக விளங்குகிறான் இராமன்.

இப்பெருமைக்கெல்லாம் மூலகாரணம் கைகேயிதானே, அவள் கேட்ட வரங்கள்தானே என்று எண்ணிப் பார்க்கிறான் தசரதன். இப்பொழுது கைகேயிமேல் இருந்த வெறுப்பு குறைகிறது. கோபம் தணிகிறது.
 
எவ்வரங்களும் கடந்தவன் அப் பொருள் இசைப்ப,
தெவ்வரம்பு அறுகானிடைச் செலுத்தினாளுக்கு ஈந்த
அவ்வரங்களும் இரண்டு, அவை ஆற்றினார்க்கு ஈந்த
இவ்வரங்களும் இரண்டு என்றார் தேவரும் இரங்கி.

“பதினாலு ஆண்டுகள் வனவாசம் போகச்சொன்ன கைகேயிக்கு (தசரதர்) அளித்த வரங்களும் இரண்டு. அவ்வரங்களின்படி நடந்து வினை முடித்த இராமனுக்கு (தசரதன்) தந்த வரங்களும் இரண்டு” என்று தசரதன் சொன்னதைக் கேட்ட தேவர்களும் மனம் உருகினார்கள். இதன்பின் தசரதன் விமானம் ஏறி மேலுலகம் செல்கிறான்.

 
தேவர்கள் இராமனுக்கு அளித்த வரங்கள்

இலங்கை அரக்கர்கள் அனைவரும் மாண்டதால் மனமகிழ்ந்த தேவர்கள் இராமனிடம், வீரனே! நீ வேண்டும் வரத்தைக் கேள் என்று சொல்ல, “போரில் மாண்டுபோன வானரங்கள் எல்லாம் உயிர் பெற்று எழவேண்டும். அதோடு வானரங்கள் வசிக்கும் காடுகள், பெரிய மலைகள் போன்ற இடங்களில் காய், கனி, கிழங்கு, தேன் இவற்றோடு இனிய நீரும் நிரம்பியிருக்கட்டும் என்றும் விண்ணப்பிக்கிறான். தேவி சீதையைத்தேட, அணைகட்ட, போர் செய்ய உதவிய வானரக் கூட்டங்களை நன்றியோடு நினைக்கிறான் இராமன். இராமன் கேட்டபடியே எல்லா வளங்களையும் வானரங்கள் பெறட்டும் என்று தேவர்கள் வரமளிக்கிறார்கள்.

 
சீதைக்குக் கொடுத்த வரம்

தசரதன் கைகேயிக்கு வரம்கொடுத்தது போலவே இராமனும் சீதைக்கு ஒரு வரம் கொடுத்திருக்கிறான் என்பதை சீதையின் வாயிலாக அறிகிறோம். அசோக வனத்திலே சிறையிருந்த செல்வியைக் காண்கிறான் அனுமன். இராமதூதனாகத் தன்னை அறிமுகம் செய்து கொண்டு கணையாழியைக் கொடுக்கிறான். அதைப் பெற்றுக் கொண்ட சீதை சில அடையாளங்களையும் சொல்கிறாள். இராமனுக்குச் செய்தியும் சொல்கிறாள்.

ramasita_wedding“என்னைக் கைப்பிடித்த சமயம் இராமபிரான் எனக்கொரு வரம் தந்தார். அதை அவருக்கு நினைவுப்படுத்த வேண்டும்,” என்கிறாள். அது என்ன வரம்? சீதையே சொல்லட்டுமே!

 
வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
“இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன்!”என்ற செவ்வரம்
தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்.

 

“அனுமானே! மிதிலைக்கு வந்து என்னைக் கைப்பிடித்த அந்நாளில் ஸ்ரீராமன் எனக்கொரு வரம் தந்தார். “இந்தப் பிறவியில் உன்னைத் தவிர வேறு பெண்ணை மனதாலும் தொடமாட்டேன்,” என்று சொல்லி வரம் தந்திருக்கிறார். அப்படிப்பட்ட சிறந்த வரம் தந்ததை அவரிடம் சொல்” என்கிறாள். ஒரு இல் ஒரு சொல் ஒரு வில். இராமனின் சிறப்பே அதுதானே!
 
 
சீதை கேட்ட வரம்

அதோடு இப்போது இன்னொரு வரம் கேட்கிறாள் பிராட்டி. இராமன், இந்த இப்பிறவியில் என்றுதானே சொல்லியிருக்கிறான். ஆனால் நான் அவனிடம் வைத்திருக்கும் காதலும் அன்பும் எப்படிப் பட்டது தெரியுமா?

 
“ஈண்டு நான் இருந்து இன் உயிர் மாயினும்
மீண்டு வந்து பிறந்து தன் மேனியைத்
தீண்டலாவதோர் தீவினை தீர் வரம்
வேண்டினாள் தொழுது” என்று விளம்புவாய்

 

sita-hanumanஇராமன் இலங்கையிலிருந்து தன்னை எப்படியும் மீட்டுக் கொண்டு போவான் என்ற நம்பிக்கையோடு தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் சிறையிருந்த செல்வி. இருந்தாலும் அவளுக்குக் கொஞ்சம் அவநம்பிக்கையும் இழையோடுகிறது. ஒருவேளை அவன் வந்து தன்னை மீட்கும் முன் உயிர் போய்விட்டால்? “மீண்டும் இன்னொரு பிறவி எடுத்து இராமனையே கணவனாக அடைவேன். இந்த பாக்கி யத்தை, இந்தப் பழுதற்ற வரத்தை, சீதை உன்னைத் தொழுது வேண்டினாள் என்பதையும் சொல்” என்கிறாள்.

இப்படி இராமன் தானாகவே சீதைக்கு வரம் கொடுத்ததையும், சீதை வரம் வேண்டியதையும் பார்க்கிறோம். இவையும் இரண்டு வரங்கள்.

 
பகைவனுக்கும் வரம் அருளும் பண்பு

தசரதனிடமும் தேவர்களிடமும் இராமன் வரங்கள் பெற்றதைப் பார்த்தோம். சீதாபிராட்டிக்கு இராமன் வரம் கொடுத்ததையும் சீதை இராமனிடம் தனக்கொரு வரம் தருமாறு கேட்டதையும் பார்த்தோம். பகைவனுக்கும் அருளும் பண்பாளனான இராமனிடம் கும்பகர்ணனும் இரு வரங்களைக் கேட்டுப் பெறுகிறான்.

kumbhakarnaசெஞ்சோற்றுக் கடன் தீர்க்கவே போர்க்களம் செல்கிறான் கும்பகர்ணன். விதி பிடித்து உந்துகிறது. மீண்டு வரமாட்டோம் என்ற எண்ணத்தோடேயே செல்கிறான். ஆயினும் அண்ணன் இராவணனுக்காகத் தன் வலிமையெல்லாம் காட்டி இராமனும் வியந்து பாராட்டும் வண்ணம் போர் செய்கிறான். என்றாலும் இராம பாணத்தால் வீழ்ந்து விடுகிறான். தன் முன் நிற்கும் இராமனிடம் எப்படிப் பேசுகிறான்!
“தன்னைச் சரணமடைந்த ஒரு புறாவுக்காகத் தராசுத் தட்டில் ஏறி அமர்ந்தானே சிபி, அவன் வழி வந்தவனே! அச்சிபியைப் போல் உன்னிடம் அடைக்கலமாக வந்திருக்கும் உயிரைக் காக்க வேண்டும். அவனுக்கு நீதியால் வந்த தருமநெறி தெரியுமே தவிர அசுரஜாதியால் வந்த அதர்மநெறி தெரியாது. வேதியா! அவனைக் காக்க வேண்டும். இரக்கம் இல்லாத இராவணன் இவனைக் கண்டால், உடன் பிறந்த தம்பியாயிற்றே என்றும் எண்ணிப் பார்க்க மாட்டான். கொன்றே விடுவான். அதனால் இராமா நீ, இலக்குவன், அனுமன் உங்கள் மூவரையும் என் தம்பி வீடணன் விட்டுப் பிரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இராவணக் கோபத்திலிருந்து நீங்கள் மூவரும்தான் பாதுகாக்க முடியும்.’’

“இன்னொன்று, மூக்கில்லாத என் முகத்தைத் தேவர்களும் முனிவர்களும் கண்டு ஏளனம் செய்யாதபடி உன் கணையால் என் கழுத்தை நீக்கிவிடு. அதன் பின் அந்தத் தலையைக் கடலில் கொண்டுபோய்த் தள்ளிவிடு. இவ்விரண்டு வரங்களையும் எனக்கருள வேண்டும்” என்று இறைஞ்சுகிறான் கும்பகர்ணன்.

பகைவனுக்கும் அருள்புரியும் இராமன், கும்பகர்ணன் விரும்பியபடியே அவன் தலை யைக் கடலில் அழுத்துகிறான். கும்பகர்ணன் சொன்னபடியே இராவணன் ஆத்திரமடைந்து வீடணன் மேல் வேலை ஏவி விடுகிறான். அதைத் தாங்கி ஏற்க சுக்ரீவன், அனுமன், அங்கதன், இலக்குவன் ஓடி வருகிறார்கள். சரணமடைந்த வீடணனைக் காப்பாற்றாவிட்டால் சரணாகத வத்ஸலனான இராமனுக்கு இழுக்கு வந்து விடுமே என்ற எண்ணத்தில் அனைவரையும் முந்திக் கொண்டு இலக்குவன் அந்த வேலை ஏற்று வீடணனைக் காப்பாற்றுகிறான்.

கும்பகர்ணன் கேட்ட இருவரங்களையும் நிறைவேற்றுகிறான் வள்ளலான இராமன்.

இப்படியாக, கைகேயி கேட்ட இரு வரங்களில் தொடங்கிய இராமகாதை இராமன் கேட்ட இரு வரங்களோடு முடிவடைகிறது.

 
 
[திருநெல்வேலி ஆல் இந்திய ரேடியோ நிலையத்தில் 06/11/09 அன்று திருமதி எஸ். ஜயலக்ஷ்மி அவர்களால் பேசி ஒலிப்பதிவு செய்யப்பட்டு 13/11/09 அன்று இரவு 9-30 மணியளவில் “இலக்கியவீதி” நிகழ்சியில் ஒலிபரப்பப் பட்டது.]

11 Replies to “அவ்வரங்கள் இவ்வரங்கள்”

  1. இலக்கியக் காட்சி மிக அழகாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ச்சுவை நிறைந்திருக்கிறது. கம்பநாடர் தந்த கவின் மிகு இராமாயணத்தை தமிழ்சுவஞைர்கள் பல நிலைகளில் நின்று ஆராய்வர். அதில் அவ்வரமும் இவ்வரமும் என்ற எண்ணச்சுவையும் இனிக்கிறது. தமிழ் கற்கும் மாணவர்கள், தமழ் ஆர்வலர்கள் எல்லோரும் படித்துப் பார்க்க வேண்டிய கட்டுரை இது.

    அதிலும் ஆங்காங்கே ம்கபரின் கவிகளை அப்படியே தந்திருப்பதும் செழுமைக்குச் செழுமை சேர்க்கிறது. இன்னும் அதனை விரிவு செய்திருக்கலாம். தமிழ்ஹிந்து வாசகர்கள் தமிழ் சுவைஞர்களாக… தமிழ் ஆர்வலர்களாக, இவ்வாறான கட்டுரைகள் உதவும் என நம்பலாம்.

    வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
    “இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச்
    சிந்தையாலும் தொடேன்!”என்ற செவ்வரம்
    தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்.

    என்ற அழகான செய்யுள். இவ்வாறாய செய்யுள்களை நிறையத் தந்திருப்பது இனிமை பயக்கிறது. நிறைவாக,

    இப்படியாக, கைகேயி கேட்ட இரு வரங்களில் தொடங்கிய இராமகாதை இராமன் கேட்ட இரு வரங்களோடு முடிவடைகிறது.

    இப்படி நிறைவு செய்திருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.

    இப்படியாக, கைகேயி கேட்ட இரு வரங்களில் தொடங்கிய இராமகாதை இராமன் கேட்ட இரு வரங்களோடு இன்னும் தொடர்கிறது. ஆக, இது வரப்பிரசாத காவியம்… வரமருளும் காவியம்.

  2. This article is excellent. I have made TamilHindu a daily site to visit and enjoy and also learn.Many Thanks.

  3. நன்றி ஐயா
    வணங்கி மகிழ்கிறேன்
    படித்து தெரிந்துகொள்ள மிகவும் நிறைவாகவும் சுகமாகவும் இருக்கிறது.
    பகிர்ந்தமைக்கு வந்தனமு.
    நன்றி.
    அன்புடன்,
    ஸ்ரீனிவாசன்.

  4. இந்த வெப்சைட் ஹிந்து மதம் பற்றிய பல நல்ல கருத்துக்களை வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சிக்குறியது.

  5. சரித்திர படங்களை பார்த்துவிட்டு நான் கூட காட்டிற்கு போவது எதோ பிக்னிக் போவது என்று நினைத்தேன். நான் ஒரு முறை ‘ட்ரெக்கிங் போன பொழுது தான் தெரிந்தது இது எவ்வளவு கடுமையான விஷயம் என்று. அப்பொழுது எனக்கு அய்யனின் ஞாபகம் தான் வந்தது.

  6. இந்த கதை ஒரு கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை ராமன் சீதை மூலம் தெரிகிறது. அற்புதம்.

  7. உணர்ந்து தெளிவாக படிக்க தக்கபடி தந்தமைக்கு போற்றி வணங்குகின்றேன்

  8. மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் என்னுஞ் சொல் – என்ற திருக்குறளை பிழையாக எழுதியுள்ளீர்கள்

  9. இப்படியாக, கைகேயி கேட்ட இரு வரங்களில் தொடங்கிய இராமகாதை இராமன் கேட்ட இரு வரங்களோடு முடிவடைகிறது.- கும்பகர்ணன் கேட்ட இருவரங்களோடுதானே முடிகின்றது நீங்கள் இராமன் கேட்ட வரங்கள் என்று எழுதியுள்ளீர்களே சற்று விளக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *