புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 07

இதுவரை: இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மத மாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மத மாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம். இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தையும் பார்க்கலாம்..

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6

(தொடர்ச்சி…)

மேலும், தீண்டத்தகாதோரும் ஜாதியை கடைபிடிக்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்து அம்பேத்கர் பேசுகையில் இவ்வாறு கூறினார்:

“தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மீது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. தீண்டத்தகாதோர் மத்தியிலும் பல உட்பிரிவுகள் அல்லது ஜாதிகள் இருக்கின்றன; அவற்றைச் சேர்ந்தவர்கள் தத்தம் விவகாரங்களில் ஜாதியத்தைக் கடைபிடிக்கிறார்கள். ஆக அவர்களும் ஒரு வகையில் தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள் என்பது விமர்சனம்;

சான்றாக மகர்களும் மாங்குகளும் ஒரே இடத்தில் ஒன்றாக அமர்ந்து உண்ணுவதில்லை. இந்த இரண்டு ஜாதிகளும் மலம் அள்ளுவோரைத் தொடுவதில்லை. இப்படி இருக்கும்போது உயர் ஜாதிகள் தீண்டாமையை அனுசரிக்கக் கூடாது என்று எப்படி எதிர்பார்க்க முடியும் என்னும் கேள்வி அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. முதலில் உங்களுக்கள் இருக்கும் ஜாதி அமைப்பை உடையுங்கள். பிறகு நால்வர்ண ஜாதி அமைப்பினால் ஏற்படும் குறைகளைத் தீர்த்துக் கொள்ள எங்களிடம் வாருங்கள் என்கிறார்கள். இந்த விமர்சனத்தில் உண்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

untouchable-rules-india-1920அதேசமயம் ஒட்டுமொத்தமான தீண்டாமைக்கு இது சமாதானமாக அமைய முடியாது. தீண்டத்தகாதவர்களுக்கும் ஜாதிகள் உண்டு. அவர்களிடையே ஜாதியும் உண்டு, தீண்டாமையும் உண்டு. அமைப்பு அடிப்படையில் நிகழும் இந்தக் குற்றங்களுக்கு அவர்கள் பொறுப்பல்ல. ஜாதியும் தீண்டாமையும் அவர்களால் அவர்களிடம் தோன்றியவை அல்ல. உயர்ஜாதி இந்துக்களிடமிருந்து தோன்றியவை. இவற்றை நடைமுறையில் கொண்டு வந்தவர்கள் ஜாதி இந்துக்கள். எனவே, இந்த ஜாதியத் தீண்டாமை என்னும் மரபுக்கும் பொறுப்பு அவர்களே, தீண்டத்தகாதவர்கள் அல்ல. எனவே தீண்டத்தகாதவர்களிடையே நிலவும் இந்தக் கொடுமையான உள்ஜாதியத்திற்கு அதைக் கற்பித்தவர்களே பொறுப்பேற்க வேண்டுமே தவிர கற்றுக் கொண்டவர்கள் அல்ல. முன்னே கூறிய விமர்சனத்திற்கு இப்படி ஒரு பதில் உண்டு. மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்த பதில் சரியானதுதான் என்று தோன்றுகிறது. ஆனால் இந்த பதில் எனக்கு திருப்திகரமாக இல்லை. ஜாதியும் தீண்டாமையும் நமக்குள் வேர் பிடித்ததற்கு நாம் காரணமில்லை. என்றாலும்கூட இத்தகைய விஷ வேர்களை நாம் கண்டிக்காமல் இருப்பதும் தொடர்ந்து அனுசரித்து வருவதும் சரியில்லை. ஜாதி, தீண்டாமை இரண்டையும் வேரறுப்பதில் நமக்கும் பங்குண்டு; பொறுப்புண்டு. இந்தப் பொறுப்பை நாம் எல்லோரும் உணர்த்தியிருக்கிறோம் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

மகர்களிடையே ஜாதியத்துக்காக எந்தத் தலைவரும் வாதாடுவதில்லை. இந்த விஷயத்தில் மகர் சமூகத்துப் படித்த அறிவாளிகளின் விமர்சனத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மகர் சமூகத்துப் படித்த வர்க்கம் ஜாதி ஒழிப்பில் முனைப்புக் காட்டுவது அப்போதுதான் தெரியவரும். இந்தப் படித்த மகர்கள் மட்டும்தான் ஜாதி ஒழிப்பில் ஆர்வம் காட்டுகின்றார்கள் என்றுசொல்ல முடியாது. படித்த மகர்கள் மட்டுமல்ல, படிக்காத மகர்களும் ஜாதி ஒழிப்பில் முன்னணியில் நிற்கிறார்கள். இதையும், நாம் நிரூபிக்க முடியும். இன்றைய தினம் மகர்-மாங்க் ஜாதிகள் ஒன்றாக அமர்ந்து உண்ணுவதை எந்த மகரும் எதிர்ப்பதில்லை. இதில் எனக்கு முழுத்திருப்தி. மகர்கள் ஜாதி ஒழிப்பில் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்து விட்டார்கள். அதற்காக அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். ஜாதியையும் தீண்டாமையையும் எத்தகைய முயற்சிகள்மூலம் அழித்து ஒழிப்பதில் வெற்றிபெற முடியும் என்று நீங்கள் எண்ணிப் பார்ப்பது உண்டா? வெறும் சேர்ந்துண்ணல் அல்லது இங்கொன்றும் அங்கொன்றுமாக கலப்புத் திருமணங்கள் மூலம் மட்டுமே ஜாதியத்தை ஒழித்துவிட முடியாது. ஜாதியம் என்னும் நோயின் மூல வேர்கள் இந்து மதப் போதனைகள்தான். ஜாதி என்பது ஒரு மனநிலை; அது ஒரு மன நோய். நாம் வாழும் இந்து மதத்தில் நாம் ஜாதியத்தைக் கடைப்பிடிக்கிறோம்; தீண்டாமையை அனுசரிக்கிறோம். ஏன் இந்துமதம் நம்மை அப்படிச் செய்ய வைக்கிறது? ஒரு கசப்பான பொருளை இனிப்பாக மாற்ற முடியும். உப்புக் கரிப்பதையும் மாற்றமுடியும். ஆனால் நஞ்சை அமிர்தமாக மாற்ற முடியாது. இந்து மதத்தில் இருந்து கொண்டே ஜாதிகளை ஒழிப்பேன் என்பது நஞ்சை அமிர்தமாக்குவது போலத்தான்.

சுருக்கமாகச் சொன்னால் ஒரு மனிதனை இன்னொருவன் இழிவாக நடத்த வேண்டும என்று கற்பிக்கும் மதத்தில் நாம் இருக்கும்வரை ஜாதி அடிப்படையிலான பிரிவினை உணர்ச்சி, பாரபட்ச உணர்வு நம் இதயத்திலிருந்து அறவே அகற்றப்படமுடியாது. தீண்டத்தகாதவர்களிடையே ஜாதியமும் தீண்டாமையும் ஒழிக்கப்பட வேண்டுமானால் மதமாற்றம் ஒன்றுதான் மாற்று மருந்து.”

 

பெயர் மாற்றமும் மதமாற்றமும் நமக்குத் தேவை என்பதை வலியுறுத்தி அம்பேத்கர் பேசுகையில் இவ்வாறுகூறினார்:

“மதமாற்றத்திற்கு ஆதரவான வாதங்களை நான் இதுவரையில் உங்கள்முன் வைத்தேன். இது உங்கள் சிந்தனையைத் தூண்டும் என்று நம்புகிறேன். இந்த விவாதம் ஆழமானது என்று கருதுவோருக்கும் இதே சிந்தனைநாட்டத்தை இன்னும் எளிய மொழியில் விவரிக்க விரும்புகிறேன். மத மாற்றத்தில் அப்படியென்ன புதுமை இருக்கிறது? ஜாதி இந்துக்களோடு நீங்கள் கொள்ளும் சமூகஉறவுகள் எத்தகையவை? இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் எப்படிப் பிரிந்து வாழ்கிறார்களோ, அப்படித்தான் நீங்களும் பிரிந்து வாழ்கிறீர்கள். முஸ்லீம்களோடும் கிறிஸ்தவர்களோடும் சேர்ந்துண்ணல், கலப்பு மணம்புரிதல் ஆகியவற்றை இந்துக்கள் வைத்துக் கொள்வதில்லை. உங்களோடும் அப்படித்தான். நீங்களும் இந்துக்களும் இரண்டு தனித்தனிப் பிரிவுகளாகவே வாழ்கிறீர்கள்.

எனவே மதமாற்றத்தால் ஒரு சமூகம் இரண்டாகப் பிரிந்துவிட்டது என்று எவரும் சொல்லப் போவதில்லை. இன்று எப்படி இருக்கிறீர்களோ, அதேபோலத்தான் மத மாற்றத்திற்குப் பின்பும் இருக்கப் போகிறீர்கள். இந்த மதமாற்றத்தால் எந்தப் புதுமையும் ஏற்பட்டுவிட போவதில்லை. அப்படியிருக்கும்போது மதமாற்றம் என்றாலே சிலர் அஞ்சுவதை என்னால் புரிந்து கொள்ளமுடிவதில்லை.

மத மாற்றத்தின் முக்கியவத்துவம் உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம். பெயர் மாற்றத்தின் முக்கியத்துவம் நிச்சயம் புரிந்திருக்கும். யாரேனும் ஒருவரை நீங்கள் யார் என்னவென்று கேட்டால் அரிஜன் என்கிறீர்கள். மகர் என்று யாருமே சொல்வதில்லை. சூழல்களின் அவசியத்தால்தான் நாம் பெயர் மாற்றம் செய்துகொள்கிறோம். பெயர்மாற்றத்திற்கான காரணம் மிக மிக எளிமையானது.

ஒருவன்தீண்டத்தக்கவனா, இல்லையா என்பது அவனுடைய ஜாதி மூலம் தெரிய வருகிறது. ஜாதி தெரியாவிட்டால் அது தெரியப் போவதில்லை. தீண்டத்தகாதவன் என்று தெரியாதபட்சத்தில் அவன் மீது வெறுப்புத் தோன்றப் போவதில்லை. இன்னின்ன ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியாமல் பயணம் செய்கிறபோது ஜாதிஇந்துக்களும் தீண்டத்தகாதவர்களோடு நட்போடுதான் பழகுவார்கள். ஜாதி தெரிந்துவிட்டால் அந்த நட்பு மாறிவிடும். முதலில் அவர்கள் வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட், பழங்கள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொண்டிருப்பார்கள். தாம் பேசிக் கொண்டிருக்கும் மனிதன் தீண்டத்தகாதவன் என்று தெரிந்து விட்டால் அந்தக் கணமே ஜாதி இந்துவின் மனதில் வெறுப்பு உற்பத்தியாகத் தொடங்குகிறது. முதலில் அவனுக்குக் கோபம் வரும். தொடக்கத்தில் தோன்றிய தற்காலிக நட்பு இறுதியில் வசைச் சொற்களிலும் கைகலப்பிலும் முடியும். நிச்சயம் உங்களுக்கு இத்தகைய அநுபவங்கள் நேர்ந்திருக்கும். ஏன்நேர்ந்தது என்னும் உண்மையும் தெரிந்திருக்கும்.

உங்கள் ஜாதியைக் குறிக்கும் பெயர்கள்கூட அசுத்தமானவை என்று கருதப்படுகின்றன. அவற்றை உச்சரிக்கும்போதே ஜாதி இந்துக்களுக்கு வாந்தி வருவது போன்ற ஒரு வேதனை. இதனால் பிறரை ஏமாற்ற மகர் என்று சொல்வதற்குப் பதிலாக சொக்கமேளா என்று சொல்லுகிறீர்கள். ஆனால் மக்கள் ஏமாறுவது இல்லை. சொக்கமேளா என்றாலும் சரி அரிஜன் என்றாலும் சரி நீங்கள் யாரென்று அவர்களுக்குத் தெரியும். ஆகவே பெயர் மாற்றம் அவசியமானது என்பதை உங்கள் பழக்கத்தின் மூலமாக நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள். பெயர் மாற்றத்திற்கான தேவையை நீங்கள் உணரும்போது மதமாற்றத்திற்கான தேவைக்கு எப்படித் தடை சொல்ல முடியும்? மதமாற்றம் பெயர் மாற்றம் போன்றதுதான். மதமாற்றத்தின்போதே பெயர் மாற்றமும் நடந்து விடுகிறது. அது உங்களுக்கு நன்மையாகவும் இருக்கிறது.

முஸ்லீம், கிறிஸ்துவர், புத்த மதத்தினர், சீக்கியர் என்பது மதமாற்றம் மட்டுமல்ல பெயர் மாற்றமும்கூட. இதுதான் உண்மையான பெயர் மாற்றம். நீங்கள் மேற்கொள்ளப்போகும் புதிய பெயரில் எந்தவித இழிவும் இருக்காது. இந்தப் பெயர் மாற்றம் ஒரு மகத்தான மாற்றம். புதிய பெயரின் மூலப் பெயர்களை யாரும் கண்டறியப் போவதில்லை. சொக்கமேளா – அரிஜன் என்ற பெயர்மாற்றங்களில் அர்த்தமே இல்லை. உங்கள் பழைய பெயருக்குள்ள அதே இழிவு இந்தப் பெயர்களுக்கும் உண்டு. அதே வெறுப்பு இவற்றின் மீதும் காட்டப்படும். இந்துமதத்தில் இருக்கும்வரை இப்படிப் பெயர்மாறிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். நான் இந்து என்று சொல்லிக் கொள்வதில் எந்தக் கோணத்திலும் முழுமை இல்லை. இந்து என்று ஒருவர் இருப்பதாக எவருமே ஏற்பதேயில்லை. எனவே மகர் என்று உங்களை நீங்கள் அழைத்துக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை. மகர் என்று உங்களை நீங்கள் அழைத்துக் கொள்வதால் எவரும் உங்களை நெருங்கப் போவதில்லை. இன்று ஒரு பெயரும் நாளை ஒரு பெயருமாக, கடிகாரத்தின் ஊசல் போல் வாழ்வதில் என்ன லாபம்! ஆகவே மதமாற்றத்தின் மூலம்உ ங்கள் பெயரையும் நிரந்தரமாக மாற்றிக் கொள்ளுங்கள்.”

 

மதம் மாறுதலைப் பற்றி பல உயர்ஜாதி இந்துக்கள் வைத்த விமர்சனத்திற்கு அம்பேத்கர் பதிலளித்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார்:

“மதமாற்ற இயக்கம் தொடங்கியதிலிருந்தே பல எதிர்ப்புகள். அந்த எதிர்ப்புகளில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்று பரிசோதிப்போம். மத அடிப்படையில் வாழ்வதாகப் பாசாங்கு செய்யும் சில இந்துக்கள் உங்களுக்கு உபதேசம் செய்கிறார்கள். மதம் என்பது பொழுதுபோக்கு அல்ல. உடைமாற்றுவதுபோல் மதத்தை மாற்ற முடியாது. நீங்கள் இந்து மதத்திலிருந்து விலகி வேறுமதத்திற்குப் போக இருக்கிறீர்கள். இந்து மதத்தில் நீடிக்காத உங்கள் முன்னோர்கள் எல்லோரும் முட்டாள்களா? என்றெல்லாம் அறிவாளிகள் என்று தம்மை நினைத்துக்கொள்ளும் சிலர் கேட்பார்கள். அவர்கள் கேள்வியில் எந்த அர்த்தமும் இல்லை.

முன்னோர்கள் மதம் என்பதற்காக அதிலேயே நீடிக்க வேண்டும் என்று நினைப்பது மடமை. அறிவாளிகள் அந்தச் செயல்பாட்டை ஏற்க மாட்டார்கள். முன்னோர் மதங்களிலிருந்து மாறக்கூடாது என்று வாதிடுவோர்கள் சரித்திரம் படித்தவர்கள் அல்ல; பழைய ஆரிய மதத்திற்கு வேத மதம் என்று பெயர். அதற்கு மூன்று குணாம்சங்கள் உண்டு. 1. மாட்டுஇறைச்சி உண்ணுதல், 2.மது அருந்துதல், 3.கேளிக்கைகளில் ஈடுபடுதல். இம்மூன்றும் அன்றைய மரபுகள். இந்திய மக்கள் பல்லாயிரம் பேர் இப்படித்தான் வாழ்ந்தார்கள். சில பிராமணர்கள் இன்றும்கூட அந்த வாழ்க்கைக்குத் திரும்பிப் போக முடியாதா என்று கனவு காண்கிறார்கள்.

ambedkar21பழைய மதக்கொள்கைகளையே பின்பற்ற வேண்டும் என்றால் ஏன் இந்திய மக்கள் ஒரு காலத்தில் இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறினார்கள்? ஏன் ஜைன மதத்திற்கு மாறினார்கள்? நம்முன்னோர்கள் பழைய இந்து மதத்தில் இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் அப்படி இருக்கவே விரும்பினார்கள் என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. நால்வர்ண அமைப்பு நீண்டகாலம் இந்நாட்டில் நீடித்துள்ளது. இவ்வமைப்பில் பிராமணர்கள் மட்டுமே கல்வி கற்க முடியும். சத்திரியர்கள் மட்டுமே போரிட முடியும். வைசியர்கள் மட்டுமே பொருளீட்ட முடியும், சூத்திரர்கள் மட்டுமே ஏவல் செய்ய முடியும். இதுதான் அன்றைய விதி. சூத்திரர்களுக்குக் கல்வியில்லை, சொத்தில்லை, போர்க்கருவிகளும் இல்லை. இப்படி உங்கள் முன்னோர்கள் வறுமையிலும் பாதுகாப்பற்ற சுழலிலும் வளரும்படி கட்டாயப்படுத்தப்படவில்லை. இவற்றைத் தன்னிச்சையாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார்கள் என்று எந்த புத்தியுள்ள மனிதனும் சொல்ல மாட்டான். அதே சமயம் உங்கள் முன்னோர்களால் இந்த மதத்தை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யவும் முடியவில்லை. அப்படி முடிந்திருந்தால் அவர்கள் மதத்தைத் தன்னிச்சையாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை நாம் நம்ப முடியும்; அன்றிருந்த சூழலை ஆராயும்போது கட்டாயத்தின் பெயரிலேயே நமது முன்னோர்கள் இந்துக்களாக இருந்தார்கள் என்பது தெரிகிறது.

அவர்கள் கட்டாயத்தின் காரணமாக அடிமைகளாக வாழ்ந்தார்கள். அவர்களைக் குற்றம் சொல்வதில் பயனில்லை. அவர்கள் அநுதாபத்திற்குரியவர்கள். இன்றைய தலைமுறை மீது எந்தவிதமான அடிமைத் தனத்தையும் புகுத்த முடியாது. இவர்களுக்கு எல்லா சுதந்திரங்களும் உள்ளன. இந்தச் சுதந்திரச்சூழலிலும் கூட தங்களை தாங்களே விடுவித்துக் கொள்ளாவிட்டால் இவர்களை என்னவென்று சொல்வது? கேவலமானவர்கள், அடிமைகள், சார்ந்து வாழவே பிறந்தவர்கள் என்றுதான் இவர்களைக் குறித்து வருந்த வேண்டும்.

முன்னோர் வழியாக வந்தது என்பதற்காக இந்து மதத்தில் விடாப்பிடியாக நீடிப்பது மடையர்களுக்குதான் பொருத்தமாக இருக்கும். எந்த அறிவாளியும் அப்படியொரு வாதத்தை முன்வைக்க மாட்டான். இந்த வாதம் விலங்குகளுக்குப் பொருந்தும். மனிதர்களுக்கு அல்ல. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம்? மனிதன் முன்னேறுவான், விலங்கால் முன்னேற முடியாது. மாற்றம் இல்லாமல் நமது முன்னேற்றம் சாத்தியமில்லை. மதமாற்றம் என்பது ஒருவகை மாற்றம்தான், மதமாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லையென்றால் மதமாற்றமும் மிக மிக அவசியமாகிறது. முன்னேறும் மனிதனுக்கு முன்னோர் மதம் என்பது ஒரு தடைக்கல்லே அல்ல.

மதமாற்றத்திற்கு எதிராக இன்னொரு வாதமும் உண்டு. மதமாற்றம் என்பது ஒரு தப்பித்தல் மார்க்கம் என்பதுதான் அது. இன்று சில இந்துக்கள், இந்து மதத்தைச் சீர்திருத்துவது தகாத வாதம் என்று கிளம்பியிருக்கிறார்கள். இச்சீர்த்திருத்தத்தினால் தீண்டாமையும் ஜாதியும் ஒழிந்துவிடும் என்று அவர்கள் அறைகூவுகிறார்கள். எனவே இந்தக் கட்டத்தில் மதமாற்றம் சரியில்லை என்கிறார்கள்.

இந்த சமூகச் சீர்திருத்தவாதிகளிடம் எப்படிப்பட்ட கருத்துகள் நிலவினாலும் சரி, எனக்கு அவர்களை நினைத்தால் கசப்பு உணர்ச்சிதான் ஏற்படுகிறது. அவர்களோடு எனக்கு அநுபவங்கள் உண்டு. அவற்றின் அடிப்படையில் இந்த அரைகுறை அறிவாளிகள் மீது எனக்கு வெறுப்புதான் மேலிடுகிறது. இப்படிப்பட்டவர்கள் தங்கள் ஜாதியிலேயே வாழ்ந்து தங்கள் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்து, தங்கள் ஜாதியிலேயே செத்தும் போகிறவர்கள். பொய்முழக்கங்களைச் சொல்லி மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள். தீண்டத்தகாதவர்கள் எங்களை நம்ப மறுத்ததினால் தங்கள் எதிர் ஜாதிகளை மீறிக் காட்டுகிறோம் என்று இவர்கள் பொய்முழக்கம் செய்கிறார்கள். இவர்களது முழக்கங்களைக் கேட்கும்போது நீக்ரோக்கள் விடுதலைக்காக அமெரிக்க வெள்ளையர்கள் செய்த முயற்சிகள் நினைவுக்கு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க நீக்ரோக்கள் இந்தியத் தீண்டத்தகாதோர் போலவேதான் வாழ்ந்தார்கள். வித்தியாசம் என்னவென்றால் நீக்ரோவின் அடிமைத்தனம் அங்கே சட்டத்தால் விதிக்கப்பட்டது. இங்கோ அது மதத்தால் உருவானது.

சில அமெரிக்கசீர்திருத்தவாதிகள் நீக்ரோ. அடிமைத்தனத்தை ஒழிக்க முயற்சி செய்தார்கள். அவர்களோடுஇந்துச் சமூக சீர்திருத்தவாதிகளை ஒப்பிட முடியுமா? வெள்ளை அமெரிக்க சீர்திருத்தவாதிகள் தமதுசொந்தபந்தங்களுடன் சேர்ந்து கொண்டு நீக்ரோ விடுதலைக்காகப் போர் புரிந்தார்கள்.அடிமை முறையை ஆதரித்த காரணத்தால் தங்கள் இனத்தைச் சார்ந்த வெள்ளையர்களையேஆயிரக்கணக்கில் கொன்று குவித்தார்கள். ரத்தத்தைச் சிந்தித் தியாகம் புரிந்தார்கள்.வரலாற்றுப் பக்கங்களில் இந்த நிகழ்வினைப் படிக்கும்போது அவர்களையும் இந்தியசீர்திருத்தவாதி களையும் எந்த விதத்திலும் ஒப்பிட முடியாது என்பது புரியும்.இவர்கள் எங்கே? இவர்கள் எங்கே?

இந்துச் சீர்திருத்தவாதிகளை– அதாவது தீண்டத்தகாதவர்களின் மீட்பவர்களைப் பார்த்து ஒரு கேள்விகேட்க வேண்டும். வெள்ளையர்கள் அடிமைத்தனத்தை ஒழிக்க அமெரிக்காவில் தங்கள் சொந்தச் சகோதரர்களை எதிர்த்தே போரிட்டார்களே, அதே போல் இங்கே உங்கள் இந்துச் சகோதரர்களுடன் ஓர் உள்நாட்டுப் போர் நடத்த நீங்கள் தயாரா? தயார் இல்லை என்றால் சீர்திருத்தம் என்று வாய்கிழியப் பேசுவதில் என்ன பயன்? தீண்டத்தகாதவர் பிரச்சினைக்காகப் போராடிய இந்துக்கள் மகாத்மா காந்தியைத்தான் மகத்தான தலைவராகக் கொண்டிருக்கிறார்கள். எந்த அளவு மகாத்மா போக முடியும்? பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து அகிம்சைப் போரைத் தலைமை தாங்கி நடத்தும் அவர், தீண்டத்தகாதோரை நசுக்கும் ஜாதிஇந்துக்களின் உணர்வைக் காயப்படுத்துவதற்குக் கூடத் தயாரில்லையே. அவர்களுக்கு எதிராக ஓர் அறப்போர் நடத்தவும் தயாரில்லையே. சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கூட அவர் முன்வரவில்லையே. எனவே இத்தகைய சீர்திருத்தவாதிகளால் எந்தப் பயனும் கிட்டப்போவதில்லை.”

 

தீண்டதகாதோருக்குஅறிவுரை கூறும் இந்துக்களுக்கு பதிலளித்து அம்பேத்கர் பேசுகையில் இவ்வாறு கூறினார்:

“தீண்டத்தகாதோர் நடத்தும் பொதுக்கூட்டங்களில் சில இந்துக்கள் பங்கேற்று ஜாதிஇந்துக்களைக் கடுமையாகக் கண்டிக்கிறார்கள். சிலர் தீண்டத்தகாதோருக்கு அந்த மேடையில் இருந்தபடியே அறிவுரை சொல்கிறார்கள். சகோதரர்களே, தூய்மையாக வாழுங்கள். கல்வி கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களையே சார்ந்திருங்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள். உண்மையில் ஜாதிஇந்துக்களே இந்த அவலநிலைக்குப் பொறுப்பேற்க வேண்டும். அவர்களே தவறு செய்தவர்கள். தவறு செய்த ஜாதிஇந்துக்களை ஒன்றாகத் திரட்டி அவர்களைத் தண்டிக்க யாரும் தயாரில்லை. சிலர் இந்துக்களோடு சேர்ந்து கொண்டு இந்து மதத்தில் இருந்தபடியே உங்கள் போராட்டத்தைத் தொடருங்கள் என்று உபதேசம் செய்கிறார்கள். அவர்களுக்கு வரலாற்றிலிருந்து சில எடுத்துக்காட்டுகள் காண்பிக்க விரும்புகிறேன். சென்ற உலகப்போரின்போது ஓர்அமெரிக்கச் சிப்பாய்க்கும் ஆங்கிலச் சிப்பாய்க்கும் நடந்த உரையாடலை நான் படித்திருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த உரையாடல் மிகப் பொருத்தமாகத் தெரிகிறது. போர் எவ்வளவு நாள் நீடிக்கும் என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அமெரிக்கன் கேட்டகேள்விக்கு ஆங்கிலேயன் மிகவும் பெருமையாக பதில் சொன்னான்: “கடைசி பிரஞ்சுக்காரன் கொல்லப்படும் வரை நாம் போரிடுவோம்.” அதே போல்தான் தீண்டத்தகாதோர் விடுதலைக்காக இறுதி மூச்சு வரை போராடுவோம் என்று இந்து சமூகச் சீர்திருத்தவாதிகள் பேசுகிறார்கள். அதாவது, கடைசி தீண்டத்தகாதவன் இறக்கும்வரை போராடப்போகிறார்கள். அவர்களுடைய பிரகடனத்தை இப்படித்தான் நான் பொருள் கொள்கிறேன். பிறரை அழிப்பதற்காகவே ஒரு போர் என்றால் அந்தப் போரில் நாம் வெற்றி பெறவே முடியாது. போரில் நாமே சாகப் போகிறோம் என்றால் தவறான இடத்தில் இருந்துக் கொண்டு அப்படிப் போராடுவதில் பயன் என்ன? இந்துசமூகத்தைச் சீர்திருத்துவது நமது நோக்கமல்ல. அந்த வேலை நம்முடைய வேலையுமல்ல. நமது நோக்கம் நமது விடுதலை மட்டுமே. மற்றவை நமக்குத் தொடர்பில்லாதவை. மதமாற்றத்தின்மூலம் விடுதலை பெறமுடியும் என்னும்போது இந்து சமூகத்தைத் திருத்தும் பொறுப்பு நமக்கு ஏன்? நமது சக்தி, நமது சொத்து முதலியவற்றை அந்த மேடையில் நாம் ஏன் தியாகம் செய்ய வேண்டும்? நமது மைய நோக்கம் இந்து சீர்திருத்தம் என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நமது நோக்கம் தீண்டத்தகாதோரின் சமூகவிடுதலை. மதமாற்றமல்லாமல் வேறு வழிகளில் இதனை வென்று எடுக்க முடியாது. தீண்டத்தகாதோருக்கு சமத்துவம் தேவை. இதுவும் நமது இயக்கத்தின் நோக்கம்தான். இந்தச் சமத்துவத்தை இந்து மதத்தில் நீடிப்பதன் மூலம்தான் பெற முடியும் என்பதில்லை.”

(தொடரும்…)

4 Replies to “புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 07”

  1. The basic courtesy of an author, dwelling on one of India’s Great personalities like Dr.Ambedkar, requires quoting the references. In the last 7 parts, no references have been cited by the author Venkatesan. He keeps on quoting M.C.Raja, L.C.Gurusamy, etc.However he does not reveal where from he got the quotes of these people. Is Venkatesan attempting to put his views in the mouth of these people? To add credibility to what he writes, let venkatesan quote the references in the respective places as footnotes. For examples, Ambedkar has used term “Varna” to decsribe “Sathur Varna” but venkatesan distorts to call it as “Varkkam”. All the best for venkatesan and co’s attempts to portray Ambedkar as eigth avatar of Hindu God and canvassing for BJP.

  2. மனிதனை மனிதன் இழிவாக நடத்த வேண்டும் என்று இந்து மதம் கூறவில்லை. இந்தியாவில் உள்ள சமுதாயம் தான் அவ்வாறு கூறுகின்றது. சமுதாயம் வேறு சமயம் வேறு. சமயக் கோட்பாடுகள் வேறு, சமுதாயக் கோட்பாடுகள் வேறு. இந்தியாவில் உள்ள சமுதாயமோ, பல ஆயிரம் வருடங்களாக பாரதத் தாய்க்கு அர்ராபிய பலாத்காரக் கலப்பினால் ஏற்பட்ட இஸ்லாமியர்களையும், யூதர்களையும், மற்றும் அயிரோப்பிய பலாத்காரக் கலப்பினால் ஏற்பட்ட கிறித்தவர்களையும் உள்ளடக்கிய ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஏற்றத் தாழ்வுகளை தங்கள் வளர்ச்சிக்காக இன்றும் ஆட்சியாளர்கள் சமுதாயத்தை உபயோகப்படுத்திக்கொள்வதுபோல, அன்றே அந்நிய ஆட்சியாளர்கள் உபயோகப்படுத்திக்கொண்டார்கள். எனவே அம்பேத்கார் எண்ணங்களும் கொள்கைகளும் இவ்விஷயத்தில் மட்டுமல்லாது அனைத்து நிலைகளிலுமே , அவலை நினைத்து உரலை இடித்தார்போலவே உள்ளது.

  3. \\1. மாட்டுஇறைச்சி உண்ணுதல், 2.மது அருந்துதல், 3.கேளிக்கைகளில் ஈடுபடுதல். இம்மூன்றும் அன்றைய மரபுகள். இந்திய மக்கள் பல்லாயிரம் பேர் இப்படித்தான் வாழ்ந்தார்கள். சில பிராமணர்கள் இன்றும்கூட அந்த வாழ்க்கைக்குத் திரும்பிப் போக முடியாதா என்று கனவு காண்கிறார்கள்.\\

    நல்ல காமெடி. நானும் தி க காரர்களுக்கு குறைந்தவன் இல்லை என்பதை காட்ட என்று பேசியிருக்கிறார் போலும் 🙂 அது சரி, மெக்காலே கல்வியில் ஊரியவர்களிடம் இதை விட வேறு என்ன எதிர் பார்க்க முடியும்.

    @ Kans,

    இந்த இடத்தில் பாஜாக பற்றி எதற்காக இழுக்கிறீர்கள். ஹிந்துக்கள் எல்லாம் பாஜாக ஆதரவாளர்கள் என்று நினைக்கும் உங்களை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வருகிறது.

    ஹிந்துக்கள் குறிப்பாக, மேல் சாதி என்று சொல்லப்படும் ஹிந்துக்கள் எப்பொழுதும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ் ஒட்டு வங்கி. அது மட்டும் இன்றி பாஜாகாவை விட மேல் சாதி ஹிந்துக்கள் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ் கட்சியில் அதிகம். இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்திய தேர்தல் ஆனைய தளத்தை தொடர்பு கொள்ளவும்.

  4. //மெக்காலே கல்வியில் ஊரியவர்களிடம் இதை விட வேறு என்ன எதிர் பார்க்க முடியும்.//

    மெக்காலே கல்வியில் ஊறியவர் என்று யாரை சொல்கிறீர்கள்? நிச்ச்யமாக அம்பேத்கர் ஒரு சிறந்த சுய சிந்தனையாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *