புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 06

இதுவரை: இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மத மாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மத மாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றி விவாதித்தோம். இனி ஆன்மிகப் பயன் பற்றிப் பார்ப்போம்.

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5

 

 (தொடர்ச்சி…)

“மதம் ஏன் இருக்கிறது? அது ஏன் அவசியமாகிறது?” என்று கேள்வி கேட்டு அதற்கு அம்பேத்கர் பதிலளித்தார்.

br-ambedkarஇந்தப் பிரச்சினையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மதம் என்றால் என்ன என்று பலர் பலவிதமாக விளக்கம் சொல்லியிருக்கிறார்கள். அவற்றுள் ஒரே ஒரு விளக்கம்தான் பொருள் புரிந்ததாகவும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. மக்கள் மீது எது ஆளுமை செலுத்துகிறதோ, அதுவே மதம் – இதுதான் மதம் என்பதற்கு உண்மையான விளக்கம். இது என்னுடைய விளக்கமில்லை; சனாதன இந்துக்களின் தலைவரான திலகர் தந்த விளக்கம். ஆகவே புதிதாக ஒரு விளக்கம் தருகிறேன் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். திலகரின் விளக்கத்தை வாதத்திற்காக மட்டுமே நான் ஏற்றுக் கொண்டதாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சமுதாயத்தை நிர்வகிப்பதற்காகச் சில விதிகளை அதன் மீது திணிக்கிறோம். அது மதம். மதத்தைப் பற்றிய என்னுடைய கருதுகோளும் அதுவேதான். இந்த விளக்கம் எதார்த்த அடிப்படையிலும் தர்க்க அடிப்படையிலும் சரியாகவே இருக்கிறது. ஆனால் சமூகத்தை ஆளும் அந்த விதிகளின் இயல்புகள் என்னவென்று தெளிவாக்க இந்த விளக்கம் முயலவில்லை. அவ்விதிகளின் இயல்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்னும் கேள்விக்கு இதில் பதிலில்லை. மதம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு விதிகளின் இயல்பு பற்றிய இந்தக் கேள்வி முக்கியமானது. எது – மதம் – எது மதமில்லை என்பது மதத்திற்கு தரப்பட்ட விளக்கத்தைப் பொருத்து அமைவதில்லை. மாறாக, சமுதாயத்தின் மீது ஆளுமை செலுத்தும் விதிகளின் இயல்புக்கு என்ன நோக்கமோ, அதை அடிப்படையாக வைத்து இந்தப் பிரச்சினையை அலசும்போது இன்னொரு பிரச்சினையும் எழுகிறது. மனிதனுக்கும் சமுதாயத்திற்குமான உறவு என்ன? நவீன சமூகத் தத்துவாசிரியர்கள் இந்தக் கேள்விக்கு மூன்று விதத்தில் பதில் தந்தார்கள். தனிமனித மகிழ்ச்சியைப் பெற்றுத் தருவதே சமுதாயத்தின் இலக்கு என்பது சிலர் கருத்து. இன்னும் சிலர், மனிதனின் இயல்பான பண்புகள், ஆற்றல்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகவே சமுதாயம் நிலைத்திருக்கிறது. அவன் தன்னைத்தானே வளர்த்துக் கொள்ள அது உதவுகிறது என்றார்கள் வேறு சிலர். இப்படித் தனிமனிதனுக்கு முக்கியத்துவம் தராமல் லட்சியபூர்வமான சமுதாயத்தைப் படைப்பதே நோக்கமென்று சொன்னார்கள். இந்து மதத்தின் கருதுகோள் மேலே கூறிய கருத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. இந்து மதத்தில் தனி மனிதருக்கு இடமில்லை. அதன் அடிப்படைக் கருதுகோள் வர்க்கம் சார்ந்தது. ஒரு தனி மனிதன் இன்னொரு தனிமனிதருடன் எப்படி உறவாட வேண்டுமென்று இந்துமதம் கற்பிக்க முயலவில்லை; தனிமனிதனை ஏற்காத எந்த மதத்தையும் நான் ஏற்பதற்கில்லை. ஒரு தனிமனிதனுக்குச் சமுதாயம் என்பது தேவைதான். ஆனால் சமூக நலன் மட்டுமே ஒரு மதத்தின் லட்சிய எல்லையாக இருக்க முடியாது. தனி மனிதன் நலனும் முன்னேற்றமும் மதத்தின் முக்கிய நோக்கங்களாக இருந்தே தீர வேண்டும் என்பதே என் கொள்கை. தனிமனிதன் என்பவன் சமுதாயத்தின் அம்சம்தான். ஆனால் அவனுக்கும் சமுதாயத்துக்குமான தொடர்பு, உடலுக்கும் உறுப்புகளுக்கும் இடையிலான தொடர்பு, வண்டிக்கும் சக்கரங்களுக்கும் இடையிலான தொடர்பு போன்றதோ ஆகாது; ஒரு சொட்டு நீர் கடலில் விழும்போது அது கடலுடன் ஐக்கியமாகிறது. அதுபோல் சமுதாயத்தில் வாழ்கிற மனிதர்கள் சமுதாயத்தில் ஐக்கியமாவதில்லை. மனித வாழ்க்கை சுதந்திரமானது. அவன் சமுதாயத்திற்குத் தொண்டு புரிவதற்காக மட்டுமே பிறக்கவில்லை. சுய மேம்பாடும் அவனுடைய நோக்கமாகும். இதனால்தான் வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒருவன் இன்னொருவனை அடிமை கொள்ளலாகாது என்னும் கருத்தோட்டம் நிலவுகிறது.

தனி மனிதனுக்கு முக்கியத்துவம் தராத மதத்தை நான் ஏற்கமாட்டேன். இந்து மதம் தனி மனித முக்கியத்துவத்தை ஏற்பதில்லை. எனவே, அதை நான் ஏற்பதற்கில்லை. ஒரு வர்க்கம் மட்டுமே அறிவை ஈட்ட முடியும். இன்னொரு வர்க்கம் ஆயுதம் மட்டும்தான் பயன்படுத்த முடியும். மூன்றாம் வர்க்கம் வணிகம் செய்ய வேண்டும். நான்காம் வர்க்கம் முதல் மூன்று வர்க்கங்களுக்கும் ஏவல் செய்ய வேண்டும் என்று விதிக்கும் ஒரு மதத்தை நான் ஏற்பதற்கில்லை. ஒவ்வொருவருக்கும் அறிவு தேவை, ஆயுதம் தேவை, பணம் தேவை; சிலருக்கு மட்டுமே கல்வி தந்து மற்றவர்களை இருளில் வீழ்த்தும் நோக்கம் கொண்ட மதம் மதமே அல்ல. மக்களை மன அளவில் அடிமைத் தனத்தில் ஆழ்த்துகின்ற மதத்தை சதி என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வர்க்கம் ஆயுதம் வைத்திருக்கலாம் என்றும், இன்னொன்று அதைத் தொடவே கூடாது என்றும் சொல்லுகிற மதம் அந்த இன்னொரு வர்க்கத்தை மீளாத அடிமைநிலையில் வைத்திருக்கும் ஒரு தந்திரமே தவிர வேறில்லை என்பேன். சொத்து சேர்க்கும் பாதையை ஒரு வர்க்கத்திற்கு மட்டுமே திறந்துவிடுவது, பிறரின் அன்றாடத் தேவைகளுக்குக் கூட முன்கூறிய வர்க்கத்தைச் சார்ந்திருக்க வேண்டும் என்று சொல்லுகிற மதம் மதமே அல்ல. அது ஒரு ஏதேச்சதிகாரம். இதைத்தான் இந்து மதம் சதுர்வர்ணம் என்கிறது. சதுர்வர்ணத்தின் மீது என் கருத்துகளை நான் தெளிவாகத் தெரிவித்திருக்கிறேன். இந்து மதம் உங்களுக்குப் பயன் அளிக்க கூடியதா என்பதை நீங்களே எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள். மதம் என்பதன் அடிப்படை நோக்கம் தனிமனிதனின் ஆன்மிக வளர்ச்சிக்கான சூழலை உருவாக்குவதுதான். இதை ஏற்றுக் கொண்டால் இந்து மதத்தின் மூலம் உங்கள் ஆன்மிகம் ஒருபோதும் மேம்பாடு அடையாது என்பது தெளிவாகிறது. தனிமனிதனை உயர்த்துவதற்கு மூன்று காரணிகள் வேண்டும். அவை: 1.அனுதாபம், 2.சமத்துவம், 3.சுதந்திரம். இந்து மதத்தில் இவற்றில் ஏதேனும் ஒன்றாவது உண்டா? உங்கள் அநுபவத்தை வைத்துப் பதில் சொல்லுங்கள்’’ என்று கேள்வி கேட்டார்.

 

“இந்து மதத்தில் உங்கள் மீது அனுதாபம் உண்டா?” என்று கேள்வி கேட்டு, அதற்கு அம்பேத்கர் பதிலளித்தார்.

அனுதாபம் இந்து மதத்தில் அறவேயில்லை. நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை எவரும் அனுதாபத்தோடு பார்ப்பதில்லை. இந்த விஷயத்தில் உங்கள் அனைவருக்குமே அனுபவம் உண்டு. உங்களை இந்துக்கள் எப்போதும் சகோதரத்துவத்துடன் நடத்தியதில்லை. அயல்நாட்டுக்காரர்களைவிட கேவலமாகத்தான் நடத்தியிருக்கிறார்கள். இந்துக்களும் தீண்டத்தகாதவர்களும் பக்கம் பக்கமாக வாழ்கின்ற ஒரு கிராமத்தில் இரு சாராரையும் சகோதரர்கள் என்று யாராவது சொல்கிறார்களா? ஏதோ எதிரெதிர் முகாம்களில் முட்டிமோதிக் கொள்வதற்காகத் தயார் நிலையில் இருக்கம் இரு படைகள் என்றுதானே சொல்லுகிறார்கள். இந்துக்களுக்கு எள்ளளவும் உங்கள் மீது நேசமில்லை. முஸ்லீம்கள் மீதாவது அவர்களுக்கு ஓரளவு நேசம் உண்டு. உங்களை விட முஸ்லீம்களை அவர்கள் நெருக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்துக்களும் முஸ்லீம்களும் உள்ளூர் குழுக்களிலும், சட்டமன்றங்களிலும், வணிகத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுகிறார்கள். ஜாதி இந்துக்கள் அத்தகைய அநுதாபத்தை உங்கள் மீது காட்டியதாக ஒரு சான்று தர முடியுமா? அவர்களுடைய மனங்களில் உங்கள் மீது வெறுப்பைத்தான் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வெறுப்பால் எத்தகைய பயங்கர விளைவுகள் ஏற்பட்டுள்ளன? நீதி கேட்டு நீதிமன்றம் போகிறவர்களையும் உதவி கேட்டு காவல் நிலையத்தை அணுகுபவர்களையும் கேட்டுப் பாருங்கள். அவர்கள் கதை கதையாகச் சொல்வார்கள். நீதிமன்றத்தில் உங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றோ, காவல் நிலையத்தில் சரியாக நடந்து கொள்ளுவார்கள் என்றோ நீங்கள் நம்புகிறீர்களா? இல்லையென்றால் உங்கள் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்வதற்கான காரணம்தான் என்ன? இந்துக்களுக்கு உங்கள்மீது அநுதாபம் இல்லை. தங்களிடம் உள்ள அதிகாரத்தை அவர்கள் சரியாகப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இத்தகைய வெறுப்புக்கு இடையில் வாழ்வதில் என்ன பயன்?

 

“இந்து மதத்தில் உங்களுக்கு சமத்துவம் உண்டா?” என்று கேள்வி கேட்டு, அதற்கு அம்பேத்கர் பதிலளித்தார்.

scf-founderஇப்படி ஒரு கேள்வியைக் கேட்கவே கூடாது. தீண்டாமை என்றாலே சமத்துவமின்மை என்றுதான் பொருள். தீண்டாமையை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. உலக வரலாற்றில் இத்தகைய ஏற்றத்தாழ்வு எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. இதனால் உயர்வு மனப்பான்மையும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு ஒருவர் மகளை இன்னொருவருக்குத் திருமணம் செய்வது ஒருவர் இன்னொருவருடன் நன்றாக அமர்ந்து உண்ணுவது கூட முடியாத செயலாகிறது. இந்து மதத்தில் இவை சர்வ சாதாரணம். ஒருவன் இன்னொரு மனிதனைத் தீண்டக் கூடாது என்று தள்ளி வைக்கும் கீழ்த்தரமான மரபு இந்து மதத்தையும் இந்து சமுதாயத்தையும் தவிர வேறு எங்காவது இருக்கிறதா? ஒரு மனிதனை இன்னொருவன் தீண்டுவதால் அவன் அசுத்தமாகிப் போகிறான் என்றும், அந்த தீண்டுதலால், தண்ணீருக்குக் கூட தீட்டு வந்துவிடுகிறது என்றும், அவன் கடவுளைத் தொழவும் அருகதை அற்றவன் என்றும் இங்கு நிலவுகின்ற மரபு மனித சமுதாயத்தில் வேறு எங்காவது உண்டா? தீண்டத்தகாதவர்களையும் தொழுநோயாளிளையும் ஒரே மாதிரிதானே நடத்துகிறார்கள்? தொழுநோயாளியைப் பற்றிய நினைப்பே மக்களுக்கு அருவருப்பைத் தருகிறது. என்றாலும் அவன் மீது மக்களுக்கு இரக்கம் உண்டு. உங்களைப் பொருத்தவரை அருவருப்பும் வெறுப்பும் மட்டுமே உண்டு. ஆகவே தொழுநோயாளியை விடவும் கீழான நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். இன்னும் கூட, உண்ணா நோன்பை முடிக்கிற ஒருவர் மகர் என்கிற வார்த்தையை யாராவது உச்சரிக்கக் கேட்டுவிட்டால் போதும் அடுத்த நொடியே உணவைக் கையால் தொடுவதில்லை. அந்த அளவு உங்கள் உடலுக்கும், உங்கள் சொற்களுக்கும் கேவலமான பொருள் கூறப்படுகிறது. இந்து மதத்தில் தோன்றிய களங்கம் என்று தீண்டாமையை சிலர் வர்ணிக்கிறார்கள். இந்தக் கூற்றில் அர்த்தமேயில்லை. எந்த இந்துவும் இந்த மதத்தில் இப்படி ஒரு களங்கம் இருப்பதாக நினைப்பதில்லை. பெரும்பான்மை இந்துக்கள் உங்களைத்தான் களங்கம் என்று கருதுகிறார்கள். நீங்கள் அசுத்தமானவர்கள் என்றுதான் கருதுகிறார்கள். இந்நிலை உங்களுக்கு வரக் காரணம் என்ன? இந்துக்களாக நீடிப்பதால்தான் இந்நிலை உங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் சமூகத்தில் இருந்து பலர் முஸ்லீம் மதத்திற்குப் போய்விட்டார்கள். அவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்றோ, தங்களுக்குச் சம அந்தஸ்தில் இல்லாதவர்கள் என்றோ இந்துக்கள் கருதுவதில்லை; கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் நிலையும் அதுதான். திருவாங்கூரில் அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இங்கே குறிப்பிடத்தக்கது. `தீயா’ என்று அங்கே அழைக்கப்படுகிற தீண்டத்தகாதவர்கள் குறிப்பிட்ட சில தெருக்களில் கூடச் செல்லக்கூடாது என்று ஒரு விதி இருந்தது. சில தினங்களுக்கு முன் அவர்களில் சிலர் சீக்கிய மதத்தைத் தழுவினார்கள். உடனே அவர்கள் மீதிருந்த தடை நீக்கப்பட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது? நீங்கள் தீண்டத்தகாதவர்களாகவும் சரிசமம் அற்றவர்களாகவும் கருதப்படுவது நீங்கள் இந்துவாக இருக்கும்போதுதான்.

இப்படியொரு சமத்துவமின்மை, அநீதி நிலவுகிறது. சில இந்துக்கள் தீண்டதகாதவர்களைத் தேற்ற முயல்கிறார்கள். நீங்கள் படிப்பாளியாகுங்கள்; சுத்தமாக இருங்கள்; அப்போது உங்களைத் தொடுவார்கள்; சமமாக நடத்துவார்கள் – என்கிறார்கள். படித்த, பணமுள்ள, சுத்தமான மகரும் படிக்காத ஏழ்மையான அசுத்தமான மகரைப் போலவே மோசமாகத்தான் நடத்தப்படுகிறார்கள் என்பது உங்களுக்கும் தெரியும். இன்னொன்று, படிப்பும் சொத்தும், நல்ல ஆபரணங்களும் ஆடைகளும் பெற முடியாத ஒருவன் சமத்துவத்தை மட்டும் எங்கிருந்து பெறுவான்? அறிவு, சொத்து, துணிமணிகள் என்பவை ஒருவனுக்குப் புற அடையாளங்கள்; இவற்றிற்கும், சமத்துவத்திற்கும் முடிச்சுப் போடக்கூடாது என்பதுதான் கிறித்துவத்திலும் இஸ்லாமிலும் கற்பிக்கப்படுகிற கோட்பாடு. காரணம் அந்த மதங்கள் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டவை. மனிதனை மனிதன் மதிக்க வேண்டும்; அவமரியாதை செய்தல் கூடாது; எல்லோரையும் சரிசமமாக நடத்த வேண்டும் என்றுதான் அந்த மதங்கள் போதிக்கின்றன. இத்தகைய போதனைகள் இந்து மதத்தில் அறவே இல்லை. மனித நேயத்தையே வலியுறுத்தாத ஒரு மதத்தால் என்ன பயன்? அதில் நீடிப்பதில்தான் என்ன நன்மை? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முற்படும் சில இந்துக்கள் உபநிஷதங்களை மேற்கோள் காட்டுகிறார்கள். கடவுள் எல்லோரிடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என்று உபநிஷதம் சொல்கிறது என்கிறார்கள். இந்த இடத்தில் ஒன்றைக் கூறிவிட வேண்டும். மதமும் விஞ்ஞானமும இரண்டு வேறுபட்ட விஷயங்கள். ஒரு கோட்பாடு விஞ்ஞான கோட்பாடா அல்லது மதக் கோட்பாடா என்பதை ஆராய வேண்டும். கடவுள் எல்லோரிடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பது விஞ்ஞானக் கோட்பாடு; மதக் கோட்பாடு அல்ல. இந்துக்கள் மேலே கூறிய கோட்பாடுகளின்படி நடப்பதில்லை. அதற்கு மாறாக எங்கும் நிறைந்துள்ளார் என்பது தத்துவக் கோட்பாடு அல்ல – அது இந்து மதத்தின் கோட்பாடு என்று இந்துக்கள் வலியுறுத்தினால் நான் அவர்களுக்க மிகச் சுலபமாகப் பதில் சொல்லுவேன் – இந்துக்களிடையே நிலவுகிற இழிநிலை உலகில் வேறு எங்குமே கிடையாது. சொல்லும், செயலும் இரண்டு துருவங்கள் அளவு முரண்படுகிற மிகக் கொடுமையானவர்கள் இந்துக்கள். அவர்கள் நாவில் ராம நாமமும் கட்கத்தில் கூரிய வாளும் இருக்கின்றன. அவர்கள் முனிவர்களைப் போல் பேசுகிறார்கள். கசாப்புகாரர்களைப் போல் நடந்து கொள்கிறார்கள். கடவுள் எங்கும் இருக்கிறார் என்று சொல்லிவிட்டு சக மனிதனை விலங்குகளை விடக் கேவலமாக நடத்துகின்ற வேடதாரிகளின் நட்பு உங்களுக்கு வேண்டாம். எறும்புகளுக்கு ஒரு பக்கம் சர்க்கரை போடுவது, இன்னொரு பக்கம் சக மனிதர்களுக்கு குடிநீர் உரிமையை மறுப்பது, அவர்களைக் கொலையும் செய்வது என்று வாழும் வேடதாரிகளுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் உறவால் என்னென்ன தீய விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்பதை உங்களால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. உங்களுக்கு மரியாதையில்லை; சமூகத் தகுதியில்லை; இந்துக்கள் மட்டுசூம உங்களை மதிப்பதில்லை என்று சொல்வதற்கில்லை; முஸ்லிம்களும் கிறித்தவர்களுடம் கூட அப்படித்தான். அவர்களும் உங்களைப் பொருத்தவரை அதே தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள். எனவே நாம் இந்துக்கள் கண்களுக்கு மட்டுமன்றி எல்லோர் கண்களுக்கும் இந்தியா முழுமையிலும் கீழினும் கீழான நிலையில் இருக்கிறோம். இத்தகைய வெட்கங் கெட்ட சூழலில் இருந்து நீங்க வேண்டுமானால் உங்கள் மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைத்தெறிய வேண்டுமானால் வாழ்வை கவுரமுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அதற்கு ஒரே வழிதான் உண்டு. இந்து மதத்தையும், இந்த சமுதாயத்தையும் தொலைத்து தலை முழுகுவதுதான் அந்த வழி.

 

“இந்து மதத்தில் உங்களுக்குச் சுதந்திரம் உண்டா?” என்று கேள்வி கேட்டு அதற்கு அம்பேத்கர் பதிலளித்தார்.

பிற குடிமக்களைப் போலவே வணிகம் செய்யும் உரிமையைச் சட்டம் உங்களுக்கு உறுதி செய்திருக்கிறது என்று சிலர் சொல்லுகிறார்கள். அவ்வாறே தனிமனிதச் சுதந்திரமும் உண்டு என்கிறார்கள். நீங்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். அவர்கள் சொல்லுவதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறது? மூதாதைகள் செய்த தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று விதித்திருக்கிற சமுதாயத்தில் வணிகம் செய்யும் உரிமை உண்டு என்றால் அதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? சொத்து சேர்ப்பதற்கான எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு உங்கள் சொத்தை நீங்கள் அநுபவியுங்கள் என்றும், உங்கள் பணத்தை யாரும் தொட மாட்டார்கள் என்றும் சொல்லுவதில் என்ன பயன்? பிறப்பிலேயே நீங்கள் களங்கம் உள்ளவர்கள் என்று கற்பித்துவிட்டு எந்தப் பணிக்கும் தகுதி அற்றவர்கள் என்றும் விதித்துவிட்டு உங்களுக்கு வேலை செய்யும் உரிமை உண்டு என்று சொல்வதில்தான் என்ன பயன்? ஆக இந்த உரிமைகள் எல்லாம் உங்களைப் பார்த்து சிரிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. சட்டம் பல்வேறு உரிமைகளை உறுதி செய்யலாம். ஆனால் சமுதாயம் அனுமதித்தால்தானே நீங்கள் அவற்றை அனுபவிக்க முடியும்? தீண்டத்தகாதவர்களுக்குக் கவுரவமான துணிமணிகளை அணிந்து கொள்ளும் உரிமையைச் சட்டம் வழங்கியிருக்கிறது. இந்த உரிமையால் என்ன பயன்? அப்படி அணிந்து கொள்ள இந்துக்கள் அவர்களை அனுமதிப்பதில்லை. உலோகக் குவளையில் தண்ணீர் மொள்ளவும், உலோகப் பாத்திரங்களில் சமைக்கவும், பரிமாறவும், கூரைகளை ஓடுகளால் வேய்ந்து கொள்ளவும் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் சமுதாயம் அனுமதிப்பதில்லை. வெறும் உரிமைகளால் என்ன பயன்? இப்படிப் பல்வேறு உரிமை மீறல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். சமுதாயத்தால் அனுமதிக்கப்பட்ட உரிமைதான் உண்மையான உரிமை. சட்ட அனுமதியுண்டு. சமுதாய அனுமதியில்லை என்றால் அது உரிமையே அல்ல. தீண்டத்தகாதவர்களுக்குச் சட்டம் உறுதி செய்திருப்பதை விட அதிகபட்சமான சமூக விடுதலை தேவைப்படுகிறது. அது இல்லாவிட்டால் சட்ட ரீதியான சுதந்திரத்தால் எந்தப் பயனும் இல்லை. உங்களுக்குப் பௌதிக சுதந்திரம் இருக்கிறதல்லவா, எங்கு வேண்டுமானாலும் போகலாம்; என்ன வேண்டுமானாலும் பேசலாம்; அவை சட்டம் விதித்திருக்கிற கட்டுப்பாடுகளை மீறாத அளவில் சரி என்று சிலர் சொல்லுகிறார்கள்; இந்தச் சுதந்திரத்தால்தான் என்ன பயன்? மனிதனுக்கு உடல் மட்டுமில்லை; உள்ளமும் உண்டு. பௌதிக விடுதலை என்றால் என்ன? சுதந்திர எண்ணம், சுதந்திரச் செயல் இவையே பௌதிக விடுதலை. ஒரு கைதியின் விலங்குகளை அகற்றி அவனை விடுதலை செய்துவிடுகிறார்கள்; இதன் உள்ளர்த்தம் என்ன? அவன் விருப்பப்படி எதையும் செய்யலாம் என்பதுதானே? உடல் திறன் அளவுக்குத் தகுந்தபடி அவன் செயல்படலாம் என்பதுதானே? மனத்திற்கு விடுதலை இல்லையென்றால் இந்த உடல் விடுதலையானால் அவனுக்கு என்ன பயன்? மன விடுதலைதான் உண்மையானது. மன விடுதலையற்றவன் விலங்குகளால் பிணிக்கப்படாத நிலையிலும் ஓர் அடிமைதான். அவனது மனம் சுதந்திரமாக இல்லையென்றால் அவன் சிறைவாசம் புரியாவிட்டாலும் கைதிதான். மன விடுதலையில்லாதவன் உயிரோடு உலவினாலும் பிணம்தான். மன விடுதலை அல்லது சிந்தனைச் சுதந்திரம் ஒருவனது இருப்புக்குச் சான்றாகத் திகழ்கிறது. ஒருவனது சிந்தனைச் சுதந்திரத்தின் சுடர் அணைக்கப்பட்டுவிட்டது என்றும் அல்லது அவனது மனம் விடுதலையாகிவிட்டது என்றும் எப்படித் தெரிந்து கொள்வது? சுய உணர்வோடு தன்னுடைய உரிமைகள், பொறுப்புகள், கடமைகள் ஆகியவற்றை எவன் உணர்கிறானோ சூழ்நிலை அடிமையாக எவன் இல்லையோ, சூழலைத் தனக்கேற்ற முறையில் மாற்றிக் கொள்ள எப்போது முனைகிறானோ, அவனையே நாம் சுதந்திரமானவன் என்கிறோம். பழக்கங்கள், மரபுகள், சம்பிரதாயங்கள், போதனைகள் போன்றவை அவனது முன்னோர்களிடமிருந்து வந்தவை என்பதற்காக அவற்றின் அடிமையாக மாறிவிடாதவன் எவனோ அவனே சுதந்திரமான மனிதன்; சரணாகதி அடையாதவன் எவனோ- எதனையும் காரணகாரிய அறிவுடன் பரிசோதித்துத் தெரிந்து கொள்பவன் எவனோ அவனே சுதந்திர மனிதன் என்பேன்.

தன் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், பொதுமக்கள் விமர்சனங்களுக்கு அஞ்சாமல் இருக்கவும் பிறரது கைப்பாவை ஆகாத வண்ணம் அறிவும் சுயமரியாதையும் உள்ள ஒருவனையே நான் சுதந்திரமான மனிதன் என்பேன். பிறர் ஏவலுக்குத் தகுந்தபடி தனது வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் எத்தகைய வாழ்வை நடத்த வேண்டும் என்று விரும்புகிறானோ அது பற்றி தன்னுடைய சொந்த தர்க்க நியாயங்களுக்கு உட்பட்ட முறையில் அவற்றின் மீது தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்பவனையே நான் சுதந்திரமானவன் என்பேன். தனக்குதானே எஜமான் எவனோ அவனே சுதந்திர மனிதன்.

மேலே கூறியவற்றின் பின்னணியில் நீங்கள் சுதந்திரமானவர்தானா? உங்கள் நோக்கங்களை நீங்களே நிறைவேற்றிக் கொள்ளும் சுதந்திரம் உண்டா? உங்களுக்கு உரிமையில்லை என்பது மட்டுமல்ல அடிமையை விடவும் கேவலமான நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் அடிமைத்தனத்திற்கு ஈடு இணையேயில்லை.

இந்து மதத்தில் யாருக்குமே பேச்சு உரிமையை இழந்துவிடத் தயாராக இருக்க வேண்டும். வேதங்களின்படி நடக்க வேண்டும்; வேதங்கள் ஒரு நடத்தையை அனுமதிக்கவில்லை என்றால் ஸ்மிருதிகள் என்ன சொல்கின்றன என்று பார்க்க வேண்டும்; அவற்றிலும் தெளிவு ஏற்படாவிட்டால் மகான்கள் எடுத்துக் கொடுத்த பாதையைப் பின்பற்ற வேண்டும். இந்து மதத்தில் உணர்வு, தர்க்கம், சிந்தனை ஆகிய எதற்கும் இடம் கிடையாது; ஓர் இந்து வேதங்களுக்கோ, ஸ்மிருதிகளுக்கோ, மகான்களுக்கோ; அடிமையாக இருக்க வேண்டும். தன்னுடைய சொந்தத் தர்க்கத்தை அவன் பயன்படுடத்தக்கூடாது. இந்து மதத்தின் அங்கமாக இருக்கும்வரை உங்களுக்குச் சிந்தனை உரிமையே கிடையாது.

இந்துமதம் உங்களை மட்டுமே சிந்தனை அடிமைத்தனத்தில் தள்ளிவிடவில்லை. பிற வகுப்பினரைக் கூட அப்படித்தான் சிந்தனைச் சுதந்திரம் அற்றவர்களாக ஆக்கி வைத்திருக்கிறது என்று சிலர் வாதம் செய்வது உண்மைதான். எல்லா இந்துக்களுமே சிந்தனை அடிமைத்தனத்தில்தான் ஆழ்ந்து போய்க் கிடக்கின்றனர். இதை வைத்து எல்லோர் துன்பங்களும் ஒரே மாதிரியானவை என்று முடிவு செய்ய முடியாது. இந்தச் சிந்தனை அடிமைத்தனம் ஜாதி இந்துக்களைப் பொருத்தவரை அவர்களுக்கு உலகாய்த மகிழ்ச்சிக்கு இடையூறாக இருந்ததில்லை. வேதங்கள், ஸ்மிருதிகள், மகான்கள் என்னும் மூன்று அதிகாரிகளுக்கு எல்லா ஜாதி இந்துக்களும் அடிமைகளே. ஆனாலும் இந்துச் சமூக அமைப்பில் அவர்களுக்கு ஓர் உயர்ந்த பீடம் அளிக்கப்பட்டுள்ளது. பிறர் மீது அவர்கள் ஆளுமை செய்ய முடியும். உயர் ஜாதிகளின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக ஜாதி இந்துக்களே உற்பத்தி செய்து கொண்ட மதம்தான் இந்துமதம். அவர்கள் மதம் என்று அழைக்கும் ஓர் அமைப்பில் உங்களுக்கு ஓர் அடிமைப் பாத்திரத்தைத்தான் கொடுத்திருக்கிறார்கள். அடிமை எண்ணத்திலிருந்து நீங்கள் தப்பித்து விடாமல், இருக்க எல்லா விதமான முன்னேற்பாடுகளையும் மத அமைப்பிலேயே செய்து வைத்திருக்கிறார்கள்.

எனவே இந்தச் சிந்தனை அடிமைத்தனத்தை உதறிவிட்டு வெளியே வருவது மிகமிக அவசியமாகிறது. இப்படி இந்தச் சிறையை உடைத்து கொண்டு வெளியே வரும் அவசியம் பிற இந்துக்களுக்கு இல்லை. இப்படித்தான் இந்துமதம் உங்கள் முன்னேற்றத்தை இரண்டு விதத்தில் சிதைத்துவிட்டது. உங்கள் சிந்தனைச் சுதந்திரத்தைப் பறித்து உங்களை அடிமையாக்கிவிட்டது; புற உலகிலும் உங்களுக்கு அடிமை நிலையே வழங்கப்படுகிறது. எனவே விடுதலை தேவை என்றால் நீங்கள் மதம் மாறுவதைத்தவிர வேறு வழியில்லை” என்றார்.

(தொடரும்…)

4 Replies to “புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 06”

  1. வேதத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து மதம், பல்வேறு அந்நிய படைஎடுப்புக்களாலும், அந்நிய ஆதிக்க அடிமைப்படுத்தப்படுதல்களாலும், சினாபின்னமாகிப்போய் விட்டிருந்த காலத்தில் வாழ்ந்த அம்பேத்கர், அப்போதிருந்த ஒன்றை இந்து மதம் என்று நினைத்தது, அதன் குறைகள் என்று பட்டியல் போட்டது, இல்லாத இந்து மதத்தை விட்டு வெளியேறச் சொன்னது போன்றன வீண் வேலைகளாகும்.
    “மனிதனை மனிதன் மதிக்க வேண்டும்; அவமரியாதை செய்தல் கூடாது; எல்லோரையும் சரிசமமாக நடத்த வேண்டும் என்றுதான் அந்த மதங்கள் போதிக்கின்றன”. என்று அந்த மதங்களான, இஸ்லாமையும், கிறித்தவத்தையும்,அம்பேத்கர் போற்றுகிறார் என்றால், மேலை நாட்டுப் படிப்பு மூளை சலவை செய்வதில், எவரையும் விட்டு வைக்க வில்லை என்று தெரிகின்றது. மேலை நாட்டு மெகாலே படிப்பு, பட்டம் பெற்ற கைதிகளுக்கு, சிறையில் வசதியையும், படிப்பறிவில்லாத கைதிகளுக்கு, சிறுநீர்-மலப் படுக்கையை தர மட்டுமே தரவல்ல, அம்பேத்கர் சட்டங்களை நாட்டுக்குத் தந்தது.
    தற்காலம், அம்பேத்கார் மாறச் சொன்ன பவுத்த மதம், இலங்கைத் தமிழர்களை கொன்று குவிக்கத் துணைபோனது. அம்பேத்காரிஸ்ட்ஸ் பலரும், இன்று இந்தியாவில், இந்து கோவிலகளுக்கு செல்லும் நிலையே உள்ளது. எனினும், கோவில் வழிபாடு ஒன்றே இந்து மதம் என்று நினைப்பது தவறானது.

  2. அம்பேத்கரின் இந்த வாதம் முழுவதும், கட்டுரை முழுவதும், திலகர் சொன்ன மதம் என்ற வரையறையின்மேல் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. திலகர் சொன்ன வரையறை தப்பு என்று யாராவது சொல்லி விட்டால், அம்பேத்கரின் ஒட்டுமொத்தக் கட்டுரையும் தகர்ந்து போய்விடும்.

    திலகர் சொன்ன வரையறைப் படி பார்த்தால், கிரிக்கெட்தான் இந்தியர்களின் மதம். ரஜினிகாந்துதான் தமிழர்களின் தெய்வம். எல்லாரும் ஓட்டுப் போட்டு வெற்றி பெறச் செய்ததால் அன்னை சூனியாகாந்திதான் இனி பாரத மாதா. விஷ வாயுவால் பல்லாயிரக்கணக்கில் போபால் மக்களைக் கொன்றவர்களுக்கு ஆதரவளித்த தெரேசாதான் பாரதத்தின் பாட்டி. எம். எஃப். ஹூஸைன்தான் இந்தியாவின் பிக்காஸோ. என்.டி.டி.விதான் சமூக அக்கறை கொண்ட டெலிவிஷன் சேனல். வெள்ளைக்காரனுக்கு மாமாவாக இருந்த நேருதான் இந்தியாவுக்கும் மாமா. கருநாநிதிதான் உலகத் தமிழர்களின் பாதுகாவலன்.

    அடப் போங்கப்பா.

    [திலகர் மதம் பற்றிச் சொன்னாரா அல்லது உலக தர்மம் பற்றிச் சொன்னாரா என்பது அறியப்பட வேண்டியது.] திலகர் அப்படித்தான் சொன்னார் என்றால், அவர் சொன்ன வரையறை மட்டுமே மதம் கிடையாது. இது அம்பேத்கருக்கு தெரியாமலா இருக்கப் போகிறது. அவருக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.

    ஆனால், இந்தத் தொடரின் 5ம் பாகத்தில் சமூகப்-பொருளாதாரப் பலன்களைப் பற்றிப் பேசிய அம்பேத்கர், 6வது பாகத்திலும் ஆன்மீகம் என்ற பெயரில் அதையேதான் மீண்டும் பேசி இருக்கிறார்.

    இந்து மதத்தின் ஆன்மீகப் பார்வைகளான அத்வைதம், த்வைதம், விஸிஷ்டாத்வைதம், யோகம், சாங்கியம், வேதாந்தம், வேதம், ஆத்மா, பிரம்மம், மாயை, பிரபஞ்சம் — இவற்றில் ஒன்றைப் பற்றிக்கூடச் சொல்லாமல் இந்து மதத்தின் ஆன்மீகத்தைப் பற்றி பேசிவிட முடியாது. இந்தத் தத்துவங்களால் சமூகத்தில் தீண்டாமை, பிறப்பின் அடிப்படையில் சாதி, உயர்வு தாழ்வு போன்றவை எப்படி ஏற்பட்டன என்றாவது அவர் சொல்லி இருக்க வேண்டும்.

    தனது மத மாற்றத்திற்கு ஆதரவாகப் பேசவேண்டும் என்பதற்காக வலிந்து தான் நம்பாத ஒன்றை ஆன்மீகப் பார்வை என்ற பெயரில் அம்பேத்கர் மீண்டும் சொல்கிறார். ஆன்மீகம் என்ற பெயரில் மீண்டும் வர்க்கம், வர்க்க பேதம் என்று பேசுவது அவர் மீது நம்பிக்கையைத் தரவில்லை.

    மத மாற்றம் பற்றிய அவரது வாதச் சங்கிலியில் பலவீனமான கண்ணி இந்தப் பகுதிதான்.

    எம். சி. ராஜா போன்ற தலித் பெரியோர்களுக்கு இருந்த தெளிவு, அம்பேத்கருக்கு இந்த விஷயத்தில், அந்த நேரத்தில் இல்லை என்பதை இந்தத் தொடரின் முந்தைய பாகங்களே நிரூபிக்கின்றன.

    இந்த அளவு நேர்மையில் இருந்து கீழிறங்கும்படி அவருக்கு ஏதோ ஒரு சூழல் அந்தச் சமயத்தில் ஏற்பட்டிருக்கிறது என்றுதான் இதை எடுத்துக் கொள்கிறேன்.

    அம்பேத்கர் மதம் மாறினார் என்ற ஒன்றை மட்டுமே மீண்டும் மீண்டும் சொல்லி, அவரை இந்து மதத்திற்கு எதிராகக் காட்டுவது இந்து எதிரிகளுடைய வேலையாக இருக்கிறது.

    பண்டைய இந்து சமூகத்தில் தீண்டாமை, சாதி உயர்வு தாழ்வுகள் இல்லாமல் இருந்தது பற்றியும் அம்பேத்கர் சொல்லி இருக்கிறார். ஆரிய இனவாதம் பொய் என்று சொல்லி இருக்கிறார். அவற்றையும் அறிந்து கொள்வது, அம்பேத்கரின் கருத்து பற்றிய ஒரு முழுமைப் பார்வையைத் தரும்.

    இல்லாவிட்டால், அவருக்கும், தெருவோரத்தில் காசுக்குக் கூச்சல் போடும் பாதிரியாருக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும். அது அம்பேத்கரை அவமானப் படுத்தி விடும்.

    வர்ணாசிரமம், சாதியமைப்புகள் காலப் போக்கில் மாறியவை குறித்து அம்பேத்கர் சொன்ன மற்ற விஷயங்களையும் மதிப்பிற்குரிய ம. வெங்கடேசன் அவர்கள் வேறு ஒரு தொடராகத் தரவேண்டும் என வேண்டுகிறேன்.

    அவர் இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதார நிபுணர்களில் ஒருவர். அது பற்றியும் யாரும் பேசுவதில்லை. 🙁

    .

  3. இந்து மதத்தின் சிறப்பே அது தனிமனித விடுதலையைப் பேசுகிற மதமாக இருப்பதுதான். அதை அம்பேத்கர் மறுத்திருப்பது ஏற்க முடியாதது.

    .

  4. // கிறித்துவத்திலும் இஸ்லாமிலும்… காரணம் அந்த மதங்கள் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டவை.//

    இது அறியாமையே அன்றி வேறில்லை. இக்கருத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *