ரமணரின் கீதாசாரம் – 13

ரமண மகரிஷி ஸ்ரீ ரமண மகரிஷியிடம் குர்ரம் சுப்பராமய்யா என்ற அடியார் ஸ்ரீமத் பகவத் கீதையைத் தினப் பாராயணத்திற்கு ஏற்றவாறு சுருக்கித் தருமாறு கேட்டதன் பலனாக மூலத்தில் உள்ள எழுநூறு சுலோகங்களிலிருந்து ரமணர் நாற்பத்திரண்டை தேர்ந்து எடுத்து அன்பரது நித்ய பாராயணத்திற்கு எனத் தொகுத்துக் கொடுத்தார். கீதை சொல்லும் கருத்துக்களை, சுருக்கமாக அந்த கீதையின் சுலோகங்கள் மூலமாகவே ரமணர் நமக்கு தந்த “பகவத்கீதாசாரம்” பற்றிய தொடர்…
முந்தைய பகுதிகள் பகுதி 1 | பகுதி 2| பகுதி 3| பகுதி 4 | பகுதி 5| பகுதி 6| பகுதி 7| பகுதி 8| பகுதி 9| பகுதி 10| பகுதி 11| பகுதி 12

அனன்னிய பக்தனுக்கு எதை அளித்து எப்படிக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லி, வெவ்வேறு பக்தர்களின் லக்ஷணங்களையும் கூறிய கிருஷ்ண பரமாத்மா அவன் தனக்கு மிகவும் பிரியமானவன் என்று சொன்னார். அந்தக் கூற்றை மேலும் இப்போது விவரிக்கிறார்.

2-55

प्रजहाति यदा कामान् सर्वान् पार्थ मनोगतान |
आत्मन्येवात्मना तृष्ट: स्थितप्रज्ञस्तदोच्यते ||

அகத்துள பற்றெல்லாம் அற்றான் எப்போதில்
உகப்பும் தனில் தன்னால் உற்றான் – வகுத்தனர்
அப்போது அவன் மெய் அறிஞன் ஆனான் என்று
மெய்ப்போதம் உற்றார் மிக

பொருள்: மனதில் உள்ள ஆசாபாசங்களை எல்லாம் மிச்சமில்லாமல் அழித்தவனாய், எப்போது தனக்குள்ளிருக்கும் ஆத்மானந்தத்தில் தானே மகிழ்ச்சி அடைந்திடுவானோ அப்போது அந்த யோகியானவன் ஆத்ம ஞானியாக ஆகிறான் என்று உண்மை அறிவை நன்கு உணர்ந்தடைந்த ஆத்ம ஞானிகள் வகைப்படுத்திக் கூறியுள்ளனர்.

“மனத்துக் கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்” என்று வள்ளுவர் சொன்னார் அல்லவா, அதுதான் அப்பட்டமான உண்மை. மனதே அனைவரையும் பாடாய் படுத்துகிறது. மனதோ நம் முந்தைய எண்ணங்களின் தொகுப்பாக இருப்பதால் அவைகளும் கரைந்து போக வேண்டும், மேலும் எண்ணங்கள் வளராமலும் இருக்க வேண்டும். இப்படியாக மனமாகிய எண்ணங்களும், அதனால் தொன்று தொட்டு வளரும் பற்றுகள் எல்லாம் முற்றும் ஒழிந்தால் அன்றி தனது உண்மைச் சொரூபம் ஒருவனுக்குத் தெரியாது. அதற்காகவே “பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்று விடற்கு” என்று பற்றில்லாத இறைவனைப் பற்றிக்கொண்டு நமது பற்றை விடுவதற்கு வழி ஒன்றை நமக்கு வள்ளுவர் சொன்னார்.

பற்றுகள் எல்லாம் போனபின் தெரிய வரும் உண்மைச் சொரூபம் ஒன்றினால் தான் ஒருவனுக்கு நிரந்தர ஆனந்தம் உண்டாகும். அது கிடைக்கும் வரை, ஒரு மரத்தின் இலைகளுக்கு ஊடே அவ்வப்போது தெரியும் சூரியன் போல ஆனந்தம் வந்து வந்து போகும். நமக்குப் பிடித்தது கிடைக்கும் போதும், பிடிக்காதது வராத போதும் ஒரு இடைப்பட்ட ஆனந்தம் வந்து, பின் அதே போல அதே நிலைமை இன்னொன்று பொருளைப் பற்றி வந்து போகும். உலக விஷயங்கள் எதை எடுத்துக் கொண்டாலும், இந்த மாதிரியான ஆனந்தம்-தேடல் என்ற சுழற்சியில் சென்று கொண்டிருக்கும். இதைத் தான் நாம் நம் வாழ்க்கையின் அனுபவங்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். எதிலும் திருப்தி இல்லை, ஆனாலும் எதையும் விடவும் மனமில்லை என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் நம்மில் பலரும். உலக விஷயங்களில் பற்று என்பதே அனைத்தின் தொடக்கமும் என்பதை உணர்ந்து, அவைகளின் மேல் பற்று வைக்காமல் வாழ்வதே ஆன்மீகப் பயிற்சியின் முதல் அடி.

உள்ளதை உள்ளபடி பார்க்க வேண்டும் என்றால் பார்ப்பவருக்கும், பார்க்கப்படும் பொருளுக்கும் இடையில் திரை போன்று எதுவும் இருக்கக்கூடாது. தற்போது நம் மனது ஒரு திரை போன்று இருப்பதால், நாம் பார்ப்பது எதுவும் அவை உள்ளதுபோல் தெரிவதில்லை. முதலில் மனதின் மேல் படிந்துள்ள, தொன்று தொட்டு வளர்ந்துள்ள பற்றுகள் விலகினால், பற்றற்ற மனத்திற்கு ஒரு இடைவிடாத ஆனந்தம் கிடைக்கும். அதுவே ஒருவனின் உள்ள நிலையைத் தெளிவுபடுத்திக் காட்டும். அப்போது அவன் தன்னிலே தானாக மகிழ்ச்சியுற்று பேரானந்தம் அடைந்து விட்ட ஞானியாகிறான் என்று அதை நன்கு உணர்ந்து அனுபவித்த ஞானிகள் சொல்வார்கள். பாம்பின் கால் பாம்பு அறியும் என்ற வழக்கச் சொல் படி அவர்கள்தானே அவர்கள் நிலையை அறிய முடியும்.

2-71

विहाय कामान् य: सर्वान् पुमांश्चरति निस्पृह: |
निर्ममो निरहङ्कार: स शान्तिमधिगच्छति ||

இகந்தவனாய் இச்சை எலாம் எய்தாததில் பற்று
அகன்றவனுமாய் உள்ளான் யார்தான் – அகந்தை
மமதையும் இல்லா அம் மாபுருடன் என்றும்
அமைதி உறுவான் அறி

பொருள்: எவனொருவன் எல்லா ஆசைகளையும் விட்டொழித்தவனாய், தனக்குக் கிடைக்காதவற்றின் மேல் அவை வேண்டும் என்ற பிடிப்பும் இல்லாதவனாய் இருக்கிறானோ, அகங்கார மமகாரமில்லாத அந்த மகிமை மிகுந்த புருஷனே எப்போதும் அமைதியை அடைவான் என்று அறிந்திடுவாய்.

ஞானத்தைத் தேடும் சாதகர்களில் அதீத நிலையை அடைந்த ஒரு ஜீவன் முக்தனுக்குக் கூட தேகம் உள்ளவரையில் அதைப் பேணுவதற்கு என்று உணவு தேவையாயிருக்கிறது. அதேபோல உடையும், இருக்க இடமும் வேண்டியிருக்கிறது. ஆனாலும் அவன் இந்த குறைந்த பட்சத் தேவைகளின் மேல் கூட எந்தப் பற்றும் கொள்ளாதவனாக இருக்கிறான். எல்லா ஆசைகளையும் விட்டொழிப்பது என்பது சாமான்ய காரியமல்ல என்றாலும், இந்த வகையான சிறிய ஆசைகள் கூட இல்லாது இருப்பவனுக்கே மனம் ஒரு ஸ்திரநிலைக்கு வந்து அவனை மேலும் உள்நோக்கிச் செல்ல வைக்கும். அவனுக்கே தத்துவ தரிசனமும் கிட்டும்.

அதே போன்று மோக்ஷ நிலை என்று ஒன்று உண்டு அதை அடைய வேண்டும் என்று கூட ஆசை இல்லாதவனாய், வருவதை ஏற்று, வராததைப் பற்றிச் சிறிதும் சிந்தியாது, வெளி உலகு விஷயங்களில் நாட்டம் கொள்ளாது தன்னிலே தான் இன்புற்றிருப்பவனுக்கே தான் என்றும் பிறர் என்றும் பிரிவு தோன்றாது. அதனால் அவன் அகங்காரம் ஏதும் கொள்ளாது இருக்கிறான். பிற விஷயங்களில் நாட்டம் இல்லாது இருப்பதால் தனக்கு என்று அவன் ஏதும் வைத்துக் கொள்வதில்லை. அதனால் அவனுக்கு மமகாரம் என்ற அவஸ்தையும் கிடையாது. தன் உடல்-உள்ளத்திற்கு ஆதாரமான ஆன்மாவை நாடும் ஒரு சாதகன் என்ற அகங்காரமோ, ஆன்மாவைப் பற்றித் தனக்கு நல்ல அறிவு உண்டு என்ற மமகாரமோ இல்லாது தன்மயமாய் இருக்கிறான்.

அவை தவிர, எப்போது தான் அன்றி வேறேதும் இல்லையோ அப்போது அவனுக்குத் தான் என்ற உணர்வு எப்போதும் உள்ளபடியாலும், அதனால் அவனுக்கு தனக்கு என்று வேறேதும் வேண்டாது தன்னிலே தான் இன்புற்றிருப்பதாலும், பிறர் என்ற பிரிவும் இல்லாததால் எவரிடமும் அச்சமோ, கோபதாபமோ இல்லாதபடியாலும், அந்த மகிமை வாய்ந்த புருஷனுக்கு ஓர் ஆழ்ந்த அமைதி கிடைக்கிறது.

12-15

यस्मान्नोद्विजते लोको लोकान्नोद्विजते च य: |
हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो य: स च मे प्रिय: ||

எவன்பால் உலகு பயம் ஏதும் உறாதோ
எவன் உலகுக்கு அஞ்சானோ ஏதும் – எவன்தான்
உவப்பு உவர்ப்பு பீதி உளக்கலக்கம் அற்றோன்
அவன் எனக்கு மீப்பிரியனாம்

பொருள்: எவனிடம் உலகம் சிறிது கூட அச்சம் கொள்ளாதோ, எவன் உலகைப் பார்த்து அச்சம் கொள்ளமாட்டானோ, எவன் ஒருவன் விருப்பு, வெறுப்பு, அச்சம், மனக்கலக்கம் இவை எதுவும் இல்லாதவனோ அவனே எனக்கு மிகவும் பிரியமானவன்.

என்னைப் பற்றி முழுதும் அறிந்தவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன் அல்லவா? மற்றவர்களுக்கு என்னைப் பற்றி ஏதோ ஒரு சில விவரங்கள் தெரிந்திருக்கலாம். தெரிந்த சிலவற்றில் இருந்து தெரியாத பல விவரங்களைக் கணிப்பது என்பதுதான் பெரும்பாலும் பல மனிதர்கள் செய்வது. என்னைப் பற்றி என்று நான் மேலே சொல்லியிருந்தாலும் இது பொதுவாக எவருக்குமே பொருந்தும். ஆக தன்னைப்பற்றி தனக்கு மட்டுமே எல்லாம் தெரியுமாதலால், எவருக்குமே தன்மேலேயே எந்த வித பயமும் இருக்க முடியாது. ஒன்றைப்பற்றி அல்லது ஒருவரைப்பற்றி அச்சம் என்பது அதையோ, அவரையோ பற்றி அறியாதபோதுதான் வருகிறது. நன்கு அறிமுகமான இடத்தில் அச்சம் என்பது இருக்க முடியாது.

ஆன்மீகப் பயணத்தில் முன்னேறியவன் தன்னை முதற்கொண்டே மற்றவைகள் உண்டு என்பதைத் தீர்க்கமாக உணர்வதால் அவனுக்கு மற்றவைகள் தன்னிலும் வேறாகத் தெரியாது. அப்படி எல்லாம் தானாகவேத் தெரிவதால் அவனுக்கு அச்சம் என்பது எப்படி வர முடியும்? உலகில் உள்ள எல்லாவற்றையும் அவன் தானாகவே பார்ப்பதை மற்றவைகளும் அவனது இயல்பிலிருந்து உணர்வதால், அவைகளுக்கும் அவனிடம் ஒரு அனன்னிய பாவம் இயல்பாகவே வருகிறது. அதனால் அவைகளுக்கும் அவனிடம் எந்த வித அச்சமும் வருவதில்லை. இதை நாம் முன்பே வேறோர் இடத்தில் ரமணருக்கும் ஒரு பாம்பிற்கும் இடையே நடந்த சந்திப்பில் பார்த்தோம். அது மட்டுமல்லாது பல மிருகங்களும் அப்படியே அவரிடம் பழகின. அப்படி இருபுறமும் பேதமும் இல்லாது, அச்சமும் இல்லாது இருப்பவர்களே உண்மையில் அஞ்சா நெஞ்சர்கள்.

நம்மிடமிருந்து வேறாக மற்றதை நினைக்காது நாம் இருக்கும் போது அவைகளின் உண்மை நிலையான ஆன்ம சொரூபமே தெரிவதால், எவருக்கும் எவரிடமும் பயம், ஆசை என்ற குணங்கள் எதுவும் வராது. நமக்கு நம்மிடம் எப்போதும் ஒரு பிரியம் இருப்பது போல அனைத்திடமும் மாறாத பிரியம் ஒன்றே இருக்கும். அதைப் பிரியம் என்றோ, ஆனந்தம் என்றோ ஆன்மானுபவம் என்றோ சொல்லலாம்.

மற்றவை தன்னிலிருந்து வேறு என்றால்தான் அதை அடைய வேண்டி ஒரு விருப்பமோ, அதை அடைய வேண்டாத ஒரு வெறுப்போ, அது வந்து விட்டால் அல்லது அதை பார்க்க நேர்ந்தால் என்றதொரு மனக் கலக்கமோ அடைய நேரும். தான்-பிறர் என்ற பேதம் இல்லாதவனுக்கு விருப்போ, வெறுப்போ, மனக் கலக்கமோ எப்படி வரும்? அப்படி அவைகள் ஏதும் இல்லாது இருப்பவன் எதிலும் ஆன்மா என்ற உள்ள பொருள் ஒன்றையே காண்பதால், அவனே எனக்கு மிகவும் பிரியமானவன் என்று கிருஷ்ண பரமாத்மா மேலும் கூறுகிறார்.

music-iconரமண மகரிஷியின் பகவத்கீதாசாரம் இங்கே தரவிறக்கம் செய்து கேட்கலாம்.

(தொடரும் …)

Tags: , , , , , , , , , , , ,

 

2 மறுமொழிகள் ரமணரின் கீதாசாரம் – 13

  1. Anandha Babu R on October 7, 2013 at 8:29 pm

    i like this website and used daily

  2. Anandha Babu R on October 7, 2013 at 8:31 pm

    i like this web and used daily i learning the Hindu religion thanks for this website

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:

தமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

*