புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 05

இதுவரை: இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மத மாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மத மாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). இந்த பாகத்தில் மதமாற்றத்தைத் தூண்டிய இரு காரணிகளில் ஒன்றைப் பற்றி அம்பேத்கர் பேசுகிறார். 

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4

தமாற்றத்தின் ஸ்தூலமான அம்சம் பற்றி அம்பேத்கர் குறிப்பிடுகையில்,

‘‘மதமாற்றத்தை இரண்டு அம்சங்களில் அணுக வேண்டும். ஒன்று- சமூக அணுகுமுறை மற்றும் மத அணுகுமுறை.

[சமூக அணுகுமுறை] ஸ்தூலமான மற்றும் ஆன்மீகமான அணுகுமுறை, எப்படி இருந்தாலும் முதலில் தீண்டாமையின் இயல்பையும் அது நடைமுறையில் எப்படிக் கடைபிடிக்கப்படுகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்; இந்தப் புரிதல் இல்லாமல் மதமாற்றப் பிரகடனத்தின் உண்மையான பொருளை உங்களால் உணரமுடியாது. இதற்கான சரியான புரிதல் ஏற்பட வேண்டுமானால் உங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளின் வரலாற்றை நீங்கள் மறுபடியும் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

casteஉங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் உரிமை கோரியதற்காக உங்களை ஜாதி இந்துக்கள் அடித்து நொறுக்கி இருக்கலாம். பொதுக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் உரிமை கோரிய போது அதே நிலை உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். கல்யாண மாப்பிள்ளை குதிரையின் மீது ஊர்வலம்  போகும் உரிமையை நீங்கள் கோரிய போதும் அதேகதி நேர்ந்திருக்கலாம்.

இவை வெகுசாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. உங்கள் கண்முன் அத்தகைய சம்பவங்கள் நடந்ததைப் பார்த்திருப்பீர்கள். இப்படிப்பட்ட அட்டூழியங்களை ஜாதி இந்துக்கள் உங்கள் மீது நடத்த எத்தனையோ காரணம் இருந்திருக்கலாம்; அவற்றையெல்லாம் வெளியிட்டால் இந்து அல்லாத பிறபொது மக்கள் வியப்பில் ஆழ்ந்து போவார்கள்.

தரமுள்ள துணிமணிகளை அணிந்து கொண்டதற்காக உங்களை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள்.

செம்பு போன்ற உலோகப் பாத்திரங்களைப் பயன்படுத்தியதற்காகவும் நீங்கள் சாட்டையடி வாங்கி இருக்கிறீர்கள்.

தம்முடைய நிலத்தில் பயிர் செய்ததற்காகத் தீண்டத் தகாதவர்களின் வீடுகளையே எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறார்கள்.

பூணூல் அணிந்தமைக்காவும் அவர்களுக்கு அடி விழுந்திருக்கிறது.

இறந்த விலங்குகளைத் தூக்கிச் செல்ல மறுத்ததற்கும், அவற்றின் பிணத்தை உண்ண மறுத்ததற்கும், காலணிகளுடன் கிராம வீதி வழியாக நடந்ததற்கும், ஜாதி இந்துக்களைக் கண்டபோது உடல் வணங்கித் தொழாமல் போனதற்கும், மல ஜலம் கழிக்க வயல்வெளிக்குச் செல்லும் போது செப்புக் குவளையில் நீர்கொண்டு போனதற்கும், …..

இப்படி எல்லாவற்றிக்கும் அவர்களுக்குக் கடுந்தண்டனை விதிக்கப்பட்டது. அண்மையில் ஓரு விருந்தில் சப்பாத்தி பரிமாறியதற்காகவும் அவர்களை அடித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தண்டனைகளின் அனுபவத்தை உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்கக்கூடும்.

அடி உதை தர முடியாது என்னும் பட்சத்தில், ‘தள்ளி வைத்தல்’ என்னும் கொடுமையான தண்டனையும் தரப்பட்டது. உங்களது அன்றாட வாழ்க்கையை இப்படிச் சகிக்க முடியாத வண்ணம் சிதைத்தார்கள். 

2_2d_allegory_of_class_struggle1_rdax_880x1189உங்களுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத வண்ணம் தடுத்தார்கள். உங்கள் ஆடு மாடுகள் மேய்ச்சலுக்குப போவதிலும் இடையூறுசெய்தார்கள். ஏன் உங்களுடைய ஆட்கள் சில கிராமங்களுக்குள் நூழைவதையே நிறுத்திவைத்தார்கள் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று உங்களில் சிலபேருக்குத்தான் புரிந்திருக்கும். இந்தக் கொடுங்கோன்மையின் மூலகாரணம் என்ன, இதன் வேர் எங்கே ஓடிக்கொண்டிருக்கிறது? என்பதை அறிவது மிகமிக முக்கியம்’’ என்று கூறிய அம்பேத்கர் இது ஒரு வர்க்கப் போராட்டம் என்றார்.

‘‘மேலே கூறிய நிகழ்வுகளுக்கும் தனிமனிதர்களுடைய நல்ல குணங்களுக்கும், தீய குணங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பகைமை கொண்ட இரு பிரிவுகளுக்கு இடையிலான மோதல் என்றும் இந்நிகழ்வுகளை எடுத்துக்கொள்ள முடியாது. தீண்டாமைப் பிரச்சனை ஒரு வர்க்கப் போராட்டம்.

ஜாதி இந்துக்களுக்கும், தீண்டத்தகாதவர்களுக்கும் இடையிலான போராட்டம். இதனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கெதிராக அநீதி இழைக்கிறான் என்று பொருள் கொள்ள முடியாது. மாறாக ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்திற்கு அநீதி இழைக்கிறது என்பதே இதன் பொருள். இந்த வர்க்கப் போராட்டம் சமூகத் தரத்தோடு தொடர்புடையது. அதாவது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்துடன் எப்படிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் குணாம்சம்.

நீங்கள் மற்றவர்களைப் போல் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கேட்டாலே போதும். இந்தப் போராட்டம் தொடங்கிவிடும். இல்லாவிட்டால் சப்பாத்தி பரிமாறுவது, தரமுள்ள துணிமணிகளை அணிந்து கொள்வது, பூணூல் தரித்துக் கொள்வது, உலோகக் குவளையில் தண்ணீர் மொண்டு பருகுவது, மாப்பிள்ளை குதிரைச் சவாரி செய்வது போன்ற அற்பக் காரணங்களுக்காகவா ஒரு போராட்டம் நடக்க  முடியும்?

இந்த நிகழ்ச்சிகளை நீங்கள் உங்கள் பணத்தைச் செலவிட்டு செய்கிறீர்கள். இதில் ஜாதி இந்துக்கள் எரிச்சல் அடைவதற்கு என்ன இருக்கிறது?

அவர்களது கோபத்திற்குக் காரணம் மிகமிக எளிமையானது. நீங்கள் அவர்களுக்குச் சமமாக நடக்க முயல்கிறீர்கள். உங்கள் சமத்துவம் அவர்களுக்கு அவமானமாக தோன்றுகிறது. அவர்கள் பார்வையில் நீங்கள் தரம் குறைந்தவர்கள்; அசுத்தமானவர்கள்; நீங்கள் கீழ்மட்டத்தில் இருந்தாக வேண்டும்; அப்போது தான் உங்களை அவர்கள் வாழ விடுவார்கள். நீங்கள் எல்லை மீறினால் போராட்டம்தான்.

மேலே கூறிய எடுத்துக்காட்டுகளிலிருந்து இன்னொரு உண்மையும் புலப்படுகிறது. தீண்டாமை என்பது தற்காலிகமானதல்ல; அது நிரந்தரமானது. இன்னும் நேரடியாகச் சொன்னால் ஜாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்குமான போராட்டம் ஒரு நிலையான நடைமுறை விதி; அது தெய்வீகமானது. ஏனென்றால் தீண்டாமையை அனுமதிக்கும் மதம் உங்களை அடிமட்டத்தில் வைத்திருக்கிறது. மதம் தெய்வீகமானது; அதே போல் தீண்டாமையும் தெய்வீகமானது; நிரந்தரமானது. இப்படித்தான் ஜாதி இந்துக்கள் நினைக்கிறார்கள்.

காலம் அல்லது சூழலுக்கேற்ப எந்த மாற்றமும் இதில் சாத்தியமில்லை. சமூக ஏணியின் கடைசிப் படியில் நீங்கள் நிற்கிறீர்கள். இதே படியில் தான் நீங்கள் நிரந்தரமாக இருந்தாகவேண்டும். இதன் பொருள் இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்குமான போராட்டம், எக்காலத்துக்கும் நீடிக்கும் என்பதுதான்.

இந்தப் போராட்டத்திலிருந்து நீங்கள் எப்படி மீளப் போகிறீர்கள்? எப்படி உயிர் வாழப்போகிறீர்கள்? என்பது தான் மையமான கேள்வி. இந்தச் சிந்தனை உங்களுக்கு ஏற்படா விட்டால் உங்களுக்கு விடுதலையே இல்லை. இந்துக்களின் ஆணையை ஏற்று அவற்றிற்கு அடிபணிந்து வாழ ஆசைப்படுவோரும் சரி; இந்தப் பிரச்சனை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் சுயமரியாதையோடும் சமத்துவத்தோடு வாழ விரும்புவர்கள் இது பற்றிச் சிந்தித்தாக வேண்டும்.

இந்தப் போராட்டத்திலிருந்து மீண்டு நாம் எப்படி வாழமுடியும்? இந்தக் கேள்விக்குப் பதில் தருவது என்னைப் பொறுத்தவரை கடினமான விஷயமில்லை. எந்தப் போராட்டத்திலும் வலிமை மிகுந்தவன் வெற்றியடைவான் என்பதை இங்கே கூடியிருக்கும் நீங்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டீர்கள். வலிமை இல்லாதவன் வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்பது அனுபவங்களால் நிரூபிக்கப்பட்ட பாடம். இதை விளக்க மேலும் எடுத்துக்காட்டுகள் தேவையில்லை.”

என்றார்.

மேலும் தொடர்கையில் ஆற்றலை முதலில் அடையுங்கள் என்று அறிவுரை கூறினார் :

‘‘இப்பொழுது நீங்கள் அணுகவேண்டிய கேள்வி இதுதான். இந்தப் போராட்டத்திற்குப் பிறகு நிலைத்திருக்கும் அளவு உங்களிடம் ஆற்றல் இருக்கிறதா? மனிதரிடம் மூன்று வகையான ஆற்றல்கள் இருக்கின்றன.

(1) மனித ஆற்றல்,

(2) செல்வம்,

(3) அறிவாற்றல்.

இம்மூன்றில் உங்களிடம் எந்த ஆற்றல் இருக்கிறது?

மனித ஆற்றலைப் பொறுத்தவரை ஒன்று தெளிவாக வேண்டும். நீங்கள் சிறுபான்மையினர், பம்பாய் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் தீண்டத்தகாதவர்கள் 8 இல் ஒரு பங்கு தான். அந்த 8 இல் ஒரு பங்குதான் அமைப்பு ரீதியாகத் திரளாதவர்கள், பல பிரிவுகளாக சிதறிக் கிடப்பவர்கள். இக்காரணங்களால் இந்தக் குறைந்த அளவு மக்கள் தொகையை வைத்துக் கொண்டு நமக்காக ஒரு வாழிடத்தை வென்றெடுக்க நாம் போராட முடியாது.

நம்மிடம் பணபலமும் இலலை. மனித ஆற்றலாவது ஏதோ கொஞ்சம் இருக்கிறது, செல்வம் என்பது அறவே இல்லை. உங்களுக்கு வணிகம் இல்லை, தொழில் இல்லை. பணியில்லை, நிலமுமில்லை. உயர் ஜாதிகள் தூக்கி வீசுகிற ரொட்டித் துண்டுகளையே நீங்கள் வாழ ஆதாரமாக நம்பியிருக்கிறீர்கள். உங்களுக்கு உணவில்லை, ஆடைகள் இல்லை. உங்களிடம் செல்வத்தின் வலிமை எப்படியிருக்க முடியும்? அநீதி இழைக்கப்பட்டால் அவற்றிற்கு பரிகாரம் தேட நீதிமன்றங்களை அணுகும் வலிமைகூட உங்களுக்கு இல்லை.

மன வலிமை என்பது இன்னும் மோசம். நூற்றாண்டுகளாக நீங்கள் உயர் ஜாதிகளுக்குத் தொண்டு புரிந்தது மட்டுமில்லாமல் இவர்கள் இழைக்கும் அவமானங்களையும் அவர்களது கொடுங்கோன்மையையும் எத்தகைய முணுமுணுப்பும், புகாரும் இல்லாமலேயே சகித்துக் கொண்டீர்கள். அதனால் பதிலுக்கு பதில் கூறுதல், எதிர்த்துக் கலகம் செய்தல் என்னும் உணர்வுகளே உங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. தன்னம்பிக்கை, மனத்திட்பம், லட்சியம் எல்லாம் உங்களிடமிருந்து அடியோடு மறைந்துவிட்டன. ஆதலால் நீங்கள் உதவியற்ற நிலைக்கு ஆளாகிவிட்டீர்கள். வலிமை குன்றி விட்டீர்கள். சோகை பிடித்தவர்களாகி விட்டீர்கள். பெரும் தோல்வி மனப்பான்மையும், விரக்தியுமே உங்களது சூழல் என்று ஆகிவிட்டது. நீங்களும் ஏதாவது செய்ய முடியும் என்பதற்குரிய லேசான ஒரு கருத்துக் கீற்றும் உங்கள் உள்ளங்களில் தோன்றவில்லை” என்று கூறி “நீங்கள் மட்டும் நசுக்கப்படுவது ஏன்?” என்ற கேள்வியை எழுப்பிப் பேசுகையில் :

‘‘நான் விவரித்தவை உண்மையென்றால் அந்த விவரிப்பின் முடிவான தீர்மானத்துக்கும் நீங்கள் வந்தாக வேண்டும். உங்கள் வலிமை ஒன்றை மட்டுமே நீங்கள் நம்பினால் இந்த அடக்குமுறையை எதிர்கொள்ள எப்போதும் உங்களால் முடியாது. நீங்கள் மட்டுமே சிறுபான்மையல்ல. முஸ்லீம்களும் சிறுபான்மைதான். மகர் – மாங்க் ஜாதிகளைப் போலவே முஸ்லீம்களுக்கும் கிராமத்தில் சில வீடுகளே இருக்கின்றன. ஆனால் முஸ்லீம்களுக்குத் தொல்லை தர எவருக்கும் துணிவு வராது. நீங்கள் மட்டும் எப்போதும் கொடுங்கோன்மைக்குப் பலியாகிறீர்கள். இது ஏன்?

ஒரு கிராமத்தில் முஸ்லீம்கள் இரண்டே இரண்டு வீடுகளில்தான் வசிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களைக் காயப்படுத்த யாருக்காவது துணிவு இருக்கிறதா? பத்து வீடுகளை வைத்திருக்கும் உங்களை முழு கிராமமும் சேர்ந்து கொண்டு வாட்டி வதைக்கிறார்களே! இது ஏன்? இது ஒரு நிலையான கேள்வி. இதற்கு ஒரு சரியான பதிலைக் கண்டறிய வேண்டும். என் கருத்தில் ஒரே ஒரு பதில்தான் இருக்கிறது.

இந்திய முஸ்லீம் மக்கள் தொகையின் பலம் என்னவென்றால் அந்த இரண்டு வீட்டு முஸ்லீம்களுக்குப் பின்னால் இந்திய முஸ்லீம் சமுதாயமே திரண்டு நிற்கிறது. அதனால் அவர்கள் மீது கை வைக்க அனைவருக்கும் அச்சம். அந்த இரண்டு வீட்டு முஸ்லீம்கள் அச்சமில்லாமல் சுதந்திரத்தோடு வாழ்கிறார்கள். எந்த இந்துவாவது அவர்கள் மீது ஆக்கிரமிப்புச் செய்ய முற்பட்டால் பஞ்சாப் முதல் மதராஸ் வரை பரவியுள்ள எல்லா முஸ்லீம்களும் அவர்களின் பாதுகாப்புக்காகப் புறப்படுவார்கள். ஆனால் உங்களுக்கு ஆதரவாக உங்களைக் காப்பாற்ற உங்களுக்கு நிதி உதவி வழங்க எவரும் தயாரில்லை. எந்த அரசு அலுவலகமும உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டப் போவதில்லை என்று இந்துக்களுக்குத் தெரியும்.

தாசில்தாரும், காவல் அதிகாரியும், ஜாதி இந்துக்களுக்கும் உங்களுக்கும் மோதல் என்றால் எல்லா அதிகாரிகளும் அவர்களுடைய சொந்த  ஜாதியைச் சேர்ந்தவர்களுக்குத்தான் விசுவாசமாக இருப்பார்களே ஒழிய தங்கள் கடமைகள் மீது அவர்கள் அக்கறை காட்டப் போவதில்லை. இந்துக்கள் உங்களுக்கு எதிராக அத்தனை கொடுங்கோன்மையையும் கையாளுவதற்குக் காரணம் நீங்கள் ஆதரவு அற்றவர்கள் என்பதுதான் – இந்த விவாதத்தில் இரண்டு உண்மைகள் நிறுவப்படுகின்றன.

1. வலிமையில்லாமல் கொடுங்கோன்மையை எதிர்க்க உங்களால் முடியாது.

2. கொடுங்கோன்மையை எதிர்கொள்ள போதுமான வலிமை உங்களுக்கு இல்லை.

இந்த இரண்டு உண்மைகளை அடுத்து மூன்றாவது உண்மை தானே புலப்படுகிறது.

3. கொடுங்கோன்மையை எதிர் கொள்வதற்கான வலிமையை நீங்கள் வெளியிலிருந்துதான் பெற்றாக வேண்டும்.

இதை எப்படிப் பெறப் போகிறீர்கள் என்பது கேள்வி, விருப்பு வெறுப்பு இல்லாமல் இது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்’’ என்றார்.  

மேலும் அம்பேத்கர் தொடர்கையில்,

ஜாதி வெறியும் மத வெறியும் மக்கள் மனத்திலும் ஒழுக்கத்திலும் ஒரு விசித்திரமான விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்தமான வறுமை, மக்களின் துயரம் இவற்றைப் பற்றி எவருக்கும் இந்நாட்டில் கவலையில்லை, அப்படிக் கவலைப்படுகிறவர்களும் இவற்றை நீக்க எந்த முயற்சியும் செய்வதாகத் தெரியவில்லை. ஆனால் சொந்த ஜாதி, சொந்த மதத்தைச் சேர்ந்தவர்களின் வறுமை, துன்பம் ஆகியவற்றிற்கு எதிராக அவர்களுக்கு உதவுவதற்கு மக்கள் தயார். இது ஒரு வக்கிரமான மனித ஒழுக்கம். இதுதான் இந்நாட்டில் காணப்படும் ஒழுக்கம்.

கிராமங்களில் இந்துக்களின் கைகளில் தீண்டத்தகாதவர்கள் அவதிப்படும்போது மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் நன்றாக வாழத்தான் செய்கிறார்கள். தீண்டத்தகாதவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், அடக்குமுறைகள் நியாயமற்றவை என்று எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை என்று  சொல்ல முடியாது. உணரத்தான் செய்கிறார்கள். ஆனாலும் உதவி செய்ய முன்வருவதில்லை. இதற்குக் காரணம் என்ன? அவர்கள் ஏன் உங்களுக்கு உதவி செய்யவில்லை என்று கேட்டால் அது எங்கள் வேலை இல்லை என்பார்கள். எங்கள் மதத்தைச் சேராதவர்களின் பிரச்சினைகளில் குறுக்கிட எங்களுக்கு உரிமையில்லை என்பார்கள். நீங்கள் அவர்கள் மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அதை அனுமதித்திருக்க மாட்டோம் என்பார்கள். இதன் மூலம் உங்களுக்கு ஒன்று தெரிய வேண்டும்.

இன்னொரு சமூகத்துடன் நெருங்கிய உறவுகளை நிறுவாவிட்டால் – இன்னொரு மதத்தில் சேராவிட்டால் நீங்கள் வெளியிலிருந்து ஆதரவையும் வலிமையையும் பெற முடியாது. நீங்கள் இப்போது இருக்கும் மதத்திலிருந்து விலக வேண்டும்.  இன்னொரு மதத்தில் சேர வேண்டும். இன்னொரு சமூகத்தில் சேர வேண்டும். அப்படி இல்லையேல் அந்த சமூகத்தில் வலிமையை நீங்கள் பெற முடியாது.

வலிமையில்லாத பட்சத்தில் உங்கள் எதிர்காலத் தலைமுறையும் உங்களைப் போலவே அனுதாபத்திற்குரிய சூழலில்தான் வாழ்ந்தாக வேண்டும்.

உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றி விவாதித்தோம். இனி ஆன்மிகப் பயன் பற்றிப் பார்ப்போம். மதம் ஏன் இருக்கிறது? அது ஏன் அவசியமாகிறது?

(மத அணுகுமுறை அடுத்த பாகத்தில்…..)

 

 

7 Replies to “புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 05”

  1. “பம்பாய் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் தீண்டத்தகாதவர்கள் 8 இல் ஒரு பங்கு தான்.” எனவே இது, வர்கப் போராட்டம் இல்லை. மைனாரிட்டி அப்பீஸ் மென்ட் முயற்சி அந்நாளிலேயே ஏற்பட்டிருக்கின்றது. 8 இல் ஒரு பங்கிற்காக, 8 இல் 7 பங்கையும் பழிவாங்குவது. அது எங்கே வெளியில் தெரிந்து விவகாரமாகிவிடுமோ என்று தான், BC ,MBC , OBC என்றெல்லாம் பெயரிட்டு,
    இன்னும் நிறைய பிரிவுகளை சேர்த்துக்கொண்டு, இட ஒதுக்கீடு விழுக்காடு நூறு சதவிகிதத்தையும் தாண்டியுள்ளது. இந்த அநியாயத்திற்கு மூல காரணம் யார் என்று கட்டுரையிலிருந்து தெளிவாகிவிட்டது. நன்றி, பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்த மாதிரியான இந்தக் கட்டுரை தொடரட்டும்.

  2. இன்று துக்ளக்கில் ஒரு விளம்பரம் ‘பிராம்மணர்களுக்கு மட்டும். மற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்’ ஆகமங்கள் வேதம் சொல்லித் தருகிறார்களாம். இப்போது பலர் ‘பிராம்மணன் என்றால் பிறப்பினால் அல்ல’ என்கிறார்களே அவர்களெல்லாம் என்ன சொல்வார்கள்? இந்த விளம்பரத்தை செய்தவர்கள் ஹிந்து தர்மத்துக்கு எதிரானவர்கள் என்று வெளிப்படையாக சொல்வார்களா? மாட்டார்கள். முடியாது. சொன்னால் இவர்களையே ‘ஹிந்து விரோதி’ ‘தர்ம விரோதி’ ‘க்ரிப்டோ கிறிஸ்டியன்’ என்று முத்திரை குத்தி விடுவார்கள். இப்படி இந்து மதத்தின் சில பாரம்பரிய சமூக தேக்கம்டைந்த கேந்திரங்கள் சில சாதிகளுக்கு நூறு சதவிகித இடஒதுக்கீட்டை அளித்து செய்யும் வக்கிரத்தோடு ஒப்பிட்டால் வேலை வாய்ப்பிலும் கல்வியிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் நியாயமும் உரிமையும் புரியும். அம்மக்களின் வேதனை புரியும். நண்பர் ம.வெங்கடேசன் அருமையாக எழுதி வருகிறார். பிள்ளையார் பிடிக்க விஸ்வரூப தரிசனமே கிடைக்கிறது. வாழ்த்துகள். வணக்கங்கள்.

  3. இந்து தருமத்திற்குக் கேடு எங்கு பிறக்கின்றது என்பது ஆலந்தூர் மள்ளன் அவர்களின் மறுமொழியில் கிடைக்கின்றதல்லவா? கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா? இந்து சமயத்திலிருந்து பெரும்பாலானவரை ஒதுக்கும் அந்த வேதாகமக் கல்வி நமக்கு வேண்டாம். தெய்வத் தமிழே போதும்.

  4. @ reality

    இதை எதன் அடிப்படையில் மைனாரிட்டி அப்பீஸ்மண்ட் என்று சொல்லுகிறீர்கள் ?

    சதவீதக் கணக்கில் அல்லது மக்கள்தொகைக் கணக்கிலா அம்பேத்கார் உரிமைகள் கோருகிறார் ?

    8 சதவீதமாக இருப்பதால் தீண்டத்தகாதவருக்கு ஆதரவு தாருங்கள் என்று அம்பேத்கர் எங்கே வாதிட்டிருக்கிறார் ?

    அபத்தத்திற்கு அளவே இல்லையா? 🙁

    அமைப்பு ரீதியாகத் திரளாதவர்கள் அந்த 8 சதவீத மக்கள் என்று மட்டுமேதான் அம்பேத்கர் சொல்லுகிறார். அமைப்பு ரீதியாகத் திரளாததால் நீங்கள் ஒடுக்கப்படுகிறீர்கள் என்கிறாரே தவிர, 8 சதவீதம் என்பது சிறுபான்மை, அதனால் உரிமைகள் வேண்டும் என்று அவர் சொல்லவே இல்லையே.

    நீங்கள் மறுமொழியில் கொடுத்துள்ள வரிக்கு அடுத்த வரியைப் படித்தீர்களா ?

    அமைப்பு ரீதியாகத் திரளாததால்தான், சில உயர்த்தப்பட்ட சாதியினரின் சாதிக் காழ்ப்புக்கு தீண்டத் தகாதவர்கள் பலியாகின்றனர். எனவே, நல்ல விஷயங்களுக்காக, மானுட உரிமைக்காக, அனைவரும் ஒரே பிரம்மம்தான் என்ற ஆன்மீக உண்மைக்காக நீங்கள் அமைப்பு ரீதியாக ஒன்றுபடுங்கள் என்பதுதான் அம்பேத்கர் சொல்லுவது. ஆனால்…

    இது ஆங்கில மீடியத்தில் மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு தமிழ்க் குழந்தைக்குக் கூடப் புரிந்துவிடுமே. உங்களுக்குப் புரியாதது ஆச்சரியமாக இருக்கிறது.

    வெளிப்படையாக, எளிமையாகச் சொல்லப்பட்ட விஷயங்களுக்குக் கூடத் தப்பான வியாக்யானம் தருவது சாதியத்தின் காழ்ப்புணர்வாக இருக்கலாம்.

    பட்டும் திருந்தவில்லை என்றால் பட்டது போதாது என்றுதான் பொருள். இந்தக் காழ்ப்புணர்வுள்ளவர்களால் காழ்ப்புணர்வு இல்லாதவர்களும் அழிகிறார்கள் என்பதுதான் கொடூரம்.

    இந்த காழ்ப்புணர்வுள்ள சாதியார் நாசமாகட்டும் என்று பித்ருக்கள் சபிக்கிறார்கள்.

    அவர்களின் ஓலம் சனாதன தர்மத்தினருக்கு மட்டுமே கேட்கிறது. மெக்காலேவின் கள்ளப் பிள்ளைகளுக்கு அது கேட்பதில்லை.

    .

  5. //ஆலந்தூர் மள்ளன்
    இன்று துக்ளக்கில் ஒரு விளம்பரம் ‘பிராம்மணர்களுக்கு மட்டும். மற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்’ ஆகமங்கள் வேதம் சொல்லித் தருகிறார்களாம்//

    இது மட்டும் உண்மையாக இருந்தால் இது இந்து மதத்திற்கு ஏற்பட்ட இழுக்கு.. ஆகமங்கள் வேதம் உங்களுக்கு மட்டும் சொந்தம் என்று யார் உங்களுக்கு சொன்னது?…உங்களால்தான் இந்து மதத்திற்கு கேட்ட பெயர் ஏற்படுகிறது..வேதங்களை அனைத்து இந்துக்களுக்கும் கற்று கொடுங்கள்.. பிராமணர்களே இப்படியே மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்காமல் தீண்டாமை பார்த்து நீங்கள் இருந்தால் நீங்கள் இந்து மதத்திற்கு தேவை இல்லை..பிராமணர்கள் இல்லாத இந்து மதமே போதும்..திருந்துக்கள் பிராமணர்களே அனைத்தையும் இந்துகளுக்கு சொல்லி கொடுங்கள்

  6. பிறப்பிலிருந்து இறக்கும் வரை செய்யப்படுகின்ற (பிறந்தநாள் காதுகுத்துதல் பூணூல் அணிவித்தல் கல்யாணம் கருமாதி பண்டிகை காலங்களில் செய்யப்படும் பூஜை காரியசித்திக்காக செய்யப்படும் ஹோமங்கள் இன்னும் பல) வைதீகமந்திரங்களை சொல்லிதருவதற்கு பிராமிணர்களால் பிராமிண குழந்தைகளுக்கு பிராமிண இல்லங்களில் வைதிக காரியங்கள் செய்து வைக்க சிலபேர் வகுப்புகள் நடத்துகிறார்கள் என்பது உண்மைதான். இங்கே வைதீகம் கற்ற ஒரு சிலர் கூப்பிட்டால் மற்ற வர்ணத்தவர்களுக்கும் வைதிக கர்மாக்களை செய்து வைக்கிறார்கள். குருகுல கல்வி வர்ணாஸ்ரம தர்மம் என்பதை எல்லோரும் விட்டொழித்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. மற்ற வர்ண அடையாளங்கள் தொலைந்து பிராமிண அடையாளம் மட்டும் சமூகத்தில் தங்கிவிட்டது. அன்றிலிருந்தே பிராமிணன் என்பது பிறவியினால் ஏற்ப்பட்ட அடையாளமாகவே சமூகம் அங்கீகரித்து ஆதரித்து வளர்த்தது என்பதுதான் உண்மை.

    இது ஆதிசங்கரர் தோன்றுவதற்கு முன்னேயே ஏற்ப்பட்ட சமூகமாற்றமாகும். அவனையும் இந்த வர்ணாஸ்ரம தர்மதிலிருந்து விலக்குவதற்காக அன்றையிலிருந்து இன்றுவரை வர்கபோர் நடந்துவந்து கொண்டிருக்கிறது. இன்னம் சொல்ல போனால் இந்த வர்ணபேத வர்க போர் பரசுராமர் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. வர்னாஸ்ரம தர்மத்தை விட்டவனுக்கு வேதம் கற்றுதறுவதில்லை என்று பிராமிணர்கள் அன்று முடிவு செய்தார்கள். பின்பு தோன்றிய பல பிராமிண முற்போக்காளர்கள் இதை மாற்ற பெரும் பாடுபட்டார்கள் (ராமாநூஜர் தயாநந்த சரஸ்வதி பாரதியார் மற்றும் பலர்) ஒருபடி மேலேபோய் விவேகானந்தர் வேதம் கற்ற பிராமிணர்கள் அந்த அக்கினி மந்திரத்தை எல்லோருக்கும் சொல்லி கொடுகாவிடில் அவர்கள் படித்த கல்வி நாசமாகபோக வேண்டியது தான் என்றார்.

    மூன்று தலைமுறைக்கு மேல் வர்ணாசரம தர்மத்தை விலக்கியவன் வர்ணவரிசையில் நாலவது வர்ணத்திற்கு கீழே தள்ளப்படுகிறான். அப்படி பார்த்தால் எனது பேரபிள்ளைகளும் கீழே தள்ளப்பட்டவர்கள் ஆவார்கள். இப்படி பரம்பரையாக கட்டுபாட்டை இழந்த பிராமிணர்களுக்கும் மற்ற பிராமிணர் வேதம் கற்றுதறமாட்டார். பரம்பரை பரம்பரையாக கட்டுபாடுகளை தொலைத்த ஒருவன் கட்டுபாடுடன் இருப்பான என்ற பயத்தால்தான் இருபதும் கெட்டுவிடும் என்று அனுமதிக்க மறுக்கிறார்கள். நிச்சயம் இவர்களிடமும் மாற்றம் ஒருநாள் வரும். வைதீக சடங்குகளை பிராமிணர்களில் பெருபாலாரும் மற்ற வர்ணத்தவர்களும் விட்டொழித்து பலகாலம் கடந்துவிட்டது. கல்யாணத்திற்கும் கருமாதிக்கும் தான் வைதீகனை கூப்பிடுகிறார்கள்.

    வேதம் என்ன பிராமணர்களின் சொத்தா. முதலில் வேதத்தை அளித்த வியாசரே பிராமிணன் இல்லை. வேதம் படித்த மற்ற வர்ணத்தார் ஏன் அதை மற்றவருக்கு சொல்லிகொடுக்ககூடாது. எத்தனை ஆதீனமடங்கள் தமிழகத்தில் உள்ளன. இன்று கூட நாராயிணி பீடத்திலும் திருப்பதியிலும் எல்லா வர்ணத்தவர்களுக்கும் தான் வேத ஆகமம் பாடங்களை சொல்லிக்கொடுக்கிறார்கள். அவ்வாறு செய்வதற்கு பின் இருந்து ஊக்குவித்தவர்களில் பல பிராமணர்களும் உண்டு. VHP அணுகினால் அவர்கள் எலோருக்கும் வேதம் ஆகமம் கற்றுதரும் இடங்களை பற்றி உதவிசெய்வார்கள். தமிழக அரசே ஆகமங்களை கற்றுதரும் பள்ளிகளை நிறுவி பட்டங்களை அளித்தார்கள். அதற்க்கு எதிர்பார்த ஆதரவு அதிகரித்துவிடவில்லை. இன்று அங்கு சேறுவதற்கு யாரும்இல்லாமல் அப்பள்ளி நடக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.

  7. துக்ளக் விளம்பரத்தில் வரும் இடத்தில் மட்டுமே வேதாகம பயிற்சி நடப்பதுபோலவும், நாடு பூராவும் வேதாகமத்தைக் கற்றுக்கொள்ளப் போட்டா போட்டி போட்டுக்கொண்டு விழுத்தடித்துக்கொண்டு மக்கள் ஒடுவதுபோலவும், அவர்களுக்கெல்லாம் இடம் கிடைக்க வில்லை என்பதுபோல எழுதப்பட்ட மறுமொழிகளைப் படித்தால், காழ்புணர்ச்சியின் சுவடு தெரிகின்றது. அவ்வாறான
    ஈடுபாடு மட்டும் இருந்திருந்தால், ஊழல்கள் புரியும் கருனாநிதிக்களும் வெளியில் இருக்க மாட்டார்கள், ராஜாக்களும் உள்ளே இருக்க மாட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *